Posted on Leave a comment

சில பயணங்கள் சில பதிவுகள் – 38 | சுப்பு

திருவண்ணாமலை

உயிர்களின் இயல்பையும் உலக நடப்பையும் வழிநடத்துவது மகான்கள்தான் என்பது, டாக்டரின் தீர்மானம். மகான்களோடு தொடர்புகொள்ளவேண்டும் என்றும், அவர்களுக்கு இடையே காலப் பிரிவினையோ தேசப் பிரிவினையோ கிடையாது என்றும் அவர் வலியுறுத்தினார். இதைத் தவிர பலவகையான பயிற்சிகளில் நாங்கள் ஈடுபட்டோம். பரிட்சார்த்த முறையில் படிப்பும் உண்டு. மற்ற மதங்களின் நூல்களைப் படித்தபோது, டாக்டர் தடைசொல்லவில்லை. அவரளவில் ஹிந்துவாகவே இருந்தார். பஞ்சாங்கம் பார்க்காமல், எதையும் ஆரம்பிக்க மாட்டார். விரதங்களை வலியுறுத்துவார். மகான்களின் சமாதிக்கு முன்னுரிமை. யார் எந்த ஊருக்குப் போனாலும், அங்கிருக்கும் மகானின் இடத்தைக் குறிப்பிட்டுப் போகச் சொல்லுவார். ஆனால், கத்தோலிக்க மதத்தினர் வழிபடும் மேரி மாதா மீது அவருக்கு பக்தி இருந்தது.

மேரி வழிபாடு எனக்குப் பிரச்சினையாக இல்லை. படைப்பு எல்லாம் பராசக்தியின் வடிவம் என்று கொண்டபிறகு, மேரி மாதாவும் அதில் சேர்த்திதானே. டாக்டருடைய சங்கத்தில் ரூமி என்கிற பாரசீகப் புலவர் எழுதிய- சூஃபி ஞானி- மஸனா வி மனாவி என்கிற நூலைப் படித்தவர்களும் உண்டு. ஒவ்வொருவரும் தங்களுடைய படிப்பையும், அனுபவத்தையும் சொல்லிக்கொள்வது வழக்கமாகிவிட்டது.

எந்தவிதமான பயிற்சியையும் தொடர்ந்து முறையாகச் செய்கிற பழக்கம் எனக்கில்லை, இடைவிடாது மந்திர ஜபம் மட்டும் செய்துகொண்டிருப்பேன். வெளியில் சொல்ல முடியாத ஒரு பிரச்சினை எனக்கு ஏற்பட்டது. உறக்கத்தில் இருக்கும்போது எழுந்து பார்த்தால், வயிறு தன்னிச்சையாக அசைந்துகொண்டு இருக்கும். யோகாசனக்காரர்கள் வயிற்றைப் பந்துபோல் உருட்டி மேலும் கீழும் அசைப்பார்களே அதுபோலத்தான். ஆனால் நம்முடையது அப்படியல்ல. வயிறு வெகுவேகமாக தானாகவே மேலும் கீழுமாகவோ இந்தப்பக்கம் அந்தப்பக்கமாகவோ அசையும். உச்சகட்டத்தில் வயிற்றின் கீழ்ப்பகுதிக்கும் இது பரவி, விறைப்பாகி வலி விண்ணென்று தெறிக்கும்.

இரவின் உபாதை இப்படியென்றால், பகலில் நடப்பது வேறுவகை. இரண்டு கைகளும், மாநில சுயாட்சி பெற்று, உடலை விட்டு விலகி, நாட்டிய முறையில் ஆட ஆரம்பித்துவிடும். அதற்கு ஈடுகொடுப்பதுபோல, மார்பு, கழுத்து, தலை எல்லாம் சேர்ந்துகொள்ளும். கிட்டத்தட்ட இது பாம்பு டான்ஸுக்கான பயிற்சிபோல் இருக்கும். இந்த பாம்பு டான்ஸை யாராவது பார்த்துவிடப் போகிறார்களே என்கிற எண்ணத்தில், நான் ஏதாவது ஒரு அறைக்குள் தாளிட்டுக்கொள்வது வழக்கம். எந்த அறையும் இல்லை என்றால், பாத்ரூமில்.

சில நாட்களுக்குப் பிறகு, இது நண்பர்களுக்குத் தெரிந்து “சுப்பு கொஞ்சம் டான்ஸ் ஆடேன்” என்று சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். ஒருமுறை டாக்டரின் முன்னிலையில் கூட அரங்கேற்றம் நடந்தது. மற்றவர்களுக்கு வேடிக்கையாகவும், எனக்கு வேதனையாகவும் இருந்த இந்த ஆட்டத்தை எப்படி நிறுத்துவது என்கிற கவலை அதிகமாகிவிட்டது. அப்போது மணி என்ற நண்பர் ஸ்வாமி முக்தானந்தாவின் ஸத் ஸங் வித் பாபா என்கிற புத்தகத்தைக் கொடுத்தார். அந்தப் புத்தகம் இதே மாதிரியான பிரச்சினை முக்தானந்தாவுக்கு ஏற்பட்டது குறித்து விவரித்தது. இத்தகைய பிரச்சினைகளைத் தவிர்க்க முடியாது என்றும், ஒரு கட்டத்தில் அவை தானாகவே நின்றுவிடும் என்றும் சொல்லப்பட்டிருந்தது. எனக்கும் அப்படியே ஆனது.

நாங்கள் படித்த புத்தகங்கள், அதிலுள்ள நுட்பமான குறிப்புகள், எல்லாவற்றையும் இங்கே எழுதமுடியாது. ஒன்றிரண்டை மட்டும் சொல்லுகிறேன். ரமணன் படித்தது ஆதித்ய ஹ்ருதயம், ஷோபனா யோகவாஸிஷ்டம்.

இறைவனுக்குரிய ஆற்றல் எதையும் பயன்படுத்தப்போவதில்லை என்கிற சங்கல்பத்தோடு மஹாவிஷ்ணு மனிதனாகப் பிறக்கிறார், அயோத்தி அரசன் தசரதன் மகனாக, ராமனாக. அரசனாக வேண்டிய நாளில் ராமன் தசரதனுடைய கட்டளைப்படி, காட்டுக்குப் போகிறான், உடன் மனைவி சீதா, தம்பி லக்ஷ்மணன். காட்டில் தனியே இருக்கும் சீதையை இலங்கையரசன் ராவணன் கடத்திப் போகிறான். சீதையை மீட்டெடுக்க இலங்கைக்கு வந்து ராமன் போர்தொடுக்கிறான். பலநாள் போர், முடிவில்லாமல் போகிறது. ராமனுக்குச் சமமான அளவில் ராவணனும் போர் செய்கிறான். ராமன் மனித ஆற்றலோடு போரிட்டு ராவணனை வெல்ல முடியுமா என்பது தெரியவில்லை. இறையாற்றலைப் பயன்படுத்த முடியாமல் சங்கல்பம் தடுக்கிறது. ராமன் முடிவுசெய்ய முடியாமல் குழப்பத்தில் இருக்கிறான். அப்போது அகத்திய முனிவர் அங்கே வந்து, “எல்லா மனிதருக்குள்ளும் ஆதித்யன் என்கிற இறைவன் இருக்கிறான். அந்த ஆற்றலை உணர்ந்து நீ பயன்படுத்தலாம்” என்று உபதேசம் செய்கிறார். அதற்குப் பிறகு ராமனுக்கு வெற்றி. இதுதான் ஆதித்ய ஹ்ருதயம். இது வால்மீகி ராமாயணம் யுத்த காண்டத்தின் ஒரு பகுதி. ரமணன், ஷோபனா இருவரும் ஆதித்ய ஹ்ருதயத்தைத் தமிழாக்கம் செய்தார்கள்.

எனக்குப் பிடித்த புத்தகம் பால் கேரஸ் எழுதிய ‘காஸ்பல் ஆஃப் புத்தா’. சித்தார்த்தன் என்ற அரசன் ஒருநாள் இரவில் மனைவியை விட்டுவிட்டு, தத்துவத் தேடலில் புறப்பட்டுப் போனான், கடுந்தவம் செய்து, கௌதம புத்தராக மாறினான் என்பதை எல்லோரும் படித்திருக்கிறோம். ஆனால், நாம் அறியாத ஒரு விஷயம், இதில் சொல்லப்பட்டிருந்தது. பல வருடங்களுக்குப் பிறகு, புத்தர் (சித்தார்த்தன்) சொந்த ஊருக்குத் திரும்புகிறார், நூற்றுக்கணக்கான சீடர்களோடு. அவரை வரவேற்பதற்காக அரண்மனையில் விழாக்கோலம். ஊருக்குள் நுழைவதற்கு முன்பு, தன்னுடைய சீடர்களை அழைத்து புத்தர் சொல்கிறார், “ஒரு நள்ளிரவு நேரத்தில் எந்த அறிவிப்பும் இல்லாமல், நான் அவளைவிட்டு விலகி வந்துவிட்டேன். தவறு என்னுடையது. என்னைப் பார்த்தவுடன் அவள் உணர்ச்சிவசப்படலாம், என்னைத் தொடலாம், அழலாம், கட்டித் தழுவலாம், அவளை யாரும் தடுக்கக் கூடாது. இந்த உடல்மீது அவளுக்கு உரிமை உண்டு” என்கிறார். புத்தருடைய அணுகுமுறை என்னை வலுவாகத் தாக்கிவிட்டது, என்னுள் இறங்கிவிட்டது. இந்தப் பாதிப்பு பலநாட்கள் தொடர்ந்தது.

நான் படித்த இன்னொரு புத்தகம் கிறித்தவர்களின் பரிசுத்த வேதாகமம், குறிப்பாகப் புதிய ஏற்பாடு. தன்னை ஒப்புக்கொடுக்கிற வேளை எது என்பதும், தான் கைதுசெய்யப்படப் போகிறோம் என்கிற செய்தியும் தேவகுமாரனாகிய ஏசுவுக்குத் தெரிந்திருந்தது.  நாங்கள் உங்களுக்காகப் போர் செய்வோம் என்று வீரம் பேசுகிற பீட்டரைப் பார்த்து, “சேவல் கூவுவதற்கு முன்பே நீ என்னை மூன்றுமுறை மறுதலிப்பாய்” என்கிறார் ஏசு. அப்படியே நடக்கிறது. ஏசுவைக் கைது செய்கிறார்கள், அழைத்துப் போகிறார்கள், ஜனக்கூட்டத்தில் ஓரிருவர் பீட்டரை அடையாளம் கண்டுகொண்டு, இவனும் ஏசுவுடைய ஆள்தான் என்று சொல்கிறார்கள். பீட்டர், பயத்தில் ஏசுவை எனக்குத் தெரியாது என்று சொல்லி மறுத்துவிடுகிறார், மூன்றாவது முறை மறுத்து சத்தியம் செய்கிறபோது, சேவல் கூவுகிறது. அந்தக் கணத்தில் ஏசுவின் வசனத்தை பீட்டர் புரிந்துகொள்கிறார். ஏசுவின் தலையில் முள் கிரீடத்தை வைத்து, ஆளுக்கு ஆள் அடிக்கிறார்கள், துப்புகிறார்கள், பரிகாசம் செய்கிறார்கள். பிறகு சிலுவையில் வைத்து, கைகளிலும் கால்களிலும் ஆணியால் அடித்துவிடுகிறார்கள். ஒரு கட்டத்தில் வலிதாங்க முடியாத ஏசு “ஏலி ஏலி லாமா ஸபக்தானி!” என்று சத்தமிட்டுக் கூப்பிடுகிறார். “என் தேவனே, என் தேவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்!” என்று அர்த்தம் (மத்தேயு 27).

மனிதர்கள் ஏற்கெனவே செய்த பாவங்களைப் போக்குவதற்காக வந்தவர்தான் ஏசு. ஆனால் மனிதர்கள் அவரையே அடித்துத் துன்புறுத்தி, புதிய பாவங்களையும் சேர்த்துக்கொண்டார்கள் என்பதை அறிந்து நான் வருந்தினேன்…

ஆன்மீகமான ஸ்தலங்கள், தவத்துக்குரிய இடங்கள் பற்றி எனக்கொரு கற்பனை இருந்தது. டாக்டர் அதை ஒதுக்கிவைத்துவிட்டார். “ஞானத் தபோதனரை வாவென்றழைக்கும் மலை அண்ணாமலை” என்று சொல்லப்படுகிறது. யோகிகளும், சித்தர்களும், ஞானிகளும், அன்றாடம் கூடிக்கொண்டிருக்கும் திருவண்ணாமலையில், இருப்பது மொட்டைப்பாரைகளும் கெட்ட வெயிலும்தான் என்று அவர் சுட்டிக்காட்டினார். என்னை திருவண்ணாமலைக்குப் போகச்சொன்னார்.

(ஓவியம்: ஜீவா)

திருவண்ணாமலையில் உமாதேவி என்கிற பெண்மணி சேஷாத்ரி ஸ்வாமிகளின் மீடியமாக இருந்து அருள்வாக்கு  சொல்லிகொண்டிருந்தார். அந்த ஊரின் பிரபல வழக்கறிஞர் முத்துக்குமாரசாமியுடைய மனைவி இவர். உமாதேவியைக் சென்று பார்க்கும்படி எனக்கு உத்தரவு. நானும் பாபுவும் (மைசூர்), இளங்கோவும் புறப்பட்டோம். முதலில் கிரிப்ரதட்சணம், பிறகு உமாதேவியார் என்பதாகத் திட்டம்.

எனக்கு ரொம்ப நாட்களாக வடலூர் ராமலிங்க அடிகளைப் போல உடையணிந்து கொள்ளவேண்டும் என்று ஒரு ஆசை இருந்தது. அதாவது வேட்டியை கழுத்தின் இருபுறமும் வரும்படியாகச் சுற்றி, பின்னாலே முடிச்சுப் போட்டுக்கொள்வது. இதுதவிர மேலாடை என்று எதுவும் கிடையாது. நாமும் அப்படிப் போகலாம் என்று சொன்னபோது, “ஜட்டி போடலாமா?” என்று பாபு கேட்டான். “வள்ளலாருக்குக் கௌபீனம் நமக்கு ஜட்டி” என்று சொல்லிவிட்டேன். இந்த உடை அலங்காரத்தில் இளங்கோவுக்குப் பிடித்தம் இல்லை. அவனுக்குப் பேண்டு சட்டைதான். ரொம்ப நல்லதாகப் போச்சு என்று எங்களுடைய கைக்குட்டை பர்ஸ் எல்லாவற்றையும் அவனிடம் கொடுத்துவிட்டோம். கிரி பிரதட்சணத்தில் செருப்பு போடக்கூடாது. மலையைச் சுற்றிவரும் பாதையில் எந்நேரமும் சித்தர்களும் யோகிகளும் வலம்வந்துகொண்டு இருப்பார்கள். அவர்களுக்கு இடம்விட்டு, வெளிப்புறமாக நாம் நடக்கவேண்டும் என்று எனக்குச் சொல்லப்பட்டிருந்தது.

நாங்கள் போனது அதிகாலை நேரம். என்னோடு வந்த இருவருடைய மனநிலையும் வெவ்வேறு விதமாக இருந்தது. நான் ஒரு பாவி என்றும், இனிமேலாவது, டாக்டர் தயவில் திருந்தி வாழ வேண்டும் என்றும், பாபு புலம்பிக்கொண்டே வந்தான். இளங்கோ இதற்கு நேரெதிர். அங்கே மேய்ந்துகொண்டிருக்கிற பசுக்களோடு பேசுவது, பறவைகளோடு விளையாடுவது என்கிற பரவச நிலையில் அவன் இருந்தான். இருவரையும் சமாளித்து, இழுத்துப்போகவேண்டிய கடமை என்னுடையது. டாக்டர் சொன்னதை சொன்னபடி செய்யவேண்டும் என்கிற முனைப்பு இருந்ததே தவிர, எனக்கென்று தனியாகப் பரவசமோ பரிதாபமோ இல்லை.

கிரிவலம் முடித்து, உமாதேவியார் இருக்கும் வீட்டிற்குப் போனோம். எங்களை வரவேற்ற ஒருவர், திண்ணையில் உட்காரச் சொல்லிவிட்டார். நான் கேட்ட பல கேள்விகளுக்கு அவரிடம் பதில் இல்லை. சென்னையில் இருந்து டாக்டர் நித்யானந்தம் அனுப்பினார் என்கிற தகவலுக்கும் ரியாக்ஷன் இல்லை. அவரிடம் இருந்து வெளிப்பட்ட இரண்டே வார்த்தைகள், “உட்காருங்க. கூப்புடுவாங்க” என்பதுதான்.

கிட்டத்தட்டப் பதினோரு மணியளவில் நாங்கள் அங்கே போனோம். நேரம் போகப்போக, பாபு, இளங்கோ இருவரையும் சமாளிப்பது பெரும் பிரச்சினையாகிவிட்டது. பாபு “என்னால்தான் உங்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை” என்று சொல்லி அழுதுகொண்டு இருந்தான். இளங்கோவோ “சுவாமிகளை உள்ளே போய் ஏன் பார்க்கவேண்டும். நான் இங்கேயே வரவழைக்கிறேன்” என்று ஆரம்பித்துவிட்டான். அந்தக் கணத்தில், அதாவது இரண்டு மணிநேரக் காத்திருப்புக்குப் பிறகு, என்னுள்ளே ஒரு சோகம் உருவானது. டாக்டர் சொன்னதைச் செய்ய முடியாமல் போய்விடுமோ என்கிற கவலை.

என்னை அறியாமல், “ஏலி ஏலி லாமா ஸபக்தானி!” என்று சத்தமிட்டேன்.

கதவு திறந்தது. “உங்களைக் கூப்பிடறாங்க” என்றார் அவர்.

உள்ளே போனோம், உமா தேவியாரைச் சந்தித்துப் பேசினோம்.

மாலையில் கோவில். இரவில் சென்னை.

தொடரும்…

இந்தத் தொடரின் மற்ற பகுதிகளை இங்கே வாசிக்கலாம்.

Leave a Reply