Posted on Leave a comment

இந்தியா புத்தகங்கள் – 13 | முனைவர் வ.வே.சு.

ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எண்பதாம் ஆண்டு. கல்லூரித் தமிழ் மன்றம் அமைத்த பட்டி மண்டபம். அந்தக் காலத்திலே பிரபலமாயிருந்த பேராசிரியர் கண.சிற்சபேசன் நடுவர். நான் வரவேற்புரை நவில வேண்டும். அதற்காகக் குறிப்புகள் எடுக்கும் போது, பழைய தமிழ் இலக்கியத்தில் பட்டிமன்றம் பற்றிய செய்திகள் உண்டா எனத் தேடினேன். வருகை தர உள்ள பேராசிரியர் கம்பனில் ஆழங்கால் பட்டவர். எனவே கம்ப ராமாயணத்தில் தேடினேன்.

‘மன்னவர் தரு திறை அளக்கும் மண்டபம்
அன்னம் மென் நடையவர் ஆடு மண்டபம்
உன் அரும் அருமறை ஓது மண்டபம்
பன் அருங் கலை தெரி பட்டிமண்டபம்

என்ற பாடல் கண்ணில் பட்டது. உடனே அப்பாடலை எனது வரவேற்புரையில் இணைத்து ‘கம்பன் அறிஞர் கண.சிற்சபேசன் வந்துள்ளதாலும் கம்பனே இது பற்றிப் பாடியுள்ளதாலும் இன்றைய நிகழ்ச்சி அயோத்தியில் நடப்பதற்கு ஒப்பாகும்’ என்று பேசினேன்.

புரிந்தவர் புரியாதோர் எல்லோரும் கைதட்டினார்கள். கல்லூரியில் கைதட்டு வாங்குவது அவ்வளவு பெரிய விஷயமல்ல. ஆனால் எதற்குத் தட்டுகிறார்கள் என்று புரிந்து கொள்ளவேண்டும். எனவே அன்று அத்துடன் என்னுரையை நிறுத்திக் கொண்டேன்.

அது உண்மையிலேயே அயோத்தி நகரின் அழகை வருணிக்கும் பாடல். மொத்தம் எழுபத்தைந்து பாடல்களில் அந்நகரம் வருணிக்கப்படுகின்றது. அதுதான் எனக்கும் அயோத்தி என்ற நகருக்கும் உள்ள முதல் தொடர்பு. அதன் பிறகு அயோத்தி என்ற பெயரைக் கேட்கும் போதெல்லாம் அவ்வினிய பாடல்களும் எத்துணை அழகிய நகரமாகக் கம்பன் அதனை விளக்கியிருப்பான் என்ற நினைவுகளும் வந்து போகும்.

உத்தர பிரதேசத்தில் ராமஜன்மபூமி பிரச்சனை எழுந்த போதும், அந்த வளாகத்திலிருந்த பாபர் மசூதி பற்றிய செய்திகள் வந்த போதும் அவற்றை நான் உன்னிப்பாகக் கவனித்து வரலானேன். நமது பாரத தேசத்திற்கே குல தெய்வமாக விளங்கும் ஸ்ரீராமர் பிறந்த இடத்தில் ஒரு கோவில் கட்டுவதற்கு இத்தனை எதிர்ப்பா என்று எத்தனையோ கோடி இந்திய மக்கள் கொதித்தது என் மனத்திலும் வலித்தது. நான் எழுதிய சில கவிதைகளிலும் எதிரொலித்தது.

இராமருக்குத் திருக்கோயில் கட்டும் புனிதப் பணியில் இந்துக்கள் நடத்திய மாபெரும் போராட்டத்தை நான் ஓர் இந்துவாகத் தொடர்ந்து கவனித்து வந்தேன். நிறைவாக நாம் பெற்ற வெற்றியில் உள்ளம் களித்தேன். எனினும் இந்த நீண்ட போராட்டத்தைப் பற்றிய சரியான செய்திகளை நமது ஊடகங்கள் பகிர்ந்து கொண்டனவா என்றால், நூற்றுக்குத் தொண்ணூறு விழுக்காடு இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். இதன் காரணங்களை ‘செக்யூலர்’ நாட்டில் வாழும் ஒவ்வொரு இந்துவும் அறிவான்.

எனவேதான் ராம் அண்ட் அயோத்யா (Ram and Ayodhya by Meenakshi Jain) என்ற நூல் கண்ணில் பட்டவுடன், அதனை எடுத்து முழுதுமாகப் படித்து முடித்தேன்.

Rama and Ayodhya – Meenakshi Jain

ஸ்ரீ ராமன் கதையும், ஸ்ரீ ராமசந்திரமூர்த்தி தெய்வ வழிபாடும் எத்துணை காலமாக நமது பாரதத் திருநாட்டில் பரவியுள்ளது என்பதைப் பற்றிய தகவல்களை இந்நூல் முதலில் பேசுகிறது. முஸ்லிம்கள் துணையோடு செயல்பட்ட இடதுசாரி வரலாற்று ‘வல்லுநர்கள்’, ராம வழிபாடு (Rama Cult) மிக அண்மையில் பதினெட்டாம் நூற்றாண்டில்தான் உருவானது என்ற பொய்யான கருத்தை எழுதி வைத்திருப்பதை எதிர்கொள்ளும் ஆசிரியர் பல உண்மையான வரலாற்றுச் செய்திகளை தொடக்கத்திலேயே பகிர்ந்து கொள்கிறார்.

அயோத்தியாவில் ராமஜன்ம பூமியில், ஸ்ரீராமர் கோவில் கட்டும் இலட்சியத்துக்குத் தொடக்கத்திலிருந்தே இஸ்லாமியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த எதிர்ப்புப் போராட்டத்தில் 1980-களின் பிற்பகுதியிலிருந்து முன்னணி வகித்தவர்கள் இடதுசாரி வரலாற்று ஆசிரியர்கள். தேசத்தின் பாரம்பரியத்தையும், பண்பாட்டையும், நம்பிக்கைகளையும், மரபுகளையும் பெருமை பொருந்திய நமது வரலாற்றுத் தடங்களையும் பற்றிச் சிறிதும் கவலைப்படாத அரசியல் கட்சிகளும் இந்த எதிர்ப்பில் இணைந்தனர்.

இந்தியாவிலும் வெளிநாட்டு ஊடகங்களிலும் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதை மிகப் பெரிய பிரச்சினையாக ஆக்கிக் காட்டிய அரும்பணியைச்(!) செய்தவர்கள் இவர்கள். நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் இது தொடர்பான வழக்கைப் பற்றிய தவறான செய்திகளையும் சாட்சியங்களையும் தந்தவர்கள் இவர்களே!

‘ராமஜன்மபூமி என்பது இந்துக்களின் நம்பிக்கையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதே அன்றி இதற்கு எந்த சரித்திரச் சான்றும் கிடையாது; ராமஜன்ம பூமியின் மேல் பாப்ரி மசூதி கட்டப்பட்டதற்கான சான்றுகள் எங்கும் இல்லை’ போன்ற பொய்யுரைகளை நீதிமன்றம் வரை சென்று முழங்கிவிட்டு வந்த தீரர்கள் இவர்களே!

இந்தியத் தொல்பொருள் ஆய்வுக் கழகத்தின் (Archaeological Survey of India) கண்டுபிடிப்புகளின்படி இஸ்லாமியர் மற்றும் இடதுசாரிகள் ஆகியோரின் நிலைப்பாடுகள் தவறானவை என்று நிரூபிக்கப்பட்டது. ராமஜன்மபூமி வழக்கில் இறுதியில் இந்துக்களின் பக்கமே சான்றுகளின்படி நியாயம் உள்ளதென தீர்ப்பு வழங்கப்பட்டது.

தொடக்கத்திலிருந்து ராமஜன்ம பூமி போராட்டம் எப்படி எதிர்க்கப்பட்டது என்றும், அவ்வெதிர்ப்புகள் இந்துக்களால் எவ்வாறு அறவழியிலே எதிர்கொள்ளப்பட்டதென்றும், ஒவ்வொவொரு நிலையாக, இந்நூல் மிகச் சுவாரசியமாக விளக்குகின்றது.

ஆங்கிலக் கவிஞர் சர் எட்வின் அர்னால்ட், (Edwin Arnold,) ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருதப் பேராசிரியராக இருந்த மோனியர் வில்லியம்ஸ் (Monier Williams), வடமொழி விற்பன்னர் ஏ.ஏ.மெக்டான்னெல் (McDonnell), ஆஸ்திரிய நாட்டு மொழியியல் பேராசிரியர் மௌரிஸ் விண்டர்னிட்ஸ் (Maurice Winternitz) போன்ற பல பேரறிஞர்களின் மேற்கோள்களைக் காட்டி, ராமகாதை எவ்வாறு இந்தியத் துணைக்கண்டத்திலும், ஆசியாவின் பெரும் பகுதியிலும் பல நூற்றாண்டுகள் முன்பிருந்தே பரவியிருந்தது என்பதை ஆசிரியர் மிகத் தெளிவாக எடுத்துரைக்கிறார். பல உதாரணங்களையும் தருகிறார். அவற்றில் சிலவற்றைக் கீழே காணலாம்.

நான்காம் நூற்றாண்டிலிருந்தே ராமன் புகழ் பரவியிருந்ததைப் பல்வேறு சான்றுகளால் காட்ட இயலும் எனச் சொல்லும் ஆசிரியர் இரண்டு உதாரணங்களைக் குறிப்பிடுகின்றார். ஒன்று, ராம பக்தனான இரண்டாம் சந்திரகுப்தனின் மகளும், வகடகா ராணியும் (Vakataka queen) ஆன பிரபாவதிகுப்தா ராமகிரி மலையில் ராமனுக்கான சரணாலயம் அமைக்க ஆணைகள் கொடுத்த இரண்டு கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. இவை கி.பி. நான்காம் நூற்றாண்டைச் சார்ந்தவை. இரண்டு, இந்த ராமகிரி சரணாலயம் பற்றி, காளிதாசன் தனது ‘மேக தூதம்’ காப்பியத்தில் குறிப்பிட்டுள்ளான்.

ஸ்ரீராமர் பற்றிய பௌனர் கல்வெட்டு ஓவியங்கள்தான் (Scupted Panels of Sri Rama found in Paunar) தொல்பொருள் ஆய்வுச் சான்றுகளில் மிகப் பழமையானவை. தேவ்கர், ஜான்ஸி போன்ற இடங்களில் கிடைக்கும் ராமாயண கல்வெட்டுகள் ஐந்தாம் நூற்றாண்டைச் சார்ந்தவை.

தமிழ் பேசும் பகுதிகளில் எட்டாம் நூற்றாண்டிலிருந்து ராமனை தெய்வமாக ஆலயம் கட்டி வழிபடல் பரவியுள்ளதற்குப் பல சான்றுகள் உள்ளன என்பதை இந்நூல் சுட்டுகின்றது. செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள ஸ்ரீ கோதண்டராம சுவாமி திருக்கோவிலுக்கு முதலாம் பராந்தக சோழன் நிலம் கொடையாகக் கொடுத்ததற்கான கல்வெட்டுச் சான்றுகள் உள்ளன. பத்தாம் நூற்றாண்டு தொடங்கி இந்தியா முழுதிலும் ராமருக்கான தனி வழிபாட்டுத் தலங்களும், தனி ஆலயங்களும் உருவாகத் தொடங்கின. பதினொன்று பன்னிரண்டாம் நூற்றாண்டுகளில் ராமரைப் பற்றிய பக்தி இலக்கியங்கள் பெரிய அளவில் இந்திய மொழிகளில் பரவின.

வால்மீகி ராமாயணத்தின் ஏழு காண்டங்களும் (பாலகாண்டம் உத்தர காண்டம் சேர்த்து) இரண்டாம் அல்லது மூன்றாம் நூற்றாண்டிலேயே முழுமையாகப் படைக்கப்பட்டுவிட்டன என்று பல மேலைநாட்டு வல்லுநர்களின் ஆய்வுகள் சொல்கின்றன. (Jacobi 1960; Bulke-1950; Goldman 1984; Winternitz 1987; Brockongton 2002)

அர்த்தசாஸ்த்ரம் எழுதிய சாணக்கியன், வடமொழி நாடக ஆசான் பாஸன், புத்தமதத்தைச் சார்ந்த அஷ்வகோஷா, குமாரலதா மற்றும் தத்துவஞானி திண்ணாகா (Chanakyaa, Bhasa, Ashvagosha, Kumaralata, Dinnaga) ஆகியோர் படைப்புகளில் ராமாயணம் பற்றிய குறிப்புகள் இருப்பதிலிருந்து கி.பி. நான்கு, ஐந்து நூற்றாண்டுகளில் இந்தியாவில் ராமர் பற்றிய செய்திகள் பரவி இருந்தது தெரிகிறது.

பதிமூன்றாம் நூற்றாண்டில் தேவகிரியை ஆண்ட யாதவ அரசன் ராமச்சந்திரா காலத்தில்தான், அகஸ்திய சம்ஹிதையில் குறிப்பிட்டுள்ளபடி முதன்முதலாக ‘ராம நவமி’ கொண்டாடப்பட்டது.

துளசிதாசருக்கும் முன்னால் ராமபக்தியைப் பரப்பியவர் சுவாமி ராமானந்தர். அரசர்கள் அமைச்சர்கள் எனப் பல சீடர்களைப் பெற்றவர். சேனா என்ற கசாப்புக் கடைக்காரர், ராய்தாஸ் என்ற சக்கிலியர், கபீர் என்ற நெசவுத் தொழிலாளி என சமுதாயத்தின் பல பிரிவினரும் இவர் மூலம் ராமபக்தியை உணர்ந்து அதனை பாரதமெங்கும் பரப்பினர்.

தமிழகத்தில் ராமபக்தி இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இருப்பதை நமது இலக்கியங்கள் பேசுகின்றன. சங்க இலக்கியங்களான, அகநானூறு, புறநானூறு, பரிபாடல் ஆகியவற்றில் ராமாயணக் குறிப்புகள் உள்ளன. சங்கப் புலவர் ஒருவரின் பெயர் வான்மீகி!

தமிழின் ஐம்பெருங்காப்பியங்களான சிலப்பதிகாரத்திலும், மணிமேகலையிலும் ராமாயணத் தகவல்கள் உள்ளன. பக்தி இலக்கியங்களான வைணவ திவ்யப் பிரபந்தங்களிலும், சைவத் தேவாரங்களிலும் இராமாயணக் குறிப்புகள் நிரம்பக் கிடைக்கின்றன. ராமபக்தி இலக்கியத்தின் கொடுமுடியாக விளங்குவதோ ‘கம்ப ராமாயணம்’.

சொல்லிலே பரவிய ராமபக்தியைக் கல்லிலேயும் நம் நாட்டுச் சிற்பங்களில் காணலாம். பொ.யு. இரண்டாம் நூற்றாண்டு காலச் சிற்பம் உத்தரப் பிரதேசத்து கௌசாம்பியில் உள்ளது. தமிழ்நாட்டில் இராமாயணக் கதையைக் கூறும் சிற்பங்கள் பல்லவர்கள் காலத்தைச் சார்ந்தவை. சோழர் காலக் கல்வெட்டுகள், சிற்பங்கள் ஆகியவற்றிலும் ராமர் வடிவங்கள் உள்ளன.

ஸ்ரீ ராமன் வரலாறும் அவன் கோயில்களும் ராமநவமி வழிபாடுகளும் பாரதம் முழுதும் பொ.யு. இரண்டாம் நூற்றாண்டிலிருந்து தொடங்கியதை விளக்கமாக உதாரணங்களோடு தரும் இந்நூல், முஸ்லிம்கள் படையெடுப்பின் கொடுமைகளையும், குறிப்பாக இந்து ஆலய இடிப்புக்களையும் விரிவாக விளக்குகின்றது.

இந்துக்களின் புனிதத் தலமான காசியில் முதல் முஸ்லிம் படையெடுப்பு பொ.யு.1033ல் நிகழ்ந்தது. அன்று தொடங்கி முஸ்லிம் அரசுகளின் ஆட்சி இருந்த முந்நூறு ஆண்டுகள் ஆயிரக் கணக்கான இந்துக் கோயில்கள் சூறையாடப்பட்டன. அவை இருந்த இடத்தில் மசூதிகள் கட்டப்பட்டன. இந்நூற்றாண்டுகளில் காசி விஸ்வநாதர் கோயில் மூன்று முறை சூறையாடப்பட்டுள்ளது. இது போன்று பல கோயில்கள்! படிக்கும் போதே நெஞ்சம் பதைக்கிறது.

காஷ்மீரத்திலிருந்து கன்யாகுமரி வரை உள்ள இந்தியப் பரப்பில் பேசப்படும் அனைத்து மொழிகளிலும் இலக்கியங்களிலும் எவ்வாறு இராமாயணமும் இராம கதையும் பல நூறு ஆண்டுகளாகப் பரவிக் கிடகின்றன என்பதை உதாரணங்களுடன் பதிவு செய்துள்ளார் இந்த நூலாசிரியர். ராமபக்தி என்பதே ஏதோ அண்மையில்தான் அரசியல் நோக்கத்தோடு எழுப்பப்பட்ட மாயை எனச் சொல்லும் இடதுசாரி வாதங்களை இத்தகவல்கள் தவிடுபொடி ஆக்குகின்றன.

இந்தப் பின்னணியில்தான் சுதந்திர இந்தியாவில் ‘அயோத்யா மீட்டெடுப்பு’ போராட்டம் தொடங்கப்பட்டது. இப்போராட்டத்தின் முக்கியமான திருப்புமுனைகளை இந்நூல் அழகாகச் சொல்கின்றது.

மார்ச் 5ம் நாள் 2003 அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் சிறப்புப் பிரிவு இந்தியத் தொல்லியல் ஆய்வுக் கழகத்திற்கு (ASI) ராமஜன்மபூமியில் அகழ்வாய்வு செய்வதற்கு உத்திரவிட்டது.. அதன் விளைவாக சர்ச்சைக்குரிய நிலத்துக்கு அடியிலே இந்து ஆலயம் இருந்ததற்கான சான்றுகள் வெளிப்பட்டன. வழக்கம் போல் மசூதிக் கட்சியினர் இதையும் எதிர்த்தார்கள். ஆனால் அந்த எதிர்ப்புகளுக்கான சரியான காரணங்கள் எவையும் காட்டப்படவில்லை.

இன்னொரு சிறப்பான தீர்ப்பை அலகாபாத் நீதிமன்றம் வெளியிட்டது. ஒரு வழிபாட்டுத் தலத்தை இறை எனக் கொள்ளும் கொள்கையை (concept of a place as deity) நீதிமன்றம் ஏற்றுக் கொண்டு ராமஜன்மபூமியை இறையாக ஏற்றுக்கொண்டது. அதுமட்டுமல்ல, இராமனைக் கடவுளாக எண்ணி வழிபடும் பல்லாயிரக்கணக்கான மக்களின் நம்பிக்கையை ஏற்று அங்குள்ள வழிபடு தெய்வத்தை சட்டத்தின் கணிப்பில் ஒரு ‘நபர்’ எனக் கொள்ளவேண்டும் (deity as a judicial person) என்றும் நீதிமன்றம் முடிவெடுத்தது. இந்தச் சரியான நிலைப்பாட்டை நீதிமன்றம் எடுத்ததற்கு இடதுசாரி அறிஞர்களும், இஸ்லாமிய பாப்ரி மசூதி கட்சிகளும் கடுமையான எதிர்ப்பை வழக்கம் போல் காட்டி, ஊடகங்களில் அறிக்கைகள் விட்டனர். ஆனால் இந்துமத உணர்வைப் புரிந்துகொண்ட நீதிமன்றம் தொடர்ந்து தனது பணியை ஆற்றியது.

நீதிமன்ற விவாதங்கள், இடதுசாரி அரசியல்வாதிகளின் சிறுபிள்ளைத்தனமான வாதங்கள், இஸ்லாமியக் கட்சிகளின் பிடிவாதப் போக்குகள், பிரிவினை அரசியல் செய்யும் கட்சிகளின் ஆதரவு இவற்றிடையே அலுக்காமல் சலிக்காமல் சத்தியத்தை மட்டுமே நம்பி நீதி கேட்டுப் போராடி வென்று காட்டிய ‘அயோத்யா மீட்புப் பணி’யின் பல முகங்களை இந்நூல் சான்றுகளோடு எடுத்துக்காட்டுவது சிறப்பு.

அயோத்யா விவாதங்கள் முடிந்து, ஸ்ரீராமர் ஆலயம், ஜன்மபூமியிலே எழுந்துவரும் இந்த வேளையில், எத்தகைய பொறுமையான போராட்டங்களுக்குப் பிறகு இந்த நன்மை நமது நாட்டிற்கு ஏற்பட்டுள்ளது என்பதைச் சொல்லும் இந்நூல் படிக்கப் படிக்க இனிக்கிறது.

‘ராம நாம பாயஸகே கிருஷ்ண நாம சக்கரே’ எனப் பாடினார் புரந்தரதாஸர். நமக்கோ இந்த இருபத்தியோராம் நூற்றாண்டில் ‘அயோத்யா’ என்ற சொல்லே பாயஸம் போல் தித்திக்கின்றது.

இத்தொடரின் மற்ற பாகங்களை இங்கே வாசிக்கலாம்.

Leave a Reply