Krishna The man and his philosophy OSHO
‘அந்தப் பையனுக்கு எவ்ளோ வயசிருக்கும் பாட்டி?’
‘அஞ்சு வயசிருக்கும். அவன் பள்ளிக்கூடம் போற வழியில ஒரு பெரிய காடு. அதத் தாண்டிதான் போகணும். அன்னிக்கு அவன் அம்மாவால அவன் கூட வரமுடியல. தனியாத்தான் போகணம். அவனுக்கு பயமாயிருந்தது. என்ன பண்ணறதும்மான்னு கேட்டான்.’
‘அப்ப.. அவன் அம்மா என்ன சொன்னா பாட்டி?’
‘பயப்படாதே! ஒனக்கு ஒரு அண்ணன் இருக்கான்; அவன் பேரு ‘கண்ணன்’ பயம் வந்தா அவனக் கூப்பிடு! வருவான்’ அப்படீன்னா.. அந்தப் பையனும் சரின்னு சொல்லிட்டுப் போறான். காட்டுக்குள்ள போனதும் பயம் வந்துடுத்து. ஏதோ சத்தம் எல்லாம் கேக்கறது. இருட்டா இருக்கு ‘கண்ணா கண்ணான்னு’ உரக்கக் கத்தினான். உடனே அங்கே ஒரு மாடு மேய்க்கும் சிறுவன் வந்து ‘பயப்படாதே தம்பி’ என்று சொல்லிட்டு இவனோடு காட்டைத் தாண்டும் வரை வருகிறான்; பிறகு திரும்பிப் பாத்தா அவனைக் காணோம்..’
‘பாட்டி.. எனக்குத் தெரியும்.. வந்தது கண்ண..உம்மாச்சிதானே!’
‘அட ஆமாம். கரெக்டா சொல்லிட்டயே..’
இதுதான் எனக்கு கண்ணன் என்ற தெய்வத்தோடு முதல் அறிமுகம். வெவ்வேறு வசனங்களில் சுருக்கமாகவும், நீளமாகவும் பாட்டி எனக்குப் பலமுறை இதே கதையைச் சொல்லி இருக்கிறாள். வேறு கதைகளும் தொடர்ந்தன. கண்ணன் வெண்ணெய் திருடியது, குழல் ஊதியது, கோபியர் புடவைகளைத் திருடியது என்று ஒரு பெரிய பட்டியலே உண்டு. ஆனாலும் எனக்கு ‘கண்ணன் சீரீஸ்’ கதைகளிலேயே மிகவும் பிடித்தது, ‘மண்ணைத் தின்றாயா’ எனக் கேட்ட அம்மாவுக்கு வாயைத் திறந்து காட்டிய கண்ணன் அதிலே உலகத்தையே காட்டிய கதைதான்.
‘யசோதை, தன் கொழந்த கண்ணன் வாய்க்குள்ள இந்த உலகத்தையே பாத்தாளாம். அதுல அவளும் தெரிஞ்சாளாம்.. எப்படி தெரியுமா? கண்ணன் வாய்க்குள்ள அவ பாக்கறா மாதிரி..’ என்று பாட்டி சொல்லி எங்களை ஆச்சரியப்படுத்துவாள்.
நான் யோசித்திருக்கிறேன். கண்ணன் வாய்க்குள் யசோதை உலகைப் பார்க்கிறாள்; அதற்குள் கண்ணன் வாயைப் பார்க்கும் யசோதை; அதற்குள் இன்னொரு கண்ணன் யசோதை.. இது முடிவில்லாமல் தொடருவதாகத் தெரியும்.
அந்தக் காலத்தில் ‘குட்டிக்யூரா’ என்றொரு முகப் பவுடர் வரும். அதன் டப்பாவில் ஒரு பெண் குட்டிக்யூரா டப்பா வைத்திருப்பது போல் படம் இருக்கும். அந்தப் படத்தில் இருக்கும் பெண் கையிலும் ஒரு டப்பா!.. இதற்கு முடிவேது? முன்னும் பின்னுமாகக் கண்ணாடி வைத்துக் கொண்டு நாம் பார்த்தால், முடிவின்றித் தெரியுமே நமது பிம்பங்கள். அதைப் போல இதுவோ!
ஓஷோ (OSHO) எழுதிய KRISHNA THE MAN AND HIS PHILOSOPHYஎன்ற நூலைப் படித்த போது கண்ணனின் பல பிம்பங்கள், முடிவின்றி இதைப்போல வந்துகொண்டே இருந்தன. எல்லோரும் அறிந்த ‘கிருஷ்ணா’ வைப் பற்றி இவரென்ன புதிதாக எழுதிவிடப் போகிறார் என நினைப்பவர்கள் ஓஷோவை அறியாதவர்களாக இருப்பார்கள். ஓஷோ எதைத் தொட்டாலும் அதன் அறிதலும் புரிதலும் வித்தியாசமாயிருக்கும். கட்டமைக்கப்பட்டுள்ள எந்தக் கருத்துருவாக்கத்திற்கும் எதிர்மறையான விளக்கத்தை எதிர்வாதம் செய்ய வழியில்லாமல் எடுத்துரைக்கும் ஆற்றலுள்ளவர்.
சந்திரமோகன் ஜெயின் என்ற இயற்பெயர் கொண்ட ஓஷோ, மத்தியப்பிரதேசத்தில் குச்வாடா என்ற கிராமத்தில் 11 டிசம்பர் 1931ல் பிறந்தவர். ஆச்சார்ய ரஜனீஷ் என்றும், ஸ்ரீ பகவான் ரஜனீஷ் என்றும் அழைக்கப்பட்டவர்.
‘புனே’ வில் இவர் நடத்திய ஆஸ்ரமத்தில் சில வித்தியாசமான தியான முறைகள் கற்பிக்கப்பட்டன. இது பற்றி, குஷ்வந்த் சிங் ஆசிரியராக இருந்த காலத்தில் ‘இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி’ ஒரு கட்டுரை வெளியிட்டு, இவரை ஒரு ‘செக்ஸ் சாமியார்’ எனக் குற்றம் சாட்டியது. இதன் பயனாக அவர் ஒரே நாளில் இந்தியா முழுமையிலும் பிரபலமாகிவிட்டார்.
இந்தியாவிலிருந்து அமெரிக்கா சென்று அங்குப் பெரும் பொருள் ஈட்டினார்; மிகப் பெரிய சீடர் பட்டாளத்தை ஏற்படுத்திக் கொண்டார். ஒரு மாகாணத்தையே தன் வசப்படுத்திக் கொண்டார் என்றும் சட்ட விரோதச் செயல்களில் ஈடுபட்டார் என்றும் அவரை சிறையில் தள்ளியது அமெரிக்க அரசு. நிரூபிக்கப்படாத பலவித குற்றச்சாட்டுதல்களுக்கு உள்ளாகி, அமெரிக்காவால் வெளியேற்றப்பட்டார் பகவான் ரஜனீஷ். இந்தியா திரும்பிய பிறகு அவர் ‘ஓஷோ’ வாகவே அறியப்பட்டார். 19 ஜனவரி 1990ல் மாரடைப்பினால் மரணமடைகிறார்,
தமிழ் வாசகர்களுக்கு ஓஷோ பற்றி மிக விளக்கமாகக் குறிப்பிடத் தேவையில்லை. தமிழிலே அவரது நூல்கள் பல மொழிபெயர்க்கப்பட்டு அதன் மூலம் அவர் இங்கே பலருக்கும் அறிமுகமாகி உள்ளவர். முப்பதைந்து ஆண்டுகளாக வெவ்வேறு இடங்களில் பல நேரங்களில் அவர் பேசிய உரைகளே தொகுக்கப்பட்டு நூல்களாகப் பதிப்பிக்கப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட எழுநூறுக்கும் மேற்பட்ட நூல்கள் இன்றும் கிடைக்கின்றன. பேசப்பட்ட உரைகள் என்பதால் அவரது பல நூல்கள், அவரைக் காண வந்தோரும், சீடர்களும் கேட்ட கேள்வி பதில்களின் தொகுப்பாக அமைந்துள்ளன. அவரது நூல்கள் கிட்டத்தட்ட எல்லா இந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
உலகத்தின் அனைத்து மதங்கள், கருத்தியல்கள் பற்றியும் பிரபலமாகக் கொண்டாடப்படும் மதக் குருமார்கள் தலைவர்கள் ஆகியோர் பற்றியும் இவரது கருத்துகள் வித்தியாசமானவை; எதிர்மறையானவை. கிண்டல்களோடு சொல்லப்பட்டவை. பலர் இவர்பால் ஈர்க்கப்பட்டதற்கும், பலர் இவர்பால் பகை கொண்டதற்கும் இதுவே அடிப்படைக் காரணம். இவற்றையெல்லாம் தாண்டி ஓஷோவின் தெளிவான எழுத்து நடை பலரை ஈர்த்துள்ளது. எவ்வளவு கனமான தத்துவமாக இருந்தாலும் அதை சிறுசிறு துண்டுகளாக்கி எளிமையாக அளித்து விடுவார்.
குறிப்பாக சமண, பௌத்த மதக் கொள்கைகளையும், அவற்றை உருவாக்கிய மகாவீரர், புத்தர் ஆகியோர் பற்றியும் இவர் எழுதியவை மிகச் சிறப்பானவை. இந்துமதத் தத்துவங்களில் ஆழ்ந்த ஞானமும் புரிதலும் கொண்டவர். இவர் எழுதியவற்றுள் பகவத் கீதை விளக்கம், பதஞ்சலி யோக சூத்திர விளக்கம் ஆகியவை முக்கியமானவவை.
அவரது மரபு மீறல்களும், முக்கிய விஷயங்களாக நமது முன்னோர்கள் சொல்வதைக் கேலிப் பொருளாக்கும் தன்மையும், திடுக்கிடச் செய்து திரும்பிப் பார்க்க வைக்கும் கருத்துகளும் அவரை இளைய தலைமுறையினரிடையே மிகச் செல்வாக்குப் பெற்ற ஆசானாக மாற்றிவிட்டது. பின்னாளில் இவர் ‘டையனமிக் மெடிடேஷன்’ (Dynamic meditation) என்ற நவீன தியான முறைகளைத் தனது சீடர்களிடம் பிரபலப்படுத்தினார். பொதுவாக உலகெங்கிலும் அறியப்படும் யோக முறைகளிலிருந்து அவை மிக வித்தியாசமாக இருக்கும். ஆனால் எளிதாகவும் மக்களை விரைவில் ஈர்ப்பதாகவும் இருக்கும். இவற்றின் பயனைத் தற்காலத்தில் அவரது சீடர்கள் எவ்வளவு பயன்படுத்திக் கொண்டு உள்ளனரோ தெரியவில்லை; ஆனால் ஜெபக் கூட்டங்களிலும், மதமாற்றம் செய்ய முன்னெடுக்கும் விளக்க உரைக் கூட்டங்களிலும் கிறித்துவப் பாதிரிகள் இதனைப் பயன்படுத்தி வருகிறார்கள் என்பதை ஊடகங்கள் மூலம் நாம் அறியலாம்.
ஓஷோவின் இன்னொரு முக்கியமான பண்புநலம் நகைச்சுவை. சிரிக்கத் தெரியாதவன் மனிதனே அல்ல எனச் சொல்லும் ஓஷோ, ‘மகாவீரர், புத்தர், ஏசு ஆகியோர் வாழ்நாளில் ஒருமுறை கூட சிரித்ததில்லை. அவர்களால் எப்படி மனிதகுலத்துக்கு வழிகாட்ட இயலும்?’ என்று கேட்கிறார். அவருடைய எழுத்துகளில் நகைச்சுவை இல்லாத பக்கங்களையே பார்க்க முடியாது. சிறிய சிரிப்புத் துணுக்கின் மூலம் மிகப் பெரிய தத்துவத்தை விளக்கிவிடுவார்.
இரண்டு குடியானவர்கள் பேசிக் கொண்டு செல்கின்றார்கள். ஒருவன் அடுத்தவனிடம் சொல்கிறான்
‘என் குதிரைக்கு நேற்றிலிருந்து வயிற்றுவலி.. என்ன செய்யலாம்?’
‘என் குதிரைக்கும் வயிற்றுவலி இருந்தது.. நான் டர்பண்டைன் கொடுத்தேன்.’
மறுநாள் சந்திக்கும் போது முதல் குடியானவன் சொல்கிறான்.
‘டர்பண்டைன் கொடுத்தேன். என் குதிரை இறந்துவிட்டது.’
‘என் குதிரையும் இறந்துதான் போனது’ என்றான் அடுத்தவன்.
அரைகுறையான கேள்வி பதில்களாலும், அதைவிடக் குறைவான புரிதல்களாலும் எவ்விதப் பயனும் இல்லை என்பதை ஓஷோ எளிதாக விளக்கிவிடுகிறார்.
ஓஷோவின் தர்க்க முறைகளும் நியாயவாதங்களும் (Logical approach) அபாரமானவை. அவற்றை எதிர்கொண்டு மறுப்பது மிகக் கடினம்.
‘கடவுள் அழகானவர் என்றால் அவரால் அழகற்றவற்றை எவ்வாறு படைக்க இயலும்?’ (If God is beautiful, how can he create something that is not beautiful?)
இயற்கை என்பது கண்ணுக்குத் தெரியும் கடவுள்; கடவுள் என்பவர் கண்ணுக்குத் தெரியாத இயற்கை. (Nature is manifest God and God is unmanifest Nature)
புத்தகத்தின் தலைப்பைப் பார்த்தவுடனேயே துணுக்குற்றேன். Krishna the man and his philosophy. கிருஷ்ணரைப் பற்றிய ஆயிரக்கணக்கான புத்தகங்களில் அவரை மனிதர் என்று யாரும் குறிப்பிட்டு நான் பார்த்ததில்லை. ஒருவேளை இது வேறு ‘கிருஷ்ணாவோ’ எனப் பிரித்துப் பார்த்தேன். அதே ஆயர்பாடி கிருஷ்ணன்தான்!
‘கிருஷ்ணன் பழங்காலத்தில் பிறந்தவன்; ஆனால் எதிர்காலத்துக்குச் சொந்தமானவன்’ (Although Krishna happened in the past, he belongs to the future) என்ற முதல்பக்க இரண்டாம் வரி அறிவிப்பே இந்நூலின் கருவைச் சுட்டிக் காட்டிவிடுகின்றது. அதுதான் ஓஷோ!
குழலூதும் கிருஷ்ணன் ஒரு கலைஞன் அல்ல; கலையே அவன்தான் (Krishna is not an artist; Krishna is Art itself.) இதுதான் ஓஷோவின் நடை.
கிருஷ்ணன் தான் வாழ்ந்த துவாபர யுகத்தைக் காட்டிலும், இன்றைக்கும் இனி வரும் எதிர்காலத்திற்கும் எத்துணை முக்கியமான வழிகாட்டி என்பதை இந்நூலின் எழுநூறு பக்கங்களில் மிகத் தெளிவாக எடுத்துரைக்கின்றார். சில கருத்துகளை மீண்டும் மீண்டும் பதிவு செய்கிறார். இது போன்று ஸ்ரீ கிருஷ்ணரை யாரும் முற்றும் புதிய கோணத்தில் பார்த்திருப்பார்களா என்பது ஐயமே!
கிருஷ்ணன்தான் முழுமையானவன். பூரணமானவன். மற்ற அவதாரங்கள் ஸ்ரீ ராமர், பகவான் மகாவீர், பகவான் புத்தர் ஆகிய அனைவருமே முழுமை பெறாதவர்கள். காரணம் அவர்கள் கொண்ட கொள்கையின் ஒரு புறமே நின்றனர். தர்மத்தின் பக்கமே நின்றனர். ஆனால் இறைவன் படைப்பில் உலகில் தர்மம் அதர்மம் இரண்டும் உள்ளன. அஹிம்ஸையும் ஹிம்ஸையும் சேர்ந்தே உள்ளன. இரு துருவ எல்லைகளும் சேர்ந்ததுதான் முழுமை; அதுதான் உண்மை என்கிறார் ஓஷோ
‘Non-violence is dependent on violence; Light owes its existence to darkness; Good grows in the soil of what we call bad, and draws its sustenance from it. They are polarities of one and the same truth.’
இராமாவதாரத்தில் இராமர் தர்மத்தின் பக்கமே நின்றார். அதையே தேர்ந்தெடுத்தார். அவர் செய்தது சரியே. தேர்ந்தெடுத்த அறநெறியில் தலை நாயகனாக நின்றார். ஆனால் அது முழுமையல்ல. அதன் எதிர்ப்புறம் உள்ள அதர்மமும் இணைந்தால்தான் முழுமை தோன்றுகிறது.
ஸ்ரீ கிருஷ்ணரோ சமயத்துக்கு ஏற்றாற் போல் தன்னை மாற்றிக் கொண்டவர். அவர் பொய் சொன்னார்; திருடினார்; போர்க்களத்தின் தர்மம் கொலை செய்தல் என்று அர்ஜுனனனுக்கு வழிகாட்டினார். கலியுகத்தின் காரண புருஷனான கண்ணன், இந்த யுகத்தில் செயல் பட வேண்டிய தத்துவத்தை கீதை மூலம் சொல்கிறான் எனப் பறைசாற்றுகின்றார் ஓஷோ
கிருஷ்ணனுக்குப் பின் வந்த ஆச்சாரியர்கள் சத்யம், அஹிம்ஸை என்று தமோ குணத்தையே சொல்லி பாரத நாட்டின் போக்கையே மாற்றிவிட்டனர். எக்காலத்திலும் போர்கள் இன்றி வாழ முடியாது என்றும், தர்மம் அதர்மம் இரண்டும் சேர்ந்துதான் இருக்கும் என்றும் காட்டியவை நமது புராண இதிஹாஸங்கள். இந்த அடிப்படையை மறந்து ரஜோ குணம் சிறிதும் இன்றிப் போனதால்தான் பாரத தேசம் பலநூறு ஆண்டுகள் அடிமையாகக் கிடந்தது. போரே வேண்டாமென்ற அடிமை பாரதம், இஸ்லாமியர்களுக்காகவும், ஆங்கிலேயர்களுக்காகவும் கூலிப் படைகளாக, அடிமைகளாகப் போரிட்டதை வரலாறு சொல்லவில்லையா என உரத்த குரலில் குற்றம் சாட்டுகிறார் ஓஷோ.
‘அம்ருதஸ்ய புத்ரா:’ அமுதத்தின் குழந்தைகளே என வேதம் பேசுகின்றது உங்களைப் ‘பாவிகளே’ எனப் பிற மதத்தினர் விளிக்கலாமா எனக் கேட்டவர் சுவாமி விவேகானந்தர். ஓஷோ ஒரு படி மேலே செல்கிறார்.
அன்பும் கருணையும் கோலாகலமும், குழலிசையும் கொண்ட கிருஷ்ணன், எதிரிகளைச் சந்திக்கும் நேரத்தில், அன்பையும் கருணையையும் காட்டி, போர்க்களத்திலிருந்து புறமுதுகு காட்டி ஓடவில்லை; மாறாக அந்த சவாலை ஏற்றுக் கொண்டு போரில் வெல்கிறான். இவனன்றோ பாரதத்தின் இன்றைய தேவை என்கிறார் ஓஷோ.
‘மரணத்தைப் பார்த்துப் பயந்தால் அமுதமாக இருந்து கொண்டு என்ன பயன்? ஹிம்ஸையைப் பார்த்து நடுங்கி விலகும் அஹிம்ஸையால் பயன் என்ன?’ என அருச்சுனனைக் கேட்கும் கண்ணத் தத்துவமே இன்றைய தேவை என்கிறார் ஓஷோ!
முரண்படும் அனைத்தையும் ஏற்றுக் கொள்ளாத ஒருவன் எவ்விதம் இவ்வுலகின் கடவுளாக இருப்பான்? இருந்தால் அவன் எப்படி அனைத்தையும் படைத்தவனாக விளங்குவான். எனவே ஸ்ரீ கிருஷ்ணனே முழுமையின் தத்துவம் என்கிறார் ஓஷோ.
இன்றைக்கு கிருஷ்ணர் நம்மிடம் இருந்தால் அவர் எந்த அரசியல் கொள்கைப் பக்கம் நின்று போரிடுவார்? என்ற கேள்விக்கு விடை பகருகின்றார் ஓஷோ.
சமத்துவம் (Equality) பெற அரசியல் மற்றும் தனி மனித சுதந்திரத்தை இழக்கலாம், (To achieve equality one can suppress political freedom and destroy individual liberty and establish dictatorship) என்ற மார்க்ஸீயக் கொள்கையை எதிர்ப்பார் கிருஷ்ணர்; .
சமத்துவத்திற்காக சுதந்திரத்தை விட்டுக் கொடுத்தால், சமத்துவம் பெற்ற பிறகு, தனிமனித சுதந்திரம் திரும்பக் கிடைக்குமா? அதிகாரம் பெற்றவர்கள் அதைத் திரும்ப அனைவரிடமும் கொடுப்பார்களா? இல்லையென்பதே உலக வரலாறு.
சுதந்திரம் என்பது இயற்கை. சமத்துவம் என்பது இயற்கையில் இல்லை. அதை அடைவது இயலாது. ஒவ்வொருவருக்கும் பூரண சுதந்திரமும் தாங்கள் தங்களை வெளிப்படுத்திக் கொள்ளும் வாய்ப்பும் தேவை. எந்தப் பக்கம் பூரண சுதந்திரத்தை ஏற்கும் அரசும், காணவும் அறியவும் அரிதான பொருளை நோக்கிய ஆன்மீகத் தேடலும் இருக்கிறதோ அந்தப் பக்கத்தைத்தான் கிருஷ்ணர் தேர்வு செய்வார் என்கிறார்.
(Freedom is a natural phenomenon; whereas equality is neither natural nor possible. Everyone should have full freedom and opportunity to be himself’ ‘Krishna will choose the side where freedom and the sovereignty of the individual, where religion and the possibility to seek the unseen and the unknown will be available in predominance)
இந்தத் தெளிவைக் கண்டதும் எனக்கு ஓஷோவை மிகவும் பிடித்துவிட்டது.
பன்முகப் பார்வையின் பக்கமே கிருஷ்ணரின் தத்துவம் உள்ளது. பல நேரங்களில் எது சரி எது தவறு என்றே தெரியாத அளவு கிருஷ்ணரின் வாழ்க்கை அமைந்திருந்தது. ‘பல கிருஷ்ண பக்தர்கள் முழுமையாக அவனை ஏற்றுக் கொள்வதில்லை. குழந்தை கண்ணனைப் பரவசமாகப் பாடி ஏற்கும் சூர்தாசர் வளர்ந்த கண்ணனைப் பாடவில்லை. பல கோபியருடன் ராஸலீலை செய்தாலும் அவன் நித்திய பிரம்மசாரி என்பதை எத்தனை பேர் ஏற்கிறார்கள்.
கிருஷ்ணரின் பகவத் கீதையை ஏற்றுக் கொள்பவர்கள் அவன் பால லீலையை ஏற்றுக் கொள்வதில்லை. அமைதி விரும்பிகள் அவன் குருஷேத்திரப் போர் நடவாமல் தடுத்திருக்க வேண்டாமா என, சுதர்சனம் பயன்படுத்திய கண்ணனை ஏற்பதில்லை. இப்படியே அவரவர் தனக்குப் பிடித்த கிருஷ்ணனையே அவன் சொன்ன தத்துவமாக ஏற்கின்றனர்; பிறவற்றை மறுக்கின்றனர்’ எனச் சொல்லும் ஓஷோ, ‘சரி என்பதற்கு எதிர்ப்பதம் தவறு என்று இருக்கவேண்டிய அவசியமில்லை; அது இன்னொரு சரியாகவும் இருக்கலாம்’ என்பார்.
மகாத்மா காந்தி, டால்ஸ்டாய் போன்றோரின் (Pacifists) தத்துவத்தை எதிர்த்து, போர்களினால் ஏற்பட்ட நன்மைகள் பற்றி ஓஷோ விவரிக்கும் பக்கங்களைப் புரட்டுவோர், உடனே போர்முனைக்குச் செல்லத் தலைப்படுவர். ஆணித்தரமாக வாதம் செய்து, கிருஷ்ணர் போர் செய்யச் சொன்னது சரியே என நிறுவுவார்.
சிந்தித்து செயலாற்றும் ஒவ்வொருவருக்குமான வழிகாட்டி கிருஷ்ணரே! உலக வரலாற்றின் மிக முக்கியமான ஆளுமை கிருஷ்ணர் என்கிறார் ஓஷோ (Krishna is the most significant in all history)
கிருஷ்ணரின் குணநலங்கள் உள்ளவரே தலைமை ஏற்கத் தகுதியானவர். இதனை ஓஷோ அருமையாக விளக்குகிறார் ‘அருச்சுனா! எல்லாவற்றையும் விட்டுவிட்டு வா, எனது காலடியில் சரணாகதி அடைவாய்’ என்கிறார் கிருஷ்ணர். இது மிகப் பெரிய அகம்பாவம் (EGO) எனச் சிலர் நினைக்கக் கூடும். அப்படியல்ல. எல்லாவற்றையும் என் காலில் என்பதை ‘வாழ்கையின்’ காலில் போட்டுவிடு எனக் கொள்ள வேண்டும். ‘வாழ்க்கை எவ்விதம் நிகழ்கிறதோ அதை அப்படியே ஏற்று நட; தேர்ந்தெடுப்பவன் நீயில்லை’ என்கிறார். செயல் புரிபவனிடம் இருக்கும் தயக்கங்களை யார் நீக்குகிறானோ அவன்தானே உண்மையில் தலைவன்!
‘மகாவீரரும், புத்தரும் இதுபோன்று நான்தான் எல்லாம் எனச் சொல்லவில்லையே.. அதுதானே அகம்பாவம் அற்ற தன்மை? கிருஷ்ணரோ எல்லாம் நான் என்கிறாரே, இது எப்படி அகம்பாவத்தை அழிப்பதாகும்’ என்ற சீடரின் கேள்விக்கு ஓஷோவின் பதில் அற்புதமானது.
‘அகம்பாவத்தை இரண்டு வகைகளில் அழிக்கலாம், ஒன்று சுயத்தை சுருக்கிக் கொண்டே வருவது. இதை ‘நேதி நேதி’ என உபநிடதங்கள் உரைக்கின்றன. (Technique of negation) இதைத்தான் மகாவீரரும் புத்தரும் செய்தார்கள். இறுதியில் ‘நான்’ (I) மட்டும் நிற்கும். ஆனால் கிருஷ்ணன் வழி வேறு. இது தன்னை விரிவுபடுத்திக் கொண்டே செல்வது. இது ‘நான்தான் எல்லாம்’ எனச் சொல்வது. (அகம் ப்ரம்ஹாஸ்மி) உலக அளவுக்கு உங்களை விரிவு செய்து கொண்டால் உங்களுக்கெனத் தனியாக ஏது ‘அகம்பாவம்’?’
ஜென் புத்த மத குருமார்களின் வாழ்வியலை மிகவும் இரசித்த ஓஷோ கிழக்கின் குரு சீட மரபின் வழியிலேயே பல உரையாடல்களை நகர்த்திச் சென்றுள்ளார். இந்நூலிலும் கேள்வி பதில்களே சிந்தனைகளின் தெளிவுக்குத் துணை நிற்கின்றன.
கிருஷ்ணரா? கிறிஸ்துவா? யார் முதலில் பிறந்தவர்? கிருஷ்ணருக்கும் ராதைக்கும் இருந்த உறவு எத்தகையது? ராதையைப் பற்றி ஏன் பாகவதத்தில் குறிப்பிடப்படவில்லை? பாண்டவர்களுக்கு என்ன வகையான உபதேசத்தை கிருஷ்ணர் சொன்னார்? படிப்பதற்கே நான்கு மணி நேரம் ஆகும் பகவத் கீதையை பகவான் போர்க்களத்தில் போர் தொடங்கும் சமயத்தில் சொன்னது எவ்வாறு? கிருஷ்ணர் அருச்சுனனைப் போர் செய்யக் கட்டாயப்படுத்தினாரா இல்லை அவன் ஐயங்களைத் தெளிவுபடுத்தினாரா? இன்றைய அரசியலில் கிருஷ்ணரின் நிலைப்பாடு என்னவாக இருக்கும்? மகாவீரர், புத்தர் போன்ற அஹிம்ஸாவதிகள் போர்க்களமே வாழ்வாக விளங்கிய ஷத்ரிய குலத்தில் பிறந்தவர்களாக இருக்கிறார்களே ஏன்? கிருஷ்ணர் திரௌபதிக்கு எவ்வாறு வழிகாட்டினார்?
மேலே உள்ளதெல்லாம் இந்நூலில் உள்ள ஒரு சில கேள்விகள். இன்னும் பல உள்ளன. மிகச் சுவையான பதில்களும் உள்ளன. இந்த பதில்களின் தொகுப்பு, :ஸ்ரீ கிருஷ்ணர்’ என்ற மனிதனின் தத்துவத்தை முழுதுமாகச் சொல்லிவிட்டதா என்றால் ஆம் என்று சொல்ல இயலாது. ஆனால் படிக்கின்ற அத்தனை வாசகர்களையும், படித்து முடித்துவிட்ட பிறகு ஒரு சில நாட்கள் இதைப் பற்றிய தொடர் சிந்தனையில் ஆழ்த்திவிடும் ஆற்றல், மற்ற ஓஷோவின் நூல்களைப் போலவே இதற்கும் நிச்சயமாக உண்டு.
ஓஷோவின் படைப்புகள் எல்லாம் ஆன்மிகம், இலக்கியம், தத்துவம் ஆகிய முப்பெரும் கோணங்களைக் கொண்டே ஆக்கப்பட்டவை. அவர் மறைந்து முப்பது ஆண்டுகளுக்கு மேல் ஆன பின்னும் அவை இன்றும் நமது சமகால கருத்தியல் வாதங்கள், சமூகம் தனிமனிதத் தேடல்கள், அவை சார்ந்த உரையாடல்கள் ஆகிய பல தளங்களில் பெரிதும் விரும்பி வாசிக்கப்படும் நூல்களாக விளங்குகின்றன.
இராமகிருஷ்ண பரமஹம்ஸர் ஒருமுறை ‘ஒரு துளி கடல் நீரைச் சுவைத்தால் போதும்; அத்தனை பெரிய கடல் நீரின் சுவையையும் அறிந்து கொள்ளலாம். அது போலவே ஒரு மகான் அல்லது ஞானியின் வாழ்க்கையை உணர்ந்து கொண்டால் எல்லா ஞானியரையும் அறிந்து கொள்ளலாம்’ என்றார்.
இதனை முழுதும் ஒப்புக் கொள்ளும் ஓஷோ, ‘கிருஷ்ணருக்கு’ மட்டும் இது பொருந்தாது, அவர் யாராலும் முழுதும் உணரப்படாத ஞானி என்கிறார். ஓஷோவுக்கும் இது பொருந்தும் என நான் நினைக்கிறேன்.