சிவாஜி கணேசனின் பிறந்த நாள் அக்டோபர் 1.
ஒரு நடிகன் எப்போது கலைஞனாக அரியணை ஏறுவான்? அவன் ஏற்று நடிக்கும் கதாபாத்திரம் வெல்லும்போது. ஒரு கதாபாத்திரமாக நடிகனின் இருப்பு நம்மிடம் நிலைக்கும் போதுதான் கதாநாயகனின் ஆட்சி நடக்கும்.
அப்படி, தான் ஏற்று நடிக்கும் கதாபாத்திரங்களின் வழியே கலையுலகின் சக்கரவர்த்தியாகப் பேராட்சி நடத்தியவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.
ஒப்பற்ற கலைஞனாக, நடிப்பின் அளவுகோலென மாறியிருக்கும் பீஷ்மமாக நிற்கிறார் சிவாஜி. தந்தையாக – தமையனாக – தம்பியாக – கணவனாக – மகனாக என எல்லாப் பாத்திரங்களிலும் எதார்த்த வாழ்வியலின் சுக-துக்கங்களை சமூகத்தின் கண்ணாடியெனப் பிரதிபலித்தார். இன்று வரை அந்தத் தாக்கம் நம்மிடையே நிலவுகிறது.
தமிழகத்தைப் பொறுத்தவரை சினிமா என்பதில் அரசியல் நேரிடையாகவே உள்ளது. சினிமா பெரும்பாலும் ஒரு மெல்லிய கொள்கைப் பிரகடனத்தை மக்கள் முன்னால் வைக்கிறது. சிவாஜியின் துவக்கம் திராவிட அரசியலின் வழியே எழுந்தாலும், அவரால் அங்கே நீடிக்க முடியவில்லை. வார்த்தைகளுக்கு இடையே வரும் ‘கமா’ போல வாழ்வின் ஓட்டத்தில் அவருக்கும் இது இருந்தது.
சிவாஜியின் தந்தை சின்னையா மன்றாயர் ஒரு சுதந்திரப் போராட்ட வீரர். தெய்வ பக்தியும் – தேச பக்தியும், கர்ணனின் கவச குண்டலத்தைப் போலக் குடும்பத்தின் அங்கத்தோடு பிணைந்திருந்தது. அந்தக் குடும்பத்தில் வந்த நடிகர் திலகத்தால் திராவிட அரசியலில் நீடிக்க முடியவில்லை.
ஆகவே, அவர் காமராஜரை குருவாக ஏற்று, தேசியத்தின் குரலாக மாறினார். நான் ‘திராவிடன்’ என்று பேசும் கலையரசியலுக்கு எதிரே, நான் ‘இந்தியன்’ என வலிமையான கருத்தை முன்வைத்தார். தானொரு இந்தியத் தமிழன் என்ற அடையாளத்தைத் தன் வாழ்நாள் முழுக்கக் கடைப்பிடித்தார்.
தமிழர்கள் என்றும் சிவாஜிக்கு கடமைப்பட்டவர்கள். நமது விடுதலை வீரர்களை, ஆன்மீக புராணங்களை, வீரயுக புருஷர்களை கண்முன்னால் கொண்டு வந்து காட்டியவர் நடிகர் திலகம் சிவாஜி.
அரிச்சந்திரன் – காத்தவராயன் – கர்ணன் – அம்பிகாபதி போன்ற திரைப்படங்களும், திருவிளையாடல் – திருவருட்செல்வர் – சரஸ்வதி சபதம் – திருமால் பெருமை போன்ற திரைப்படங்களும், தமிழ்ச் சூழலில் ஏற்படுத்தியிருக்கும் அசைக்க முடியாத ஈர்ப்பு பிரமிக்கத்தக்கது.
கப்பலோட்டிய தமிழன் – வீரபாண்டிய கட்டபொம்மன் போன்ற படங்களில் சுதந்திரப் போராட்ட வீர புருஷர்களை, மக்களின் கண் முன்னால் கொண்டு வந்து நிறுத்தினார் சிவாஜி. பாரத விலாஸ் – ராஜபார்ட் ரங்கதுரை என எல்லாப் படங்களிலும் தேச ஒற்றுமை, சுதந்திரத்தின் மகத்துவம் குறித்துப் பேசப்பட்டது. பெரும்பாலும் அவருடைய எல்லாப் படங்களிலும் இந்த அடிநாதமிருந்தது.
பிராமண வெறுப்பும், தேசிய ஒற்றுமை மீது கேலி கிண்டலும் உச்சத்தில் இருந்த காலத்தில் பிராமணக் கதாபாத்திரத்தை நாயகனாகக் கொண்ட சினிமாக்களில் சிவாஜி நடித்தார். தேசியத்தைத் தன் கதைகளில் பிரசாரம் செய்தார்.
கண்ணதாசனுடைய ரத்தத்திலகம் என்ற சினிமா சீன யுத்தத்தின் கொடூரத்தை விவரித்தது. ‘பனிபடர்ந்த மலையின் மேலே’ என்ற பாடல் பாரத மாதாவுடன் கனவில் உரையாடும் இந்தியப் போர்வீரனைக் கற்பனை செய்தது. இப்படி எண்ணற்ற திரைப்படங்கள்.
ஓர் உண்மையை பகிரங்கமாகச் சொல்ல நினைத்தால், சினிமாவைத் தன் முழுக் கட்டுப்பாட்டிற்குள் எடுக்க திராவிடக் கருத்தியல் முயன்றபோது, அதைத் தேக்கி நிறுத்திய சக்திகளாக சிவாஜி – கண்ணதாசன் – ஏ.பி.நாகராஜன் இருந்தார்கள். இதில் மூலவராக சிவாஜி வீற்றிருந்தார்.
தமிழ்ச் சமூகத்தின், செழித்த கலை இலக்கியத்தின், பாரதிய அடையாளம் ‘சிவாஜி’ என்று சொன்னால் அது மிகையாகாது. இதற்காக சிவாஜி என்கிற மகா கலைஞனுக்கு ‘பாரத ரத்னா’ கொடுத்தாலும் தகும்.