தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்காளம் மற்றும் அஸ்ஸாம் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கான சட்டசபைத் தேர்தல் கடந்த மாதம் ஏப்ரல் 6, 2021 முதல் பல்வேறு கட்டங்களாக நடைபெற்றன. இக்கட்டுரையில் தமிழகத்தில் வெற்றி பெற்ற கட்சிகள்/கூட்டணிகள் குறித்தும் அவ்வெற்றிக்கான காரணிகள், மற்ற கட்சிகளின் நிலை குறித்தும் பார்க்கலாம்.
தமிழ்நாடு:
தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு ஏப்ரல் 6, 2021 அன்று நடந்தது. தேர்தல் முடிவுகள் மே 2ல் வெளிவந்தன. தமிழகத்தில் திமுக அணி அறுதிப் பெரும்பான்மையான இடங்களைப் பெற்றது. திமுக அணியில் திமுக, காங்கிரஸ், மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யுனிஸ்ட், இந்திய கம்யுனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சி, இந்திய தேசிய முஸ்லிம் லீக், மனித நேய மக்கள் கட்சி, அனைத்திந்திய பார்வர்ட் பிளாக், தமிழக வாழ்வுரிமைக் கட்சி, மக்கள் விடுதலைக் கட்சி, ஆதித் தமிழர் பேரவை ஆகிய கட்சிகள் இடம் பெற்று இருந்தன. இதில் காங்கிரஸ், விசிக, இரு கம்யுனிஸ்ட் கட்சிகள் மற்றும் இந்திய தேசிய முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் தவிர்த்து இதர சிறிய கட்சிகள் அனைத்தும் உதய சூரியன் சின்னத்திலேயே போட்டியிட்டன.
அதிமுக அணியில் அதிமுக, பாமக, பாஜக, தமாக, பெருந்தலைவர் மக்கள் கட்சி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், மூவேந்தர் முன்னேற்றக் கழகம், மூவேந்தர் முன்னணி கழகம், புரட்சி பாரதம், பசும்பொன் தேசிய கழகம் ஆகிய கட்சிகள் போட்டியிட்டன. இதில் பாஜக, பாமக தவிர்த்து இதர கட்சிகள் இரட்டை இலை சின்னத்திலேயே போட்டியிட்டன.
திமுக அணியில் கட்சிகள் பெற்ற இடங்கள்:
மதச்சார்பற்ற முற்போக்கு ஜனநாயக கூட்டணி பெற்ற இடங்கள்
திமுக 126
காங்கிரஸ் 18
மதிமுக 4
மார்க்சிஸ்ட் கம்யுனிஸ்ட் 2
இந்திய கம்யுனிஸ்ட் 2
விசிக 4
மமக 1
கொமதேக 1
தவாக 1
மொத்தம் 159
அதிமுக அணியில் கட்சிகள் பெற்ற இடங்கள்:
தேசிய ஜனநாயக கூட்டணி பெற்ற இடங்கள்
அதிமுக 65
பாமக 5
பாஜக 4
புரட்சி பாரதம் 1
மொத்தம் 75
மேற்கூறிய கட்சிகள் தவிர்த்து இரு கூட்டணியிலும் வேறெந்த கட்சிகளும் வெல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
திமுகவின் வெற்றிக்கு முக்கியக் காரணங்கள் என்ன?
- அதிமுக கடந்த பத்தாண்டுகளாக தமிழகத்தை ஆண்டு வந்தது. ஆளும் அரசின் மீது மக்களுக்கு ஒருவிதமான சலிப்புத்தன்மையும் / எதிர்ப்புணர்வும் ஏற்பட்டுள்ளன. எடப்பாடி தலைமையிலான அரசின் மீது வெறுப்போ கோபமோ இல்லையென்றாலும் ஒரு விதமான சலிப்பு திமுகவின் வெற்றியை எளிதாக்கியது என்று சொன்னால் மிகையாகாது.
- 2019 லோக்சபா தேர்தலில் திமுக எந்தக் கட்சிகளுடன் எல்லாம் கூட்டணி வைத்திருந்ததோ அக்கட்சிகளுடன் எந்தப் பிணக்கமும் ஏற்படாத வகையில் கூட்டணி அமைத்தது மற்றும் கூடுதலாக சில சிறிய கட்சிகளையும் இணைத்துக் கொண்டு போட்டியிட்டதால் மக்களிடையே இக்கூட்டணி ஒரு மாபெரும் கூட்டணி என்ற தோற்றத்தை ஏற்படுத்தியது. இது வெற்றிக்கான அடித்தளமாக அமைந்தது.
- தற்போதைய அரசியல் சூழலில் ஊடகங்கள் மூலமாக ஏற்படுத்தப்படும் ஆளும் அரசுக்கு எதிராக செய்யப்படும் கருத்துருவாக்கமும், கூட்டணிகள் பற்றிய பார்வையும் (Perception) மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. அவ்வகையில் திமுகவிற்கு பெரும்பாலான தமிழக ஊடகங்கள், நெறியாளர்கள், பெரும்பான்மையான பத்திரிகையாளர்கள் என பலரும் வெளிப்படையாக கருத்துருவாக்கம் செய்தனர். அதன் பலனைத் திமுக அறுவடையும் செய்துள்ளது.
- பிரசாந்த் கிஷோரின் ஐ பேக் நிறுவனத்தின் பங்களிப்பும் முக்கியமானதே. திமுகவின் தொடர் விளம்பரங்கள், தொகுதி வாரியாக மிகச் சரியான / தேவையான உத்திகளைத் திமுகவுக்கு வழங்கியது.
- எதிரணியில் பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்திருந்ததைக் காரணமாகக் காட்டி சிறுபான்மையினரின் வாக்குகளைப் பெருமளவுக்கு திமுக அணி வாங்கியது.
- 10.5% வன்னியர் உள் இட ஒதுக்கீடு விஷயம் முழுமையாக திமுக அணிக்கு பலன் அளிக்காவிட்டாலும் சில மாவட்டங்களில் குறிப்பிடத்தக்க பலனைத் தந்துள்ளது.
- அமமுக பெரும்பாலும் அதிமுகவின் வாக்குகளைப் பிரித்ததும் திமுக தனி மெஜாரிட்டி பெற உதவி செய்தது.
அதிமுக தோற்றதற்கான காரணங்கள் என்ன?
- அதிமுகவைப் பொருத்தவரையில் பத்தாண்டுகளுக்குப் பிறகே ஆட்சியை இழந்துள்ளது. மக்களிடம் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் என்ற எண்ணமே மிக முக்கியக் காரணம். அதன் பொருள் அதிமுக மிக மோசமான ஆட்சியைத் தந்தது என்பதல்ல.
- 2019 தேர்தலில் அதிமுக கூடுதலாக சில கட்சிகளுடன் கூட்டணி வைத்திருந்தது. ஆனால் அதில் மிக முக்கியக் கட்சிகளான தேமுதிக மற்றும் புதிய தமிழகம் ஆகிய கட்சிகள் இம்முறை கூட்டணியில் இடம்பெறவில்லை. தேர்தலுக்கு முன்பாகவே கூட்டணி பலம் + வாக்கு பலம் என்கிற தோற்றத்தில் இந்த அணி திமுக அணியுடன் ஒப்பிடுகையில் பலமற்ற அணியாகவே காணப்பட்டது. தோற்றத்திலும் எண்ண உருவாக்கத்திலும் பின் தங்கிப் போயிருந்தது.
- அதிமுகவிலிருந்து அமமுகவின் பிளவு இத்தேர்தலில் சில தொகுதிகளில் வெற்றி வாய்ப்பைப் பாதித்து இருந்தாலும் அதிமுக பிளவுபட்ட கட்சி என்ற எண்ணம் வாக்களர்களின் மனதில் உறுத்திக் கொண்டே இருந்ததும் ஒருவகையில் தோல்விக்குக் காரணமாக அமைந்தது.
- 10.5% வன்னியர் உள் ஒதுக்கீடு சில மாவட்டங்களில் பலன் அளித்தாலும் சில மாவட்டங்களில் அது மிகப்பெரிய பாதிப்பை அதிமுகவிற்கு உருவாக்கியது. எனக்கென்னவோ அதிமுக மிக மோசமான தோல்வியைத் தவிர்க்கவே துணிந்து சில அரசியல் நடவடிக்கைகளை எடுத்துள்ளது. ஆகையால் தான் அது மிக மோசமான தோல்வி என்பதிலிருந்து தப்ப உதவியுள்ளது.
அதிமுகவின் தோல்வி மிக மோசமான ஒன்றா?
- அதிமுகவின் இத்தோல்வி மிக மோசமான தோல்வியல்ல. அதிமுக பாஜகவோடு கூட்டணி வைத்ததால் இத்தோல்வி என்பதும் சரியான பார்வையல்ல. ஜெயலலிதா தலைமையிலான அதிமுக பாஜகவுடன் கூட்டணி சேர்ந்து 2004 தேர்தலை சந்தித்த போது ஒரு இடத்தில் கூட வெல்லவில்லை. ஆகையால் 2006 சட்டசபை தேர்தலில் சிறுபான்மை வாக்குகள் தங்களுக்குக் கிடைக்காது என்று சொல்லி மதிமுக + விசிகவுடன் கூட்டணி அமைத்து அதிமுக அணி 69 இடங்களைப் பிடித்தது.
எடப்பாடி-ஓபிஎஸ் தலைமையிலான அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைத்து 2019 லோக்சபா தேர்தலில் ஒரேயொரு இடத்தை மட்டுமே பிடித்தது. இதில் குறிப்பாக அதிமுகவிலிருந்து அமமுக பிரிந்து சென்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில்தான் பாஜகவுடன் கூட்டணி அமைத்தால் நெகட்டிவ் என்று சொல்லிக் கொண்டிருந்தவர்களின் மத்தியில் எடப்பாடி-ஓபிஎஸ் பாஜகவையும் பாமகவையும் விட்டால் அதிமுகவிற்கு நிலைமை இன்னும் மோசமாகும் என்பதை உணர்ந்தே இரு விதமான அரசியலை நேரடியாகக் கையில் எடுத்தனர். அதன் விளைவாக ஜெயலலிதா பயந்து போன விஷயத்தைக் கையில் எடுத்த எடப்பாடி + ஓபிஎஸ் தலைமை ஜெயலலிதாவைக் காட்டிலும் பாஜகவை வைத்து அதிக இடங்களைப் பிடித்துக் காட்டியுள்ளனர். இதற்கு அவர்கள் முன் எடுத்த அரசியல் இதுதான்.
- பாஜகவை கழற்றி விட்டுவிட்டு தனித்து நின்றால் ஜெயலலிதாவை நம்பியது போல தங்கள் தலைமையிலான அதிமுகவை சிறுபான்மையினர் இந்தத் தேர்தலில் நம்பி வாக்களிக்கப் போவதில்லை என்கிற தெளிவு இவர்களிடம் இருந்தது. ஆகையால்தான் பாஜகவுடன் கூட்டணி அமைத்தனர். மேலும் பாஜகவிற்கு என இந்து வாக்கு வங்கி உருவாகி உள்ளதையும் உணர்ந்தே பாஜகவுடன் கூட்டணி வைப்பது என்ற முடிவை அதிமுக தைரியமாக எடுத்தது. முக்குலத்தோருக்கு எதிராக தேவேந்திர குல வேளாளர்கள் வாக்கினைப் பெற, பெயர் மாற்றம் என்ற அரசியலை முன்னெடுத்தது இந்த அணி.
- தமிழக வருகையின் போது நரேந்திர மோடியின் தேவேந்திரர் குலத்திற்கு தங்கள் ஆட்சி செய்ததைக் குறிப்பிட்டுப் பேசியது இத்தேர்தலில் அவர்களுக்கு பல தொகுதிகளில் கை கொடுத்துள்ளது அல்லது மிக மோசமான தோல்வி என்பதைத் தவிர்க்கச் செய்துள்ளது. குறிப்பாக திருநெல்வேலி, ஆலங்குளம், அம்பாசமுத்திரம் போன்ற தொகுதிகளில் வெற்றி வாகை சூட உதவியது. வாசுதேவ நல்லூர், சங்கரன் கோவில் போன்ற தொகுதிகளில் தோல்வியுற்றதற்கு அமமுக பிரித்த வாக்குகள்தான் என்பதும் அத்தொகுதிகளில் பள்ளர்கள் வாக்குகள் அதிமுகவிற்கு விழுந்துள்ளதை வாக்கு வித்தியாசத்தைக் கொண்டு பார்க்கையில் தெளிவாக உணர முடிகிறது. தென் மாவட்டங்களில் அமமுகவின்/நாம் தமிழரின் வாக்குப் பிளவே சில தொகுதிகளில் அதிமுக அணியின் வெற்றி வாய்ப்பைப் பாதித்தது என்பதே உண்மை.
- வன்னியர்களுக்கான 10.5% உள்இடஒதுக்கீட்டைக் கொடுத்து வெற்றியோ தோல்வியோ இது மட்டுமே மோசமான தோல்வியிலிருந்து தப்பிக்க உதவும் என்கிற தெளிவு எடப்பாடியிடம் இருந்தது. ஆகையால்தான் பாமகவுடன் கூட்டணி அமைத்தனர். இதற்கு முழு பலன் கிடைக்காவிட்டாலும் கவுண்டர்கள் + வன்னியர்கள் அதிகம் வாழும் மாவட்டங்களில் பெருமளவு பலன் கிடைத்துள்ளது. குறிப்பாக சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி சிதம்பரம் போன்ற மாவட்டங்களில் பலன் கிடைத்துள்ளது.
திமுக ஐந்து வருடங்கள் ஆண்ட பிறகு இதுவரை 35 இடங்களைக் கூட பிடிக்காத ஒரு எதிர்க்கட்சியாக இருந்தது . ஆனால் அதிமுக 10 வருட ஆட்சியைக் கொடுத்துவிட்டுத் தான் 75 இடங்களைப் பிடித்துள்ளது என்பது கவனிக்கப்பட வேண்டியது.
அதிமுக அணிக்கும் திமுக அணிக்கும் வாக்கு வித்தியாசக் கணக்கு:
2021 தமிழகத் தேர்தலில் மொத்தம் பதிவான ஓட்டு = 4,62,18,698
# தி.மு.க கூட்டணி = 2,09,81,786 = 45.4%
தி.மு.க+ = 1,74,29,877 = 37.7%
காங்கிரஸ் = 19,76,527 = 4.29%
கம்யூனிஸ்ட் = 5,04,537 = 1.09%
மார்க்கிஸ்ட் = 3,90,819 = 0.85%
வி.சி.க = 4,57,763 = 0.99%
ஐ.யூ.எம்.எல் = 2,22,263 = 0.48%
# அ.தி.மு.க கூட்டணி = 1,83,63,148 = 39.71%
அ.தி.மு.க+ = 1,53,90,864 = 33.29%
பா.ஜ.க = 12,13,510 = 2.62%
பா.ம.க = 17,58,774 = 3.80%
இதர கூட்டணிக் கட்சிகளின் வாக்கு சதவீதம்:
# அ.ம.மு.க கூட்டணி = 13,08,376 = 2.83%
அ.ம.மு.க+ = 11,05,086 = 2.39%
தே.மு.தி.க = 2,00,156 = 0.43%
அசதுத்தீன் ஒவைசி = 3,134 = 0.006%
# ம.நீ.ம கூட்டணி = 12,66,280 = 2.73%
# நா.த.க = 30,41,945 = 6.5%
# பகுஜன் சமாஜ் = 1,01,660 = 0.22%
# நோட்டா = 3,45,538 = 0.75%
# பிறர் = 8,09,965 = 1.75%
திமுக அணிக்கும் அதிமுக அணிக்குமான வாக்கு வித்தியாசம் 5.69% . கடந்த லோக்சபா தேர்தலில் இரு அணிகளுக்குமான வாக்கு வித்தியாசம் 22% என்பது குறிப்பிடத்தக்கது. தேமுதிக, புதிய தமிழகம் இல்லாமலேயே அதிமுக தங்களது வாக்கு சதவீதத்தை இத்தேர்தலில் பெருமளவு குறைத்துள்ளது.
சட்டசபை தேர்தல் முடிவுகள் யாருக்கு அதிக லாபம்?
- இத்தேர்தலில் சந்தேகத்திற்கு இடமின்றி நாம் தமிழர் கட்சிக்கே அதிக லாபம் கிட்டியுள்ளது. 2016 தேர்தலில் 1.03% வாக்கு சதவீதம் என்றிருந்த கட்சி ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் அதிமுகவின் வாக்கு வங்கியில் ஒரு ஓட்டையை ஏற்படுத்தியுள்ளது. 2019 தேர்தலில் 3.8% ஆக உயர்ந்தது. 2021 சட்டசபைத் தேர்தலில் 6.85% ஆக உயர்ந்துள்ளது.
- சீமானின் பேச்சைத் தொடர்ந்து பின்பற்றுபவர்களுக்கு அவர் முன்வைக்கிற ஆட்சி வரைவு செயல்முறைகள் மற்றும் இந்திய அரசின் மீதான பார்வைகள் நடைமுறைக்கு உதவாதவை என்று தெரியும். அவ்வாறானால் எதன் அடிப்படையில் புதிய வாக்காளர்களில் பெரும்பான்மை இளைஞர்களும், படித்தவர்களில் சிறு பகுதியினரும், கிராமப் புற பகுதி மக்களில் சிறு பகுதியினரும் நாம் தமிழர் கட்சிக்கு ஏன் ஆதரவு அளித்துள்ளனர் என்ற கேள்விக்கு நாம் விடை காண வேண்டும்.
- நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் எழுப்பிய சில கேள்விகள் பெரிய/பெரும் கட்சிகளால் பதில் அளிக்க முடியாதவை. நான், பெண்களுக்கு சரி பாதி இடங்களை ஒதுக்கியுள்ளேன். 33% இட ஒதுக்கீட்டை ஆதரிக்கிறோம் என்று சொல்லும் அனைத்துக் கட்சிகளும் ஏன் சரி பாதி இடங்களையோ, 1/3 இடங்களையோ ஒதுக்கவில்லை என்ற கேள்விக்கு எந்த அரசியல் கட்சியிடமும் பதில் இல்லை. சிறுபான்மைக் காவலர்கள் என்று சொல்லிய கட்சிகள் ஏன் அவர்களின் மக்கள் தொகைக்கு ஏற்றாற்போல இடங்களை அவர்களுக்கு ஒதுக்கவில்லை, பெரிய கட்சிகள் என்று சொல்லிக் கொள்ளும் கட்சிகளால் தன்னைப் போல துணிந்து ஏன் தனித்து தேர்தலைச் சந்திக்க முடியவில்லை போன்ற கேள்விகளுக்கு தற்போதைய திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ் என எந்தக் கட்சிகளாலும் பதில் அளிக்க இயலவில்லை. இது போன்ற கேள்விகள் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்கின்றன. சீமானின் நாம் தமிழர் கட்சி தனித்து தேர்தலைச் சந்திப்பதால் அவரை மட்டுமே மாற்று என நம்பி விழுந்த வாக்குகள் அவை.
இந்த விஷயத்தில் தான் கமலின் மக்கள் நீதி மய்யமும், தினகரனின் அமமுகவும் கோட்டை விட்டுள்ளன. கமல் ஆரம்பத்திலிருந்தே காங்கிரசிற்கும் திமுகவிற்கும் ஏதேனும் பிணக்கு ஏற்பட்டு தன்னுடன் காங்கிரஸ் வராதா என காத்துக் கிடந்தார். மேலும் வேட்பாளர்களைத் தேட வேண்டிய நிலையில் உள்ள சரத்குமாரின் சமகவிற்கும், பாரிவேந்தரின் இஜகவிற்கும் இடங்களை வாரி வழங்கினார். கமல் இத்தேர்தலில் தான்தான் மாற்றம் என்ற எண்ணத்தை முறையாக ஏற்படுத்தவில்லை. தேர்தலின் இறுதிக் கட்டத்தில் தனது தொகுதியிலாவது கட்சி வெல்ல வேண்டும் என்ற அளவிற்கு சுருங்கிப் போனார். இதனால் பிரதம வேட்பாளர் யார் என சொல்லாத 2019 தேர்தலில் 3.7% வாங்கியவர், தானே முதல்வர் வேட்பாளர் என்று சொல்லியும் சட்டசபைத் தேர்தலில் 2.45% என்ற வாக்கு சதவீதமே பெற்றார்.
தினகரனுக்கும் கமலின் நிலைதான். கடந்த லோக்சபா தேர்தலில் தினகரனின் அமமுக 5.5% வாக்குகளைப் பெற்று இருந்தது. தேமுதிக, எஸ்டிபிஐ, ஓவைசி ஆகியோருடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டாரே ஒழிய எந்தக் கட்சியின் வாக்கும் கூட்டணியில் உள்ள இன்னொரு கட்சிக்கு செல்லாமல் இருந்ததைப் பார்க்க முடிகிறது. இத்தேர்தலின் முடிவில் தன்னை முதல்வர் வேட்பாளர் என்று அறிவித்தும் அமமுக 2.47% என சுருங்கி விட்டது.
(Photo thanks: The Federal News)
பாஜகவைப் பொருத்தவரையில் 2016ல் எடுத்த வாக்கு வங்கியைப் பெறாவிட்டாலும் 4 இடங்களில் வென்று சட்டசபைக்குள் 20 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் காலடி எடுத்து வைக்கிறது. நாகர்கோவில், திருநெல்வேலி, கோவை தெற்கு மற்றும் மொடக்குறிச்சி ஆகிய தொகுதிகளில் பாஜக வென்றுள்ளது. தமிழகத்தில் தாமரை மலர முடியாது என்றவர்களின் மத்தியில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து அதைத் தனதாக்கிக் கொண்டுள்ளது பாஜக. தனிப்பட்ட முறையில் பாஜக கட்சியை வளர்க்க அருமையான வாய்ப்பு கிடைத்தும் அதை நாம் தமிழர் கட்சி போல பயன்படுத்தவில்லை என்ற எண்ணமுள்ளது. அரசியல் இயக்கத்தில் நெடுங்காலமாக களத்தில் நின்று பணியாற்றும் நிர்வாகிகள் சட்டசபை உறுப்பினர்கள் ஆவதே அவர்களின் கனவாக இருக்க முடியும் அதன் மூலம் மக்கள் சேவை செய்தால் மட்டுமே தங்களால் நிலைக்கு முடியும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் அதிமுக கூட்டணிக்குள் வர பெருமளவு முயற்சி எடுத்தனர் என்பதையும் பார்த்தோம்.
இந்தியாவை ஆளும் அரசாக பாஜக கட்சி இருப்பதால் முறையாக முயற்சி செய்தால் அவர்கள் எதிர்காலத்தில் வளர்வதற்கு வாய்ப்பு இருக்கிறது. கடந்த கால வரலாறு அப்படி அமையாமல் போனதற்கு மிக முக்கியக் காரணம் ஒன்றுண்டு. ஜெயலலிதா இருந்த வரையிலும் பாஜக அபிமானிகளின் வாக்குகளை ஜெயலலிதா அறுவடை செய்தார். இனி அதை ஓபிஎஸ் – ஈபிஎஸ் தலைமையிலான அதிமுக கரம் பிடிக்குமா என்பது எதிர்காலத்தில் தெரியவரும். அவை அதிமுகவிடம் குவிந்ததற்கு மிக முக்கியக் காரணம் திமுக ஆட்சிக்கு வரக்கூடாது என்ற அடிப்படையில் அதிமுக பக்கமாக சென்ற வாக்குகள்.
என்னைப் பொருத்தவரையில் கமல், மக்களிடம் நேரடியாகவே ஓர் அறிக்கையை விடுத்து வாக்கு அரசியலிலிருந்து ஒதுங்கிக் கொள்ளலாம். மாற்று அரசியலை முன்னெடுத்து வந்த தம்மை மக்கள் ஏற்கவில்லை என்பதையும், பணம் இருந்தால் மட்டுமே இங்கு அரசியல் கட்சியாக தேர்தல் அரசியலில் வெல்ல முடியும் என்ற நேர்மையான காரணத்தைச் சொல்லி விட்டு கட்சியைக் கலைத்துவிட்டு, ஏற்கெனவே தான் செய்து வந்த நற்பணிகளை நற்பணி மன்றத்தின் மூலமாக ஓர் இயக்கமாகவே செய்து விடுகிறேன் என அறிவித்துவிட்டு ஒதுங்கி விடலாம்.
நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் அதிமுக அணி 6% வாக்குகள் வித்தியாசத்தில்தான் தோற்றுள்ளது. இது 2006 தேர்தலில் ஏற்பட்ட வாக்கு வித்தியாசத்திற்கு ஒப்பான ஒன்றே. திமுக, வரும் ஐந்து வருட ஆட்சியைத் திறம்பட நகர்த்திச் செல்லவில்லை என்றால் காலச் சக்கரத்தில் மீண்டும் அதிமுகவே ஆட்சிக்கு வந்துவிடும். ஜெயலலிதா, கருணாநிதி என்ற இரு ஆளுமைகளுக்குப் பின்னரும் தமிழகம் அதிமுக, திமுக என்ற இரு திராவிட கட்சிகளை மையமாக வைத்தே இன்னும் குறைந்தது பத்து ஆண்டுகளுக்காகவாவது இருக்கும் என்பதே எனது கணிப்பு. பார்க்கலாம்.