5 பாண்டவ கௌரவன்
தலைப்பு நகை முரணைப் போலத் தோன்றலாம். ஆனால் அது அவ்வாறில்லை என்பதை பின்னால் பார்க்கலாம். இப்போது நாம் எழுப்பிக் கொண்டிருக்கும் ஆறு கேள்விகளுக்கு முதலில் விடையளித்த பிறகு மற்ற கேள்விகளை எழுப்பத் தொடங்குவோம். நாம் எழுப்பிய முதல் கேள்வி இது: திருதராஷ்டிரன், பிறவியிலேயே கண் தெரியாதவனாக இருந்த காரணத்தால், பாண்டுவிடம் அரசு தரப்பட்டது என்றால், அரசு ஒப்படைக்கப்பட்டதா அல்லது, ஒரு மாற்று அரசனாகத் தாற்காலிகப் பொறுப்பில் பாண்டு அரசேற்றானா அல்லது, பாண்டுவின் நிலை வேறெதுவுமா?
மஹாபாரதத்தின் கதை அமைப்பின்படி, இந்தக் கேள்விக்கான விடை, பாண்டு அரசேற்ற அல்லது, திருதராஷ்டிரனிடம் அரசை ஒப்படைத்துச் சென்ற கட்டங்களில் இல்லை. பாண்டவர்களின் வனவாசம் முடிந்து, இரு தரப்பினரும் ஒருவருக்கு மற்றவர் தூது அனுப்பிக் கொண்டும், யுத்தத்துக்கு ஆயத்தமாகிக் கொண்டும் இருக்கின்ற சமயமான உத்யோக பர்வத்தில்தான் வருகிறது. கிருஷ்ணர் தூது வந்திருக்கிறார். ஒவ்வொருவரும் துரியோதனனுக்கு அவன் செய்யும் தவறை எடுத்துச் சொல்லி, இதோபதேசமாக, முழு நாட்டை இல்லாவிட்டாலும் பாதி அரசையாவது கொடுக்கும்படியாக அறிவுறுத்திக் கொண்டிருக்கிறார்கள். அவனோ எதற்கும் செவி சாய்க்காமல், தான் பிடித்த பிடியில் நின்று கொண்டிருக்கிறான்.
Continue reading மகாபாரதம் கேள்வி பதில் (பகுதி 5) | ஹரி கிருஷ்ணன்