கல்யாண மண்டபத்தில் ‘மணமகன்’ அறையில் நான், அம்மா, அப்பா மூவரும் அமர்ந்திருந்தோம். உள்ளே குளியலறையில் அண்ணன்.
“என்னை எல்லாரும் அவமானப்படுத்தினா நான் கிளம்பி வேணும்னா போயிடுறேன்” என்றார் அப்பா.
“போயிட்டா பரவாயில்லையே” என்றான் அண்ணன் உள்ளிருந்து.
வெளியே நாதஸ்வரச் சத்தம் கேட்டது. நிச்சயதார்த்தத்திற்கு அதிக நேரம் இல்லை.
“எல்லா வீட்லயும் புருஷன் சொன்னா கேக்குற பொண்டாட்டி உண்டு” என்றார் அப்பா விரக்தியுடன்.
எனக்கு ரத்தம் கொதித்தது.
“எதுக்கு அம்மாவ இழுக்குற?” என்று கத்தினேன். “அவ என்ன பண்ணா உனக்கு?”
“டாய், நீ சும்மா இர்ரா,” என்றான் அண்ணன் உள்ளிருந்து. “நீ ஒண்ணும் அம்மாவக் காப்பாத்த வேண்டாம்.”
சற்று நேரத்தில் அண்ணன் வெளியே வரும் போது அப்பா அம்மாவிற்குப் பின்னால் ஒளிந்து கொண்டிருந்தார். அண்ணன் என்னை நோக்கிப் பாய்ந்தான். அவன் என் சட்டையைப் பிடிக்கும் தருணம் யாரோ கதவைத் தட்டினார்கள்.
ஐயர்.
“புஷ்பம் கொஞ்சம் வேணும்; அப்புறம் ரெண்டு தாம்பாளம்…” என்று இழுத்தார். அப்பா இன்னும் அம்மா பின்னால். அண்ணன் அவனே பார்த்து வாங்கிய என் புதுச் சட்டையில் இருந்து கையை எடுத்தான்.
*
ஏழாம் வகுப்பு விடுமுறையில் திருவாரூர் சென்றிருந்தோம். அங்கே பஸ் ஸ்டாண்டில் நல்ல கூட்டம். எதிர் வெயில். பஸ்சும் வரவில்லை. அப்பாவுக்குக் கொஞ்சம் கொஞ்சமாக ஸ்ருதி ஏறிக் கொண்டிருந்தது.
அந்த நேரத்தில், ஒருவேளை பஸ் வந்தால் நான் ஜன்னலோரமா இல்லை அண்ணனா என்று ஒரு சிறு தகராறு தொடங்கியது. அங்கேயே வழக்கம் போல கத்திக் கொண்டோம்.
யாரும் எங்களைக் கவனிக்கக் கூட இல்லை. அப்பா இதுபோன்ற தகராறுகளை பொதுவாக இருவரையும் நாலு சாத்துச் சாத்தித் தீர்த்து வைப்பார். அன்றும் அதே போல நடு பஸ் ஸ்டாண்டில் செய்யப் போய் சுற்றி இருந்தவர்கள் ஒரு மாதிரி சிரிக்கத் தொடங்கி விட்டார்கள்.
அம்மா தள்ளிப் போய் நின்று கொண்டாள்.
இந்தச் சம்பவத்திற்குப் பின்னால் எங்கள் குடும்ப அடிதடிகள் வீட்டிற்குள்தான் என்று முடிவெடுத்து கஷ்டப்பட்டுச் செயல்படுத்தியும் வந்தோம். நாலு பேராக வெளியே கல்யாணம் கார்த்தி என்று போனால் உறவினர் வீட்டில் தங்க மாட்டோம் – தனியாக ஓட்டலில் அறை எடுத்து அடித்துக் கொள்வோம்.
*
நிச்சயதார்த்தம் முடிந்து எல்லோரும் குலாவிக் கொண்டிருந்த நேரம். அண்ணன் அண்ணியுடன் போஸ் கொடுத்துக் கொண்டிருந்தாலும் அவ்வப்போது எங்களைப் பார்த்துக் கொண்டான். எங்கள் நால்வருக்குள்ளும் ஒரு இனம் தெரியாத பதற்றம் இருந்தது.
அப்பா, திடீரென்று என்னைக் கூப்பிட்டார். அண்ணனின் மாமனார் ஏதோ கேட்க வேண்டுமாம்.
“தம்பி எங்க இஞ்சினீர் படிச்சீங்க?” என்றார் அண்ணனின் மாமனார்.
அவர் பேசுவது முனகுவது போல இருந்தது. குரலே மேல் எழும்பவில்லை.
“திண்டுக்கல்” என்றேன்.
அவர் திரும்பி தம் மனைவியிடம் ஏதோ முனகினார். அந்த அம்மையார் என்னைப் பார்த்து அதைவிட சன்னமான குரலில் ஏதோ கேட்டார்கள். அவர் முகத்தில் சாந்தம் தவழ்ந்தது.
நான் அவர்களிடம் விடுபட்டு அண்ணன் அருகில் போனேன்.
“என்னடா அவங்க குடும்பம் இப்பிடி இருக்காங்க?” என்றேன்.
அவன் முதலில் பல்லைக் கடித்தான். பிறகு, அண்ணியைக் கண்ணால் காட்டி, “இவ அதுக்கு மேல” என்றான்.
*
பண்டிகை தினங்கள் வருவதற்குச் சில நாட்கள் முன்னாலே சிறு சிறு சச்சரவுகள் எங்கள் வீட்டில் தொடங்கும். முறுக்கு போடவா வேண்டாமா என்பதில் இருந்து பல வேறுபட்ட கேள்விகளில் முட்டிக் கொள்வோம். அப்பா ஏதாவது காரணம் சொல்லி ஓடிப் போக முயற்சி செய்வார்.
சென்னை மாற்றல் ஆகி வந்த இரண்டாவது நாள், அருகில் இருந்த வீடுகளில் சில பெண்கள் வீட்டுக்கு வரவேற்க வந்தார்கள். “என்ன ஹெல்ப் வேணா கேளுங்க” என்றெல்லாம் சொல்லிப் போனார்கள்.
ஆனால் நாங்கள் அவர்களைக் கவனிக்கும் நிலையில் இல்லை – ஏனென்றால் மறுநாள் பொங்கல்.
மறு நாள் காலை, அப்பா, “இந்த ஊர்லயாவது என்ன நீங்க எல்லாரும் மரியாதையோட நடத்தலன்னா…” என்று எங்களிடம் புலம்பினார்.
பல்லைக் கடித்துக் கொண்டு மாலை வரை தள்ளி விட்டோம். நான் உள்ளே குளிக்கப் போயிருந்தேன். திடீரென்று வெளியே கூச்சல், குழப்பம். அண்ணன் கத்துவது கேட்டது.
அரைகுறையாக வெளியே வந்து பார்த்தால் அப்பா “நான் போறேன், நான் மகாபலிபுரம் போறேன்” என்று பனியன் போட்டுக் கொண்டிருந்தார். அண்ணன், “எங்க போற? நான் கொடுக்கற பணத்துலதான இப்போ வீடு நடக்குது?” என்று பனியனைத் தாவி பிடித்தான். பனியன் டர்ரென்று கிழிந்தது. நானும் ஓடிப் போய்க் கலந்து கொண்டேன்.
யாரோ நடுவே காலிங் பெல் அடித்து விட்டுச் சிரித்தபடி ஓடிப் போனார்கள். அன்று சண்டை முடிந்த போது அக்கம்பக்கத்தில் எல்லோருக்கும் எங்கள் லட்சணம் தெரிந்து விட்டிருக்கும்.
*
திருமணம் முடிந்து விட்டது. அண்ணன் வீட்டிற்கு அண்ணியுடன் வந்துவிட்டான். ஆரத்தி எல்லாம் எடுத்து அழைத்து வந்து விட்டார்கள்.
அண்ணிக்கு அவள் அப்பாவுக்கு மேல் சன்னமான குரல். ஏதாவது வெளியே பட்டாசு வெடித்தால் திடுக்கிட்டு எங்களைப் பார்ப்பாள்.
ஒருநாள் அவள் உள்ளே இருந்தபோது, நாங்கள் நால்வரும் ஒரு மீட்டிங் போட்டோம்.
“எவ்ளோ நாள் தாங்குமோ தெரியாது” என்றாள் அம்மா. “எல்லாரும் சுமுகமா இருக்கும் போதே, நீ தனி வீடு பார்த்திட்டுக் கிளம்பிடு.”
“ஆமா, நீ போயிடு” என்றேன் நான்.
அண்ணன் என்னைச் சந்தேகத்துடன் பார்த்தான். “ஏன்? நீங்க எல்லாம் போங்களேன்?” என்றான்.
“நான் ஏன்டா என் வீட்ட விட்டுப் போகணும்?” என்றார் அப்பா.
“உன் வீடா? இது அம்மா வீடும்தான்” என்று கத்தினேன் நான்.
உள்ளே இருந்து அண்ணி கதவைத் திறக்கும் சத்தம் கேட்டது. எல்லோரும் அமைதியானோம்.
அண்ணி ஹாலிற்கு வந்தாள். “பஜ்ஜி பண்ணவா?” என்று மெதுவாகக் கேட்டாள்.
எங்களுக்கு அவளைப் பார்த்துப் பாவமாக இருந்தது.
*
அண்ணன் தீவிரமாகவே வீடு பார்த்தான். ஆனால் அதில் அவனுக்கு நஷ்டம்தான். அதற்கு நடுவில் அண்ணி அக்கம்பக்கத்தாருடன் நிறையப் பேசாமல் அம்மா பார்த்துக்கொண்டாள்.
“அவங்க எல்லாம் பயங்கர லோ கிளாஸ்” என்று அண்ணியிடம் சொல்லி வைத்தாள்.
அண்ணியுடன் பழகிப் பழகி நாங்கள் எல்லோரும் கூட கொஞ்சம் மெதுவாகப் பேசினோம். அவ்வப்போது நான் அண்ணனைப் பார்த்து புன்னகைப்பேன். அவனும் பதிலுக்கு. ஒரு வேளை நாங்கள் பயந்தது போல மானத்தை வாங்கிக் கொள்ள மாட்டோமோ என்று கூட நினைத்தேன்.
ஆனால் நடுவில் தீபாவளி இருந்தது.
தலை தீபாவளி என்பதால் அண்ணன் மாமனார் வீட்டிற்குப் போக வேண்டியது. ஆனால் அவர்கள் அமெரிக்கா போய் விட்டார்கள். நாங்கள் எல்லோரும் ஏர்போர்ட் போய் அனுப்பி வைத்தோம். கையைக் கூட மெதுவாக ஆட்டியபடி போய்ச் சேர்ந்தார்கள்.
தீபாவளியன்று காலை முறுக்குச் சாப்பிட்டபடி நான் டி.வி பார்த்துக் கொண்டிருந்தேன். அண்ணன் அங்கிருந்து வந்தான்.
“அணைடா, காலங்காத்தால” என்று ரிமோட்டை எடுத்தான். பிறகு பயத்துடன் என்னைப் பார்த்தான்.
நான் அமைதியாகத் தலையாட்டி விட்டு எழுந்து போனேன்.
*
இரவு வரை அமைதி நிலவியது. சாப்பிடும் போது எல்லோரும் ஜோக் அடித்தபடி சாப்பிட்டோம்.
“மோர் எடு,” என்றான் அண்ணன்.
“அவனையே ஏண்டா எடுக்கச் சொல்ற,” என்று சிரித்தாள் அம்மா.
“ஏன்?” என்று கேட்டாள் அண்ணி, மெல்லிய குரலில். “மோர் பிடிக்காதா?”
நான் வெட்கத்துடன் தலையாட்டும் போது அண்ணன் எட்டி மோரை எடுத்தான். அது என் தட்டில் இரு துளிகள் விழுந்தன.
“என்னடா இது?” என்றேன்.
“சும்மா” என்றான்.
நான் தட்டையே பார்த்தேன். என் ரத்தம் கொதித்தது.
“ஹா ஹா” என்று கையை உதறினேன். அவன் முகம் முழுவதும் சோறு தெறித்தது.
“டாய்” என்று கத்தினான் அண்ணன்.
“சும்மா” என்றேன் நான்.
“படுபாவிகளா, படுபாவிகளா” என்று கத்தினாள் அம்மா.
“இதான், இதான், புருஷனுக்கு மரியாதை கொடுக்காட்டி, இப்படித்தான்” என்றார் அப்பா.
“இந்த மண்ணுக்குத்தான் நான் அப்பவே இவ அப்பன், அந்தாளு வீட்டுக்குப் போறேன்னேன்” என்றான் அண்ணன், முகத்தைத் துடைக்காமல்.
“கிளம்பு நீ முதல்ல” என்று நான் சொல்லத் தொடங்கினேன்.
ஆனால், இதுவரை நாங்கள் கேட்காத குரல் ஒன்று கேட்டது.
“எங்க அப்பன், அந்தாளா?” என்றாள் அண்ணி.
அண்ணன் திருதிருவென்று முழித்தான்.
“வந்து…”
“எங்க அப்பனா, அவரு? அந்தாளா?” என்றாள் அண்ணி மறுபடி. அவள் குரல் கிட்டத்தட்ட இரண்டு ஸ்தாயிகள் உயர்ந்திருந்தது.
நாங்கள் எல்லோரும் வெலவெலத்துப் போய் அண்ணியைப் பார்த்தோம்.
“நீ ஏண்டி என் புள்ளைய பாத்து இப்படிக் கத்துற?” என்று கத்தினாள் அம்மா.
‘டணார்’ என்று அண்ணி கையில் இருந்து ஒரு பாத்திரம் பறந்து சுவரில் மோதி விழுந்தது.
“புள்ளையாம் புள்ள, வளர்த்து வச்சிருக்கற லட்சணம்தான் தெரியுதே” என்று அலறினாள் அண்ணி.
அவர்கள் இருவரும் மாறி மாறி கத்திக் கொள்ளும் பொழுது, நான், அப்பா, அண்ணன் மூவரும் திகைத்து ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டோம்.
அண்ணன் முகத்தில் சிறு நிம்மதி தெரிந்தது.
*