Posted on 2 Comments

இது நம் சனாதன தர்மம் – நூல் விமர்சனம் | கவியோகி வேதம்

இது நம் சனாதன தர்மம், ஹைதராபாத் ரிஷிபீடம் வெளியீடு- ஆசிரியர் ப்ரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா, தமிழாக்கம்- ராஜி ரகுநாதன், பக்கம் 674, விலை ரூ 350/-

‘மனிதன் தனியானவன் இல்லை. அவன் கடவுளின் பிரதிபிம்பம். ஒவ்வொருவரும் ஏதோ ஒரு காரணத்துக்காக அவரிடமிருந்து பிரிந்து இங்கு வருகிறார்கள். ஆனால் அறிவது இல்லை. உணர வேண்டும் அதை. எனில், அவன் அறிய முற்படுவது இல்லை. முயன்றால் முடியும்தான். மூச்சுப் பயிற்சி, தவம் போன்ற பயிற்சியால் நிச்சயம் முடியும்.’ சொன்னவர் ஸ்ரீபரம ஹம்ச யோகானந்தர். அவரைப்போல் ஆழ்ந்து தவம் செய்த பல மகான்களும் இதையே சொல்லியிருக்கிறார்கள்.

நமது வேதமும் இதையே வலியுறுத்துகிறது. ‘உன் கர்மா கழிவதற்காகத்தான் மண்ணுக்கு வருகிறாய். போகிறாய். முதலில் அழுகிறாய். உண்கிறாய். உறங்குகின்றாய். வயிற்றுக்காக உழைக்கின்றாய். அது ஒரு மாயச் சுழல்; அது ‘அவன்’ சூழ்ச்சி! உனை மண்ணில் தக்க வைக்க!

ஆயின் அதுவே முடிந்த முடிபன்று. தான் பிறந்த காரணத்தை மனிதன் அறியவேண்டும். கடவுளின் பிம்பம் நீ என்று எல்லா மகான்களும் சொன்னால், அதுவே நீ! (தத்வம் அஸி) அந்தத் தெய்வீக வலிமைச் சுழலுக்குள் நீயும் சென்று நீயும் அதுவாகவே ஆகமுடியும், சித்துக்கள் செய்ய முடியும், என்றால், அது எப்படி முடியும் என்று அவர்களிடமே கேள், வேதம் படி; அதுவும் இதையே சொல்கிறதே என்றால் விசாரி; குரு தேடு; உன் குருவிடமே கேள்; விடாதே! ஏதாவது ஒரு மகான் அல்லது கடவுளின் காலைப்பிடி. உற்றுப்பார். உணர்ந்து உற்றுக்கேள். உரக்க குருவிடம் விசாரித்தால், இல்லை உன் கண் மூடி உள்ளே உள்ளே போய்த் தேடினால் நிச்சயம் விரைவில் விடை வரும். உன்னால் தெளிவு பெறமுடியும்; அது கிட்டுவது உனக்கு எவ்வளவு ‘தேடல்வெறி’ இருக்கிறது என்பதைப் பொருத்து இருக்கிறது

இல்லை எனில், எது வாங்க எனும் குறிக்கோள் இல்லாமல், ஒரு பெரிய மாலுக்குள் போய் அங்கு அழகழகாய் கொலுவைப்போல் வைத்துள்ள பொருட்களைப் பார்த்து மயங்கி வேண்டாததை எல்லாம் வாங்கித் திரும்பும் அறிவில்லா மனிதனைப்போல்தான் முடியும். இதைத்தான் இந்த சனாதன தர்மம் எனும் நூல் விளக்குகிறது.

ஆம்! நூல் ஆசிரியர் அழகுறச் சொல்கிறார். இங்கே மொழிபெயர்ப்பாளர் ராஜியின் தமிழ் மொழிபெயர்ப்பும் தெளிவாக உள்ளது. (பக்266).

‘வித்யை, தர்மம், விஞ்ஞானம் – இவை வெறும் புத்தகம் மூலம் இன்றி, நடைமுறையில் கடைப்பிடிப்பதால் மட்டுமே சனாதன தர்ம உண்மைகள் பிற்கால சந்ததியினருக்குக் கிடைக்கும்.’

‘யோகா, ஆயுர்வேதம், தியானம் போன்ற சனாதன தர்மம் (இந்துமதம்) கண்டுபிடித்தவற்றை மேல்நாட்டவர்கள் சரியாகப் பின்பற்றுகிறார்கள்.’ அதாவது ஆசிரியர் சொல்லாமல் சொல்லுவது, தற்கால வாலிபர் முதற்கொண்டு இம்மாதிரி கடவுளைக் கண்டுபிடிக்க உதவும் சாதனத்தை அலட்சியப்படுத்துகிறார்கள்!

சரி, நான் மண்ணுக்கு வந்துவிட்டேன்; அதற்கு உருவமும், உருவம் இல்லாமலும் மயக்கி உலாவும் ஒரு பெரிய ப்ரம்மம்தான் காரணம் என்று நீ உணர்ந்துவிட்டால் அதைப் மேற்சொன்ன ‘மால்’ மனிதன்போல் நீ மயங்கிவிடாதே. உனக்கென்று ஒரு தனி அறிவு இருக்கிறது. அதை இம்மாதிரி நுட்ப ஆராய்ச்சிக்கும் பயன்படுத்து.

ஸ்ரீரமண மகரிஷி சொன்னார் இல்லையா? ‘நான் உண்மையில் யார்’ என்று உள்ளே தேடித்தேடிக் கொண்டே போனால், ஒரு நாள் விரைவில் உணர்வுபூர்வமாக தெய்வீகச் சுழல் அல்லது ப்ரம்ம அலைக்குள் தானாகவே கொண்டு போய்ச் சேர்த்துவிடும்; நீ அதற்குள் கலந்து, தெய்வ ஒளி அறிந்து, முற்றும் உணர்ந்து, ‘அடடா! நீயும் நானும் ஒன்றல்லவா? ஏன் பிரிந்தோம்? ஏன் இதுநாள்வரை இதை உணராமல் இருந்தோம்’ எனும் ஏக்கம் உண்டாகும். மகரிஷி தவம் செய்து இதைத்தான் கண்டார்; உணர்ந்து கொண்டார்; பின்பே உபதேசித்தார்.

அதுவரை தம் உடலுக்கும் மனத்திற்கும் நேர்ந்த அல்லல்களை, வலிகளை அவர் பொருட்படுத்தவில்லை. ஆன்ம உண்மையை உணர அந்த அடிகள், வலிகள் அவசியம். பிரசவ வலி இல்லாமல் குழந்தை கிட்டுமா? கொஞ்ச நாளாவது மூச்சடக்கி முக்கிமுனகித்தானே ஒவ்வொரு விதையும் மண்ணுக்கு மேலே வந்து அப்பாடா என்று சுவாசிக்கிறது?

இந்தப் பேருண்மையெல்லாம் மேற்கண்ட ‘சனாதன தர்மம்’ எனும் நூல் மெதுவாக, படிப்படியாக வாசகனுக்கு விளக்குகிறது. ஆம்! தத்துவ உண்மைகளை படார் என்று மண்டையில் அடித்துச் சொன்னால் யாருக்கும் புரியாது. ருசியாக ‘பகவான் எனில் யார்? ஏன் இத்தனை கடவுள் உருவம் நமக்கு? அவர்கள் பற்பல ஆயுதங்கள் வைத்துக் கொண்டு அபயமும் நமக்கு அளிப்பது ஏன்? யாரை பயமுறுத்த? யாரைக் காப்பாற்ற?’ போன்ற அற்புத விஷயங்களை, புராணக் கதைகள் வழியாக சுவாரஸ்யமாகச் சொல்லி நம்மை கடவுள்தன்மைக்கு உள்ளே உள்ளே இழுத்து ஆனந்தம் தந்து அறிவுபூர்வமாக விளக்குகின்றார் ஆசிரியர்.

உருவ வழிபாடு மூலமே ஒருவன் தெய்வம் எனும் ஒரு மகா சக்தியை (நமை இழுக்கும் சுழலை) வணங்கி, சரீரம், மனம் இவற்றால் உள்வாங்கிப் பின் ஒளியுள்ள ‘ஆத்ம ஜோதியை’த் தரிசிக்க முடியும் என்கிறார் ஆசிரியர்.

பின்பே அவனால் அருவ ரூபத்தில், ஒளிப்பிரகாசமான ப்ரம்மத்தை உள் உணரமுடியும், என்றும் ஆனந்தமாய் இறைவனைப்போல் உலா வர முடியும் என்றும் நிரூபிக்கிறார்; தெய்வ மந்த்ர சக்திகளை அடைந்த மகான்கள், சித்தர்கள் மற்றும் ஞானிகள் இந்தப் பாதையில்தான் நடந்து, முதலில் தாம் ‘உள்ளே’ போய் உணர்ந்து, வெளியே வந்து நமக்கு உபதேசித்தார்கள் என்று இந்த அழகிய நூல் சொல்கிறது.

அற்புத உருவம் மூலம் ஸ்ரீவினாயகரும், முருகனும், உருவமே இல்லா மொக்கை போல் காட்சிதரும் சிவலிங்கமும், கருணைப் புன்னகையுடன் காட்சிதரும் சக்தி வடிவும் எல்லாருமே நம்மைக் கொக்கி போட்டு தமக்குள் இழுக்கும் சாகசமே! உள்வந்தபின்தானே தாம் யார் என்று நமக்குக் காட்ட முடியும்?

பக்கம் 368ல் ஆசிரியர் அடித்துச் சொல்கிறார். ’நம்மை உள்ளே இழுக்க, நம் வாழ்க்கைப் பயணத்தின் முன்னேற்றத்திற்கு (கடவுளை அறிவதற்கு) இறைவனைப் பற்றிய கதைகளே ஆதாரமாயுள்ளன. கதைகளின் மூலம் தத்துவ ஞானத்தை உணர்த்தும் முறை உபநிஷத்துக்களில் கூடக் கையாளப்படுகிறது.’

வாசலில் வெளியே நின்றால் கருணையுடன் கடன் வழங்கும் முதலாளியைப் பார்க்க முடியுமா? குகைக்குள் ஒளிந்து கொண்டால் கும் என்று அருள் பரப்பும் கதிரவனைக் காணமுடியுமா? ஆம்! முருகன், சக்தி என்று அவர்களின் வின்யாசத்தை விவரித்தபின் சூரியனை ஆதித்யன் என்று பரவி வழிபடும் காரணத்தையும் இந்நூல் விவரிக்கிறது. எல்லாவற்றையும் நூலாசிரியர், இவர்கள் சேர்ந்ததே மொத்த சதாசிவக் குடும்பம் என்று அடக்கமாகச் சொல்கிறார்.

உருவம், அருவம் தன்மையில் வந்து நம்மை ஈர்த்துப் பின்பு சிவயோகம் எனும் மந்திர, ஸாஸ்த்ர, பிராணாயாம, யோகப் பயிற்சிகள் மூலம் தெய்வீகத் தன்மையை உடலுக்குள்ளும் உள்மனத்துக்குள்ளும் எளிதில் கொண்டு வர முடியும் என்று நமக்குள் நம்பிக்கை விதையை ஊன்றுகின்றார். அவர் சொல்லும் விதமெல்லாம் மிக அழகு. ரொம்ப ருசி. அட்டகாச பாணி.

படிப்படியாய் உள்ளே தெய்வீகம் உணர அவர் கூறும் சிரத்தை, சத்சங்கம், அன்பு யோகம், ஆத்ம குணங்கள், நம் முகம் நமக்கே தெரியாது போன்ற பற்பல அத்யாயங்களையும் ஒரு அறிவு ஆராய்ச்சி மனப்பான்மையுடன் படியுங்கள். ஒரே நாளில் அன்று. நிதானமாய், படிப்படியாய் பல நாட்கள் சாவகாசமாய்!

ஆம். ஆய்வு மனம் வேண்டும் என்று சொன்னேன் அல்லவா?

நல்ல தமிழில் இந்நூல் தெளிவாக ஆய்ந்து சொல்கிறதே! பக்கம்415ல் எவ்வளவு நுட்பமாகச் சொல்கிறார், காணுங்கள்.

‘புராதன பாரதீய மக்கள் காசியிலுள்ள 56 வினாயகர் கோவில்களிலும் சரியாக ‘தல நிர்ணயம்’ (அமைப்பைச்) செய்து கடவுளின் சைதன்ய சக்தியை எப்படியோ உள்ளிழுத்து வைத்துள்ளனர். இன்றும் அங்கெல்லாம் போனால் அந்த தெய்வீக சக்தி அலை நமக்குக் கிடைக்கிறது. அது எப்படி என்று 1995ல் இங்கு வந்த அமெரிக்க வானவியல் சாஸ்த்ர அறிஞர் ‘ப்ரொஃபஸர் ஜான் மெல்வில்’ காசியின் கோவில்களை ஆராய்ந்து ஒரு ஆய்வை வெளியிட்டார்.

இந்திய முன்னோர்கள் மிக அற்புதமாக கடவுள் சக்தியை இக்கோவில்களில் ஈர்த்து வைத்துள்ளனர்; இதனை மேற்கூறிய அறிஞர் கணித சாஸ்திரத்தின் எண்கணித முறையில் தொழில் நுட்பக் கருவிகள் மூலம் ஆராய்ந்து (விஞ்ஞான ரீதியாக) சொன்னார். அந்தக் கோவில்கள் யாவுமே ‘காஸ்மிக் ஜியாமெட்ரி’ அமைப்பு முறையில் உள்ளன.

அவை விண்வெளியிலிருந்து வெளிவரும் விஸ்வ சைதன்ய சக்தியைப்பெறும் அற்புதக் கேந்திரங்களாக அமைந்திருக்கின்றன என்று நிரூபித்தார்.’

ஆகவே, ஆழ்ந்த மனம் இருந்தால், நல்ல சிரத்தை இருந்தால் நீங்கள் இந்த ஒரு நூல் மூலமே நீங்கள் கடவுளைக் காணலாம். தெய்வீகப் பரவசத்தை, ஆன்ம ஒளியை எய்தி நித்யப் பேராநந்தம் அடையலாம்! இது உண்மை! அனுபவித்தவன் சொல்கிறேன்.

இறுதி வார்த்தை. இந்த அளவுக்கு ஆழமாய்த் தமிழில் எழுதி, நாம் படித்து உணர வைத்த பிரபல மொழிபெயர்ப்பாளர் திருமதி ராஜி ரகுநாதனுக்கு ஒரு வைரக் கிரீடமே சூட்ட வேண்டும். ஏன் எனில் தெலுங்கிலிருந்து ஆசான் ஷண்முக சர்மா அவர்களின் ஒவ்வொரு தெலுங்கு உச்சரிப்பையும் நிதானமாய் உணர்ந்து, படித்துப் பின்பு எளிய ஆனால் ருசியான கற்கண்டுத் தமிழில் மொழிபெயர்த்தவர் அவரே. ஆகவே மனந்திறந்து அவர்க்கு ஒரு ‘சபாஷ்’ போடுகின்றேன். பாராட்டுகின்றேன். வாழ்க நம் சனாதன தர்மம் எனும் இந்து மதம்!

2 thoughts on “இது நம் சனாதன தர்மம் – நூல் விமர்சனம் | கவியோகி வேதம்

  1. I am trying to contact the publisher through Internet. Where can we get?

  2. Kindly send publisher full contact please. Not available in Chennai

Leave a Reply