Posted on Leave a comment

எங்கும் பரந்து பல்லாண்டொலி (சிறுகதை) | கிரி பிரசாத் கண்ணன்

காலம் பதிமூன்றாம் நூற்றாண்டின் முற்பகுதி. பாண்டிய நாடு முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியர் தலைமையில், திருமால் திருவடி மூவுலகும் பரந்தது போல், எங்கும் பரந்து வீறு கொண்டு எழுந்து நின்றது. Continue reading எங்கும் பரந்து பல்லாண்டொலி (சிறுகதை) | கிரி பிரசாத் கண்ணன்

Posted on Leave a comment

சோழாந்தக சதுர்வேதி மங்கலம் (சிறுகதை) | கிரி பிரசாத் கண்ணன்

பாண்டிய நாட்டின் ஆனைமலை அடிவாரத்தில் நால்வர், உயர் சாதிக் குதிரைகளில் அமர்ந்தபடி ஏதோ மேற்கு தேசத்துப் பாஷையில் பேசிக்கொண்டார்கள். அங்கிருக்கும் குடவரை நரசிம்மர் கோவில் பின்புறம் வித்யாசமான சங்கேத மொழி போல் எழுந்த சப்தம் கேட்டு அவர்கள் அங்கு விரைந்தனர். ஒரு நாழிகையில் அழகாபுரி கோட்டை மலையடிவாரத்தில் மேலும் சிலர் மலையாளம் கலந்த தமிழில் ஏதோ பேச, அதில் தலைவன் போன்ற ஒருவன் ஆமோதித்துச் சிலவற்றைச் சொன்னான். அவையனைத்தையும் மறைவிலிருந்து ஒரு உருவம் கண்காணித்து வந்தது. இரவு மூன்றாவது சாமம் முடியும் நேரம். காலம் 12ம் நூற்றாண்டின் இறுதி. Continue reading சோழாந்தக சதுர்வேதி மங்கலம் (சிறுகதை) | கிரி பிரசாத் கண்ணன்

Posted on Leave a comment

திருநாராயணநல்லூர் கண்ணாழ்வார் (சிறுகதை) | கிரி பிரசாத் கண்ணன்

காலம் – பதினொன்றாம் நூற்றாண்டு; இடம் – மதுரை, திருவானைமலை – திருமாலிருஞ் சோலை செல்லும் பாதை.

‘தட தட தட..’ என்று வெண்ணிறப் புரவிகள் அந்த வண்டிப் பாதையில் அதிவேகத்தில் பறந்து கொண்டிருந்தன. உயர்சாதிப் புரவி ஒன்றில் ஆஜானுபாகுவான ஓர் இளைஞன் வந்து கொண்டிருந்தான். அவனைப் பார்க்க ஒரு மன்மதனைப் போல இருந்தாலும், முகத்தைச் சற்றே மறைத்துத் துகிலொன்று கட்டியிருந்தான். அவனைத் தொடர்ந்து இரண்டு பிரிவுகளில் சிலர் வர, கூப்பிடு தூரத்தில் மேலும் சிலர் வந்து கொண்டிருந்தார்கள். இளைஞன் போய்க் கொண்டிருந்தபோது திடீரென்று வலது திசையில் ஏதோ பேச்சுக்குரல் கேட்டது. அதுவோ அடர்ந்த காடு. அந்த வழி திருமாலிருஞ்சோலை மலையிலிருந்து நரசிங்கமங்கலத்தை இணைக்கும் வண்டிப்பாதை. Continue reading திருநாராயணநல்லூர் கண்ணாழ்வார் (சிறுகதை) | கிரி பிரசாத் கண்ணன்

Posted on 2 Comments

பறை தாராய்! (சிறுகதை) | கிரி பிரசாத் கண்ணன்

பொழுது புலர்ந்து கொண்டிருந்தது. பறவைகள் ஒலி, நேரம் அதிகாலை என்று உணர்த்தியது. பாஸ்டன் நகரில் அஷோக் வரதன் குழாயை இடதுபுறம் திருப்பி, பன்னாட்டு நிறுவன பற்பசை கொண்டு, வெந்நீரில் பல் தேய்க்கலானான். Continue reading பறை தாராய்! (சிறுகதை) | கிரி பிரசாத் கண்ணன்

Posted on Leave a comment

திருமாலிருஞ் சோலை நின்றான் வாணாதிராயன் (சிறுகதை) | கிரி பிரசாத் கண்ணன்

கதையின் காலம் பதினான்காம் நூற்றாண்டு. பாண்டியர்கள், வாணாதிராயர்கள்
காலம். அரசரின் கோவில் திருப்பணிகள், குரு பக்தி, தேச பக்தி அனைத்தும் கலந்து காண முடிந்தது
நம் வரலாறுகளில். பல நூற்றாண்டுகளுக்கு முன் எழுதிய ‘யதீந்திரப்ரணவ ப்ரபாவம்’ என்ற
வைணவ வரலாற்று நூல் மேற்கோலிட்ட விஷயம், கோவில் கல்வெட்டுகளில் உள்ள சில செய்திகள்,
சமகால நிகழ்வுகள் எல்லாம் கோத்து இந்தக் கதையைப் புனைந்துள்ளேன். மதுரையின் மேலுமொரு
வரலாற்றுச் சிறப்பு மிக்க, அழகிய தமிழ்ப் பெயர் கொண்ட இடம், பெயரும் திரிந்து வணிக
கட்டடங்களோடு இருக்கிறது. பல ஊர்களின் பெயர்கள் திரிந்து தொன்மை மாறி உள்ளன. வரலாற்றிக்குப்
பாதிப்பில்லாமல் சில கற்பனைகளும் உண்டு.
*
பாண்டி மண்டல ஸ்தாபனாச்சாரியார் என்ற விருது
கொண்ட தாங்கள் ஏனோ ஆழ்ந்த சிந்தனையில் உள்ளீர் போல் தெரிகிறதே மன்னா?
அமைச்சரின் கேள்விக்கு திருமாலிருஞ்சோலை நின்றான் மாவலி வாணாதிராயர்
உடனடியாய் பதில் தரவில்லை.
ஆம் அமைச்சரே.. பாண்டிய நாட்டை அந்நிய ஆட்சியால் ஏற்பட்ட அழிவிலிருந்து
மீட்டுக் குழப்பத்தை ஒழித்து மதுரையிலிருந்து ஆட்சி செய்ததால்
பாண்டியமண்டல ஸ்தாபனாசாரியன் என்றும், புதுக்கோட்டையில்
கோலோச்சிய சோழனை வென்று
சோழ மண்டல பிரதாபச்சாரியன் என்றும் விருது
கொண்ட இந்த வாணவராய வம்சம், காஞ்சி வரை பரவியிருந்தாலும் இன்றும் விஜய நகர அரசின் கீழ்
தான் இருக்கிறது. இன்று லக்கணதண்ட நாயக்கர் முன் தென்காசி பாண்டியன் இவ்வாறு பேசுவாரென்று
துளியும் எதிர்பார்க்கவில்லை. அதுதான் அடுத்தகட்ட யோசனையில் இருந்தேன்..
மன்னர் அமைச்சரிடம் நீண்ட சிந்தனைக்குப் பின் சொன்னார். அதற்குள்
தேர் மதுரை அரண்மையை நெருங்கிக்கொண்டிருந்தது.
அவர்கள் திருசிராமலையிலிருந்து வந்து கொண்டிருந்தனர்.
அது மிகவும் முக்கியக் காரியமென்பதால் பிரதான அமைச்சர் நரசிங்கத் தேவரும், காரியாதிகாரி
பஞ்சவராயரும் உடன் பயணித்தனர். ஒரு சிறு படையும் உடன் இருந்தது.
அமைச்சரே, நாயக்கர் சொன்ன விஷயம் தொடர்பான முடிவுகள் எடுக்க உடன்
மந்திராலோசனை கூட்டம் ஏற்பாடு செய்ய வேண்டும்..
அவ்வமயம் மன்னர் எதையோ கண்ணுற்றவராய், தேரோட்டி, சற்றே நிறுத்தும்.. அங்கேதோ கூட்டம் கூடியிருக்கிறதே… என்றார். அரசன் பார்வை கூட்டத்தின் நடுவில் இருந்த ஒரு துறவியிடம்
இருந்தது. அவர் வைணவ சின்னங்கள் தரித்து திருவாழியின் நிறத்தையொத்த திருமேனியோடு இருந்தார்.
அவரின் திருமேனி ஒளியே அரசனை அங்கிழுத்தது. தேரும் நின்றது. சாரதி தேரை நிறுத்தும்
காலம் பதினான்காம் நூற்றாண்டில் நாற்பது வருடங்கள் கடந்திருந்தன. பல அரசியல் குழப்பங்களோடு
பாண்டியநாடு விஜயநகரப் பேரரசின் கீழ் இரு பிரிவுகளாய் இருந்தது.
தேரை விட்டு இறங்கி மக்கள் கூட்டம் இருக்குமிடத்திற்குச்
சென்றான் மன்னன். உடன் அமைச்சரும் சென்றார்.
அந்த வைணவத் துறவியைச் சுற்றி சிங்கங்கள் போல் எட்டு
சிஷ்யர்கள் இருந்தார்கள். அவர் நடு நாயகமாய் நின்று, அந்த இடத்தின் பெருமையைப் பற்றிச்
சொல்லிக்கொண்டிருந்தார். மன்னன் வந்ததும் தெரியாமல் அங்கிருந்தவர்கள் அதில் மூழ்கியிருந்தனர்.
அவர் திருமாலின் பெருமைகளைச் சொல்ல, அரசனும் நின்று கேட்டுக்கொண்டிருந்தார். அவர்கள்
நின்ற இடம் பாண்டிய அரண்மனையின் மேல் திசையிலும், கூடல் அழகர் கோவிலுக்கு வடக்கே சற்று
தூரத்தில் இருந்தது.
அங்குதான் வைணவ ஆழ்வாரான பெரியாழ்வார், ஸ்ரீவல்லப
பாண்டியன் சந்தேகத்திற்குத் தக்க சமாதானம் கூற, பொற்கிழி தானே இறங்கி வந்தது. உடன்
திருமாலும் கருடன் மீதேறி வந்து அருளினார். வியூக சுந்தரனான திருமாலின் மீது கண்ணெச்சில்
பட்டுவிடக்கூடாதென்று பெரியாழ்வார்
பல்லாண்டு என்ற தமிழ்ப் பதிகம் பாடினார். இந்தக் கதையைச் சுவைபட, சொல்வன்மை
மிக்கவரான வைணவத் துறவியும் சுற்றி இருந்தோர்க்குக் கூறினார் இந்த பாடலோடு.
கோதிலவாமாழ்வார்கள் கூறுகலைக்கெல்லாம்
ஆதி திருப்பல்லாண் டானதுவும் * வேதத்துக்கு
ஓமென்னு மதுபோல் உள்ளத்துக்கெல்லாம் சுருக்காய் *
தான் மங்கலமாதலால்
அன்று பெரியாழ்வார் கருடன் மீது வந்த பெருமானைக் கண்ட
இடத்திற்கே சென்றுவிட்டார் அவர். அங்கிருந்த மணல் அன்றொருநாள் பெரியாழ்வார் திருப்பாதம்
பட்ட இடமாய் இருந்திருக்கும் என்று கூறி அங்கு வணங்கி, விழுந்து புரண்டார். இந்த பக்தியைக்
கண்ட அரசன் தன்னிலையை மறந்தான். அங்கிருந்த சிறு பாலகன் ஒருவர் இவ்வாறு பாடினார்.
ஈதோ கூடல்! ஈதோ புள்ளேறி வந்தவிடம்*
ஈதோ மெய் காட்டிய கரம்பு*
ஈதோ பாண்டியன் கொண்டாட பட்டர்பிரான்
பல்லாண்டென்று காப்பிட்ட இடம்*
அந்த பாடல்களைக்கேட்டு ஆஹா..ஆஹா.. என்ற பேரொலியோடு அங்கிருந்தவர்கள் எல்லாம் தொழுது நின்றனர். அப்போதுதான்
அரசன் அங்கு வந்ததை அந்த வைணவ குழாம் கவனித்தார்கள். அரசன் துறவியின் கால்களில் விழுந்து
வணங்கினார்.
மன்னன் தன் விருதுகள் சொல்லாமல், அடியேன், திருமாலிருஞ்சோலை நின்றான் வாணாதிராயன்.. என்றார். அந்த பக்தி, அவரின் பெயர் எல்லாம் கண்டு மன்னர் வைணவ வழியில்
வருபவர் என்று துறவி அறிந்துகொண்டார்.
அருகிருந்த வைணவ அடியார்களில் ஒருவர் துறவி பற்றி, ஸ்வாமி, அழகிய மணவாள ஜீயர். நாங்கள் கோவிலிருந்து (ஸ்ரீரங்கம்) வருகிறோம்.
பாண்டிய நாட்டு திவ்ய தேச யாத்திரை போய்க்கொண்டிருக்கிறோம்
என்று கூறினார்.
ஸ்வாமிகளைத் தரிசித்தது அடியேன் பாக்யம். இந்த பாண்டிய மண்டலமே பேறு
பெற்றது தங்களின் பொன்னடி பட்டதால். இராமானுசரின் மறு அவதாரமான மணவாள மாமுனிகளே அடியார்களோடு
இங்கு வந்தது நாங்கள் செய்த புண்ணியம்.
அரசன், தான் ஏற்கெனவே வைணவத்தில் ஈடுபட்டிருந்ததால் அவர்கள் பற்றி
அறிந்திருந்தார். மேலும் அரசரின் முன்னோர் வாணாதிராயர்கள் சில காலம் முன் மதுரையில்
ஏற்பட்ட அந்நிய படையெடுப்பில் அங்கிருந்த கோவில்களைப் பாண்டியர்களோடு தோள் தந்து காத்தனர்.
அப்போது அங்கு பிரதான அமைச்சரான திருமலையாழ்வார் மூலம் மீண்டும்
வைணவத்தைத் தழுவினர். அவரோடு சேர்ந்து ஸ்ரீரங்கம் உத்ஸவ மூர்த்தியைக் காத்து சேர தேசம்
வரை சேர்த்தனர். வாணாதிராயர்கள் சிறந்த நிர்வாகத் தலைவர்களாக பாண்டியர்களுக்கு ஆபத்துக்காலங்களில்
உதவினர். பாண்டியர்கள் சார்ந்த மதத்தையே ஏற்று நடந்தனர். திருமலையாழ்வார்தான் பின்னாளில்,
அரச பதவியைத் துறந்து திருவாய்மொழிப் பிள்ளை என்ற நாமத்தோடு வைணவத்தை வளர்த்து இந்த
மாமுனிகளைத் தன் சிஷ்யராய்ப் பெற்றார்.
நரசிங்கத்தேவரே, இவர்கள் நம் முன்னோர் இராஜாங்க பிரதானி திருமலையாழ்வார்
வழி வருபவர்கள். ஒரு வகையில் மதுரையம்பதியை பிறந்த வீடாய்க் கொண்டவர்கள். அடியார்களனைவரையும்
நம் அரண்மனை அருகில் இருக்கும் அப்பன் திருவேங்கடமுடையான் மடத்தில் தங்குவதற்கு சிறப்பான
ஏற்பாடுகள் செய்யுங்கள்
என்றார் அமைச்சரிடம்.
பின் மாமுனிகளிடம், அடியேன்… ஸ்வாமிகள்
சந்திவேளையில் கூடல் திருக்கோவில் மங்களாசாசனம் செய்யவேணும். அதற்குள் சிறிது இராஜ்ய
விஷயம் முடித்துவிட்டு வருகிறேன்.
அவரும் ஆமோதித்து
அருள, அனைவரும் செல்லத்தொடங்கினர்.
அரசன் அரண்மனை அடைந்ததும், சிறிது நேரத்தில் இளவரசனோடு மந்திராலோசனை
மண்டபம் விரைந்தார். அங்கு, நரசிங்க தேவர், பஞ்சவராயர், சோழக் கோனார் போன்ற தளபதி,
அரசு அதிகாரிகளும், சுந்தர சோழபுரத்து நகரத்தார், வட்டாற்று நாட்டார், பின்முடிதாங்கினார்
போன்ற ஊர்த்தலைவர்களும் இருந்தனர். அரசனின் உத்தரவின் படி ஊர்த் தலைவர்களும் வந்திருந்தனர்.
அவையோரே… நம் நாட்டின் மீது தாக்குதல் இல்லை. ஆனாலும் நாம் இன்று
சற்று வித்தியாசமான சூழலில் இருக்கிறோம். அது பற்றித்தான் விவாதிக்க இங்கு கூடியுள்ளோம்.
அந்நியப் படையெடுப்பில் சிதைந்து போன நம் பாண்டிய மண்டலம், கம்பண்ண உடையாரால் மீண்டு,
விஜயநகர அரசர்களுக்குக் கீழ் இருந்தது. அந்தக் காலங்களில் பாண்டிய நேரடி வாரிசு இல்லாததால்,
பாண்டியர் மண உறவில் வந்த வாணாதிராயர்கள் பாண்டிய மண்டலத்தில் அரசரானோம். ஆனாலும் தென்காசியைத்
தலைநகராய்க் கொண்டிருக்கும் கொற்கை பாண்டியர்கள் மதுரையைக் கைப்பற்ற ஏற்கெனவே போர்
செய்து தோற்றனர். இப்போதும் பராக்கிரம பாண்டியன் சந்தர்ப்பம் பார்த்துக்கொண்டுதான்
இருக்கிறார். இவை எல்லாம் தாங்கள் நன்கு அறிந்தது
என்றார் அரசர்.
இரண்டாம் தேவராயரின் அரசியல் அதிகாரி லக்கண தண்ட நாயக்கர் அழைப்பின்
பேரில் திருசிராமலையில் ஒரு கூட்டம் நடந்தது. அங்கு பாண்டியனும் வந்திருந்தார். நாங்கள்
அங்கு சந்திப்போமென்று இருவருமே எதிர்பார்க்கவில்லை..
அரசே, இது என்ன? இருவரும் நேரில்.. தகுந்த பாதுகாப்பு இல்லாமல்..
எதுவும் விபரீதம் நடக்கவில்லையே…?
பதறினார் சோழக்
கோனார்.
அழகர் கிருபையில் விபரீதம் இல்லை. ஆனால் போய் வந்த விஷயம்தான் கொஞ்சம்
யோசிக்க வேண்டியிருந்தது.
என்ன அரசே? பாண்டியர் மீண்டும் ஏதாவது.. என்று பல்லவராயர் சொல்லவும், இல்லை.. விஜயநகர
அரசு தன் ஆளுமையைக் கடல் கடந்து நீட்டிக்க விரும்புகிறது. ஈழம் வரை. ஆம்!. புது யுத்தம்.
சற்றே நிறுத்தித் தொடர்ந்தார். அவர்கள், நம்
படைகளோடு, பாண்டியப் படையும் சேர்த்துக்கொண்டு ஈழத்தைக் கைப்பற்ற நினைக்கின்றனர். ஒரு
பெரும்படை விஜயநகரிலிருந்தும் வரும். இவ்வழியே ஈழம் வரை செல்லும்..
நாம் ஏற்கெனவே விஜயநகர் ஆட்சிக்குட்படாமல் சில காலமாய் தனியே இருக்கிறோம்.
ஆனாலும் சுதந்திரமாய்ச் செயல்படவில்லை. இந்தச் சமயத்தில் நாம் எப்படி அவர்கள் படையை
அனுமதிப்பது, அதுவும் பாண்டிய படைகளோடு சேர்த்து?
என்றார் அமைச்சர்.
ஆம் அமைச்சரே. அதுதான் நானும் யோசித்தேன். பாண்டியர்களும் இதற்கு
உடன்படவில்லை. பின் நாயக்கரிடம் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டேன்.
என்ன அரசே? அனைவரும் திகைப்பில் கேட்டனர்.
விஜயநகரப் படைகள் நம் மண்டலத்துக்குள் நுழையாது. இந்தப் போரில் படைகள்
நம் பாண்டி மண்டலத்திலிருந்துதான் செல்லும். விஜயநகர முக்கியப் படைகள் மட்டும் வரும்.
தென்காசி பாண்டியர்களும் இதே போல் உதவுவார்கள். நம் படை தென்காசி தாண்டிச் செல்ல இடையூரில்லை.
போரின் வெற்றிக்குப் பின் விஜயநகர அரசிடமிருந்து முற்றும் பிரிந்து பாண்டிமண்டலம் தன்னாட்சி
பெறும். இதுவே சாராம்சம்.
அரசர் தொடர்ந்தார். இப்போது கார்த்திகை
மாதம். வரும் மாசி மாதத்தில் நம் படைகள் கிளம்பும். இங்கிருந்து நான் அரச நிர்வாகம்
செய்வேன். இளவரசன் சுந்தரத்தோளுடையான் நம் படைகளை வழி நடத்திக் கொண்டு செல்வான். ஊர்த்தலைவர்கள்
படைகளைத் தயார் செய்யும் வேலைகளைச் செய்யுங்கள்.
அனைவரும் இதை ஒத்து தங்கள் கருத்துக்களைச் சொன்னார்கள்.
நல்லது மன்னா. இளவரசரின் இந்த முதல் போரில் நாம் வெற்றிபெறுவோம்.
இந்த வெற்றியின் மூலம் நம் இளவரசரும் பாண்டிமண்டல நவ ஸ்தாபனாச்சாரியர் என்று புகழ்பெறுவார்
என்றார் அமைச்சர்.
யுத்தம் காரணமாய் மாவடை, மரவடை, பொன்வரி போன்ற வாசற்கணக்கு வரிகள்
திருத்தப்பட்டன.

படைகள் செல்லும் வழியில் இருக்கும் குடவர்,
கோவனவர், பூவிடுவார், தழையிடுவார், அணுக்கர் போன்ற பிரிவுகளுக்குத் தகுந்த உத்தரவுகள்
சேர்க்கப்பட்டன. மேலும் பல முடிவுகள் எடுத்து, திருவோலை வரைவர் மூலம் ஓலைப்படுத்தினர்.
அமைச்சர் அப்பன் மடம் சென்று பார்வையிட்டு மாலையில் கூடலழகர் கோவிக்குச்
சென்றார். அங்கு மணவாள மாமுனிகள், கோவிலைச் சுற்றி ஓடிக்கொண்டிருந்த கிருதுமால் நதியில்
மாலை அனுட்டானம் முடித்துவிட்டு அடியார்களுடன் சென்று சுந்தரராஜப் பெருமானைத் தரிசித்தார்.
பின் அமைச்சரிடம் மன்னனின் வைணவ கோவில் கைங்கர்யங்கள்
பற்றிக் கேட்டார்.
அரசர் திருமாலிருஞ்சோலை அழகரிடம் அளவில்லா அன்பு கொண்டவர். அங்கு
ஸ்வர்ண விமானம் செய்வித்து, மேலும் பல கைங்கர்யங்கள் செய்ய ஏற்பாடு செய்வித்து வருகிறார்.
இதற்கு திருவளவன் சோமயாஜி என்பாரை நியமித்துள்ளார். திருமாலிருஞ்சோலையில் முதல் மாறவர்மன்
சுந்தரபாண்டியரது இராஜ்ய அதிகாரி சோலைமலைப் பெருமாள்
வாணாதிராயர் மடம் என்று ஒன்றை
ஸ்தாபித்து அடியார்களுக்கு அமுது செய்வித்திருந்தார். இப்போது மன்னர் அதைப் புனர்நிர்மாணம்
செய்துள்ளார்.
பெரியநம்பி திருமாலிருஞ்சோலை நின்றான் நிருவாகம் என்று பல வைணவ சந்நிதிகளுக்கு நிவந்தம் தந்துள்ளார் என்று மேலும் பல திருப்பணி பற்றி நரசிங்கதேவர் சொல்லிக் கொண்டிருந்தார்.
மன்னரும் சிறிது நேரத்தில் அங்கு வந்தார்.
மாமுனிகள் அடியார் குழாங்களோடு திருவோலக்கம் கொண்டிருந்தார். அவரின்
சொல்வன்மையில் அனைவரும் அசையாமல் இருந்தனர். பெரியாழ்வாரின் திருப்பல்லாண்டு பற்றி
மாமுனிகள் வ்யாக்யானம் செய்து கொண்டிருந்தார். சிறிது நேரத்தில் மன்னர் தனியே சந்தித்து
உபதேசம் பெற்றார்.
மன்னருடன், இளவரசன் சுந்தரத்தோளுடையான், பட்டத்தரசி ஸ்ரீரங்கநாயகியார்,
அம்மான் நீலங்கரையார் அனைவரும் இருந்தனர். அரசன் திருமாலிருஞ்சோலை கோவிலில் செய்துவரும்
கருவறை, மற்றை சந்நிதி, தங்க விமான கைங்கர்யங்கள் எல்லாம் கேட்டு மாமுனிகள் மிகவும்
சந்தோஷித்து, அவர்கள் அனைவரையும் மறுநாள் உதயத்தில் வரச் சொன்னார்.
மறுநாள் அரசன் வைகை ஆற்றங்கரையில் காலிங்கராயன் படித்துறை சென்று
புனித நீராடி குடும்பத்தோடு கோவில் விரைந்தார். அவர்கள் அனைவருக்கும் அங்கேயே பஞ்ச
ஸம்ஸ்காரங்கள்
1 செய்து வைத்தார் மணவாள மாமுனி. பின்னர் அன்று பின்னிரவே கிளம்பி,
கூராகுலத்தம தாசர் அவதரித்த சிறுநல்லூர், திருப்புல்லாணி, திருவழுதி நாட்டு திருக்
குருகூர்
2, மார்கழி நீராட்டு உற்ஸவம் திருமல்லிநாட்டு ஸ்ரீவில்லிபுத்தூர்
என்று திவ்ய தேச யாத்திரை வழியைச் சொன்னார்
மாமுனிகள். அது கேட்டு மகிழ்ந்து ஆண்டாள் நாச்சியாரின் சில பாசுர அர்த்தங்களைக்
கேட்க விரும்பினான் மன்னன்.
அவரும் ஆண்டாளின் நாச்சியார் திருமொழியில் சிந்துரச் செம்பொடிப்போல் திருமாலிருஞ்சோலையெங்கும்.. என்ற திருமாலிருஞ்சோலை பாசுரங்களைச் சில மணிகளில், இந்த உலகமே கண்ணனின் விளையாட்டு. வீட்டைப் பண்ணி விளையாடும் அவனையே
சரணடைய வேண்டும்
என்று வெகுவாக விளக்கிச் சொன்னார். அவர்கள் யாத்திரை கிளம்பும்
நேரம் வந்தது. ஆச்சாரியார் நடந்து போனால் யாத்திரை குறித்த நேரத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர்
போக முடியாது என்று எண்ணி, பொன்னாலும், இரத்தினங்களாலுமான திருப்பல்லக்கை மன்னர் சமர்ப்பித்து
கார்த்திகை மாதப் பனி தாக்காமல் பனிப் போர்வையோடு அன்று இரவே கிளம்பினர். அவர்கள் வைகை
நதியை ஒட்டியே போனார்கள்.
அதிகாலை வேளை வந்ததும், ஒரு கிராமத்தில் பல்லக்கை இறக்க, மாமுனிகளும்
அங்கு நதியில் நீராடி, தன் அனுஷ்டானம் செய்யும் போது, அரசன் திருமாலிருஞ்சோலை நின்றான்
பல்லக்கு தாங்கி வந்த கோலத்தோடு இருப்பது கண்டு வியந்து
உறங்காவில்லி தாசரோ?3 என்று வினவி, நீரும் அவரைப்போல்
அரச குலத்தில் வந்து ஆச்சாரிய பக்தியால் இவ்வாறு பல்லாக்கும் சுமந்து இரவெல்லாம் நடந்து
வந்துள்ளீரே?
என்று அருளினார். இந்த ஊரை தாங்கள்
கடாக்ஷிக்க வேண்டும்
என்று அரசன் வேண்டியபடி அந்த ஊர்க்கு அழகிய மணவாள நல்லூர்4 என்று திருநாமமிட்டார் ஆச்சாரியார்.
மன்னரும் சந்தோஷித்து மதுரை நோக்கிக் கிளம்பினான். அவரது குரு பக்தி
கண்டு அனைவரும் மகிழ்ந்தனர். மன்னரைப்போல் குடிகளும் மாறத் தொடங்கினர்.
5
மதுரையில் இளவரசன் போருக்கு ஆயத்த வேலைகளைத் தீவிரமாய்ச் செய்தான்.
அனைத்து நாட்டுக்கும் தானே நேரில் பார்வையிட்டு வந்தான். சில நாட்களில் தூதுவர்கள்
மூலம் நாயக்கரின் செய்தி வந்தது. மன்னன், இளவரசனோடு சேர்ந்து படைகளின் வியூகங்களைச்
செய்தார். தென்காசி பாண்டியன் சற்றே இணக்கமாய் இருந்தான்.
இந்த வேலைகளில் ஆச்சாரியரின் யாத்திரை பற்றியும் கேட்டு வந்தான்
வாணாதிராயர். அவர்கள் சற்றே தாமதத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் வந்தாலும் அங்கு, ஆண்டாள்
நாச்சியார் தானே அருளி, மார்கழி நீராட்டு உற்ஸவத்தை மாமுனிகள் பொருட்டு நீடித்ததைக்
கேட்டு மகிழ்ந்தான்.
தை கடைசியில் படைகள் பாளையங்களிலிருந்து கிளம்பின. நாயக்கரின் படையும்
வந்தது. சுந்தரத் தோளுடையான் படைகளை நடத்திப் போனான். பராக்கிரம பாண்டியன் தென்காசி
படையோடு அணிவகுத்து வந்தான். சிறுவயதானாலும் இளவரசன் வீரம், கம்பீரம் கண்டு அனைவரும்
ஆச்சரியப்பட்டனர். ஒரு திங்களுக்கு உள்ளாகவே படைகள் இலங்கை அடைந்தன. இதை அறிந்து இலங்கை
மன்னனும் போருக்குத் தாயாராய் இருந்தான். பெரும் போர் மூண்டது.
வாணாதிராயன் சாமர்த்தியமாக மற்றொரு படையை இராமநாதபுரம் கடல் வழியே
அனுப்பியிருந்தார். எதிர்பாராத தாக்குதலால் இலங்கைப் படை குலைந்தது. இருந்தாலும் சில
திங்கள் போர் நீடித்தது. வாணாதிராயன், இளவரசன் பற்றிய முன்னுக்குப் பின் முரணான செய்தியால்
கலக்கமுற்றான். மனக்கவலை அதிகமாகிக் கொண்டே போனது. பட்டத்தரசி ஸ்ரீரங்கநாயகியாருடன்
ஸ்ரீவில்லிபுத்தூர் சென்று ஆண்டாள் நாச்சியாரை வணங்க எண்ணினான்.
அது ஆடி மாதம்., ஆண்டாள் நாச்சியார் திருஅவதார உற்ஸவமான திருவாடிப்பூர
உத்சவம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அன்று மூன்றாம் நாள். ஆண்டாள் நாச்சியார் திருமல்லி
நாட்டில் இருக்கும் பொன்பற்றி விழுப்பரைய நல்லூர் என்ற சுந்தரதோள் விண்ணகர்
6 கிராமத்திற்கு எழுந்தருளி ஒரு நாள் முழுதும் இருப்பார். பின்னர்
ஸ்ரீவில்லிபுத்தூர் வருவார். வாணாதிராயர் அன்று முழுதும் காத்துக்கொண்டிருந்தார்.
ஆண்டாள் நாச்சியார் மீண்டும் வர ஸ்ரீவில்லிபுத்தூர் காலதாமதமானது.
ஆண்டாளைத் தரிசிக்க முடியவில்லையே என்ற கவலையும், இளவரசர் பற்றிய கவலையும் அரசருக்கு
அதிகமானது. சில நேரம் கழித்து ஆண்டாள் சகல பரிவாரங்களோடு ஸ்ரீவில்லிபுத்தூர் அடைந்தார்.
அரசரும் ஆனந்தமாய் தரிசிக்க, அங்குள்ள கோபுரத்தடி மண்டபத்தில் பல்லாண்டு இசைப்பாரான
அரையர்கள் நாச்சியார் திருமொழியை இசை அபிநயத்தோடு சமர்ப்பித்தனர். அதுவும், வாணாதிராயர்
மாமுனிகளிடம் கேட்ட
சிந்துரச் செம்பொடிப்போல் திருமாலிருஞ்சோலையெங்கும்.. என்ற திருமாலிருஞ்சோலை பதிகம்.
சுந்தரத் தோளுடையான், ஏறுதிருவுடையான் என்று சொல்லும்
போதும்,
செந்தமிழ் பத்தும் வல்லார் திருமாலடி சேர்வார்களே என்று அரையர்கள் இசைஅபிநயம் பிடிக்கும் போதும் அரசன் தன் நிலை மறந்து
கண்ணீர் பெருக்கிக்கொண்டிருந்தான். மன்னருக்குக் கோவில் மரியாதைகள் செய்யப்பட்டன.
இரண்டொரு நாட்களில் தூதுவன் மூலம் இளவரசன் பற்றிய நற்செய்தி வந்தது.
பாண்டியபடைகள் வெற்றி பெற்று சுந்தரத்தோளுடையான் தலைமையில் மதுரை நோக்கி வருகின்றன.
மன்னன் சந்தோஷித்து, தன் மனக்குறை தீர திருவமுது, திருமாலை, திருவிளக்கு மற்றும் நித்யபடிக்கு
திரளிற் பற்றில்7 உள்ள மாங்குளம் என்ற ஊரைத்
தானமாகத் தருவதாய் ஸ்ரீரங்கநாத பிரியன் என்ற திருவோலை வரைவார் மூலம் பட்டோலைப்படுத்தினார்.
பின்னர் அது கோவிலில் கல்வெட்டாய் எழுதப்பட்டது
.. சூடிக்கொடுத்தருளிய நாச்சியாற்குத் திருவாடித் திருநாள் நம் குறையறுப்பாகக்
கொண்டருளும் படிக்கு இந்தத் திருநாளுக்கு வேண்டும் அமுதுபடி கரியமுது சாத்துபடி திருப்பரிவட்டம்
திருமாலை திருவிளக்கும் மஞ்சள்காப்பு, கற்பூரம், குங்குமம் கண்டருளத் திருக்காப்பு
சூடம் உட்பட வேண்டும் நைவேத்தியங்களுக்கும் உட்பட்ட வகைக்கு விட்ட வீர நாராயண வளநாட்டுத்
திரளில் பற்றில் மாங்குடி ஆன சுந்தரத்தோள நல்லூர்…
அழகர் திருவுள்ளம்….
மதுரை வந்து சிலநாட்களில் வெற்றிக்கொண்டாட்டம் நடந்தது. மன்னர் தனியாக
நாணயங்கள் வெளியிட்டார்.
சமரகோலாகலன் ஒருபுறம், கருடன் மறுபுறம் என்று ஒரு நாணயமும், பாண்டிய
சின்னமான மீனின் மீது கருடன் அமர்வது போலவும், கருடன், சங்கு, சக்கரம் உள்ளது போலவும்
இருந்தது மற்றை நாணயங்களும் வெளியிட்டார். திருமாலிஞ்சோலை, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய
வைணவத் தளங்களுக்கு நிறைய கைங்கர்யம் செய்தான்.
திருமாலிருஞ்சோலை அழகருக்கு பச்சைக் கற்பூரம், சந்தனம், வாசனாதி
திரவியங்கள் அரைக்க அழகிய அம்மிக்கல்லை குழவியோடு தந்தான். அதில் தம் ஆச்சாரியரான மணவாள
மாமுனிகளையும், அவரின் முக்கிய எட்டு அடியார்களையும் நினைக்கும் வண்ணம், எட்டு சிங்கங்கள்
தாங்கும் அந்த அம்மியின் அடியில்
திருமாலிருஞ்சோலை
நின்றான் மாவலி வாணாதிராயர் உறங்காவில்லி (தா)ஸந் ஆன சமரகோலாகலன்..
என்று பொறித்தான்.
மற்றைய சைவக் கோவில்களுக்கும் அநேக திருப்பணிகள் செய்ய பாண்டிய மண்டலத்தில்
வைதீக மதம் மீண்டும் தழைத்தது. பின்னாளில் சுந்தர தோளுடையானும் அது போலவே பல நல்ல பணிகளைச்
செய்தான். பல கோவில்களைப் புதுப்பித்தான். குடிகளும் மகிழ்ச்சியாய் இருந்தனர்.
அடிக்குறிப்புகள்:

1. பஞ்ச ஸம்ஸ்காரங்கள் என்பது திருமாலே சரணம் என்று அடைய
ஸ்ரீவைஷ்ணவராக நெறிப்படுத்தும் ஒரு முறை.

2.
இன்று ஆழ்வார் திருநகரி

3. இராமானுசர் காலத்தில் சோழ நாட்டுப் படைத் தளபதி
உறங்காவில்லிதாசர் என்று ஒருவர் ஸ்ரீரங்கத்தில் கைங்கர்யம் செய்தார். அவர்
எப்போதும் கைங்கர்யத்தில் இருப்பதால் உறங்குவதில்லை, ‘உறங்காவில்லி தாசர்’
எனப்பட்டார்.

4. இன்று ‘முத்தரசன்’ என்றுள்ளது அந்த ஊர்.

5. இம்மன்னன் கல்வெட்டில் திருமாலிருஞ்சோலை மாவலி வாணாதிராயன்
உறங்காவில்லிதாசன், சமரக்கோலாகலன் என்று குறிப்பிடப்பட்டுள்ளான்.

6. இன்று விழுப்பனூர் என்று வழங்கப்படுகிறது.

7.
இன்று திரளி


Posted on Leave a comment

கிருதுமாலில் ஒரு மால் (சிறுகதை)| கிரி பிரசாத் கண்ணன்



‘ஸ்வாமி உள்ளே இருக்கீரா?’ என்ற சோகம் கலந்த குரலோடு
நீலகண்ட தீக்ஷிதர் ரேழியில் நின்றுகொண்டு உள்ளே நோக்கி கோவிந்த கனபாடிகளை அழைத்தார்.
சாணம் தெளித்து மெழுகிய சற்றே நீளமான மண் தரையோடு கூடிய திண்ணையில் ஊர்ப் பெரியவர்கள்
இருந்தார்கள். கறவைகள் பனிப்புல் மேய்வதற்காக அந்தந்த வீட்டின் கொட்டத்திலிருந்து வெளியே
வரவும், பல்கால் குயிலினங்கள் கூவிக்கொண்டு தன் இரை தேடப் போகவும் சரியாய் அமைந்த,
பொழுது புலர்ந்து கொண்டிருக்கும் காலம். ‘ஓதல் அந்தணர் வேதம்பாட, சீர்இனிதுகொண்டு நரம்புஇனிது
இயக்கி..’ என்று சிறப்போடு இருக்கும் மதுரையின் தென்மேற்கே ஒரு கிராமம் துவரிமான்.
இப்போது கனபாடிகளை அழைக்கும் காலம் பதின்மூன்றாம் நூற்றாண்டின் தொடக்கம்.
பச்சிலை நீள் கமுகும் பலவும், தெங்கும் வாழைகளும்,
விளைசெந்நெலும் ஆகியெங்கும் மச்சனி மாடங்கள் நிறைந்த, வைகைக்கரையில் அமைந்த ஊர். எங்கு
நோக்கிலும் இயற்கை பச்சை கம்பளத்தை விரித்தாற்போல் இருக்கும் அழகு சூழ்ந்த ஊர். அரசன்
வழி நின்ற குடிகளும் அவ்வாறே உத்தமர்களாய் இருந்தார்கள்.
ரெங்கம்மாள் அகல் விளக்கின் வெளிச்சத்தில் திருமடப்பள்ளியில்
பாலமுது காய்ச்சிக்கொண்டிருந்தார். இரண்டு நாளில் ஏகாதசி. அதற்குள் அச்சித்திரம்-அஸ்வமேதம்
பாராயணம் முடித்து கடகம் என்ற யஜுர் வேதம் தொடங்கவேண்டும் என்ற எண்ணத்தோடு அஸ்வமேதம்
பாராயணம் செய்து கொண்டிருந்தார் கனபாடிகள். பின்வரும் பஞ்சாதி சொல்வதற்கும், தீக்ஷிதர்
அழைப்பதற்கும் சரியாய் இருந்தது. அவர்கள் வந்த நோக்கமும் அது தான்.
‘ஆப்ரஹ்மன் ப்ராஹ்மனோ ப்ரஹ்மவர்சஸீ ஜாயதாம்’..
‘இந்த தேசம் முழுவதும் ப்ரஹ்ம தேஜஸ் உள்ள
வேதமறிந்தவர்கள் உண்டாகட்டும். இந்த நாட்டில் அரசர்களும், ஆயுதங்களும், வீர்ய சௌகர்யமும்
உண்டாகட்டும். பசுக்கள் முதலியவைகள் நன்கு உண்டாகட்டும். பெண்கள் நாகரீகமாக திகழட்டும்.
பருவம் தோறும் நல்ல மழை பெய்யட்டும். மரங்களும், செடிகளும், பயிரும் வளரட்டும். நமது
நாட்டிலுள்ள உள்ள எல்லோரின் யோக க்ஷேமம் வளர்ச்சி அடையட்டும். நமது நாட்டை ஆளும் அரசன்
புத்தி கூர்மையுடன் மக்கள் நலம் விரும்பும் வீரனாக திகழட்டும்.’
அவர்கள் குரல் கேட்டு, அந்த பஞ்சாதியோடு வெளியில்
வந்தார் கனபாடிகள்.
‘என்ன தீக்ஷிதர் ஸ்வாமி இந்நேரம். நான் கோவில்
நடை திறக்க இன்னும் கொஞ்ச நேரம் இருக்கிறதே. ஏதாவது அவசரமா?’ என்றபடி வெளியில் பார்த்தார்.
அங்கு, அரையர், போரையர், தென்னவன் பிரம்மராயர் மாறன்காரி அனைவரும் வந்திருந்தனர். அத்தனை
பெரிய அரசு அதிகாரிகளையும் கண்டதில் கனபாடிகளுக்குத் திடுக்கிட்டது. விரைவாய் வெளியே
வந்தார். அனைவரையும் உள்ளே அழைத்தார்.
தீக்ஷிதர் சொல்லத் தொடங்கினார். ‘கனபாடிகளே, நாம்
சிறிதும் எதிர் பார்க்காத ஒரு நேரம் வந்துவிட்டது. நம் ஊரையும் நம் குல தனத்தையும்
நாம் காக்க வேண்டும்.’ கனபாடிகளுக்குப் பதற்றம் அதிகமானது.
அரையர் தொடந்தார். ‘ஆம். அந்நியப்படை நம் நாடு
நோக்கி வருகிறது. அவர்கள் கண்ணூர் கொப்பம் வந்து விட்டனர். இன்னும் ஓரிரு நாளில் கண்ணூர்
கொப்பம் வீழ்ந்தவுடன் அந்நியப்படை நம் பாண்டிய நாடு நோக்கிவரும்’ என்றார் கொஞ்சம் தழுதழுத்த
குரலில் வரும் ஆபத்தின் குணம் தெரிந்து.
அதற்கு கனபாடிகள் ‘முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன்
திருநாடு சென்ற பின், நம் மன்னர் மூன்றாம் சடையவர்மன் வீரபாண்டியன் மழவராயன் சிங்காசனத்தை
அலங்கரிக்கும் போது இந்த சோழ, சேர, ஹொய்சாள அரசர்கள் நம்மை என்ன செய்ய முடியும்.’
மாறன்காரி இடைமறித்தார். ‘சரிதான் கனபாடிகளே. அவர்கள்
வருவதாயின் நம் ஊரின் சிறுபிள்ளை கூட எதிர்கொண்டு ஓடவிடும். ஆனால் வருவது அவர்களல்ல.
துலுக்க படைகள் வடக்கிருந்து ஒவ்வொரு நகரமாய்ப் பிடித்து வருகிறது.’ இது கேட்டவுடன்
கனபாடிகளும் தீக்ஷிதர்களும் அதிர்ச்சியில் பதில் சொல்லாமல் இருந்தனர்.
மாறன்காரி தொடந்தார். ‘அந்தப்படை நாடு நகரமும்
அழிப்பது மட்டுமில்லாது கோவில்களையும் அழிக்கிறார்கள். அவர்கள் இலக்கே நம் தெய்வங்களும்,
ஆபரணங்களும்தான்.’ அதற்கு மேல் அவரால் பேச இயலவில்லை.
போரையர் விஷ்ணுவர்தன் தொடந்தார். ‘ஆம். ஸ்ரீரங்கம்தான்
தற்போது அவர்கள் இலக்கு. அதில் பெரும் பொருள் அவர்களுக்குக் கிடைக்கப்போவது உறுதி.
அந்த ஆசையில் அவர்கள் மதுரை நோக்கியே வருவார்கள். ஸ்ரீரங்கத்தில் உள்ள பலர் ஊரைவிட்டுச்
சென்றுவிட்டதாகவும், கோவிலையும், நம்பெருமாளையும் காக்க பெரும் படை ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அவர்கள் தங்கள் உயிரையும் துச்சமாக நினைத்து அதில் ஈடுபட்டு வருகிறார்கள். நாம் நம்
குடிகளையும், கோவிலையும் காக்க வேண்டும். அரசர் இன்று காலை மந்திராலோசனை கூட்டம் முடிந்து
திருமுகம் வரைவார் மூலம் ஓரிரு திருமுகங்களை நம் பாண்டிய நாட்டின் நாற்பத்திரெண்டு
நாடுகளுக்கும் அனுப்பியிருக்கிறார். இதில் நாம் இருக்கும் ‘திருமலை வள நாடு’ மட்டுமின்றி,
‘திருமல்லிநாடு, திருவழுதிநாடு’ இரண்டும் மிக முக்கியமாய் இருக்கிறது. அந்நியரிடமிருந்து
இங்குள்ள கோவில்கள்தான் பெரிதும் காக்கப்படவேண்டும்.’ ஒரே மூச்சாய் சொல்லி முடித்தார்.
‘நம் ஊரின் பெருமை நான் சொல்லி உங்களுக்குத் தெரிய
வேண்டியதில்லை. உங்கள் முன்னோர்கள் தான் இந்த ஊரின் முதல் குடிகள் என்று கூடச் சொல்லலாம்.
இங்குள்ள கோவிலில் உங்கள் குடும்பம்தான் வழிவழியாய் ஆராதனை செய்கிறார்கள். நம் கோவில்
பெருமை பன்மடங்கு பெரிது.’ பெரும் அரசு அதிகாரியான தென்னவன் பிரம்மராயர் மாறன்காரி.
அதிர்ச்சியில் உறைந்திருந்த கனபாடிகள் தொடந்தார்.
‘நீங்கள் சொல்வது சரிதான். அந்த இறைவனே எங்களுக்கு இந்தக் கைங்கர்யத்தைத் தந்திருக்கிறான்.
நம்மாழ்வார் சொல்வது போல ‘தன்னாக்கி என்னால் தன்னை இன்கவி பாடும் நம்வைகுந்தநாதன்’.
நீங்கள் சொல்வது போல் நம் ஊருக்கும் ஒரு வரலாறு உண்டு. என் முன்னோர்கள் அடிக்கடி சொல்வார்கள்.
இங்கு தான் கிருதுமால் என்ற வைகையின் கிளை நதி உற்பத்தியாகி மதுரை நோக்கிப் புறப்படுகிறது.
அங்கு நம் கூடலழகர் சந்நிதி சுற்றிப் பாய்கிறது, வைகுந்தம் போல். கடைச்சங்க காலத்திற்கு
முந்திய பாண்டியர்களில் ஒருவராகிய ‘வடிம்பலம்ப நின்ற பாண்டியன்’ ஆட்சிக் காலம் தொட்டே
இந்த ஊருக்கு வரலாறு உண்டு. நெடுங்காலம் ஆட்சி செய்தார் இப்பாண்டியன். ஒரு நாள் இந்த
ஊரில் கிருதுமால் நதியில் சந்தியாவந்தனம் செய்யும்போது, அவர் கையில் ஒரு மீன் அகப்பட,
அது தன் உருவைப் பெரிதாக்கிக்கொண்டே போக, அரசனும் அதற்கு இடம் தர முடியாமல் தவித்தான்.
முடிவில் அதுவே திருமாலின் முதல் அவதாரமாக ‘மச்சாவதாரமாக’ காட்சி தந்தது. உலகமே கடற்
பிரளயத்தால் அழிய, திருமால் சொல்லியபடி, அந்த மீனின் அருளால், இம்மன்னன் மட்டும் நம்
கிருதுமாலில் தோன்றிய நம் குடிகளைக் காத்தார். இதையே திருமங்கை ஆழ்வாரும் தம் திருமொழியில்
இப்படி சொல்லிருக்கிறார்.
வானோரளவும்முதுமுந்நீர் வளர்ந்தகாலம் * வலியுருவில்
மீனாய்வந்துவியந்துய்யக்கொண்ட தண்டாமரைக் கண்ணன் *
ஆனாவுருவிலானாயன் அவனைஅம்மாவிளைவயலுள் *
கானார்புறவில்கண்ணபுரத்து அடியேன்கண்டுகொண்டேனே.
‘அது முதல் இந்த ஊர் பாண்டியர்களின் வழிபடு ஊரானது.
வடிவலம்ப பாண்டியர் பின்னாளில் அதே கிருதுமால் தோன்றுமிடத்தில் ஒரு சிறு கோவிலும் கட்டினார்.
அதற்கு இறையிலி/திருவிடையாட்டம் (நிலங்களும்)தந்து எங்கள் முன்னோரை ஆராதனம் செய்யப்பணித்தார்.
இன்று வரை நாங்கள் கைங்கர்யப்பேறுபெற்றோம். அப்பப்பா எவ்வளவு சிறப்புஇருக்கிறது நம்
ஊருக்கு’ என்றார் கனபாடிகள்.
அவர் வாய் திறந்தாலே வேதமும் தமிழ்மறையும் அருவியாய்ப்
பெருக்கெடுக்கும். வந்தவர்கள் எல்லாம் தங்கள் வேலையை மறந்து இருந்தனர். அப்போது சங்கிடுவான்
சங்கின் ஒலி கேட்டுத் தன் நிலைக்கு வந்தனர்.
‘இவ்வளவு பெருமையுடைய நம்மூர் காக்கப்படவேண்டும்.
பலகாலம் தொட்டு இங்கு நம்மைக் காக்கும் நம் பெருமானும்..’ உணர்ச்சியின் மேலிட்டு கொஞ்சம்
கர்ஜித்தார் அரையர், சைவ சமயத்தராயினும். அடுத்த வேலைகளில் இறங்க அனைவரும் ஆயத்தமாயினர்.
போரரையரும், மாறன் காரியும் அதற்கான திட்டம் வகுத்தனர்.
‘இன்றிலிருந்து இரண்டு நாட்களுக்குள் நம் ஊரைக்
காலி செய்து மேலும் தெற்கே போகவேண்டும். குடிகள் கொஞ்சம் கொற்கை நகர், அதாவது நம் பழைய
தலைநகரம் வரை சென்றால் நல்லது. அது கொஞ்சம் பாதுகாப்பானது. இங்கு நம் படை வீரர்கள்
மட்டும் குடிகள் போல் தங்கி இருக்கட்டும். அந்நிய படைகள் வந்தவுடன் அவர்கள் கவனித்துக்கொள்வார்கள்.
நம் தேசத்தவர் கொஞ்சம் சேர தேசம் அருகில் சென்றுவிட்டனர். இங்குள்ளோர் தங்கள் இல்லங்களில்
ஒரு சுவரில் பிறை ஒன்றமைத்து, அதனுள் பக்கவாட்டில் 3-4 அடியில் துளையிட்டு தங்கள் நகைகள்,
இன்ன பிற முக்கிய வஸ்துக்களை சேமித்து, அதன் மீது மண்சாந்து பூசிவிடவேண்டும். நம் மக்கள்
செல்லும் வழியில் முன்னதாகவே நம் படை இரண்டு குழுவாய் செல்லும். ஒன்று முன்னர் எதுவும்
ஆபத்து இல்லாதவாறு பார்த்துக்கொள்ளும். மறறொன்று அவர்களுக்கு சமைத்து, போகும் வழியில்
இருக்கும் கல் மண்டபங்களில் வைத்துவிடுவார்கள். அரையரே இதை இப்போதே இந்த வளநாட்டிலுள்ள
ஏனாதி, மதவராயன், வத்தராயன் முதலானோர் மூலம் யாரும் அச்சப்படாதவாறு குடிகளுக்குத் தெரியப்படுத்தவும்..
இன்னும் சிலகாலம் தான்’ என்று ஒரு திட்டம் முடித்தார் மாறன்காரி.
‘அடுத்து நம் பெருமானையும் கோவிலையும் காக்க வேணும்.’
தீக்ஷிதர் தொடந்தார். ‘கோவிலைக் காக்க ஸ்ரீரங்கம் போல் ஏதாவது வியூகம் வகுக்க வேண்டும்.
நம் கோவில் சிறியது. அவர்களை ஊருக்குள் வரவிடாமல் பார்த்துக்கொண்டாலே போதும். நம் பெருமானை
மட்டும் எப்படியாவது காக்க வேண்டும். உலகெல்லாம் காக்கும் நம் பெருமாளை இப்படி நாம்
காக்க வந்திருப்பது என்ன விந்தையோ.’
‘சரி, காலம் தாழ்த்த நேரமில்லை. அரையரே, நீர் போய்
நம் உத்தரவை அதிகாரிகளுக்குச் சொல்லும். இதற்கு திருமுகம் தேவைப்படாது..’
அரையர் விடைபெற்றவுடன் மாறன்காரி, ‘நம் பெருமானைக்
காப்பதுதான் பெரும் கவலையாய் இருக்கிறது. இந்த ஊரைவிட்டு எழுந்தருளப்பண்ணிக்கொண்டு
போகவேண்டும். கோவிந்த பட்டரே, நான் அதற்கான ஏற்பாடு செய்கிறேன். நீங்கள் போய் இன்றைய
ஆராதனைகளை முடித்துவிட்டு வாருங்கள். நான் திருமுகத்தில் சொல்லப்பட்ட மற்ற விஷயங்களைப்
பார்த்துவிட்டு இரண்டாம் கால ஆராதனையில் வந்துவிடுவேன்.’ அனைவரும் கலைந்தனர்.
கனபாடிகள், ரெங்கம்மாள் செய்த பதார்த்தங்களைத்
தன் இல்லப் பெருமானுக்கு கண்டருளப்பண்ணிவிட்டு கோவில் நோக்கிப் புறப்பட்டார். வழியெல்லாம்
அதிக கவலையோடு, கண்களில் கண்ணீரோடு ஓடினார், தன் முன்னோர் ஆராதித்த பெருமானைக் காண.
கோவில் வாசலில் சிலர் விஸ்வரூபம் சேவிக்க காத்துக்கொண்டிருந்தனர்.
அவர்களிடமும், பெருமானிடமும் காலதாமதத்திற்கு மன்னிப்பு கேட்டுவிட்டு கோவிந்த பட்டர்
ஆராதனைகளைத் தொடங்கினார். அவரேதான் பெருமானுக்கு தளிகை செய்யவும் வேண்டும். இவர்கள்
குடும்பத்தின் கைங்கர்யம்தான். இவருக்கு சிறுபிள்ளையாதலால், இவரே அந்த கைங்கர்யமும்
செய்தார். அன்று பெருமாள் கோடி சூரியனை மிஞ்சியவராய், சங்கு-சக்கர தாரியாய் நான்கு
புயங்களுடன் இரண்டு நாச்சிமாரோடு காட்சி தந்தார். திருமல்லிநாட்டில் ஒரு பகுதியுள்ளதால்
இங்கு ஆண்டாளுக்கு சந்நிதி இல்லை. வகுளபூஷண பாஸ்கரராய் நம்மாழ்வார் எழுந்தருளியிருந்தார்.
நித்ய ஆராதனை முடித்து ஆழ்வார் பாசுரங்கள் சில சொல்ல ஊரிலுள்ள சிலரும் வந்திருந்தனர்.
திருப்பல்லாண்டு, திருப்பாவை, திருவாய்மொழி எல்லாம் சொல்லிக்கொண்டிருந்தார்.
பட்டர் மட்டும் ‘தீப்பாலவல்வினையேன் தெய்வங்காள்
என்செய்கேனோ?’ என்று நின்றுருகிக் கொண்டிருந்தார். இரண்டாம் ஆராதனம் முடிய மாறன் காரியும்
வந்தார்.
கோவிலில் கூட்டம் குறைய, நடை சாற்றும் நேரம் வந்தது.
மாறன்காரி கோவிந்த பட்டரை அழைத்துக் கொண்டு பின்னால் இருந்த மாஞ்சோலை சென்றார். இருவர்
மட்டும் ரகசியமாய் ஏதோ பேசிக்கொண்டிருந்தனர். ‘ஆகட்டும் ஸ்வாமி அப்படியே செய்கிறேன்.’
என்று பட்டர் வெளியே வந்தார். மாறன்காரி ஏதோ யோசித்துவிட்டு பின் வழியாய் சென்றார்.
கோவிந்த கனபாடிகள் சன்னதி தெரு தாண்டி வரும் போதே மக்களிடத்தில் ஒருவித கிளர்ச்சி தெரிந்தது.
ஆங்காங்கு கூடி பேசிக்கொண்டிருந்தனர். இவர் வீடு வந்த போது ரெங்கம்மாளும் அதையே சொன்னார்.
தங்களிடம் பெரும் நகைகள், வாஸ்துக்கள் இல்லை. அந்தப் பெருமான் மட்டுமே இவர்களின் குல
தனம்.வேறு சொத்து இல்லை. சில முக்கிய நபர்கள் தவிர இரவோடு இரவாகப் பலரும் காலிசெய்தனர்.
படைவீரர்கள் குடிகள் போல் வந்தனர்.
அரசன் இரவு மந்திராலோசனை கூட்டியிருந்தார். மாறன்
காரி அங்கு இருந்தார். அதுவழக்கமாய் நடக்கும் சபையில் இல்லை. மதுரைக்குத் தொலைவில்
திருக்கானப்பேர் அருகில் இருந்தது. அங்கு தான் நாணயம் தயாரிக்கும் இடம் இருந்தது. குலசேகரன்
1200 கோடி பொற் காசுகளை தன் கருவூலத்தில் வைத்திருந்தார். அதையும் பாதுகாக்க வேண்டி
அங்கு கூட்டம் நடந்தது. கருவூல சொத்துக்கள் பிரிக்கப்பட்டு பாதி மாறன் காரியிடம் தரப்பட்டது.
அவர் அதைப் பாதுகாக்கும் பொறுப்பை ஏற்றார். நேராக கனபாடிகளைக் காண அங்கிருந்து கிளம்பி
விடிந்து சில நாழிகைகளில் துவரிமான் வந்தார்.
சோழ தேசத்தில் வேளக்காரப்படை என்று ஒன்றிருக்கும்.
அது தங்கள் உயிரைக்கொடுத்து மன்னரைக் காக்கும். அது போல பாண்டிய தேசத்திலும் ஒருபடை
இருந்தது. அதற்கு தென்னவன் ஆபத்துதவிகள் என்று பெயர். அதில் ஒரு பிரிவை இந்த மூன்று
கோவில்களைக் காக்கும் பணிகளிலும் அரசன் பணித்திருந்தான். அவர்களும் மாறன் காரியுடன்
வந்தனர். அரசனே திருமலை நாட்டிலுள்ள அழகாபுரி கோட்டை (அழகர் கோவில்)செல்வதால் தனி பாதுகாப்பு
ஏற்படுத்தப்படவில்லை. முனையெதிர் மோகர் என்ற படைப்பிரிவு அரசனோடு இருந்தது. காலை ஆராதனைகள்
முடிந்த பின் மீண்டும் மாலை ஆராதனத்திற்காக கோவிந்த பட்டர் சென்றார். அதற்கு முன் தென்னவன்
ஆபத்துதவிகள் கோவில் முன் இருந்தனர்.
அன்று சாயங்கால ஆராதனை நேரம்தாழ்த்தி செய்யப்பட்டது.
கோவிந்த பட்டரும் மிகவும் வாஞ்சையோடு செய்தார். இனி இப்பெருமானுக்கு எப்போது இது போல்
கைங்கர்யம் செய்வோம் என்ற கேள்வி இருந்தது. பின்னிரவு வருமுன் கோவில் நடை சாற்றப்பட்டது.
ரெங்கம்மாளும், மற்றும் சில படைவீரர்களும் அங்கிருந்தார். அன்றோடு பட்டரும் ஊரை விட்டுப்
புறப்பட வேண்டும்.
குதிரை குளம்படி கேட்டு மாறன் காரி நிமிர்ந்தார்.
தூதுவன் திருசிராமலையிலிருந்து வந்தான். ஓலை படித்தவர் கண்களில் குளமாய்க் கண்ணீர்.
அருகிலிருந்தவர்களிடம் காட்டிக்கொள்ளவில்லை. கோவிந்த பட்டரை அழைத்து விவரத்தைச் சொன்னார்.
‘ஸ்வாமி, நான் சொன்னபடியே நடந்தது. கண்ணூர் கொப்பம்
வீழ்ந்தது. ஸ்ரீரங்கம் தாக்கப்பட்டது. அங்கு மட்டும் இதுவரை பல்லாயிரம் பேர் பலியாகியிருக்கின்றனர்.
ஸ்ரீரங்கம் பெருமாளை மட்டும் காப்பாற்றி இருக்கின்றனர்..’
முழு விவரமும் சொல்லவில்லை. கனபாடிகள் தரையில்
அமர்ந்தார். சற்று விம்மலோடு அழவும் செய்தார். இனி நடக்கும் காரியத்தைப் பார்க்க வேண்டும்
என்ற முடிவுக்கு வந்தார். காரி அவரை கொற்கை தேசம் போகச் சொன்னார். ‘எங்கள் குல தனத்தை
விட்டு எப்படிப் போவேன்’ என்று புலம்பினார். மறுத்தார். காரியும் ஒரு முடிவுக்கு வந்தார்.
ஒரு பெரும் பெட்டியில் சன்னதியில் இருக்கும் விக்ரகங்களை
எழுந்தருளப்பண்ணிக்கொண்டு தென்னவன் ஆபத்துதவிகள் படையோடு மேற்கு நோக்கிப் பயணமானார்கள்
கோவிந்த பட்டரும் அவரது குடும்பமும். நம்மாழ்வார் மட்டும் மாறன் காரியோடு வேறு திசையில்
சென்றார். மேற்கு நோக்கி சென்றவர்கள் கூட வேறு சிலரும் சென்றனர். கோவிந்த பட்டர் கோவில்
சாமான்களை எடுத்துக்கொண்டு காப்பிடல், அச்சோ பதிகம் உட்பட சில பெரியாழ்வார் பாடல்களை,
பெருமானுக்கு எந்த ஊறும் நேரக்கூடாது என்றபடி பாடிக்கொண்டு போனார்.
வரவிருக்கும் அந்நியப் படைகளைத் திசை திருப்ப,
திருக்கானப்பேரிலிருந்து கொண்டுவந்த பொற்காசுகளை கிழக்கே, வடக்கே என்று கொஞ்சம் புதைத்து
வைத்தனர் சில படை வீரர்கள். இது காரியின் ஒரு யோசனை. அப்படியாவது இந்தப் பெருமான்களைக்
காக்கவேண்டும். மறுநாள் காலை அவ்வளவு இனிதாய் இல்லை. எதிர்பார்த்ததை விட வேகமாக மாலிக்
காஃபூர் தலைமையில் அந்நியப்படை மதுரை வரை வந்து விட்டது. திரு தளவாய்புரத்தில் சுந்தர
பாண்டியன் எதிர் கொண்டு சற்றே தாமதமாக்கினான். அதற்கு மேல் முடியாமல் அவனும் வீர பாண்டியனோடு
சேர்ந்து மதுரை கோட்டைக்குள் வந்தான்.
மாலிக் காஃபூர் படையோடு கோட்டையின் வெளியில் காத்திருந்தான்.
மூன்றுநாளாகியும் அவனால் கோட்டையைத் தகர்க்க முடியவில்லை. சித்திரை மாத வெய்யிலில்
அவன் படைவீரர்கள் சோர்ந்திருந்தனர். நீரும் இல்லை. வேறு வழியில்லாமல் பாண்டியனிடம்
சமாதானத் தூது விட்டான். கோவில்களை அழிக்கக் கூடாது என்ற நிபந்தனையோடு கோட்டைக் கதவுகள்
திறந்தன. அதற்கு பிரதி பலனாய், மாலிக் காஃபூருக்குப் பாதி உணவு தானியமும், அனைத்து
குதிரை, யானைகளும் தர வேண்டும் என்று சொல்லப்பட்டது. கோவில்களுக்காக இவை அனைத்தையும்
ஏற்றான் பாண்டியன். ஏகப்பட்ட செல்வங்களோடு 612 யானைகளும், 20000 குதிரைகளும் பெற்று
வடக்கே புறப்பட்டான் மாலிக் காஃபூர்.
தாங்களும், தங்கள் உடைமையும், கோவில்களும் காக்கப்பட்டதை
எண்ணி ஊர் மக்கள் ஆரவாரித்தனர். அந்நியர்களுடன் போரிட்டுத் தோற்கடிக்க முடியாதது கண்டு
வீர பாண்டியன் சற்றே வருத்தத்தோடு இருந்தான். மாறன் காரியும், மற்றை அமைச்சர்களும்
உடனிருந்தனர். துவரிமானிலிருந்து வந்த நம்மாழ்வாரை மாறன் காரி மதுரை மீனாட்சி கோவிலுக்குள்
வைத்திருந்தார். கோவிலினுள், மாலிக் காஃபூர் ஒரு நிமிஷம் நின்று கவனித்தபோது, மாறன்
காரி உயிர் அவரிடமில்லை. சிறு புன்முறுவலோடு அவன் நகர்ந்தான். இதைப்பார்த்த பாண்டியன்
பின்னர் காரியிடம் கேட்ட போது துவரிமான் பற்றி சொன்னார்.
இரண்டு மூன்று நாட்களில் விஷயம் எங்கும் பரவியது.
தங்கள் ஊரை விட்டுப்போன மக்கள் திரும்ப வந்தனர். கோவிந்த பட்டர் மேற்கே நாகமலையில்
பெருமானோடு இருந்தார். அவரை விஷயம் எட்டவே, தென்னன் ஆபத்துதவிகள் சூழ, மலை அடிவாரத்திலேயே
பெருமானுக்கு விஷேஷ ஆராதனை செய்யத்தொடங்கினார். ஆம் அவர்கள்தான் உண்மையான ஜெய-விஜயர்கள்
இப்போது. மறுநாள் ஊர் நோக்கி அவர்களும் திரும்பினர். ஒருவாரத்தில் மாறன் காரி வந்தார்.
நம் பெருமானை சேவிக்க வீர பாண்டியரும், சுந்தர பாண்டியரும் துவரிமானுக்கு வருவதாக கனபாடிகளிடம்
சொன்னார். அவருக்கு மிகுந்த ஆனந்தம்.
அரசன் வருகைக்காக ஊர் அலங்கரிக்கப்பட்டது. பேரிகைகள்
முழங்கின. இரண்டு பாண்டியர்களும் தங்கள் முன்னோர் வணங்கிய இறைவனை கோவிலில் சென்று வழி
பட்டனர். சுந்தரபாண்டியன் கோவிலை கொஞ்சம் பெரிதாய்க் கட்ட விரும்பினான். திடீரென்று
ஒரு இடத்தில் கருடன் பாண்டியன் அருகில் வந்து பின் வேறொரு இடத்தில் மூன்று முறை வட்டமிட்டது.
சுந்தர பாண்டியனுக்குப் புலப்பட்டது. மாறன் காரியிடமே அந்தப் பொறுப்பையும் ஒப்படைத்தான்.
கருடன் வட்டமிட்ட இடத்தில் சில மாதங்களில் கோவில்
உருவானது. ஸ்ரீரங்கம் போலவே இந்த ஊரும் நதிகளால் பிரிக்கப்பட்டு ஒரு தீவு போலத்தான்
இருந்தது. ஆம். ஒருபுறம் வைகை, மறுபுறம் கிருதுமால். கோவிலுக்குள் அரங்கனையே ப்ரதிஷ்டை
செய்தனர். ஆனால், நின்ற கோலத்தோடு, அரங்கராசனும், ஸ்ரீ தேவி, பூ தேவியுமாய். சுந்தர
பாண்டியனே மங்களாசாசனம் செய்து ஸம்ப்ரோக்க்ஷணம் செய்தான். கோவிந்த கனபாடிகளும், தீக்ஷிதரும்
கைங்கர்யங்களைத் தொடந்தனர், பொலிக பொலிக பொலிக என்று!