சமையல்கட்டில் ஆண்கள்
பல வருடங்களாகத் தொடர்ந்து அரசியல்களத்தில் செயல்பட்டு வந்த எனக்கு டாக்டருடைய அரசியல் நிலைப்பாடுகளைத் தெரிந்து கொள்வதில் ஆர்வம் இருந்தது. ஆனால் பலமுறை முயன்று பார்த்தும் என்னால் அவரை வகைப்படுத்த முடியவில்லை. ‘சிறுவயதில் தனக்கு ‘கம்யூனிஸ்ட் கட்சி மீது ஈடுபாடு இருந்ததாக’ அவர் ஒரு முறை குறிப்பிட்டார். அதற்காக அவர் சொல்லிய காரணம் சுவாரசியமாக இருந்தது. ‘கம்யூனிஸ்ட் கட்சியின் சின்னம் அரிவாளும் சுத்தியலும். விளைகின்ற பொருட்களை அறுவடை செய்து அனைவரும் சமமாகப் பங்கிட்டுக் கொள்ளவேண்டும். இதற்குத் தடையாக இருப்பவரை சுத்தியலால் அடிக்கவேண்டும் என்பதாகத் தன்னுடைய புரிதல் இருந்தது’ என்று அவர் சொன்னார். இதையே நான் டாக்டருடைய அரசியல் கொள்கை என்று பரப்புரை செய்தபோது, ‘அது சின்ன வயசில் இருந்த புரிதல்’ என்று சொல்லி ஒதுக்கிவிட்டார். அவருடைய சமகாலத்தில் வெகுவாகப் பேசப்பட்ட அதிமுக – திமுக., எம்ஜிஆர் – கருணாநிதி மோதல் பற்றி அவர் எதுவும் பேசியதில்லை.
உலக நடப்புகளை எல்லாம் ஏதோ உச்சியில் இருந்து பார்ப்பது போல்தான் அவருடைய அவதானிப்பு இருக்கும். தனிமனித வாழ்க்கையைக் கூட பல ஜென்மப் பயணத்தின் இடைப்பட்ட காட்சியாகப் பார்ப்பது அவருடைய அணுகுமுறை. வினைப்பயன், மறுபிறவி, சமயச்சடங்குகள், மந்திரங்கள், யாகங்கள் எல்லாவற்றையும் ஏற்றுக்கொண்டு அதேசமயத்தில் சித்தர்மரபையும் வலியுறுத்துபவராக அவர் இருந்தார். இந்து சமயம் மட்டுமல்ல, இஸ்லாம், கிறித்துவம் பற்றியும் அறிந்து கொள்ள அவருக்கு ஆர்வம் இருந்தது. கத்தோலிக்க மதத்தின் புனிதக் குறியீடான மேரி மாதாவுடைய வழிகாட்டுதல் தனக்கு இருப்பதாக அவர் குறிப்பிட்டதுண்டு. பொதுவாக சமய மரபுகளை அவர் கண்டித்ததில்லை என்றாலும் சில நடைமுறைகள் பற்றி அவருக்குக் கடுமையான விமர்சனம் இருந்தது. சபரிமலை விரதம் இருக்கும் நேரத்தில் பெண்கள் விலக்கப்படுவதை அவர் விரும்பவில்லை. இது விஷயமாகக் கடுமையாகப் பேசியதுண்டு.
நான், என்னுடைய நண்பர்கள், ரமணன், அவனுடைய வட்டம், ரவி ஷோபனா, ஷோபனா குடும்ப நண்பர் வட்டம் என்று தொடர்ந்து ஒரு வருட காலத்திற்குள் டாக்டரைச் சுற்றி நூறு குடும்பங்கள் இயங்க ஆரம்பித்து விட்டன. மைசூரில் சாமண்ணா, பாபு, வாசு சகோதரர்கள் பெங்களூரில் மாலா, ஆனந்த், அமெரிக்காவில் மகேஷ் கிருஷ்ணன் என்பதாக இயக்கம் வளர்ந்தது. ஒவ்வொரு உறுப்பினரைச் சேர்க்கும் போதும் அவரை சித்தவித்தை முறையில் பயிற்சி அளித்து சேர்த்துக் கொள்வோம். சொல்லி வைத்தாற்போல் ஒவ்வொருவருக்கும் ஏதாவது அதிசயம் நடக்கும், டாக்டரின் தயவில்தான். டாக்டர் பெயரைக் கேள்விப்பட்டவுடன் குடிப் பழக்கத்தை விட்டவர்களும் உண்டு.
டாக்டருடைய அன்பர்கள் அனைவரைப் பற்றியும் இங்கே எழுத இயலாது. ஒரு சிலரைப் பற்றி மட்டும் சொல்கிறேன். முதலில் அனந்து என்கிற அனந்தபத்மநாபன். சென்னை தூர்தர்ஷனில் வேலை – ஆரம்ப காலச் சீடர். ஒரு சோதனை முயற்சியாக நான் டாக்டரை சிங்கப் பெருமாள் கோயிலுக்கு அழைத்துப் போய் ராமு அய்யங்காரிடம் காண்பித்தேன். இப்படி எல்லாம் டாக்டரை பரிசோதித்துப் பார்த்ததில் அனந்துவிற்கு என்மேல் கோபம். அது நாளாவட்டத்தில் சரியாகி விட்டது.
ராயப்பேட்டை கம்பெனியில் என்னோடிருந்த எழிலரசன் துடிப்பான இளைஞன். தன்னுடைய காதல் கைகூட வேண்டுமென்ற கோரிக்கையோடு வந்தவன்.
இளங்கோ எனக்கு பத்தாண்டுப் பழக்கம். ராயபுரத்து மீனவர். வசதியான குடும்பம். ஆங்கிலம் படிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் என்னைத் தேடி வந்தான். நமக்கே அது தகராறு என்று சொல்லிவிட்டேன். ஒரு கட்டத்தில் வாரா வாரம் தவறாமல் காசினோ தியேட்டரில் ஆங்கிலப் படம் பார்ப்பதை பத்ததியாகப் பழகிக் கொண்டோம். ஆங்கிலப் படிப்பு ஆன்மீகப் படிப்பாக மாறியது. அவனையும் டாக்டரிடம் சேர்த்து விட்டேன்.
அரவிந்த் என்கிற மென்பொருள்காரன் கம்ப்யூட்டர் என்பதே கண்கட்டு வித்தையாக இருந்த அந்தக் காலத்தில் அரவிந்த் அதில் தேர்ச்சிப் பெற்றிருந்தான். இவனுக்கும் கோரிக்கை காதல்தான். இதுவும் திருமணத்தில் முடிந்தது – பெண் – இன்றைய சன் டிவி பிரபலம் ரத்னா.
நங்கநல்லூரைச் சேர்ந்த பிச்சை என்கிற ரங்கராஜன், அச்சுத் தொழிலாளி, முரட்டு ஆசாமி. ஊரே நடுங்கும் பிச்சையைப் பார்த்து டாக்டருடைய சபையில் ஆளாளுக்கு விரட்டிக் கொண்டிருப்பார்கள்.
விஷ்ணு, என்னுடைய கல்லூரித் தோழன் விஷ்ணு மனைவி கோதாவோடு பீகாரில் உள்ள பொக்காராவில் இருந்தான். விடுமுறையில் சென்னைக்கு வந்தவனை டாக்டரிடம் அழைத்துப் போனேன். ‘டாக்டர் எனக்கு ஒரு வரம் வேண்டும்’ என்று கேட்டான். டாக்டர் பேசாமலிருந்தார். ‘வாழ்க்கையில் ஒரு முறையாவது இவன் எனக்காக ஐந்து ரூபாயாவது செலவு செய்யவேண்டும்’ என்று சொல்லி என்னைச் சுட்டிக் காட்டினான். டாக்டர் அப்போதும் பேசவில்லை. இது நடந்தது திருவொற்றியூரில்.
ஆறு மாதங்களுக்குப் பிறகு அடுத்த முறை விஷ்ணு சென்னைக்கு வந்தபோது நானும் டாக்டரும் மந்தைவெளியில் இருந்தோம். வீட்டு வாசலில் ஆட்டோவிலிருந்து இறங்கினான். ஆட்டோவிற்குக் கொடுப்பதற்காக என்னிடம் ஐந்து ரூபாய் கேட்டான். நான் பக்கத்திலிருந்த இளங்கோவைக் கொடுக்கச் சொன்னேன். கொடுத்துவிட்டான். மூவரும் வீட்டிற்குள்ளே போய் டாக்டரைப் பார்த்தோம். டாக்டர் விஷ்ணுவைப் பார்த்து ‘என்னப்பா, இப்ப கணக்கு சரியாப் போச்சா’ என்று கேட்டார்.
விஷ்ணு சளைக்கவில்லை. ‘இல்லை டாக்டர். இப்பவும் இவன் கொடுக்கவில்லை, இன்னொருத்தர்தான் கொடுத்தார். உங்களுடைய பவர் இவங்கிட்ட வேலை செய்யவில்லை’ என்று சொல்லிவிட்டான்.
இப்படியாகப் பல அன்றாட அனுபவங்கள்.
ஒரு கட்டத்தில் அமைப்பை உருவாக்கலாம் என்ற எண்ணத்தில் ஆனந்தஜோதி என்ற பெயரில் ஒரு அறக்கட்டளையைப் பதிவு செய்தோம். டாக்டரின் சொந்த ஊர் கோலார். அதன் பக்கத்திலுள்ள கொரடுவலை என்ற கிராமத்தில் இதற்காக இடத்தையும் தேர்வு செய்தோம். ஏதோ சில காரணங்களால் என்னை இந்த அமைப்பின் முக்கிய பொறுப்பில் (செயலாளராக) டாக்டர் வைத்திருந்தார்.
டாக்டருடைய சீடர்களாகிய எங்களுக்குள் பொருளாதார வேறுபாடு உறைக்கவில்லை. சாதி உணர்வு இல்லை, சில கிருஸ்துவர்களும் இருந்தார்கள். கர்னாடக இசைக்கலைஞர் முதல் கம்யூனிஸ்ட் தோழர் வரை ஒரு வண்ணக் கலவையாக அது இருந்தது. நாங்கள் இணக்கமாக ஆன்மீக வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தோம். எந்த நேரத்திலும் மைலாப்பூரில் இருக்கும் ரமணன் வீட்டிலோ அல்லது மந்தைவெளியில் இருக்கும் ரவி வீட்டிலோ ஒரு கூட்டம் நிச்சயமாக இருக்கும் – டாக்டருடைய தலைமையில். ரமணனுடைய சிறிய வீடு, ரமணன், அனு, ஆனந்த், விக்ரம் என்கிற இரண்டு குழந்தைகள் அத்தனை பேருக்கும் இடம் கொடுத்தது அதிசயம்தான். இடமில்லாத காரணத்தால் நண்பர்கள் மாடிப்படியில் வரிசையாக உட்கார்ந்திருப்பார்கள். ஷோபனாவிற்கு யோகாசனப் பயிற்சி அளிக்கும் யோகா மாஸ்டர் ஒருவர் இடைஞ்சலாக வந்து போய்க் கொண்டிருப்பார். அவருக்கென்றே ஆடாதொடை அவியல், தூதுவளைத் துவையல் என்பதாக ஒரு தனிச் சமையலே நடக்கும். இந்தக் கூட்டத்திற்கு டீ போடும் பணியைச் செய்து வந்த அனுராதா ஒரு நாள் போர்க்கொடி உயர்த்தி விட்டாள். ‘எல்லா வேலையையும் பெண்கள்தான் செய்ய வேண்டுமா, ஆண்கள் டீ போட்டால் என்ன’ என்பது அவளுடைய கேள்வி.
அந்தக் கோரிக்கையை டாக்டர் ஆமோதித்தார். முதல் ஆண்மகனாக நான் தேர்வு செய்யப்பட்டு சமையற்கட்டிற்கு அனுப்பப்பட்டேன். டீ போடுவது போன்ற தொழில்நுட்பம் வாய்ந்த வேலை நமக்குச் சரிப்பட்டு வராது என்பதால் அடுப்பில் வாணலி, அதில் இருக்கும் வேர்க்கடலை என்பதைச் சுட்டிக்காட்டி, வேர்க்கடலையை வறுக்க வேண்டுமென்று எனக்கு அறிவுறுத்தப்பட்டது.
எல்லோரும் டாக்டரோடு ஆன்மீக அனுபவம் பெற்றுக் கொண்டிருக்க, நான் மட்டும் சமையற்கட்டில் கரண்டியும் கையுமாக இருப்பதில் எனக்குக் கடுப்பு. கடுப்பு வெறுப்பாகி, வறுபட்ட வேர்க்கடலை கறுப்பாகி கருகிப் புகைய ஆரம்பித்து விட்டது. இந்த வாசனை அடுத்த அறையை எட்டியவுடன் அவசரமாய் வந்த அனு முதலில் அடுப்பை அணைத்தாள், பிறகு என்னை முறைத்தாள்.
‘ஓரளவுக்கு மேல் வறுக்கக் கூடாது, நிறுத்த வேண்டும், அடுப்பை அணைக்க வேண்டும் என்பதெல்லாம் உனக்குத் தெரியாதா’ என்று டாக்டர் கேட்டார். ‘நிறுத்து என்று யாரும் சொல்லவில்லையே’ என்று பதில் சொன்னேன். டாக்டர் சிரித்து விட்டார். டாக்டரைப் பொருத்தவரை அவர் என்னிடம் கோபப் பட்டதை விட நான் அவரிடம் முறைத்துக் கொண்டதுதான் அதிகம். சில உற்சாகமான நேரங்களில் அவருடைய முதுகில் ஓங்கி அடித்திருக்கிறேன். நண்பர்கள் பதறிப் போனாலும் எனக்கு அது தவறாகப் படவில்லை. டாக்டருடைய தீர்ப்பு மறு சீராய்வுக்குட்படுத்தப் பட்டு சமையற்கட்டு வேலையில் இருந்து ஆண்கள் விதிவிலக்கு பெற்றார்கள்.
ஆன்ம விடுதலை, யோகப் பயிற்சி, யாத்திரை என்பது மட்டுமில்லாமல் தன்னைச் சுற்றி இருந்தவர்களின் வாழ்க்கையைச் செப்பனிட வேண்டுமென்ற முனைப்பு டாக்டரிடம் கூடுதலாக இருந்தது. நாள் தவறாமல் அவருடைய நடவடிக்கைகளில் இது வெளிப்பட்டது. சென்னை தூர்தஷனில் வேலை செய்து வந்த மோகன் எங்களில் ஒருவராக இருந்தார். கொஞ்சம் முன்கோபி என்பதைத் தவிர சுத்தமான ஆசாமி. காபி, டீ கூட அவர் கண்ணில் படக்கூடாது. மோகனுக்கு திருமணம் செய்ய வேண்டுமென்று டாக்டர் சொல்லிப் பெண் தேட ஆரம்பித்தோம். எங்களுடைய நட்பு வட்டாரத்தில் இருந்த மாலதி என்ற[ பெண்ணிடம் பேசி, பிறகு மோகனிடமும் பேசித் திருமணம் செய்யலாம் என்பது தீர்மானிக்கப்பட்டது. இது நிச்சயிக்கப்பட்டது என்றோ காதல் என்றோ கறாராகச் சொல்ல முடியாது. நிச்சயிக்கப்பட்ட காதல் என்று சொல்லலாம். இந்த நிச்சயிக்கப்பட்ட காதல் அடுத்தக் கட்டத்தை நோக்கி நகர்வதற்குமுன், ஒரு தடைக்கல்லைத் தாண்ட வேண்டிய சூழ்நிலை. மோகனுக்குச் சுற்றத்தார் என்று யாருமில்லை. ஆகவே பிரச்னை இல்லை. மாலதியின் குடும்பம் வண்ணாரப்பேட்டையில் இருந்தது. தந்தை கல்லூரிப் பேராசிரியர். அவரை எப்படி அணுகுவது என்பதுதான் யோசனையாக இருந்தது.
மாலதி மூலமாகத் தகவல் சொல்லிவிட்டு ஒரு முகூர்த்த நாளில் நாங்கள் அவர்கள் வீட்டிற்கு பெண் பார்க்கப் போனோம். எங்களை அரைமனதோடு வரவேற்ற அந்தப் பேராசிரியர் தொடர்ந்து சில கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருந்தார். இந்தச் சென்னை மாநகரத்தில் குறிப்பாகத் தன்னுடைய பெண்ணத் தேடி வந்தது எப்படி என்று அவருக்குப் புரியவில்லை. போண்டாவைச் சாப்பிட்டுக் கொண்டே நாங்கள் சமாளித்துக் கொண்டே இருந்தோம். பேச்சு வார்த்தையை மேலே கொண்டு போக முடியாத கட்டத்தில் அவரைப் பார்த்து நான் கேட்டேன், டாக்டர் கேட்கவைத்தார் என்று சொல்லலாம்.
‘காட்டாற்று வெள்ளத்திற் றிங்கென் வேலை
கழனியெலாம் பாழ்படுத்தும் செயல்தான் ஏனோ’
அப்படின்னு நீங்கதானே எழுதினீங்க என்று கேட்டேன்.
அவருக்கு அதிர்ச்சி, ஆனந்தம். ‘ஆமாம் நான்தான் எழுதினேன். அந்தக் கவிதையை எழுதி இருபத்தைந்து வருஷமாச்சே, உங்களுக்கு எப்படித் தெரியும்’ என்று கேட்டார். அறுபதுகளில் நான் அடையாறு காந்தி நகரில் இருந்த ராணி மெய்யம்மை பள்ளியில் படித்ததாகவும் அங்கே வெளியிடப்பட்ட ஆண்டுமலரில் வெளிவந்த கவிதை இது என்றும் அதை எழுதியது நீங்களாக இருக்கலாம் என்பதுதான் என்னுடைய சந்தேகம் என்றும் சொல்லி முடித்தேன்.
‘கவிதையை சொல்லிட்டீங்க, ஜாதகம் எல்லாம் பார்க்க வேண்டாம்’ என்று சொல்லி பேராசிரியர், மாலதி – மோகன் திருமணத்திற்கு சம்மதித்து விட்டார்.
தன்னுடைய அன்பர்கள் மீது டாக்டர் வைத்திருந்த அக்கறைக்கு இன்னொரு உதாரணம் மாலினி – பாத்ருடு தம்பதிகள். இந்த இளவயதுக்காரர்கள் இருவரும் தி.நகரைச் சேர்ந்தவர்கள், மாலினி அய்யங்கார். பாத்ருடுவின் முழுப் பெயர் நரசிம்ம பாத்ருடு ஆந்திராவைச் சேர்ந்தவர். முற்படுத்தப்பட்ட வகுப்பு. இந்தக் காதல், திருமணத்தில் முடிந்தவுடன் இரண்டு பக்கமும் எதிர்ப்பு. சிரம ஜீவனம். மாலினி கர்ப்பம். பாத்ருடு நண்பர்களோடு விளையாடும்போது தவறிக் கீழே விழுந்து கையில் எலும்பு முறிவு. இந்த நிலையில் இவர்கள் டாக்டரிடம் வந்து சேர்ந்தனர். சபைக்கு வந்தவுடன் சங்கடங்கள் அகற்றப்பட்டன . ‘மாலினிக்கு வளைகாப்பு செய்ய வேண்டும்’ என்பது டாக்டருடைய உடனடி உத்தரவு. செலவு ஒரு பிரச்னையே இல்லை. ஆளாளுக்கு என்று பிரித்துக் கொண்டார்கள். ஒருத்தர் வளையல், ஒருத்தர் பட்சணம், ஒருத்தர் சாப்பாடு, ஒருத்தர் சீர்வரிசை என்று நண்பர்கள் சொல்லிக் கொண்டே போகும்போது இறுதியில் நான்தான் மீதி. எனக்கென்று எதுவும் பாக்கியில்லை. அதற்காக நான் சளைக்கவில்லை. மைலாப்பூர் மாடவீதிக்குப் போய் இரண்டு வாழை மரங்களை வாங்கிவந்து வீட்டு வாசலில் கட்டிவைத்தேன் என் பங்காக.
பொருள்மயமான போட்டி, வெறுப்பு, கவலை என்று முனகிக் கொண்டிருக்கும் சமூகத்தில் நாங்கள் தனி உலகமாக விசேஷச் சலுகைகளோடு இயங்கிக் கொண்டிருந்தோம். டாக்டர் அவ்வப்போது சிறு குறிப்புகளைக் கொடுப்பார். ‘தலை சீவும்போது மரசீப்பைத் தான் பயன்படுத்த வேண்டும். தியானம் செய்யும்போது பலகை மீதுதான் உட்கார வேண்டும். தையலில்லாத வெள்ளை ஆடை அணிய வேண்டும்’ என்பது போல அந்தக் குறிப்புகள் இருக்கும். யோக நித்திரை, நாடி சுத்தி, தொலைவில் உணர்தல், அடுத்தவர் எண்ணங்களை அறிதல் என்பது போன்ற வகுப்புகளும் உண்டு. அதில் சிறு பிள்ளைகளுக்கே உரிய உற்சாகத்தோடு நாங்கள் ஈடுபட்டிருந்தோம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான தேவை. படி நிலைக்கேற்றவாறு பரிசு.
ரவியைப் பொறுத்தவரை கவிதை, அதன் மீறலில் கண்ணீர் என்பது அவனுக்குப் போதும். ரமணனுக்கு ஒழுக்கம் முக்கியம். அதிசயங்கள் குறித்து அசூயை. இடைவிடாத பயிற்சியில் அவன் தன்னை ஈடுபடுத்திக் கொண்டான். ஷோபனாவுக்கு டாக்டருடைய மறு வடிவமாக வேண்டும் என்பதுதான் திட்டம். என்னைப் பொருத்தவரை இந்த சங்கம் அன்பு மயமாகவும், அதிசயச் செயல்கள் அனுகூலமாகவும் இருந்தன.குறைவான உழைப்பில் நிறைவான பலன்கள் எனக்கு.
ஒரு நாள் மாலையில், ரவி வீட்டின் மாடிப் படிகளிலேறி உள்ளே போனேன். டாக்டர் மட்டும் சோபாவில். மற்றபடி நான்கு பேர் நான்கு மூலைகளில் தரையில் ஆளுக்கொரு பலகையை வைத்து அதைக் குனிந்து பார்த்துக் கொண்டிருந்தார்கள். மரப்பலகையின் நடுவில் ஒரு சொட்டு நல்லெண்ணை. ‘நல்லெண்ணையை உற்றுப் பார்க்க வேண்டும். உற்றுப் பார்த்துக் கொண்டே இருந்தால் ஒரு நாள் தேவி தரிசனம் கிடைக்கும்’ என்று டாக்டர் சொல்லி இருக்கிறார்.
‘பரந்த உலகத்தில் பராசக்திக்கு இடமா இல்லை. இந்த எண்ணையில் போய் அவளை ஏன் தேட வேண்டும்’ என்று சத்தமாகக் கேட்டுவிட்டேன். கழுத்துவலியோடிருந்த நண்பர்கள் நிமிர்ந்து உட்கார்ந்தார்கள். சிரித்து விட்டார்கள். டாக்டரின் முகம் சிவந்து விட்டது. ‘இவன் இருக்குற இடத்தில எதுவும் உருப்படியா செய்ய முடியாது’ என்று கோபித்துக் கொண்டார்.
அது, ஒருநாள் கோபம்தான்.
தொடரும்..
(இனி வலம் ஆன்லைனில் அனைத்துத் தொடர்கள் வெளிவரும்.)