மனுச எந்திரங்கள் (சிறுகதை) | ஐ. கிருத்திகாவேப்பமரம் பச்சை பசேலென்று நின்றிருந்தது. இளம்பச்சையிலும், செம்பழுப்பிலுமான துளிர்கள் நுனியில் அசைந்தாடின. தலை நிறைய பூ தைத்துவிட்டது போல அரை வெள்ளையில் நட்சத்திர நட்சத்திரமாய்ப் பூக்கள். மரம் நின்ற இடத்துக்கு கீழே பத்துபேர் தாராளமாய் அமரக்கூடிய அளவிற்கு நிழல். அந்த நிழலில் இளைப்பாறிக்கிடந்தன உதிர்ந்த பூக்கள். ஒரு காற்று அடித்தால் மரத்திலிருந்த அத்தனை பூக்களும் விர்விர்ரென தரை நோக்கி சரிந்தன.

பார்க்கவே அவ்வளவு ரம்மியமாயிருந்தது. அப்படியே பார்த்துக்கொண்டே இருந்துவிடலாம் போலிருந்தது. எங்கு சுகம் கிடைக்கிறதோ அங்கேயே ஒட்டிக்கொண்டு விடவேண்டுமென்கிற துடிப்பு மனசுக்கு. அதுவும்கூட ஒருவித சுயநலம்தான் என்று குமாரசாமிக்குத் தோன்றிற்று. மறுநொடியே அது அப்படியல்ல என்று அவர் தனக்குள் சொல்லிக்கொண்டார். இரைச்சல்களும், சத்தங்களும் நிறைந்துகிடக்கிற இடத்தில் ஒற்றை நிசப்தம் சுகம்தானே. அதை சுயநலம் என்று சொல்வதற்கில்லை என்று தன்னைத்தானே சமாதானப்படுத்திக்கொண்டார்.

வேப்பமரத்துக்காற்று சில்லென்று உடலைத் தழுவியது. மூச்சுமுட்ட அணைக்கும் முரட்டு தழுவல்ல அது. தோளில் கைபோட்டு மெல்ல அணைத்துக் கொள்ளும் இதமான தழுவல். குமாரசாமிக்குக் கண்களை சொக்கிற்று. ஈஸிசேரில் அமர்ந்தபடியே கண்ணயர்ந்தவர் திடீரென காதைப்பிளந்த தொலைக்காட்சி சத்தத்தில் திடுக்கிட்டுக் கண்விழித்தார். சித்ரா வேலைகளை முடித்துவிட்டு தொலைக்காட்சி முன் அமர்ந்துவிட்டாள் என்பது புரிந்தது. காலை பத்து மணிக்கு ஆரம்பித்தால் ஒருமணிவரை தொலைகாட்சி ஓய்வில்லாமல் ஓடிக்கொண்டேயிருக்கும். திரும்பவும் மாலை ஆறு மணியிலிருந்து பத்துமணிவரை அதற்கு வேலை.

“எப்பப் பாத்தாலும் டிவி முன்னாடியே ஒக்காந்திருக்கியே. கொஞ்சநேரம் வாசல்ல வந்து ஒக்காரேன். காத்து அருமையா வீசுது. மயிலுங்க இங்கிட்டும் அங்கிட்டும் போறதும் வர்றதுமா இருக்குதுவோ. கூடு திரும்புற பறவைங்க எல்லாம் கலியாணத்துக்கு வரிசைத்தட்டு கொண்டுட்டு போற பொம்பளைவோ மாதிரி போவுதுங்க. நெலா மறையறதும் தெரியறதுமா வெளையாட்டு காட்டுது. மேகமெல்லாம் இங்க்குல நனஞ்ச பஞ்சாட்டம் மெதந்து போவுது…”

இயற்கையை சிலாகித்துப் பாராட்டிக் கொண்டிருந்தவரை சித்ரா இடுப்பில் கைவைத்து முறைத்துப் பார்த்தபடி நின்றிருந்தாள். அவளுக்கும் ரசனைக்கும் வெகுதூரம். அது புரிந்தும் அப்படிப் பேசியது தன் தவறுதான் என்றுணர்ந்த குமாரசாமி பேச்சை நிறுத்தினார்.

“தத்துபித்துன்னு ஒளர்றத என்னிக்குதான் நிறுத்தப்போறீங்களோ. கருமம்டா சாமி.” அவள் தலையிலடித்துக்கொண்டு உள்ளே செல்ல, அன்றிலிருந்து அவளிடம் அப்படிப் பேசக்கூடாது என்று குமாரசாமி திடமாக முடிவெடுத்தார்.

“அம்மாவுக்கு ஒன்னளவுக்கு ரசனை கெடையாதுப்பா. நீ எதையாவது சிலாகிச்சு சொன்னேன்னா அது புரியாத பாஷை பேசுறமாதிரி மூஞ்சை வச்சிகிட்டு கேக்கும். இத்தினி வருசத்துல இதுகூட ஒனக்கு தெரியலியே…”

மகள் கவிதா கிண்டலடிப்பாள். அவள் இருந்தவரை வீடு கலகலப்பாயிருந்தது. குமாரசாமிக்கு மகள் மிகப்பெரிய ஆறுதல். தான் பார்த்ததை, படித்ததை, ரசித்ததை அவளிடம்தான் சொல்லுவார்.

“அப்பாவும் மகளும் சதா தொணதொணன்னு பேசிகிட்டேயிருந்தா வசனம் காதுல வுழ மாட்டேங்குது. ரெண்டு பேரும் கொஞ்சம் அந்தாண்ட போயி பேசுங்க…” சித்ரா சுள்ளென்று விழுந்துவிட்டு டிவியின் சத்தத்தைக் கூட்டுவாள். குமாரசாமி வாசல் திண்ணையில் ஈஸிசேரைப் போட்டு அமர்ந்துவிடுவார். கவிதா படிக்கட்டில் அமர்ந்து கொள்ளுவாள். இருவரும் நேரம் போவது தெரியாமல் பேசுவார்கள்.

“ஒரு கவிதை படிச்சேன். ஒங்கிட்ட சொல்லணும்னு தோணுச்சு” என்று தான் படித்ததை குமாரசாமி சொல்வார். அவர் சொல்லி சொல்லி கவிதாவுக்கும் கவிதைகள் பிடிக்க ஆரம்பித்துவிட்டன.

“ஒன்னால எனக்கும் கவிதை புடிக்க ஆரம்பிச்சிடுச்சுப்பா. ஒனக்கு எப்புடிப்பா இந்தமாதிரி ஒரு ரசனை. எட்டாவதுகூட நீ தாண்டல. ஆனா ரொம்ப அறிவார்த்தமா எல்லாத்தையும் ரசிக்கிற. ஆச்சர்யமா இருக்குப்பா.”

ஒருநாள் கவிதா சொன்னபோது குமாரசாமி சிரித்தார்.

“படிப்புக்கும் புடிப்புக்கும் ஏதாவது தொடர்பு இருக்கா… புடிச்சு ரசிக்கிறதத்தான் சொல்றேன். சுத்தி வயக்காடு. நடுவுல கூரக்கட்டு வூடு. ராத்திரி நரி ஊளையிடும், சுவர்க்கோழி கத்தும். வாய்க்கா தண்ணியில நண்டு, தவக்களைன்னு ஏகப்பட்ட சீவனுங்க. காத்துல பயிருங்களோட பச்சை வாசம், மழை பேஞ்சா வழுக்கியடிக்கிற சேறு. இந்த மாதிரி சூழல்ல வளந்தவன் நான். எல்லாத்தையும் இடைஞ்சல்ன்னு நெனைக்கமா ரசிக்க பழகிகிட்டேன். ஒரு விசயத்துக்கு மனசு பழகிடுச்சின்னா சாவுற வரைக்கும் அது மாறாது. எத்தனையோ பிரச்சினைங்க வந்தாலும் இந்தமாதிரி ரசிக்கிற மனசுதான் என்னைய உயிர்ப்போட வச்சிருக்கு.”

“நீ பாவம்ப்பா. அம்மா ஒனக்கு சரியான ஜோடி கெடையாது. ஒனக்கேத்த ஜோடி கெடைச்சிருந்தா உன் வாழ்க்கை இன்னும் நல்லா இருந்திருக்கும்.”

ஒருமுறை கவிதா வருத்தப்பட்டு சொன்னபோது குமாரசாமி தலையாட்டி மறுத்தார்.

“ரெண்டு பேரும் ஒரே ரசனையோட இருந்தா வாழ்க்கை நல்லாயிருக்கும்னு யாரு சொன்னது? பிரச்சினை இல்லாம இருந்தாதான் வாழ்க்கை வண்டி நல்லா ஓடும். ஒங்கம்மா எந்த பிரச்சினையும் என்னைய அண்ட விடறதில்ல. அதனாலதான் நான் என் தொழிலை பாத்துகிட்டு சுத்துப்புறத்தை ரசிச்சிகிட்டு கெடக்கேன்” என்றார்.

அப்படிப்பட்டவர் தொழில் நசிந்து போனபோது முதலில் கொஞ்சம் தடுமாறத்தான் செய்தார். டயர் ரிட்ரேடிங் கடை வைத்திருந்தார். அவருடைய தீவிர உழைப்பின் அடையாளம் அது. ஓரளவு நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது. சொந்தமாக ஒரு வீடு கட்டவும், கவிதா கல்யாணத்தைக் கடன் வாங்காமல் நடத்தவும் முடிந்ததென்றால் அதற்கு அதுதான் காரணம். எந்தத் தொழிலிலும் அம்புக்குறி மேல்நோக்கியே போய்க் கொண்டிருப்பதில்லை. சிலசமயம் அது கீழ் நோக்கியும் திரும்பும். பதினைந்து வருட காலம் கைகொடுத்த தொழில் சட்டெனப் படுத்து கொண்டது. காரணம் புரியவில்லை. சித்ரா அழுது ஒரு வழி பண்ணிவிட்டாள்.

“கடைய மூடிட்டு என்னாங்க பண்றது. வருமானத்துக்கு வழியில்லாம காலத்த எப்புடி கடத்தறது. நாளைக்கு நோவு சீக்குன்னு வந்துட்டா யாரு நம்மள பாப்பா…?” கேள்வி மேல் கேள்வி கேட்டுத் துளைத்துவிட்டாள்.

“கவலைப்படாத. நான் பாத்துக்கறேன்” என்ற குமாரசாமிக்கு முதலில் இருந்த பதைபதைப்பு வெகுவாகக் குறைந்து போயிருந்தது. மழை பெய்யும்போது மின்னல் வெட்டும், மேகங்கள் ஒன்றோடொன்று மோதி இடியோசை உண்டாக்கும். மழைவிட்டபின் வானம் துடைத்துவிட்ட நீலக்காகிதம் போலத் தெளிவாகியிருக்கும். குமாரசாமிக்கும் மனசு தெளிவாகிவிட்டது.

தொழில் படுத்தபோது தோன்றிய கவலைகள், பதைபதைப்பு எல்லாம் அடங்கி மெல்ல மெல்ல நிதானம் வந்திருந்தது. பச்சைக்கல் பதக்கத்தில் ஒற்றை வைரத்தைப் பதித்தது போன்ற அழகான நிதானம். ஆனால் கவிதாவுக்குதான் மனங்கொள்ளாக் கவலை. மும்பையிலிருந்து அடிக்கடி பேசினாள்.

“கவலைப்படாதப்பா. தொழில்ல நஷ்டம் வர்றது சகஜந்தான். அத நெனச்சு ஒடைஞ்சு போயிடாத. ஒனக்கு இப்ப எந்த பொறுப்புமில்ல. என்னைய படிக்க வச்சு, கல்யாணம் கட்டி குடுத்துட்ட. நச்சு நச்சுன்னு கேட்டு புடுங்குற மாப்ளயும் இல்ல. உன் மாப்ள அந்த விஷயத்துல தங்கம். அதனால பேங்க்குல போட்டு வச்சிருக்குற பணத்தை கொண்டு காலத்த ஓட்டிரலாம். என்னாப்பா பேசமாட்டேங்குற…”

கவிதா கவலையோடு கேட்டபோது குமாரசாமி சிரித்தார்.

“ஒன்னுமில்லம்மா. கவிதா புள்ளைக்கு இவ்ளோ பேச யாரு கத்து குடுத்தான்னு யோசிக்கிறேன்.”

“அடப்போப்பா. எல்லாம் ஒங்கிட்ட கத்துகிட்டதுதான். ஒனக்கு ஏதாவது தேவைன்னா கேளுப்பா. மாமனாருகிட்ட நேரடியா சொல்ல அவருக்கு சங்கடமா இருக்காம். எங்கிட்ட தூது விட்டுருக்காரு.”

“ரொம்ப சந்தோசம்மா. நீங்க இப்புடி கேட்டதே எனக்கு போதும். தேவைன்னு இனிமே ஏதாவது வந்தாத்தான் உண்டு அல்லது உருவாக்கிக்கிட்டாதான் உண்டு. அதனால மாப்ளக்கி என் சார்புல ஒரு நன்றிய சொல்லிடு. வழக்கம்போல லீவுக்கு புள்ளைங்களை கூட்டிகிட்டு இங்கே வந்துடு. ஒங்கம்மாவும் புள்ளைங்களை பாக்கணும்னு சொல்லிகிட்டேயிருக்கா” என்றவர் ஈஸிசேரில் சாய்ந்து கண்களை மூடிக்கொண்டார்.

நட்சத்திரங்கள் அங்கொன்றும், இங்கொன்றுமாக முளைத்துக் கிடந்தன. எங்கோ ஒரு நாய் அழுதது. அதற்கு இணையாக உள்ளே தொலைக்காட்சியில் ஒரு பெண் ஓவென்று அழுது கொண்டிருந்தாள். தலைமேல் இடியே விழுந்தாலும் சித்ரா சீரியல் பார்ப்பதை நிறுத்தமாட்டாள். ‘இப்ப இருக்க நெலமைக்கு எனக்கு பைத்தியம் புடிக்காம இருக்குன்னா அதுக்கு டிவிதான் காரணம்’ என்கிற சப்பைக்கட்டு வேறு.

சட்டென மின்சாரம் தடைபட்டுப் போனது. கோடைக்காலத்தில் மின்சாரம் போவதும் வருவதும் சகஜம்தானே. தொலைக்காட்சி முன் தேமே என்று அமர்ந்திருப்பவர்கள் மின்சாரம் போய்விட்டால் வாசலை நோக்கிப் படையெடுப்பர். ஒவ்வொரு வீட்டு வாசலிலும் நாலைந்து தலைகள் தென்படும். சித்ரா சலிப்போடு எழுந்து வெளியே வந்தாள்.

“நல்ல சீனு போயிகிட்டிருந்துச்சு. எழவெடுத்த கரண்ட்டு நின்னு போச்சு” என்றபடியே படியில் அமர்ந்தவள், “என்னா தூங்கிட்டீங்களா…?” என்று சத்தமாகக் கேட்க, குமாரசாமி தலையாட்டினார். “பலத்த யோசனையில இருக்கமாதிரி இருக்கு.”

“அதெல்லாம் ஒன்னுமில்ல” என்றவர் கைகளை உயரே தூக்கி நெட்டி முறித்தார்.

கடையை இழுத்து மூடி ஒரு மாதத்துக்கு மேலாகிவிட்டது. வேலை பார்த்த நாலு பேருக்கும் ஏதோ ஒருவழி செய்தாகிவிட்டது. கடையை விற்றுக் கடனையும் அடைத்தாகிவிட்டது. ஆரம்பத்தில் துவண்ட மனசு உடனே நிமிர்ந்துவிட்டது. முதுகில் மூட்டை சுமந்து நடக்கிறவன் மூட்டையை இறக்கிவைத்துவிட்டு ஆசுவாசப்படுத்திக் கொள்வானே. அப்படிப்பட்ட மனநிலைதான் அவருக்கும். ஆனால் சித்ராவுக்குதான் பொறுக்கவில்லை.

“கவலையே இல்லாம ஒக்காந்திருக்கீங்களே…. ஒங்க மனசுல என்னாதான் நெனப்பிருக்கு. மாசமானா சொளையா பத்தாயிரம் தேவைப்படுது. பேங்க்குலேருந்து வர்ற வட்டிப்பணம் பத்து தேதிக்கு கூட காணாது” என்று அடிக்கடி புலம்பித் தீர்த்தாள்.

“வாரத்துல ரெண்டுநாள் மாமிசம் சாப்புடுறத கொறைச்சு மாசத்துக்கு ரெண்டு நாளாக்கிடுவோம். மூணுவேளை காப்பிய ஒருவேளையா கொறைச்சிக்குவோம். இப்புடி ஒவ்வொன்னா கொறைச்சா போதும். நல்லா வாழ்ந்துடலாம்.”

குமாரசாமி சொல்லிப்பார்த்தார். சித்ரா ஒத்துக்கொள்ளவில்லை.

“நாக்கை கட்டி வாழணும்னு நமக்கென்ன தலையெழுத்தா… இந்தமாதிரி குருட்டாம்போக்குல யோசிக்கிறத வுட்டுட்டு உபயோகமா ஏதாவது யோசிங்க” என்றவள் விருட்டென எழுந்து உள்ளே சென்றாள். அந்நேரம் கவிதா இருந்தால் தேவலாமென்றிருந்தது அவருக்கு.

*

குமாரசாமி வேலைக்குக் கிளம்பிவிட்டார். புதிதாக ஆரம்பிக்கப்பட்டிருந்த அந்த சூப்பர் மார்க்கெட்டில் பில்லிங் கவுண்டரில் வேலை. மாதம் ஏழாயிரம் சம்பளம். சித்ராவுக்குத் தலைகால் புரியவில்லை.

“ஒங்கப்பாருக்கு இப்பதான் ஞானோதயம் வந்திருக்கு. தொழிலு போச்சே, என்னா செய்யிறது அப்புடிங்குற கவலை இல்ல மனுசனுக்கு. தேவைய கொறைச்சிகிட்டு நிம்மதியா வாழலாமுன்னு தத்துவம் பேசுனா கோவம் வருமா வராதா…”

சித்ரா மகளிடம் போனில் அங்கலாய்த்துக் கொண்டிருந்தாள். கவிதாவுக்கு உள்ளே வலித்தது.

“பறவையா பொறந்தா வானத்த அளக்கலாம். சிங்கமா பொறந்தா காட்டை ஆளலாம். அட, ஒரு வெதையாப் பொறந்தா பூ, பழம், காய், நெழல் குடுத்து ஒதவலாம். ஆனா மனுசனாப் பொறந்தா…” என்று ஒருமுறை குமாரசாமி சொல்லி நிறுத்தியபோது கவிதாவுக்கு ஆர்வம் அதிகரித்தது.

“மனுசனாப் பொறந்த என்னாப்பா…?” ஆவலோடு கேட்டாள்.          

“எந்திரமா வாழலாம்… பாரு, அவனவனுக்கு ஆயிரம் தேவைங்க. அத பூர்த்தி செய்ய பாடுபட்டே காலம் ஓடிடுது. இயற்கைய ரசிச்சு, இயற்கையோட இணைஞ்சு வாழுற பக்குவம் இங்க யாருக்கு இருக்கு சொல்லு. கடவுள் படைப்புல வீணாப்போன படைப்புன்னா அது மனுசன்தான்.” குமாரசாமி அடித்துச் சொன்னது கவிதாவுக்கு அது இப்போது ஞாபகத்துக்கு வந்தது.

அந்த மிகப்பெரிய குளிரூட்டப்பட்ட சூப்பர் மார்க்கெட்டில் குமாரசாமி பில் கவுண்டரில் அமர்ந்திருந்தார். பில்லுக்குரிய பணத்தைப் பெற்று பில்லில் பெய்டு முத்திரை குத்திக் கொடுக்கவேண்டும். இதுதான் அவருடைய வேலை. காலை ஒன்பதிலிருந்து இரவு ஒன்பது வரை வேலை. தொடர்ந்து உட்கார்ந்திருந்ததில் முதுகு வலித்தது. வீட்டிற்கு வந்ததும் படுத்துக்கொள்ள உடம்பு கெஞ்சியது. வந்தவுடன் கைகால் கழுவி முடித்து சாப்பிட்டுவிட்டு உடனே சென்று படுத்துவிடுவார். உறக்கம் சடுதியில் தழுவிக்கொள்ளும். சித்ரா வழக்கம்போல தொலைக்காட்சியில் ஆழ்ந்துவிடுவாள்.

வேப்பமரம் யாரையோ எதிர்பார்த்து வேக வேகமாகக் கிளைகளை அசைத்தது. சுவரில் சாய்த்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஈஸிசேருக்கு கால்கள் வலித்தன.