Posted on Leave a comment

களங்கமில்லாதவர்கள் கல்லெறியுங்கள் – ஆமருவி தேவநாதன்

‘பேச்சுரிமை மறுக்கப்படுகிறது’, ‘கருத்துச் சுதந்திரம் நசுக்கப்படுகிறது’, ‘சகிப்புத்தன்மை குறைந்துவிட்டது’, ‘பாசிச அடக்குமுறைகள் அவிழ்த்து விடப்படுகின்றன’ போன்ற கூக்குரல்கள் கடந்த இரு ஆண்டுகளாக ‘அறிவுஜீவி’களால் எழுப்பப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக ‘மனம் உடைந்து’, முன்னர் அரசிடமிருந்து பெற்ற விருதுகளைத் திருப்பித்தர பேரறிவாளர்கள் முனைந்து செயல்பட்டதும், இது உண்மை என்று நம்பிய அயல்நாட்டுப் பத்திரிகைகள் ஓலமிட்டு அழுததும் நாம் சமீபத்தில் கண்டவை.

அப்படிக் கூக்குரலிட்டவர்களில் முதன்மையானவர் நயந்தாரா சேஹல் என்னும் எழுத்தாளர். இவர் பண்டித நேருவின் உறவினர். தனக்கு அளிக்கப்பட்ட சாஹித்ய விருதைத் திரும்ப அளித்தார் இந்த எழுத்தாளர். இவரும், இவரைப்போன்ற பலரும் அடிக்கடிப் பேசிவரும் மொழி, ‘பாரதத்தில் பேச்சுரிமையை நிலை நாட்டியவர் நேரு; அவர் கடைசி வரை பத்திரிகைச் சுதந்திரம், பேச்சுரிமை என்பதையே முழுமூச்சாகக் கொண்டிருந்தார். அவரது கொள்கைகள் குழிதோண்டிப் புதைக்கப்படுகின்றன’ என்பதே. அது எந்த அளவு உண்மை என்று பார்க்கலாம்.

விடுதலை அடைந்த பின் 17 ஆண்டுகள் பாரதத்தை வழிநடத்திய பண்டித நேரு அவர்கள், பத்திரிகை சுதந்திரம் தூக்கிப் பிடிக்கப்பட வேண்டிய ஒன்று என்பதைப் பலமுறை, பல கூட்டங்களில் சொல்லியே வந்திருந்தார். மார்ச் 8, 1948 அன்று அரசியல் நிர்ணய சபையில் பேசும்போது,(1) நேரு பேசியது: “நாங்கள் பத்திரிகைகளிடம் அளவுக்கதிகமாகவே நீக்குப் போக்காக இருந்து வருகிறோம். அவர்கள் எங்கள் கொள்கைகளுக்கு எதிராக எழுதினாலும் நாங்கள் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என்பதைத் தெரியப்படுத்தி இருக்கிறோம்” என்றார். நாடு அன்று இருந்த சூழலில் அவர் அப்படிப் பேசியது அவரைப் பெரிய முற்போக்காளர் என்றே காட்டியது.

பின்னர் டிசம்பர் 3, 1950 அன்று நாளேடுகளின் ஆசிரியர்கள் கூட்டத்தில் நேரு பேசியது மிக முற்போக்கான ஒன்றாகப் பார்க்கப்பட்டது(2). “பத்திரிகைகள் எடுத்துக்கொண்டுள்ள உரிமைகள் அளவுக்கதிகமானவை, ஆபத்தானவை என்று அரசு நினைத்தாலும், பத்திரிகைகளின் சுதந்திரத்தில் தலையிடுவது என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை… அடக்கப்பட்ட, சுதந்திரங்களற்ற ஊடகங்களைக் கொண்டிருப்பதைக்காட்டிலும், ஆபத்தான விளைவுகளை உண்டாக்கக் கூடிய, கட்டுப்பாடற்ற சுதந்திரங்களைக் கொண்ட இதழ்களை இயங்க அனுமதிப்பதில் எனக்கு உடன்பாடே” என்றே பேசினார்.

ஆசிய ஜோதி பண்டித நேரு அவர்களின் வாக்கில் கருத்துச் சுதந்திர தேவி நடமாடாத நாளே இல்லை என்னும்படியாக, பெருவாரியான பொதுக்கூட்டங்களில், பத்திரிகையாளர் சந்திப்புக்களில் என்று பல நேரங்களில் கருத்துச் சுதந்திரம், பத்திரிகைச் சுதந்திரம் என்று முழங்கிக் கொண்டிருந்தார்.

நாட்டிற்குத் தீமை விளையும் என்றாலும் பத்திரிகைச் சுதந்திரத்தைக் காப்போம் என்பதாக இருந்த நேருவின் நிலைப்பாடு ஓராண்டிலேயே தலைகீழாக மாறியது.

சென்னையில் இருந்து ரொமேஷ் தாப்பர் என்பார் நடத்திய ‘க்ராஸ் ரோட்ஸ்’ என்னும் இடதுசாரிப் பத்திரிகை நேருவின் கொள்கைகளைக் கடுமையாகச் சாடியபடி இருந்தது. இது காங்கிரஸாருக்குப் பெரும் நெருடலாகவே இருந்து வந்தது. இப்பத்திரிகையை எதிர்த்து அன்றைய சென்னை மாகாண அரசு வழக்கு தொடர்ந்தது. ஆனால் நீதிமன்றம் வழக்கைத் தள்ளுபடி செய்து, ‘அரசியலமைப்புச் சட்டத்தின் படி பேச்சுரிமை அடிப்படை உரிமைகளில் ஒன்று. அதனை மறுத்து பத்திரிகையைத் தடை செய்ய இயலாது’ என்று தீர்ப்பளித்தது(3). இது காங்கிரஸ் அரசையும் நேருவையும் பாதித்தது.

அதேநேரம் பஞ்சாப் அரசு ‘ஆர்கனைசர்’ என்னும் பத்திரிகையையும் தடை செய்ய வேண்டி பஞ்சாப் உயர்நீதி மன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தது. சென்னை வழக்கு போன்றே ‘அடிப்படை உரிமை’யை மறுக்க முடியாது என்னும் விதமாக இந்த வழக்கும் தோல்வி அடைந்தது.

இந்த இரு தீர்ப்புகளும் காங்கிரஸ் அரசை மிகவும் பாதித்தன. ‘அடிப்படை உரிமை’ என்பதால் ஒன்றும் செய்ய இயலாத நிலை. பலவாறு குழம்பிய காங்கிரஸ் மத்திய அரசு, அரசியலமைப்புச் சட்டத்தைத் திருத்த முடிவெடுத்தது. ஆம். ஜனவரி 26, 1950ல் ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசியலமைப்புச் சட்டம், ஓராண்டுக்குள், முதல் முறையாக, பேச்சுரிமை, கருத்துச் சுதந்திரம் என்னும் அடிப்படை உரிமைகள் விஷயமாகத் திருத்தப்பட வேண்டும் என்று முடிவானது. இந்த முயற்சியை முன்னெடுத்தவர், அதுவரை பத்திரிகைச் சுதந்திரத்தின் காவலனாக அறியப்பட்ட நேருவேதான்.

மே 10, 1950 அன்று சுதந்திர பாரதத்தின் அரசியல் அமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டது. மே 29 அன்று பாராளுமன்றத்தில் பேசும்போது நேரு, “பத்திரிகைச் சுதந்திரம் என்பது கட்டற்றது அல்ல. அதற்கான கட்டுப்பாடுகளுக்குள் அது அடங்குவதாக இருக்கவேண்டும். நடைமுறையையும், நாட்டின் சட்டங்களையும் மனதில் கொண்டு பத்திரிகைகள் நடந்துகொள்ள வேண்டும்”(4) என்றார். ஜூன் 18, 1951ல் நிறைவேற்றப்பட்டு அமலுக்கு வந்தது சட்டத் திருத்தம்.

‘கட்டுப்பாடற்ற சுதந்திரம்’ என்பது அல்ல என்றாகி, ‘வரைமுறைகளுக்குள் அடங்கும் சுதந்திரம்’ (Reasonable Freedom) என்று ஆனது. 1950 டிசம்பர் மாதம் துவங்கி 1951 ஜூன் மாதத்திற்குள் கருத்துச் சுதந்திரம் மலை முகட்டிலிருந்து அதல பாதாளத்தில் விழுந்தது.

பாரதத்தில் சட்டம் ஒழுங்கைக் காரணம் காட்டி நூல்கள் தடை செய்யப்படும் போதும், இதே ‘நேரு கொடி’ தூக்கப்படும். ஆனால் எழுத்தாளரான நேருவின் காலத்திலேயே நூல்கள் தடை செய்யப்பட்டன என்பதை யாரும் வெளியே சொல்வதில்லை. தேர்ந்தெடுக்கப்பட்ட ஞாபக மறதி நோய் பரவுகிறதோ என்னவோ.

நேரு காலத்தில் தடை செய்யப்பட்ட நூல்கள் இவை:

Nine hours to Rama – Stanley Wolpert

1962ல் இந்திய அரசு, கலிஃபோர்னியப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான ஸ்டான்லி வோல்பர்ட் எழுதிய  ‘Nine hours to Rama’ என்னும் நாவலைத் தடை செய்தது.  மஹாத்மா காந்தியின் இறுதி நாள் பற்றிய புனைவு நூலான இது, அரசு, காந்திக்குச் சரியான பாதுகாப்பு அளிக்கவில்லை என்னும் கருத்தை வலியுறுத்தி எழுதப்பட்டிருந்தது.

Lotus and the Robot – Arthus Koestler

ஆர்தர் கோஸ்லர் என்பார் எழுதிய ‘Lotus and the Robot ‘ என்னும் நூலை 1960ல் இந்திய அரசு தடை செய்தது. கோஸ்லர் தனது ஜப்பானிய மற்றும் இந்தியப் பயணங்களைப் பற்றி எழுதிய இந்த நாவலில் இந்தியாவின் ஜனநாயகத்திற்கு இருண்ட எதிர்காலமே இருப்பதாக எழுதியிருந்தார்.

The Heart of India  – Alexander Campbell

அலெக்ஸாண்டர் கேம்பெல் எழுதிய ‘The Heart of India’ என்னும் நூல், இந்தியாவின் சமூக, பொருளாதாரக் கொள்கைகளைக் கேள்வி கேட்பதாக இருந்தது. நேரு பற்றியும், காங்கிரஸ் கட்சி பற்றியும் அவதூறான கருத்துக்களை இந்த நூல் கொண்டிருந்தது.

Lady Chatterle’s Lover – D.H.Lawrence

டி.எச்.லாரன்ஸ் எழுதிய ‘Lady Chatterle’s Lover – D.H.Lawrence’ என்னும் நூலில் பாலியல் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இதனை பிரிட்டன் முதலில் தடை செய்தது. பின்னர் தடை நீக்கப்பட்டாலும், இந்திய உச்ச நீதிமன்றம் இந்த நூலைத் தடை செய்தது. ஆயினும் இந்தத் தடையில் நேருவின் பங்கு பற்றி தெரியவில்லை.

பிறந்த குழந்தையைப் பாதுகாக்க வேண்டி சில முன்னேற்பாடுகள் செய்வது போல், விடுதலை அடைந்த சில ஆண்டுகளுக்குள் பாரதத்தின் ஒற்றுமைக்குப் பங்கம் விளைவிக்கும் போக்குடைய ஏடுகளை நேரு அடக்கி வைத்து நாட்டைக் காப்பாற்ற முயன்றார் என்று நாம் இன்று நினைத்துப்பார்க்கலாம். ஆனால் அதேபோல் இன்னும் பல மடங்கு ஊறு விளைவிக்கக்கூடிய விஷமப் பிரசாரம் செய்யும் ஊடகங்கள் நாட்டில் பெருகிவிட்ட நிலையில், ஊடக தர்மம் என்பதே தேசியத்தை எதிர்ப்பதுதான் என்னும் விதமாக ஆகிவிட்ட நிலையில், ஊடகவியலாளர்கள் வெளிப்படையாக தேச நலனுக்கு எதிராகச் செயல்படுவது தெரியும் நிலையிலும்கூட, அவர்களை அடக்கவென்று சட்டங்களில் மாற்றங்கள் ஏதும் நடைபெறாத தற்காலத்தில், ‘கருத்துச் சுதந்திரம் பறிக்கப்படுகிறது’ என்னும் கூக்குரல் எழுவது என்ன நியாயம்?

விரைவில் உத்திரப் பிரதேசத்தில் தேர்தல் வர இருக்கும் வேளையில், கருத்துச் சுதந்திரப் போராளிகள் மறு அவதாரம் எடுக்கலாம். விருதுகளைத் திரும்ப வழங்கும் ஆராதனைகள் துவங்கலாம். அப்போது நாம் நினைவில் கொண்டு கேட்க வேண்டிய கேள்வி: கருத்துச் சுதந்திரத்தை முதலில் களங்கப்படுத்தியது யார்?

அடிக்குறிப்புகள்:

(1), (2) மற்றும் (4) –  https://www.sarcajc.com/Nehru_on_Indian_Press.html
(3)  https://indiankanoon.org/doc/456839/

Posted on 1 Comment

பகைவனுக்கருள்வாய் – இந்தி சீன் பாய் பாய் – ஆமருவி தேவநாதன்

பகைவனுக்கருள்வாய்இந்தி சீன் பாய் பாய்
ஆமருவி தேவநாதன்
விடுதலை அடைந்தவுடன் நிலையான அரசை அளித்து பாரதத்தை 17 ஆண்டுகள் வழிநடத்திய பண்டித நேரு, பாரதத்தில் பாராளுமன்ற ஜனநாயகம் வேரூன்ற உழைத்த முன்னோடி. ஆனால் பாராளுமன்றத்தை விரும்பாத கம்யூனிசச் சீனாவுடன் உறவாடினார். அந்த உறவு பாரதத்தின் எல்லைகளை விட்டுக்கொடுக்கும் அளவுக்குச் சென்றது.
மதத்தைப் பிடிக்காத
நேருவுக்கு கம்யூனிச மதம் பிடித்த சீன உறவு பிடித்திருந்தது. சீனாவின் கம்யூனிசம்
பிடித்திருந்தது. சீனத் தலைவர் சூ என் லாய் சொல்வது மார்க்ஸ்
வாக்கு போன்று இருந்தது. கடைசி வரை
ஏமாற்றப்பட்டாலும், சூ என் லாய் சொல்வதைத் தொடர்ந்து நம்பினார். சீனர்கள் கொடுத்த வரைபடங்களில் இந்தியப் பகுதிகளும் இருந்ததைப் பொருட்படுத்தவில்லை. ‘இதெல்லாம் சாங் காய் சேக் (தைவான் நிறுவனர்) தலைமையிலான கொமிந்தாங் அரசு கொடுத்துச் சென்ற வரைபடங்கள். எங்கள் நாட்டில் இப்போதுதான் கம்யூனிச அரசு பொறுப்பேற்றுள்ளது. நாட்டின் கட்டமைப்பை மேம்மடுத்துவதில் தற்போது நாங்கள் கவனம் செலுத்துகிறோம். வரைபடங்களைச் சீரமைக்க நேரமில்லை. இதைப் பிற்பாடு பார்த்துக்கொள்ளலாம்என்கிறது சீன அரசு. அதை அப்படியே நம்புகிறார் நேரு.
நேருவுடன் பேச்சு வார்த்தை நடத்த சூ என் லாய் பல அதிகாரிகள் கொண்ட குழுவுடன் வருகிறார். தான் ஒருவராகவே நேரு அந்தப் பெரும் கூட்டத்தைச் சந்திக்கிறார். உதவிக்கென்று ஒரு ..எஸ். அதிகாரி கூட இல்லை. என்னதான் பேரறிஞராக இருந்தாலும் வயதாகிக்கொண்டிருக்கும் நேரு, பெரும் அதிகாரிகள் புடைசூழ வரும் எதிரித் தலைவரிடம் தான் மட்டும் தனியாகப் பேச்சுவார்த்தை நடத்தும்போது வாய்தவறித் தவறான செய்திகளைச் சொல்லிவிடவோ, வாக்குறுதிகளை அளித்துவிடவோ நேரிடலாம். அவர்களுக்குள் என்ன பேசிக்கொண்டார்கள் என்பதை நேரு தெரிவிக்கும்வரை வெளி உலகம் தெரிந்துகொள்ள வழி இல்லாமல் போய்விட்டது. ஒருமுறை பாராளுமன்றத்தில் சீன
நில ஆக்கிரமிப்புப் பற்றிய கேள்விக்குப் பதிலளிக்கையில் நேரு, ‘அந்த இடத்தில் ஒரு
புல் செடிகூட முளைக்காது. அதை ஏன் ஆக்கிரமிக்கப் போகிறார்கள்?’
என்று, எந்த எச்சரிக்கை உணர்வும் இல்லாமல் சொல்கிறார். இதை அப்படியே சீனப் பத்திரிக்கைகள் எழுதின.
புதியதாக விடுதலை அடைந்த, பல இன, பல மொழிகள் பேசும் மக்களைக் கொண்ட, சில நூற்றாண்டுகளாகவே சுரண்டப்பட்ட ஏழைத் தேசம் ஒன்றின் தலைவரான நேருவிற்கு, உலக அளவிலான பிரச்சினைகளைத் தீர்க்கும் பணி அளவுக்கதிகமாக இருந்ததாலும், உள்நாட்டு விவகாரங்களில் அவர் மிக நுண்ணிய அளவிலான செய்திகளிலும் பெருத்த ஈடுபாடு கொண்டிருந்ததாலும், நாட்டின் எல்லை விவகாரத்தைக் கவனிக்க போதுமான நேரம் கிடைக்கவில்லை. 18 மணி நேரம் உழைக்கும் அவர் தன் அரசுக்கென வெளியுறவுத்துறை அமைச்சர் யாரையும் நியமிக்கவில்லை.
சோவியத் யூனியனும் அமெரிக்காவும் போட்டி போட்டுக்கொண்டு அணு ஆயுத உற்பத்தியைப் பெருக்கி, இவ்வுலகத்தைப் பலமுறை அழிக்கக் கூடிய சக்தி வாய்ந்த அணு ஆயுதங்களைச் சேமித்து வைத்துக்கொண்டிருந்த நேரம் அது. அணி சேராக் கொள்கை என்னும் நிலைப்பாட்டில் நின்று இரு துருவங்களுக்கு இடையில் தனியான செல்வாக்குடன் செயல்பட்டுக்கொண்டிருந்த நாடுகளின் தலைவராக நேரு உலக அமைதிக்காக அயராது உழைத்துக்கொண்டிருந்தார். அத்துணை வேலைகளையும் செய்ய தனியான அமைச்சர் இல்லாமல் நேருவே அந்தப் பொறுப்பையும் கையாண்டுகொண்டிருந்தார். அதன் விளைவாகப் பாராளுமன்றத்தில்புல் முளைக்காத இடம்முதலான தவறான பேச்சுக்களைப் பேசினார் என்று நம்ப வேண்டியுள்ளது.
தனக்கு நம்பகமான மனிதர் ஒருவர் சீனாவிற்கான இந்தியத் தூதராக இருக்கவேண்டும் என்பதில் மிகுந்த அக்கறையுடன் செயல்பட்ட நேரு, பணிக்கர் என்பாரை
நியமிக்கிறார். அது வினையில் முடிகிறது. ஒரு கட்டத்தில் பணிக்கர் சீனாவிற்கான
இந்தியத் தூதரா அல்லது இந்தியாவிற்கான சீனத் தூதரா என்று கேட்கும் அளவிற்கு அவரது
செயல்பாடுகள் அமைகின்றன. வெளிநாட்டில் நமது கண்ணும் காதுமாக இருக்க வேண்டிய
பணிக்கர், சீனர்களுக்கு
ஆதரவாக மட்டுமே செயல்படுகிறாரோ என்னும் அளவிற்கு ஐயம் அதிகரிக்கிறது. அவர் தெரிவிக்கும் செய்திகளை அப்படியே நம்பும் நேரு, தனது இந்திய அதிகாரிகளை ஏளனம் செய்கிறார். சீன எல்லையில் சாலைகளைச் சீன அரசு அமைக்கிறது என்று பிரதமருக்கு எழுதிய அதிகாரியை நேரு கண்டிக்கிறார்.
திபெத் விஷயத்தில் முழுவதுமான துரோகம் செய்கிறார் நேரு. திபெத்தைபஃபர் மாநிலம்’ (Buffer State) என்கிற அளவில் இங்கிலாந்து விட்டுச் சென்றது. இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் உள்ள, சுய அதிகாரமுள்ள ஒரு தனிநாடு என்றே அறியப்பட்ட இடத்தைத் தனது செயலின்மையால் சீனாவிற்குத் தாரை வார்க்கிறார் நேரு. ‘Tibet is a buffer
against whom?’
என்று கேட்கிறார். சீனாவிலிருந்து எந்தத் தாக்குதலையும் அவர் எதிர்பார்க்கவே இல்லை என்று அவர் நம்பியிருக்கக்கூடும். ஆனால், உளவுத் தகவல்களில் சீன ஊடுருவல்கள் இருப்பதாகச் செய்திகள் வந்ததையடுத்தாவது ஏதாவது செய்திருக்க வேண்டும். திபெத்திலிருந்து அபயக் குரல்கள் ஒலித்தாலும் அவற்றைப் புறந்தள்ளுகிறார் நேரு. ‘பழைய பஞ்சாங்கங்களாக இருக்காமல் புதிய அணுகுமுறை தேவைஎன்று திபெத்திய மதகுருக்களுக்கு அறிவுறுத்துகிறார்.
திபெத்தைச் சீனா ஒரேயடியாகக் கபளீகரம் செய்த பிறகு அதனைச் சீனாவின் ஒரு பகுதியாகவே அங்கீகரிக்கிறார் நேரு. திபெத்தியர்கள் ஏமாற்றப்பட்டதாக உணர்கிறார்கள், கொந்தளிக்கிறார்கள், கூக்குரலிடுகிறார்கள். ‘இதுதான் நிதர்சனம்என்கிற அளவில் அறிவுரை சொல்பவராக நேரு செயல்படுகிறார்.
திபெத்தாவது இன்னொரு நாடு. நமது எல்லைகளில் சீனப் படைகள் குவிந்தபோதும் ஏதும் நடக்காதது போலவே செயல்படுகிறார் நேரு. 1950ல் சர்தார் படேல், நேருவிற்குச் சீனாவின் எண்ணங்கள் குறித்து இரு முக்கியமான கடிதங்களை எழுதுகிறார். “சீனாவை நம்ப வேண்டாம், மேற்கத்திய ஏகாதிபத்திய சிந்தனையைப் போன்றே சீனாவும் ஏகாதிபத்தியச் சிந்தனை கொண்டது. அத்துடன்கம்யூனிசம்என்னும் கொடிய அடிப்படைவாத எண்ணமும் கொண்டது. ஆகையால் மேற்கத்தியர்களைவிட ஆபத்தானதுஎன்று எச்சரிக்கிறார். நேரு இதனைப் புறந்தள்ளுகிறார். படேல் சில நாட்களில் இறந்துவிடுகிறார். சரியாக 12 ஆண்டுகள் கழித்துச் சீன ஆக்கிரமிப்பு விஷயமாக நடந்த போரில் பாரதம் தோல்வியுறுகிறது.
சீனாவுக்காக அருவருப்பு ஏற்படும் வகையில் பரிந்து பேசுகிறார் நேரு. சீனாவை .நா. சபையில் உறுப்பினராக்க மிக அதிகப்படியான உழைப்பைத் தருகிறார். அன்றைய சோவியத் யூனியனின் தலைவர் குருஷெவ், ‘இந்தியாவை ஐக்கிய நாடுகள் சபையின் ஐந்து உறுப்பினர் பாதுகாப்புக் கவுன்சிலில் உறுப்பினராக்கலாமா?’ என்று கேட்கிறார். ‘எங்களுக்கு வேண்டாம். சீனாவை ஆக்குவதுதான் சரியாக இருக்கும்என்று தாராள மனப்பான்மையுடன் செயல்படுகிறார் நேரு. சீனாவைச் சேர்ப்பதற்கு அமெரிக்கா விரும்பவில்லை. நேரு அமெரிக்காவிடமும் பரிந்துரை செய்கிறார். இன்றுவரை .நா. பாதுகாப்புக் கவுன்சிலில் இந்தியாவிற்கு எதிரான போக்கையே சீனா கடைப்பிடித்து வருகிறது.
உலக அரங்குளில் சீனாவை ஏற்கும்படி மன்றாடுகிறார் நேரு. கம்யூனிசச் சித்தாந்தம் கொண்டிருப்பதால் பல வளரும் நாடுகளால் சீனாவை நம்ப முடியவில்லை. நேரு தனது ஆளுமையால் சீனாவுக்கு நம்பகத்தன்மையை ஏற்படுத்துகிறார். நேருவிற்குச் சீனா மீது எல்லை கடந்த தேசபக்தி ஏற்பட என்னென்ன காரணங்கள் இருக்க முடியும் என்பது ஒரு புதிராகவே இருந்தாலும், ‘கம்யூனிசம்என்னும் கொள்கையின்பால் அவரது ஈர்ப்பு அதிகம் என்பதையே முக்கியக் காரணமாக யூகிக்கவேண்டியுள்ளது.
வெற்று வார்த்தைகளால் நிரப்பப்பட்ட தடிமனான புத்தகங்களை அதிகமாகக் கொண்ட இயக்கம் கம்யூனிசம். மக்களின் துயர் துடைக்கவென்று தோன்றியதாகத் தன்னை அறிவித்துக்கொண்ட கம்யூனிஸ்டுகள், தங்கள் நாடுகளில் எல்லாம் நடத்திய மானுட அழித்தொழிப்புகள் வெளித்தெரியாத காலம். ஒருவேளை வெளியே தெரிந்தாலும் உலக அறிவுஜீவிகள் அவற்றைப் பாராமுகமாகக் கடந்துசென்ற காலம். ஒருபுறம் அமெரிக்காவை முதலாளித்துவத்தின் மொத்தப் பிரதிநிதியாக உருவகப்படுத்திக்கொண்டு அதை எதிர்ப்பதும், சோவியத் யூனியனை மானுட குலக் காவலனாகக் கொண்டு துதி பாடுவதும் உச்சபட்ச ஒலியளவுகளில் நிகழ்ந்து வந்த காலம் அது. கம்யூனிஸ்டுகளின் தோழர்களாகக் காட்டிக் கொள்வது முற்போக்கு என்று பரவலாக நம்பப்பட்ட காலம். அந்த மாயவலையில் நேருவும் வீழ்ந்தார் என்று நம்ப இடம் உண்டு.
இதற்கு ஓர் உதாரணம் உண்டு. ஹங்கேரியில் (1956) சோவியத் யூனியன் நிகழ்த்திய வன்முறைக்குப்பின் அந்நாட்டில் தனது சொல்கேட்கும் பொம்மை அரசை நிறுவியது. உலகமே இதனை எதிர்த்த போதும், அதுவரை முதலாளித்துவ எதேச்சதிகாரத்தை எதிர்த்தும், மேற்கத்திய பொருளாதாரச் சுரண்டலைக் கிடைத்த நேரங்களில் எல்லாம் சாடியும் வந்த நேரு, வாய் மூடி நிற்கிறார். ‘பேசுவது மானம் இடைப் பேணுவது காமம்என்று கம்பன் சொன்னது இதைப் பற்றித்தானோ என்னவோ.
கம்யூனிசச் சீன அரசு திபெத்தை முழங்கியதை எதிர்த்து அன்றைய திபெத்தின் புத்த பிட்சுக்களின் அரசு ஐக்கிய நாடுகள் சபையிடம் முறையிட்டது. .நா. செயலில் இறங்கத் துவங்குமுன் நேரு தலைமையிலான இந்தியா அந்தத் தீர்மானத்தை எதிர்த்தது. இந்தியாவுடன் பிரிட்டனும் எதிர்த்தவுடன் அந்தத் தீர்மானம் தோல்வி அடைந்தது. நியாயமான ஜனநாயக நாடு திபெத்தின் இறையாண்மைக்கு ஆதரவாகச் செயல்பட்டிருக்க வேண்டாமா? அதுமட்டுமல்ல, திபெத்துடன் இந்திய அரசு செய்துகொண்ட ஒப்பந்தங்கள் காற்றில் பறக்க அனுமதிக்கிறார் நேரு. திபெத்தில் இந்திய அதிகாரிகளுக்கான கூடாரங்கள் வரை அனைத்தையும் விட்டுக்கொடுத்து சீனாவிடம் நல்ல பெயர் வாங்க முயல்கிறார் பிரதமர்.
பண்டித நேருவின் சீனக் காதல் எந்த அளவு இருந்தது என்பதை இந்த நிகழ்வின் மூலம் தெரிந்துகொள்ளலாம். கம்யூனிசச் சீன அரசு அமைந்தவுடன் முதல் வேலையாக நேரு அதனை அங்கீகரித்தார். உடனே சியாங் காய் சேக் தலைமையிலான கொமிந்தாங் அரசின் இந்திய அங்கீகாரத்தை ரத்து செய்தார். ஏன் இவ்வளவு அவசரம்? அந்த அளவு கம்யூனிசச் சித்தாந்தக் காதல் அல்லது சீனாவுடன் எப்படியாவது நட்பைப் பெற வேண்டும். அதனால் அந்தநண்பனுக்கு .நா. அங்கீகாரம், .நா.வின் ஐவர் குழுவில் இந்தியாவுக்கு முன்பாக இடம்பெற்றுக்கொடுத்தல் என்று சொந்தத் தலையை அடகு வைத்து முனைந்து உழைத்தார்.
பலன், இந்திய நிலப்பரப்பை சீனா அபகரித்தது.
ஒரு பக்கம் முதலாளித்துவத்தின் பிரதிநிதியாக அமெரிக்கா அபரிமிதமான வளர்ச்சியைக் காட்டுகிறது. இன்னொருபக்கம்சம தர்ம சமுதாயம்என்னும் வார்த்தை அலங்காரங்களுடன் சோவியத் யூனியன்கம்யூனிசம்என்னும் ஆதர்சக் கொள்கையின் அடிப்படையில் முன்னேறுவதாகக் காட்டுகிறது. இரண்டு பக்கமும் சேராமல் அதேநேரம் இரண்டில் இருந்தும் ஆதாயம் பெற்றும், இரண்டில் இருந்தும் சில அம்சங்களை இந்தியச் சூழலுக்கு ஏற்ப கையாண்டும் இந்தியாவை விரைவாக முன்னேற்றிவிட முடியும் என்று நம்பிய நேரு, சீன விவகாரத்தில் மிக மோசமான தோல்வியையே சந்தித்தார்.
சீனாவிடம் பட்ட அவமானத்தை பெர்றாண்ட் ரஸ்ஸலுக்கு எழுதிய கடிதத்தில் இப்படிக் குறிப்பிடுகிறார் நேரு:
எந்த நாட்டிற்கும் போரில் ஈடுபாடு இருப்பதில்லை. எங்களுக்கும் அப்படியே. சீனாவுடன் தொடர்ந்து போரிட்டால், அமெரிக்காவும் ரஷ்யாவும் இதில் ஈடுபடக் கூடும். அணு ஆயுதப் போருக்கு இது வழி வகுக்கும்
சில ஆயிரம் சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பிற்காக அணு ஆயுதப் போரில் உலகம் இறங்கும் என்பதால் நாங்கள் எங்கள் இடத்தை விட்டுக்கொடுத்தோம்.”
இது என்ன நிலைப்பாடு?
எந்த முதலாளித்துவத்தை எதிர்த்தாரோ அதே அமெரிக்காவிடம் சீனத் தாக்குதலின்போது நேரு ஆயுத உதவி வேண்டி நின்றார். அந்நாட்களில் இந்தியா அமெரிக்க உதவி கோரி அனுப்பிய தந்திகள் குறித்து நேருவின் உறவினரும் அமெரிக்காவுக்கான இந்தியத் தூதருமான பி.கே.நேரு மனம் வருந்திப் பேசுகிறார்.
சீன விவகாரத்தில் பண்டித நேருவின் செயல்பாடுகளைக் கவனிக்கும்போது அவர் இப்படி எண்ணி இருப்பாரோ என்று தோன்றுகிறது: ‘நம்மால் சீன ஏகாதிபத்திய எண்ணங்களுக்கு எதிராகச் செயல்பட முடியாது; ஏனெனில் இராணுவ பலம் இல்லை. அதே நேரம் சீனாவின் வளர்ச்சிக்கு ஆதரவளித்தால் நமது இரு நாடுகளும் முதலாளித்துவக் கொள்கைகளுக்கு எதிரான நிலைப்பாட்டில் உறுதியுடன் நிற்க முடியும். சீனாவுக்கு .நா.வில் இடம் கிடைக்கவும் உதவி செய்தால் அதனுடன் நல்லுறவு வளரும். ஆசிய நாடுகள் ஒன்றை ஒன்று விழுங்க முயலாது. அத்துடன் பாரதத்தைப் பொருத்த வரை இரு அணிகளிலும் சேராமலும் அதே நேரம் இரண்டுடனும் நல்லுறவு கொண்டு அமைதியான உலகத்தில் நாட்டின் வளர்ச்சியை
முன்னிலைப்படுத்தலாம்.’ அவரது பின்னாளையப் பாராளுமன்றப் பேச்சுக்களில்
இம்மாதிரியான எண்ணம் தென்படுகிறது.
ஆனாலும், இன்று வரை பாரதத்திற்கும் தற்போது தென் சீனக் கடல் பிரதேச நாடுகளுக்கும் அச்சுறுத்தலாய்த் திகழும் சீனா என்னும் கம்யூனிச அடிப்படைவாத நாடு, சிறு செடியாய் முளைத்தபோது அதற்கு நல்ல உரமிட்டு, நீரூற்றி வளர்த்த புண்ணியம் பாரதத்தின் முதல் பிரதமரையே சாரும் என்பதுதான் வருந்தத்தக்க உண்மை. இந்த வகையில் இது பண்டித நேரு செய்த மிகப்பெரிய அரசியல் பிழை.
பகைவனுக்கருள்வாய் நன்நெஞ்சே பகைவனுக்கருள்வாய்என்பதை அடியொற்றி நேரு நடந்தார் என நினைத்து மனதைத் தேற்றிக்கொள்ளவேண்டியதுதான்.
உசாத்துணைகள்:
‘God Who Failed’ – An Assessment of
Jawaharlal Nehru’s Leadership
Madhav Godbole
‘Nehru – A
contemporary’s view’ – Walter Crocker
‘Nehru – A political
biography’ – Judith Brown
Sardar Patels’ Letters
to Nehrù
1962 and the McMahon
Line Saga – Claude Arpi.