ஈஸ்வரன் உற்சவ மூர்த்தி வீதி உலாவுக்கென நீர் தெளித்த வாசலில் விரிந்து பரந்த கோலங்கள் சாணி
மெழுகிய முன் வாயில்களில் தெருவின் இருபுறமும் கண்ணைக் கவர்ந்தன. ஒரு கையில்
கமண்டலம், மறுகையில்
கப்பரை, இடுப்பில் ஒரு முழமோ என ஐயம் கொள்ள வைக்கும் சிறிய காவி வேட்டியே இடுப்பு
வஸ்திரமும் கோவணமுமாய், தாடி, கருப்பும் வெள்ளையுமான ஜடா முடியுடன் மார்பில் நிறைய
ரோமம், இவை போதாதென செக்கச் சிவந்த கண்களுடன் ஒரு துறவி நடந்து வந்தார். சன்னதித்
தெருவில் பெரிய திண்ணை உள்ள ஒரு வீட்டின் முன் நின்றார். ‘ஹரஹர மகா தேவ்’ என்றார்
ஒரு முறை. பின்னர் சற்றே உரத்த குரலில் ஹர ஹர மகாதேவ் என்றார் மேலும் இரு முறை.
அந்த விட்டின் முன் வாயிலில் உள்ள பெரிய தேக்குக் கதவு சற்றே ஒருக்களித்துத்
திறந்தது. வெளியே சென்னிறமாய், பட்டு மடிசார் கட்டில் இருந்த நடுவயது மாது எட்டிப்
பார்த்தார் “சுவாமி வர்ற நேரம். அப்புறம் வா”, என்றவர் கதவை மீண்டும்
சார்த்தினார்.
தெருவின் நட்ட நடுவே நின்றிருந்த சாமியார் முன் வாயிற் கோலத்தை மிதித்தபடி அந்த
வீட்டின் படிகளில் ஏறினார். கமண்டலம் மற்றும் கப்பரையை திண்ணை மீது வைத்தவர்
கதவருகே சென்று நின்றார். அரச இலை அளவுக்கு வினாயகர் உருவம் பதித்த ஒரு செப்புத் தகடு ஆணியால் முன் வாயிற் கதவின் மீது
திருஷ்டி பரிகாரமாகப் பொருத்தப் பட்டிருந்தது. அதை வலது கையில் ஒரே இழுப்பில்
பிடுங்கி எடுத்தார். மறுபடி தெரு மத்தியில் நின்றார். இதற்குள் நாதஸ்வர மேள
தாளத்துடன் தெருவுக்குள் ஈஸ்வரனின் சப்பரம் நுழையவே இந்த வீடு உட்பட எல்லா
வீட்டுக் கதவுகளும் திறந்தன. இன்னும் நூறு இரு நூறு அடிகள் தாண்டி ஊர்வலம் வந்தால்
துறவி நகர வேண்டி இருக்கும். துறவியின் இடுப்புக் காவி வேட்டியின் மேற்புறமாக இடுப்பின்
இரு பக்கம் தொங்குவதாய் இரண்டு துணி முடிச்சுகள் இருந்தன. அவற்றுள் இடது முடிச்சை
அவர் ‘செப்புத் தகடு வினாயகரை’ வலது கையில் இரு விரல்களுள் இடுக்கி, மீதி
விரல்களால் சற்றே அவிழ்த்தார். உள்ளே சில பச்சிலைகள் காய்ந்து பொடியும் நிலையில்
இருந்தன. அவற்றுள் சிலவற்றை உருவினார். இடது கையில் செப்புத் தகட்டை வைத்து, வலது
உள்ளங்கைக்குள் பச்சிலைகளை வைத்து, கையை மூடித் திறந்து அவற்றைப் பொடி ஆக்கினார்.
பின்னர் அந்தப் பொடிக்குள் இந்தத் தகட்டை வைத்துக் கொண்டு, திண்ணைக்கு அருகே
வந்தார்.
திண்ணையில் நின்று எட்டிப் பார்த்தபடி இருந்த, அந்த வீட்டின் வெவ்வேறு வயது நிலையிலுள்ள
பெண்களும் பயந்து வீட்டுக்குள் நகர்ந்தனர். இடதுகையால் கமண்டலத்தை எடுத்து
அதிலிருந்து சில துளி நீரை வலதுகை மீது ஊற்றினார். பின்னர் கையை நெற்றி அருகே
கொண்டு சென்று முணுமுணுப்பாய் சிறு மந்திரம் ஒன்றை ஓதினார். மீண்டும் கமண்டலத்தைத்
திண்ணை மீது வைத்தார். தெரு நடுவே சென்று வலது கை உள்ளங்கையை விரித்தார். செப்புத்
தகடு தங்கமாகி வெய்யிலில் பளபளத்தது பல வீட்டுத் திண்ணைகளிலிருந்து தெளிவாகத்
தெரிந்தது. ஓங்கி அதை வீட்டுக்குள் வீசினார். அது ரேழியைக் கடந்து நான்கு புறம் ரேழி
சூழும் முற்றத்தில் விழுந்து மின்னியது. திண்ணை அருகே வந்தவர் கமண்டலத்தையும்
கப்பரையையும் கையில் எடுத்துக் கொண்டு மேற்சென்றார்.
அவருக்குப் பின்னாலேயே வந்து கொண்டிருந்த உற்சவரின் சப்பரம் தமது வீட்டைக்
கடக்கும்போது பக்தியுடன் அணுகி அர்ச்சனை செய்து கும்பிட்ட பின் அந்தணர்
ஒவ்வொருவராக அதன் பின்னேயே நடந்து சித்தர் கால் பட்ட வீட்டின் முன் குழுமினர்.
சற்று நேரத்தில் தெருவின் அத்தனை அந்தண ஆண் பெண்கள் அங்கே கும்பலாய்க் குழுமி
விட்டனர். அந்த வீட்டின் தலைவர் கட்டுக் குடுமி, நெற்றி தோள் முன் கை என எங்கும்
விபூதியாய் பஞ்சகச்ச வேட்டியுடன் திண்ணைக்கு வந்து, “நமஸ்காரம். என்ன தேவரீர்
எல்லாம் இந்தப் பிராமணன் கிருகத்துக்கு வந்திருக்கேள்,” என்றார்.
தங்கமாக்கிட்டானே. அது அதிசயமில்லையோ?”
“தங்கமா? சற்றே இருங்கோ, காமாட்சி அதை எடுத்துண்டு வா.”
மகள் பெயரைச் சொல்லியே அவர் மனைவியை அழைப்பார்.
துணைவியார் அந்தத் தகட்டைக் கொண்டு வந்து அவரிடம் நீட்டி விட்டுப் பின்னகர்ந்தார்.
“அதிசயமாத்தான் இருக்கு,” என்றவர், “ஒரு ஆசாரிய வெச்சு உரசிப் பாப்போமா?’ என
வினவினார்.
“போஷூ[1], கோமோ வேச்சு?[2] என் ஆயுசுல இந்த மாதிரி குளிர நான் பிரான்ச்ல கண்டதில்லை,” என்ற
பால் அகஸ்டின் சட்டென்ற உற்சாகத்துடன், “பிறகு என்னதான் ஆனது லூகாஸ் மதாம்?”
என்றான்.
“வேறென்ன? பொற்கொல்லர் வந்தார். தம் தோளில் சுமந்து வந்த சிறு துணி மூட்டையில்
இருந்து ஒரு உறைகல்லை வெளியே எடுத்தார். அந்தத் தகட்டைக் கல்லின் மீது உராசிப்
பார்த்தபின் ‘சொக்கத் தங்கம்’ என்றார். நாங்கள் புதுச்சேரியில் இருந்து படகு வழியே
கடலூர்த் துறைமுகத்தில் இருந்து இந்தப் புராதன ஊருக்குக் கட்டை வண்டியில போய்
இந்தக் கோயில் விழாவைப் பார்த்தோம். வீட்டுக்குள் எங்களை அனுமதிக்க மாட்டார்கள்
என்பதால் அவர்களது கடவுளின் சிலை ஊர்வலத்தின் பின்னேயே தெருவில் சென்ற படி
இருந்தோம்.”
“பின்னர் என்ன ஆனார் அந்தத் துறவி?”
“கொளுத்தும் வெயிலில் அதற்கு மேல் நாங்கள் அங்கே நிற்கவில்லை. கிளம்பி விட்டோம்.
ஆனால் உனது இதே கேள்விதான் ஆர்தரைத் துளைத்தபடியே இருந்து இன்று அவன் சொல்லாமல்
கொள்ளாமல் இந்தியா செல்லுமளவு துணிந்து விட்டான்.”
“எப்படி மதாம் அவன் இந்தியா செல்ல இயலும்?”
“அவனுக்கு இப்போது 25 வயது ஆகி விட்டது என்பதை நீ மறந்து விட்டாயா அகஸ்டின்?
இருபதாம் நூற்றாண்டு தொடங்கி ஒன்பதாண்டுகளும் ஒருண்டோடி விட்டன. அவன் தனது அப்பா
தந்தங்கள், மிளகு மற்றும் தோல் இறக்குமதி செய்யும் கப்பல்காரர்கள் பற்றித்
தெரிந்தவன், அவர்கள் உதவியுடன் நமது ஆட்சியில் இருக்கும் புதுச்சேரிக்குச் சென்று
விட்டான். துறைமுகத்தில் இருந்து ஒரு கடிதத்தை மட்டும் அனுப்பினான். அவன் அப்பா
லூகாஸ் பக்கவாத்தில் படுத்த படுக்கையாயிருக்கும்போது என்னை இது எந்த அளவு
பாதித்திருக்கும் என்று நினைத்துப் பார் அகஸ்டின்.”
“மதாம், எந்தக் கத்தோலிக்கருக்கும் அவர் புனித பைபிள் மீது செய்த உரைகளாகட்டும்
அல்லது டிரைஃபஸ் விடுதலையை எதிர்த்த ஆணித்தரமான வாதங்களாகட்டும், அவர் போல ஒரு
ஈர்ப்பான பேச்சாளர் அரியவரே. எங்கள் அனைவரின் பிரார்த்தனைகளும் அவர் விரைவில்
குணம் அடையவே. நீங்கள் என்னை அழைத்த காரணம் இப்போதுதான் எனக்குப் பிடி படுகிறது”
அனுப்ப இயலுமா?”
அவனை அனுப்பி வைப்பது என் பொறுப்பு.”
ஆண்டைய்ன் அர்லோக் அழைத்துச் சென்ற வீடு பாண்டிச்சேரியின் ஈஸ்வரன் கோயில் தெருவில்
இருந்தது. முன்புறம் வெண்ணிறத் தூண்கள், அதைக் கடந்ததும் உள்ளே கூடம் அதன் பின்
ஒரு முற்றம், அதன் பின்னே சிறிய கூடம், பின் கட்டுக்கான கதவு இவற்றைத் தாண்டியதும்
வந்த மாடிப் படிகளில் ஏறி அவர்கள்
மொட்டை மாடியில் கால் வைக்கும் போதே புகையிலையுடன் சேர்ந்த வேறு ஒரு வாடையும்
புகையும் ஆன சூழலில், தலையில் வெள்ளை முண்டாசு, இடுப்பில் பஞ்சகச்ச வேட்டி, மேலே
கருப்புக் கோட், விசித்திரமாய் டை இருக்க வேண்டிய பகுதியில் வெள்ளைத் துணி பெரிய
மீசையுடன் விசித்திரமான தோற்றத்துடன் ஒருவர் இருந்தார். “வாருங்கள் அர்லோக்” என
தெளிவான பிரெஞ்சு மொழியில் வரவேற்ற அவர், “தரையில் அமர வேண்டும். சிரமமென்றால்
நான் நின்று கொள்கிறேன். நீங்கள் என் ஆசிரியர் அல்லவா?”
“இல்லை சுப்ரமண்யா. இது ஆர்தர். ஆர்தர், இவர் சுப்ரமண்யா. தமிழ் மொழியில் கவிஞர்.
சிறப்பாக பிரெஞ்ச் கற்றவர்.”
“உங்களிடம் கற்றேன் என்பதைச் சேர்த்துக் கூறுங்கள்,” என்ற பாரதியார், அருகே
அமர்ந்த இருவரில் முதலில் அர்லோக் கையைக் குலுக்கினார்.
பின்னர் ஆர்தர் கையைப் பற்றி, “தவறான ஆள் போதைக்கு அடிமையிடம் வந்து விட்டோம் என
நினைக்கிறாயா?”
“அப்படியெல்லாம் இல்லை.”
“நான் சொந்த மண்ணில் இருந்து துரத்தப் பட்டு இங்கே அடைக்கலம் ஆனவன். அந்த அழுத்தம்
தாங்க முடியாதபோது அரிதாய் போதை கை கொடுக்கும். சுதந்திர வேட்கையில்
விழித்திருப்பவன் நான். போதைக்கு அடிமையானவன் இல்லை.”
பற்றித் தெரியுமா என வினவினான் ஆர்தர்.
“நான் சமீபத்தில் சந்தித்த ஆன்மீக குரு, துறவி எல்லாமே அரவிந்தர்தான். நீங்கள்
தேடும் சாமியாரை நான் சந்தித்ததே இல்லை.”
“என் தாயிடம் கூடச் சொல்லிக் கொள்ளாமல் திடீரென வந்து விட்டேன். நான் தோல்வியோடு
போனால் அவரை எப்படி சந்திப்பேன்?”
“ஆர்தர், பலவேறு மன்னர்களின் பிரஜைகள் நாங்கள். எல்லோருமே பிரிட்டிஷாரிடம் அடிமை
ஆகி விட்டார்கள். இருந்தும் நாங்கள் விடுதலை வேட்கையில் பின்னடையவே இல்லை. உங்கள்
தேடலின் தீவிரம் உங்களுக்கு வழிகாட்டட்டும்.”
தனலட்சுமியின் சதிராட்டம் உண்டு என்று இரும்பை கிராம மக்களுக்குத் தெரியும்.
அவர்களுக்கு சிவப்புத் தொப்பியும், நீல நிற நீண்ட மேற்சட்டையும், சிவப்பு நிறக்
கால்சராயுமாக முதல் வரிசையில், அவருக்காக மட்டும் வர வழைக்கப் பட்ட நாற்காலியில்
அமர்ந்திருந்த வெள்ளைக்கார சிப்பாயைக் காண வியப்பாயிருந்தது. அவரிடம் போய்ப் பேச
யாருக்கும் தைரியமில்லை. அவர் அருகே வெளியூர் ஆள் ஒருவன் காதில் குசுகுசுவென
அவ்வப்போது பேசிக் கொண்டிருந்தான். அவன் பெயர் சிவமணி என யாரோ கூறினார்கள்.
பால் அகஸ்டினுக்கு ஒரு சிறிய கல்லின் மீது குச்சியால் தட்டும் நட்டுவாங்கம்,
மிருதங்கம் மற்றும் புல்லாங்குழல் வாசிப்போர், நடனத்துக்கான பாடலைப் பாடுபவர்,
அவர் அருகே ஹார்மோனியம் வாசிப்பவர் அனைவருமே அதிசயமாகத் தெரிந்தனர். அவர்கள்
எப்படி இசையை தம்முன்னே ‘நோடெஷன்’ தாள் வைக்காமல் வாசிக்கிறார்கள் என்பது மிகவும்
வியப்பாக இருந்தது. பவுர்ணமியின் ஒளியைத் தவிரவும், கோயிலின் முன் வாயிலின் அருகே
அமைக்கப்பட்ட மரத்தால் ஆன மேடையைச் சுற்றிலும் கல் தூண்கள் மீது பருத்தித்
துணிக்குள் பஞ்சு வைத்த உருண்டைத் திரிகள் பெரிய வெளிச்சம் காட்டின.
நீல வானம் தனில் ஒளி வீசும்
என்னும் பல்லவிக்கு மெல்ல உயர்ந்து இருபக்கம் சீராக நளினமாக
விரியும் தன் இரு கைகளால் தனலட்சுமி அபினயித்தபோதும், நிறைமதியோ எனத் தன் முகத்தை
வலது கையால் சுற்றி முகம் முழுதும் மெல்லப் பரவும் புன்னகையுடன் கண்களை விரித்துக்
காட்டிய பாவத்திலும் பால் தன்னுள் ஒரு மலர் மொட்டவிழ்வது போன்ற ரசனையை உணர்ந்தான்.
“வானத்தையும் நிலவையும் தானே அவர் குறிப்பிடுகிறார்?” என்று மொழிபெயர்க்க உடன்
வந்திருக்கும் சிவமணியை வினவ, “எப்படி துரை கண்டுபிடித்தீர்கள்?” என அவன்
பாராட்டினான். மேடையின் விரிவெங்கும் சுழன்று சுழன்று ஆடிய தனலட்சுமியின்
இயக்கத்தின் சீரான வேகம் அவனைத் திணற அடித்தது.
நதிக்கரை ஓரத்திலே யமுனை
பாடல் வரிகள் ஒலிக்க மேடையில் நீள வாக்கில் கைகளால் அலைபோல அபினயித்து, நீள்
நதியின் நடையைக் காட்டுவது போல இரு புறமும் மாறி மாறி மெல்லச் சாய்ந்து நடந்தபோது,
வெள்ளைத் தோல் அல்லாத ஒரு பெண்ணைத் தான் இவ்வளவு ரசிப்பது இப்போதுதான் என அவன்
உணர்ந்தான்.
நதிக்கரை ஓரத்திலே யமுனை
மலர் மொட்டமிழ்வதை உள்ளங்கையைக் குவித்து மெல்ல மெல்ல விரித்து விரல்களில்
தனலட்சுமி காட்டிய லாகவம், ‘மதிமயங்கி வசமிழந்த என்னிடம்’ எனும்போது முகமெல்லாம்
பரவிய நாணம், கிறங்கிய பாவத்தில் தலையை மிக நளினமாகச் சாய்த்து மீண்டு, பின் ‘அருள்
புரிந்து’ எனும்போது கண்களில் காட்டிய தெய்வீக பாவமும் மாறி மாறி வந்த கலைத்
திறனும் அவன் இதுவரை கண்டிராதவை.
நாட்டியம் முடிந்ததும் ‘பால்’-இன் விருப்பப்படி சிவமணி தனலட்சுமியை அழைத்து
வந்தான். “உங்கள் நாட்டியம் சதிர் என அறிந்தேன். இதை நான் கலைகளுக்குப் புகழ்
பெற்ற பாரிஸ் நகரில் கூட கண்டதில்லை. பாண்டிச்சேரியில் எங்கள் படை வீரர்களும்
மற்றும் பாரிஸில் உள்ள எங்கள் மேடைகளிலும் நீங்கள் ஆட வேண்டும்.” சிவமணி
மொழிபெயர்த்ததும் அதைக் கூர்ந்து கேட்ட தனலட்சுமி நடராஜர் வடிவ முத்திரைக்கு சில நொடிகளில்
மாறி, பின்னர் கால்களைப் பழையபடி வைத்துத் திரும்பி, கோபுரத்தைக் காட்டி வணங்கி, “அந்த
நடராஜன் கோயில் தவிர வேறு எங்கும் ஆட மாட்டேன். இது உங்களுக்குத் தெரியுமே”
என்றாள்.
பிரெஞ்சில் கேட்டதும் பால்லின் முகம் வாடியது. சில கணங்கள் யோசித்தபின், “சமூகத்தில்
உங்கள் நிலை முன் போல இல்லை என்று அறிகிறேன். எங்கள் நாடு கலைஞர்களைக் கொண்டாடும்.
மறுபடி யோசியுங்கள்.”
சிவமணியின் இந்த மொழிபெயர்ப்புக்கு அவள் கண்ணீர் மட்டுமே பதிலாக இருந்தது.
*
திருவண்ணாமலை மிகவும் வெப்பமாக இருந்தது. மொழி பெயர்ப்பாளர் அந்த ஊரின் மலை மீது
ஏற்றி அழைத்துச் சென்றது இன்னும் கொடுமை. ஒரு குகை அருகே நின்றவர் அதன் உள்ளே
எட்டிப் பார்த்து, “இவரை தரிசனம் செய்து கொள்ளுங்கள்” என்றார் அரைகுறை பிரெஞ்சில்.
“இவர் ரசவாதம் தெரிந்தவரா?”
“இல்லை. பெரிய ஞானி. இவர் பெயர் ரமணர்.” ஆர்தர் எட்டிப் பார்த்தான்.
அவர் மீது கரப்பான் பூரான் எனப் பல ஜந்துக்களும் ஊர்ந்து கொண்டிருந்தன. எந்த
நினைவுமே இல்லை. ஆழ்ந்த தியானத்தில் இருந்தார் அவர். தன் வயதை ஒத்தவராகத்
தெரிந்தார். “இப்படி தியானம் இருப்பது எதற்காக?”
“அவர் நம்மைப் போல் அறியாமையில் மூழ்கி இருக்க விரும்பவில்லை. எது உண்மையோ அதை
உணரத் தவமிருக்கிறார்.”
ரசவாதம் தவிர எல்லாவற்றையும் பற்றி இந்தியர்கள் பேசுகிறார்கள். “ரயிலுக்கு இன்னும்
எவ்வளவு நேரம்?” என்றான் ஆர்தர்.
“இனி நாளை மதியம்தான் ரயில் வரும். உங்களுக்கு நான் தங்குவதற்கு ஒரு சத்திரம்
காட்டுகிறேன்” என்றான்.
“காலையில் பொது இடத்தில் கழிக்கச் சொல்வீர்களா?” என்ற ஆர்தரிடம், “இந்த ஊரில் ஒரு
சில இடங்களில் கழிப்பறை கட்டிடத்துக்கு உள்ளேயே உண்டு. இந்தச் சத்திரம் மேல்ஜாதி
யாத்திரிகர்கள் தங்குவது” என்றான்.
திரும்ப திரும்ப அரிசிச் சோற்றையே காட்டும் அந்த ஊர் அலுப்படித்தது. இரவு
மொழிபெயர்ப்பாளன் வைரவன் ரொட்டியும் கோழிக்கறியும் கொண்டு வந்தான். ஆனால்
கோழிக்கறியில் காரம் அதிகம். கண்ணில் நீர் வந்து விட்டது. பெரிய அகல் விளக்குகளை
ஏற்றி வைத்திருந்தார்கள். சத்திரத்தில் அந்த தீபங்களை நோக்கி நிறைய பூச்சிகளும்
வந்தன. தரையில் அமர்வது தரையில் படுப்பது என இந்தியர்களுக்கு என்ன சாகச
வேலையெல்லாம் எளிதாகக் கை வருகிறது!
ஆர்தருக்கு மன வருத்தம் அதிகமாகிக் கொண்டே வந்தது. நாளை ரயில். ஒரு வாரத்துக்குள்
கப்பல். பின்னர் பிரான்ஸ். பால் அகஸ்டின் என்னும் போர் வீரன் தான் வீடு திரும்புவதை
அம்மாவுக்கு ஏற்கெனவே தெரியப் படுத்தியும் விட்டான். தேடி வந்தது கிடைக்காது
என்பது எவ்வளவு துக்கம் தருவது. தொண்டையை செருமியபடி பைரவனுடன் ஒருவர் வந்தார்.
“இவரால் பிரான்சுக்கு ஏற்றுமதி செய்ய பொருட்கள் ஏற்பாடு செய்ய முடியுமாம்.”
ஆர்தர் பதில் ஏதும் கூறவில்லை. “ரசவாத சித்தர் பற்றி நீங்கள் கேள்விப்
பட்டிருக்கிறீர்களா?” என்றான்.
“அவர் திருவண்ணாமலைக்கு சமீபத்தில் வந்தார்,” என்றார் வியாபாரி.
“இப்போ எங்கே இருப்பார்?”
“அவர் திரிந்து கொண்டே இருப்பவர். நீங்கள் கோயிலுக்கு வருபவர்களிடம் கேட்டுப்
பாருங்கள்” என்றார். தமது முகவரியை மறக்காமல் அவனிடம் கொடுத்தார்.
அண்ணாமலையார் கோயில் மிகப் பெரியதாக இருந்தது. பைரவன் விசாரித்த யாருக்கும்
எதுவும் தெரியவில்லை. மதியம் என்ன வெய்யிலானாலும் ரயிலில் ஏறி விடுவது என
முடிவெடுத்தான். குளக்கரையில் அமர்ந்தான். பொத்தான்கள் இல்லாத கைத்தையல் போட்ட ஒரு
மேற்சட்டை, குடுமி, நான்கு முழ வேட்டியுடன் ஒருவர் ஐம்பது வயது சுமார் அருகில்
அமர்ந்து பொரியை குளத்தில் மீன்களுக்கு இரைத்துக் கொண்டிருந்தார். பைரவன் அவரிடம்
ஏதோ பேசினான். பிறகு ஆர்தரிடம், “இப்போ பஞ்சமில்லையா? இவர் ஒரு விவசாயி. ஊரிலேயே இருந்தா
அவருக்கு ரொம்ப மனச்சங்கடம். அதான் கோயில் குளமெல்லாம் போய் வரார். அவருக்கு ரசவாத
சித்தர் இருக்கும் இடம் தெரியுமாம். அது மலை என்பதால் தினமும் போய் பார்த்து
அவருக்குப் பழம், குடிக்கத் தண்ணீர் கொடுத்து விட்டு வருவாராம்.”
“என்னது? தெரியுமாமா?” – பைரவன். “அவர் கிட்டே ஏன் இவர் தங்கமா பித்தளையை
மாத்துகிற வித்தையைக் கேட்கவே இல்லை. இவர் மட்டுமில்லே. வேற யாருமே ஏன் கேக்கலே?
அவரு என்ன திருப்பாதிரிப்புலியூர் தாண்டி எங்கேயுமே ரசவாதம் செய்ய மாட்டாரா?”
இதையெல்லாம் விவசாயியிடம் கேட்டான் பைரவன். பின்னர், ”அவரை நீங்க பார்த்தப்புறம்
இதுக்கு பதில் சொல்லறேன்கிறாரு.”
மறுபக்கம் என்பதால் மாட்டு வண்டியில் போய் முதுகே உடையும் போலிருந்தது. சாலைகளே
இல்லாமல் எப்படி வாழ்கிறார்கள்?
ஒரு குகையின் வாசலில் பலரும் அமர்ந்திருந்தார்கள். ஆண்கள். பெண்கள். பெரிதும்
நடுவயதினர். குகை பெரியது. அகலமாய் வெளிச்சம் தெரியும் படியானது. ஒரு மூலையில்
சம்மணமிட்டு எலும்பும் தோலுமாய் அமர்ந்திருந்தார் அவர். தன் கையில் கொண்டு
வந்திருந்த ஒரு மண் குடுவை நிறையத் தண்ணீர், வாழை, கொய்யா ஆகிய பழங்களையும் அவர்
முன்னே வைத்தார். “குரங்கு எதுவாவது வந்து எடுத்துப் போகாதா?”
“பகலில் ஒருவர் இரவில் ஒருவர் இங்கேயே இருப்போம். அவர் தியானம் கலைந்து கண்
விழித்தால் உடனே கொடுப்போம்.”
“அவரிடம் யாராவது பேசி இருக்கிறார்களா? அவர் எப்போது தியானம் விழிப்பார்?”
“பல நாட்களுக்கு ஒரு முறைதான் அவர் கண் விழிப்பார். நிரந்தர மௌனி என்றே கூறுகிறார்கள் அவர் யாரிடமும்
பேசுவதே கிடையாது. ஹரஹரமகா தேவ் அப்டின்னு தியானத்துக்கு முன்னே, அது கலைஞ்சதும்
சொல்லுவாரு. வேற எதுவும் பேச மாட்டாரு.”
“அப்போது ஏன் அவரோடு இருக்கிறீர்கள்? ரசவாதம் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ளவே
போவதில்லையே?” பைரவன் தொடர்ந்து மொழிபெயர்த்தபடியே வந்தான். விவசாயி பதில்
கூறவில்லை. “எதற்காகத்தான் அவரோடு இப்படி இரவு பகல் இருக்கிறீர்கள்?”
“ரசவாதத்துக்காக யாருமே அவரோடு இருக்கவில்லை” என்றார் விவசாயி. பைரவன் மொழிபெயர்த்தான்.
ஆர்தர்.
சாமியார் தியானம் கலையவில்லை. ஏனையர் அவனைப் பார்த்து உதட்டின் மேல் விரலை வைத்து,
“சத்தம் போடாதே” என சமிக்ஞை செய்தனர்.
சில நொடிகள் கழித்து விவசாயி, “கலம் உமி தின்னா ஒரு அவிழ் தட்டாதானுதான்” என்றார்.
அதை பைரவனால் மொழிபெயர்க்க முடியவில்லை.