ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம்
டாக்டரைச் சந்தித்துப் பழகி ஏழு வருடங்கள் ஆன நிலையில் அவருடைய அமைப்பில் சில விரும்பத் தகாத நிகழ்வுகள் ஏற்பட்டன. லௌகீக உலகத்தில் நாம் சந்திக்கும் குணக்கேடுகள் அங்கேயும் தலைகாட்டின. புதிதாக ஒரு பொன்னுலகத்தை உருவாக்கப் போகிறோம் என்கிற எண்ணத்தோடு போய்க் கொண்டிருந்த எங்களுக்கு, குறிப்பாக எனக்கும் ரமணனுக்கும் இது சகிக்கவில்லை. டாக்டரிடம் முறையிட்டோம் பலனில்லை.
இந்த விவகாரம் உச்சகட்டத்தில் இருக்கும்போது ரமணன் உத்தியோக நிமித்தமாக விசாகப்பட்டினத்திற்கு மாற்றப்பட்டான். சென்னையில் நான் தனித்து விடப்பட்டேன்.
ஒரு வருட காலம் நீடித்த இந்தப் பிரச்சினைகளைக் கையாள என்னால் முடியவில்லை. தனிப்பட்ட முறையில் டாக்டர் என் மீது காட்டிய பரிவுக்கு அளவில்லை என்பதும், ஆனால் அவரைச் சுற்றி நடக்கும் விஷயங்கள் சரியில்லை என்பதும், இரண்டுமே உண்மைதான். ஆகவே வருத்தம், குழப்பம்.
சலிப்பின் முடிவில் பராசக்தியைக் கேட்கலாமே என்று தோன்றியது, கேட்டேன். என்னை எப்போதும் வழி நடத்தும் பராசக்தி என்னை அவரிடமிருந்து அகற்றினாள். கொள்கைக்காக டாக்டர் என்ற எண்ணம் உடையவர்கள் வெளியேறினோம். டாக்டர்தான் கொள்கை என்பவர்கள் அவரோடு தங்கிவிட்டார்கள்.
அடுத்து என்ன செய்வது என்று எனக்குத் தெரியவில்லை. எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்றிருந்த என்னிடம் துருப்புச் சீட்டாகக் கிடைத்தார் பி.எஸ்.ராமகிருஷ்ணன். சென்னை பெசன்ட் நகர் சிவன் கோவில் நிர்வாகம் சம்பந்தமாக நாங்கள் இருவரும் செயல்பட ஆரம்பித்தோம். பிறகு அது வழிநடத்தலாக மாறியது. ராமகிருஷ்ணனிடம் நெருங்கிப் பழகிய துவக்கத்திலேயே எனக்கு ஒரு விஷயம் தெளிவாகப் புரிந்துவிட்டது. திருச்சி மாவட்டம் லால்குடி அருகில் உள்ள பின்னவாசல் என்ற கிராமத்தைச் சேர்ந்த மிராசுதார் குடும்பம் இவருடையது, திருச்சி தேசியக் கல்லூரியில் படித்து முடித்து, சென்னைக்கு வந்து ரிசர்வ் வங்கியில் பணிக்குச் சேர்ந்து, கல்யாணம் செய்து, பெசன்ட் நகரில் வீடு இரண்டு பெண்குழந்தைகளோடு வாழும் ராமகிருஷ்ணன் என்பதெல்லாம் மேல் பூச்சுதான் என்பது புரிந்துவிட்டது.
நிஜத்தில் அவர் வால்மீகி ராமாயணத்தின் நடமாடும் பதிப்பு. ராமனையோ வால்மீகியையோ சம்பந்தப்படுத்தாமல், தள்ளி நின்று சிந்திக்கவோ செயல்படவோ அவரால் முடியாது.
ராமகிருஷ்ணன் பி.எஸ்.ஆர் என்றே அறியப்படுவார். பி.எஸ்.ஆருக்கு ஒருநாள் ஜுரம் வந்துவிட்டது. ராமாயணம் பற்றிப் பேசிக்கொண்டே இருந்தவர் திடீர் என்று அழ ஆரம்பித்துவிட்டார். “என்ன சார், டாக்டர்கிட்ட போலாமா, வேறு ஏதாவது பிரச்சினையா, நல்லாத்தானே பேசிட்டு இருந்தீங்க?” என்று கேட்டேன். “இல்ல சார், ராமன் காட்டில் இருந்தபோது ஜுரம் வந்திருக்குமே, அங்க ஏது மருந்து மாத்திரை வைத்தியம் என்று யோசித்துப் பார்த்தேன். மனசு உடைஞ்சு போச்சு” என்றார் அவர்.
இரு ஒரு சின்ன சாம்பிள்தான். ராமாயணத் தொடர்பு இல்லாமல் எதையும் அவரால் சிந்திக்க முடியாது. ராமாயணக் கண்ணாடி இல்லாமல் எதையும் அவரால் பார்க்கமுடியாது. ராமாயணத்துக்குப் பல கண்ணாடிகள் உண்டு. நண்பருடையது சேங்காலிபுரம் அனந்தராம தீட்சிதர் தயாரிப்பு.
கோவில் நிர்வாகக் குழுவில் காரசாரமாக நடக்கும் விவாதங்களில் பி.எஸ்.ஆர் அணுகுமுறை வித்தியாசமாக இருக்கும். ஆலய வளாகத்தில் யாராவது சபலப்பட்டுவிட்டால், பெண்கள் விஷயமாகத் தப்பு ஏதாவது நடந்துவிட்டால் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று நாங்கள் எல்லாம் ஆளுக்காள் சொல்லிக்கொண்டிருப்போம்.
இறுதியாக பி.எஸ்.ஆர் பேசுவார். “மனுஷ ஜென்மாவில் வரக்கூடிய நல்லது, கெட்டது எல்லாவற்றையும் வால்மீகி எழுதியிருக்கிறார். அப்படி அவர் தொட்டுக் காட்டிய விஷயங்களை மற்ற கவிஞர்கள் விரிவாகப் பேசியிருக்கிறார்கள். வால்மீகி ராமாணயத்தில் உள்ள இடைவெளியை வைத்து ‘ரகுவம்சம்‘ என்ற காவியத்தை காளிதாசன் எழுதியிருக்கிறான். ரகுவம்சத்தில் அஜனுடைய கதை வருகிறது. ராமனுடைய தாத்தா அதாவது தசரதனுடைய அப்பா அஜன். அவனுடைய மனைவி பெயர் இந்துமதி. காதல் என்றால் அப்படி ஒரு காதல். உங்க ஊர் காதல் எங்க ஊர் காதல் இல்லை. அப்படி ஒரு காதல். ஆனால் அஜனுக்கு நேரம் சரியில்லை. இந்துமதி இறந்துவிட்டாள். போகும்போது சும்மா போகக்கூடாதா? ‘நாம இரண்டுபேரும் சீக்கிரம் சந்திப்போம்’ என்று சொல்லிவிட்டுப் போய்விட்டாள். அவ்வளவுதான். அஜன் தற்கொலைக்குத் தயாராகிவிட்டான். நல்ல வேளையாக அந்த இடத்தில் பக்குவப்பட்ட ஒருவர் இருந்தார். அவர்தான் ராஜகுருவான வசிஷ்டர். தற்கொலை என்பது சாஸ்திர விரோதமானது, அதைச் செய்யக்கூடாது, குறிப்பாக அரசர்களுக்கு அந்த எண்ணமே வரக்கூடாது என்று சொல்லிப்பார்க்கிறார். அஜன் கேட்பதாக இல்லை. “நான் அவளைச் சந்திக்க வேண்டுமே.. இப்போது நான் இறந்தால்தானே அவளைப் போய் பார்க்கமுடியும்” என்பது அவன் கட்சி.
வசிஷ்டர் சொன்னார், ‘இதற்குள் அவள் மூன்று முறை பிறந்து இறந்து வேறு உருவத்தில் மாறியிருப்பாள். இந்தப் பிறவியைக் கடந்து நீ போய்ப் பார்த்தாலும் அவளுக்கு உன்னை அடையாளம் தெரியாது’ என்று சொல்லி அரசனைக் காப்பாற்றிவிட்டார். காதல், காமம், பாலியல் தொடர்பாகத் தப்பு செய்வது என்பதெல்லாம் க்ஷண நேரத்தில் நடக்கக்கூடியது. அதைப் பெரிது படுத்தவேண்டாம். ரொம்ப உத்தமனாக இருக்கக்கூடியவர்களுக்குக் கூட ஒரு சமயம் தடுமாறும் நிலை ஏற்படலாம். ஆனால் அவர்கள் அதைச் சரிசெய்து கொண்டுவிடுவார்கள். இந்த விஷயத்தை இப்போதே விட்டுவிடுங்கள், பெரிது படுத்தாதீர்கள். திட்டமிட்டுத் தொடர்ந்து தவறு செய்பர்கள் மீது மட்டும் நடவடிக்கை எடுத்தால் போதும்” என்று சொல்வார் பி.எஸ்.ஆர்.
எல்லோருக்கும் பி.எஸ்.ஆர் மூத்தவர் என்பதாலும், என்னுடைய ஆதரவு அவருக்கு உண்டு என்பதாலும் அவர் சொன்ன தீர்ப்புதான் நிலைக்கும்.
இதெல்லாம் ஒரு புறம் இருக்க, என்னுடைய வாழ்க்கைச் சிக்கலுக்குத் தீர்வாக பி.எஸ்.ஆர் ராமாயணத்தைப் பரிந்துரை செய்தார். அந்த நேரத்தில் கோவிலில் பிரம்மஸ்ரீ சுந்தர்குமாரின் ஸ்ரீமத் வால்மீகி ராமாணய உபன்யாசம் முப்பது நாட்களாக நடந்தது. அதைத் தொடர்ந்து கேட்டேன். ராமாயணத்தில் என்ன இருக்கிறது அதனால் என்ன பலன் கிடைக்கும் என்று எட்டிப்பார்த்த என்னை ராமாயணம் தன் வசமாக்கிக்கொண்டது. ராமாயணத்தில் விழுந்தேன், எழுந்தேன். ரசித்தேன், புசித்தேன் என்று சொல்லலாம். வால்மீகி ராமாயணம் என்கிற காவியம் என்னுள் ஒரு அங்கமாகவும் சில சமயங்களில் நான் ராமாயணத்தில் ஒரு அங்கமாகவும், ஒரு ரசவாதம் ஏற்பட்டது.
உதாரணத்திற்கு ஒன்று.
தவறு செய்கிற ராவணனைக் கண்டித்து விட்டு விபீஷணன் வெளியேறுகிறான். வான்வழியாக வந்து இலங்கையின் எல்லையில் வானரப் படைகளோடு தங்கியிருக்கும் ராமனைச் சரணடைகிறான். இது விஷயமாக தன்னுடைய தளபதிகளோடு ராமன் ஆலோசனை நடத்துகிறான். ஆலோசனையின் தலைப்பு ‘விபிஷணனை ஏற்றுக்கொள்ளலாமா, நம்பலாமா’ என்பதுதான்.
ராட்சஸ வித்தைகள் அறிந்த ஒருவன் நம் பக்கம் இருந்தால் நல்லதுதான் என்பது அவையின் பொதுக் கருத்தாக இருந்தது. ஆனால் சுக்ரீவனுக்கு இதில் உடன்பாடு இல்லை. ‘சொந்த அண்ணனையே எதிர்க்கிறான் இவன். இவனை எப்படி நம்புவது’ என்பதுதான் சுக்ரீவனின் கேள்வி. சொந்த அண்ணன் விஷயத்தில் தான் என்ன செய்தோம் என்பதை அவன் சௌகரியமாக மறந்து விட்டான். இப்படிப் பல சுவாரஸ்யங்கள்.
ஒவ்வொரு உபன்யாசகருக்கும் ஒரு ஸ்டைல் இருக்கும். சுந்தர் குமாரின் கதை நேர்கோட்டில் நடக்காது. ஒவ்வொரு காட்சியிலும் கதையை நிறுத்திவிட்டு கொஞ்சம் முன்னே, பிறகு பின்னே என்று அவர் போய்வருவார். சுந்தரகாண்டத்தைப் பற்றி பேசும்போது அதற்கு முற்பட்ட அயோத்தியா காண்டத்தைச் சொல்லுவார். ஆரண்ய காண்டத்தைச் சொல்லும்போது கொஞ்சம் யுத்த காண்டத்தைத் தொட்டுக் கொள்வார்.
மறுநாள் ராமனுக்குப் பட்டாபிஷேகம். விழாக் கோலத்தில் அயோத்தி, மகிழ்ச்சியில் மக்கள். ஆனால் அரண்மனையில் உள்ளே அதிர்ச்சி. ராமன் பதினான்கு வருடங்கள் காட்டுக்குப் போகவேண்டும். பரதன் அரசாளவேண்டும் என்ற வரத்தை தசரதனிடம் இருந்து பெற்றுக்கொள்கிறாள் கைகேயி. இதை இயல்பாக ஏற்றுக்கொண்ட ராமன் காட்டுக்குப் போகத் தயாராகிறான். தன்னையும் அழைத்துப் போக வேண்டும் என்று சீதை வற்புறுத்துகிறாள். ராமன் உடன்படவில்லை. வாக்குவாதத்தில் வார்த்தை வலுத்துவிடுகிறது. கோபத்தில் சீதை ராமனை வீரம் இல்லாதவன் என்று சொல்லிவிடுகிறாள்.
கதையை இந்த இடத்தில் நிறுத்திவிட்டு “பிரபு அவளுக்குப் பதில் சொல்லவில்லை, அவள் தப்பே செய்திருந்தாலும் அதைச் சுட்டிக்காட்டவில்லை, தன்னோடு இருக்க வேண்டும் என்கிற எண்ணத்தில்தான் இப்படிப் பேசுகிறாள் என்பது அவருக்குத் தெரியும். இருந்தாலும் சீதைக்குப் பதில் இருக்கிறது. இந்த கதையில் வேறிடத்தில் அது சொல்லப்படுகிறது. அந்தக்கட்டம் வரும்போது அதைக் குறிப்பிட்டு நானே சொல்கிறேன்” என்றார் சுந்தர்குமார்.
இந்த நிகழ்ச்சி நடந்தது அயோத்தியா காண்டத்தில். அதைத் தொடர்ந்து ஆரண்ய காண்டம், கிஷ்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம் என்று மொத்த கதையையும் சொல்லிமுடித்தவர், சீதையின் வசவுக்கு பதில் என்ன என்பதைச் சொல்லவே இல்லை.
பட்டாபிஷேகம் முடிந்து பட்டு வஸ்திரமும், பட்டுப் புடவைகளும், சன்மானங்களும் தரப்பட்டன. பருப்புத் தேங்காய் கூடுகள் பத்திரப்படுத்தப்பட்டன. கூட்டத்தை விலக்கிக்கொண்டு அவர் அருகில் போய் நான் என்னுடைய சந்தேகத்தைக் கேட்டேன். அவருக்கு முகம் சிவந்துவிட்டது. “நான் சொல்லலையா? சொல்லியிருப்பேனே.. நீங்கள் கவனிச்சிருக்க மாட்டீங்க” என்று அடுக்கிக்கொண்டே போனார். ஆனால் சீதைக்கு கிடைத்த பதில் என்ன என்பதை அவர் அப்போதும் சொல்லவில்லை.
இந்தப் பிரச்சினை என் மூளைக்குள் ஏறி ஒரு முக்கியமான இடத்தில் உட்கார்ந்துகொண்டது. இந்த முடிச்சு அவிழ்ந்தால்தான் நான் வேறு வேலை செய்யமுடியும் என்கிற மாதிரி ஒரு ஸ்திதி. விஷயத்தை பி.எஸ்.ஆர் கவனத்திற்குக் கொண்டுபோய் என்ன செய்வதென்று கேட்டேன். “உங்களுக்குத்தான் படிக்கிற பழக்கம் இருக்கே, நீங்களே படிக்கலாமே.. அவரை ஏன் கேட்டீங்க? படிங்க!” என்று சொல்லி முடித்துவிட்டார்.
இதை நான் தெய்வத்தின் குரலாக எடுத்துக்கொண்டேன். அடுத்த ஒரு மண்டலம் பெசன்ட் நகர் உ.வே.சாமிநாத ஐயர் நூலகத்தில் ஸ்ரீமத் வால்மீகி ராமாயணத்தோடு செலவிட்டேன். ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் பதார்த்தம். பதார்த்தம் என்றால் வார்த்தைக்கு வார்த்தை பொருள். ராமாயணம் எனக்குத் தெம்பு கொடுத்தது. தெளிவு கொடுத்தது. புதிய பார்வையைக் கொடுத்தது. சீதை தொடர்பான கேள்விக்குப் பதிலையும் கொடுத்தது.
ஆரண்ய காண்டத்தில் கரதூஷண வதம். மிகவும் பராக்கிரமசாலிகளான கரன், தூஷணன் என்கிற இரண்டு இராட்சஸர்களோடு ராமன் யுத்தம் செய்கிறான். இந்த யுத்தத்தை சீதை பார்க்க வேண்டாம் என்று அவள் ஒரு குகையில் இருக்க, காவலுக்கு லக்ஷ்மணன். போர் முடிவில் கரனும் தூஷணனும் இறந்து போகிறார்கள். உடலெங்கும் ரத்தக் காயங்களோடு இருக்கும் ராமனையும் யுத்த களத்தையும் பார்த்த சீதை அன்பின் மிகுதியால் அவனைக் கட்டித் தழுவுகிறாள். வீரனைத் தவறாகப் பேசிவிட்டோமே என்று மனம் வருந்துகிறாள்.
எல்லா எழுத்தாளர்களும் செய்யக்கூடிய, பயன்படுத்தக்கூடிய ஒரு யுக்திதான் இது. ஒரு முடிச்சைப் போட்டுவிட்டு கதையின் மற்றொரு கட்டத்தில் அதை அவிழ்ப்பது வழக்கமான நடைமுறைதான். ஆனால் வால்மீகியின் தனித்தன்மை இங்குதான் வெளிப்படுகிறது. ராமனைத் தவறாகப் பேசிவிட்டோமே என்று சீதை வருத்தப்பட்ட நிகழ்வு ஆரண்ய காண்டத்தில் நடந்தாலும் அது அங்கு பதிவாகவில்லை.
பதிவு சுந்தர காண்டத்தில் இருக்கிறது. அசோகவனத்தில் இருக்கும் சீதையை சந்திக்க தூதுவனாக அனுமனை ராமன் அனுப்புகிறான். அனுமன் அசோகவனத்தில் இருக்கும் சீதையைச் சந்திக்கிறான். அப்போது ராமனுடைய குணாம்சங்களையும், தங்களுடைய உறவையும் விவரிக்கும் சீதை அனுமனிடம் தன்னுடைய தவறைப் பற்றிச் சொல்கிறாள். அதாவது கேள்வி அயோத்தியா காண்டத்தில் கேட்கப்படுகிறது. பதில் ஆரண்ய காண்டத்தில் கிடைக்கிறது. அது சுந்தர காண்டத்தில் பதிவாகிறது.
இதுதான் வால்மீகி ஸ்டைல்.
தொடரும்..
(Color image credit: https://chithirapoomalai.wordpress.com/)