Posted on Leave a comment

சில பயணங்கள் சில பதிவுகள் 40 – சுப்பு

பெரியார் ஈவெரா

இதுவரை நான் அறிந்திராத ஒரு உலகத்திற்குள் எட்டிப்பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது-திரையுலகம். பத்மா வந்தது நல்லநேரம் என்று சொல்லலாம்.

நண்பன் ரவியுடைய தந்தை கல்யாணராமன் திரையுலக தயாரிப்பாளர் என்பதைக் குறித்துக்கொள்ளவும். நாங்கள் அவரை மாமா என்று அழைப்போம். எம்ஜிஆர், சிவாஜி போன்ற பிரபலங்களை வைத்துப் படம் எடுத்திருக்கிறார். இந்தமுறை நடிகர் பிரபு-அம்பிகா ஜோடியில் ‘ராஜா நீ வாழ்க’ என்ற படம் எடுத்து கையைச் சுட்டுக் கொண்டுவிட்டார். திரையுலகப் பிரச்சினைகளுக்கு திரையுலகத்திலேயே தீர்வுகள் உண்டு. அங்கே விட்ட பணத்தை அங்கேயே எடுக்க வேண்டும். எனவே அடுத்த படத்திற்குப் பூஜை போட்டார். இது கொஞ்சம் பெரிய பட்ஜெட் என்பதால் பணத்தைப் பாதுகாப்பதற்கு அவருக்கு நம்பிக்கையான ஆள் தேவைப்பட்டது. நான் நியமிக்கப்பட்டேன். காபி பவுடர் விற்கும் வேலை தொடர்ந்தாலும் சினிமா கம்பெனி கணக்கு பார்க்கும் வேலை மாலை நேரத்திலேயே இருக்கும் என்பதால் எனக்கு இரட்டைக் குதிரை சவாரி.

அடுத்த படத்தின் பெயர் ‘மூன்று கட்டளைகள்’. இயக்குநர் ஆர்.சுந்தர்ராஜன் அந்த நேரத்தில் தொடர்ந்து ‘அம்மன் கோவில் கிழக்காலே’, ‘வைதேகி காத்திருந்தாள்’ போன்ற பல வெற்றிப் படங்களைக் கொடுத்திருந்தார். மூன்று கட்டளைகள் படத்தின் கதாநாயகன் விஜயகாந்த். ஜோடியைத் தேடிக்கொண்டிருந்தார்கள் வடநாட்டில்.

பூர்வாங்க வேலை சென்னை நியூ உட்லெண்ட்ஸ் ஹோட்டலில் நடந்த பூஜையோடு தொடங்கியது. பூஜைக்கு முதல்நாள், கலர் பேப்பர், ஜிகினா பேப்பரோடு வந்தவர்கள் அலங்காரம் செய்வதற்குக் கேட்ட தொகையைப் பார்த்த போது அதில் ஒரு சினிமாவே எடுத்துவிடலாம் என்ற முடிவிற்கு நான் வந்துவிட்டேன். மாமாவிடம் முறையிட்டேன். ‘பூஜையில் குறைவைக்காதே’ என்று சொல்லிவிட்டார். பின் எதில் குறை வைப்பது? தெரிந்தவன் தெரியாதவன், பார்த்தவன் பார்க்காதவன் எல்லோருக்கும் விருந்து. ஏதாவது ஏழை பாழை சாப்பிட்டாலாவது நான் நிம்மதியாக இருந்திருப்பேன்.

மூன்று மாத வாடகை என்று பேசி, ஹோட்டல் பாம்குரோவில் ரூம் போட்டு அது ஆறுமாதமாக நீட்டிக்கப்பட்டது, டிஸ்கஷனுக்காக. வாரத்திற்கு ஒரு முறை ஹோட்டலுக்குப் போய் அங்கே என்ன நடக்கிறது என்பதை செக் செய்ய வேண்டும் என்பது எனக்கு இடப்பட்ட பணி.

ஒரு நாள் போனேன். கதவைத் தட்டினேன். ஒருவர் வந்து கதவைத் திறந்துவிட்டு ஏற்கெனவே அவர் டிவியில் பார்த்துக்கொண்டிருந்த படத்தைத் தொடர்ந்து பார்க்க ஆரம்பித்தார். நானும் ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டு படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன். சிறிது நேரம் கழித்து மாமா வந்தார். எங்களைப் பார்த்ததும் மாமாவுக்குக் கோபம் வந்துவிட்டது. “என்ன இரண்டு பேரும் உட்கார்ந்துகொண்டு சினிமா பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள்” என்று வெடித்தார்.

சினிமா கம்பெனியில் சினிமா பார்ப்பது குத்தமா என்பது எனக்குத் தெரியவில்லை. அறையில் இருந்த நபர் ஆடிப்போய்விட்டார். பிறகு அங்கிருந்து நாங்கள் புறப்படும்வரை அவர் உட்காரவே இல்லை. நானும் மாமாவும் கீழே வந்து காரில் ஏறிக்கொண்டோம். என்னை சமாதானப்படுத்துவதற்காக மாமா சொன்னார், “இது யாருன்னே தெரியல.. நம்ம படத்துல நடிக்கிறாரா கூட தெரியல.. ஆனா நாம அதெல்லாம் கேட்கமுடியாது” என்றார்.

இரண்டு நாள் கழித்து டிவியில் ஒரு தமிழ் சினிமாவைப் பார்த்துக் கொண்டிருந்தேன். ஹோட்டல் அறையில் உட்கார்ந்தபடி சினிமா பார்த்தவர் இந்தப் படத்தில் நகைச்சுவை நடிகர், நாடறிந்த செந்தில் என்பதை உணர்ந்து எனக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. ஆனால் அதுதான் சினிமா. ஸ்தூலமான தோற்றம் வேறு, உள்ளிருக்கும் அவலம் வேறு. சரியாகச் சொல்ல வேண்டுமென்றால் இது இரண்டாவது அதிர்ச்சி.

மாமா தயாரித்த ‘ராஜா நீ வாழ்க’ என்ற திரைப்படம் எனக்கு முதல் அதிர்ச்சியைக் கொடுத்தது. சத்யா ஸ்டுடியோ அரங்கில் ஒரு கிளப் டான்ஸ். பிரதானமாக நடிகை அனுராதா சட்டத்திற்கு பயந்து ஒரு சட்டையைப் போட்டுக் கொண்டிருந்தார். ஷுட்டிங் இடைவேளையில் நாங்கள் இருக்கிற பக்கம் வந்து அடக்க ஒடுக்கமாக போர்த்திக்கொண்டு உட்கார்ந்திருப்பார். எல்லோரும் பார்ப்பதற்கு ஏற்பாடு செய்துவிட்டு இந்தப் பெண்மணி எதற்காக மறைக்கிறார் என்பதுதான் என்னுடைய முதல் அதிர்ச்சி.

பணம் தண்ணீராகச் செலவாகி, ரவி, கண்ட வட்டிக்குக் கடன் வாங்கி, வரவு என்ற பதிவே இல்லாத அந்தத் திரைப்பட முயற்சி ஒரு கட்டத்தில் ‘இது நம்முடைய ராசி என்று சொல்லிவிடுவார்களோ’ என்ற கவலை எனக்கு வந்துவிட்டது. நல்ல வேளையாக ரவி, மாமா அந்த மாதிரி எதுவும் செய்யவில்லை. தவிர எனக்கு டாக்டரின் முழு ஆதரவும் இருந்தது. அந்த காலகட்டத்தில் எங்களுடைய சுகதுக்கங்கள் எல்லாவற்றிற்கும் டாக்டரே பொறுப்பேற்றுக் கொண்டு வந்ததால் ரவியின் பிரச்சனைகளும் எல்லை மீறிப் போகாமல் இருந்தன. ஷோபனா ஒரு நடைமுறை வேதாந்தி என்பதால் அவளுக்கும் கவலையில்லை.

ராஜா நீ வாழ்க திரைப்படத்தைப் பொருத்தவரை எனக்குத் தனிப்பட்ட முறையில் ஒரு லாபம். கதாநாயகன் பிரபு போட்ட சட்டைகள் எல்லாம் ஷுட்டிங் முடிந்த பிறகு கம்பெனிக்கு வந்துவிடும். இருபது சட்டைகள். என்னுடைய பங்கு ஐந்து. பிரபு அளவிற்கு என் உடல் பருமன் இல்லையென்றாலும் இலவசச் சட்டையை விடுவதற்கு மனமில்லை.

சினிமா தயாரிப்பு, கம்பெனியின் பணப் பாதுகாப்பு எல்லாம் ஒருபுறம் இருக்க, காபி கம்பெனியில் விற்பனை வேலையையும் நல்லபடியாகவே செய்து கொண்டிருந்தேன். என்னைப் பொருத்தவரை அலுவலக வேலையில் குறிப்பாக விற்பனையில் சாதனையாளனாகவே இருந்தேன். எல்லாம் டாக்டரின் தயவுதான். மற்றவர் கஷ்டப்பட்டுச் செய்கிற வேலையை நான் சுலபமாக முடித்துவிடுவேன். இப்படி இருந்தும் மேலதிகாரியிடம் ஏற்பட்ட மோதலில் நான் அடங்கிப் போக விரும்பாததால் வேலையை விட்டு வெளியேறினேன்.

அதே நேரத்தில் நண்பர்கள் பிச்சை, குகன் முயற்சியில் ஆனந்த ஜோதி பார்மா என்கிற மருந்து கம்பெனி உருவாக்கப்பட்டது. சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் மருந்துகளை மொத்தமாக விற்பனை செய்ய வேண்டும்.

கம்பெனியின் மேலாளராக பொறுப்பேற்றுக் கொள்ளும்படி அழைத்தார்கள், சேர்ந்துவிட்டேன். சரியாகச் சொல்ல வேண்டுமென்றால் நான் வேலை இல்லாமல் இருந்தது ஒருநாள்தான்.

சேலத்தில் ஐந்து ரோடில் ஜாகை. ஒரு வருட காலம் இப்படி கழிந்தது. பிறகு முதலாளிகளுக்குள் பிரச்சினை ஏற்பட்டுத் தொழில் முடிவுக்கு வந்தது. என்னைப் பொருத்தவரை எந்த கவலையும் இல்லை. அப்படியே அடுத்த வேலைக்குத் தாவிவிட்டேன்.

திண்டுக்கல் நகரின் எல்லையில் இருக்கும் பி.எஸ்.என்.ஏ பொறியியல் கல்லூரியில் மேலாளர் உத்தியோகம். நான் போன நேரத்தில் மாணவர்களிடம் கேப்பிட்டேஷன் தொகையை வசூலிக்கும் வேலையை என்னிடம் ஒப்படைத்துவிட்டார்கள். புதையலைக் காக்கும் பூதம் போல பணத்தை வசூல்செய்வதும் பாதுகாப்பதும் என்னுடைய பொறுப்பில் இருந்தது. எந்த விதத்திலும் சுவாரஸ்யமில்லாத இந்த வேலையிலும் ஒரு லாபம், ஒரு திருப்பம். லாபம், நான் நியூமராலாஜி கற்றுக்கொண்டது. திருப்பம், அடுத்த பாராவில்.

மாலை நேரத்தில் அறையைப் பூட்டிவிட்டு வெளி வராண்டாவில் நடந்துகொண்டிருந்தேன். இரண்டு மூன்று நாட்கள் நடைபழகும்போது அங்கே ஒரு போலீஸ் அதிகாரி நின்றுகொண்டிருப்பதைப் பார்த்தேன். அவரை அழைத்துப் பேசினேன். விஷயம் இதுதான். கல்லூரியில் சேர அவருடைய மகள் விண்ணப்பம் செய்திருக்கிறாள். மெக்கானிக்கல் பிரிவில், அதன் விலை ரூபாய் 40,000. போலீஸ் அதிகாரியிடம் பணமில்லை. “நீங்க வேணும்னா விசாரித்துப் பாருங்க சார், நான் ரொம்ப நேர்மையான அதிகாரி. என்னிடம் சொந்தமாக சைக்கிள் கூட கிடையாது. எங்க அப்பாவுக்குக் கூட கவர்மெண்ட் மருத்துவமனையில்தான் வைத்தியம் பாக்குறேன். ஏதாவது செய்யுங்கள்” என்றார்.

“இப்ப சீட் கொடுக்கிறேன். அப்பறம் பணம் கட்டுறீங்களா” என்று கேட்டேன். “அதுகெல்லாம் வசதி இல்ல சார்.” அவர் கண்களில் நீர் வந்துவிட்டது. அதற்கு மேல் வளர்த்த விரும்பாமல் மறுநாள் வரச்சொல்லி அவரை அனுப்பிவிட்டேன்.

எனக்குத் தெரிந்த நண்பரிடம் விசாரித்தேன். “ஆமாம் சார், ரொம்ப நேர்மையானவர். வயர்லெஸ்ல பேசும் போது கூட திருக்குறள் சொல்லிட்டுதான் ஆரம்பிப்பார். முதலமைச்சர் கலைஞர் மதுரைக்கு வந்தா எல்லா அதிகாரிகளும் காலையில ஸ்டேஷனுக்குப் போயிடுவாங்க. இவர் போகமாட்டார். டியூட்டி இருந்தாதான் போவார்” என்றார்.

கடைசியாகச் சொன்ன விஷயம் எனக்குப் பிடித்திருந்ததால் அதிகாரியின் மகளுக்கு சீட் கொடுத்துவிட்டேன், பணம் வாங்கவில்லை.

வார இறுதியில் கல்லூரி சேர்மனோடு உட்கார்ந்து கணக்கு பார்க்கும் போது 40,000 ரூபாய் குறைவு. அவரிடம் அதிகாரியைப் பற்றிச் சொன்னேன், அதிகாரியின் நேர்மையைப் பற்றிச் சொன்னேன். சேர்மன் அதை ரசிக்கவில்லை. “ஏங்க, அவர் நேர்மையா இருந்ததுக்கு எனக்கு 40,000 அபராதமா?”.

“ஏதோ செய்துவிட்டேன். உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் வேலையை விட்டுவிடுகிறேன்” என்றேன்.

“இந்த பிராமின்ஸே இப்படித்தான் தேவையில்லாம நேர்மையா இருப்பீங்க” என்று சொல்லிவிட்டார்.

இதனால் அல்ல, இதையடுத்து வந்த வேறு பல சிக்கல்களால் அந்த வேலையும் போயிற்று.

*

வேலை, வேலை மாற்றம் எல்லாம் ஒருபுறம் இருக்க இதே காலகட்டத்தில் இன்னொரு சுவாரஸ்யமான நிகழ்வும் ஏற்பட்டது. அது எழிலரசனின் திருமணம். எழிலரசனுடைய காதலைப் பற்றி, அடுத்த வீட்டுப் பெண்ணுடன் காதலைப் பற்றி, பெண்ணின் தகப்பனார் கொடுத்த மிரட்டலில் ஏழிலரசனின் குடும்பத்தார் வியாசர்பாடி வீட்டைக் காலி செய்துவிட்டு அண்ணாநகரில் குடியேறியது பற்றி முன்பே சொல்லியிருக்கிறேன்.

எழிலரசனின் தந்தை மிரட்டலுக்குப் பயந்துவிட்டார் என்றாலும் எழிலரசனுக்குப் பயமில்லை, அந்தப் பெண்ணுக்கும். இவர்களும் டாக்டருடைய அவையில் உறுப்பினர்கள் என்பதால் இதை அடுத்த கட்டத்திற்கும் கொண்டு செல்ல வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி செய்கிற காலம் அது. முதலமைச்சர் மு.கருணாநிதி, பெண்ணின் தகப்பனார் உள்ளூர் திமுக பிரமுகர். அபாயகரமான சூழலில் யார் போய் பெண் கேட்பது என்ற கேள்வி எழுந்தது. என்னைப் போகும்படி டாக்டர் சொல்லிவிட்டார்.

நானும் எழிலுடைய அக்காவும் (ஒன்றுவிட்ட) போனோம். அக்கா புறப்படும்போதே சண்டைக்குத் தயாராகிவிட்டார், தேவைக்கு அதிகமான வேகத்தில் வண்டியை ஓட்டிக்கொண்டு வந்தார். பெண் வீட்டாருக்கு முன்பே தகவல் கொடுத்ததனால் அது எப்படியோ பக்கத்து வீட்டுக்கெல்லாம் பரவி, கலவரத்துக்கு பயந்து அந்த வீதியில் எல்லா வீடுகளிலும் கதவுகள், ஜன்னல்கள் எல்லாவற்றையும் மூடிவிட்டார்கள்.

வீட்டு வாசலில் கார் நின்றது. நானும் அக்காவும் வீட்டுக்குள் போனோம். நாங்கள் அவ்வளவு சீக்கிரம் வருவோம் என்று அவர்கள் எதிர்பார்க்காததால் பதட்டத்தில் ஆளுக்கொரு அறையில் பதுங்கிவிட்டார்கள். நடுமுற்றத்தில் நாங்கள்.

சிறிது நேர அமைதிக்குப் பிறகு அந்தப் பெண்மணி “இக்கட ஒஸ்தாரா” என்று குரல் கொடுத்தார். அதாவது தான் இருக்கும் அறைக்கு வரும்படி தன் கணவனை அழைக்கிறார் என்பதைப் புரிந்துகொண்டேன்.

“ஏம்மா இந்த விஷயம் வியாசர்பாடி பூரா பயட்ட ஒஸ்தாயிடுச்சு. வெளியே வாங்க” என்று கூப்பிட்டேன். சிறிது தயங்கி, பிறகு வந்தார்கள். பெண்ணின் அப்பா, அவருடைய கைத்தடி ஒருவர், பெண்ணின் அம்மா மூவரும்.

எப்படி ஆரம்பிப்பது என்று எனக்குத் தெரியவில்லை. எதிரே சுவற்றில் ஈவெரா பெரியாரின் பெரிய படம் இருந்தது. அதைச் சுட்டிகாட்டி “சார் இந்தப் படத்தை எடுத்துடுங்க” என்று சொன்னேன்.

“ஏன், எதற்கு” என்று அவர் பதறிவிட்டார்.

“நானே ஐயர், நீங்கள் அடிப்பீங்க என்று தெரிந்தும் இங்கே வந்திருக்கிறேன். ஏன் வந்திருக்கேன்? பையன் நல்ல பையன்.. உங்களுக்கே தெரியும், பக்கத்திலேயே பார்த்திருக்கீங்க. ஜாதி வித்தியாசம் பார்க்காதீங்க. எப்படி பெண்ணை கொடுக்கலாம் என்கிற வழியப் பாருங்க. இல்லையென்றால் இந்த படத்தை கழட்டிருங்க. பெரியார் படத்தை வைத்துக்கிட்டு ஜாதி பேதம் பார்க்காதிங்க”. என்றேன். அவர் சிரித்துவிட்டார்.

சகஜ நிலை ஏற்பட்டதும் தொடர்ந்து பெண்களுக்குள் பேச்சு வார்த்தை. பிறகு, நல்ல முகூர்த்தத்தில், பேராசிரியர் அன்பழகன் தலைமையில் தமிழ்ச்செல்வி என்கிற சரஸ்வதி – எழிலரசன் திருமணம் நடந்தது.

மேலே சொன்ன பேச்சுவார்த்தை முடிந்து வெளியே வந்ததும், என்னுடன் வந்த எழிலனின் அக்கா என்னை ஆச்சரியமாகப் பார்த்தார். நான் சொன்னேன், ‘ஈவெரா மீது எனக்கிருக்கும் விமர்சனம் உங்களுக்குத் தெரியும். ஆனாலும் ஏன் நான் அங்கே இப்படி பேசினேன் என்றால், எப்படியாவது கல்யாணம் நடக்கவேணும் என்பதற்காகத்தான்’.

*

அடுத்த வேலை சூப்பர் குட் பிலிம்ஸ் என்கிற சினிமா கம்பெனி. ஆர்.பி. சௌத்ரி என்பவர்தான் முதலாளி, மார்வாடி. வெளிப்பார்வைக்கு சினிமா கம்பெனி போல் தோற்றமளித்தாலும் உள்ளே இருப்பது எட்டு கம்பெனிகள். துபாய்க்கு சினிமா ஏற்றுமதி, இரும்பு ஹோல்சேல் வியாபாரம், கால்நடைத் தீவனம் இப்படி பல தொழில்கள். இதையெல்லாம் கற்றுத் தெளிந்து பயிற்சிபெற்று முதலாளிக்கு அடுத்த நிலையில் நான் இருக்க வேண்டும் என்பதாக ஏற்பாடு. ஒவ்வொரு கம்பெனியிலும் ஏற்கெனவே ஒருத்தர் இருந்தார். அந்த எட்டு பேரும் என்னைப் போட்டியாளர்களாக நினைத்துவிட்டார்கள். சூப்பர் குட் பிலிம்சில் ஆறுமாதம் கழிந்தது. இருந்தாலும் அந்த அனுபவம் புதுமையாக இருந்தது.

முதலாளி ஆர்.பி. சௌத்ரியைச் சுற்றி எப்போதும் ஒரு கூட்டம் இருக்கும். ஒரு திரைப்படத்தைத் தயாரிக்கும் காலத்திலேயே அதன் வெற்றி தோல்வியை சரியாகக் கணித்துச் சொல்லக்கூடிய ஆற்றல் அவருக்கு இருந்தது. ஆகவே அவருடைய தயாரிப்பு என்பது மட்டுமில்லாமல் மற்ற கம்பனிக்காரர்களும் அவருடைய ஆலோசனையைக் கேட்பார்கள்.

திரைப்பட விநியோகம், வர்த்தகம் என்பது பரமபத விளையாட்டுப் போல என்பதை முதல் சுற்றிலேயே நான் புரிந்துகொண்டேன். ஒரே நாளில் ஒருவர் உச்சிக்குப் போகலாம். மறுநாளே பள்ளத்தில் வீழலாம். இதுதான் திரையுலகம். முதலாளியைத் தேடி நான்கு பேர் வருவார்கள், மதிய வேளையில். அதில் மூன்று பேர் உற்சாகமாகவும், நாலாவது நபர் சோர்வாகவும் இருப்பது வழக்கம். ஒருநாள் கேஷியர் என் காதைக் கடித்தார். “அந்த நாலாவது ஆள் ஏன் வருத்தமாக இருக்கிறார் தெரியுமா” என்று கேட்டுவிட்டு அவரே பதிலும் சொல்லிவிட்டார். “நாலு பேரும் சேர்ந்துதான் சின்னத்தம்பிக்கு சிட்டி ரைட்ஸ் வாங்கினார்கள். கடைசி நேரத்தில அந்த நாலாவது ஆள் மனசு மாறிப்போய் என் பங்கு வேண்டாம் என்று திருப்பிக் கொடுத்துட்டான். மூணு பேரும் அதை ஏத்துக்கிட்டாங்க. அவன் நேரம், சின்னத்தம்பி இந்த வருஷத்து சூப்பர் ஹிட் ஆயிடுச்சு. பணம் கொட்டோ கொட்டென்று கொட்டியது. அவன் ஜாதகம் சரியில்லை” என்று சொன்னார்.

மற்றபடி வார்த்தைக்கு வார்த்தை முற்போக்கு வசனம் பேசும் தமிழ் சினிமா உலகத்தை உள்ளே எட்டிப் பார்த்தால் ஜமீன்தார்த்தனமாகவே இருக்கிறது. நான் சினிமா கம்பெனியில் வேலை செய்த அந்தக் காலத்தில் அந்தக் கட்டடத்தின் பின்பகுதியில் ஷுட்டிங் நடக்கும். நடிகர்களோ அல்லது ஷுட்டிங் சம்பந்தப்பட்ட பணியாளர்களோ அவர்களுக்கு வீட்டிலிருந்து போன் வரும். அது மொபைல் வசதி இல்லாத காலம். போன் வந்திருக்கிறது என்ற தகவலைச் சொல்லியனுப்பி அவர் வந்து பேசும்வரை அவரை நடத்துகிற விதம் கேவலமாக இருக்கும்.

கரகாட்டக்காரன், சின்னத்தம்பி என்று சினிமா உலகம் வெற்றியைச் சுவைத்துக்கொண்டிருந்த காலம் அது. மேற்படி காரணங்களால் ஆபீஸ் எப்போதும் கலகலப்பாகவும் பணப்புழக்கதோடும் இருக்கும்.

ஆனால், அங்கேயும் எனக்கு ஆறு மாதங்கள்தான்.

தொடரும்..

 

Leave a Reply