Posted on Leave a comment

சில பயணங்கள் சில பதிவுகள் – 44 | சுப்பு

பக்தராஜ் மகராஜ்

வருடத்திற்கு இரண்டு முறையாவது விசாகப்பட்டினத்திற்குப் போய் ரமணனைச் சந்திப்பது எனக்கு வழக்கமாகிவிட்டது. ஒருமுறை புறப்படும் போது பக்தராஜ் மகராஜ் என்ற மகான் விசாகபட்டினத்திற்கு வரப்போவதாகவும், மூன்று நாட்கள் பிரபாத் குமார் வீட்டில் தங்கப் போகிறார் என்றும் செய்தி வந்தது. அவரோடு இருக்க வேண்டுமென்று ரமணன், அனு, இரண்டு குழந்தைகள் எல்லோரும் அந்த மூன்று நாட்களும் பிரபாத் குமார் வீட்டிலேயே தங்குவதாக முடிவெடுத்தார்கள். என்னையும் சேர்த்துக்கொண்டார்கள். பெங்களூரில் இருந்து ஆனந்த் வந்து சேர்ந்துகொண்டான்.

பாபா என்று அழைக்கப்படும் பக்தராஜ் மகராஜ் பற்றி: பிறந்தது மத்திய பிரதேசத்தில் மானஸா என்ற ஊரில் – 07.07.1920. முப்பத்தி ஆறு வயதில் குருநாதர் அனந்தானந்த சாயி சந்திப்பு. இந்தோர் நகரில் ஆஸ்ரமம் ஏற்படுத்திய பாபாவின் கோட்பாட்டை இரண்டு வார்த்தைகளில் சொல்லிவிடலாம். – பஜன், போஜன். ஆள் உயர பாத்திரங்களில் பட்சணங்களை அடுக்கி வைத்து பாத்திர வரிசைகளைப் பார்வையிட, பாபா ஜீப்பில் வருவார். ஒரு ராணுவ அதிகாரி மரியாதையை ஏற்றுக்கொள்வதைப் போல அந்தக் காட்சி இருக்கும். பாபா மராத்தி ஹிந்தியில் பேசுவார். எதிர்பாராத நேரத்தில் ஆங்கிலத்திலும் அசத்துவார்.

ஆறு பேருக்கு இடம் கொடுப்பது என்பது பிரபாத் குமார் வீட்டின் அளவிற்குப் பெரிய விஷயம் இல்லை. எங்களுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுவிட்டன. ஆனால் பக்தராஜ் வந்தபிறகு கொஞ்சம் சிரமம். அவரோடு பத்து வேன்களில் ஐம்பது பேர் வந்து இறங்கிவிட்டார்கள். சரிபாதியாகப் பெண்கள். இந்தி மற்றும் மராத்திதான் பழக்கம். ஒரு சிலருக்கு ஆங்கிலம் பேசினால் புரிகிறது. எல்லோரும் ஏதோ ஒரு காரணத்தை வைத்துக்கொண்டோ அல்லது காரணம் இல்லாமலோ அவரைச் சுற்றி சுற்றி வந்தார்கள். பக்தராஜின் பாஷை கடுமையானது என்பது எனக்கு முதல் சுற்றிலேயே புரிந்துவிட்டது.

கூட்டத்தை விலக்கிக்கொண்டு அவர் அருகே சென்று பார்த்ததில் எனக்குப் பெரிதாக ஒன்றும் உணர்த்தப்படவில்லை. ஒரு வயதான சேட் போலத்தான் தெரிந்தார். அதுவும் மீசை உள்ள தலையில் தொப்பி உள்ள சேட். ஒரு ஒழுங்கில்லாத வரிசையில் குடும்பம் குடும்பமாக வந்து அவரைப் பார்த்து காலில் விழுந்து குறைகளையும் விண்ணப்பங்களையும் சொல்லி, சொல்லிய அந்த சில நிமிடங்களுக்குள் அந்த விவகாரம் தீர்ந்துவிட்டதுபோல் உணர்ந்து, அவர்கள் நகர்ந்து வரிசையில் அடுத்தவர் வந்து காலில் விழுந்து…

இந்த வரிசையில் சேராமல் நான் பக்தராஜின் அருகில் நின்றுகொண்டிருந்தேன். விசாகப்பட்டினத்து மக்கள் தெலுங்கு பேசுகிறவர்கள் என்பதால் அனு அவருக்குப் பக்கத்தில் இருந்துகொண்டு தெலுங்கில் இருந்து இந்தியில் மொழிபெயர்க்கும் பணியைச் செய்து கொண்டிருந்தாள். அவளுக்கு உதவியாக நான்.

ஒழுங்காகப் போய்க்கொண்டிருந்த வரிசையில் ஒரு சின்ன சலனம். டாம்பீகமாக வந்தார் ஒருவர். மற்றவர்களைப் போல நின்றுகொண்டோ, குனிந்துகொண்டோ பேசாமல் பாபாவுக்கு எதிரே சப்பணமிட்டு அமர்ந்துவிட்டார். அவரை பாபா அழைத்த விதத்தில் இருந்தும், அவருடைய சம்பாஷனையில் இருந்தும் மேற்படி நபர் உயர்ப்பதவியில் உள்ள அரசு அதிகாரி என்பதையும் அவர் ஒரு பண்டிட் என்பதையும் தெரிந்துகொண்டேன். அடுத்தது முக்கியமான விபரம். ஐந்து நிமிட சம்பாஷனையில் பண்டிட் அதை மூன்று முறை வலியுறுத்திச் சொல்லிவிட்டார். அதாவது பண்டிட் ஒரு சுயம்பாகி அவர் சமைத்ததைத்தான் அவர் சாப்பிடுவார்.

அவர் இதைச் சொல்லிக்கொண்டிருந்த போது பாபாவின் லீலை ஆரம்பித்தது. பண்டிட்டை பக்கத்தில் அமர்த்திக்கொண்டார். வரிசையில் வந்த பக்தரிடம் உனக்கு பாயசம் பிடிக்குமா என்று கேட்டார். அந்த பக்தர் பரவசமாகி பாபா கொடுத்தால் சாப்பிடுகிறேன் என்றார். “இதோ பார் இந்த பண்டிட் பெரிய அரசாங்க அதிகாரி. ஆனால் கட்டுப்பாடு உடையவர். ஒழுக்க சீலர். ஆச்சாரத்தைவிட்டு அந்தப்பக்கம் இந்தப்பக்கம் நகரமாட்டார். தானே சமைத்து சாப்பிடுகிற பழக்கம் உடையவர். நன்றாகவும் சமைப்பார்” என்று சொல்லிவிட்டு பண்டிட் பக்கம் திரும்பி “கொஞ்சம் பாயசம் செய்து இவருக்குக் கொடுங்கள்” என்றார்.

அந்த அறையிலேயே ஒரு அடுப்பு தயார் செய்யப்பட்டு பண்டிட்டும் பக்தரும் அனுப்பிவைக்கப்பட்டார்கள். அவ்வப்போது பாயசம் தயாராகிவிட்டதா, ஏன் இவ்வளவு தாமதம் என்று பாபா விரட்டிக்கொண்டே இருந்தார். ஒரு வழியாக பாயசம் தயாராகி பாபா சாப்பிட்டு, பண்டிட் சாப்பிட்டு, குறிப்பிட்ட பக்தருக்குக் கொடுத்து சபையிலும் விநியோகிக்கப்பட்டது.

இப்போது அடுத்த பக்தர். அவரிடம் பாபா கேட்டது “உனக்குக் கேசரி பிடிக்குமா”. நீங்கள் ஊகிப்பது சரிதான். கேசரி தயாரிக்கும் பணியில் பண்டிட் ஈடுபடுத்தப்பட்டார். அந்த பக்தருக்குக் கேசரி. மூன்றாவது இனிப்பை தயாரிப்பதற்குள் பண்டிட் முக்தி நிலையை அடைந்துவிட்டார் என்று நினைக்கிறேன். இந்த குறும்புத்தனத்தை, சேஷ்டையை அருகில் இருந்து பார்க்கும் போதுதான் பாபா எப்படித் தன்னைச்சுற்றி ஒரு கோகுலத்தை உருவாக்கி, அதில் அவருடைய அன்பர்களை வைத்து மகிழ்வித்துக்கொண்டிருந்தார் என்பது புரிந்தது.

பாபா சக்கரை நோயாளி. அது தீவிரமாகி ஒரு கட்டி ஏற்பட்டு மார்பில் துருத்திக்கொண்டிருந்தது. அது பயங்கரமாக வலிக்கும் என்று அனு சொல்லிக்கொண்டிருந்தாள். ஆனால் பாபாவைப் பார்த்தால் அப்படி எதுவும் தெரியவில்லை. அவர் பக்தர்கள் கொடுத்த ஸ்வீட்டை சர்வ சாதாரணமாக சாப்பிட்டுக்கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் கூடஇருந்த ஒரு பெண் பாபாவைத் திட்டிவிட்டு அவருடைய வாய்க்குள் விரலை விட்டு ஜிலேபியை எடுத்துவிட்டது.

அந்த வீட்டில் ஒரு பக்கத்தில் பெரிய புல்வெளி இருந்தது. மாலையில் அங்கே பாபாவின் பஜனை. ஹார்மோனியம், தபேலாவோடு அன்பர்கள். பாபாவில் கையில் கஞ்சிரா.

துஜே ஜானாஹை
அப்னே வதன்!

இஸ் துனியா கா
டேலா மேலா
ஜீவன் சாரா ரங்கீலா

தேரா கோயி கரேனா
ஜதன் – முஸாஃபிர்
ஜானா ஹை அப்னே
வதன்

என்பதாக ஒரு பாடல். அதாவது ஆன்மிகப் பயணத்தில் இருக்கும் வழிப்போக்கனைப் பார்த்து ஒருவர் பாடுவதாக பாவனை, கிராமிய மெட்டு. வதன் என்பது இடம். “நீ உன்னிடத்திற்குப் போய்ச் சேர வேண்டும். சந்தைக்கடை போல் இருக்கும் இந்த உலகத்தையும் வண்ணங்கள் நிறைந்த வாழ்க்கையையும் விட்டு விலகி நீ உன்னிடத்திற்குப் போக வேண்டும். இங்கே உன்னை கவனிப்பவர் யாரும் இல்லை. நீ உன்னிடத்திற்குப் போக வேண்டும்” என்பதுதான் பொருள் என்பதைப் பிறகு தெரிந்துகொண்டேன்.

பாடலை எடுத்து முதல் வரியை முடிப்பதற்குள் பாபாவைச் சுற்றி ஒரு பரவச வட்டம் உருவாகிவிட்டது. அங்கிருந்தவர்கள் அனைவரும் பாட ஆரம்பித்தார்கள், இசைக்கு ஏற்றபடி ஆட ஆரம்பித்தார்கள். இந்திய மொழிகள் எதுவும் தெரியாத வெளிநாட்டவர்களும் ஆடினார்கள். உச்சஸ்தாயியில் பாடிக்கொண்டே பாபா ஒரு மாலையை எடுத்து வீசினார் அது சற்றுத் தள்ளி உட்கார்ந்திருந்த ரமணன், அனு இருவர் கழுத்திலும் சரியாக விழுந்தது.

பாபாவை அருகில் இருந்து பார்த்த எனக்கு ஒரு விஷயம் புரிந்துவிட்டது. ஒரு கையால் கஞ்சிராவைப் பிடித்து முகத்துக்கு அருகே வைத்துக்கொண்டிருந்தாரே தவிர இன்னொரு கை அதைத் தொடவே இல்லை. ஆனால் அதிலிருந்து தாளம் மட்டும் கேட்டது. இடைவேளையின்போது அவரிடம் கேட்டுவிட்டேன். “கை படாமலே வாசிக்கிறீர்களே, இது ஒரு மிராக்கிளா?” என்று. அவர் “இவனை யார் இங்கே உட்காரவைத்தது? எழுந்திரு!” என்று சொல்லிவிட்டார்.

மாலையில் தொடங்கிய பாபாவின் சபை இரவு வரை நீடித்துக்கொண்டே போனது. நம்முடைய முறை எப்போது என்று தெரியவில்லை. இடையில் அவர் பாத்ரூம் போன போது அங்கே காவலுக்கு நானிருந்தேன். இருந்தாலும் பாஷை பிரச்சினையால் பேச முடியவில்லை. அனுவிடம் சொல்லி “நான் பேச வேண்டும், நீ மொழிபெயர்த்து அவருக்குச் சொல்லிவிடு” என்றேன். அவள் பாபாவிடம் என்னைப் பற்றிச் சொல்லிவிட்டு “என்னுடைய அண்ணா உங்களோடு பேச வேண்டுமாம்” என்றாள். அவர் ஹிந்தியில் பேச, அதை அனு மொழிபெயர்க்க, பாபாவின் உடல் மொழியிலிருந்து மொழிபெயர்ப்பைக் கடந்து ஈர்ப்பு ஏற்பட்டுவிட்டது.

“உனக்கு என்ன வேண்டும்?”

“பாபா, நான் என்ன செய்ய வேண்டும்?”

“காத்திரு, நான் சொல்கிறேன்.”

“எப்போது” என்றேன் நான்.

“நாளைக்கு.”

உரையாடலைத் தொடர முடியாமல் யாரோ ஒரு பிரமுகர் வந்துவிட்டார். பொழுது நகர்ந்தது. பக்தர் கூட்டம் குறைந்து பஜனைகள் பாடி இரவு உணவுக்காக முடிக்கும்போது மணி பத்து. அந்த இரவிலும் இருபது பேர் இருந்தார்கள்.

ரமணன் பாபாவை அணுகி, “பாபா, உங்க வீட்டுக்கு வரணும்” என்று சொன்னான். உடனே பாபா “நான் ரமணன் வீட்டுக்குப் போறேன். அவன் எங்க வீட்டுக்கு வாங்க என்று சொல்லாமல் உங்க வீட்டுக்கு வாங்க என்று சொன்னான். அதனால் அங்கே போகிறேன். அவனைக் காப்பியடித்து நீங்களும் உங்கள் வீடு என்று சொல்லிவிடாதீர்கள். அப்படிச் சொன்னால் நாளைக்கே நாம ரிஜிஸ்ட்டர் ஆபிசுக்குப் போக வேண்டியிருக்கும். ரமணன் உணர்ந்து சொல்றான். நீங்க டிரை பண்ணாதீர்கள்” என்றார்.

ரமணன், அனு மற்றும் நான் விலகி ஆலோசனை செய்தோம். “முதல்நாளே இங்கே வந்துவிட்டதால் வீடு எந்த நிலைமையில் இருக்கிறது என்று தெரியாது. பாபா வருகிறார் என்றால் குறைந்தபட்சம் பத்து பேர் வருவாங்க. கடையெல்லாம் மூடியிருக்கும் இந்த நேரத்தில் எதையும் வாங்கவும் முடியாது. இங்கிருந்தே இனிப்பையும் பாலையும் எடுத்துக்கொண்டு நீயும் சுப்புவும் போய் வீட்டைத் தயார் செய்யுங்கள். பிறகு பாபாவுடன் நான் வருகிறேன்” என்றான் ரமணன்.

நானும் அனுவும் புறப்பட்டு வீட்டுக்கு வந்தோம். அனுவுக்கு அதிக வேலையில்லை. அவர் வந்தவுடன் பாலை வைத்து டீ போட வேண்டியதுதான். எனக்கு துப்புரவுப் பணி, ஜட்டிகள் உள்ளாடைகள் போன்றவற்றை ஒளித்து வைக்கும் பணி. அந்த முறை நான் அதிகமாக உழைத்தது அந்த முன்னிரவுப் பொழுதில்தான் என்று நினைக்கிறேன்.

ரமணன் பாபாவை அழைத்து வந்தான். பாபா பிளஸ் பத்துபேர். இனிப்பு, டீ வழங்கப்பட்டது. இது ரமணன் வீடு என்பதாலும் கூட்டம் குறைவாக இருந்தது என்பதாலும் இப்போது நான் பாபாவின் பக்கத்தில் உட்கார்ந்துகொண்டேன். என்னையே உற்றுப்பார்த்துக்கொண்டிருந்த பாபா, “என்ன பார்க்கிற” என்று கேட்டார். “ஒண்ணும் பிரச்சினையில்லை. என்னைப் பொறுத்தவரை எல்லாமே ஐந்து நிமிடத்தில் சரியாகிவிடும்” என்றேன் நான்.

பாபாவிற்கு புரியவில்லை. “என்ன சொல்ற?”

“நான் என்ன செய்ய வேண்டுமென்பதை நாளைக்கு சொல்வதாகச் சொன்னீர்கள்” என்று சொல்லிவிட்டு, கையை உயர்த்தி சுவரில் இருந்த கடிகாரத்தைக் காட்டினேன். “பன்னிரண்டு மணிக்கு ஐந்து நிமிடங்கள்தான் பாக்கி. ஐந்து நிமிடத்திற்கு அப்பறம் நாளை வந்துவிடும். நீங்களும் எனக்குச் சொல்லிவிடுவீர்கள். அதோடு என் ரூட் கிளியர் ஆகிவிடும்” என்று சொன்னேன்.

பாபா குலுங்கிக் குலுங்கிச் சிரித்தார். ஏதோ ஒரு புரியாத வார்த்தையைச் சொல்லி ஓங்கி என் முதுகில் அடித்தார். கூட்டம் சிரித்தது. அடியை ரசித்தது. ஆனால் அது முடிவல்ல, தொடக்கம்தான். ஞானம் அடைந்த ஒருவர் ‘காத்திருத்தல்’ என்ற தலைப்பில் கட்டுரை எழுதினால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது அவருடைய அடுத்த பத்து நிமிடப் பேச்சு.

“பல்வேறு தேவைகளுக்காகக் காத்திருப்பதிலேயே மனித ஜென்மா வீணாகிறது. ஒரு தேவை, அதற்காகக் காத்திருத்தல், அது கிடைத்தால் அடுத்த தேவைக்காக காத்திருத்தல் என்பது ஒரு ரூட். கிடைக்காவிட்டால் கவலைப்படுவது இன்னொரு ரூட். காத்திருத்தல் ஆரம்பம், முடிவில் காத்திருத்தல் என்பதாகவே மனுஷஜென்மா கழிகிறது. ஏதாவது ஒரு நல்ல நேரத்தில், பகவானுடைய கிருபையால் தெளிவு ஏற்பட்டு இந்தப் பாதையில் இருந்து விலகி தொடர் முயற்சியின் பயனாக ஒருவன் ஜீவன் முக்தனாக ஆகிறான். ஜீவன் முக்தனுக்கு எதிர்பார்ப்பு இல்லை. எனவே ஏமாற்றமும் இல்லை. ஆனால் அவனுக்கும் காத்திருத்தல் உண்டு. எதுவும் இல்லாத அவனுக்கும் உடம்பு என்ற சுமை இருக்கிறது. அதை எப்போது கழற்றிவிடுவது, அதற்கான உத்தரவு எங்கே இருந்து வரும் என்று அவன் காத்திருக்கிறான். ஆனால், அவனுடைய காத்திருத்தலால் மற்றவர்களுக்குப் பலன் உண்டு. நீ அதுபோலக் காத்திருக்க வேண்டும் என்று ஆசீர்வதிக்கிறேன்” என்று சொன்னார்.

மூன்றாம் நாள் காலையில் பாபா புறப்படத் தயாராக இருந்தார். அவரிடம் பேசுவதற்கு வாய்ப்பு இருக்குமோ என்பது என்னுடைய கவலை. அந்த நேரத்திலும் நூறு பேர் இருந்தார்கள். ஆனால் நான் எதிர்பார்க்கவே இல்லை. என்னை அழைத்தார். இந்த முறை அனு இல்லை. “நான் பரவசமாக வானத்தில் மிதந்துகொண்டிருக்கிறேன். ஆனால் ஒரு பிரச்சினை. இதெல்லாம் நீங்கள் இருக்கும்போது மட்டும் இருக்குமா, போன பிறகும் நீடிக்குமா?” என்று கேட்டேன்.

பாபா “காற்றாடி வானத்தில் இருந்தாலும் கயிறு என்னிடம்தான் இருக்கிறது. கவலைப்படாதே. நீ என்னைவிட்டாலும் நான் உன்னை விடமாட்டேன்” என்றார். பாஷை புரிந்துவிட்டது, அனு வந்துவிட்டாள்.

“பாபாவிடம் இன்னொரு விஷயத்தைக் கேட்கவேண்டும். இப்போது கேட்கலாமா?” என்றேன். “இப்போது கேட்காம அவர் ஊருக்குப் போன பிறகா கேட்கப்போகிறாய்” என்றாள் அவள்.

ரொம்ப சிரமப்பட்டு பாஷையை நாகரீகப்படுத்தி நான் சொன்னதை அனு அவருக்கு மொழிபெயர்த்தாள். என்னுடைய பிரச்சினை இதுதான். எப்போதும் பராசக்தி என்னோடு இருக்கிறாள். மனத்திரையில் பல உருவங்களாக மாறி மாறி வரும் தேவியின் வடிவங்களில் முதலும் முடிவுமாக இருப்பவள் புவனேஸ்வரி. வீட்டில் இருந்தாலும் வெளியில் இருந்தாலும் நல்லதோ கெட்டதோ எந்தச் சூழலில் நான் இருந்தாலும் ஒரு வகையில் நான் இங்கே இருந்துகொண்டே இன்னொரு வகையில் அவளோடு இருப்பேன். இன்னும் சரியாகச் சொல்லப்போனால் அந்த இருப்பின் இடையில்தான் இங்கே நடக்கிற நகர்வு. இது தியானமா, வழிபாடா, பக்தியா, வெறும் தோற்றமா என்று ஆராய்வதில் எனக்கு விருப்பம் இல்லை. என்னைப் பொறுத்தவரை இது ஒரு சௌகரியமான நிலை. என்னுடைய மனதில் அவள் இருக்கிறாளா, இல்லை சக்திப் பொய்கையில் ஒரு குமிழாக நான் இருக்கிறேனா என்கிற புதிர் இப்படியே இருக்கட்டும்.

இந்த உறவில் சின்ன சிக்கல் இருக்கிறது. எப்போதும் என்னோடு இருக்கும் இவளை பாத்ரூமுக்குப் போகும்போது என்ன செய்வது. அதுவும் என்னுடைய வயிறு இருக்கும் நிலையில் பெரும்பாலான சமயங்களில் அவசரமாகத்தான் அங்கே போகவேண்டியிருக்கும். அந்த அவசரத்தில் “நீ இங்கேயே இரு. சீக்கிரம் வந்துவிடுகிறேன்” என்று சொல்லிவிட்டு அந்தக் கதவைத் திறப்பேன். ஆனால் நம்முடைய பேச்சை அவள் மதிப்பதில்லை, அங்கேயும் இருப்பாள். இதை எப்படித் தவிர்ப்பது. இதுதான் பிரச்சினை.

பாபாவிடம் கேட்டேன். “பாத்ரூமுக்குள் பராசக்தி வரக்கூடாது. ஆனால் என்னுடைய தியானம் தொடர வேண்டும். இதற்கு ஏதாவது வழி செய்ய முடியுமா?”

பாபா வலதுகையை உயர்த்திக் கட்டைவிரலால் என் புருவமத்தியைத் தொட்டார். “இனி இந்தப் பிரச்சனை இருக்காது” என்று சொல்லிவிட்டார். அப்போது அங்கே நடந்த பௌதீக ரசாயன மாற்றங்களை எழுதிப் புரிய வைக்க முடியாது. அது காலம் உறைந்த கணம்.

அதற்குப் பிறகு பாத்ரூம் கதவைத் திறந்தவுடன் பாபா தொடங்கிவைத்த ஜெபம் ஆரம்பித்துவிடுகிறது. வெளியில் வந்தவுடன் நின்றுவிடுகிறது.

பாத்ரூமுக்குள் பராசக்தி வருவதில்லை.

தொடரும்..

Leave a Reply