Posted on Leave a comment

லும்பன் பக்கங்கள் – 5 | அரவிந்தன் நீலகண்டன்

தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் வேதாளத்தை மீண்டும் தோளில் போட்டுக்கொண்டு நடக்கலானான். அப்போது வேதாளம் எள்ளி நகைத்து ‘ஹே அரசனே கேள்! நீ ஏன் இப்படி கஷ்டப்படுகிறாய்? இதனால் உன்னைப் போற்றுகிறவர்கள் யார்? கிடைத்ததற்கரிய செல்வத்தைக் கொண்டு வந்தால் கூட, கொண்டு போகிற இடத்தில் சிலருக்குப் பாராட்டுக் கிடைக்காது. ஆனால் எந்த இடத்திலிருந்து எடுக்கிறார்களோ அங்கேதான் பாராட்டுக் கிடைக்கும். இதற்கு நான் ஒரு கதையைச் சொல்கிறேன் கேள்’ என்று ஆரம்பித்தது.

ரொம்ப காலத்துக்கு முன்னால் ஒரு நாடு இருந்தது. அந்த நாட்டிலே செல்வம் குறைந்து விட்டது. எனவே அந்த நாட்டு ராஜா தைரியமும் சாமர்த்தியமும் மிக்க வீரர்களையும் வியாபாரிகளையும் திரட்டி நாடு விட்டு நாடு சென்று செல்வங்களை ஈட்டி வர அனுப்பினான். அவர்கள் ரொம்ப காலம் அலைந்து ஒரு நாட்டுக்குச் சென்றார்கள். அங்கே ஈடிணையில்லாத வைரம் ஒன்று இருந்தது. அந்த வைரம் ஒரு மாயாஜால வைரம். அதை ஒருவர் கண்டுபிடித்தால் அவரே அந்த வைரத்தை எடுத்துக் கொண்டு போனாலும் அந்த வைரம் அங்கேயேதான் இருக்கும்.

இந்த வைரம் அந்த மக்களிடம் இருந்தது.

அங்கே வந்த வியாபாரிகளில் புத்திசாலியான ஒருவன் இந்த வைரம் இம்மக்களிடம் இருப்பதைக் கண்டுபிடித்தான். அவன் அந்த வைரத்தைக் கண்டுபிடித்ததால் அதே வைரம் அவனிடமும் வந்துவிட்டது. அந்த ஊரைவிட்டும் போகவில்லை. இந்த வைரத்தை அவன் தன் நாட்டுக்குக் கொண்டு வந்தான்.

இந்த வைரத்தை அவன் தன் நாட்டுக்குக் கொண்டு போனதால் எந்த நாட்டிலிருந்து வைரத்தைக் கொண்டு போனானோ அந்த நாட்டு மக்கள் அவனுக்கு சிலைச் வைத்தார்கள். அதே மக்கள் அந்த வைரத்தைப் பட்டை போட்டுப் பளபளப்பாக்கி அதனை யார் இத்தனை நாட்கள் காப்பாற்றி வந்தார்களோ அவர்களையெல்லாம் மறந்துவிட்டார்கள். அந்த அயல்நாட்டு வியாபாரியைத் தலையில் தூக்கி வைத்து கொண்டாடினார்கள். ஆனால் அவன் கொண்டு போன நாட்டிலோ அவனைக் கண்டுகொள்ளக் கூட இல்லை.

இதை சொல்லி நிறுத்திய வேதாளம் ‘மன்னனே.. ஏன் இந்த விசித்திரமான நடத்தை? இதற்கு பதில் தெரிந்தும் நீ சொல்லவில்லை என்றால் உன் தலையை சுக்கல் நூறாக சிதறடிப்பேன்’ என்று சொன்னது.

விக்கிரமாதித்தனும், ‘ஏ வேதாளமே! அந்த வைரத்து நாட்டு மக்களுக்கு அன்னிய மோகமும் தாழ்வு மனப்பான்மையும் இருந்தது. அந்த அன்னிய நாட்டிலோ வைரத்தின் மதிப்பே தெரியவில்லை. இதுதான் காரணம்’ என்று கூறினான். அவனது சரியான இந்த பதிலால் அவன் மௌனம் கலையவே வேதாளம் மீண்டும் முருங்கை மரத்துக்குத் திரும்பியது.

என்ன சொல்ல வந்தேனென்றால், நாம் ஜி.யு.போப்பைக் கொண்டாடுகிறோம். தேவாரத்தையும் திருவாசகத்தையும் நமக்குத் தந்த அருளாளர்களை அவர்களின் வைதீக ஞான தமிழ் மரபை விட்டுவிட்டோம். எத்தனையோ படையெடுப்புகள் கோவில் இடிப்புகள் மதமாற்ற வெறியாட்டங்கள் இத்தனைக்கும் நடுவில் திருக்குறளையும் திருவாசகத்தையும் காப்பாற்றித் தந்த சனாதன தர்ம மரபை மறந்துவிட்டோம். ஆனால் இந்நூல்களை உள்நோக்கத்துடன் மொழிபெயர்த்த ஜி.யு.போப்பைக் கொண்டாடுகிறோம்.

அவர் நம் தமிழ் இலக்கியங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தால் அவரைக் கொண்டாட வேண்டியவர்கள் யார்? ஆங்கிலேயர்கள் அல்லவா? அவர்கள் கண்டுகொள்ளவே இல்லையே. ஏன்?

காரணம் நமக்கு இருக்கும் தாழ்வு மனப்பான்மை. உண்மையில் நம் தமிழை நாம் பெருமையடையச் செய்யவும் வளர்க்கவும் அண்டை மொழி சமுதாயங்களிடமல்லவா கொண்டு செல்ல வேண்டும்? இன்றைக்கு ஹிந்தி பேசுகிற மாநிலங்களில் தமிழன் குறித்து என்ன தெரியும்? வீட்டிலேயே பிஎஸ்என்எல் டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் புகழ் தயாநிதி, சர்க்காரியா புகழ் கருணாநிதி, அலைகற்றை புகழ் ஆண்டிபட்டி ராசா, அக்கா கவிதாயினி, ப.சிதம்பரம். தமிழர் கெட்ட பெயர் கொண்டு போனாலும் செழித்து வாழ்வது நம் பரம்பரைகளாக இருக்க வேண்டும் என்பதுதானே இன்றைய ‘தமிழ் தமிழ்’ என்று கரையும் கும்பல்களின் உண்மை நோக்கமாக இருக்கிறது.

ஆங்கிலேயப் பாதிரி அவரது மதமாற்ற அரசியல் பிரித்தாளும் நோக்கங்களுக்காக தமிழைக் கொஞ்சம் புகழ்வது போல புகழ்ந்தாலும் நமக்கெல்லாம் அப்படி சந்தோஷம். புல்லரிக்கிறது. இறுதியில் பார்த்தால் தமிழுக்கு உண்மையான வளம் சேர்த்த நாயன்மார்களும் ஆழ்வார்களும் எங்கே என்றால் காணோம். காரைக்கால் அம்மையாரும் அருணகிரிநாதரும் கிடையாது. கிருஷ்ணதேவராயர் தமிழ் ஆழ்வாரான ஆண்டாளின் சரிதத்தை தெலுங்கில் செய்தார், அவரை எந்த தமிழ் அரசியல்வாதியும் கொண்டாடுவதில்லை. கான்ஸ்டண்டைன் பெஸ்கிக்கும் ஜியு போப்புக்கும் கால்டுவெல் பாதிரிக்கும் சிலை வைப்பார்கள். அவர்கள் பிறந்தநாளில் அரசு விளம்பரம் கொடுப்பார்கள். பெரும்பான்மை ஹிந்துக்கள் வரிப்பணத்தில்.

இத்தகைய சூழலில் தமிழரே தமிழகத்தின் உண்மைப் பண்பாட்டிலிருந்து அன்னியப்பட்டிருக்கும் போது மதமாற்ற சக்திகளும் இந்தியாவை உடைக்கும் சக்திகளும் புகுந்து விளையாடுகின்றன. அவர்கள் சித்தாந்தப்படி தமிழ்ப் பண்பாட்டைத் திரித்தும் சிதைத்தும் போலி பிம்பங்களைக் கட்டமைக்கின்றன. தமிழறியாத பிற இந்தியரும் இதுதான் தமிழர் பண்பாடு என நினைக்கின்றனர்.

மோதியையும் ராகுலையும் கவனியுங்கள். மோதி தமிழ்ப் பண்பாட்டின் உச்சங்களைப் பேசுகிறார். உள்வாங்கியிருக்கிறார். திருக்குறளையும் பாரதியையும் எங்கெங்கோ பேசுகிறார். பாராளுமன்றமோ பள்ளி மாணவர்களோ பனி படர்ந்த சிகரங்களில் நம் படை வீரர்களிடமோ அவர் திருக்குறளைப் பேசுகிறார். வாக்குகளுக்காக அல்ல. தேர்தலுக்காக அல்ல.

ஆனால் ராகுலை கவனியுங்கள். குஜராத்தில் சிவ பக்தன் வேஷம். தமிழ்நாட்டிலும் கேரளாவிலும் தன் உண்மையான கத்தோலிக்க சந்தோஷம். கோவில்களில் ராகுலின் உடல் மொழியைக் கவனியுங்கள். ஒரு கட்டாயமும் ஒவ்வாமையும் தெரியும். வேறுவழியில்லை இங்கே நிற்க வேண்டியிருக்கிறது. ஆனால் அதே ராகுலை கத்தோலிக்க தேவாலயங்களிலோ அல்லது கிறிஸ்தவ பாதிரிகளுடனோ பாருங்கள். இது தன்னிடம், இவர் நம்மவர் என்கிற உடல் மொழி தெரியும்.

ராகுலும் தமிழ்நாடு வருகிறார். தமிழ் பண்பாட்டை மோடி மதிக்கவில்லை என்கிறார். பிறகு பிரியாணி செய்வதாக ஒரு ஸ்டண்ட் அடிக்கிறார். சிக்கனுக்கும் மட்டனுக்கும் தமிழ் என்ன என்று கேட்கிறார். ஜனநாயகத்தின் பூபாளம் என்று இந்த வாரிசு அரசியல் வறட்டுத்தனத்துக்கு முட்டு கொடுக்கக் கூட கூலியெழுத்தர்கள் இங்கு உண்டு என்பது புளித்துப் போன விஷயம்.

விஷயமென்னவென்றால் மோடி தமிழை நேசிக்கிறார். உண்மையாக நேசிக்கிறார். ஆனால் ஸ்டாலினும் ராகுலும் தமிழை தங்கள் வாரிசு அரசியலுக்காகப் பயன்படுத்துகிறார்கள். இதற்கிடையில்தான் ஊடுருவுகிறது நச்சரவம்.

ஜகத் கஸ்பர்.

காந்தாரத்திலிருந்து சகுனி வந்தானென்றால் கத்தோலிக்க சபையிலிருந்து ஒரு கஸ்பர். இறுதியில் இருவர் நோக்கமும் முடிவதென்னவோ அழிவில்தான். இலங்கையில் போல.

தமிழ் என்பது ஒரு இனம். தமிழ் தேசிய இனம். அதுதான் நம் அடையாளம். இப்படி தொலைகாட்சிகளெங்கும் முழங்குகிறார் கஸ்பர். அவ்வப்போது ஒட்டுக்கு ஊறுகாய் போல திருவாசகம். என்ன ஒரு மோசடி! தமிழை ஐரோப்பிய இனவாத இன தேசிய அரசியலுக்குள்ளும், வைதீக சைவ வைணவ கௌமார சாக்த மரபுகளுடன் உயிரிணைப்பு கொண்ட தமிழ் ஆன்மிகமரபை கிறிஸ்தவத்துக்குள்ளும் அடைக்கும் வக்கிர முயற்சி கஸ்பருடையது. இதற்குத் துணை போவது திமுக ராஜகுல இளவரசி கனிமொழி.

வெற்று மொழி வெறிஅரசியலும் கிறிஸ்தவ மதவெறியும் இணைந்து வேத நெறியாம் ஹிந்து தர்மத்தை அழிக்க திட்டமிடுகின்றனர். இந்நிலையில் ஒட்டுமொத்த பாரதத்துக்கு தமிழ்ப் பண்பாடு உண்மையில் அனைத்து பாரதத்துக்கும் சொந்தமான சனாதன தர்ம பண்பாடே என்பதை உணர்த்த இன்று சில முக்கிய முயற்சிகள் தலையெழுந்துள்ளன.

அண்மைக் காலங்களில் தமிழ்ப் பண்பாட்டை தமிழ்நாட்டு எல்லைகளுக்கு அப்பால் அனைத்து பாரத மக்களிடமும் கொண்டு செல்லும் பணியில் ஒரு இணையத்தளம் – குறிப்பாக காணொளிகள் மூலம் இயங்குகிறது.

இந்த பொங்கலன்று தமிழ்-வடமொழி அறிஞரும் ஹிந்துத்துவ சிந்தனையாளருமான ஜடாயு சிலப்பதிகாரம் குறித்து உரையாற்றியது காணொளியாக வெளிவந்தது. தமிழறியாத பலரை சிலப்பதிகாரம் சென்றடைந்தது. சிலப்பதிகாரம் தங்கள் நூலே என்பதை அவர்கள் உணர்ந்தனர். ஜடாயு அவருக்கே உரிய அறிவும் சுவையும் சார்ந்த முறையில் இம்மகோன்னத காவியத்தை விளக்குகிறார். எப்படி சிலப்பதிகாரம் காவியச் சுவையுடன் என்றுமுள்ள அழிவற்ற தர்மத்தை எடுத்தியம்புகிறது என்பதைத் தெள்ளத் தெளிந்த நீரோடையின் நல்லழகுடன் விளக்குகிறார். ஆங்கிலத்தில். தமிழின் இனிமை கெடாமல் அதை ஆங்கிலத்தில் அளிக்க ஒரு தனித்திறமை மொழி மேலாண்மை வேண்டும். அது ஜடாயுவுக்கு மிக அழகாக கை வருகிறது.

சில மாதங்களுக்கு முன்னர் தொல்லியல் அறிஞர் நாகசாமி அவர்கள் பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்தின் பௌதீக அறிவியலாளர் பேராசிரியர் ராமநாதனுடன் உரையாடும் காணொளி வெளியானது. நடராஜர் திருமேனியின் தத்துவக் குறியீடுகளின் ஆழத்தையும் அழகையும் வெளிப்படுத்தினார். சோழர் கைத்திறன் பாரதத்தின் திக்கெட்டும் கற்றோருக்குச் சென்றடைந்தது. பத்தூர் நடராஜரை மீண்டும் பாரதம் கொண்டு வர பாடுபட்ட பெருமகனார் நாகசாமி அவர்கள். அவரே நடராஜரைக் குறித்து பேசுவது எவ்வளவு பொருத்தம். தமிழ்நாட்டிலேயே வாழும் அவரை நாம் கொண்டாடுவதில்லை. ஆனால் ஒட்டுமொத்த திராவிட இனவாத கூட்டத்தைக் காட்டிலும் இந்த தனிமனிதன் தமிழுக்குச் செய்த தொண்டு அளப்பரியது.

பேராசிரியர் ராமநாதன் துடிப்புள்ள இளைஞர். அறிவியலாளர். இசை ஆர்வலர். பண்பாட்டு அறிஞர் என பல முகங்கள் கொண்டவர். இவர் பண்டைய பாரத வேதியியல் குறித்து ஒரு காணொளி அளித்துள்ளார். அதில் அவர் சிலப்பதிகாரத்தில் இருக்கும் கைவினைச் செயல்பாடுகளில் இருக்கும் அறிவியல் தரவுகளை அளிக்கிறார். முக்கியமான பதிவு.

பொதுவாக நாம் அதாவது இந்துத்துவர்களாகிய நாம், நம் பண்டைய வரலாற்றை மிகவும் புகழ்வோம். ஆனால் அந்த பண்பாட்டு சாதனைகளின் பின்னாலிருக்கும் சமூக கட்டமைப்பு குறித்து நமக்கு தெளிவான பார்வை இருக்காது. இடதுசாரிகள் ‘கோல்’ அடிக்கும் இடம் இதுதான். ஆனால் கல்வெட்டு ஆராய்ச்சியாளர் எஸ்.ராமச்சந்திரன் இந்த இடத்தை நிரப்புகிறார். அவரது அபரிமித அறிவு பண்டைய சமூக இயங்கியல் சார்ந்தது. அது இலக்கியம், புராணம், இதிகாசம் கல்வெட்டு எனப் பல துறைகளிலுள்ள புலமை சார்ந்தது. எப்படி சோழ பேரரசு நிர்வகிக்கப்பட்டது என்பதை அவர் பேரா.ராமநாதனுடன் விளக்கி உரையாடும் காணொளி ஒரு அரும் பொக்கிஷம் என்றே சொல்ல வேண்டும்.

இவற்றையெல்லாம் வெளியிடும் இணையத்தளத்தின் பெயர் அதர்வா ஃபோரம்.

இது வட இந்தியாவில் உள்ள அமைப்பு. ஆனால் அது தமிழுக்குச் செய்யும் தொண்டு முக்கியமானது. ஏனெனில் தமிழ்ப் பண்பாடு குறித்து திராவிடவாத விஷக்கிருமிகள் உருவாக்கியுள்ள போலி பிம்பத்தை அது உடைக்கிறது. மிக முக்கியமாக ஆன்மிகமும் நடைமுறைத் தன்மையும் கொண்ட தமிழ் பண்பாட்டை அது அனைத்து பாரத மக்களிடமும் எடுத்து செல்கிறது.

இந்த ஃபோரத்தை ஆதரிக்க வேண்டியது நம் கடமை. அதற்கு நாம் ‘subscribe’ செய்யலாம். இந்த காணொளிகளை நம்மால் முடிந்த அனைத்து சமூக வலைதளங்களிலும் பகிர்ந்து கொள்ளலாம். ஜகத் கஸ்பர், ராவுல் வின்ஸி-காந்தி, ஸ்டாலின் – கனிமொழி போல பெரும் ராட்சத பலத்துடன் இயங்கும் தீய சக்திகளுடன் நாம் போரிடுகிறோம். இந்நிலையில் இப்படிப்பட்ட சிறு துளிகளான முயற்சிகளை ஊக்குவிப்பது முக்கியம். சிறுதுளிகளென்றாலும் இவை அமிர்தத் துளிகள்.

அதர்வா ஃபோரம் ஃபேஸ்புக்: https://www.facebook.com/AtharvaForum

அதர்வா ஃபோரம் ட்விட்டர்: https://twitter.com/AtharvaForum

அதர்வா ஃபோரம் யூட்யூப் சானல்: https://www.youtube.com/channel/UCdq7DbK8ClftFTNumdI6xJQ/featured

Posted on Leave a comment

லும்பன் பக்கங்கள் – 4 | அரவிந்தன் நீலகண்டன்

மறைக்கப்படும் உண்மைகள்

பிப்ரவரி 2021 இல் ‘தாஸ்குப்தா ரிவ்யூ’ என்கிற முக்கியமான அறிக்கையை இங்கிலாந்து அரசு வெளியிட்டது. பயோடைவர்ஸிட்டி என்கிற உயிரினப்பன்மையின் பொருளாதார முக்கியத்துவம் குறித்த மிகவும் விவரங்கள் நிறைந்த அறிக்கை. Continue reading லும்பன் பக்கங்கள் – 4 | அரவிந்தன் நீலகண்டன்

Posted on Leave a comment

லும்பன் பக்கங்கள் – 3 | அரவிந்தன் நீலகண்டன்

நம்முடைய பாடப் புத்தகங்கள் குறித்து அடிக்கடி சர்ச்சைகள் எழுகின்றன. அண்மையில் எழுந்த சர்ச்சை மொகலாய மன்னர்கள் தாங்கள் இடித்த ஹிந்துக் கோவில்களை மீண்டும் சீரமைத்தார்கள் என்பது. இதற்கு ஆதாரங்கள் உண்டா எனத் தகவலறியும் உரிமைச் சட்டத்தில் கேட்கப்பட்ட போது ‘இல்லை’ என என்.சி.ஈ.ஆர்.டி நிறுவனம் பதிலளித்துள்ளது. Continue reading லும்பன் பக்கங்கள் – 3 | அரவிந்தன் நீலகண்டன்

Posted on Leave a comment

லும்பன் பக்கங்கள் – 2 | அரவிந்தன் நீலகண்டன்

தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதையர் எழுதிய ‘என் சரித்திரம்’ மிகவும் புகழ்பெற்ற நூல். அதைப் போலவே முக்கியமான மற்றொரு நூல் அவர் எழுதிய அவரது குருநாதரின் வாழ்க்கை வரலாறு. ‘திரிசிரபுரம் மகாவித்துவான் ஸ்ரீ மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் சரித்திரம்’. Continue reading லும்பன் பக்கங்கள் – 2 | அரவிந்தன் நீலகண்டன்

Posted on Leave a comment

லும்பன் பக்கங்கள் – பகுதி 1 | அரவிந்தன் நீலகண்டன்

எல்லா நல்ல காரியங்களையும் பிள்ளையார் பெயர் சொல்லி ஆரம்பிக்க வேண்டுமென்பார்கள். எனவே புதிதாக ஆரம்பிக்கிற இந்த ‘லும்பன் பக்கங்கள்’ தொடரையும் அவர் விஷயத்திலிருந்து ஆரம்பிப்பதில் தவறில்லை. Continue reading லும்பன் பக்கங்கள் – பகுதி 1 | அரவிந்தன் நீலகண்டன்