மகாத்மா காந்தி கொலை வழக்கு – சாவர்க்கரின் வாக்குமூலம் (பகுதி 3) | தமிழில்: ஜனனி ரமேஷ்பகுதி 3

11) ப்ராசிக்யூஷன் சமர்ப்பித்த ஆவணச் சான்று என்றழைக்கப்படும் மேற்கண்ட பகுப்பாய்வு, கோட்சே மற்றும் ஆப்தே ஆகியோர் மகா சபா தொடர்பான பணிகளுக்கு மட்டுமே என்னுடன் இணைந்திருந்ததைச் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் இந்து மகா சங்கடான் பணிகளில் என்னுடன் இணைந்திருந்த ஆயிரக் கணக்கான பெரிய மற்றும் சிறிய மனிதர்களுள் கோட்சே மற்றும் ஆப்தே ஆகிய இருவரும் அடங்குவர். அவ்வளவே. அவர்கள் இருவரும் சிறப்பாகத் தேர்ந்தெடுக்கப்படவும் இல்லை, பிரத்யேகமாக நம்பப்படவும் இல்லை. இருவரும் என் மீது வைத்திருந்த அதே மதிப்பையும், மரியாதையையும், அவர்களைப் போலவே இந்தியா முழுவதும் ஆயிரக் கணக்கான தலைவர்களும், தொண்டர்களும் என் மீது கொண்டிருந்தனர். தேசப்பற்றுடனும், சட்டப்படியும், மகா சபா மற்றும் அதன் செயல்பாடுகளுக்காக மட்டுமே அவர்களுடன் நான் இணைந்திருந்தேன் என்ற செய்தியைத் தவிர, வேறெதற்காகவும், நேரடியாகவோ, குறிப்பாகவோ எந்தவொரு சொல்லும் கோட்சேவும், ஆப்தேவும், எனக்கு எழுதிய 25 கடிதங்களில் இடம் பெறவில்லை. அப்படி இருக்கையில் இந்தச் சட்டப்பூர்வ இணைந்த செயல்பாட்டை கிரிமினல் குற்றத்துக்கான ஆதாரபூர்வ சாட்சியாக என் மீது ப்ராசிக்யூஷன் தரப்பு குற்றம் சுமத்த முனைவது அநீதி, அக்கிரமம் மற்றும் அநியாயம் ஆகும். இப்பிரச்சினை எனது வாக்குமூலத்தில் தனியாக விவாதிக்கப்படும்.

(12) பேட்ஜ் சாட்சி (பி.டபிள்யூ.57)

(A) சாவர்க்கருடனான முதல் சந்திப்பு குறித்து பேட்ஜ் கூறியது அவரது வாக்குமூலம் பக்கம் 199ல் இடம் பெற்றுள்ளது. ‘1944-45ல் பம்பாய் கவாலியா டேங்க் பகுதியில் நடைபெற்ற கூட்டத்துக்குச் சென்ற பிறகு சாவர்க்கர் சதனில் இருந்த சாவர்க்கரைச் சந்திக்கப் போனவர்களுள் நானும் ஒருவன். தனிப்பட்ட முறையில் நடைபெற்ற கூட்டத்தில் தத்யாராவ் உரையாற்றினார். பிறகு “சாஸ்திரா பண்டார் உரிமையாளர் என்று தத்யாராவிடம் அறிமுகம் செய்து வைக்கப்பட்டேன். அவர் எனது வேலையைப் பாராட்டியதுடன் தொடர்ந்து பணியாற்ற ஊக்கப்படுத்தினார்.

முதலாவதாக என் மீது கிரிமினல் குற்றம் சாட்டும் வகையில் எதுவுமே இதில் இல்லை. அந்த நேரத்தில் பேட்ஜ் (1944-45) உரிமம் தேவைப்படாத ஆயுதங்களை மட்டுமே விற்பனை செய்வதாகவும், அவற்றைச் சட்டப்படி வைத்துக் கொள்ளலாம் என்றும் சொன்னார் (பி.டபிள்யூ.57 பக்கம் 228, 229). பராக்சிக்யூஷன் தரப்பு சமர்ப்பித்த., சாவர்க்கருக்கு பேட்ஜ் எழுதிய இரு கடிதங்களுமே பேட்ஜ் சட்டப்படி விற்பனை செய்யத்தக்க ஆயுத வணிகத்தில்தான் ஈடுபட்டுக் கொண்டிருந்தார் என்பதை உறுதிப்படுத்தும். இந்த நீதிமன்றம் முன்பு தனது வாக்குமூலத்தில் அவர் கூறுவதாவது (பி.டபிள்யூ 57 பக்கம் 242) ‘சாஸ்திரா பண்டார் அறிக்கையை அனுப்ப விரும்பியதால் தத்யாராவுக்குக் கடிதங்கள் அனுப்பினேன். அறிக்கை சரிதான். அதுவரை அதாவது 1943 வரை… நான் பிஸ்டலைப் பார்த்து கூட இல்லை. 1947 வரை உரிமம் தேவையில்லாத ஆயுதங்களின் வணிகத்தில் மட்டுமே நான் ஈடுபட்டு வந்தேன். 1947 மத்தியில்தான் முதல்முதலில் ரிவால்வரைப் பார்த்தேன். பிறகு பிஸ்டல், வெடிமருந்து உள்ளிட்ட ஆயுத வணிகத்தில் இறங்கினேன். ஆயுதங்களை விற்பனை செய்ததாகத் தன் மீது வழக்குத் தொடுக்கப்பட்டதாகவும் ஆனால் உரிமம் தேவைப்படாத ஆயுதங்களை விற்பனை செய்ததால் தன் மீதான வழக்குத் தள்ளுபடியாகி விடுதலை ஆனதாகவும் தனது வாக்குமூலம் பக்கம் 229ல் பேட்ஜ் மீண்டும் தெரிவிக்கிறார்.

எனவே பேட்ஜ் என்னைச் சந்தித்த போது அவர் ஆயுதங்கள் விற்பதை நான் பாராட்டியதாகச் சொன்ன அவரது குற்றச்சாட்டு உண்மையாக இருந்தாலும் கூட அது ஆட்சேபகரமாகத் தோன்றவில்லை. அப்போதும் அதற்கும் பிறகும் 1947 மத்தி வரை அவர்கள் உரிமம் பெற்ற ஆயுதங்களையே விற்று வந்தார். இதைப் ப்ராசிக்யூஷன் தரப்பு சாட்சியே உறுதிப்படுத்தி உள்ளது.

இரண்டாவதாக, இந்து மகாசபாவே ஆயுதங்கள் சட்டத்தை ரத்து செய்வதுடன், இங்கிலாந்தைப் போல ராணுவப் பயிற்சி அளிக்கப்பட வேண்டும் என்றும், ஆயுதங்கள் விற்பனை செய்ய உரிமம் அளிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி வந்துள்ளது. இது சட்ட ரீதியானது என்பதால் இந்த இயக்கத்துக்கு நானே தலைமை வகித்தேன்.

(B) சாவர்க்கர் சதன் கூட்டத்தில் பேட்ஜ் பங்கேற்றதாகச் சொல்லப்படும் நிகழ்வு குறித்த விவரம் 200ம் பக்கத்தில் உள்ளது. அதில் பேட்ஜ் கூறுவதாவது: ‘1946 இறுதியில் அல்லது 1947 தொடக்கத்தில் தாதரிலுள்ள சப்பிதாஸ் உயர்நிலைப் பள்ளியில் நடந்த சம்மேளனத்துக்கு முன்போ, பின்போ இது நடைபெற்றது. சாவர்க்கர் சதனுக்குச் சென்ற 40-50 நபர்களுள் நானும் ஒருவன். அங்கு நடைபெற்ற கூட்டத்தில் “காங்கிரஸ் கொள்கை இந்துக்களுக்கு விரோதமானது. பொருளாதார ரீதியாக முஸ்லிம்கள் புறக்கணிக்கப்பட வேண்டும். ஒருவேளை அவர்கள் தாக்கினால் இந்துக்கள் பதிலடியாகத் திருப்பித் தாக்க வேண்டும். எனவே இந்துக்களுக்கு ஆயுதப் பயிற்சி அவசியம் என்றார். (பி.டபிள்யூ.57 பக்கம் 200).

பேட்ஜ் கூறுவது ஒருவேளை உண்மை என்று வைத்துக்கொண்டாலும்கூட, அந்தக் கூட்டத்துக்கும் இந்தச் சதி வழக்குக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இந்து – முஸ்லிம் குறித்துப் பேசியதாகவும், முஸ்லிம்கள் தாக்கினால் இந்துக்கள் திருப்பித் தாக்க வேண்டும் என்று நான் கூறியதாகவும் சொல்லப்படுகிறது. தற்காப்புக்காக இதைச் செய்வது முறையானதும், சட்டப்படி சரியானதும் ஆகும். ஆனால் அமைதியாக இருக்கும் முஸ்லிம்களைத் தாக்க வேண்டுமென நான் சொன்னதாகக் குற்றம் சுமத்தப்படவில்லை. அவ்வாறு கூறியிருந்தால் அது ஆட்சேபகரமானதாகும். மொத்தத்தில் பேட்ஜ் வாக்குமூலம் எந்த வகையிலும் என்னைக் குற்றவாளி ஆக்காது என்பதுடன் என் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ள இந்தக் குறிப்பிட்ட சதிக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆனால் உண்மை விவரம் என்னவெனில் என் வீட்டில் அதுபோல் எந்தவொரு கூட்டமும் நடைபெறவில்லை என்பதுடன் எந்தவொரு உரையையும் நான் நிகழ்த்தவும் இல்லை. பேட்ஜ் கூறியவை அனைத்தும் ஆதாரமற்றவை.

(C) தனது வாக்குமூலத்தில் பேட்ஜ் சொன்ன மூன்றாவது நிகழ்வு (பி.டபிள்யூ.57 பக்கம் 200) என்னவெனில், பர்மேகர் மற்றும் பக்காலே ஆகியோர் பணி தொடர்பாக சாவர்க்கர் சதனில் நடைபெற்ற மற்றுமொரு இந்து சபா ஊழியர்கள் கூட்டத்தில் அவர் பங்கேற்றதுடன், சாவர்க்கர், டாக்டர் மூஞ்சே மற்றும் பலருடன் அவர் (பேட்ஜ்) நிழற்படம் எடுத்துக் கொண்டார் என்பதுதான். இவ்வளவுதான் விஷயம். குறுக்கு விசாரணையில் பேட்ஜ் மேலும் கூறுகையில் (பேட்ஜ் வாக்குமூலம் பக்கம் 250) பர்மேகர் மற்றும் பக்காலே ஆகிய இருவரும் அந்த நேரத்தில் இந்து அகதிப் பணிகளை மேற்கொண்டிருந்தனர் என்றும் பம்பாயில் நடைபெற்ற இந்து – முஸ்லிம் கலவரங்களின் போது இந்துப் பயணிகளின் பாதுகாப்பைக் கவனித்துக் கொண்டிருந்தனர் என்றும் தெரிவுத்துள்ளார் (பேட்ஜ் வாக்குமூலம் பக்கம் 229). ஆகவே முறையான மற்றும் சட்டப்படியான அகதிகள் பணி தொடர்பான கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தத்தில் எந்த ஆட்சேபணையும் இருப்பதாகத் தெரியவில்லை. இந்தக் கூட்டம் பற்றி பேட்ஜ் பிறிதொரு வார்த்தை கூட அதிகம் சொல்லவில்லை. ஆகவே அவரது இந்த வாக்குமூலம் ஒன்றே ஆபத்து இல்லாதது என்பதுடன் சதி வழக்கில் முக்கிய அம்சமாக இடம் பெறத்தக்க அளவில் எந்தத் தொடர்பும் இல்லை என்பது உறுதியாகி உள்ளது.

(D) வாக்குமூலத்தில் (பக்கம் 203) பேட்ஜ் சொன்ன நான்காவது முக்கிய நிகழ்வு, ‘ஆப்தேவும், கோட்சேவும், நானும், (பேட்ஜ்) சாவர்க்கர் சதனுக்குச் சென்றோம். அவரது வீட்டை அடைந்தவுடன் ஆப்தே என் கையிலிருந்த பையை வாங்கிக் கொண்டு என்னை வெளியே நிற்கச் சொன்னார். ஆப்தேவும், கோட்சேவும் உள்ளே சென்றனர். 5 அல்லது 10 நிமிடங்களுக்குப் பிறகு இருவரும் வெளியே வந்த போது ஆப்தே கையில் பை இருந்தது. பின்னர் ஒரு காரில் அவர்கள் தீக்ஷித் மகராஜைப் பார்க்கச் சென்றனர். இது நடந்த தேதி 1948 ஜனவரி 14 நேரம் இரவு மணி 9க்கு.

முதலாவதாக, இதில் பேட்ஜ் என் பெயரை எங்கேயும் குறிப்பிடவில்லை. ஆப்தேவும், கோட்சேவும், சாவர்க்கர் சதனில் 5 முதல் 10 நிமிடங்கள் மட்டுமே தங்கியிருந்தனர் என்பதும் இதிலிருந்து தெரிய வருகிறது. சாவர்க்கர் சதனுக்கு வருகை தருவது என்றால் சாவர்க்கரைச் சந்திக்கத்தான் வர வேண்டும் என்று அர்த்தமில்லை. தரை தளத்தில் வசித்த தாம்லே, பிட்டே, கஸர் ஆகியோருடன் ஆப்தேவுக்கும், கோட்சேவுக்கும் நல்ல பழக்கம் உண்டு. இந்தத் தகவல்களை பேட்ஜே தனது வாக்குமூலத்தில் (பக்காம் 223, 230) பதிவு செய்துள்ளார். எனவே ஆப்தேவும், கோட்சேவும் தரை தளத்தில் வசித்துக் கொண்டிருந்த தனது நண்பர்களையும், உடன் பணியாற்றும் ஊழியர்களையும் பார்க்கச் சென்றிருப்பார்கள் அல்லது தொலைபேசியில் உரையாடச் சென்றிருப்பார்கள் அல்லது இந்து மகாசபா படிப்பறையில் படித்துக் கொண்டிருக்கும் ஏனைய இந்து மகாசபா ஊழியர்களைப் பார்க்கச் சென்றிருப்பார்கள். இருவருமே உள்ளே வந்த 5-10 நிமிடங்களில் கிளம்பிவிட்டார்கள்.

வெளியே வரும் போது ஆப்தேவிடம் பை இருந்ததாக பேட்ஜ் தெளிவாகக் கூறியிருக்கிறார். ஆப்தே பையை வைப்பதற்காக உள்ளே சென்றார் என்று நிரூபிக்க பேட்ஜ் வாக்குமூலத்தில் ஒரு வார்த்தை கூட இல்லை. மேலும் அந்தப் பையை இருவரும் தீக்ஷித் மகராஜ் வீட்டில் அன்று இரவே வைத்தததையும் பேட்ஜ் தெளிவாக ஒப்புக் கொண்டுள்ளார்.

இரண்டாவதாக, பேட்ஜுடனும் பையுடனும் சாவர்க்கர் சதனுக்குச் செல்லவே இல்லை என்று ஆப்தேவும், கோட்சேவும் மறுத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

மூன்றாவதாக, இந்த நிகழ்வை நிரூபிக்கப் ப்ராசிக்யூஷன் தரப்பு எந்தத் தனிப்பட்ட ஆதாரத்தையும் சமர்ப்பிக்கவில்லை. எனவே ‘பேட்ஜ் மற்றும் பை என்னும் இந்த முழுக் கதைக்கு எந்த ஆதாரபூர்வ மதிப்பும் இருக்க முடியாது.

(E) வாக்குமூலத்தின் 205ம் பக்கத்தில் பேட்ஜ் கூறிய ஐந்தாவது நிகழ்வு ஆப்தே, கோட்சே மற்றும் பேட்ஜ் ஆகியோரிடையே 1948 ஜனவரி 15ம் தேதி நடைபெற்ற உரையாடல் குறித்ததாகும். அதில் பேட்ஜ் பதிவு செய்துள்ளதாவது: ‘ஆப்தேவும், கோட்சேவும், நானும், தீக்ஷித் மகராஜ் வீட்டிலிருந்து வெளியே வந்து கோயிலின் சுற்றுச்சுவர் அருகே நின்று கொண்டிருந்தோம். அவர்களுடன் தில்லிக்குச் செல்லுமாறு ஆப்தே என்னிடம் கூறினார். அங்கே என்ன வேலை என்று கேட்டேன். காந்திஜி, நேருஜி, சூராவார்டி ஆகிய மூவரையும் தீர்த்துக் கட்டத் தத்யாராவ் முடிவு செய்துள்ளதாகவும், அந்தப் பணி தங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் ஆப்தே என்னிடம் கூறினார்.

முதலாவது, இது வெறும் செவி வழிச் செய்திதான். சாவர்க்கர் (தத்யாராவ்) இது பற்றிச் சொன்னதை பேட்ஜ் நேரடியாகக் கேட்கவில்லை. காந்திஜி, நேருஜி, சூராவார்டி ஆகிய மூவரையும் தீர்த்துக் கட்டத் தத்யாராவ் முடிவு செய்துள்ள விவரத்தை ஆப்தேவிடம் அவரே சொன்னதையும் பேட்ஜ் நேரடியாகக் கேட்கவில்லை. சாவர்க்கர் சொன்னதாக ஆப்தேதான் மேற்கண்ட அனைத்தையும் பேட்ஜிடம் கூறியிருக்கிறார்.

இரண்டாவதாக, பேட்ஜ் உண்மையைத்தான் சொல்கிறார் என்றே வைத்துக் கொண்டாலும், தன்னிடம் ஆப்தேதான் சொன்னார் என்று அவர் கூறும்போது, பேட்ஜிடம் ஆப்தே சொன்னது உண்மையா பொய்யா என்ற கேள்வி எழுவதையும் தவிர்க்க முடியாது. காந்தி, நேரு மற்றும் சூராவார்ட் ஆகிய மூவரையும் தீர்த்துக்கட்ட ஆப்தேவிடம் நான் சொன்னேன் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. இந்து சங்கடான் மீது சாவர்க்கருக்கு உள்ள செல்வாக்கைத் தனது சொந்த நலன்களுக்குத் தவறாகப் பயன்படுத்த ஆப்தே இந்தப் பொல்லாத பொய்யைக் கண்டுபிடித்திருக்கலாம். இதுபோன்ற நேர்மையற்ற தந்திரங்களைச் செய்யும் பழக்கமுள்ளவர் ஆப்தே என்பதைப் ப்ராசிக்யூஷன் தரப்பே அறியும். உதாரணத்துக்கு ஹோட்டலில் தங்கும் போதும், சட்டத்துக்குப் புறம்பான வகையில், உரிமம் இல்லாத ஆயுதங்களையும், வெடி மருந்துகளையும் விற்பதற்காக அவற்றை ரகசியமாகத் திரட்டிய போதும், ஆப்தே பொய்யான பெயர்களையும், பொய்யான முகவரிகளையும் தந்துள்ளார் என்பதும் ப்ராசிக்யூஷனுக்கு நன்கு தெரியும்.

மூன்றாவதாக, ஆப்தேவும், கோட்சேவும் என்னைப் பற்றிய எந்தப் பொய்களையும் பேட்ஜிடம் சொல்லவில்லை என்று உறுதியாக மறுத்துள்ளனர். அப்ரூவராகித் தன்னைக் காப்பாற்றிக் கொள்ளவும், மன்னிப்புக் கோரவும், காவல் துறையின் அழுத்தம் காரணமாக அவர்களைத் திருப்திப்படுத்தி நன்மதிப்பைப் பெறவும், உண்மையோ, பொய்யோ என்னை இந்த வழக்கில் குற்றவாளியாக்க ஏதோவொரு சாட்சியைக் காவல்துறை தீவிரமாகத் தேடிக் கொண்டிருப்பது பேட்ஜுக்குத் தெரியும் என்பதால் அவர் இந்தப் பொய்களைக் கூறியுள்ளார்.

நான்காவதாக, ப்ராசிக்யூஷன் கோணத்தில் பேட்ஜ் வாக்குமூலத்தின் இந்தப் பகுதி மட்டுமே என்னைப் பொருத்த வரையில் முக்கிய அம்சம் என்று கருதுகிறேன். ஆனால் அப்ரூவரின் வாக்குமூலத்தின் முக்கிய அம்சங்கள் தனிப்பட்ட மற்றும் நல்ல சான்றுடன் உறுதிப்படுத்தப்பட்டால் மட்டுமே நம்பகத்தன்மையைப் பெறும். ஆனால் எனக்கு எதிரான பேட்ஜ் வாக்குமூலத்தின் முக்கியப் பகுதி, ப்ராசிக்யூஷன் தரப்பு சமர்ப்பிக்கும் வகையில், எந்தவொரு தனிப்பட்ட மற்றும் நல்ல சான்றுடன் உறுதிப்படுத்தப்படவில்லை.

(F) பேட்ஜ் கூறிய ஆறாவது நிகழ்வு 1948 ஜனவரி 17 அன்று நடைபெற்றது. அவரது வாக்குமூலத்தில் (பக்கம் 207) கூறுவதாவது: ‘கோட்சே, ஆப்தே, நான் (பேட்ஜ்) மற்றும் சங்கர் ஒரு வாடகை வண்டியைப் பயணித்தோம். அப்போது கோட்சே “கடைசியாக ஒரு முறை தத்யாராவைத் தரிசித்துவிட்டு வருவோம் என்று சொல்லவே சாவர்க்கர் சதனுக்கு வண்டி சென்றது. சுற்றுச்சுவருக்கும் வெளியே சங்கரைக் காத்திருக்கச் சொல்லிவிட்டு நாங்கள் மூவரும் சாவர்க்கர் வீட்டுக்குள் நுழைந்தோம். தரை தளத்திலுள்ள அறையில் காத்திருக்குமாறு ஆப்தே என்னிடம் (பேட்ஜ்) கூறினார். பிறகு கோட்சேவும், ஆப்தேவும் மாடிக்குச் சென்றனர். 5 – 10 நிமிடம் கழித்து இருவரும் கீழிறங்கினர். இவர்கள் இருவரைத் தொடர்ந்து தத்யாராவும் கீழே இறங்கினார். கோட்சே மற்றும் ஆப்தேவிடம் ‘வெற்றிகரமாகத் திரும்பி வாருங்கள் என்ற வார்த்தைகளைத் தத்யாராவ் கூறினார். பிறகு நாங்கள் நால்வரும் வாடகை வண்டியில் ஏறி சாவர்க்கர் இல்லத்தை விட்டு ருயா கல்லூரியை நோக்கிச் சென்றோம். வண்டியில் சென்று கொண்டிருக்கும் போது ‘காந்திஜியின் நூறாண்டு வாழ்க்கை முடிந்து விட்டது என்று தத்யாராவ் சொன்னதாக ஆப்தே என்னிடம் கூறினார். மேலும் நமது வேலை வெற்றிகரமாக முடியும் என்பதில் எனக்குச் சந்தேகமே இல்லை என்று சொன்னதாகவும் கூறினார். பிறகு அஃப்சல்புர்கர் வீடு உள்படச் சென்றனர்…

முதலாவதாக, 1948 ஜனவரி 17ம் தேதி அல்லது வேறு எந்தத் தேதியிலும், ஆப்தேவும், கோட்சேவும் என்னைச் சந்திக்கவே இல்லை என்பதைத் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் ‘வெற்றிகரமாகத் திரும்பி வாருங்கள் என்று அவர்களிடமும், ‘காந்திஜியின் நூறாண்டு வாழ்க்கை முடிந்து விட்டது என்று ஆப்தேவிடமும் அல்லது வேறு யாரிடமும் நான் சொல்லவே இல்லை.

இரண்டாவதாகப், பேட்ஜ் தனது வருகை குறித்துச் சொன்னது உண்மையாகவே இருந்தாலும், என் வீட்டின் தரைத் தளத்தில் அமர்ந்து கொண்டதையும், ஆப்தேவும், கோட்சேவும், மட்டுமே மாடிக்குச் சென்றதையும் ஒப்புக் கொள்கிறார். ஆகவே இருவரும் என்னைப் பார்த்திருக்க இயலுமா அல்லது பார்த்தார்களா அல்லது முதல் மாடியில் வாடகைக்குக் குடியிருப்பவர் குடும்பத்தினர் யாரையேனும் சந்தித்துவிட்டுக் கீழே இறங்கினாரா என்பன எதுவுமே அவருக்கு (பேட்ஜ்) நிச்சயமாகத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆப்தேவும், கோட்சேவும் என்னைச் சந்தித்துப் பேசினார்கள் என்று பேட்ஜ் சொல்வதை ஒருவேளை ஏற்றுக் கொண்டாலும், நாங்கள் என்ன பேசிக் கொண்டோம் என்ற விவரம் தனிப்பட்ட முறையிலோ, நேரடியாகவோ அவருக்குத் தெரிந்திருக்க முடியாது. காரணம், தரைத் தளத்தில் உட்கார்ந்திருந்தேன் என்று பேட்ஜ் ஒப்புக் கொண்ட நிலையில் மாடியில் நடந்த நிகழ்வுகளை அவரால் பார்த்திருக்கவும் முடியாது, கேட்டிருக்கவும் முடியாது. ஆப்தேவும், கோட்சேவும் தனியாக மாடிக்குச் சென்றதாலேயே அவர்கள் இருவரும் என்னுடன் சதிவேலை தொடர்பான கிரிமினல் விஷயங்களைத்தான் பேசியிருப்பார்கள் என்ற முடிவுக்கு வருவது முற்றிலும் அபத்தமாகும். சதித்திட்டம் தவிர்த்து வேறு எதைப் பற்றி வேண்டுமானாலும் கூடப் பேசியிருக்கலாம்.

அன்றைய தினம் பேட்ஜ், ஆப்தே மற்றும் கோட்சே ஆகியோர் அதே காரில் பம்பாயிலுள்ள பலரை, காந்திஜியைக் கொல்லும் சதித் திட்டம் தவிர்த்துப், பல்வேறு காரணங்களுக்காகச் சந்தித்து பல்வேறு பணிகளுக்காப் பேசியிருப்பதைப் ப்ராசிக்யூஷன் தரப்புச் சாட்சியே உறுதிப்படுத்துகிறது. உதாரணத்துக்கு, அஃப்சல்பூர்கரைச் சந்தித்து நிஜாம் சிவில் எதிர்ப்பு இயக்கம் தொடர்பாகப் பேசியதுடன் அதற்கான பணத்தையும் பெற்றுக் கொண்டதாக ப்ராசிக்யூஷன் சாட்சியான அஃப்சல்புர்கரே வாக்குமூலம் அளித்துள்ளார். பின்னர் துணிகளுக்குச் சாயம் போடும் நிறுவன உரிமையாளர் சேத் சரண்தாஸ் மேகாஜியைத் தனியாகச் சந்தித்த ஆப்தே அவரிடம் நிஜாம் சமஸ்தானம் சிவில் எதிர்ப்பு பற்றி மட்டுமே பேசியதுடன் அதற்கான பணத்தையும் பெற்றுக் கொண்டார் (ப்ராக்சிக்யூஷன் தரப்புச் சாட்சி சேத் சரண்தாஸ் மேகாஜி வாக்குமூலத்தைப் பார்க்கவும்). பிறகு நடுவே குர்லாவுக்குச் சென்று பட்வர்த்தன், பதங்கர், காலே (பி.டபிள்யூ.86 பக்கம் 418) ஆகியோரைச் சந்தித்துப் பேசி அவர்களிடமும் ‘அக்ரணி தினசரி பத்திரிகை மற்றும் ‘ஹிந்து ராஷ்ட்ர பிரகாஷன் ஆகியவற்றுக்குப் பணம் பெற்றுக் கொண்டனர். எனவே ஒருவேளை ஆப்தே மற்றும் கோட்சே ஆகிய இருவரும் மாடியில் சாவர்க்கரைச் சந்தித்து, அப்படியே ஒருவேளை சந்தித்திருந்தால், ‘ஐதராபாத் நிஜாம் சிவில் எதிர்ப்பு அல்லது ‘அக்ரணி நாளிதழ் அல்லது ‘ஹிந்து சபா பணிகள் அல்லது அவரது ‘உடல்நிலை குறித்து விசாரித்துவிட்டுத் திரும்பி இருக்கலாம். நாள் முழுவதும் அவர்கள் மற்றவர்களிடம் இவை பற்றித்தான் பேசிக் கொண்டிருந்தனரே தவிர சதித்திட்ட கிரிமினல் விஷயங்கள் எதுவுமே பேசவில்லை என்பதைப் ப்ராசிக்யூஷன் தரப்பு வாக்குமூலமே நிரூபித்துள்ளது.

(தொடரும்)


அந்தமானில் இருந்து கடிதங்கள் (கடிதம் 2) – சாவர்க்கர் | தமிழில்: VV பாலா


(புகைப்படம் நன்றி: சாவர்க்கர் ஸ்மார்க்)
இரண்டாவது கடிதம்
அன்புள்ள சகோதரா!
18 மாதங்கள் கழித்து எனக்கு பேனாவையும் மையையும் தொடும் வாய்ப்பு இப்போதுதான் கிடைத்திருக்கிறது. இதே நிலை தொடர்ந்தால் எனக்கு எழுதுவதே மறந்து போகும் நிலை கூட வரலாம். இந்தத் தாமதம் உன் ஏக்கத்தை அதிகரித்திருக்கும். ஆனால் ஜூலை மாதம் நம் அன்பிற்குரிய பாபா அவர்களின் கடிதம் உனக்குக் கிடைத்திருக்கும். அதனால் ஒரே நேரத்தில் இரு கடிதங்களையும் அனுப்பாமல் இடைவெளி விட்டு அனுப்பினால் உனக்கும் அது மனதுக்கு ஆறுதலாக இருக்கும் என்று நினைத்தேன். நீ மருத்துவப் படிப்பு சேர்ந்து நன்றாகப் படித்துக் கொண்டிருக்கிறாய் என்பதை அறிந்து எனக்கு மகிழ்ச்சி. உனக்கு அந்தப் படிப்பு பிடித்திருக்கிறதா? என்னைப் பொருத்தவரையில் அது ஒரு புனிதமான படிப்பு. நீ மருத்துவம் மட்டுமில்லாமல் உடற்கூறு அறிவியலையும் உன்னுடைய விசேட பாடமாக எடுத்துப் படித்தால் நன்று. இதனை ஒரு தொழிலாகக் கருதாமல் சேவையாகக் கருது. இதன் மூலம் தொண்டாற்ற நிறைய வாய்ப்புகள் கிடைக்கும். ஆப்பிரிக்கப் பழங்குடி மக்கள் முதல் நாகரிக மேன்மக்கள் வரை எல்லோரும் மதிக்கும் பணி இது. ஆத்மா குடியிருக்கும் கோவிலான உடலைப் பற்றிய படிப்பு. ஆத்மாவைப் பற்றிய படிப்பிற்கு அடுத்தபடியாக முக்கியத்துவம் வாய்ந்தது.
உன்னுடைய சென்ற வருடப் புத்தக தேர்வுகள் மிகச் சிறப்பாக இருந்த. மொரோபந்த், பாரத், விவேகானந்தர், எல்லாம் தரமான புத்தகங்கள். நான் கேட்ட புத்தகங்களில்ஜேய மீமாம்சம் மற்றும்அஜேய மீமாம்சம் மட்டும் வரவில்லை. என்ன காரணம்? நான் இந்த வருடத்திற்கு ஒரு பட்டியல் அனுப்பி இருக்கிறேன். ஆனால் எனக்குப் புத்தகங்கள் வாங்குவதற்காகப் பத்து ரூபாய்க்கு மேல் செலவு செய்யவேண்டாம். ஒருவேளை நான் கொடுத்த பட்டியலின் விலை அதற்கு மிகுமானால் கடைசியில் உள்ள புத்தகங்களைத் தவிர்த்து விடு. எல்லாமே புதுப் புத்தகங்களாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. பழைய புத்தகங்கள் கிடைத்தாலும் வாங்கி அனுப்பு.
உனக்கு பெங்கால் பிடித்திருக்கிறதா? நவராத்திரி பண்டிகை விடுமுறை முடிந்து நீ பெங்கால் திரும்பியதும் கிட்டத்தட்ட பெங்காலி பாபுவாகவே மாறியிருப்பாய் என்று நினைக்கிறேன். மராத்தி மொழி நினைவிருக்கிறதா? வேறு எதையும் இழக்காமல் பார்த்துக் கொள். அந்த புத்திசாலி பெங்காலிகள் உன் இதயத்தைத் திருடி விடுவார்களோ என்று எனக்கு அச்சமாக இருக்கிறது. ஒரு பெங்காலி என் சகோதரனின் மனைவியாக அமைந்தால் எனக்கும் சந்தோஷமே. பல மாகாணங்களில் இருக்கும் ஹிந்துக்கள் இப்படித் திருமண உறவு கொள்வது நல்லது என்று நான் நினைக்கிறேன். அதே நேரம் ஹிந்துக்கள் ஐரோப்பியர்களை மணப்பது இந்தத் தருணத்தில் நம் தேசத்திற்கு நல்லதல்ல என்றும் நான் நினைக்கிறேன்.
எனதருமை பால் (Bal), என்னைப் பற்றியும் கொஞ்சம் சொல்கிறேன். என் உடல் நிலை தற்போது சீராக இருக்கிறது. இந்தச் சிறைக்கு வந்த பிறகு என்னுடைய உடம்பிற்கு எந்தப் பெரிய பிரச்சினையும் வரவில்லை. இங்கு வரும்போது என்ன எடை இருந்தேனோ அதே எடையை இப்போதும் தக்க வைத்துக் கொண்டிருக்கிறேன். உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் நான் ஆரோக்கியமாக இருக்கிறேன். ஒரு சில விஷயங்களில் வெளியில் இருக்கும்போது இருந்ததை விட இங்கு நன்றாகவே இருக்கிறேன். சிறை ஒரு ஆளை நன்றாகவும் ஆக்கும், சீரழிக்கவும் செய்யும். யாரும் இங்கு வரும்போது எப்படி இருந்தார்களோ அதேபோல வெளியே செல்லும்போது இருக்க முடியாது. வெளியே வரும்போது மேலும் நன்றாகவோ அல்லது மேலும் மோசமாகவோதான் வருவார்கள். அதிர்ஷ்டவசமாக என்னுடைய மனம் இங்குள்ள சூழலுக்கு விரைவிலேயே பழகிக்கொண்டு விட்டது. வெளிப்புறத்தில் அமைதியில்லாமல் இருக்கும் இயற்கை சிறைக்குள்ளே அமைதியாக இருப்பது என்பது ஆச்சரியமான விஷயம்தான். ஆனால் இப்படிப்பட்ட சூழல் மாற்றங்களுக்கு நம் மனம் பழகிக்கொள்வது என்பது இயற்கை நமக்குக் கொடுத்த வரம் என்று நான் சொல்வேன்.
நான் அதிகாலையிலும் பிறகு மாலையிலும் சிறிது நேரம் பிராணாயாமம் செய்வேன். பிறகு நன்றாக உறங்குவேன். அப்படி உறங்குவது எனக்கு நல்ல ஓய்வைத் தருகிறது. மனம் மிகுந்த அமைதியை அடையும். காலையில் எழுந்திருக்கும் போதுதான் நாம் சிறையில் மரப்பலகையில் படுத்துக் கொண்டிருக்கிறோம் என்ற உணர்வே எனக்கு வரும். மனிதர்களுக்கே உரித்தான சாதாரண இலக்குகளும் ஆசைகளும் எனக்கு இப்போது குறைந்துகொண்டு வருகின்றன. நல்லதொரு கொள்கைக்காக உழைத்தோம் என்ற திருப்தி என் மனதுக்கு இருக்கிறது. அதனால் என் மனது சஞ்சலமில்லாமல் அமைதியாக இருக்கிறது. சில நேரம் விதிவிலக்குகள் இருந்தாலும் பொதுவாக என் மனநிலை இப்படித்தான் இருக்கிறது. உண்மையில் சொல்லப் போனால், திடீரென்று என்னை பம்பாய் அல்லது லண்டன் மாநகரத்தில் இறக்கிவிட்டால், ‘ஜனக்கூட்டத்தைப் பார்த்தால் தீப்பிடித்து எரியும் வீடு போல் இருக்கிறது என்று சாகுந்தலத்தில் வரும் ரிஷிகுமாரனுடன் நானும் சேர்ந்து கதற வேண்டி இருக்கும்.
நாம் கேள்விப்படும் புரளிகளை எல்லாம் வைத்து ஒருவேளை வெளியில் இருந்திருந்தால் நம் வாழ்க்கை மேலும் பயனுற இருந்திருக்குமோ என்ற எண்ணம் வரலாம். ஆனால் வெளியில் இருப்பவர்கள் அதிகம் வேலை செய்கிறார்களாக இருக்கலாம், ஆனால் உள்ளே இருப்பவர்கள் அதைவிட கூடுதலாக வேலை செய்துகொண்டு இருக்கிறார்கள் என்பதை நினைவில் கொள். என் அன்பிற்குரிய பால், இங்கு நாங்கள் படும் துன்பங்களும் தீவிரமான பணிக்கு ஈடானதுதான் என்பதையும் புரிந்துகொள்.
நான் அதிகாலை ஐந்து மணிக்கு மணி அடித்ததும் எழுந்து கொள்வேன். அதைக் கேட்டதும் எனக்கு நான் தோ கல்லூரியில் உயர்படிப்பு படிக்கின்றாற் போல ஒரு உணர்வு வரும். பிறகு காலை பத்து மணி வரையில் எங்களுக்குக் கடுமையான பணி  இருக்கும். என் கைகளும் கால்களும் கொடுக்கப்பட்ட வேலையைத் தன்னிச்சையாகச் செய்து கொண்டிருக்கும். என் மனமோ இங்குள்ள கண்காணிப்புகளை எல்லாம் தாண்டி கடல் மலை என்று ரம்மியமான விஷயங்களில் மட்டும், தேனைக் குடிக்கும் வண்டு போல அலைந்துவிட்டு வரும். அதன் பிறகு நான் சில வரிகளை எழுதுவேன். பிறகு பன்னிரண்டு மணிக்கு நாங்கள் மதிய உணவு உட்கொள்வோம். பிறகு மீண்டும் வேலை. நாலு மணி முதல் ய்வு. இந்த நேரத்தில் படிப்பேன். இதுதான் இங்குள்ள தினசரி வாழ்க்கை.
நம் தாய்நாடு எப்படி உள்ளது என்பதை உன் பதிலில் கூறு. காங்கிரஸ் ஒற்றுமையாக இருக்கின்றதா? 1910ல் அலஹாபாத்தில் செய்ததைப் போல வருடா வருடம் அரசியல் கைதிகளை விடுவிக்கவேண்டும் என்று தீர்மானம் போடுகிறார்களா? டாடா அல்லது கப்பல் நிறுவனம் அல்லது புதிய மில்கள் போன்று தேனும் ஸ்வதேசி நிறுவனங்கள் புதிதாக உருவாக்கி இருக்கின்றனவா? சீனக் குடியரசு எப்படி இருக்கிறது? ஒரு கனவு நனவானது போல இருக்கின்றது அல்லவா? இது வரலாற்றில் ஒரு முக்கியத் தருணம். சீனாவின் இந்த மாற்றம் ஒரு நாளில் வந்தது அல்ல. 1850ம் ஆண்டில் இருந்து அவர்கள் இதற்காகப் பாடுபட்டுகொண்டு இருக்கிறார்கள். சூரியன் உதிக்கும் வரை அது எங்கிருந்து வருகிறது என்பது நம் கண்களுக்குத் தெரியாது அல்லவா, அதுபோல. பெர்சியா, போர்சுகல், எகிப்து இவற்றின் நிலை எப்படி இருக்கின்றது? தென்னாப்பிரிக்காவில் உள்ள இந்தியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு இருக்கின்றனவா? புதிய கவுன்சில் மூலமாக ஏதேனும் முக்கியச் சட்டங்கள் இயற்றப்பட்டு உள்ளதா? உதாரணத்திற்கு உயர்திரு கோகலே அவர்கள் கொண்டு வந்த கல்வி மசோதா. நம் மதிப்பிற்குரிய திலகர் எப்போது விடுதலை செய்யப்படவிருக்கிறார்?
நீ என் கடிதத்தை எனது ஆருயிர் யமுனாவிடம் காண்பித்தாயா? அவளுக்கு எல்லாவற்றையும் மொழிபெயர்த்துக் கூறு. இன்னும் சில வருடங்கள்தான். அதிகபட்சம் ஐந்து வருடங்கள். அதன் பிறகு ஒரு புதிய விடியல் பிறக்கும். ஆகவே என் அருமை மனைவியே, எப்போதும் போல் உன் வாழ்க்கையை உன்னதமாக நடத்து. அன்பிற்குரிய அண்ணிக்கு என் மரியாதையும் நமஸ்காரங்களும். ஒரு தாயாக, சகோதரியாக, தோழியாக என்னை வாழ்த்திக்கொண்டிருப்பவர் அவர். என் நெஞ்சம் முழுக்க மற்றொருவரும் நிறைந்திருக்கிறார். சில காரணங்களுக்காக நான் இப்போது அவருடைய பெயரைக் கூற இயலாது. நான் அவர்கள் எல்லோருடைய நினைவாகவே எப்போதும் இருக்கிறேன் என்று அவர்களிடம் கூறவும். அவர்களை நான் எப்படி மறப்பேன்? சிறையில் இருக்கும் ஒருவனால் எதையும் மறக்க இயலாது. புதிய அனுபவங்கள் எதுவும் இல்லாதபொழுது மனது பழைய நினைவுகளிலேயே உழன்று கொண்டிருக்கும். எனவே சிறையில் இருக்கும்போது நம் நினைவில் இருப்பவை எல்லாவற்றையும் திரும்ப திரும்ப அசை போட்டுக் கொண்டிருப்போம். அதனால் மறந்து போனவர்களும் கூட நினைவுக்கு வருவார்கள். எனதருமை நண்பர்களே, சிறையில் நாங்கள் வற்றாத கண்ணீருடன் இருக்கிறோம். யாரேனும் வந்து ஆறுதலாகப் பேசி அன்புடன் எங்கள் கண்ணீரைத் துடைக்க மாட்டார்களா என்று ஏங்குகிறோம். சிறையில் இருக்கும்போது எப்படி என்னால் எதையும் மறக்க இயலும்? என் அன்பிற்குப் பாத்திரமானவர்கள் எல்லோரிடமும் என் அன்பான விசாரிப்பைக் கூறவும். ரத்த பந்தங்கள் சிலர்கூட நம்மை விட்டு வெட்கி விலகியபோது, கூட நம்முடன் இருந்து நமக்குப் பக்கபலமாய் இருந்தவர்களை நான் நன்றியுடன் நினைவுகூர்கிறேன் என்று கூறவும். சிறையில் இருந்து வரும் கடிதம் ஆதலால் இதில் யாருடைய பெயரையும் குறிப்பிடவில்லை என்பது அவர்களுக்கும் தெரியும். என் ஒரே சகோதரிக்கும் என்னுடைய ஒரே நம்பிக்கையான வசந்திற்கும் என்னுடைய ஆசிர்வாதங்களைக் கூறவும். மாமி, குட்டி சாம்பி ஆகியோரிடமும் விசாரித்ததாக கூறவும்.
இப்படிக்கு,

உன்னுடைய அன்பான சகோதரன்
தாத்யா.


மகாத்மா காந்தி கொலை வழக்கு – சாவர்க்கரின் வாக்குமூலம் (பகுதி 2) | தமிழில்: ஜனனி ரமேஷ்

(a) அக்ரணி அல்லது இந்து ராஷ்டிரம்
இந்தியாவிலுள்ள ஏனைய இந்து சங்கடன தலைவர்களைப் போலவே நானும் இந்தியாவிலுள்ள எல்லா மாகாணங்களிலும் புதிய மகாசபா தினசரிகளைத் தொடங்கும் அனைத்து முயற்சிகளுக்கும் ஊக்கமும் உதவியும் அளிக்க முயன்று வருகிறேன். அதேபோல் இந்து சித்தாந்தத்தைப் பரப்ப ஆப்தேவும், கோட்சேவும் மராத்தி தினசரியைத் தொடங்க நீண்ட காலமாகவே முனைந்ததுடன், இது தொடர்பாக எனது தார்மீக ஆதரவையும், நிதி உதவியையும் வலியுறுத்தி வந்தனர். பத்திரிகை தொடங்குவதற்குத் தேவையான தார்மீக ஆதரவையும், நிதி உதவியையும், முன்னணி மற்றும் பொறுப்புள்ள இந்துத் தலைவர்களிடமிருந்து அவர்கள் பெற்றது தெரிய வந்தவுடன், மூன்று நிபந்தனைகளின் அடிப்படையில் நானும் ரூ 15,000/- அளிக்க ஒப்புக்கொண்டேன்.
முதலாவதாக இந்த முன்பணம் கடனாகத் தரப்படுவதால், ஆப்தே மற்றும் கோட்சே இருவரும் கூட்டாக உறுதிப் பத்திரம் (Promissory Note) எழுதித் தர வேண்டும்; இரண்டாவதாக நிறுவனம் பதிவு செய்யப்பட்ட நிறுவனமாகப் (Limited Company) பதிவு செய்யப்பட வேண்டும்; மூன்றாவதாக நான் கொடுத்த கடன் அந்நிறுவனத்தில் பங்குத் தொகையாக மாற்றப்பட வேண்டும். இதனைத் தொடர்ந்து இருவருமே கூட்டாகக் கடன் பத்திரத்தை எழுதிக் கையெழுத்திட்டுத் தந்தனர். ‘இந்து ராஷ்ட்ர ப்ரகாஷன் லிமிடெட் என்ற பெயரில் லிமிடெட் நிறுவனமாகப் பதிவு செய்ததுடன் எனது கடனும் பங்குத் தொகையாக மாற்றப்பட்டது.
பிரபல மற்றும் வசதியான இந்துத் தலைவர்கள் ரூ 5000 முதல் ரூ 10000 வரை அளித்துள்ளது பதிவாகி உள்ளது. சேத் குலாப் சந்த் ஹீரா சந்த் (சிந்தியா ஸ்டீம் நேவிகேஷன் நிறுவனத்தின் சேத் வால்சந்த் ஹீராசந்த் சகோதரர்), போர் (Bhor) மாகாண முன்னாள் அமைச்சர் ஷிங்க்ரே, சங்க்லி மில் உரிமையாளரும் கோடீஸ்வரருமான விஷ்ணு பந்து வேலாங்கர், கோலாபூர் சினிமா பிரபலம் ஸ்ரீமான் பால்ஜி பெண்டார்கர், போர் (Bhor) மன்னர் ‘நகர் பூஷன் என்ற பட்டமளித்துக் கௌரவப்படுத்திய தோப்தே, ஸ்ரீமான் சந்திரசேகர் அகாஷே, பாராமதி ராவ் பகாதூர் ஷெம்பேகர், ஸ்ரீமான் சேத் ஜுகல்கிஷோர் பிர்லா (கோட்சே கடிதம் ஜி-74 டி.29 பார்க்கவும்) உள்ளிட்ட பலர் நிறுவனத்தின் மூலதனப் பங்குகளுக்குக் கணிசமான தொகையை அல்லது இந்து ராஷ்ட்ரத்த்துக்கு நன்கொடையை வழங்கி இருக்கின்றனர்.
மேற்கூறிய பத்தியில் காணப்படும் விவரங்கள் அனைத்தும் ப்ராக்ஷிக்யூஷன் தரப்பு சாட்சியில் உள்ளன (P.W. 57, பக்கங்கள் 233, 234, 243, 254; பி P.W. 60, பக்கம் 320; P.W. 86, பக்கம் 420 மற்றும் கோட்சே & ஆப்தே கடிதங்கள் பக்.277–பக்.293). அக்ரணி பத்திரிகைக்கு மட்டுமின்றி, விக்ரம் மற்றும் ஃப்ரீ இந்துஸ்தான் உள்ளிட்ட பல்வேறு பத்திரிகைகளுக்குத் தார்மீக ஆதரவையும், நிதி உதவியையும், இயக்கத்தின் தலைவர் என்ற முறையில் நான் வழங்கி வருவதாக கோட்சேவே ஒப்புக் கொண்டுள்ளார் (G.-70 பக்கம் 293 பார்க்கவும்).
மேற்கண்ட விவரங்களிலிருந்து அக்ரணி பத்திரிகைக்கு நான் உதவியதற்குக் காரணம் அது ஆப்தே – கோட்சே நிறுவனம் என்பதால் அல்ல என்றும், மகாசபா கட்சி பத்திரிகை என்பதால்தான் என்றும், அதற்கு நான் மட்டுமின்றி இந்து சங்கடனிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்த பொறுப்புள்ள கௌரவமிக்கத் தலைவர்களும் உதவி உள்ளனர் என்பதும் தெளிவு.
(b) அக்ரணி கொள்கை முழுவதும் கோட்சே மற்றும் ஆப்தேவின் கட்டுப்பாட்டில்
அக்ரணி பத்திரிகையை கோட்சேவும், ஆப்தேவும் சொந்தப் பத்திரிகையாக ஆரம்பித்ததைத் தொடர்ந்து பத்திரிகையின் கொள்கை முழுவதும் அவர்கள் கட்டுப்பாட்டில்தான் இருந்தது. இருப்பினும் பரவலாகப் பிரபலமடைவதற்காகப் பத்திரிகையின் முதன்மை ஆசிரியராக அல்லது நிறுவனராக அல்லது ஆதரவாளராக நான் இணைய வேண்டுமெனத் தொடர்ந்து அழுத்தம் கொடுத்தபோதும் நான் உடன்படவில்லை. எனது தலைமையில் உருவான இந்து மகாசபாவின், ‘சாவர்க்கர்–வாதம் என்று அவர்களால் அழைக்கப்படும் எண்ணங்களின் பிரதிநிதியாகவும், அதன் சார்பில் இந்தியா முழுவதும் பிரசாரம் மேற்கொள்ளும் எல்லாப் பத்திரிகைகளுக்கும் பொதுவான நலம் விரும்பியாகவும், ஆதரவாளராகவும் மட்டுமே இருப்பேன் என்று அவர்களிடம் தெளிவுபடுத்தினேன். இந்தப் பத்திரிகையைப் பொருத்தவரையிலும்கூட இந்த அடிப்படையில்தான் ஆதரவளிப்பேன் என்று சொன்னேன்.
அக்ரணி தினசரியில் எனது நிழற்படம்
இருப்பினும் இந்து மகாசபையின் தலைவர் என்ற முறையில் எனது நிழற்படத்தை அவர்களது தினசரியின் முதல் பக்கத்தில் வெளியிட ஆப்தேவும், கோட்சேவும் தன்னிச்சையாக முடிவெடுத்தனர். இந்தியாவின் பல்வேறு மாகாணங்களைச் சேர்ந்த பல இந்து-எண்ணம் கொண்ட தினசரிகளும் அவற்றின் முதல் பக்கங்களில் எனது நிழற்படத்தை வெளியிட்டு வருகின்றன. எனவே இதில் ஆட்சேபகரமான விஷயம் ஏதும் இருப்பதாக நான் கருதவில்லை. ஆனால் ப்ராசிக்யூஷன் தரப்பு அவரது தொடக்க உரையில் எனக்கும் அந்தத் தினசரியின் கொள்கைக்கும் ஏதோ நேரடித் தொடர்பு இருப்பதுபோல் இதை முக்கிய விஷயமாகக் குறிப்பிட்டுள்ளார். தினசரிகளின் ஒவ்வொரு இதழின் முதல் பக்கத்திலும் இதுபோல் நிழற்படங்களை வெளியிடுவது இந்தியாவில் சாதாரண விஷயம். மகாத்மா காந்தி பிரபலமாக இருந்த காரணத்தால் அவரது நிழற்படத்தை தினசரிகள் முதல் பக்கத்தில் வெளியிட்டன. ஆனால் இந்த தினசரிகள் குறித்த எந்த விவரமும் காந்திக்குத் தெரியாது. அவற்றைப் படித்ததும் இல்லை. பூனாவைச் சேர்ந்த ‘கேசரி பத்திரிகையின் முதல் பக்கத்தில் லோகமான்ய திலகருடைய நிழற்படம் நிரந்தரமாகவே இடம் பெறும். ஆனால் இதைச் சுட்டிக்காட்டி நல்ல மனநிலையிலுள்ள யாரும் எந்தவொரு நீதிமன்றத்திலும் மறைந்த லோமான்ய திலகருக்கும், இன்றைய கேசரியின் பத்திரிகையின் கொள்கைக்கும் தொடர்பு இருக்கிறது என்று சொல்ல மாட்டார். சட்டப்படியும், நியாயப்படியும், தலைவர்களின் நிழற்படங்களை வெளியிட்ட பத்திரிகை ஆசிரியர்தான் பொறுப்பே தவிர, ஆசிரியரின் கொள்கைகளுக்கு நிழற்படத்தில் இருப்பவர் பொறுப்பாக மாட்டார்.
இன்னுமொரு நம்பத்தகுந்த ஆதாரமாக, அக்ரணியின் நிர்வாகத்தோடும், கொள்கையோடும் (இந்து ராஷ்டிரம்) என்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் பொறுப்பைத் தனிப்பட்ட முறையில் நான் ஒப்புக் கொள்ளவில்லை என்பதற்கான ஆவணத்தைப் ப்ராசிக்யூஷன் தரப்பே அளித்துள்ளது. கோட்சேவுக்கும், ஆப்தேவுக்கும் கூட்டாக நான் எழுதிய கடிதத்தை அவர்கள் சமர்ப்பித்துள்ளனர் (SGA-# Exhibit பக்கம் 302 பார்க்கவும்).
கடிதத்தை நான் எழுதியதற்கான சூழல் இதுதான். ஒரு வருடத்துக்குப் பிறகு ஆப்தேவும், கோட்சேவும் தினசரியைத் தொடங்கி அதற்கான அச்சகத்தையும் முடிவு செய்தனர். பிறகு என்னைச் சந்தித்துப் பத்திரிகையின் கொள்கையுடன் அடையாளப்படுத்திக் கொள்ளுமாறு மீண்டும் வலியுறுத்தினர். ஒப்பந்தத்தில் என் பெயரை எழுத அனுமதிக்குமாறு அல்லது நிறுவனராக அல்லது புரவலராக இருக்க ஒப்புக் கொண்டால், அச்சகத்தை நல்ல விலையில், எளிதாக வாங்க முடியும் என்றும் வேண்டினர். அவர்கள் சொன்ன காரணங்களுக்காகவே நான் சம்மதிக்கவில்லை. அவர்கள் சென்ற பிறகு சரியாகப் புரிந்து கொள்ளாமலோ, வேறெந்த காரணத்தினாலோ, எனது பெயர் தவறாகப் பயன்படுத்தப்பட்டு விடக்கூடாது என்பதால், தினசரியின் கொள்கை அவர்களுக்கு மட்டுமே சொந்தம் என்பதையும் குறிப்பிட்டு ஒரு கடிதம் எழுதுவது நல்லது என்று நினைத்தேன். இதனைத் தொடர்ந்த உரையாடலின்போது ஏதேனும் குழப்பம் ஏற்பட்டுச் சொல்ல வந்தது மறந்து போகாமல் இருக்க இந்த விஷயத்தை எழுத்தில் தெளிவுபடுத்தச் சொன்னேன். அதாவது அக்ரணியின் கொள்கை உங்கள் இருவருக்கு (கோட்சே மற்றும் ஆப்தே) மட்டுமே சொந்தமாகவும், பிரத்யேகமாகவும், நிபந்தனையற்றும் இருப்பதை ஒப்பந்தத்தில் எழுத்து மூலம் பதிவு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன்.
(c) ‘அக்ரணியில் நான் எழுதவே இல்லை
ஆப்தேவும், கோட்சேவும் அக்ரணியின் முதல் இதழ் முதற்கொண்டே சிறு குறிப்பையேனும் எழுத வேண்டும் என்று அழுத்தம் கொடுத்து வந்தனர். எனது கட்டுரைகளைச் சிறப்புத் தலையங்கப் பத்திகளில் வெளியிடுவதாகவும் கூறினர் (கோட்சேவின் கடிதம் G-61 தேதி 10 மார்ச் 1944 பக்கம் 291 பார்க்கவும்). ஆனால் அக்ரணி பத்திரிகைக்காக நான் எதுவுமே பிரத்யேகமாக எழுதவும் இயலவில்லை, எழுதவும் இல்லை. இந்தியா மற்றும் வெளிநாடுகளிலுள்ள கட்சித் தொடர்பற்ற நூற்றுக்கணக்கான பத்திரிகைகள் எதையேனும் எழுதித் தருமாறு என்னைத் தொடர்ந்து வேண்டி வந்துள்ளன. ஒரு சிலவற்றுக்கு மட்டும் எழுதி, மற்றவைகளுக்கு எழுதாமல் இருந்திருந்தால் நான் நடுநிலை தவறியவனாகி இருப்பேன். இந்து சங்கடன இயக்கப் பணிகள் அதிகமிருந்த காரணத்தாலும், அதற்காகத் தனிப்பட்ட முறையில் எழுதுவதற்கும் ஏராளம் இருந்ததாலும், வேறு எந்தப் பத்திரிகைக்கும் எழுதுவதில்லை என்பதைக் கொள்கையாக வைத்துக்கொண்டு மறுத்து வந்தேன். எனது அறிக்கைகளும், கட்டுரைகளும், பொதுவான பத்திரிகைச் செய்திகளாகப் பத்திரிகை முகவர்களால் அதிக எண்ணிக்கையில் வெளியாகிக் கொண்டிருந்ததால், தனியாக எந்தப் பத்திரிகைக்கும் பிரத்யேகமாக எழுத வேண்டிய அவசியமில்லாமல் போய்விட்டது. அந்த வகையில் அக்ரணி நான் கையொப்பமிட்டு வெளியிட்ட பத்திரிகைச் செய்திகளையும், குறிப்புகளையும், சிறப்பு அறிக்கைகளையும் வெளியிட்டு வந்துள்ளது. இவற்றைத் தவிர அக்ரணிக்காக நான் தனியாக வேறெதையும் எழுதவில்லை. இதற்காக நான் வருத்தப்பட்டேன் என்றாலும் அக்ரணி பத்திரிகையை விதிவிலக்காகக் கருத முடியவில்லை. இதற்காகச் சில நேரங்களில் ஆப்தேவும், கோட்சேவும் என் மீது வருத்தப்பட்டார்கள். இது சந்தேகத்துக்கு இடமின்றி, மறுக்க முடியாத உண்மை என்பதை கோட்சேவும், ஆப்தேவும் எனக்கு எழுதிய கடிதங்களை ப்ராசிக்யூஷன் தரப்புச் சாட்சிகளாகச் சமர்ப்பித்ததிலிருந்து தெரிந்து கொள்ளலாம். இவற்றிலிருந்து ஒன்றே ஒன்றை மட்டும் நான் குறிப்பிட விரும்புகிறேன். ப்ராசிக்யூஷன் தரப்பு மொழிபெயர்ப்பு கீழ்க்கண்டவாறு:-
G-70 என்று குறிப்பிடப்பட்டுள்ள கோட்சேவின் கடிதம் (Exhibit பக்கம் 293) கூறுவதாவது:
‘அக்ரணி தினசரி பத்திரிகைக்கு நீங்கள் எந்தப் பிணையையும் பெறாமல் வெறும் கடன் உறுதிச் சீட்டின் (promissory note) அடிப்படையில் மிகப் பெரிய தொகையாக ரூபாய் பதினைந்தாயிரம் அளித்திருக்கிறீர்கள்.
‘இம்மாதம் 25ம் தேதி, அதாவது இன்றிலிருந்து 25 நாள்கள் கழித்து ‘அக்ரணி தினசரி இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்ய உள்ளது. அச்சகத்துக்காக வசதியான சில ஆதரவாளர்களிடமிருந்து மூலதனத்தைப் பெற்றுள்ளோம்.
‘அக்ரணி குறித்த நிதி நிலவரத்தை உங்களுக்கு (சாவர்க்கர்) கூறியபோது உங்களுக்குக் கொடுத்த கடன் உறுதிச் சீட்டை (promissory note) நாங்கள் கிழித்துப் போடச் சொன்னோம் என்று தவறாகப் புரிந்து கொண்டிருப்பது தெரிய வந்தது…
‘கடந்த திங்கள் கிழமை ஸ்ரீமான் குலாப் சந்த் இங்கே வந்திருந்தார். அவருடன் நாங்கள் பேசினோம். ஒரு மாத காலத்துக்கு ரூபாய் ஐந்தாயிரம் அனுப்பியிருந்தார்…
‘கணிசமான நிதி அக்ரணி தினசரிக்கு வழங்கியது எனக்கு நினைவிருக்கிறது என்றாலும் ‘விக்ரம் மற்றும் ‘ஃப்ரீ இந்துஸ்தான் பத்திரிகைகளுக்கும் உங்கள் உதவி தேவைப்படுவதால், உங்கள் கவனத்துக்குக் கீழ்க்காணும் விவரங்களைக் கொண்டு வர விரும்புகிறேன்.
‘இந்தப் பத்திரிகையில் நீங்கள் கூடுதலாக ரூபாய் பத்தாயிரம் முதலீடு செய்வதுடன் ஒட்டுமொத்தத் தொகைக்கு அதாவது ரூபாய் இருபத்தைந்து ஆயிரம் மீது ஆண்டுக்கு மூன்று சதவிகிதம் வட்டி வசூலிக்க வேண்டும் என்பதும் எனது கருத்தாகும்.
‘இப்போது நான் இந்த தினசரியின் மற்றொரு பாகம் (அம்சம்) பற்றி எழுதுகிறேன். காந்திஜியின் ‘ஹரிஜன் பத்திரிகை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. அந்தப் பத்திரிகையில் பல்வேறு தலைப்புகளில் குறைந்தபட்சம் பத்து பத்திகளுக்கு காந்தியின் சொந்தப் பெயரில் கட்டுரைகள் இடம் பெறுகின்றன. ஆனால் ‘அக்ரணி பத்திரிகைக்கு உங்கள் (சாவர்க்கர்) எழுத்து மூலம் சின்னஞ்சிறு பலன் (பெருமை) கூட கிடைக்கவில்லை. ‘கேசரி பத்திரிகைக்கு (லோகமான்ய) திலகர் மூலம் அதாவது அவரது எழுத்துக்கள் மூலம் நேரடிப் பலன் கிடைத்தது. ‘ஹரிஜன் பத்திரிகையில் காந்தியே (கட்டுரைகள்) எழுதுகிறார்…
‘இப்போது இருப்பதை விடவும் உங்கள் உடல் ஆரோக்கியம் தேறிய பிறகு ஒவ்வொரு வாரமும் குறைந்தபட்சம் ஒரேயொரு கட்டுரையேனும், அரசியல் அல்லது இந்து மதம் பற்றி மட்டுமின்றி, புரட்சி, எந்திரமயமாக்கல், இயற்பியல், நுண்ணறிவு, இலக்கியம், வரலாறு, தத்துவம், கவிதை என பல்வேறு தலைப்புகளில் எழுதுங்கள். இரு கைகளையும் கூப்பி உங்களைத் தாழ்மையுடன் தொடர்ந்து வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.
‘எழுத்துக்கான சன்மானம் குறித்து உங்களிடம் (சாவர்க்கர்) பேசுவது நாகரிகமாக இருக்காது. ‘அக்ரணி பத்திரிகைக்குப் பல்வேறு தலைப்புகளில் தொடர்ந்து எழுதத் தொடங்கிய பிறகு ‘அக்ரணி மூலம் கிடைக்கும் லாபத்தில் ஒரு பங்கை உங்கள் மீதுள்ள மரியாதைக்காகவும், பக்திக்காகவும் தரச் சித்தமாக இருக்கிறோம். உங்களுக்கு (சாவர்க்கர்) மாதம் ரூபாய் நூறு அனுப்பி வைக்கிறோம்.
எனது எழுத்துக்கான சன்மானம் தொடர்பாகப் பணம் கொடுக்கும் யோசனை நேர்மையாக ஆனால் வேடிக்கையாக இருந்தாலும், அக்ரணி பத்திரிகைக்கு நான் எழுதவுமில்லை, ஏற்கெனவே பட்டியலிட்ட காரணங்களுக்காக மேற்கொண்டு பண உதவி செய்யவுமில்லை என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
(d) கோட்சேவும், ஆப்தேவும் என்னுடன் பயணித்தனர்
என்னுடனான சுற்றுப் பயணங்களில் குழுவினருடன் கோட்சேவும், சில தருணங்களில் ஆப்தேவும் பங்கேற்றனர் எனறு ப்ராசிக்யூஷன் தரப்பு தெரிவித்துள்ளது. ப்ராசிக்யூஷன் தரப்பு சாட்சிப்படுத்தி உள்ள கோட்சே எனக்கு எழுதிய பதினேழு கடிதங்களுள், கோட்சே என்னுடன் பயணிக்க விரும்பினார் மற்றும் பயணித்தார் என்பதை நிரூபிக்க மட்டுமே நீதிமன்றத்தில் குறைந்தபட்சம் பத்துக் கடிதங்களை சமர்ப்பித்துள்ளது. நான் எப்போது பயணித்தாலும் ஒவ்வொரு இடத்திலும் பிரபலத் தலைவர்களும், ஏராளமான ஊழியர்களும் என் குழுவுடன் இணைந்து பயணிப்பார்கள். குழுவின் அளவும் எண்ணிக்கையும் சில நேரங்களில் அதிகமாகும்போது எனது பயணத்துக்காகச் சிறப்பு ரயில் பெட்டிகள் பதிவு செய்யப்படும். கடந்த எட்டு ஆண்டுகளில் இதுபோல் நூற்றுக்கணக்கில் நீண்ட பயணங்களை மேற்கொண்டு இந்தியா முழுவதும் பல்வேறு நகரங்களுக்கும், கிராமங்களுக்கும் சென்று ஆயிரக்கணக்கான கூட்டங்களில் பேசியுள்ளேன். இவற்றுள் அதிகபட்சம் பத்து அல்லது பன்னிரண்டு பயணங்களில் மட்டுமே கோட்சேவும், ஆப்தேவும் என்னுடன் வந்திருப்பார்கள். பண்டிட் நாதுராம் என்னுடைய பயணக் குழுவில் அவராகவே விருப்பப்பட்டு இணைந்தார் என்பதையும், தொடர்ந்து அவர் முன்வைத்த பல அழுத்தமான கோரிக்கைகளுக்குப் பின்னரே அனுமதிக்கப்பட்டார் என்பதையும், சில தருணங்களில் ஆர்வமுள்ள மற்ற தன்னார்வத் தொண்டர்களுக்குச் சம அளவு வாய்ப்பளிக்க வேண்டியிருப்பதால் கோட்சே வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டதையும் நிரூபிக்க ப்ராக்சியூஷன் தரப்பு சமர்ப்பித்துள்ள கடிதங்களே ஆதாரம். மேற்கூறியவை அனைத்தும் உண்மை என்பதை நிரூபிக்க கோட்சேவின் கடிதங்களிலிருந்து சில பத்திகளைக் கீழே தர வேண்டியது அவசியமாகிறது. ப்ராசிக்யூஷன் தரப்பே இக்கடிதங்களைப் பின்வருமாறு மொழிபெயர்த்துள்ளது:
1941 நவம்பர் 10 (G-26 Exhibit பக்கம் 278) கடிதத்தில் கோட்சே எழுதியதாவது:
“அஸ்ஸாம் பயணத்தில் கலந்துகொள்ள நான் எப்போது பம்பாய்க்கு வரவேண்டும் என்பதையும் உங்கள் (சாவர்க்கர்) பயணத் தேதியையும், ரயில் விவரங்களையும் எனக்குக் கடிதம் மூலம் முன்கூட்டியே தயவுசெய்து தெரிவியுங்கள். உங்களுடன் (சாவர்க்கர்) பயணிக்கும்போது உங்கள் மூலம் இந்து சபா குறித்த அனுபவத்தையும், கல்வி அறிவையும் பெற மராட்டியத்திலுள்ள பல நல்ல ஊழியர்கள் ஆர்வமுடன் இருக்கின்றனர்…நேற்று சதாரா பாரிஸ்டர் விதால் ராவ் கரந்திகர் இது குறித்த தனது ஆர்வத்தை என்னிடம் கூறியதுடன், அவரது விருப்பத்தைக் கடிதம் வாயிலாக உங்களுக்கு (சாவர்க்கர்) தெரிவிக்கவும் பணித்தார். இந்தப் பயணத்தின்போது தனது செலவுகளைத் தானே பார்த்துக்கொள்ளவும் தயாராக இருக்கிறார்… உங்களுடன் (சாவர்க்கர்) பதினைந்து நாள்கள் செலவிட ஆசைப்படுவதாகவும், அதற்கான அவரது பயணச் செலவுகளை அவரே ஏற்றுக் கொள்ளவும் தயாராக உள்ளதாகக் கூறியிருக்கிறார். எனவே உங்கள் பயணத்தின்போது அவரை இணைத்துக் கொள்ள உங்கள் சம்மதத்தைத் தர வேண்டும் என்பது என் எண்ணம்…
1942 ஆகஸ்ட் 21 கோட்சே எழுதிய கடிதத்தில் G-38 (Exhibit பக்கம் 281) உள்ளவை பின்வருமாறு:
“…29ஆம் தேதி நடைபெற இருக்கும் செயற்குழுக் கூட்டம் மிக முக்கியமானதாக இருக்குமென எண்ணுகிறேன். …இந்தக் கூட்டத்துக்கு நீங்கள் (சாவர்க்கர்) மற்றவர்களையும் (உறுப்பினர் அல்லாதவர்களையும்) அழைத்துள்ளீர்கள். எனவே இந்தக் கூட்டத்துக்கு நான் வருவதில் உங்களுக்கு ஏதும் ஆட்சேபணை இல்லை எனில், உங்களுடன் வரவிருப்போருடன் என்னையும் இணைத்துக் கொள்ளச் சாத்தியப்படால் எனக்கும் மகிழ்ச்சியே.
1942 ஆகஸ்ட் 24 கோட்சே எழுதிய கடிதத்தில் G-39 (Exhibit பக்கம் 282) உள்ளவை பின்வருமாறு:
“தில்லி அமர்வு மிக முக்கியமானது என்பதால் தலைவர் (சாவர்க்கர்) குழுவின் உறுப்பினராக என்னையும் உடன் அழைத்துச் செல்வது குறித்துப் பரிசீலிக்கவும்.
கோட்சே எழுதிய கடிதத்தில் G 43 (Exhibit பக்கம் 284) பின்வருமாறு குறிப்பிடுகிறார்:
“கான்பூரில் நீங்கள் தலைமை ஏற்கும் கூட்டத்துக்கு உங்களுக்கு முன்பாகவே நான் சென்று இந்துப் பிரசாரத்தை மேற்கொள்ள விரும்புகிறேன். ஆனால் மற்றவர்கள் அவர்களை அனுப்ப உங்களுக்கு அழுத்தம் கொடுத்து வருவதை நான் அறிவேன். இதன் காரணமாக எனது பெயரை நீங்கள் நீக்க வாய்ப்புள்ளது. எனவே ஐக்கிய மாகாணங்களில் சுற்றுப்பயணம் செய்ய என்னை நினைவில் வைத்துக்கொண்டு அனுப்பி வைக்கவும்.
கோட்சே எழுதிய கடிதத்தில் (G-45 Exhibit பக்கம் 286) கூறுவதாவது:
“தில்லி செயற்குழுக் கூட்டத்துக்கு நீங்கள் (சாவர்க்கர்) செல்லும்போது உங்கள் குழுவுடன் நானும் தில்லி வர விரும்புகிறேன். ரயிலில் பணியாளரின் டிக்கெட்டிலோ, உங்கள் குழுவிடமுள்ள இரண்டாம் வகுப்பு டிக்கெட்டிலோ பயணிக்க ஆர்வமாக உள்ளேன்.
எனது செயலாளர் மற்றுமொரு தருணத்தில் கோட்சேவுக்குப் பின்வருமாறு கடிதம் எழுதினார்:
“தலைவருடன் தில்லி செல்ல விரும்பும் உங்கள் ஆர்வத்துக்கு நன்றி. ஆனால் ஏற்கெனவே திரு பகவத்தை எங்களுடன் (சாவர்க்கர் குழு) அழைத்துச் செல்ல முடிவெடுத்ததால் இம்முறை உங்களைத் தொந்தரவு செய்ய விரும்பவில்லை (SG-5 Exhibit பக்கம் 299 பார்க்கவும்).
சில தருணங்களில் பயணங்களின்போது எங்கள் குழுவினருடன் ஊடகப் பிரதிநிதியாக கோட்சே கலந்துகொண்டு பல்வேறு பத்திரிகையில் சிறப்பாக விவரித்து எழுதியுள்ளார். இதை ஏனைய பத்திரிகையாளர்களும் செய்துள்ளனர். அவர்களுள் ஒருவராகத்தான் கோட்சே இருந்துள்ளார்.


தொடரும்…

அந்தமானில் இருந்து கடிதங்கள் – கடிதம் 1 : வீர சாவர்க்கர் | தமிழில்: VV பாலா


கடிதம் 1
ஓ தியாகிகளே
சுதந்திரதிற்கான போராட்டம் துவங்கியது முதல்
வழிவழியாக நாம் அதை தொடர்ந்து கொண்டிருக்கிறோம்.
இதில் தோல்விகள் நிரந்தரம் இல்லை, வெற்றி நிச்சயம்.
இன்று மே 10ம் தேதி. இந்தநாளில்தான் 1857ம் ஆண்டு தியாகிகளால் முதல் சுதந்திரப் போராட்டம் துவங்கப்பட்டது. நம்முடைய அடிமைத்தளையை அறுத்தெறிய நம் தாய்நாடு வாளேந்திய நாள். விடுதலைக்கான முதல் அடியை நம் தாய்நாடு கொடுத்த நாள். பரங்கியரைக் கொல்வோம் என்ற போர்முழக்கம் ஆயிரக்கணக்கான போராளிகளால் எழுப்பப்பட்ட நாள். மீரட்டில் இருந்த சிப்பாய்கள் டெல்லி நோக்கி தங்கள் புரட்சிப் பயணத்தை ஆரம்பித்த நாள். தங்கள் புரட்சி போராட்டத்திற்குக் கொள்கைகளை வகுத்து ஒரு தலைவரையும், ஒரு கொடியையும் உருவாக்கிய நாள். அந்தப் புரட்சிப் போராட்டத்தை ஒரு தேசியப் போராட்டமாகவும் ஒரு சமயப் போராட்டமாகவும் மாற்றிய நாள்.
தியாகிகளே, உங்களுக்கு பெருமை உண்டாகட்டும். நம் நாட்டின் மதங்கள் மதமாற்றத்தால் பாதிக்கப்பட்டபோது நம் இனத்தின் பெருமையைக் காக்க நீங்கள் இந்தப் போராட்டத்தை நடத்தினீர்கள். அதுவரை அணிந்திருந்த தங்களின் முகமூடிகளை நீக்கி போலிகள் நம் நாட்டை அடிமை சங்கிலிக்குள் பிணைத்தனர். இவர்களை நம்பி நம் தாய்நாடு ஏமாந்தபோது 1857ம் வருட போராட்டத்தின் தியாகிகளே, நீங்கள் நம் தாய்த்திருநாட்டை எழுச்சி அடையச் செய்து நம் தாய்நாட்டின் பெருமையைக் காக்க ‘பரங்கியரைக் கொல்வோம்’ என்ற வீர முழக்கத்தை எழுப்பி, போர்க்களம் புகுந்தீர்கள். தெய்வீகமும் தேசியமும் மட்டுமே உங்களது தாரக மந்திரமாக இருந்தது. உங்களது போராட்டம் மிகச் சரியான ஒன்றுதான். நீங்கள் போராடாமல் இருந்திருந்தால் ரத்தம் சிந்த வேண்டிய அவசியம் இருந்திருக்காதுதான். ஆனால் அடிமைத்தளையில் இருப்பது அதைக்காட்டிலும் பெருத்த அவமானத்தைத் தரக்கூடியது. அதுமட்டுமில்லாமல் அடிமைத்தளையை எதிர்த்துப் போராடாத நம் நாட்டிற்கு விடுதலை தேவை இல்லை, நாம் அடிமையாய் இருக்கத்தான் லாயக்கு என்று உலகம் நம்மைப் பார்த்து கூறியிருக்கும். 1857-இலும் கூட நம் பெருமையையும் பாரம்பரியத்தையும் காத்துக்கொள்ள நாம் ஒன்றும் செய்யவில்லை என்று அவர்கள் கூறியிருப்பார்கள்.
அதனால் இந்த நாளை உங்கள் நினைவுக்கு காணிக்கையாக்குகின்றோம். இந்த நாளில்தான் நீங்கள் ஒரு புதிய கொடியை உயர்த்திப் பறக்க விட்டீர்கள், ஒரு புதிய பாதையை வகுத்தீர்கள், அடைய வேண்டிய ஒரு புதிய இலக்கை வரைந்தீர்கள், நம் தேசத்திற்கு விடிவு வர வேண்டும் என்று சூளுரைத்தீர்கள்.
உங்களுடைய புரட்சிப்போராட்டத்தின்போது நீங்கள் விடுத்த அறைகூவலை நாங்கள் வழிமொழிகின்றோம். அன்னியரை வெளியேற்ற வேண்டும் என்ற உங்கள் லட்சியம் நிறைவேற நாங்களும் உழைப்போம். அடிமைத்தளை உடைக்கப்படும் வரை, நமக்கு சுதந்திரம் முற்றிலுமாக கிடைக்கும் வரை 1857ம் ஆண்டு துவங்கிய போர் முடிந்துவிட்டது என்று கருத முடியாது. சுதந்திரதிற்காக மக்கள் எழுச்சி அடையும் போதெல்லாம், சுதந்திர வேட்கை நம் தியாகிகளின் மனதில் தோன்றும்போதெல்லாம் தன் முன்னோர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்காக ஒரே ஒருவன் பழி தீர்க்க எழுந்து நின்றாலும் இந்த போர் முடிவுக்கு வரவில்லை என்றுதான் பொருள். புரட்சிப் போராட்டத்தில் அமைதி ஒப்பந்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை. சுதந்திரம் அல்லது வீர மரணம் என்ற இரண்டில் ஒன்றுதான் நிதர்சனம். உங்களுடைய நினைவுகள் எங்களுக்கு உத்வேகம் அளிக்கின்றன. நீங்கள் 1857ம் ஆண்டு துவங்கிய போரை நாங்கள் தொடர உறுதியோடுள்ளோம். நீங்கள் நடத்திய போராட்டம் இந்தப் போரின் முதல் கட்டம் என்றே நாங்கள் கருதுகிறோம். அதில் ஏற்பட்ட பின்னடைவு போரில் தோற்றதாக அர்த்தமாகாது. அதில் ஏற்பட்ட தோல்வியை இந்தியா ஏற்றுக்கொண்டதாக உலகம் கூறுமா என்ன? 1857ம் ஆண்டு நடந்த போராட்டத்தில் சிந்திய ரத்தம் வீணாக போய்விடுமா? நம் தந்தையர்கள் ஏற்றுக்கொண்ட உறுதிமொழியை அவர்களுடைய புதல்வர்கள் நிறைவேற்றமாட்டார்களா? இந்திய தேசத்தின் வரலாற்று தொடர்ச்சி முடிந்து போய்விடவில்லை. 1857ம் ஆண்டு மே 10ம் தேதி துவங்கிய போர் 1908ம் ஆண்டு மே 1ம் தேதியிலும் தொடந்துகொண்டுதான் இருக்கிறது. சுதந்திரம் அல்லது வீர மரணம் இரண்டில் ஒன்று கிடைக்கும் வரை எங்களது போராட்டம் தொடந்துகொண்டேதான் இருக்கும்.

எங்களது இந்தப் போராட்டத்தில், தியாகிகளாகிய நீங்களே எங்களுக்கு உத்வேகம் அளிக்கின்றீர்கள். அந்த உத்வேகம் இல்லையென்றால் பல சிறு வேறுபாடுகளால் சிதறுண்டிருக்கும் எங்களால் ஒன்றுபட்ட எங்கள் தாய்த் திருநாட்டைப் பார்க்க இயலாது. அந்த ஒற்றுமையை நீங்கள் எப்படி கொண்டு வந்தீர்கள் என்ற ரகசியத்தை எங்களுக்குச் சொல்லுங்கள். ஹிந்துக்கள் மற்றும் முகமதியர்களின் இசைவோடு எப்படி பரங்கியரின் அதிகாரத்தை தவிடுபொடியாக்கி சுதேசியை மக்களிடையே பிரபலப்படுத்தினீர்கள்; சாதி, மதம் போன்ற பிடிப்புகளில் இருந்து மக்களை எப்படி தேசம் என்ற மேலான பந்தத்தை ஏற்படுத்தினீர்கள்! பகதூர் ஷா எப்படி நாடு முழுவதிலும் பசு வதைத் தடையை அமுல்படுத்தினார்! மாவீரரான நானா சாஹிப் எப்படி டெல்லி சக்ரவர்த்திக்கு பீரங்கி முழக்கத்தின் மூலம் முதல் மரியாதையைத் தந்து தன்னுடைய மரியாதையை இரண்டாவதாக ஏற்றுக் கொண்டார்! எப்படி நம் எதிரி ஒற்றுமையாக இருந்த நம்மைப் பார்த்து, ‘இந்த இந்திய போராட்டத்தின் மூலம் நிர்வாகிகளுக்கும் வரலாற்று ஆய்வாளர்களுக்கும் அறிந்துகொள்ள நிறைய விஷயங்கள் கிடைத்திருக்கலாம். ஆனால் எல்லாவற்றையும் விட பெரிய விஷயம், பிராமணர்களும் சூத்திரர்களும், ஹிந்துக்களும் முகமதியர்களும் இணைந்து ஒரு போராட்டத்தை நடத்த இயலும் என்கின்ற செய்திதான் அது. இந்த நாட்டில் பல்வேறு மதம் மற்றும் இனக்குழுக்கள் இருக்கின்றபடியால் இங்கு நாம் பாதுகாப்பாக ஆட்சி செய்ய முடியும் என்ற எண்ணம் இனி செல்லுபடியாகாது. ஏனென்றால் அவர்கள் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு பரஸ்பர மரியாதையுடன் மற்றவர்களுடைய செயல்பாடுகளை அணுகுகிறார்கள். நம்முடைய அரசு இத்தகைய புரட்சிகள் வெடிக்கக் கூடிய சாத்தியங்கள் இருக்கும் ஒரு சமுதாயத்தின் மேல் பத்திரமில்லாமல் நின்று கொண்டிருக்கிறது. இங்கு மதமும் தேசப்பற்றும் இணைந்து இருக்கின்றது. தேசபற்றை வலியுறுத்தும் மதமும், மதச் சுதந்திரத்தை மதிக்கும் தேசப்பற்றும் இங்கு இருக்கின்றது என்பதை நமக்கு இந்தப் புரட்சிப் போராட்டங்கள் அடையாளப்படுத்தி இருக்கின்றன’ என்று கூறினார்கள்.
இப்பேற்பட்ட ஒரு மாபெரும் போராட்டத்தை நடத்தத் தேவையான சக்தியையும் அதனை ரகசியமாகச் செய்யகூடிய சூட்சுமத்தையும் எங்களுக்கும் தாருங்கள். பசுமையான நிலத்தின் அடியில் வெடித்துச் சிதறக் காத்திருக்கும் எரிமலைக் குழம்பு இருப்பதை அறியாத எதிரி, அதனை எதிர்கொள்ள தயாரில்லாத நிலையில் இருந்தான். அதுபோன்ற சாதுர்யத்தை எங்களுக்கும் தாருங்கள். இந்தியாவில் உள்ள ஒவ்வொரு கிராமம்தோறும் எப்படிப் புரட்சி பற்றிய செய்திகளை சப்பாத்தி மூலம் பரப்பினீர்கள் என்ற வித்தையை எங்களுக்கும் கற்றுத் தாருங்கள். ஒரே மாதத்தில் ஒவ்வொரு படைப்பிரிவும், ஒவ்வொரு இளவரசனும், நகரங்கள், சிப்பாய்கள், போலீஸ்கள், ஜமீன்தார்கள், பண்டிட்கள், மவுல்விகள் என்று எல்லோரையும் எப்படி இந்தப் புரட்சித் தீ பற்றிக்கொண்டது, கோவில்களிலும் மசூதிகளிலும் ‘பரங்கியரைக் கொல்வோம்’ என்ற கோஷம் எப்படி விண்ணைப் பிளந்தது என்பதைக் கூறுங்கள். மீரட் எழுச்சி அடைந்தது, டெல்லி எழுந்தது, பெனாரஸ் எழுந்தது, ஆக்ரா, பாட்னா, லக்னோ, அலாஹாபாத், ஜாதகல்பூர், ஜான்சி, பாண்டா, இந்தோர், பெஷாவரில் இருந்து கல்கத்தா வரையிலும், நர்மதாவில் இருந்து ஹிமாலயம் வரையிலும் அந்த எரிமலை வெடித்து எல்லோரையும் புரட்சி ஆட்கொண்டது.
ஓ தியாகிகளே, இந்த மாபெரும் புரட்சியை நடத்தும்போது நம் மக்களிடம் நீங்கள் கண்ட குறைபாடுகள் என்னவென்பதையும் எங்களுக்குக் கூறுங்கள். இந்த மாபெரும் தேசிய வேள்வியில் பங்கு பெறாமல் உங்களுடைய தன்னலமற்ற போராட்டத்தை நீர்த்து போகும்படி செய்த நபர்களின் சுயநலத்தைப் பற்றியும் சொல்லுங்கள். ஹிந்துஸ்தானத்தின் தோல்விக்குக் காரணம் ஹிந்துஸ்தானம் மட்டுமே என்பதையும் கூறுங்கள். பல நூற்றாண்டு கால அடிமைத்தளையில் இருந்து விடுதலை பெற நம் அன்னை வீறுகொண்டு எழுந்து பரங்கியரைத் தன் வலதுகையால் அவர்கள் தலையில் தாக்கும்போது, அவளுடைய இடதுகை எதிரியைத் தாக்காமல், அவள் தலையையே தாக்கியதைப் பற்றியும் கூறுவீர். அந்த அடியினால் அவள் ஐம்பது ஆண்டு காலம் துவண்டு போனதைப் பற்றியும் கூறுவீர்.
ஐம்பது ஆண்டு காலம் ஆகிவிட்டது. ஆனால் 1857ம் ஆண்டு நீங்கள் துவங்கிய அந்த சுதந்திர வேட்கை இன்னும் தீரவில்லை. அதன் வைர விழா கொண்டாட்டங்களின்போது உங்களுடைய கனவுகள் நிறைவேறும் என்று நாங்கள் உறுதியளிக்கிறோம். நாங்கள் உங்கள் குரலைக் கேட்கிறோம். அதன்மூலம் எங்களுக்கு உத்வேகம் கிடைக்கின்றது. மிகக் குறைந்த உதவிகளைக்கொண்டு நீங்கள் போரை நடத்தினீர்கள். அந்தப் போர் வெறும் ஏகாதிபத்தியத்துக்கு எதிரானது மட்டுமல்ல, அது துரோகத்திற்கும் எதிரான போர். துவாப்பும் அயோத்யாவும் இணைந்து நின்று போர் புரிந்தது பிரிட்டிஷ் அதிகாரத்திற்கு எதிராக மட்டுமல்ல, ஏனைய இந்தியாவிற்கும் எதிராகத்தான். கடினமான அந்தப் போரை நீங்கள் மூன்றாண்டுகளுக்குத் தொடர்ந்தீர்கள். அந்நிய சக்திக்கு எதிரான அந்தப் போரில் கிட்டத்தட்ட வெற்றியும் பெற்றீர்கள். இது எப்பேர்ப்பட்ட உற்சாகத்தைத் தரக்கூடியது. துவாப்பும் அயோத்யாவும் ஒரு மாதத்தில் சாதித்ததை இந்துஸ்தானம் முழுவதும் உறுதிப்பாட்டோடு இணைந்தால் ஒரே நாளில் சாதித்து விடலாம். இது எங்களுக்கு வெற்றி நிச்சயம் என்ற நம்பிக்கையை கொடுக்கின்றது. அதனால் உங்களுடைய போராட்டத்தின் வைர விழ 1917ம் ஆண்டு நடக்கும்பொழுது இந்திய ஒரு சுதந்திர நாடாக இந்த உலகில் அடியெடுத்து வைக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.
ராணி லக்ஷ்மி பாயின் ரத்தமும் பஹதூர் ஷாவின் எலும்புகளும் அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்குப் பழி வாங்கவேண்டி காத்திருகின்றன. புரட்சிப் போராட்டத்தைப் பற்றிய தகவல்களைக் கூற மறுத்ததனால் மரண தண்டனை விதிக்கப்பட்ட பாட்னாவைச் சேர்ந்த போராளி பீர் அலி பரங்கியரின் காதில் படும்படி கூறிய வார்த்தைகள் நினைவில் நிறுத்தப்பட வேண்டியவை. ‘நீங்கள் என்னை இன்று தூக்கில் இடலாம். என்னைப் போன்ற பலரையும் நீங்கள் தூக்கில் இடலாம். ஆனால் என்னுடைய இடத்தில் பல ஆயிரம் பேர் வருவார்கள். உங்கள் எண்ணம் ஈடேறாது.’
இந்தியர்களே, இந்த வாக்கியம் நிறைவேற்றப்பட வேண்டும். தியாகிகளே, நீங்கள் சிந்திய ரத்தத்திற்கு நாங்கள் பழி வாங்குவோம்.
வந்தே மாதரம்.

மகாத்மா காந்தி கொலைவழக்கு – சாவர்க்கரின் வாக்குமூலம் – பகுதி 1 | தமிழில்: ஜனனி ரமேஷ்நிற்பவர்கள்: சங்கர் கிஸ்தயா, கோபால் கோட்ஸே, மதன்லால் பஹ்வா, திகம்பர் பட்கே
அமர்ந்திருப்பவர்கள்: நாராயண் ஆப்தே, சாவர்க்கர், நாதுராம் கோட்ஸே, விஷ்ணு கார்கரே
பின்புலம்: மகாத்மா காந்தி கொலை வழக்கு தொகுதி II (குற்றம் சுமத்தப்பட்டவர் அறிக்கைகள்) அதிகாரப்பூர்வ ஆவணங்களிலிருந்து மீள் உருவாக்கம் செய்யபப்பட்டவை. கீழ்க்கண்டவை சாவர்க்கர் எழுத்து வடிவிலான வாக்குமூலம் ஆகும்:

சிறப்பு நீதிமன்றம், செங்கோட்டை, தில்லி
குற்றவியல் எண் ….. 1948
வாதி
Vs
கோட்சே மற்றும் பலர் – குற்றம் சுமத்தப்பட்டவர்கள்
இபீகோ 120பி, 302 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு
குற்றம் சுமத்தப்பட்டவர் எண் 7, விநாயக் தாமோதர் சாவர்க்கர் கீழ்க்கண்டவாறு பணிந்து சமர்ப்பிப்பது
என் மீது சுமத்தப்பட்ட எந்தக் குற்றங்களையும் நான் இழைக்கவில்லை அதற்கான நோக்கமும் இல்லை.
இந்த வழக்குக்கான சாட்சி 1948 ஜனவரி 29 மற்றும் 30 தேதிகளில் நடைபெற்ற நிகழ்வுகள் சம்மந்தப்பட்டவர்களின் தனி நபர் செயல்கள் என்றும், கூட்டுச் சதியின் விளைவு அல்ல என்பதையும் தெளிவுபடுத்தி இருந்த நிலையிலும், இந்த நிகழ்வுகளுடன் தொடர்புடைய குற்றம் சுமத்தப்பட்டவர்கள் ஒப்புக் கொண்ட நிலையிலும்,
இந்த நீதிமன்றத்தின் விசாரணை முடிவுகள் எப்படி இருப்பினும், நான் விழுமிய முறையில் வலியுறுத்துவது என்னவெனில், அரசு வழக்கறிஞர் குற்றம் சுமத்தியபடி நான் எந்தவொரு கூட்டுச் சதிக்குக் காரணமாகவும் இல்லை, அதில் ஈடுபடவும் இல்லை அல்லது அதுபோன்ற குற்றவியல் நிகழ்வுகள் குறித்து அறியவும் இல்லை.
குற்றப் பத்திரிக்கையில் குறிப்பிட்டுள்ளபடி நான் எந்தக் குற்றத்துக்கும் உடந்தையாக இருக்கவில்லை, அதற்கான காரணமோ அவசியமோ இல்லை.
என் தரப்பு வாதத்தைத் தெளிவுபடுத்த எனது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் நிலை குறித்துச் சில முக்கிய விஷயங்களைப் பதிவு செய்ய விரும்புகிறேன். 1905ம் ஆண்டு பம்பாய் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றேன். சட்டம் படிக்க இலண்டன் க்ரேஸ் இன் கல்லூரியில் சேர்ந்து 1909ல் பார் கௌன்சிலில் இணையத் தகுதி பெற்றேன். மராட்டியம் மற்றும் ஆங்கில மொழிகளில் கவிதை, நாடகம், விமர்சனம், வரலாறு உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் பல கட்டுரைகள் எழுதி உள்ளேன். நான் எழுதியவற்றிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சில படைப்புகள், இந்தியாவின் ஒன்றுக்கும் மேற்பட்ட பல பல்கலைக்கழகங்களால் பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் பாடங்களாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. சமீபத்தில் நாக்பூர் பலகலைக்கழகம் இலக்கியத்துக்கான எனது சேவைகளைப் பாராட்டிச் எனக்கு ‘டாக்டர்’ பட்டம் வழங்கிப் பெருமைப்படுத்தி உள்ளது. அஸ்ஸாம் முதல் சிந்து வரை, காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இந்தியாவிலுள்ள பல்வேறு மாகாணங்களில் நடைபெறும் அரசியல், சமூகம், மதம், இலக்கியம் தொடர்பான பல்வேறு அமர்வுகள், கூட்டமைப்புகள், கருத்தரங்குகளுக்குத் தலைமை தாங்கத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன். இது தொடர்பான விவரங்களையும், சம்மந்தப்பட்ட ஆவணங்களையும், ப்ராக்சிக்யூஷன் தரப்பு ஏற்கனவே ஆதாரமாகப் பதிவு செய்துள்ளது. (பி.டபிள்யூ 57, பக்கங்கள் 222 & 223, பி.டபிள்யூ 69 பக்கங்கள் 319 & 320 பார்க்கவும்)
சாவர்க்கர் சதன் – பத்தாண்டுகளுக்குமுன்பு பம்பாய் தாதர் பகுதியில் நான் புதிதாகக் கட்டிய ‘சாவ்சர்க்கர் சதன்’ என்னும் வீட்டில் குடியிருக்க வந்தேன். இந்த வழக்கைப் பொருத்தவரை இந்த வீட்டைப் பற்றிய சில விவரங்களைத் தெரிவிக்க விரும்புகிறேன். ‘சாவர்க்கர் சதன்’ இரு அடுக்குகள் கொண்ட வீடாகும். தரைத் தளத்தில், நடுக் கூடம், இந்து சங்கதான் அலுவலகத்துக்காக, இந்து மகாசபாவைப் போலவே, எந்த வாடகையும் இல்லாமல், எனது சொந்தச் செலவில் பரமாரிக்கப்பட்டு வருகிறது. உள்ளூர் இந்து சபா ஊழியர்கள் மற்றும் ஏனைய இடங்களிலிருந்து வருவோர், இந்து சபா பணிகள் குறித்து விவாதிக்க இங்கே வழக்கமாக வருவார்கள். இந்து சபா ஊழியர்களும், வருகை தருவோரும், படிப்பதற்காக ஏராளமான தினசரிகளும், சஞ்சிகைகளும் அங்கே வைக்கப்பட்டிருக்கும். அது வரவேற்பு அறையாகவும் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. அலுவலக ஊழியர்களும், வாடகைக்குக் குடியிருப்போரும் உபயோகப்படுத்தத் தொலைபேசி இணைப்பும் உண்டு. இந்து சங்கதான் அலுவலகம் தொடர்பான தட்டச்சு மற்றும் எழுத்துப் பணிகளும் நடைபெற்று வந்தன. அன்றாட வேலைகளைக் கவனிக்க செயலாளர் நியமிக்கப்பட்டுள்ளார். அலுவலக நிர்வாகம் தொடர்பான மிக முக்கிய மற்றும் அவசரப் பணிகள் இருந்தால் மட்டுமே அவர் என்னைத் தொடர்பு கொள்வார். கடந்த நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளாக திரு ஜி.வி.தாம்லே எனது செயலாளராகவும், திரு கஸர் எனது பாதுகாவலராகவும் இருந்து வருகின்றனர். திரு கஸர் நடுக் கூடத்துக்குப் பின்புறம் உள்ள அறையில் வசித்து வருகிறார்.
இந்த வீட்டின் தரைத் தளத்திலுள்ள நடுக் கூடத்தின் இடதுபக்கம் நுழைந்தால் பல அறைகள் வாடகைக்கு விடப்பட்டிருப்பதைப் பார்க்கலாம். கடந்த சில ஆண்டுகளாக திரு ஏ.எஸ்.பிட்டே தனது குடும்பத்துடன் இங்கே வாடகைக்குத் தங்கியிருக்கிறார். ‘ஃப்ரீ இந்துஸ்தான்’ என்னும் ஆங்கில வார ஏட்டின் ஆசிரியரான அவர் பம்பாய் மற்றும் மராட்டிய மாகாண முன்னணித் தலைவரும் ஆவார். இந்த நடுக் கூடத்தின் வலது பக்கத்தில் திரு ஜி.வி.தாம்லே தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். என்னுடைய செயலாளராக இருப்பதுடன் திரு ஜி.வி.தாம்லே தாதர் மற்றும் பம்பாய் மாகாண இந்து சபாக்களின் தனித்துவ மற்றும் பிரபல ஊழியராகவும் உள்ளார்.
நான் என் குடும்பத்துடன் வீட்டின் முதல் மாடியில் வசித்து வருகிறேன். என் தனிப்பட்ட அலுவலகம் மற்றும் வரவேற்பு அறை முதல் மாடியிலுள்ள நடுக் கூடத்தில் அமைந்துள்ளது. எனது உடல்நிலை தொடர்ந்து சரிந்து வருவதால், செயலாளரின் சிறப்பு அனுமதி இல்லாமல், பொது மக்களோ, ஊழியர்களோ, என்னைச் சந்திக்க முதல் மாடிக்கு அனுமதிக்கப்படுவதில்லை. என்னைப் பார்க்க சிறப்பு அனுமதி பெற்ற பிறகே நேர்காணல்கள் அனைத்துக்கும் நேரம் ஒதுக்குகிறேன். முதல் மாடியிலும் சில அறைகளை ஒருவருக்குக் குடும்பத்துடன் வாடகைக்கு விட்டிருக்கிறேன்.
பொதுவாக என்னைப் பற்றி அதிகம் சொல்லிக் கொள்ள விரும்பாத நான், ப்ராக்சிக்யூஷன் தரப்பு என் மீது சுமத்திய சில மறைமுகக் குற்றச்சாட்டுகள் காரணமாக, விளக்கம் அளிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன். இந்தியா மற்றும் சில தருணங்களில் வெளி நாடுகளிலிருந்து கூட ஆயிரக் கணக்கானோர் சாவர்க்கர் சதனுக்கு வருகை தந்துள்ளனர். இளவரசர்கள் தொடங்கி விவசாயிகள் வரை, சனாதனத் தலைவர்கள் தொடங்கி சோஷியலிஸ்ட் தலைவர்கள் வரை, இந்து சபா தலைவர்கள் தொடங்கி காங்கிரஸ் தலைவர்கள் வரை, பள்ளி மாணவர்கள் தொடங்கிக் கல்லூரி மாணவர்கள் வரை, பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த பிரபலங்கள், ஊழியர்கள், இளைஞர்கள் என அன்றாடம் பலர் நாள் முழுவதும் சாவர்க்கர் சதனுக்கு வந்து போய்க் கொண்டிருப்பார்கள். அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷியா, ஆப்பிரிக்கா மற்றும் உலகின் ஏனைய நாடுகளின் பத்திரிக்கைப் பிரதிநிதிகளும், பிரபல அரசியல் விமர்சகர்களும் என்னை பேட்டி எடுக்க சாவர்க்கர் சதனுக்கு வந்துள்ளனர். என்னைச் சந்திக்க வருவோரை ஒழுங்குபடுத்த நுழைவு வாயிலில் ஒன்றிரண்டு கூர்க்காக்களும், சீக்கியர்களும் பாதுகாப்புக்கு இருப்பார்கள். (சாட்சி பி.டபிள்யூ 57 பக்கங்கள் 222 & 223 பார்க்கவும்).
இந்து மகாசபா – 1937ம் ஆண்டு இந்து மகாசபா தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டேன். ஆறு முறை தொடர்ந்து அதன் தலைவராக இருந்தேன். சமீபமாக எனது உடல் நிலை ஒத்துழைக்காததால் தலைவர் பதவியை ராஜிநாமா செய்துவிட்டேன்.
லாலா லஜ்பத்ராய், பண்டிட் மதன் மோகன் மாளவியா ஆகிய பிரபலங்கள் நிறுவிய மகாசபா பதிவு பெற்ற சங்கம் என்பதை விளக்க இந்த வழக்குக்கு இதுபோதும். விஜயராகவாச்சாரியார், ராமானந்த் சாட்டர்ஜி, என்.சி.கேல்கர், பாய் பரமானந்த், டாக்டர் மூஞ்சே உள்ளிட்ட பிரபலங்கள் இதன் தலைவர்களாகப் பதவி வகித்துள்ளனர். இதன் நிறுவனர்களும், தலைவர்களும், இந்திய தேசியக் காங்கிரஸின் தலைவர்களாகவும், பிரபலங்களாகவும் இருந்துள்ளனர். மகாசபாவின் முக்கிய நோக்கம் ‘இந்து சங்கதான்’ அதாவது இந்துக்களின் அரசியல், சமுக ஒருங்கிணைப்பு மற்றும் ராணுவமயமாக்கல் ஆகும். அரசியல் அறிவியல் ரீதியாக இந்துக்களை இந்தியாவில் ‘தேசியப் பெரும்பான்மையினர்’ என்று அழைப்பதால், ஆற்றலும், பாதுகாப்பும், உறுதியும் கொண்ட பாறைபோன்ற அடித்தளத்தின் மீது வலுவான சுதந்திர இந்திய நாடு உருவாகும் வகையில், இந்துக்களின் ஒருங்கிணைப்பும், கூட்டமைப்பும் அமைய வேண்டும். அவ்வாறு உருவாகும் இந்தியா மதசார்பற்ற நாடாக விளங்க வேண்டும். வாழும் ஒவ்வொரு விசுவாசம் மிக்க குடிமகனும் மதம், சாதி, இன, வேறுபாடு இன்றிச் சமமான உரிமையும், கடமையும் பெற வேண்டும். தேசிய அளவில் இந்துக்களுக்கான உரிமைப் பங்கைத் தாண்டி ஒரு இஞ்ச் அளவு கூட அதிகம் வேண்டாம். ஆனால் அதே சமயம், இந்துக்களுக்குக் கிடைக்க வேண்டிய நியாயமான உரிமையைப் பிடுங்கிக்கொண்டு, முஸ்லிம்கள் என்ற ஒரு காரணத்துக்காக, அவர்களது தகுதியைத் தாண்டிப் பங்களிப்பது, அப்படிச் செய்யாவிட்டால் அவர்கள் விசுவாசமாக இருக்கமாட்டார்கள் என்பதற்காக அப்படிச் செய்வதை இந்திய நாடு பொறுத்துக் கொள்ளாது. அது துரோகத்தின் மீது நம்பிக்கை வைப்பதற்குச் சமானமாகும். சிறுபான்மை மதம் / இன ரீதியிலான தனி வாக்குரிமைக்கு வழிவகுக்கும் ‘கம்யூனல் அவார்ட்’ (Communal Award) திட்டத்தை மகாசபை கடுமையாக எதிர்த்ததற்கு முக்கியக் காரணம், கிட்டத்தட்ட ஒரு இஸ்லாமியருக்கு 3 வாக்குரிமையும், 3 இந்துக்களுக்கு 1 வாக்குரிமையும் மட்டுமே கிடைக்கும் என்று அது சொன்னதால்தான்.
அகில இந்திய அளவில் காங்கிரஸ், முஸ்லிம் லீக் மற்றும் இந்து மகாசபா என மூன்று முக்கிய மற்றும் பெரிய அமைப்புகளாக உருவாகும் வகையில் மகாசபா மிக வேகமாக வளர்ச்சியையும், அங்கீகாரத்தையும் பெற்றது. இங்கிலாந்தில் நடைபெற்ற வட்ட மேஜை மாநாடு மற்றும் ஏனைய ஆலோசனை அமைப்புகளில் பங்கேற்கப் பிரதிநிதிகளை அனுப்பி வைக்க அதற்கு அழைப்பும் விடுக்கப்பட்டது. மேலும் அதன் தலைவர் என்ற முறையில் பல்வேறு தருணங்களில் நேர்காணல்களுக்கும், அரசியல் தொடர்பான கேள்விகளுக்கான கருத்துக்களைப் பதிவு செய்ய பல்வேறு வைஸ்ராய்கள் மற்றும் ஆளுநர்களிடமிருந்து எனக்கும் அழைப்பு வந்துள்ளது. க்ரிப்ஸ் மிஷன் வந்திருந்த சமயத்திலும் அரசு அழைப்புக்கு இணங்க மகாசபாவின் கருத்துக்களை எடுத்துரைக்க எனது தலைமையில் குழு பங்கேற்றது. தாய்நாட்டின் ஒற்றுமையை வேரறுக்கும் வகையில் கூறுபோட்ட க்ரிப்ஸ் திட்ட விதிகளை எந்த சமரசமும் செய்து கொள்ளாமல் ஏற்றுக்கொள்ள மறுத்த ஒரே அமைப்பு, மூன்று அகில இந்திய அமைப்புகளில், மகாசபா மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
மகாசபாவுக்கு அனைத்து மாகாணங்களிலும், இந்தியாவின் எல்லா மாவட்டங்களிலும் கிளைகள் உள்ளன. மகாசபா உருவாக்கிப் பிரச்சாரம் செய்த இந்து சங்கதானுக்குப், பின்னாளில் சாவர்க்கரிஸம் என்று பிரபலமான சித்தாந்தத்துக்கு, இளைஞர்கள் தொடங்கி பிரபல தலைவர்கள் வரை ஆயிரக் கணக்கான இந்துக்கள் மகத்தான ஆதரவளித்தனர். தொடர்ந்து ஆறு ஆண்டுகள் மகாசபை தலைவர் பொறுப்பில் இருந்த காரணத்தால் அதன் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளராகவே நான் பார்க்கப்பட்டேன். என்னுடைய அமைப்பு ரீதியான கடிதத் தொடர்புகள், பயணங்கள், எழுத்துகள், பேச்சுகள் மூலம் இந்தியா முழுவதிலுமுள்ள ஆயிரக் கணக்கான மகாசபா தலைவர்கள், ஊழியர்கள், உறுப்பினர்கள் ஆகியோருடன் தொடர்பை வலுப்படுத்திக் கொண்டேன்.
இதுபோன்ற எண்ணற்ற இந்து மகாசபா ஊழியர்கள் மற்றும் தன்னார்வத் தொண்டர்களுள் ஒருவராகத்தான் பண்டிட் நாதுராம் கோட்சே எனக்குப் பிரத்யேகமாக அறிமுகம் ஆனார். திரு ஆப்தேவும் ஒரு கடிதம் மூலம், நகரில் பணியாற்றும் இந்து சபா ஊழியர் என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார். கலெக்டர் அனுமதி அளித்துள்ளதைத் தொடர்ந்து ரைஃபிள் கிளப் தொடங்கவும் ஆர்வமுடன் இருந்தார். குவாலியர் இந்து சபா தலைவர் என்ற முறையில் டாக்டர் பர்சுரேவும் அறிமுகமானார். கர்கரே நகரைச் சேர்ந்த இந்து சபா ஊழியர் என்பதையும், இந்து மகாசபா மூலம் நகராட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட விவரத்தையும் அறிந்துகொண்டேன். திரு பட்கே எனக்கு எழுதிய கடிதம் மூலம் அவர் இந்து சங்கதான் ஊழியர் என்றும் சட்டத்துக்கு உட்பட்டு உரிமம் தேவைப்படாத ஆயுதங்களை விற்பனை செய்வதையும் தெரிந்துகொண்டேன். குற்றம் சுமத்தப்பட்ட மற்றவர்களான சங்கர், கோபால் கோட்சே மற்றும் மதன்லால் ஆகியோர் யாரென்றே எனக்குத் தெரியாது. அவர்களின் பெயர்களைக்கூட நான் அறிந்திருக்கவில்லை.
குற்றம் சுமத்தப்பட்டவர்களில் இந்து சபா ஊழியர்களாக நான் அறிந்திருந்தவர்கள்:
இந்து மகாசபாவின் உள்ளூர், மாவட்ட மற்றும் மாகாணக் கிளைகள் அமைப்பு ரீதியான விதிகளுக்கு இணங்க அவர்களது பணி குறித்த அறிக்கைகளை பம்பாயிலுள்ள எனது தலைமை அலுவலகத்துக்கு அனுப்பவேண்டும். பூனா இந்து சபாவிலிருந்து வரும் அறிக்கைகளிருந்து திரு பட்கே சம்பளத்துக்கும், சில சமயம் சம்பளம் இல்லாமலும் பிரச்சாரக்காகப் பணியாற்றியதைத் தெரிந்துகொண்டேன். உரிமம் பெற்ற ஆயுதங்களை விற்பனை செய்ய அவர் நடத்திக் கொண்டிருந்த கடை குறித்த ஒன்று அல்லது இரண்டு அறிக்கைகளை எனக்கு அனுப்பியதுடன், நிதி உதவியும் கோரி இருந்தார். இக்கடிதங்கள் பற்றி எனது எழுத்து வடிவிலான வாக்குமூலத்தில் பின்னர் விரிவாக விளக்குகிறேன். இதைத் தாண்டி எனக்குத் திரு பட்கே பற்றி வேறு எதுவுமே தெரியாது. தனிப்பட்ட முறையிலும் என்னுடன் அவர் எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ளவில்லை.
குவாலியர் இந்து மகாசபா பணி குறித்த அறிக்கைகளை டாக்டர் பர்சுரே சில ஆண்டுகள் எனக்கு அனுப்பி வைத்தார். இந்து சங்தான் இயக்கத்துக்கு உதவும் நோக்கத்துடன் ‘இந்து ராஷ்ட்ர சேனா’ என்ற பெயரில் தன்னார்வக் குழுவை அமைத்துள்ளதாக எனக்குக் கடிதம் எழுதினார். ப்ராக்சிக்யூஷன் தரப்பு சாட்சிகளுள் ஒருவர் தன்னை சேனா அமைப்பின் உறுப்பினர் என்றும், அதன் பயிற்சிகளில் பங்கேற்றுள்ளதாகவும், ராஷ்ட்ர சேனாவின் நோக்கம் இந்து இளைஞர்களை ஒருங்கிணைப்பது என்றும் இந்த நீதிமன்றத்தில் சாட்சி அளித்துள்ளார் (பி.டபிள்யூ.39 பக்கம் 137 பார்க்கவும்). நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நான் தலைவர் பதவியிலிருந்து விலகியதைத் தொடர்ந்து டாக்டர் பர்சுரே பற்றிய செய்திகள் எதுவும் எனக்கு வரவில்லை. அவரும் தனிப்பட்ட முறையில் என்னுடன் எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ளவில்லை. நகரிலுள்ள இந்து சபா அறிக்கைகள் மூலம் இந்து ராணுவமயமாக்கலுக்காகவும், சங்கதானுக்காகவும், திரு ஆப்தேவுடன் ஷுத்திப் பணிக்காவும் கடுமையாக உழைத்து வருவதாகத் திரு கர்கரே பற்றி அடிக்கடி நான் கேள்விப்படுவேன். இந்து சபா சார்பில் நகராட்சித் தேர்தல்களில் கர்கரே வெற்றி பெற்றது குறித்து திரு ஆப்தே ஓரிரு முறை எனக்குக் கடிதம் எழுதி உள்ளார். ஆனால் கர்கரே ஒரு தடவை கூட எனக்குக் கடிதம் எழுதியதில்லை. தனிப்பட்ட முறையில் என்னைச் சந்திக்கவும் இல்லை (பி.டபிள்யூ 129 பக்கம் 3 பார்க்கவும்). கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக நான் உடல்நலம் குன்றியதிலிருந்து அவரைப் பற்றி எந்தவொரு தருணத்திலும் நான் கேள்விப்படவும் இல்லை. திரு ஆப்தே மற்றும் திரு பண்டிட் கோட்சே ஆகிய இருவரும் நகர் மற்றும் பூனாவிலுள்ள இந்து சபா ஊழியர்களாகத் தாங்களாகவே என்னிடம் அறிமுகப்படுத்திக்கொண்டு பின்னர் தனிப்பட்ட முறையில் என்னுடன் பழக்கமானார்கள்.
ஆப்தே, கோட்சே மற்றும் அவர்களது கடிதப் போக்குவரத்து
மகாசபா திட்டத்தில் இந்து ராணுவமயமாக்கல் விஷயம் மிக முக்கிய அம்சமாக எப்போதுமே இடம் பெற்று வந்ததுள்ளது. இந்த நோக்கத்துடன் சில பணிகளை நகர் ஊரிலிருந்து ஆப்தே செய்து வருவதாக அவரது கடிதத்திலிருந்து தெரிந்துகொண்டேன். இதுகுறித்து அங்குள்ள தலைவர்களிடம் நடத்திய விசாரணையில் அது உண்மை என்றும், அதற்கான அரசு அனுமதியை அப்போதைய உள்துறை உறுப்பினரிடமிருந்து அவர் பெற்றுள்ளதாகவும் கேள்விப்பட்டேன். பின்னர் பூனாவில் ஸ்ரீ ரகுநாத ராவ் பரஞ்ச்பே தலைமையில் ரைஃபிள் க்ளப்களின் கூட்டத்துக்கான மையத்துக்கும் திரு ஆப்தே ஏற்பாடு செய்திருந்தார் (டி27 & டி28 என்று குறிக்கப்பட்டுள்ள திரு ஆப்தேவின் கடிதங்களைப் பார்க்கவும்). இதைத் தொடர்ந்து ராணுவ அதிகாரிகளால் அவர் கௌரவ தொழில்நுட்ப ஆளெடுப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டதுடன், நிறைவாக விமானப் படையில் கிங்க்ஸ் கமிஷனாகவும் உயர்ந்தார். இந்து சபாவிலும் பணியாற்றினார். அவர் எனக்கு எழுதி, நிதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 10-12 கடிதங்களில் பெரும்பாலானவை ரைஃபிள் க்ளப் அறிக்கைகள் மற்றும் இந்து சபாவில் அவர் பணியாற்றியது தொடர்பானவையே.
ஆப்தேவைப் போலவே கோட்சேவும் அதே வழியில்தான் பணியாற்றிக் கொண்டிருந்தார். மராட்டியத்தின் பல்வேறு பகுதிகளுக்குப் பிரச்சாரக் என்ற முறையில் மேற்கொண்ட பயணம், உள்ளூர் சபா தொடர்பான அவரது பணிகள், கருத்துகள், ஆலோசனைகள் குறித்து எனக்கு அறிக்கைகள் அனுப்பி வைப்பார். எங்களது அமைப்பு ரீதியான கட்டமைப்பு விதிகளின்படி ஒவ்வொரு மாவட்ட மற்றும் மாகாண ஊழியரும் இதுபோன்ற அறிக்கைகளை எனது தலைமை அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டியது கட்டாயமாகும். கோட்சே எனக்கு எழுதி நான் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த 15 அல்லது 20 கடிதங்கள் அனைத்துமே மேற்கூறிய அமைப்பு ரீதியான அறிக்கைகள் தொடர்பானவை மட்டுமே ஆகும்.
கோட்சே மற்றும் ஆப்தே ஆகியோர் எனக்கு எழுதிய சில கடிதங்களைப் ப்ராக்சிக்யூஷன் தரப்பு எனக்கு எதிரான சாட்சியங்களாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. ‘அக்ரணி’க்கு எழுதிய கடிதங்களில் எனது பயணம் உள்பட சில தலைப்புகளில் இடம்பெற்றவைகளைப் ப்ராக்சிக்யூஷன் தரப்பு மேற்கோள் காட்டி எனக்கும் அவர்களுக்கும் ஏதோ தொடர்பு இருப்பதுபோல் நிரூபிக்க முனைந்துள்ளது. ஆனால் விரிவாக ஆராய்ந்தால், எனக்கும் அவர்களுக்கும் இடையேயான உண்மையான தொடர்பைத் தெரிவிப்பதுடன், அவை இயற்கை நியதிக்கும் சட்டத்துக்கும் உட்பட்டவை என்பதையும் விளக்கும். ப்ராக்சிக்யூஷன் தரப்பு எனக்கு எதிராகத் தாக்கல் செய்த அதே கடிதங்கள் மூலமே என் தரப்பு நியாயத்தை நிரூபிப்பேன்.
(தொடரும்…)