Posted on Leave a comment

கேடில் விழுச்செல்வம் கல்வி | கோ.எ. பச்சையப்பன்

(புதிய கல்விக்கொள்கை வரமா சாபமா – நூலை முன்வைத்து)

(விலை ரூ 175, கிழக்கு பதிப்பகம்)

1834ம் ஆண்டு வெள்ளையரின் விதேசிகளின் ஆட்சி பாரதத்தில் வேர்பிடிக்கத் தொடங்கிய தருணம்! குடும்பத் தொழில் நொடித்துப் போனதால் ஏற்பட்ட பொருளிழப்பை ஈடுகட்ட ‘சூரியன் அஸ்தமிக்காத’ இங்கிலாந்திலிருந்து இந்தியாவிற்கு வந்தார் ஒருவர். தகிக்கும் வெயிலிலிருந்து தற்காலிகமாகத் தப்பிக்க ஆங்கிலேயர்கள் அப்போது(ம்) கோடைவாசஸ்தலமாகக் கருதிய ஊட்டிக்குச் சென்னையிலிருந்து பயணமானார். நான்கு ‘கூலிகள்’ டோலி கட்டி பதினோரு நாட்கள் மேற்படி கனவானைச் சுமந்துகொண்டு ஊட்டிக்குக் கொண்டு சேர்த்தனர். தமக்கு முன்னரே அங்கே தங்கியிருந்த வில்லியம் பெண்டிங் உள்ளிட்ட நால்வருடன் இணைந்துகொண்ட அந்த ‘போலிப் பயணி’ வடிவமைத்ததுதான் ‘இந்தியத் தண்டனைச் சட்டம்’. Continue reading கேடில் விழுச்செல்வம் கல்வி | கோ.எ. பச்சையப்பன்

Posted on Leave a comment

சினிமாச் சோழர்கள் | கோ.எ.பச்சையப்பன்

அரசியலில் நடிகர்களும், நடிகர்களின் அரசியலும்

“தகர்த்திடுக மாற்றரசர்கோட்டை வீரத்
தமிழர்படை பகைக்குடலை மாலையாக்க
குகைப்புலிகள் சினந்தெழுந்து வகுத்த யூகம்
குலத்தமிழர் அணியென்றே ஊது சங்கு”

மிகக்கனன்று சோழர்குலத் திலகம் பேசி
முடித்த உடன் அரண்மனைக்குள் இருட்டு சூழச்
சிகரெட்டைப் பற்றவைத்தார் பாக்காச் சோழர்
சூட்டிங்கு முடிந்தால் பின் என்ன செய்வார்?

-ஞானக்கூத்தன்!

அபூர்வ சகோதரர்கள் திரைப்படத்தின் வெற்றி விழா நிகழ்வு அது. திரையுலகப் பாரம்பரியத்தின்படி அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதி தலைமை வகித்தார். படத்தின் நாயகன் கமல்ஹாஸனை வாழ்த்தியும், அவர் ‘வேண்டாவெறுப்பாக’ தாங்கி வரும் உலக நாயகன், காதல் மன்னன் (இந்த பட்டம் ஒவ்வொரு பத்தாண்டிற்கும் ஒவ்வொரு நாயகனுக்கு இடம்பெயரும்! ஏறக்குறைய சூழற்கோப்பை போன்றது) போன்ற பட்டங்களை விளித்து ரசிகர்கள் கோஷம் எழுப்பியவாறு இருக்க, முதல்வர் முகம் சுளித்தார். அதன் விளைவு என்னவாக இருக்கும் என்பதை வேறு எவரையும் விட நன்கறிந்தவர் கமல்! ஒலிபெருக்கிக்கு அருகே வந்து கொன்ன வார்த்தை – பீருட்டஸைப் பார்த்து ஜீலியஸ் சீஸர் சொன்ன ‘யூ டூ ப்ரூட்டஸிற்கு’ நிகரானது – “என் ரசிகர்கள் விசிலடிச்சான் குஞ்சுகள் அல்லர்!” Continue reading சினிமாச் சோழர்கள் | கோ.எ.பச்சையப்பன்

Posted on Leave a comment

ஒரு அரசுப்பள்ளி ஆசிரியரின் ஒப்புதல் வாக்குமூலம்! | கோ.எ.பச்சையப்பன்

யக்ஞார்தாத் கர்மணோ (அ)ன்யத்ர
லோகோ (அ)யம் கர்ம-பந்தன:
தத் அர்தம் கர்ம கௌந்தேய
முக்த-ஸங்க: ஸமாசர     
கடமைகள் இறைவனுக்கு அர்ப்பணிக்கப்பட வேண்டும். அவ்வாறற்ற மற்றவை
பௌதீக உலகத்தோடு சம்மந்தப்படுத்துபவை. உனக்கு விதிக்கப்பட்ட கர்மங்களை இறைவனுக்காகச்
செய்; எப்போதும் பந்தத்தில் இருந்து விடுபட்டு வாழ்வாய்!
(கீதை 3:9).

(Image
Thanks: LiveChennai.com)
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு நிதியுதவி
பெறும் பள்ளிகளில் 2016- 2017ம் கல்வி ஆண்டில் 3 முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் ஒரு
லட்சத்து இருபதாயிரம் மாணவ மாணவியர் இடையே தமிழ் வாசிப்புத் திறன் ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது.
தமிழைப் பிழையின்றி, தடங்கலின்றி வாசிக்கத் தெரிகிறதா என்பதை அடிப்படையாக கொண்டு மேற்கொள்ளப்பட்ட
இந்த ஆய்வில் கிடைத்த தரவு அதிர்ச்சியளித்தது. ஆம்! 44,000 மாணவர்களுக்குத் தமிழை வாசிக்கவே
தெரியவில்லை. இவர்களில் பலர் 6 முதல் 8 வகுப்பு மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

திருவண்ணாமலை மாவட்டம் பானை சோற்றுப் பதம்தான்! 2004ம் ஆண்டில்
அஸர் (ACER), ப்ரதம் (PRATHAM) ஆகிய நிறுவனங்கள் மேற்கொண்ட இந்திய அளவிலான ஆய்வுகள்
பெரிதும் விவாதிக்கப்பட்டவையே! எட்டாம் வகுப்பு மாணவனுக்கு மூன்றாம் வகுப்புக்கான எளிய
கணக்குகளைச் செய்ய இயலவில்லை என்பது ஆய்வின் ஒரு தரவு. தாய்மொழியில் எழுதப் படிக்கத்
தெரியாத மாணவர்களைப் பற்றிய தரவுகள் இன்றும் இணையத்தில் கிடைக்கின்றன. இருதயக் கோளாறு
இல்லாதவர்கள் ஓய்வாக இருக்கும்போது பாருங்கள்.
2004ம் ஆண்டில் நாடு தழுவிய அளவில் பள்ளிகளால் மேற்கொள்ளப்பட்ட
ஆய்வுகளுக்குப் பிறகுதான் கல்வித்திட்டத்தில் மட்டுமல்லாமல், ஆசிரியர் நியமனத்திலும்
மாறுதல்கள் கொண்டுவரப்பட்டன. (அசர், ப்ரதம் ஆகிய அமைப்புகளும் தனியார்ப் பள்ளிகளும்
ஆய்வு மேற்கொண்டன என்பதைக் குறிப்பிட வேண்டும்). தகுதித்தேர்வு நடத்தப்பட்டு தேர்ச்சி
பெற்றவர்களே ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும் என 2009ம் ஆண்டு மத்திய அரசு கூறிற்று.
தமிழக அரசு அதனை ஏற்று கடந்த 5 ஆண்டுகளாக மத்திய அரசின் அறிவுரையைப் பின்பற்றி, தகுதித்தேர்வு
வைத்து ஆசிரியர்களைத் தேர்ந்தெடுக்கிறது.

ஆசிரியர் நியமனத்தில் மாற்றம் (அல்லது) சீர்திருத்தம் கொண்டுவரப்பட்டால்
மட்டுமே கல்வித் தரம் மேம்பட்டு விடாது என்பதை உணர்ந்த மத்திய அரசு மாணவர்களின் தேர்ச்சி
முறையிலும் சீர்திருத்தத்தை நீட்டித்துள்ளது. 2001ம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட சர்வ சிக்க்ஷா
அபியான் (SSA)- அதாவது அனைவருக்கும் கல்வி திட்டத்தின்படி ஒன்றாம் வகுப்பில் சேர்ந்த
மாணவன் (மாணவி எனவும் சேர்த்து வாசிக்க) எட்டாம் வகுப்பு வரை ஆல் பாஸ் என்பது அமலில்
இன்றுவரை உள்ளது. இதன் விளைவு என்ன என்பதைதான் மேலே பார்த்தோம்.

நடப்பு நவம்பர் மாதத் தொடக்கத்தில் பாளையங்கோட்டையில் பள்ளிக்குச்
செல்லாமல், பள்ளி நேரத்தில் சீருடையுடன் வெளியே சுற்றிக் கொண்டிருந்த ‘புள்ளிங்கோ’
மாணவர்களை நகரக் காவல்துறை பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தது. எல்லோருமே
9-10 வகுப்பு மாணவர்கள். சுமார் ‘40 மாணவக் கண்மணிகள்’! மாணவர்களின் எதிர்காலம் கருதி
‘எளிய தண்டனையாக’ எஸ்.ஐ அவர்கள் பாடப் புத்தகங்களில் இடம் பெற்றுள்ள திருக்குறளைக்
கூறச் சொன்னார்! 

யாருக்கும் தெரியவில்லை. போனால் போகிறது உங்களுக்குத் தெரிந்த குறள்கள்,
கடந்த ஆண்டுகளில் பாடப் புத்தகங்களில் இடம் பெற்றவையாக இருந்தால் கூடப் பரவாயில்லை,
கூறுங்கள் என்றதற்கு, ஒரு குறளைக் கூட மாணவர்களால் கூற இயலவில்லை. பின்னர் 1330 குறள்களையும்
பார்த்து எழுதித் தந்து விட்டுச் செல்ல பணித்தது தனிக்கதை.

சென்ற தலைமுறையில் அரசுப் பள்ளிகளில் பயின்றவர்கள் குறிப்பிட்ட
அளவு திறன்களைப் பெறாவிட்டால் அடுத்த வகுப்பிற்குச் செல்ல முடியாது. இதனால் மாணவர்கள்
இடைநிற்றல் (Drop Out) ஏற்படுவதாகக் கூறி, பள்ளியில் சேர்ந்த அனைவரும் எட்டாம் வகுப்பு
வரை பாஸ் என்று கொண்டுவரப்பட்ட நடைமுறை அரசுப்பள்ளிகளில் பெரும் பின்னடைவை மாணவர்களிடையே
ஏற்படுத்திவிட்டது. சமுதாய மாற்றம், தலைமுறை மாற்றம் மற்றும் ஊடகங்களின் வளர்ச்சி ஆகியவை
ஆசிரியர்களிடையே கட்டுப்பாடுகளை அதிகப்படுத்தி உள்ளன.

பிரம்பைக் கையாளக் கூடாது, மாணவர்களைத் திட்டக் கூடாது என்பவை
வரவேற்கத்தக்கதாயினும் மாணவர்களைக் கண்டித்தால் கூடப் பிரச்சினைகள் ஏற்படுவதால் பாடம்
நடத்துவதோடு தன் பணி எல்லைகளைச் சுருக்கிக் கொண்டனர் ஆசிரியர்கள். விளைவு, கற்றலில்
மாணவர்களுக்கு ஈடுபாடு குறைந்து வருகிறது.

மேற்கண்டவற்றைத் தொகுத்துப் பார்க்கையில் 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு
ஏன் பொதுத்தேர்வு அவசியம் என்பது புரியும்.
‘பள்ளியில் சேர்ந்த அனைவரும் தேர்ச்சி’ என்ற நிலைமை மாறி ‘தரப்படுத்துதல்
சோதனை’ ஏதேனும் ஒரு கட்டத்தில் நிகழும் என்பது மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் புரிந்தால்தான்
இருதரப்பும் இணைந்து செயல்படும். மேலும் பத்தாம் வகுப்பு தேறிய மாணவன் தனது சான்றிதழ்
கோரும் விண்ணப்பத்தினை தலைமை ஆசிரியருக்கு எழுதும்பொழுது பிழைகள் இன்றி எழுதும் தகுதியையாவது
பெறுவான்.
அரசுப் பொதுத் தேர்வினை எதிர்க்கும் சமூக ஆர்வலர்கள் (?) கல்வியாளர்கள்
கூறும் காரணங்களைப் பார்ப்போம்.

1.  
மாணவர்களுக்குத் தேர்வு என்பது மன அழுத்தத்தை
விளைவிக்கும்.
பள்ளிக்கு
வருவது கூட தனக்கு மன அழுத்தத்தைத் தருவதாக மாணவன் நினைக்கக்கூடும். அதற்காக எக்கேடும்
கெட்டுப்போ என விட்டுவிட முடியுமா என்ன? 5ம் வகுப்பு மாணவனுக்கும், 8ம் வகுப்பு மாணவனுக்கும்
அவரவர் பாடப் புத்தகங்களில் இருந்து திறன்களைப் பரிசோதிக்கும் வினாக்கள் கேட்கப்படுமேயன்றி
IIT பாடங்களிலிருந்து அல்ல. மேலும் 100ற்கு 35 மதிப்பெண்கள் எடுத்தாலே தேர்ச்சி! நடைமுறையில்
25 தாண்டினால் 35 மதிப்பெண்களை மாணவன் ‘எப்படியாவது’ எட்டிப்பிடித்து விடுகிறான்.
பத்தாம்
வகுப்பு தேர்வுகள் மன அழுத்தத்தைத் தரும் என மாணவன் கூறினால் அதனை ரத்து செய்து விடலாமா
என்ற கேள்வியும் எழுகிறது. எனவே எளிய வினாக்களைத் தந்து முறையான பயிற்சிக்குப் பிறகு
நடத்தப்படும் தேர்வு இனிமையான அனுபவமே தவிர மன அழுத்தம் தரும் காரணியாக இருக்காது.
2.  
தேர்வில் தவறும் மாணவன் பள்ளிப் படிப்பைத்
தொடராமல் இடையிலேயே நின்று விடுவான்.
இன்று
14 வகை விலையில்லா (இலவசம் என்பதை ஜெயலலிதா மாற்றினார்) பொருள்கள் வழங்கப்படுகின்றன.
8, 10, 12ம் வகுப்பு SC, ST மாணவர்களுக்குக் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. 12ம்
வகுப்பில் மடிக்கணினி வேறு. இவையாவும் மாணவர்களின் வருகை இருந்தாலே வழங்கப்படுகின்றது.
தவிர அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஆசிரியர்களுக்கு ஊதியம், கட்டமைப்பு வசதிகள் என ஏராளமான
வரிப்பணம் செலவிடப்படுகின்றது. இவை அவசியமானதும் கூட. ஆனால் தரமற்ற ஒரு மாணவர் தலைமுறையை
இடைநிற்றல் (Drop Out) காரணம் காட்டி தேர்வுகளை தவிர்ப்பது தீர்வாகாது.
மாறாக,
Ø 
இயலாக் குழந்தைகள், மாற்றுத்திறன் குழந்தைகள்
(IED மற்றும் differently-abled) ஆகியோருக்கு மட்டும் தேர்வுகளில் இருந்து விலக்கு
அளிக்கலாம் அல்லது தேர்ச்சிக்கான குறைந்தபட்ச மதிப்பெண்கள் தளர்வு தரலாம்.
Ø 
பொதுத்தேர்வுகளில் தவறும் குழந்தைகளை அதே
வகுப்பில் நிறுத்தி விடாமல் அடுத்த வகுப்பிற்கு அனுப்பிவிட்டு ஓரிரு மாதங்களுக்குள்
தவறிய பாடங்களுக்கு மட்டும் சிறப்பு தேர்வுகள் நடத்தலாம். ஏற்கெனவே ஒன்பதாம் வகுப்புகளில்
இது நடைமுறையில் உள்ளதுதான்.
Ø 
கல்வி உரிமைச் சட்டத்திற்கு இத்தேர்வுகள்
எதிரானவை.
புதிய தேசியக் கல்விக் கொள்கை என்பது ஒரே
நாளில், யாரோ ஒரு சில நபர்களால் உருவாக்கப்பட்டது அல்ல. இஸ்ரோ விஞ்ஞானிகள் முதல் பல்துறை
முனைவர்கள் வரை பல மாதங்கள் உழைத்து வரைவு அறிவிக்கை இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது.
மேலும் கல்வியாளர்கள், பொதுமக்கள் என இலட்சக்கணக்கானவர்கள் மின்னஞ்சல்கள் மூலம் தெரிவித்த
இலட்சக்கணக்கான திருத்தங்களை உள்வாங்கி உருவாக்கப்பட்டது. அதில் ஒரு அம்சம்தான் 5 முதல்
8ம் வகுப்புகளுக்குத் தேர்வு.

Ø 
உலகின் சிறந்த நூல்களின் பட்டியலில் இந்தியப்
பல்கலை ஒன்று கூட இடம் பெறவில்லை.

Ø 
4000 ஆசிரியர் பயிற்சித் தேர்வு எழுதி வெறும்
105 பேர்களே நடப்புக் கல்வி ஆண்டில் நம் தமிழகத்தில் தேறியுள்ளனர்.

Ø 
கடைசியாக வைக்கப்பட்ட ஆசிரியர் தகுதித்
தேர்வில் வெற்றி விழுக்காடு வெறும் 2%.

எனவே 5 முதல் 14 வயது வரை அனைவருக்கும்
கட்டாய இலவசக் கல்வி என்று கல்வி உரிமைச் சட்டம் வலியுறுத்துகிறது. தரமற்ற கல்வியை
அல்ல. துரதிர்ஷ்டவசமாக தமிழகத்தில் தேசியக் கல்விக் கொள்கையைப் பற்றி யார் வேண்டுமானாலும்
கருத்து கூறலாம். அவர்கள் நடிகர்களாக இருப்பின் அது கூடுதல் தகுதி என்றாகிவிட்டது.

தேர்வு என்பது படிப்பின் ஒரு அங்கம். ஆனால்
அது மட்டுமே கல்வி என்றாகி விடாது. தேர்வு மட்டுமே இலக்கு என்ற கல்வி முறைதான் ‘நீட்
போன்ற தேர்வுகளில் ஆள்மாறாட்டத்தில் வித்திடுகின்றது.
‘உராய்வு’ பற்றி அறிவியலில் ‘தவிர்க்கமுடியாத
அவசியமான தீமை’ என்பார்கள். தேர்வுகள் அவ்விதமே.

தேர்வு நம் ஜனநாயக முறை போன்றுதான். எவ்வளவுதான்
குறைபாடு கொண்டதாயினும் என்றேனும் மேம்படும் என்ற நம்பிக்கையை அளிப்பதும் மாற்று முறை
கண்டுபிடிக்கப்படும் வரை பின்பற்றத் தக்கதுமானது.

கல்வி என்பது அறிவைப் பெறும் முறை. அதனை
அளவிடும் முறையின் ஒரு அம்சம் மட்டுமே தேர்வு. அதன் வெற்றி தோல்விகளைப் பற்றிக் கவலைப்பட்டுக்
கொண்டிருக்காமல் ஆசிரியர்களும் பெற்றோர்களும் மாணவர்களும் தத்தம் கடமையைச் செவ்வனே
செய்தால், அதற்குரிய நற்பலன் கட்டாயம் தேடிவரும். கடமையைச் செய்வதில்தான் நமக்கு அதிகாரம்;
பலனில் பற்று வைப்பதல்ல.

கீதை கூறும் கர்மயோகமும் இதுதான்!
Posted on Leave a comment

உரிமைக்குரல்: பதிப்புரிமை – சன்மானம் – நாட்டுடைமை | கோ.இ.பச்சையப்பன்

மனிதகுல வரலாற்றின் கண்டுபிடிப்புகளில் மகத்தானவையாக போற்றப்படுவன இரண்டு, ஒன்று சக்கரம், இரண்டாவது அச்சுக்கலை. கூடன்பர்க் கண்டுபிடித்த அச்சு இயந்திரம் மனிதனின் அறிவுப் புரட்சியில் ஆற்றிய பங்களிப்பை விவரிக்க ஒரு கட்டுரை போதாது.

ஓலைச்சுவடிகளில் எழுதும் சிரமத்தைத் தளர்த்தவே சுருக்கமான பாடல் வடிவத்தைத் தமிழர்கள் பின்பற்றியிருக்க வேண்டும். சுவடிகளைப் படியெடுக்கவே தமிழகத்தில் பல பகுதிகளில் ‘எழுத்துக்காரர்கள்’ எனப்படுவோர் வசித்ததாக எஸ்.ராமகிருஷ்ணன் குறிப்பிடுகிறார்.

தமிழில் அச்சிடப்பட்ட முதல் நூல் தம்பிரான் வணக்கம். இருபதாம் நூற்றாண்டில் அச்சுககலை புத்தக வெளியீடுகளை இலகுவாக்கியதற்கு இணையாக வாசிக்கும் வழக்கமும் வளர்ந்தது. எனினும் க்ரியா ராமகிருஷ்ணன் கூறுவதைப் போன்று புத்தகங்கள் தமிழர்களின் பண்பாட்டின் அங்கமாக இன்னும் மாறவில்லை.

1914ல் காலனி ஆதிக்க பிரிட்டிஷார் ‘காப்புரிமை’ சட்டத்தை இந்தியாவில் இயற்றினர். சுதந்திர இந்தியாவில் 1952ல் இச்சட்டம் நவீனப்படுத்தப்பட்டது. பரவலான இது ‘காப்பிரைட் சட்டம்’ என்று அறியப்படுகிறது. ஒரு படைப்பு எவ்வகையைச் சேர்ந்தது எனினும் (எழுத்து, பேச்சு, புகைப்படம், இசை) அதன் உரிமை படைப்பாளிக்கு என்பதை இச்சட்டம் உறுதிப்படுத்துகிறது. படைப்பாளி தனது படைப்பின் மீதான உரிமையை சட்டப்பூர்வமான ஒப்பந்தத்தின் அடிப்படையில் பிறருக்கு விற்று அதன் மூலம் சன்மானம் (ராயல்டி) பெறலாம். மேலும் அனுமதியின்றி தன் படைப்பை பிறர் நுகர்ந்தால் வெளியிட்டால் வழக்கு தொடுக்கலாம்.

எல்லா இந்தியச் சட்டங்களைப் போன்றே நம் சமுதாயத்தின் யோக்கியதையை நிரூபிக்கும் வகையில் இச்சட்டமும் தவறாகப் பயன்பட்ட வரலாறு உண்டு. படைப்பாளிக்குப் பாதுகாப்பானதாக மேலோட்டமாகத் தோன்றும் இந்தச் சட்டம், படைப்பின் மீதான உரிமைக்குரல்வளையை நெருக்கியதும் உண்டு.

எழுத்தாளர் தேவனை அறியாதவர்கள் குறைவு. சிவந்த நிறம், சுருட்டை முடி, வஜ்ரம் பாய்ந்த உடல் என்ற கதாநாயகனுக்குரிய எந்த இலக்கணமும் இல்லாமல், விளாங்காய் மண்டை, வழுக்கைத் தலை, ஒட்டடைக்குச்சி தேகம் என தேவன் படைத்த ‘துப்பறியும் சாம்பு’ என்றென்றும் வாழும் பாத்திரமல்லவா? கல்கிக்குப் பிறகு ஆனந்த விகடனின் ஆசிரியரன அவர் தன் பேனாவலிமையால் கல்கியின் வெற்றிடம் விகடனின் விற்பனையை பாதிக்காமல் பார்த்துக்கொண்டார். கதை, கட்டுரை, பயண நூல்கள் என எழுதிக்குவித்த தேவன், தான் மரணமடைந்த 1955ம் ஆண்டு வரை தன் படைப்புகளில் ஒன்றைக்கூட புத்தக வடிவில் பார்க்கவில்லை என்பதை நீங்கள் நம்புவீர்களா? விகடனின் பதிப்பாளர் வாசனின் பதிப்புரிமை தேவனை – புத்திரப்பேறில்லாத சோகத்துடன் தன் புத்தகம் பார்க்காத சோகமும் சேர்ந்து மரணமடைய வைத்தது.

எழுத்தாளர் அகிலன் கூட, விகடனில் பரிசுபெற்ற தன் சிறுகதைகளைப் பெரும் போராட்டத்திற்குப் பிறகே அச்சேற்ற முடிந்தது. தமிழுலகில் முதல் முனைவர் பட்டம் பெற்ற மு.வ. என்று அன்புடன் அழைக்கப்டும் மு. வரதராசனாரை அறியாதவர்கள் இலர். பரிமேலழகர் முதல் சாலமன் பாப்பையா வரை திருக்குறளுக்கு உரை எழுதியிருப்பினும், மு.வ.வின் தெளிவுரை தனித்துவம் மிக்கதான இன்றும் விளங்குகிறது. தனது தெளிவுரையை சைவ சித்தாந்த நூற்பதிப்புக்கழகத்திடம் மிகக் குறைந்த தொகைக்கு விற்றுவிட, பின்னாட்களில் அது இலட்சக்கணக்கில் விற்க, மு.வ. திகைத்தார். படிப்பறிவு இருந்தாலும் மு.வ. பட்டறிவு இல்லையே என வருந்தியிருக்க வேண்டும். பின்னாட்களில் பல நாவல்கள் எழுதிய அவர் பதிப்புரிமையை யாருக்கும் வழங்காமல், விற்பனை உரிமையை மட்டும் பாரி நிலையத்திற்கு தந்தார். ‘சூடு கண்ட பூனை’யல்லவா?

2007ம் ஆண்டு ஈவெராவின் ‘குடியரசு’ இதழ்த் தொகுப்பை பெரியார் திராவிடர்கழகம் நூல் வடிவில் கொண்டுவர முயன்றபோது, தி.க.வின் வீரமணி நீதிமன்றம் சென்றார். பெரியாரின் எழுத்துக்கள் நாட்டுடைமையாக்கம் பற்றிய விவாதங்கள் மேலெழ மேற்படி நிகழ்வு வித்திட்டது.

அண்மையில் இளையராஜா தன் பாடல்களின் உரிமைக்காகப் போராடி அதன் விளைவாக ஒலி வடிவிலான படைப்பிற்குரிய மரியாதையை மீட்டெடுத்ததை நாம் மறக்க முடியாது.

ஒரு எழுத்தாளர் மறைந்து குறிப்பிட்ட காலம் நிறைவுற்றபின் அரசே முன்வந்து அதன் உரிமையாளர்களுக்கு (பெரும்பாலும் படைப்பாளியின் வாரிசுகளுக்கு) குறிப்பிட்ட தொகை அளித்து, அப்படைப்பை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தும் உரிமை வழங்குவதை நாம் அறிவோம்.

நாட்டுடைமை ஆக்கப்படுவதன் மூலம் ஒரு படைப்பு ஜனநாயகப்படுத்தப்படுகின்றது. எளிய விலையில் பரவலாக மக்களைச் சென்றடைகின்றது. மேலும், வாரிசுகளுக்கு பணப்பயன் கிடைக்கவும் வழிவகுக்கின்றது. கல்கி, நா.பா., அண்ணா, காந்தியடிகள் என ஏராளமானவர்களின் உன்னதப் படைப்புகள் மக்களை அடைய ‘நாட்டுடைமை’ உதவிற்று எனில் அது மிகையில்லை.

சுந்தர ராமசாமி, கண்ணதாசன் மற்றும் அகிலன் ஆகியோரின் எழுத்துகள் நாட்டுடைமை ஆக்கப்பட்டபோது அவர்களின் வாரிசுகள் அதனை மறுதலித்ததும் நிகழ்ந்தது.

1990களில் தாகூரின் படைப்புகள் நாட்டுடைமையாக்கப்படாமல், பி.வி.நரசிம்மராவின் சிறுபான்மை காங்கிரஸ் அரசின் பத்தாண்டுகள் நீட்டிப்புச் சட்டத்திருத்தத்தால் விஸ்வபாரதி பல்கலையிடமே தாகூர் முடங்கிப்போனார். அரசியலுக்கு இணையாக எழுத்துலகின் மகத்தான ஆளுமை பெற்றிருந்த நேருவின் படைப்புகள் சோனியாவிடமே சுருங்கிப்போயுள்ளது.

எழுத்தாளர் ராஜம்கிருஷ்ணன் உயிருடன் இருந்தபோதே அவருடைய படைப்புகள் நாட்டுடைமையாக்கப்பட்டது ஒரு புதுமை. மருத்துவ சிகிச்சையை அவர் மேற்கொள்ளும் பொருட்டு ஏற்படுத்தப்பட்ட சிறப்புத் தேர்வு அது என்பது உண்மை.

கண்ணதாசன் மற்றும் அகிலன் போன்ற விற்பனை வாய்ப்பு குன்றாத ஜீவநதிகளின் ஊற்றை நாட்டுடைமை ஆக்கித் தூர்ந்து போகாமல் காப்பாற்ற வாரிசுகளுக்கு மனமில்லையே! கண்ணதாசனின் ‘அர்த்தமுள்ள இந்துமதம்’ எல்லாப் புத்தகக்காட்சிகளிலும் விற்பனையில் முதல் பத்துக்குள் இடம் பெறுவதையும் பல பதிப்புகள் கண்டிருப்பதையும் கணக்கிலெடுத்துப் பார்த்தால் இது புரியும்.

தமிழில் எழுதிப் பிழைக்கமுடியாது என்பது ஓரளவிற்கு உண்மை. வாசகர்களின் வரவேற்பைப் பெற்ற எழுத்தாளர் தன் லௌகீக வாழ்க்கைக்குத் தேவையான பொருளை எழுத்தால் பெற முடியும் என்பதற்கும் சான்றுகள் உள்ளன.

இலக்கியம் என்ற பிசாசு தன்னைப் பிடித்து ஆட்டிய காலம் வரை எழுதி வந்ததாகக் குறிப்பிட்டுக்கொண்ட ஜெயகாந்தன், ஆண்டுக்கு சுமார் ஒரு லட்சம் வரை தன் நூல்களின் மூலம் ராயல்டி பெற்று வந்தார். ஜேகே எழுதியதை நிறுத்திப் பல்லாண்டுகள் ஆன பின்பும் இது சாத்தியமானது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

எண்பதுகளின் மத்தியகாலம் வரை வாழ்ந்த சாண்டில்யன் தன் ‘விஜயமாதேவி’ நாவலிற்கான ராயல்டியாக ஒரே தவணையில் ரூ 50,000 பெற்றுள்ளார். 80களில் இது மிகப்பெரிய தொகை. பாரதி பதிப்பகத்தின் பதிப்பாளர் பழ.சிதம்பரம் தனது பதிப்புரையில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ரமணிசந்திரனின் நூல்கள் (அதன் இலக்கிய அந்தஸ்து விமர்சனத்திற்கு உரியதாயினும்) கட்டுக்கட்டாகக் கடல்கடந்து வாங்கப்படுகின்றன. அம்மணிக்குப் பணத்தையும் குவிக்கின்றன.

ராயல்டியில் ஏமாந்த எழுத்தாளர்களும் உண்டு. சுஜாதா, துக்ளக் பேட்டியொன்றில், ‘எனது லாண்டரி கணக்கைக்கூட’ (இதற்கு மாற்றாக ‘வண்ணான்’ என்ற சொல்லை சுஜாதா பயன்படுத்தியதாக வண்ணதாசன் கூறுகிறார்) வெளியிடுவதற்கு இதழாசிரியர்கள் தயாராக உள்ளனர் – எனக் கூறும் அளவிற்கு வாசகர்களால் வாசிக்கப்பட்டார். தனது நூல்கள் விற்பதற்குத் தகுந்த ராயல்டி தனக்குக் கிடைக்கவில்லை என்ற குறை அவருக்கு இருந்தது உண்மை.

தமிழில் முதலில் நாட்டுடைமையாக்கப்பட்ட படைப்புகளுக்குச் சொந்தக்காரன் பாரதி. தேசியக் கவி என்னும் மகாகவி என்றும் இன்று புகழப்படும் பாரதியின் படைப்புகள், டி.கே.சண்முகம், நாரண துரைக்கண்ணன், வல்லிக்கண்ணன், ஜீவா உள்ளிட்ட பலரின் பெரும் போராட்டத்திற்குப் பிறகே நாட்டுடைமையாக்கப்பட்டன. அந்த வரலாற்றை ஆய்வாளரான ஆ.இரா.வேங்கடாசலபதி எழுதிய ‘பாரதி: கவிஞனும் காப்புரிமையும்’ என்ற நூலில் வெளிச்சமிட்டுக் காட்டுகிறார்.

பாரதியின் பாடல்வரிகள் இன்று மேற்கோள் காட்டப்பெறாத பட்டிமன்றங்களே இல்லை. ரொளத்ரம் பழகு, நேர்படப்பேசு எனப் புகழ்பெற்ற தொலைக்காட்சி விவாத நிகழ்வுகளுக்கு பாரதியின் ‘புதிய ஆத்திசூடி’ கைக்கொடுக்கிறது. மணிக்கொடி, சுதந்தரச்சங்கு போன்ற பாரம்பரிய இதழ்களின் பெயர்கள் கூட பாரதியின் படைப்புகளில் இருந்து எடுக்கப்பட்டவைதாம்.

வள்ளுவரை விடவும் கூட அதிக மேற்கோள் காட்டப்படும் எழுத்துக்களுக்குச் சொந்தக்காரன் பாரதி. அரசியல் ரீதியாக அவரை விமர்சிப்பவர்கள் கூட அவர் மகாகவி என்பதை மறுக்கவில்லை. தமிழை நவீனப்படுத்திய படைப்பாளிகளுள் முதன்மையானவர் பாரதி. கவிதைகள், கட்டுரைகள், கதைகள் எனத் தீவிரமாக இயங்கியவர் பாரதி. ஆஹாவென்று எழுந்தது பார் யுகப்புரட்சி என ஜார் மன்னனின் வீழ்ச்சியைப் பாடிய ஒரே இந்தியப் படைப்பாளி பாரதி. தான் வாழ்ந்த கால அரசியல் நிகழ்வுகளைத் துணிச்சலாகப் பிரதிபலித்த பாரதி சமகாலத்தில் விதந்தோதப்பட்டாலும் வாழுங்காலத்தில் வரவேற்பு பெற்றாரா?

தீப்பெட்டிகள் போல் என் படைப்புகள் சரளமாகவும் விலை மலிவாகவும் பரவ வேண்டும் என விருப்பம் தெரிவித்த பாரதியின் படைப்புகளில் நூற்றிருபது பக்கங்கள் தவிர வேறெதுவும் நூல் வடிவம் (அவர் மரணமடையும் வரை) பெறவேயில்லை என்பது மாபெரும் அவலம்.

‘சுதேசமித்திரன்’, ‘இந்தியா’, ‘விஜயா’ எனப் பல ஏடுகளில் பாரதியின் படைப்புகள் அச்சேறியபோதும் நூல் வடிவம் பெறவில்லை. ஆகச்சிறந்த அவருடைய ஆக்கங்களான ‘கண்ணன் பாட்டு’, ‘குயில் பாட்டு’, ‘பாஞ்சாலி சபதம்’ போன்றவையும் விதிவிலக்கில்லை. பாரதியின் மரணத்திற்கு திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் யானை மட்டுமே காரணமன்று. அன்றைய தமிழ்ச் சமூகமும்தான். தன் படைப்புகளை நூலாக்கம் பெற உதவி செய்வோருக்கு அதன் விற்பனையில் பங்குதர பாரதி விளம்பரம் வெளியிட்டும், கடிதம் எழுதியும் தமிழ்ச்சமூகம் காட்டிய பாராமுகமே அவரைக் கொன்றது.

அமரத்துவமான படைப்புளும் வறுமையுமே பாரதி தன் குடும்பத்திற்கு விட்டுச்சென்ற பரிசுகள். மனைவி செல்லம்மாள் பாரதி, பாரதியின் தம்பி விஸ்வநாத அய்யருடன் இணைந்து படைப்புகளை நூல் வடிவமாக்கினார். எனினும் பெரிய வரவேற்பில்லை. 1930ம் ஆண்டில் பாரதியின் பாடல்களை இசைத்தட்டாக வெளியிடும் உரிமையை செல்லம்மாள் பாரதி சுராஜ்மல் என்ற நிறுவனத்திடம் கையளித்தார். வெறும் 450 ரூபாய்க்குக் கைமாற்றப்பட்ட இத்தொகை, அவரது மகள் தங்கம்மாளின் திருமணத்திற்குப் பயன்பட்டிருக்கக்கூடும். இந்த உரிமையை 1946ல் மிகபெரிய திரையுலக ஜாம்பவான் ரூ 9500 கொடுத்து வாங்கினார். அவர் ஏ.வி. மெய்யப்பச்செட்டியார்! சுருக்கமாக ஏ.வி.எம். அவருடைய தந்தையின் பெயர் ஆவிச்சி செட்டியார். எனவே, ஆங்கிலத்தில் ஏவி!

1935ல் டி.கே.சண்முகம் ‘மேனகா’ என்ற திரைப்படம் எடுத்தார். தமிழ்த் திரைப்பட வரலாற்றில் மூன்று அம்சங்களுக்காக இன்றளவும் நினைவுகூரப்படும் திரைப்படம் அது.

அ) முதல் சமூகக்கதை படம்

ஆ) வடுவூர் துரைசாமி ஐயங்காரின் நாவலைத் திரைவடிவமாக்கி வந்தது.

இ) பாரதியின் பாடலைப் பயன்படுத்திய இரண்டாவது தமிழ்ப்படம்.

பாரதியின் பாடல் உரிமைகளைப் பெற்றவுடன் ஏ.வி.எம். செட்டியார் செய்த முதல் வேலை டி.கே.எஸ்ஸிற்கு சம்மன் அனுப்பியதுதான். டி.கே.எஸ். திகைத்தார்.

பாரதியின் மறைவிற்குப்பிறகு அவருடைய பாடல்கள் பல காரணங்களுக்காகப் பிரபலமடையத் தொடங்கி இருந்தன. சுதந்தரப் போரில் தன்னெழுச்சியாகக் கலந்துகொண்ட மக்கள் அவற்றைப் பாடினர். ‘பாரதி தேசியக் கவியா? மகா கவியா?’ என்ற விவாதத்தின் மூலம் கல்கியும், வ.ரா.வும் அவரை விவாதப் பொருளாக்கினர். எல்லாவற்றிற்கும் மேலாக 1938ல் பாரதியின் பாடல்களைப் பாட பிரிட்டிஷ் அரசு தடை விதித்திருந்தது. தடை செய்யப்பட்ட படைப்பு எவ்விதம் பிரபலமடையும் என்பதை ‘விஸ்வரூபம்’ படம் நமக்கு அண்மையில் நிரூபித்தல்லவா?

பாரதி மணிமண்டம் திறப்பு விழாவில் பாரதி படைப்புகளை அரசே வாங்கி அதனை நாட்டுடைமை ஆக்க வேண்டும் எனப் பொதுவுடைமை தலைவர் ஜீவா முழங்கினார். தனிச்சொத்து மறுப்பை அடிநாதமாகக்கொண்ட சிந்தனைக்குச் சொந்தக்காரரான ஜீவாதான் ‘நாட்டுடைமை’ என்ற சிந்தனையை விதைத்தார்.

கட்டுரையின் முற்பத்தியில் கூறப்பட்ட பிரமுகர்கள் மற்றும் எண்ணற்ற ஆர்வலர்கள் ஆகியோரின் பெருமுயற்சியால் அப்போதைய ஓமந்தூரார் தலைமையிலான அரசின் கல்வியமைச்சர் தி.சு.அவினாசிலிங்கம் செட்டியார், ஏ.வி.மெய்யப்பச்செட்டியாரை வலியுறுத்தி பாரதி பாடல்களை நாட்டுடைமையாக்கினார். இணையாக பாரதியின் நூல்களையும் பாரதியின் தமையனார் விஸ்வநாத ஐயர் தானே முன்வந்து தேசத்திற்கு அளித்தார். 1949ல் இவையெல்லாம் நடந்தேறின.

1981ல் வெளியிடப்பட்ட ஒரு ஒலிப்பேழையில் பாரதி படைப்புகளை தேசத்திற்கு இலவமாக ஏவி.எம். செட்டியார் தாரைவார்த்ததாக (அப்போது அரசாகவோ – பேரரசாகவோ ஆகி இராத) வைரமுத்து எழுதியிருந்தார். பாரதி படைப்புகளை வேறுவழியின்றி கையளித்த ஏவி.எம். செட்டியார் தனக்குப் பாடல் வாய்ப்பளிக்கும் பெருநிறுவனத்தை நிறுவியவர் என்பதற்காகவே வைரமுத்து புகழ்வது புரிந்து கொள்ளக்கூடியதே. ஆனால் எதன் பொருட்டும் உண்மை வரலாறு மறக்கப்படக்கூடாது. ஏனெனில் பாரதியின் படைப்புகள் அக்னிக்குஞ்சுகள்!

Posted on Leave a comment

வாசிப்பின் டான்டலஸ் தாகம் (சென்னை புத்தகத் திருவிழா 2019) | கோ.ஏ. பச்சையப்பன்


இரண்டு கைகளிலும் புத்தகங்கள் நிரம்பிய பைகளுடன் செல்லும்
வாசகர்களை இந்த ஆண்டு காண முடியவில்லை.
– எழுத்தாளர் பா.ராகவனின் முகநூல் பதிவு.

42வது சென்னை புத்தகக் காட்சி கடந்த மாதம்
20ம் தேதி அன்று நிறைவுற்றது. முன்னெப்போதும் இல்லாத அளவில் பதினேழு நாட்கள் நடைபெற்ற
இப்புத்தகக் கண்காட்சியில் பதினெட்டு கோடி ரூபாய் அளவில் விற்பனை நடைபெற்றிருப்பதாகக்
கூறப்பட்டது. ஏறக்குறைய 11 லட்சம் நபர்கள் (கவனியுங்கள்
, வாசகர்கள் அல்லர்) வந்து சென்றிருக்கிறார்கள்.
எண்ணிக்கையில் 800-ஐ நெருங்கிய அரங்குகள்.
ஒரு லட்சம் தலைப்புகளில் ஒரு கோடி நூல்கள்; உண்மையிலேயே பிரம்மாண்டம்தான். ஏற்பாடு
செய்வது மட்டுமல்ல – பெரிய பிரச்சனைகள் ஏதும் இன்றி நடத்தி முடிப்பதும் சவால்தான்.
அதனைச் சாதித்த பபாசி (Bapasi) உண்மையிலேயே பாராட்டுக்குரியது.
பொங்கல் பண்டிகையோடு புத்தகத் திருவிழாவும்
இணைந்து, வாசிக்கும் வழக்கம் உடையவரை வசீகரிக்கின்றது. சென்னை மட்டுமல்லாமல் மதுரை,
ஈரோடு, திருப்பூர் மற்றும் நெய்வேலி என்ற மற்ற பெருநகரங்களிலும் ஆண்டுதோறும் புத்தகக்
கண்காட்சிகள் நடைபெற்றவண்ணம் உள்ளன. மாநகரங்கள் மட்டுமல்லாது திருவண்ணாமலை, செங்கம்
எனச் சிறுநகரங்களில் கூட புத்தகக் கண்காட்சிகள் நடைபெறுகின்றன என்றாலும், சென்னை புத்தகக்
கண்காட்சி பல்வேறு வகைகளில் சிறப்பு உடையது.
·       
தமிழகத்தின் 99% பதிப்பகங்கள் இடம்பெறுகின்றன.
·       
ஒப்பீட்டளவில் பிற புத்தகக் கண்காட்சிகளைவிட சென்னை புத்தகக்
காட்சியினையொட்டி பல பதிப்பகங்கள் புதிய நூல்களை பதிப்பிக்கின்றன.
·       
ஒரு பதிப்பகத்தின் ஒட்டுமொத்த நூல்களையும் (அச்சில் உள்ளனவற்றை)
காணமுடியும்.
·       
புத்தகங்களின் பின் அட்டையில் மட்டுமே பார்த்த எழுத்தாளர்களைச்
சந்திக்கவும், உரையாடவும் சென்னை புத்தகக் காட்சி வாய்ப்பளிக்கிறது.
மேற்கூறப்பட்ட காரணங்கள் தவிர்த்து ஒவ்வொரு
வாசகனுக்கும் சென்னை புத்தகக் காட்சிக்கு வருவதற்கான அந்தரங்கமான காரணங்கள் இருக்கக்கூடும்.
ஒரு கோடி புத்தகங்களூடே உலாவுவதே அலாதியான அனுபவம்தான்.
நந்தனம் ஒய்.எம்.சி.ஏ – மைதானத்தில் நடைபெற்ற
ஜனவரி 04 முதல் 20 வரையிலான ‘மாரத்தான் புத்தகக் கண்காட்சி’ பல பாடங்களைத் தந்துவிட்டுச்
சென்றுள்ளது. எவ்வளவு பெரிய புத்தகக் காதலராயினும் 700க்கும் மேற்பட்ட அரங்குகளை முழுமையாகப்
பார்த்துவிட முடியாது. சென்னை வாழ் மக்கள் வேண்டுமானால் மூன்று நாள்கள் விஜயம் செய்து
முழுமையாகப் பார்க்கலாம். பிற அயலூர் வாசிகள், தங்குமிடம், உணவுச்செலவு ஆகியவற்றை எதிர்கொள்ள
நேரிடும். அதற்கு வீட்டில் இருந்தவாறே நூலை இணையத்தில் தருவித்துவிடலாம். எனவே ஸ்டால்களின்
எண்ணிக்கையில் கட்டுப்பாடு வேண்டும்.
துறைவாரியாக ஸ்டால்களை ஒதுக்குவதைக் குறித்துச்
சிந்திக்கலாம். ஆங்கில நூல்கள், குழந்தைகள் நூல்கள், பல்கலைப் பதிப்புகள், கல்விப்புல
நூல்கள் எனத் தனிவரிசைகள் அமைப்பதைப் பற்றி ஆலோசிக்கலாம். இதற்கென வரும் வாசகர்கள்
எளிதாக நூல்களை வாங்குவதோடு, பிறருக்குத் தேவையற்ற அலைச்சல் தவிர்க்கப்படும்.
இணையத்தில் நுழைவுச்சீட்டை பெறும் செயலியை
அளித்த பபாசி, இறுதிவரை 2019 ஆண்டிற்குரிய புத்தக ஸ்டால்களின் பெயர் – எண் இணைந்த அட்டவணையைப்
பதிவிடவேயில்லை. தீவிர வாசகன் பதிப்பக ஸ்டால்களை தேடுவானேயன்றி விற்பனையாளர்களை அல்ல.
தம் விருப்பத்திற்குரிய எழுத்தாளரை – அவருடைய நூல்களை வெளியிடும் பதிப்பகங்களுடனே இணைத்துத்தான்
அடையாளம் காண்கிறான். 2018-ற்குப் பிறகு அப்டேட் செய்யப்படாத பதிப்பகத்துடன் கூடிய
ஸ்டால் எண் பட்டியல் பெரும் சோர்வைத் தந்தது. அரங்கு நுழைவாயிலில் கிடைக்கும் பட்டியலை
வைத்துத் தேடுவது நேர விரயத்தையே ஏற்படுத்திற்று.
திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து
550 ஆசிரியர்கள் பள்ளிப் பேருந்துகளில் வந்தார்கள். பேருந்தை நிறுத்தியதற்கும் – அரங்கிற்கும்
இடையே சுத்தமாய் முக்கால் கிலோமீட்டர் தூரம். சொந்த உபயோகத்திற்கும், பள்ளி நூலகங்களுக்கும்
வாங்கிய புத்தகப் பொதிகளைத் தோள் வலிக்கச் சுமந்தவர்கள் பபாசியைத் திட்டவே செய்தனர்.
இக்குறைபாடு தவிர்க்கப்பட வேண்டும். உணவுப் பொருட்களின் விலையையும், கழிப்பிடங்களின்
சுகாதாரமின்மையையும் பற்றி எல்லா புத்தகக் காட்சிகள் மீதும் விமர்சனத்திற்குள்ளாக்கப்படும்
ஒன்று. இம்முறையும் அது தொடர்ந்தது. இவ்விரண்டு குறைபாடுகளையும் தவிர்க்கவே முடியாது
என்ற முடிவிற்கு பபாசி வந்துவிட்டதா என்று தெரியவில்லை.
சென்னை புத்தகக் காட்சி மாலை நேரச் சொற்பொழிவுகள்
எந்த வகையில் நூல்களின் விற்பனை எண்ணிக்கை உயர்த்தப் பயன்படுகின்றன என எழுத்தாளரும்,
விற்பனையாளருமான கெழுதகை நண்பர் கேள்வி எழுப்பியதைத் தொலைக்காட்சியில் பார்த்தேன்.
‘நிலையவித்துவான்கள்’ என்றொரு கோஷ்டி அரசு வானொலி நிலையங்களில் உண்டு. நிகழ்ச்சியில்
இடைவெளி நேரங்களை இட்டு நிரப்பப் பயன்படுவார்கள். அதைப்போல ஸ்டால்களிடையே நடந்து களைத்த
பார்வையாளர்கள் காலாற அமரும் இடமாகவே பேச்சாளர் அரங்கங்கள் உள்ளன. வெற்றுப் பேச்சில்
ருசி கண்ட தமிழ் கூறும் நல்லுலகின் நீட்சியாக அவ்விடம் இருப்பதை விடுத்து – விருது
பெற்ற நூல்கள், ஆசிரியர்களின் படங்கள், கைவசம் உள்ள பழைய முதற்பதிப்பு நூல்கள் என வரலாற்றுப்
பயணத்திற்கான வாய்ப்பாக அவ்வரங்கம் மாற்றப்படுவதைக் குறித்து ஆராயலாம். கண்மணி குணசேகரன்
பேசலாம் – எழுத்தாளர்! கமல்ஹாசன் போன்ற போலிகள் வாசிப்பைக் குறித்துப் பேசுமளவிற்கு
தமிழக அறிவு உலகம் வறண்டுவிடவில்லை என நினைக்கிறேன். ஒருவேளை கமலின் சினிமா பிரபல்யம்
புத்தகக் காட்சியை நோக்கி மக்களை ஈர்க்கப் பயன்படும் என நினைப்பார்களேயானால், அடுத்த
ஆண்டு கீர்த்தி சுரேஷ் போன்ற ‘பளபள’ பரிந்துரைகள் என்னிடம் உள்ளன.
போதாமைகள் பல இருப்பினும் வாசிப்பை –
பதிப்புவகை உயிர்ப்புடன் வைத்திருப்பவை புத்தகக் காட்சிகளே. 500 முதல் 1000 பிரதிகள்
வரை அச்சிட்டு தமிழ்நாடு அரசின் நூலகக் கொள்முதலை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு இயங்கிய
அவல நிலையைப் புத்தக் காட்சிகள் மாற்றியுள்ளன. வெள்ளைத்தாளை விற்கும் கடைக்கு வங்கிகள்
கடன்தரும். ஆனால், பதிப்பகங்களுக்குச் சல்லிக்காசு தராது. இச்சூழல் புத்தகக் காட்சிகள்
மேலும் வலுப்பெற்றுப் பரவலாகி வாசிப்பை, பதிப்புலகை மேம்படுத்த வேண்டும்.
பத்து இலட்சத்திற்கும் மேற்பட்ட ‘பார்வையாளர்கள்’
42வது புத்தகக்காட்சிக்கு வந்திருப்பினும் எத்தனைபேர் அவர்களுள் வாசகர்கள், அதாவது
நூல்களை வாங்கியவர்கள் என்பது கேள்விக்குறியே. மேலும் 18 கோடி ரூபாய் நூல் விற்பனைத்
தொகை என்பதும் மகிழ்விற்குரியதாகுமா எனத் தெரியவில்லை. விற்பனையான நூல்களுள் சோதிடம்,
சமையல், கோலம், குண்டாவது (அ) ஒல்லியாவது எப்படி வகையறாக்கள் இலக்கியத்தை வளப்படுத்துவன
ஆகாது. மேற்படி நூல்களை வாங்குபவர்கள் நீடித்த வாசகர்களாகமாட்டார்கள். இவற்றின் அடிப்படையில்
பார்க்கும்போது பதிப்பகங்கள் நித்யகண்டம் பூரண ஆயுசு என்ற நிலையிலேயே இயங்கி வருகின்றன
என்பதே உண்மை.
நூலகக்கொள்முதல் என்பது விசித்திரமான
சூத்திரங்களுக்குட்பட்டது. தமிழ் எங்கள் மூச்சு எனக் கூறிக்கொள்ளும் அரசு, ஆங்கில நூல்களுக்கே
அதிக அடக்கவிலையை நிர்ணயிக்கின்றது. மேலும் தனது விருப்பத்திற்குரிய கதாநாயகனின் திரைப்படத்தை
முதற்காட்சியிலேயே பார்க்க ஆயிரம் ரூபாய் செலவழிக்கத் தயங்காத இளைஞன், ஒரு லிட்டர்
பெட்ரோல் விலைக்கும் குறைவான புத்தகத்தை வாங்குவதில் கணக்குப் பார்ப்பதும் அவலமே!
உணவு விடுதியில் அமர்ந்து அம்புலிமாமா
கதைக்கு ஒப்பான ஹாரிபாட்டரை எழுதிய ரவ்லிங், இங்கிலாந்து அரசிக்கு நிகராக வருமான வரிகட்டும்
அளவிற்கு சம்பாதித்தார். ஆனால் நோபல் பரிசு பெறத் தகுதியான படைப்புகளை அளித்த அசோகமித்திரன்
சாகும்வரை வாடகை ஆட்டோவில்தான் பவனித்தார். ஊனினை உருக்கி, உள்ளொளி பெருக்கி சுமார்
1000 பக்க அளவில் ‘யதி’ என்ற அற்புத நாவலைத் தந்த பா.ராகவன் தன் லௌகீகத் தேவைகளுக்கு
தொலைக்காட்சித் தொடர் வசனம் எழுதவேண்டியுள்ளது!
எனவே, புத்தகக்காட்சிகள் இன்னும் பெருக
வேண்டும். வாசகர்கள் வருகை தந்து நூல்களை வாங்கி, பதிப்பகங்களை (அதன் மூலமாக) எழுத்தாளர்களை
ஆதரிக்க வேண்டும். புத்தக வாசிப்பு, தமிழர்களின் பண்பாட்டின் அங்கமாக மாறவேண்டும்.
சென்னைப் புத்தகக்காட்சி வெற்றியா – தோல்வியா
என நிர்ணயிக்கத் தேவையில்லை. பதிப்பகங்களும், எழுத்தாளர்களும் நம்பிக்கை இழக்கத் தேவையில்லை.
கடந்த நூற்றாண்டில் தங்கத் தட்டில் சாப்பிடுமளவிற்குச் சம்பாதித்த தமிழ்த்திரையுலகின்
முதல் சூப்பர்ஸ்டார் பெயரை உலகம் மறக்கலாம். ஆனால், ‘போரும் அமைதியும்’ நாவலைத் தமிழில்
அற்புதமாகப் பதிப்பித்த சக்தி வை.கோவிந்தன் என்ற பதிப்பாளருக்கு வரலாற்றில் என்றும்
இடம் உண்டு.
கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு
முன்தோன்றிய மூத்தத் தமிழ்க்குடியில் எத்தனையோ ஆயிரம் மன்னர்கள் வந்து சென்றிருக்கலாம்!
ஆனால் சங்கப்பாடல்களில் இரண்டினை மட்டுமே எழுதிய ஒரு புலவனை ஐ.நா.சபை வரை கொண்டு சேர்த்துள்ளது
இலக்கியம். அவர் பெயர் கனியன் பூங்குன்றன்.
எவ்வளவு நீர் அருந்தினாலும் தாகம் தீரா
சாபம் பெற்ற ஜீயஸின் மகன் டான்டலஸ் போன்று, புத்தகக் கட்டுகளைச் சுமந்தபடி இல்லம் திரும்பும்
தீவிர வாசகன், தன் தீரா வாசிப்புத் தாகம் தணிக்க அடுத்த ஆண்டு சென்னைப் புத்தகத் திருவிழாவிற்கு
காத்திருக்கத் தொடங்குகிறான். அந்த வாசகன்தான் சென்னை மட்டுமல்ல – எல்லாப் புத்தகக்
காட்சிகளுக்கும் உயிர் கொடுப்பவன்.

Posted on 1 Comment

கால வழு (இல குணசேகரனின் திராவிட அரசியல் நூலை முன்வைத்து) | கோ.இ. பச்சையப்பன்


தலைவரார்களேவ்…
தமிழ்ப்பெருமக்களேங் வணக்கொம்!
‘தொண்ணூறாம் வாட்டத்தில் பாசும் வாய்ப்பய்த்
தாந்தமைக்கு மகிழ்கின்றேன். இன்றைய தினம்
கண்ணீரில் பசித்தொய்ரில் மாக்களெல்லாம்
காலங்கும் காட்சியினெய்க் காண்கின்றோங்
நாம்’
‘வண்ணாரப் பேட்டகின சார்பில் மாலை’
‘வளமான தாமிழர்கள் வாட லாமா?
கண்ணாளா போருக்கு போய்வா போன்ற
பொற நான்ற்றுத் தாயெய் நாம் மறந்திட்டோமா
தாமிழர்கள் சொவாழ்வாய்த் திட்டமிட்டுக்
கெடுப்பவர்கள் பிணக்குவியல் காண்போ
மின்றே
நாமெல்லாம் வரிப்பொலிகள் பகைவர் பூனெய்
நாரிமதி படைத்தோரை ஒழிப்போம் வாரீர்
தலைவரார்களேங்
பொதுமாக்களேங் நானின்னும்
யிரு கூட்டம் பேசயிருப்பதால்
வொடய் பெறுகறேன் வணக்கொம்’

இன்னுமிருவர் பேச இருக்கிறார்கள்
அமைதி… அமைதி…

விடுதலைக்குப் பின்னரான எழுபது வருடங்களில் தமிழகம் ஐம்பத்தொரு ஆண்டுகளாக திராவிட சித்தாந்தத்தை கைக்கொண்ட அரசியல் கட்சிகளால் ஆளப்பட்டு வருகிறது. அரசியல் மட்டுமின்றி மொழி பண்பாடு சமூகம் மற்றும் இலக்கியம் என தமிழகத்தின் அனைத்துத் துறைகளிலும் திராவிடக் கருத்தியல் ஏற்படுத்தியுள்ள தாக்கம் குறித்துப் பரிசீலிக்க ஏற்றதான ஏற்றதொரு தருணம் இது.

ஆனைமுத்து, எஸ்.வி. ராஜதுரை, கீதா, கௌதமன் மற்றும் வீரமணி என்ற சாரங்கபாணி ஆகியோரால் பெரியார் என்றழைக்கப்படும் ஈ.வெ.ரா. வின் பேச்சும் எழுத்தும் தொகுக்கப்பட்டுத் திண்டு திண்டாக அச்சில் கிடைக்கின்றன. தென்னாட்டு இங்கர்சால் எனத் தம் தம்பியரால் மட்டும் அழைக்கப்பட்ட தமிழகத்தின் ‘ஒரே பேரறிஞரான’ அண்ணாதுரையின் நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள் நூலகம்தோறும் புழங்கி வருகின்றன.

ஒரு தலைமுறையைச் சேர்ந்த சமூக உருவாக்கத்தில் பங்கு பெறும் ஆசிரியர்கள், கவிஞர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் அரசியல்வாதிகள் என சமூகத்தின் அனைத்துத் தரப்பினரும் திராவிட சிந்தனையால் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பாதிக்கப்பட்டே வந்துள்ளனர். அத்தாக்கம் சமகாலத்தில் வாழும் புதிய தலைமுறை வரை நீள்கிறது. போலவே அரை நூற்றாண்டுகாலம் நீடித்த ஆட்சி தந்த அதிகாரத்தின் வழியே தொடக்கக் கல்வி முதல் பல்கலைப் பாடங்கள் வரை திராவிட சிந்தனை விதைக்கப்படுகிறது.

எஸ்.எஸ்.ஆர்., எம்.ஜி.ஆர்., எம்.ஆர்.ராதா மற்றும் என்.எஸ்.கிருஷ்ணன் ஆகிய நடிகர்களின் வழியே சென்ற தலைமுறை வரை திரைப்படங்கள் மூலம் திராவிடக் கருத்தியல் பரிமாறப்பட்டது. தொகுத்துக் கூறினால் அரசியல் இலக்கியம் கலை எனச் சமூகத்தின் அனைத்துத் தளங்களிலும் திராவிடச் சிந்தனை வேர் விட்டுப் பரவி இருக்கிறது எனலாம்.

அதிகார வலிமை மிக்க திராவிடக் கருத்தாக்கத்தை விமர்சித்து அவ்வப்போது தமிழில் புத்தகங்கள் எழுதப்படுகின்றன.

சுப்பு எழுதிய  ‘திராவிட மாயை ஒரு பார்வை’, பி.ராமமூர்த்தியின் ‘ஆரிய மாயையா திராவிட மாயையா?’, நெல்லை ஜெயமணியின் ‘கண்டுகொள்வோம் கழகங்களை!’ போன்றவை அவற்றுள் சில. இந்த வரிசையில் ஒரு புதிய வரவு தஞ்சை பொய்யாமொழி பதிப்பகம் வெளியிட்டுள்ள இல. குணசேகரன் எழுதிய ‘திராவிட அரசியல்’ என்ற கட்டுரை நூல்.

புத்தகம் 336 பக்கங்களில் 18 அத்தியாயங்களில் திராவிட அரசியலை விமர்சிக்கிறது. திராவிட அரசியல்வாதிகள் தமது அடிப்படைக் கொள்கைகளாக கூறிக்கொள்ளும் திராவிட நாடு, பகுத்தறிவு, சாதி ஒழிப்பு மற்றும் சமயச் சார்பின்மை போன்றவைகளுக்கு எவ்வளவு உண்மையாக அவர்கள் நடந்து கொண்டார்கள் என்பதை 50 ஆண்டுகாலப் பரப்பில் அரசியல் தரவுகளுடன் இந்நூல் ஆராய்கிறது.

நீதிக்கட்சி முதல் இன்றைய திமுக வரை வளர்ந்துள்ள பிராமணத் துவேஷம் பற்றிப் புத்தகம் ஆராய்கிறது. வேதபாராயணம், உபன்யாசம், ஆலயக் கைங்கரியங்கள் மற்றும் ஆச்சார அனுஷ்டானங்கள் மூலம் சனாதன மதம் என்று ஆதியில் அழைக்கப்பட்ட இந்து மதத்தின் பாதுகாவலராய் விளங்கிய பிராமணர்களைத் தனிமைப்படுத்துவது, சிறுமைப்படுத்துவது ஆகியவற்றின் மூலம் கிருத்துவ மிஷினரிகள் தங்கள் மத மாற்றத்தை மேற்கொள்ள ஏதுவாக விதைக்கப்பட்டதுதான் பிஷப் கால்டுவெல்லின் ஆரிய திராவிட புரட்டு.

பிராமணர்கள், ஆரியர்கள், வந்தேறிகள் என்ற கோட்பாடு வெறுப்பு அரசியலின் மீது கட்டமைக்கப்பட்ட போலி வரலாறு என்பதை கால்டுவெல்லுக்கு பின்பு வந்த பல்வேறு வரலாற்று ஆய்வாளர்கள் உரைத்த பின்பும், திராவிட சித்தாந்தவாதிகள் தங்கள் பிராமணத் துவேசத்தைக் கைவிட்டதே இல்லை என்பதை நூலாசிரியர் குணசேகரன் விவரிக்கிறார்.

1920களில் ஜாலியன் வாலாபாக் படுகொலையை எதிர்த்து காங்கிரஸ் தேர்தலைப் புறக்கணித்தபோது நீதிக்கட்சி ஆட்சியைக் கைப்பற்றியது. ஆட்சியில் இருந்த 16 ஆண்டுகளில் தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த ஒருவருக்கு கூட அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் தரவில்லை. போலவே, அண்ணாதுரை ஆட்சியில் நிகழ்த்தப்பட்ட கீழவெண்மணி படுகொலையின்போது ஈ.வெ.ரா. பாதிக்கப்பட்ட, தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஆதரவாக எள்முனை அளவும் பாடுபடவில்லை என்பதையும் புத்தகம் விளக்குகிறது.

புத்தகம் 1920 முதல் 2010 வரையிலான திராவிட அரசியலின் இரட்டை முகத்தை அம்பலப்படுத்துகிறது இப்புத்தகம்.

சாதிப் பிரிவினையை ஒழித்தோம் என்றார்கள், ஆனால் சாதித் தலைவர்களின் பெயர்களைப் போக்குவரத்துக் கழகங்களுக்கும், மாவட்டங்களுக்கும் சூட்டினார்கள். தென்மாவட்ட கலவரங்களுக்குப் பிறகு அவை நீக்கப்பட்டதை அறிவோம்.

தமிழர்ப் பண்பாட்டைத் தூக்கிப்பிடிப்பது நாங்கள்தான் என இன்றளவும் கதைக்கிறார்கள். ஆனால் இவர்களின் தந்தை பெரியார் கண்ணகி முதல் மாதவி வரையிலான காப்பியப் பெண்களை இழிவுபடுத்திப் பேசியது வரலாற்று உண்மை.

1967ல் அண்ணாதுரை, பக்தவச்சலத்தை வெற்றி கொள்ள வழிவகுத்தது அரிசிப் பஞ்சமும், இந்தி மொழியும். இவர்களின் உடோப்பிய திராவிட நாட்டுக்கு உட்பட்ட கேரளம், ஆந்திரம் போன்ற மாநிலங்கள் மும்மொழிக் கொள்கையினை ஏற்று தாய்மொழிவழிக் கல்வியுடன் செழித்திருக்க, தமிழகத்தில் தாய்மொழி கான்வெண்ட்டுகளில் காணாமல் போயிருக்கிறது.

“கட்சியில் சேர்ந்தவுடன் பேரனுக்கு மத்திய அமைச்சர் பதவியா?” என ஊடகங்களின் கேள்விக்கு, “அவருக்கு இந்தி தெரியுமே” என்றார் கருணாநிதி. இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் தீக்குளித்த ஆன்மாக்கள் சாந்தி அடைந்திருக்கும். மக்கள்-தேவர்- நரகர் என்ற நூலில் எழுத்தாளர் பிரபஞ்சன் ‘நாம்தானே இளிச்சவாயப்பர்’ என்கிறார்.

காந்தியடிகளால் தென்னகத்தில் திருச்சியில் 1016ல் தொடங்கிவைக்கப்பட்ட தட்சிண பாரத் ஹிந்தி பிரசார சபா மூலம் ஹிந்தி பயில்வோர்களில் அதிகம் பேர் தமிழகத்தில் இருந்துதான் என்பது நகைமுரண்.

டால்மியாபுரம் என்ற பெயரை மாற்ற போராடினார்கள் – ராபின்சன் பூங்காவில் கட்சி தொடங்கியவர்கள். செயின்ட் ஜார்ஜ் கோட்டை என்ற பெயரும் எப்போதும் இனிக்கிறது அவர்களுக்கு.

1926ல் சுயராஜ்ஜியக் கட்சியிடம் தோற்றுப்போகிறது நீதிக்கட்சி. நீதிக் கட்சியின் தலைவர்களுள் ஒருவரான டாக்டர் பி சுப்புராயன் கட்சியை விட்டு வெளியேறி சுயராஜ்ஜியக் கட்சியுடன் ஆட்சி அமைத்தார். கழகங்களிடையே கூடுவிட்டுக் கூடுபாயும் வித்தைக்கு வித்திட்டவர் யாரெனத் தெரிகிறதா? 1967 தேர்தலின்போது அண்ணாதுரை ரூபாய்க்கு மூன்று படி அரிசி என்ற வாக்குறுதி தந்தார். ஆட்சியைக் கைப்பற்றியதும், ‘மூன்று படி லட்சியம் ஒரு படி நிச்சயம்’ எனத் தமிழைக் கொண்டு டபாய்த்தார்.

நிலமற்ற விவசாயிகளுக்கு இரண்டு ஏக்கர் இலவச நிலம் என்று கூறி ஆட்சியைப் பிடித்ததும் ‘கையளவு நிலமாவது தருவேன்’ என்ற முத்தமிழ் அறிஞர் அண்ணாதுரைதான். இன்னும் இருபது ரூபாய்க்குத் தமிழன் ஏமாந்து கொண்டே இருப்பதுதான் பேரவலம்.

‘அடைந்தால் திராவிட நாடு இல்லையேல் சுடுகாடு’ என சூளுரைத்தார்கள். பிசி ராமசாமி அய்யர் தலைமையில் தேசிய ஒருமைப்பாட்டுக் குழு அமைக்கப்பட்டு பிரிவினை தடை சட்ட மசோதா வந்ததும் திராவிட நாடு கோரிக்கையைச் சுடுகாட்டிற்கு அனுப்பினார்கள்.

சங்க இலக்கியங்களும், பக்தி இலக்கியங்களும் செழுமைப்படுத்திய தமிழ்மொழியை பகுத்தறிவு என்ற போர்வையில் பக்தி இலக்கியங்களைக் குறிவைத்துத் தாக்கினார்கள். பகுத்தறிவின் எல்லை இந்துமதம் வரையில்தான் என்பதைக் கூறவே தேவையில்லை. பிள்ளையார் சிலையை உடைத்த ஈ.வெ.ரா தனக்குத் தானே சிலையை வைத்துக்கொண்டார். பின்னாட்களில் அவரால் ‘கண்ணீர்த்துளிகள்’ என்று வசைப்பாடப்பட்ட கழகத்தார் ‘சரஸ்வதி உன் நாவில் இருக்கிறாள் என்கிறாயே, எங்கே அப்பா அவள் மலம் கழிப்பாள்?’ எனக் கூசாமல் கேட்டார்கள். ‘உங்கள் இதயத்தில் குடியிருக்கும் அண்ணா வாடகையா தருகிறார்?’ எனக் கேட்டால் தமிழினத் துரோகி என்பார்கள்.

‘தமிழை நான் கற்றுக்கொண்டது கலைஞரின் வசனம் கேட்டுத்தான்’ எனக்கூறுவது திருவிழா / திரை விழா மேடைகளில் வழமையான ஒன்று. அண்ணாவும் கதை வசனம் எழுதியவர்தான். நாடகங்கள், சிறுகதைகள், நாவல்கள் ஆகியன எழுதிய திராவிட இயக்க எழுத்தாளர்கள் பட்டியல் நீளமானது. தென்னரசு, முரசொலிமாறன், அன்பழகன், நெடுஞ்செழியன் அவர்களுள் சிலர். இலக்கிய ரீதியில் அவர்கள் எழுத்துக்கு என்ன இடம் என்பது தனியே ஆராயத் தக்கது. ஆனால் உள்ளடக்கத்தின் அடிப்படையில் பெரும்பாலான திராவிட இயக்கப் புனைவுகள், கண்ணதாசனின் வார்த்தைகளில் சொன்னால் ‘நச்சு இலக்கியங்கள்’.

திராவிட இயக்கத் தலைவர்களை விமர்சிக்க புதிதாக நாம் எதையும் கூற வேண்டியதில்லை. அந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் எதிரெதிர் அணிகளில் இருந்தபோது பரஸ்பரம் ஒருவரை பற்றி மற்றொருவர் பேசிய, எழுதியவற்றைக் குறிப்பிட்டாலே போதுமானது. பலவற்றை அச்சிலேயே ஏற்ற முடியாது.

சாதி ஒழிப்பு என்ற பெயரில் பிராமணத் துவேஷத்தையும், பகுத்தறிவு என்ற பெயரில் இந்து மத வெறுப்பையும் அடிப்படைக் கொள்கையாகக் கொண்ட திராவிட இயக்கங்களின் மூலவர் ஈ.வெ.ரா ஒரு சமூகப் போராளியாக நிறுவப்பட்டுள்ளார். பாடப்புத்தகங்கள் வழியாக மட்டுமே அறியும் பேஸ்புக், வாட்ஸ்அப் இளையதலைமுறை அவரை மார்டின் லூதர் கிங் ஜூனியராகவோ மால்கம் x ஆகவோ அறியும் அபாயம் உள்ளது. இச்சூழலில் ‘திராவிட அரசியல்’ போன்ற நூல்கள் தேவைப்படுகின்றன.

நூறு நூல்களை வாசித்து அவைகளின் சாரத்தை இல. குணசேகரன் நூல் ஆக்கியுள்ளார். நல்ல அச்சு, தரமான தாள், இனிய நடை – சுவாரசியமான வாசிப்பு அனுபவத்தைத் தரும் நூல். புத்தகத்தில் காணப்படும் ஏராளமான அச்சுப்பிழைகள் அடுத்த பதிப்பில் களையப்படும் என நம்புவோமாக.

தமிழ் இலக்கணப்படிப் பிழையாகப் பேசுவதும் எழுதுவதும் வழு எனப்படும். சில இடங்களில் வழு (பிழை) வந்தாலும் சரியானது போன்று தோற்றமளிக்கும். அதற்கு வழுவமைதி என்று பெயர். இக்கட்டுரையின் தொடக்கத்தில் உள்ள ஞானக்கூத்தனின் கவிதைக்கு ‘காலவழுவமைதி’ என்பதே தலைப்பு. பிறழ்வுகளையே அடிப்படையாகக் கொண்ட திராவிட இயக்கங்களைப் பற்றிய இக்கட்டுரைக்கு இதைவிடப் பொருத்தமான வேறு தலைப்பு இருக்க முடியாது.

கண்ணீரும், செந்நீரும் சிந்திப் பெற்றது சுதந்திரம். அந்த சுதந்திர தினத்தைத் துக்க தினமாக அனுசரிக்கக் கோரிய ஒரு மனிதரைப் பெரியார் என அழைப்பது பேரவலம் அல்லவா?

பின்குறிப்பு: கவிதையை மறுபடியும் வாசித்துப் பாருங்கள். உங்களை அறியாமல் உங்கள் குரலில் ஒரு கயமைத்தனம் கலப்பதைப் பார்க்கலாம்.

Posted on Leave a comment

அஸதோமா ஸத்கமயா! – (ம.வெங்கடேசனின் இந்துத்துவ அம்பேத்கர் நூலை முன்வைத்து) | கோ.இ. பச்சையப்பன்

சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குணகர்ம விபாக:!
தஸ்ய கர்த்தாரமபி மாம் வித் விர்த்யகர்த்தாரமவ்யயம்!!

– ஸ்ரீமத் பகவத்கீதை – 4வது அத்தியாயம், 13 வது ஸ்லோகம்.

“குணங்கள், கருமங்கள் என்ற இவற்றின் பாகுபாட்டை ஒட்டி வர்ணங்களை சிருஷ்டி செய்திருக்கிறேன்!”

– கீதையில் ஸ்ரீ கிருஷ்ணர்.

என்னுடைய முகநூல் பக்கத்தின் பதிவொன்றில் அண்மையில் ஒரு கேள்வியைப் பதிவு செய்திருந்தேன். கீதை ஸ்லோகங்களை – அதன் கருத்துக்களை இந்து நண்பர்களில் எத்தனை பேர் வாசித்துள்ளீர்கள் என்பதே வினா. பின்னூட்டமிட்டிருந்த 32 பேர்களில் வெறும் இரண்டு பேர்களே வாசித்துள்ளதாகத் தெரிவித்திருந்தனர். எழுபதிற்கும் அதிகமான விருப்பக்குறிகள்! முகநூல் நண்பர்களின் பொய்யாமையைப் போற்றும் அதே தருணத்தில் இஸ்லாமியர்கள் குரானை வாசிப்பது போன்றோ, கிறித்துவர்கள் பைபிளை ‘சுவாசிப்பது’ போன்றோ – இந்துக்கள் கீதையை அணுகுவதில்லை என்பது வருத்தம் தரும் உண்மை.

கீதை மட்டுமே இந்து மதத்தின் பிரமாணமல்ல என்பதும் உண்மை. மற்ற மதங்களுக்கு ஆதாரம் ஒற்றை நூல் என்றால் – நமக்கு ஒரு நூலகமே உள்ளது. வேதங்கள், புராணங்கள், தத்துவங்கள்… என. பிற மதங்களைத் தோற்றுவித்தவர் ‘ஒருவர்’ என உண்டு. இந்து மதத்தில் அவ்விதம் இல்லை. இந்து மதத்தின் பலமே அதன் பலவீனமாகிவிட்டது துரதிஷ்டவசமானது. விளைவாக இந்துமதம் சாதியத்தைத் தூக்கிப்பிடிக்கிறது என்று விமர்சனம் (அது பல சமயங்களில் அவதூறு என்ற நிலையை அடைந்துவிட்ட பின்பும்) வைக்கப்படும்போது அதனை எதிர்கொள்ள இயலாமல் விழிக்கிறோம். எனவேதான் அம்பேத்கர் அவர்கள் பௌத்தத்தை தழுவினார் எனக் கூறப்படும்போதும் விமர்சனத்திற்கு உட்படுத்தாமல் ஏற்கிறோம். “உண்மையில் அம்பேத்கர் ஜாதி ஒழியவேண்டும் என்று எழுதினாரா அல்லது இந்து மதம் ஒழிய வேண்டும் என்று எழுதினாரா? என்ற கேள்வியை முன்வைத்துத் தொடங்குகிறது ம.வெங்கடேசன் எழுதியுள்ள இந்துத்துவ அம்பேத்கர் என்ற அரிய புத்தகம்.

புராணங்களும் இதிகாசங்களும் சாதியை முன்னிறுத்துகின்றன என்ற குற்றச்சாட்டிற்கு முகத்தில் அறையும் பதில்களைத் தருகிறார் ம.வெ.

ஐந்தாம் வேதம் எனப்படும் மகாபாரதத்தை எழுதியவர் மீனவ குலத்தில் பிறந்த வியாஸர். ராமாயணத்தை வடமொழியில் எழுதியவர் வேடர் குலத்தைச் சேர்ந்த ‘ரத்னாகர்’ என்ற இயற்பெயரைக் கொண்ட வால்மீகி. பாகவதம் பாடிய பகவான் புகழ் போதாது என பாரதம் பாடி பகவான் கிருஷ்ணரை வியாசர் போற்றுகின்றார். கடவுளெனக் கொண்டாடப்படும் கிருஷ்ணர் பிறப்பால் யாதவர். கடவுளின் அவதாரமான ராமபிரான் சத்ரியர். போற்றுபவரும் பிராமணர் அல்லர். போற்றப்படுபவரும் பிராமணர் அல்லர்! இந்தப் புள்ளியிலிருந்து 22 அத்தியாயங்களில் அண்ணல் அம்பேத்கர் பற்றிய உண்மையான பரிமாணத்தை இப்புத்தகம் முன்வைக்கிறது.

சமஸ்கிருதத்தினை பாரதத்தின் அதிகாரபூர்வ மொழியாகக் கொண்டுவரப்பட்ட மசோதா மீதான விவாதத்தில் அதனை ஆதரித்துக் கையொப்பமும் இட்டவர் அம்பேத்கர். மேலும், இந்தியாவில் இருந்த – இருக்கிற ஒவ்வொரு ஜாதியும் ஒரு இனக்குழு எனப் பிரிவினை ஏற்படுத்த ஆங்கிலேயர்கள் வரையறுத்ததைக் கடுமையாக எதிர்த்தவர்களில் ஒருவர் அவர். மற்றொருவர் குருஜி எனப் பணிவுடன் விளிக்கப்படும் கோல்வல்கர்… ஆர்.எஸ்.எஸ்!

ம.வெ.வின் வாதம் மேற்கூறிய இரு பெருமக்களின் எழுத்துக்களின் அடிப்படையிலேயே அமைகிறது.

விடுதலைக்காகச் சிறைப்பட்ட வேறெந்தத் தலைவரையும் விட ஒப்பீட்டளவில் பெரும் கொடுமையை அந்தமான் சிறையில் அனுபவித்த வீர்சாவர்க்கருடன் தீண்டாமை ஒழிப்பில் இணைந்து அம்பேத்கர் செயல்பட்டதை நூல் பதிவு செய்கிறது. தேசியக் கொடியில் அசோகச்சக்கரத்தை, சாவர்க்கரும் ஆதரித்ததை ம.வெ.விளக்குகிறார். காந்தி கொலை வழக்கில் (தனிப்பட்ட வன்மத்தினைத் தீர்த்துக்கொள்ளும் பொருட்டு) சாவர்க்கர் கைதுசெய்யப்பட்டார். சாவர்க்கரின் வழக்கறிஞரான போபட்கருக்கு, ‘சாவர்க்கர் மீதான குற்றச்சாட்டிற்கு ஆதாரம் இல்லை, ஜோடிக்கப்பட்ட வெற்று வழக்கு’ என எடுத்துக்கூறியவர் அம்பேத்கர்.

குருஜி கோல்வல்க்கர், வீர்சாவர்க்கர் ஆகியோருடன் மட்டுமல்ல, இந்து மகாசபையைச் சேர்ந்த டாக்டர் மூஞ்சேவுடன் கூட அம்பேத்கருக்கு இருந்த நெருங்கியத் தொடர்பை விளக்கும் புத்தகத்தின் 12வது அத்தியாயம் முக்கியமானது.

“நம் நூற்றாண்டின் மாபெரும் இந்தியர் விவேகானந்தரே. அவரிலிருந்து நவ இந்தியா ஆரம்பிக்கிறது!’ சொன்னவர் அம்பேத்கர். ஆர்.எஸ்.எஸ்ஸின் ஆதர்ஸம் சுவாமி விவேகானந்தர் என்பதில் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது.

வெறும் புள்ளி விவரங்களும் – தேதிகளும் – அடிக்குறிப்புகளும் கொண்டதல்ல இந்நூல். தான் முன்வைக்கும் கருத்துக்கு அசைக்க முடியாத ஆதாரங்களை முன்வைப்பதோடு அதற்கான வரலாற்றுப் பின்னணியையும் கூறுகிறார் ம.வெங்கடேசன். அம்பேத்கர் இந்துத்துவாவை எவ்விதம் அணுகினார் என்பதைப் பதிவுசெய்வதோடல்லாமல் அக்காலத்துடன் தொடர்புடைய வரலாற்று நிகழ்வுகளையும் பதிவு செய்திருக்கிறார்.

1952ல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் பாம்பே வடகிழக்குத் தொகுதியில் அம்பேத்கர் போட்டியிட்டபோது அவரை எதிர்த்து வேட்பாளரை நிறுத்தியது நேருவின் காங்கிரஸ். ஆனால் பணி ஆற்றியவர் ஆர்எஸ்எஸ். பிரசாரகர் தத்தோபந்த் தெங்கடி என்ற பிரசாரக்.

இடதுசாரிகளின் எளிய இலக்காகவும், கற்பிதங்களின் அடிப்படையில் விமர்சிக்க ஏதுவாகவும் இருப்பது இந்துத்துவம். அவர்கள் இன்று அண்ணல் அம்பேத்கர் அவர்களின் வாதத்தைத் தமது புரட்டுகளுக்கு வலுச் சேர்க்க துணைக்கழைத்துக்கொள்வர். ஆனால், கம்யூனிஸம் மற்றும் ‘மக்கள் (?) சீனம்’ பற்றி அம்பேத்கர் என்ன கருத்துக்கொண்டிருந்தார் என்பதை ம.வெங்கடேசன் பதிவு செய்கிறார்.

“அவர்கள் (கம்யூனிஸ்டுகள்) எப்போதுமே எந்தப் பிரச்சினைக்கும் செயல்பூர்வமான அணுகுமுறையை மேற்கொண்டதில்லை.”

“இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே மோதல் ஏற்படும் வாய்ப்பு எப்போதும் இருக்கவே செய்கிறது.”

“கம்யூனிச நாடுகளில் ஒழுக்க நெறி என்ற ஒன்றே இருக்காது. இன்று ஒழுக்கநெறியாகக் கருதப்படுவது அடுத்த நாளே ஒழுக்க நெறிக்குரியதாக இல்லாமல் ஆகிவிடும்.”

– மேற்கூறிய விமர்சனத்தை முன்வைத்த அம்பேத்கரை கம்யூனிஸ்டுகள் எவ்விதம் எதிர்கொண்டார்கள் தெரியுமா?

‘பெட்டி பூர்ஷ்வா மிஸ்லீடர்’ என்று கேலி செய்தனர். மேலும், 1952 தேர்தலில் ‘காம்ரேட்’ எஸ்.ஏ.டாங்கே ‘ஒதுக்கப்பட்ட இடத்துக்குப்’ போட்டியிடுபவர்களில் யாருக்கும் வாக்களிக்காதீர்கள்’ என்றார். அம்பேத்கர் 14000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றுப் போனதை ம.வெங்கடேசன் பதிவு செய்கையில் இடதுசாரிகளின் ‘நுட்பமான அரசியல் சுத்திகரிப்பு’ பற்றி வயிறெறிவதைத் தவிர வேறென்ன செய்வது?

சீனாவைப் பற்றி கோல்வல்கரின் கருத்தென்ன? அது – ரத்தினச் சுருக்கமானது – ‘கள் குடித்த குரங்கைத் தேள் கொட்டியதுபோல்!’

புத்தகத்தில் 18வது அத்தியாயம் தேசிய அபாயமாக நூற்றாண்டுகளாக இந்தியாவைப் பீடித்திருக்கும் மதமாற்றம் – அம்பேத்கர் ஏன் இஸ்லாம் – கிறுத்துவமதம் போன்றவற்றிற்கு மாறவில்லை என்பதை நுணுக்கமாக அலசுகிறது. ம.வெங்கடேசனின் மொழிநடை மற்றும் வாதத்திறன் உச்சம் பெறுவது இப்பகுதியில்தான்.

பெரும் திரளான மக்களுக்குத் தலைவராக கருதப்பட்ட அம்பேத்கர் மதமாற்றச் சக்திகளின் விருப்பத்திற்குரிய தேர்வாகவே எப்போதும் இருந்திருக்கிறார். அவரை முன்னிநிறுத்தி பல்லாயிரம் பேரை ஈர்க்கலாம் என்ற பெரும் வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள மதமாற்றச் சக்திகள் விரும்பியது இயல்பே.

1935ல் அம்பேத்கர் மதம் மாற முடிவெடுத்தபோது தீண்டத்தகாதவர்கள் இஸ்லாம் மதத்தினைத் தழுவ 5 கோடி ரூபாயை ஒதுக்கினார் ஹைதராபாத் நிஜாம். அந்த ஆண்டே பதுவானில் நடைபெற்ற முஸ்லிம் மாநாட்டிற்கு அழைப்பு வந்தும் அம்பேத்கர் செல்லவில்லை. அவர் இஸ்லாமிற்கு மாறிவிட்டார் என வதந்தியைப் பல முறை மறுத்துள்ளார். அம்பேத்கர் கூறினார்: ‘நான் இஸ்லாம் தழுவியிருந்தால் கோடானுகோடி பணம் என் காலடியில் கொட்டப்பட்டிருக்கும். ஆனால் அடுத்த 5 ஆண்டுகளில் நாடு சீரழிந்திருக்கும்.”

மதம் மாற்றத்தை தம்மைப் பரலோகத்திற்கு அழைத்துச் செல்லும் பாதையைச் செம்மைப்படுத்தும் கருவி எனக் கருதும் கிறித்துவம் குறித்து அம்பேத்கர் கூறுவது: ‘இந்தியக் கிறித்துவர்கள் சமூக அநீதிகளை அகற்றுவதற்காக எப்போதும் போராடியது இல்லை.’

மற்றும் கிறித்துவத்துக்கு மதமாற்றத்தை மேற்கொள்வது தேசிய நலனுக்கு எதிரானது என்ற பார்வையே அம்பேத்கருக்கு இருந்துள்ளது என்பதை ம.வெங்கடேசன் வெளிப்படுத்துவதோடு அம்பேத்கர் பௌத்தத்தினை ஏன் தேர்ந்தெடுத்தார் என்பதை விளக்குகிறார். 1956 அக்டோபர் 14 அன்று பௌத்த மதத்திற்கு மாறுகிறார் அண்ணல். அவரே எழுதிய அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி, இந்துக்கள் என்பதை வரையறுக்கும்போது அது பௌத்தர்களையும், சீக்கியர்களையும், ஜைனர்களையும் உள்ளடக்கியது என்கிறார். இந்துமதம் மதம் அல்ல வாழ்வியல் முறை என்பதோடு இந்துத்துவம் என்பது மதம், தேசம், கலாசாரம், பண்பாடு, மொழி, சமூகம், வரலாறு என எல்லாவற்றையும் உள்ளடக்கியது. இவற்றின் அடிப்படையில் அம்பேத்கர் இந்துவாகவே இந்திருக்கிறார் என்ற கருத்தை ம.வெங்கடேசன் நிறுவுகிறார்.

மேலும் இந்துத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் ஆர்.எஸ்.எஸ்ஸுக்கும் அம்பேத்கருக்கும் பொது சிவில் சட்டம், இந்தியப் பிரிவினை, இந்து சட்ட மசோதா, தேசிய மொழிகள் போன்றவற்றில் ஒத்திசைவான கருத்து இருந்ததை இந்தப் புத்தகம் படம்பிடிக்கிறது.

அம்பேத்கர் இந்து மத்தை விமர்சனம் செய்துள்ளார். உண்மை. ‘தந்திரம் மிக்க இந்து கிழட்டு நரி’ என ஜின்னாவால் வர்ணிக்கப்பட்ட காந்திகூட விமர்சனம் செய்துள்ளார். சுவாமி விவேகானந்தர் கூட விமர்சித்துள்ளார். நோக்கம் ஒன்றுதான், சீர்திருத்தம்! விமர்சனத்திற்கு முகம் கொடுப்பதாகவும், நாத்திகவாதத்தினையும் பரிசீலிப்பதாகவும் காலந்தோறும் இந்து மதம் இருந்து வருகிறது.

தேசத்தின் இருபெரும் தலைவர்களின் எழுத்துக்கள் அனைத்தும் முறையாகத் தொகுக்கப்பட்டு இன்றும் அச்சில் கிடைப்பது நல்லூழ். காந்தியின் நூல்கள் அனைத்தும் நவஜீவன் ட்ரஸ்ட்டால் பராமரிக்கப்படுகிறது. பக்தவச்சலம் முதல்வராக இருந்தபோது அவற்றுள் சுமார் 15 பாகங்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு அச்சிடப்பட்டன. அதற்கென சிறப்பு அச்சுரு (Font) உருவாக்கப்பட்டது. அம்பேத்கர் அவர்களுடைய எழுத்துக்களும் டாக்டர் அம்பேத்கர் பவுண்டேஷன் மூலம் நிர்வகிக்கப்படுகிறது. ம.வெங்கடேசனின் ‘இந்துத்துவ அம்பேத்கர்’ நூல் அண்ணலின் எழுத்துக்களையும், குருஜி கோல்வல்க்கரின் சிந்தனைகளையும் ஒப்பிட்டுக் கடும் உழைப்பில் மிளிரும் ஆவணமாக விரிகிறது.

அஸதோமா ஸத்கமயா
தமஸோமா ஜ்யோதிர் கமயா
ம்ருத்யோர்மா அம்ருதம் கமயா

என பிரஹதரண்ய உபநிஷத் போதிக்கும் பவமான மந்திரம். இதன் பொருள் பொய்யிலிருந்து நிஜத்திற்கும், இருட்டிலிருந்து வெளிச்சத்திற்கும், மரணத்திலிருந்து அமரத்துவத்திற்கும் அழைத்துச் செல் என்பதாகும். இந்துத்துவ அம்பேத்கர் வரலாற்றில் பதியப்பட்ட பொய்யானவற்றில் இருந்து நம்மை உண்மையை நோக்கி அழைத்துச் செல்கிறது என்பது நிச்சயம்.

Posted on Leave a comment

பேயரசுகளும், பிணம் தின்ற சாத்திரங்களும்! | கோ.இ. பச்சையப்பன்

அரவிந்தன் நீலகண்டனின் பஞ்சம் – படுகொலை, பேரழிவு கம்யூனிஸம்- நூலை முன்வைத்து.

“இந்த பூர்ஷ்வா அறிவுஜீவி வர்க்கத்திடமிருந்து நீங்கள் விலகிவிட்டால், நீங்களும் சர்வநிச்சயமாக, சத்தியமாக மரணம் அடைவீர்கள்!”

(- லெனின், மாக்ஸிம் கார்க்கிக்கு எழுதிய கடிதத்தில்)

கடந்த ஆண்டு எங்கள் மாவட்டத் தலைநகரில் புத்தகக் காட்சி பத்து நாட்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதில் வந்த சிறப்பு விருந்தினர்களில் ஒருவராக, அண்மையில் தனது ஆயிரம் பக்கத்துக்கும் மேற்பட்ட பென்னம்பெரிய நாவலுக்கு சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளரும் இடம்பெற்றிருந்தார். அகாதெமி விருதைப் பெற நூலின் தகுதியைவிடத் தேர்வுக்குழுவிற்கு எழுத்தாளர் எவ்வளவு நெருக்கமானவர் என்பதே முக்கியம் என்பதெல்லாம் வேறு விஷயம்.

சிறப்பு விருந்தினர், தன் உரையில் கீழடி ஆய்வுகள் தமிழ்ப் பண்பாட்டின் தொன்மையை, பெருமையை விளக்குகின்றன எனத் தொடங்கி சமஸ்கிருதம் எவ்விதம் தமிழின் தொன்மைப் பெருமையை அபகரிக்கின்றது என்பதை, மதமாற்ற முகவர்கள் தேவரான கால்டுவெல்லின் திராவிட மொழி ஒப்பிலக்கணம் வழியே பேச ஆரம்பித்து முடித்தார். இணைப்புரை நிகழ்த்திவந்த நான், அவருடைய உரைக்குப் பிறகு, பக்கச்சாய்வுடன் பல வரலாறுகள் எழுதப்படுகின்றன; மூலதனம் எழுதிய மார்க்ஸ் தனது வீட்டு வேலைக்காரியை பாலியல் சுரண்டலுக்கு உட்படுத்தியதை மார்க்ஸ் வரலாறுகள் உரைக்கின்றனவா என்று கேட்டேன். பிடித்தது சனி. நிகழ்வு நிறைவுற்ற பின்பு அடுத்த இரண்டு நாள்களுக்கு எனது அலைபேசியில் தன்னிலை விளக்கம் அளிப்பதும், கருத்துரிமை பற்றிய பாடங்களைக் கேட்பதும் என வெறுத்துப்போயிற்று.

மேற்படி அலைபேசியில் உரையாடிய புண்ணியவான்கள்தான் மாதொருபாகனுக்காக – தமிழகம் முழுவதும் ‘கருத்துச் சுதந்திரம்’ பற்றிப் பேசுபவர்கள். ‘என் உணவு என் உரிமை’ எனப் பொதுவெளியில் மாட்டுக்கறி விருந்து நடத்துபவர்கள்.

“பெறுவதற்கோர் பொன்னுலகம்” எனத் தொடங்கி சமூகப் பொருளாதார அரசியல் விடுதலை, சமத்துவ சுதந்திரம் பற்றிப் பேசும், எழுதும் கம்யூனிஸ்டுகள் முற்றிலும் தாங்கள் போதிக்கும் கருத்துக்களுக்கு மாறாக இயங்குவதற்கான ஏவிய சான்றுதான் மேலே நான் சொன்னது.

ஒரு மனிதன் 25 வயதிற்குள் கம்யூனிஸ்ட் ஆகாவிட்டால் முட்டாள்; 25 வயதிற்கும் மேலும் கம்யூனிஸாக இருந்தால் அவன் பைத்தியக்காரன் என்ற சொலவடையை வாசித்துள்ளேன் என்றபோதும் பத்து வயதில் வாசிப்புலகில் நுழைந்துவிட்ட எனக்கு ராதுகா பதிப்பகம், முன்னேற்றப் பதிப்பகம் போன்றவற்றின் பதிப்புகளில் வெளிவந்த ரஷ்ய மொழிபெயர்ப்புகள் மிகவும் கவர்ந்தன. கையடக்கமாக இறுக்கமான காலிகோ பைண்டிங்கில், செல்லரிக்காமலிருக்க நாஃபதலீன் தெளித்த வாசனையுடன் வந்த அப்புத்தகங்கள் ரஷ்யாவைப் பற்றிய உன்னதமான சித்திரத்தை அளித்திருந்தன. போதாக்குறைக்கு கலைந்த முடியும், கவர்ச்சிகரமான முகமும் கொண்டிருந்த சே குவேராவின் அலட்சியமான ‘பாவ‘த்துடன் சிகரெட் புகைக்கும் புகைப்படங்கள் வேறு! எனவே, 25 வயதிற்குள் நான் முட்டாளானேன். அதாவது கம்யூனிஸ்ட்டானேன். ஆனால், நான் பைத்தியக்காரனாவதிலிருந்தும் என்னைத் தடுத்தது அரவிந்தன் நீலகண்டன் எழுதிய பஞ்சம் – படுகொலை – பேரழிவு – கம்யூனிஸம் என்ற புத்தகம், அசைக்க முடியாத தரவுகளுடன் – தெளிவான மொழிநடையில், ஊடகபலமும் எழுத்துவன்மையும் கொண்ட கம்யூனிஸ்டுகளைக் கூட மௌனமாக்கிய நூல்.

கம்யூனிஸத்தினை மூலதனம் என்ற நூல் மூலம் அளித்த கார்ல் மார்க்ஸ், எங்கெல்ஸ் முதல் அச்சித்தாந்தத்தினைப் பின்பற்றி ஆட்சியதிகாரத்தை அடைந்து – தற்போது இடதுசாரிகளால் திருவுருவாக்கப்பட்டிருக்கும் லெனின், ஸ்டாலின், குருஷேவ், மாவோ, பிடல் காஸ்ட்ரோ, சேகுவேரா மற்றும் கம்யூனிஸத்தின் மீதான காதலால் சீனமாவிடம் போரில் மூக்கறுப்பட்ட கனவான் நேருவரை இந்நூல் ஆராய்கிறது.

மார்க்ஸின் வரலாற்றை எழுதுபவர்கள் உணர்ச்சி ததும்ப அவருடைய மனைவி வறுமை மற்றும் நோயால் இறந்துபோன தம் குழந்தையைப் பற்றி எழுதியதைத் தவறாமல் குறிப்பிடுவார்கள்.

எங்கள் குழந்தை பிறந்தபோது
அதற்கு தொட்டில் வாங்கவும்
பணமில்லை!
இறந்தபோது
சவப்பெட்டி வாங்கவும்
பணமில்லை!

ஒரு கவித்துவமான சோகத்தை நம்மிடையே விதைக்கும் இவ்வரிகளுக்குச் சொந்தமான ஜென்னியின் கணவர் மார்க்ஸ், நீக்ரோக்களையும் யூதர்களையும் வாழ்நாள் முழுவதும் வெறுத்தவர் என்பதைக் கீழ்க்கண்ட அவர் கடித வரிகளே நிரூபிக்கின்றன என்பதை அரவிந்தன் எடுத்துக்காட்டுகிறார்.

எங்கெல்ஸிற்கு எழுதிய கடிதத்தில் மார்க்ஸ் தன் மருமகன் மீதான விமர்சனத்தை இப்படிக் குறிப்பிடுகிறார். ‘அந்த ஆளிடம் நீக்ரோக்களிடம் காணப்படும் குணக்கேடு இருக்கிறது.’ நீக்ரோக்களைக் குணக்கேட்டின் உறைவிடமாக அடையாளப்படுத்தும் இம்மனிதர்தான் பொதுவுடைமையின் தந்தை! இனவெறுப்பு மட்டுமல்ல, புரட்சியின் போர்வையில் ஈவிரக்கமற்ற பயங்கரவாதத்தை ‘சுத்திகரிப்பு’ என்ற பெயரில் நடைமுறைப்படுத்தி, பல்லாயிரம் மக்களைப் படுகொலை செய்வதற்கான வித்து இருவராலும் (மார்க்ஸ் மற்றும் எங்கெல்ஸ்) ஊன்றப்பட்டதை நூலில் வாசிக்கும்போது அதிர்ந்துபோகிறோம்.

‘ஆகாவென்று எழுந்தது பார் யுகப்புரட்சி’ என ஜார் மன்னன் வீழ்ந்ததை இந்தியாவின் கவிதை வடிவில் பாரதி பதிவு செய்ததை வாசிக்கும் யாவரும் ஜார் மன்னனை ஒரு கொடுங்கோலனாகத் தன் மனத்தே உருவகித்திருப்பார்கள். ஓரளவும் உண்மையும் கூட. ஆனால் ஜார் மன்னரை வீழ்த்தியதாக ‘கூறப்படும்’ லெனின் தன்னையும் தன் நாற்காலியையும் காப்பாற்றிக்கொள்ள செய்த படுகொலைகள் பல்லாயிரக்கணக்கானவை.

1917ல் ரஷ்யாவில் புரட்சி தொடங்கும்போது இடதுசாரிகளில் போல்ஷ்விக் பிரிவு தலைவர்கள் – புக்காரின், ட்ராட்ஸ்கி 5,000 மைல்களுக்கு அப்பால் நியூயார்க்கில் இருந்தனர். லெனின் சுவிட்ஸர்லாந்தில் இருந்தார். 47 வயதான அம்மனிதர் முற்றிலும் நம்பிக்கை இழந்து ‘எனது ஆயுளில் புரட்சியே வரப்போவதில்லை’ என்று சொல்லியிருந்தார்.

சோஷலிஸ்ட் புரட்சியாளர்களும், மற்றொரு இடதுசாரி பிரிவினருமான மௌள்ஷ்விக்குகளும் ஜார் மன்னனை வீழ்த்த, ஜெர்மனியின் உதவியுடன் ரஷ்யாவில் லெனின் ஆட்சியைப் பிடித்தார். ஏறக்குறைய ஒரு நூற்றாண்டு விடுதலைக்குப் போராடிய காங்கிரசிடமிருந்து பாகிஸ்தானைப் பெற ‘ஒரு முஸ்லிம் தேசத்திற்குக் குறைந்து எதனையும் ஏற்கமாட்டேன்’ என்று நோகாமல் நோன்பு கும்பிட்ட முகம்மது அலி ஜின்னாவிற்குச் சமமானவர் லெனின். பிறகு நிகழ்ந்ததுதான் பேரவலம். விமர்சனம் செய்பவர்கள் கைது செய்யப்பட்டுக் கொல்லப்பட்டனர். கொல்வதற்கு வதைமுகாம்கள் உருவாக்கப்பட்டன. வதை முகாம்களை நிறுவிய வகையில் ஹிட்லருக்கு லெனின் முன்னோடி. அம்முகாம்களில் லெனின் உத்தரவால் நிறைவேற்றப்பட்ட கொடுமைகளை வைத்துப் பார்க்கும்போது ஹிட்லர் குறைவாகவே கொடுமை செய்திருக்கிறார் என்று தோன்றிவிடும்! ‘1918ல் ‘நாம்போவ் – என்ற பகுதியில் வதைமுகாம்களில் அடைக்கப்பட்டவர்களுள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளும் அடக்கம்.

அறிவுஜீவிகள், சிந்தனையாளர்கள், கவிஞர்கள் பலர் கொல்லப்பட்டனர். சிலர் சிறையில் அடைக்கப்பட்டனர். இதனைக் கண்டித்த, ‘தாய்’ எழுதிய மாக்ஸிம் கார்க்கிக்கு லெனின் எழுதினார்: “நீங்கள் சர்வ நிச்சயமாக, சத்தியமாக, மரணம் அடைந்துவிடுவீர்கள்.”

‘Man – How proudly that word ring’ எனப் பேசிய கார்க்கி அமைதியானார். வதைமுகாம்கள் சிலவற்றை அவர் பாராட்டக்கூடத் தயங்கவில்லை என அரவிந்தன் விளக்குகையில் நமக்குத் தோன்றுவது Life – how proudly that word rings!

லெனின் செய்த படுகொலைகளைப் பின்னர்வந்த ஸ்டாலின் அம்பலப்படுத்தினார். ஸ்டாலினுக்குப் பிறகு குருஷேவ் அதனையே செய்தார். இவர்கள் அத்தனைபேரும் செய்த படுகொலைகளை, ஏற்படுத்திய பஞ்சத்தை சோவியத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு வெளியிடப்பட்ட ஆவணங்கள் பேசின. இவை அனைத்தையும் அரவிந்தன் நீலகண்டன் தரவுகளுடன் முன்வைக்கிறார்.

சோவியத் ரஷ்யா மட்டுமல்ல, கம்யூனிஸம் காலூன்றிய க்யூபா உள்ளிட்ட எல்லா நாடுகளிலும் நிகழ்த்தப்பட்ட படுகொலைகளை நூல் ஆவணப்படுத்துகிறது.

இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு தன் கம்யூனிஸக் காதலால் சீனாவை முழுமையாக நம்பி முதுகில் குத்தப்படும் பகுதி, நூலின் முக்கியமான பகுதி. பாபாசாகேப் அம்பேத்கர் சீனாவையும் சோவியத் யூனியனையும் இந்தியாவின் அச்சுறுத்தல்கள் என (மிகச்சரியாக) கணிக்கிறார். ‘நேருவின் பஞ்சசீலக் கொள்கையைத் தன் நாடாளுமன்ற உரையில் ‘கம்யூனிஸமும் சுதந்தரமான ஒரு ஜனநாயகமும் இணைந்திருக்க முடியும் என்பது அடிமுட்டாள்தனம். கம்யூனிஸம் என்பது காட்டுத்தீ போன்றது. இந்தக் காட்டுத்தீயின் அருகில் இருக்கும் நாடுகள் ஆபத்தில் இருக்கின்றன’ என விமர்சித்தார் அம்பேத்கர்.

(அம்பேத்கரை ராகுல சங்கிருத்யாயன் தனது ‘வால்கா முதல் கங்கை வரை’ என்ற நூலில், சுகபோகி, தீண்டத்தகாதவர்களில் ஜமீன்தார்களை உருவாக்குபவர் என்று விமர்சிப்பதை அரவிந்தன் பதிவு செய்கிறார்.)

காட்டுத்தீ 1962ம் ஆண்டு பற்றியது. அதன் கொடும் வெப்பம் உமிழ் தீயில் 4,897 இந்திய வீரர்களும் கொல்லப்பட்டனர். 3,968 பேர் சீனக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். லெனினும், மார்க்ஸும், மாவோவும் நேருவிடம் உருவாக்கிய தாக்கத்திற்கு இந்தியா அளித்த விலை அது என்பதை அரவிந்தன் நீலகண்டன் துல்லியமாகப் பதிவு செய்கிறார்.

அரவிந்தன் நீலகண்டன் இந்நூலினை உருவாக்கக் கடுமையாக உழைத்திருக்க வேண்டும். 25 பக்கங்களுக்கு நீளும் பார்வை நூல்கள் மற்றும் ஆவணங்களே சாட்சி. இடதுசாரி நூல்களைத் தொடர்ந்து வாசிப்பவரிடம் ஒரு அபாயம் உண்டு. அந்நூல்களின் சிடுக்காக மொழிநடை நமது எழுத்திலும் படிந்துவிடும் அபாயம்தான் அது. கம்யூனிஸத்தின் பிற அபாயங்கள் அளவிற்கு அது வீரியம் மிக்கதில்லை என்றபோதும் வாசகனுக்கு வரும் உபத்திரவம் அது. ஆனால் அரவிந்தன் நீலகண்டனின் நீரோடை போன்ற மொழிநடை ஒரே அமர்வில் நம்மை வாசிக்கச் செய்கிறது.

பின்குறிப்பு: கார்ல் மார்க்ஸைப் பற்றிய ஒற்றை உண்மையைக் கூறுவதற்காக ஒரு எளிய எழுத்தாளனை வறுத்தெடுத்த ‘தோழர்கள்’ – இத்தனை ஆதாரங்களை முன்வைத்து எழுதப்பட்ட, ஒரு ஆவணத்தை நிகர்த்த இந்த நூலை எழுதிய அரவிந்தன் நீலகண்டனை எவ்விதம் எதிர்கொண்டார்கள்?

Posted on Leave a comment

அரசின் புதிய பாடத்திட்ட நூல்கள் | G.E. பச்சையப்பன்

“இந்தத் தேசத்தின் எதிர்காலத் தலைமுறை உருப்பட ஒரே வழி எல்லாப் பள்ளிக்கூடங்களையும் இடித்து (?) தரைமட்டமாக்குவதுதான்” – ரஸிகமணி என்று இன்றளவும் புகழப்படும் டி.கே.சி. அவர்களின் இக்கருத்தை கல்கி தனது பல கட்டுரைகளில் மேற்கோள் காட்டியுள்ளார். இதன் பொருள் படிக்காமல் எல்லோரும் தற்குறிகளாய் ‘திகழவேண்டும்’ என்பதன்று. சுதந்திர இந்தியாவில் தமிழகத்தின் கல்வி முறையும் தேர்வு முறைகளும் இருந்த நிலைமையைக் கண்டு அவர் மனம் வெதும்பி முன்வைத்த விமர்சனம் இது.

என் நினைவாற்றலின் மீது நம்பிக்கை வைத்து நான் பயின்ற தமிழ்ப்பாட நூல்களின் உள்ளடக்கத்தைப் பகிர்ந்துகொள்கிறேன். ‘கருத்து தெரிந்து’ நான்காம் வகுப்பு முதல் மேல்நிலைக் கல்வி வரை நான் பயின்ற தமிழ்ப்பாடங்கள் சில –

‘இவர்தாம் பெரியார்’ – பாரதிதாசன் பாடல்
‘கொடி நாள்’ – கட்டுரை கலைஞர் மு. கருணாநிதி
‘வீட்டிற்கோர் புத்தக சாலை’ – பேரறிஞர் அண்ணா
‘செவ்வாழை’ – சிறுகதை – துணைப்பாடம் அண்ணா
‘பொங்கல் திருநாள்’ – கடிதம் – அண்ணா
‘இருண்ட வீடு’ – பாரதிதாசன்.

மற்றும் சிற்பி பாலசுப்ரமணியன், சாலை இளந்திரையன் போன்ற பேராசிரியர்களின் கட்டுரைகள் இடையிடையே. அவையெல்லாம் எனது இலங்கைச் செலவு… என்று தலைப்பிலேயே தம்மை இனங்காட்டிக் கொள்ளும் வகையறாக்கள்.

தமிழக அரசுப்பள்ளிகளில், மாநிலப் பாடத்திட்டத்தைப் பயின்று பட்டதாரியானவன் – துரதிர்ஷ்டவசமாக அவனுக்குப் பாடப்புத்தகங்கள் தாண்டிய வாசிப்பு வாய்க்கவில்லையென்றால் – கீழ்க்காணும் முடிவுகளுக்கு வந்திருப்பான்.

– தமிழகத்தில் அண்ணாதுரை மட்டும்தான் அறிஞர்.
– திருக்குறளைவிடச் சிறந்தது குறளோவியம்.
– தமிழின் தனிப்பெருங் கவிஞர் பாரதிதாசன் மட்டுமே (இவர் புரட்சிக்கவிஞர் என்று அழைக்கப்படுவதால் ரஷ்யப்புரட்சி, சீனப்புரட்சி, பிரெஞ்சுப் புரட்சிகளில் பங்காற்றியிருக்கலாம்.)
– ஈ.வெ.ரா. மட்டும் பிறக்கவில்லை என்றால் தமிழன் பகுத்தறிவினைப் பெறாமல் ஐந்தறிவோடு வாழ்ந்து மடிந்திருப்பான்.

ஏனென்றால் ராமசாமி நாயக்கர்தான் தமிழனைக் காட்டுமிராண்டி என்றும், தமிழைக் காட்டுமிராண்டி பாஷை என்றும், ஆங்கிலமே தமிழன் உய்ய வழி என்றும் கூறியதால் அவர்தான் தமிழினத்தலைவர். பெரியார் என்று அழைக்கப்பட்ட அவர் கண்ணகியை வசைபாடியதும், தமிழின் தனிப்பெருஞ்செல்வங்களான பக்தி இலக்கியங்களைக் கொளுத்த வேண்டும் என்றதும் அன்னாரின் கூடுதல் தகுதிகள். அவருடைய தலைமை சிஷ்யரும் பின்னால் அவரால் ‘கண்ணீர்த்துளிகள்’ என்று புகழப்பட்டவருமான அண்ணாதுரை ‘தீ பரவட்டும்’ என்று தனது குருநாதரை வழிமொழிந்தார்.

தமிழகத்தின் முதலமைச்சர்களாக அடுத்தடுத்து பதவி வகித்தவர்கள் அண்ணாதுரையும் கருணாநிதியும். எனவே அவர்கள் எழுத்தாளர்களானார்கள். எனவே அவை பாடப்புத்தகங்களில் – வெவ்வேறு வகுப்புகளில் இடம்பெறத் தகுதிபெற்றனவாகிவிட்டன. இப்பட்டியலில் ஜெயலலிதாகூட தனது ஒரு கட்டுரை மூலம் இணைந்திருந்தார். 1991-96ம் ஆண்டு மேல்நிலை முதலாம் ஆண்டு தமிழ்ப் புத்தகத்தில் பாரதி கண்ட புதுமைப்பெண்கள் என்ற தலைப்பிலோ என்னவோ கட்டுரை எழுதியிருந்தார். அவர் மட்டும் எழுத்தாளரில்லையா என்ன? முதலமைச்சர் ஆகிவிட்டாரல்லவா?

நாட்டின் எதிர்காலத் தலைமுறை உருவாகும் இடம் வகுப்பறை என்பதையும், அதற்குப் பாடநூல்களின் உள்ளடக்கமும் போதனா முறைகளும் முக்கியம் என்பதையும் அரசியல்வாதிகள் உணர்ந்திருக்க எந்த நியாயமும் இல்லை. ஆனால் கல்வியாளர்கள்? உண்மையில் பாடப்புத்தகங்களின் உள்ளடக்கம் என்ற விஷயம் அதன் தீவிரத்தன்மையோடு எந்தக் காலத்திலும் அணுகப்படவேயில்லை.

தமிழ்மொழியைப் புதிதாகக் கற்றுணர்ந்த ஒருவன் நம் பாடப்புத்தகங்களை அளவுகோலாகக்கொண்டு, அவற்றில் உள்ள பாடங்களை எழுதிய ஆசிரியர்களின் வேறு நூல்களை, படைப்புகளை அணுகினால் என்ன நிகழ்ந்திருக்கும்?

தம்பிக்குக் கடிதங்கள் எழுதிய அதே கைதான் ‘ரோமாபுரி ராணிகளும்’, ‘கம்பரசமும்’ என்ற தலைப்பில் குப்பைகளை எழுதியுள்ளது என்பதை அறிந்து அதிர்ந்திருப்பானல்லவா?

இவையெல்லாம் கடந்தகாலம்.

அண்மையில் வெளிவந்துள்ள 6, 9 மற்றும் 11ம் வகுப்புகளுக்கான புதிய பாடநூல்களின் அடிப்படையில் தற்போதைய நிலைமையை விவாதிப்போம்.

உதயசந்திரன் ஐஏஎஸ்ஸின் கல்வித்துறை வருகை ஒரு நல்ல மாற்றமாகக் கருதப்பட்டது. அவருடைய கடந்த காலச் செயல்பாடுகள் அந்த நம்பிக்கையை விதைத்திருந்தன. பாப்பாப்பட்டி, கீரிப்பட்டி உள்ளாட்சித் தேர்தலை நடத்திக் காட்டியவர். மதுரையில் புத்தகக் காட்சிக்கு வழிவகுத்தவர். நியாயமானவர் என்கிற ஒரு பொதுக்கருத்தும் நிலவியது. எனவே எதிர்பார்ப்பில் நியாயமிருந்தது.

தமிழகம் முழுவதுமிருந்து கடந்த ஜூன் மாதத் தொடக்கத்திலிருந்தே கல்வியாளர்கள், எழுத்தாளர்கள், ஆசிரியர்கள், சிந்தனையாளர்கள் எனப் பல தரப்பினர் சென்னைக்கு வரவழைக்கப்பட்டு பாடத்திட்டம் தொடர்பாக விவாதிக்கப்பட்டது. இச்செயல்பாடு உண்மையிலேயே கல்வித்துறை வரலாற்றில் முதல்முறையாக நிகழ்ந்தது. பாடப்புத்தகங்கள் தொடர்பான எதிர்பார்ப்பும் அதிகரித்தது. இடையே அரசியல் நிர்பந்தத்தால் உதயசந்திரனுக்கு நேர்ந்த அதிகாரக் குறைப்பிற்கு, சமூகத்தின் பல்வேறு மட்டங்களிலும் இருந்து எதிர்ப்புக் குரல்களும் எழும்பின.

கடந்த ஜூன் முதல் தேதி அரசு அறிவித்தவாறே புதிய பாடநூல்கள் வந்துள்ளன. நமது பரிசீலனைக்கு 6, 9 மற்றும் 11ம் வகுப்பு பாடநூல்களை எடுத்துக்கொள்வோம். முதலில் மொழிப்பாடமான தமிழ்!

புறத்தோற்றத்தில் – முழுமையாக நவீன அச்சுக் கலையின் சாத்தியமான உச்சபட்ச தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி நூல்கள் உருவாக்கப்பட்டிருப்பதை உணரலாம். 90% பக்கங்கள் வண்ணத்தில் – முக்கியக் கருத்துகள் வேறு வண்ண எழுத்துகளில் அச்சடிக்கப்பட்டுள்ளன. சந்தேகத்திற்கு இடமின்றி புத்தகம் பள்ளிக் குழந்தைகளைக் கவரும் என்பதில் ஐயமில்லை.

தொழில் முறை ஓவியர்களின் படத்தை மட்டுமல்லாது, கோபுலு, மணியம் செல்வன் போன்ற கலைஞர்களின் ஓவியங்கள் தேவையான இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது பாராட்டத்தக்கது.

புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் பாடல் எந்த நூலிலிருந்து எடுக்கப்பட்டது என்பதும், ஆசிரியரின் வேறு நூல்கள் எவை என்பதும் ஆசிரியர் குறிப்புப் பகுதியில் பழைய பாடத்திட்ட நூல்களில் இடம்பெறும். புதிய பாடத்திட்டத்தில், பாட ஆசிரியரின் வேறு நூல்கள் மட்டுமின்றி, பாடப்பொருளோடு தொடர்புடைய மற்றவர்கள் எழுதிய நூல்களும் ‘நூல்வெளி’ என்ற தலைப்பில் இடம்பெறுகின்றது.. மேல்நிலையில், பாடத்தோடு தொடர்புடைய வேறு நூல்கள் ‘அறிவை விரிவு செய்’ என்ற தலைப்பில் இடம்பெற்றுள்ளன.

பாடப்புத்தகத்தின் உருவாக்கத்தின்போதே பெரும் எதிர்பார்ப்பை விதைத்த மாற்றம் QR CODE முறையில் இணையத்தளங்களைப் பயன்படுத்தி ‘காட்சி வழி கற்றல்’ அனுபவங்களை மாணவர்களுக்கு வழங்குவது என்பதாகும். ஆனால் நடைமுறைச் சிக்கல்களை இம்முறை எதிர்கொள்கிறது. முதலில் ஆசிரியர்களிடம் இணைய வசதிகொண்ட ஆண்ட்ராய்ட் அலைபேசி இருக்க வேண்டும். செயலியை உள்ளீடு செய்தபின் இயக்கத் தெரிய வேண்டும். எதிர்வரும் காலத்தில் ஆசிரியர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சிகளினால் இத்தகைய குறைபாடுகளைக் களைய முடியும் என்பதும் உண்மை.

ஆனால் அலைபேசித் திரையில் தோன்றுவதை ஆசிரியர் மட்டுமே காண இயலும். நாற்பது மாணவர்களுக்கும் மேம்பட்ட வகுப்புகளில் தனித்தனியே தனது அலைபேசியை வழங்கி – கையாள – நேரம் அனுமதிக்காது. அது சாத்தியமும் இல்லை. மேலும், பெரிய திரையில் இதனைக் காண்பித்திட அனைத்து அரசுப்பள்ளிகளிலும் வசதி இருக்க வேண்டும்.

பாடப்புத்தகங்கள் தொடர்பான தனது கட்டுரை ஒன்றில், ‘செய்யுள்’, ‘தற்காலக்கவிதைகள்’ என்பதற்குப் பதில், கவிதை, புதுக்கவிதைகள் என அச்சிட என்ன தயக்கம் என்று பிரபஞ்சன் கேட்டிருப்பார். தற்போதைய பதினொன்றாம் வகுப்புத் தமிழ்ப்பாடநூல் மேலாய்வு உறுப்பினர்களுள் அவரும் ஒருவர் – எனினும் அதே ‘செய்யுள்’ நீடிக்கிறது.

‘செய்யுள்’ என்ற தலைப்பில் ‘ஆத்மாநாம் கவிதைகள்’ இடம்பெறுகின்றன.

பழைய பாடத்திட்டத்தில் துணைப்பாடமாகப் பல சிறுகதைகள் – குறைந்தபட்சம் எட்டு தரப்பட்டிருக்கும். ஜெயகாந்தன், அசோகமித்திரன், புதுமைப்பித்தன் எனத் தமிழின் ஆகப்பெரும் எழுத்தாளுமைகளை மேல்நிலையில் மாணவர்கள் (சில ஆசிரியர்கள்!) சந்திப்பர். பின்னாட்களில் தங்கள் துணைப்பாடத்தில் இடம்பெற்ற சிறுகதையாசிரியர்களின் ஒட்டுமொத்த தொகுப்பை வாசிக்க, துணைப்பாடம் ஒரு திறப்பாக இருக்கும் என்பது (மூட) நம்பிக்கை. மேல்நிலைகளில் துணைப்பாட நூல் தனி நூலாகவே வரும். உடன் இலக்கணப்பகுதி இடம்பெற்றிருக்கும்.

ஆனால், இப்போதைய பதினொன்றாம் வகுப்புத் தமிழில் துணைப்பாடங்கள் அனைத்தும் சிறுகதைகள் அன்று. பட்டிமண்டபம் என்றொரு பகுதியும், இசைத்தமிழர் இருவர் என்றொரு பகுதியும் உள்ளன. இளையராஜாவைப் பற்றியும், ஏ.ஆர். இரஹ்மானைப் பற்றியும் (ரஹ்மான் அல்ல! அப்படித்தான் இலக்கணப்படி போட்டிருக்கிறார்கள்) படிப்பது மற்றுமொரு பாடப்பகுதி போன்றே உள்ளது. சேகரின் மகன் எப்படி ‘இரஹ்மான்’ ஆனார் என்பதும் திலீப் என்பது யாருடைய இயற்பெயர் என்பதும் உதயசந்திரனுக்கே வெளிச்சம்.

ஜெயமோகனின் யானை டாக்டர் – சுருக்கப்பட்டு இடம்பெற்றுள்ளது. ‘அறம்’ என்ற தொகுப்பில் உண்மை மனிதர்களின் கதைகள் என இடம்பெற்ற யானை டாக்டர் ‘குறும்புதினம்’ என அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. தமிழிலக்கிய வடிவம் குறித்துப் பாடநூல் குழு அறிந்திருக்கிறதா என்ற ஐயம் ஏற்படுகிறது. ஜெயமோகனைப் பற்றிய அறிமுகத்தில் உலகின் மிகப்பெரிய நாவல் வடிவமான அவருடைய வெண்முரசைப் பற்றிய குறிப்புகள் இல்லை. ரஷ்யாவில் கம்யூனிஸத்தின் வீழ்ச்சியை ஒரு புனைவாகப் பதிவு செய்த அவருடைய ‘பின்தொடரும் நிழலின் குரல்’ பற்றிய ஒற்றை வரிகூட இல்லை. ஏன் இல்லை என்று யோசித்தால், பாடத்திட்டக் குழுவின் உறுப்பினர்கள் யாராக இருந்திருப்பார்கள் என்பதை யூகிக்கலாம்.

தமிழில் 96 சிறுகதைகளும், ஏராளமான மொழிபெயர்ப்புகளும் எழுதிய புதுமைப்பித்தனின் படைப்புகள் குவிந்திருக்க – அவருடைய முன்னுரையொன்று பாடப்பகுதியாக இடம்பெற்றுள்ளது, வியப்பளிக்கிறது. ‘ஜீவா’ மறைவு குறித்து சுந்தர ராமசாமி எழுதிய ‘காற்றில் கலந்த பேரோசை’ கட்டுரையின் சுருக்கப்பட்ட வடிவம், அ.முத்துலிங்கத்தின் கட்டுரையின் சுருக்கப்பட்ட வடிவம், சி.சு.செல்லப்பாவின் வாடிவாசல் குறுநாவலின் சுருக்கப்பட்ட வடிவம் எனப் பதினொன்றாம் வகுப்பு தமிழ்ப்பாடநூலே சுருங்கிப்போய்க் கிடக்கிறது.

தமிழ்ப்புனைவுலகில் நாவலாசிரியராக, சிறுகதை ஆசிரியராக அறியப்பட்ட அழகியபெரியவனின் கவிதையொன்றும் இடம்பெற்றுள்ளது. புத்தகத்தில் அவருடைய வரிகளை கவிதை என்றுதான் குறிப்பிடுகிறார்கள்.

புத்தகத்தின் இயல் ஒன்றிலேயே கலை, இலக்கிய விமர்சகர் இந்திரனின் கட்டுரையொன்று இடம்பெற்றுள்ளது. அதன் உள்ளடக்கத்தினையும், மொழிநடையையும் வைத்துப் பார்க்கும்போது அடுத்த ஆண்டு மேல்நிலை இரண்டாம் வகுப்பில் கோணங்கியின் மதினிமார்கள் கதையோ (அ) பொம்மைகள் உடைபடும் நகரமோ இடம்பெறக்கூடும். மாணவர்களும் ‘சலூன் நாற்காலியில் சுழன்றபடி’ அதனை வாசித்து ‘தெளிவடையலாம்’!

6, 7 மற்றும் 11ம் வகுப்பு தமிழ்ப்பாட நூல்களில் எதிலும் கடவுள் வாழ்த்தே இல்லை. மரபாக இடம்பெறும் பல்சமயப் பாடல்களும் இல்லை. உதயசந்திரன் தன் நேர்காணல்களில் அழுத்தமாகக் கூறும் மாற்றமும் இஃதே. தமிழுக்கு பக்தி இலக்கியங்கள் வளம் சேர்த்தமைக்கு நன்றிக் கடனாகவாவது கடவுள் வாழ்த்து இடம்பெற்றிருக்கலாம்.

பன்மைத்துவம் மிக்க சமயச்சார்பற்ற பாடத்திட்டம் எனத் தற்போதைய சமூக அறிவியல் பாடத்தைப் பற்றி உதயசந்திரன் கருத்துரைத்திருந்தார். பாடத்திட்டத்தை வடிவமைப்பதில் அரசியல் குறுக்கீடுகளே இல்லை எனவும் தெரிவித்திருந்தார். ஆனால் தமிழக அரசியலில் இன்னும் அவர், ஷெர்லக் ஹோம்ஸ் கூறுவது போல், எலிமெண்ட்ரி… ஆம். சார்லி ஹெப்டோ இதழ் பிரான்சில் வெளியிட்ட கருத்துப்படத்திற்கு அண்ணாசாலையை ஸ்தம்பிக்கச்செய்யும் ஆர்ப்பாட்டம் நடத்த இங்கே கூட்டம் உண்டு. கிருத்துவ நாடுகளில் கூட வெளியான டான் பிரவுனின் டாவின்சி கோட் திரைப்படம் தமிழகத்தில் கருணாநிதி ஆட்சியில் தடை செய்யப்பட்ட வரலாறு உண்டு. மதச்சார்பின்மை என்பது இந்து மத நம்பிக்கைகளை விமர்சிப்பதே தவிர வேறல்ல என்பதே தமிழகத்தின் நிலைமை. மதச்சார்பற்ற பாடத்திட்டம் எனக் கடவுள் வாழ்த்தைப் பலிகொண்ட உதயசந்திரன் குழுமம், வரலாற்றுப் பாடத்தில் பொது ஆண்டினைக்கொண்டு காலத்தை நிர்ணயித்து, கி.மு, கி.பி நீக்கத்தை முன்வைத்து மதச்சார்பின்மையின் எல்லையை விஸ்தரிக்க முயன்றார். சட்டப்பேரவை வரை விவாதம் நீண்டது. உலகம் தழுவிய முறை என மாஃபா பாண்டியராஜன் விளக்கம் தந்ததும்,இம்முறையை ஆசிரியர்களின் பயிற்சி வகுப்பில் விதந்தோதி நீட்டி முழக்கியதும், அடடா… செங்கோட்டையனும் ஸோ கால்ட் மதச்சார்பின்மைக் கொள்கைப்படி கி.மு, கி.பியே தொடரும் என்று சொல்லிவிட்டார். சரி, அச்சிட்ட புத்தகங்களில் எப்படி மாற்றுவது? ஜெயலலிதா கடந்த காலங்களில் கருணாநிதியின் செம்மொழி வாசகத்தினை ஸ்டிக்கர் ஒட்டி மறைத்தது போன்றா என்ற விளக்கம் ஏதுமில்லை. இத்தனைக்கும் முழுமையான கிறுத்தவரான ஐ.நா சபையின் பான் கி மூன் முதல் பல வரலாற்று ஆசிரியர்கள் வரை ஏற்றது பொது ஆண்டு முறை. பாடத்திட்ட வடிவமைப்பின் போது அரசியல் குறுக்கிடாமல் இருந்திருக்கலாம். ஆனால் நடைமுறைப்படுத்தும்போது?

வரிக்கு வரி உதயசந்திரன் வாசித்து பாடநூல்களை உருவாக்கியதாக நாளிதழ் ஒன்று பதிவுசெய்துள்ளது எனில், தமிழ்த்தாய் வாழ்த்தை எழுதியவர் என ‘மனோன்மணியம்’ பெ.சுந்தரனார் பெயர் இடம்பெற்றுள்ளது. இதில் என்ன வியப்பு என்கிறீர்களா? மனோன்மணியம் அன்று – மனோன்மணீயம். தமிழ்த்தாய் வாழ்த்தை எழுதியவர் பெயரே தவறாக உள்ளது. சுந்தரனார் எப்போது ‘மணியம்’ வேலை பார்த்தார் என்று தெரியவில்லை. பதினோராம் வகுப்பில் சரியாக உள்ளது. பாடப்பகுதியில் ஒன்றாக மனோன்மணீயம் இடம்பெற்றதும் காரணமாக இருக்கக்கூடும். உதயசந்திரன் ரொம்பவும் வருத்தப்படத் தேவையில்லை. பழைய தமிழ்ப் பாடநூலான ஏழாம் வகுப்பிலும் சுந்தரனார் மணியமாகத்தான் பணிபுரிகின்றார். நமது மொழிப்பாட நூலாக்கத்தின் ஆசிரியர்களின் தமிழ்ப்பற்று எவ்வளவு மேலோட்டமானது என்பதற்கு இதுவே சான்று.

பழைய ஆறாம் வகுப்பு தமிழ்ப்பாடநூலில் உ.வே.சா.வின் பெயரின் விரிவாக்கத்தையே தவறாகக் குறிப்பிட்ட கடந்தகால ‘வரலாற்றுப் பெருமை’ நமது பாடநூல் குழுவிற்கு உண்டு. உ.வே.சா. பதிப்பித்த நூற்களையும் தவறாகக் குறிப்பிட்டிருந்ததை ஆய்வாளர் பொ.வேல்சாமி வெளுத்து வாங்கியிருந்தார் தன் முகநூல் பக்கத்தில். ஆனாலும் ‘மனோன்மணீயம்’ என்ற பெயரில் பல்கலைக்கழகம் இருக்கும்போதும் தவறு தொடர்ந்து நிகழ்வது பேரவலம்.

ஏழாம் வகுப்பில் பாரதிதாசன், பெருஞ்சித்திரனார், பாரதியார் பாடல்கள் இடம்பெற்றுள்ளன. ஆசிரியர் அறிமுகத்தில் பாரதிதாசன் – புரட்சிக்கவிஞர் என அடைமொழியுடன் சிறப்பிக்கப்படுகிறார். பெருஞ்சித்திரனாரும் பாவலரேறு என அடையாளப்படுத்தப்படுகிறார். பாரதியார், கவிஞர் பாரதி எனப்படுகிறார். அவ்வளவுதான் அவ்வளவுதான்! பாரதி மகாகவியா இல்லையா என வ.ரா., கல்கி, ஜீவா என ஒரு இலக்கியப் போரே நிகழ்ந்த தமிழுலகில் ‘கவிஞர்’ பாரதியின் இயற்பெயர் சுப்பிரமணியன் என்று மட்டும் கூறுவதன் மூலம் எதனை நிறுவ முயற்சி செய்கிறார்கள்? மகாகவி, தேசியக்கவி என எளிய மனிதர்களால் விளித்து மகிழப்படும் பாரதி – கவிஞர் பாரதி (எ) சுப்பிரமணியன். வலம்புரிஜான் கூறியது நினைவிற்கு வருகிறது. “பாரதியாரின் இறுதி ஊர்வலத்திற்கு வந்த நபர்களை விட அவர் உடலில் மொய்த்த ஈக்கள் அதிகம்!”

பாடப்புத்தகங்களில் மொழிப்பாடமாக இடம் பெறத்தக்கவை, அதன் உள்ளடக்கம், தரம், மாணவர்களிடையே வளர வேண்டிய படைப்பாற்றல் உள்ளிட்ட மொழித்திறன்கள் ஆகியவற்றை அடிப்படையாகக்கொண்டு தேர்வு செய்யப்படாமல், ஆளுங்கட்சித் தலைவர்களாலோ (அ) அவர்களுக்கு அணுக்கமானவர்களாலோ எழுதப்பட்டது என்ற ஒன்றை மட்டுமே கருத்தில்கொண்டு தேர்வு செய்யப்பட்ட நிலைமை மாறியுள்ளது என்றே கூறவேண்டும். இதற்குத் தேர்வுக்குழுவினரை மட்டும் உடனே பாராட்டிவிட முடியாது. சேக்கிழார் எழுதிய கம்பராமாயணத்தைப் பற்றிப் பேசிய எடப்பாடியாரும், தர்மயுத்தம் புகழ் ஓ.பன்னீர்செல்வமும் எழுத்தாளர்கள் அல்லர் என்ற தமிழ்மக்களின் நல்லூழும் ஒரு காரணம்.

மொழிப்பாடங்கள் திறன்களை அடிப்படையாகக் கொண்டவை (skills board), கற்றல், பேசுதல், வாசித்தல் மற்றும் எழுதுதல் (Learning, Speaking, Reading, Writing, சுருக்கமாக CRSW) திறன்களை ஆறாம் வகுப்புகளில் வளர்க்கும் வண்ணம் அமையவேண்டும். உயர்நிலை மற்றும் மேல்நிலை வகுப்புகளில் படைப்பாற்றல் உள்ளிட்ட திறன்களை வளர்ப்பனவாக அமைதல் வேண்டும். புதிய பாடநூல் ஏராளமான செயல்பாடுகளை உள்ளடக்கியுள்ளது எனினும், அதனை செய்துபார்க்கத் தேவையான மொழி ஆய்வகம், துணைக்கருவிகள், (செயல்படுகின்ற) நூலகம் போன்ற வளங்கள் அரசுப்பள்ளிகளில் இருந்தால் மட்டுமே பாடநூல் மாற்றங்கள் முழுமையான வெற்றி தரும்.

என்றாலும், பலநூறு ஆளுமைகளின் ஆலோசனைகள், பல்வேறு கருத்தரங்குகள் – கடும் உழைப்பைக் கோரும் பாடநூல் தயாரிப்புப் பணியில் அயராமல் ஈடுபட்ட கல்வியாளர்கள் எல்லாம் வைரமுத்துவின் கவிதையைத் தமிழ்ப்பாடநூலில் இடம்பெறச் செய்யத்தானா என்று கேட்கத் தோன்றுகிறது.

முதல் படி என்ற வகையில் நாம் இப்பாடத் திட்டத்தின் குறைகளையும் மீறிப் பாராட்டலாம். ஆனால் செல்லவேண்டிய தூரம் மைல் கணக்கில் உள்ளது.

Posted on Leave a comment

யஷஸ்வீ ஹோங் யா – கோ. எ. பச்சையப்பன்

(யஷஸ்வீ ஹோங் யா – மராட்டி மொழி. தமிழில் ‘புகழுடன் திரும்பி வா’ என்று பொருள்) 

நான் துயரத்தின் வாயிலாக சாமானத்தை அடைய விரும்புகிறேன் – காந்தி

1948 ஜனவரி 30. நேரம் தவறாமைக்காக இன்றளவும் புகழப்படும் காந்தி, தனது எளிய சொத்துக்களில் ஒன்றான இங்கர்சால் கடிகாரத்தைப் பார்த்தபடி, சர்தார் படேல் உடனான திட்டமிடப்படாத திடீர் சந்திப்பால் பிரார்த்தனைக் கூட்டத்திற்குத் தாமதமாவதை உணர்ந்தார். ‘மனிதக் கைத்தடிகள்’ என காந்தி அழைக்கும் மனு மற்றும் ஆபா ஆகியோரின் தோள்களில் கை வைத்தபடி பிரார்த்தனைக்கு விரைந்தார். ஜனவரி 12லிருந்து 18 வரை உண்ணாவிரதமிருந்த 78 வயது முதியவரான காந்தி தன் ஆரோக்கியத்தை மீண்டும் பெறத் தொடங்கியிருந்தார். அவர் நடையில் பழைய வேகத்தினைப் பார்த்தவர்களுக்கு, (காந்தி அவ்வப்போது கூறும் வண்ணம்) 110 வயது வரை காந்தி வாழ்வார் என தோன்றிற்று. ஆனால் சில நிமிடங்களில் அவர் சுடப்பட்டார். 9 மிமீ பெரெட்டா தானியங்கி பிஸ்டலைப் பயன்படுத்தி காந்தியின் 110 வயது வரையிலான வாழ்வென்ற கனவைத் தகர்த்தவர் நாதுராம் கோட்ஸே.

கொலைக்கு தான்மட்டுமே காரணம் என கோட்ஸே கூறினாலும் – அவர் சட்டைப் பையில் வைத்திருந்த செலவின விவரம், தங்கியிருந்த விடுதி என போலிஸ் புலனாய்வு செய்து, நாராயண ஆப்தே, நாதுராம் கோட்ஸே, கோபால் கோட்ஸே, மதன்லால், விஷ்ணு கார்க்கரே, பார்ச்சகர், திகம்பர் பாட்கே, பாட்கேயின் பணியாள் சங்கர் மற்றும் வீரசாவர்க்கர் ஆகியோரைக் கைது செய்தது.

கொலை, கொலை செய்யச் சதி, ஆயுதச் சட்டத்தின் கீழ் தண்டிக்க ஏதுவான குற்றங்கள் ஆகியவற்றின் கீழ் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. ஆனால் கைது செய்யப்பட்ட ஒன்பது பேரில் இதற்கான எந்த சாட்சியங்களுமற்று தடைக்காவலில் வைக்கப்பட்டவர் சாவர்க்கர். இதன்படி சாட்சியங்கள் ஏதுமற்று கைது செய்யலாம், சாட்சிகளைப் பின்னால் ‘ஜோடித்துக் கொள்ளலாம்.’ வியப்புக்குரிய வகையில் இந்திய விடுதலைக்கு முன்பு இந்தத் தடைக்காவல் சட்டத்தினை எதிர்த்து நேருவின் காங்கிரஸ் வெள்ளையர் ஆட்சியில் போராடிற்று. ஆட்சியதிகாரம் கைக்கு வந்த பின்னர் காலனி ஆதிக்கத்தின் நீட்சியாகவே காங்கிரஸ் நடந்துகொண்டது.

கைது செய்யப்பட்டவர்களுள் ஒருவரான, ‘வீர’ என்ற அடைமொழியுடன் விளிக்கப்பட்டவரான சாவர்க்கரின் அப்போதைய வயது 64. ஓராண்டிற்கும் மேலாக சுகவீனத்துடன் இருந்தவர். சிவாஜி, திலகர் மற்றும் பேஷ்வாக்களுக்கு இணையாக மராட்டியத்தில் மதிக்கப்பட்டவர். எல்லாவற்றிற்கும் மேலாக, விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டமைக்காக அந்தமானிலும் வீட்டுச்சிறையிலுமாக 26 ஆண்டுகள் வெள்ளையரின் அரசால் சிறை வைக்கப்பட்டவர். ஒப்பீட்டளவில் அவருடைய சமகாலத்தில் வேறெந்த இந்தியத் தலைவர்களை விடவும் அதிக நாட்கள் விடுதலைப் போராட்டத்திற்கென சிறைபட்டவர். பின்னாட்களில் இந்தியரல்லாத ஒருவருக்கு தனது தேசவிடுதலைக்காக 27 ஆண்டுகள் சிறையிலிருந்தார் என்பதற்காக பாரதரத்னா விருதே வழங்கப்பட்டது. அவர் தென்னாப்பிரிக்காவின் நெல்சன் மண்டேலா. ஆனால் சாவர்க்கருக்குச் சிறை!

உண்மையில் சாவர்க்கரின் பங்குதான் என்ன? காந்தி கொலையில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அவர் ஈடுபட்டாரா?

சுந்தர ராமசாமி தன் கட்டுரையொன்றில் இப்படி எழுதினார் – ‘சிறுவயதில் நோயுற்றுக் கிடந்தேன். அப்போது வாசித்த புத்தகங்களில் மறக்க முடியாதது ‘எரிமலை’ என்ற நூல். சாவர்க்கர் எழுதியது.’

மேற்கண்ட வரிகள் எரிமலையை வாசிக்க வேண்டும் என்ற ஆவலை என்னிடம் தூண்டிற்று. அடிப்படைக் கல்வி முதல் முதுநிலைப் பட்டப்படிப்பு வரை அந்த நூலைப் பற்றியோ, அதன் ஆசிரியரான சாவர்க்கரைப் பற்றியோ நான் படித்த எந்தப் பாடப் புத்தகங்களிலும் இல்லை.

குஹாக்களும், பாமிதத்களும், தாப்பர்களும், சர்மாக்களும் கோலோச்சும் பல்கலைக்கழகங்களின் வராந்தக்களில் இன்றளவும் ‘இந்துத் தீவிரவாதி’ எனத் தூற்றப்படுபவர் சாவர்க்கர். ‘சமயச்சார்பற்ற’ மேற்படி வரலாற்றுநூல் ஆய்வாளர்கள் ஒருவரை மதத்தீவிரவாதி என முத்திரை குத்த, அவர் தன்னை இந்து என அடையாளப்படுத்திக் கொண்டாலே போதுமானது என்பது வேறு விஷயம்.

நாசிக் அருகில் ஒரு சிறிய கிராமத்தில் 1883ல் பிறந்தவர் விநாயக் தாமோதர் சாவர்க்கர். தனது 12 வயதிலேயே தன் கிராமத்திலிருந்த சில குண்டர்களை தனது பள்ளி சகாக்களோடு இணைந்து விரட்டியவர் சாவர்க்கர். 16 வயதில் பிரிட்டிஷாரை எதிர்த்து ஒரு அமைப்பையும் ஏற்படுத்தியவர். பள்ளிக் கல்வியில் சாதாரண மாணவராக இருந்தபோதும் விரிவான வரலாற்று நூல்களின் வாசிப்பிலும், சமஸ்கிருத வேத நூல்களிலும் ஆழமான அறிவைப் பெற்றிருந்தார். 1903ல் மெட்ரிகுலேஷன் தேர்வினில் வென்று நாசிக்கை விட்டு பூனாவிற்கு கல்லூரிப் படிப்பிற்குச் சென்றபோது, நாசிக்கின் முக்கியப் புள்ளிகளின் திரண்ட வழியனுப்பு விழாவைப் பெறும் அளவிற்குச் செல்வாக்கினைப் பெற்றிருந்தார்.

பூனாவில் கல்லூரியில் பயின்றபோதே அனல் கக்கும் பேச்சுகளால் அறியப்பட்ட மாணவரான அவர், அந்நிய ஆடைகளை எதிர்த்ததால் கல்லூரியிலிருந்து வெளியேற்றப்பட்டார். அந்நாளைய அரசியல் ஆர்வலர்களின் பலரின் அடியொற்றி சாவர்க்கரும் சட்டம் பயில இங்கிலாந்து சென்றார். 22 வயதிலேயே அரசால் கண்காணிப்பிற்கு உள்ளாக்கப்பட்ட இவருடைய வெளிநாட்டுப் பயணம் அப்போதைய பிரிட்டிஷ் அரசிற்கு நிம்மதியை அளித்தது. ஆனால் அது தற்காலிகமானதே.

இலண்டனில் சாவர்க்கர் இருந்தபோது எழுதியதுதான் ‘எரிமலை.’ ‘1857 – கலகம்’ என்று கொச்சையாக பிரிட்டிஷாரால் அழைக்கப்பட்டதும், அதனைக் கூச்சமின்றி சிப்பாய்க் கலகம் எனப் பாடப்புத்தகங்களில் மொழிபெயர்த்துப் பல வருடங்கள் இந்தியர்கள் வாசித்த முதல் இந்திய சுதந்திரப் போரை சாவர்க்கர் எழுதினார். இலண்டனில் இந்திய விடுதலைக் கழகத்தில் இதன் முதல் இரண்டு அத்தியாயங்களை வாசித்துக் காட்டினார். அவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து இந்தியாவிற்கும் அனுப்பினார். விடுதலை உணர்ச்சியைத் தூண்டும் அபாரமான நூலின் தொடக்கம் என்பதை அறிந்த ஆங்கில அரசு அதனைத் தடைசெய்துவிட்டது. ஒரு நூல் முற்றாக எழுதப்படும் முன் தடைசெய்யப்பட்டதும் ‘சாதனை’தான்

1909ல் லண்டனில் இந்திய விடுதலைக் கழகத்தின் தீவிர உறுப்பினராக இருந்த மதன்லால் திங்கரா, சர் கர்சன் வைலி என்பவரைச் சுட்டுக் கொன்றார். சாவர்க்கர் மீதான கண்காணிப்பு இப்போது ஸ்காட்லாண்ட் யார்ட் வசம் சென்றது. எனவே அவர் பாரிஸிற்குச் சென்றார். என்றாலும் இந்தியா திரும்ப லண்டன் வந்தபோது கைது செய்யப்பட்டார். நீதிமன்றம் அவரை இந்தியாவிற்கு அழைத்துச் செல்ல உத்தரவிட்டது.

எஸ்.எஸ்.மௌரியா என்ற கப்பல் மூலம் இந்தியாவிற்கு அழைத்துவரப்பட்ட சாவர்க்கர் ‘மார்ஸேல்’ இடத்திற்கு வரும்போது கப்பலில் இருந்து குதித்து தப்பிக் கரையை அடைந்தார். அமெரிக்க ஹாலிவுட் படத்தில் இத்தகைய காட்சி வைக்கப்பட்டால்கூட நம்புவதற்குக் கடினம்தான். ஆனால் அது நிகழ்ந்தது.

ஆனால் விதி வேறாக இருந்தது. மார்ஸேலின் போலிஸார் அவரை மீண்டும் பிரிட்டிஷ் போலிஸிடமே ஒப்படைத்துவிட்டனர். பிரிட்டிஷாரால் 50 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு அந்தமான் சிறைக்கு அனுப்பப்பட்டார். பிரிட்டிஷாருக்கு எதிரான அவருடைய நேரிடையான விடுதலைப் போர் இவ்விதம் முடிந்தது.

அந்தமான் சிறையொன்றும் பிர்லா மாளிகையல்ல. ஒரு மனிதனை உயிருடன் கொல்லவும், மனரீதியாகச் சிதைவடையவும் போதுமான எல்லா ‘வசதிகளும்’ கொண்டது அது. பத்தாண்டுகளில் சாவர்க்கர் நலிந்துபோனார். பிறகு இந்தியச் சிறைக்கு மாற்றப்பட்டார். நான்கு ஆண்டுகளில் மேலும் நலிவுற்ற பின்னர் ‘இரத்தினகிரி’ என்ற மாவட்ட எல்லையை விட்டு வெளியேறக்கூடாது என்ற நிபந்தனையுடன் ஜாமீனில் வெளிவிட்டது பிரிட்டிஷ் அரசு. இருவேறு சிறைகளில் 14 ஆண்டுகள் – இந்தியாவின் ஆயுள் தண்டனைக்குச் சமம். சிறையிலிருந்த அவர் மிகவும் நலிந்திருந்தார் – ஆனால் உள்ளத்தளவில் அல்ல.

1929. ஒரு கோடைக்காலத்தில் இவரைச் சந்தித்தார் ஒரு இளைஞர். அவருடைய பெயர் நாதுராம் கோட்ஸே. தீவிர தேசப்பற்றும் மதச்சீர்த்திருத்தக் கருத்துக்களையும் கொண்டிருந்த சாவர்க்கரை கோட்ஸே ஒரு திருவுருவாகவே எண்ணிப் பின்பற்றினார். 1944ல் ‘தி அக்ரானி’ என்ற இதழை சாவர்க்கரின் ஆதரவின் பேரில் கோட்ஸே வெளியிட்டார். இதன் தீவிரப்போக்கால் 1947 ஜுலை 03ல் தடைசெய்யப்பட்டது. பத்தே நாட்களில் கோட்ஸே வேறு இதழைத் தொடங்கினார். அதன் பெயர் ‘இந்து ராஷ்ரடிரம்.’ இதன் டெலிபிரிண்டரில்தான், காந்தி உண்ணாவிரதம் தொடங்கிய செய்தி வெளியானது. 1948 ஜனவரி 12ல் உண்ணாவிரதம் தொடங்கிய காந்தி தன் நோக்கத்தில் வெற்றியடைந்தார். பாகிஸ்தானுக்கு இந்தியா 55 கோடி வழங்கும் என்று முடிவானது. ஏறக்குறைய தனக்கெதிரான ஆயுதங்கள் வாங்க, பங்காளிக்கு இந்தியா தானே பணம் தந்தது எனலாம். ஜனவரி 18ல் உண்ணாவிரதம் நிறைவுபெற்றது.

காந்தி கொலையில் கைது செய்யப்பட்டவர்களுள் சாவர்க்கரைத் தவிர்த்து மற்ற அனைவர் மீதும் குறிப்பிட்ட குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன. தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த சாவர்க்கர் 1948 பிப்ரவரி 05ல் கைது செய்யப்பட்டார். காந்தி கொலைவழக்கு வழக்கமான நீதிமன்றத்தில் அல்லாமல் டில்லி செங்கோட்டையில் நடைபெற்றது. இதழாசிரியர்களின் பார்வைக்கு விசாரணை அனுமதிக்கப்பட்டது.

வீரசாவர்க்கருக்காக எல்.பி.போபட்கர் என்பவர் வழக்காட ஆஜரானார். வழக்கு விசாரணைக்காக அவர் தில்லியிலிருந்தபோது ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. ‘இன்று மாலை மதுரா செல்லும் சாலையில் ஆறாவது மைல்கல்லில் என்னை சந்தியுங்கள்’ என்றது மறுமுனை. அவ்விதம் அன்று மாலை போபட்கர் தன்னை அழைத்த நபரைச் சந்தித்தார். அந்நபர், “உன் கட்சிக்கார் (வீரசாவர்க்கர்) மீது எந்தக் குற்றச்சாட்டும் இல்லை. பயனற்ற வெறும் குற்றச்சாட்டுகள். பட்டேல் கூட எதிர்த்தார். அமைச்சரவையிலும் பலர் எதிர்த்தனர். ஆனால் ‘அந்த ஆணைக்கு’ எதிராக ஒன்றும் செய்யமுடியவில்லை என்றாலும் நீ ஜெயிப்பாய்” என்றார். அந்த மனிதர், தனது கூரிய சட்ட மேதைமைக்காக இன்றளவும் மதிக்கப்படுபவரான டாக்டர் அம்பேத்கர். ‘ஆணையை’ விடுத்தவர் – நேரு.

பம்பாய் புலனாய்வுக் கிளையின் துணை ஆணையர் ஜாம்ஷெட் தோரவ் நாகர்வாலா காந்தி கொலையை, கொலை முயற்சி என்ற அளவிலேயே தடுத்திருக்கக்கூடிய வரலாற்று வாய்ப்பை நழுவ விட்டவர். ஏற்கெனவே பம்பாயின் உள்துறை அமைச்சரை சந்தித்து சாவர்க்கரை ஒரு சந்தர்ப்பத்தில் கைது செய்ய அனுமதி கோரியவர் நாகர்வாலா. அப்பழுக்கற்ற நேர்மைக்கு பெயர்போனவரான மகாராஷ்ட்ர உள்துறை அமைச்சர் கைதிற்கு அனுமதி மறுத்திருந்தார். அவர் மொரார்ஜி தேசாய். சாவர்க்கர் கைது விஷயத்தில் மூக்குடைப்பட்ட நாகர்வாலா, காந்தி கொலைக்குப் பின், கொலையைப் புலனாய்வு செய்துவந்த தில்லி போலிஸின் சூப்பிரண்டென்டாக நியமிக்கப்பட்டார். இம்முறை அவர் மூக்குடைபட நேரவில்லை. மேலும் சாவர்க்கரின் கைது ‘மேலிடத்தை’ திருப்தி செய்தது.

காந்தி கொலையில் பிடிபட்ட திகம்பர் பாட்கே-வின் வாக்குமூலம் மட்டுமே வீரசாவர்க்கருக்கு எதிரானதாக இருந்தது. பம்பாயின் கெலுஸ்கர் சாலையில் இயற்கை எழில் சூழ்ந்த ‘சாவர்க்கர் சதனில்’ கோட்சே, ஆப்தே இருவரும் அதன் புகழ்பெற்ற உரிமையாளரைச் சந்தித்தபோது அவர் ‘யஷஸ்வீ ஹோங் யா’[1] என வாழ்த்தியதாக பாட்கே சொன்னார். காந்தி கொலையில் அப்ரூவரான பாட்கே சிறையிலிருந்தபோது மது, மாமிசம், முட்டை, இனிப்புகள் மற்றும் சிகரெட்டுகள் அவருக்கு வழங்கப்பட்டன. தண்டனையிலிருந்து விடுதலையும் பெற்றார். ஊமையைக் கூட பேசவைக்கும் வல்லமை மிக்க போலிசால் விசாரணை, பாட்கேவை தமது விருப்பத்திற்கு வளைத்துக்கொண்டதைப் பின்னாளில் அவரே பேட்டிகளில் வெளியிட்டார். தனது தீவிர விசுவாசியான திகம்பர பாட்கேவிற்கு பஞ்சசீலக் கொள்கையைப் பின்பற்றிய காங்கிரஸ் அரசு வாழ்நாள் முழுவதும் ஓய்வூதியம் அளித்தது. மேலும் அவருக்கு மும்பை சி.ஐ.டி. தலைமையக வளாகத்திற்குள் அதிகாரபூர்வ குடியிருப்பும் வழங்கப்பட்டது.

சாவர்க்கர் சதனில் கைப்பற்றப்பட்ட கடிதங்கள், நாதுராம் கோட்ஸே சாவர்க்கருக்கு எழுதியவை, போதுமான சாட்சியங்களாக இல்லை. சாவர்க்கர் போன்ற மாபெரும் தலைவர்களுக்குப் பல தொண்டர்கள் எழுதிய கடிதம் போன்றவையே அன்றி விஷேசமாக வேறேதும் அவற்றில் இல்லை. பணத்திற்கு விலைபோன பாட்கேவின் வேலையாள் சங்கரும் விசாரணையின்போது, ‘பாட்கே சொன்னவாறுதான் நான் வாக்குமூலம் அளித்தேன்’ என்று கூறியதால் சாவர்க்கரின் விடுதலை உறுதியானது. நாகர்வாலா இம்முறை சாவர்க்கரை கைது செய்ததோடு திருப்திபட்டுக்கொள்ள வேண்டியதாயிற்று. 1949 பிப்ரவரி 10 அன்று வீரசாவர்க்கர் விடுதலை செய்யப்பட்டார்.

‘யஷஸ்வீ ஹோங் யா’ என்ற வாழ்த்தைத் தெரிவித்ததாக பாட்கேவிடம் ‘பெறப்பட்ட’ வாக்குமூலத்தை வைத்து இன்றளவும் அவரை காந்தியைக் கொன்றவர்களுடன் இணைத்து விமர்சிக்கிறார்கள்.

மேலும் பகுத்தறிவு பேசும் ஒரு இதழ், தனது பெயருக்கு மாறாக ‘உண்மையைத்’ தவிர பொய்யை பேசும் இதழ், சாவர்க்கர் மன்னிப்புக் கடிதம் எழுதினார் என விமர்சிக்கிறது. அவர்கள் வசதியாக மறைக்கும் வரலாற்று ‘உண்மை’, அவர்களின் கொள்கையை வகுத்தளித்த ‘பெரியாரும்’ பிரிட்டிஷாரிடம் மன்னிப்புக் கேட்டு கடிதம் எழுதியவர்தான் என்பது.

12 வயது முதல் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டவர் – நாடு கடந்தும் விடுதலை உணர்வை வளர்த்தவர் – தப்பிக்க நம்புவதற்கரிய சாகசங்களை மேற்கொண்டவர் – அனல் பறக்கும் பேச்சாளர் – அபாரமான எழுத்தாளர் – ஒரு தேசியத்தலைவராக மலர்ந்திருக்க வேண்டிய சகல தகுதிகளையும் பெற்ற சாவர்க்கர் – தனிப்பட்ட நபர்களின் வஞ்சத்தால் துன்புறுத்தப்பட்ட வரலாறு அதிகம் பேசப்படாதது அவலமே.

வீரசாவர்க்கருக்கு தண்டனையைப் பெற்றுத் தருவதில் காங்கிரஸ் அரசு தோற்றபோதும் அவர்மீது களங்கம் கற்பிப்பதில் வெற்றிபெற்றது என்றே கூறவேண்டும். குறைந்தபட்சம் அவர் புகழை மகாராஷ்ட்டிர எல்லைக்குள் சுருக்கி, தேசிய அளவில் பரவாமல் தடுத்ததில் மட்டுமாவது வெற்றிபெற்றது அப்போதைய அரசு. வீரசாவர்க்கர் போன்ற ஸ்திதப் பிரக்ஞனுக்கு இது மரணதண்டனைக்கு நிகரானதே.