Posted on Leave a comment

மகாபாரதம் கேள்வி பதில் – 13 | ஹரி கிருஷ்ணன்

கர்ணனை அணுகுதல்

போர்க்களத்தில் தன்னுடைய தேர்ச்சக்கரம் பூமியில் அமிழ்ந்தபோது, ‘இந்தச் சக்கரத்தைத் தூக்கும்வரை என்மீது அம்பெய்யாதே; உன்னைத் தருமத்தின் பேரால் கேட்கிறேன்’ என்று அர்ஜுனனைப் பார்த்துக் கர்ணன் சொன்னபோது, ‘உனக்கு இப்போதாவது தர்மத்தின் நினைவு வந்ததே’ என்று குறுக்கிட்ட கண்ணபெருமான் ‘இன்னின்ன சமயங்களில் உன்னுடைய தர்மம் எங்கே போயிருந்தது’ என்று பதினோரு சம்பவங்களை அடுக்கியதையும், அவை ஒவ்வொன்றிலும் கர்ணனின் பங்கு என்ன என்பதைப் பற்றியும் பார்த்துக்கொண்டு வருகிறோம். இப்போது கண்ணனின் ஐந்தாவது குற்றச்சாட்டான:

‘உறங்கிக் கொண்டிருந்த பாண்டவர்களை எரித்துக் கொல்வதற்காக வாரணாவதத்தின் அரக்கு வீட்டுக்கு நீங்கள் நெருப்பிட்டீர்களே, ஓ! ராதையின் மகனே {கர்ணா}, அப்போது, உனது அறம் எங்கே சென்றது?’

என்பதைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இது ஆரம்பக்கால நிகழ்வு என்பதால், கர்ணனுக்கும் அவனைவிட 17 வயது சிறியவனான துரியோதனனுக்கும் எப்படி நட்பு ஏற்பட்டது என்பதை போர் முடிந்த பிறகு சாந்தி பர்வத்தில் தருமபுத்திரனுக்கு நாரதர் சொன்னதைப் பார்த்தோம். அரக்கு மாளிகை அல்லது ஜதுக்ருஹம் (ஜது என்றால் அரக்கு, க்ருஹம் என்பது மாளிகை) மிகவும் ஆரம்பக் காலத்து நிகழ்வு என்பதால் இது எப்படி ஏற்பட்டது என்பதையும் விவரிக்க வேண்டிவருகிறது. இதையும் கர்ணன் பிறப்பையும் தனியாகவே பார்ப்போம். அதற்கு முன்னால், அரக்கு மாளிகை சம்பவத்துக்கான சதித்திட்டம் எப்படித் தீட்டப்பட்டது என்ற விவரத்தைச் சுருக்கமாகப் பார்ப்போம்.

பிரமாணகோடி என்ற இடத்தில் பீமனுக்கு நஞ்சூட்டப்பட்ட உணவு (விஷமோதகம்) கொடுத்ததை கண்ணனுடைய மூன்றாவது குற்றச்சாட்டு சொல்கிறது. பாண்டவர்களுக்கு எதிரான முதல் சதிச்செயலான இதை நம்முடைய கர்ணனை அணுகுதல் தொடரின் இரண்டாம் பாகத்தில் சொன்னோம். பீமனை மட்டும் கொல்வது என்று தொடங்கிய சதித்திட்டம் பலவகைகளிலும் தொடர்ந்து விரிவடைந்துகொண்டே இருந்தது. அவற்றில் இரண்டாவதுதான் அரக்கு மாளிகையில் பாண்டவர்கள் ஐவரையும் குந்தியையும் சேர்த்து எரிப்பதற்காகச் செய்த முயற்சி. பீமனைக் கொல்ல முயன்றதில் கர்ணனின் பங்கு என்ன என்பதை கும்பகோணம் பதிப்பின் முதல் தொகுதியிலுள்ள ஆதி பர்வம், ஸம்பவ பர்வம், அத்தியாயம் 137, பக்கம் 512லிருந்து மேற்கோள் காட்டியிருந்தோம். அந்த முயற்சி தொடர்ந்து நடந்துகொண்டிருந்தது. பாரதம் நால்வரை துஷ்ட சதுஷ்டயா என்று வர்ணிக்கிறது. இதற்குத் தீயவர் நால்வர் என்று பொருள். துரியோதனன், துச்சாதனன், சகுனி, கர்ணன் ஆகிய நால்வரும்தான் இந்த துஷ்ட சதுஷ்டயர். பாண்டவர்களைக் கொல்லவோ அல்லது சூதாடி வெல்லவோ செய்த ஒவ்வொரு செயலிலும் இந்த நால்வருடைய கையொப்பமும் இருக்கும். (பாண்டவர்களை — குறிப்பாக தர்மபுத்திரனை — சூதாட்டத்துக்குச் சம்மதிக்க வைக்கவே பெரும் திட்டங்களும் முன்தயாரிப்புகளும் தேவைப்பட்டன. பேச எடுத்துக்கொள்ளவேண்டிய முக்கியமான தலைப்புகளுள் ஒன்று இது.)

அரக்கு மாளிகைக்குத் திரும்புவோம். ‘பாண்டவர்கள் நமது பகைவர்கள்’ என்ற கருத்து இந்த நால்வருக்கும் ஆரம்பத்திலிருந்தே இருந்தது என்றாலும், அதை அவர்களுடைய மனத்தில் ஆழமாக ஊன்றியவன் சகுனியுடைய மந்திரியான கணிகன் என்பவன். இந்த விவரங்களெல்லாம் கும்பகோணம் பதிப்பின் முதல் தொகுதி, அத். 153, பக்கம் 572ல் தொடங்கி சில அத்தியாயங்களுக்கு நீள்கின்றன. கிஸாரி மோஹன் கங்கூலியின் ஆங்கில மொழி பெயர்ப்பில் இது அத்தியாயம் CXLII (அல்லது 142)ல் தொடங்கி, சில அத்தியாயக்ளுக்கு விரியும்.

இந்த கணிகனை வரவேற்பவன் — வேறு யார் — திருதராஷ்ரன்தான். பாரதப்போர் அவனுடைய மனத்தில் ஏற்கெனவே உருவாகியிருந்தது. கணிகனை வரவேற்று அவன் சொல்லும் வார்த்தைகளைக் கவனியுங்கள்: இங்கேதான் பாண்டவர்கள்மேல் திருதராஷ்டிரனுக்கிருந்த வெறுப்பு முதன்முறையாக வெளிப்படுகிறது. ‘பிராமணஸ்ரேஷ்டரே! பாண்டவர்கள் எப்போதும் கர்வமுள்ளவர்களாய் இருக்கின்றனர். அவர்களை நான் வெறுக்கிறேன். கணிகரே! அவர்கள் விஷயத்தில் சந்திவிக்ரஹங்களைச் செய்வதற்கு மிக்க நிச்சயமான உபாயத்தை நீர் எனக்குச் சொல்லும். நீர் சொல்வதைச் செய்வேன்’ என்றான்’ (ஆதிபர்வம், ஸம்பவ பர்வம் 153ம் அத்தியாயம், பக்கம் 572-573). திருதராஷ்டிரனுடைய இந்தப் பேச்சில் வரும் ‘சந்திவிக்ரஹங்களைச் செய்வதற்கு’ என்ற சொற்றொடரை விளங்கிக்கொள்ள முடியவில்லை என்பதால், கிஸாரி மோஹன் கங்கூலியின் ஆங்கில மொழிபெயர்ப்பைப் பார்த்தால், அவர் பின்வருமாறு மொழிபெயர்க்கிறார். Then summoning unto his side Kanika, that foremost of minister, well-versed in the science of politics and an expert in counsels the king said, ‘O best of Brahmanas, the Pandavas are daily overshadowing the earth. I am exceedingly jealous of them. Should I have peace or war with them? O Kanika, advise me truly, for I shall do as thou biddest. (KMG Translation, Sambhava Parva, Section CXLII (142). இந்த ஆங்கில மொழிபெயர்ப்பை வைத்து, சந்திவிக்கிரஹம் என்றால் ‘போர் தொடுப்பதா, சமாதானமாகப் போவதா’ என்று அனுமானிக்க முடிகிறது.

துரியோதனனாவது சூதாட்டத்துக்குப் பிறகுதான் பாண்டவர்களோடு போர்தொடுப்பது என்ற முடிவுக்கு வருகிறான். திருதராஷ்டிரனோ, அதற்கு மிகப்பல வருடங்களுக்கு முன்னரேயே அந்த ஆலோசனையில் இறங்கியாயிற்று. போர் தொடங்கிய போது யுதிஷ்டிரனுக்கு வயது 91 வருடம், இரண்டு மாதம், ஒன்பது நாள் என்று டாக்டர் கே.என்.எஸ் பட்நாயக் கணக்கிடுகிறார். திருதராஷ்டடிரன், பாண்டவர்களோடு போர் தொடுப்பதா வேண்டாமா என்ற ஆலோசனையில் ஈடுபட்ட போது யுதிஷ்டிரனின் வயது 31. அவனுக்கு அப்போதுதான் இளவரசுப் பட்டம் கட்டப்பட்டிருந்தது. (அதன் வரலாற்றையும் தனியே சொல்ல வேண்டும்.) ஆக, போருக்கு அறுபது வருடங்களுக்கு முன்னமேயே திருதராஷ்டிரனுக்குப் போர் பற்றிய சிந்தனை இருந்திருக்கிறது.

இப்போது உள்ள சிக்கலான சூழ்நிலையை விவரிக்க வேண்டும். பாண்டு காட்டுக்குப் போகும்போது அரசை யார் பொறுப்பில் ஒப்படைத்தான் என்று பார்க்க வேண்டியிருக்கிறது. திருதராஷ்டிரனுக்கு, அரசப் பொறுப்புக்கு மிகவும் அத்தியாவசியமான பார்வை இல்லாதததால் அடுத்த மகனான பாண்டுவுக்கு பட்டாபிஷேகம் நடக்கிறது. (அப்படியானால், மூத்தவனுக்குதானே அரசுரிமை என்ற கேள்வி எழுமானால், it is not an automatic right as portrayed in Kamba Ramayanam

வெயில் முறைக் குலக் கதிரவன் முதலிய மேலோர்,

உயிர் முதல் பொருள் திறம்பினும், உரை திறம்பாதோர்;

மயில் முறைக் குலத்து உரிமையை, மனு முதல் மரபை;

செயிர் உற, புலைச் சிந்தையால், என் சொனாய்? – தீயோய்!

(கம்பராமாயணம், அயோத்தியா காண்டம், மந்தைரையிடம் கைகேயி சொல்வது)

இந்தப் பாடலின் நுண்பொருளை மிகப் பல அறிஞர்கள் ஆழ ஊன்றிப் பாராதது துரதிர்ஷ்டமே. இந்தப் பாடலின் மேற்போக்கான பொருளை நோக்கும் போது—அதாவது, தற்காலங்களில் அறிஞர் பெருமக்கள் உரைத்து வரும் உரைகளின் அடிப்படையில் பார்க்கும் போது — ஒரு மன்னனுடைய மூத்த மகனுக்கே அரசுரிமை என்பது ஒருவித தானியங்கு உரிமை — automatic right — என்ற அபிப்பிராயமே இப்போது நம்மிடையே நிலவி வருகிறது. கம்பராமாயணத்தில் வரும் இந்தப் பாடலுக்கு உரிய இடம் பொருள் ஏவலுடனான ஆழ்பொருளை நாம் கவனிக்கத் தவறுகிறோம். அது மட்டுமேயல்லாமல், இக்ஷ்வாகு வம்சத்திலும் சரி, குரு வம்சத்திலும் சரி, மூத்த பிள்ளைகள் மோசமான பிள்ளைகளாக இருந்தார்களேயானால் அவர்களை நாட்டை விட்டே துரத்தி, காட்டுக்கு அனுப்பிவிடுவதும் நிகழ்ந்திருக்கிறது. அப்படிக் காட்டுக்கு அனுப்பப்பட்ட பிள்ளைகளின் பிள்ளைகளுக்கு அரசுரிமை கிடைத்ததா என்றால், இக்ஷ்வாகு குலத்தில் பிறந்த அசமஞ்சன் என்ற அயோக்கிய சிகாமணியின் மகனுக்கு மட்டுமே அரசு கிடைத்திருக்கிறது; மற்றவர்கள் விஷயத்தில் அவ்வாறு நடைபெறவில்லை என்பது நோக்கத் தக்கது. அது மட்டுமேயல்லாமல், ஐந்தாவது மகனும், மூன்றாவது மகனும் அரசனாகப் பொறுப்பேற்றதும் நடைபெற்றிருக்கிறது. யயாதியின் ஐந்தாவது மகனான பூருதான் அரசேற்றான். அவன் வம்சம்தான் பௌரவ வம்சமாகி, பின்னாளில் அந்த வம்சத்திலுதித்த குருவின் பெயரால் கௌரவ வம்சமானது. பீஷ்மரின் தந்தையான சந்தனு மகராஜா, அவருடைய தந்தையான பிரதீபனுக்கு மூன்றாவது மகன். சந்தனுவுக்கு தேவாபி, வாலிகன் என்று இரண்டு அண்ணன்கள் இருந்தனர். இவற்றையெல்லாம் ‘கர்ணனை அணுகுதல்’ என்ற இந்தத் தொடர் முடிந்தபிறகு விரிவாகப் பார்ப்போம்.

இப்போது அரக்கு மாளிகையில் பாண்டவர்களை எரிக்கச் செய்த சதியில் திருதராஷ்டிரனுடைய பங்கு தெரிகிறது; துரியோதனன், சகுனி, அவனுடைய அமைச்சனான கணிகனுடைய பங்கு தெரிகிறது; கர்ணனின் பங்கு எங்கே என்று நீங்கள் கேட்பது தெரிகிறது. அது இதற்கடுத்த 154ம் அத்தியாயத்தில் வருகிறது. இதைப் பாருங்கள்:

‘துரியோதனனும் கர்ணனும் ஸுபலபுத்திரனான சகுனியும் துச்சாஸனனும் ஆகிய அந்த நால்வரும் கணிகருடைய அபிப்பிராயம் முழுதும் கேட்ட பிறகு, ஒருகால் ஆலோசனை செய்தனர். அவர்கள் கௌரவனாகிய த்ருதராஷ்டிர மஹாராஜாவின் ஸம்மதம் பெற்றுக்கொண்டு, குந்தியையும் அவள் புத்திரர்களையும் எரித்துவிடவேண்டும் என்று நிச்சயம் செய்துகொண்டனர். (மேற்படி, 154ம் அத்தியாயம் பக்கம் 582). ‘Then the son of Subala (Sakuni), king Duryodhana, Duhsasana and Karna, in consultation with one another, formed an evil conspiracy. With the sanction of Dhritarashtra, the king of the Kurus, they resolved to burn to death Kunti and her (five) sons. என்பது கிஸாரி மோகன் கங்கூலியின் மொழிபெயர்ப்பு. (Jatugriha Parva SECTION CXLIII (143)

பாண்டவர்களை அரக்கு மாளிகையில் எரிக்க வேண்டும் என்ற சதித் திட்டத்தில் பங்கேற்றவர்களில் கர்ணனும் ஒருவன் என்பது மிகத் தெளிவாகவே குறிப்பிடப்படுகிறது. இதைத்தான் கண்ணன் தன்னுடைய குற்றச்சாட்டுகளில் குறிப்பிடுகிறான். அடுத்ததாக, கண்ணன் குறிப்பிடும் அடுத்த குற்றச்சாட்டை எடுத்துக்கொள்வோம்.

Leave a Reply