Posted on Leave a comment

சில பயணங்கள் சில பதிவுகள் – 45 | சுப்பு

காஞ்சி பெரியவா

பெரியவா என்று அறியப்படுகிற காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி அவர்களை நான் சந்தித்ததில்லை, ஒரே ஒருமுறை பார்த்திருக்கிறேன், கனவில். எனக்குத் தெரிந்து இந்த ஜென்மாவில் என்னுள் சில அடையாளங்களை அகற்றியிருக்கிறார். சொல்வதற்கு விஷயங்கள் இருக்கின்றன. அவரைப் படித்திருக்கிறேன், கேட்டிருக்கிறேன், அவர் சொன்னதையும் அவரைப் பற்றி அடுத்தவர் சொன்னதையும்.

எழுத்தாளர் ரா.கணபதி பெரியவாளுடைய சொற்பொழிவுகளை எல்லாம் கருத்து வகைப்படுத்தித் தொகுத்து அது பல பகுதிகளாக வெளிவந்தது – ‘தெய்வத்தின் குரல்’. அதைப் படித்துவிட்டு, முதல் தொகுதியில் சொன்னது மூன்றாவது தொகுதிக்கு முரணாக இருக்கிறது என்று வாதம் செய்திருக்கிறேன். இப்படி ஒருநாள் நண்பன் கெளரி சங்கருடன் உச்சக்கட்ட வாதம் செய்துவிட்டு உறங்கிவிட்டேன். கனவின் விளிம்புநிலை. வகுப்பறை போல ஒரு தோற்றம், மாணவர்கள் தரையில், ஆசிரியராகப் பெரியவா. நான் நின்று கொண்டிருக்கிறேன். பெரியவா ஒரு கிரீடத்தை என் தலையில் சூட்டுகிறார். கிரீடம் என்பது நம்ம ஊர் ராஜாக்கள் அணிவது போல் இல்லை. ரோமானிய கிரீடம். விழித்து எழுந்த பிறகு கெளரி சங்கரிடம் விளக்கம் கேட்டேன். “இனிமேல் பெரியவாளைப் பற்றி முரண்பாடு கிரண்பாடு என்று பேசாதே” என்று சொல்லிவிட்டான். ஓரளவில் என்னுடைய பெரியவா வாதம் முடிவுற்றது.

சென்னை பெசன்ட் நகர் சிவன்கோவிலில் பெரியவாளுடைய நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மூன்று நாட்கள் வேத ஆகம வித்வத் சதஸ் நடத்தப்பட்டது, நவம்பர் 1993. இந்த விழாவிற்கான மலர் தயாரிக்கும் பொறுப்பு எனக்கு அளிக்கப்பட்டது.

ஊருக்கு ஊர் பெரியவா அன்பர்கள் மலர் தயாரித்துக் கொண்டிருந்த நேரம் அது. நம்முடைய தயாரிப்பு வித்தியாசமாக இருக்கவேண்டும் என்கிற எண்ணத்தில், மலரின் அட்டைப்படத்தை வண்ண ஓவியமாக அமைத்துவிடலாம் என்று முடிவு செய்தேன். பொதுவாக, எல்லோரும் புகைப்படங்களைத்தான் பயன்படுத்துவார்கள். பல மலர்களுக்கு இடையே இந்த மலர் வித்தியாசமாக இருக்கும் என்பது என் திட்டம். நண்பர் ஒருவரிடம் விசாரித்து, உருவப்படம் தீட்டக்கூடிய ஓவியரைத் தேடிப் போனேன். வழக்கம்போல விலாசம் எழுதிய பேப்பரை தொலைத்துவிட்டு, அது ஞாபகம் இருக்கிறது என்கிற நம்பிக்கையில் நடந்தேன்.

கட்டடத்தின் முதல் மாடியில் அவர் இருந்தார், இடுப்பில் லுங்கி, கையில் புகையும் பீடி. “காஞ்சி சங்கராசார்யாருடைய ஓவியம் ஒன்று வேண்டும், நீங்கள் செய்ய முடியுமா” என்று இழுத்தேன். “செய்யலாம் போட்டோ குடுங்க” என்றார் அவர். “போட்டோ தருகிறேன் ஆனால் அதற்கு முன்னால் அவரைப் பற்றி நான் உங்களிடம் சொல்லவேண்டும். இன்னொரு விஷயம், பெரியவாள் படம் போடறவர் பீடி பிடிக்கக் கூடாது” என்றேன்.

அவர் “சரி சரி நான் மத்த நேரத்துல பிடிச்சுக்கறேன்” என்று சொன்னார். தொடர்ந்து மூன்று நாட்கள் அவருடைய இருப்பிடத்திற்குப் போய் என்னளவில் பெரியவாளைப் பற்றி உபன்யாசம் செய்தேன். அவர் சுத்தபத்தமாக இருந்து, நான் சொன்னதைக் கவனமாகக் கேட்டுக்கொண்டார். நான் குறிப்பிட்ட திருத்தங்களை ஆர்வத்தோடு செய்தார். லுங்கி விஷயம் உறுத்தலாக இருந்தாலும், அதை நான் வலியுறுத்தவில்லை.

வண்ணப்படம் கிடைத்தது, மலர் அச்சிலேற்றப்பட்டது, அட்டைப்படம் பரவலாகப் பாராட்டைப் பெற்றது.

இதுதான் இன்டர்வல், இனிமேல்தான் திருப்பம்.

மற்றொருமுறை வண்ண ஓவியம் போடுவதற்காக அதே நபரைத் தேடிப் போனபோதுதான் தெரியவந்தது, அடிப்படையில் முகவரிக் குழப்பம். உருவப்படம் வரையக்கூடிய ஓவியர் பக்கத்துக் கட்டடத்தில் இருந்திருக்கிறார். நான் சந்தித்தது தவறான ஆளை. இருவரும் ஓவியர்கள் என்றாலும் இவர் உருவப்படங்களை வரைந்ததில்லை. கை இருக்கவேண்டிய இடத்தில் கால்களைப் போடுகிற மாடர்ன் ஓவியர். நம்ம ஆள் போட்ட ஒரே உருவப்படம் பெரியவா படம்தான். பெரியவா மகிமையில் இதையும் சேர்த்துக்கொள்ளலாம்.

படித்ததிலும் அதில் எனக்குப் பிடித்ததிலும் மற்றவர் அனுபவங்களைக் கேட்டதிலும் சிலவற்றைச் சொல்கிறேன்.

மோகன் என்று ஒரு நண்பர், கோவில்பட்டி நாடார், சென்னை வாசி. அச்சுத்தொழில் மூலமாக அறிமுகம். இடைவிடாமல் கரிசல்மண், புதுமைப் பித்தன் என்று முற்போக்காகவே முழங்கிக்கொண்டிருப்பார். ஆனால் அவ்வப்போது காஞ்சிபுரம் போய் பெரியவாளைப் பார்க்கணும் என்று சொல்லிவிட்டுப் போவார். எனக்கு இது எரிச்சலாக இருந்தது.

நான் கேட்டேன், “ஒண்ணு புதுமைப்பித்தன் பற்றிய புரிதலோடு இருக்கணும், இல்லை பெரியவாளைக் கும்பிடணும், இந்த இரண்டும் ஒண்ணோடு ஒண்ணு ஒட்டாதே” என்றேன்.

இதற்கு மோகன் சொன்ன பதில்:

“பெரியவாளைப் பற்றி நான் கேள்விபட்டதில்லை. என்னுடைய நண்பர் ஒருவர் பெரியவாளைப் பார்ப்பதற்காக மகாராஷ்ராவில் உள்ள சதாராவுக்கு போனார். என்னையும் அழைத்துப் போனார். மொத்த செலவும் நண்பருடையது என்பதால் நானும் புறப்பட்டேன். ஏதோ ஒரு ரயில் நிலையத்தில் இறங்கி விசாரித்தோம். அப்போதுதான் புரிந்தது, பெரியவா சதாராவில் இல்லை அதன் அருகில் உள்ள ஒரு கிராமத்தில் இருக்கிறார் என்பது. வாடகை வண்டி அந்த ஊரின் எல்லையில் இறக்கிவிட்டது. காலை நேரம் கிராமவாசிகள் அங்கங்கே கையில் சொம்போடு நடந்துகொண்டிருந்தார்கள். எனக்கு இது கேள்வியாகிவிட்டது. நதி ஓடுகிற இடத்தில் காலைக் கடன்களை முடிப்பதற்கு சொம்பு எதற்கு. கிணறு இருக்கும் இடத்திலே சொம்பு தேவைப்படும், தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும்போது சொம்பின் அவசியம் என்ன என்பதுதான் என்னுடைய கேள்வி.

கிராமத்துக்காரர் ஒருவரை நிறுத்தி கேட்டுவிட்டோம் அவர் சொன்னார் இரண்டு நாட்களுக்கு முன்பு இங்கு ஒரு சாது வந்து தங்கியிருக்கிறார். அவர் இந்த நதியில்தான் குளிக்கிறார். எனவே இதை அசுத்தப்படுத்தக் கூடாது என்பதற்காக நாங்கள் பாத்திரத்தைப் பயன்படுத்துகிறோம் என்றார். வந்து இரண்டு நாட்களுக்குள் உள்ளூர் ஜனங்களுடைய பழக்க வழக்கத்தில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய தபோபலம் பெரியவாளுக்கு இருக்கிறது என்பது எனக்குப் புரிந்துவிட்டது. அப்புறம் பெரியவாளைப் பார்த்தேன். அவ்வப்போது பார்த்துக்கொண்டே இருக்கிறேன்” என்றார்.

“புதுமைப்பித்தனின் அசால்டான எழுத்துக்கும் பெரியவாளுடைய அனுஷ்டானங்களுக்கும் ஏகப்பட்ட தூரம் இருக்குமே” என்று கேட்டேன்.

“வாழ்க்கையைப் பெரியவா வழிநடத்துகிறார். புதுமைப்பித்தன் சுவாரஸ்யமாக எழுதுகிறார். ஒரு சினிமா பார்க்கிறோம் . இது நம்முடைய தர்மத்திற்கு ஏற்றதா என்று ஆராய்ச்சி செய்துவிட்டா பார்க்கிறோம்? அந்த அளவில்தான் புதுமைப்பித்தன்” என்று சொல்லி முடித்துவிட்டார்.

பெரியவாளை நான் பார்த்ததில்லை என்றாலும் அவருடைய உள்வட்டத்தைச் சேர்ந்த பலரோடு எனக்கு பரிச்சயம் இருந்தது. குறிப்பாகத் தொல்லியல் அறிஞர் ஆர். நாகசாமி, ரா. கணபதி,போட்டோ கண்ணன், வேதபுரி, சந்திரமௌலி, ஏகாம்பரம் மற்றும் மேட்டூர் சுவாமிகள்.

ரா.கணபதி என்னோடு மணிக்கணக்கில் பேசிக்கொண்டிருப்பார். ஒருமுறை அவரிடம் கேட்டேன். அபிராமி அந்தாதியில் “ஐயன் அளந்தபடி இருநாழி கொண்டு அண்டமெல்லாம் உய்ய அறம் செய்யும் உன்னையும்…” என்று வருகிறதே, இந்த அறம் என்னவென்று விசாரித்தால் உரை எழுதியவர்கள் முப்பத்தாறு அறம் என்று சொல்லி முடித்து விடுகிறார்கள். முப்பத்தாறும் எது எது என்பதைச் சொல்வார் இல்லை” என்றேன்.

அந்தக்காலச் சாலைகளில் இடுப்பு உயரத்திற்கு ஒரு கொத்தப்பட்ட கல்லை நிறுத்தி வைத்திருப்பார்கள். பசுமாடோ காளை மாடோ சொறிந்து கொள்வதற்கான ஏற்பாடு அது. தலையிலே சுமை தூக்கிச் செல்பவர்கள் இளைப்பாறுவதற்காக சுமைதாங்கிக் கல் வைத்திருப்பார்கள். இவையெல்லாம் அறம்தான். தண்ணீர்ப் பந்தல் ஒரு அறம். நாவுக்கரசர் பேரில் அப்பூதி அடிகள் தண்ணீர்ப் பந்தல் வைத்தது பற்றி பெரிய புராணத்தில் வருகிறது. இப்படி முப்பத்தாறையும் சொல்லி விளக்கினார்.

பெரியவாளுடைய அறுபதாவது வயதில் அவர் தன்னைப் பற்றிக் குறிப்பிடுகிற கட்டுரை ஒன்று பவன்ஸ் ஜர்னல் என்ற ஆங்கில மாத இதழில் வெளிவந்து. பின்னர் தமிழாக்கம் செய்யப்பட்டது. அதன் தலைப்பு ‘வாழ்க்கை எனக்குக் கற்றுத் தந்த பாடம்’. ஆள் கிடைத்தால் அலுக்காமல் பாடம் நடத்தும் காலம் இது. இதில் தனக்குக் கிடைத்த பாடத்தை சொல்வது சங்கர அநுபூதி. எனக்கு மிகவும் பிடித்த கட்டுரை இது. இதைப் பிரதி எடுத்து பலருக்குக் கொடுத்துள்ளேன். இந்தக் கட்டுரையைப் பற்றி ரா. கணபதியிடம் கேட்டேன். “பரவால்லடா நீ சூட்சுமத்த பிடிச்சுடுற” என்றார்.

பெரியவாளின் தந்தை சுப்ரமணிய சாஸ்த்ரிகளுக்கு அரசின் கல்வித்துறையில் வேலை. அவருடைய இரண்டாவது புதல்வர் பெரியவாளாக ஆகப்போகிற சுவாமிநாதன். பிறந்தநாள் 20-05-1894, இடம் விழுப்புரம். உபநயனம் 1905. திண்டிவனத்தில் அமெரிக்கன் மிஷன் ஹைஸ்கூலில் படித்தார். பைபிள் போட்டியில் முதல் பரிசு பெற்றார். நான்காவது ஃபாரத்தில் படிக்கும்போது ஷேக்ஸ்பியர் எழுதிய ஜான் மன்னர் என்னும் நாடகத்தில் திறம்பட நடித்தார்.

சுப்ரமணிய சாஸ்த்ரிகள் குடும்பத்தினர் தென்னாற்காடு மாவட்டத்தில் உள்ள, பெருமுக்கல் எனும் கிராமத்தில் காஞ்சி காமகோடி 66 ஆவது பீடாதிபதி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதியை தரிசனம் செய்தனர், 1906. சுவாமிநாதனுக்கு மடத்தோடும் மடத்தலைவரோடும் நேரடியாக ஏற்பட்ட முதல் தொடர்பு அது. இதற்குப் பிறகு மடத்துக்குப் போவதும் ஆசார்யாளை சந்திப்பதும் சுவாமிநாதனுக்கு வழக்கமாகி விட்டது.

சுவாமிநாதனுடைய பதிமூன்றாவது வயதில் வாழ்கையை புரட்டிப்போடும் செய்தி தந்தி மூலமாக வந்தது. காஞ்சி மடத்தில் இருந்து வந்த தந்தியில் சுப்பிரமணிய சாஸ்த்ரிகள் சுவாமிநாதனை அழைத்துக்கொண்டு காஞ்சிபுரம் வரவேண்டும் என்பதுதான் அந்தச் செய்தி. தந்தி வந்த வேளையில் சாஸ்த்ரிகள் ஊரில் இல்லை. தாயார் மகாலட்சுமி அம்மாளும் சுவாமிநாதனும் ரயில் வண்டியில் பயணம் செய்து காஞ்சிபுரத்திற்கு வந்தனர். அவர்களை வரவேற்ற மடத்துச் சிப்பந்திகள் தாயாரை காஞ்சிபுரத்தில் தங்கவைத்துவிட்டு சுவாமிநாதனை குதிரைவண்டியில் ஏற்றி கலவை என்ற கிராமத்திற்கு அனுப்பிவிட்டார்கள். முப்பது மைல் தொலைவில் உள்ள கலவையில்தான் அப்போது ஆச்சார்யாள் தங்கி இருந்தார்.

திண்டிவனத்திற்கு தந்தி அனுப்பியபோது ஆசார்யாளின் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தது. சுவாமிநாதனை பீடத்தில் அமர்த்தவேண்டும் என்பதுதான் ஆசார்யாளுடைய எண்ணம். ஆனால் சுவாமிநாதன் வந்து சேர்வதற்கு முன்பே ஆசார்யாள் சித்தி அடைந்துவிட்டார். அந்தநிலையில் லட்சுமிகாந்தன் என்ற பிரம்மச்சாரி 67ஆவது பீடாதிபதியாக அமர்த்தப்பட்டார். அவரும் நோய்வாய்ப்பட்டு ஏழு நாட்களுக்குள் சித்தி அடைந்துவிட்டார். லட்சுமிகாந்தனும் சுவாமிநாதனும் உறவுக்காரர்கள்.

பதிமூன்று வயதில் சுவாமிநாதன் துறவறத்தை மேற்கொண்டு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி என்கிற தீக்ஷா நாமத்தைச் சூடினார். காஞ்சி காமகோடி மடத்தின் பீடத்தின் 68 ஆவது பீடாதிபதியாக அறிவிக்கப்பட்டார்.

வரலாற்றில் தடம் பதித்த அந்த குதிரைவண்டிப் பயணத்தைப் பற்றி, அப்போது ஏற்பட்ட உளநிகழ்வுகளைப்பற்றி பெரியவா சொல்கிறார். விகல்பம் இல்லாத வெளிப்பாடு, நம்பிக்கையின் நகர்வு.

“பிரயாணத்தின் போது மடத்தின் காரியஸ்தர் என்னிடம் நான் வீடு திரும்பாமலேயே போகக்கூடும் என்றும், இனி என் வாழ்நாள் முழுவதையும் மடத்திலேயே கழிக்கவேண்டி வரலாம் என்றும் சூசனையாகத் தெரிவித்தார். சரிதான். ஒன்றுவிட்ட தமையன் மடாதிபதி ஆகி இருக்கிறார் அல்லவா, நாம் அவரோடே வசிக்கவேண்டும் என்று நினைக்கிறார் போலும் என்றுதான் முதலில் எண்ணினேன். அப்போது எனக்கு வயது பதிமூன்றேதான். அந்த வயதில் மடத்தில் அவருக்கு எந்த விதத்தில் உபயோகமாக இருக்க முடியும் என்று ஆச்சரியப்பட்டேன். காரியஸ்தர் மெல்ல விஷயத்தை விளக்கினார். இவ்வாறு எதிர்பாராத முறையில் சம்பவங்கள் திரும்புவதைக் கண்டு பிரமித்துவிட்டேன், அதிர்ந்தே போனேன். வண்டியிலேயே மண்டியிட்டு அமர்ந்து ராமா ராமா என்று உருவேற்றலானேன். நான் அறிந்திருந்த ஆன்மீக வழிபாடு அது ஒன்றுதான். எஞ்சிய பிரயாணத்தில் அதையேதான் செய்தேன்” என்கிறார் பெரியவா.

மகாத்மா காந்தி சிறுவனாக இருந்தபோது இருட்டில் போக பயப்பட்டதாகவும், வீட்டில் இருந்த வேலைக்காரி பயத்தைப் போக்குவதற்காக ராமநாமத்தைச் சொல்லிக் கொடுத்ததாகவும் படித்திருக்கிறேன். சுவாமிகளின் வாழ்க்கையிலும் மகாத்மா காந்தியின் வளர்ச்சியிலும் மாற்றம் ஏற்படுத்தியது ராமநாமம் என்பதைக் குறித்துக்கொண்டேன். ஷேக்ஸ்பியர் நாடகத்தில் நடித்தவர் ஜகத்குரு ஆகிறார், பாத்ரூம் போகப் பயந்தவர் ஆங்கில ஆட்சியை அசைத்துக் காட்டுகிறார்.

ஆர். நாகசாமி சொன்னது, “ஒரு முறை பிர்லாவின் சகோதரி பெரியவாளைப் பார்க்க வந்திருந்தார். தான் ஏதாவது தர்ம காரியம் செய்ய வேண்டுமென்று விரும்புவதாகவும், அதற்குப் பெரியவா வழிகாட்ட வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார்.

பெரியவா, “நீ காசிக்குப் போ ஒரு மாத காலம் அதிகாலையில் கங்கையில் குளித்துவிட்டு வருகிற சாதுக்களுக்கு சூடாக ரொட்டி செய்து கொடு. இருபது பேர் வரை கொடுக்கலாம்” என்றார். அதற்கு அந்த பெண்மணி “எதற்கு இருபது பேர்? நான் அங்கே இருநூறு பேர் சாப்பிடுவதற்கு ஏற்பாடு செய்துவிடுகிறேன். சமையல் ஆள், கொட்டகை, எல்லாம் செய்துவிடலாம்” என்றார்.

பெரியவா “ரொட்டி கொடு என்று சொன்னது, அவர்கள் பசியைத் தீர்ப்பதற்கு அல்ல, அதற்குக் காசியில் ஏகப்பட்ட ஏற்பாடுகள் உண்டு. அந்த விடியற்காலை வேளையில் ஸ்நானம் செய்துவிட்டு வருகிறவர்களில் யாரோ ஒரு மகான் இருக்கலாம். அவர் பார்வை பட்டால் உனக்குப் புண்ணியம், அதற்காகத்தான் சொன்னேன்” என்றார்.

இருவேறு உலகத்து இயற்கை திருவேறு

தெள்ளிய ராதலும் வேறு

என்கிற திருக்குறள் நினைவிற்கு வந்தது.

தொடரும்…

Leave a Reply