சாலைகள் ஒன்றும் ராஜபாட்டையாக இல்லை. ஒரு முதிய நகரம் என்பது அதன் வீதிகளின் அமைப்பில் தெரிந்தது. கார் ஒரு சிக்னலில் நின்றது. ரோட்டோர ப்ளாட்ஃபார்மில் சுழல் நாற்காலி போட்டு காம்பௌண்ட் சுவரில் A4 சைஸ் கண்ணாடி மாட்டியிருந்தார்கள். தாகூர் தாடியுடன் ஒருவர் இளைஞன் ஒருவனுக்கு மீசை மழித்துக்கொண்டிருந்தார். பாதையோர டீக்கடை போல பாதையோர சலூன். கட்டிங் போது பறக்கும் முடி எங்கே போகும்… தரையில் சிதறும் முடி எங்கே பறக்கும் என்ற ஆதார ஐயம் எழுந்தது. சுத்தமான நகரமா? அதேபோல இன்னும் இரண்டு சேர்கள் அதே சாரியில் போட்டிருந்தது. மழைக்கு லீவு விடும் கடைகள்.
அடுத்தடுத்த சிக்னலில் மேலும் சில ஆச்சரியங்கள் கண்ணில்பட்டன. கை ரிக்ஷா இழுத்துக்கொண்டு தேசலான ஒருவர் நின்றிருந்தார். நான் ஃபோட்டோ எடுப்பதைக் கண்டு சிரிப்புடன் ஃபோட்டோவுக்கு நின்றார். கண்களில் அசதியையும் மீறி உழைக்கும் வைராக்கியம் தெரிந்தது. தமிழகத்தில் கை ரிக்ஷாக்கள் எப்போதோ ஒழிக்கப்பட்டுவிட்ட நிலையில், சிவப்பு ஆளும் பிரதேசத்தில் இன்னும் இருப்பது ஆச்சரியமளிக்கிறது. அடுத்து No Refusal என்று மேனியில் எழுதிய வாசங்களுடன் ஓடும் டாக்ஸிக்கள். விஜாரித்ததில், நம்மூரில் ‘இல்ல வராதுப்பா…’ என்று கழன்று கொள்ளும் ஆட்டோ ஆசாமிகள் போலில்லாமல் கூப்பிட்டால் எங்கும் வருவார்களாம்.
மாலை வேளையில் பேலூர் ராமகிருஷ்ண மடம் சென்றேன். ஆறரைக்கு மேல் ராமகிருஷ்ணருக்கு ஆரத்தி நடக்கும். ரொம்பவும் விசேஷம் என்று உள்ளூர் நண்பர் சொன்னார். சாரதா தேவிக்கும் ராமகிருஷ்ணருக்கும் தனித்தனி சன்னிதிகள். கோயில்கள் என்றும் சொல்லலாம். பிரம்மாண்டமான க்ரில் கதவைத் தாண்டியதும் இருபக்கங்களும் மரங்கள் சூழ்ந்திருக்கும் நடைபாதை. தூரத்தில் கொல்லைப்புற வேலிக்கப்பால் ஹூக்ளி நதி ஓடுவது தெரிகிறது. கங்கையின் மேற்குக் கரை அது. புனிதம் நிரம்பியது. காசிக்கு இணையாகப் புகழப்படுவது. சுற்றுப்புற அமைதியில் நாமும் வாயைத் திறக்காமல் நுழைகிறோம்.
சந்திர பிரபை போன்ற மாடங்கள் வைத்து, பத்து படி ஏறி நுழைய வேண்டிய ஒரு அரண்மனை போன்ற தோற்றம். ராஜதர்பார் நடக்கும் இடம் போல உள்ளே இருந்தது. அந்தப் பெரிய அறை, முழுவதும் நிரம்பியிருந்தது. கால் மடக்க முடியாதவர்களுக்காக தூண் ஓரங்களில் பிளாஸ்டிக் முக்காலிகள் கிடந்தன. வயதானவர்கள் கீழே அமர்ந்திருக்க வாலிப வயசில் சிலர் முக்காலி மேல் இருந்தார்கள். எதிரே வெண் பளிங்கு சிலையில் ராமகிருஷ்ணர் தெரிந்தார். ஆரத்தி ஆரம்பிக்கவில்லை. கையில் சிலர் கையடக்க தோத்திரப் புத்தகங்களோடு அமர்ந்திருந்தார்கள். என் பக்கத்தில் கூன் போடாமல் கண் மூடி நிமிர்ந்து அமர்ந்திருந்த இளைஞன் விவேகானந்தரால் ஈர்க்கப்பட்ட நரேந்திரனாக இருக்கக்கூடும்.
ஆறரை மணிக்கு காவியுடையில் தலைமை சன்னியாசி வந்து ஆரம்பித்தார்கள். அதுவரை கோரஸாக பாடியதில் ‘ராம… கிருஷ்ணா…’ மட்டும் எனக்குப் புரிந்தது. ஆனால் அந்த தர்பார் போன்ற அறையில் அத்தனை பேர் குழுமி ஸ்ரீ ராம கிருஷ்ணரின் முன் தியான நிலையில் இருப்பதைப் பார்க்க மிகவும் ஆனந்தமாக இருந்தது. பஜனை கால் மணி நேரம் நடந்தது. பத்ம பீடம் போன்ற இடத்தில் அவரின் சிலாரூபம் அமைந்திருந்தது. அங்கும் சன்னிதி படியிலும் எதிரிலிருக்கும் பூந்தோட்டத்திலும் நின்று செல்ஃபி எடுத்துக் கொண்டாடிய பிரகிருதிகளும் இருந்தார்கள்.
ஆற்றுக்குள் இறங்க அனுமதிக்கவில்லை. எட்டிப் பார்த்து கால் நனைத்து கங்கையின் தங்கை ஹூக்ளியின் புனிதநீரை கையில் அள்ளி ப்ரோக்ஷணம் செய்துகொள்ள ஆசைப்பட்டேன். தக்ஷிணேஷ்வரத்தில் செய்துகொள்ளலாம். அக்கரையில் உள்ளது தக்ஷிணேஷ்வரம் என்று உடன் வந்த உள்ளூர் நண்பர் ஆறுதல் கூறினார். ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் எல்லாக் கிளைகளிலும் ஒரு ஒழுங்கு காணப்படுகிறது. மடத்தின் உள்ளே சுத்தமும் சுகாதாரமும் பேணப்படுகிறது.
தக்ஷிணேஷ்வரம் கோயிலின் உள்ளே மொபைல் மற்றும் எலெக்ட்ரானிக் சாதனங்கள் கொண்டு செல்லக் கூடாது என்று, இறங்கியதும் சொன்னார்கள். உடன் வந்த சாரதியிடம் கொடுத்துவிட்டு உள்ளே சென்றோம். ஸ்ரீராமகிருஷ்ணர் சாரதா தேவியைச் சந்தித்த இடம். பவதாரிணியாக ஸ்ரீமாதா அருளாட்சி செய்யுமிடம். கோயிலின் அருகிலேயே போலிஸ் பூத் இருக்கிறது. உள்ளே நுழையும்போது மெட்டல் டிடக்டெர் வாசலுக்குப் பிறகு பைரவர்கள் படுத்திருந்தார்கள். மிதிக்காமல் உள்ளே நுழைந்தோம்.
ஏழு தாண்டிய முன்னிரவு நேரம். தூரத்தில் பஜனை ஒலி கேட்டது. வங்காள கோரஸுக்கு இதமாக ஜால்ராவும் டோலக்கியின் லயமும் என்னை என்னவோ செய்தது. ஸ்ரீராமகிருஷ்ணர் பவதாரிணியின் சன்னிதியின் எதிரே தியானத்தில் மூன்று நாட்கள் அமர்ந்திருந்தார் என்று எங்கோ படித்தது நினைவுக்கு வந்தது. தனது சொந்த ஊரிலிருந்து நடந்து வந்த சாரதா தேவி தக்ஷிணேஷ்வரத்திற்கு அருகில் வரும்போது ஜுரம் வந்து ஒரு மரத்தடியில் சாய்ந்துவிட்டார்களாம். வயதான மூதாட்டி ரூபத்தில் வந்த பவதாரிணி ஆறுதலாகத் தலையை வருட, ஜுரம் விட்டு, விடுவிடுவென்று தக்ஷிணேஷ்வரம் வந்தார்களாம்.
நெடிய வரிசையில் நின்று கொண்டிருக்கும் போது ஒவ்வொரு கதையாக நினைவில் முட்டியது. யாரும் குறுக்கே புகாமல் நகர்ந்த வரிசை. வரிசையில் நின்று கொண்டிருக்கும் போதே சன்னிதியின் எதிரே இருந்த மண்டபத்தில் பஜனை பாடிக்கொண்டிருந்த குழுவின் மேல் கண்பார்வை படர்ந்தது. எட்டு ஒன்பது பேர் இருப்பார்கள். அனைவரும் சன்னிதி நோக்கி அமர்ந்திருந்தார்கள். குழுவின் எதோ ஒரு ஓரத்திலிருந்து பாடல் எழுந்து பின்னர் அனைவரும் லாவணி பாடினார்கள். நடுவில் அமர்ந்திருந்தவர் வேறொரு உலகத்தில் இருந்தார். கண்கள் சொருகி அவர் கோரஸோடு சேரும்போது இந்த வரிசையை விட்டு நடந்து சென்று அவருடன் அமர்ந்துவிட மாட்டோமா என்ற ஆவல் பிறந்தது. ஸ்ரீராமகிருஷ்ணர் சமாதி நிலைக்குச் சென்றதன் பின்னணி விளங்கியது. ஆகர்ஷணம் நிறைந்த சன்னிதி. நிற்க. இதுவரை நான் பவதாரிணியை தரிசித்ததில்லை.
கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்துகொண்டிருந்த வரிசை அப்படியே நிற்காதா, இன்னும் செவியில் அந்த பஜனாம்ருதம் பாயாதா என்ற எண்ணம் மேலோங்கியது. சன்னிதியை நெருங்கிவிட்டோம். என் முன்னால் சென்ற நண்பர் “ம்… திரும்பிப் பாருங்க…” என்றார். சன்னிதி உள்ளே பார்வை நுழைந்ததும் மேனி சிலிர்த்தது. கறுத்த தேகத்தில் சிகப்பு வஸ்திரத்துடன் மூன்றடியில் நின்ற திருக்கோலம். இரத்த நிறத்தில் வெளியே தொங்கும் நாக்கு. காலடியில் சிவன். அவருக்கும் கீழே ஆயிரம் இதழ் கொண்ட வெள்ளித் தாமரை. கரத்துக்கு ஒரு ஆயுதத்துடன் தசபுஜங்கள். உள்ளே நிற்கும் பாண்டாக்கள் கண்ணில் படவில்லை. சன்னிதியின் வெளிச்சம் தெரியவில்லை. நேரம் காலம் தெரியவில்லை. அந்த உருவத்துக்கு முன்னால் உங்களுக்கு எதுவும் தெரிய வாய்ப்பில்லை. நம்முள் ஏதோ ஒரு இனம் புரியாத அதிர்வு உண்டாகி பரவச நிலையை அடைகிறோம். சில விநாடிகளுக்கு மேல் நம்மால் தொடர்ந்து பார்க்க இயலவில்லை.
வெளியே வந்ததும் ஒரு பெரும் விடுதலை உணர்ச்சி. சுற்றி வரும் பிரகாரத்தில் அதே காளியை ஆளுயர படமாக்கி ஃப்ரேம் போட்டு வைத்திருக்கிறார்கள். பக்தர்கள் தொட்டுத் தொட்டு கும்பிடுகிறார்கள். மண்டபத்தில் பஜனை இன்னமும் தொடர்ந்துகொண்டிருந்தது. அந்தப் பக்கம் கால் இழுத்தது. சம்சார பந்தத்திலிருந்து விடுவிப்பவளாம் இந்தக் காளி. என்னைக் கல்யாணம் செய்து கொள்ளவா இவ்வளவு தூரம் வந்தாய் என்று கேட்ட ஸ்ரீராமகிருஷ்ணருக்கு, ‘இல்லை.. உங்களுடன் சேர்ந்து இம்மனித குலத்திற்கு சேவை புரிய வந்தேன்’ என்று சாரதாதேவி பதிலளித்த இடமாம். தன் அண்ணனிற்குப் பிறகு ராமகிருஷ்ணர் பணிபுரிந்த கோயில் அது.
பிரகாரத்தில் சிறு சிறு சன்னிதிகளில் சிவலிங்கங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கின்றன. அதன் ஓரத்தில் ஹூக்ளி நதியின் கிழக்குக் கரை. ஒரு சின்ன பாதை வழியாக ஹூக்ளிக்கு வருகிறோம். சலசலத்து ஓடிக்கொண்டிருந்தது நதி. கங்கையுடனான எனது முதல் ஸ்பரிஸம். முதலில் காலை நனைப்பதற்குப் பதிலாக குனிந்து ஒரு கை நீரை அள்ளி புரோக்ஷணம் செய்து கொண்டேன். ஜிலீர் என்றிருந்தது. ஒரு படி இறங்கி நின்றபோது மனசு நிறைந்துபோனது.
தக்ஷிணேஷ்வர் கோயில் வாசலில் இரண்டு உணவு விடுதிகள் இருக்கின்றன. பக்தர்களைச் சாப்பிடக் கூவி அழைக்கிறார்கள். பெங்காலியில் அவர்களது கூப்பாடு விசித்திரமாக இருக்கிறது. Autobiography of a Yogi யில் பரமஹம்ஸ யோகானந்தா எழுதிய ஒரு சம்பவம் நினைவுக்கு வந்தது. அவரது சகோதரியின் கணவர் சதீஷ் இறை நம்பிக்கையில்லாதவர். அவரை தக்ஷிணேஷ்வர் கோயிலுக்கு அழைத்துச் சென்றால் மாற்றம் நிகழலாம் என்பது அனைவரது விருப்பமும். அப்படியே அழைத்துச் சென்றார்கள். அவர் கோபத்தில் கூச்சலிட்டார். மேலும் “எனக்கு மதிய உணவு வேண்டும். இல்லையென்றால்… அவ்வளவுதான்…” என்று எச்சரித்தார். “அன்னை காளி அருளுவாள். கவலையில்லை. வாருங்கள்” என்று அழைத்துச்சென்றார் யோகானந்தா.
யோகானந்தா தியானத்தில் மூழ்கிவிடுகிறார். கோயில் நடை சார்த்தும் வேளை வந்துவிட்டது. சதீஷ் குதியாய்க் குதிக்கிறார். நிஷ்டையில் யோகானந்தா. கடைசியில் கண் விழித்துப் பார்த்த போது சதீஷ் எதிரில் நின்று “கோயிலும் சார்த்திவிட்டார்கள். என் சாப்பாட்டில் மண் அள்ளிப் போட்டுவிட்டாய்… உன்னோடு கோயிலுக்கு வந்ததன் பலன்” என்று எகிறினார். அப்போது அக்கோயிலின் பாண்டா பொறுமையாக பரமஹம்ஸ யோகானந்தரிடம் வந்தார். “உங்களிடம் ஒரு தீட்சண்யம் இருக்கிறது. உங்களைப் பார்த்தவுடனேயே நான் உங்கள் குடும்பத்திற்கான உணவை தனியே எடுத்து வைத்திருக்கிறேன். இது அன்னைக் காளியின் அனுக்ரஹம்” என்றார். சத்தமிட்ட சதீஷின் முகம் வெளிறியது. அவர் குலுங்கிக் குலுங்கி அழுகிறார்.
தக்ஷிணேஷ்வரத்தில் ஏற்கெனவே மணி எட்டரை ஆகியிருந்தது. அன்று அமாவாசை. காலிகட்டில் பதினோறு மணி வரை கோயில் திறந்திருக்கும் என்று அழைத்துச் சென்றார் நண்பர். இந்த காலிகட் என்ற பெயரை வைத்துதான் இந்த நகரம் கல்கத்தா என்றழைக்கப்பட்டதாம். கங்கையின் கிளை நதியான ஹூக்ளி (பாகீரதி என்றும் அழைக்கப்படுகிறது)யின் கரையோரத்தில் அமைந்த கோயிலாதலால் காலிகட். நாட்கள் செல்லச் செல்ல நதி ஓரம் போனது என்று சொல்கிறார்கள். இப்போது ஒரு சின்னக் கால்வாய் போல ஒன்று ஓடி ஹூக்ளியில் கலக்கிறது. இதற்கு ஆதி கங்கா என்று பெயர். ஒரு சீனியர் பாண்டாவுக்குச் சொல்லி வைத்திருந்தார் நண்பர். கோயில் என்றால் நீங்கள் நினைப்பது போல பெரிய கோபுரமெல்லாம் இல்லை.
கோயிலைச் சுற்றிலும் கடைகள். எல்லாக் கடைகளிலும் பேடா விற்கிறார்கள். நம்மூர் பெருமாள் கோயில்களில் கல்கண்டு நெய்வேத்யம் செய்வது போல இங்கே பேடா நெய்வேத்யம். சீனியர் பாண்டாவுக்கும் ஒரு கடை இருந்தது. சன்னிதிக்குப் பின்னால் இருந்தது அந்தக் கடை. ஒரு தெருநாய் ஈ மொய்க்கக் காலைப் பரப்பி படுத்திருக்க பக்கத்தில் நான்கு பேர் மும்முரமாகச் சீட்டு விளையாடிக்கொண்டிருந்தார்கள். மணி ஒன்பதரை. கோயிலென்ற புனிதத்தலத்திற்கான அறிகுறியெல்லாமில்லை. சிவப்பு அரளி போன்ற மாலை ஒன்றை வாங்கிக்கொண்டோம். சீனியர் பாண்டா உள்ளே அழைத்துச்சென்றார். ஒரு மரத்தடியில் காளியின் திருமுகம் காட்சியளித்தது. விழிகளும் நெற்றியில் பொட்டும் சிவப்பாக இருந்தது. நாக்கு தங்கத்தில் வெளியே தொங்கியது. கிட்டத்தட்ட மயிலை முண்டகக்கண்ணியம்மன் போல ஒரு சொரூபம்.
என் கையில் மலர்களைக் கொடுத்து ”ஸர்ப்ப…” என்று ஆரம்பித்த பாண்டாவை உற்று நோக்கிக்கொண்டிருக்கும் போதே “மங்கள…” என்றார். புரிந்துகொண்டேன். “ஸர்வ மங்கள மாங்கல்யே…”வை நானே தொடர்ந்தேன். நான் ஆரம்பிக்க அவர் நிறுத்திக்கொண்டார். மந்திரம் சொல்லி அந்தப் புஷ்பங்களை ஜெகன்மாதாவின் பாதாரவிந்தங்களில் சமர்ப்பித்தேன். ஹோமகுண்டத்திலிருந்து எடுத்த கருஞ்சாந்தை என் நெற்றியில் தரித்துவிட்டார் பாண்டா. குனிந்து அதை ஏற்றுக்கொள்ளும் போது காளியை ஓரக்கண்ணால் பார்த்தேன். ஹப்பா! ஒரு படபடப்பு வந்தது. அருட்கடாக்ஷம் மிகுந்த தெய்வம் என்பதை உணர்ந்தேன்.
காளிக்குப் பின்னால் சிவன் சன்னதி ஒன்று இருந்தது. கண்ணப்ப நாயனார் கட்டிப் பிடித்துக் களித்தது போல, ஒரு பெண்மணி லிங்கத்தைக் கட்டிப்பிடித்தபடி இருந்தார். அவரை நகர்ந்துகொள்ளச் சொல்லி ஸ்வாமி கும்பிடுவதில் எனக்கு இஷ்டமில்லை. கன்னத்தில் போட்டுக்கொண்டு நகர்ந்தேன்.
வெளியே சீட்டுக்கச்சேரி இன்னமும் தொடர்ந்துகொண்டிருந்தது. நாயின் உறக்கம் கலையவில்லை. இன்னமும் சில கடைகள் திறந்திருந்தன. காலைத் தட்டி பிச்சை கேட்பவர்கள் சிலர் இன்னமும் விழித்திருந்தார்கள். மூடிய கடையின் வாசலில் அடுப்பு மூட்டி உணவு தயார் செய்துகொண்டிருந்த புல்லாக்கு அம்மணிக்கு இரண்டு பிள்ளைகள் போலிருக்கிறது. கட்டாந்தரையில் சேலையை விரித்து தலைக்கு முண்டாசு போல சுருட்டியிருந்தார். இரண்டும் கைகோர்த்து அதன் மேல் தலைவைத்துத் தூங்கிக்கொண்டிருந்தது. தாயே மா காளி! இவர்களைக் காப்பாற்று.
Jai Mata Di!