‘அனாயாசேன மரணம்
வினாதைன்யேன ஜீவனம்
தேஹிமே க்ருபயா சம்போ
த்வயி பக்திம் அசஞ்சலாம்’
என்று எழுதப்பட்டிருந்த தாளை எதிர் வீட்டு மாமா விபூதி வாசனையுடன் மாதங்கியிடம் கொடுத்தார். ‘இது காஞ்சி மஹா பெரியவா அருளின ஸ்லோகம்.. நரசிம்மய்யங்கார்க்கு ரொம்ப முடியலேன்னு கேள்விப்பட்டேன்.. இந்த மந்திரத்தை சொல்லி ஈஸ்வரனை வேண்டின்டா, வயசானவா கஷ்டப்படாம சீக்கிரமே ஸத்கதி அடைஞ்சுடுவாளாம்..’ என்று அவர் சொன்னது அவளுக்குப் பிடிக்கவில்லை. எலும்பு முறிவுக்கான அறுவை சிகிச்சையைத் தொடர்ந்து இரண்டு மாதங்களாக படுத்த படுக்கையாய் நரக வேதனை அனுபவிக்கும் மாதங்கியின் மாமனாரைப் பார்க்க வந்திருந்தார் அவர்.
‘பெட் ஸோர் வந்ததுலேருந்துதான் அப்பா ரொம்ப சிரமப்படறா..’ என்றாள். ‘எல்லா வைத்தியமும் பண்ணியாச்சு.. நாளுக்கு நாள் அதிகமாயிண்டே போறது.. நாத்தம் வேற..’
‘இந்த புண்ணுக்கு ஆவாரம் இலையை அரைச்சு ‘பத்து’ போட்டா குணமாயிடும்..’
‘அப்படியா.. வாட்டர் பெட் வாங்கி படுக்க வெச்சோம்.. பிரயோஜனமில்ல.. ஒடம்பு முழுக்க பரவறது..’
‘துர்நாத்தம் போறதுக்கு மரக்கரியை பையில கட்டி தொங்கவிடலாம்..’
மாதங்கி நரசிம்மனை எழுப்ப முயன்றாள் ‘அப்பா.. யார் வந்திருக்கா பாருங்கோ..’
‘தொந்தரவு பண்ணாதம்மா.. துாங்கட்டும்.. சாப்பாடு எல்லாம் வழக்கம்போலதானே..’
‘இல்ல மாமா.. மூக்குல ட்யூப் வழியா நீராகாரம்தான்…’
‘அடப்பாவமே.. கடைசியா பார்த்தப்ப உக்கார்ந்து சாப்பிட்டிண்டிருந்தாரே..’
‘கட்டு பிரிக்கற வரைக்கும் நார்மலா இருந்தது.. வலியை மறக்கடிக்க துாக்க மாத்திரை நிறைய குடுத்ததுனால மயக்கத்துலயே இருக்கார்..’
‘டாக்டர் என்னமோ ஒரு மாசத்துலயே எழுந்து நடப்பார்னாரே..’
‘ஆமா.. பிஸியோதெரபி குடுத்தா சீக்கிரமே நடமாடுவார்னு சொன்னதை நம்பிதான் ஆபரேஷனுக்கே ஒத்துண்டோம்..’ என்று நொந்து கொண்டாள் மாதங்கி
‘பார்க்கவே வேதனையா இருக்கு..’
‘டயப்பர் ஒரு பக்கம்.. கையில ‘வென்ஃப்ளான்’ வேற.. அப்பாக்கு ரொம்ப அவஸ்தை..’
‘கொடுமைதான்.. அவருக்கு சுகர் பிபி எல்லாம் இருந்துதா..’
‘இல்ல மாமா.. நான் கல்யாணமாயி வந்ததுலருந்து வியாதின்னு படுத்துண்டதில்ல.. சமீபத்துல முட்டி வலிக்கு ஆயுர்வேதம் பண்ணிக்க ஆரம்பிச்சா.. கொஞ்ச நாளா காது சரியா கேக்கலைன்னார்..’
‘ஆனா இத்தனை வயசுலயும் சுறுசுறுப்பா இருந்தாரே.. ஜாலியா ‘விட்’ அடிச்சு பேசிண்டிருப்பார்.. தீபாவளிக்கி அபூர்வமா எங்காத்துக்கு வந்திருந்தார்.. ‘உருப்பட்டூர் நல்லான் சக்ரவர்த்தி நரசிம்மன் ஐயங்கார் வாரும்..’னு கலாட்டா பண்ணேன். ‘எதுக்குய்யா நீட்டி முழக்கறே.. ‘நச்சு’னு ஒரே வார்த்தையில கூப்பிட வேண்டியதானே’ன்னு சிலேடையா சொன்னார்..’
‘அப்பாவோட விசேஷமே அதுதான்..’
‘எங்களை கங்கா ஸ்நானம் ஆச்சா..ன்னு விசாரிச்சுட்டு பட்சணம் வாங்கிண்டார்.. ‘என்ன ஓய்.. வீர வைஷ்ணவரா இருந்துண்டு ஐயர் ஆத்துல சாப்பிடலாமோ’ன்னு வம்புக்கு இழுத்தேன்.. அவரும் சிரிச்சுண்டே ‘நான் வழிபாட்டுலதான் வைணவம்.. சாப்பாட்டுல சைவம்தானே’ அப்படின்னார்..’
‘ஆஸ்பிடல்ல நர்ஸ் ஊசி போடறதுக்கு கையில ‘வெய்ன்’ கிடைக்காம போராடிண்டிருந்தா.. அதுக்கு, ‘ஏண்டிம்மா.. ஊசி மொண்ணையா இருக்கோ என்னமோ.. சாணை பிடிச்சுண்டு வந்துடேன்’னார். சிஸ்டர் அப்படி சிரிக்கறா..’
‘உப்பிலி ஜெர்மனியிலேருந்து எப்போ வரானாம்.. அப்பாவை பார்க்க..’
‘எங்க ஆத்துக்கார்தானே.. அங்க துடிச்சிண்டிருக்கார்.. ஆபீஸ்ல ஏதோ ப்ராஜக்ட்டுன்னு அவரை பெர்லினுக்கு போக சொன்னா.. ஒரு வருஷம் அஸைன்மென்ட் முடியற வரைக்கும் லீவு கிடையாதுன்னு சொல்லிதான் அனுப்பிச்சா.. அவர் கிளம்பின ரெண்டாவது வாரமே அப்பாக்கு ஃப்ராக்சர் ஆயிடுத்து.. பக்கத்துல இருந்து கவனிக்க முடியலையேன்னு புலம்பறார்..’
‘மாமனாருக்கு எண்பது வயசு ஆயிடுத்தில்லயோ.. ஏதோ ஃபங்ஷன்னு சொல்லிண்டிருந்தானே..’
‘ஆமாம் மாமா.. மாமியார் இல்லாததுனால சதாபிஷேகம் பண்ணலை.. அடுத்த வருஷம் சொந்தக்காராளை அழைச்சு ‘கெட்டுகெதர்’ நடத்தணும்னு ஆசைப்பட்டார்.. அதுக்குள்ள அப்பாவுக்கு இப்பிடி..’ என்ற மாதங்கி கண்கலங்கினாள். ‘சித்திரை வருஷப்பிறப்பு அன்னக்கி விழுந்தவர்தான்.. எழுந்திருக்கவேயில்லை.. ரெண்டு மாசத்துக்கு மேல ஆயிடுத்து.. பாவம்..’
*
விளம்பி ஆண்டின் முதல் நாள் மாலை நரசிம்மன் வாசித்து முடித்த ‘ரங்கநாத பாதுகா’ பத்திரிகையை அலமாரியில் வைப்பதற்காக, இரும்புக் கட்டிலிலிருந்து இறங்குகிறார். தரையில் சிந்தியிருந்த பிண்ட தைலத்தின் மீது கால் பதித்த போது வழுக்கி விடுகிறது. சிறிய இடைவெளியில் ஏடாகூடமாக சரிந்து விழுகிறார். பஞ்சகச்ச வேட்டி கட்டில் முனையில் மாட்டி கிழிந்து போகிறது.
‘அய்யோ.. நாராயணா..’ என்ற அலறலைக் கேட்டு சமையலறையில் மாமனாருக்குப் பிடித்த சீயாளம் செய்து கொண்டிருந்த மாதங்கி கரண்டியைத் தவற விடுகிறாள். ‘என்னப்பா ஆச்சு..’ என்று பதறியபடி ஓடி வருகிறாள். மொஸைக் தரையில் அவர் மல்லாக்காக கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து துாக்கி விட முயற்சிக்கிறாள்.
‘எழுந்துக்க முடியலம்மா.. வலி பிராணன் போறது..’ என்று திணறுகிறார்.
மாதங்கி செய்வதறியாது பக்கத்து வீட்டில் உதவி கோருகிறாள். அப்பொழுது அவர்களது துாரத்து உறவினன் கையில் புத்தகத்தோடு உள்ளே நுழைகிறான்.
‘வெங்கிட்டு.. வாடா.. நல்ல சமயத்துல வந்தே.. அப்பா கீழே விழுந்துட்டார்..’ என்கிறாள்.
‘அத்திம்பேருக்கு என்னாச்சு..’ என்று பதறியபடி வந்து பார்க்கிறான். அண்டை வீட்டாரும் இணைந்து கொள்ள, அனைவரும் நரசிம்மனை எழுப்ப முயல்கின்றனர். கதவிடுக்கில் அவரால் நகர முடியவில்லை. வெங்கட்டும் இதர ஆடவர்களும் அவர் காலை மென்மையாக இழுத்து அறையின் மையப்பகுதிக்கு கொண்டு வருகின்றனர். இடுப்பு வலியினால் துடிக்கிறார். வலது தொடையின் மேல்பக்கம் வீங்கியிருக்கிறது.
‘டாக்டருக்கு ஃபோன் பண்ணி உடனே வரச் சொல்லுங்கோ..’
‘இருடா.. முதல்ல அவருக்கு தகவல் தெரிவிச்சுடறேன்..’ என்ற மாதங்கி கைபேசியில் உப்பிலியை அழைக்க முயன்று தோற்கிறாள்.
‘உங்காத்துக்காருக்கு அப்பறம் சொல்லிக்கலாம்.. இப்ப டாக்டர்தான் முக்கியம்.. அவரை முதல்ல கூப்பிடும்மா..’ என்கிறாள் எதிரகத்துப் பெண்மணி.
‘இதோ பண்றேன் மாமி.. எங்களுக்கு தெரிஞ்ச ‘ஆர்த்தோபிடிக் ஸர்ஜன்’ மிதுன் இருக்கார்..’ என்று அவரிடம் நடந்ததை விவரித்து உடனே வரச்சொல்கிறாள். எல்லோருமாக சேர்ந்து நரசிம்மனை கைத்தாங்கலாக உயர்த்தி கட்டிலில் படுக்க வைக்கின்றனர். வீக்கம் அதிகரித்திருப்பது தெரிகிறது.
‘வெங்கிட்டு.. கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி உன்னை பத்திதான்டா பேசிண்டிருந்தா அப்பா..’
‘ஒவ்வொரு வருஷப்பிறப்புக்கும் பஞ்சாங்கம் குடுத்துட்டு அத்திம்பேரை சேவிச்சுட்டு போவேனே..’
‘அதைத்தான் சொல்லிண்டேயிருந்தார்..’
‘கார்த்தாலையே வரமுடியலை..’ என்றான் ‘போன வாட்டி ‘பஞ்சாங்கத்துக்கு அட்டை போட்டு லேபிள் ஒட்டி பேர் எழுதி குடுடா’ன்னு தமாஷா சொன்னார்.. பாவம்.. இப்போ இப்படி ஆயிடுத்தே..’
நரசிம்மன் ‘வலி உயிர் போறதே’ என்று புலம்பிக் கொண்டேயிருக்க, போக்குவரத்து நெரிசலால் டாக்டர் வருவதற்கு ஏழு மணியாகி விடுகிறது.
‘ஃப்ராக்சர் ஆகியிருக்கும்னு தோணுது.. எக்ஸ்ரே எடுக்கணும்..’ என்ற மிதுன் பக்கத்து ஆஸ்பத்திரியை தொடர்பு கொள்கிறார். சற்று நேரத்தில் ஆம்புலன்ஸ் வந்து உதவியாளர்கள் ஸ்ட்ரெச்சரில் நரசிம்மனை துாக்கிச் சென்று வாகனத்தினுள் செலுத்துகின்றனர்.
மாதங்கி கணவனுக்கு ‘ஸ்கைப்’ கால் செய்ய, அழைப்பு ஏற்கப்படாமலிருக்கிறது. பூஜையறையில் வெங்கடாஜலபதி படத்தின் முன்பாக ஒரு ரூபாய் நாணயத்தை மஞ்சள் துணியில் சுத்தி வைத்து மாமனாருக்காக வேண்டிக் கொள்கிறாள். பணம், கடனட்டை, இத்யாதிகளை எடுத்துக்கொண்டு வெங்கிட்டுடன் புறப்படுகிறாள்.
மருத்துவமனை எக்ஸ்ரேயில் நரசிம்மனுக்கு இடுப்பெலும்பு முறிவு ஊர்ஜிதமாகிறது. டாக்டர் அறுவை சிகிச்சை அல்லது ‘ட்ராக்ஷன்’ தீர்வுகளை விளக்குகிறார்.
‘இத்தனை வயசுக்கப்பறம் ஆபரேஷன் பண்ணலாமா..’ என்று சந்தேகப்படுகிறாள் மாதங்கி
‘போன மாசம் தொண்ணுாறு வயசு பாட்டிக்கு சர்ஜரி பண்ணினோம்.. இப்ப வாக்கரோட நடக்கறாங்க..’
‘இன்னொரு வழி சொன்னீங்களே..’
‘அதுல கடைசி வரைக்கும் படுத்த படுக்கையாதான் இருக்கணும்.. ஆபரேட் பண்ணா, பிஸியோ குடுத்து நடமாட வாய்ப்பு இருக்கு.. எதுன்னு சீக்கிரமா முடிவெடுங்க.. ‘
அப்போது உப்பிலியிடமிருந்து கைபேசியில் அழைப்பு வருகிறது. மாதங்கி நடந்ததை சொல்லச் சொல்ல அவன் துடித்துப் போகிறான். உடனே கிளம்பி வரமுடியாததற்காக வருந்துகிறான். ரிஸ்க் எடுத்தாவது அறுவை சிகிச்சை செய்யச் சொல்கிறான். அப்பா எழுந்து நடக்க வேண்டியது முக்கியமெனப் படுகிறது இருவருக்கும். ‘பெருமாள் மேல பாரத்தை போட்டு’ ஸர்ஜரிக்கு சம்மதிக்கின்றனர்.
அடுத்த நாள் ஆபரேஷனுக்கு நேரம் குறிக்கப்படுகிறது. வலி மரத்துப் போக ஊசி மருந்து செலுத்தப்பட்டு, அடிபட்ட கால் அசைவற்றிருக்க துாக்கி நிறுத்தப்படுகிறது.
வெங்கட், ‘ஃபாரின்லேருந்து அவராலே வர முடியாதுங்கறேள்.. நீங்க தனியா ஆஸ்பத்திரிக்கும் ஆத்துக்கும் அலைய முடியுமா..’ என்று ஆலோசனை கூறுகிறான் ‘அவரோட தம்பிக்கு போன் பண்ணி தஞ்சாவூர்லேருந்து அவாளை வரச்சொல்லுங்களேன்.. கூடமாட ஒத்தாசைக்கு..’
‘ஓர்ப்படிகிட்ட பேசிட்டேன்டா.. ரெட்டை பசங்களை வெச்சுண்டு அவஸ்தைபட்டுண்டிருக்கா… அதுங்களுக்கு பரிட்சை நடக்கறதாம்.. மச்சினர் பேங்க் மேனேஜரா இருக்காரோன்னோ.. அவருக்கும் லீவு கிடைக்காதாம்.. ஞாயித்துகிழமை வந்து அப்பாவை பார்க்கறேன்னு சொல்லியிருக்கா..’
மருத்துவமனை சிப்பந்திகள் ஸர்ஜரிக்கு சம்மதிக்கும் படிவத்திலும், இன்ஷுரன்ஸ் தாள்களிலும் மாதங்கியின் கையொப்பம் வாங்கிச் செல்கின்றனர். நரசிம்மனுக்கு பச்சை அங்கி அணிவிக்கப்படுகிறது. செவிலியர் அவர் காதிலிருந்து வைரக் கடுக்கன்களை கழற்றி ஒப்படைக்கிறாள். பூணுால் கயிற்றையும் அகற்றச் சொன்னதற்கு மாதங்கி ஒப்புக் கொள்ளவில்லை. அதைச் சுற்றி கழுத்தில் மாலையாக போட்டுவிடுமாறு சொல்கிறாள்.
‘எப்படியும் ஆஸ்பத்திரியில மூணு நாளாவது இருக்க வேண்டியிருக்கும்.. நான் ராத்திரியில இங்க தங்கி பார்த்துக்கறேன்..’ என்கிறான் வெங்கட்
‘ரொம்ப தேங்க்ஸ்டா.. ஆத்துல எப்டியாவது மேனேஜ் பண்ணிடுவேன்.. வேலைக்காரி இருக்கா.. ‘
‘அத்திம்பேருக்கு நான் ரொம்ப கடன்பட்டிருக்கேன்.. அவர் டெபுடி தாசில்தாரா சர்வீஸ்ல இருந்தப்ப நிறைய வாட்டி அட்டெஸ்டேஷன் வாங்கியிருக்கேன்.. இப்ப என்னோட உத்யோகமே அவர் சிபாரிசுல கிடைச்சதுதானே.. அதை என்னிக்கும் மறக்கமாட்டேன்..’ என்கிறான் ‘அப்பல்லாம் சட்டை காலர் வியர்வையால அழுக்காயிடக் கூடாதுன்னு கைக்குட்டையை மடக்கி வெச்சுப்பார்.. அப்பறம்.. பாக்கெட்டுக்கு பின்னாடி உள்ஜோபி தைச்சுண்டிருப்பார் பணம் பத்திரமா இருக்கணும்னு..’
‘எங்காத்துகாரரும் நிறைய சொல்லியிருக்கார்.. அப்பா பேனாவுக்கு ‘ப்ளு-ப்ளாக்’ இங்க்தான் போட்டுப்பாளாம்.. அவாத்துல கைராட்டை தக்கிளி எல்லாம் இருந்துதாம்..’ என்று நினைவு கூறுகிறாள் ‘ராஜாஜியோட ‘சக்ரவர்த்தி திருமகன்’ ‘வியாசர் விருந்து’ புஸ்தகங்களை இன்னமும் பொக்கிஷமா வெச்சுண்டிருக்கார்..’
தலைமை மருத்துவர் ஆபரேஷன் வெற்றியென அறிவித்தாலும், நரசிம்மனுக்கு ஏற்பட்ட மெல்லிய அதிர்ச்சிக்காக தீவிர சிகிச்சைப் பிரிவில் சில தினங்கள் கண்காணிக்கப்பட்ட பின்னர் காலில் கட்டுடன் வீடு திரும்புகிறார்.
*
ஜெர்மானிய நேரப்படி காலை ஆறரைக்கு உப்பிலி கண் விழித்ததும் மாதங்கிக்கு வாட்ஸப்பில் ‘குடென் மார்கன்’ சொல்லி முப்பது நிமிடங்களாவது பேச வேண்டும். அதற்காகவே இந்திய பத்து மணிக்குள் அவளும் வேலைகளை முடித்துவிட்டு காத்திருப்பாள்.
ஞாயிறன்று உரையாடலில் ‘என்னன்னா சொல்றேள்.. அப்பாவை எதுக்கு முதியோர் இல்லத்துல விடணும்..’ என்று அதிர்ந்தாள் ‘உங்களுக்கேன் இப்படியெல்லாம் தோண்றது..’
‘மாது.. சொல்றதை சரியா புரிஞ்சிக்கோடி.. கொஞ்ச நாளைக்கு ‘ஜெரியாட்ரிக் சென்டர்’ல சேர்த்துட்டா, அங்க டாக்டர்ஸ் நர்ஸ் எல்லாரும் 24×7 பார்த்துப்பா.. தெரபியும் குடுத்து நடக்க ஆரம்பிச்சுட்டார்னா, திரும்ப அழைச்சுண்டு வந்துடலாம்..’ என்றான்.
‘நான் ஒத்துக்க மாட்டேன்.. கண்காணாத இடத்துல அவரை விட்டுட்டு என்னால நிம்மதியா இருக்க முடியாது..’
‘ஆத்துல தளிகையும் பண்ணிண்டு அப்பாவையும் கவனிச்சுண்டு.. ஒனக்கு எவ்ளோ கஷ்டம்.. என்னாலயும் வர முடியலை.. ஹோம்ல எப்பவும் மனுஷா இருப்பா.. நீயும் அப்பப்போ பார்த்துட்டு வரலாம்..’
‘நீங்க லட்ச ரூபா குடுத்தாலும் அவரை எங்கயும் சேர்க்க மாட்டேன்..’ என்று உணர்ச்சிவசப்பட்டாள் ‘உங்களுக்கே தெரியும்.. எங்கப்பாவை சின்ன வயசுலயே பறிகொடுத்தவ நான்.. இவரை தான் தகப்பனாரா நினைச்சு பழகிண்டிருக்கேன்..’
‘ஆரம்பிச்சுட்டியா பழைய புராணத்தை..’ என்று மொபைல் வீடியோவை சரிசெய்தான் ‘அவர் ‘எனக்கு ரெண்டு பிள்ளை, ஒரு பொண்ணு-மாதங்கி’ன்னார்.. இதெல்லாம் நிறைய தடவை சொல்லியிருக்கே மாது..’
‘நம்பளுக்கு குழந்தை பாக்யம் இல்லேன்னு எல்லாரும் வாய்க்கு வந்தபடி பேசினப்போ, என்னை ஆத்மார்த்தமா சப்போர்ட் பண்ணது அப்பாதான்..’ என்று கண்கலங்கினாள் ‘உங்கம்மா என்னை ஜாடைமாடையா மலடின்னு சொன்னதுக்கு அவாகிட்ட சண்டைக்கு போனாரே.. மறந்து போச்சான்னா..’
‘இருவது வருஷத்துக்கு முன்னாடி கதையெல்லாம் எதுக்குடி பேசிண்டிருக்கே..’
‘உங்க தம்பிக்கு ரெட்டை குழந்தை பிறந்தப்போ ‘அதுல ஒண்ணை சுவீகாரம் எடுத்துக்கோயேன்.. பிரச்னை தீர்ந்துது’ன்னு நம்மளை தேத்தினவர்..’
‘மாதுா.. ஃப்ளாஷ்பேக்கை நிறுத்து.. அப்பா பழையபடி ஆனாதானே எண்பதாவது பிறந்தநாளை கொண்டாட முடியும்..’ என்று பேச்சை திசைதிருப்பினான் ‘அதுக்கு யாரையெல்லாம் அழைக்கணும்னு லிஸ்ட் போட்டுக்கோ.. ஒருத்தரையும் விட்டுடக்கூடாது…’
மாதங்கி புடவைத்தலைப்பால் கண்களைத் துடைத்துக் கொண்டு ‘தெரியும்னா.. பாபு அத்தான், அவரோட ஷட்டகர், கோவிந்தன் அம்மாஞ்சி.. பொன்மலை கோம்ளி அத்தங்கா.. எல்லார் பேரையும் எழுதிண்டிருக்கேன்..’ என்றாள்.
‘சரி.. அப்பாவை கவனிச்சுக்க இன்னொரு ஐடியா சொல்லட்டுமா.. வீட்டோட ஒரு நர்ஸை வேலைக்கு வெச்சுக்கோயேன்.. ஒனக்கும் ஒத்தாசையா இருக்கும்..’
‘ஆம்பளை கேர்டேக்கர்ஸ் கிடைக்கறது கஷ்டம்.. பார்க்கறேன்.. அதுக்கெல்லாம் நிறைய செலவாகுமே..’
‘எத்தனை ஆயிரம் யூரோ வேணும்னாலும் அனுப்பறேன்டி.. பணத்தை பத்தி கவலைப்படாதே..’
பேச்சின் நடுவில் மாதங்கியின் வாட்ஸப் கால் தானாகவே துண்டிக்கப்பட்டது. தஞ்சாவூர் மைத்துனரிடமிருந்து அழைப்பு வரவே, தொண்டையைக் கனைத்துக் கொண்டு ‘சொல்லுப்பா..’ என்றாள்.
‘அப்பாவுக்கு எப்பிடியிருக்கு மன்னி.. நாங்க ரெண்டாவது தடவை வந்து பார்த்தப்பவே ரொம்ப முடியாம இருந்தாளே..’
‘பெட்ஸோர் அதிகமாயிண்டேதான் போறது.. அவஸ்தை படறார்.. எப்பவும் மயக்கத்துலயே இருக்கா..’
‘இத்தனை வயசுக்கு மேல ஆபரேஷன் பண்ணது தப்புன்னு தோண்றது.. என்னை ஒரு வார்த்தை கேட்டிருக்கலாம்..’ என்றான் ‘ஆனது ஆயிடுத்து.. இனிமேலயும் அவர் இருந்து கஷ்டப்படாம போய் சேர்ந்துட்டா நல்லது..’
‘அப்பாக்கு சீக்கிரமே குணமாயிடும்.. எனக்கு நம்பிக்கையிருக்கு..’ என்றாள் வெடுக்கென்று.
‘எனக்கென்னமோ அப்படி தோணலை மன்னி.. ஒரு வாத்தியார் மாமாகிட்ட இதைபத்தி பேசிண்டிருந்தேன்.. அவர், ஸ்வாமி தேஸிகனோட நியாஸ தஸகம் பத்து ஸ்லோகம்.. நியாஸ விம்ஸதியில் இருபதாவது.. தினமும் பாராயணம் பண்ண சொல்றார்.. அப்பா சீக்கிரமா ‘ஆச்சார்யன் திருவடி அடைய’ பிரார்த்திக்கணுமாம்..’
‘அப்படியா.. வேறென்ன சொன்னேர்..’ என்ற மாதங்கியின் கேள்வியிலிருந்த கோபம் அவனுக்குப் புரியவில்லை.
‘சம்ஸ்கிருதம் கஷ்டமாயிருந்தா.. தமிழ் பிரபந்தத்துல நம்மாழ்வாரோட திருவாய் மொழி.. பத்தாம் பத்து.. ‘சூழ்விசும்பு அணிமுகில்’னு ஆரம்பிக்குமாம்.. பதினோரு பாசுரம் தினமும் சொன்னாலே பலன் கிடைக்குமாம்..’
‘என்னது.. அப்பா மண்டையை போடறதா.. ரொம்ப நன்னாயிருக்குப்பா நீ சொல்றது…’
அவன் மனைவி இடைமறித்து, ‘மன்னி.. வயசானவாளுக்கு நிறைவேறாத ஆசை ஏதாவது இருந்தா உயிர் பிரியாதாம்.. அவர் மனசுல என்ன இருக்கோ..’ என்றாள்.
மாதங்கி, ‘நாங்க அப்பாவுக்கு எந்தக் குறையும் வெக்கலை.. அவர் கேக்காமலே எல்லாம் வாங்கி குடுத்துடுவோம்.. நிறைய கோவிலுக்கு கூட்டிண்டு போயிருக்கோம்.. நுாத்தி நாலு திவ்ய தேசத்துக்கு எங்களோட வந்திருக்கார்.. தேவப்ரயாக், திருவாய்ப்பாடி ரெண்டு தான் பாக்கி.. நீங்க அழைச்சுண்டு போங்களேன்..’ என்றாள்.
‘இந்த நிலமையில அதெல்லாம் சாத்தியமில்ல.. நான் சொல்ல வந்தது.. அவருக்கு மோதிரம், ப்ரேஸ்லெட்.. இந்த மாதிரி ஆசைகள் இருந்துதே..’
‘ஆமா.. சங்கிலியில ‘திருமண்ஸ்ரீசூர்ணம்-சங்கு-சக்கரம்’ பதிச்சு ‘பென்டெண்ட்’ போட்டுக்கணும்னு சொல்லிண்டேயிருந்தார்.. வாங்கி குடுக்கறேளா..’
‘இப்போ.. பணத்தை அதுக்கு செலவழிக்கறது விரயம் மன்னி.. அவர் இன்னும் எவ்ளோ நாள் இருப்பார்னு தெரியாது..’
‘ஆமாண்டிம்மா.. வேறென்ன பண்ணலாம் நீயே சொல்லேன்..’
‘ஏதாவது தங்க நகையை கல்லுல உரசி பொடியாக்கி.. ஒரேயொரு துாள் பால்ல கலந்து குடுங்கோ.. இந்த மாதிரி இழுத்துண்டிருக்கற கேஸ் சீக்கிரம் போய் சேர்ந்துடுமாம்..’
தஞ்சை தம்பதியினரின் பேச்சை பொறுக்க முடியாத மாதங்கி ஆவேசமாக ‘ரெண்டு பேரும் அப்பாவை மேல அனுப்பறதுலயே குறியா இருக்கேளா.. இப்போ நான் சொல்றேன்.. அவர் பழையபடி நடக்கதான் போறார்.. நீங்களும் பார்க்கதான் போறேள்..’ என்று வெடித்தாள்.
மறுமுனையில் ‘மன்னீ.. தப்பா நினைச்சுக்..’ என்று சமாதானப்படுத்துவதற்குள் அழைப்பை அவளாகவே துண்டித்தாள்.
*
மாதங்கி ஆழ்ந்த உறக்கத்திலிருந்த மாமனாரைத் தட்டி எழுப்பினாள். ‘அப்பா.. இவர் புதுசா வந்திருக்கற கேர்டேக்கர்.. உங்க பக்கத்துலயே இருந்து நாள் முழுக்க கவனிச்சுப்பார்.. பேரு சகாயநாதன்..’
நரசிம்மன் நீண்ட நாட்களுக்குப் பிறகு கண்திறந்து பார்த்தார். அவள் சொன்னதை அரைகுறையாகக் கேட்டு, ‘என்னது.. சாரநாதனா.. திருச்சேறை பெருமாள் பேரு.. சோழ நாட்டு திருப்பதி.. அந்த கோவில்ல மட்டும் அஞ்சு தாயார்..’ என்றவரை இடைமறித்தாள். மாமனார் காதருகில் ‘இவர்.. ச-கா-ய-நா-த-ன்..’ என்று பதம் பிரித்து சொன்னாள். ‘நம்மளவா இல்லே.. க்றிஸ்தவர்..’ காற்றில் சிலுவை வரைந்து காட்டினாள்.
‘அதனாலென்ன.. ஏழுமலையானும் ஏசுநாதரும் ஒரே எழுத்துலதானே ஆரம்பிக்கறது..’ என்று அவனைப் பார்த்து புன்னகைத்தார் ‘நோக்கு பூர்வீகம் எதுடாப்பா..’
‘சொந்த ஊர் வேளாங்கண்ணி அங்கிள்..’
‘அப்படியா.. சந்தோஷம்..’ என்று கைகுலுக்கினார்.
சகாயநாதன் மாதங்கியிடம் ‘மேடம்.. அவரை டிஸ்டர்ப் பண்ணாதீங்க.. துாங்கட்டும்..’ என்றான் மீண்டும்.
‘என்ன சொல்றே.. அவர்தான் கூப்ட்ட உடனேயே முழிச்சு பார்த்தாரே.. உன் பேர் சரியா காதுல விழலை.. நேட்டிவ் பத்தி கேட்டார்.. நீயும் சொன்னியே..’
‘இல்லையே.. பத்து நிமிஷமா நீங்களும் உலுக்கிட்டே இருக்கீங்க.. அவரு நல்ல உறக்கத்துல இருக்காப்ல.. குறட்டை சத்தம் கேக்குதே..’
மாதங்கி தன்னை சிலிர்த்துக் கொண்டு நரசிம்மனைப் பார்த்தாள். சகாயம் சொன்னது போல அவர் முனகலுடன் நித்திரையிலிருந்தார். சற்று முன்னர் அப்பா கண்விழித்து பேசினதும், அவனை விசாரித்து கைகொடுத்ததும்.. எல்லாம் மனபிரமையா என்று தன்னையே கேட்டுக் கொண்டாள்.
‘அங்கிளுக்கு என்னாச்சு மேடம்.. பெட்ஸோர் ரொம்ப முத்தி போயிருக்கே..’ என்றவாறே நாற்றத்தை சகிக்க முடியாமல் முகமூடி அணிந்து கொண்டான்.
தமிழ்ப் புத்தாண்டு முதல் நடந்தவற்றை சுருக்கமாகச் சொன்னாள். ‘நாள் முழுக்க மயக்கத்துலயே இருக்கார்.. இப்பல்லாம், ராத்திரியில உளற ஆரம்பிச்சிருக்கார்.. வேஷ்டியை சுருட்டிண்டு, பக்கத்து சுவத்தை தடவிக் குடுத்துண்டே.. உத்தரத்தை பார்த்து ஏதேதோ சொல்றார்..’
‘ரத்தத்துல சோடியம் குறைஞ்சிட்டா இந்த மாதிரி வினோதமா நடந்துப்பாங்க.. டெஸ்ட் பண்ணி பார்த்துடலாம்..’
‘மெடிக்கல் சமாசாரமெல்லாம் தெரியுமா ஒனக்கு..’
‘நர்ஸிங் கோர்ஸ் படிக்கையில கத்துக்கிட்டேன்.. ஆபரேஷன் தியேட்டருக்கு ராத்திரி எட்டு மணிக்கு கூட்டிட்டு போனதா சொன்னீங்கல்ல.. அதுலயிருந்து உங்க யாரையும் பார்க்காம, பேசாம புது மனுசங்களோட தனியா ‘ஐஸியூ’ல மூணு நாள் இருந்தாரே.. அது சைகலாஜிக்கலா பாதிச்சிருக்கலாம்..’ என்றான் ‘கவலைப்படாதீங்க.. அங்கிளை நல்லா கவனிச்சுக்கறேன்.. இந்த மாதிரி ‘டெர்மினல்’ பேஷன்ட்ஸ் நிறைய பேரை பார்த்திருக்கேன்..’
‘ப்ளீஸ் சகாயம்.. அந்த வார்த்தையை சொல்லாதே..’
‘ஸாரி மேடம்..’ என்றவாறே கையுறையை மாட்டிக்கொண்டான் ‘புண்ணையெல்லாம் சுத்தமா கழுவி ட்ரெஸ்ஸிங் பண்ணி ‘ஹைட்ரோஹீல்’ ஜெல் போட்டு விடறேன்..’
அன்றிரவு துாங்குவதற்கு முன்பாக மாமனாரைப் பார்க்க அவரறைக்குச் சென்றாள் மாதங்கி. சகாயநாதன் கையிலிருந்த ‘சுவிசேஷப் பாடல்கள்’ புத்தகத்தை மூடிவிட்டு எழுந்து நின்றான்.
நரசிம்மனின் கைகள் கட்டிலோடு சேர்த்து துணியால் இணைக்கப்பட்டிருந்ததைப் பார்த்து அதிரச்சியடைந்தாள். ‘அப்பா கையை ஏன் கட்டிப் போட்டுட்டீங்க..’
‘கதீட்டர், ட்யூப்.. எல்லாத்தையும் பிடுங்கி எறியறார் மேடம்.. அலமாரி கதவை தட்டிட்டே இருக்கார்.. நகர்ந்து கட்டில் விளிம்புல விழுந்துடுவார் போலிருக்கு.. அதனாலதான்..’
‘பார்க்க சகிக்கலை..’ என்று துயரப்பட்டாள் ‘ஒரு வாரத்துக்கு முன்னாடி என்கிட்ட ‘சாப்ட்டியாம்மா’ன்னு ஈனஸ்வரத்துல கேட்டார்.. கடைசியா அதுதான் உருப்படியா பேசினது..’
‘அங்கிளோட நெலமை ரொம்ப மோசமாதான் இருக்கு..’
‘ஆனாலும் நல்லபடியா தேறிடுவார்னு எனக்கு தோண்றது..’
‘நான் கர்த்தர்கிட்ட பிரத்யேகமாக ஜபம் பண்றேன்.. மனமருகி வேண்டிக்கிட்டா நிச்சயம் பலிக்கும்..’
‘ரொம்ப தேங்க்ஸ் சகாயம்..’ என்றாள் அவசரப்பட்டு.
‘எங்க பிரிவுல ‘கடவுள் கிட்ட ஒப்பு கொடுக்கறது’ ன்னு சொல்லுவாங்க.. அந்த பிரார்த்தனையை சொன்னேன்..’ என்றான். அதன் உட்பொருள் நல்லவேளை மாதங்கிக்கு விளங்கவில்லை.
*
நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெங்கட், தான் வெளியூர் சென்றுவிட்டதாக சொல்லிக்கொண்டே வீட்டிற்குள் நுழைந்தான். நரசிம்மனின் அறையில் கைக்குட்டையால் மூக்கை பொத்தியபடி, வெறும் சுவாசமாகக் கிடந்தவரைப் பார்த்துப் பரிதாபப்பட்டான்.
‘அய்யய்யோ.. கைகால்ல நீர் கோர்த்துண்டு வீங்கியிருக்கு.. முகம் வெளிறிப் போயிடுத்து.. அத்திம்பேர் படற அவஸ்தையை நினைச்சா வேதனையா இருக்கு.. ஒண்ணு சொன்னா தப்பா நினைச்சுக்க மாட்டேளே..’ என்றான் மாதங்கியிடம்.
‘என்னது..’
‘சீக்கிரமே பெருமாள் கூப்டுண்டார்னா நன்னாயிருக்கும்.. விஷ்ணு சஹஸ்ரநாமம் ஆடியோவை அவர் காதுல விழற மாதிரி போட்டுண்டே இருங்கோ..’
‘நீயும் சொல்லிட்டியாடா.. எல்லாரும் அப்பாவை அனுப்பி வெக்கறதை பத்தியே பேசறேளே..’
‘மன்னிச்சுடுங்கோ.. இவ்ளோ வயசாயி படுத்த படுக்கையா கஷ்டப்படறாரே.. அதனாலதான்..’
‘பரவாயில்ல வெங்கிட்டு.. புவனேஷ்வர்லருந்து அவரோட ஒண்ணு விட்ட அக்கா மெஸேஜ் அனுப்பியிருக்கா.. படிக்கறேன்.. கேளு..’ என்று கடவுச்சொல் இல்லாத கைபேசியை விரலால் தேய்த்துத் திறந்தாள். ‘..நரசுவோட ஜாதகத்துல இப்போ பெரிய கண்டம் இருக்குன்னு தெரியறது.. இன்னமும் உயிரை கையில பிடிச்சுண்டு எதுக்காக காத்துண்டிருக்கான்னு புரியலை.. வைகுண்ட ஏகாதசிக்கு நிறைய நாள் இருக்கு.. ஒருவேளை இன்னிக்கே அவன் போயிட்டா கூட, கல்யாண சாவு தான்.. கவலைப்படாதேம்மா..’ன்னு எழுதியிருக்கா.. யாருமே அப்பா மீண்டு வருவார்னு சொல்லலை.. அதான்டா வருத்தமாயிருக்கு..’
‘அத்திம்பேர் எழுந்து நடமாடினா எனக்கும் சந்தோஷம்தான்.. ஆனா ரியாலிட்டின்னு ஒண்ணு இருக்கே..’
‘நுாறு வயசு வரைக்கும் ஆரோக்கியமா இருந்தவாளை நான் பார்த்திருக்கேனே..’
‘அவரோட தலையெழுத்து இப்படியிருக்கே..’ என்றான் வருத்தத்தோடு ‘டாக்டர் என்ன சொல்றார்..’
‘மிதுன் ரெண்டு தடவை வந்து பார்த்தார்.. இனிமே அவர் செய்யறதுக்கு எதுவுமில்லேன்னு கைவிரிச்சுட்டார்..’
‘அடப்பாவமே..’ என்றான் கவலையோடு. ‘நான் அந்திம காலத்துல மத்தவாளை சிரமப்படுத்தாம, துாக்கத்திலேயே போயிடணும்னு வேண்டின்டிருக்கேன்..’
‘யாருக்கு எப்போ எந்த மாதிரி முடிவுங்கறதை ‘அவன்’தானே தீர்மானம் பண்ணுவான்..’ என்று கைகளை உயர்த்தினாள் மாதங்கி.
அரைமணி நேரத்தில் வெங்கட் கிளம்பி போன பிறகும் அவள் மாமனாரையே பார்த்தபடி அமர்ந்திருந்தாள். எலும்பும் தோலுமான மெலிந்த தேகம். நெற்றியில் பலவருட ஸ்ரீசூர்ணத்தின் மஞ்சள் சுவடு. நாசித் துவாரங்களில் உரோமக்காடு. ஓயாமல் பிரபந்தம் சொல்லிக் கொண்டிருந்தவர் இப்போது தெளிவில்லாமல் பிதற்றிக் கொண்டிருக்கிறார். அந்த வைதீக பிராமணனுக்கு ‘பெர்முடா’ அணிவிக்கப்பட்டிருந்தது. கும்பகோணம் வெற்றிலை, களிப்பாக்கு, ‘மூணாவது’ வாசனையுடன் இருந்த அப்பாவை நினைத்துக் கொண்டாள். தற்போது உடலெங்கும் புண்கள் பரவி, குடலைப் பிரட்டும் துர்நாற்றம் வீசுகிறது. முதுகின் அடிபாகத்தில் சீழ்க்கட்டி உடைந்து அந்தத் திரவத்திலிருந்து புழு நெளிந்து வந்தது. கோணலாகப் பிளந்திருந்த வாயிலிருந்து வழிந்த உமிழ்நீரைப் பஞ்சால் ஒற்றியெடுத்தாள். அவளுக்கு மனசெங்கும் துக்கம் பொங்க அழுகை முட்டிக் கொண்டு வந்தது.
சாயங்காலம் பூஜை அறையில் விளக்கேற்றி விட்டு, இஷ்ட தெய்வமான குணசீலம் பெருமாளை கண்மூடி வேண்டிக் கொண்டாள். மாமனார் விரைவில் பூரண குணமடைய மனமுருகி பிரார்த்தித்தாள். ‘எம்பெருமானே.. புக்காத்துல எம்மேல பாசத்தைக் கொட்டி தீர்த்த ஒரே மனுஷன் அவர்.. என்னை மாட்டுப்பொண்ணா ஒருநாளும் நினைச்சதில்லை.. ‘புத்ர பாக்யம் இல்லேனா என்ன.. குடியா முழுகி போயிடுத்து.. உப்பிலிக்கு நீ குழந்தை.. உனக்கு அவன் குழந்தை’ன்னு ஆதரவா குரல் கொடுத்தவர்.. பகவானே.. உம்மேல எவ்ளோ பக்தியா இருந்தார்.. வாரந்தவறாம கோவிலுக்கு போயிண்டு.. சாஸ்திர சம்ப்ரதாயங்கள் எல்லாத்தையும் கடைபிடிச்சுண்டு.. அப்பேர்ப்பட்ட நல்ல ஆத்மாவை ஏன் சோதிக்கறே.. அப்பாவை எப்படியாவது பிழைக்க வெச்சுடு.. எத்தனையோ லீலைகள் பண்ணியிருக்கியே.. உன்னால நிச்சயமா முடியும்.. அவரோட எண்பதை நாங்க விமரிசையா கொண்டாடணும்.. ‘
*
பெர்லின் நகரின் ‘கொய்ஸ்பெர்க்’ (Kreuzberg) பகுதி அடுக்ககத்தில், உப்பிலி அந்த இரவு நேரத்தில் கருப்புக் காபி பருகிக்கொண்டிருந்தான். ‘டாஸ் எர்ஸ்டெ’ (Das Erste) என்ற சேனலில் சென்ற வருட அக்டோபர் மூன்று கொண்டாட்டங்கள் மறு ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தன.
அவனது கைபேசி ஒலித்தது. மாதங்கியிடமிருந்து போன். அகால வேளையில் அவள் கூப்பிட்டதுமே உப்பிலி தன்னை சுதாரித்துக் கொண்டான். தொலைக்காட்சி ஒலியை மெளனித்து விட்டு ‘சொல்லு மாது..’ என்றான்.
சுமார் முப்பதாண்டுகளாக பிரிந்திருந்த கிழக்கு மற்றும் மேற்கு ஜெர்மனிகள் ஒன்றிணைந்த நன்னாளின் கோலாகலங்களை டிவியில் காண்பித்துக் கொண்டிருந்தனர்.
‘ஒப்பிலியப்பன் சாரா..’ என்று மொபைலில் ஆண் குரல் கேட்டது. வந்த எண்ணை பரிசோதித்தான். மனைவியினுடையதுதான் ‘ஆமா.. உப்பிலிதான் பேசறேன்.. நீங்க யாரு..’
ஜெர்மன் தேசமே விழாக்கோலம் பூண்டிருக்க, கடுங்குளிரை பொருட்படுத்தாத ஜனங்கள் வீதிகளில் இறங்கி சதுக்கங்களில் கூடி மகிழ்ந்தனர்.
‘நான் சகாயநாதன் பேசறேன் சார்.. சென்னையில உங்க வீட்டுல அப்பாவை பார்த்துக்கற அட்டென்டர்..’ உப்பிலிக்கு அது புரிய சில நொடிகளாயிற்று. மாதங்கி வீட்டோடு ஒருத்தரை உதவிக்கு வைத்திருப்பதாகச் சொன்னது நினைவுக்கு வந்தது.
ஜெர்மானியர்கள் அவ்விடுமுறை தினத்தை கையில் படபடக்கும் கொடியுடனும், பரஸ்பர வாழ்த்து, அணைத்தல், முத்தங்களுடனும் உற்சாகமாகக் கொண்டாடினர்.
‘ம்.. சொல்லுப்பா.. மாதங்கி போன்லருந்து பேசறியா..’ என்று கேட்டான் உப்பிலி.
ஜெர்மனி இரண்டாக பிளவுபட்ட கடந்தகால சரித்திரத்தை கருப்பு வெள்ளையில் காண்பிக்கத் தொடங்கினர்.
‘ஆமா சார்.. வந்து.. ஒரு தகவல் சொல்லணும்.. மனசை திடப்படுத்திக்கோங்க..’ என்றவாறே சகாயம் தயக்கத்துடன் ஆரம்பித்தான்.
இரண்டாம் உலக யுத்தம், சோவியத் யூனியன், குருஷேவ், பனிப்போர் என்று தொடங்கி அறுபதுகளில் எழும்பிய பெர்லின் சுவர் வரை விவரித்தார் வர்ணனையாளர்.
உப்பிலிக்கு தொண்டையை அடைத்தது. அப்பாவைப் பற்றிய விரும்பத் தகாதச் செய்திக்கு மனதளவில் தயாரானான் ‘சொல்லு சகாயநாதன்..’
அந்தச் சுவர் இரண்டாக பிளவுபட்ட மக்களை எவ்வாறு பொருளாதார மற்றும் உளவியல் ரீதியாக பாதித்தது என்பதை சிற்சில நேர்காணல்கள் மூலம் விளக்கினார்.
‘சார்.. அவங்க இப்பதான் அரைமணி நேரத்துக்கு முன்னாடி காலமாயிட்டாங்க..’ என்று சகாயம் முடிப்பதற்குள், அவனுக்கு துக்கம் பெருக்கெடுத்தது. தந்தை குணமடைய வேண்டுமென்ற பிரார்த்தனை பலிக்கவில்லையே என்று கடவுளை நொந்து கொண்டான். அவரது பிறந்தநாள் கொண்டாட்டக் கனவு மெய்ப்படாமல் போனது மேலும் வருத்தியது.
இருபக்க அரசுகளின் மனமாற்றத்தாலும் குடிமக்களின் எழுச்சியாலும் 89ம் ஆண்டு வரலாற்று சின்னமான சுவர் உடைக்கப்பட்டது.
‘அப்பா போயிட்டாரா..’ என்று பெருங்குரலெடுத்து கதறினான். இந்த அதிர்ச்சி தன்னை விட மனைவியை பெருமளவு பாதித்திருக்கும் என்பதை உணர்ந்தான்.
சுத்தி, உளி, கடப்பாரை போன்றவற்றால் பிரசித்தி பெற்ற அச்சுவரை பலரும் தாக்கத் தொடங்கினர்.
மாதங்கி அழுது புலம்பிக் கொண்டிருக்க, அவளது போனில் இவன் தகவல் தெரிவிக்கிறான் என்பதாக புரிந்து கொண்டான். ‘சகாயநாதன்.. அவகிட்ட போனை குடு..’
‘சார்.. இறந்து போனது உங்கப்பா இல்லே.. மாதங்கி மேடம்தான்.. மாஸிவ் ஹார்ட் அட்டாக்..’
இடிந்து தகர்ந்து சரிந்து விழுந்தது பெர்லின் சுவர் மட்டுமல்ல, உப்பிலியும்தான்.