Posted on Leave a comment

சோவியத் உளவாளியின் கதை | அருண் பிரபு

The Courier  – 2020ல் வெளியான திரைப்படம். சோவியத் உளவாளி ஒருவரை பிரிட்டானிய உளவு அமைப்பு கையாண்டதும் அவரிடமிருந்து பல்வேறு தகவல்களைப் பெற்று அதன்மூலம் போர் தவிர்க்கப்பட்டதையும் குறித்த கதை.

சோவியத் அதிபர் குருஷ்சேவ் சோவியத் சபையில் பேசுவதில் தொடங்குகிறது படம். “நாம் நாளுக்கு நாள் பலமாகிக் கொண்டே போகிறோம். நாம் மேற்கத்தியர்களை பூமியில் ஆழமாகப் புதைப்போம்” என்று அறைகூவுகிறார் குருஷ்சேவ்.

அதன் பிறகு அந்தச் சபையில் இருந்து அலுவலகம் வரும் ராணுவ உளவுப்பிரிவின் கர்னல் ஓலெக் பென்கோவ்ஸ்கி அங்கே சில ஆவணங்களை ஆராய்கிறார். பிறகு அமெரிக்கத் தூதரகத்தின் எதிரே நின்று சற்று நேரம் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு, சில மாணவர்கள் அங்கே பேசுவதை நோட்டமிட்டபடி வீட்டுக்கு வருகிறார்.

வீட்டிலும் சில கோப்புகளைப் பார்த்து ஆவணங்களைப் பிரதியெடுக்கிறார். சரிபார்த்த பிறகு அவற்றை எடுத்துக்கொண்டு வெளியே வருகிறார். மாஸ்கோ கலையரங்கத்தின் வாயிலில் காத்திருந்து, அவர் ஏற்கெனவே கண்காணித்த அமெரிக்க மாணவர்களைப் பின் தொடர்கிறார். ஒரு சுரங்கச் சாலையில் அவர்களை நிறுத்தி சீல் வைத்த கவர் ஒன்றைத் தருகிறார். அதைத் தூதரகத்தில் கொடுக்கும்படியும் சரியான நபருக்கு அது போய்ச்சேரும் என்றும் சொல்கிறார். ஒரு மாணவர் விரைந்து அமெரிக்கத் தூதரகம் சென்று கவரைக் கொடுக்கிறார்.

லண்டனில் MI6 அலுவலகத்துக்கு CIAவின் துணை அதிகாரி எமிலி வருகிறார். அங்கே ஓலெக் கொடுத்த ஆவணங்கள் மேலும் ஓலெக் பற்றிய விவரங்களைப் பகிர்கிறார். ஓலெக்கைக் கையாள CIA தயார், ஆனால் தூதரக அதிகாரிகள் Popov விவகாரத்துக்குப் பிறகு தயங்குகிறார்கள் என்று சொல்கிறார். Popov அமெரிக்காவுக்கு சோவியத் ரகசியங்களை விற்ற முதல் சோவியத் உளவாளி. தன் குடும்பம் உள்ளிட்ட பல விவசாயக் குடும்பங்கள் ஸ்டாலின் காலத்தில் கொடுமைப்படுத்தப்பட்ட சம்பவங்களை எண்ணிக் கோபம் கொண்டிருந்தவர் பியோடர் போபோவ். ஆனால் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்து தனக்கு மறுக்கப்பட்ட கல்வியைப் பயில்கிறார். பிறகு நம்பிக்கை பெற்று காமிசார் ஆகிறார். உளவுப்பிரிவில் பணி செய்கிறார்.

பிறகு இவரது திறமையால் GRU எனப்படும் ராணுவ உளவுப்பிரிவில் வேலை செய்ய வியன்னா அனுப்பப்படுகிறார். அங்கே அமெரிக்கத் தூதரக அதிகாரி ஒருவரிடம் தொடர்பு கொண்டு ரகசியங்களை விற்கிறார். சோவியத் ராணுவத்தின் திட்டங்கள், அணு ஆயுதம் தாங்கிய நீர்மூழ்கிக்கப்பல்கள் இருக்கும் இடம், போய்வரும் தடம் என்று பல விவரங்களைப் பகிர்கிறார். ஆனால் இன்னொரு சோவியத் உளவாளி அமெரிக்கா செல்வதைப் பற்றிப் போட்டுக்கொடுத்து அமெரிக்கர்கள் அந்த உளவாளியைக் கண்காணிக்கிறார்கள். உளவாளி KGBக்குத் தகவல் தருகிறார். பிறகு ரஷ்ய ராணுவத் தலைவர் பேசிய ஒரு தகவலை இவர் CIAக்குச் சொல்கிறார். குறிப்பிட்ட நபர்கள் இருந்த கூட்டம் என்பதால் அனைவரும் விசாரிக்கப்படுவதில் அதிகக் கடுமை காட்டுகிறது சோவியத் பக்கமுள்ள நாடுகள். இந்நிலையில் மாஸ்கோவில் CIA ஆள்போட்டு மீண்டும் உளவாளியோடு செயல்படுவதை மாட்டிக் கொள்ள வாய்ப்பிருக்கும் பணியாகக் கருதி தூதரகம் மறுக்கிறது. ஆகவே CIA இந்த விஷயத்தை பிரித்தானிய சகலை MI6இடம் தருகிறது.

MI6 மாஸ்கோவில் ஆள்போட்டு உளவாளியோடு உறவாடினாலும் சிக்கல்தான். ஆகவே கிழக்கு ஐரோப்பா, சோவியத் பிரதேசங்கள் உள்ளிட்ட இடங்களில் தொழில்துறைக்குத் தேவையான இரும்புச் சாமான்கள் விற்கும் க்ரெவில் என்பவரை அணுகுகிறது. மாட்டிக் கொள்ளாமல் கடிதம் கொடுப்பது, தகவல் பரிமாறிக்கொள்வது என்று பல விஷயங்களை அவருக்குக் கற்றுத் தருகிறார்கள் MI6 மற்றும் CIA அதிகாரிகள். க்ரெவில்லின் மனைவி சந்தேகம் கொள்கிறாள். க்ரெவில் அதிகமாக உடற்பயிற்சி செய்கிறார், தனியாக நெடுநேரம் பேப்பரும் பேனாவுமாக அமர்ந்திருக்கிறார், அரசியல் பற்றி அதிகம் பேசுகிறார், புதிதாகப் புத்தகங்கள் படிக்கிறார், ஆகவே வேறு பெண்ணோடு தொடர்பு இருக்குமோ என்று ஐயப்படுகிறாள். க்ரெவில்லின் அலுவலக காரியதரிசி அவரை அதிகமாக மாஸ்கோ உள்ளிட்ட கம்யூனிஸ நாடுகளுக்கு வியாபார விஷயமாக அனுப்புகிறார்கள் என்றும், அதனால் இப்படி நடந்து கொள்கிறார் என்றும் சமாதானப்படுத்துகிறார்.

மாஸ்கோ செல்லும் க்ரெவில் முதல் கூட்டத்தில் ஓலெக்கைச் சந்திக்கிறார். இருவரும் ஓலெக்கின் இயந்திர அறிவியல் துறைக்குத் தேவையான பொருட்கள் பற்றிப் பேசுகிறார்கள். எங்கள் தொழில்துறைக்கு மேற்கில் இருந்து என்னென்ன பொருட்களைத் தருவீர்கள் என்று சோவியத் அதிகாரிகள் கேட்கிறார்கள். அதற்கு க்ரெவில் “நான் எதையும் உங்களுக்குச் சிபாரிசு செய்ய மாட்டேன். பல்வேறு மேற்கத்திய உற்பத்தியாளர்கள் தயாரிக்கும் பொருட்கள் பற்றித் தகவல் தருகிறேன். நீங்கள் வேண்டியதைத் தேர்ந்தெடுங்கள்” என்று சொல்கிறார். சோவியத் அதிகாரிகளுக்கு ஆச்சரியமாக இருக்கிறது. அப்படி நாங்கள் தேர்ந்தெடுத்தால் உங்கள் அரசு உங்கள் மீது நடவடிக்கை எடுக்காதா என்கிறார்கள். உங்களுக்கு வேண்டியது உங்களுக்குத்தான் தெரியும், நாங்களோ அரசோ எப்படிச் சொல்லமுடியும் என்கிறார் க்ரெவில். அதுவே சோவியத்காரர்களுக்குப் புதிதாக இருக்கிறது.

ஆய்வுக்கூடத்துக்குத் தேவையான பொருட்களின் வடிவமைப்பு என்று அனுமதி பெற்று பல சோவியத் அணு ஆயுத வடிவமைப்பு ஆவணங்களைச் சேர்த்துத் தருகிறார் ஓலெக். அவற்றை வாங்கிக்கொண்டு லண்டன் செல்லும் க்ரெவில் அங்கே MI6 அலுவலகத்தில் கொடுக்கிறார். பாராட்டப்படுகிறார். அவரிடம், ஆய்வுக் கூட ஆவணங்களில் சந்தேகம் கேட்டு அவற்றை இணைத்து ஒரு கடிதம் எழுதச் சொல்கிறார்கள். எழுதுகிறார். மாஸ்கோவில் கடிதம் ஆராயப்பட்டு ஓலெக்கிடம் தரப்படுகிறது. அவர் பதில் எழுதிக் கொடுக்கிறார். ஆவணங்கள் ஆராயப்பட்டு லண்டன் அனுப்பப்படுகிறது கடிதம். பின்னர் நேரில் வந்து அவர்களது வடிவமைப்பை விளக்கக் கேட்கிறார் க்ரெவில். ஓலெக் பலவிதமான ராணுவ ஆவணங்களின் பிரதியுடன் வந்து சேர்கிறார்.

அவரை MI6, CIA அதிகாரிகள் சந்திக்கிறார்கள். குருஷ்சேவ் மிகவும் ஆபத்தான மனிதர், அவரிடம் அணு ஆயுதக் கட்டுப்பாட்டைக் கொடுப்பது உலகத்துக்கு ஆபத்து, ஆகவே தன்னால் இயன்ற வரையில் தகவல்களைத் திரட்டித் தருவதாகவும், அதைக் கொண்டு அமைதியை ஏற்படுத்தவேண்டும் என்றும் சொல்கிறார் ஓலெக். மேலும், ஏதேனும் ஆபத்து என்று தெரியவந்தால் தானும் தன் குடும்பமும் பாதுகாப்பாக இடம்பெயர அமெரிக்காவும் பிரிட்டனும் உதவவேண்டும் என்கிறார். ஒப்புக்கொள்கிறார்கள். தான் கொண்டு வந்தவை மிகவும் அடிப்படைத் தகவல்கள் என்பதை ஒப்புக்கொள்ளும் ஓலெக், பல விஷயங்களைச் சொல்கிறார். அதற்கான ஆவணங்களைக் கொடுப்பதற்கும் ஒப்புக்கொள்கிறார்.

க்ரெவில்லைப் பயன்படுத்திக்கொள்ள எண்ணுகிறார்கள். ஆனால் ராணுவ ரகசியங்களைக் கடத்தி வர க்ரெவில் தயங்குகிறார். சோவியத் நான்கு நிமிடங்களில் லண்டனைத் தாக்கும் ஏவுகணைத் தொழில்நுட்பத்தை வைத்துள்ளது என்றும், அதை க்ரெவில் கொடுத்த ஆவணங்களில் இருந்து கண்டுபிடித்ததாகவும் சொல்கிறார்கள். க்ரெவில் மேலும் ஆவணங்களைக் கொண்டு வர ஒப்புக்கொள்கிறார். க்ரெவில்லின் வீட்டுக்கு வருகிறார் ஓலெக். வோட்கா தருகிறார். க்ரெவில்லின் மகனுக்கு ஒரு ராக்கெட் பொம்மை பரிசு தருகிறார். உணவுக்குப் பிறகு க்ரெவில்லும் ஓலெக்கும் பேசிக்கொண்டே ஓட்டலுக்கு வருகிறார்கள். அப்போது உயர் ரகசிய ராணுவ ஆவணங்களைக் கடத்திவர தான் திட்டமிட்டிருப்பதாகவும், அதை க்ரெவில் மூலம் அனுப்பிவைக்க இருப்பதாகவும் ஓலெக் சொல்கிறார். மாட்டிக்கொண்டால் கொன்றுவிடுவார்கள் என்கிறார் க்ரெவில். கேஜிபியைவிடவும் தந்திரமாக நான் செயல்படுவேன் என்கிறார் ஓலெக். ஆனால் தனக்கு அவ்வளவு தந்திரம் தெரியாது என்று மறுக்கிறார் க்ரெவில். இருந்தபோதும் பிரச்சினை வராது என்று க்ரெவில்லை சமாதானம் செய்கிறார்கள். இரண்டு ஆண்டுகளில் தான் பல்வேறு ஆவணங்களைத் தருவதாக ஓலெக் சொல்கிறார்.

மாஸ்கோவுக்குச் செல்லும் க்ரெவில் பல்வேறு அறிவியல் தொழில்நுட்பக் கமிட்டிகளைச் சந்திக்கிறார். பலரிடம் வியாபாரம் பேசுகிறார். தேர்ந்த வியாபாரியாக நடந்துகொள்கிறார். உலகில் எங்கிருந்தாவது பொருட்களைக் கொண்டுவருவதாகச் சொல்கிறார். பணத்தாசை பிடித்த முதலாளித்துவவாதி என்கிறார்கள் ரஷ்யர்கள். ஓலெக் அவரிடம் சில விஷயங்களைக் கறக்க முயன்றதாக அறிக்கை அளிக்கிறார். ஆனால் அவை லண்டனில் ஓலெக் இருந்த போது பகிரப்பட்ட தகவல்கள். க்ரெவில் அளித்ததாகக் கூறி பல்வேறு தவணைகளில் பகிர்கிறார். க்ரெவில் உயர் ராணுவ ரகசிய ஆவணங்களின் ஃபோட்டோ பிரதியோடு லண்டன் வருகிறார். காமிரா ஃபிலிமை MI6 அதிகாரியிடம் தருகிறார். இவ்வாறு அடிக்கடி நடக்கிறது.

சோவியத் அணு ஆயுதச் சோதனைக்குப் பிறகு சோவியத் பகுதியில் இருந்து அதிகமான உளவுத்தகவல்கள் வருகின்றன. அங்கே MI6ல் வேலை செய்யும் ஒரு எழுத்தர் ரஷ்யாவின் உளவாளி. அந்த ஆள் தகவல் சொல்கிறார். இது இடைமறித்த தகவல் போலத் தெரியவில்லை, யாரோ உளவு சொல்கிறார்கள் என்கிறார். மாஸ்கோ உஷாராகிறது. ஓலெக் கண்காணிக்கப்படுகிறார். KGB அலுவலர் வந்து ஓலெக்கிடம் பேசுகிறார். சும்மா சந்திக்க வந்ததாகச் சொல்கிறார். க்ரெவில் பற்றிக் கேட்கிறார். க்ரெவில்லைக் கண்காணிக்கச் சொல்கிறார். தகவல் லண்டன் வருகிறது. க்ரெவில்லை இனி மாஸ்கோ செல்லவேண்டாம் என்கிறது MI6, CIA உளவுக்கமிட்டி.

மாஸ்கோவில் ஓலெக் மயக்கமுற்று மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார். அவரது சிகரெட்டில் மயக்கமருந்து கலக்கப்பட்டு KGB அவரது வீட்டையும் அலுவலகத்தையும் சோதனையிடுகிறது. ஓலெக்கிற்கு ஓய்வு தேவை என்று டாக்டர் சொல்கிறார். மருத்துவமனையில் இருக்கும் KGB ஆட்கள் கண்காணிக்கிறார்கள். ஓலெக்கின் மனைவி இரண்டாவது முறை கர்ப்பமாக இருப்பதை டாக்டர் உறுதி செய்கிறார். அவர்கள் மகிழ்ந்து கொண்டாடுகிறார்கள்.

லண்டனில், ஓலெக்கை மாஸ்கோவில் இருந்து வெளியேற்றி அமெரிக்கா கொண்டு செல்ல க்ரெவில் உதவி கேட்கிறார். ஆனால் KGB தலையிட்ட பிறகு அது முடியாது என்கிறது உளவுக்கமிட்டி. க்ரெவில் பிடிவாதமாக மாஸ்கோ சென்று ஓலெக்கைக் காப்பாற்றி வரவேண்டும் என்கிறார். CIA களமிறங்குகிறது. க்ரெவில் மாஸ்கோ செல்கிறார். ஓலெக்கின் குடும்பத்தை அங்கிருந்து அமெரிக்கத் தூதரக உதவியுடன் ஓலெக் குடும்பத்தை வெளியேற்றத் திட்டமிடுகிறார்கள். ஃபின்லாந்து வழியாகப் படகில் மேற்குப் பகுதிக்குக் கொண்டு வந்து அங்கிருந்து அமெரிக்கா அனுப்பத் திட்டமிடுகிறார்கள்.

திட்டத்தைச் சொல்லி ஓலெக்கை தயார் செய்துவிட்டு CIA ஆட்களிடம் விவரம் சொல்லிவிட்டு க்ரெவில் விமானம் ஏறுகிறார். ஆனால் விமானம் நிறுத்தப்பட்டு க்ரெவில் கைது செய்யப்படுகிறார். அங்கே ஓலெக்கின் வீட்டில் போலிஸார் காத்திருக்கிறார்கள். KGB அதிகாரியும் காத்திருக்கிறார். பல நாட்களாக ஓலெக்கைக் கண்காணிப்பதையும் அவரது அலுவலகத்தில் எடுக்கப்பட்ட மைக்ரோஃபிலிம் கேமரா உள்ளிட்ட பொருட்களையும் காட்டுகிறார். ஓலெக் உளவு சொன்னதை ஒப்புக் கொள்கிறார். அவரது குடும்பம் வேறு ஊருக்கு மாற்றப்படுகிறது. ஓலெக் KGB சிறையில் அடைக்கப்படுகிறார். ஓலெக்கின் தந்தை ரஷ்ய உள்நாட்டுப் போரில் ஜார் மன்னரின் பக்கமிருந்து போரிட்டதைக் காட்டி ஓலெக்கின் பரம்பரையே புரட்சிக்கு எதிரானவர்கள் என்று பேசுகிறார் KGB அதிகாரி. அவரது தாய் – தந்தையரை மோசமாகத் திட்டுகிறார். ஓலெக் பேசாமல் கேட்டுக்கொள்கிறார். ஆனால் உளவு சொன்னதை ஒப்புக்கொண்டு கொடுத்த தகவல்களையும் பகிர்கிறார். KGB அதிர்கிறது. இவ்வளவு தகவல் போயிருக்கிறதா என்று பதறுகிறார்கள் சோவியத் அதிகாரிகள். ஓலெக்குக்குச் சித்திரவதை அதிகரிக்கிறது.

க்ரெவில்லுக்குச் சிறையில் சித்திரவதை கொடூரமாக இருக்கிறது. குளிருக்குக் கம்பளி தராமல் நடுங்கவிடுவது, குளிர்ந்த தண்ணீர் தருவது, சிறுநீர் கொட்டி வைப்பது இப்படிப் பல சித்திரவதைகள். ஒரு கட்டத்தில், வியாபார ஏஜண்டுகளிடம் தான் ஒப்படைத்தவற்றையும், அவர்கள் பற்றிய விவரங்களையும் க்ரெவில் தருகிறார். KGB லண்டனில் விசாரிக்கிறது. க்ரெவில் உளவு சொன்னதாக விவரங்கள் கிடைக்கவில்லை, ஆனாலும் அவரை ஒப்புக்கொள்ள வைத்து Popov விவகாரத்துக்குப் பழிவாங்க வேண்டும் என்று KGB முயல்கிறது, லண்டனில் இருந்து சோவியத் உளவாளி கசியவிட்ட தகவல்களுக்கு அப்பாவி பிரித்தானிய வணிகரைக் கொடுமைப்படுத்துகிறார்கள் என்று தகவல் வெளியாகிறது.

ஓலெக்கும் தனது வாக்குமூலத்தில் க்ரெவில்லுக்கு ஒன்றும் தெரியாது, அவர் வெறும் தபால்காரர் போலச் செயல்பட்டார் என்று சொல்கிறார். தனது லண்டன் உளவுப் பங்காளியைக் காட்டிக்கொடுக்க மறுக்கிறார். அவர் சொல்லும் பெயர்கள் பிரித்தானிய உளவுத்துறையோடு நேரடி சம்பந்தம் இல்லாத பெயர்களாக இருக்கின்றன. ஆனாலும் KGB அவருக்குக் காலவரையற்ற சிறைவாசம் என்று சொல்கிறது. கோர்ட் வழக்கு என்று க்ரெவில் கேட்க, சிரித்துவிட்டுப் போகிறார் விசாரணை அதிகாரி. க்ரெவில்லின் மனைவி வந்து பார்க்கிறார். 5 நிமிடம் மட்டுமே அனுமதி என்கிறது KGB. சுருக்கமாகப் பேசிவிட்டுப் போகச் சொல்கிறார் சிறை அதிகாரி. சிறை அதிகாரியிடம் தன் கணவர் குற்றம் செய்திருப்பார் என்று சிறு ஆதாரமாவது உள்ளதா என்று கேட்கிறார் க்ரெவில்லின் மனைவி. அதிகாரி சொல்கிறார் “அரசாங்கம் அப்படித்தான் நம்புகிறது.” “நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?” “அரசாங்கம் என்ன நினைக்கச் சொல்கிறதோ அதை.”

க்ரெவில் விசாரணையில், “உங்கள் அதிகாரி எங்கள் ஊருக்குக் கசியவிட்ட தகவலுக்கு நான் எப்படிப் பொறுப்பாவேன், எனக்கு ஏதோ தொழில்நுட்ப வரைபடம் என்று தானே கொடுத்தார்கள், நீங்கள் அனுமதித்த பிறகுதானே கொண்டுபோனேன்? அனுமதித்தவர்களும் ஓலெக்கின் ஆட்களா” என்று கேட்கிறார். ஒரு முறை சிறையில் ஓலெக்கைப் பார்க்கிற போது “பாஸ்டார்ட்! உன்னால் நான் சிறையில் இருக்கிறேன். நீ தான் காரணம். உன்னை மன்னிக்க மாட்டேன்” என்று கத்துகிறார் க்ரெவில். ஓலெக் முகத்தில் உணர்ச்சி காட்டாமல் போகிறார்.

இந்நிலையில் க்யூபா ஏவுகணை விவகாரத்தில் சோவியத்திடம் அவர்கள் சொல்லிக்கொள்ளும் அளவிலான அணு ஆயுதங்கள் இல்லை என்பதைச் சுட்டிக்காட்டும் அமெரிக்க அதிபர் கென்னடி, க்யூபா சுருட்டைப் பற்றவைத்து உங்களிடம் இருக்கும் ஆயுதங்களின் லட்சணத்துக்கு இதைத்தான் கொளுத்த முடியும் என்று குருஷ்சேவுக்குச் செய்தி அனுப்புகிறார்.

க்ரெவில்லை விசாரித்துப் பயனில்லை, அவர் குற்றம் செய்திருக்க வாய்ப்பில்லை என்று KGB அதிகாரி அறிக்கை தருகிறார். க்ரெவில்லுக்குச் சித்திரவதை நிற்கிறது. சிறைவாசம் தொடர்கிறது. குற்றவாளி இல்லை என்றாலும் க்ரெவில்லை விடுவிக்க சோவியத் அரசு கோனன் மொலோடி என்ற உளவாளியை விடுவிக்கக் கேட்கிறது. மொலொடி மேற்கு ஐரோப்பா முழுவதும் சோவியத் உளவு அமைப்பை நிறுவிப் பல தகவல்களைக் கடத்தியவர். பல தாக்குதல்களை நடத்தியவர். 25 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்று பிரித்தானியச் சிறையில் வசிப்பவர். அவர் விடுவிக்கப்பட்டால் மட்டுமே க்ரெவில்லைத் திரும்ப அனுப்ப முடியும் என்கிறது சோவியத் அரசு. ஓலெக் பல சிறைவாசிகளின் முன் நிற்க வைக்கப்பட்டு சுடப்பட்டுக் கொல்லப்படுகிறார் என்று கருந்திரையில் எழுதிக் காட்டுகிறார்கள். மொலோடியை விடுவிக்க பிரிட்டன் ஒப்புக்கொள்கிறது. க்ரெவில் விடுதலையாகி வருகிறார்.

அதன் பிறகு சோவியத் பகுதிகளில் வியாபாரம் செய்யாமல் வேறு பகுதிகளில் வணிகம் செய்கிறார். புத்தகம் எழுதுகிறார். அதில் ஓலெக் நல்ல மனிதன், சொன்ன சொல்படி தன்னைக் காப்பாற்றினான், KGB செய்த சித்திரவதையிலும் தன்னைக் காட்டிக்கொடுக்கவில்லை என்று எழுதியிருக்கிறார். ஓலெக் பென்கோவ்ஸ்கி என்ற மனிதன் கொடுத்த தகவல்களால் குருஷ்சேவின் மிகைப்படுத்தல்களையும் தூண்டுதல்களையும் மீறி அமெரிக்காவோ பிற நாடுகளோ சோவியத் பகுதிகளின் மீது எந்தவிதமான போர் நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தன. ஆனால் இவ்வளவு செய்த ஓலெக் பென்கோவ்ஸ்கியோ அவரது குடும்பமோ காப்பாற்றப்பட முடியாத நிலையில் மாட்டிக் கொண்டார்கள் என்பது வருத்தமான விஷயம் என்ற குறிப்போடு முடிகிறது படம்.

இந்தப் படத்தை 2020ல் வெளியிட்டார்கள். FilmNation Entertainment, Sunny March ஆகிய நிறுவனங்கள் தயாரித்த படம் இது. டொமினிக் குக் என்ற பிரித்தானிய திரைப்பட இயக்குநர் இயக்கியிருக்கிறார். ஓலெக்காக நடித்த மெராப் நிநிட்சே British Independent Film Awards என்ற பிரித்தானிய திரைப்பட ரசிகர்கள் குழுமத்தின் சிறந்த துணை நடிகர் விருதுக்கு சிபாரிசு செய்யப்பட்டார். வரலாற்றைத் திரிக்காமல் எடுக்கப்பட்ட திரைப்படம் என்று பல விமர்சகர்கள் பாராட்டியிருக்கிறார்கள்.

Leave a Reply