ராமன் மாமா
ரமணனின் நண்பரான விசாகப்பட்டினம் பிரபாத் குமாரைப் பற்றிச் சொன்னேன். இன்னொருவர் பெயர் பார்வதி குமார். பார்வதி குமார் World Teachers Trust என்ற ஆன்மிக அமைப்பின் தலைவராக இருந்தார். இந்த அமைப்பு சென்னையில் தலைமையிடம் கொண்டிருக்கும் பிரம்ம ஞான சபையின் சித்தாந்த வகையில் ஏற்படுத்தப்பட்டது. இதை எக்கிராலா கிருஷ்ணமாச்சாரி என்பவர் நிறுவி, அவருக்குப் பிறகு தலைமைப் பொறுப்பு பார்வதி குமாரிடம் வந்தது. இந்த அமைப்பிற்கு ஐரோப்பாவிலும் தென் அமெரிக்காவிலும் கிளைகள் உண்டு. வருடா வருடம் பார்வதி குமார் சுற்றுப்பயணமாக அங்கே போகவும், அவர்கள் வருட இறுதியில் இங்கே வருவதுமாக ஒரு ஏற்பாடு. ரமணன் தயவால் எனக்கு இந்த அமைப்பின் புத்தகங்களை அச்சடிக்கும் பொறுப்பு கொடுக்கப்பட்டது. அது லாபகரமாகவும் இருந்தது. முதலில் ஆசான் சி.வி.வி. என்கிற புத்தகம். கும்பகோணத்தில் வாழ்ந்த சி.வி.விதான் இவர்களுடைய குரு. அவருடைய வாழ்க்கை வரலாற்றை எக்கிராலா கிருஷ்ணமாச்சாரியார் எழுதி ஆங்கிலப் புத்தகம் ஏற்கெனவே வெளியாகி, அதைத் தமிழில் ரமணன் மொழிபெயர்க்க, அச்சிடும் பணி எனக்கு.
ஆசான் சிவிவி பற்றி வெளியீடுகள் மூலம் அறிந்தது: கும்பகோணத்தில் பிறந்தவர் சிவிவி. 04.08.1868 தந்தை குப்புசாமி ஐயங்கார். தாயார் காமம்மா. நியோகி பிராமண வகுப்பு. குழந்தைக்குப் பதினோராம் நாள் வீர வெங்கசாமி ராவ் என்ற பெயர் சூட்டப்பட்டது. ஐந்து வயதில் உபநயனம். பிறகு அத்தை கஞ்சுபதி கப்பம்மாளுக்குத் தத்துக் கொடுக்கப்பட்டு திருவரங்கத்தில் மேல்படிப்பு. பன்னிரண்டு வயதில் ருக்மணி அம்மாவோடு திருமணம். பதினெட்டு வயதிற்குள் சிவிவி ஆங்கிலம், வடமொழி, தெலுங்கு ஆகியவற்றில் பாண்டித்யம் பெற்று, யோக சாதனையிலும் ஆத்ம ஞானத்திலும் நிலைபெற்றிருந்தார்.
வெளி உலகத்திற்குத் தெரியாமல் தன்னுடைய யோக சாதனைகளைச் செய்து வந்தார் ஆசான் சிவிவி. ஒருநாள் நள்ளிரவில் வானத்தில் பேரொளி ஒன்று புறப்பட்டு ஹோலி வால்நட்சத்திரத்தோடு கலந்து, பிறகு ஆசான் சிவிவி அறைக்குள் நுழைந்தது. அந்த ஒளி, பார்த்தவர்கள் கண்களைச் கூசும்படியாகச் செய்தது. அந்தப் பகுதியில் இருந்தவர்கள் எல்லாம் தூக்கத்தில் இருந்து விழித்துக்கொண்டார்கள். திரளாகக் கூடிவந்த அவர்கள் அவருடைய வீட்டுக்குள் சென்று பார்த்தால் அவர் ஆழ்ந்த தியானத்தில் இருந்ததைக் கண்டார்கள். பின்னர், புவியின் மரபு அணு அந்த இரவு தன்னோடு ஒத்துழைப்பு ஏற்படுத்திக்கொண்டது என்று ஆசான் அவர்களுக்கு விளக்கினார்.
இதைத் தொடர்ந்து கும்பகோணத்துக் குடியிருப்புகளில் ஆசானைக் கண்டு அதிசயிப்பவர்கள், சந்தேகிப்பவர்கள், அச்சப்படுகிறவர்கள் என்பதாகப் பிரிவுகள் ஏற்பட்டுவிட்டன. யோக சாதனைக்காகத் தன்னுடைய சீடர்களுக்கு அவர் குறிப்பிட்ட மந்திரங்களை வழங்கினார். அவற்றில் பெரும்பகுதி ஆங்கிலத்தில் வரப்போகும் ஆண்டுகளில் பிரம்ம வித்தை ஆங்கிலத்தில் வெளிப்படும் என்றும், ஆங்கிலம் யோகிகளின் மொழியாகிவிடும் என்றும் ஆசான் தெரிவித்தார்.
என்னுடைய கருத்து: பார்வதி குமார் வசதி உள்ளவர், பண்புடையவர், வள்ளல் தன்மையும் உண்டு. நான் அவருடைய அமைப்பின் பயனாளியாக இருந்தேன். இருந்தாலும் பிரம்ம ஞான சபை குறித்து மகாகவி பாரதியாருக்கு நல்ல அபிப்ராயம் இல்லை என்ற விஷயம் என்னில் முன்பே நிலைபெற்றுவிட்டது. பார்வதி குமாரின் அமைப்பும் அதே வகையில் உருவாக்கப்பட்டதுதான். மதங்களைக் கடந்து மகான்களைப் போற்றுகிற முறையில் கிருஷ்ணனும் மகான், கிறிஸ்துவும் மகான் என்கிற ரீதியில் மகான்களைத் தொகுத்து, வகுத்து, படிநிலைப்படுத்தி வைத்திருந்தார்கள். பார்வதி குமாருடைய அமைப்பிற்கு நூற்றுக்கணக்கில் வெளிநாட்டுச் சீடர்கள் இருந்தார்கள் என்பது அவர்களைப் பொறுத்தவரை சிறப்புச் செய்தி. ஆனால் என்னளவில் அது என்னைக் கவரவில்லை.
வெளிநாட்டிலிருந்து வந்த சீடர்கள் புட்டபர்த்திக்குப் போய்விடக்கூடாது என்பதில் பார்வதி குமார் கவனமாக இருந்தார். நான் இதை ரசிக்கவில்லை. அவருடைய போதனைகள் எனக்குப் புது வெளிச்சத்தைத் தரவில்லை. கழிவறையின் மேற்கத்திய மாடலைவிட இந்திய மாடலே ஆரோக்கியத்திற்கு உகந்தது, குந்தி உட்காருவது அவசியம் என்பதை அவர் சொன்னதும் அதைக் குறிப்பெடுத்துக்கொண்டு அந்த சீடர்கள் கொண்டாடியதும்…
*
இதே காலகட்டத்தில் எனக்கு ஒரு மகானுடைய தொடர்பு ஏற்பட்டது. விசாகப்பட்டினத்தில் இருந்து விடுமுறைக்கு வந்த ரமணன், நங்கநல்லூரில் இருக்கும் அவனுடைய தந்தை வீட்டில் தங்கியிருந்தான். அங்கே ராமன் மாமாவைச் சந்தித்தேன். ராமன் மாமா பிரம்மச்சாரி, ஆஞ்சனேய உபாசகர். அயனாவரத்தில் வீடு.
அவருடைய ஆற்றல், ஆளைப் பார்த்தவுடன் அந்த ஆளைப்பற்றிய அத்தனை விபரங்களையும் வெளிப்படுத்திவிடுவது. நடந்தது மட்டுமல்ல நடக்கப்போவதையும் சொல்வார். நல்லது மட்டுமல்ல அல்லதையும் சொல்வார் என்று முன்பே ரமணன் என்னிடம் எச்சரிக்கை செய்திருந்தான்.
என்னைச் சுட்டிக்காட்டி “இவனுக்கு ஏதாவது சொல்லுங்க” என்றான் ரமணன். ராமன் மாமா “வேணாம் சார், அவர் நாம சொல்றத எல்லாம் செய்யமாட்டார்” என்றார்.
“இல்லை மாமா, நீங்க சொல்லுங்க நான் செய்றேன்” என்றேன்.
அவர் “இவர் கோவிலுக்குப் போனால் நவக்கிரகங்களை சுத்தமாட்டேன் என்கிறார். நாம சொல்றத எங்க மதிக்கப்போகிறார்” என்றார்.
நான் வருவதற்கு முன்பே மாமாவிடம் என்னுடைய ஜென்மாந்திரப் பட்டியல் வந்துவிட்டது என்பதைத் தெரிந்துகொண்டேன். “மாமா நீங்க சொல்லிட்டீங்க, இனிமேல் நவகிரகங்களைச் சுத்தறேன்” என்றேன்.
மாமா “ஒரு அலுவலகத்தில் நமக்கு ஆபீசரைத் தெரிந்தால் போதாது, அட்டென்டரையும் தெரிந்துவைத்துக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் அவன் மனுவை ஒளித்து வைத்துவிடுவான். கடவுள் அருள் இருந்தாலும் அது நமக்குப் பயன்படாது. கிரகங்கள் எல்லாம் அட்டென்டர்கள் போல” என்று விளக்கினார். நான் பழக்கத்தை மாற்றிக்கொண்டேன்.
ராமன் மாமாவின் சாதனைகள் நம்புவதற்குக் கடினமாகத்தான் இருக்கும் என்றாலும், நான் நேரில் பார்த்ததையும் மற்றவர்கள் சொல்லக் கேட்டதையும் மறைக்க விரும்பவில்லை. உதாரணத்திற்கு ஒன்றிரண்டு. மத்திய அரசு அலுவலகத்தில் பணிபுரியும் ஒருவர் வீட்டில் ஆறு சவரன் செயின் காணாமல் போய்விட்டது. வேலைக்காரி மேல் சந்தேகம் இருந்தாலும், போலீஸ், வழக்கு என்று அதைப் பிரச்சினையாக்குவது அவர்களுக்கு ஒப்பவில்லை. மாமாவைச் சந்தித்து விஷயத்தை விளக்கியிருக்கிறார்கள்.
“பீரோவிலே பாருங்கள், லாக்கருக்குப் பின்னால் இருக்கும் சந்தில் சிக்கிக்கொண்டிருக்கிறது. வீணாக வேலைக்காரி மேல் பழி போட வேண்டாம்” என்று சொல்ல, வீட்டுக்குப் போய் பீரோவைத் திறந்து லாக்கருக்குள் கைவிட்டுத் துழாவினால் செயின் சொன்ன இடத்தில் சொன்னபடி.
ஒருமுறை நண்பருடைய காரில் ராமன் மாமா போய்க்கொண்டிருக்கிறார். பின்சீட்டில் நண்பர் குடும்பம். முன்சீட்டில் ராமன் மாமாவும் டிரைவரும். திடீர் என்று டிரைவரைப் பார்த்து “அவனுக்கே லைசன்ஸ் இல்ல, நீ ஏன் கவலைப்படுற” என்று சொல்ல, பயந்து போய் டிரைவர் வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டார். விஷயம் இதுதான். சில மாதங்களுக்கு முன் இதே டிரைவர் இதே காரில் போகும்போது ஒரு மோட்டார் சைக்கிளை இடித்து அது வழக்காகிவிட்டது. அந்த வழக்கைப் பற்றியே யோசித்துக்கொண்டு டிரைவர் வண்டி ஓட்டியபோது மாமா குறுக்கிட்டுவிட்டார். பிறகு டிரைவர் மேற்படி சங்கதியை தன்னுடைய வக்கீலிடம் சொல்ல, அவர் அதை எதிர்த்தரப்பிடம் சொல்ல, பிரச்சினை நீதிமன்றத்திற்கு வெளியே தீர்க்கப்பட்டுவிட்டது.
பெசன்ட்நகர் சிவன் கோவில் வாசலில் ஒருநாள் நண்பர்கள் உரையாடிக்கொண்டிருந்தோம். ஏதேச்சையாக ராமன் மாமா அங்கே வந்தார். அவரை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்தினேன். மாமாவிடம் என்ன கேட்கலாம் என்று யோசித்தபோது நண்பர்கள் “நம்ம கதையெல்லாம் வெளியே தெரிய வேண்டாம். மாமா தாங்கமாட்டார். கோவிலைப் பற்றிக் கேட்கலாம்“ என்றார்கள்.
சொல்லி முடிப்பதற்குள் மாமா தொடங்கிவிட்டார். “முதல்ல நீங்க சாமிக்கு பண்ற நைவேத்தியத்தை ஒழுங்காப் பண்ணுங்க. அதுவே சரியில்லை. நீங்க அவரை கவனிச்சாதான் அவர் உங்களை கவனிப்பார்” என்றார். இதைத் தொடர்ந்து சில தனிப்பட்ட விவகாரங்களும் கேட்கப்பட்டு அதற்கான மாமாவின் பதிலும். நான் அந்த இடத்தை விட்டு நகர்ந்து கோவிலுக்குள் சென்றேன். ‘நைவேத்தியம் சரியில்லை என்றால் என்ன அர்த்தம்? அளவு சரியில்லையா, ஆசாரம் சரியில்லையா, ஆள் சரியில்லையா?’ என்கிற மாதிரியான யோசனைகள். தவிர அந்த காலகட்டத்தில் நான் நிர்வாகக்குழுவில் உறுப்பினராக இல்லை. யாரிடம் இதைப் பற்றிப் பேசுவது என்று யோசித்துக் கொண்டிருக்கும்போதே, கூர்கா வந்து, “சார்.. செகரட்டரி உங்களை கூப்பிட்டார்” என்றார்.
அன்றைய செகரட்டரி நல்லவர்தான், நண்பர்தான், ஆனால் ஆசாமி கொஞ்சம் கறாரானவர். தலையீடுகளை விரும்பமாட்டார். அவரிடம் இதை எப்படி எடுப்பது என்ற யோசனையோடு போனேன்.
கவலைக்கு இடமில்லாமல் வேலை கண நேரத்தில் முடிந்துவிட்டது. “சுப்பு, இந்த பரிசாரகன் சரியில்லை. அனுப்பிடலாம் என்று யோசிக்கிறேன். நீ என்ன சொல்றே” என்றார் அவர்.
“அனுப்பிடுங்க சார்” என்று சொல்லிவிட்டு வெளியே வந்து பார்த்தால் சபையில் எவரும் இல்லை.
இத்தனை அதிசயத் திறமைகள் இருந்தாலும் ராமன் மாமா வெள்ளந்தியாகத்தான் இருந்தார்.
“மாமா, ஆஞ்சநேயர்கிட்ட என்ன கேட்பீங்க” என்று கேட்டேன்.
“ஒண்ணு பஸ் சார்ஜ் கொடு, இல்லைனா நடந்து போறதுக்கு தெம்பு கொடு”.
ராமன் மாமா என்ற பரிசுத்த மனிதரின் வாழ்க்கைத் தத்துவம் இந்த ஒரு வரிக்குள் அடங்கிவிட்டது.
தொடரும்..