Posted on Leave a comment

நம்மை நோக்கிப் பாயும் தோட்டா – கொரோனா | ஜெயராமன் ரகுநாதன்

Thanks: DDIndia

‘மோடி தடுத்து நிறுத்தியது கொரோனாவை அல்ல, உண்மைகளை!’

திருவாய் மலர்ந்திருக்கும் ராஹுல் காந்திக்கு நம் அனுதாபங்களைத் தெரிவித்தே இந்த வ்யாசத்தைத் தொடங்க வேண்டும். ஏனென்றால் இந்தக் காலக்கட்டத்தில் (அதாவது மே 01, 2021 எழுதப்பட்ட கட்டுரை இது) மோடி அல்லாமல் காங்கிரஸ் ஆட்சியிலிருந்தால் என்னும் ‘மாற்றுச்சிந்தனை’யை ஓடவிட்டால் கிடைக்கும் பதில் அடிவயிற்றில் சில்லிடவைக்கும். கொரோனா அளவுக்கு வீர்யம் இல்லாவிட்டாலும் அந்த அளவு பீதியை உண்டு பண்ணிய 26/11 தாக்குதலின் போது காங்கிரஸ் அரசு ஒரு அவசரகால நிலமையை நிர்வகிக்க எடுத்த, இல்லை இல்லை, எடுக்காமல் ஊறப்போட்ட முடிவுகள்தாம் நமக்கு இப்போது வழிகாட்டி. அதன்படி பார்த்தால் நமது மாற்றுச்சிந்தனை செய்யவே முடிந்திராத அளவுக்கு நாடு சீர்குலைந்துபோயிருக்கும் என்பதுதான் நமக்குக் கிடைக்கும் பதில். கால்களில் முட்டிக்குப் பதிலாக ஜெல்லியை வைத்துக்கொண்ட காங்கிரஸ் அரசும் பிரதமர் மன்மோகன் சிங்கும் எந்த உறுதியான முடிவும் எடுக்காமல் தயங்கித்தயங்கி பாகிஸ்தானுடன் ஹீனமான குரலில் பேச்சு வார்த்தைக்கு முயன்ற அவலத்தை நாமே பார்த்தோம். அப்படிப்பட்ட செயல்பாடுடைய அரசு இன்றிருந்தால் என்னும் எண்ணமே நமக்கு பயத்தைத் தருகிறதா இல்லையா?

இது என்ன பாஜக ஆதரவுக்கட்டுரையா என்று உங்களில் சிலர் வியப்படைவதற்கு முன்னால் சொல்லிவிடுகிறேன்.

இல்லை. நிச்சயம் இல்லை.

ஆனால் கொரோனா தொற்றின் காரணமாக உலகமே தடம் புரண்டு எப்படி சமாளிப்பது என்பது தெரியாமல் திணறிக்கொண்டிருக்கும் வேளையில் இங்க நமது பிரதமர் அசாத்திய துணிவோடும் தெளிவான சிந்தனையோடும் அரசு இயந்திரத்தைக் கையாண்டு நிர்வாகம் நடத்திக்கொண்டிருக்கும்போது, அவருக்கு இந்தச் சங்கடமான நேரத்தில் ஆதரவுக்கரம் நீட்டாமல் அவதூறு பரப்பி, நாட்டு மக்களை பீதி கொள்ளச் செய்யும் நீசக் காரியத்தைக் கண்டிப்பதற்காகவே மேற்சொன்ன ஆரம்பம்.

அதோடு மட்டுமில்லாமல், இந்த அரசு நாட்டையும் பொருளாதாரத்தையும் இந்தக் கொடூர கொரோனா காலத்தில் எப்படி முடிந்தவரை திறமையாக நிர்வகிக்கிறது என்பதை ஆதாரங்கள் மூலம் நிறுவுகிறேன்.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்த Worldometer (https://www.worldometers.info/coronavirus/country/india/) தகவலின்படி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,76,36,307 (மே 1 காலத்தில்) உயர்ந்துள்ளது. கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,97,894 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,45,56,209 ஆக உள்ளது. இந்த ஆண்டு ஏப்ரல் தேதிக் கணக்குப்படி இந்தியாவில் கொரோனா பாசிடிவ் கேஸ் கிட்ட த் தட்ட 1,79,97,297. மற்றும் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களின் எண்ணிக்கை 12 கோடியே 70 லட்சம் பேர்!

இது வேறெந்த நாட்டிலும் இல்லாத அளவு எண்ணிக்கை கொண்டது. இத்தனை பரப்பளவும் இந்த அளவு ஜனத்தொகையும் கொண்ட இந்தியாவின் நிலைமையை சிங்கப்பூருடனும் கென்யாவுடனும் ஒப்பிட்டு ‘அய்யோ! இந்தியாவின் நிலைமை எவ்வளவு மோசம்’ என்று ஒப்பாரி வைப்பது எதிர்க்கட்சிகளுக்கு வேண்டுமானால் பிடித்தமானதாக இருக்கட்டும். நம்மைப் பொருத்தவரை அது தப்பாட்டம் என்பதை உணர்ந்துகொள்ளவேண்டும்.

ஒவ்வொரு நாளும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் அரசு இயந்திரங்கள், மருத்துவத்துறை மற்றும் கொரோன தடுப்பில் ஈடுபட்டு வரும் அத்தனை துறைகள் மீதும் அழுத்தம் உயர்ந்துகொண்டுதான் இருக்கின்றது. அடுத்த சில மாதங்களுக்கு இந்தப் போரைத் தொடர்ந்து நடத்தி கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தித்தான் ஆகவேண்டும். பலதரப்பட்ட மக்களுக்குப் பொருளாதாரப் பாதிப்புகளும் ஏற்படத்தான் செய்யும். இது நிச்சயம் உலகளாவிய துன்பமாகப் பார்க்கப்பட வேண்டும். இதுபோன்ற நோய்த்தொற்று இதுவரை தோன்றியதில்லை. முன் அனுபவம் இல்லாமல் நிர்வகிக்க வேண்டிய சிக்கலாக உருவாகியுள்ள இந்த சர்வதேசத் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு எல்லா நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியிருக்கிறது என்பதை உணர வேண்டும்.

ஒரு தேசத்தின் வளர்ச்சியின் முக்கியக் குறியீடான உள்நாட்டு மொத்த உற்பத்தியின் மதிப்பு (GDP) போன வருடம் 15% சரிந்துவிட்டிருந்தது. எனவே இந்த வருடத்தின் GDP உயர்வைப் பார்க்கும்போது அது அதிகமாவது போல இருப்பதன் காரணம், வகுக்கும் எண் (denominator) குறைந்திருப்பதுதான். கிரிஸில் (CRISIL) ஆய்வுப்படி இந்தியாவின் உள்நாட்டு மொத்த உற்பத்தியின் சதவீதம் மார்ச் 2020 விட 2021-22இல் 2% தான் உயர்ந்திருக்கும். ஆனாலும் மொத்த மதிப்பு கொரோனாவுக்கு முந்தைய அளவிலிருந்து 10% குறைவாகவே இருக்கும்.

இன்னொரு விஷயம் என்னவென்றால் இந்தியாவின் ஜனத்தொகையும் வருவாய் மற்றும் செல்வம் பரவியிருக்கும் வழியும் மற்ற நாடுகளிலிருந்து மிகவும் வேறுபட்டிருக்கிறது. அதுவும் கொரோனாவினால் மொத்த உற்பத்தி குறைவது மட்டுமின்றி அதன் விநியோகமும் கவலை தரக்கூடியதாக அமைந்திருப்பதுதான். சென்ற வருடமே வருவாய் மற்றும் செல்வத்தின் விநியோகம் சீராகவே இல்லை. இந்த வருடம் இரண்டாம் கொரோனா தாக்குதலினால் இந்தச் சமனமின்மை இன்னும் அதிகரிக்கும் அபாயம் இருக்கிறது. ஒரு பக்கம் கோடிக்கணக்கானபேர் கொரோனாவினால் வறுமைக்கோட்டிற்கு கீழே தள்ளப்பட்டிருக்க, உலக செல்வந்தர்கள் பட்டியலில் இந்தியா மூன்றாவது உயர்ந்த இடத்திற்கு முன்னேறியிருக்கிறது. நம் முகேஷ் அம்பானி அலிபாபாவின் ஜாக் மாவைத்தாண்டி செல்வந்தர் பட்டியலில் முன்னேறியிருக்கிறார்.

கொரோனாவுக்காக அரசாங்கங்கள் ஒதுக்கிய/ஈடுபடுத்திய நிதி உதவி என்ன என்பதைக் கீழ்க்கண்ட படத்தில் காணலாம்.

பல முன்னேறிய நாடுகளில் அரசாங்கத்தின் செலவும் வரிச் சலுகைகளூம் மத்தியத் தர அடித்தட்டு மக்களுக்குப் போய்ச்சேர, செல்வந்தர்கள் அதிக வரி செலுத்தி இருக்கின்றனர். ஆனால் இந்தியாவில் மொத்த அளவு ஒதுக்கப்பட்ட நிதி, நாட்டுத் தேவையோடு ஒப்பிட்டால் குறைவாக இருந்திருக்கிறது. அதோடு மத்திய மற்றும் அடித்தட்டு மக்கள்தான் மிகக்கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

ஆனால் இங்கிலாந்து அமெரிக்காவோடு ஒப்பிடும்போது இந்தியா அரசு தனியார் முதலீட்டை அதிகரிக்கப் பல ஊக்கங்களைக் கொடுத்து, அதன் மூலம் வேலை வாய்ப்பு உற்பத்திப் பெருக்கம் என்னும் முறைகளைக் கையாண்டிருக்கிறது. இது பயன் தருமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

சரி, அடுத்த சில மாதங்களில் இந்தியப் பொருளாதாரத்துக்கும் சராசரி இந்தியனுக்கும் நிகழப்போவதுதான் என்ன?

நாம் வெகு சிக்கலான நிலவரத்தைத்தான் எதிர்நோக்கியிருக்கிறோம் என்பதில் சந்தேகமில்லை. கடந்த அக்டோபர் நவம்பரிலிருந்து சுமாராக மீண்டு கொண்டிருந்த பொருளாதாரம் மறுபடியும் ஒரு தடுமாற்றத்தைச் சந்திக்க வேண்டியிருக்கும். கடந்த வருட முயற்சிகளால் ஓரளவுக்கு நம் பொருளாதாராம் நெகிழ்ந்து நின்று உறுதியை மீட்டெடுத்து விடக்கூடிய சக்தி பெற்றிருக்கிறது என்றாலும், மத்திய மாநில அரசாங்கங்களும் பொருளாதாரக் கொள்கை நிர்வாகிகளும் மிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டியது மிக அவசியம்.

போன வருட அனுபவத்தின்படி முழு அடைப்புக்கு எநத மாநில அரசும் தயாராக இல்லாதால் பொருளாதாரத் தாக்கம் போன முறை அளவுக்கு இருக்காது என நம்பலாம். இந்த கொரோனாவின் இரண்டாம் அலை இன்னும் கடுமையாகிப் போனால் நிச்சயம் சங்கடம்தான். ஆனால் மிகத்தீவிர தடுப்பூசி திருவிழாவும் மக்கள் மேலும் மேலும் முன்வந்து ஊசி போட்டுக்கொள்ளுவதாலும் கொரோனா அலை ஓரளவுக்கு விரைவிலேயே கட்டுப்பட்டுவிடும் என்று நம்ப சாத்தியக்கூறுகள் தெரிகின்றன. அரசாங்கமே தெரிவித்தபடி போன வருடம் பொருளாதாரம் 15% அளவு சுருங்கியிருந்தாலும் இந்த வருடம் 10% – 12% வரை விரிவாகும் என்பது ஆறுதலாக இருக்கிறது. இண்டர்நேஷனல் மானிடரி ஃபண்ட் என்னும் சர்வதேச நாணய நிதியம் கணக்குப்படி இந்தியாவின் பொருளாதாரம் அடுத்த நிதியாண்டில் 12.5% வரை உயரும் என்கிறது. இது சீனாவைவிட சில புள்ளிகள் உயர்வு என்பதும் மகிழ்ச்சி அளிக்கிறது.

இந்த மார்ச் மாதம் வரையிலான தகவல்களைப் பார்த்தோமானால் எட்டு முக்கியத்தொழில் துறைகளுக்கு ஏற்பட்ட தாக்கத்தையும் மீறி இ வே பில் (E Way Bill) வசூலும், ஏற்றுமதியும் நிறைவாகவே இருந்தன. இதனால் வரும் மாதங்களிலும் தாக்கம் குறவாகவே இருக்கும் என்பது எதிர்பார்ப்பு. ஆனாலும் மகாராஷ்டிரா, கர்நாடகா, தமிழ்நாடு போன்ற தொழில்துறை முக்கியத்துவம் வாய்ந்த மாநிலங்களில் கொரோனா தொற்றின் பாதிப்பு அதிகம் என்பதால் அங்கே ஏற்படுத்தப்போகும் கட்டுப்பாடுகள் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடத்தான் செய்யும். இதனால் இந்தியாவின் தொழில் துறையில் சுணக்கங்கள் ஏற்படலாம். இதற்கு நடுவே சந்தோஷமான செய்தி என்னவென்றால், இந்த மாநிலங்களில் கூட உற்பத்தி நின்று போய்விடவில்லை என்பதே. மினாசரத்திற்கான தேவையும் இந்திய ரயில்வேயின் சரக்குப் பரிமாற்றமும் அளவு குறையாமல் இருப்பதும் மேலே சொன்னபடி ஈ வே பில் வசுலும் தொழில்கள் அதிகத் தடங்கலின்றி நடப்பதற்கான அறிகுறிகளே.

சோனால் வர்மா மற்றும் ராதிகா ராவ் என்னும் பொருளாதார வல்லுநர்களின் கணிப்புப்படி இந்தியப் பொருளாதாரத்தின் இந்த முதல் காலாண்டு (ஏப்ரல் – ஜூன்) தடுமாற்றத்தை மட்டும் கணக்கிட்டு, வருடம் முழுவதும் சரிவு ஏற்படும் என்று சொல்வது தவறு. இந்தக் காலாண்டு தாண்டிய மாதங்களில் பொருளாதரம் சற்று வேகமாகவே முன்னேறக்கூடும் என்று கருதுகின்றனர். அவர்கள் பார்வையில் கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டவுடன் அழுத்தத்திற்குள்ளான தேவைகளும் சேமிப்பும் பீறிட்டுக்கொண்டு எழ, தொழில் மற்றும் வர்த்தக நடவடிக்கைகள் வேகமெடுத்து. அதன் மூலம் பொருளாதார மலர்ச்சி அதிகரிக்கும்.

இரண்டாவது அலையாய் கொரோனா பரவினாலும், எங்கும் கொரோனா பாஸிடிவ் அதிகரித்தாலும், நமது உள்நாட்டு மொத்த உற்பத்தியின் மதிப்பு (GDP) அதிகரித்து வருகிறது. காலாண்டுக் கணக்கில் பார்த்தால் ஏப்ரல் – ஜூன் 2020ல் 23.9% சரிந்த ஜி டி பி, அடுத்த காலாண்டில் 7.5% மட்டுமே குறைந்தது. மூன்றாவது காலாண்டான அக்டோபர் – டிசம்பர் 2020ல் GDP 0.4% அதிகரித்தது. கடைசி காலாண்டில் 4% வரை உயரவே செய்திருக்கிறது. இந்த நம்பிக்கைக்கு முக்கியக் காரணம் பெரும் தொழில் நிறுவனங்கள் யாவுமே வரும் ஆண்டுக்கான வளர்ச்சி எதிர்பார்ப்பை மிக நல்லதாகவே கொடுத்திருக்கின்றன. மேலும் சர்வதேச நிறுவங்களான IMF, HSBC, மற்றும் நமது ரிசர்வ் வங்கியும்கூட நிதியாண்டு 2022க்கான வளர்ச்சியை 10.5% – 12.5% வரை இருக்கும் என்று கணித்திருப்பதையும் கவனிக்க வேண்டும்.

சமீபத்தில் எடுக்கப்பட்ட சர்வே ஒன்றில் (https://www.businesstoday.in/magazine/economy/dead-cat-bounce/story/436557.html) பொருளாதாரக் குறியீடுகளுக்கான விவரங்கள், போன வருடம் இதே சமய காலகட்டத்தைவிட அதிக நம்பிக்கையூட்டும் விதமாகவே இருப்பதையும் பார்க்கலாம்.

சர்வே விவரம் கொடுத்தவர்களில் 57% தங்களுடைய வியாபாரம் ஒரு காலாண்டு மட்டுமே கஷ்டப்படும் என்றும், இன்னொரு 22% மூன்று முதல் ஆறு மாதம் வரை சிரமப்படும் என்றும் எதிர்பார்ப்பதாகத் தெரிவித்திருந்தார்கள்.

பொருளாதார வல்லுநர்களின் கணிப்பு- கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் ஓரளவுக்கு இருந்தாலும் அது ஒவ்வொறு துறையிலும் ஒவ்வொரு விதமாக இருக்கும் என்கிறார்கள்.

சமீபத்திய இரண்டாம் கொரோனா அலையினால் மக்கள் நடமாட்டத்துக்கு கட்டுப்பாடு போன்ற முடிவால் சில பாதிப்புக்கள் வரக்கூடும். முக்கியமாக சுற்றுலா, போக்குவரத்து போன்ற துறைகளில் பாதிப்பு அதிகம் இருக்கும். ஆனாலும் போன வருடம் போல நீண்ட காலத்துக்கு முழு ஊரடங்கு இருக்காது என்பதால் பாதிப்பு சென்ற ஆண்டைவிடக் குறைவாகவே இருக்கும். தகவல் தொழில்துறை மற்றும் அவுட்சோர்ஸிங் என்னும் ஐடிஈஎஸ் துறைகளில் முதலீடு அதிகரித்து, வேலை வாய்ப்பும் பெருகி அவை வரும் ஆண்டில் நன்றாகச் செயல்படும். உற்பத்தித்துறை சில மாதங்களுக்கு முன்பு கொஞ்சம் சுணங்கினாலும் வருடம் முழுவதும் பார்த்தால் நன்றாகவே செயல்படும் என்றும் வல்லுநர்கள் கருதுகிறார்கள்.

சில தொழில்துறைத் தலைவர்கள், நகர மற்றும் கிராமத் தேவைகள் (Rural and Urban Demand) அதிகரித்திருப்பதாகக் கூறுகிறார்கள். போன வருடம் அரசாங்கம் மகாத்மா காந்தி கிராம வேலை வாய்ப்புத் திட்டத்தின் ஒதுக்கீட்டில் ரூபாய் 40,000 கோடி அதிகரித்தது மற்றும் நல்ல மழை, அதனால் ஏற்பட்ட அமோக விளைச்சல் ஆகியவையே கிராமத்தேவை அதிகரிப்பதற்கான முக்கியமான காரணங்கள். நகரங்களில் நுகர்வு அதிகரித்திருப்பதும் (ஜி எஸ் டி வருவாய் இது வரை கண்டிராத அளவுக்கு ரூ 1.24 லட்சம் கோடிகளைத் தொட்டிருப்பது) கண்கூடு. ஆனால் இனி வரும் மாதங்களில் இந்தத் தேவை (Demand )அதிக அளவில் இருக்க வேண்டும் என்பது அவசியம்.

இது மட்டுமில்லை, Retail inflation (CPI) என்னும் நுகர்வோர் விலைக்குறியீடு ஐந்து சதவீதத்துக்கும் (ரிசர்வ் வங்கி அது 6% வரை இருக்கலாம் என்று அளவு கோல் விதித்திருக்கிறது) குறைவாகவே இருக்கிறது. மொத்த ஏற்றுமதி 58% வரை உயர்ந்திருக்கிறது.

மொத்தத்தில் பார்த்தால் கடுமையான சோதனைகளுக்கு இடையிலும் பொருளாதாரம் என்னும் கடிகாரம் ஓடிக்கொண்டுதான் இருக்கிறது. அரசுகளின் முயற்சிகள் அந்த ஓட்டத்திற்கு ஊக்கம் கொடுக்கின்றன என்பதிலும் சந்தேகமில்லை.

இதில் நாம் பார்க்கவேண்டிய இன்னொரு அம்சம் மக்களும் வர்த்தகங்களும் இந்தப் புதிய ‘சாதரண’த்திற்கு தங்களை பழக்கிக் கொண்டு விட்டனர். தெருக்கோடி பெட்டிக்கடைக்கோ மளிகைக்கடைக்கோ சென்று வாங்கியவர்கள் இப்போது அமேசானில் ஆர்டர் செய்வது பெருகி வருகிறது. அமேசான், ஃப்ளிப்கார்ட் போன்ற நிறுவனங்களும் சிறுகுறு வர்த்தகர்களை ஒருங்கிணைத்து தங்களின் மாபெரும் இணைய வலை மூலம் விநியோகம் செய்யும் திட்டத்தைக் கொண்டு வந்திருப்பது எல்லாத் தரப்பினருக்கும் நன்மையைக் கொண்டு வந்ததோடு, பொருளாதாரத்திற்கு பலம் தரும் செயலாக மிளிர்ந்திருக்கிறது.

மத்திய அரசாங்கத்தின் கொள்கை முடிவுகளும் சரி, நிர்வாகச் செயல்பாடுகளும் சரி, நிறைவாகவே நடக்கின்றன. தேனும் பாலுமே ஓடுகிறது என்று யாரும் சொல்லவில்லை. ஆனால் ‘பாழாய்ப்போய்விட்டது, நாம் போன வருடத்திலிருந்து ஒன்றுமே கற்றுக்கொள்ளவில்லை’ என்றெல்லாம் ஓலக்கூக்குரல் எழுப்புவது நியாயமே இல்லை.

‘நங்கநல்லூரில் எட்டாவது தெருவில் மூன்று கடைகள் மூடப்பட்டு சொந்த ஊரைப் பார்க்கப் போய்விட்டார்களே, இதற்கு மோடி பதில் சொல்வாரா’ என்று கேட்பது சரி வராது. Macro Indicators என்னும் நாடு தழுவிய குறியீடுகளை வைத்துத்தான் நிதரிசனமான புரிதலுக்கு வர வேண்டும்.

இந்தியப்பொருளாதாரம் என்பது ஒரு விமானமாகக் கருதப்பட்டால் அது இப்போது கொரோனா கருமேகங்களின் கொந்தளிப்புச் சூழலுக்கு நடுவே ஆட்டம் கண்டிருக்கிறது. என்றாலும், உலகமெங்கும் ஏற்பட்டுள்ள பொருளாதார வளர்ச்சி, இந்தியாவின் சீரிய நிதிக்கொள்கைகள், முனைப்பான நிர்வாகச் செயல்பாடுகள், முக்கியமான தொழில் மற்றும் வர்த்தகத் துறையின் நெகிழ்வான உறுதி என்னும் ஆதரவுக் காற்று, விமானத்தின் வால் பக்கம் (Tailwind) அடிப்பதால், கொந்தளிப்பு அடங்கிவிடும் என்பதுதான் வல்லுநர்களின் எதிர்பார்ப்பு.

ஆதாரங்கள்:

  1. https://economictimes.indiatimes.com/news/india/next-few-months-to-be-critical-for-india-due-to-renewed-covid-19-surge-oxford-economics/articleshow/81987760.cms?from=mdr
  2. https://www.financialexpress.com/economy/how-can-the-indian-economy-recover-and-stabilise-from-the-challenges-of-the-second-wave-of-covid-19/2238728/
  3. https://www.cnbc.com/2021/04/27/indian-economy-may-shrink-this-quarter-as-covid-cases-soar-economists.html
  4. https://www.businesstoday.in/magazine/economy/dead-cat-bounce/story/436557.html
Leave a Reply