இந்து மதக் கலாசாரத்தில் நம்பிக்கை கொண்ட பெண்கள், தங்கள் மதத்தின் மீதான சமூக வெறுப்புணர்வு தாக்குதல்களை எதிர்த்துத் தம் கருத்தைப் பதிவிடுவதை ‘இந்த மதத்தில் காலம் காலமாய் அடிமைப்பட்டுக் கிடந்தும் இவர்களுக்கு விழிப்புணர்வு வரவில்லை. இந்து மதப் பெண்களுக்கு அறிவூட்டவேண்டும்’ என்பதாக சமூக ஊடகங்களில் சில பதிவுகளைக் காண நேர்ந்தது. எழுதியவர்களில் சிலர் பெண்கள்!
அடிப்படையில், இதிகாசம் என்றால் என்ன, புராணங்களில் வரும் கதைகள் ஏன் சொல்லப்படுகின்றன, சாத்திரங்கள் சொல்வதென்ன, யார் இவற்றை எழுதியிருக்கிறார்கள், யார் வசம் இவை இருக்கின்றன என்பதன் அறியாமையால் வந்த அறிவுத் தடுமாற்றம் பலருக்கு என்றால், சமூகத்தில் நல்லிணைவைத் தடுக்க முயலும் மதமாற்றச் சக்திகள் இதனைத் தங்களுக்குச் சாதகமாய்ப் பயன்படுத்துகின்றன.
‘பெண்களுக்குத் தன் வாழ்வைத் தேர்ந்துகொள்ளும் உரிமை பண்டு இருந்ததில்லை’ என்பது ஒரு வாதம். பண்டு என்ற சொல் எந்தக் காலக் கட்டத்தைக் குறிக்கிறது என்பது முக்கியம். இஸ்லாமியப் படையெடுப்பிற்கெல்லாம் முன்னர், சுமார் 2000 வருடங்களுக்கு முன்பு, வேதம் சார்ந்த சமூகத்திலும், சாராத (புத்தம் போன்ற வைதிக மார்க்கமில்லாத) சமூகத்திலும் கடைப்பிடிக்கப்பட்ட தனி மனித, சமூக ஒழுங்குகள் பொதுவாகவே இருந்தன. இவை பொதுவே சாத்திரங்களின் அடிப்படையில் அமைந்திருந்தன.
ஒருவன் சைவப் பற்றிலிருந்து, வைணவமோ, புத்தமதமோ சென்றால், அவரது சமூக ஒழுக்கம் மாறிவிடுவதில்லை. ஆனால், சுயஒழுக்கம், அற நெறி, பொது நடத்தையின் எல்லைகள் சாத்திரங்களிலிருந்து வரையறுக்கப்பட்டதெனினும், இடம், சூழ்நிலை, சமூகத் தேவைகள் கொண்டு விதிவிலக்குகள் அமைந்திருந்தன. இவற்றைப் பிற சமூகங்கள் ஒரு ஜனநாயகப் பாங்குடன் அங்கீகரித்தன.
உதாரணத்திற்கு ‘பல்லாண் மணம்1’ என்பதை எடுத்துக்கொள்வோம். சில நிலப்பரப்புகளில் கடின வாழ்வு காரணமாக, ஆண்கள் பல இடங்களுக்குச் செல்ல நேர்ந்ததால், வாரிசு உருவாக, வீட்டில் வந்த பெண்கள் அக்குடும்பத்தில் நெருங்கிய ஆண்களுக்குப் (அண்ணன், தம்பி) பொதுவில் மனை வாழ்வு வாழ்ந்தார்கள். இது காஷ்மீரத்தின் வட மேற்கில், மறுகாந்தாரம் என அழைக்கப்படும் பகுதி, இமாச்சலப் பிரதேசத்தில் லாகூல், ஸ்பித்தி போன்ற பனி அடரும் பள்ளத்தாக்குப் பகுதியில் பரவலாக இருந்தது. அப்பெண்கள் தனக்கு வேண்டியவருடன் கூடி மனை வாழ்வு வாழலாம். அனைவரும் சேர்ந்தே வாழும் நிலை இருப்பினும்.
போரால் பாதிப்படைந்த வீரர்கள் குடும்பத்திலும், வம்சம் தழைக்க சில சமூகங்களில் பெண்களுக்கு பல்லாண் மணம் அனுமதிக்கப்பட்டிருர்ந்தது. கேரளாவில் ‘மறுமக்கள் தாழி’ என்ற முறையில் நாயர் குலப்பெண்டிர், நம்பூதிரி ஆணைத் தன் விருப்ப்படி தேர்ந்தெடுக்கலாம். அடிக்கடி வந்த போர்களால், வீட்டில் ஆண்மக்கள் காயமடைந்து மரணமடைந்த நிலையில், இது காலத்தின் தேவையான ஒன்றாக இருந்தது.
பல்லாண் மணம் (Polyandry) என்பதும் பல்லாண் புணர்வு (Polykoity) என்பதும் ஒன்றல்ல. பல்லாண் மணம் என்பது குடும்பத்தை மேற்கொண்டு நடத்திச் செல்வது. பல்லாண் புணர்வு, இச்சைக்காவோ, வாரிசு உருவாக்க மட்டுமோ நடத்தக்கூடிய செயல். இரண்டிற்கும் எடுத்துக்காட்டு மகாபாரதத்தில் உண்டு.
இச்செயல்கள் அப்பெண்களின் மீது திணிக்கப்பட்டவையல்ல. அவர்கள் விரும்பினால், அவர்களது தேர்வினால் நடத்தப் பட்டவை என இதிகாசங்களைப் படித்தால் அறியலாம். அச்சுதந்திரம் அவர்களுக்கு இருந்தது.
இன்று தேவை பல்லாண் மணமல்ல எனினும், அச்சுதந்திரம், அவ்வுரிமை அன்றைய இந்துப் பெண்களுக்கு இருந்தது என்ற சிந்தை முக்கியமானது. தனது பிள்ளைக்குத் தந்தை யாராக இருக்க வேண்டும் என்பதை மணத்தின் பின்னும் தேர்ந்தெடுக்கும் உரிமை என்பது அன்றைய உலகில் பல சமூகத்திலும் கேட்டறியா ஒன்று.
மறுமணம் என்பதும் இந்துப்பெண்களுக்கு பண்டைய பாரதத்தில் அனுமதிக்கப் பட்டிருந்தது. கணவனின் சடலம் எடுக்கப்படும் முன்பே ஒலிக்கின்ற மந்திரங்களில், அவனது மனைவி, அக்குடும்பத்தில் ஒருவரையோ அல்லது நெருங்கிய சொந்தத்தில் ஒருவரையோ தேர்ந்தெடுக்க அழைக்கும் வரிகளைக் காண முடியும். அவை இன்றும் தொடர்கின்றன, சில இடங்களில், அச்சடங்குகள் மாறியிருக்கும் தறுவாயில், அவை விடப்படுகின்ற சாத்தியங்கள் உண்டு.
இவை அனுமதி, உரிமை என்றளவில் சாத்திரங்களில் மட்டுமே இருந்திருந்தால் பயனில்லை. ஆண்களின் உலகம் அது. அவர்கள் அதனை மறுத்தால்? பெண்களை அடக்கி, வஞ்சித்தால்? அன்றைய சமூகக் கட்டமைப்பு நான்கு வருணங்களாகப் பிரிந்திருக்கையில், ஒவ்வொரு தட்டிலும் இவ்வுரிமை பற்றிய விவரம் பரவியிருந்திருக்குமா? இவ்வுரிமைகள், கட்டுப்பாடுகள், நீதிகளின் காப்பாளர் யார்?
பலரும் நினைப்பது போல் இக்காப்பாளர் பிராமணர்களோ, சத்திரியர்களோ அல்ல. அரசர்களுக்கு நீதி சொல்ல குருக்கள் இருந்தனர், அமைச்சர்கள் இருந்தனர். சாஸ்த்ரிகள்/ ராஜ குருக்கள், சாத்திரங்களின் வழிவந்த கட்டுப்பாடுகளைச் சொல்ல, மந்திரிகள் தேவைக்குத் தகுந்த ஆலோசனைகள் வழங்கினர்.
பிறருக்கு, சமூக நீதிகளைக் குறித்தும், உரிமைகள் குறித்துமான அறிவு பெரும்பாலும் விழாக்கள், பண்டிகைகளில் வரும் கதை நிகழ்வு, உபன்யாசங்கள், நாடகங்கள் மூலமாகப் பரவின. இராமாயணக் கதை வீட்டில் படிக்கும் வழக்கம் கொண்ட குடும்பங்கள் இன்னும் இருக்கின்றன. பாகவத சப்தாகம் என்பது ஏழு நாட்கள் தொடர்ந்து ஸ்ரீமத் பாகவதம் வாசிக்கும் நிகழ்வு இன்றும் வழக்கத்தில் இருக்கிறது.
கதைகள் படிக்கும் சடங்கு என்றால் வெறும் நிகழ்வுகளைச் சொல்லிப் போவதில்லை. அது நவீனக் கதை சொல்லும் உத்தி. புராணங்கள் இதிகாசங்கள் கதைகளாகச் சொல்லப்படும்போது, பல இடங்களில், உரையாடல்களில், பொருத்தமான நீதிகள், உரிமைகள், கடமைகள் வெளிப்படையாகச் சொல்லப்படுவதும், அவற்றின் செயலாற்றம் சிலாகிக்கப்படுவதையும் காணலாம். உதாரணமாக மகாபாரதத்தில் உத்யோக பர்வத்தில்2 திருதிராஷ்ட்ரன் சஞ்சயனிடம் தன் மக்களுக்கு அறிவுறுத்துமாறு சொல்ல, அவன் சொல்வதாகப் பல அறிவுரைகள் காணக்கிடைக்கின்றன. இது போல் இராமாயணத்திலும் வரும் அறிவுரைகளை, சாத்திர நெறியில் கூறிவருவதை எல்லாக் காண்டங்களிலும் காணலாம்.
இவையெல்லாம் படித்தவர்களுக்கு மட்டும்தானே? பிறருக்கு எப்படிக் கொண்டு செல்வது என்பதை உணர்ந்தே, இராமாயணம், மகாபாரதம், பாகவதம் படிப்பது என்பதை விழாக்களிலும், பண்டிகை நாட்களிலும் ஒரு சடங்காக வைத்திருந்தார்கள். இதில் கதை கேட்க அனைவரும் வருவர் என்பதால், இக்கதைகளின் சாரம் அனைவரையும் சென்று அடைந்திருக்கிறது என்பதை உறுதியாக நம்பலாம்.
ஒரே கதை, வாசிப்பு அனுபவமாகவும், நாடகமாகவும் அனைத்து சமூகத்திற்கும் கிடைப்பது அரிது. எத்தனையோ கதைகள் இருக்க, வராக புராணத்தில் இருந்து நம்பாடுவான் என்ற பாணனின் பக்திக் கதையை கைசிகி நாடகம், கைசிகி புராணமாக3 நம் முன்னோர் ஆக்கிவைத்திருக்கிறார்கள். கைசிகி ஏகாதசி அன்று வைணவத்தலங்களில் இக்கதையை பாராயணம் செய்ய, திருக்குறுங்குடி கோவிலில் இது கைசிகி நாடகமாக அரங்கேறுகிறது.
மிகச்சுருக்கமாக கதை. நம்பாடுவான் என்ற பாணன், அதிகாலையில் திருக்குறுங்குடி நம்பிப் பெருமாளைப் பாடி எழுப்பித் தன் பணிகளைச் செய்து வருகிறான். அவனை ஒரு அதிகாலையில் ப்ரம்ம ராட்சஸ் ஒன்று வழியில் பிடித்துக் கொள்கிறது. பாடி இறைவனைத் துயிலெழுப்பி வருகிறேன் என்று நம்பாடுவான் சொல்ல அது நம்ப மறுக்கிறது. தான் திரும்பி வருவேன் என்பதை உறுதி செய்ய, ‘வராவிட்டால் பதினெட்டு பாவங்கள் தன்னிடம் வரட்டும்’ என்று உறுதி கொடுக்கிறான். ராட்சதன் விட்டுவிட, பாணன் பாடி மீண்டு வருகிறான். ராட்சதன் அவனை வணங்கிச் சாபம் நீங்குகிறான்.
இதில் சமூக ரீதியாக, ஒரு கடைநிலை வகுப்பைச் சேர்ந்த ஒருவனது பக்தியை உயர்த்திப் பிடிப்பதை உணர முடியுமென்றாலும், இங்கு நாம் காணப்போவது, அந்த பதினெட்டு வகைப் பாவங்களைக் கவனித்தால், அதில் ஏழு, பெண்கள் தொடர்புள்ளதாக இருக்கிறது. கிட்டத்தட்ட முப்பத்து ஒன்பது விழுக்காடு.
1. காமம் தலைக்கேறி பல பெண்களை வலியக் கூடுதல்
2. ஒரு பெண்ணை இளமைக்காலத்தில் அனுபவித்துப் பின் ஆதரவின்றி விடுதல்.
3. இரு பெண்களைத் திருமணம் செய்து, அதில் ஒருத்தியை கவனியாது விடுதல்.
4. தன் பெண்ணைத் திருமணம் செய்து தருகிறேன் என வாக்களித்துப் பின் வாக்குத் தவறுதல்.
5. பத்தினிப் பெண் ஒருத்தியை இளமைக்காலத்தில் அனுபவித்து, அவள் மீது பழி சுமத்தி விடுதல்
6. நண்பனின் மனைவியை மோகித்தல்
7. குருவின் மனைவி, அரசனின் மனைவியரை மோகித்தல்
இந்த ஏழு பாவங்களைச் சொல்லப்படுவது, சமூகத்தில் இருக்கும் ஆண்களுக்கு ஒரு தனியொழுங்கு எச்சரிக்கையாக மட்டுமன்றி, தண்டனை கிடைக்கக்கூடிய சமூக நீதி ஆணையாகவும் பாடல்களில் விரவி வருகின்றது. கைசிகி நாடக ஓலைச்சுவடியில் இது நான்காகச் சுருக்கப்பட்டுள்ளது.4
நாடகங்கள் என்ற ஊடகமும், பாராயணம் என்ற சமூகத் தொடர்பு ஊடகமும் ஒரு சேரப் பெண்கள் மீது செய்யக்கூடாதவற்றை ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் சொல்லி வருவது, அன்றையப் பெண்கள் நிலையிலொரு அக்கறை சமூகத்தில் இருந்தது என்பதைச் சுட்டிக்காட்டுகிறது. இது 1960களின் துவக்கம் வரைத் தமிழகத்தில் இருந்து வந்ததை அறியலாம்.
சனாதன நெறியில் பெண்களுக்கு தனி உயர்விடம் இருந்தது மட்டுமல்ல, அவர்கள் நிலைக்கு ஆபத்து ஏற்படுத்தக்கூடிய ஆண்களுக்கு அரசு தரும் தண்டனைகளோடு, இறையியல் மூலமாக சமூகத்தில் கிடைக்ககூடிய தண்டனைகளையும் சனாதன நெறி எடுத்துக்காட்டிக்கொண்டே இருந்திருக்கிறது. இனியும் இருக்கும்.