Posted on Leave a comment

அம்பையிடம் இருந்து ஒரு கடிதம்

‘வலம் மே 2019 இதழில் அரவிந்தன் நீலகண்டனின் ‘தேவையா
இந்துத்துவ அறிவியக்கம்?
என்ற கட்டுரையில் என் பெயரைக் குறிப்பிட்டுச்
சில விஷயங்கள் எழுதப்பட்டிருக்கின்றன. அவற்றைக் குறித்துத்தான் இந்தக் கடிதம்.
கட்டுரை ஓர் இடத்தில் இவ்வாறு கூறுகிறது:
“…அவருக்கு அந்த வேலை
கிடைக்கவில்லை. அவர் அதை இந்தப் பதிலுடன் இணைத்துப் பார்க்கவில்லை. ஏதோ வேலை கிடைக்கவில்லை.
அவ்வளவுதான். ஆனால் பின்னாட்களில் அவரிடம் ஒரு கேள்வி கேட்கப்படுகிறது. ‘ஏன் சாவர்க்கரின்
பெயரைச் சொன்னீர்கள்? நீங்கள் வித்யார்த்தி பரிஷ்த்தா என்ற ஐயம் அன்றைக்கு உங்கள் மீது
ஏற்பட்டது…
ஒரு விரிவுரையாளர் வேலைக்கான பேட்டியில் நான் சாவர்க்கர் பெயரைக் குறிப்பிட்டதும்
வேலை கிடைக்காததும் உண்மைதான். என்னைப் பேட்டி எடுத்த பேராசிரியர் சாவர்க்கர் பெயரைக்
குறிப்பிட்டது குறித்து என்னிடம் கேட்டார் அப்போது. பிறகு வேறு ஒரு சந்தர்ப்பத்தில்
நான் விமர்சன நோக்கில் பேசிக்கொண்டிருந்தபோது வேறு யாரோ கேட்டது பிறகு குறிப்பிட்டிருக்கும்
கேள்வி. அந்தக் கேள்வியில் சாவர்க்கரைப் பற்றி எதுவும் இருக்கவில்லை. வித்யார்த்தி
பரிஷத் குறித்துத்தான் இருந்தது. இரு வேறு காலகட்டத்தில் இரு வேறு நபர்கள் கூறியது
ஒரு நிகழ்வில் வருவதுபோல் கட்டுரையில் உள்ளது.
பிறகு எனக்கு ICHRல் வேலை கிடைத்தது எனக்கு இந்துத்துவ தொடர்பு ஏதுமில்லை என்று
உறுதி செய்துகொண்ட பின்னர்தான் என்று கட்டுரை குறிப்பிடுகிறது. இதுவும் சரியில்லை.
எழுபதுகள் பற்றியும் எமர்ஜன்ஸியில் இருந்த அனுபவங்கள் பற்றியும் பல்வேறு சந்தர்ப்பங்களில்
நான் அரவிந்தன் நீலகண்டனிடம் பேசியிருக்கிறேன். அவற்றின் காலவரிசையை இதில் மாற்றிப்போட்டுக்
குழப்பியிருக்கிறார். நான்
ICHRஇலிருந்து வெளிவந்து
இரு ஆண்டுகள் ஆராய்ச்சி நல்கை பெற்று அதன்பின் மீண்டும் டெல்லி வந்த பிறகுதான் விரிவுரையாளர்
பேட்டிகளுக்குப் போகிறேன். அதனால் ICHR வேலைக்கு
முன்னால் எனக்கு இந்துத்துவ தொடர்பு ஏதுமில்லை என்று உறுதி செய்துகொண்டது எல்லாம் நடந்திருக்க
சாத்தியமே இல்லை. நான் கூறுவதைப் புரிந்துகொள்வதில் அவருக்குக் குழப்பம் நேர்ந்திருக்கிறது.
அந்தக் காலகட்டத்தில் மார்க்ஸியவாதிகள் கல்வித்தளத்தை முற்றிலும் ஆக்கிரமித்திருந்தார்கள்
என்பது எல்லோரும் அறிந்ததுதான். அதை நான் பலமுறை எதிர்கொள்ளவேண்டி வந்தது. அது வேறு
விஷயம். எனக்கு மார்க்சியவாதிகளைக் குறித்து இருந்த விமர்சனங்கள் என் ‘சக்கர நாற்காலி
கதையில் வரும். ஆனால் மார்க்சிய வரலாற்றாசிரியர்களான டி.டி.கோசாம்பி, இர்ஃபான்
ஹபீப், ரொமிலா தாபர் இவர்களை நான் பெரிதும் மதித்தேன். அரவிந்தன் நீலகண்டனின் கட்டுரை
மார்க்சியவாதிகள் கல்வித்தளத்தை ஆக்கிரமித்திருந்தார்கள் என்று கூறுவதைப் பற்றியது
அல்ல என் இந்தக் கடிதம். அவர் என்னைக் குறிப்பிட்டுச் சில விஷயங்களை அதில் கூறியிருப்பதைத்
தெளிவுபடுத்தத்தான் இக்கடிதம். பல்வேறு சந்தர்ப்பங்களில் கூறியதை அவர் ஒருவிதமாக உள்வாங்கி
அவற்றை வேறுவிதமாக மனத்தில் இணைத்து எழுதியிருக்கிறார். ‘சொல்வனம்
கட்டுரையை அனுப்பும் முன் என்னிடம் காட்டி அனுமதி பெற்றார். இதற்கும் அப்படிச்
செய்திருக்கவேண்டும். நம் எல்லோர் வாழ்க்கையுமே அரசியல்படுத்தப்பட்டதுதான். அவை எல்லாமே
தரவுகள்தாம். ஆனால் அவை தரவுகளாக்கப்படும்போது தகவல் குழப்பம் இருக்கக்கூடாது.
கட்டுரைக்கு முகப்புப் படமாக என் படத்தைப் போட்டது என் அனுபவங்களைப் பிரதானமாக்கிய
கட்டுரை இது என்ற பிரமையை ஏற்படுத்துகிறது. இதைத் தவிர்த்திருக்கலாம். அப்படிப் பிரதானப்படுத்தவேண்டிய
அளவுக்கு முக்கியமான நபர் இல்லை நான், அப்போதும் இப்போதும். டெல்லியின் சிக்கலான கல்வி
வெளியில் சிக்கி உழன்றுகொண்டிருந்த பலரில் ஒருத்தி. இப்போது உள்ள உபிந்தர் சிங் போன்றவர்கள்
அப்போது இல்லை. அப்போது என் போன்றோர்களைக் கனிவுடன் நோக்கி வேலை வாய்ப்புகளைத் தந்தது
டாக்டர் பார்தசாரதி குப்தா போன்ற டெல்லி பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறையிலிருந்த
பேராசிரியர்கள்தாம். எந்தக் கல்லூரியில் டாக்டர் பார்த்தசாரதி குப்தா விரிவுரையாளர்
வேலைக்காகத் தேர்வுப் பேட்டி எடுக்க வருகிறாரோ அங்கு எந்தவிதச் சார்பும் இல்லாத தேர்வு
நடைபெறும் என்பது எல்லோரும் அறிந்த ஒன்றாக இருந்தது. இப்படிப் பல நினைவுகள் பலருக்கு.
என்னுடையது அதில் ஒரு துளி அவ்வளவுதான்.


– அம்பை