ஒரு பத்து பதினைந்து வருடங்கள் முன்னர் பிளக்ஸ் அச்சுமுறை என்று ஒரு புதிய தொழில்நுட்பம் நம் நாட்டில் பரவலாக அறிமுகமானது. அந்த அச்சு யந்திரங்களின் விற்பனைப் பிரதிநிதிகள் சந்து பொந்துகளிலெல்லாம் புகுந்து எங்கும் அதைப் பரப்பினர். பெட்டிக்கடைகளைவிட அதிகரித்தன பிளக்ஸ் யந்திரங்கள். நூறடி நீளமானாலும் பத்தடி உயரத்திற்கு நிமிடத்திற்குப் பலப்பல சதுர அடிகளாக பிளாஸ்டிக் பேனர்கள் துப்பி எறியப்பட்டன. கடைகள் எங்கும் நவீன பெயர்ப்பலகைகள். வீதியெங்கும் ராட்சச பேனர்கள்… காது குத்து முதல் கண்ணீர் அஞ்சலி வரை, அரசியல் பொதுக்கூட்டங்கள் முதல் பிரம்மாண்ட மாநாடுகள் வரை உயர்ந்து நின்றன. ஒவ்வொன்றிலும் நூற்றுக்கணக்கான முகங்கள். கிராபிக்ஸ் துணையுடன் வேறு உடலில் புகழ் மாந்தர்கள் தோன்றினர். திரைப்பட அரங்கங்களுக்கு வெளியேயும் நகரத்து முக்கியச் சாலைகளிலும் நின்றிருந்த சினிமா பேனர்களும் கட்டவுட்களும் மறைந்து போயின. அந்த இடங்களில் குறைந்த விலையில் தெளிவற்று சாய அடர்த்தியற்ற பிளாஸ்டிக் பேனர்கள் வந்தன. ஓவியர்கள், பெயர்ப்பலகை எழுதுபவர்கள், சுவர்களில் எழுதும் கலைஞர்கள் அனைவரின் வயிற்றிலும் இடி விழுந்தது. அவர்கள் செய்து வந்த தொழில்கள், பணம் மட்டும் முதலீடு செய்த முதலாளிகள் கைகளுக்குச் சென்றன.
கையால் வரையப்பட்ட பேனர்களை ஒரு தலைமுறையே பார்த்திருக்குமா என்பது சந்தேகம்தான். இந்தக் கலையே தமிழகத்திலிருந்துதான் நாடெங்கும் பரவியது என்று சொல்வார்கள். சந்திரலேகாவுக்காக கே.மாதவன் போன்ற புகழ்பெற்ற ஓவியர்கள் பிரம்மாண்டமான பிளைவுட் கட் அவுட்களையும் பேனர்களையும் வரைந்து வடக்கத்திய மாநகரங்களை வியப்பில் ஆழ்த்தினர் என்று சொல்வதுண்டு. டி.ஆர்.ராஜகுமாரியின் ஜிமிக்கியே ஆள் உயரம் இருக்கும் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்! ‘கலை’ என்ற அற்புத பத்திரிகையை நடத்திய பாலு பிரதர்ஸ் தொடங்கி ஏராளமான ஓவியர்கள் இந்தத் துறையில் உருவானார்கள். சென்னை, திருச்சி, சேலம், கோவை மற்றும் மதுரையில் பேனர் ஸ்டுடியோக்கள் உருவாயின. இந்த இடங்களிலிருந்து பக்கத்து மாவட்ட தியேட்டர்களுக்கும் வரைந்து அனுப்பப்பட்டன.
ஒரு பேனருக்கு பின்னால் எத்தனை பேரின் உழைப்பு இருந்தது என்பது ஒரு வியப்பான விஷயம். சில்வர் ஓக் ரீப்பர்களை ஒன்றரை அங்குலம் அகலத்திற்கு நீளமாக நறுக்கவேண்டும். மர ஆலைகளிலிருந்து கட்டுக்கட்டாக ரீப்பர்கள் வரும். காடா துணி கொள்முதல் இன்னொரு பெரிய வேலை. பண்டல்களாக வாங்கினால் விலை அதிகம் என்பதால் கட்பீஸ் துணிகளைத் தேடவேண்டும். அத்தனையையும் தையல் இயந்திரத்தின் மூலம் இணைக்கவேண்டும். பத்தடி, எட்டடி, ஆறடி அகலத்திற்கு காடா துணிகள் தயாரானவுடன் ரீப்பர் சட்டங்களை தச்சர் அடித்து வைப்பார். 20×10, 20×8, 15×10, 15×8, 12×10, 12×8, 10×10, 10×8 என்ற அளவிலான சட்டங்களில் காடா துணி புளூ டாக்ஸ் ஆணிகள் மூலம் இணைக்கப்படும். இனி துணியை வரைவதற்கேற்ப தயார் செய்யவேண்டும். இதற்கு ஒரு விதமான பசை தேவை. மூட்டைக்கணக்கில் வஜ்ஜிரம் வாங்கிக் கொதிக்க வைக்கப்படும். மாட்டுக் கொழுப்பிலிருந்து எடுக்கப்படுவதால், தாங்க முடியாத ஒரு நெடி இதிலிருந்து கிளம்பும். மூட்டை மூட்டையாக சாக் பவுடரும் தயாராக இருக்கும். நன்கு கொதித்துவந்த வஜ்ஜிரத்தில் சாக் பவுடரைக் கலந்து பசை போன்ற ஒரு கலவையை உருவாக்கி, படுத்த வாக்கில் வைக்கப்பட்டிருக்கும் பேனர் மீது ஒரு சப்பையான பிரஷ் கொண்டு மெழுகவேண்டும். நல்ல வெயிலடித்தால் இந்தக் கலவை காய்ந்துவிடும். அதன்மீது இன்னொரு கோட் பிரைமர் அடிக்கவேண்டும். பிரைமரை இளகச் செய்ய வார்னிஷைக் கலப்பார்கள். இதுவும் வெய்யிலில் காய்ந்த பிறகு வரைவதற்கான நாட்டு கான்வாஸ் தயார். இதையெல்லாம் செய்ய உதவியாளர்கள் இருப்பார்கள். பெரும்பாலான பேனர் ஓவியர்களுக்கு பாலபாடமும் சகிப்புத்தன்மைக்கான தேர்வும் இங்கிருந்துதான் தொடங்கும்.
இதன் மீது தேவையான படங்களை ஸ்கெட்ச் செய்யவேண்டும். பொதுவாக பேனர் விளம்பரங்களுக்கான ஸ்டில்கள், அந்தப் படங்களின் விநியோகஸ்தர்களுக்கு அனுப்பி வைக்கப்படும். வண்ணப்படக் காலங்களில்கூட கருப்பு வெள்ளை புகைப்படங்கள்தான் அனுப்பி வைக்கப்பட்டன. பின்னர் கலர் லாப்கள் பெருகி, கருப்பு வெள்ளை பிரிண்டுகள் அருகத் தொடங்கியவுடன், வண்ணப்படங்கள் வரத்தொடங்கின. ஸ்கெட்ச் செய்ய அந்தக் காலத்தில் மேஜிக் லாண்டர்ன் என்ற சிலைடு புரஜெக்டரையே ஓவியர்கள் பயன்படுத்தி வந்தனர். இதற்காக இரவில் அந்தப் புகைப்படங்களை ஸ்டாண்டு காமெரா பயன்படுத்தி ரீகாபி செய்வார்கள். நெகடிவுக்கு பதிலாக அக்பா கம்பனியின் ரசாயனம் பூசப்பட்ட கண்ணாடி சிலைடுகளைப் பயன்படுத்தினர். பின்னர் இந்தக் கண்ணாடி நெகடிவ்களை, மேஜிக் லாண்டர்னில் பொருத்தி ப்ரொஜெக்ட் செய்தால் பிரம்மாண்டமாக பேனரில் தெரியும். அதன் மீது காப்பியிங் பென்சில் கொண்டு ஸ்கெட்ச் செய்வார்கள். மனதிற்குள்ளேயே ஒரு வடிவமைப்பு நிகழ்ந்திருக்கும். பின்னர் எபிடியாஸ்கோப் என்ற ஒரு கருவி வந்தது. இதற்கு சிலைடு எல்லாம் தேவையில்லை. புகைப்படத்தையே கருவிக்குள் வைத்து இயக்கினால், திரையில் பிரம்மாண்டமாகத் தெரியும். ஸ்கெட்ச் எடுக்க முக்கியமான தேவை இருள். வெளிச்சத்தில் ஒன்றும் செய்ய இயலாது.
ஸ்கெட்ச் செய்தவுடன், அதைத் திருத்தி, பின்னணி வண்ணங்கள் அடிக்கப்படும். உருவங்களுக்கு ஒரு கோட் ஆரஞ்சும் வெள்ளையும் கலந்த கலவை அடிக்கப்படும். அதுவும் காய்ந்தவுடன்தான், ஓவியம் முழுமையாக வரைந்து முடிக்கப்படும். படத்தின் டைட்டில்களை புளோரசன்ட் வண்ணத்திலும் மற்ற எழுத்துக்களைப் பொருத்தமான வண்ணத்திலும் எழுதுவார்கள். இதற்குப் பயன்படுத்தப்பட்ட வண்ணங்கள் ஆயில் பெயிண்ட்டுகள்தான். போர்ட்ரெயிட் ஓவியர்களைப் போல டியூப்களில் வாங்க முடியாது. கட்டுப்படியும் ஆகாது. மூட்டைக்கணக்கில் வண்ணப்பொடிகள் வாங்கப்படும். வெள்ளை வண்ணம் மட்டும் (2727 என்ற பிராண்டு) களிம்பு போன்ற கலவை பத்து கிலோ டின்களிலும், லின்சீட் ஆயில் இருபது லிட்டர் டிரம்களிலும், பர்ண்ட் சியன்னா, ரா சியன்னா, ஆரஞ்சு (ஈயச் செந்தூரம்), சிகப்பு, நீளம் போன்றவை பொடி வடிவத்தில் மூட்டைகளில் வாங்கப்படும். சிறப்பு வண்ணம் சேர்க்க மெஜந்தா அல்லது மாவ் பிரிண்டிங் இங்க், குருவி நீலம் என்றழைக்கப்பட்ட ராபின் அல்ட்ராமரின், வெள்ளை, கருப்பு, கிரிம்சன் எனாமல் பெயிண்டுகளும், அனைத்து வண்ணங்களிலும் புளோரசன்ட் பெயிண்ட்டுகளும் பயன்படுத்தப்பட்டன. பட்டையான தூரிகைகள் நம்பர் இரண்டிலிருந்து பன்னிரண்டு வரையிலும், பெரிய பிரஷ்கள் ஒரு அங்குலம் முதல் நாலு அங்குலம் வரையிலும் வாங்கப்படும். இந்த வண்ணங்களையும் பிரஷ்களையும் கடனுக்கு சப்ளை செய்ய அம்பாலாவிலிருந்து கூட சர்தார்ஜிகள் வருவார்கள்.
ஓவியர்கள் இதே துறையில் நீண்ட நாட்கள் பயிற்சி பெற்றவர்களாக இருப்பார்கள். பத்தடி உயரமான ஒரு நடிகரின் தலையை வரைய கடும் உடலுழைப்பும் வலிமையும் வேகமும் தேவைப்படும். பெஞ்சிலும் குதிரை என்றழைக்கப்பட்ட கோடாவிலும் ஏறி இறங்கி, குதித்து, அமர்ந்து, நின்று எல்லாம் வரையவேண்டும். ஜாடையும் மாறக்கூடாது. கருப்பு வெள்ளை புகைப்படங்களை வரையும்போது ஓவியனுக்குக் கட்டற்ற சுதந்திரம் இருக்கும். அவனது விருப்பம் போல வண்ணங்களைப் பயன்படுத்தலாம்.
பிளைவுட் கட்டவுட்கள் இன்னுமொரு மாய வித்தை. நாற்பது அடி ஐம்பது அடிக்கெல்லாம் உருவத்தைப் பிரித்து, ஸ்கெட்ச் செய்து வெட்டி, ரீப்பர்களில் அரைந்து, பகுதி பகுதியாக வரையும் ஒரு மாபெரும் சாதனை. தீபாவளி போன்ற பண்டிகை சமயங்களில் இரவும் பகலும் வேலை நடக்கும். ஒரு ஓவியக்கூடத்தில் குறைந்தது பத்து பேருக்கு வேலை இருக்கும்.
ஒவ்வொரு தியேட்டர்களுக்கும் அவர்கள் கட்டட அமைப்புக்கேற்ப பேனர்கள் கட்டவுட்களின் அளவு வேறுபடும். கோவை போன்ற ஒரு நகரத்தில், கோவையின் ஒவ்வொரு தியேட்டரின் அளவுகள் மட்டுமல்ல, பொள்ளாச்சி, ஊட்டி, உடுமலை, ஈரோடு, திருப்பூர், காங்கயம், தாராபுரம் போன்ற ஊர்களின் ஒவ்வொரு தியேட்டர் அளவும் மனப்பாடமாக தெரியும். பெரும்பாலும் படம் வெளியாவதற்கு இரண்டு மூன்று நாட்கள் முன்னர்தான் தியேட்டர்கள் தெரியும். அதற்கேற்ப அனைத்து அளவுகளிலும் பேனர்கள் ரெடியாக இருக்கும். மழை நேரங்களில் பெரும் சோதனையாக இருக்கும். காய வைக்கவேமுடியாது. வெளியூர் பேனர்கள் காய்ந்து பின்னர் சுருட்டப்பட்டு, பேருந்துகளின் கூரை மீது ஏறிப் பயணிக்கும். உள்ளூர் பேனர்களும் கட்டவுட்களும் இரவு நேரங்களில் கைவண்டிகள் மீது, ரோட்டையே அடைத்துப் பயணித்து தியேட்டர்களை அடையும்.
இவ்வளவு மூலதனத்திற்கும் உழைப்புக்கும் எற்ற ஊதியம் கிடைப்பதுதான் சந்தேகம். பெரும் நஷ்டத்தை அடைந்த ஓவியர்கள்தான் ஏராளம். பணம் தராமல் ஏமாற்றியவர்கள் மீது வழக்கு தொடர்ந்தால், அவ்வளவுதான், யாரும் பிறகு அண்டமாட்டார்கள்.
வேலாயுதம் |
கோவை நகரத்தில் சினி ஆர்ட்ஸ் என்ற நிறுவனத்தை 1954ல் என் தந்தை திரு வேலாயுதம் தொடங்கினார். முதல் படம் கோவை ராயல் தியேட்டரில் தூக்குத்தூக்கி. அவர் மறைவுக்குப் பின் அதை நான் தொடர்ந்தேன். பிளக்ஸ் வருகைக்கு முன்வரை ஓய்வில்லாத பணிகள்தான். கடும் உழைப்பு, கடும் வேகம். வரம்புகளை உடைத்த வண்ணக்கலவைகளின் ஜாலம், ரசிகர்களின் பாராட்டுக்கள் எனக் காலம் போனது. சத்யராஜும், ரகுவரனும் வரைவதைப் பார்க்க வந்தவர்கள். இயக்குநர் மணிவண்ணன், ஜான் அமிர்தராஜ் போன்றவர்கள் சில குறைந்த காலங்கள் இங்கு பணி புரிந்தனர். வரைவதற்கு எனக்கு மிகவும் பிடித்த முகங்கள், சிவாஜி, ரஜினி மற்றும் விஜயகாந்த். முக வடிவங்களும் தோலின் நிறங்களும் அளவற்ற சுதந்திரத்தைத் தந்தன. தமிழில் பின்னர் வந்த புதிய அலைத் திரைப்படங்களுக்கும், பிறமொழிப்படங்களுக்கும் வரைவதென்றால் மிக மகிழ்வேன்.
தியேட்டர்களில் வைக்கப்பட்ட பேனர்களையும் கடவுட்களையும் காண்பதற்கென்றே ரசிகர்கள் ஊர் சுற்றி வந்தனர். இன்று வெளுத்துக்கிடக்கும் பிளக்சை யாரும் திரும்பிக்கூடப் பார்ப்பதில்லை என்பதுதான், துவண்டு கிடந்தாலும், மனதில் ஒரு வெற்றிப்புன்னகையை தரும் ஒரு இனிமையான பிளாஷ்பேக்.
(இந்தக் கட்டுரையில் உள்ள பேனர் ஓவியங்கள் அனைத்தும் ஓவியர் ஜீவாவின் கைவண்ணத்தில் உருவானவை)