Posted on Leave a comment

சில பயணங்கள் சில பதிவுகள் – 46 | சுப்பு

ஜதி பல்லக்கு

பெரியவாளுடைய நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகளை ஒட்டி, ரா.கணபதி அவர்களுக்கும் சிறப்புச் செய்யவேண்டும் என்று நினைத்தோம். ஆனால் அவர் அதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை. இருந்தாலும் அவரைப் பற்றிய குறிப்புகள் அடங்கிய சிறு புத்தகத்தை வெளியிட முடிவு செய்தோம். அதில் போடுவதற்குத் தேடியபோது, அவருடைய புகைப்படங்கள் எங்குமே இல்லை. எப்படியோ அவருடைய உதவியாளரிடம் பேசி, ரா.கணபதி கவனிக்காத போது, புகைப்படம் எடுக்கப்பட்டது.

இந்த வெளியீட்டுக்கான எல்லாக் குறிப்புகளையும் நான் சேகரித்து வைத்திருந்தேன். இருந்தாலும் சில பெரிய மனிதர்களின் சிபாரிசுப்படி ஒரு பிரபல எழுத்தாளர் இதில் என்மீது திணிக்கப்பட்டார். அந்த எழுத்தாளர் என்னிடம் கேட்ட முதல் கேள்வியே எனக்கு எரிச்சலை ஊட்டியது.

“சார் இதில் உங்க பேர் எங்கே வரும்? என் பேர் எங்கே வரும்?”

கோபத்தில்  “சார் என் பேரே வராது. உங்க பேர்தான் வரும்” என்று சொல்லிவிட்டேன். அது அவரை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை.

பணி முடிந்து அச்சிடப்பட்ட வெளியீட்டோடு விழாக் குழுவினர், எழுத்தாளர் உட்பட, ரா.கணபதி வீட்டிற்குப் போனார்கள். வாங்கிப் பார்த்த ரா.கணபதி “நவ வியாசர் ரா.கணபதி என்று போட்டிருக்கிறது. நவ என்றால் என்ன?” என்று கேட்டிருக்கிறார்.

யாரோ ஒருவர் “வியாசரைப் போல ஒன்பது மடங்கு…” அதன் அபத்தத்தை உணர்ந்து அவராகவே நிறுத்திவிட்டார்.

எழுத்தாளர் உட்பட எவருக்கும் விடை தெரியாத நிலையில் “இந்தப் பேரை சுப்பு வெச்சானா?” என்று ரா.கணபதி கேட்டிருக்கிறார். தொடர்ந்து “நவ என்றால் புதுசு என்று அர்த்தம். பாரதியார் கூட நவகவிதை என்று எழுதியிருக்கிறார். சுப்புவுக்குத் தெரியும்” என்று சொல்லி என்னைப் பாராட்டிப் பேசியிருக்கிறார்.

விழாக் குழுவினர் கோவிலுக்கு வந்து என்னிடம் விவரத்தைச் சொன்னார்கள். எழுத்தாளர் எதுவும் சொல்லவில்லை.

*

தமிழ்நாடு கம்பனை அறிந்த அளவு வால்மீகியை அறியவில்லை என்கிற வருத்தம் எனக்கும் சில நண்பர்களுக்கும் இருந்தது. நாங்கள் எல்லோரும் சென்னை பெசன்ட் நகர் சிவன் கோவில் நண்பர்கள். கோவிலின் வெளியே உள்ள சிமெண்ட் பென்ஞ்சில் அமர்ந்தபடி வால்மீகியை வரிவரியாக ரசிப்பது எங்கள் வழக்கம்.

பண்டரிபுரத்தில் பக்தஜனாபாய் வீட்டின் ஆட்டுக்கல்லை தரிசனத்திற்காக வைத்திருக்கிறார்களாம். தன்னுடைய பக்தைக்காக பண்டரிநாதன் அந்த ஆட்டுக்கல்லில் மாவாட்டினான் என்பதாக ஒரு நம்பிக்கை. எங்களைப் பொறுத்தவரை பிற்காலத்தில் இந்த சிமெண்ட் பென்ஞ் மக்களுடைய பார்வைக்கு வைக்கப்படும் என்ற நம்பிக்கை இருந்தது. ஒரு நல்ல நாளில் முடிவெடுத்து – குரு பூர்ணிமா, 22.07.1994 – வால்மீகி மன்றம் துவக்கப்பட்டது.

மன்றத்தின் முதல் நடவடிக்கை திருவண்ணாமலை யாத்திரை. அண்ணாமலை தன்னை அறியத் தலைப்பட்டவர்களுக்குத் தாய்வீடு. தயையாகக் கனிந்தவரின் பொன்மேடு. அங்கே வசிப்பவர்களுக்கு உபதேசம், தீட்சை எதுவும் தேவையில்லை. அவர்கள் முத்தி பெறுவது சிவாக்ஞை என்கிறார் பகவான் ரமணர்.

இளைஞர்களின் முயற்சியில் வளர்ந்து கொண்டிருந்தது வால்மீகி மன்றம். நிகழ்ச்சிகள் சுவாரஸ்யமானவை. என்னைப் பொறுத்தவரை மீன் விற்கப்போனாலும் மீட்சியைத் தேடினாலும் பராசக்தி உடனிருந்து என்னை பாதுகாப்பது மரபு.

ஹனுமத் ஜெயந்தி – வால்மீகி ராமாயண பாராயணத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற யோசனை சொல்லப்பட்டபோது “அது வேண்டாம், முழுதாகப் படித்தவர்கள் நமக்குக் கிடைக்கமாட்டார்கள். விட்டுவிடலாம். சுந்தரகாண்டம் மட்டும் படிக்கலாம்”  என்றார் ஒருவர்.

நான் “செய்கிற வேலையை ஒழுங்கா செய்யலாம் பத்து நாளும் பாராயணம் செய்யும்படியாக ஆளைக் கண்டுபிடித்து அழைத்து வருகிறேன்” என்று சொல்லிவிட்டேன்.

சொல்லிவிட்டேனே தவிர அடுத்தநாள்தான் அதனுடைய வலு எனக்குப் புரிந்தது. சென்னை மாநகரத்தில் வால்மீகி ராமாயணத்தை முழுதாகப் படித்திருந்தவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அதிலும் பெரும்பாலானவர்கள் முதுமை அடைந்துவிட்டவர்கள். எப்படியோ நாலு நாள் அலைச்சலுக்குப் பிறகு இந்திரா நகரில் இருவர் கிடைத்தனர். அவர்களை வைத்துப் பாராயணம் நடத்தப்பட்டது. பத்தாம் நாள் பகல் பொழுதில் பாராயணம் நிறைவடையும் பொழுது அந்த இடத்தில் பாராயணம் செய்த இருவரும் அவர்களைத் தவிர நானும் இருந்தோம். அவ்வளவுதான்.

இவ்வளவு சிறப்பான ஏற்பாடு செய்து இறுதியில் ஆட்களே இல்லையே என்று யோசித்துக்கொண்டிருந்த போது தொலைபேசி அழைப்பு, “குற்றாலம் ஸ்ரீசித்தேஸ்வரி பீடம் சித்தானந்த பாரதி சுவாமிகள் வந்திருக்கிறார். அவரைக் கோவிலுக்கு அழைத்து வரலாமா” என்று கேட்டார்கள். சுவாமிகள் வந்தார், அவரோடு ஒரு கூட்டமே வந்தது.

ஹனுமத் ஜெயந்தி விழாவில் பேசுவதற்காக திருச்சியில் இருந்த பேராசிரியர் சத்யசீலனை அழைத்திருந்தோம். முதல் நாள் இரவு (30.12.1994) அவர் தொலைபேசியில் அழைத்தார்.

“சார், நாளைக்கு என்னால் வரமுடியாது.”

“ஏன் சார்?”

“சார், நாங்கள் எல்லாம், நான் மட்டுமல்ல, என்னோடு பேராசியர்கள் தமிழறிஞர்கள் என்று ஐம்பது பேர் போலீஸ் காவலில் வைக்கப்பட்டு தஞ்சாவூரில் இருக்கிறோம். தமிழக அரசு நடத்தும் உலகத்தமிழ் மாநாட்டிற்கு தமிழறிஞர்கள் எதிர்ப்பு தெரிவிக்கக் கூடாது என்பதற்காக அந்தம்மா இப்படி பண்ணிட்டாங்க. எங்களுக்கு வெளித்தொடர்பே இல்லை. யாரோ ஒரு போலீஸ்காரரிடம் கெஞ்சி உங்களுக்கு போன்ல பேசுறேன். நீங்க வேறு ஏற்பாடு செய்து கொள்ளுங்கள்” என்றார்.

“சார்.. இப்பவே ராத்திரி நேரமாயிடுச்சு.. நாளைக்கு காலையில போய் சொன்னா மாலை நிகழ்ச்சிக்கு யார் வருவார்கள்” என்று கேட்டேன்.

“என் ஆசிரியர் அ.ச.ஞானசம்பந்தன் ஐயாவோடு பேசுங்கள். இந்த விஷயத்தை அவருக்குச் சொல்லுங்கள். கௌரவம் பார்க்கமாட்டார். கட்டாயம் வருவார்” என்றார்.

“அப்படியானால் இப்போதே பேசட்டுமா” என்று கேட்டேன்.

“ஐயாவுக்குக் கண் தெரியாது, காது நல்லா கேட்கும். இப்போதே பேசிவிடுங்கள். நீங்கள் யாராவது போய் அவரை அழைத்து வந்துவிடுங்கள்” என்று சொன்னார்.

அவர் சொன்னது நடந்தது.

*

பெரியவா நூற்றாண்டு விழா குறித்த செய்திகள் பத்திரிகைகளில் வெளிவரவேண்டும் என்றும், ஒரு பிரஸ் மீட் நடத்தவேண்டும் என்றும், அதற்காக ஒரு பிஆர்ஓ வை நியமிக்கவேண்டும் என்றும் கோவில் நிர்வாகத்தில் முடிவு செய்யப்பட்டது. நான் பிஆர்ஓவைத் தேடிப் புறப்பட்டேன். ஒரு நண்பரின் ஆலோசனைப்படி பீட்டர்ஸ் சாலையில் நியூ காலேஜ் அருகே ஃபிலிம் நியூஸ் ஆனந்தன் வீட்டுக்குப் போனேன். பழைய காலத்து கிராப்பு, பழைய காலத்து ஜிப்பா, பழைய காலத்துப் புன்னகையுடன் இருந்தார். முதல் வாக்கியத்திலேயே அவர் தெலுங்குக்காரர் என்பது தெரிந்துவிட்டது.

பொதுவாகவே சினிமாக்காரர்கள் அடக்க நினைப்பார்கள் அல்லது அடங்கி இருப்பார்கள். இவர் இரண்டாவது வகை, கூடுதலாக.

அவருக்கான ஊதியம் பற்றிக் கேட்டபோது, மழுப்பிவிட்டார். “பாத்துக்கலாம் ஸார்” என்றார்.  யார் பார்த்துக்கொள்வது? தொகை பெரிசாக இருந்தால், கமிட்டிக்காரர்கள் நம்மைப் பார்துவிடுவார்களே என்கிற யோசனை எனக்கு. கோவில் நிகழ்ச்சி என்பதால் யாருக்கும் கவர் தரமுடியாது என்பதைக் கறாராகச் சொல்லிவிட்டேன், அதற்கும் “பாத்துக்கலாம்” தான்.

கோவிலுக்கு வந்து கமிட்டிக்காரர்களிடம் ஆனந்தனைப் பற்றிச் சொன்னேன். ஒருவர் கூட ரசிக்கவில்லை. சில முணுமுணுப்புகளும் இருந்தன. இருந்தாலும் என்னுடைய கோபத்துக்கு அஞ்சி, யாரும் தடைபோடவில்லை.

பிரஸ்மீட் எங்கே நடத்துவது என்ற கேள்வி எழுந்தது. ஓட்டலில் நடத்தினால்தான் பத்திரிகைக்காரர்கள் வருவார்கள் என்பது என் கருத்து. பெரியவா நிகழ்ச்சியை ஓட்டலில் நடத்தக்கூடாது என்பது சிலரின் வாதம். எப்படியோ எல்லோருக்கும் திருப்தி அளிக்கும்படியாக ஒரு ஆச்சார ஓட்டல் கண்டுபிடிக்கப்பட்டு அங்கே பிரஸ்மீட் ஏற்பாடு செய்யப்பட்டது.

ஃபிலிம் நியூஸ் ஆனந்தன் தன்னுடைய முயற்சியால் பத்திரிகையாளர்களைப் பெருமளவில் கொண்டுவந்து நிறுத்தினார். கவர் தரவில்லை. மறுநாள் எல்லாச் செய்தித் தாள்களிலும் விழா பற்றிய விவரங்கள் இருந்தன. விழாக் குழுவினர் ஆனந்தனுக்கு நல்ல சன்மானம் கொடுக்கவேண்டும் என்று முடிவெடுத்தார்கள். சினிமாக்காரரை பி.ஆர்.ஓ.வாகப் போடக்கூடாது என்று சொன்னவர் கூட இப்போது அடக்கி வாசித்தார்.

நான் ஆனந்தன் வீட்டுக்குப் போனேன். அவர் பணத்தை வாங்க மறுத்துவிட்ட்டார். “நாங்க சினிமாத் தொழில்ல இருக்கோங்க. ராப்பகலா அந்த வேலைதான் செய்யறோம். முதல் தடவையா ஒரு மகானைப்பத்தி பேசறோம், எழுதறோம். நீங்கதான் அந்த வாய்ப்பு கொடுத்தீங்க, நாங்கள்தான் உங்களுக்கு சன்மானம் கொடுக்கணும்” என்று சொல்லி கைகூப்பினார்.

 

கைகூப்பிய ஆனந்தன் இப்போது என் கண்முன்னே இருக்கிறார்.

*

நான், ரவி, ஷோபனா, ரமணன், வவேசு எல்லோரும் இணைந்த புள்ளி பாரதியார் என்று சொல்லலாம். தனிப்பட்ட மனக்கோணல்கள், உடல் உபாதைகள், சமூக நகர்வுகள் என்று எல்லாவற்றையும் பாரதி என்ற கண்ணாடி மூலமாகப் பார்ப்பது எங்களுக்கு வழக்கமாக இருந்தது.  ஒத்த கருத்து இருந்தாலும் சர்ச்சைகள் தவிர்க்க முடியாதவை. எந்த சர்ச்சை ஏற்பட்டாலும் இறுதித் தீர்ப்பை மட்டும் சோபனாதான் எழுதுவாள். பாரதியார் குறித்த உணர்வை அடிப்படையாக வைத்து, ஒரு அமைப்பை உருவாக்கிச் செயல்பட வேண்டும் என்பது ரவியின் யோசனை. ரவியின் அலுவலகத்தில் மூவர் கூடி – நான், ரவி, வவேசு – செப்டபம்பர் 1994 – ஆலோசனை செய்தோம்.

“பாரதியாருக்கு விழா எடுக்க வேண்டாம்” என்றேன் நான். ரவி “ஏன்? ஏன்?” என்று பதறிவிட்டான். வவேசு காற்றின் திசை அறியக் காத்திருந்தான்.

“பாரதியார் வறுமையில் வாடி உயிர்விட்டார், நாமும் அவருக்கு விழா எடுக்கறோம்னு சொல்லி, வரவங்களுக்கு சமோசாவும் டீயும் குடுத்தா, அவரோட வறுமையை ஞாபகப்படுத்தற மாதிரி இருக்கும். எனக்கு அதில் விருப்பம் கிடையாது” என்றேன்.

“நீ என்ன பண்ணனும்ற?” என்றான் ரவி.

“செலவைப் பற்றி கவலைப்படாமல் விழா எடுக்க வேண்டும். முதலில் பணத்திற்கு ஏற்பாடு செய்து கொண்டு அப்புறம் மற்ற வேலைகளைச் செய்தால் என்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்கிறேன்” என்றேன் நான்.

“இப்படியெல்லாம் கண்டிஷன் போட்டா யார் பணம் கொடுப்பா” என்றான் வவேசு.

“நான் கொடுக்கிறேன்” என்றான் ரவி.

எட்டயபுர ஜமீன்தார் வெங்கடேச ரெட்டப்ப பூபதிக்கு பாரதி எழுதியதாக ஒரு சீட்டுக்கவி (மே 1919) இருக்கிறது. அதில்

“ஜெயப்பறைகள் சாற்றுவித்துச் சாலுவைகள்

பொற்பைகள், ஜதிபல்லக்கு,

வயப்பரிவாரங்கள் முதல் பரிசளித்துப்

பல்லூழி வாழி நீயே!”

என்று எழுதியிருக்கிறார். அவருடைய வாழ்நாளில் அது நடக்கவில்லை. ஒவ்வொரு வருடமும் அவருடைய பிறந்தநாளை விழா எடுத்துக் கொண்டாடி அவரை ஜதி பல்லக்கில் ஏற்றி பொன்னாடை அணிவித்து பொற்கிழி கொடுத்துவிட வேண்டும் என்கிற யோசனை ஏற்றுக்கொள்ளப்பட்டது. மகாகவி பாரதியாரின் கனவை நனவாக்கும்படி செயல்பட்டவரைத் தேர்ந்தெடுத்து ஒவ்வொரு ஆண்டும் பாரதி விருதை அளிக்க வேண்டும் என்பது இன்னொரு தீர்மானம்.

என்னைத் தவிர மற்றவர்கள் இலக்கணத் தேர்ச்சி பெற்றவர்கள் என்பதால் பாரதி திருவிழாவா, பாரதித் திருவிழாவா என்கிற இலக்கண வியாஜ்யம் கொஞ்சகாலம் நீடித்தது. இந்த முறை தீர்ப்பு எழுதியது ஷோபனா அல்ல. ரவியின் வழிகாட்டியான தமிழறிஞர் ஔவை நடராசன். தலைப்பில் த் தேவையில்லை என்று சொல்லிவிட்டார் அவர்.

முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது கணக்கெடுத்துப் பார்த்தால் ரவியுடைய செலவு எட்டு இலக்கங்களைக் கடந்துவிட்டது. என்னால் என் வாக்கைக் காப்பாற்ற முடியவில்லை. உடல்நிலை பழுதாகி, வானவில் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதே தடைபட்டுவிட்டது.

தொடரும்..

Leave a Reply