காலம் பதிமூன்றாம் நூற்றாண்டின் முற்பகுதி. பாண்டிய நாடு முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியர் தலைமையில், திருமால் திருவடி மூவுலகும் பரந்தது போல், எங்கும் பரந்து வீறு கொண்டு எழுந்து நின்றது.
‘ஒருகுடை நீழலில், இருநிலம் குளிர, மூவகைத் தமிழ் முறைமையின் விளங்க, நால்வகை வேதமும் நவின்றுடன் வளர, ஐவகை வேள்வியும் செய்வினை இயற்ற, அறுவகைச் சமயமும் அழகுடன் திகழ, ஏழுவகைப் பாடலும் இயலுடன் பரவ, எண்திசை அளவும் சக்கரம் செல்ல..’ என்று ‘மனுநெறி தழைப்ப மணிமுடி சூடி’ பாண்டியன் ஆட்சி செய்துவந்த காலம். அப்போது ஒரு மாலைப் பொழுதில், மன்னன் முக்கிய மந்திரிகளோடும், அரசவைப் புலவர்களோடும் நாட்டு விஷயமும், தமிழ்ச்சங்கம் பற்றியும் அளவலாவிக் கொண்டிருந்தார்.
அந்த காலகட்டத்தில் பழைய இலக்கியங்களுக்கு உரை எழுதும் முறை மேலோங்கியிருந்தது. முக்கியமாக பக்தி இலக்கியங்களுக்கு. அவற்றை மணிப்பிரவாள நடையைப் பின்பற்றி எழுதத் தொடங்கினர். இது சம்ஸ்கிருதமும், தமிழும் சேர்ந்து எழுதும் முறை. பெரும்பாலும் வைணவ பக்தி இலக்கியங்களுக்கு இம்முறை பின்பற்றத் தொடங்கியிருந்தது. அவற்றைப் பற்றியே அங்கு ஆலோசித்துக் கொண்டிருந்தனர்.
‘தமிழும், சமஸ்கிருதமும் இரு கண்கள் போன்றது. இதனால் மொழிச் சிதைவு ஏற்படாது. நம் மொழி, பிற மொழிகளை உள்வாங்கி விரிவடையும் தன்மையது. மேலும், இது போல் மணிப்பிரவாள உரை எழுதுவது அவ்வளவு எளிதல்ல. ஒற்றெழுத்துக்களை விலக்கி விட்டு உயிரும் மெய்யுமாக அமைந்த முப்பத்திரண்டு எழுத்துக்களை உடையது ஒரு படி. இவ்வாறு எவ்வளவு படிகளில் உரை எழுதுகிறோம் என்று கணக்கிட்டே எழுதுகின்றனர். இது தமிழ் போன்ற மூத்த மொழிகளில் மட்டுமே சாத்தியம். இது மொழிக்கு புது பரிமாணங்களைத் தரும். இது போல் முன்னரும் வடமொழியோடு இயைந்தே இருந்திருக்கிறது’ என்று மன்னரின் கேள்விக்கு அங்கிருந்த கவிராயர் ஈஸ்வரசிவ உடையார் விடை பகர்ந்தார்.
அதற்குள், சேவகன் ஒருவர் ஓலையோடு வந்தான். அதை மன்னர் படித்தபோது கண்களில் கோபம் உச்சத்தில் இருந்தது. நிலைமையை அங்கிருந்தோர் உணர்ந்தனர். மன்னரும் புலவர்களிடம் விடை பெற்று, நேராக ஆலோசனை மண்டபம் அடைந்தார். அங்கு பிரதான அமைச்சர் சோழன் உய்ய நின்றாடுவானான குருகுலத்தரையன், அதிகாரிகளான கண்டன் உதயஞ்செய்தான் காங்கேயன், திருக்கானப் பேருடையான் மழவச்சக்கரவர்த்தி ஆகியோர் இருந்தனர்.
‘உறையூரில் இருக்கும் நம் அமைச்சரிடமிருந்து ஓலை வந்தது. முடிகொண்ட சோழபுரத்திலிருந்து நமக்குச் செலுத்த வேண்டிய திறையை இராஜராஜன் செலுத்த மறுக்கிறாராம். சில திங்கள்களாகவே இது நடப்பதாய் அமைச்சர் செய்தி அனுப்பியிருக்கிறார். நாம் அடுத்தகட்ட வேலைகளைப் பற்றி முடிவு செய்யவேண்டும்’ என்று பெரும் கோபத்தோடு சொன்னார் அரசர். மேலும் அவரே தொடந்தார்.
‘இந்த இராஜராஜனின் தந்தை குலோதுங்கச் சோழன் நம் பாண்டியநாட்டின் மீது படையெடுத்து, நாட்டையும், ஜனங்களையும் அழித்து இங்கேயே வீராபிஷேகம், விஜயாபிஷேகம் செய்து கொண்டான். அப்பப்பா.. அப்போது நான் சிறு பிள்ளை. என் கண்முன்னால் நடந்தது, பாண்டிய நாட்டை காக்க நம் மன்னன் முயன்றது எல்லாம் இப்போது நினைத்தால் கூட கண்களில் நீர் வருகிறது.’
‘அரசே, தாங்கள் பட்டத்திற்கு வந்த பின், நாம் சோழ நாட்டின் மீது படையெடுத்து பெரும் சேதத்தை விளைவித்தோம். அப்போது அதைத் தாங்க முடியாது இந்த மூன்றாம் இராஜராஜன்தான் ஊரைவிட்டே சென்றுவிட்டார். தங்களின் மூன்றாம் ஆட்சியாண்டில் இது நடந்தது. ‘சோணாடு கொண்டருளிய சுந்தரபாண்டிய தேவர்’ என்று நாங்கள் சொல்லும் போதே தாங்கள், கைப்பற்றிய சோழ நாட்டை அவர்களுக்கே வழங்கி ‘சோணாடு வழங்கியருளிய சுந்தரபாண்டியன்’ என்று சொல்லும் அளவிற்கு மாற்றிவிட்டீர்கள்’ என்றார் அமைச்சர் குருகுலத்தரையன்.
‘ஆம் அமைச்சரே. இப்போதும் அது போல் படையெடுக்க வேண்டிய நிலையில்தான் இருக்கிறோம். உறையூரிலிருந்து வந்த ஓலையில் அனைத்தும் ஆயத்தமாய் இருப்பதாய்த் தெரிகிறது. நாம் இன்னும் ஒரு பக்ஷம் பொறுத்திருந்து மதுரையிலிருந்து கிளம்புவோம்’ என்றார் மன்னர்
அங்கிருந்தவர்கள் எல்லாம் தங்களின் அபிப்பிராயங்களைச் சொன்னார்கள். அனைவரும் போருக்கு ஆயத்தமாகவே இருந்தனர்.
‘குலத்தரையரே, தாங்கள் இப்போது திருமல்லி வளநாட்டில் திருத்தங்கல் கோவில் கைங்கர்யத்தில் இருக்கிறீர்கள். கற்றுளி கட்டுமானப் பணி முடியும் தருவாயில் இருக்கிறது. அதில் இடையூறு வேண்டாம். யாமே இம்முறை படைகளை நடத்திக்கொண்டு செல்கிறோம். சோழநாடு வெற்றியோடு திருத்தங்கல் கோவில் மங்களம் செய்வோம்’ என்றார் அரசர். பின் தை மாதம் ஒரு நாள் தெரிவுசெய்து மதுரையிலிருந்து படைகள் கிளம்பின.
அது சுந்தர பாண்டியனின் பதினைந்தாவது ஆட்சியாண்டு. மதுரையிலிருந்து வந்த பெரும் படைகளை சோழன் எதிர்பார்க்கவும் இல்லை, அதைச் சமாளிக்கும் அளவிற்கு சோழப்படைகளும் இல்லை. சில நாட்களில் சோழன் படை வீழ்ந்தது. வாகைமாலை சூடிய பாண்டியன், சோழர்களின் இரண்டாம் தலைநகர் முடிகொண்ட சோழபுரத்தில்(1) வீராபிஷேகம், விஜயாபிஷேகம் செய்துகொண்டார்.
சில நாட்கள் அங்கேயே தங்கியிருந்து, மதுரை நோக்கிப் புறப்பட்டார். வாகை சூடி வரும் மன்னனை வரவேற்க மதுரை விழாக்கோலம் பூண்டிருந்தது. மன்னனோடு அமைச்சர் குலத்தரையரும் வந்தார்.
‘அமைச்சரே, ஏதோ தோன்றுகிறது. நேராக மதுரை அடையும் முன், அழகர் மலை போய் எம்பெருமான் அழகனை தரிசிக்க வேண்டும். நாம் அங்கு போய் விட்டு, மதுரை செல்லலாம். இப்போது மதுரைக்கு சிலம்பு வழி போவோம்’ என்றார் அரசர்
‘சரி மன்னா. அதற்கே ஏற்பாடு செய்கிறேன். சோழனை வென்று செல்லும் போது சிலம்பில் சொல்லியுள்ள வழியில் மதுரை அடைவதும் சிறப்பே’ என்றார் சிறு புன்முறுவலோடு அமைச்சர்.
அது பங்குனி மாதம். மன்னர் அழகாபுரி கோட்டை அடையும் செய்தி முன்னரே அங்கு அறிவிக்கப்பட்டது. அரசி திருவுடையாள் அங்கு வந்திருந்தார். மன்னருக்கு அழகாபுரி கோட்டையில் நிறைகுடத்தோடு வரவேற்பு தரப்பட்டது. அழகர் கோவிலில் அப்போது திருக்கல்யாண உற்ஸவம் நடந்துகொண்டிருந்தது. ஆண்டாள், அழகரை அங்கு திருக்கல்யாணம் செய்துகொண்டார். பங்குனி உத்திரநாளில் திருக்கல்யாண உற்ஸவம் சிறப்பாக நடந்தது. எதிர்பாராமல் அரசர் அங்கு வந்ததால் இன்னும் சிறப்பாய் இருந்தது. ஆண்டாள், அழகர் திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளி இருந்தனர். மன்னர், அரசி மற்றும் அமைச்சர் மட்டும் ஏகாந்தமாய் கோவிலுக்குள் சென்றனர். இரணியன் கோட்டையைக் கடந்து உள்ளே வந்தனர்.
‘பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு, பலகோடி நூறாயிரம், மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா..’ என்று தேனினும் இனிய குரலில் பெரியாழ்வாரின் பாடல் கேட்டது. மன்னர் பாடல் வந்த திசை நோக்கி விரைவாக நடந்தார் என்பதைவிட பாடல் அவரை விரைந்து இழுத்தது. மன்னர் வந்தது கூட அறியாமல், திருக்கல்யாண மண்டபத்தில் பெருமானை நோக்கி ஒருவர் பாடிக்கொண்டிருந்தார். அழகரும், ஆண்டாளும் ஆனந்தமாய் செவிமடுத்துக் கொண்டிருந்தனர். அம்பி பட்டர் பெருமானுக்கு வியர்க்காமல் இருக்க அருகில் நின்று திருவாலவட்ட கைங்கர்யம் செய்துகொண்டிருந்தார். மன்னர் சுந்தரபாண்டியன், மண்டபத்தில் ஒரு தூணின் அருகில் நின்று பாடலைக் கேட்டுக் கொண்டிருந்தார். அருகில் அரசி கண்களில் நீர் ததும்ப இருந்தார்.
அழகருக்கு, ஆண்டாள் தம் நாச்சியார் திருமொழியில் பாடிய
‘நாறுநறும் பொழில் மாலிருஞ்சோலை நம்பிக்கு நான் நூறு தடாவில் வெண்ணெய் வாய் நேர்ந்து பராவி வைத்தேன் நூறுதடா நிறைந்த அக்கார அடிசில் சொன்னேன்..’
என்ற பாடலை மிகவும் விஸ்தாரமாய் அந்த இளைஞன் பாடினார். அங்கிருந்தவர்கள் எல்லாம் மெய் சிலிர்த்து நின்றனர். எம்பெருமான் சுந்தரராஜனுக்கு ஆண்டாளே நேரில் வந்து பாடியது போல் இருந்தது. பாடலின் முடிவில் ‘..இன்று வந்து இவை கொள்ளுங் கொலோ?’ என்று சொல்லும் பொழுது அம்பி பட்டர் தன்னை அறியாமலே பெருமானுக்கு தூபதீபம் காட்டினார். இளைஞனோ தன்னை மறந்து தொடர்ந்து பாடினான் அதே நாச்சியார் திருமொழியிலிருந்து,
இன்று வந்து இத்தனையும்* அமுது செய்திடப் பெறில்* நான்-
ஒன்று நூறாயிரமாக் கொடுத்துப்* பின்னும் ஆளும் செய்வன்*
தென்றல் மணம் கமழும்* திருமாலிருஞ்சோலை தன்னுள் நின்றபிரான்
அடியேன் மனத்தே* வந்து நேர்படிலே*
எங்கும் நிசப்தம். அனைவரும் பக்திப் பெருக்கில் கண்ணீர் விட்டுக்கொண்டிருந்தனர், ஆண்டாள் நிலையில்.
பாடல் முடிக்கும் போது, ‘மன்னா…’ என்று பெரும் ஒலி. அரசரை நோக்கி அமைச்சர் ஓடினார்.
அரசர் அந்த தூணில் சற்றே மயங்கிய நிலையில் சாய்ந்திருந்தார். கோவில் கைங்கர்யம் செய்பவர்கள் மன்னர் இருந்ததையும், அங்கு நடப்பதையும் அப்போதுதான் அனைவரும் கவனித்தனர்.
மன்னர் எழுந்தார். கண்ணீருடன், தழுதழுத்த குரலில், ‘ஆண்டாளின் பக்தி என்னவென்று சொல்வது. அவரின் தந்தை பெரியாழ்வாரின் பாரிப்பையே விஞ்சிவிட்டாள். ‘இன்று வந்து இவை கொள்ளுங் கொலோ?’ என்று கேட்டுவிட்டு, அழகன் வந்து வெண்ணெய்யையும் அக்காரவடிசிலையும் அமுதுசெய்தருள்வனாகில், அந்த உபகாரத்திற்காக அடியேன் இன்னும் நூறாயிரம் தடாநிறைந்த வெண்ணெயும் அக்காரவடிசிலும் ஸமர்ப்பிப்பேன். இவற்றையும் அமுது செய்துவிட்டு மீண்டும் போய்விடாமல் என் மனதிலே இரும்பானாகில் அனைத்துக் கைங்கர்யங்களையும் பரிவுடன் செய்வேன் என்கிற ஆண்டாள் காதலும், பக்தியும், தானே ஆயர்களாய் மாறிய அநுகாரமும்.. என்ன சொல்வது. அழகன், வஞ்சக்கள்வன்தான். இதில் மூழ்கிதான் இராமானுசர் இதே தலத்தில், நூறு தடா நிறைந்த அக்காரஅடிசிலும், வெண்ணைய்யும் சமர்ப்பித்து ஆண்டாளின் வாய்ச்சொல்லை நிறைவேற்றினார் போலும்’ என்றார் மன்னர் அருகிலிருந்த அம்பி பட்டர், அமைச்சரிடம்.
‘மன்னா, மன்னிக்கணும். தாங்கள் வந்தது கூட தெரியாது இருந்துவிட்டோம்’ என்றார் பட்டர்.
‘அதெல்லாம் ஒரு பொருட்டில்லை. எம்பெருமான் முன் நானும் ஒரு அடியேன்தான். அவர்தான் ஸர்வலோக பேரரசன். அந்த பாடிய இளைஞன் யார்? அவன் குரல்தான் இங்கு இழுத்தது முதலில்’ என்றார் மன்னர்.
‘அரசே, என் நாமம் சுந்தரபாகு இராமானுசதாசன். இங்கு அழகாபுரியில்தான் உள்ளோம். இங்கு வந்து எம்பெருமான் முன் பாடுவது வழக்கம்’ என்றார் இளைஞர்.
‘நல்லது. உமது கைங்கர்யம் தொடரட்டும். அமைச்சரே, இதை ஒரு நிரந்தர கட்டளையாக வைத்துவிடுங்கள். அதற்க்கு தேவையான நிலங்கள், நிவந்தங்களை உடனே ஏற்பாடு செய்யுங்கள்’ என்ற அரசர் தொடர்ந்தார்.
‘சுந்தரபாகு, நீயும், உன் வம்சமும் தொடர்ந்து இந்தக் கைங்கர்யங்களைச் செய்யுங்கள். அழகன் குளிர செவிக்கினிய செஞ்சொல்லாகிய நம் அன்னை கோதையின் பாடல் தொடர்ந்து இந்த அழகாபுரி கோட்டை முழுதும் ஒலிக்கட்டும்’ என்றார் அரசர் இளைஞரிடம்.
‘மன்னா..’ என்று அரசியார் ஏதோ சொல்லவர, மன்னர் செய்கையால் தொடரச் சொன்னார்.
‘அடியேன், அஷ்டாச்சரம் நினைவில் எட்டு திருநந்தா விளக்குகளை அழகருக்குச் சமர்ப்பிக்க ஆசைப்படுகிறேன்’ என்றார் அரசி.
‘ஆஹா, மிக அருமை. அழகன் முன் மயங்காதவர் யார் உளர். அமைச்சரே, தாங்கள் இந்த திருவிளக்குகள் முட்டாமல் எரிப்பதற்காக ‘விளக்கு புறம்’ என்று நிலத்தை நம் அளநாட்டு இராச சூளாமணி சதுர்வேதிமங்கலத்தில், பத்து மா அளவுடைய நிலத்தை நிவந்தமாய் சாசனம் செய்துவிடுங்கள்’ என்றார் அரசர் ஒரே மூச்சாக. அரசி திருவுடையாள் முகம் பக்தியில் பொலிந்திருந்தது.
‘மன்னா, அழகனை அருகில் சேவிக்க வரவேண்டும்’ என்றார் அழகப்புரோஹிதரான ஆண்டார்.
‘அவசியம் ஆண்டாரே. ‘அரங்கன் சொத்து அழகன் அங்கவடிவுக்கும் காணாது’ என்ற சொல்லடை சரியாய்த்தான் இருக்கிறது. என்னே அழகு இந்த திருவாபரணங்கள் எல்லாம் சாற்றிய பின்’ என்று மன்னன் சொல்லி முன் செல்ல அனைவரும் பின்சென்று அழகனை அருகில் தரிசித்தனர்.
காலம் 1970.
‘அட கதை சொல்லிண்டே வந்ததுல கோவிலே வந்துட்டோமே. யானை மண்டபமே வந்தாச்சு’ என்ற திருமலையிடம் ‘அப்பா, நீங்க சொன்ன கதை கேட்கவே நன்னா இருந்தது. ஆமாம் இந்த யானை மண்டபம் எதுக்குப்பா?’ என்று வினவினான் சிறுவன் சுந்தரத்தோளன்.
‘அது கதை மட்டுமில்லடா. நம்ப குடும்பத்தோட வரலாறு. நம்ப மூத்தோர்தான் அங்க பாடினது. அதுலேர்ந்து நமக்கு அழகரிடம் அந்தக் கைங்கரியம் கிடைத்தது. ஓ, இந்த மண்டபமா, எம்பெருமான் உற்ஸவத்தின் போது யானை வாகனத்துல இங்கதான் எழுந்தருள்வார். சரி, சீக்கரம் நடந்துவா, வேடிக்கை அப்பறம் பாக்கலாம்’ என்று சொல்லி திருமலை தன் மகனோடு கோவிலுக்குள் சென்றார்.
‘வாங்கோ திருமலை. நாழியாச்சு போலயே..’ என்றார் அம்பி இராம பட்டர்.
‘ஆமாம், வழில பழைய கதையை சுந்தரனுக்குச் சொல்லிண்டு வந்தது நேரம் போனதே தெரியல’ என்று சொல்லி இருவரும் பரமஸ்வாமி மூலவரை வணங்கி நங்கள்குன்றம்(2) என்ற கருவறையைச் சுற்றிவந்தனர்.
‘புள்ளை என்ன வாசிக்காரன்? மேற்கொண்டு என்ன பண்ணப்போறான்?’ என்று கேட்ட பட்டருக்கு,
‘இன்னும் 6 வருஷம் இருக்கு ஸ்கூல் முடிக்க. இங்க கைங்கர்யம் இருக்கும் போது ஊரவிட்டு எங்கயும் போக முடியாது. மதுரையிலேயே காலேஜ் சேர்த்து, டிவிஎஸ்ல ஏதாவது வேலைக்குப் போகச் சொல்லவேண்டியதுதான். அவனுக்கு என்னமோ பாட்டுலதான் இஷ்டம். அழகர் திருவுள்ளம் என்னவோ?’ என்றார் திருமலை அன்றைய மதுரை நடைமுறையோடு.
‘நீங்க சொல்றது வாஸ்தவம். கைங்கர்யம்தான் முக்கியம். இது எல்லாருக்கும் கிடைக்காதே. ஒரு பழைய சம்பவம் ஞாபகம் வருது. இதே அழகர் சந்நிதியில் நடந்தது. திருமாலை ஆண்டாரின் குமாரர் ஸ்வாமி சுந்தரத்தோளுடையான். ஸ்வாமி எம்பெருமானார் இராமானுஜரின் எழுபத்திநான்கு சிம்மாசனாதிபதிகளில் ஒருவர். ஒருமுறை அவரிடம், அழகன் திருமஞ்சனக் காலத்தில் ஒரு கேள்வி கேட்டனர், ஸ்வாமி, ‘பரமபதத்தில் இதுபோல் திருமஞ்சனம் நடக்குமா?’ என்று ஒருவர் கேட்க, அதற்க்கு ‘ஆம்., சூட்டுநன் மாலைகள் தூயன ஏந்தி விண்ணோர்கள் நன்னீராட்டி அந்தூபம் தராநிற்கவேயங்கு’ என்று ஆழ்வார் சொல்கிறார். அங்கும் விண்ணோர் சூழ இதுபோல தான் நடக்கும் என்றார் அவர். மற்றொருவர் ‘இந்த ஊரில் இருந்து கைங்கர்யம் செய்வது பெரிதா? இல்லை பரமபதத்தில் கைங்கர்யம் செய்வது பெரிதா?’ என்று கேட்க, அவர் ‘இங்கு இருப்பதுதான் பெரிது. ‘மெய் வருத்திக் கை செய்து உய்மினோ’ என்று ஆழ்வார் சொல்லும் மெய் வருத்திக் கைங்கர்யம் செய்யும் முறை இங்கு மட்டுமே கிடைக்கும். பரமபதத்தில் கிடைக்காது’ என்றார். இங்கு கைங்கர்யம் கிடைக்கும் போது நாம் ஏன் மற்றவற்றைப் பற்றி சிந்திக்க வேண்டும். எல்லாம் அழகன் பார்த்துக்கொள்வார். சரி, அழருக்கு ஒரு தேவகானம் பாடிட்டுப் போங்களேன்’ என்றார் பட்டர்.
சிறுவனும் நடந்த உரையாடல் எல்லாம் கேட்டுக்கொண்டே வந்தான்.
‘அது அடியேன் பாக்கியம்’ என்று சொல்லி,
‘மாலே மணிவண்ணா’ என்ற திருப்பாவையைப் பாடத் தொடங்கினார் திருமலை. ஒரே அமைதி. மின்சார விளக்குகள் இல்லை. அரசியார் தந்த திருநந்தா விளக்கின் ஒளி தான் அந்த மண்டபம் முழுதும். அவரின் குரல் மட்டும் கணீர் என்று தேமதுரத் தமிழிசையாய் ஒலித்தது. அங்கு இருந்த கல் மண்டபங்களும், தூண்களும் இந்த தேவகானத்தை எதிரொலிக்கவில்லை. ஆம், இந்த தேவகானத்தை அவையும் உள்வாங்கிக் கொண்டன. அழகன், புன்முறுவலோடு கோதையின் பாடலைக் கேட்டுக்கொண்டிருந்தார்.
‘ஆலின் இலையாய் அருள்’ என்று அவர் சுந்தர்ராஜனை பார்த்துப் பாடி முடிக்கும்போது, எங்கிருந்துதான் அவ்வளவு ஜனங்கள் வந்தார்களோ, ‘கோவிந்தோ..’ என்று பக்தி மேலிட்டு பெரிய முழக்கமிட்டார்கள்.
இருவரும் கோவிலைவிட்டு வெளியே வரத் தொடங்கினர். அது திருக்கல்யாண மண்டபம்.
‘அப்பா, இந்த மண்டபம்தான நீங்க சொன்னது. ராஜா வந்தது, பாட்டு கேட்டது எல்லாம்?’ என்றான் சுந்தரத்தோளன்.
‘ஆம். இங்கதான். அதோ அந்தத் தூண்தான்’ என்று ஒரு தூணைச் சுட்டிக்காட்டினார் திருமலை. அந்தத்தூணின் மேல் பெரியாழ்வார் கைகளில் தாளத்தோடு இருந்தார். தூணின் பக்கவாட்டில் பாதி மறைந்து கல்வெட்டு இருந்தது. சிறுவன் வார்த்தை வார்த்தையாகப் படித்துக் கொண்டிருந்தான்.
ஸ்வஸ்திஸ்ரீ..டியும் நம் கேழ்வியு.. வரியிலார் எழு… மாம் மழது சரிதமாய்க்கிடந்த நிலங்க..ந்து நம் கோதைப் பாட்டு கேளா நிற்க.. டுப்பித்த நம்மருக புறத்து…
ஸ்வஸ்திஸ்ரீ திருவாய்க் கேள்விக்கு மேல் கோமாற பன்மரான திரிபுவன சக்கரவர்த்திகள் சோணாடு வழங்கியருளிய ஸ்ரீசுந்தர(பாண்டியதேவ)ற்கு யாண்டு ஏழாவது இந்நாயனார் அழகம் பெருமாள் தந்தருளின திருமுகப்படி அருளிச்செயல் திருமாலிருஞ்சோலைத் திருப்பதி ஸ்ரீவயிஷணவர்களும் சிவதி.. மாணிக்க..த்து திருமாலிருஞ்சோலை நின்றருளின பரமஸ்வாமிகளுக்கு நம் பெண்டுகளில் திருவுடையாள் வைத்த திருநந்தாவிளக்கு எட்(டு)க்கும் (முன்)பு இறையிலி தேவதானமாக அளநாட்டு இராச சூளாமணி சதுர்வேதி மங்கலத்து இவ்வாழ்வாருக்குத் திருவிளக்குப் புறமாக வந்த காராண்மை நிலம்.. கடமையிறுக்கும் கோலால் பத்துமா நிலம் ஏழாவது முதல் கடமை அந்தராயமும் தருவதான அச்சும் காரியவாராட்சியும் வினியோகமும்….
‘அங்க என்ன கல்வெட்டு படிக்கறயா? அது பாதிதான் இருக்கும்.. வா போகலாம்’ என்ற திருமலையின் குரல் கேட்டு சிறுவன் சுந்தரன் படித்துக்கொண்டே நடந்தான்.
இவ்வாறாக காலங்கள் ஓடி எட்டு வருடங்கள் கழிந்தன. தடையில்லாமல் திருமலையின் தேவகான கைங்கர்யம் தொடர்ந்தது.
மதியம் வேலை முடிந்து திருமலை திண்ணையில் அமர்ந்திருந்தார். தபால்காரர் வீட்டுவாசலில் தன் சைக்கிளை நிறுத்தி அருகே வந்தார். அவர் வழக்கமான தபால்காரர் இல்லை. அவசர செய்தி கொண்டு வருபவர். திருமலை சற்றே பயந்து, திடுக்கிட்டு எழுந்தார். ‘சார், சுந்தரத்தோளன்ங்கிறது..’ என்று நீட்ட, அவருக்கு மேலும் பதட்டம் கூடியது.
‘என் புள்ளைதான். என்ன விஷயம்..’ என்றார் திருமலை.
‘அவருக்கு தந்தி வந்திருக்கு.. அவர் இல்லையா?’ என்றார் அவர். அந்தச் சொல்லைக்கேட்டவுடன் உள்ளிருந்து கமலமும் வந்தார்.
திருமலை தந்தியை வாங்கிக்கொண்டு கையெழுத்துப் போட்டு அவரை அனுப்பினார்.
‘சீக்கரம் பிரிச்சு படிங்கோளேன்..’ என்றார் கமலம்.
‘யு ஆர் செலெக்டேட் பார் சங்கீத புரஸ்கார். டீடெயில்ஸ் சூன்’ என்று இருந்தது.
‘என்னவாம்?’ பொறுமை இழந்து கமலம்.
‘சுந்தரனுக்கு அவார்ட் ஏதோ தாராளம். அவன் காலேஜ்லேர்ந்து வரட்டும் என்னன்னு கேட்கலாம்’ என்றார் திருமலை.
‘ஓ. தந்தி வந்ததா. காலேஜ்லேர்ந்து சங்கீதம் பத்தி கொஞ்சம் ரிசர்ச் பண்ணினது எல்லாம் டெல்லிக்கு அனுப்பினேன். எனக்கே தெரியமா என்னோட வாத்தியார் நான் பாடறது, நம்ப அழகர் கோவில் கைங்கர்யம் எல்லாம் அனுப்பினதா இப்போ தான் தெரியும். அதுனால இந்த அவார்ட் தாரா போல..’ என்று கல்லூரியிலிருந்து வந்த சுந்தரன் சாதாரணமாகச் சொன்னான். சுந்தரன் இசைக்கல்லூரியில் கடைசியாண்டு படிக்கிறான்.
இரண்டொரு நாளில் நல்ல நேர்த்தியாய் வடிவமைக்கப்பட்ட தபாலில், உயர் தரமான ஒரு அழைப்பிதழ் வந்தது, சங்கீத அகாதமி, தில்லி என்று முகவரியோடு. ஜனாதிபதி, பிரதம மந்திரி பங்குபெறும் விழாவில் அந்த விருது வழங்கப்படும் என்று இருந்தது. ஸ்பெஷல் கேட்டகிரியில் வழங்கப்படும் இந்த விருது முதல் முதலாய் சுந்தரனுக்கு வழங்கப்படுகிறது என்றிருந்தது. வீட்டில் அனைவரும் மகிழ்ச்சியில் ஆழ்ந்திருந்தார். திருமலை பஞ்சாங்கம் பார்த்து, ஏதோ எண்ணினார். சரி பார்த்துக்கலாம் என்பது போல தலையை அசைத்துக் கொண்டிருந்தார். அரசாங்கமே வீட்டில் உள்ள அனைவருக்கும் தில்லி வரை இரயில் டிக்கெட் கொடுத்திருந்தது. அந்தநாள் நெருங்கியது.
‘சுந்தரா, நீ மட்டும் போயிட்டுவா. அழகர் கைங்கர்யம் வரது’ என்றார் திருமலை.
‘அப்பா, நான் மட்டும் எப்படி..?’ மறுத்தான் சுந்தரன்.
‘இல்லடா, அரசாங்கமே கௌரவப்படுத்தறா. போகாம இருக்கக்கூடாது. இது எல்லாம் அழகர் அருள்தான்’ என்றார் திருமலை. மறுவார்த்தை பேசவில்லை சுந்தரன்.
மனமில்லாமல் தன் துணிகளை எடுத்துவைத்துக்கொண்டான்.
‘தில்லி வர போற. ட்ரெயின் போக 2-3 நாள் ஆகுமாமே. கொஞ்சம் புளியோதரை, சப்பாத்தி எல்லாம் தரேன். கூஜால ஜலம் எடுத்துக்கோ. நல்ல போர்வையா எடுத்துக்கோ. இங்க வெயில் வாட்டறது. தில்லில எவ்வளவு குளிரோ..’ என்று வாஞ்சையோடு அம்மா கமலம் சொன்னார். சுந்தரன் காதுகளில் நுழைந்தது போல் தெரியவில்லை.
இன்னும் இரண்டு நாளில் கிளம்பவேண்டும். அதற்குள் திருமலைக்கு ஒரு கடிதம் வந்தது.
‘இது என்ன புது சோதனையா இருக்கு. அங்க போய்ட்டுவர ரெண்டு நாள் ஆகும். பங்குனி உத்திரம் உற்ஸவம் இங்க அழகருக்கு இருக்கு. சுந்தரனும் தில்லி போகனும்’ என்று சற்றே குழம்பியவாறே போஸ்ட் படித்த பிறகு திருமலை சொன்னார்.
‘என்ன ஆச்சு? நீங்களே ஏதோ சொல்றேள்?’ என்ற கமலத்திடம், ‘ஒன்னுமில்ல, கிராமத்திலிருந்து அவசர லெட்டர். இந்தவாரம் கதிர் அறுப்பு இருக்காம். அப்பறம் கோவில் பட்டருக்கும் கொஞ்சம் உடம்பு சரியில்லையாம். கதிரறுப்பு கூட ஒருவாரம் தள்ளி பாத்துக்கலாமாம். கோவில் நாலஞ்சு நாள் பாக்கணுமாம். அதான் வரச்சொல்லி செட்டியார் லெட்டர் போட்டிருக்கார். அடுத்தவாரம் இங்க உத்திரம் இருக்கு. அவனும் ஊருக்குப் போறான். அதான் யோசிச்சேன்,’ திருமலை சொன்னார். மேலும் தொடர்ந்தார். ‘சரி நான் ஒன்னு பண்ணறேன், இன்னிக்கே கிளம்பிப்போய் நிலைமையைப் பார்த்துண்டு உத்திரத்திற்கு முதல்நாள் வரேன். நீ சுந்தரன்கிட்ட சொல்லவேண்டாம். ஏற்கனவே தில்லி போகமாட்டேன்னு சொல்றான்’ என்று கமலத்திடம் சொன்னார். அன்றிரவு அவரும் கிராமத்திற்குப் புறப்பட்டார். கமலம். சுந்தரத்திடம் எதுவும் சொல்லவில்லை.
அன்று, பங்குனி உத்திரம். அழகர் கோவிலில், கள்ளழகர், ஆண்டாள் இருவருக்கும் திருமஞ்சனம் நடந்தது கொண்டிருந்தது. அதன் பின், அலங்காரம். திருக்கல்யாண மண்டபத்தில் ஆண்டாள்-அழகர் திருக்கல்யாணம். கல்யாண மண்டபம் முழுதும் பக்தர்களால் நிரம்பியிருந்தது.
அங்கு, சங்கீத அகாடமி, தில்லி. விருது பெறுபவர்கள் எல்லாம் அரங்கத்தில் நிறைந்திருந்தனர். அனைத்து மாநிலங்களிலிருந்தும் வந்திருந்தனர். சுந்தரன் இருக்கைக்கு அருகில் இசையின் இருபெரும் ஜாம்பவான்கள் தமிழகத்திலிருந்து அமர்ந்திருந்தனர்.
அழகர் கோவிலில், பட்டாச்சார்யார்கள் திருக்கல்யாணக் கைங்கர்யங்களைச் செய்துகொண்டிருந்தனர். ஸௌம்யநாராயண திருமாலையாண்டார்- கிருஷ்ண தோழப்பர் தலைமையில் திராவிட வேதம் என்ற திவ்யப்ரபந்தம் சேவித்துக் கொண்டிருந்தனர்.
‘வி வில் ஸ்டார்ட் தி ப்ரோக்ராம் ஷார்ட்லி. அவர் ராஷ்டிரபதி ஸ் ஆன் தி வே ஃபரம் ராஷ்டிரபதி பவன்’ என்று ஒருவர் மேடையில் அறிவித்துக்கொண்டிருந்தார். அரங்கத்தில் கொஞ்சம் கொஞ்சமாய் அமைதி வந்துகொண்டிருந்தது.
‘இப்பவே எட்டு மணியாச்சே. ஒன்பதரைக்கு அழகருக்குத் திருமஞ்சனம் முடிஞ்சுடும். அப்பறம் திருக்கல்யாண மண்டபம் எழுந்தருள்வார். அதுக்குள்ள அழகர் கோவில் போகணும். இன்னிக்கு தேவகான கைங்கர்யம் இருக்கு..’ என்று அவசரமாய் கிராமத்திலிருந்து திருமலை கிளம்பிக்கொண்டிருந்தார்.
‘மன்னிக்கணும். இங்க கோவில் பார்க்க யாரும் இல்லாததனாலதான் உங்களை இன்னக்கி வரைக்கும் இருக்க வெச்சுட்டேன்..’ என்றார் செட்டியார். ‘இதுவும் கைங்கர்யம்தான். எல்லாம் அழகர் திருவுள்ளம்’ என்று சொல்லி திருமலை அவசரமாய் விடைபெற்றார். அன்று அவர் மனது அழகர் கோவிலுக்கும், தில்லி அகாடமிக்கும் போய் வந்து கொண்டிருந்தது. சுந்தரம் இப்போ அகாடமி போயிருப்பான் என்று நினைத்துக்கொண்டார்
அரங்கு நிறைந்த கரவொலி. அனைவரும் எழுந்து நின்றனர். ஜனாதிபதி விழா மேடைக்கு வந்தார். இறை வாழ்த்து முடிந்து, ஜனாதிபதி சுருக்கமாய் சிறப்புரை நிகழ்த்தினார். விருது வாங்குபவரின் பெயர்கள் அழைக்கத் தொடங்கினார்கள்.
அழகருக்குத் திருமஞ்சனம் முடிந்தது. அம்பி பட்டர் அலங்காரம் செய்து கொண்டிருந்தார். திருமலை வந்துவிட்டாரா என்று அங்கிருந்தவரிடம் கேட்டுக்கொண்டிருந்தார்.
கிராமத்திலிருந்து வந்த பேருந்து வேகம் எவ்வளவு முயன்றும் திருமலையின் மனவேகத்தைத் தாண்ட முடியவில்லை. ஒரு கட்டத்தில் தோற்றுவிட்டது. ஆம், சில மைல் முன் நின்றுவிட்டது. திருமலை இறங்கி மன வேகத்திற்கு ஈடாய் நடக்கலானார்.
அழகர் அலங்காரம் முடிந்தது. மற்ற வைதீகச் சடங்குகள் செய்து, எங்கும் மங்கல ஒலியோடு ஆண்டாள் திருக்கல்யாணம் நடந்தது. ஆண்டாள்-அழகர் ஏக சிம்மாசனத்தில் அமர்ந்து நாகஸ்வர இசையைச் செவிமடுத்துக் கொண்டிருந்தனர். மக்கள் தங்களை மறந்து திவ்ய தம்பதிகளை வணங்கிக் கொண்டிருந்தனர்.
தமிழ்நாட்டு வரிசையில் விருது வழங்கத் தொடங்கினர். அரங்கு நிறைந்த கரவொலியோடு அனைவரும் வாங்கி வந்தனர். இப்போது சுந்தரனை அழைக்க வேண்டும். அவரின் சாதனை, தற்போதைய ஆராய்ச்சி, அழகர்க்குச் செய்யும் கைங்கர்யம் பற்றி ஒருவர் ஹிந்தியில் சொல்லிக்கொண்டிருந்தார்.
அழகர் கோவிலில் பெருமான் முன் தேவகானம் பாட வேண்டும். அம்பி பட்டர் இசை பாடுவோரை அழைத்தார். ‘அருளப்பாடு தேவகனாம் பாடுவார்..’ என்று அழைக்க கூட்டம் முழு அமைதிக்கு வந்தது.
திருமலை அப்போதுதான் இரணியன் கோட்டை நுழைந்து கொண்டிருந்தார். அவர் குளித்துவிட்டே கைங்கர்யத்திற்குச் செல்ல வேண்டும். ஆனால்,
‘பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு, பலகோடி நூறாயிரம். மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா’ என்ற தேவகானம் அவரை திருக்கல்யாண மண்டபம் இழுத்தது. திருமலை கூட்டத்தை விலக்கிக் கொண்டு மண்டபம் அடையும் போது,
இன்று வந்து இத்தனையும்* அமுது செய்திடப் பெறில்* நான்-
ஒன்று நூறாயிரமாக் கொடுத்துப்* பின்னும் ஆளும் செய்வன்*
தென்றல் மணம் கமழும்* திருமாலிருஞ்சோலை தன்னுள் நின்றபிரான்
அடியேன் மனத்தே* வந்து நேர்படிலே*
என்ற ஆண்டாளின் திருமொழி தேனாய்ப் பாய்ந்துகொண்டிருந்தது.
ஆம். அங்கு தேவகானம் பாடியது சுந்தரம். ‘மெய் வருத்திக் கை செய்து உய்மினோ.’ என்று முன் பட்டர் சொன்னது அவனுக்கு ஆழமாய்ப் பதிந்து விட்டது. ஜனாதிபதி விருதை விட இந்தக் கைங்கர்யமே ‘யாம் பெறும் சன்மானம்’ என்று எண்ணிவிட்டான்.
திருமலைக்கு ஒரு கணம் தலை சுற்றியது. மன்னர் மாறவர்மன் சுந்தரபாண்டியர், அரசி திருவுடையாள், சுந்தரபாகு அனைவரும் கண் முன் வந்து போனார்கள். தன்னையும் அறியாமல் அருகில் இருந்த தூணில் சாய்ந்தார். ‘எங்கும் பரந்து பல்லாண்டொலி செல்லாநிற்கும் சீர்த் தென்திருமாலிருஞ்சோலையே’ என்ற பெரியாழ்வாரின் பாசுரம் சத்தியமான வரிகளாய் அன்று அவருக்குள் கேட்டுக் கொண்டிருந்தது.
தூணின் மேல் பெரியாழ்வார் தாளம் இசைத்துக் கொண்டிருந்தார்.
குறிப்பு:
1 – முடிகொண்ட சோழபுரம் – பழையாறை
2 – நங்கள்குன்றம் – வைணவ கோவில்களில் கருவறைக்குப் பெயர் இருக்காது. இங்கு மட்டும் ‘நங்கள் குன்றம்’ என்று நம்மாழ்வார் மங்களாசாசனம் செய்கிறார்.
3 – அழகர் கோவிலில் இருக்கும் இரண்டு வெவ்வேறு கல்வெட்டுக்களில் இருக்கும் செய்தியை இணைத்து கதை புனையப்பட்டது.