
39
திருமணம்
திருவண்ணாமலையில் கோயிலுக்குப் பின்னால் மலை. மலையின் சில நேரப் படிக்கட்டுகளில் ஏறினால் ஆலமரத்துக் குகை ஆசிரமம். சின்னசாமி என்பவர் அங்கே ஒரு ஆல மரத்தை நட்டு, அது வளர்ந்து பெரிதாகி அங்கிருக்கும் குகைக்கு நிழல் கொடுப்பதால் அந்தப் பெயர். மேற்படி குகையில் பகவான் ரமணர் இருந்திருக்கிறார்; விசிறி சாமியாரின் குரு சுவாமி ராமதாசுக்கு ராம தரிசனம் கிடைத்திருக்கிறது. இப்போதைக்கு ஒரு பெரியவர் அங்கே வாசம். பல ஆண்டுகளாக அங்கே தவம் செய்யும் இந்தப் பெரியவரின் பெயர் தெரியவில்லை. பெரியசாமி என்று அழைக்கிறார்கள். நாங்கள் தாத்தா என்று கூப்பிடுவோம்.
பெரியசாமி பற்றி அதிக விபரங்களைச் சேகரிக்க முடியவில்லை. இருபது வருடங்களாக ஆலமரத்துக் குகையில் தங்கி தவம் செய்கிறார் என்பது மட்டும் உறுதியான தகவல். அதற்கு முன் பல இடங்களில் திரிந்திருக்கிறார். அதற்கும் முன்னால் சென்னை மயிலாப்பூரில் கச்சேரி ரோடில் ஒரு ஓட்டலில் சர்வராக இருந்திருக்கிறார். அந்த நேரத்தில் ஒரு வைராக்கியம் ஏற்பட்டு தன்னுடைய ஆன்மிகப் பயணத்தைத் தொடங்கியிருக்கிறார்.
சின்னசாமி என்பவர் மதுரையைச் சேர்ந்தவர். ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் தீவிரமாக இருந்த அவர் திருவண்ணாமலைக்கு வந்து இந்த குகையைக் கண்டு தியானம் செய்து அதில் லயித்துப் போய் துறவியாக மாறி இங்கேயே தங்கிவிட்டார். ஆலமரத்து ஆசிரமம் என்ற அமைப்பாக மாறிவிட்டது.
நாங்கள் ஒரு கூட்டமாக திருவண்ணாமலைக்குப் போய் ஆலமரத்து குகை ஆசிரமத்தில் தங்குவது வழக்கம். நாலு கார், பன்னிரண்டு பேர் என்று புறப்பட்டு கூல் டிரிங்க்ஸ், பட்சணங்களை நிரப்பிக் கொண்டு உல்லாசப் பயணம் போல் இருக்கும் ஆன்மீகப் பயணங்கள் அவை.
ஒரு முறை நானும் டாக்டரும் முதல் வண்டியில் போய் படியேறி ஆசிரமத்தை அடைந்து விட்டோம். பிறகு நண்பர்கள் உற்சாகமாகப் பேசிக்கொண்டே வந்தார்கள். கடைசியில் வந்தது பிச்சை. பிச்சையின் தோளில் மூட்டையாகப் போர்வைகள், தலையணைகள். கலகலப்பாக இருந்த அந்த சூழ்நிலையை டாக்டரின் வார்த்தை மாற்றிவிட்டது.
“அறிவே கிடையாது” என்றார் டாக்டர். பிச்சையைப் பற்றி டாக்டர் ஏதோ சொல்கிறார் என்கிற ரீதியில் சபை அதைப் புரிந்துகொண்டது. எனக்குப் பொறுக்கவில்லை “டாக்டர் உங்களதான் சொல்றார், ஆளுக்கு ஒரு தலைகாணியை எடுத்துட்டு வரக்கூடாதா, எல்லாத்தையும் அவன்தான் சுமக்கணுமா” என்று கேட்டேன்.
டாக்டரின் கோபம் குறைந்துவிட்டது. பிச்சை, நோ ரியாக்க்ஷன்.
ஒரு சமயம் பெரியசாமியிடம் பேசிக்கொண்டிருந்தோம். சென்னையிலிருந்து வந்திருந்த சினிமா தியேட்டர் முதலாளி, செட்டியார் அங்கேயிருந்தார்.
பிச்சை தாத்தாவிடம் கேட்டான், “தாத்தா நீங்கள் சொல்றதெல்லாம் நல்லாதான் இருக்கு, ஆனால் உங்களை நெருங்குவதற்கு பயமாயிருக்கு.”
பெரியசாமி பதில் சொல்வதற்குள் செட்டியார் முந்திக்கொண்டார், “எதுக்கு தம்பி பயப்படணும், கண்ணப்பன் சிவன் மேலே கால தூக்கி வெக்கலையா, அன்புதான் முக்கியம்” என்றார்.
பெரியசாமியிடமிருந்து வெளிப்பட்ட வார்த்தைகள் இவை, “கண்ணப்பன் கண்ண புடுங்கி கொடுத்தான், நம்மால மயிரைக் கூட புடுங்க முடியாது”.
சின்னசாமிக்கு ஆலமரத்து குகை ஆசிரமத்தை பெரியதாக வளர்த்து ரமணாசிரமம் போல செய்ய வேண்டும் என்பது நீண்டநாள் திட்டம். ஆனால் இந்த மாதிரி விஷயங்களில் பெரியசாமிக்கு ஈடுபாடு இல்லை. அவர் தானுண்டு தன்னுடைய தியானம் உண்டு என்றே எப்போதும் இருப்பார். குகைக்குள்ளே தியானம் – லலிதா சகஸ்ராம பாராயணம் – என்கிற வழியில்தான் அவருடைய அன்றாட நடவடிக்கைகள் இருக்கும். எப்போதாவது வெளியில் வந்து உரையாடுவார். அவரோடு உரையாடுவதற்கு தகுதிகள் எதுவும் தேவையில்லை. பட்டணத்து பணக்காரராக இருந்தாலும் பட்டிக்காட்டு ஏழையாக இருந்தாலும் ஒரே மரியாதைதான். கிராமத்துப் பெண்மணிகள் அவர் முன் உட்கார்ந்து குடும்பக் கதையைப் பேசிக் கண்ணீர் வடிப்பதை நானே பார்த்திருக்கிறேன்.
பெரியசாமியின் மனதை மாற்றுவதற்காக சின்னசாமி செய்த முயற்சிகள் எதுவும் பலன் தரவில்லை. எனவே எங்கள் மூலமாக சொல்லிப் பார்க்கலாம் என்று அவர் முயற்சி செய்தார். “நீங்க பெரியவர்கிட்ட சொல்லுங்கள், நீங்கள் சொன்னா அவர் கேட்பார். நாலு பேர்கிட்ட காசு வாங்கினாதானே இதை டெவலப் பண்ணமுடியும். எப்படியாவது இதை ரமணாஸ்வரம் போல் ஆக்கணும்கிறதுதான் என்னோட திட்டம்” என்றார் சின்னசாமி.
நாங்களும் கால நேரம் பார்த்து, பெரியவரிடம் கேட்டோம் “தாத்தா, சின்னசாமி இவ்வளவு கஷ்டப்படுகிறாரே, நீங்கள் ஒரு வார்த்தை சொன்னால் எத்தனையோ பேர் பணம் கொடுப்பார்கள் சொல்லக்கூடாதா” என்று நான் கேட்டேன்.
“அவனுக்கு என்ன வேணுமாம்” என்றார் அவர்.
“இந்த ஆசிரமத்தை ரமணாஸ்ரமம் போல உலகளவில் தெரியும்படியாக பண்ணனும் என்று அவர் நினைக்கிறார்” என்றேன் நான்.
“ரமணர் என்ன பண்ணார். இவனை மாதிரி மோட்டார் சைக்கிள் எடுத்துகிட்டு ஊர் ஊரா அலைஞ்சாரா, இல்லையே. ஒண்ணுமே வேணாம்னு முடிவெடுத்து அவர் ஒரு இடத்தில் உட்கார்ந்தார். ஸ்திரமா உட்கார்ந்தார். உட்கார்ந்தவரைப் பார்த்து, உட்கார்ந்தவரைத் தேடி உலகமே வந்தது. இவனை உட்காரச்சொல்லு, உலகமே இவனைத் தேடிவரும். ஓடுற வரைக்கும் ஒரு பய மதிக்கமாட்டான். உட்கார்ந்தால் இன்னொரு ரமணாஸ்ரமம் உருவாகும்” என்றார் பெரியசாமி.
இதை எப்படி சின்னசாமியிடம் கொண்டுசெல்வது என்று எங்களுக்குத் தெரியவில்லை. பெரியசாமி என்ன சொன்னார் என்று அவர் கேட்டபோது ஏதோ சொல்லி சமாளித்துவிட்டோம்.
நண்பர்கள் எல்லோரும் அந்த இடத்தில் சித்தவித்தை அப்பியாசம் செய்வார்கள். நானோ தங்குவதற்கு மட்டும் அந்த இடத்தைப் பயன்படுத்திக்கொண்டு மலைமேலே சுற்றி வருவேன். ஆலமரத்து ஆசிரமத்திற்கு மேலே இருப்பது விருபாட்ச்சிஸ்வரர். குகை சமாதிக்கும் மேலே கோயில். எப்போதும் பூட்டியிருக்கும் அந்த கோயிலின் உள்ளே ஒரு இளம் வயது பெண்மணி தங்கியிருப்பாள். அவள் பிரெஞ்சுக் காரி என்பதை குறித்துக்கொள்ளவும். மிகப் பெரிய வாளியில் தண்ணீர் எடுத்து வந்து படிகளில் ஏறி அந்த லிங்கத்திற்கு அன்றாடம் அபிஷேகம் செய்வாள். வேடிக்கைப் பார்க்கும் எண்ணத்தில் வருகிற சுற்றுலாப் பயணிகளை உள்ளே அனுமதிக்கமாட்டாள். பக்தர்களா, தியானம் செய்ய வந்தவர்களா என்று கேட்டுத் தெரிந்துகொண்ட பின்புதான் அனுமதி கிடைக்கும்.
இன்னும் மேலே போனால் இன்னொரு சமாதி. தூசு தும்பு இல்லாமல் பளிச்சென்று இருக்கும். அந்த இடத்திலே முகப்பில் குட்டி லிங்கம், அதைச் சுற்றிச் சின்னக் குளம், சில பன்னீர் புஷ்பங்கள். பக்தி இல்லாதவனுக்குக் கூட பக்தி கொஞ்சம் முளைத்துவிடக்கூடிய இடம் அது. அவர் பெயர் மணி சாமியார். மணி சாமியார் சீக்கிரத்திலே நமக்கு நெருக்கமாகிவிட்டார். நம்முடைய இயல்பு தவறாமல் அவருடைய பூர்விகத்தைக் கேட்டேன். அவர் சொன்னது:
“சொந்த ஊர் அரக்கோணம். தமிழாசிரியராக இருந்தேன். அரசியலிலும் ஈடுபாடு உண்டு. திராவிட முன்னேற்றக் கழகத்தில் அந்தப் பகுதியில் நான் பேசாத மேடைகளே கிடையாது. ஒரு நாள் ஒரு பெரியவரை சந்தித்த போது அவர் என்னைக் கேட்டார். ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ அப்படின்னு சொல்றியே அது யார் சொன்னாங்க தெரியுமா என்றார் அவர். பேரறிஞர் அண்ணா என்று நான் சொல்லிவிட்டேன். விதி அப்போது விளையாடியது. ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பது திருமூலரின் திருமந்திரம் என்பதை விளக்கிச் சொல்லி அதை அண்ணாவின் வார்த்தை என்று நம்புவது பேதமை என்று அவர் சுட்டிக் காட்டினார். அவர் சொன்னது என்னை வெகுவாக பாதித்துவிட்டது. இரவு நேரம், வீட்டுக்கு வெளியே கயிற்றுக் கட்டிலில் படுத்திருந்தேன். இப்படி தப்பு செய்துவிட்டோமே, என் பேச்சைக் கேட்டு எத்தனை பேர் ஏமாந்து போயிருப்பான், அது மட்டுமல்ல என்னை மாதிரி எத்தனை பேர் பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்று நினைத்து நினைத்து செயலற்றுப் போனேன். பொழுது விடிந்தது தெளிவு பிறந்தது. இதற்குப் பரிகாரம் செய்ய வேண்டுமென்று முடிவெடுத்தேன். வீட்டாரிடம் சொல்லிவிட்டு திருவண்ணாமலைக்கு வந்தேன். எனக்காகவே காத்திருந்தது போல அங்கே ஒரு துறவி இருந்தார். என் கதையைக் கேட்டுவிட்டு அவர் சொன்ன பரிகாரம் இதுதான். ‘ஆறுமாத காலம் இந்த மலையை அப்பிரதட்சணமாக சுற்றி வா’ என்றார் அவர். எல்லாரும் பிரதட்சணமாகத்தானே சுற்றுவார்கள் என்று நான் கேட்டேன். ‘போகும் போது புண்ணிய மூட்டையை தூக்கிப் போவானேன். அப்பிரதட்சணமாக சுற்றினால் புண்ணியம் நம்மைவிட்டுப் போய்விடும்’ என்றார் அவர். அப்படியே செய்தேன். அதற்குப் பிறகு மலைமேலே வந்து இங்கே தங்கிவிட்டேன்” என்றார் மணி சாமி.
பிச்சை மணிசாமியிடம் கேட்டான். “சாமி, உலக பந்தத்தை எப்படி விடுவது?”
“மரத்தைப் பிடிச்சுக்கிட்டு விடு விடு என்றால் மரமா விடும், நீதான் விடணும். மரம் உன்னைப் பிடிக்கல. நீதான் மரத்தை பிடிச்சிருக்க” என்றார் அவர்.
இப்படியாகப் பல கதவுகள் திறக்கப்பட்டன.
*
எனக்கும் முகுந்தாவுக்கும் சமயவயது. அடையாறு பெரியம்மா வீட்டில் தங்கிக்கொண்டு நான் ராயப்பேட்டை வேலைக்குப் போய்வந்துகொண்டிருந்தேன். முகுந்தா அதே வீட்டில் தங்கிக்கொண்டு – என்னுடைய மன்னி அவனுக்கு அக்கா – மவுண்ட் ரோடில் வேலைக்குப் போய்வருவான். நான் சைக்கிளில் போய் காபி பவுடர் விற்றுக்கொண்டிருந்தேன். முகுந்தா விமானத்தில் போய் இயந்திரங்களை விற்றுக்கொண்டிருந்தான். அதெல்லாம் அலுவலகத்தோடு சரி. வீட்டில், இருவரும் சமம்தான்.
சமம் என்று சொல்வதில் சிறிய திருத்தம் தேவைப்படுகிறது. ஜக்கம்மா என்று அழைக்கப்படுகிற ஜகதாம்பாள் மன்னிக்கு தம்பி மீது பாசம் அதிகம். இருவரையும் நல்லபடியாக நடத்தினாலும், தம்பிக்கு ஓரளவு கூடுதல் கவனிப்பு இருக்கும். நுட்பமாகக் கவனிப்பவர்களுக்கு இது புலப்படும். நான் நுட்பமாக கவனித்துக் கொண்டிருந்தேன்.
கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள திருவிடந்தை நித்யகல்யாணப் பெருமாள் கோவிலில் வேண்டிக்கொண்டால், சீக்கிரத்தில் விவாகம் நடக்கும் என்று மன்னியிடம் யாரோ சொல்லிவிட்டார்கள். சுறுசுறுப்பாகச் செயல்பட்ட மன்னி, ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை அங்கே போவதற்கு வாடகைக் கார் ஏற்பாடு செய்துவிட்டார். முகுந்தனுக்குத் தகவல் சொல்லிவிட்டார், எனக்குச் சொல்லவில்லை. ஆனால், முகுந்தன் என்னை அழைத்து “பிரச்சினை பண்ணாதடா. நாளைக்கு காலைல திருவிடந்தை கோவிலுக்குப் போறோம், நீயும் வர” என்று சொல்லி என்னைக் அடக்கி வைத்தான்.
காலையில் பயணம். கோவில் வாசலில் அர்ச்சனைத் தட்டு வாங்கும்போது நான் அடக்கிவைத்திருந்த கோபம் அதுவாக வெளிவந்துவிட்டது. “முகுந்தா, ரெண்டு பேரும் ஒரே வீட்ல இருக்கோம், ஆனா உங்க அக்கா உனக்கு மட்டும் கல்யாண ஏற்பாடு பண்றா, பரவால்ல, பெருமாளுக்குத் தெரியும். அவர் நியாயமா நடந்துக்குவார்” என்றேன் நான்.
முகுந்தன் பதில் பேசவில்லை, அதிசயமாக மன்னியும். ஆனால், இன்றுவரை தனக்குக் கல்யாணம் ஆகாததற்கு நான் கொடுத்த சாபம்தான் காரணம் என்று முகுந்தா சொல்லிக் கொண்டிருக்கிறான்.
பெருமாள் புண்ணியத்தில் என் திருமண விஷயமாக வாய்ப்பு வந்தது. பழைய வண்ணாரப்பேட்டையில் இருக்கும் சஞ்சீவி ராமையாவின் புதல்வி பத்மாதான் அந்தப் பெண். பத்மாவின் அம்மா ஹிந்தி டீச்சர். பத்மா ஹிந்தி டீச்சர், தம்பி ஹிந்தி டீச்சர், தங்கை ஹிந்தி டீச்சர், ஏதோ ஒரு வகையில் எங்களுக்கு தூரத்து சொந்தம்.
பத்மாவின் புகைப்படம் கிடைத்ததும் டாக்டரிடம் காட்டினேன்.
“பண்ணிக்கோ” என்றார்.
நான், “இப்படி எல்லோரும் குடும்பம் குழந்தைன்னு போய்டிருந்தா இந்த அமைப்பை எல்லாம் யார் பாத்துக்கறது?”
“இப்போ நான் இல்லையா, அந்த மாதிரியே இரு” என்றார் அவர்.
டாக்டருக்கு சந்ததி இல்லை, எனக்கும்.
பாலசுப்பிரமணியன்-பத்மா திருமணம் சென்னை ஜார்ஜ் டவுனில் உள்ள ராமானுஜ கூடத்தில் சிறப்பாக நடந்தது [ஏப்ரல் 8, 1986]. ஆயிரம் பேருக்கு மதிய விருந்து. இத்தனைக்கும் மாமனாருக்கு செலவு வைக்கக் கூடாது என்கிற எண்ணத்தில், என் மீனவ சொந்தங்களை நான் அழைக்கவில்லை. மாலை நிகழ்ச்சியில் ஆந்திராவைச் சேர்ந்த ராஜசேகரங்காரு என்கிற சங்கீதக்காரர் திருப்பாவையைத் தெலுங்கில் மொழிபெயர்த்து அரங்கேற்றினார். தூர்தர்ஷன் நண்பர் அனந்து கல்யாணத்தை வீடியோ பதிவு செய்துகொடுத்தார்.
முதல் பழக்கத்தில் மனைவியின் நிறம் சிவப்பு, குணம் வெளுப்பு என்பதைத் தெரிந்துகொண்டேன்.
நானும் பத்மாவும் தேனிலவுக்காக பெங்களூர் போனோம். அங்கே ரமணன் தன் வீட்டைக் காலிசெய்து எங்களுக்குக் கொடுத்துவிட்டு தன்னுடைய அக்கா மாலா வீட்டுக்குப் போய்விட்டான். அதாவது, ரமணன், மனைவி அனு, குழந்தைகள் ஆனந்த், விக்ரம், எல்லோரும் மாலா வீட்டுக்கு. சாப்பாட்டு வேளைக்கு நாங்களும் அங்கே போய்விடுவோம். நான்கு நாட்களுக்கு இப்படி ஒரு தனிமையான, இனிமையான ஏற்பாடு.
இதைத்தொடர்ந்து நான், பத்மா, ரமணன், அனு, ஆனந்த் விக்ரம், வேலைக்காரப் பெண் எல்லோரும் மைசூருக்குப் போனோம். மைசூரில் பாபுவும் பாபுவுடைய அண்ணன் வாசுவும் இருந்தார்கள். இவர்கள் ரமணனுடைய நண்பர்கள், தொழிலாளிகள். எனக்குக் கொஞ்சநாள் பழக்கம்தான். ஆனால், அது அப்போது உறைக்கவில்லை.
நானும் பத்மாவும் பாபு வீட்டில் தங்கிக்கொண்டோம். மற்றவர்கள் எல்லோரும் வாசு வீட்டில். வேளாவேளைக்கு வாசு வீட்டில் இருந்து எங்களுக்கு காபி, டிபன், சாப்பாடு வந்துவிடும். இப்படியாகச் சில நாட்கள்.
ஒருநாள், கர்நாடக அரசு டூரிஸ்ட் பஸ்ஸில் ஊர் சுற்றிப் பார்த்தோம். சாமுண்டீஸ்வரி கோவில், மைசூர் அரண்மனை இப்படியாகப் போன அந்தப் பயணத்தின் துவக்கத்தில் எனக்கொரு பிரச்சினை ஏற்பட்டது. எல்லோரும் ஞாபகமாக கேமரா எடுத்து வந்திருந்தார்கள். ஒவ்வொரு இடத்திலும் மனைவியை அணைத்துக்கொண்டு போட்டோ எடுத்துக் கொண்டார்கள். என்னால் சாமுண்டீஸ்வரி கோவிலில் புகைப்படம் எடுக்க முடியாமல் போனது.
மைசூர் அரண்மனைக்குப் போவதற்குள் ஒரு ஏற்பாடு செய்துவிட்டேன். பஸ்ஸில் இருந்த இன்னொரு ஜோடி சென்னை பழைய வண்ணாரப்பேட்டை மார்வாடிகள். தங்கள் திருமண நாளைக் கொண்டாடுவதற்காக மைசூர் வந்திருக்கிறார்கள். மார்வாடியோடு பேசி தம்பதிகளை ஒவ்வொரு இடத்திலும் நான் படம் எடுக்கிறேன் என்றும் அதே மாடலில் எங்களை வைத்து அவர் படம் எடுக்கவேண்டும் என்றும், ஒப்பந்தம் செய்துகொண்டேன். பிறகு சென்னையில் சந்தித்து புகைப்படங்களை நான் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பது ஏற்பாடு.
சென்னைக்கு வந்துவிட்டோம். பத்மா அம்மா வீட்டுக்குப் போனாள், அதாவது பழைய வண்ணாரப்பேட்டைக்கு. அப்படியே மார்வாடியைப் பார்த்து போட்டோக்களை வாங்கிவந்துவிடு என்று சொல்லி அனுப்பினேன்.
பத்மா வந்தாள், போட்டோ வந்தது, கூடவே “அந்த ஆள் ரொம்ப கடுப்புல இருக்காருங்க. இனிமே அங்க நான் போமாட்டேன்” என்றாள் அவள். உடனே மார்வாடிக்கு போன் செய்தேன்.
மார்வாடியின் கோபத்தில் நியாயம் இருந்தது. அவர் எடுத்த படங்கள் எல்லாம் ஒழுங்காக வந்திருந்தன. நான் எடுத்தது ஒன்றுகூடத் தேறவில்லை. அவரை சமாதானம் செய்யும் விதமாக, “வாங்க திரும்பி மைசூருக்குப் போகலாம்” என்று ஆரம்பித்தேன்.
“இந்த விளையாட்டுக்கு நான் வரல” என்று சொல்லி போனை வைத்துவிட்டார்.
தொடரும்…
இந்தத் தொடரின் மற்ற பகுதிகளை இங்கே வாசிக்கலாம்.