புட்டபர்த்தி
தமிழக முதல்வர் எம்.ஜி. ராமச்சந்திரன் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று இந்தியாவுக்குத் திரும்பினார் என்பதையும் அதன் விளைவாக என் வாழ்க்கையில் ஏற்பட்ட திருப்பத்தையும் முந்தைய அத்தியாயத்தில் குறிப்பிட்டிருக்கிறேன்.
டாக்டரோடு தொடர்பு ஏற்பட்ட பிறகு அரசியலில் மையம் கொள்ளாமல் என் வாழ்க்கை கொஞ்சகாலம் புறவழிச்சாலை வழியாகப் போய்விட்டது. இருந்தாலும் வாசகர்களின் புரிதலுக்காக இடைப்பட்ட காலத்தில் நடந்த நிகழ்வுகளைச் சொல்கிறேன்.
அமெரிக்காவில் இருந்து திரும்பி வந்த எம்.ஜி.ஆர் தமிழக முதலமைச்சராகப் பதவி ஏற்றார். இருந்தாலும் உடல்நலக் குறைவு காரணமாக அவரால் முழுமையாகச் செயல்பட முடியவில்லை, பேச்சுத் திறன் இல்லை. கட்சியிலும் அவருடைய கட்டுப்பாடு இளகிவிட்டது. எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி அம்மாள் ஒரு பக்கமும், எம்.ஜி.ஆரின் வாரிசாகக் கருதப்பட்ட ஜெ. ஜெயலலிதா இன்னொரு பக்கமுமாக அணிவகுத்து மோதிக்கொண்டிருந்தார்கள். ஜானகி அம்மாளை அரசியலுக்குள் கொண்டு வரவேண்டுமென்பது ஆர்.எம்வீரப்பனுடைய நோக்கமாக இருந்தது. திருநாவுக்கரசர், கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் ஆகியோர் ஜெயலலிதாவிற்குப் பலமாக இருந்தனர். இந்த இழுபறி இரண்டரை ஆண்டு காலம் நீடித்திருந்த போது எம்.ஜி.ஆர் ஒருநாள் அதிகாலையில் தன்னுடைய ராமாவரம் இல்லத்தில் படுக்கையிலேயே உயிரிழந்தார் (24.12.1987).
எம்.ஜி.ஆர் மறைவிற்குப் பிறகு, ஜானகி அம்மாள் முதலமைச்சராகப் பதவியேற்றார். இதை ஜெயலலிதா கோஷ்டி ஏற்கவில்லை. ஜானகி அம்மாளுக்கு ஆதரவாக சட்டசபையில் நம்பிக்கைத் தீர்மானத்தின் மீது ஓட்டெடுப்பு. அவையில் வன்முறை வெடித்தது. முதலமைச்சருக்கு ஆதரவாகச் செயல்பட்ட தலைமை போலீஸ் அதிகாரி வால்டர் தேவாரத்தின் உத்தரவின்படி, போலீசார் அவைக்குள் நுழைந்து தடியடி நடத்தி நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர். நம்பிக்கைத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும் மத்திய அரசால் ஜானகி அம்மாள் மந்திரிசபை டிஸ்மிஸ் செய்யப்பட்டு சட்டசபை கலைக்கப்பட்டது.
ஓராண்டு காலம் நடந்த குடியரசுத் தலைவர் ஆட்சிக்குப் பிறகு சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவின் இரட்டை இலைச் சின்னம் முடக்கப்பட்டுவிட்டது. ஜானகி அணி இரட்டைப் புறா சின்னத்திலும் ஜெயலலிதா அணி சேவல் சின்னத்திலும் போட்டியிட்டது. அதிமுகவின் வாக்குகள் பிளவு பட்டுவிட்ட சூழலில் திமுக வெற்றி பெற்றது. மு.கருணாநிதி முதலமைச்சராகப் பதவியேற்றார். (27.01.1989)
அடுத்த இரண்டு ஆண்டுகள் தமிழகத்திற்கு சோதனைக் காலமாக அமைந்தது. இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடந்த போர் தமிழக அரசியலை வெகுவாகப் பாதித்தது. தமிழகம் புலிகளுக்கான ஆயுதக்கிடங்காக மாற்றப்பட்டது. புலிகளின் வன்முறை தமிழகத்திலும் வெடித்தது. புலிகளின் போட்டி இயக்கமான இ.பி.ஆர்.எல்.எஃப் தலைவர் பத்மநாபா அவர்களையும் அவருடைய தோழர்களையும் விடுதலைப் புலிகள் சென்னையில் படுகொலை செய்த சம்பவத்தால் நாடே அதிர்ச்சி அடைந்தது. இதன் விளைவாக மத்தியில் ஆட்சியில் இருந்த சந்திர சேகர் அரசால் திமுக அரசு டிஸ்மிஸ் செய்யப்பட்டது (30.01.1991).
பிறகு, தமிழக சட்டமன்றத் தேர்தல் நடந்தபோது ஜெயலலிதாவும் ஜானகி அம்மாவும் ராசியாகிவிட்டனர். தேர்தல் சமயத்தில் காங்கிரஸ் தலைவர் ராஜிவ்காந்தி ஸ்ரீபெரும்புதூரில் விடுதலைப் புலிகளால் படுகொலை செய்யப்பட்டது அதிமுக காங்கிரஸ் கூட்டணிக்குச் சாதகமாக அமைந்தது. திமுகவிற்குக் கிடைத்தது மு.கருணாநிதி ஜெயித்த துறைமுகம் தொகுதி மட்டும்தான். விரக்தியில் அவர் அதையும் ராஜினாமா செய்துவிட்டார். ஜெயலலிதா போட்டியிட்ட காங்கேயம், பர்கூர் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றார். ஜெயலலிதா தமிழக முதலமைச்சராகப் பதவி ஏற்றார் (16.06.1991).
*
விசாகப்பட்டினத்தில் தி ஹிந்து நாளிதழில் மேலாளராகப் பொறுப்பேற்றுக் கொண்ட ரமணன், டாக்டரிடம் இருந்து விலகிய நிலையில், தன்னுடைய ஆன்மிகத் தேடுதலை மீண்டும் தொடர்ந்தான். பிரபாத் குமார் என்கிற நண்பருடைய வற்புறுத்தலின் பேரில் அவரோடு சத்திய சாயி பாபாவைப் பார்ப்பதற்காக புட்டபர்த்திக்குப் பயணம் போக, நானும் அவர்களோடு சேர்ந்துகொண்டேன். அது ஒரு இனிய அனுபவமாக அமைந்தது
இந்தப் பயணத்திற்கான மொத்தச் செலவும் ரமணனின் நண்பர் பிரபாத் குமாருடையது. அவர் விசாகப்பட்டினத்தில் தொழிலதிபர். பாபாவின் பக்தர். பிரபாத் குமார் ஒரு வித்தியாசமான மனிதர். கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராக இருந்தவர், அந்த வேலையில் சுவாரஸ்யம் போதாது என்று முடிவெடுத்து அதிலிருந்து விலகினார். விசாகப்பட்டினத்தில் அடுக்கு மாடி கட்டடங்களைக் கட்ட ஆரம்பித்து, தொழிலில் உச்சத்தைத் தொட்டார். அவர் வீடு விசாகப்பட்டினத்தில் மலை உச்சியில் இருந்தது. வீடு அல்ல அரண்மனை என்றே சொல்லலாம். அந்த ஊரில் அவரைப் பற்றிப் பல நம்பத் தகுந்த / தகாத கதைகள் இருந்தன.
எல்லோரைப் போலவும் நாய் வளர்ப்பது தனக்கு சௌகரியப்படாது என்று முடிவெடுத்து பிரபாத் குமார் தன் வீட்டில் புலி வளர்த்தார். மாலை நேரத்தில் ஷாப்பிங் போகும் போது காரில் முன் பக்கத்தில் அவரும் மனைவியும் இருக்க, பின் சீட்டில் புலி படுத்திருக்கும். வீதி ஓரத்தில் வண்டியை நிறுத்திவிட்டு கணவனும் மனைவியும் கடைக்குள் போய்விடுவார்கள். புலி சாதுவாக இருந்தாலும் அந்தப் பக்கம் வந்தவர்கள் காருக்குள் எட்டிப்பார்த்து அலறுவார்கள். ஒரு கட்டத்தில் வனத்துறை அதிகாரிகள் தலையிட்டு புலியைப் பறிமுதல் செய்து, விசாகப்பட்டினத்தின் மிருகக்காட்சி சாலையில் சேர்த்துவிட்டார்கள் என்பதாக ஒரு தகவல்.
விசாகப்பட்டினத்தின் கடற்கரையில் இருக்கும் அவருடைய விசாலமான தோப்பு ஒன்றை ஆசிரமமாக மாற்றியமைத்து அதை பாபாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்பது அவருடைய வேண்டுகோள். ஒவ்வொரு வருடமும் இதே யோசனையோடு புட்டபர்த்திக்கு வந்து போகிறார். இதுவரை பாபாவின் உத்தரவு கிடைக்கவில்லை. இந்த முறை ஒரு சத்சங்கத்தைக் கூட்டிவந்தால் உத்தரவு கிடைக்கலாம் என்கிற வேண்டுதலில் முப்பது பேரைக் கூட்டிவந்திருக்கிறார். எண்ணிக்கை இருபத்தி ஒன்பதாக இருந்தபோது ரமணனின் ஆலோசனைப்படி சென்னையில் என்னையும் முப்பதாவது ஆளாகச் சேர்த்துக்கொண்டார். இந்த முறை பாபா அவருடைய வேண்டுகோளை ஏற்றுக்கொண்டார் என்பது சிறப்புச் செய்தி.
பெங்களூரில் இருந்து தரை மார்க்கமாகப் பயணம் செய்தோம். ஒரு கட்டத்தில் அந்தப் பகுதி சாயிபாபாவின் ஆட்சிக்கு உட்பட்டது என்பது தெளிவாகப் புலப்பட்டது. You are entering the kingdom of Sai என்ற அறிவிப்புப் பலகை எங்களை வரவேற்றது. ஆந்திர மாநிலத்தின் அனந்தபூர் மாவட்டம் அது. வெள்ளைக்காரன் காலத்தில் அதற்கும் அதையடுத்த பெல்லாரி மாவட்டத்திற்கும் கொடை மாவட்டங்கள் என்று பெயர். அதாவது, இவை இரண்டும் தண்ணீர் இல்லாத காடு என்பதால், ஒப்பந்தங்கள் செய்யும்போது ‘இந்தா நீயே வச்சுக்கோ’ என்று கொடுத்துவிடுவார்கள். பாபாவின் பார்வையில் அங்கே இப்போது பார்த்த இடங்கள் எல்லாம் பசுமை. சுற்றியிருந்த எத்தனையோ கிராமங்களுக்கு இங்கிருந்துதான் குடிநீர் சப்ளை.
நாங்கள் பயணித்த வேன் அந்த வளாகத்தின் மையப்பகுதியில் சென்றபோது, இன்ஜினை டிரைவர் ஆஃப் செய்தார். கீழே இறங்கினோம். நூற்றுக்கணக்கான மக்கள் நடமாடிக்கொண்டிருந்த அந்தப் பகுதியில் என்னால் பறவைகளின் ஒலியை தெளிவாகக் கேட்க முடிந்தது. இதுதான் நான் நேர்கொண்ட முதல் சாயி அதிசயம்.
மதிய உணவு ஒரு பந்திக்குப் பத்தாயிரம் பேர், சர்வ சாதாரணமாக ஐந்து பந்திகள். என்னுடைய பந்தியில் சாம்பார் பக்கெட்டோடு வந்தவர் ஒரு நீக்ரோ. அவரோடு பேச்சுக் கொடுத்தேன். ஆறுமாத காலம் முயன்று இந்த வாய்ப்பைப் பெற்றதாக அவர் சொன்னார். புதிதாக உருவாகிக்கொண்டிருந்த சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையைப் பார்க்கப் போனோம். அதனுடைய அளவு- சென்னை அப்போலோ மருத்துவமனையை எடுத்து வந்து இந்த மருத்துவமனையின் வரவேற்பறையில் ஒளித்து வைத்துவிடலாம். வரவேற்பறையின் உயரே மிகப் பெரிய கண்ணாடி சரவிளக்கு தொங்கவிடப் பட்டிருந்தது. அது ஐரோப்பாவில் இருந்து தனி விமானத்தில் வரவழைக்கப்பட்டதாகச் சொன்னார்கள். எதற்கு இத்தனை செலவு என்று நான் கேட்டதற்கு “எந்த ஏழையாக இருந்தாலும் அவருக்கு இங்கு ஒரு ராஜ போகத்தை கொடுக்க வேண்டும் என்பது பாபாவின் விருப்பம்” என்ற பதில் கிடைத்தது.
மருத்துவம் இலவசம். பரிசோதனை இலவசம், மருந்து இலவசம், உணவு இலவசம், லாண்ட்ரி இலவசம், நோயாளிக்கு மட்டுமில்லாமல் உதவியாளருக்கும் எல்லா வசதிகளும் இலவசம். டாக்டர்களுக்கான இருப்பிடத்தையும் சென்று பார்த்தோம். நகர்ப் புறத்தில் வாழ்கின்ற டாக்டர்களுடைய வீட்டில் என்னென்ன நவீன சாதனங்கள் இருக்குமோ அத்தனையும் அங்கே இருந்தன.
இத்தனை ஏற்பாடுகளுக்கும் நிதி வசதி எப்படி என்பது எல்லோருக்கும், குறிப்பாக எனக்கும் ஏற்பட்ட கேள்வி. நிர்வாக அலுவலகத்தின் முகப்பில் நிதியளித்தவர்கள் பட்டியலைக் கல்வெட்டாகப் பதிந்து வைத்திருந்தார்கள். அதில் இருந்த குறைந்தபட்சத் தொகை ரூபாய் நூறு கோடி. ஆஸ்திரேலிய பிரதமர், ஜப்பானியத் தொழிலதிபர் என்பதாக அந்தப் பட்டியல் கண்டங்களைக் கடந்த பூகோள விரிவு.
நாங்கள் சென்றது கிறிஸ்மஸ் நேரத்தில். அதற்கான விசேஷமும் இருந்தது. சாதாரண நாட்களில் சிகப்பு உடை அணியும் பாபா அன்று பக்தர்களுக்காக வெள்ளை உடையில் தரிசனம் கொடுத்தார். பனிமூட்டம் நிறைந்த விடியற்பொழுதில் முதலில் மசூதியின் அழைப்பு, பிறகு வேத கோஷம், அதைத் தொடர்ந்து பஜனை, பஜனையின் உச்சக்கட்டத்தில், உயர் மாடத்தில் வெள்ளிக் கதவுகள் திறக்க, நூற்றுக்கணக்கான வெள்ளைக்காரர்கள் கண்ணீரோடு பாபாவை தரிசனம் செய்ய, நான் தனியனாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன்.
பொது இடத்தில் பாபாவின் தரிசனம். விஜபிகளுக்கு என்று தனி வரிசை இருந்தாலும் அது பெரிய அளவில் இல்லை. பெரும்பாலான விஐபிகள் சாதாரண வரிசையிலேயே வந்தார்கள். அனைவரும் அமைதியாக அமர்ந்திருக்க பாபா தன் விருப்பப்படி அங்கேயும் இங்கேயுமாக நடந்து பக்தர்களுக்கு பாத நமஸ்காரம் செய்யும் வாய்ப்பை கொடுத்துக்கொண்டிருந்தார். எனக்கோ ரமணனுக்கோ என்னோடு வந்தவர்களுக்கோ அந்த வாய்ப்பு இல்லை.
பாபாவின் ஆகர்ஷணம், அந்த இடத்தின் அசைவுள்ள அமைதி, தொண்டர்களின் பண்பு, வெள்ளை நிறம் அங்கே நிரம்பி வழிந்தாலும் லௌகீக உலகத்தின் மிச்ச சொச்சம் அங்கேயும் உண்டு என்பதை நான் காண நேர்ந்தது. அமைப்பு ரீதியான அதிகாரப் போட்டியில் ஒருவருக்கொருவர் குறை காணுதல், வம்பு பேசுதல் ஆகிய துர்புத்திகளுக்குப் புட்டபர்த்தியிலும் இடம் இருந்தது.
(தொடரும்..)