சோவியத் ஆக்கிரமிப்பு, கம்யூனிச ஆதிக்கம் இவற்றை லெனின் என்ற உருவகத்தின் மூலம் சொல்கிறது இத்திரைப்படத்தின் தலைப்பு.
1989 அக்டோபர் மாதத்தில் படம் தொடங்குகிறது. அலெக்ஸ் கெர்னர் எனும் இளைஞன் கம்யூனிச அரசுக்கு எதிரான போராட்டத்தில் பங்கு கொள்கிறான். அலெக்ஸின் தாய் கிறிஸ்டியேன் கிழக்கு ஜெர்மனியின் சோஷலிஸக் கட்சியில் பொறுப்பில் இருப்பவர். தன் மகன் கைது செய்யப்பட்டு போலீசில் அடிபடுவது கண்டு மயக்கமடைகிறார். அவரை மருத்துவமனையில் சேர்க்கிறார்கள். அலெக்ஸ் சிறையில் வரிசையில் நிறுத்தப்பட்டு அடி தொடங்கப்படும் நேரத்தில் ஒரு ரகசிய போலீஸ்காரர் வருகிறார். கட்சிப் பொறுப்பில் இருப்பவரது மகன், அதுவும் அவர் மருத்துவமனையில் இருப்பதால் உனக்குச் சலுகை என்று அலெக்ஸாந்தர் கெர்னர் வெளியே விடப்படுகிறான்.
ஆனால் கிறிஸ்டியேன் கோமாவில் இருப்பதால் தற்போதைக்கு ஏதும் சொல்ல இயலாது என்கிறார்கள் மருத்துவர்கள். அலெக்ஸ் போலீஸில் இருந்து விடுவிக்கப்பட்டு மருத்துவமனைக்கு வருகிறான். அவனது தந்தை பற்றிக் கேட்கிற போது அவர் ஒரு பெண்ணுக்காக 1978ல் மேற்கே போய்விட்டார் என்கிறார்கள்.
போராட்டத்தில் அலெக்ஸ் ஒரு பெண்ணிடம் பேசுகிறான். ஆனால் அறிமுகம் செய்து கொள்ளும் முன்னரே போலீஸ் கைது செய்துவிடுகிறது.
ஆஸ்பத்திரியில் தாயைக் கவனித்துக் கொள்ளும் நர்ஸ் லாராவைப் பார்க்கிறான். அவள்தான் போராட்டத்தில் பங்கெடுத்த போது அலெக்ஸிடம் பேசிய பெண். இருவரும் பழகத் தொடங்குகிறார்கள். இந்நிலையில் கிழக்கு ஜெர்மனியின் தலைவர் எரிக் ஹோனெக்கர் ராஜினாமா செய்கிறார். எகான் க்ரென்ஸ் அதிபராகப் பொறுப்பேற்கிறார். ஒரு மாதத்தில் பெர்லின் சுவர் இடிக்கப்படுகிறது. கிழக்கு ஜெர்மனியும் மேற்கு ஜெர்மனியும் இணைவதற்கான பணிகள் தொடங்குகின்றன. அலெக்ஸ் மேற்கின் பொருளாதார முன்னேற்றங்களைக் கண்டு வியக்கிறான். சாப்பாட்டுக்கு வரிசையில் நிற்க வேண்டாம். இந்தக் கடையில் கூட்டம் என்றால் அடுத்த கடைக்குப் போகலாம், காசு கொடுத்துப் பிடித்ததை வாங்கிச் சாப்பிடலாம் என்பது அவனுக்குப் புரியவே சில நாட்கள் பிடிக்கிறது.
கடைக்குப் போய் கிழக்கு ஜெர்மானிய உணவுப் பண்டங்கள் கேட்கிறான் அலெக்ஸ். வரிசையாக ஹங்கேரி, ஆஸ்திரியா, ஃப்ரான்ஸ் என்று பல்வேறு நாடுகளில் இருந்து வந்த உணவு வகைகள் உள்ளன, பிடித்ததை எடுத்துக் கொள் என்கிறார் கடைக்காரர். அத்தனையும் வேண்டாம் என்கிறான் அலெக்ஸ். அத்தனையும் இல்லை, எது வேண்டுமோ எடுத்துக் கொண்டு அதற்குக் காசு கொடு என்கிறார். புரியாமல் போய் எடுத்து வந்து காசு கொடுத்துவிட்டு அவ்வளவுதானா என்கிறான். ஆமாம், இதை வீட்டுக்குக் கொண்டு போ என்கிறார் கடைக்காரர். என் ரேஷன் கணக்கில் எழுத வேண்டாமா என்றால் அந்த முறை வழக்கொழிந்து போச்சு என்கிறார்.
வேலைக்கு முயல்கிறான் அலெக்ஸ். அதிலும் புதிய அனுபவங்கள். ஒரு தொலைக்காட்சி டிஷ் விற்கும் நிறுவனத்தில் பணி செய்யும் விற்பனையாளரிடம் நட்பு கொள்கிறான். வேலை வேண்டுமா, உன் சுய விவரம் கொடு என்கிறார். அது என்ன என்று விவரம் கேட்டு, வெள்ளைத்தாளில் தன் பெயர், படிப்பு, முகவரி எல்லாம் எழுதித் தருகிறான் அலெக்ஸ். அவரது டிஷ் கம்பெனியில் வேலை கிடைக்கிறது. அரசு அலுவலகத்தில் பதிந்து நம்பர் போட்டுக் காத்திருந்து வேலை வாங்கும் வழக்கம் இங்கில்லை என்கிறார்கள் மேற்கு ஜெர்மானியர்கள். அவர்களுக்கு அந்தக் கிழக்கு ஜெர்மானிய முறை புரியவில்லை. அலெக்ஸுக்கு இப்படி வேலை கிடைப்பது புரியாததாக இருக்கிறது.
கிழக்கு ஜெர்மனியில் தேர்தல் நடக்கிறது. பல்வேறு கட்சிகளின் உறுப்பினர்களில் ஒருவரைத் தேர்ந்தெடுத்து அதில் பெரும்பான்மை பெறும் கட்சி ஆட்சி அமைப்பது கிழக்கில் புதிது. ஆட்சி மன்றத்தின் 400 உறுப்பினர்களும் கம்யூனிஸ்ட்டுகள். அவர்கள் கட்சியின் மத்திய கமிட்டி தலைவரைத் தேர்ந்தெடுப்பார்கள். அந்தத் தலைவர் நாட்டின் அதிபர் என்பதே வழக்கம். 201 பேர் இருந்தால் அந்தக் கட்சி ஆட்சி அமைக்கலாம். ஆள் குறைந்தால் மற்ற கட்சிகளுடன் கூட்டணி எனும் அரசியல் அலெக்ஸ் உள்ளிட்ட கிழக்கு ஜெர்மானியருக்குப் புரிய நாள் பிடிக்கிறது.
கிழக்கு பெர்லினில் அலெக்ஸின் அக்கா அரியேன் வேலை செய்த பல்கலைக்கழகம் மூடப்பட்டு பெர்லின் பல்கலைக்கழகம் என்று மேற்குடன் இணைக்கப்படுகிறது. அரியேனுக்கு வேலை போகிறது. அவள் பர்கர் கிங் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்கிறாள். அங்கு மேலாளராக இருக்கும் ரெய்னர் என்பவரைக் காதலிக்கிறாள். அவர் இவர்கள் வீட்டுக்கே வந்துவிடுகிறார். கொஞ்சம் கொஞ்சமாக கோககோலா, பெப்சி, மெக்டோனால்ட்ஸ், பர்கர் கிங், பென்ஸ், பிஎம்டபிள்யூ, ஃபோர்ட், ஜிஎம் போன்ற நிறுவனங்கள் கிழக்கில் கால் பதிக்கின்றன. ஜெர்மனி இணைப்புக்கான பணிகள் வேகமாக நடக்கின்றன.
இந்நிலையில் எட்டு மாதங்கள் கழித்து அலெக்ஸின் தாய் கிறிஸ்டியேன் கண்விழிக்கிறார். ஆனால் அவர் பலவீனமாக இருப்பதாகவும் அதிர்ச்சி எதையும் தாங்கமாட்டார் என்றும், அதிர்ச்சி ஏற்பட்டால் மீண்டும் இதய அடைப்பு அல்லது மரணம் ஏற்படலாம் என்கிறார்கள் மருத்துவர்கள். தன் நண்பன் டென்னிஸ் டோமஷ்கேவுடன் சேர்ந்து பழைய கிழக்கு ஜெர்மானிய விடியோக்களை சற்றே மாற்றித் தன் தாய்க்குப் போட்டுக் காட்டி ஜெர்மன் ஒருங்கிணைப்பை மறைக்கிறான். புதிய மாற்றங்கள் கண்ணில் படாமல் இருக்க பழைய கிழக்கு ஜெர்மன் உடைகளை அணிகிறார்கள் அக்காவும் தம்பியும் அவனது தோழியும்.
ஆனாலும் பக்கத்து வீடுகள் தெரு என்று பல மாற்றங்களைக் கண்டு கேள்வி கேட்கிறார் கிறிஸ்டியேன். ஒருநாள் தன்னாலே எழுந்து நடந்து வீட்டை விட்டு வெளியே வருகிறார் அவர். அலெக்ஸ் அதைக் கவனிக்கவில்லை. வெளியே வருபவர் புதிதாகக் குடிவருபவர் ஒருவரைப் பார்த்து நீங்கள் எந்த ஊர் என்கிறார். அவர் சொல்லும் ஊர் மேற்கு ஜெர்மனியில் உள்ளது. ஓ, மேற்கில் இருந்து பிழைக்க வந்தவரா என்று கேட்கிறார் கிறிஸ்டியேன். அருகில் உள்ள பூங்காவுக்கு அவர் நடந்து போக அங்கே பல்வேறு மாற்றங்கள். லெனின் சிலை ஒன்றை ஹெலிகாப்டரில் தூக்கிப் போகிறார்கள். கிறிஸ்டியேன் அதை அதிர்ச்சியோடு பார்க்க, மேற்கே போயே போகிறது என்கிறார் அங்கிருக்கும் ஒருவர். மேற்கில் இருப்பவர்களும் நம் சித்தாந்தத்தை ஏற்றுக் கொண்டார்கள், ஆகவே இந்தச் சிலை மேற்கே போகிறது என்று அலெக்ஸ் சமாளிக்கிறான்.
தன் வீட்டில் இருக்கும் (அரியேனின் காதலன்) ரெய்னர் பற்றிக் கிறிஸ்டியேன் கேட்கும் போது மேற்கில் பொருளாதாரம் வீழ்ந்துவிட்டது என்றும் கிழக்கு ஜெர்மனி மேற்கின் மக்களை அகதிகளாக ஏற்கிறது என்றும் சொல்கிறார்கள். அதனால்தான் அவர்கள் தங்களோடு மேற்கத்திய கார்கள், உடைகள் உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு வந்துவிட்டனர் என்றும் சொல்கிறான் அலெக்ஸ்.
அப்போது கிறிஸ்டியேன் ஜன்னல் வழியே ஒரு கோகோ கோலா சுவர் விளம்பரத்தைப் பார்க்கிறார். அது பற்றிக் கேட்க அதையும் கோகோ கோலாவை மேற்கு மக்கள் விரும்புகிறார்கள், ஆனால் நம் அரசு எப்படி பிரச்சாரம் செய்கிறது பார் என்று, போதை அடிமைகளின் படங்களை இணைத்து கோக் குடித்தால் இது தான் கதி என்று ஒரு பிரச்சாரப் படம் தயாரித்துக் காட்டுகிறான் அலெக்ஸ்.
இப்படிப் போலி விடியோ, போலிச் செய்திகள் என்று தாயை ஏமாற்றி ஜெர்மனி ஒருங்கிணைப்பை மறைத்து வாழ்ந்துவரும் நிலையில் கிறிஸ்டியேன் மீண்டும் நோய்வாய்ப்படுகிறார். அவரை மருத்துவமனையில் சேர்க்க ஏற்பாடு செய்கிறார்கள். அப்போது அவர் தன் குழந்தைகளிடம் ஒரு உண்மையை உடைக்கிறார். அவர்களது தந்தை பெண்ணாசையில் மேற்கே போகவில்லை. குடும்பத்தை நன்கு வளர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் இவர்கள் கட்சி உறுப்பினர் ஆகாதிருந்தனர். அதனால் கட்சியில் இருந்து பல தொல்லைகள் வந்தன. இருவரும் திட்டமிட்டுக் குடும்பத்தோடு மேற்கே போவதென்று முடிவெடுத்தனர். அதன்படி கிறிஸ்டியேன் கட்சியில் சேர்ந்து கொஞ்சம் நம்பிக்கை பெற்றபின் இருவரும் திட்டமிட்டபடி ராபர்ட் கெர்னர் முதலில் வேலை விஷயமாக என்று போய் மேற்கே இருந்துவிடுகிறார். ஆனால் கிறிஸ்டியேன் தன் குழந்தைகளைப் பிரித்துவிடுவார்களோ என்ற அச்சத்தில் போகாமல் பின்வாங்கிவிடுகிறார்.
கட்சியால் பிரச்சினை வரக்கூடாது என்று பெண்ணுக்காகப் போய்விட்டார் என்று கதைகட்டி விட்டு அனுதாபத்தில் காலத்தை ஓட்டியிருக்கிறார். இந்நிலையில் கிறிஸ்டியேனின் சேமிப்பு எங்கே எப்படி இருக்கிறது என்று தெரியாமல் அந்தப் பணத்தை மேற்கு ஜெர்மனிப் பணமாகக் குறிப்பிட்ட கெடுவிற்குள் மாற்ற இயலாது போகிறது. அலெக்ஸ் வங்கி அதிகாரிகளை முதலாளித்துவ நாய்களே என்று திட்டி காவலர்களால் வெளியே வீசப்படுகிறான். 30000 மார்க்குகள் பழைய பணமாகவே தேங்கிவிடுகிறது.
கிறிஸ்டியேன் மீண்டும் உடல் நலமின்றி மயங்கிவிட அவரை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு தன் தந்தை ராபர்ட்டைத் தேடி மேற்கு பெர்லின் போகிறான் அலெக்ஸ். அங்கே அவர் வேறொரு குடும்பம் அமைத்து வாழ்கிறார். அவர்களிடம் பேசித் தன் தாயைக் கடைசியாக ஒரு முறை வந்து பார்க்கவேண்டும் என்று கேட்கிறான், அவர் சம்மதிக்கிறார். அங்கே பர்கர் கிங்கில் வேலை செய்யும் அரியேன் அவரைப் பார்த்துப் பேசுகிறாள். அவரது மேற்குக் குடும்பத்தின் பிள்ளைகள் உடனிருக்கிறார்கள். வீட்டுக்கு வந்து பழைய பெட்டிகளில் தேடிப் பல ஆண்டுகளாக அவர் தங்களுக்கு எழுதிய கடிதங்களைக் கண்டுபிடிக்கிறாள். ஆனால் ஏன் மறைத்தாய் என்று தாயைக் கேட்க முடியவில்லை, காரணம் அவர் மயங்கிக் கிடக்கிறார்.
மருத்துவமனையில் ஓரளவு தேறி கண்விழிக்கிறார் கிறிஸ்டியேன். இந்நிலையில் உண்மையைச் சொல்லிவிடுவது நல்லது என்று கிழக்கும் மேற்கும் இணைகிறது என்றும் சிக்மண்ட் ஜான் என்ற விண்வெளி வீரர் புதிய தலைவராகிவிட்டார் என்றும் ஒரு விடியோ தயாரித்துக் கொண்டு போகிறான் அலெக்ஸ். ஆனால் அதற்கு முன்னரே நர்ஸும் அலெக்ஸின் தோழியுமான லாரா அலெக்ஸுடனான உறவு பற்றியும் கிழக்கு மேற்கு இணைப்பு, கம்யூனிசத்தின் வீழ்ச்சி பற்றியும் கிறிஸ்டியேனிடம் சொல்லிவிடுகிறாள். ஆனாலும் அலெக்ஸின் விடியோவைத் தொலைக்காட்சி நேரலை என்று நம்பிப் பார்க்கிறார் கிறிஸ்டியேன். முறைப்படியான ஜெர்மன் இணைப்பு நிகழ்ந்த மூன்றாம் நாள் கிறிஸ்டியேன் இறந்துவிடுகிறார். தன் தந்தை ராபர்ட்டுடன் சேர்ந்து தாயின் உடலை எரியூட்டி அந்தச் சாம்பலை சிறுவயதில் தந்தை சொல்லிக் கொடுத்தபடி செய்த பொம்மை ராக்கெட்டில் வைத்து காற்றில் கலக்கச் செய்கிறான் அலெக்ஸ்.
பெர்ண்ட் லிக்டென்பர்க் என்பவர் எழுதிய கதை இது. இதை அவர் 1989ல் எழுதினார். அதை இயக்குநர் உல்ஃப்கேங் பெக்கருடன் விவாதித்து மீண்டும் மீண்டும் மெருகேற்றி இந்தக் கதைவடிவத்திற்கு கொண்டு வந்தனர். இரண்டு மணி நேரம் படம் ஓடுகிறது. 2003ல் ஜெர்மானியத் திரைப்பட விருதுகளில் சிறந்த திரைப்படம், இயக்குநருக்கான விருதுகள் கிடைத்தன. 2004ல் ஐரோப்பிய யூனியனின் சிறந்த திரைப்படம், திரைக்கதை, இயக்குநர், கதாசிரியர், (கதாநாயக) நடிகர், ஆகிய விருதுகளைப் பெற்றது இந்தப் படம்.