1944ம் ஆண்டு ஆகஸ்டு 7 மற்றும் 13 ஆகிய நாட்களில் ஜெர்மனியில் இருந்து விடுவிக்கப்பட்ட பெலோரஷ்யாவில், ஒரு ரேடியோ, ரகசியத் தகவல்களை ஒலிபரப்புகிறது. அதன் அடிப்படையில் எதிரிகளின் உளவுப்படை குறித்த விவரங்களை அறிந்து வர கேப்டன் அல்யோகின் தலைமையில் ஒரு குழு அனுப்பப்படுகிறது. இவர்கள் SMERSH எனப்படும் ரகசிய போலிஸ், உளவுத்துறை, காமிசார்கள் ஆகியோரைக் கண்காணிக்கும் பிரிவினர். ஏற்கெனவே போலந்து போராளிக் குழுக்கள், சோவியத்தை எதிர்க்கும் உள்ளூர் ஆயுதக் குழுக்கள் என்று அந்தப் பகுதி அபாயகரமானதாக உள்ளது. அவர்கள் பெலாரூஸ் நாட்டுக்குச் சுதந்திரம் தேவை, சோவியத் ஆட்சிக்கு உட்பட முடியாது என்ற கொள்கையோடு போராடுபவர்கள். போலந்துக்காரர்கள் அவர்களைப் பயிற்றுவித்து அப்படியே போலந்தை விட்டு கம்யூனிசத்தை விரட்ட முயல்பவர்கள்.
இவர்களைக் கண்டுபிடித்து ரேடியோ நிலையத்தை அழிக்கும் பொறுப்பில் வருகிறான் அல்யோகின். இவர்கள் அங்கே போய்ப் பேசிப் பார்ப்பதும் கடினமாகவே உள்ளது. யார் எதிரி யார் நண்பன் யார் துரோகி என்பது புரியாத நிலை. மக்களில் சிலர் உதவுகிறார்கள். சிலர் உதவுவது போல நடித்துப் போராளிகளுக்கு உளவு சொல்கிறார்கள். காடுகளில் அந்தக் குழுக்களைத் தேடுகிறார்கள் அல்யோகினின் ஆட்கள். இதனிடையே ஸ்டாலினிடமிருந்து உத்தரவு வருகிறது. ‘போராளிகளைக் கண்டு பிடித்து அழிப்பது உடனடி அவசியம். ஏனென்றால் அவர்கள் லிதுவேனிய லாத்வியா போன்ற பால்கன் நாடுகளில் சோவியத் ராணுவ நடவடிக்கை பற்றி ரேடியோவில் தகவல் சொல்கிறார்கள்.’ அல்யோகின் ராணுவ நடவடிக்கை பற்றிய தகவல் வெளியானதும் ராணுவம் உள்ளே இறங்கும், இறங்கினால் ரகசிய போலிசோ, காமிசாரோ, உளவாளியோ அவர்களைக் கண்காணிக்கும் எதிர் உளவுப் பிரிவோ யாரானாலும் சைபீரியச் சிறை அல்லது மரணம்தான் கதி என்று உணர்கிறான். தலைமை தப்பித்துவிடும் ஆனால் தங்களைப் போட்டுத் தள்ளிவிடுவார்கள் என்று அவனது உயரதிகாரியும் சொல்கிறார்.
எத்தனை காமிசார்களையும், போலிசையும், உளவாளிகளையும் பிடித்துக் கொடுத்திருப்போம், நமக்கு உபயோகமான தகவல் இருந்தால் கூட நாமெல்லாம் செத்த பிறகு வந்து கொடுப்பார்கள், சைபீரியச் சிறை என்றால் அதுவும் கிடையாது என்கிறார் அல்யோகினின் உயரதிகாரி. அதிலும் காம்ரேட் ஸ்டாலின் ஒரு நேரம் சரி போங்கள் என்பார், அவர் பார்த்த சினிமா பிடிக்கவில்லை என்று ஏதாவது காரணம் கிடைத்தாலும் மனசு சரியில்லை என்று நம்மை சுட்டுக் கொல்லச் சொல்வார் என்று சொல்லிவிட்டு உடனடியாக ஸ்டாலின் வாழ்க போடுகிறார் ஒரு அதிகாரி.
அன்றிரவு மாஸ்கோவில் இருந்து தகவல் வருகிறது. மீண்டும் அந்த KAO அலைவரிசயில் ரேடியோ தகவல் வெளியிடப்பட்டது. ஆனால் அது பயணிக்கும் காரில் இருந்து வந்தது போலத் தெரிகிறது என்று சொல்கிறார்கள். அல்யோகினின் குழு கிராமம் கிராமாகத் தேடுகிறது. ஆனாலும் தகவல் தெரியாது திணறுகிறார்கள். காம்ரேட் ஸ்டாலின் உளவு, காமிசார், ரகசிய போலிஸ் ஆகிய அமைப்புகளின் தலைவர்களை அழைத்து ஓரிரு நாட்களில் ஜெர்மானியர்கள், அவர்களுக்கு உதவுபவர்கள் என்று எல்லோரையும் பிடிக்க வேண்டும், இல்லாவிட்டால் அந்தப் பகுதி மக்களோடு உங்கள் ஆட்களும் தண்டனைக்கு ஆளாவீர்கள் என்று சொல்கிறார். உத்தரவு பறக்கிறது. எதிரிகளில் ஒருவனை அல்யோகினின் குழுவினர் கண்காணிக்கிறார்கள். உத்தரவு வந்த அவசரத்தில் அவனைப் பிடிக்க முயலும் போது அவன் தன்னைத்தானே சுட்டுக் கொண்டு சாகிறான்.
காமிசார் படைத் தலைவர் ரகசிய போலிஸ் உளவு ஆகிய தலைவர்களை அழைத்து ‘தேடிக் கொண்டே இருக்க இத்தனை படைகளா? உங்களுக்கெல்லாம் தண்டனை கிடைக்கும்’ என்று எச்சரிக்கிறார். ரகசிய எதிர் நுண்ணறிவு போலிசின் தலைவர் அல்யோகினின் ஆட்களிடம், வேலை முடிய வேண்டும் அல்லது சிறையோ மரணமோ கிட்டும் என்கிறார். காட்டுக்குள் தேடுதல் வேட்டையைத் தொடர்கிறார்கள். அங்கே சோவியத் படை போல சீருடை அணிந்து சிலர் நடமாடுகிறார்கள். சந்தேகத்தில் யார் நீங்கள் என்று விசாரிக்கிறார்கள் அல்யோகினின் ஆட்கள். அவர்களது தலைவர் பதிலுக்கு, நான் யார் தெரியுமா என்று மிரட்ட, அல்யோகின் உங்கள் தலைமை அலுவலகம் அருகேதான் உள்ளது, ஜெனரல் அங்கேதான் அலுவலகம் அமைத்துத் தங்கியிருக்கிறார், வாருங்கள் என்கிறான். அவர்கள் பணியில் இருப்பதால், ‘வரமுடியாது, சோதனைகளுக்கும் உட்பட முடியாது, ஆனதைப் பார்’ என்கிறார்கள். அருகே பதுங்கியிருக்கும் தன் குழுவினருக்குக் குறியீட்டு மொழியில் தயாராக இருக்க உத்தரவிட்டு அவர்களைச் சோதனை போட்டே ஆகவேண்டும் அல்லது அலுவலகம் வரவேண்டும் என்கிறான் அல்யோகின். அவர்கள் பைகளைக் கொடுத்துவிட்டு அவனைச் சுற்றி நிற்கிறார்கள். எதிரே வந்து நிற்கச் சொல்கிறான். அல்யோகினின் குழுவுடன் வந்த காமிசார் படை ஆள் ஒருவன் மறைந்திருக்கும் குழுவினருக்கு குறுக்கே வந்து நிற்கிறான். அவனைச் சந்தேகிக்கும் அல்யோகின் அவனையும் விலகி நிற்கச் சொல்கிறான்.
எதிரிக்குழு அல்யோகினைத் தாக்குகிறது. மறைந்திருந்த குழுவினர் சுடுகின்றனர். எதிரித் தலைவன் நெற்றியில் குண்டு பாய்ந்து இறக்கிறான். மற்ற நால்வரைச் சுட்டுக் கொல்கிறார்கள். காமிசார் படை ஆள் துப்பாக்கியை எடுத்து அல்யோகினைக் குறிபார்க்க அவனையும் சுட்டுவிட்டு எதிரிகளில் பிடிபட்ட ஒருவனை மிரட்டி கொலைக்குற்றத்தை ஒப்புக் கொள்ள வைக்கிறார்கள். அல்யோகினுக்கு முதலுதவி செய்துவிட்டு எதிரிகளின் பைகளைப் பிரித்தால் ரேடியோ இருக்கிறது. அலைவரிசையைப் பார்த்தால் KAO. குழுவினர் கொண்டாடுகிறார்கள். அல்யோகின் சொல்கிறான், ‘எதிரி காமிசார் என்று தெரிந்தும் ஏதும் செய்ய முடியாது. சொன்னால் நிரூபிக்க வேண்டும். நிரூபிக்க முடியாவிட்டால் நமக்குத்தான் தண்டனை. Counter intelligence என்று நாம் இருந்தாலும் கட்சி சார்ந்த காமிசார்கள் யோக்கியமாக இல்லாதவரை சிக்கல்தான்.’ தகவலை இவர்களது ஜெனரலுக்கு அனுப்புகிறார்கள். காமிசார் படைத் தலைவர் முகம் வெளிறி, ஜெனரலிடம் காட்டிக் கொடுக்காதீர்கள் என்று கெஞ்சுகிறார்.
சோவியத் ராணுவம் பால்டிக் நாடுகளை நோக்கிச் செல்கிறது. அவர்களது கட்டுப்பாட்டுக்கு அந்தப் பகுதிகள் வருகின்றன என்பதோடு படம் முடிகிறது.
பொது மக்கள் என்றில்லை, ராணுவம், ரகசிய போலிஸ், உளவுத்துறை என்று எல்லாவற்றையும் ஒன்றோடு ஒன்று எதிராக வைத்து தன்னை நிலை நிறுத்திக் கொள்வதில் முனைந்தவர் ஸ்டாலின் என்பதை உணர்த்துகிறது படம். யாருக்கும் பாதுகாப்பில்லை, யாருக்கும் யார் மீதும் நம்பிக்கையில்லை. ஒருவரை ஒருவர் போட்டுக் கொடுத்துக் கொண்டு ஒரு நிம்மதியற்ற வாழ்வில் மக்களை வைத்திருந்ததே சோவியத் பாணி கம்யூனிச அரசு முறை என்பதை மீண்டும் நிறுவியிருக்கிறது இந்தத் திரைப்படம்.
முதலில் லித்துவேனிய திரைப்பட இயக்குநர் வியாடுடாஸ் ஜலாகெவிசியஸ் என்பவரால் இயக்கப்பட்டு குப்பை என்று தூக்கியெறியப்பட்ட கதை இது. பிறகு 2000ல் மிகேல் பிடாசுக் என்ற சோவியத் பெலாரஷ்ய திரப்பட இயக்குநர் இந்தக் கதையைத் திரைப்படமாக எடுத்தார். எழுத்தாளர் விளாடிமிர் போகோமோலோவ் எழுதிய கதை இது. என் கதையைச் சிதைத்துவிட்டார்கள் என்று புகார் சொன்னதால் எழுத்தாளர் பெயர் போடாமல் படம் வெளிவந்தது. எழுத்தாளர் சொன்ன திருத்தங்களைச் செய்வதற்கு வேறு படம் எடுத்துவிடலாம் என்று எழுத்தாளரை வீட்டுக்கு அனுப்பிவிட்டது பெலோரஷ்ய கலாசார அமைச்சகம். 2001ல் பெலோரஷ்யாவிலும், 2002ல் ரஷ்யாவிலும் வெளியானது இந்தப் படம். சர்வதேச விருதுகளோ, ரஷ்ய பெலோரஷ்ய விருதுகளோ இதற்குக் கிடைக்கவில்லை.