The Dance of Shiva – Ananda Coomaraswamy – Rupa Antiquities
‘சுவாமி எனக்குச் சிற்பக் கலையைச் சொல்லிக் கொடுக்கிறீர்களா?’
‘ஓ! பேஷாய்ச் சொல்லித்தருகிறேன். ஆனால் சிற்பக்கலையைக் கற்றுக் கொள்வதற்கு முன்னால் சித்திரக் கலையைக் கற்றுக் கொள்ள வேண்டுமே!’
‘அப்படியானால் சரி! சித்திரக் கலையையே கற்றுக் கொடுத்துவிடுங்கள்.’
‘அதுவும் சரிதான். ஆனால் சித்திரக்கலையைக் கற்றுக் கொள்வதற்கு நடனக்கலை தெரிந்திருக்க வேண்டுமே!’
‘சரி சுவாமி! நடனக் கலையையே கற்றுக் கொடுங்களேன்.’
‘நடனக் கலையா ? நடனக்கலை கைவர வேண்டுமானால் முதலில் சங்கீதமல்லவா கற்றுக் கொள்ளவேண்டும்!’
‘சரி சுவாமி! முதலில் சங்கீதத்தையே கற்றுக் கொள்கிறேன். அதன் பின் நடனம், சித்திரம், சிற்பம் எல்லாவற்றையும் கற்றுக் கொள்கிறேன். எப்படியும் சிற்பக்கலை கற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.’
‘எல்லாம் சரிதான். சங்கீதம் கற்றுக் கொள்வதன் முன் கவிபாடக் கற்றுக் கொள்வது அதிமுக்கியமாயிற்றே! சாகித்யமில்லாமல் உருவாகும் சங்கீதம் உயர்ந்ததாகாதே.’
‘சரி சுவாமி, கவி பாடவே கற்றுக் கொடுத்துவிடுங்களேன்.’
‘அதில்தானப்பா சங்கடம் இருக்கிறது. கவிபாடும் கலை ஒருவரால் கற்பிக்கப்படுவது அல்ல. கவிதையை இன்னார் இப்படித்தான் பாட வேண்டுமென்ற நியதி கிடையாதே. கருவிலே அமைந்த திருவாகவல்லவா இருக்கவேண்டும். இறையருளினால்தானே ஒருவருக்கு அக்கலை சித்தியாக வேண்டும்.’ (Poetry is the gift of God)
இப்படி ஒரு பேச்சு, சிற்பக்கலை கற்க வந்த ஓர் இளவரசனுக்கும், சிறந்த கலாவிற்பன்னரான ஒரு முனிவருக்கும் நிகழ்ந்தது. இது சில்ப ரத்தினம் என்ற நூலில் இருக்கின்றது.
ஆனந்த குமாரஸ்வாமி. (Ananda Coomaraswamy). எழுதிய ‘The Dance os Shiva’ என்ற நூலைப் படிக்கையில் நான் அந்த இளவரசனைப் போல் ஆகிவிட்டேன்.
ஆம்! ஒன்றைப் படிக்க இன்னொன்றை அறிந்து கொள்ள வேண்டும். இன்னொன்றைப் புரிந்து கொள்ள இன்னொரு அத்தியாயத்தைப் புரட்ட வேண்டும். தலைப்புதான் ‘சிவ நடனம்’. உள்ளே சென்றால் இந்தியப் பண்பாடு, கலை, மொழி ஆகியவற்றின் வரலாற்றுப் பின்னணியும், பாரதத்தின் பழைய சுவடுகளும் தெளிவாக விளக்கப்படுகின்றன.
ஆனந்த குமாரஸ்வாமி (Ananda Kentish Coomaraswamy) பிரிட்டிஷ் ஆளுகையில் இருந்த இலங்கை நாட்டின் கொழும்பு நகரில் ஆகஸ்டு 22ம் நாள் 1877ல் பிறந்தவர். தந்தையார் இலங்கைச் சட்டமன்ற உறுப்பினராகவும், தமிழ் அறிஞராகவும் விளங்கிய முத்து குமாரஸ்வாமி; தாய் எலிஸபெத் எனும் ஆங்கில மாது. இவரது பள்ளி, கல்லூரிப் படிப்புகள் இங்கிலாந்தில் தொடர்ந்தன. தாவரவியல், புவியியல் ஆகிய துறைகளில் பட்டம் பெற்றார். இலங்கை நாட்டின் கலைப் படைப்புகள் பற்றி ஆய்வுகள் செய்து முனைவர் பட்டம் பெற்றார். இவ்வாய்வுகளில் ஆழ்ந்து பணிபுரியும் போதுதான் இந்தியக் கலைகள், சிற்பம், ஓவியம் ஆகியவற்றில் இவருக்கு ஈடுபாடு மிகுந்தது.
எல்லாவற்றிலும் மேற்கத்திய கலாசாரத்தைப் புகுத்துவதும், இந்தியக் கலைகளைப் புறக்கணிப்பதுவும் தவறு என்ற எண்ணம் இவருக்கு உதித்தது. ‘இங்கிலாந்து நாட்டில் இந்தியக் கலைகளை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள்தான் மதிப்பீடு செய்கிறார்கள். ஆனால் உண்மையில் அதைச் செய்ய வேண்டியவர்கள் ஓவியர்களும், சிற்பிகளும்தான்’ என்று வெளிப்படையாகத் தன் கருத்தைக் கூறினார். இந்திய ஓவியங்கள், சிற்பங்கள் ஆகியவற்றை மேற்கு நாடுகளுக்கு அறிமுகப்படுத்திய மிக முக்கியமான பணியைச் செய்தவர் ஆனந்தகுமாரஸ்வாமி ஆவார்.
இந்தியாவில் இரவீந்திரநாத் தாகூரின் இலக்கிய வட்டத்துள் ஒருவராய் இருந்தவர். இந்திய ‘ஸ்வதேஷி’ இயக்கத்தில் பங்கு கொண்டவர். முதல் உலகப் போரில் இந்தியா இங்கிலாந்துக்குத் துணை நிற்கக் கூடாது என்று எழுதியதால் பிரிடிஷ் அரசு இவருக்கு அழுத்தம் கொடுத்து இவரை இந்தியாவுக்குத் திரும்பச் சொல்லியது.
அமெரிக்க நாட்டின் பாஸ்டன் நகர நுண்கலைகள் அருங்காட்சியகத்தின் பொறுப்பை 1917ல் ஏற்றுக் கொண்டார். இந்திய ராஜபுதன ஓவியங்களுக்கும், மொகலாய ஓவியங்களுக்கும் உள்ள வேறுபாடுகளைச் சுட்டிக் காட்டி இவர் செய்த ஆய்வு பாராட்டுக்குரியது. ஐரோப்பிய நாடுகள் இந்தியக் கலைகளுக்கு மதிப்புக் கொடுக்க ஆரம்பித்ததற்கு இவரது முயற்சி பெருமளவில் காரணமாக அமைந்தது.
இந்திய ஆசியக் கலைகள், பண்பாடு, குறியீட்டுவாதம் (Symbolism), மீமெய்யியல் (Metaphysics), வேதங்கள் (Scripture) நாட்டுப்புற இயல் (Folklore), கதைகள் (Myth) போன்ற பல துறைகளில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளும், நாற்பது நூல்களும் எழுதி உள்ளார். இவரது எழுத்துகள். கிழக்கு மேற்குப் பண்பாடுகளுக்கு இடையே ஒரு பாலமாக அமைந்தவை. பல மொழிகள் அறிந்தவர் இவர்.
‘I actually think in both Eastern and Christian terms—Greek, Latin, Sanskrit, Pali, and to some extent Persian and Chinese’ என்று குறிப்பிட்டுள்ளார். இவர் அமெரிக்காவில் செப்டம்பர் 1947ல் காலமானர்.
மனிதகுல நல்வாழ்வுக்கு இந்தியாவின் பங்களிப்பு என்ன, இந்து மதத்தின் பார்வையில் கலை அழகியல் ஆகியவற்றின் வரலாறு, பல கரங்கள் கொண்ட இந்துமத தெய்வ வடிவங்கள், இந்திய இசை, இந்தியப் பெண்களின் நிலைமை, இளைய இந்தியா, புத்தமத அடிப்படைத் தத்துவங்கள், சிவ நடனம் போன்ற பதினான்கு கட்டுரைகளைக் கொண்ட தொகுப்பு இந்த நூல். நூற்று எழுபத்தைந்து பக்கங்களைக் கொண்ட பொக்கிஷம்; புரட்டும் பக்கமெல்லாம் வைர மணிகளாய்ச் சுடரும் ஒளிமிகுந்த கருத்துகள். இந்திய நாட்டுக் கலைகளின் மகோன்னதத்தை அகிலமே உணரும் படி எழுதப்பட்டுள்ள படைப்பு இது. இந்தியப் பள்ளிகளில் இதைக் கட்டாயப் பாடமாக்க வேண்டும். அந்த அளவுக்கு முக்கியமான புத்தகம்.
இந்திய வரலாற்றின் ஒரு பகுதியாக சாம்ராட் அசோகனின் கருத்துகளைப் பதிவு செய்கிறார் நூலாசிரியர். ‘உண்மையான வெற்றி’ எது என்பதை அவன் புத்தனிடமிருந்து அறிந்து கொள்கிறான். கலிங்கத்தை வென்றவன் களிப்படையாமல் அதற்கு மாறாகக் கண்ணீர் வடிக்கிறான். இந்தியத் துணைக் கண்டத்தை அன்பினால் ஆளும் நெறி காண்கிறான். ஆனால் அவனுக்குப் பின்னால் அது தொடரவில்லை. இதற்கான காரணங்களையும் இந்நூல் அலசுகின்றது.
வளஞ்சார் சமுதாயத்தை (Welfare State) அமைக்க மனுவின் தர்மசாஸ்த்ரமும், சாணக்கியனின் ‘அர்த்தசாஸ்த்ர’மும் அமைத்த அடிப்படையின் சிறப்பை மிக நுணுக்கமாக எடுத்துக் காட்டியுள்ளார் ஆசிரியர். இந்திய எதிர்ப்பும் வெறுப்பும் கொண்ட ஆங்கில ஆராய்ச்சியாளர்கள் எவ்வாறு இந்தியத் தத்துவங்களையும் ஆட்சிமுறை அமைப்புகளையும் கீழ்மைப்படுத்தி எழுதியுள்ளார்கள் என்றும் விளக்கியுள்ளார்.
ஒருபுறம் இன்பம் தவிர்த்த தூய ஒழுக்க நிலை (Highly Puritanical) இன்னொரு புறம் தொழில் புரட்சி கொண்டு வந்த கட்டுப்பாடற்ற கேளிக்கை வாழ்க்கைமுறை (Self assertion without discipline). இவை இரண்டுக்கும் இடையே இந்துமதம் ஓர் இணைப்புத் தத்துவத்தை தந்தது. அறம், பொருள், இன்பம், வீடு என்ற பகுப்பைத் தந்தது (Dharma, Artha, Kama, Moksha). இதனை மதம் சார்ந்த சமூகவியல் (Religious Sociology) என இந்நூல் விளக்குகின்றது.
சுய ஒழுக்கம் அல்லது ஸ்வதர்மா (Self-Morality) என்பது அவரவர் ஆன்மிக வளர்ச்சிக்கு ஏற்ப அவர்களை நெறிப்படுத்தும் என்பதையும், இறைவன் பல வடிவங்களில் வியாபித்திருக்கிறான் என்ற தத்துவத்தையும், சமூகத்தை நெறிப்படுத்த இந்துமதம் கையாண்டது. ஆனால் இதனை இந்தியாவில் குடியேறிய கிறிஸ்தவ மதபோதகர்கள் இழிவு செய்து மதம் மாற்றத் தொடங்கினர். இந்த இடையீடு இந்து சமூகத்தையும், இந்தியக் கல்வியையும் இந்துப் பண்பாட்டின் வெளிப்பாடுகளையும் எவ்வாறு சிதைத்தது என்பதையும் இந்நூல் சுட்டிக் காட்டுகின்றது.
ஆனந்தகுமாரஸ்வாமி உலகில் வாழும் மக்களை மூன்றுவிதமாகப் பிரிக்கிறார். முதல் வகை, சுயநலவாதிகள்; தான் தனதென்று வாழ்பவர்கள்; ஆனால் தங்கள் உடைமைகளும் சுகங்களும் பறி போய்விடுமோ என்ற பயத்தில் அடிமைகளாய் வாழ்பவர்கள். இத்தகையோரே சமுதாயத்தில் எண்ணிக்கையில் அதிகம்.
இரண்டாவது வகை, மக்கள் எண்ணிக்கையில் கொஞ்சம் குறைவு; இவர்கள் பொதுநலம் பற்றிச் சிந்திப்பவர்கள். சமுதாயத்திற்கு உதவ முன்வருபவர்கள்; ஆனால் அறிவு சார்ந்து சிந்திப்பவர்களாகவோ உலகப் பொது நோக்கு உடையவர்களாகவோ இருப்பவர்கள் அல்ல. தன்னலம் அற்ற ஆனால் குறுகிய பார்வை கொண்டவர்கள் (Unselfish but narrow in vision)
மூன்றாவது வகையினர், எண்ணிக்கையில் மிகக் குறைவாகவே இருப்பர்; மனித நேயமும், உலகம் தழுவிய அன்பும் கொண்டு மனித இனத்தை வழிநடத்துபவர்கள்; இவர்களில் இருந்துதான் அவதார புருஷர்களும், மகான்களும், துறவிகளும் தலைவர்களும் தோன்றுவர். இந்தப் பின்னணியை உணரச் செய்யும் வகையில்தான் நமது இதிஹாஸ புராணங்கள் படைக்கப் பட்டன என முழங்குகிறார் ஆனந்தகுமாரஸ்வாமி.
‘யோகம் என்பது மனஒருமைப்பாட்டுக்கான பயிற்சி முறை. மனஒருமைப்பாடு இன்றி எந்தக் கலையிலும் ஈடுபட முடியாது. எனவே கலை என்பதும் ஒருவகையில் யோகம்தான் என இந்துத் தத்துவம் குறிக்கிறது’ என நிறுவுகிறார். (The concept of Art as Yoga) இதற்கான சான்றுகளை ‘அக்னி புராணம்’, சங்கராச்சாரியரின் பிரம்ம சூத்திர விளக்க உரை ஆகியவற்றிலிருந்து மேற்கோள் காட்டி விளக்குகிறார்.
யோகமும் கலையும் ஒன்று என்றவர், கலையும் உருவ வழிபாடும் பிரிக்க வொண்ணாதது என்று தொடர்கிறார். ஆரம்பகால புத்தமதமும், யோக சூத்திரமும் அருவமான இறையுணர்வையே போதித்தன; ஆனால் பெரும்பாலான மக்களுக்கு உருவ வழிபாடுதான் உணர்வையும் பக்தியையும் தந்தது.
‘காலடியில் கிடக்கும் மலர்கள் மீதும், வானில் திரியும் மேகங்கள் மீதும் கொண்ட அன்பினால் ஆன்ம விடுதலையை நோக்குபவர் ஞானிகள் மட்டுமே. மற்றவர்களுக்கு விடுதலையை நோக்கிச் செல்ல அவ்வளவு அவசரம் இல்லை’ எனக் கிண்டலடிக்கிறார் ஆசிரியர். (Only mystics find a foretaste of freedom in the love of every cloud in the sky and flower at their feet. Children of this world do not hurry along the path of Release.)
‘இந்தியச் சிற்ப வடிவங்களைப் பார்த்தால் அதை ஒரு கலை (Art) என்று சொல்வதே கடினம்; மனித விலங்கு உருவங்களிலெல்லாம் அதிக வலிமையை உணர்த்த பல தலைகளையும், கை கால்களையும் உருவாக்கியிருக்கிறார்கள். இந்தியத் தெய்வ உருவங்களுக்கும் அழகுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவை பயங்கரமாகவும், கொடூரமாகவும் உள்ளன’ என்று அமெரிக்க நாட்டைச் சார்ந்த வரலாற்று தொல்லியல் ஆய்வாளர் வின்ஸெண்ட் ஆர்தர் ஸ்மித் (Prof. Vincent Arthur Smith) சொன்னதை முதலில் மறுத்துக் கட்டுரை வரைந்தவர் ஆனந்த குமாரஸ்வாமி. பண்டைக்கால கிரேக்க எகிப்திய சிற்பங்களிலும் அவ்வாறு காணலாம் என்றும் குறிப்பிடுகிறார்.
தாமரையில் அமர்ந்திருக்கும் புத்தர் சிலை இந்தியச் சிற்பக் கலையையே பின்பற்றியுள்ளது என்று மேற்கு நாடுகளில் நிறுவியர் (The seated Buddha can only be of Indian origin) இவர்.
பத்து கரங்களுடன் மகிஷாசுரனை வதம் செய்யும் மகிஷாசுரமர்த்தினி, ஹிரண்யகசிபுவை மடியில் கிடத்திக் கீறிக் கிழித்து வதம் செய்யும் நரசிம்மம் போன்ற சிற்பங்களுக்கும் ஓவியங்களுக்கும் சரியான விளக்கங்கள் அளித்து, அவற்றை ஐரோப்பியர்கள் கலை வடிவங்களாக ஏற்றுக் கொள்ளும்படிச் செய்தவர் ஆனந்தகுமாரஸ்வாமி.
இந்தப் பணியில் ஈடுபட்டிருக்கும் போதுதான் ‘நடராஜர் சிலை’ யின் தத்துவத்தை விளக்கி ‘சிவ நடனம்’ என்ற கட்டுரை எழுதுகிறார். அக்கட்டுரையை உள்ளடக்கிய இந்நூலின் தலைப்பு ‘சிவ நடனம்’. இந்தியக்கலை, சிற்பம், ஓவியம் இசை ஆகியவை குறித்த இருபத்தாறு புகைப்படங்களும் இந்நூலில் இணைக்கப்பட்டுள்ளன.
‘சிவ நடனத்தின் ஆதார மூலம் எதுவாக இருப்பினும், இறைவனின் லீலை பற்றிய இத்தனை தெளிவான உருவம் இருப்பதைக் குறித்து நமது மதம் பெருமை கொள்ளலாம்’ என்று குறிப்பிடுகிறார் ஆசிரியர்.
பல நடனங்கள் இருப்பினும், நடராஜரின் மூன்று முக்கியமான ஆடல்களை ஆசிரியர் விளக்குகிறார்.
முதலாவது, சிவனும் பார்வதியும் இமயமலையில் கைலாஸத்தில் ஆடும் மாலை நடனம் (Shiva pradosha Stotra). சரஸ்வதி தேவி வீணை வாசிக்க, ப்ரும்மா தாளம் போட, இலக்குமி தேவி பாட, ஸ்ரீ விஷ்ணு மத்தளம் கொட்ட, இந்திரன் குழல் ஊத முப்பத்து முக்கோடி தேவர்களும் வந்து காணும் ஆட்டமாக இது அமைகின்றது.
இரண்டாவது, சுடுகாட்டில், சுடலையாண்டியாக இறைவன் ஆடும் தாண்டவம். காரைக்கால் அம்மையார் நேரில் கண்டு பாடிய அற்புதத் திருவந்தாதியை இன்றும் சைவப் பெருமக்கள் ஓதிவருகின்றனர்.
மூன்றாவது தில்லைச் சிற்சபையில் சிவன் ஆடும் ஆனந்த நடனம். தமிழ் இசையின் தோரணவாயில். சிதம்பரத்தில் நடராஜர் இடதுபதம் தூக்கி ஆடும் திருக் கோலத்தின் உருவச் சிலைதான் மிக அரிய தத்துவங்களைக் கொண்டது. உலகெங்கும் பிரபலமானது. தென்னிந்தியாவின் செப்புச் சிலை வடிவங்களில் நடராஜாவுக்கு முக்கிய இடமுண்டு. பக்தி கலை இரண்டையும் ஒன்றாய் இணைக்கும் பாலம் இது.
ஆனந்தகுமாரஸ்வாமியின் அழகான ஆங்கிலத்தில் நடராஜா சிலை உருவ வருணனை மிகச் சுவையானது:
‘Shiva dancing, having four hands. with braided and jeweled hair of which the lower locks are whirling in the dance. In his hair may be seen a writhing Cobra, a skull, and the mermaid figure of Ganga; upon it rests the crescent moon, and it is crowned with a wreath of Cassia leaves. In his right ear He wears man’s earring, a woman’s in the left; Part of his dress consists of tightly fitting breeches, and He wears a sacred thread. One right hand holds fire, the other points down upon the demon Muyalaka, a dwarf holding a Cobra; the left foot is raised. There is a lotus pedestal, from which springs an encircling glory (Thiruvasi) fringed with flame, and touched within by hands holding drum and fire.’
இந்திய இசையைப் பற்றிய இவரது பார்வை மிக ஆழமானது. ‘இந்தியர்கள் இசையைக் கேட்பதன் முன் பாடலைக் கேட்கிறார்கள். பாடலின் ஜீவனை இரசிக்கிறார்கள். வெறும் குரல் வளம் மட்டும் கொண்டு இங்கே இசைக் கலைஞர்கள் ஆகிவிடமுடியாது’ என்கிறார். (It is not the voice that makes a singer in India as so often happens in Europe). எழுத்து வடிவில் இந்திய இசை (Musical Notations) இல்லாத காரணத்தால் குருமுகமாக மட்டுமே அதைக் கற்றுக் கொள்ள முடியும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்திய இசை சாதாரணக் கலை வெளிப்பாடு அல்ல. அது தெய்வீகமானது. இராகங்களை தேவதைகளாக வணங்குகின்றது. அதைப் பயில்வதே இறை நம்பிக்கையின் அனுபவம். இது பற்றி ஒரு சுவையான புராணக் கதையை ஆசிரியர் குறிப்பிடுகிறார்.
ஒருமுறை தானே சிறந்த இசைக் கலைஞன் என்ற ஆணவம் நாரதமுனிவருக்கு வந்தது. ஈரேழு லோகங்களிலும் இதைச் சொல்லியே அலைந்து கொண்டிருந்தார். இதனைத் தடுக்க உளம் கொண்ட மகாவிஷ்ணு நாரதரை அழைத்துச் சென்று ஒரு மாளிகையைக் காட்டினார். மிகப் பெரிதாகவும், வண்ண மயமாகவும், எழிலாகவும் இருந்த அந்த மாளிகையில் ஓர் அறையிலிருந்து அழுகுரல்கள் கேட்டன. உள்ளே சென்ற விஷ்ணுவும் நாரதமுனியும் அங்கே அழுது கொண்டிருக்கும் சில அழகிய இளம் பெண்களைப் பார்த்தனர். அவர்கள் கை கால்கள் உடைந்திருந்தன. உடலில் பல காயங்கள் தென்பட்டன.
‘நீங்கள் யார்? யார் உங்களை இந்நிலைக்கு ஆளாக்கியது?’ என விஷ்ணு கேட்டார்.
‘நாங்கள் ராக தேவதைகள். யாரோ நாரதர் என ஒரு முனிவனாம். அவன் கண்டபடி பாடித் திரிந்து கொண்டு எங்களை இந்நிலைக்கு ஆக்கிவிட்டான்’ என்றார்கள்.
இலேசான புன்னகையோடு விஷ்ணு திரும்பிப் பார்க்கிறார். நாரதரை அருகே காணவில்லை. ஆணவம் அழிந்த அவர் நல்ல இசை பயில குருவைத் தேடிச் சென்றுவிட்டாராம்!
புதிய இந்தியாவுக்குத் தேவையான கல்வி முறை பற்றி விளக்கமாக எழுதியுள்ளார். அக் காலத்தில் ஆர்ய சமாஜ் ஹரித்வாரில் நடத்திய ‘குருகுலம்’ பற்றி மிகப் பாராட்டுகிறார்.
‘The Gurukula of the Arya Samaj at Hardwar is perhaps the most fascinating educational experiment in the world. It has the characteristic of the east, and the combination of this ancient wisdom with modern and practical knowledge.’
பனாரஸ் இந்து பல்கலைக் கழகம் தொடங்கப்பட்ட போது பேராசிரியர் பேட்ரிக் கெட்ஸ் ‘இந்திய நாட்டுக்கான கல்வியை வழிநடத்தும் பொறுப்பை ஐரோப்பிய வழி பயின்ற இந்தியப் பட்டதாரிகளிடம் கொடுக்கின்ற தவறைச் செய்துவிடாதீர்கள்’ என்று எச்சரிப்பதைச் சுட்டிக் காட்டுகிறார் ஆசிரியர். (It would be a mistake to allow the Europeanized Indian graduates to have their way with Indian education – Patrick Geddes)
‘மக்கள் எதைச் செய்ய முயல்கிறார்கள் என்று கண்டுபிடித்து அதை மேலும் திறமையோடு செய்யக் கற்றுத் தருவதே கல்வி’ என்று சிந்தனையாளர் ரஸ்கின் (Ruskin) சொன்னதைச் சுட்டிக் காட்டும் ஆசிரியர், ஆங்கிலக் கல்வி முறையில் இந்தக் கண்டுபிடித்தலுக்கு இடமே இல்லை எனக் குற்றம் சாட்டுகிறார்.
மரபுச் சங்கிலிகளை அறுத்து, நம்முடைய பழைய வேர்களைத் துண்டித்து முகமற்றவர்களாக இந்தியர்களை அலையவைக்க ஒரு தலைமுறை ஆங்கிலக் கல்வியே போதுமானது என்று வருந்துகிறார். (‘A single generation of English education suffices to break the threads of tradition and to create a nondescript and superficial being deprived of all roots’).
மிஷினரி பள்ளிகளைப் பற்றிச் சொல்லும் போது ‘அவை கல்வி கற்றுக் கொடுப்பதைவிட மதமாற்றம் செய்வதில் அதிக ஆர்வம் காட்டுவோராலேயே நடத்தப் படுகின்றன.’ என்கிறார் (Missionary schools derive their power from the contributions of those who are interested much more in proselytizing than in education.)
இத்தகைய ஆங்கிலக் கல்வி மூலம் ‘தன்னுடைய ஆன்மீக ஒருமைப்பாட்டை இழப்பதுதான் இந்தியாவின் மிகப் பெரிய அபாயம்’ என்று எச்சரிக்கிறார். (The greatest danger of India is the loss of her spiritual integrity.)
அவர் கண்ட இந்தியாவை அழகாக வருணிக்கிறார். ‘நம்பமுடியாத பழமை; ஆச்சரியப் படத்தக்க இளமை; ஒருபுறம் முழுமையான நாகரீகம், மறுபுறம் பரிதாபத்திற்குரிய கட்டுப்பெட்டித்தனம்.’ (India is at once unbelievably old and incredibly young; utterly sophisticated and pathetically naïve.).
ஆனந்த நடனம் ஆடும் சிவன் உருவச் சிலையில் ஆரம்பித்த ஆனந்தகுமாரஸ்வாமியின் ஆய்வுப் பயணம், கலை, இலக்கியம், நடனம், சிற்பம், ஓவியம், இசை, கல்வி என்று பாரதப் பண்பாட்டின் அனைத்துப் பாதைகளிலுமே பயணிக்கின்றது. விடுதலை காண இருக்கும் இளைய பாரதத்திற்கு அன்று அவர் எழுதிய கட்டுரைகளின் கருத்துகள் இன்றும் உற்றுப் பார்த்துப் பயனடையும் வகையில்தான் உள்ளன.
பத்து ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த நிகழ்ச்சி. ஒரு பரத நாட்டிய மாணவியின் நடன அரங்கேற்றம். வழக்கம் போல் மேடை அலங்கரிப்பில், ஓர் ஓரத்தில் நடராஜர் சிலையும், குத்துவிளக்கும் இருந்தன. மாணவி கிறித்துவர் என்பதால் அவரை சேர்ந்தவர்கள் மேடையில் இருந்த நடராஜர் சிலையை அகற்றிவிட்டனர். அன்றைய நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்க வந்த பிரபல நாட்டியமணிக்கு இது தெரிய வந்தவுடன், நடராஜர் சிலை மேடையில் இல்லையென்றால், நானும் இருக்கமாட்டேன் என்று எழுந்துவிட்டார்.
இன்னொரு நிகழ்ச்சி. ஒரு பிரபல கர்நாடக இசைப் பாடகர் ‘கர்நாடக இசையில் பக்தியை மட்டும்தான் பாட வேண்டும் என்று சொல்வது தவறு. இது உயர் குடியினரின் சூழ்ச்சி’ என்று சொன்னார். சில ‘பிரபல’ நாளிதழ்களும் இதை வெளியிட்டன.
ஆனந்தகுமாரஸ்வாமியின் ‘டான்ஸ் ஆப் சிவா’ போன்ற நூல்கள் பள்ளிகளில் பாடமாக்கப் பட்டால், மேற்படி நிகழ்ச்சிகள் நடவாமல் மக்களே பார்த்துக் கொள்வார்கள்.