Posted on Leave a comment

கம்பனில் குலமும் சாதியும் | ஜடாயு

இரண்டாயிரம் ஆண்டுகாலத் தொன்மையுடைய தமிழிலக்கியத்தின் ஒரு மகத்தான சிகரம் கம்பராமாயணம் என்பதில் இருவேறு கருத்தில்லை. இந்த மகத்தான காவியத்தின் ஊடாக அறநெறிகளும், தத்துவச் சிந்தனைகளும், வாழ்க்கைத் தரிசனங்களும், பல்வேறு விதமான பண்பாட்டு, சமூக, வரலாற்றுச் செய்திகளும் இயல்பாகப் பயின்று வருகின்றன. இவற்றைப் பலவிதங்களில் ரசனைக்கும் ஆய்வுக்கும் உட்படுத்துவது கம்பரைப் பற்றியும், தமிழ்ப் பண்பாடு பற்றியதுமான நமது கண்ணோட்டத்தை விரிவாக்கும். அதனடிப்படையில் குலம், சாதி, வர்ணம் ஆகிய மரபார்ந்த கருத்தாக்கங்கள் குறித்து கம்பராமாயணப் பாடல்களில் வரும் குறிப்புகளை ஒரு தொகுப்பாக இக்கட்டுரையில் பார்க்கலாம்.

இத்தகைய ஆய்வுக்கு, வரலாற்று ரீதியாக கம்பரின் காலம் பற்றிய பிரக்ஞை மிகவும் அவசியமானது. கம்பர் வாழ்ந்த காலம் பொதுயுகம் 12ம் நூற்றாண்டு. பொ.யு. 1120க்கும் 1200க்கும் இடைப்பட்ட காலமே கம்பரது வாழ்க்கைக் காலம் என்பது மு.இராகவையங்கார் உள்ளிட்ட பல அறிஞர்களும் பல்வேறு சான்றுகளின் அடிப்படையில் ஏற்றுக் கொண்ட முடிபு1. விக்கிரமசோழன், இரண்டாம் குலோத்துங்கன், இரண்டாம் இராசராசன் ஆகிய மன்னர்கள் ஆட்சிபுரிந்த சோழப்பேரரசின் இறுதிக்காலகட்டம் இது. இந்தக் காலத்திய சமூகச் சூழல் குறித்து வரலாற்றாசிரியர்கள் ஓரளவு விரிவாகவே எழுதியிருக்கின்றனர். இடங்கை, வலங்கைப் பிரிவுகள், வணிகர் குழுக்கள், சோழப்பேரரசிற்குள் அடங்கிய சிறுசிறு பிரதேசங்களை ஆட்சிசெய்த குறுநில மன்னர்கள், நிலக்கிழார்கள் எனப் பல கூறுகளைக் கொண்டதாக இந்தக் காலகட்டம் இருந்திருக்கிறது, இதுவே கம்பர் வாழ்ந்த காலத்தின் சமூகச் சூழல்.

வால்மீகி முனிவர் வாழ்ந்தது திரேதாயுகத்தில் என்று புராண மரபு கூறுகிறது. பெரும்பான்மை வரலாற்றாசியர்கள் பொயுமு 5ம் நூற்றாண்டு என்று கணிக்கின்றனர். இதன்படி, வால்மீகிக்கும் கம்பருக்குமான கால இடைவெளி குறைந்தது 1600 ஆண்டுகளுக்கும் மேல் என்றாகிறது. வால்மீகியின் காலத்தை இன்னும் முன்னே கொண்டு சென்றால், இந்த இடைவெளி இன்னும் அதிகமாகும். உண்மையில் கம்பரையும் வால்மீகியையும் ஒப்பிட்டு எந்தக் கருத்தைக் கூறுவதானாலும், இந்த நீண்ட கால இடைவெளி குறித்த புரிதலுடன் சேர்ந்தே அது கூறப்படவேண்டும். ஆனால், தமிழில் இதுவரை இத்தகைய ஓப்பீடுகளைச் செய்துள்ள பல இலக்கியவாதிகளும் தமிழறிஞர்களும் இந்த அடிப்படையான விஷயத்தையே மறந்துவிட்டு, மனம்போன போக்கில் பல கருத்துக்களை எழுதிச் சென்றுள்ளனர். கம்பர் சித்தரிக்கும் பண்பாட்டுச் சித்திரம் என்பது முழுமையாக இராமாயண இதிகாச காலத்தின் சித்திரம் அல்ல, அதில் பிற்காலச் சோழர் காலத்திய பண்பாட்டு, சமூக மதிப்பீடுகளின் தாக்கமும் பெருமளவில் உள்ளது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

வால்மீகி ராமாயணம் சித்தரிக்கும் சமூக, கலாசாரக் கூறுகள் வேதகாலத்திற்கு சற்றே பிற்பட்டு அதன் தொடர்ச்சியாகவே வருபவை. எனவே பிற்கால தர்மசாஸ்திரங்களில் கூறப்படும் இறுக்கமான வர்ண கோட்பாடுகளும், பெண்களைக் குறித்த கட்டுப்பாடுகளும் அதில் காணக் கிடைப்பதில்லை. உதாரணமாக, வால்மீகி ராமாயணத்தில், தசரத மன்னர் புத்ரகாமேஷ்டி யாகத்தின் பின் நான்கு வர்ணத்தினருக்கும் மரியாதை செய்கிறார். சீதை, கோசலை ஆகிய பெண்கள் சந்தியாவந்தனம் செய்ததாக குறிப்புகள் உள்ளன. நிஷாதர்கள் எனப்படும் வேடுவர் சமூகத்தினரின் அரசனான குகன், அயோத்தி இளவரசனான இராமனுக்கு ஈடான சமூக அந்தஸ்துடன் இருக்கிறான், அவனை இராமன் கட்டித் தழுவிக்கொள்வதாக வருகிறது (கம்பனில் மீன் நாற்றம் வீசும் உடலுடனும் காட்டுவாசிகளுக்கான தோற்ற அமைப்புகளுடனும், ‘நாவாய் வேட்டுவன் நாய் அடியேன்’ என்று இராமனைச் சந்திக்க அனுமதி கேட்டு இலக்குவனிடம் முறையிடுபவனாக குகன் வருகிறான்). தசரதனால் தவறாக அம்பெய்து கொல்லப்பட்டு இறக்கும் தறுவாயில் அவருக்கு சாபமிடும் முனிகுமாரனான சிரவணன், வைசிய தந்தைக்கும் சூத்திர தாய்க்கும் பிறந்தவன் என்று குறிப்பிடப் படுகிறான். இப்படிப் பல சான்றுகளைக் கூறலாம். ஆனால், மேற்குறிப்பிட்ட வகையான சித்தரிப்புக்கள் கம்பராமாயணத்தில் இல்லை. கம்பர் விவரிக்கும் அரசு நெறிகள், சமூகநெறிகள் யாவும், அவர் முதல் நூலாக எடுத்துக்கொண்ட வால்மீகி ராமாயணம் மற்றும் அவர் கற்றிருந்திருக்கக் கூடிய மற்ற சம்ஸ்கிருத இராமாயண நூல்கள் ஆகியவற்றின் அடிப்படையிலும், கூடவே அவர் வாழ்ந்த காலகட்டத்தின் சமூகச் சூழலின் அடிப்படையிலும் இரண்டும் சேர்ந்ததாகவே உள்ளன. இதற்கான சான்றுகளைக் கம்பராமாயணம் நெடுகக் காணலாம்.

பொதுவாக வர்ணம் (வருணம்) என்ற சொல் தொழில்சார்ந்த நால்வகை சமூகப் பிரிவுகளையும், குலம், சாதி, குடி ஆகிய சொற்கள் பிறப்பு மற்றும் குடும்ப அடிப்படையில் வழிவழியாக வரும் சமூகப் பிரிவுகளையும் குறிக்கும். இத்தகைய வரையறைகள் வியாச மகாபாரதம் மற்றும் தர்மசாஸ்திரங்கள் போன்ற மிகப்பழைய வடமொழி நூல்களில்தான் இத்தகைய கறாரான பொருளில் பயன்படுத்தப்படுகின்றன. மற்றபடி, கம்பராமாயணம் போன்ற பிற்கால நூல்களில் இச்சொற்கள் அனைத்தும் பிறப்பு, தொழில் இரண்டையுமே தழுவிய சமூக அடையாளத்தைக் குறிப்பதாகவே உள்ளன.

கம்பராமாயணத்தில் குலம் என்ற சொல்லே மிகப்பெருமளவில் ஏராளமான இடங்களில் பயன்படுத்தப்படுகிறது. வருணம் என்ற சொல் இரண்டு பாடல்களிலும், சாதி என்ற சொல் மூன்று பாடல்களிலும் வருகிறது. குடி என்ற சொல் பெரிதும் வசிப்பிடம் மற்றும் வசித்தல் சார்ந்தும், சில இடங்களில் குலம் என்பதற்கு இணையாகவும் பயன்படுத்தப் பட்டுள்ளது.

குலம் எனப் பிரிந்தவன்றே

காத்த கால் மள்ளர் வெள்ளக் கலிப்பறை கறங்கக் கைபோய்ச்

சேத்த நீர்த் திவலை பொன்னும் முத்தமும் திரையின் வீசி,

நீத்தம் ஆன்று, அலைய ஆகி, நிமிர்ந்து, பார் கிழிய நீண்டு,

கோத்த கால் ஒன்றின் ஒன்று குலம் எனப் பிரிந்தவன்றே.

(பால காண்டம், ஆற்றுப்படலம்)

[மள்ளர் – உழவர்கள்; கால் – கால்வாய்; கறங்க – ஒலிக்க; முத்தம் – முத்து; திரை – அலை]

உழவர்கள் காத்துநின்ற கால்வாயில் வெள்ளம் வருவதைத் தெரிவிக்கும் கிணைப்பறை ஒலித்தது, ஒழுங்காகச் சென்று, திரண்ட நீர்த்திவலைகளையும், பொன்னையும், முத்தையும் அலைகள் வீசி எறிய, வெள்ளம் பெருகியது. அலைகளால் உயர்ந்து, நிலம் கிழியும்படி நீளச் சென்று, முறையாகத் தொடர்கின்ற ஒரு கால்வாயிலிருந்து மற்றொரு கால்வாயாக, குலம் பல கிளைகளாகப் பிரிவது போல் பிரிந்து சென்றது சரயு நதியின் வெள்ளம்.

நதியின் வெள்ளம் முறையாகக் கட்டுப்படுத்தப்பட்டு கால்வாய்களாக ஓடி நிலத்தைச் செழிக்கச் செய்யும் அற்புதத்தை காவிரி பாயும் நாட்டில் கண்டு வளர்ந்த கம்பர், சரயு நதி வர்ணனையில் அதனை அழகுறப் பதிவு செய்திருக்கிறார். ஒரு குலம் பல கிளைகளாகப் பிரிந்து நெடிது தொடர்ந்து வாழ்வது போல என்று இதற்கு அவர் கூறும் உவமை ஆழமானது. ஒரு சமுதாயத்தில் குலங்கள் கிளைபிரிந்து செல்வது இயல்பானது, ஆரோக்கியமானது, ஆக்கபூர்வமானது, அதுவே அந்த சமுதாயத்தின் ஒட்டுமொத்த வளத்தையும் நலத்தையும் அதிகரிக்கும் என்ற கருத்து இதன் உட்பொருளாக உள்ளது. தசரத மன்னனுடைய குலம் நான்கு புதல்வர்களைப் பெற்று உயர்வடையப் போகிறது என்ற காவியக் கருப்பொருளும் இதில் குறிப்புணர்த்தப்படுகிறது. கால்வாய்கள் பலவாகப் பிரிந்தாலும் உள்ளுறை நீர் ஒன்றே; உயிர்க்குலம் பல கிளைகளாகப் பிரிந்தாலும் அதன் ஆதாரமான உயிர் ஒன்றே என்பதைக் கூறுவதாகவும் இது உள்ளது.

குல ஒழுக்கம், குலப்பெருமை

குலம் என்ற சொல் அடிப்படையில் கூட்டம், தொகுதி என்ற பொருள் கொண்டது. மானுடர்கள் மட்டுமின்றி, அரக்கர்குலம், கவிக்குலம் (வானரர்கள்), அமரர்குலம் (தேவர்கள்) ஆகியோரும் இச்சொல்லால் குறிக்கப்படுகின்றனர். எல்லாவிதமான கூட்டங்களையும், தொகுதிகளையும் குறிக்க இச்சொல் தமிழ் இலக்கியங்களில் பரவலாவகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. கம்பராமாயணத்திலேயே மிகப்பல உதாரணங்கள் உள்ளன.

பசுக்களின் கூட்டம் – ‘அருத்தி வேதியற்கு ஆன்குலம் ஈந்து’.

நரிக்கூட்டம் – ‘ஞாளியோடு நின்று உளைக்கின்ற நரிக்குலம் பலவால்’.

மேகங்களின் கூட்டம் – ‘தூரியக் குரலின் வானின் முகில் குலம் துணுக்கம் கொள்ள’, ‘விரி மழைக்குலம் கிழித்து ஒளிரும் மின் என’.

ஆபரணங்களின் தொகுதி – ‘தோள் அணிக்குலம் பல உள, குண்டலத் தொகுதி வாள் இமைப்பன பல உள’.

‘யாவர்க்கும் தொழு குலம் ஆம் இராமன்’ (கங்கை காண் படலம், அயோத்தியா காண்டம்) என்பதில் தொழு குலம் என்ற சொல், தொழுவதற்கு உரிய குலதெய்வம் என்ற பொருளிலும் வந்துள்ளது.

ஒழுக்கமும், நற்பண்புகளும் இயல்பாகவே நற்குலத்தில் பிறந்தவர்களிடம் காணப்படும் என்ற கருத்தாக்கம் திருக்குறள் உட்பட அனைத்து தமிழ் நீதிநூல்களிலும் உள்ளது. அதனையே கம்பரும் எடுத்துரைக்கிறார்.

கலம் சுரக்கும் நிதியம்; கணக்கிலா

நிலம் சுரக்கும் நிறை வளம்; நல் மணி

பிலம் சுரக்கும்; பெறுதற்கு அரிய தம்

குலம் சுரக்கும் ஒழுக்கம்; குடிக்கு எலாம்.

(பால காண்டம், நாட்டுப்படலம்)

கோசல நாட்டு மக்களுக்கெல்லாம் செல்வத்தைக் கப்பல்கள் கொடுக்கும். நிலங்கள் அளவற்ற நிறை வளத்தைக் கொடுக்கும். சுரங்கங்கள் நல்ல இரத்தினங்களைக் கொடுக்கும். பெறுவதற்கு அரியதாகிய குலம் ஒழுக்கத்தைக் கொடுக்கும்.

தசரதனுடைய அமைச்சர்களின் தகுதிகளைக் கூற வருகையில், ‘குடிப்பிறப்பினது முதன்மையானபழமையும்’ என்கிறார் கம்பர்.

குலம் முதல் தொன்மையும், கலையின் குப்பையும்,

பல முதல் கேள்வியும், பயனும், எய்தினார்;

(மந்திரப் படலம், அயோத்தியா காண்டம்)

[கலையின் குப்பையும் – கலை அறிவுகளின் தொகுதியையும்] பயனும் -கல்வி, கேள்விகளின் பயனையும்]

இராமன் அவதரித்த சூரிய குலத்தின் பெருமை இராமகாதை முழுவதும் பல இடங்களில் மீண்டும் மீண்டும் பேசப்படுகிறது.

அனைத்து செல்வங்களும் இருந்தபோதும் மக்கட்பேறு இல்லை என்று தசரதர் வசிஷ்டரிடம் கூறுகையில்,

‘எம் குலத் தலைவர்கள் இரவி தன்னினும்

தம் குலம் விளங்குறத் தரணி தாங்கினார்

மங்குநர் இல் என’

என்று கூறுகிறார். சூரியனை விடவும் மங்காமல் ஒளிவீசி தங்கள் குலம் விளங்க ஆண்டவர்கள் எம் குலத் தலைவர்கள் என்கிறார்.

அரசவைக்கு வந்த விசுவாமித்திரரை வரவேற்கும் தசரதர், நீங்கள் இங்கு வந்திருப்பது இந்த நாடு செய்த தவம் என்பது மட்டுமல்ல – ‘நிலம் செய் தவம் என்று உணரின் அன்று’, முன்பிலிருந்தே எனது குலம் செய்த தவம், ‘முந்து என் குலம் செய் தவம்’ என்று கூறுகிறார்.

விசுவாமித்திர முனிவர் மிதிலை அரசவையில் ஜனகருக்கு இராம லட்சுமணர்களை அறிமுகம் செய்யும் இடத்தில் ‘குலமுறை கிளத்து படலம்’ என்று ஒரு முழுப்படலத்தையே கம்பர் அமைத்திருக்கிறார். ‘ஆதித்தன் குல முதல்வன் மனுவினை யார் அறியாதார்?’ என்று வைவஸ்வத மனுவில் ஆரம்பித்து, இக்ஷ்வாகு, ககுஸ்தன், சிபி, சகரன், பகீரதன், திலீபன் என்று ரகுவம்ச மன்னர் வரலாறுகளைச் சுருக்கமாகக் கூறிச் செல்கிறார்.

இராமனின் அம்பினால் அடிபட்டு வீழ்ந்து கிடக்கும் வாலி, குற்றம் சாட்டும் தறுவாயிலும் ‘குலம் இது; கல்வி ஈது; கொற்றம் ஈது; உற்று நின்ற நலம் இது; புவனம் மூன்றும் நாயகம் உன்னது அன்றோ?’ என்று இராமனின் குலப்பெருமையிலிருந்து ஆரம்பிக்கிறான்.

குலப்பெருமை என்பது ஆண்களுக்கு மட்டும் சொந்தமானதல்ல, பெண்களுக்கும் உரியது என்பதும் பல இடங்களில் வருகிறது. ‘குலம் பொறை கற்பு இவை சுமந்த கோசலை’ என்று இராமனின் அன்னைக்கு கம்பர் அடைமொழி தருகிறார் (பள்ளிபடைப் படலம், அயோத்தியா காண்டம்).

சுந்தர காண்டத்தில், இலங்கைக்குச் சென்று அசோகவனத்தில் சீதையைக் கண்டு திரும்பிவந்து அதை இராமனிடம் அனுமன் கூறுமிடத்தில், குலம் என்ற சொல்லை வைத்து களமாடியிருக்கிறார் கம்பர்.

உன் குலம் உன்னது ஆக்கி, உயர் புகழ்க்கு ஒருத்தி ஆய

தன் குலம் தன்னது ஆக்கி, தன்னை இத் தனிமை செய்தான்

வன் குலம் கூற்றுக்கு ஈந்து, வானவர் குலத்தை வாழ்வித்து,

என் குலம் எனக்குத் தந்தாள்; என் இனிச் செய்வது எம்மோய்.

(சுந்தர காண்டம், திருவடி தொழுத படலம்)

[எம்மோய் – எனது தாயாகிய சீதை; அல்லது இராமனை நோக்கி எனது தலைவனே என்று கூறுவதாகவும் கொள்ளலாம்].

தனது புகுந்த வீட்டின் குலத்தை உன்னால் சிறப்புள்ளதாகி இராமன் என்ற உன் பெயரால் நிலை பெறுமாறு செய்தாள். தான் பிறந்த ஜனகர் குலத்தைத் தன் பெயரால் விளங்குமாறு செய்தாள். தன்னைத் துன்புறுத்துத்திய இராவணனின் அரக்கர் குலத்திற்கு மரணத்தை விளைவித்தாள். எனது வானர குலத்தை அனுமன் குலம் என்று உலகம் கொண்டாடும் பெருமையை எனக்குக் கொடுத்தாள். இனிமேல் அவள் செய்வதற்கு சிறப்பான செயல் என்று ஏதும் உண்டோ?

தீரமும் உறுதியும் கொண்ட ஒரு மகத்தான பெண் பல குலங்களின் பெருமையை நிலைநிறுத்துகிறாள், அவற்றை வாழ்விக்கிறாள் என்பதை இதன் மூலம் கவி உணர்த்துகிறார்.

வானர்களின் குலத்திலும் ஆன்ற பெரியோர்களும் முதியோர்களும் இருந்தனர். வாலி மாயாவி என்ற அரக்கனுடன் போரிட்டுக் கொண்டே குகைக்குள் சென்று திரும்பாத போது, குல முதல்வர்கள் ஒன்று கூடி, இந்த அரசாட்சியை நீ ஏற்பாய் என்று சுக்கிரீவனுக்கு அறிவுறுத்துகின்றனர்.

குலம் புக்கு ஆன்ற முதியர் ‘குறிக்கொள் நீ

அலம் பொன் தாரவனே! அரசு’ என்றலும்.

(கிட்கிந்தா காண்டம், வாலிவதைப் படலம்)

[குறிக்கொள் – ஏற்றுக்கொள்வாய்; அலம்பொன் தாரவனே – அழகிய பொன்மாலை அணிந்தவனே]

அரக்கர்களின் குலப்பெருமை பற்றிய புகழ்ச்சிகளும் பேசப்படுகின்றன. இராவணனுடைய மந்திராலோசனை சபையில், ‘நீ அயன் முதல் குலம் இதற்கு ஒருவன் நின்றாய்’ என்று பிரம்மனுடைய குலத்தில் தோன்றிய இராவணனை கும்பகருணன் புகழ்கிறான். ‘குலம் கெழு காவல’ என்கிறான் படைத்தனைவனான பிரகஸ்தன் (யுத்தகாண்டம், இராவணன் மந்திரப் படலம்).

குலப்பழி, குலநாசம்:

நல்வினைக்கு ஈடாகவே ஒருவர் செய்யும் தீவினைகளும் அக்குலம் முழுவதற்கும் உரியதாகின்றன என்ற கருத்தாக்கமும் கம்பனில் பேசப்படுகிறது.

கைகேயின் சூழ்ச்சியால் இராமன் காடு செல்வதற்குத் தானும் காரணமாகி விட்டேனே என்று பரதன் புலம்புமிடத்தில் தன்னைக் குலப்பழி என்று கூறிக்கொள்கிறான்.

‘இரதம் ஒன்று ஊர்ந்து பார் இருளை நீக்கும் அவ்

வரதனில் ஒளி பெற மலர்ந்த தொல் குலம்

பரதன் என்று ஒரு பழி படைத்தது ‘என்னுமால்

மரகத மலை என வளர்ந்த தோளினான்.

(அயோத்தியா காண்டம், பள்ளிபடைப் படலம்)

தேரேறிச் சென்று மண்ணில் உள்ள இருட்டையெல்லாம் போக்கும் சூரியனால் ஒளிபெற மலர்ந்த இப்பழமையான அரசகுலம் இப்போது பரதன் என்ற பெயரை உடைய ஒரு பழியையும் உண்டாக்கி விட்டதே.

போர்க்களத்திற்குப் புறப்படும் முன்பு, இந்திரஜித் இராவணனிடம் பின்வருமாறு கூறுகிறான்:

குலம் செய்த பாவத்தாலே கொடும்பகை தேடிக் கொண்டோம்

சலம்செயின் உலகம் மூன்றும் இலக்குவன் முடிப்பன், தானே.

(யுத்த காண்டம், இந்திரசித்தன் வதைப்படலம்)

பாவ,புண்ணியங்களுக்கு அஞ்சாமல், செருக்கும் ஆணவமும் கொண்டு திரியும் அரக்கர்களிடத்தும் குலப்பாவம் போன்ற நம்பிக்கைகள் இருப்பதாக அமைந்துள்ளது கம்பனின் பாத்திரப் படைப்பு.

‘உன் ஒருவனுடைய தீய ஆசையால் அரக்கர் குலம் முழுவதுமே நாசமடையப் போகிறது’ என்பது விபீஷணன், மண்டோதரி, மாலியவான் ஆகியோர் இராவணனுக்குக் கூறும் அறிவுரைகளில் தொடர்ந்து வருகிறது. இராவணனின் மரணத்திற்குப் பின்பு விபீஷணன் புலம்பலிலும் குலநாசம் என்ற இந்தக் கருத்து உள்ளது.

போர் ஆசைப்பட்டு எழுந்த குலம் முற்றும்

பொன்றவும்தான் பொங்கி நின்ற

பேராசை பேர்ந்ததோ? பேர்ந்து ஆசைக்

கரி இரியப் புருவம் பேர்த்தோய்!

(யுத்தகாண்டம், இராவணன் வதைப் படலம்)

[பொன்றவும் – அழியவும்; பேர்ந்ததோ – அடங்கியதோ; பேர்ந்து – பெயர்ந்து; ஆசைக்கரி இரிய – திசையானைகள் நிலைபெயருமாறு; புருவம் பேர்த்தோய் – புருவத்தை அசைத்தவனே]

அறநெறி குலம் சார்ந்ததா செயல் சார்ந்ததா?

இந்த விவாதம் கிட்கிந்தா காண்டம் வாலிவதைப் படலத்தில் அமைந்துள்ளது. அம்புபட்டு விழுந்து கிடக்கும் வாலி தன்னை இராமன் கொன்றது அறநெறி அன்று என்று இராமனைக் குற்றம் சாட்டுகிறான். அதற்கு மறுமொழியாக, ‘என்னிடம் சரண்புகுந்த எளியவனான சுக்கிரீவனின் மனைவியை நீ கவர்ந்து கொண்டது அறநெறிக்கு விரோதமானது. அதனால் நீ தண்டனைக்குரியவனாகிறாய்’ என்று இராமன் கூறுகிறான். அதனை ஏற்க மறுக்கும் வாலி, ‘மானுட குலத்தின் அறநெறிகள் வானரர்களாகிய எங்களுக்குப் பொருந்தாது. எனவே வானர குல நெறிகளுக்கு உட்பட்டு நான் செய்தது சரியே’ என்று வாதிடுகிறான்.

‘ஐய! நுங்கள் அரும் குலம் கற்பின் அப்

பொய் இல் மங்கையர்க்கு ஏய்ந்த புணர்ச்சி போல்

செய்திலன் எமைத் தேமலர் மேலவன்;

எய்தின் எய்தியது ஆக இயற்றினான்.

ஐயா, உங்கள் அரிய மனித குலத்திற்கு ஏற்றது கற்பின் வழிப்பட்ட, பொய்ம்மை இல்லாத மகளிர்க்கு பொருந்திய, திருமண முறையிலான சேர்க்கை. அதைப் போல தேன் பொருந்திய தாமரை மலரில் வீற்றிருக்கும் நான்முகன் எங்களுக்கு அமைக்கவில்லை. நேர்ந்தபோது நுகர்வது என்பதாக எங்களைப் படைத்துவிட்டான்.

மணமும் இல்லை மறை நெறி வந்தன;

குணமும் இல்லை குல முதற்கு ஒத்தன;

உணர்வு சென்றுழிச் செல்லும் ஒழுக்கு அலால்

நிணமும் நெய்யும் இணங்கிய நேமியாய்.

பகைவர் உடற்கொழுப்பும் பூசிய நெய்யும் பொருத்திய சக்கராயுதத்தை உடையவனே (திருமாலே), எங்களுக்கு மனம் சென்ற வழியே செல்லுவதாகிய நடத்தையே ஒழுக்கம். அதில்லாமல், வேத நெறிப்படி வந்த திருமண முறைகளும், குலச்சிறப்பிற்கு ஏற்றவையான குணங்களும் எல்லாம் எதுவும் இல்லை.

வாலியின் இந்த சப்பைக்கட்டு வாதத்தை இராமன் ஏற்கவில்லை. மிக அருமையாக தனது ஆழ்ந்த அறநெறிக் கருத்தாக்கத்தின் வாயிலாக அதை உடைக்கிறான்.

நலம் கொள் தேவரின் தோன்றி நவை அற

கலங்கலாது அற நல் நெறி காண்டலின்

விலங்கு அலாமை விளங்கியது; ஆதலான்

அலங்கலார்க்கு இது அடுப்பது அன்று ஆம் அரோ.

வானர குலமானாலும் தெய்வீக அம்சங்களுடன் பிறந்துள்ள நீ, குற்றமில்லாமலும் நிலை கலங்காமலும் அறத்தின் நல்ல வழியை அறிந்திருக்கிறாய். அதனால் தானே என்னுடன் அறநெறி குறித்த இந்த விவாதத்தையே நிகழ்த்திக் கொண்டிருக்கிறாய். இதிலிருந்தே நீங்கள் சாதாரண விலங்குகள் அல்லர் என்பது விளங்குகிறது. ஆகையால் வெற்றி மாலைஅணிந்த வீரர்களாகிய உங்களுக்கு இவ்வாறு விலங்கு என்று (சமாதானம்) கூறுவது அடுக்காது, பொருந்தாது.

பொறியின்றத்தாறு – அறத்தின் வழி; நோன்மை – நுட்பம்]

அறநெறி என்பது ஐம்புலன்களோடு பொருந்திய உடம்பைப் பற்றியதோ? அந்த ஐம்புலன்களின் வாயிலாக நன்றும் தீதும் ஆராய்ந்து உணர்கின்ற அறிவைப் பற்றியது அல்லவா? அறநெறியினையும் அதன் இயல்பினையும் செம்மையாக அறிந்து உணர்ந்த நீ, தவறுகளைச் செய்துவிட்டு, பிழையன்று, என் செயல் சரிதான் என்று எப்படி சாதிக்கிறாய்?

இதன் தொடர்ச்சியாக, விலங்குகளாக இருந்தாலும் மேன்மையான உணர்ச்சி பெற்ற உயிரினங்களுக்கு உதாரணங்களாக, முதலை காலைப்பிடித்தபோது பரம்பொருளைக் கூவி அழைத்த கஜேந்திரனையும், அபலைப் பெண்ணாகிய சீதையின் கூக்குரல் கேட்டவுடனே ஓடிவந்து அரக்கனுடன் போரிட்ட ஜடாயுவையும் இராமன் குறிப்பிடுகிறான். இறுதியாக இராமன் பேசும் கீழ்க்காணும் வாசகம், அறநெறியின் உண்மையான தன்மை குலம் சார்ந்தது அல்ல என்று உரத்து அறிவிக்கும் பிரகடனமாகவே அமைந்துள்ளது.

‘இனையது ஆதலின் எக்குலத்து யாவர்க்கும்

வினையினால் வரும் மேன்மையும் கீழ்மையும்;

அனைய தன்மை அறிந்தும் அழித்தனை

மனையின் மாட்சி’ என்றான் மனு நீதியான்.

‘இதுவரை கூறியபடி, உண்மை இத்தன்மையது. ஆதலால், எந்தக் குலத்தில் பிறந்தவராயினும், அவர்கள் எல்லோர்க்கும், மேன்மையும் கீழ்மையும் அவரவர் செய்யும் செயல்களாலேயே வரும். அதை நீ நன்கு உணர்ந்திருந்தும், பிறன் மனைவியின் கற்பு மாண்பினை அழித்தாய்’ என்று உரைத்தான் மனு நீதியில் தவறாதவனாகிய இராமன்.

இந்த வாதத்திற்கு வாலியிடம் எந்த மறுப்பும் இல்லை. தான் செய்தது தவறுதான் என்று ஒத்துக் கொள்கிறான். அப்படியே ஆனாலும், மறைந்து நின்று அம்பெய்தது ஏன் என்று அடுத்த கட்டத்தை நோக்கி விவாதம் நகர்கிறது.

இந்த ஒட்டுமொத்த விவாதமும் வால்மீகி ராமாயணத்தில் இல்லை. அதில், இராமனே நேரடியாக நீ வானரன், அதோடு கூட எதிராளியின் சக்தியில் பாதியை அபகரிக்கும் வரம் பெற்ற மாலையும் உன்னிடம் உள்ளது என்பதால் தன்னைவிட சக்திவாய்ந்த விலங்குகளை வேட்டையாடிக் கொல்வதற்கு உள்ள நியாயப் படி உன்னுடன் போரிட்டேன் என்று கூறுகிறான். அதை வாலியும் ஏற்றுக் கொண்டு விடுகிறான். ஆனால், கம்பர் அப்படி எளிமையாக முடித்துவிட விரும்பவில்லை. எனவே அந்த இடத்தில் இப்படி ஒரு விவாதத்தை அமைத்திருக்கிறார். இராமனுடைய அறநெறி என்பதும் மனுநீதி என்பதும் குல நெறிகள், குலக்கட்டுப்பாடுகள் என்பதோடு அடங்கிவிடுவது அல்ல, அதையும் தாண்டிய விசாலமான கண்ணோட்டம் கொண்டது என்பதைக் கூறுவதற்காகவே இந்த விவாதம் இங்கு இடம்பெற்றிருக்கிறது என்று கருதலாம்.

பரதன் சூளுரைகளின் அறநெறிகள்:

இது ஆரணிய காண்டம், பள்ளிபடைப் படலம் என்னும் பகுதியில் வருகிறது.

இராமன் அயோத்தி நகரத்திலிருந்து நீங்கி வனவாசம் செல்லும் சமயம், பரதனும் சத்துருக்கனனும் கேகய நாட்டில் அவர்களது மாமனுடன் இருக்கின்றனர். ஓலை அனுப்பி வரவழைத்தவுடன் நகருக்கு வரும் பரதன் நடந்த விஷயங்களைக் கேட்டு மிகவும் மனம் வருந்தி தனது தாயாகிய கைகேயியைக் கடும் வார்த்தைகளால் சீறுகிறான். பின்பு கோசலையிடம் வர, அவள் அரசுரிமை பெற்றதற்காக அவனை வாழ்த்துகிறாள். இராமனை வனவாசத்திற்கு அனுப்பியதில் தனக்கும் பங்கிருக்கிப்பதாக கோசலை சந்தேகம் கொண்டு விட்டாளே என்று ஆற்றாமை அடைந்த பரதன், தான் அப்படிக் காரணமாக இருந்தால், இன்னின்ன பாவங்கள் எல்லாம் என்னை வந்து அடையட்டும் என்று புலம்புகிறான். இது குறித்து ‘வான்மீகியின் பரதன் வஞ்சினம் உரைக்கும்போது எனக்கு பிராமணர்களைக் கொன்ற பாவம் சேர்வதாக, வேள்வியை அழித்த பாவம் சேர்வதாக என்று சொல்கிறான். ஆனால் கம்பனின் பரதனோ ஊருணியை அழித்த பாவம் என்னைச் சேர்வதாக என்றுதான் சொல்கிறான். கம்பன் குல நீதியை அல்லது அக்காலகட்டத்தின் நீதியை எக்காலத்திற்கும் உரிய மானுட நீதி என்ற இடத்துக்குக் கொண்டுசெல்கிறான்’ என்று தமிழ்ப் பேராசிரியர் ஜேசுதாசன் கூறியிருப்பதாக ஜெயமோகன் தனது பதிவில் குறிப்பிட்டிருக்கிறார் [2].

இது முற்றிலும் தவறான கருத்து. வால்மீகி, கம்பர் இருவருமே இந்த இடத்தை அற உணர்வையும் நீதியுணர்வையும் உண்டாக்கும் வகையில் ஒரே போலத்தான் அமைத்திருக்கின்றனர்.

அந்தணர் உறையுளை அனலி ஊட்டினோன்,

மைந்தரைக் கொன்றுளோன் வழக்கில் பொய்த்துளோன்..

[உறையுள் – வீடு; அனலி – தீ]

என்று கம்பர் குறிப்பிடுகிறார்.

வால்மீகி ராமாயணத்திலும் ‘குடிநீரை அசுத்தமாக்கியவனும், விஷம் வைப்பவனும், தாகமடைந்த உயிர்களிடமிருந்து தண்ணீரை விலக்கி வைப்பவனும், நீதிமன்றத்தில் ஒருசார்பாக நடந்து கொள்பவனும் அடையும் பாவத்தை நான் அடைவேனாக’ என்பது உள்ளது (அயோத்யா காண்டம், ஸர்க்கம் 75, 54-57).

மறு இல் தொல் குலங்களை மாசு இட்டு ஏற்றினோன்

சிறு விலை எளியவர் உணவு சிந்தினோன்..

குற்றமில்லாத பழைய குலங்களின், குடும்பங்களின் மீது குற்றம் கற்பித்தவன், பஞ்சகாலத்தில் எளியவர்கள் கைக்கொண்டு உண்கின்ற உணவைக் கீழே சிந்துமாறு செய்பவன் – இவர்கள் அடையும் பாவம் என்னைச் சேர்க.

அழி வரும் அரசியல் எய்தி ஆகும் என்று

இழி வரு சிறு தொழில் இயற்றி ஆண்டு தன்

வழி வரு தருமத்தை மறந்து மற்று ஒரு

பழி வரு நெறி படர் பதகன் ஆக யான்.

கேடில்லாத அரசாட்சியை அடைந்து, இழிவான கீழான செயல்களைச் செய்து, வழிவழியாக வரும் குல தர்மத்தை மறந்து வேறொரு குற்றமுள்ள வழியில் செல்கின்ற பாதகனாக நான் ஆகுக.

இதில் குடிகளைக் காப்பது அரசனின் குலதர்மம் என்ற கருத்து வலியுறுத்தப் படுகிறது.

வருணம் என்ற சொல்லாட்சி:

கானகத்தில் இராமன், சீதை, இலட்சுமணன் மூவரும் ஜடாயுவை முதன்முதலில் பார்த்து அறிமுகப் படுத்திக் கொள்கையில், ஜடாயு தன்வரலாறு கூறும் பகுயில் இந்த சொல்லாட்சி வருகிறது. காசியப முனிவரின் மனைவியரான அதிதி, வினதை, காத்ரு, தனு, மதி, சுரபி முதலானோர் தேவர், அசுரர், பறவைகள், பாம்புகள், அசுரர்கள், மனிதர்கள் என ஒவ்வொரு உயிர் வர்க்கத்தையும் பெற்றெடுத்ததைக் கூறுகையில், அங்கு வருணம் என்ற சொல்லைக் கம்பர் பயன்படுத்துகிறார். மற்றபடி வேறெந்த இடத்திலும் இந்த சொல்லாட்சி இல்லை.

.. இமையோரோடும்

வருணங்கள் வகுத்திட்ட காலத்தே

வந்து உதித்தேன்; கழுகின் மன்னன்;

தருணங்கொள் பேர் ஒளியீர்! சம்பாதி

பின்னர் வரு சடாயு ‘‘ என்றான்.

தானவரே முதலோரைத் தனுப் பயந்தாள்;

மதி என்பாள், மனிதர்தம் ஊடு

ஆன வருணங்கள் அவயவத்து அடைவே

பயந்தனளால்; சுரபி என்பாள்…

(ஆரணிய காண்டம், சடாயு காண் படலம்)

‘சாதி’ என்ற சொல்லாட்சி:

ஒட்டுமொத்த கம்பராமாயணத்திலும் இரண்டே இடங்களில் தான் சாதி என்ற சொல் வருகிறது, அதுவும் ஒரே படலத்திற்குள். இரண்டிலும், எதிர்மறையான பொருளில், குறுகிய மனப்பான்மையையும், கீழ்மையைம் குறிப்பதற்காகவே அது பயன்படுத்தப் பட்டுள்ளது.

யுத்தம் நடந்து கொண்டிருக்கிறது. அடுத்துப் போரிடுவதற்காக கும்பகர்ணனை எழுப்புகிறார்கள். விழித்தெழுந்து வந்து ‘இன்னுமா இலங்கை அழியவில்லை’ என்று சலிப்புடன் பேசத்தொடங்கும் கும்பகர்ணன், இராவணனுக்கு அறிவுரை கூறுகிறான். பெரும்புலமையும், தவ வலிமையும், பிரம்ம தேவன் கொடுத்த நீண்ட ஆயுளுக்கான பெருவரமும் எல்லாம் இருந்தும், அரக்கர் சாதியின் கீழ்மை இன்னும் உன்னை விட்டுப் போகவில்லையா என்று கேட்கிறான்.

‘நீதியும், தருமம் நின்ற நிலைமையும், புலமைதானும்,

ஆதி அம் கடவுளாலே அருந்தவம் ஆற்றிப் பெற்றாய்;

வேதியர் தேவன் சொல்லால், விளிவு இலா ஆயுப் பெற்றாய்;

சாதியின் புன்மை இன்னும் தவிர்ந்திலை போலும், தக்கோய்?

[ஆதி அம் கடவுள், வேதியர் தேவன் – பிரம்மன்; விளிவு – அழிவு; ஆயு – ஆயுள்; புன்மை – கீழ்மை; தக்கோய் – நற்பண்புகள் உடையவனே]

ஆயினும் செஞ்சோற்றுக் கடன் கழிப்பதற்காக கும்பகர்ணன் வீரமாகப் போரிடுகிறான். இராமன் கையால் தான் வீழப்போகிறோம் என்று தெரிந்து விடுகிறது. அந்தத் தருணத்தில், தனக்காக ஒன்றும் வேண்டாமல், தருமத்தின் பக்கம் சேரவேண்டும் என்று தீர்மானித்து இராமனிடம் சரணடைந்த தனது சகோதரான விபீஷணனைக் கைவிடாமல் பார்த்துக் கொள் என்று இராமனிடம் வேண்டுகிறான்.

‘நீதியால் வந்ததொரு நெடுந் தரும நெறி அல்லால்,

சாதியால் வந்த சிறு நெறி அறியான், என் தம்பி;

ஆதியாய்! உனை அடைந்தான்; அரசர் உருக் கொண்டு அமைந்த

வேதியா! இன்னும் உனக்கு அடைக்கலம் யான் வேண்டினேன்.

(யுத்தகாண்டம், கும்பகருணன் வதைப்படலம்)

ஆதியாய், உலகில் அரசர் வடிவு கொண்டு அவதரித்த வேதியனே, தனது தெளிந்த சிந்தனையால் உருவான நீதியுணர்வினால் வந்த சிறந்த தரும நெறி அல்லாது, அரக்கப் பிறப்பு என்ற சாதியால் வந்த சிறுநெறியை அறியாதவன் என் தம்பி. அதனால்தான் அவன் உன்னை அடைக்கலமாக அடைந்தான். மீண்டும் அவனை உனக்கு அடைக்கலப் பொருளாகக் கொண்டு அவனை நீ காப்பாற்ற வேண்டும் என்று நான் வேண்டுகிறேன்.

உணர்ச்சிமயமான இந்தப் பாடலில் ‘நீதியால் வந்ததொரு நெடுந் தருமநெறி’ என்றும், அதற்கு எதிராக, ‘சாதியால் வந்த சிறுநெறி’ என்றும் இரண்டு அபாரமான சொல்லாட்சிகளைக் கம்பர் அளிக்கிறார்.

வள்ளுவர்

பறையறிவித்தலைச் செய்யும் வள்ளுவர் என்ற குலத்தினரைப் பற்றிய குறிப்புகள் கம்பனில் உள்ளன. சங்ககாலத்திலும் அதற்குப் பின்னரும் சோதிடர்களாகவும், அறிஞர்களாகவும், புரோகிதர்களாகவும் விளங்கிய வள்ளுவர் என்ற குடியினர் கம்பர் காலத்தில் பறையறைதல் என்ற தொழிலுடன் மட்டுமே அடையாளப் படுத்தப் பட்டு விளங்கியிருக்கின்றனர் என்பது இதன்மூலம் புலப்படுகிறது.

அயோத்தியின் இராமன் அவதரித்தபோதும், இராமனுக்கு முடிசூட்டு விழா என்று அறிவிக்கும் போதும் வள்ளுவர் முரசறைகின்றனர்.

என்புழி வள்ளுவர் யானை மீ மிசை

நன் பறை அறைந்தனர்..

(பாலகாண்டம், திருவவதாரப் படலம்)

ஏவின வள்ளுவர் ‘இராமன் நாளையே

பூமகள் கொழுநன் ஆய்ப் புனையும் மௌலி; இக்

கோ நகர் அணிக’ எனக் கொட்டும் பேரி அத்

தேவரும் களி கொளத் திரிந்து சாற்றினார்.

(அயோத்தியா காண்டம், மந்தரை சூழ்ச்சிப் படலம்)

கிட்கிந்தையில் சுக்கிரீவன் கட்டளைப்படி வானர சேனை புறப்படும்போது வள்ளுவர் பறையறைகின்றனர்.

எழுக எம் படைகள் என்றான்; ஏ எனும் அளவின், எங்கும்

முழு முரசு எற்றி, கொற்ற வள்ளுவன் முடுக்க..

(சுந்தர காண்டம், திருவடி தொழுத படலம்)

இலங்கையிலும், மூலபலச் சேனை போருக்கு எழம்போது, அரக்கர் படையின் வள்ளுவர்கள் முரசு கொட்டுகின்றனர்.

‘எழுக, சேனை ‘ என்று, யானைமேல் அணிமுரசு எற்றி,

வழு இல் வள்ளுவர் துறைதொறும் விளித்தலும்..

(யுத்த காண்டம், மூலபல வதைப்படலம்)

புலையர், புலை சொல்லாட்சிகள்:

புலையர் என்ற சொல்லுக்கு தமிழ் அகராதிகளில் ‘கீழ்மகன், கீழ்ச்சாதியினர்’ என்ற பொருளே தரப்படுகிறது. இலக்கிய வழக்கிலும் அவ்வாறே உள்ளது (விதிவிலக்காக ஓரிடத்தில் புரோகிதன் என்ற பொருளில் இச்சொல் வருகிறது – ‘புலைய னேவப் புன்மே லமர்ந்துண்டு – புறநானூறு. 360). சண்டாளர் என்ற வடசொல்லுக்கு இணையாக இச்சொல் தமிழில் வழங்கியிருக்கலாம் என்று தோன்றுகிறது. இறந்த விலங்குகளின் தோல் உரித்தல், இடுகாட்டுக் காவல் முதலான பணிகளில் ஈடுபட்டிருந்ததால் இழிவாகக் கருதப்பட்ட சமுதாயமாக இவர்கள் இருந்திருக்கலாம். கம்பராமாயணத்திலும் கீழ்மகன், கீழ்மை என்பதைக் குறிக்கவே இச்சொல் எல்லா இடங்களிலும் வருகிறது.

விசுவாமித்திரரின் சரிதத்தைக் கூறும் பகுதியில், திரிசங்குவுக்காக விசுவாமித்திரர் வேள்வி செய்துவைப்பதை ‘க்ஷத்திரியன் சண்டாளனுக்கு வேள்வி நடத்துகிறான்’ என்று வசிஷ்டரின் குமாரர்கள் இகழ்கின்றனர்.

சுற்று உறு முனிவர் யாரும் தொக்கனர்; வசிட்டன் மைந்தர்,

‘கற்றிலம், அரசன் வேள்வி கனல் துறை புலையற்கு ஈவான்.

(பால காண்டம், மிதிலைக்காட்சிப் படலம்)

[தொக்கனர் – கூடினர்; கனல் துறை – அக்கினியிடத்திலே]

தந்தை தாய் சொல்வதைப் பணிந்து கேட்டு நடக்காதவனுடைய செய்கை தீய புலையனுடைய நடத்தை போன்றது, செயலில் தெளிவில்லாது திரியும் நாய் போன்றது என்று இராமன் வசிஷ்டரிடம் கூறுகிறான்,

தாய் பணித்து உவந்தன, தந்தை செய்கென

ஏய, எப்பொருள்களும் இறைஞ்சி மேல் கொளாத்

தீய அப் புலையனின், செய்கை தேர்கிலா

நாய் எனத் திரிவது நல்லது அல்லதோ?

(அயோத்தியா காண்டம், திருவடி சூட்டு படலம்)

அரக்கர்களைக் குறித்து, ‘புலையின் வாழ்க்கை அரக்கர்’ (யுத்தகாண்டம், சேதுபந்தனப் படலம்) என்று கம்பர் குறிப்பிடுகிறார்.

என் மகனைக் கொன்றழித்தவர்கள் உயிரோடு வாழ, புலையனேன் ஆகிய நான் உயிரைச் சுமந்து கீழான வாழ்க்கை வாழ்கிறேனே என்று இராவணன் அரற்றுகிறான்.

.. மறு இல் மைந்தன்

தலையும் ஆருயிரும் கொண்டார் அவர் உடலோடும் தங்க,

புலையெனேன் இன்னும் ஆவி சுமக்கின்றேன் போலும் போலும்.

(யுத்த காண்டம், இந்திரசித்தன் வதைப் படலம்)

குலங்கள் கூடி வாழும் கோசல நாடு:

காவியத்தின் தொடக்கத்தில் அயோத்தியைத் தலைநகராகக் கொண்ட கோசல நாட்டின் வளத்தைக் கம்பர் விரிவாக வர்ணிக்கிறார். பாலகாண்டத்தில் நாட்டுப் படலம் என்ற முழுப்படலமே இதற்காக அமைந்துள்ளது. குறிஞ்சி, முல்லை, மருதம் முதலான ஐவகை நிலங்களில் அனைத்துவிதமான மக்களும் அறநெறிகளைப் பின்பற்றி இணைவுடனும் மகிழ்வுடனும் வாழ்கிறார்கள் என்று ஒரு ஆதர்சமான சமுதாயத்தைக் கம்பர் இதில் காட்டுகிறார். குறிப்பாக இந்தப் படலத்தில் மள்ளர், கடைசியர், நுளைச்சியர், பாணர் போன்ற தமிழ்ச் சமுதாயம் சார்ந்த குலப்பெயர்களையே கம்பர் பெரிதும் பயன்படுத்தியிருக்கிறார் என்பது குறிப்பிடத் தக்கது.

அகில் இடும் புகை, அட்டில் இடும் புகை,

நகல் இன் ஆலை நறும்புகை, நான்மறை

புகலும் வேளையில் பூம்புகையோடு அளாய்,

முகிலின் விம்மி, முயங்கின எங்கணும்.

அகிலின் நறுமணப்புகையும், சமையல் அடுப்புகளிலிருந்து எழும் புகையும், கரும்பாலைகளிலிருந்து எழும்பும் புகையும், அந்தணர்கள் நான்மறைகளை ஓதும் வேளையில் எழும் அழகிய வேள்விப் புகையோடு கலந்து மேகங்கள் போல மிகுந்து, எங்கும் வியாபித்தன.

நால்வருணங்களைச் சேர்ந்தவர்களும் சிறப்பாகத் தத்தம் தொழில்களில் இயங்கினர் என்பதையும், அறம், பொருள், இன்பம் என்ற மூவகைப் பேறுகளையும் அடைபவர்களாக அவர்கள் இருந்தனர் என்பதையும் உணர்த்தும் குறியீடாகவே இந்தப் புகை வர்ணனை உள்ளது என்று கொள்ளலாம்.

கதிர்படு வயலின் உள்ள, கடி கமழ் பொழிலின் உள்ள

முதிர்பலம் மரத்தின் உள்ள, முதிரைகள் புறவின் உள்ள

பதிபடு கொடியின் உள்ள படிவளர் குழியின் உள்ள

மது வளம் மலரில் கொள்ளும் வண்டு என மள்ளர் கொள்வார்.

வயலிலுள்ள கதிர்கள், மணம் வீசும் சோலையில் முதிர்ந்த பல மரங்களில் உள்ள பழங்கள், கொல்லைப் பக்கத்தில் விளையும் பருப்பு வகைகள், பதியப்பட்ட கொடிகளில் உள்ள பொருட்கள், குழியில் வளரும் இஞ்சி மஞ்சள் போன்ற பொருட்கள் இவையனைத்தையும் தேனை உண்ணும் வண்டுகளைப் போல மெல்லமெல்ல மள்ளர் எனப்படும் உழவர்கள் எடுத்துக் கொள்வார்கள்.

இதன் மூலம் உழவர்களுக்கு இயல்பாக நிலத்தின் விளைபொருள்கள் மீது உள்ள உரிமைகள் குறிக்கப்படுகின்றன. இதற்கு அடுத்த பாடலில் மள்ளர் தமது வளத்தைத் தாம் மட்டுமே நுகராமல் சமுதாயத்துடன் பகிர்ந்து வாழ்வது பேசப்படுகிறது.

முந்து முக்கனியின், நானா முதிரையின், முழுத்த நெய்யின்,

செந்தயிர்க்கண்டம், கண்டம், இடையிடை செறிந்த சோற்றின்,

தம்தம் இல் இருந்து தாமும் விருந்தொடும் தமரினோடும்

அந்தணர் அமுதர் உண்டி அயிறலும் அமலைத்து எங்கும்.

அந்த நாட்டில் எங்கும் அந்தணர்களை முதலில் உணவு உண்ணச்செய்து, பின்பு தம்முடைய வீடுகளிலே விருந்தினரோடும் சுற்றத்தாரோடும் தாமும் இருந்து, சிறந்த முக்கனிகளிலாலும், பல்வகைப் பருப்புகளாலும், அவற்றை முழுகடிக்கக் கூடிய நெய்யினாலும் சென்னிறமுள்ள தயிர்க்கட்டிகளாலும், கண்ட சர்க்கரைகளாலும் இவற்றிற்கு நடுவே நெருங்கிய சோற்றினாலும் உண்ணும் ஆரவாரம் நிறைந்திருக்கும்.

மணியும் பொன்னும் மயில் தழைப் பீலியும்

அணியும் ஆனை வெண் கோடும் அகிலும் தண்

இணை இல் ஆரமும் இன்ன கொண்டு ஏகலான்

வணிக மாக்களை ஒத்தது அவ் வாரியே.

மணியும், பொன்னும், மயிற்பீலியும், அணிகலன்களும், வெண்மையான யானைத் தங்களும், அகிலும், ஆபரணங்களும் என இவற்றை எல்லாம் வாரி இழுத்துக் கொண்டு போவதால் வணிக மக்களைப் போன்றிருக்கிறது சரயு நதியின் வெள்ளம்.

கொன்றை வேய்ங்குழல் கோவலர் முன்றிலில்

கன்று உறக்கும் குரவை; கடைசியர்

புன் தலைப் புனம் காப்பு உடைப் பொங்கரில்

சென்று இசைக்கும் நுளைச்சியர் செவ்வழி.

கொன்றைக் குழல், வேய்ங்குழல் (மூங்கில்) என்ற இருவகைப் புல்லாங்குழல்களையும் கொண்ட ஆயர்களின் வீட்டு முற்றத்தில் உறங்கும் கன்றுகளை, மருதநிலப் பெண்களான கடைசியர் குரவைக்கூத்து ஆடும்போது பாடும் பாடல் உறங்கச் செய்கிறது. தினைப்புனங்களில் புன்செய்ப் பயிர்களைக் காப்பவர்களை சற்று நெகிழ்த்தி தளரச்செய்வதாக நெய்தல் நிலப் பெண்களான நுளைச்சியர் பாடும் செவ்வழிப் பண் என்னும் ராகம் இசைக்கிறது.

இது போன்ற வர்ணனைகள் இந்தப் படலம் முழுவதும் உள்ளன. பொதுவாக இவற்றை விளக்கும் தமிழறிஞர்களும் உரையாசிரியர்களும் இவை குறிப்பிட்ட நிலங்களின் இயல்பையும் குறிப்பிட்ட மக்களின் வாழ்க்கை முறைகளையும் எடுத்துக் கூறுவதாக உள்ளன என்ற அளவிலேயே இதனை வாசிக்கின்றனர். ஆனால் ஒட்டுமொத்தமாக இவற்றைப் பார்க்கையில் சமுதாய இணைவும், அதனால் விளையும் ஒட்டுமொத்த சமூக மகிழ்ச்சியும் குறித்த கம்பரின் கண்ணோட்டம் புலப்படுகிறது.

சரயு நதி வர்ணனையில் வாய்க்கால்கள் போல குலங்கள் கிளைபிரிவதைக் காட்டும் கவிஞன், புகையிலும் ஓசையிலும் அறத்திலும் பொருளிலும் இன்பத்திலும் அவற்றின் இணைவையும் காட்டிச் செல்கிறான். இந்துப் பண்பாட்டின் ஆதாரமாக உள்ள இந்த மகத்தான தரிசனம் கம்பனில் மட்டுமல்ல, சம்ஸ்கிருத காவியங்களிலும், மற்ற இந்திய மொழிகளின் இலக்கியங்களிலும் வெளிப்பட்டு நிற்கின்றது என்பதை அவற்றைக் கற்போர் உணர்வர்.

சான்றுகள்:
[1] கவிச்சக்கரவர்த்தி கம்பர் – மகாவித்துவான் இரா. இராகவையங்கார்
[2] https://www.jeyamohan.in/27/
உதவிய நூல்கள்:
[1] கம்பராமாயணம்: வை.மு.கோபால கிருஷ்ணமாச்சாரியார் உரையுடன் – வெளியீடு உமா பதிப்பகம்
[2] கம்பராமாயணம் – கம்பன் கழக வெளியீடு
Leave a Reply