Posted on Leave a comment

சில பயணங்கள் சில பதிவுகள் 36 | சுப்பு

எம்ஜிஆரால் ஏற்பட்ட திருப்பம்

தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ராமச்சந்திரன் சிகிச்சைக்காக சென்னை அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் என்ற காலைநேரச் செய்தி தமிழகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியது (அக் 5, 1984). முதலமைச்சரின் உடல்நிலை குறித்து அரசுத் தரப்பிலும் அப்போலோ மருத்துவமனை தலைமை டாக்டர் பிரதாப் சி ரெட்டி அறிக்கையிலும் ‘டயாலிசிஸ்’ சிகிச்சை செய்ததாகச் சொல்லப்பட்டிருந்தது. எம்ஜிஆர் உடல்நிலை தேறி வருகிறார் என்ற நம்பிக்கை வலுப்பெறும் நேரத்தில் அடுத்த அதிர்ச்சி. அவரது வலது பக்க கை கால்களை அசைக்க இயலவில்லை, மூளையில் ரத்த உறைவு உள்ளது என்பது தெரிய வந்தது.

முதல்வர் உடல்நிலை பற்றி சட்டமன்றத்தில் அன்றாடம் அறிக்கை வெளியிடப்பட்டது. அப்போலோ மருத்துவமனை இருக்கும் கிரீம்ஸ் சாலை முதல் அண்ணா சாலை வரை மக்கள் வெள்ளம் அலைமோதியது, மக்கள் ஆண்களும் பெண்களும், குழந்தைகளுமாக வந்து கொண்டே இருந்தனர். அங்கே பதட்டமும் அழுகையும் சூழ்ந்து இருந்தது. அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மற்ற நோயாளிகள் இது சரி வராது என்று முடிவெடுத்து வேறு இடத்திற்குப் போய் விட்டார்கள்.

கோவில்களில் தொடர்ந்து பூஜைகள் நடந்தன. தமிழக ஆளுநர் மதன்லால் குரானா, ஆந்திராவிலுள்ள திருப்பதிக்குப் போய் பிரார்த்தனை செய்தார். அமைச்சர்கள் அங்கப் பிரதட்சிணம் செய்தார்கள். தொண்டர்கள் மொட்டை போட்டுக் கொண்டார்கள்.

வாரக் கணக்கில் திரும்பிய இடமெல்லாம் ‘முருகா உன் காலடியில்…’ என்ற திரைப்படப் பாடல் ஒலித்துக் கொண்டே இருந்தது. ஒளி விளக்கு என்ற திரைப்படத்தில் எம்ஜிஆர் உடல் நலம் பெற வேண்டும் என்பதற்காக சௌகார் ஜானகி பாடும் பாடல் அது. எம்ஜிஆர், ஜெயலலிதா, சௌகார் ஜானகி நடித்த திரைப்படம் ஒளி விளக்கு. ஜெமினி ஸ்டூடியோ உரிமையாளர் எஸ்.எஸ்.வாசன் தயாரிப்பாளர், இயக்குநர் சாணக்யா, இசை எம்.எஸ்.விஸ்வநாதன், பாடியவர் பி.சுசீலா. திரைக்கதையின் படி, படுத்த படுக்கையாக இருக்கும் எம்ஜிஆர் உயிர் பிழைக்க வேண்டுமென்று சௌகார் ஜானகி முருகக் கடவுளிடம் வேண்டுவதாகப் பாடல் வரிகள் அமைந்திருந்தன. பாடலாசிரியர் வாலி.

‘இறைவா உன் மாளிகையில்

எத்தனையோ மணி விளக்கு

தலைவா உன் காலடியில்

என் நம்பிக்கையின் ஒளி விளக்கு

நம்பிக்கையின் ஒளி விளக்கு

ஆண்டவனே உன் பாதங்களை

நான் கண்ணீரில் நீராட்டினேன்

இந்த ஓருயிரை நீ வாழவைக்க

இன்று உன்னிடம் கையேந்தினேன்

முருகையா..’

என்பது பாடலின் முதல் பகுதி.

கர்நாடக இசைக் கலைஞர் மதுரை சோமு பாடிய ‘என்ன கவி பாடினாலும்…’ என்கிற மெட்டில் இருந்து இது நகல் எடுக்கப்பட்டது என்று அப்போது சொல்லிக் கொண்டார்கள்.

வெள்ளைக் காரனிடம் கையேந்திவிட்டு, கடவுள் மறுப்பு என்ற புள்ளியில் துவங்கிய திராவிட இயக்கத்தின் உச்ச நடிகர் நடித்த படத்தில் அவருக்காக முருகனிடம் கையேந்தும் பாடல் இடம் பெற்றது முக்கியமான விஷயம். அதே நடிகர் கட்சி ஆரம்பித்து மக்கள் ஆதரவோடு முதலமைச்சராகி நோய் வாய்ப் பட்டபோது அவருக்காகக் கோடிக்கணக்கான மக்கள் முருகனிடம் கையேந்தினார்கள் என்பது ஒரு வரலாற்றுப் பதிவு.

தனி விமானம் மூலம் சென்னைக்கு வந்த பிரதமர் திருமதி இந்திரா அப்போலோ மருத்துவமனையில் எம்ஜிஆரை சந்தித்தார். இதைத் தொடர்ந்து மாற்று சிறுநீரக அறுவை சிகிச்சைக்காக எம்ஜிஆர் தனி விமானம் மூலம் அமெரிக்காவின் நியூயார்க் நகரிலுள்ள புரூக்ளின் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் (நவ 6, 1984).

இதற்கிடையில், தில்லியில் இந்திரா காந்தியின் மறைவிற்குப் பிறகு, ராஜீவ் காந்தி நாட்டின் பிரதமராகப் பதவி ஏற்றுக் கொண்டார். அவர் பாராளுமன்றத்தைக் கலைத்ததைத் தொடர்ந்து தேர்தல் அறிவிப்பு வெளியானது. நாடாளுமன்றத் தேர்தலுடன் தமிழக சட்டமன்றத்திற்கும் தேர்தல் நடத்தலாம் என்று அதிமுக தலைமை முடிவு செய்தது. தமிழக சட்டசபை கலைக்கப்பட்டு சட்டமன்றத்திற்குத் தேர்தல் அறிவிக்கப்பட்டது.

திமுக, மார்க்சிஸ்ட், ஜனதா, இந்திய கம்யூனிஸ்ட், நாராயணசாமி நாயுடுவின் கட்சி, தமிழ்நாடு பார்வர்ட் ப்ளாக், வ.கம்யூனிஸ்ட், இ.கம்யூனிஸ்ட், காமராஜ் காங்கிரஸ், இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகள் ஓரணியில் இணைந்து தேர்தலை சந்தித்தன. அதிமுக அணியில் அதிமுகவும் இ.காங்கிரஸும் இருந்தன.

எம்ஜிஆர் ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிடுவார் என்ற அறிவிப்பு வெளியானது. புரூக்ளின் மருத்துவமனையில் எம்ஜிஆருக்கு இந்திய தூதர் அருண் பட்வர்தன் சத்தியப் பிரமாணம் செய்து வைத்தார். அந்த வேட்பு மனு சென்னைக்கு வந்தது. வெளிநாட்டில் இருந்து வேட்பு மனு தாக்கல் செய்வது தொடர்பாக சட்டப் பிரச்சினையை திமுக கிளப்பியது. ஆனால் தேர்தல் ஆணையம் இத்தகைய எதிர்ப்புகளை சட்டை செய்யவில்லை.

திமுக மேடைதோறும் ‘எம்ஜிஆர் மீண்டு வரமாட்டார்’ என்று பேசப்பட்டது. வாய் கூசாமல், ‘அவர் இறந்து விட்டார்’ என்றும் சொல்லப்பட்டது. ‘வாயில்லாத பிள்ளையும் தாயில்லாத பிள்ளையும் வெற்றிபெற மாட்டார்கள்’ என்று சொல்லி எம்ஜிஆரையும் ராஜிவ்காந்தியையும் வசை பாடினார்கள்.

ஒரு திமுக பேச்சாளர், மேடையில் ஏறி மைக் முன் நின்றபடி பேசாமல் இருந்தார். பொறுமையிழந்த மக்கள் சத்தம் போட்டவுடன், ‘ஐந்து நிமிடம் பேசாமல் இருப்பதற்கே இவ்வளவு கோபப்படுகிறீர்களே? ஒருத்தன் ஐந்து வருஷம் இந்த நாட்டை பேசாமலேயே முதலமைச்சராக ஆள வருகிறான். அதற்குக் கோபப்படுவீர்களா?’ என்று கேட்டார்.

கருணாநிதி விரக்தியின் விளிம்பில், ‘என்னை முதலமைச்சராக ஆக்குங்கள். எம்ஜிஆர் வந்த பிறகு பதவியை அவரிடம் கொடுத்து விடுகிறேன்’ என்று பேசினார். அதிமுக தரப்பில், எம்ஜிஆர் புரூக்ளின் மருத்துவமனையில் சாப்பிடுவது போல் காட்சிகள் வீடியோவில் பதிவு செய்யப்பட்டு அவை தமிழகத்தின் மூலை முடுக்குகள் எங்கும் திரையிடப்பட்டன.

தேர்தல் முடிவுகள் வெளிவந்தபோது, சட்டமன்றத்தில் அதிமுக கூட்டணிக்கு 198 இடங்களும் திமுக கூட்டணிக்கு 33 இடங்களும் கிடைத்தன. பாராளுமன்ற தொகுதிகளில் அதிமுக கூட்டணிக்கு 37 இடங்களும் திமுகவிற்கு 1 இடமும் கிடைத்தன. முதலமைச்சராக பதவியேற்றுக் கொள்வதற்காக எம்ஜிஆர் சென்னைக்கு வந்தார் (பிப் 4, 1985).

எம்ஜிஆரின் வருகை என் வாழ்க்கையில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தியது.

* * *

கடல் தொழில், மீன் வியாபாரம் என்று கரையோரமாகவே சுற்றிக்கொண்டிருந்த நான் ஓரிடத்திலேயே நிலைபெற்று சென்னையிலே வேலைக்குப் போவதில், வீட்டாருக்கு ரொம்பவும் திருப்தி. அது அவர்களை அடுத்த நகர்வுக்கு இட்டுச் சென்றது – அது திருமணம். பெண் தேட ஆரம்பித்தார்கள். நம் குடும்பத்தில் தலைக்கட்டு அதிகம் என்பதால் இந்த வேலையில் பலரும் ஆர்வத்தோடு இறங்கினார்கள். அப்படி இப்படிச் சுற்றி திருச்சியில் இருந்து ஒரு பெண் – பெயர் பத்மினி – பார்க்கலாம் என்று முடிவெடுக்கப்பட்டது. நம்முடைய அண்ணன், தம்பி, அத்தை, சித்தி, பெரியம்மா பட்டாளங்களை அழைத்துக்கொண்டு திருச்சிக்குப் போகலாம் என்று யோசனை முன் வைக்கப்பட்டது.

மற்ற குடும்பங்களைப் பற்றி எனக்கு அதிகம் தெரியாது. ஆனால் எங்கள் வீட்டில் ஒவ்வொரு நல்லது கெட்டதிலும் கலவரம் நிச்சயம் உண்டு. அதுவரை நாம் கேள்விப்பட்டிராத சில சொந்தங்கள் அப்போது முளைத்து விடும். பெரும்பாலான விவகாரங்களை இவர்கள்தான் ஆரம்பித்து வைப்பார்கள். பிரச்சினை பெரிதாகி மோதல் ஏற்பட்ட பிறகு இவர்களைத் தேடினால் கிடைக்க மாட்டார்கள் – எஸ்கேப்.

பெண் பார்க்கும் படலமே ஆரம்பித்திருக்காது. இவர்கள், மாப்பிள்ளை அழைப்பின்போது மதியம் மண்டபத்திற்குள் வந்தவுடன் முதலில் ரோஸ் மில்க் கொடுக்க வேண்டும், அப்புறம்தான் காபி என்று போர்க்குரல் எழுப்புவார்கள். அதை ஒரு மாதிரி சமாளித்து பிரச்சினையை ஆறப்பண்ணினால், கட்டுச்சாதக் கூடையில் மோர் மிளகாய் அவசியம் என்று புதிதாக ஒன்றைக் கிளம்புவார்கள். ஆறு சுற்று முறுக்கா அல்லது எட்டு சுற்று முறுக்கா என்பதுபோல் எத்தனையோ பிரச்சினைகள். மொத்தத்தில், அடுத்தவன் துயரத்திலும் செலவிலும் சுகம் காணும் அவலங்கள்.

இதெல்லாம் ஒரு ரவுண்டு முடிந்து, திருச்சிக்குப் போக வேண்டாம் பெண் வீட்டாரை சென்னைக்கு வரவழைக்கலாம் என்று முடிவெடுத்து அவர்களுக்கும் தெரிவிக்கப்பட்டது. பத்மினியின் உறவினர்கள் சென்னை நுங்கம்பாக்கத்தில் வள்ளுவர் கோட்டம் அருகில் இருந்தார்கள். அந்த வீட்டிற்கு வருவதாகச் சொல்லி நாள் முகூர்த்தம் எல்லாம் பார்த்தாகி விட்டது. இதற்குள் சில உறவினர்கள் சுறுசுறுப்பாக வேலை செய்து நுங்கம்பாக்கம் ஜோசியர் தெருவில் குடியிருக்கும் பத்மினியின் உறவினர்களைப் பற்றி தரவு சேகரித்து விட்டார்கள். நுங்கம்பாக்கத்துக்காரர்கள் ரொம்ப சாதுவாம். இதைக் கேள்விப்பட்ட உடனேயே இந்தப் பக்கம் சுவாரஸ்யம் குறைந்து விட்டது. இப்படிப்பட்ட நாளில் (ஜனவரி 1985) ஒரு பன்னிரண்டு பேர் புறப்பட்டு பத்மினியைப் பெண் பார்க்க நுங்கம்பாக்கத்திற்குப் போனோம். நான், நயினா, அம்மா மட்டும் காரில், மற்றவர்கள் பஸ்ஸில்.

பஜ்ஜி, சொஜ்ஜி எல்லாம் சுவையாக இருந்தது. அளவும் கூடுதலாக. என்ன காரணத்தினாலோ பெண்ணை மட்டும் கடைசி வரை ஒளித்து வைத்திருந்தார்கள். பெண்ணிற்கும் விருப்பம் இல்லையோ என்னவோ, நாங்கள் உட்கார்ந்திருந்த ஜமுக்காளத்தின் ஓரமாக வந்து முற்றத்தை வேகமாகக் கடந்து விட்டது. அதிலும், நான் பெண்ணை சரியாக பார்க்க முடியாதபடி பெண்ணை மறைத்துக் கொண்டு தடிமனான ஒரு சேடிப் பெண். நமஸ்காரம் செய்யும் போது போது பார்த்தேன். ஒல்லிப்பிச்சான் உடம்பு என்பது மட்டும் மனதில் பதிந்தது.

அடையார் வந்தவுடனேயே நயினா அறிவித்து விட்டார் ‘இந்தப் பெண் வேண்டாம்’ என்று. எல்லோரும் அதை ஏற்றுக் கொண்டார்கள் – என்னைத் தவிர. இந்தப் பெண் பார்க்கும் நிகழ்வு போன்ற சடங்குகளில் எனக்கு அறவே உடன்பாடில்லை. இப்படி எல்லாம் ஒரு ஜீவனைத் துன்புறுத்துவது மட்டுப்படுத்துவது கூடாது என்பதில் நான் உறுதியாக உறுதியாக இருந்தேன். தன்னுடைய இளம் வயதில் இத்தகைய கசப்புகளை விழுங்கி அதை செரிக்க முடியாமல் திணறுகிற பெண்கள், பிற்காலத்தில் அம்மாக்காரிகளாகி அதே நடைமுறையைப் பின்பற்றுவதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.

‘பத்மினியோடுதான் திருமணம்’ என்று ஒரு பக்கம் நான் வீம்பாய் இருக்க, ‘நுங்கம்பாக்கத்துக்காரர்களைப் பற்றிப் பேசினால் நடப்பதே வேற’ என்று நயினா முறைத்துக் கொள்ள, இந்த இழுபறி ஒரு மாத காலம் நீடித்தது. என்னுடைய முடிவை மாற்ற முடியாது என்பதைத் தெரிந்துக் கொண்ட சொந்தக்காரர்கள் நயினாவிடம் பேசி அவரது முடிவை மாற்றிவிட்டார்கள். திருச்சி சம்பந்தத்திற்கு அவர் ஓகே சொல்லி விட்டார்.

நிச்சயதார்த்தத்திற்கு நாள் குறிக்கப்பட்டு நுங்கம்பாக்கம் ஜோசியர் தெருவில் அது நடக்கும் என்பதும் அறிவிக்கப்பட்டது. இந்த முறை தலைக்கட்டு அதிகமானது. நிச்சயதார்த்தத்திற்குப் பழங்கள், புடவைகள், துணிமணிகள், கண்முன்னே கல்கண்டு, திராட்சைகள் என்று தட்டுத் தட்டாக வைப்பதற்குக் கொள்முதலும் செய்தாகி விட்டது. ஆனால், நல்ல நாள் நெருங்க நெருங்க பெண் வீட்டாரிடமிருந்து எந்தத் தகவலும் இல்லை. இரண்டு தரப்பினருக்கும் இடையே தொடர்பு எற்படுத்திக் கொடுத்த உறவினருக்கும் ஒன்றும் புரியவில்லை. யோசித்து யோசித்து பேசித் தீர்வதற்குள் நாள் கடந்து கடந்து விட்டது. அப்புறம் வந்த சேதி இதுதான்.

சென்னைக்குப் போகலாம் என்று பத்மினியும் பெற்றோரும் புறப்பட்டிருக்கிறார்கள். அவர்களால் பயணம் செய்ய முடியவில்லை. தொடர்ந்து இரண்டு நாட்களாக சென்னை திருச்சி நெடுஞ்சாலை முழுவதும் ஒருவழிப் பாதையாக மாற்றப்பட்டிருந்தது. சென்னையிலிருந்து திருச்சிக்குப் போகலாம். திருச்சியிலிருந்து சென்னைக்கு வர முடியாது.

சட்டமன்ற தேர்தலில் அதிமுகவிற்கு பெரும் வெற்றி. முதலமைச்சராக வேண்டிய எம்ஜிஆர் அமெரிக்காவில் அறுவை சிகிச்சை முடிந்து சென்னை திரும்பினார். அவருக்கு தமிழக மக்கள் சென்னையின் புறநகர்ப் பகுதியான கிண்டி ராணுவ மைதானத்தில் மாபெரும் வரவேற்பு அளித்தனர். லட்சக்கணக்காக வந்து கூடிய மக்கள் ஊருக்குப் போவதற்காக சென்னை திருச்சி நெடுஞ்சாலை ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டிருந்தது. எனவே நிச்சயதார்த்தத்திற்கு பெண் வீட்டார் வரவில்லை. இதை சகுனத் தடையாக நினைத்த பெண் வீட்டார் மாப்பிள்ளையை மறு பரிசீலனை செய்ய ஆரம்பித்து விட்டார்கள். எங்களிடமிருந்து போன தபாலுக்கு எந்த பதிலும் இல்லை.

நம்முடைய தரப்புக்கு இது மானப் பிரச்சினை ஆகிவிட்டது. மேற்கொண்டு என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தபோது, மயிலாப்பூரில் ஒரு திருமண நிகழ்ச்சிக்குச் சென்ற நயினா கீழே விழுந்து விட்டார். தொடையில் எலும்பு முறிவு. ராயப்பேட்டை ஆஸ்பத்திரியில் அனுமதி. காலில் துளைபோட்டுக் கம்பி கட்டி உயரத்தில் வைத்து விட்டார்கள். மூன்று மாத காலம் கட்டிலை விட்டு இறங்க முடியாத சூழ்நிலை. இந்த முறை நம்முடைய தரப்பிலும் சகுனத்தடை பேசப்பட்டது. அதாவது அவர்களும் தருவதாக இல்லை. இவர்களும் பெறுவதாக இல்லை. பத்மினி விஷயம் இவ்வாறாக முற்றுப் பெற்றது.

என் வாழ்க்கையில் ‘எம்ஜிஆரால் ஏற்பட்ட திருப்பம்’ என்று இதைச் சொல்லலாம்.

தொடரும்…

Leave a Reply