Posted on Leave a comment

கருத்த லெப்பை: தமிழ் இஸ்லாமியப் பண்பாட்டு வெளியில் ஓர் ஒளிக்கீற்று | செ.ஜகந்நாதன்

மதம், மொழி, இனம் போன்ற பண்பாட்டு வெளிகள் சார்ந்து பல்வேறு செய்திகள் பொதுப்புத்தியில் உறைந்து விட்டன. ஆனால் பிரத்தியேகமாக அந்த அந்தப் பண்பாட்டு வெளிகளில் இருந்து பேசும் படைப்பாளர்களின் குரல்கள்தான் அப்பொதுப் புத்தியின் போதாமைகளைக் கலைத்துப் போட்டு அந்த அந்த நுண் உலகங்களுக்கு நம்மை அழைத்துச் செல்ல வல்லவை. வாசகர்கள் மட்டுமல்ல, படைப்பாளிகளும் இப்பொதுப்புத்திக்குக் காரணம்தான் என்பதையும் இந்நேரத்தில் சொல்லத்தான் வேண்டும்.

கருத்த லெப்பை, எழுத்து பிரசுரம், கீரனூர் ஜாகிர் ராஜா.

தமிழகத்தில் பரவியுள்ள இஸ்லாமியம் குறித்த புதிய கோணங்களை அறிமுகம் செய்யும் படைப்புகளைப் பல இஸ்லாமிய எழுத்தாளர்களும் வழங்கியுள்ளனர். அர்ஷியாவின் ‘ஏழரைப் பங்காளி வகையாறா’ சட்டென என் நினைவுக்கு வருகிறது. தமிழ் இஸ்லாம் பற்றிய பொதுப் புரிதலில் இருந்து விலகி அதன் தனித்துவம், படைப்புகளின் வழி விளக்கம் பெறுவதாக நாம் கருத முடியும். கீரனூர் ஜாகிர் ராஜாவின் ‘கருத்த லெப்பை’ அந்த வகையிலான படைப்புகளுள் ஒன்று.

பொருளாதார பலத்தின் காரணமாகச் சமூக அந்தஸ்தில் உயர்ந்தவர்களாகக் கருதிக்கொள்ளும் ராவுத்தமார் பிரிவுக்கும் அவை ஏதுமற்ற லெப்பைமார் பிரிவுக்கும் இடையிலான சமூக இடைவெளியை பேசுவதே நாவலின் பேசுபொருள்.

‘ஆண்டவன் சன்னிதானத்தில் யார் முதலாளி? ஆண்டவனே முதலாளி!’ என ஒவ்வொரு ஜூம்ஆ பிரசங்கத்திலும் பேஷ் இமாம் முழங்குவதற்கு நேர் எதிராக முதலாளிமார்களான ராவுத்தர் அண்டு கோ ஆள்கள் லெப்பைக் கூட்டத்தைத் தொழில் ரீதியாகத் தொடங்கிப் புதைகுழியான கபர்ஸ்தான் வரை அடக்கி ஆள்வதே நாவலில் முதன்மையாகச் சித்தரிக்கப்படுகிறது.

ராவுத்தமார்கள் லெப்பைகளை ஒதுக்கி வைக்கும் முதன்மைக் காரணங்களுள், ஒன்று தமிழ் இஸ்லாம் பற்றிய பொதுப் புரிதலைக் கேள்விக்கு உள்ளாக்குகிறது. லெவைமார்களின் மாட்டிறைச்சி உண்ணும் பழக்கம் ராவுத்தர்மார்களால் அருவருக்கத்தக்க ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. மாட்டிறைச்சி உண்ணும் லெவை உடலிலிருந்து வெளிவரும் வியர்வை துர்நாற்றத்தை ராவுத்தர்கள் சகிப்பதில்லை.

ஒரு லெவைக்கு நெஞ்சு வலி வரும்பொழுது கூட ‘ இந்த லெப்பைங்களுக்கு இதே வேலையாப் போச்சுடா அன்சாரி. மாட்டுக்கறியை திங்க வேண்டியது, அப்புறம் நெஞ்சு வலிக்குது குஞ்ச வலிக்குதுன்டு’ எனப் பேசுவதிலிருந்து ராவுத்தர்கள் லெப்பைகளின் உணவுப் பழக்கத்தை எவ்வளவு ஏளனமாக கருதுகின்றனர் என புலப்படுகிறது.

நாவலின் இச்செய்திகள் மாட்டிறைச்சி அனைத்து இஸ்லாமியர்களின் பொது உணவு அல்ல, மாறாக சமூகப் பொருளாதாரப் படிநிலைகளில் கீழ்நிலையில் உள்ள இஸ்லாமியர்களே விலை மலிவான மாட்டுக்கறியை உண்ணும் சூழலுக்கு ஆட்பட்டுள்ளனர் என்றும், சமூகப் பொருளாதாரப் படிநிலையில் மேல்நிலையில் உள்ள இஸ்லாமியர் முக்கிய உணவாக ஆட்டிறைச்சியையே உண்கின்றனரோ என்று யோசிக்க வைக்கிறது.

தமிழ் இஸ்லாமியர்கள் தாங்கள் ஓர் ஆபிரஹாமிய மதத்தைத் தழுவிய போதும் தங்கள் வேர்களை முழுமையாகத் தொலைத்து விடவில்லை என்பதை நாவலின் சில கதாபாத்திரங்கள் தொட்டுக் காட்டுகின்றன.

நண்ணியம்மா மலையாள மாந்திரீகத்தின் மீது நம்பிக்கை கொண்டிருப்பதும் அவ்வப்போது பண்டாரத்தைப் பார்த்து ராசிபலன் அறிவதும், தமிழ் இஸ்லாமியப் பெண்கள் ஹிந்துப் பெண்கள் தாலியைப் புனிதப் பொருளாகக் கருதுவதைப் போல் கருக மணியைப் புனிதப் பொருளாகக் கருதுதுவதும், தொல் எச்சங்களைத் தமிழ் இஸ்லாம் சமூகம் சுமந்து வருவதை அறிவிக்கும் பகுதிகள்.

கதாநாயகன் கருத்த லெப்பை கற்பனை ஊற்றெடுக்கும் கவித்துவ ரசிகன்; கனவுலக சஞ்சாரி; ராவுத்தர் அண்ட் கோவை ஒழிக்க லெப்பை அண்ட் கோவை உருவாக்கும் மனக்கோட்டை கட்டிவருங் கலகக்காரன். தன் அக்கா ருக்கியா பித்து லெப்பையின் வவ்வாக் கொட்டத்தில் வாழ்க்கைப்பட்டுச் சீரழிந்த காரணத்தால் மார்க்கத்தில் நம்பிக்கையற்று போனாலும் தெய்வீகத்தை அழகியல் நோக்கில் அணுகும் தன்மை கொண்டவன். அவனுக்குள் நிறைந்துள்ள அழகியல் உணர்வே அவனுடைய அடையாளமாக நாவலில் தோற்றம் பெறுகிறது. இந்த அழகியல் உணர்வுதான் சவ்வு மிட்டாய் பொம்மைகளைச் செய்யும் அமீதை ஒரு தேர்ந்த ஓவியக்காரனாகப் பார்க்க வைக்கிறது. அம்மா லாகவமாகப் பிழியும் முறுக்குகளைக் குடியானப் பெண்டுகளின் மார்கழிக் கோலமாகச் சிந்திக்க வைக்கிறது. ராதியம்மா கனவில் கண்டதாக வருணித்த நாயகத்தின் வடிவத்துக்கு உருவம் வழங்கும் துணிச்சலைத் தருகிறது.

சாம்பான் மடத்து பாவாவின் சகவாசம்தான் கருத்த லெப்பை கனவுலக வாசியாக ஆனதற்கு முக்கியக் காரணம். அதேசமயம் தன் கணவனை இழந்து அடைக்கலம் தேடிவந்த சின்னப் பேச்சியை வேற்று மதப் பெண் எனப் பார்க்காமல் மனப்பூர்வமாக அன்பு காட்டித் தன் வாழ்க்கையில் இணைத்துக் கொண்ட கொடிக்கால் மாமுவின் வளர்ப்பும் இவனைக் கலகக்கார மனநிலைக்குக் கொண்டு சென்றுள்ளது எனலாம்.

ராவுத்தர்களின் பார்வையில் லெப்பைகள் கீழானவர்கள் என்ற சித்திரம் இருந்தபோதும் லெப்பைகளுக்குத் தங்கள் கூட்டத்தின் மீதான பெருமிதம் அருகாமல்தான் இருக்கிறது. கருத்த லெப்பைக்கும் அபுபக்கருக்கும் நடக்கும் வாய்த்தகராறு ஒன்றில் அபுபக்கர் ‘நான் அக்மார்க் லெவக் கூட்டமாக்கும்’ என ஆவேசம் பொங்கப் பேசுவதும், ‘ நானும் தல நாள்ல லெவைக்குப் புள்ளையாப் பொறந்தவதேங்’ என ஓரிடத்தில் பார்த்துமா சீறுவதும் சான்றுகள்.

கொடிக்கால் மாமாவின் மரணத்தைத் தாங்க முடியாமல் தன் ஒருபக்க மாரை அறுத்துக் கொள்ளும் சின்னப் பேச்சியின் உக்கிரமான அன்பும், தன் கனவுகளை நிர்மூலம் ஆக்கிய பைத்தியக்காரக் கணவனைத் தன் பரிவால் குணப்படுத்த முயலும் ருக்கியாவின் தாய்மை உள்ளமும் பெண்களின் உறவுப் பிணைப்பைப் பற்றிய ஆழமான பதிவுகள்.

ஏறத்தாழ 75 பக்கக் குறு நாவல் மூலம், தமிழ் முஸ்லிம்களின் உலகை அறிவதற்கான திறவுகோலைக் கீரனூர் ஜாகிர் ராஜா தந்துள்ளார் என்று உறுதியாகச் சொல்லலாம்.

Leave a Reply