
மத்திய அரசால் இந்தியாவின் 75வது சுதந்திர தினம் ‘அம்ருத் மகோத்சவம்’ என்ற முழக்கத்துடன் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. சுதந்திரப் போராட்ட உணர்வு, தியாகிகளுக்குப் புகழஞ்சலி, மற்றும் சுதந்திர இந்தியாவை உருவாக்குவதற்கான அவர்களின் உறுதிமொழி ஆகியவற்றை உணரும் விழாவாக இந்த விழா இருக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி சூளுரைத்துள்ளார். சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு மரியாதை செலுத்த வேண்டும், அவர்களின் கருத்துக்களை மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும் அவர் வலியுறுத்தியுள்ளார். மறக்கப்பட்ட தலைவர்களின் பங்களிப்பு, சிந்தனை மற்றும் கருத்துக்கள் தேசிய முயற்சிகளுடன் ஒருங்கிணைக்கப்பட வேண்டும் என்பது பிரமரின் அறிவுரை.
இந்தச் சிறப்பான முன்னெடுப்பில் மாநில அரசுகள் எந்தளவுக்குத் தங்கள் மாநிலத் தலைவர்களை நினைவுகூர்ந்து அவர்கள் செய்த தியாகங்களையும் அவர்கள்தம் கருத்துக்களையும் இன்றையத் தலைமுறைக்கு எடுத்துச் செல்கிறது என்பது, தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் புரியாத புதிராகத்தான் உள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்த ரைட் ஹானரபிள் மகாகனம் என்று அழைக்கப்பட்ட மாபெரும் தலைவர் வி.எஸ்.ஸ்ரீனிவாச சாஸ்திரி அவர்களின் 150-வது பிறந்த தினம், தமிழகத்திலும் சரி, தேசிய அளவிலும் சரி, சில பேரால் கூட நினைவு கூரப்படவில்லை.
ஸ்ரீனிவாச சாஸ்திரி பல்முனை ஆற்றல் படைத்த மாபெரும் ஆளுமை. இவர் 22 செப்டம்பர் 1869ம் ஆண்டில், தொன்மையான ஆலயங்கள் சூழ் நகரமான கும்பகோணத்தின் அருகில் உள்ள வலங்கைமான் என்ற கிராமத்தில் பிறந்தார். பிற்காலத்தில் காந்திஜி இவரை அண்ணன் என்று அழைத்தார். அதற்குப் பல காரணங்கள் உண்டு. பொதுவாக இவரை சாஸ்திரியார் என்றே அனைவரும் அழைத்தனர்.
வலங்கைமான் சங்கரநாராயண ஶ்ரீனிவாச சாஸ்திரி
(22 September 1869 – 17 April 1946)
தனிப்பட்ட முறையில் மகாத்மா காந்தி மற்றும் சாஸ்திரி இருவரும் நல்ல நண்பர்களாக இருந்தார்கள். ஆனாலும் இவர்களது அரசியல் கொள்கை வாழ்க்கை முழுவதும் முரணாகத்தான் இருந்தது. அதேசமயம் தனிப்பட்ட நட்பை இருவரும் கட்டுக்கோப்பாகக் கடைப்பிடித்தனர்.
சாஸ்திரியின் நீண்ட பணிகள் பற்றி ஒரு தபால் அட்டை அளவுக்கான தகவல்கள் கூட இங்கே யாருக்கும் தெரியவில்லை. அனைவருக்கும் சம உரிமை, வளர்ச்சி மற்றும் படிப்படியாக முழு சுதந்திரம் என்ற கொள்கையுடன் நாடு பூரண சுதந்திரம் பெற அயராது பாடுபட்ட ஆரம்பக்கட்ட தலைவர்களில், மாபெரும் அறிவுஜீவிகளில் இவரும் ஒருவர். சாதாரணப் பள்ளி ஆசிரியராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கிய ஶ்ரீனிவாச சாஸ்திரி பின்னாட்களில் பிரிட்டிஷ் பிரதமருடன் நேருக்குநேர் விவாதிக்கும் ஆளுமையாக உயர்ந்தவர்.
ஸ்ரீனிவாச சாஸ்திரி அவர்கள் தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணம் அருகிலுள்ள வலங்கைமான் எனும் சிற்றூரில் மிகச் சாதாரண புரோகிதத் தாய் – தந்தைக்கு 1869-ஆம் ஆண்டு செப்டம்பர் 22-ல் மூத்த மகனாகப் பிறந்தார். இவருடன் பிறந்தவர்கள் மொத்தம் ஆறு பேர். வலங்கைமானில் ஆரம்பக் கல்வியை முடித்த பிறகு சாஸ்திரி அவர்கள் பின்னர் கும்பகோணம் நேட்டிவ் உயர்நிலைப் பள்ளியிலும், தொடர்ந்து கல்லூரிப் படிப்பை கும்பகோணம் அரசுக் கல்லூரியிலும் பயின்று 1888-ல் பட்டம் பெற்றார். ஆங்கிலத்திலும் சம்ஸ்கிருதத்திலும் இவர் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். இவரது ஆங்கிலப் புலமைக்குப் பரிசாக ரூ.350/- பெற்றார். இந்தத் தொகை அன்றைக்குப் பெரும் தொகை. இவரது தந்தையார் சக புரோகிதர்களை அழைத்துப் பெரிய விருந்தையே அளித்துள்ளார். இவரது தனித் திறமையினால் பள்ளி மற்றும் கல்லூரிப் படிப்பை, அன்றைய ஆங்கிலேயே அரசின் கல்வி உதவி மூலம் பெற்றார்.
பிறகு இன்றைய மயிலாடுதுறை என்று அழைக்கப்படும் மாயவரத்திலுள்ள முனிசிபல் உயர்நிலைப் பள்ளியில் மாத ஊதியமாக ரூ.50-க்கு ஆசிரியர் பணியில் சேர்ந்தார். மூன்றாண்டுகளுக்குப் பிறகு 1891-ல் அவர் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அரசு ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் சேர்ந்து ஆசிரியர் பயிற்சியைப் பெற்றார். அப்போது ஒரு நிகழ்வு நடந்தது. அந்த ஆசிரியர்ப் பயிற்சிக் கல்லூரியின் தலைவர் ஒருநாள் வகுப்பில் பாடம் நடத்தும்போது அவரது ஆங்கில உச்சரிப்பில் பிழை உள்ளது என்று சாஸ்திரி கூறினார். ஆனால் அந்த கல்லூரித் தலைவர் அதை மறுத்தார். கல்லூரியின் தலைவர், தன்னுடைய தாய்மொழி ஆங்கிலம், ஆகையால் தான் சொல்லுவதுதான் சரியான உச்சரிப்பு என்றார். இதை ஏற்கவில்லை சாஸ்திரியார். கல்லூரியின் நூலகத்திலுள்ள பிரபலமான ஆங்கில அகராதியை எடுத்துப் பார்த்ததில், சாஸ்திரி கூறியதே சரியான உச்சரிப்பு என்று புரிந்துகொண்ட கல்லூரித் தலைவர் வியந்துபோய் சாஸ்திரியின் ஆங்கிலப் புலமையைப் பாராட்டினாராம். சாஸ்திரி அவர்கள் பிரபல ஆங்கில அகராதியான வெப்ஸ்டர் முழுவதையும் நன்கு அறிந்திருந்தார் என்று பலபேர் பின்னாட்களில் கூறியுள்ளார்கள்.
1893ல் சாஸ்திரி அவர்கள் சேலம் முனிசிபல் கல்லூரியில் முதல் நிலை உதவி ஆசிரியர் பணியில் சேர்ந்தார். ஒன்பது ஆண்டுகள் அங்கு ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றினார். இந்தக் காலக்கட்டத்தில் அப்போது தென்னிந்தியாவின் சிங்கம் என்று அழைக்கப்பட்ட சேலம் சி.விஜயராகாவாச்சாரியார் அவர்களை அறிந்த பிறகு நாட்டின் பொது வாழ்க்கையில் ஈடுபட அவர் ஆர்வம் கொண்டார். அந்தச் சமயத்தில் தி இந்து ஆங்கிலப் பத்திரிகையில் மக்களின் துயரங்களைப் பற்றி பல கட்டுரைகள் எழுதி பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதற்காக, அவர் மேல் துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆங்கிலேயே அரசு மிரட்டியது. ஆனால் சாஸ்திரி அஞ்சவில்லை.
பிறகு சென்னையில் உள்ள பச்சையப்பன் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார். 1902ல் சாஸ்திரி திருவல்லிக்கேணி இந்து உயர்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி அந்தப் பள்ளியை அன்றைய மெட்ராஸ் மாகாணத்திலேயே மிகச் சிறந்த பள்ளியாக உயர்த்தினார்.
ஸ்ரீனிவாச சாஸ்திரி அவர்கள் 17 ஆண்டுகளாக ஆசிரியராகப் பணியாற்றிய பிறகு தனது 37-வது வயதில் 1907-ல் முழுமையாகப் பொது வாழ்க்கைக்கு வந்தார். அப்போது பூனாவில் சர்வெண்ட்ஸ் ஆஃப் இந்தியா சொசைட்டி (இந்திய ஊழியர் சங்கம்) என்ற இயக்கத்தை நடத்தி வந்த மகாத்மா கோபால கிருஷ்ண கோகலே அவர்களுடன் இணைந்தார். கோகலே அவர்களால் பெரிதும் ஈர்க்கப்பட்ட சாஸ்திரி அவரையே தனது அரசியல் குருவாக ஏற்றுக்கொண்டார். கோகலேவும் ஒரு ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து ஆசிரியர் பணியில் இருந்து விலகிப் பொது வாழ்க்கையில் ஈடுபட்டவர்தான்.
அந்தக் காலகட்டத்தில் காங்கிரசில் மகாத்மா காந்தி இந்தியாவுக்கு வரவில்லை. அப்போது பரிபூரண சுதந்திரம் என்ற அறிவிப்பு வராத காலம். சுதந்திரத்தை அடைய எந்த வழியில் போராடப் போகிறோம் என்று அறியாத நிலையில் அப்போதைய காங்கிரஸ், பிரிட்டிஷ் அரசுக்கு வேண்டுகோள் விடுத்து வந்த மிதவாத காங்கிரஸார் வாழ்ந்த காலம்.
பல்வேறு முக்கியத் தலைவர்கள் மிகத் தீவிரமாக நாட்டின் சுதந்திரத்துக்காகப் பாடுபட்டு வந்தனர். அவர்களில் முக்கியமானவர்கள் தாதாபாய் நௌரோஜி, மஹாதேவ் கோவிந்த ரானடே, பால கங்காதர திலகர், பிபின் சந்திர பால், லாலா லஜ்பத் ராய், அரவிந்த கோஷ், அன்னிபெசன்ட், ஃபிரோஸ்ஷா மேத்தா, தீன்ஷா வாச்சா, சுரேந்திரநாத் பானர்ஜி போன்றவர்கள். இவர்கள் சமூக மறுமலர்ச்சியாளர்கள், சமூக சீர்திருத்தவாதிகள் என்றெல்லாம் அழைக்கப்பட்டனர். இவர்களிடையே சில அடிப்படை வேறுபாடுகள் இருந்தன. அவர்கள் இரண்டு வகைப்படும். ஒன்று நேரடி எதிர்ப்பு, புரட்சி, தீவிர தேசியவாதிகள். மற்றொன்று வன்முறை இல்லாத போராட்ட முறை. அதாவது மிதவாதப் போராளிகள். இவர்கள் அரசியல் சாசனம், அரசின் சட்டத்திட்ட முறைகளின் மூலம் உயிர்ச் சேதம் ஏற்படாமல் செயல்பட வேண்டும் என்று எண்ணினார்கள். கோகலே மிதவாதி. சாஸ்திரி கோகலேயைப் பின்பற்றி மிதவாதியானார்.
தீவிரவாத – மிதவாதக் கருத்து வேறுபாட்டினால் காங்கிரஸ் கட்சி இரண்டாக உடைந்ததுபோது நேஷனல் லிபரல் ஃபெடரேசன் ஆப் இந்தியா என்ற கட்சியை சாஸ்திரி, தன்னோடு கருத்து ஒற்றுமை உடையவர்களோடு சேர்ந்து தொடங்கினார். அவர்களில் முக்கியமானவர்கள் ஃபிரோஸ்ஷா மேத்தா, தீன்ஷா வாச்சா, சுரேந்திரநாத் பானர்ஜி, தேஜ் பகதூர் சப்ரு, எம்.ஆர்.ஜெய்கர் போன்றவர்கள். சாஸ்திரி 1922ல் அக்கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
எதிர்பாராதவிதமாக 1915-ல் கோகலே இறந்தபோது சர்வெண்ட்ஸ் ஆஃப் இந்தியா சொசைட்டியின் தலைவராக சாஸ்திரி தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் தொடர்ந்து 12 ஆண்டுகள் அதில் பணியாற்றினார். 1914ல் காந்தி இந்தியா வந்தவுடன் கோகலே நாடு முழுவதும் சென்று மக்களின் பிரச்சனைகளை அறிந்த பிறகு சொசைட்டியில் காந்தியைச் சேர்த்துக்கொள்ளலாம் என்று அறிவுறுத்தினார். ஆனால் கோகலே 1915-ல் இறந்து விட்டார். கோகலேவின் சித்தாந்த, அரசியல், பொருளாதார, சமூகக் கொள்கைகளை முழுமையாக நாடு முழுக்க எடுத்துச் சென்றவர்களில் முதன்மையானவர் ஸ்ரீனிவாச சாஸ்திரியார்தான்.
சாஸ்திரி மெட்ராஸ் லெஜிஸ்லேடிவ் கவுன்சிலில் 1913 முதல் 1916 வரை உறுப்பினராக இருந்தார். 1916 முதல் 1919 வரை இம்பீரியல் லெஜிஸ்லேடிவ் கவுன்சிலிலும் உறுப்பினராக இருந்தார். 1920 முதல் 1925 வரை கவுன்சில் ஆஃப் ஸ்டேட்ஸ் எனும் அமைப்பிலும் பணியாற்றினார். இந்தியாவில் நடக்கும் வழக்குகளில், இந்திய உயர் நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு மேல் முறையீடு செய்ய வேண்டுமானால் இங்கிலாந்தில் இருந்து செயல்பட்ட பிரிவி கவுன்சிலுக்குப் போக வேன்டும். அந்த பிரிவி கவுன்சிலில் சாஸ்திரி உறுப்பினராக இருந்தார். இந்த முக்கியப் பொறுப்புகள் மூலம் புதிய அரசியல் சாசனம் மற்றும் அரசின் நிர்வாகம் போன்றவற்றில் சாஸ்திரியாரின் பங்களிப்பு ஏராளம்.
பிரிட்டிஷ் இந்திய அரசு பிறப்பித்த ரவுலட் சட்டத்தைத் தீவிரமாக எதிர்த்தார் சாஸ்திரியார். இந்தச் சட்டத்தின்படி அன்றைய ஆங்கிலேயே அரசு யாரை வேண்டுமானாலும் விசாரணையின்றிச் சிறையில் அடைக்க முடியும். இம்பீரியல் லெஜிஸ்லேடிவ் கவுன்சிலில் சாஸ்திரி இந்தச் சட்டத்தை எதிர்த்து ஆற்றிய உரை வரலாற்றில் போற்றப்பட்ட உரைகளில் ஒன்று.
சாஸ்திரியாரின் உரையை நேரில் பார்க்க, மகாத்மா காந்தி பார்வையாளராக கவுன்சிலுக்கு சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆகையால் காந்தியால் அண்ணன் என்று போற்றப்பட்ட சாஸ்திரி அவர்களின் பங்களிப்பையும் நினைவு கூர்வது மிகவும் அவசியம்.
ஸ்ரீனிவாச சாஸ்திரி முதல் இரண்டு வட்டமேஜை மாநாடுகளில் பங்கேற்றார். மூன்றாவது வட்டமேஜை மாநாட்டில் உடல் நலக் குறைவினால் பங்கேற்கவில்லை. முதல் உலகப் போருக்குப் பிறகு உருவான சர்வதேச அமைப்பான லீக் ஆஃப் நேஷன்ஸ் அது இப்போதைய ஐக்கிய நாடுகள் சபையைப் போன்றது. அதில் ஸ்ரீனிவாச சாஸ்திரி இந்தியப் பிரதிநிதியாக இருந்தார். யுனைடெட் கிங்டம், கென்யா, தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளுக்கான இந்தியப் பிரதிநிதியாகவும் இருந்திருக்கிறார். ஆங்கிலேயே காலனி ஆதிக்கக் கட்டுப்பாட்டில் இருந்த நாடுகளில் வாழ்ந்த இந்தியர்களின் உரிமைக்காகப் போராடியவர் சாஸ்திரியார். ஸ்ரீனிவாச சாஸ்திரி பெயரில் இன்றும் ஒரு கல்லூரி தென் ஆப்பிரிக்காவில் செயல்பட்டு வருகிறது.
Image source: https://amandladurban.org.za/
ஸ்ரீனிவாச சாஸ்திரியாரின் கம்பீர ஆங்கில உரையைக் கேட்ட பிரிட்டிஷ் அரசின் பிரதமர் டேவிட் லாயிட் ஜார்ஜ் (1863-1945) தனது கேபினட் கூட்டத்தைத் தள்ளிவைத்துவிட்டு, சாஸ்திரியின் உரைக்குப் பிறகு நடத்தினார். நவீன இந்தியாவின் முதல் சர்வதேசத் தூதர் சாஸ்திரியார்தான் என்று ஆராய்ச்சியாளர் முனைவர் வினீத் தாகூர் கூறியுள்ளார்.
பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் இவர் சில்வர் டங் சாஸ்திரி (வெள்ளி நாக்கு சாஸ்திரி) என அழைக்கப்பட்டவர். வின்ஸ்டன் சர்ச்சில் அவர்கள் சாஸ்திரியாரின் ஆங்கிலப் புலமை பற்றி வியந்து பேசியுள்ளார். மகாத்மா காந்தியின் ஆங்கில சுயசரிதை மற்றும் பிற நூல்களில் இருந்த இலக்கணப் பிழைகளைத் திருத்தியவர் இவர்.
1935 முதல் 1940 வரை ஐந்து ஆண்டுகள் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் துணைவேந்தராகப் பணியாற்றியவர். அப்போது தமிழகத்தின் முதல் இந்தி எதிர்ப்பின் போது மாணவர்களை லகுவாகக் கையாண்டார். 1895ல் மெட்ராஸ் ஆசிரியர்கள் கில்டு எனும் அமைப்பை சாஸ்திரி உருவாக்கினார். தமிழ்நாட்டில் கூட்டுறவு இயக்கம் உருவாக இவர் முக்கியப் பங்கு வகித்தார். திருவல்லிக்கேணி அர்பன் கோ-ஆபரேடிவ் சொசைட்டி எனப்படும் டியுசிஎஸ் அமைப்பு 1904-ல் இவரது முயற்சியால்தான் உருவானது.
பல்வேறு காலகட்டத்தில் தன் வாழ்நாள் முழுவதும் எண்ணற்ற ஏழை மற்றும் பிப்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு கல்வி மற்றும் பிற உதவிகளை வழங்கியுள்ளார் சாஸ்திரி. குறிப்பாக அவர் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழத்தின் துணை வேந்தராக இருந்தபோது பல மாணவர்களுக்கு பல்வேறு உதவிகளை, நிதி உதவி உள்பட தனிப்பட்ட முறையில் வழங்கியுள்ளார். சாஸ்திரியிடம் அப்படி உதவி பெற்றவர் பி.கொடநாத ராவ் (1889-1975). ராவ் அவர்கள் சாஸ்திரியுடன் பன்னிரண்டு ஆண்டுகள் சாஸ்திரியின் தனிப்பட்ட செயலாளராகப் பணியாற்றினார். 1963ம் ஆண்டு சாஸ்திரியாரின் அரசியல் பொதுவாழ்க்கை பற்றிய விரிவான புத்தகத்தை எழுதியுள்ளார் ராவ். இந்தப் புத்தகம் மிக முக்கியமான ஒன்று. இதுதான் சாஸ்திரியின் அரசியல் வாழ்க்கை வரலாறு. ஆனால் பரவலாக அறியப்படாத ஒன்றாக இன்றும் உள்ளது.
சாஸ்திரி தனது வாழ்க்கையின் அனுபவங்களை சுதேசமித்திரன் வாரப் பத்திரிக்கையில் 1941ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் தொடர்ந்து எழுதினார். சாஸ்திரி எழுதிய தொடர் கட்டுரைகள் அனைத்தும் ‘மீண்டும் வாழ்ந்தால்’ என்ற தலைப்பில் புத்தகமாக 1944ல் கலைமகள் காரியாலயத்தால் வெளியிடப்பட்டது.
1937ம் ஆண்டு காங்கிரஸ் கட்சி முதன் முதலில் தேர்தலில் வென்று ஆட்சி அமைக்க இருந்த தருணத்தில், மெட்ராஸ் மாகாணத்தின் முதலமைச்சராக சாஸ்திரியார்தான் வர வேண்டும் என்று மகாத்மா காந்தி விரும்பினார். ஆனால் சாஸ்திரி அதை மறுத்து விட்டார். பிறகுதான் ராஜாஜியை காந்திஜி பரிந்துரைத்தார். தன்னுடன் இணைந்து செயல்பட மேலவை உறுப்பினராக இருக்க வேண்டும் என்று ராஜாஜி ஶ்ரீனிவாச சாஸ்திரியைக் கேட்டுக் கொண்டார். சாஸ்திரியும் அதை ஏற்றுக்கொண்டார். தாழ்த்தப்பட்ட மக்கள் இந்து ஆலயங்களுக்குள் செல்ல முடியாமல் இருக்கும் தடையற்ற வேண்டும் என்று சாஸ்திரி ராஜாஜிக்கு முழு ஆதரவையும் அளித்தார்.
ஸ்ரீனிவாச சாஸ்திரி அவர்கள் 1944ல் ஆற்றிய, ராமாயணம் பற்றிய முப்பது உரைகள் இன்றும் அரிய பொக்கிஷமாகக் கருதப்படுகிறது. சாஸ்திரி ராமாயணத்தை ‘It is essentially a human document’ என்கிறார். 1949-ல் அவை தொகுக்கப்பட்டு புத்தகமாக வெளிவந்தது.
மாணவர்களுக்குப் பதினெட்டு வயது வரை இலவசக் கல்வி அமைப்பு இருக்கவேண்டும் என்று வலியுறுத்தியவர் ஸ்ரீனிவாச சாஸ்திரி. பெண்களுக்குச் சமமான கல்வி மற்றும் வேலை வாய்ப்பு, சம சொத்து உரிமை இருக்க வேண்டும் என்று கருதினார் சாஸ்திரி. இந்தியா மத அடிப்படையில் பிரிக்கப்படுவதைக் கடுமையாக எதிர்த்தார். நாடு சுதந்திரம் அடைவதற்கு 16 மாதங்களுக்கு முன்பு சாஸ்திரி தனது 76வது வயதில் சென்னையில் ஏப்ரல் 17, 1946 அன்று இயற்கை எய்தினார்.
சாஸ்திரியைப் போல் இங்கு ஏராளமான தலைவர்கள் வாழ்ந்த இடம் நமது பாரத நாடு. இவர்களைப் போன்ற தலைவர்களது தியாகத்தை நமது அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்வது நமது தலையாய கடமை.