Posted on Leave a comment

மகாபாரதம் கேள்வி பதில் – 14 | ஹரி கிருஷ்ணன்

கர்ணனை அணுகுதல்

பதினேழாம் நாள் போரில் தன்னுடைய தேர்ச்சக்கரம் நிலத்தில் அமிழத் தொடங்கியதும் கர்ணன், ‘நான் இந்தத் தேர்ச்சக்கரத்தைத் தூக்கி நிறுத்தும் வரையில் என்மீது அம்பெய்யாமல் இருக்கவேண்டும் அர்ஜுனா! உன்னை தர்மத்தின் பேரால் கேட்கிறேன்’ என்று சொன்னதையும், அதைக் கேட்டுப் பரிகாசமாகச் சிரித்த கண்ணன் ‘நல்லது. இப்போதாவது உனக்கு தர்மத்தின் நினைவு வந்ததே. ஆனால் இன்னின்ன செயல்கள் நடைபெற்றபோது உனக்கு தர்மத்தின் நினைவு ஏற்படவில்லையே! அப்போதெல்லாம் உன் தர்ம சிந்தனை எங்கே போனது’ என்று மொத்தம் பதினோரு குற்றச்சாட்டுகளை அடுக்குவதையும் கர்ணன் இதற்கு பதில் சொல்ல முடியாமல் தலைகுனிவதையும் பார்த்தோம்.

கர்ணன் சொல்லும் இந்தக் குற்றச்சாட்டுகனின் validity என்ன என்று பார்ப்பதற்காக, கண்ணன் சொல்லும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் கர்ணனின் பங்கு இருந்ததா என்று வியாச பாரதத்தில் அந்தந்த சந்தர்ப்பங்களில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதையும் அந்தக் குற்றச்சாட்டில் கர்ணனுடைய பங்கு இருந்ததா என்பதையும் பார்த்துக்கொண்டிருக்கிறோம். இதுவரையில் ஐந்து குற்றச்சாட்டுகளில் கர்ணனுடைய பங்கு இருந்தது என்பதை மூல பாரதத்தில் எந்தெந்த இடங்களில் சொல்லப்பட்டிருக்கிறது என்பதை எடுத்து வைத்துக்கொண்டிருக்கிறோம்.

கண்ணனுடைய குற்றச்சாட்டுகளில் ஆறாம், ஏழாம், எட்டாம் குற்றச்சாட்டுகள் மாதவிலக்காக இருந்த பாஞ்சாலியைச் சபைக்கு இழுத்து வந்ததைப் பற்றியவை. இவற்றை மொத்தமாக அடுத்து எடுத்துக்கொள்வோம். கண்ணனுடைய இந்த மூன்று குற்றச்சாட்டுகளை இங்கே மீண்டும் தருகிறேன்.

  1. மாதவிடாயின் காரணமாகக் குறைந்த உடையில் இருந்தவளும், துச்சாசனனின் விருப்பப்படிக் கீழ்ப்படிந்திருந்தவளுமான கிருஷ்ணை {திரௌபதி} சபைக்கு மத்தியில் நின்றிருந்தபோது அவளைக் கண்டு சிரித்தாயே, ஓ! கர்ணா, அப்போது இந்த உனது அறம் எங்கே சென்றது?
  2. பெண்களுக்காக ஒதுக்கப்பட்ட அறைக்குள் அத்துமீறி, அப்பாவியான கிருஷ்ணை {திரௌபதி} இழுக்கப்பட்டபோது, நீ தலையிடவில்லையே. ஓ! ராதையின் மகனே {கர்ணா}, அப்போது உனது அறம் எங்கே சென்றது?
  3. யானையின் நடை கொண்ட பெண்மணியாக மதிக்கப்பட்ட இளவரசி திரௌபதியிடம் நீ பேசியபோது, ‘ஓ! கிருஷ்ணையே, பாண்டவர்கள் தொலைந்தனர். அழிவில்லா நரகில் அவர்கள் மூழ்கிவிட்டனர். நீ வேறொரு கணவனைத் தேர்ந்தெடுப்பாயாக’ என்றாயே. ஓ! கர்ணா, அப்போது உனது அறம் எங்கே சென்றது?

முதல் (அல்லது ஆறாம்) குற்றச்சாட்டு, சபைக்கு இழுத்துவரப்பட்ட பாஞ்சாலியைப் பார்த்துக் கர்ணன் சிரித்ததைப் பற்றியது. வியாச பாரதத்தைப் பெரிதும் ஒட்டி நடக்கும்—ஏறத்தாழ அதன் மொழிபெயர்ப்பு என்றே சொல்லக்கூடிய பாஞ்சாலி சபதத்தில் பாரதி இதுபற்றி என்ன சொல்கிறான் என்பதைப் பார்ப்போம்:

என்செய்கேன்!’என்றே இரைந்தழுதாள். பாண்டவரை

மின்செய் கதிர்விழியால் வெந்நோக்கு நோக்கினாள். (148)

மற்றவர்தா முன்போல் வாயிழந்து சீர்குன்றிப்

பற்றைகள்போல் நிற்பதனைப் பார்த்து, வெறிகொண்டு, (149)

‘தாதியடி தாதி!’எனத் துச்சாதனன் அவளைத்

தீதுரைகள் கூறினான். கர்ணன் சிரித்திட்டான். (150)

சகுனி புகழ்ந்தான். சபையினோர்? … வீற்றிருந்தார்!

இது, பாஞ்சாலி சபதத்தில் பாரதி சொல்வது. இனி இதை வியாசர் எப்படிச் சொல்லியிருக்கிறார் என்று பார்ப்போம்:

‘துச்சாஸனன், அசக்தர்களான தன் கணவர்களை நோக்கும் திரெளபதியைக் கண்டு, வேகமாக அலைத்து, மூர்ச்சித்தவள் போன்ற அவளைப் பார்த்து, இரைந்து சிரித்துத் தாசி என்று அழைத்தான். கர்ணனும் மிக மகிழ்ந்து இரைந்து சிரித்து, துச்சாஸனன் சொன்னதைச் சிலாகித்தான். அவ்வாறே காந்தார தேசத்து அரசனாகிய சகுனியும் துச்சாஸனனைப் புகழ்ந்தான். அவ்விருவரையும் துரியோதனனையும் தவிர அந்தச் சபையிலிருந்த மற்றவர்களுக்கு, சபையில் திரெளபதி இழுக்கப்படுவதைக் காண்பது மிக்க துயரமாயிருந்தது.’ (மஹாபாரதம், கும்பகோணம் பதிப்பு, இரண்டாம் தொகுதி, ஸபா பர்வம், த்யூத பர்வம் தொடர்ச்சி, எண்பத்தொன்பதாவது அத்தியாயம் பக்கம் 286.)

இது Southern Recension எனப்படும் தென்னிந்தியப் பதிப்பின் தமிழ் மொழிபெயர்ப்பான கும்பகோணம் பதிப்பு சொல்வது. இதே பகுதியை பெங்காலி, நீலகண்டர், மும்பை பதிப்புகளைப் பின்பற்றிய கிஸாரி மோகன் கங்கூலி எப்படி மொழிபெயர்த்திருக்கிறார் என்று பார்க்கலாம்:

Vaisampayana continued, –’Thus did Krishna of slender waist cry in distress in that assembly. And casting a glance upon her enraged lords–the Pandavas–who were filled with terrible wrath, she inflamed them further with that glance of hers. And they were not so distressed at having been robbed of their kingdom, of their wealth, of their costliest gems, as with that glance of Krishna moved by modesty and anger. And Dussasana, beholding Krishna looking at her helpless lords, dragging her still more forcibly, and addressed her, ‘Slave, Slave’and laughed aloud. And at those words Karna became very glad and approved of them by laughing aloud. And Sakuni, the son of Subala, the Gandhara king, similarly applauded Dussasana. And amongst all those that were in the assembly except these three and Duryodhana, every one was filled with sorrow at beholding Krishna thus dragged in sight of that assembly. (Book 2, Section LXVI)

கும்பகோணம் பதிப்பும் கிஸாரி மோஹன் கங்கூலியின் மொழிபெயர்ப்பும் அப்படியே ஒத்துப் போகின்றன. கிஸாரி மோஹன் கங்கூலியின் மொழிபெயர்ப்பிலாவது மிகச்சில இடங்களில் மொழிபெயர்ப்புப் பிழைகள் இருப்பதாக ஒரு பேச்சுண்டு. அப்படியானால், Critical Edition அல்லது செம்பதிப்பான BORI பதிப்பில் சபைக்கு இழுத்துவரப்பட்ட திரெளபதியைப் பார்த்து கர்ணன் சிரித்தது இருக்கிறதா? இருக்கிறது. அதை இங்கே பார்ப்போம்:

On seeing Krishna look at her miserable husbands, Duhshasana dragged her with even greater force, so that she almost lost her senses. He repeatedly called her ‘slave’ and laughed uproariously. Karna was delighted at these words and approved of them by laughing out loudly. In similar fashion, Soubala, the king of Gandhara, applauded Duhshasana’s deed.

The Mahabharata (p. 232). Penguin Books Ltd. Kindle Edition.

துச்சாதனன் ‘தாதியடி தாதி’ என்று இழிவாகப் பேசியதைக் கேட்டு மகிழ்ந்த கர்ணன் பெருங்குரலில் சிரித்து, அவன் சொன்னைதை அங்கீகரித்தான் என்பது மூன்று மொழிபயர்ப்புகளாலும் ஒப்புக்கொள்ளபட்ட ஒன்று.

கண்ணனுடைய ஏழாவது குற்றச்சாட்டான

‘பெண்களுக்காக ஒதுக்கப்பட்ட அறைக்குள் அத்துமீறி, அப்பாவியான கிருஷ்ணை {திரௌபதி} இழுக்கப்பட்டபோது, நீ தலையிடவில்லையே. ஓ! ராதையின் மகனே {கர்ணா}, அப்போது உனது அறம் எங்கே சென்றது?’

என்பது, மாதவிலக்கான பெண்களுக்கான தனி அறைக்குள் துச்சாதனன் அத்து மீறிப் பிரவேசித்தபோது கர்ணன் தலையிடாததைப் பற்றிச் சொல்கிறது. ஆனால் கர்ணன் இருந்தது சூதாட்ட சபையில்; பாஞ்சாலி இருந்தது ஹஸ்தினாபுரத்து அரண்மனையின் தனி அறையில். எனவே இது ‘துச்சாதனன் இப்படிப்பட்ட நிலையிலிருக்கும் பாஞ்சாலியின் தனியறைக்குள் நுழைந்ததைப் பற்றி நீ கண்டிக்கவில்லையே, அப்போது நீ சொல்லும் அந்த தர்மம் எங்கே போயிருந்தது’ என்ற பொதுவான குற்றச்சாட்டாகத்தான் ஒலிக்கிறது.

இப்போது கண்ணனுடைய எட்டாவது குற்றச்சாட்டை எடுத்துக்கொள்வோம். அது,

‘யானையின் நடை கொண்ட பெண்மணியாக மதிக்கப்பட்ட இளவரசி திரௌபதியிடம் நீ பேசியபோது, ‘ஓ! கிருஷ்ணையே, பாண்டவர்கள் தொலைந்தனர். அழிவில்லா நரகில் அவர்கள் மூழ்கிவிட்டனர். நீ வேறொரு கணவனைத் தேர்ந்தெடுப்பாயாக’ என்றாயே. ஓ! கர்ணா, அப்போது உனது அறம் எங்கே சென்றது?’

என்கிறது. பாஞ்சாலி தன் மானத்துக்கு இழுக்கு ஏற்பட்டுத் தவித்துக்கொண்டிருந்த சமயத்தில், கர்ணன் அவளைப் பார்த்து ‘நீ எங்களில் யாரையாவது கணவனாகத் தேர்ந்தெடுத்துக்கொள்’ என்று சொன்னதைக் குறிக்கிறது. கர்ணன் இவ்வாறு சொன்னானா? மூல பாரதம் என்ன சொல்கிறது? இதைவிட மோசமாகவே சொல்லியிருக்கிறான். செம்பதிப்பான BORI இவ்வாறு சொல்கிறது:

‘Karna said, ‘There are three who can own no property—a slave, a student and a woman. O fortunate one! You are the wife of a slave and have nothing of your own. You have no lord and are like the property of slaves. Enter and serve us. That is the task for you in this household. O Princess! All the sons of Dhritarashtra are now your masters and not the sons of Pritha. O beautiful one! Choose another one for your husband, one who will not make you a slave through gambling. Remember the eternal rule among slaves. Sexual acts with one’s masters are never censured.

The Mahabharata (p. 241). Penguin Books Ltd. Kindle Edition.

பரிகாசத்தில் சொல்லும் வார்த்தைகள் உள்ளத்தின் அடியாழத்திலிருந்து பிறப்பவை. அவற்றில் சொல்லப்படும் பொருளை ஆழ்ந்து நோக்கினால், அவற்றிலுள்ள குற்றத்தை, பரிகசிப்பவனேகூட இழைத்திருக்கலாம். ‘சொத்துகளுக்கு உரிமையற்ற மூவர்’ என்று கர்ணன் சொல்பவர்கள் (1) அடிமைகள் (2) மாணவர்கள் (3) பெண்கள். சூதாட்டத்தில் தர்மபுத்திரன் தன்னைத்தானே வைத்து இழந்ததும் அவன் அடிமையாகிறான். அடிமைக்கு சொத்தில் உரிமை இல்லை என்றால், எந்த உரிமையின்படி பாஞ்சாலியைச் சூதில் வைக்கும்படியாக சகுனி கேட்டான்? இந்தக் குற்றம் சகுனியின் மீதே பாய்கிறதே! இதைத்தான் பாஞ்சாலி சபதத்தில் விகர்ணன் கேட்கிறான்:

தன்னையிவன் இழந்தடிமை ஆன பின்னர்த்

தாரமேது? வீடேது? தாதனான

பின்னையுமோர் உடைமை உண்டோ என்றே நும்மைப்

பெண்ணரசு கேட்கின்றார் பெண்மை வாயால்.

ஆனால், ‘புண்ணிடைக் கோல்கொண்டு குத்திய’ கர்ணனுக்கோ, தான் பேசுவது தங்களையே தாக்குகிறது என்பதைக்கூட உணரமுடியவில்லை என்பதுதான் உண்மை. இனி, கண்ணனுடைய மற்ற குற்றச்சாட்டுகளைப் பார்ப்போம்.

Leave a Reply