Posted on 1 Comment

சைவ மாத இதழ்கள் – 19ம் நுாற்றாண்டின் இறுதி மற்றும் 20ம் நுாற்றாண்டின் தொடக்கம் – ஓர் அறிமுகம்-எஸ்.சொக்கலிங்கம்

தமிழில்
வெளியான, வெளியாகும் தினசரி, வார, இருவார, மாத மற்றும் பருவ இதழ்கள் பற்றி நிறைய ஆய்வுகள்
மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவற்றில் பெரும்பாலானவை இலக்கிய இதழ்களைப் பற்றியும் அரசியல்
இதழ்களைப் பற்றியும் மேற்கொள்ளப்பட்டவையே. அரிதிலும் அரிதாக, கலை, அறிவியல் உள்ளிட்ட
இதழ்களைப் பற்றியும் ஆய்வுகள் நடந்துள்ளன

ஆனால்,
சமயம் சார்ந்தும், சாதிகள் சார்ந்தும் வெளியான இதழ்கள் குறித்து விரிவான தளத்தில்,
பரந்து விரிந்த பார்வையில் இதுவரை ஆய்வுகள் நடந்ததாகத் தெரியவில்லை. சைவ சமயம் தொடர்பாக
19ம் நுாற்றாண்டு தொடங்கி இப்போது வரை வெளியாகும் மாத இதழ்களைப் பற்றி கடந்த ஓராண்டாக
நான் ஆய்வு மேற்கொண்டு வந்தேன். ஆய்வில் 10 சதவீதமே கடந்துள்ள நிலையில், அதைப் பற்றிசில
கருத்துக்களைப் பகிர்ந்து கொள்கிறேன்.
19ம்
நுாற்றாண்டின் தொடக்கத்தில் அச்சுப் பதிப்புகள் மூலம் கருத்துக்களை வெளிப்படுத்தும்
முறை பரவலான பின், யாழ்ப்பாணத்திலும் தமிழகத்திலும் பல சைவ மாத இதழ்கள் வெளியாகத் தொடங்கின.
இலங்கை
இதழ்கள்
எச்.எம்.
சின்னத்தம்பி என்பவரை ஆசிரியராகக் கொண்டு, 1877ல் வெளியான இலங்கை நேசன்தான் யாழின்
முதல் சைவ இதழ். இலங்கை நேசனில் ஆறுமுக நாவலரும் எழுதியுள்ளார். 1882ல் சரவண முத்துப்பிள்ளை
ஆசிரியராக இருந்து தொடங்கிய சைவ உதயபானு, சைவப் பிரகாச சமாஜத்தால் கொழும்பில் இருந்து
வார இதழாக வெளிவந்தது. The Sivite Rising Sun என்ற ஆங்கிலப் பெயரையும் கொண்டிருந்த
சைவ உதயபானு, வண்ணார்பண்ணையில் இருந்து வெளியானது. 1884 வரை வெளியான இந்த இதழ், அதன்
பின் எப்போது நிறுத்தப்பட்டது எனத் தெரியவில்லை. 1888ல் யாழ்ப்பாணத்தில் சைவ பரிபாலன
சபை தொடங்கிய போது, இந்து சாதனம் என்ற இதழை அச்சிடுவதற்காக சைவ உதயபானுவின் அச்சு
இயந்திரங்கள் யாழுக்கு அனுப்பப்பட்டன. சைவ சமாஜம், சைவ உதயபானுவின் தொடர்ச்சியே சைவ
பரிபாலன சபை மற்றும் இந்து சாதனம் என்கிறார், நுாலக நிறுவனர் கோபிநாத்.
1882ல்
மூத்த தம்பிச் செட்டியாரை ஆசிரியராகக் கொண்டு வெளியான விஞ்ஞானவர்த்தனி, ஞானசபாபதிப்
பிள்ளையை ஆசிரியராகக் கொண்டு வெளியான சைவாபிமானி போன்றவை முக்கிய சைவ இதழ்களாக விளங்கின.


1908ம்
ஆண்டு யாழ்ப்பாணத்தில் சி.தாமோதரம் பிள்ளையால் (சி.வை.தாமோதரம் பிள்ளை அல்லர்) தொடங்கப்பட்டு
மாதம் இருமுறையாக வெளிவந்ததுதான் ஞானசித்தி இதழ். பின்னர் தமிழகத்தில் இருந்தும் இந்த
இதழை வெளிக் கொண்டு வந்தார். தேவகோட்டை சிவாகம சித்தாந்த பரிபாலன சபையில், போதக
ஆசிரியராக இருந்து, 1919ம் ஆண்டு, அக்டோபர் 31ம் தேதி மறைந்தார். இந்த ஞானசித்தியில்
சைவ சமய உண்மைகள் பல அறுதியிட்டு ஆகமப் பிரமாணங்களுடன் வெளியாகின. இந்த தகவல்கள், பிற்காலத்தில்
தமிழகத்தில் வெளியான பல சைவ இதழ்களில் தொடர்ந்து மறுபிரசுரம் செய்யப்பட்டன.
1889ம்
ஆண்டு முதல் இந்து சாதனம் வெளியாகி வருகிறது. இடையில் சில ஆண்டுகள் நிறுத்தப்பட்டிருந்தது.
2017ம் ஆண்டு முதல் நீர்வை மயூரகிரி சர்மாவை ஆசிரியராகக் கொண்டு புதுப்பொலிவுடன்
வெளிவருகிறது. இந்த இதழின் ஆங்கிலப் பதிப்பு Hindu Organ என்ற பெயரில் தனி இதழாகவும்
சில காலம் வெளியானது. ஆரம்ப காலங்களில் நல்லுார் த.கைலாசப்பிள்ளை போன்றோர் இந்து
சாதனத்தில் எழுதி வந்துள்ளனர்.
இவை
தவிர, 20ம் நுாற்றாண்டின் தொடக்கத்தில், 1908ல் சைவ சூக்குமார்த்த போதினி, 1910ல்
சைவ பாலிய சம்போதினி, 1924ல் சைவ சித்தாந்த பானு ஆகிய இதழ்கள் தோன்றி சில ஆண்டுகளில்
மறைந்துள்ளன
தமிழகத்தில்
சைவ இதழ்கள்
சித்தாந்த
ரத்நாகரம்
சைவ
சித்தாந்தசண்ட மாருதம் சூளை சோமசுந்தர நாயகர் தொடங்கிய சித்தாந்த ரத்நாகரம் என்ற
இதழ்தான் தமிழகத்தில் முதன் முதலாக அறியப்படும் சைவ இதழ். இது மாத, வார இதழ்களைப் போல்
அல்லாமல், ஒரு பெரிய நுாலைப் பல பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு சஞ்சிகைகளாக அதாவது பாகம்
பாகமாக வெளிவந்தது. அதில்தான் நாயகர் தனது பல நுால்களையும் தொடர் கட்டுரைகளாக எழுதி
வெளியிட்டார். அவற்றுக்கான மறுப்பு எழுந்த நிலையில் அதற்கான பதில்களையும் அந்த அந்த
இதழ்களிலேயே பதிவு செய்தார். பின்னாட்களில் அவை தொகுக்கப்பட்டு நுால்களாக வெளிவந்தன.
நாயகர்
மட்டுமின்றி அவரது சீடர்கள் எழுதிய நுால்களும், கட்டுரைகளும் சித்தாந்த ரத்நாகரம் இதழில்
அவர்கள் பெயருடனோ அல்லது  நாயகரின் பெயருடனோ
வெளியாகின.
ஞானாமிர்தம்
யாழ்ப்பாணத்து
வடகோவைச் சபாபதி நாவலர் அவர்கள், சென்னையில் தொண்டை மண்டல வேளாளப் பிரபுக்களின் உதவி
மற்றும் ராமநாதபுரம் மன்னர் பாஸ்கர சேதுபதியின் நிதியுதவியால், சென்னையில் சித்தாந்த
வித்தியாநுபாலன அச்சியந்திர சாலை அமைத்து அங்கிருந்து சர்வதாரி வருஷம் வைகாசி மாதம்
முதல் அதாவது 1888ம் ஆண்டு மே மாதம் முதல் ஞானாமிர்தம் என்ற மாத இதழை வெளியிட்டு வந்தார்.
போதிய நிதியுதவி கிடைக்காததால், 1889ம் ஆண்டு மார்ச் மாதத்தோடு ஞானாமிர்தம் நின்று
விட்டது. இதழ் நிறுத்தப்பட்டதை அறிந்த சேதுபதி மன்னர், மீண்டும் முன்பணம் கொடுத்ததால்,
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, 1891ம் ஆண்டு கர வருஷம் கார்த்திகை மாதம் முதல் சிதம்பரத்தில்
இருந்து வெளியாகத் தொடங்கியது.



ஞானாமிர்தம்
இதழ் வெளியாக, 1891ம் ஆண்டு கர வருஷத்திற்கு 360 ரூபாய் மற்றும் 1892ம் ஆண்டுநந்தன
வருஷத்திற்கு 300 ரூபாயை சேதுபதி மன்னர் நன்கொடையாக வழங்கியுள்ளார். இந்த நிதியுதவியை
வைத்து மட்டுமே இரண்டு ஆண்டுகள் ஞானாமிர்தம் மாதாந்த இதழாக வெளிவந்துள்ளது. இந்தத்
தகவலை 1892ம் ஆண்டு நந்தன வருஷம்கார்த்திகை மாதம் வெளியான ஞானாமிர்தம் இதழில் நாவலர்
தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஞானாமிர்தம்
இதழில்,சித்தாந்த சைவ போதம், திராவிடப் பிரகாசிகை, ஜகத்குரு விசாரம் என்ற தலைப்புகளில்
தொடர் கட்டுரைகள் வெளியாகின. இவற்றில் திராவிடப் பிரகாசிகை பின்னாளில் தனி நுாலாக
வெளியானது. இதுவே தமிழில் இலக்கிய வரலாறு எழுதுவதற்கான முன்னோடி நுால் என்பார் கார்த்திகேய
சிவத்தம்பி.
வேறு
எந்த மாத இதழ்களிலும் காணக் கிடைக்காத வகையில், ஞானாமிர்த இதழில்தான், இதழில் இலக்கணம்,
இதழாசிரியரின் இலக்கணம், இதழைப் படிப்போரின் இலக்கணம் என மூன்றையும் குறிப்பிட்டு
தனித்தனி கட்டுரைகள் வரைந்தார் நாவலர். இன்று படிப்பதற்கு வித்தியாசமாக இருந்தாலும்
அன்று இதழ்கள் வளர்ந்து கொண்டிருந்த நிலையில் இதுபோன்ற வரையறைகள் தேவையாக இருந்தன
என்பதை யூகிக்க முடிகிறது.
ஞானபானு
ஞானபானு
என்ற பெயரில் 19ம் நுாற்றாண்டிலும், 20ம் நுாற்றாண்டிலும் பல மாத இதழ்கள் வெளியாகியுள்ளன.
பொதுவாக இதழியல் வரலாற்றில், ஞானபாநு என்று சொன்னால் அது விடுதலைப் போராட்ட வீரர்
சுப்பிரமணிய சிவா நடத்தி வந்த இதழையேகுறிக்கிறது. ஆனால், காஞ்சிபுரத்தைச் சேர்ந்த,
சித்தாந்த போத ரத்னாகரம், வைதிக சைவ சித்தாந்த போத ரத்னாகரம் முதலிய பட்டங்களைப்
பெற்ற காஞ்சி ஆலால சுந்தரம் பிள்ளை, ஞானபானு என்ற தலைப்பில் ஒரு மாத இதழை நடத்தி வந்தார்.
மற்ற
சைவ இதழ்களில் இருந்து இந்த இதழ் முற்றிலும் மாறுபட்டதாக விளங்கி வந்தது. அநேகமாக இவர்தான்,
சைவ இதழியல் உலகில் முதன் முதலில் தலையங்கம் எழுதத் தொடங்கியவர் எனலாம். இவரது குரு,
காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஏகாம்பர சிவயோகிகள். இவர், சைவ சித்தாந்த சண்ட மாருதம் சூளை
சோமசுந்தர நாயகருக்கு மாமன் முறை உள்ளவர். ஆலால சுந்தரம் பிள்ளையும் யோகிகளுக்கு
உறவினர்தான். ஆரம்பத்தில் ஆதிசங்கரரின் அத்வைதத்தி்ன்பால் ஈர்ப்புக் கொண்டு, அச்சுதாநந்த
சுவாமிகள் என்ற பெயரில் விளங்கிய யோகிகள், ஒரு கட்டத்தில் சைவ சித்தாந்தத்தின்பால்
ஈர்க்கப்பட்டு தனது பெயரையும் ஏகாம்பர சிவயோகிகள் என மாற்றிக் கொண்டார்.
அவரிடம்
சைவ சித்தாந்தப் பாடம் பயின்ற பிள்ளை, அன்றும் இன்றும் வேறெந்த சைவ இதழ்களிலும் வெளிவராத
அத்வைத சம்பிரதாய நுால்களான ஞானவாசிட்டம், பகவத் கீதா சாரம், சைவ, வைணவ தல வரலாறுகள்,
தமிழிலும் ஆங்கிலத்திலும் பழமொழிகள், தாயுமானவரின் பாடல்களுக்கு உரைகள், சூதசங்கிதைக்கு
உரை, புராணங்கள், விரத நிர்ணயங்கள் என பல பரிமாணங்களில் சைவ உண்மைகளை எடுத்துரைத்து
வந்தார்.
இவற்றில்
அத்வைத சம்பிரதாய நுால்களின் உரைகளின் இறுதியில், சைவ சித்தாந்தத் தெளிவு என்ற தனித்
தலைப்பில் அந்த நுால்களுக்கு சைவ சித்தாந்த ரீதியில் விளக்க உரை எழுதியிருப்பார்.
4ம் இதழிலில், தான் ஏன் அத்வைத சம்பிரதாய நுால்களுக்கு உரை எழுதினோம் என தலையங்கத்தில்
விளக்கியிருப்பார்.
சிவஞான
போதத்திற்கு மாதவச் சிவஞான சுவாமிகள் எழுதிய மாபாடியம் அச்சாவதற்கு முன்பே, ஏகாம்பர
சிவயோகிகளிடம் கேட்டறிந்தபடி, சிவஞானபோத நுட்பம் என்ற தலைப்பில் சிவஞானபோதத்திற்கு
விளக்க உரை எழுதி அதை ஞானபானுவில் முதல் கட்டுரையாக இடம்பெறச் செய்தார் பிள்ளை.
ஆங்கில
அரசை வாழ்த்தியும், கோயில்களில் தர்மகர்த்தாக்கள் எப்படி செயல்பட வேண்டும், தாயுமானவ
சுவாமிகளுக்கு உரை எழுதிய அத்வைதிகள் திருவாசகத்திற்கும் உரை எழுத முற்பட்டதைக் கண்டித்தது,
கடல் பிரயாணம் மேற்கொண்ட பிராமணர்களை சடங்குகள் மூலம் சுத்திகரித்து மீண்டும் தங்கள்
சமுதாயத்திலேயே பிராமணர்கள் சேர்த்துக் கொண்டது என பல தலைப்புகளில் விரிவான தலையங்கங்களை
எழுதியுள்ளார் காஞ்சி ஆலால சுந்தரம் பிள்ளை. துரதிர்ஷ்டவசமாக ஞானபானு இதழின் முழு வெளியீடுகளும்
தற்போது கிடைப்பதில்லை, அங்கொன்றும் இங்கொன்றுமாக தனிநபர் சேகரிப்பில் பாதுகாக்கப்பட்டு
வருகின்றன.
சித்தாந்த
தீபிகை
தமிழிலும்
ஆங்கிலத்திலும் சைவ சித்தாந்த உண்மைகளை வெளிக் கொணர வேண்டும் என்ற ஆசையால், ஜே.எம்.நல்லசாமி
பிள்ளையால், 1897 ஜூன் மாதம்சித்தாந்த தீபிகை தொடங்கப்பட்டது. தமிழில் ஓராண்டு மட்டுமே
வெளிவந்த இந்த இதழ், பின்னர் 1911ம் வரை ஆங்கிலத்தில் முழுமையாக வெளிவந்தது. இதில்
சித்தாந்த சாத்திரங்கள் குறித்த ஆய்வில் ஆழங்கால்பட்ட கட்டுரைகள் வெளியாகின. இன்று
வரை இப்படி ஒரு இதழ் மீண்டும் வரவே இல்லை எனலாம்
ஞானசாகரம்
சென்னையில்
சைவ சித்தாந்த சண்ட மாருதம் சூளை சோமசுந்தர நாயகர் நிறுவிய வேதாகமோக்த சைவ சித்தாந்த
சபையின் சார்பில், 1902ம் ஆண்டு முதல், வெளியானதுதான் ஞானசாகரம். நாகை வேதாசலம் பிள்ளை
என்ற இயற்பெயரில் மறைமலையடிகள் தொடங்கிய மாத இதழ் இதுதான், பின்னாளில் அவர் தமிழ்நெறியை
ஏற்றவுடன், இதழின் பெயரும் அறிவுக் கடல் என மாற்றம் பெற்றது. இந்த இதழ் ஆரம்ப நாட்களில்
சென்னை பண்டித மித்திர யந்திரசாலையில் பதிப்பிக்கப்பட்டது.



இந்த
இதழில் மாகறல் கார்த்திகேய முதலியார், டி.சவரிராய பிள்ளை, யாழ்ப்பாணத்துச் சுன்னாகம்
அ.குமாரசுவாமிப் பிள்ளை, மதுரை சுப்பிரமணிய பிள்ளை உள்ளிட்ட சைவப் பேரறிஞர்கள் தொடர்
கட்டுரைகளை எழுதி வந்தனர்.
மாணிக்கவாசகர்
கால நிர்ணயம் உள்ளிட்ட தனது நுால்களை, ஞானசாகரம் இதழில் தான் மறைமலையடிகள்தொடர் கட்டுரைகளாக
எழுதி பின்னர் நுால்களாக வெளியிட்டார். இதில்தான், திருவாசகத்தின் முதல் நான்கு அகவல்களுக்கும்
உரை எழுதினார்.
சித்தாந்தம்
சித்தாந்த
தீபிகையின் தொடர்ச்சியாக, சென்னையில் இயங்கி வரும் சைவ சித்தாந்த சமாஜத்தின் சார்பில்
1912ம் ஆண்டில் பூவை கல்யாண சுந்தர முதலியாரை ஆசிரியராகக் கொண்டு வெளிவரத் தொடங்கியது.
ம.பாலசுப்பிரமணிய முதலியார், திருச்சிற்றம்பலம் பேரறிஞர் மு.அருணாசலம், ந.ரா.முருகவேள்,
சச்சிதானந்தம் என சைவப் பேரறிஞர்கள் இந்த மாத இதழில் ஆசிரியர்களாக இருந்துள்ளனர்.
ஓலைச்
சுவடிகளில் இருந்து பல சைவ நுால்கள் சித்தாந்தம் இதழில் அச்சுருவுக்குக் கொண்டு வரப்பட்டன.
பொருள் பொதிந்த கட்டுரைகள் மட்டுமின்றி சர்ச்சைக்குரிய கட்டுரைகளும் இதில் இடம் பெற்றன.
சித்தாந்தம் இதழில் தான், துடிசைக் கிழார் அ.சிதம்பரனார் முதன் முதலாக, சிவஞானபோதம்
தமிழ் முதல் நுாலே என்ற தலைப்பில் தொடர் கட்டுரைகளை எழுதி, மெய்கண்டார் அருளிச் செய்த
‘சிவஞானபோதம் தமிழா? வடமொழி மொழிபெயர்ப்பா?
என்ற
விவாதத்தைத் தொடங்கி வைத்தார். பின்னாட்களில் ம.பா. அதை 120 கேள்விகளுடன் தனி நுாலாக்கி
விவாதத்தை நாடளவில் பேசுபொருளாக்கினார். அவர் எழுப்பிய கேள்விகளுக்கு சங்கரன் கோவில்
சைவ சித்தாந்த சபை நிறுவனரும், திருவாவடுதுறை ஆதீன வித்துவானுமான பேட்டை ஆ.ஈசுரமூர்த்திப்
பிள்ளை முழுமையான பதில்களை அளித்தார்.



சித்தாந்தம்
இதழில் ஆரம்பத்தில், தமிழ், வடமொழி தொடர்பான ஆக்கப்பூர்வமான விவாதங்கள் பெரிய அளவில்
நடந்தன. கட்டுரைகளுக்குப் பதில் அளிக்கும் விதத்தில்விரிவான ஆய்வுகளும் இடம்பெற்றன.
1980களில் சைவ சித்தாந்த சமாஜம், பெருமன்றமாகப் பெயர் மாற்றம் பெற்ற பின்னர், சித்தாந்தம்
இதழின் தடமும் முற்றிலும் மாறியது.
தற்போது,
நல்லுார் சரவணன் தலைமையில் இயங்கி வரும் பெருமன்றத்தின் சார்பில் அவரையே ஆசிரியராகக்
கொண்டு சித்தாந்தம் இதழ் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கிறது. தமிழகத்தில் நுாற்றாண்டைக்
கடந்த முதல் சைவ இதழ் என்ற பெருமை சித்தாந்தம் இதழுக்கே உரியது
சைவம்
சைவ
இதழியல் உலகில் மிக நீண்ட காலம் வெளிவந்த இதழ்களில் சைவமும் ஒன்று. சென்னை சிவனடியார்
திருக்கூட்டத்தின் சார்பில், வெளியானது தான் சைவம் மாத இதழ். இருக்கம் ஆதிமூல முதலியாரை
ஆசிரியராகக் கொண்டு இந்த இதழ், 15 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று சைவ இதழியல் உலகில்
தனி இடம் பிடித்தது.
தமிழகத்தில்
அடியார்கள் முதன்முதலில் ஒரு கூட்டமைப்பாக இணைந்து செயல்பட்ட பெருமைக்குரியது சென்னை
சிவனடியார் திருக்கூட்டம். இதன் சார்பில் பள்ளிக்கூடம், தேவாரப் பாடசாலை, மாத இதழ்
ஆகியவைதொடங்கப் பெற்று தடையின்றி நடந்து வந்தன
மற்ற
அமைப்புகளில் இருந்து மிக வித்தியாசமாக, திருக்கூட்டத்தின் வருடாந்தர வரவு, செலவுகள்
அறிக்கை ‘சைவம்
இதழில் வெளியிடப்பட்டு வந்தது. இதன் மூலம்
வெளிப்படைத் தன்மையைப் பேணி வந்தார் ஆதிமூல முதலியார்.
முதலியார்
மட்டுமின்றி சைவப் பேரறிஞர்கள் பலர் சைவம் இதழில் தொடர் கட்டுரைகள் எழுதி வந்தனர்.
முதன்முதலாக விளம்பரங்கள் வெளிவந்த சைவ இதழும் இதுதான். சமகாலப் பிரச்சினைகளான மதமாற்றம்,
சுகாதாரம், மகப்பேறு, மருத்துவம் ஆகியவை தொடர்பாகவும் சைவம் இதழில் கட்டுரைகள் வெளியாகின.
வெறும் இதழ் நடத்துவதோடு மட்டுமின்றி, சமூகத்திற்குப் பயனுள்ள பல நடவடிக்கைகளையும்
சென்னை சிவனடியார் திருக்கூட்டம் மேற்கொண்டு வந்தது.
சைவம்
இதழில் பெரும்பாலும், இந்து சாதனம், ஞானசித்தி உள்ளிட்ட இதழ்களில் இருந்தும், சூளை
சோமசுந்தர நாயகர், பாம்பன் சுவாமிகள் போன்ற சீலர்கள் எழுதியதுமான கட்டுரைகள் அச்சிடப்பட்டு
வந்தன. தனிநபர்கள் சைவம் இதழில் கட்டுரைகள் எழுதியது ஆரம்ப காலத்தில் குறைவாகவே இருந்தது.
சிவஞானபோத
மாபாடியம் முதலில் அச்சான பின், சைவம் இதழின் ஆசிரியராக இருந்த ஆதிமூல முதலியார், சிவஞானபோதத்திற்குப்
பொருள் எழுதி தொடர் கட்டுரைகளாக வெளியிட்டார். இன்று வரை அது நுாலாகவில்லை என்பது
வருந்தத் தக்கது.
பின்னாட்களில்,
மதுராந்தகத்தில் குருகுலம் தொடங்கிய மறைமலையடிகளாரின் சீடர் அழகரடிகள், இதே சைவம்
என்ற பெயரில் மாத இதழ் ஒன்றை நடத்தி வந்தார். சைவம் பற்றியும் சென்னை சிவனடியார் திருக்கூட்டம்
பற்றியும் விரிவான ஆய்வு தேவை.
செந்தமிழ்ச்
செல்வி
சைவ
சித்தாந்த நுாற்பதிப்புக் கழகத்தின் அதிகாரபூர்வ மாத இதழ் இது. 1925ம் ஆண்டு தொடங்கி
இன்று வரை நடந்து வருகிறது. கா.சுப்பிரமணிய பிள்ளை, மறைமலையடிகள் உள்ளிட்ட சைவப் பேரறிஞர்கள்
பங்கு பற்றிய இந்த இதழ், சைவத்தின் வளர்ச்சிக்காகத் தொடங்கி, தனித்தமிழ் முழக்கத்தை
முன்வைத்து திசை மாறி, தற்போது பல்சுவை இதழாக வெளிவந்து கொண்டிருக்கிறது. இதன் தோற்றம்,
வளர்ச்சி, தேய்வு பற்றி தனி ஆய்வே தேவை.
சிவநேசன்
நாட்டுக்கோட்டை
நகரத்தார்களின் குடியிருப்புகளில் ஒன்றான பலவான் குடியில் இருந்து 1925ம் ஆண்டு முதல்
15 ஆண்டுகளுக்கு மேலாக வெளிவந்ததுதான் சிவநேசன். இராம.கு.இராம. ராமசாமிச் செட்டியார்
இதன் ஆசிரியராக இருந்தார். மற்ற சைவ மாத இதழ்களில் இருந்து முற்றிலும் வேறுபட்டு, சமகால
பிரச்சினைகளை அதிகளவில் பேசுபொருளாக எடுத்துக் கொண்டு செயல்பட்ட ஒரே சைவ இதழ் இதுதான்.
குறிப்பாக,
ஈ.வெ.ரா.வின் சுயமரியாதை இயக்கத்திற்கு எதிரான கட்டுரைகளை சிவநேசன் தொடர்ந்து வெளியிட்டு
வந்தது. அதேபோல் சைவ சமயத்தில், பசுத்தோல் போர்த்திய புலிகளாக நடமாடியவர்கள் பற்றியும்
அது தோலுரித்துத் தொங்க விட்டது. ‘சிவநேச
னுக்கு மாநிலம் தழுவிய அளவில் பெரும் வரவேற்பு
கிடைத்திருந்தது.
இந்தித்
திணிப்பை எதிர்த்து பல கட்டுரைகளை வெளியிட்ட சிவநேசன், 1933ம் ஆண்டு கோயில் நுழைவுப்
போராட்டத்தை எதிர்த்துக் கடுமையாக சாடியது. அந்த ஆண்டு முழுவதும் மரபுச் சைவர்கள்,
கோயில் நுழைவுப் போராட்டம் குறித்து விமர்சித்து எழுதிய கட்டுரைகள் சிவநேசனில் தொடர்ந்து
வெளிவந்த வண்ணம் இருந்தன. 1933ல் திருநெல்வேலியில் நடந்தசனாதன இந்து தர்ம மாநாடு குறித்த
விரிவான செய்திகள் சிவநேசனில் இடம் பெற்றிருந்தன.
புகழ்
பெற்ற சைவப் பேரறிஞர்கள் சிவநேசனில் எழுதுவதைப் பெருமையாகக் கருதும் அளவுக்கு சிவநேசனுக்கு
வரவேற்பு இருந்தது. நினைத்த கருத்தை துணிச்சலுடன் எழுதி வெளியிட்டு வந்ததால் ராமசாமிச்
செட்டியாரின் பெயரும் பரவியது. பேட்டை ஆ.ஈசுரமூர்த்திப் பிள்ளை சிவநேசனில், ஆசிரியர்
பெயர் குறிப்பிடாமல், ‘சுலோக பஞ்சக விஷயம்
என்ற தலைப்பில் எழுதிய கட்டுரைகள் பின்னாளில்
தனி நுாலாக வெளியானது. அதையும் ராமசாமிச் செட்டியாரே வெளியிட்டார். கோயில் நுழைவுப்
போராட்டத்தை எதிர்த்து பிரசாரம் மேற்கொண்ட நீலகண்ட சித்தாந்தியார், சுலோக பஞ்சக
விஷயத்தைப் பாராட்டி எழுதியிருந்தார்.
இந்த
அனைத்து சைவ மாத இதழ்களும், நுால் மதிப்புரைகள், மாதம்தோறும் நடைபெற்ற நிகழ்வுகள்,
கண்டனங்கள், அறிவிப்புகள் போன்றவற்றை பொதுவாக வெளியிட்டு வந்தன. மிக அரிதினும் அரிதாகவே
இவற்றில் விளம்பரங்கள் வெளிவந்தன. வருவாய் நோக்கம் கருதி இவற்றின் ஆசிரியர்கள் இந்த
மாத இதழ்களை நடத்தவில்லை என்பது தெளிவு.
இவை
தவிர, நெல்லையில் செயல்பட்டு வந்த வைதிக சைவ சம்மேளனம் என்ற அமைப்பின் சார்பி்ல், வி.சிதம்பர
ராமலிங்கம் பிள்ளையை ஆசிரியராகக் கொண்டு சமயஞானம் என்ற மாத இதழ் வெளியானது. 1901ம்
ஆண்டில் இந்துக் கல்லுாரியில் தலைமைத் தமிழ்ப் பண்டிதராக பணிபுரிந்த தி.பா.சிவராம பிள்ளை,
திருநாவுக்கரசு என்ற பெயரில், மாத இதழ் நடத்தி வந்தார். நெல்லையின் சைவ அறிஞர்களான
செப்பறை சுவாமிகள், காருடை சூரியமூர்த்திப் பிள்ளை போன்றோர் அதில் பங்களிப்பு செய்தனர்.
அருட்பா – மருட்பா வழக்கிற்காக நா.கதிரைவேற் பிள்ளைக்கு நிதியுதவி திரட்டிக் கொடுத்தது
பற்றிய செய்திகள் இந்த இதழி்ல்தான் காணப்படுகின்றன.
கொங்கு
நாட்டின் பேரூரில் இருந்து ம.நா.ராமசாமி சிவாசாரியாரை ஆசிரியராகக் கொண்டு வெளியான
சைவப் பிரகாசம், வடமொழியில் உள்ள சைவ நுால்களை தமிழாக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே
கயப்பாக்கம் சதாசிவ செட்டியாரை ஆசிரியராகக் கொண்டு வெளியான சைவ வித்யா, நெல்லை பேட்டையில்
இருந்து, தங்கவேலுப் பிள்ளை என்பவரை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த ஞான அரசு, புதுவையில்
இருந்து யாழ்ப்பாணம் ச.கந்தையா பிள்ளையை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த வித்தகம், சித்தாந்த
பண்டித பூஷணம் பேட்டை ஆ.ஈசுரமூர்த்திப் பிள்ளை ஆசிரியராக இருந்து வெளியிட்ட சமயசாதனம்
என பல சைவ இதழ்கள் சொல்லரிய தொண்டாற்றியிருக்கின்றன.
இந்தக்
கட்டுரையில், திருமடங்களின் சார்பில் வெளிவரும் இதழ்களை நான் சேர்க்கவில்லை. மாறாக,
தனிநபர்கள், தனி அமைப்புகள் சார்பில் வெளியான இதழ்களையேஅறிமுகம் செய்துள்ளேன், இந்த
இதழ்களில் பல தற்போது கிடைப்பதற்கே அரிதாகி விட்ட நிலையில், இவற்றின் சில பதிப்புகளை,
தமிழ் இணைய மின்னுாலகத்தில் மின்னாக்கமாக காணமுடிகிறது. அந்த வகையில் தமிழக அரசுக்கு
நாம் நன்றி சொல்லித்தான் ஆக வேண்டும்.
இக்கட்டுரை
எழுதுவதற்கு, உ.வே.சா. நுாலகம் தான் எனக்குப் பெருமளவில் உதவியது. அந்த நுாலக நிர்வாகிகளுக்கு
நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
Posted on Leave a comment

இந்து ஆன்மிக சேவைக் கண்காட்சி | எஸ்.சொக்கலிங்கம்

2010ம்
ஆண்டு என நினைக்கிறேன். அப்போது திருவான்மியூர் ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி மைதானத்தில்
இந்து ஆன்மீக சேவைக் கண்காட்சி நடப்பதாகப் பெரிய பெரிய விளம்பரத் தட்டிகள் வைத்திருந்தனர்.
சரி, என்னதான் இருக்கிறது என்று, நண்பர்களுடன் சென்று பார்த்தேன். கண்காட்சிக்குள்
நுழைந்த உடன், திருஞானசம்பந்தர் அருளிச் செய்த திருவெழுகூற்றிருக்கையை ஒரு தேர் போலச்
செய்து அதை அங்கு நிறுத்தியிருந்தனர். காந்தளகம் சச்சிதானந்தத்தின் ஏற்பாடு அது. எனக்கு
ஆச்சரியமாக இருந்தது.
தொடர்ந்து
கண்காட்சிக்குள் நுழைந்து ஒரு சுற்று சுற்றி வந்தேன். திருமடங்களின் சார்பில் சில அரங்குகள்,
ஜாதியமைப்புகளின் சார்பில் சில அரங்குகள் என ஒரு கலவையாக அந்தக் கண்காட்சி காட்சி அளித்தது.
அந்தக் கண்காட்சியில் இருந்து பெறுவதற்கு எனக்குத் தனிப்பட்ட வகையில் ஒன்றுமில்லை எனத்
தோன்றியது. ஆனால் அந்த முயற்சி எனக்குப் பிடித்திருந்தது.
அடுத்து
2014ம் ஆண்டு என நினைக்கிறேன். அந்தக் கண்காட்சியைத் தொடங்கி வைக்க தயானந்த சரஸ்வதி
சுவாமிகள் வந்திருந்தார். அந்தக் கண்காட்சியிலும் வழக்கம்போல அரங்குகள், வித்தியாசமான
முயற்சியாக, சில கட்அவுட்டுகள் மூலம் குறிப்பிட்ட கருத்துக்களை விளக்க முற்பட்டிருந்தனர்.
சைவ மடங்கள், வைணவ மடங்களின் அரங்குகள் உள்ளிட்ட அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.
அதையடுத்து
நடந்த கண்காட்சிகளுக்கு என்னால் செல்ல முடியவில்லை. இந்த முறை, என் 3 வயது மகளை அங்கு
அழைத்துச் சென்று காட்டவேண்டும் என நினைத்துக் கொண்டிருந்தேன். அவளையும் அழைத்துக்கொண்டு
குருானக் கல்லூரிக்குச் சென்றேன்.
இந்தமுறை
எல்லா ஏற்பாடுகளும் சிறப்பாக அமைக்கப்பட்டிருந்தன எனலாம். முகப்பில் யானை நின்று அனைவரையும்
வரவேற்றுக் கொண்டிருந்தது. அருகிலேயே பாரதமாதா கோயில்
கோசாலை அமைப்பு. கண்காட்சிக்கு வந்த கூட்டத்தில்
கணிசமான நபர்கள் இங்குதான் நின்று கொண்டிருந்தனர்.
கண்காட்சியின்
உள்ளே நுழைந்தால் நேரெதிரே அறுபத்து மூன்று நாயன்மார்களின் திருமேனிகள் அலங்கரிக்கப்பட்டு
வைக்கப்பட்டிருந்தன. அங்கு சிவனடியார்கள் அமர்ந்து திருவாசகம் பாடிக் கொண்டிருந்தனர்.
இடது கைப்பக்கம், ஆதிசங்கரர், ராமானுஜர் முதல் குருநானக் வரையிலான மகான்களின் படங்கள்
வைக்கப்பட்டு அவற்றின் கீழே விளக்கங்கள் எழுதப்பட்டிருந்தன. என் மகளுக்கு அவர்கள் ஒவ்வொருவரின்
பெயரையும் சொல்லி திருவுருவத்தைக் காட்டினேன்.
வழக்கம்
போல் அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தாலும், இந்த முறை அகர வரிசையில் அதாவது, ஆதீனம்
என்றால் ஆங்கில எழுத்து ஏ என்பதின் கீழ் வரும்
ஜாதி என்றால் கம்யூனிட்டி என்ற ஆங்கிலச் சொல்லின்
முதல் எழுத்தான சி யில் வரும். இந்த முறையின் படி அரங்குகள் ஒதுக்கப்பட்டுச் சிறப்பாக
அமைக்கப்பட்டிருந்தன.
சின்மயா
மிஷன், ராமகிருஷ்ண மிஷன், வேலூர் நாராயணி அம்மா பீடம், ஈஷா யோக மையம் ஆகிய அமைப்புகள்
தங்கள் அரங்குகளை விரிவான பரப்பளவில் அமைத்து மக்களை ஈர்த்துக் கொண்டிருந்தார்கள்.
பசுப்
பாதுகாப்பு தொடர்பாக இயங்கும் பல்வேறு அமைப்புகள், பழங்குடியினங்கள் மத்தியில் சேவை
புரியும் அமைப்புகள், திருக்கோயில்களில் உழவாரப் பணி புரியும் அமைப்புகள், நூல் வெளியீடு,
சடங்குகள் மூலம் சமயத்தைப் பரப்பும் பணிகளை மேற்கொள்ளும் அமைப்புகள், ஆர்எஸ்எஸ்சின்
பல்வேறு கிளை அமைப்புகள் என விதவிதமான அமைப்புகள் தங்கள் அரங்குகளை அமைத்திருந்தன.
இவை
தவிர, பழமையும் பெருமையும் வாய்ந்த திருவாவடுதுறை, தருமபுரம், பேரூர், துழாவூர், வேளாக்குறிச்சி
போன்ற சைவ ஆதீனங்களின் அரங்குகளும் இடம் பெற்றிருந்தன.
வலம்
இதழின் சார்பிலும் தனியாக ஓர் அரங்கு அமைக்கப்பட்டிருந்தது, வித்தியாசமாகத் தெரிந்தது.
இவை
தவிர, சைவப் பிள்ளைமார், கார்காத்தார், யாதவர், கம்மநாயுடு, தேவர், நாடார், நாட்டுக்கோட்டை
நகரத்தார் என பல்வேறு ஜாதிச் சங்கங்கள் சார்பாகவும் அரங்குகள் இருந்தன.
கூடுதல்
சிறப்பாக ஜாலியன் வாலாபாக் படுகொலை சம்பவத்தைச் சிறப்பான முறையில் ஒளிஒலி முறையில்
ஓர் அரங்காக ஏற்பாடு செய்திருந்தது அனைவரையும் கவர்ந்தது. கண்காட்சியில் அதிகளவிலான
கூட்டம் அங்குதான் இருந்தது.

அதற்கடுத்தாற்போல்,
திருக்கயிலாய இசை வாத்தியக் குழு அரங்கில் கூட்டம் குவிந்தது. அங்கு செல்வோர் தங்களால்
இயன்ற வாத்தியங்களை இசைத்துப் பயிற்சி எடுத்து மகிழ்ந்தனர்.
இந்த
முறை கண்காட்சியைச் சுற்றிப் பார்ப்பதற்கு ஒரு நாள் போதவில்லை. 400க்கும் அதிகமான
அரங்குகள் என்றார்கள். கால் வலி வந்து விட்டது.
கண்காட்சிக்கு
வந்து சென்ற ஒவ்வொருவரும் தான் இந்துதான் என்பதை உணரும் அளவுக்கு இந்தக் கண்காட்சியின்
ஒவ்வொரு அம்சமும் இடம் பெற்றிருந்தது.
குறிப்பாகக்
குழந்தைகள், மாணவ, மாணவியர், அவர்தம் பெற்றோர் ஆகியோருக்கு இந்தக் கண்காட்சியில்
கற்றுக் கொள்வதற்கு அவ்வளவு விஷயங்கள் காத்திருந்தன. என் மகள், ஈஷா யோகி சிலையைப்
பார்த்தபடி அங்கிருந்த நகர மாட்டேன் என நின்று கொண்டாள். அவர் யார் எனக் கேட்டாள்.
அவர்தான் சிவபெருமான், கபாலி என்றேன். அதேபோல், லட்சுமி நரசிம்மர் அருகே நின்று கொண்டு
புகைப்படம் எடுக்கச் சொன்னாள். அவளுக்கு தெய்வத் திருவுருவங்களை விளக்கிச் சொல்லவும்,
வித்தியாசம் காட்டவும், இந்தக் கண்காட்சி நன்றாகவே பயன்பட்டது.
ஒருபக்கம்,
இயற்கையோடு இசைந்து வாழும் வாழ்க்கையை உணர்த்தும் விதத்தில் சில அரங்குகள்; மற்றொரு
பக்கம், நவீன அறிவியலைப் பயன்படுத்தி கல்வி, மருத்துவம் போன்ற துறைகளில் சாதிக்கும்
அமைப்புகளின் அரங்குகள் எனப் பழமைக்கும் பழமையாய், புதுமைக்கும் புதுமையாய்க் கண்காட்சி
காட்சியளித்தது.
பக்திப்பூர்வமாக,
உணர்வுபூர்வமாக உள்ள இந்துக்களுக்கு இந்தக் கண்காட்சி ஒரு உந்து சக்தி என்றே சொல்லலாம்.
தனது மதம் இவ்வளவு பெரிதா, இத்தனை தெய்வங்கள், இத்தனை அமைப்புகள், இத்தனை சேவைகள் உள்ளனவா
என்பதை அறியும் அல்லது உணரும் ஒவ்வொரு இந்துவும் இந்தக் கண்காட்சியை இனி தவற விடமாட்டார்.
நம்பிக்கைகளின்
மேல் நம்பிக்கைகளாகக் கட்டி எழுப்பப்பட்ட கடவுள் உணர்வு பலப்பட இந்தக் கண்காட்சி பெருமளவில்
உதவும் என்பதில் ஐயமே இல்லை.
அதேநேரம்,
அடிப்படைப் பாடங்களைக் கற்றுக்கொண்ட இந்து, அடுத்த கட்டத்திற்கு முன்னேற இந்தக் கண்காட்சி
எந்த அளவில் உதவும் என்ற கேள்வியும் எனக்குள் எழுந்தது.
சாஸ்திரங்களின்
அடிப்படையில் தனக்குத் தோன்றிய விதத்தில் வழிபாடுகளைக் கட்டமைத்துக் கொள்ள இன்றைய
இந்து மதம் அனுமதிக்கிறது. அதனால் பல்வேறு வழிபாட்டுப் பிரிவுகள், பல்வேறு யோக சாதனைப்
பிரிவுகள் என புற்றீசலாக முளைத்து வருகின்றன.
இந்தச்
சூழலில், ஆரம்பக் கட்டத்தில் இருந்து அடுத்தகட்டத்திற்கு, அதாவது தத்துவார்த்த ரீதியாகச்
செல்ல விரும்பும் இந்துவிற்கு இந்தக் கண்காட்சி எப்போது வழிகாட்டும்?
எனக்குத்
தெரிந்து இந்தக் கண்காட்சியில், தேனி ஓங்காரானந்தாவின் அரங்கில் மட்டும், ஆன்லைனில்
அத்வைத சம்பிரதாயத்தைச் சொல்லித் தருவதாக அறிவிப்பு பெரிய விளம்பரப் பலகையாக வைக்கப்பட்டிருந்தது.
அதில் என்னென்ன நூல்கள் சொல்லிக் கொடுக்கப்படும் என்ற பட்டியலும் கொடுக்கப்பட்டிருந்தது.
அதை விட்டால் ஆதீன அரங்குகளில் சத்தமில்லாமல் வைக்கப்பட்டிருந்த சில நூல்கள். இவை தவிர
தத்துவத் தேடலுக்கு இந்தக் கண்காட்சியில் எந்தவித இடமும் வழங்கப்படவில்லை.
எத்தனையோ
ஜாதிகள் இருந்தும் அவை முறையான ஒன்றிணைப்புடன் செயல்படவில்லை அல்லது செயல்படத் தயாராக
இல்லை என்பதை இந்தக் கண்காட்சியில் இடம் பெற்றிருந்த சில ஜாதிச் சங்கங்களின் அரங்குகள்
எடுத்துக் காட்டின. தங்களைத் தேடி வருவோருக்கு தங்கள் வரலாற்றை எடுத்துச் சொல்லி,
தாங்கள் செய்யும் சேவைகளையும் எடுத்துக் காட்டும்படியான எந்தவித முன்முயற்சியையும்
அந்த ஜாதிகள் மேற்கொள்ளவில்லை. அடுத்த முறையாவது இந்தக் கண்காட்சிக்காகவாவது, ஜாதிச்
சங்கங்கள் கொஞ்சம் செயல்பட்டு அவற்றை ஆவணப்படுத்தி, காட்சிப்படுத்துவார்கள் என நம்புகிறேன்
நாட்டுக்கோட்டை
நகரத்தார் மற்றும் கம்மநாயுடு அரங்குகளில் மட்டும் அவர்களது வரலாறு, சேவைகள் பற்றிய
ஆவணங்கள் இருந்தன.
இந்து
அமைப்புகளின் அனைத்தும் சேர்ந்து எத்தனை சேவைகளை வழங்குகின்றன என்ற பட்டியலைப் பெரிய
காட்சிப் பலகையாக வைத்திருந்தனர். அதைப் பார்த்தால் இவ்வளவு அமைப்புகள் இருக்கின்றனவா
என மயக்கமே வந்து விடுகிறது.
ஆண்டுக்கு
ஆண்டு, இந்து ஆன்மீக கண்காட்சி மெருகேறிக்கொண்டே செல்கிறது; கட்டமைப்பில் விரிவடைந்துகொண்டே
வருகிறது. அனைத்து அமைப்புகளும் கண்காட்சியில் இடம்பெற ஆர்வம் காட்டுகின்றன.
இந்த
நிலையில் எனக்கு எழுந்த சில சந்தேகங்களை இங்கு முன்வைக்கின்றேன்.
1.     சங்கரர், ராமானுஜர் போன்றோரின் படங்களை வைத்தவர்கள்,
காரைக்காலம்மையாருக்கும் அன்னபூரணிக்கும் வித்தியாசம் தெரியாமல் வைக்கலாமா? அதை கவனிக்கத்
தவறியது ஏன்?
2.     தமிழகத்தின் ஆன்மீக எழுச்சியில் சைவ சமயக் குரவர்
நால்வருக்கும், தத்துவார்த்த எழுச்சியில் மெய்கண்டாருக்கும் தனித்த இடம் உண்டு. மகான்களின்
பட்டியலில் இவர்கள் விடுபட்டது எப்படி?
3.     ஆன்மீகக் கண்காட்சி என்றாலே, தெய்வத் திருவுருவங்களை
வைத்து வழிபாடு செய்யத்தான் வேண்டுமா? அவற்றுக்கு என்று தனித்த வழிபாடுகள், இடம், பொருள்
என சாஸ்திரங்கள் சுட்டிக் காட்டியிருக்க, பலர் முன்பு, அனைத்து விதிகளையும் மீறி, திருவுருவங்களை
எழுந்தருளச் செய்யத்தான் வேண்டுமா?
4.     அன்னதானம் குறைந்து புட்கோர்ட் அதிகரித்துக்
கொண்டே செல்வது நல்ல அறிகுறியாகத் தெரியவில்லையே?
5.     பொருளாதார ரீதியில் நலிவுற்றிருக்கும் இந்துக்களை
மேம்படுத்த கல்வி, தொழில் போன்ற துறைகளில் வழிகாட்டும் கடனுதவி அளிக்கும் அமைப்புகளை
அடுத்த முறை சேர்த்துக் கொள்ள வாய்ப்புள்ளதா?
எப்படிப்
பார்த்தாலும் இந்து ஆன்மீக கண்காட்சி வெற்றி பெற்று விட்டது என்றே சொல்ல வேண்டும்.
நான் ஒரு இந்து என்று வெளிப்படையாக சொல்லத் தயங்கும் மக்களை, நான் இந்துதான் என்பதை
உணர வைத்து தைரியமாக சொல்லவும் வைத்துள்ளது இந்தக் கண்காட்சி. அடுத்த சில ஆண்டுகளில்
அடுத்த கட்டத்திலும் தனது வெற்றிக் காலடியை எடுத்து வைக்கும் என்ற நம்பிக்கையும் எனக்கு
இருக்கிறது.