Posted on Leave a comment

அரவிந்தன் நீலகண்டனின் சிறப்புக் கட்டுரை – போலிப் பெண் போராளி

முனைவர் தொல்.திருமாவளவன் விடுதலை சிறுத்தகைகள் கட்சியின் தலைவர். 2019 ஜனவரியின் போது சனாதனத்தை ஒழிப்போம் என்கிற போர் அறிவிப்புடன் ஒரு மாநாட்டை நடத்தினார். இம்மாநாட்டில் காங்கிரஸ் கட்சி, திமுக, இடது கம்யூனிஸ்ட் வலது கம்யூனிஸ்ட் ஆகியோருடன் இஸ்லாமிய வகுப்புவாத கட்சிகளும் கலந்து கொண்டன. Continue reading அரவிந்தன் நீலகண்டனின் சிறப்புக் கட்டுரை – போலிப் பெண் போராளி

Posted on Leave a comment

ஸ்டெர்லைட்: இந்தியாவும் தாமிரத்தின் புவி அரசியலும்

மூலம்  :  கௌதம்
தேசிராஜூ, இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சைன்ஸ், பெங்களூரு

தமிழில்:  ஜனனி ரமேஷ்

ஸ்டெர்லைட்
ஆலையில் சுற்றுச்சூழல் மற்றும் மாசுக் கட்டுப்பாட்டு விதிகள் புறக்கணிக்கப்படுகின்றன என்ற குற்றச்சாட்டை முன்வைத்து நடத்தப்பட்ட நீண்ட காலப் போராட்டத்தின் தொடர்ச்சியாக 2018ல் அரசும் நீதிமன்றமும் தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்ட
ன. இதன் பிறகே இந்தியாவிலுள்ள பெரும்பான்மையோர் தாமிரம் பற்றிய செய்தியைப் பார்க்கத் தொடங்கினார்கள்.  

தொழிற்துறை பாதுகாப்பு மற்றும் அங்கு பணியாற்றும் ஊழியர்களின் பொது சுகாதாரம் குறித்த அச்சம் ஆகியவை
வேதியல் துறையைப் போலவே பழமையானது.  அரசாங்கங்கள் மற்றும் நீதித் துறை அமைப்புகளுக்கு இடையே எப்போதுமே ஒரு நிச்சயமற்ற உறவுதான். தொழிற்துறையைப் பொருத்தவரையோ இந்த உறவு, வாழ்க்கைத் தரம் மற்றும் இலாப அளவு ஆகிய இரண்டுக்கும் இடையே, சாதக பாதகமின்றி நடுத்தரமாக எச்சரிக்கை உணர்வுடன் கத்திமேல் நடப்பது போலத்தான். இருப்பினும் இதற்கான தீர்வுகள் உலகின் பல்வேறு பகுதிகளில்
ஓரளவுக்குக் கண்டறியப்பட்டுள்ளன.  அதோடு, செர்னோபில், லவ் கனால், போபால் விஷ வாயுக் கசிவுபோல் மிகப் பெரிய பேரழிவுகள் தற்போதெல்லாம் நடைபெறுவதில்லை.  

ஸ்டெர்லைட் எப்படி வேறுபடுகிறது?  அது ஏன் மூடப்பட்டது? இரண்டு ஆண்டுகள் கழிந்த நிலையிலும் ஏன் இன்னும் மூடியே இருக்கிறது? மாசு, தொழிற்சாலை மூடப்படுவது மற்றும் மீண்டும் திறக்க  இயலாதது ஆகியவற்றுக்கு யார் காரணம்? அனைத்து நிகழ்வுகளுக்கும் அவர்களே காரணமா அல்லது வேறு யாரேனுமா?  இவைபோன்று இன்னும் பல கேள்விகள் உள்ளன.

அடிப்படை அறிவியலிலிருந்து புவி அரசியல் தொடங்குவதால் முதலில் வேதியலுக்குச் செல்வோம். 90க்கும் அதிகமான இயற்கைத் தனிமங்களில் தாமிரம் முதன்மையானதாகும்.  5000 ஆண்டுகளுக்கு  முன்பே மனிதனால் சுத்தமாகத் தனிமைப்படுத்தப்பட்ட இந்த உலோகம் ஏனைய தனிமங்களைப் போலவே வித்தியாசமானதாகும். வேதியலாளர்கள் சேர்மங்களை உருவாக்குவது போலத் தனிமங்களை உருவாக்க முடியாது. பூமியின் மேலடுக்கிலுள்ள தனிமமும், வளிமண்டலமும் மட்டுமே நமக்கு உள்ளன. ஆக்ஸிஜன், சிலிகான், இரும்பு ஆகியவை ஏராளமாக இருக்கின்றன.  தாமிரம் போன்றவை மிக அரிதாகக் கிடைக்கின்றன. அவையும் எல்லா இடங்களிலும் கிடைப்பதில்லை. இயற்கையாக தாமிரமாகக் கிடைக்காத இந்த உலோகத்தின் தாது, சிலி, பெரு, அமெரிக்கா, இந்தோனீஷியா, ஜாம்பியா, காங்கோ ஜனநாயகக் குடியரசு மற்றும்  ஃபிலிபைன்ஸ் ஆகிய சில நாடுகளில் மட்டுமே கிடைக்கின்றன. அங்கும் இங்குமாகச் சில நாடுகளில் மட்டுமே கிடைக்கிறது என்பது சரிதானே? 

பிரச்சினையின் மையப் புள்ளியே இதுதான். அதிக அளவு மின் கடத்துத் திறன், அதிக வெப்பக் கடத்துத் திறன், அதிக வளை மற்றும் வடமாக நீளும் திறன், நடுத்தர விலை (வெள்ளியின் பண்புகள் தாமிரத்தைப் போலவே நல்லதுதான் என்றாலும் அதன் விலை பொதுவான பயன்பாட்டுக்குத் தடையாக உள்ளது) ஆகியவை தாமிரத்தின் சிறப்பியல்புகள். இந்தப் பண்புகள் காரணமாக அதிக அளவிலான மின் பகிர்மானத்துக்குத் தேவையான கம்பி வடங்கள் மற்றும் மின் முனைகள் தயாரிப்பில் தாமிரம் மிக அத்தியாவசியமான உலோகமாகிறது.  எளிதாகச் சொல்வதெனில் உலகளவில் தாமிரம் உடனடியாக எளிதாகக் கிடைக்காவிட்டால் இன்றைய நவீன வாழ்க்கை சாத்தியமில்லை.  

தாமிரத்தின்
முக்கிய தாதுப் பொருளான தாமிர பைரேட்டுகள் இந்தியாவில் அதிக அளவில் கிடைப்பதில்லை.
ராஜஸ்தானிலிருந்து ஜார்கண்ட் செல்லும் வழியில் கிடைக்கும் மிகக் குறைந்த அளவும் (உலகின்
மொத்த தாமிரத் தாதுவில் 2% மட்டுமே) தரம் குறைந்ததாகும்.  ஸ்டெர்லைட் போன்ற தாமிரம் பிரித்தெடுக்கும் நிறுவனங்கள்,
இந்தத் தாதுப் பொருளை மேற்கண்ட சில நாடுகளிலிருந்து இறக்குமதி செய்து, சுத்தமான உலோகத்தை
தூத்துக்குடியில் உற்பத்தி செய்கின்றன. இது மொத்தத் உள்நாட்டுத் தேவையில் சுமார்
35% ஆகும். மின்கலங்களில் பயன்படுத்தப்படும் எதிர்மின் முனைகள் (கேத்தோடுகள்) தயாரிப்புக்காகச்
சீனாவுக்குக் கணிசமான அளவில் தாமிர உலோகத்தை இந்தியா ஏற்றுமதி செய்தும் வந்தது. தாமிரத்தின்
இறக்குமதிகளைச் சீனா நம்பியிருக்க, அதை இந்தியா ஏற்றுமதி செய்து கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 
 

ஒரு
நாட்டின் முக்கிய உலோகத்தை இழக்கச் செய்வது பண்டைய போர் முறையின் ஒர் அங்கமாகும். தங்கத்துக்கும்,
வெள்ளிக்கும் போரிட்டு சாம்ராஜ்ஜியங்கள் உருவாகி உள்ளன அல்லது சரிந்துள்ளன. அறிவியல்
வளரும் போது அத்துடன் இணைந்து தொழில்நுட்பமும் வளரவே, மற்ற தனிமங்களுக்கான நமது விருப்புகளும்
அதிகரிக்கத் தொடங்கின. உதாரணத்துக்கு பிளாட்டினம், பலோடியம், குரோமியம், நியோடைமியம்,
யுரேனியம், இண்டியம் போன்ற தனிமங்களும் இன்றைய அத்தியாவசியப் பணிகளுக்குத் தேவைப்படுகின்றன. 
 

மேற்கண்ட
தனிமங்களைக் கொண்ட நாடுகள் அவை இல்லாத நாடுகள் மீது தங்கள் அசாதாரணச் செல்வாக்கைப்
பயன்படுத்த முடியும்.  இதற்குக் காரணம், தனிமங்களை
உற்பத்தி செய்ய முடியாது, அவற்றைத் தாதுக்களிலிருந்து பிரித்தெடுக்கத்தான் முடியும்.  உதாரணத்துக்கு, தென் ஆப்பிரிக்க நிற வெறி அரசாங்கம்
நீண்ட காலம் நீடித்ததற்குக் காரணம், அமெரிக்கச் சந்தையின் மிக முக்கியப் பொருளான எஃகு
மீது பூசப்படும் குரோமியம் அதன் கைவசம் ஏராளமாக இருந்ததுதான். உயர் காந்தப் பாய்வு
அல்லது பெருக்குகளில் முக்கியப் பொருளாக விளங்கும் நியோடைமியம்
என்னும்
உலோகம் வேறு எந்த நாட்டிடமும் இல்லாத அளவுக்குச் சீனாவில் இன்றைக்குக்
குவிந்திருப்பதால் அதன் உலகச் சந்தை விலையை நினைத்தபடி சீனாவால் நிர்ணயிக்க முடியும்.  இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்…   
 

இதனைக்
கருத்தில் கொண்டு தாமிரத் தேவைகள் தொடர்பான இந்தியாவின் இழப்பு காரணமாக எந்த நாடு அதிக
அளவில் பயனடையும் என்பதை ஆய்வு செய்வது முக்கியமாகும்.  இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான தாமிரச் சுத்திகரிப்பு
ஆலைகள் உள்ளன. சில ஆலைகள் உள்ளூர்த் தாதுக்களைப் பயன்படுத்துகின்றன. சில ஆலைகள் தாதுக்களை
இறக்குமதி செய்கின்றன.  ஸ்டெர்லைட் ஆலை இரண்டாம்
பிரிவில் வருகிறது. மக்கள் அதிகம் வாழும் பகுதியில் இந்தத் தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளது.
இங்கே மாசுக் கட்டுப்பாட்டு விதிகள் (தாமிர பைரேட் தாதுவின் சாம்பலாக்கல் மற்றும் உருக்கலின்
போது வெளியேறும் நச்சுப் பொருள் சல்ஃபர் டை ஆக்சைட்) நீண்ட காலமாகவே கண்டுகொள்ளப்படாமலும்,
புறக்கணிக்கப்பட்டும், மீறப்பட்டும் வந்துள்ளது. இதற்கு நீண்ட நெடிய வரலாறும் உள்ளது.  இந்தப் பிரச்சினை போதாதென்று திராவிட இனவாதம், பிராமணத்
துவேஷம், கிறித்துவ மதமாற்றப் பிரசாரம், இஸ்லாமிய அடிப்படைவாதம் ஆகியவற்றுடன் எப்போதுமே
பரபரப்புடன் கொந்தளிக்கும் அரசியல் சூழலுள்ள மாநிலமாக விளங்கும் தமிழகத்தில் ஸ்டெர்லைட்
ஆலை நிறுவப்பட்டுள்ளது. இவை காரணமாக அதிகார பலத்துடன் சர்வ வல்லமை படைத்தவர்களால் நினைத்த
நேரத்தில் பிரச்சினையைக் கொந்தளிக்க வைக்கவும் முடியும், உடனடியாக நிறுத்தவும் முடியும்.

இவை
அனைத்துக்கும் மேலாக இடதுசாரிகளின் வலுவான தடம், பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி ஊடகங்களின்
பிராந்திய அடிப்படையிலான போக்கு ஆகியவை இம்மாநிலத்தில் ஆழமாக வேருன்றி உள்ளன. அடிப்படைப்
பிரச்சினையைத் தூண்டிய நாட்டுக்கு
,
இந்தியத் தொழிலாளர் மற்றும் தொழில்துறைத் தகராறுகள் மத்திய மாநில
அரசுகளின் பொதுப் பட்டியலில் வரும் என்ற விவரம் என்பது கண்டிப்பாகத் தெரியும். மேலும்  கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாகத் தில்லி அரசுடன்
மோதல் போக்கையும்,  மையத்திலிருந்து விலகும்
தன்மையைம் கொண்ட ஒரு மாநில அரசைக் கையாளவது வெகு சுலபம் என்பதையும் அறிந்தே இருந்தனர்.
எனவேதான் தமிழகத்திலுள்ள ஸ்டெர்லைட் நிறுவனத்தை அவர்கள் தேர்ந்தெடுத்தது,  புவிசார் மூலஉத்தி மேதாவித்தனம் என்பதைத் தவிர வேறொன்றுமில்லை.
 

விவரங்களைக்
கூறிவிட்டேன்.  இதற்கு மேலும் எதையேனும் கூறினால்
அது ஊகங்களுக்கும், அனுமானங்களுக்குமே இடமளிக்கும். எனவே நான் வைத்த புள்ளிகளைக் கோலமாக்கிப்
புரிந்து கொள்ளுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன். கடந்த இரு ஆண்டுகளுக்குள் மரியாதைக்குரிய
ஏற்றுமதியாளர் ஒருவரிடமிருந்து இந்தியா தாமிரத்தை இறக்குமதி செய்யத் தொடங்கி இருக்கிறது
(இதன் காரணமாக நமக்கு ஏற்பட்டுள்ள இழப்பு சுமார் ரூ 40,000 கோடிகள்). இதே காலகட்டத்தில்
சீனாவுக்கான  பாகிஸ்தானின் தாமிர ஏற்றுமதிகள்
400% அதிகரித்துள்ளன (தாமிர பைரேட் தாது பலுசிஸ்தானில் ஏராளமாக உள்ளது). இதன் மூலம்
சீனாவின் தேவைகளைப் பாகிஸ்தான் தொடர்ந்து நிறைவு செய்து வருகிறது.  அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள், தொழிலதிபர்கள்
அல்லது மதக் குழுக்கள் ஆகியோருக்கு லஞ்சம் வழங்க பெரிய ஆற்றல்மிகு நாட்டை உலகின் எங்கு
வேண்டுமானாலும் தேடுங்கள், உங்களுக்கான விடை கிடைக்கும். 
 

எந்த
நாடாக இருப்பினும் அந்நாட்டுத் தலைவர்கள் வேதியல் தனிமம் மற்றும் அதன் சேர்மங்கள் ஆகியவற்றுக்கு
இடையேயுள்ள வேறுபாட்டைத் தங்கள் விஞ்ஞானிகளிடம் கேட்டுத் தெரிந்து கொள்வதிலும், ஆலோசனை
பெறுவதிலும் தவறுவதில்லை.  ஆனால் இந்தியாவிலுள்ள
அறிவியல் ஆலோசகர்களால் இதனைச் செய்ய முடிவதில்லை. ஆனாலும், நிறைவாக, அரசியல், பொருளாதாரம்
மற்றும் மதத்தின் சட்டங்களை விட வேதியல் சட்டங்கள் உயர்வானவை. 

ஆங்கில மூலம் இங்கே.

Posted on Leave a comment

கடைசியாக ஒரு வைரஸ் என்னைப் பீடித்தது – டாக்டர் பியோட் (பெல்ஜியம்)

 கடைசியாக ஒரு வைரஸ் என்னைப் பீடித்தது” – எபோலாவையும் ஹெச்ஐவியையும் எதிர்த்துப் போராடிய அறிவியலாளர் கரோனாவால் மரணத்தை எதிர்நோக்க நேர்ந்த தருணத்தைப் பற்றி!


வைரஸ் ஆய்வாளரும் லண்டன் ஸ்கூல் ஆஃப் ஹைஜீன் அண்ட் டிராபிகல் மெடிசினின் (London School of Hygiene & Tropical Medicine) இயக்குநருமான பீட்டர் பியோட் மார்ச் மத்தியில் கரோனா
நோயால்
(கோவிட்-19) பாதிக்கப்பட்டார்.
ஒரு வாரம் ஒரு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு
, பின்னர் லண்டனில் உள்ள தனது வீட்டில் குணமடைந்து
வருகிறார். இன்னும் மாடிப்படிகளில் ஏறும்போது மூச்சுவிடுவது அவருக்கு சிரமமாகவே
இருக்கிறதாம்.  
 

பெல்ஜியத்தில் வளர்ந்த பியோட், 1976ல் எபோலா வைரஸைக் கண்டுபிடித்தவர்களுள் ஒருவர். தனது
வாழ்க்கையை, தொற்று நோய்களுக்கு எதிராகவே கழித்தவர். 1995 மற்றும் 2008 க்கு
இடையில் எச்.ஐ.வி / எய்ட்ஸ் தொடர்பான ஐக்கிய நாடுகளின் கூட்டுத் திட்டத்தின்
தலைவராக இருந்த அவர், தற்போது ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயனின்
(Ursula von der Leyen) கொரோனா வைரஸ் ஆலோசகராக உள்ளார். புதிய கொரோனா வைரஸுடனான
அவரது தனிப்பட்ட போராட்டம், அவரது வாழ்க்கையை மாற்றும் அனுபவமாக இருந்தது என்று
கூறுகிறார் பியோட்.
 

மே 2 அன்று டச்சு மொழியில் நடந்த நேர்காணலின் தமிழ்
வடிவம் இங்கே – ஆங்கிலம் வழியே தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. மொழி பெயர்த்தவர்
கிருஷ்ணன் சுப்பிரமணியன்.
 

*

மார்ச் மாதம் 19ம் தேதி, எனக்குத்
திடீரெனக் காய்ச்சல் வந்தது.
கடுமையான
தலைவலியும் இருந்தது. நம்பமுடியாத அளவுக்கு என் தலையும்
, தலைமுடியும் வலித்தன. எனக்கு அப்போது இருமல் இல்லை. ஆனால்
என்னுடைய முதல் எண்ணம்
, எனக்கு அந்த நோய் வந்துவிட்டது. ஆனாலும் நான் என்
பணியைத் தொடர்ந்து வீட்டிலிருந்து செய்துவந்தேன். நான் ஒரு வொர்க்கஹாலிக். கடந்த
ஆண்டு லண்டன் ஸ்கூல் ஆஃப் ஹைஜீன் அண்ட் டிராபிகல் மெடிசினில் டெலிவொர்க்கிங்
முறையைக் கொண்டுவர நாங்கள் முயன்றோம். எனவே நாங்கள் அதிக பயணம் செய்ய வேண்டிய தேவை
இல்லை. புவி வெப்பமடைதலுக்கு எதிரான போராட்டத்தின் பின்னணியில் செய்யப்பட்ட அந்த
முதலீடு இப்போது மிகவும் பயனுள்ளதாக உள்ளது.      

நான் சந்தேகித்தபடி, COVID-19 சோதனையில் எனக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. நான்
வீட்டில் விருந்தினர் அறையில் தனிமையில் இருந்தேன். ஆனால் காய்ச்சல் சரியாகவில்லை.
அதற்கு முன்பு இதைப் போல எனக்குத் தீவிரமாக நோய் வந்ததில்லை. கடந்த 10 ஆண்டுகளில்
ஒரு நாள் கூட உடம்பு சரியில்லை என விடுப்பு எடுத்ததில்லை. நல்ல
, ஆரோக்கியமான
வாழ்க்கை வாழ்ந்து வந்தேன்
. தவறாமல் நடைப்பயிற்சி செய்துவந்தேன். என்னை கரோனா
பாதிக்க  ஒரே காரணம் என் வயதுதான். எனக்கு
வயது 71. நான் எப்போதும் நேர்மறையாகச் சிந்திப்பவன் என்பதால்
, இதுவும்
கடந்து போகும் என்று நினைத்தேன். ஆனால் காய்ச்சலும் களைப்பும் அதிகரித்துக்கொண்டே
வந்ததால் ஏப்ரல் 1ம் தேதி ஒரு மருத்துவர் நண்பர் முழுமையான பரிசோதனை செய்துகொள்ள
அறிவுறுத்தினார்.

எனக்குக் கடுமையான ஆக்ஸிஜன் குறைபாடு இருந்தது, ஆனால்
மூச்சு விடுவதில் சிரமம் இல்லை. என்னுடைய நுரையீரலின் படங்கள் நான் கரோனாவின் பொது
அறிகுறியான நிமோனியாவால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்ததையும்
, பாக்டீரியா
நிமோனியா இருந்ததையும் காட்டின. பொதுவாக எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும் நான் தொடர்ந்து
சோர்வாக உணர்ந்தேன்
. சாதாரண சோர்வு அல்ல, கடும் அயர்வு. அந்த உணர்வை நான் ஒருபோதும் மறக்க மாட்டேன். நான் மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டேன். இதற்கிடையில் வைரஸ் சோதனை நெகட்டிவ் என்றுகூடக் காட்டியது. இதுவும்
கரோனாவின் அறிகுறிதான். வைரஸ் மறைந்து விட்டாலும்
, அதன் விளைவு பல வாரங்களுக்குத் தொடர்ந்து இருக்கும். 

மருத்துவமனையில் உடனடியாக ஒரு வென்டிலேட்டரில்
வைக்கப்படுவேன் என்று கவலைப்பட்டேன். ஏனென்றால் அப்படிப்பட்ட நிலை இறக்கும்
வாய்ப்பை அதிகரிக்கும் என்று படித்திருந்தேன். இது என் பயத்தை அதிகரித்தது
. ஆனால்
அதிர்ஷ்டவசமாக முதலில் எனக்கு ஒரு ஆக்ஸிஜன் மாஸ்க்கைக் கொடுத்தார்கள்
. அது என்
பாதிப்பைக் குறைத்தது. எனவே நான் தீவிர சிகிச்சைப் பிரிவின் முன்புற அறையில் ஒரு
தனிமைப்படுத்தப்பட்ட இடத்தில் இருக்கவேண்டியிருந்தது. அந்த நிலையில் சோர்வாகி
, விதியின்
பிடியில் வாழ்க்கையை விட்டுவிடுவது போல் உணர்வீர்கள்.  செவிலியர்களிடம் முழுமையாகச் சரணடைந்துவிடும்
கட்டம் அது.  ஊசியில் இருந்து மருந்து
உட்செலுத்துதல் வரையான ஒரு
ரொட்டீன் வாழ்க்கை அது. நான் எப்போதுமே செயலூக்கத்துடன் வேலை
செய்வது வழக்கம். ஆனால் இங்கு 100% நோயாளி மட்டுமே.
 

ஒரு வீடற்ற நபர், ஒரு கொலம்பியத் துப்புரவாளர், பங்களாதேஷைச் சேர்ந்த ஒரு மனிதருடன் நான் ஒரு அறையைப்
பகிர்ந்து கொண்டேன் – மூன்று பேரும் நீரிழிவு நோயாளிகள். இதுவும் நோயின்
அறியப்பட்ட ஒரு பகுதிதான். பேசும் ஆற்றல் யாருக்கும் இல்லாததால் பகலும் இரவும்
தனிமையில் கழிந்தன. என்னால் பல வாரங்கள் கிசுகிசுப்பாக மட்டுமே பேச முடிந்தது
; இப்போது
கூட
, என் குரல்
மாலையில் சக்தியை இழக்கிறது. ‘நான் இதிலிருந்து குணமான பின்பு எப்படி இருப்பேன்?’ என்ற
கேள்வி எனக்குள் எப்போதும் ஒலித்துக்கொண்டே இருந்தது.

40
ஆண்டுகளுக்கும் மேலாக உலகம் முழுவதும் வைரஸ்களை எதிர்த்துப் போராடிய பிறகு
, நான்
தொற்றுநோய்களின் நிபுணனாகிவிட்டேன். எனக்கு எபோலா நோய் வராமல் கரோனா வந்தது
ஒருவிதத்தில் மகிழ்ச்சி. ஒருவர் கரோனாவுடன் பிரிட்டிஷ் மருத்துவமனையில் சேர்ந்தால்
அவர் இறப்பதற்கு
30% வாய்ப்பு இருப்பதாக நேற்று ஒரு விஞ்ஞான ஆய்வைப்
படித்தேன். இது மேற்கு ஆப்பிரிக்காவில்
2014ல் எபோலா நோயால் நேர்ந்த ஒட்டுமொத்த இறப்பு விகிதம்
ஆகும். இது சில நேரங்களில் உங்கள் அறிவியல் ரீதியான சிந்தனைகளை மழுங்கச் செய்து
, உங்களை
உணர்ச்சியின் பிடிக்குள் தள்ளுகிறது.  வைரஸ்களை
எதிர்த்துப் போராடுவதற்காக நான் என் வாழ்க்கையை அர்ப்பணித்தேன்
. இறுதியாக அந்த
வைரஸ்கள் என்னைப்
பிடித்துப் பழிவாங்குகின்றன
என்று நினைத்தேன். முடிவு எப்படி இருக்கும் என்றே தெரியாமல் ஒரு வாரம் சொர்க்கத்திற்கும்
பூமிக்கும் இடையில் போராடினேன்.
 

நீண்ட ஒரு வாரத்திற்குப் பிறகு மருத்துவமனையில் இருந்து
வீடு திரும்பினேன். தனிப்பட்ட வாகனத்தில் இல்லாமல்
, பொதுப் போக்குவரத்து மூலம் வீட்டிற்குச் சென்றேன். நகரத்தையும்
அதன் வெறிச்சோடிய வீதிகளையும்
, மூடிய விடுதிகளையும், ஆச்சரியப்படத்தக்க வகையில் தூய்மையடந்திருந்த காற்றையும்
பார்க்க விரும்பினேன். தெருவில் யாரும் இல்லாதது ஒரு விசித்திரமான அனுபவமாக
இருந்தது. நீண்ட நாட்கள் படுத்திருந்ததாலும்
, இயக்கம் இல்லாததாலும், என்னுடைய தசைகள்
பலவீனமடைந்திருந்தால்
, என்னால் சரியாக நடக்க முடியவில்லை. ஒருவருக்கு நுரையீரல்
தொடர்பான வியாதிகளுக்கான சிகிச்சை அளிக்கப்படும்போது இது ஒரு நல்ல விஷயம் அல்ல.

வீட்டில் நான் நீண்ட நேரம் அழுதேன். சிறிது நேரம்
தூங்கினேன். ஏதேனும் தவறாகப் போய்விடுமோ என்ற யோசனை உங்களை அலைக்கழிக்கும்.
நீங்கள் மீண்டும் அடைபட்டிருப்பதுபோல் உணர்வீர்கள்
. ஆனால் இது போன்ற விஷயங்களை சரியான முறையில் அணுகுவது
நல்லது. இப்போது நெல்சன் மண்டேலாவை முன்பை விட அதிகமாகப் போற்றுகிறேன். 27
ஆண்டுகளாகச் சிறையில் அடைக்கப்பட்டாலும் சரியான சிந்தனைகளுடன் அவர் வெளியே
வந்தார்.
 

எனக்கு எப்போதுமே வைரஸ்கள் மீது மிகுந்த மரியாதை உண்டு. அது இப்போதும்
குறையவில்லை. எய்ட்ஸ் வைரஸுக்கு எதிரான போராட்டத்திற்காக நான் எனது வாழ்க்கையின்
பெரும்பகுதியை அர்ப்பணித்துள்ளேன். வைரஸ் மிகவும் புத்திசாலித்தனமானது. அதைத்
தடுக்க நாம் செய்யும் எல்லாவற்றையும் அது தவிர்த்துவிடுகிறது. இப்போது என் உடலில்
ஒரு வைரஸ் இருப்பதை நான் உணர்ந்திருப்பதால் அது வைரஸ்களின் மீதான என் பார்வையை
மாற்றியிருக்கிறது. இதற்கு முன்னர் வைரஸ்களுடன் நான் சந்தித்த அனுபவங்கள்
இருந்தபோதிலும்
, இந்த
அனுபவம் என் வாழ்க்கையை மாற்றிவிடும் என்பதை உணர்கிறேன். நான் எளிதாகத்
தாக்கப்படக்கூடியவன் என்று உணர்கிறேன்.
 

நான் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட ஒரு வாரத்திற்குப் பிறகு, எனக்கு
மூச்சுத் திணறல் அதிகரித்தது. நான் மீண்டும் மருத்துவமனைக்குச் செல்ல
வேண்டியிருந்தது
, ஆனால் அதிர்ஷ்டவசமாக வெளிநோயாளி என்ற அடிப்படையில்
சிகிச்சை பெற முடிந்தது. சைட்டோகைன் புயல்
(cytokine storm)
என்று அழைக்கப்படும் ஒன்றால் ஏற்படும் நிமோனியா வகை நுரையீரல் நோய் என்னைப்
பீடித்திருந்தது. இது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி அதீதமாக வேலை செய்வதால்
ஏற்படுவது.  வைரஸால் ஏற்படும் திசு
சேதத்தால் பலர் இறக்கவில்லை
. ஆனால் அவர்களின் நோய் எதிர்ப்பு மண்டலத்தின் அதீதமான
எதிர்வினையின் காரணமாக இறப்பு விகிதம் அதிகமாக இருந்தது. அதன் காரணம், நோய்
எதிர்ப்பு சக்திக்கு இந்த வைரஸை என்ன செய்வது என்று தெரியவில்லை.
 

இந்த நோய்க்கான சிகிச்சையில்தான் இன்னும் இருக்கிறேன். அதிக அளவு
கார்டிகோஸ்டீராய்டுகள் எனக்கு அளிக்கப்படுகின்றன
, அது நோய் எதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாட்டைக் குறைக்கிறது.
என் உடலில் வைரஸ் அதிகரித்த அறிகுறிகளுடன் அந்தப் புயலும் (
cytokine storm)
இருந்திருந்தால்
, நான் உயிர் பிழைத்திருக்க மாட்டேன். எனக்கு ஏட்ரியல்
ஃபைப்ரிலேஷன் என்ற பாதிப்பும் இருந்தது
. என் இதய துடிப்பு நிமிடத்திற்கு 170 ஆகத் துடிக்கிறது. இது
சிகிச்சையின் துணையுடன் கட்டுப்படுத்தப்பட வேண்டும்
. குறிப்பாக பக்கவாதம் உள்ளிட்ட இரத்த உறைவு நிகழ்வுகளைத்
தடுக்க இது கட்டாயம் தேவை. இந்த வைரஸைக் குறைத்து மதிப்பிடக்கூட்டாது. இது நம்
உடலில் உள்ள அனைத்து உறுப்புகளையும் பாதிக்கலாம்.
 

கரோனா 1% நோயாளிகளைக் கொல்கிறது என்று பலர் நினைக்கிறார்கள், மீதமுள்ளவர்கள்
சிலர் ப்ளூ காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் தப்பிக்கிறார்கள். ஆனால் பலருக்கு
நாள்பட்ட சிறுநீரகம் மற்றும் இதய பிரச்சினைகள் ஏற்படலாம். அவர்களின் நரம்பியல்
அமைப்பு கூடப் பாதிக்கப்படுகிறது. உலகெங்கிலும் லட்சக்கணக்கான மக்கள் இந்த நோயால்
பாதிக்கப்பட்டிருப்பார்கள்
. அவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் சிறுநீரக டயாலிசிஸ்
போன்ற சிகிச்சைகள் தேவைப்படும். கொரோனா வைரஸைப் பற்றி நாம் எவ்வளவு அதிகமாகக்
கற்றுக்கொள்கிறோமோ அவ்வளவு கேள்விகள் எழுகின்றன. இதனோடு பயணம் செய்துகொண்டே நாம்
அதைப் பற்றிக் கற்றுக்கொண்டிருக்கிறோம். அதனால்தான்
, விமர்சகர்கள் பலரைப் பார்த்து நான் எரிச்சலடைகிறேன்.
எந்த ஒரு நுண்ணறிவும் இல்லாமல் அவர்கள் அறிவியலாளர்களையும்
, கொள்கை
முடிவுகள் எடுப்போரையும் விமர்சனம் செய்துகொண்டு
, வைரஸைத் தடுக்க முயன்றுகொண்டிருக்கிறார்கள். அது
நியாயமானதல்ல.

இன்று, 7 வாரங்களுக்குப் பிறகு, முதல் முறையாக நான் பழைய நிலையைக் கிட்டத்தட்ட
அடைந்துவிட்டதுபோல் உணர்கிறேன். வீட்டின் அருகிலுள்ள துருக்கியக்
கடைக்காரரிடமிருந்து வெள்ளை அஸ்பாரகஸை வாங்கிச் சாப்பிட்டேன்
. அஸ்பாரகஸ்
வளரும் சமூகமான பெல்ஜியத்தின் கீர்பெர்கனைச் சேர்ந்தவன் நான். என் நுரையீரல்
படங்கள் ஒருவழியாகச் சீரடைந்திருக்கின்றன. அதைக் கொண்டாட நீண்ட காலத்திற்குப் பின்
ஒரு நல்ல மது பாட்டிலைத் திறந்தேன்
. எனது செயல்பாடு சிறிது காலத்திற்கு
மட்டுப்படுத்தப்பட்டிருந்தாலும்
, நான் மீண்டும் வேலைக்குச் செல்ல விரும்புகிறேன். நான்
ஈடுபட்ட முதல் பணி
, வான் டெர் லேயனின் COVID-19 R&D சிறப்பு ஆலோசகராக அமர்ந்தது.

ஒரு தடுப்பூசியை உருவாக்கும் பணியில் இந்த ஆணையம் தீவிரமாக
முனைந்துள்ளது.  ஒரு விஷயத்தைத் தெளிவாகப்
புரிந்துகொள்ளுங்கள்.  கொரோனா வைரஸ்
தடுப்பூசி இல்லாமல்
, நாம் ஒருபோதும் சாதாரணமாக வாழ முடியாது. இந்த
நெருக்கடியிலிருந்து வெளியேறும் ஒரே உண்மையான உத்தி, ஒரு தடுப்பூசியை உருவாக்குவது.
இது உலகளவில் வெளியிடப்படுவதற்கு
, பில்லியன் கணக்கில் இந்த மருந்தை உற்பத்தி
செய்யவேண்டும். இது பெரும் சவாலான முயற்சி. இதற்கான முயற்சிகள் பல்வேறு இடங்களில்
நடைபெற்றுக்கொண்டு இருக்கின்ற போதிலும்
, கரோனாவுக்கான தடுப்பூசியை உருவாக்குவது சாத்தியமா என்பதே
இன்னும் உறுதியாகத் தெரியவில்லை.

தடுப்பூசிகள் மூலம் தங்கள் வாழ்க்கையைக்
காத்துக்கொண்டிருக்கும் சிலர் தங்கள் குழந்தைகளுக்குத் தடுப்பூசி போட விரும்பாமல்
இருக்கும் முரண்பாடும் இன்று உள்ளது. கரோனா வைரஸுக்கு எதிராக ஒரு தடுப்பூசியைக் கண்டுபிடித்தால்
அதுகூட ஒரு பிரச்சினையாக மாறும்
, ஏனென்றால் அதிகமானோர் அதைப் போட்டுக்கொள்ள மறுத்தால், நாம்
ஒருபோதும் இந்தத் தொற்றுநோயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியாது.

இந்த நெருக்கடி பல பகுதிகளில் அரசியல் பதட்டங்களைக்
குறைக்கும் என்று நம்புகிறேன். இது ஒரு மாயையாக இருக்கலாம்
. ஆனால்
போலியோ தடுப்பூசி பிரசாரங்கள் அமைதிக்கு வழிவகுத்ததைக் கடந்த காலத்தில்
பார்த்தோம். அதேபோல்
, COVID-19 க்கு எதிரான போராட்டத்தில் ஒரு சிறந்த பணியைச் செய்து
வரும் உலக சுகாதார அமைப்பு [
WHO], தனது அதிகாரக் கட்டுப்பாடுகளைத் தளர்த்திக்கொள்ளும்
என்று எதிர்பார்க்கிறேன். தனிப்பட்ட நாடுகளின் சொந்த நலன்களைக் காக்கும் ஆலோசனைக்
குழுக்களை அந்த அமைப்பு சார்ந்து இருப்பதிலிருந்து வெளிப்பட்டு சீர்திருத்தப்படலாம்
என்று நம்புகிறேன்.
WHO கூட அடிக்கடி ஒரு அரசியல் விளையாட்டு மைதானமாக மாறிவிடுகிறது.

நான் நேர்மறை எண்ணங்களைக் கொண்டவனாகப் பிறந்தவன்.  மரணத்தைத் தொட்டுவிட்டுத் திரும்பிய பின், முட்டாள்தனத்திற்கும்
அறிவற்றுச் செயல்படும் விதத்திற்குமான எனது சகிப்புத்தன்மையின் அளவு முன்பை விட
இன்னும் குறைந்துவிட்டது. அதேசமயம், நோய்வாய்ப்படுவதற்கு முன்பிருந்ததை விட
இப்போது என்னுடைய நடவடிக்கைகளைத் தேர்ந்தெடுத்தான் செயல்படுத்துகிறேன் என்றாலும், அமைதியாகவும்
ஆர்வமுடனும் பணிகளைத் தொடர்கிறேன்
.

நன்றி: www.sciencemag.org

Posted on Leave a comment

சாவர்கர்: அந்தமான் சிறை அனுபவங்கள் – சிறப்புக் கட்டுரை

சாவர்க்கரைப் போல தமிழ்நாட்டில் மிகக் குறைவாக மதிப்பிடப்பட்ட,
வேண்டுமென்றே மட்டம்தட்டிச் சித்திரிக்கப்பட்ட வேறொரு தலைவர் இருக்கமுடியாது. எந்த
அளவுக்கென்றால், கருணாநிதியைத் தவிர வேறு எதையுமே அறிந்துகொள்ளாத திமுகவினர் கூட சர்வசாதாரணமாக
சாவர்க்கரை பிரிட்டிஷாரின் கால் நக்கிப் பிழைத்தவர் என்றும், பிரிட்டிஷாரிடம் மன்னிப்புக்
கேட்டவர் என்றும் சொல்லும் அளவுக்கு. உண்மையில் எதையும் தீவிரமாக அதன் வரலாற்றுப் பின்புலத்துடன்
அறிந்துகொள்ளும் நோக்கற்றவர்களின் செயலே, இந்த மன்னிப்பு என்கிற வார்த்தையை மட்டும்
கொண்டு சாவர்க்கரை அணுகுவது. சாவர்க்கரின் வாழ்க்கையை அணுகிப் பார்த்தால் தெரியும்,
இந்தியாவின் மிகச் சிறந்த தேச பக்தர்களில், தீவிரமான சுதந்திரப் போராட்ட வீரர்களில்
சாவர்க்கர் எத்தனை முக்கியமானவர் என்று.


அவரது வாழ்க்கை முழுக்கவே போராட்டம் நிறைந்தது. எந்த நிலையிலும்
தன்னம்பிக்கையைக் கைவிடாமல், ‘இதெல்லாம் எதற்காக’ என்ற எதிர்மறைச் சிந்தனைக்குத் தன்னை
இழந்துவிடாமல், பாரத அன்னைக்கு சுதந்திர மலரை அணிவிப்பது ஒன்றே குறிக்கோள் என்று வாழ்ந்தவர்
சாவர்க்கர். பிரிட்டிஷாரால் இரட்டை ஆயுள் தண்டனை வழங்கப்பட்ட ஒரே தலைவர். அதாவது
50 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படுகிறது. தன் மனைவியை, குடும்பத்தைப் பிரிந்து
அந்தமான் சிறையில் வாடியவர். இவர் மட்டுமல்ல, இவரது சகோதரர்களும் இந்திய சுதந்திரப்
போராட்டத்தில் பங்குகொண்டு சிறை சென்றார்கள்.
மெர்சிலி தீவில் அவர் தப்பிக்க முயன்றதெல்லாம் நம்ப முடியாத
அளவுக்கான சாகசம். அந்தமான் சிறைத் தண்டனை குறித்து அவர் எழுதிய புத்தகம்
‘Transportation for life’ தற்போது தமிழில் வெளியாகி இருக்கிறது. (மொழிபெயர்ப்பு: எஸ்.ஜி.
சூர்யா, கிழக்கு பதிப்பக வெளியீடு, விலை 650 ரூ). இந்தப் புத்தகம் 1927ல் மராட்டியில் முதலில் வெளியானது.
இது தொடராக வெளிவரவே பல இன்னல்களைச் சந்திக்கவேண்டி இருந்தது. பெரும் போராட்டத்துக்குப்
பிறகே ஆங்கிலத்தில் வெளியானது. 90 வருடங்கள் கழித்து முழுமையாகத் தமிழில் வெளியாகிறது.
இவரது நண்பரான வ.வெ.சு. ஐயர் இதன் தமிழ் மொழிபெயர்ப்பை அந்தக் காலகட்டங்களில் வெளியிட்டதாகத்
தெரிகிறது. முழுமையாக வெளியிட்டாரா, சில பகுதிகளை மட்டும் வெளியிட்டாரா என்பது தெரியவில்லை.
சாவர்க்கரின் வாழ்க்கை அல்ல, அவரது புத்தகங்கள் கூட இப்படித்தான்
வெளியாகின. முதல் இந்திய சுதந்திரப் போர் என்று முதன்முதலில் சிப்பாய்க் கலகத்தை விளித்தவர்
இவரே. அந்தப் புத்தகம் மிகப் பெரிய சவால்களை எதிர்கொண்டே வெளியானது. அவரது கையெழுத்துப்
பிரதி இந்தியாவுக்கு வந்துவிடக்கூடாது என்று பிரிட்டிஷ் அரசு அத்தனை முயன்றது. நாடு
நாடாகச் சென்ற அந்தப் பிரதி, மொழிபெயர்க்கப்பட்டு புத்தகமாக வெளி வந்ததை ஒரு சாகசப்
பயணம் என்றே சொல்லலாம். (தமிழில் எரிமலை என்கிற தலைப்பில் அல்லயன்ஸ் வெளியீடாகக் கிடைக்கிறது.)
இப்படி வாழ்க்கை முழுக்க எதிர்ப்புகளிடையேயும் போராட்டங்களிடையேயும்
வாழ்ந்தவர் சாவர்க்கர். பிரிட்டிஷாரிடம் மன்னிப்பை அவர் சிறைக்குச் சென்ற உடனே கேட்கவில்லை.
12 ஆண்டுகள் கடும் சிறைத் தண்டனை. எப்படிப்பட்ட சிறைத் தண்டனை? ‘அந்தமான் சிறை அனுபவங்கள்’
புத்தகம் அதனை விவரிக்கிறது. ஆறு மாதங்கள் கைகளிலும் கால்களிலும் சங்கிலி மாட்டப்பட்டு
கொடுமைப்படுத்தப்படுகிறார். செக்கிழுக்க வைக்கப்படுகிறார். பாரிஸ்டர் படிப்பு படித்தவர்
கயிறு திரிக்க வைக்கப்படுகிறார். தனிமைச் சிறையில் அடைக்கப்படுகிறார். தூக்குமேடைக்கு
எதிரே இவருக்கு அறை தரப்படுகிறது. தினம் தினம் தூக்குமேடைக்கு அழைத்துச் செல்லப்படும்
கைதிகளின் துன்பம் இவருக்குத் தரும் பயம் மற்றும் வேதனையின் மூலம் இவரது மனச்சிதைவைத்
துரிதப்படுத்த பிரிட்டிஷ் அரசு முயல்கிறது. தினம் தினம் யாரோ ஒரு கைதி தூக்குப் போட்டுத்
தற்கொலை செய்துகொள்ள முயல்கிறார் அல்லது தூக்குப் போட்டுத் தற்கொலை செய்துகொள்கிறார்.
சில கைதிகளுக்குத் தனிமைச் சிறையின் தாள முடியாத துன்பம் மனநலச் சிதைவைக் கொண்டு வருகிறது.
இத்தனைக்கும் மத்தியில் தன் வாழ்க்கை குறித்த சிந்தனைகளுடன் நிச்சயமற்ற எதிர்காலத்தையும்
இந்தியாவில் இருக்கும் தன் குடும்பத்தையும் எண்ணி சாவர்க்கர் தவிக்கிறார். ஏன் இந்த
வாழ்க்கை என்கிற எண்ணம் தலையெடுக்கிறது. ஆனால் மிகப் பெரிய போராட்டத்துடன் அதிலிருந்து
மீள்கிறார். தற்கொலை என்பது தீர்வல்ல என்று அனைவரிடம் விவரிக்கிறார்.
சிறையில் இருக்கும் ஒவ்வொருவரின் எண்ணமும் எப்பாடுபட்டாவது சிறையில்
இருந்து தப்பிப்பது என்பதை நோக்கியே இருக்கவேண்டும் என்று மிகத் தீர்மானமாகச் சொல்கிறார்
சாவர்க்கர். ஏன்? வெளியில் சென்று, தங்களுக்குக் கிடைக்கும் நேரத்தில் தேச சேவை செய்யலாம்
என்பதே அவரது எண்ணம்.
இந்தப் புத்தகத்தில் என்னை அசர வைத்த ஒரு விஷயம். சாவர்க்கரின்
எந்த ஒரு எண்ணமும் எல்லாக் காலத்திலும் தேச சேவை என்ற ஒன்றை நோக்கியே உள்ளது. பின்பு
சாவர்க்கர் கேட்டதாகச் சொல்லப்படும் மன்னிப்பும் கூட இதன் பின்னணியிலேயே உள்ளது. விடுதலை
கிடைத்து வீட்டுக்கு வந்து சுக வாழ்க்கை வாழவில்லை சாவர்க்கர். நிபந்தனையின் பேரில்
வெளிவரும் சாவர்க்கர், இன்னும் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பிரிட்டிஷ் அரசின் கண்காணிப்பில்
(ரத்னகிரிக்குள் மட்டும் நடமாடும் அனுமதியோடு) வைக்கப்படுகிறார். பின்னரும் சுதந்திரப்
போராட்டத்துக்குத் தேவையான, தன்னால் இயன்ற அனைத்து வேலைகளையும் செய்கிறார். எந்த நேரத்திலும்
பிரிட்டிஷ் அரசு தன்னைக் கைது செய்து மீண்டும் அந்தமான் இருட்டுச் சிறைக்குள் தள்ளும்
என்று தெரிந்திருந்தும் இதனைச் செய்கிறார்.
அந்தமான் சிறையில் இவருடன் அடைக்கப்பட்டிருக்கும் பல தேச பக்தர்கள்
பற்றிய குறிப்புகளை எல்லாம் நினைவில் வைத்திருந்து இப்புத்தகத்தில் பதிவு செய்கிறார்.
சாவர்க்கரின் நினைவாற்றலும் நன்றி உணர்ச்சியும் அபாரமானவை. இப்புத்தகத்தின் ஒவ்வொரு
வரியிலும் அதனை உணரலாம். அதேபோல் சாவர்க்கரின் வாதத்திறமை உலகப் பிரசித்தி பெற்றது.
இந்த நூல் முழுக்க சாவர்க்கர் தனது கருத்துகளை அதன் பின்னணியோடும் தர்க்க ஆதாரத்தோடும்
மிகத் தெளிவாக முன்வைக்கிறார். அதுமட்டுமல்ல, தன் கருத்துக்கான எதிர்க்கருத்தைச் சொல்லி
அது ஏன் சரியாக இருக்கமுடியாது என்பதை விவரிக்கிறார். மகாத்மா காந்தி ஜி கொலை வழக்கில்
அவர் தந்த எழுத்துபூர்வமான சாட்சியத்திலும் இதே போன்ற விவரணைகளைக் காணலாம். எந்தக்
காலத்திலும் அவர் தன் கருத்துகளை இப்படியான தர்க்க நியாயம் இல்லாமல் உதிர்த்ததே இல்லை.
அந்தமான் சிறைக்குச் செல்லும்போது சாவர்க்கரின் முன்பு பல சவால்கள்
இருந்தன. முதலில் தன்னை மீட்டுக்கொள்வது, பின்பு அங்கிருக்கும் கைதிகளுக்கு நம்பிக்கை
ஊட்டுவது, கைதிகளின் தற்கொலைகளை நிறுத்துவது, ஹிந்துக் கைதிகள் முஸ்லிம் கைதிகளால்
நடத்தப்படும் விதத்தை மாற்றுவது, பிரிட்டிஷ் அரசின் சூழ்ச்சிகளை முறியடிப்பது, அங்கிருக்கும்
கைதிகளுக்கு எழுத்தறிவிப்பது, அந்தமான் தீவில் சுதந்திரக் கனலைப் பரப்புவது, கட்டாயப்படுத்தி
அல்லது வேறு வழியின்றி அல்லது ஆசை காட்டி மதமாற்றம் செய்யப்பட்ட ஹிந்துக் கைதிகளை தாய்மதம்
திரும்ப வைப்பது, ஹிந்துக் கைதிகளிடையே அநியாயமாகப் புகுந்துவிட்ட சாதியக் கொடுமைகளை
அகற்றுவது, அந்தமான் சிறையின் நிலையை இந்தியாவில் இருக்கும் அரசுக்கும் காங்கிரஸ் தலைவர்களுக்கும்
பத்திரிகைகளுக்கும் தெரிவித்து சிறையின் நிலையை முன்னேற்ற உதவுவது, இந்தியாவில் நடக்கும்
சுதந்திரப் போராட்டங்களுக்குத் தன்னால் இயன்ற கருத்துகளைச் சொல்வது, எப்படியாவது இந்தச்
சிறையில் இருந்து தப்பித்து இந்தியா சென்று இந்தியாவின் சுதந்திரத்துக்காகப் போராடுவது
– இத்தனை எண்ணங்களுடன் அலைக்கழிகிறார் சாவர்க்கர்.
உங்களால் நம்பமுடிகிறதா? இவை அனைத்தையும் செய்து முடிக்கிறார்.
ஒருவர் ஏன் தலைவர் என்று கொண்டாடப்படவேண்டும் என்பதற்கான காரணங்கள் இவற்றில் உள்ளன.
இந்தப் புத்தகம் ஒரு பொக்கிஷம். இதனைத் தமிழில் கொண்டு வந்த ஒவ்வொருவரும், அதற்கு உதவிய
ஒவ்வொருவரும் பாராட்டுக்குரியவர்கள். பல ஆண்டுகள் நீடித்து நிற்கப் போகும் ஆவணம் இது.
அந்தமான் சிறையில் சாவர்க்கர் அடைக்கப்பட்டபோது பிரிட்டிஷாரின்
ஒரே நோக்கம், எக்காரணம் கொண்டும் சாவர்க்கர் உயிருடன் இந்தியா மீண்டுவிடக்கூடாது என்பதாகவே
இருந்தது. அஹிம்சைப் போராட்டங்களை எப்படியும் எதிர்கொண்டுவிடலாம் என்று நம்பிய பிரிட்டிஷ்
அரசு, புரட்சிப் போராட்டத்தை எதிர்கொள்ள அஞ்சியது. அதை ஒடுக்குவதே ஒரே வழி என்று புரிந்துகொண்டது.
அதுவும் வெறும் வாய் வார்த்தை பேசி அரசை மிரட்ட மட்டுமே செய்பவர் அல்ல சாவர்க்கர்,
செயலையும் நிகழ்த்திக் காட்டுபவர் என்பது புரிந்தபோது, அவரை இந்தியாவுடனான அனைத்துத்
தொடர்புகளில் இருந்தும் விலக்கி வைப்பது நல்லது என்ற முடிவுக்கு வருகிறது.
ஆனால் அந்தமான் சிறை அனுபவம் சாவர்க்கரை அவரளவில் பெரிய தலைவராக
உயர்த்துகிறது. (அதேசமயம் மக்கள் தலைவர் என்னும் சிந்தனையிலிருந்து முற்றிலுமாக விலகவும்
செய்துவிட்டது என்பது சோகமான வரலாற்று நிகழ்வு.) பிரிட்டிஷ் அதிகாரிகள்கூட அந்தமானுக்கு
வந்தால் சாவர்க்கரைச் சந்திக்காமல் செல்வதில்லை. எல்லோருடனும் உரையாடத் தயாராக இருக்கும்
சாவர்க்கர், அனைவரிடமும் இந்திய சுதந்திரத்தைப் பற்றி விவாதிக்கிறார். சாவர்க்கரின்
பரந்துபட்ட அறிவும், இலக்கியப் பரிட்சயமும், உலக நாடுகள் பற்றிய வரலாற்று ஞானமும்,
அவரால் எத்தகைய எதிர்க்கேள்விகளையும் எதிர்கொள்ள வைக்கின்றன. இந்த நூலில் அவை அனைத்தும்
மிக விரிவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மதமாற்றம் செய்யப்படும் ஹிந்துக் கைதிகள் பற்றிப் பேசும்போது
மிகத் தெளிவாக தன் கருத்துகளைப் பதிவு செய்கிறார். தானாக மனம் உணர்ந்து மதம் மாறுபவர்களைப்
பற்றி சாவர்க்கருக்கு எந்தப் புகாரும் இல்லை. அது அவர்களது சுதந்திரம். ஆனால், கைதிகள்
முஸ்லீமாக மதம் மாறினால் அவர்களுக்குச் சிறையில் சில சுதந்திரங்கள் தரப்படும், ஜமேதாராகலாம்
என்பன போன்ற சலுகைகள் தரப்படுகின்றன. சிறையில் படும் கஷ்டங்கள் தாங்காமல் பலர் மதம்
மாறுகிறார்கள். இது ஒரு பக்கம். இன்னொரு பக்கம் ஹிந்துக்களிடையே உள்ள சாதி வேற்றுமை
மற்றும் சில மூட நம்பிக்கை. ஒருவன் ஒரு தடவை முஸ்லீம்களிடையே இருந்து உணவருந்தினாலும்
அவன் ஹிந்து அல்ல என்று முடிவு செய்து அவனை விலக்கி வைக்கிறார்கள். இதனால் அவன் தாய்
மதம் திரும்பும் வாய்ப்பே இல்லாமல் போய், முஸ்லீமாகவே ஆகிவிடுகிறான். அதுவும் ஒரு சக
ஹிந்து பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக இருந்தால் இது இன்னும் எந்த அளவுக்குப் போகும்
என்று சொல்வதற்கில்லை. சாவர்க்கர் இதையெல்லாம் எதிர்க்கிறார். முஸ்லீம்களுடன் உணவருந்திய
ஒருவருடன் இவரே அமர்ந்து உணவு உண்கிறார். பிறகு மெல்ல நான்கைந்து பேர் இவர்களுடன் சேர்ந்து
உணவு உண்கிறார்கள். பிறகு வேறு வழியின்றி அனைவரும் சேர்ந்து உணவு உண்கிறார்கள். இப்படியாக
ஒவ்வொரு செயலையும் தானே முன் நின்று செய்கிறார்.
முஸ்லிம் கைதிகள், குறிப்பாக பதான் – சிந்தி – பலூச்சி முஸ்லீம்கள்
(தமிழகம் மகாராஷ்ட்ரம் போன்ற இடங்களில் இருந்து வந்த முஸ்லிம்கள் இத்தனை கொடூரமானவர்கள்
அல்ல என்கிறார்) அடாவடி செய்யும்போது அதே போக்கில் ஹிந்துக் கைதிகளை அடாவடி செய்யத்
தூண்டுகிறார். இதனால் சிறையில் பெரிய பிரச்சினைகள் எழுகின்றன. மேலதிகாரிகளின் விசாரணையின்போது
எல்லாம் வெளிச்சத்துக்கு வர, இரு தரப்பு இந்த அடாவடிகளைச் செய்யக்கூடாது என்று முடிவாகிறது.
இதை ஒரு போராட்ட வடிவமாகவே சிறையில் செய்கிறார் சாவர்க்கர். ஹிந்துக் கைதிகளின் உணவை
வேண்டுமென்றே முஸ்லிம் கைதிகள் தொட்டுவிட்டு, அது தீட்டு என்பதால் ஹிந்துக் கைதிகள்
உணவை உண்ணாமல் இருக்க, அந்த உணவையும் முஸ்லிம்கள் எடுத்துக் கொள்கிறார்கள். அதே பாணியை
ஹிந்துக் கைதிகளை வைத்துச் செய்ய வைக்கிறார். வேறு வழியின்றி முஸ்லீம் கைதிகள் அமைதியாகிறார்கள்.
அதிகாலை நேரத்தில் தொழுகையால் வரும் பிரச்சினையையும் இப்படியே எதிர்கொள்கிறார். சங்கநாதம்
எழுப்பச் சொல்லி ஹிந்துக் கைதிகளைத் தூண்டுகிறார். முதல் உலகப் போரின்போது கெய்சர்
இஸ்லாமியராக மதம் மாறிவிட்டார் என்ற செய்தியை முஸ்லீம் கைதிகள் பரப்ப, இவர் பதிலுக்கு
அவர் ஆர்யசமாஜி ஆகிவிட்டார் என்கிற செய்தியைப் பரப்பச் சொல்கிறார். உருதுவில் எழுதுவதே
மேன்மையானது என்கிற எண்ணத்தை உடைத்து, ஹிந்தியில் எழுதச் சொல்கிறார். இவையெல்லாம் சிறைக்குள்
அத்தனை இன்னல்களுக்குள் சாவர்க்கரால் செய்யப்பட்டவை என்பதை மட்டும் நினைவில் கொள்ளுங்கள்.
சிறையிலும் சிறைக்கு வெளியே அந்தமான் தீவிலும் தாய்மதம் திரும்புவதை
ஒரு சடங்காகவே செய்ய ஆரம்பித்தார் சாவர்க்கர். இதனால் திணறிப் போன பிரிட்டிஷ் அரசு,
சிறைக்குள் எந்த ஒரு மதத்தில் இருந்தும் இன்னொரு மதத்துக்கு மதம் மாற்றுவதைத் தடை செய்கிறது.
இதுதான் சாவர்க்கர் எதிர்பார்த்ததும்கூட!
மதமாற்றம் என்பது ஒரு தனிமனிதரோடு முடியக்கூடியதல்ல, அடுத்தடுத்த
தலைமுறைகளில் ஒரு மதத்துக்கான அடித்தளமாக மாறும் இயல்புடையது என்கிறார். குற்றவாளியாகவே
இருந்தாலும் ஒருவர் ஹிந்து மதத்தில் தொடரவேண்டிய அவசியத்தை, அதன் அடுத்தடுத்த தலைமுறைகளை
மனதில் வைத்துச் சொல்கிறார். இதற்காக உலக வரலாற்றில் இருந்து பல உதாரணங்களை முன்வைக்கிறார்.
நூல் முழுக்க இப்படித்தான், எதிர்காலத்தில் என்ன நடக்கும், அதற்கான உலக வரலாற்று ஆதாரங்கள்
என்ன என்பதோடு நம் புராணங்களின் ஆதாரங்கள் என்று அடுக்கிக்கொண்டே போகிறார்.
சிறைக்குள் எழுத்தறிவிக்க சாவர்க்கர் எடுத்துக்கொள்ளும் முயற்சிகளைப்
பற்றிச் சொல்லவேண்டுமானால், எழுத்தறிவிப்பவன் இறைவன் என்றால் இப்படி எழுத்தறிவித்தவன்
அதற்கு மேல் என்றே சொல்லவேண்டும். மூன்று ஆர் (Reading, wRiting, aRithmetic) என்பதை
ஒருவன் எப்பாடுபட்டாவது கற்றுக்கொள்ளவேண்டும் என்பதில் குறியாக இருக்கிறார்.
தான் தொடர்ந்து எழுதவேண்டும் என்பதில் சாவர்க்கருக்கு இருந்த
ஆர்வம் அளப்பரியது. சிறையின் சுவர்களையே காகிதமாக்கி, சிறையில் கிடைக்கும் ஒரு ஆணியை
மறைத்து வைத்து அதிலேயே தன் கருத்துகளை எழுதுகிறார். புத்தகங்கள் பற்றிய குறிப்புகள்,
புதிய கவிதை என்று எழுதுகிறார். வேறு அறைக்கு மாற்றப்பட்டால், இந்த அறை மற்ற கைதிகளுக்கு
ஒரு புத்தகமாகிறது. மாற்றப்பட்ட சிறையிலும் இப்படி வேறு ஒன்றை எழுதுகிறார்.
சிறைக் கைதிகளுக்குள்ளே ரகசிய முறையில் செய்திகளைப் பரிமாற சாவர்க்கர்
செய்யும் விஷயங்கள் எல்லாம் கற்பனைக்குள் அடங்காதவை. code முறையில் பேசிக்கொள்வது,
பானைத் துண்டுகளில் செய்திகளைப் பரப்புவது, கிடைக்கும் காகிதங்களில் எழுதி சுருட்டி
எரிந்து பரப்புவது என்று என்னவெல்லாமோ செய்கிறார். கைதிகளையும் அதில் பங்கெடுக்க வைக்கிறார்.
முதல் உலகப் போரின்போது சிறைக் கைதிகளுக்கு அரசியல் அறிவைப்
புகட்ட வாரம் தோறும் பிரசங்கம் செய்கிறார். அவர்களுடன் விவாதிக்கிறார். உலக அரசியல்
அறிவில்லாமல் சுதந்திரப் போராட்டத்தை எதிர்கொள்ள முடியாது என்று விளக்குகிறார். அதே
சமயம் ஒரு கனிவான ஆசிரியர் போல அவர்களுக்கு போதிக்கிறார். அவசரப்படுவதில்லை. மெல்ல
மெல்ல சொல்லித் தருகிறார். இரண்டு நாடுகளுக்கு இடையேயான போர் என்பது, இரண்டு ராஜா சண்டை
போட்டுக்கொள்வது போலத்தான் என்று யோசித்துக்கொண்டிருந்த கைதிகளுக்கு அரசியல் சொல்லித்
தருகிறார். இதைத் தொடர்ந்து சிறையில் நூலகம் தொடங்குகிறார். தன் சகோதரர்கள் மூலம் புத்தகங்களைச்
சிறைக்குக் கொண்டு வருகிறார். சிறையில் இருக்கும் பிரிட்டிஷ் அதிகாரிகள் இதை எதிர்த்தாலும்,
கிண்டலாகப் பேசினாலும், உயரதிகாரிகளின் ஆதரவைப் பெற்று, இதை வெற்றிகரமாகச் செய்து காண்பிக்கிறார்
சாவர்க்கர்.
முதல் உலகப் போரின்போது கெய்சரின் படையினர் அந்தமான் சிறையைத்
தகர்த்து சாவர்க்கரை மீட்கப் போகிறார்கள் என்கிற புரளி வருகிறது. அந்தமான் கடற்கரையில்
கிடைக்கும் வெடிகுண்டு ஒன்றை வைத்து இந்த முடிவுக்கு வருகிறார்கள் பிரிட்டிஷ் சிறை
அதிகாரிகள். இதையெல்லாம் நம்பவேண்டாம் என்று எத்தனையோ சொன்னாலும், சாவர்க்கரை பெரிய
அளவில் கண்காணிக்கிறது பிரிட்டிஷ் அரசு.
காந்திஜியைப் பற்றிய இரண்டு அல்லது மூன்று குறிப்புகள் இந்த
நூலில் உள்ளன. மகாத்மா என்றே குறிப்பிடுகிறார் சாவர்க்கர். ஆங்கில மொழிபெயர்ப்பில்
இப்படி வருகிறதா அல்லது மராட்டியிலேயே இப்படித்தான் இருந்ததா என்பது தெரியவில்லை. மகாத்மா
என்று குறிப்பிட்டாலும் காந்தியின் தவறான அகிம்சை போதனைப் புரிதல்களைக் கிண்டலுக்கும்
விமர்சனத்துக்கும் உள்ளாக்குகிறார் சாவர்க்கர். ஒத்துழையாமை இயக்கத்தைவிட நமக்குத்
தேவையானது பொறுப்புள்ள ஒத்துழைப்பு (
*Responsive cooperation) என்பதுதான் என்று வாதிடுகிறார்.
ஐந்து ஆண்டுகள் அந்தமான் சிறைத் தண்டனைக்குப் பிறகு சிறைக் கைதிகளுக்குத்
தரப்படும் ஒரு உரிமை, அந்தமான் தீவில் குடும்பத்துடன் வசிக்கும் உரிமை. அது யாருக்குத்
தரப்பட்டாலும் சாவர்க்கருக்குத் தரப்படக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறது பிரிட்டிஷ்
அரசு. ஒரு வழியாக அந்த அனுமதி கிடைக்கும்போது அங்கே சென்றும் சுதந்திரப் போராட்டக்
கனலைப் பரப்புகிறார். அவற்றையெல்லாம் புல்லரிப்பு இல்லாமல் படிக்கமுடியாது.
சிறைக்குள் வரும் ஒவ்வொரு அறிவிப்பின்போதும் சாவர்க்கருக்கு
விடுதலை என்கிற செய்தி வேண்டுமென்றே பரப்பப்படுகிறது. சிறையே இதனால் சந்தோஷம் கொள்கிறது.
ஆனால் ஒவ்வொரு முறையும் சாவர்க்கருக்கு மட்டும் விடுதலை தரப்படாது. புத்தகத்தைப் படிக்கும்
நமக்கே இது பெரிய அசதியைக் கொண்டு வரும் என்றால் அங்கே வாழ்ந்தவர்களின் நிலையை நினைத்துப்
பாருங்கள்.
முதல் உலகப் போரை ஒட்டி பொது மன்னிப்பு என்கிற விஷயம் எழுகிறது.
சிறையில் இருக்கும் கைதிகள் ஒவ்வொருவரையும் இந்தப் பொதுமன்னிப்புக்கு விண்ணப்பிக்குமாறு
சாவர்க்கர் சொல்கிறார். அனைவரையும் விண்ணப்பிக்க வைக்கிறார். அப்படி விண்ணப்பித்தவர்களுள்
ஒருவரே சாவர்க்கர். அன்று பிரிட்டிஷ் அரசுக்கு மனு அளிப்பது ஒன்றே வழி. அந்த வழியையே
சாவர்க்கர் பின்பற்றினார். அதில் இருக்கும் வரிகளை மேற்கோள் காட்டி, சாவர்க்கர் இந்த
அளவுக்குப் போனார் என்பது அடுத்த குற்றச்சாட்டு. The Mighty alone can afford to
be merciful and therefore where else can the prodigal son return but to the
parental doors of the Government? சாவர்க்கரின் கவிதை தோய்ந்த மொழி எப்போதுமே அப்படியானதுதான்.
உருவகமும் உலகப் புகழ்பெற்ற காவியங்களின் வரிகளும் முழுக்க இழையோடித்தான் அவரால் எழுதமுடியும்.
இதில் கவனிக்கவேண்டியவை என்ன? ஒன்று, சாவர்க்கர் எல்லாக் கைதிகளையும் பொதுமன்னிப்புக்கு
விண்ணப்பிக்கச் சொல்கிறார். காரணம், சிறையில் உழன்று அழுகிச் சாவதில் பொருளே இல்லை
என்றும், ஒரு புரட்சியாளன் எப்படியாவது சிறையில் இருந்து வெளியே போகவேண்டும் என்றே
நினைக்கவேண்டும் என்றும், அதற்கான காரணம் அப்படி வெளியே செல்வது பாரத அன்னைக்கு சுதந்திர
மலரைச் சூட்டப் போராடுவதற்காகத்தான் என்றும் பல முறை பதிவு செய்திருக்கிறார். அனைவருக்கும்
பொது மன்னிப்பு தரப்பட்டாலும் சாவர்க்கர் சகோதர்களுக்கு மட்டும் அந்த நேரத்தில் தரப்படவில்லை!
இரண்டாவதாகக் கவனிக்கவேண்டியது, மிகத் தெளிவாக சாவர்க்கர் சொல்கிறார், “என் பொருட்டு
ஒருவேளை அனைவருக்கும் பொது மன்னிப்பு மறுக்கப்படும் என்றால், மற்ற அனைவருக்கும் பொது
மன்னிப்பு வழங்குங்கள், என்னைச் சிறையிலேயே வையுங்கள், மற்றவர்களுக்குத் தரப்படும்
மன்னிப்பு எனக்குத் தரப்படுவதைப் போன்றதே” என்கிறார். இதை வெறும் வாய் வார்த்தையாகச்
சொல்லவில்லை. இந்தப் புத்தகத்திலேயே இதைப் பல இடங்களில் பல கட்டங்களில் சொல்கிறார்.
மூன்றாவதாக, சிறையில் இவரைச் சந்தித்து உரையாடிய பிரிட்டிஷ் அதிகாரி சர் ரெஜினால் க்ரடாக்
சொல்வது: “கருணை மனுவுக்குப் பின்னரும்கூட, பிரிட்டிஷ் அரசுக்கு எதிராகச் செய்தது குறித்த
எவ்வித குற்ற உணர்ச்சியும் இவரிடம் இல்லை” என்பது. நான்காவதாக, அந்தமான் சிறையில் இருந்து
2 மே1921ல் மாற்றப்பட்டு இவர் ரத்னகிரியிலும் எரவாடா சிறையிலும் மூன்று ஆண்டுகளுக்குச்
சிறையில் வைக்கப்படுகிறார். பின்னர் ரத்னகிரி மாவட்டத்தை விட்டு வெளியே செல்லக்கூடாது
என்கிற நிபந்தனையுடன் ஐந்து ஆண்டுகள் ரத்னகிரியில் கழிக்கிறார். பின்னரும் 1937 வரை
தீவிரமாகக் கண்காணிப்பில் வைக்கப்படுகிறார். ஆனாலும் சுதந்திரப் போராட்டத்தில் தனது
பங்கைத் தீவிரமாகவே செலுத்துகிறார். எனவே சாவர்க்கர் மன்னிப்புக் கேட்டார் என்பது,
ஒற்றை வரி அரசியலைச் செய்பவர்களுக்கான வெற்றரசியல் மட்டுமே. இந்திய சுதந்திரப் போராட்டத்தில்
அதிக காலம் சிறையில் இருந்தவர் சாவர்க்கரே. அதுவும் கொடும் சிறை, தனிமைச் சிறை. இதைப்
புரிந்துகொள்ள தேசம் பற்றிய எண்ணமும், சுதந்திரப் போராட்டம் பற்றிய புரிதலும் வேண்டும்.
அந்தமான் சிறையிலிருந்து ரத்னகிரிக்கு மாற்றப்படும் சாவர்க்கர்
சகோதரர்கள் பாரத மண்ணில் கால் பதிக்கும்போது சாவர்க்கரின் வரிகள் பெரும் கவித்துவம்
பெறுகின்றன. நாடி நரம்பெல்லாம் தேசபக்தி உள்ளவர்களால் மட்டுமே அப்படி எழுத முடியும்,
அதைப் புரிந்துகொள்ள முடியும்.
சாவர்க்கர் எப்பேற்பட்ட சிந்தனையாளர், சுயமான தலைவர் என்பதற்கு
இந்த நூல் ஒரு ஆதாரம். இந்த நூலை வாசிக்காமல் போவது பெரிய இழப்பு. இன்னும் சொல்வதற்கு
எவ்வளவோ இருக்கின்றன. நூலை வாசித்தால் நான் சொல்வது புரியும். நான் இந்த நூலை ஆங்கிலத்திலும்
தமிழிலும் வாசித்தேன். எஸ்.ஜி. சூர்யாவின் மொழிபெயர்ப்பில் தமிழில் மிக அற்புதமாக வெளி
வந்திருக்கிறது. நண்பர் பாலாவும், நானும் இதை எடிட் செய்தோம். மிக முக்கியமான நூல்
இது. தவற விட்டுவிடாதீர்கள். வேறென்ன சொல்வதென்று தெரியவில்லை.
புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: அமேசான் | பிளிப்கார்ட் | என் எச் எம்

(வலம் 4 ஆண்டில் காலடி எடுத்து வைக்கும் இந்த விஜயதசமி நாளில் இந்தச் சிறப்புக் கட்டுரை வெளியாகிறது.)

Posted on Leave a comment

லடாக்கின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜம்யங் செரிங் நேம்ஜியலின் நாடாளுமன்ற உரை

சிறப்புக் கட்டுரை

காஷ்மீரில் 370ம் பிரிவு திரும்பப் பெறப்பட்டது. அதை வரவேற்று நாடாளுமன்றத்தில் லடாக்கின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜம்யங் செரிங் நேம்ஜியல் (Jamyang Tsering Namgyal Namgyal) 6-ஆகஸ்ட்-2019 அன்று ஆற்றிய உரை:

(Photo credit: LiveMint)
“பண்டிட் ஜவாஹர்லால் நேருவின் தவறான முடிவினால் நேர்ந்த பிழையை இன்றைய அரசாங்கம் சரிசெய்துள்ளது. அதை நாங்கள் வரவேற்கிறோம். இங்கே பேசிய பலரும் லடாக்கிலே, கார்கிலிலே என்று பேசிக்கொண்டிருந்தார்கள். ஆனால் அவர்களுக்கெல்லாம் லடாக் என்றால் என்னவென்று தெரியுமா? கார்கில் என்றால் என்ன என்று தெரியுமா? இவற்றின் முழு விவரம் தெரியுமா?

இப்படிப் பேசிய பலரும் லடாக்கைத் தூக்கி ஓரமாகப் போட்டிருந்தார்கள். அங்கே உண்மையில் என்ன நடந்தது, என்ன நடக்கிறது என்று கொஞ்சம் கூடக் கவலைப்படவில்லை. இதே நாடாளுமன்றத்தில், லடாக்கில் புல் கூட முளைப்பதில்லை என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள். லடாக்கின் மொழி, உணவு, கலாசாரம், வேலைவாய்ப்பு, வாழ்க்கை முறை எல்லாம் அவர்களுக்குத் தெரியுமா? லடாக்கைக் குறித்துப் பேசிய அவை உறுப்பினர்களில் எத்தனை பேர் நேரில் லடாக்கை பார்த்திருக்கிறார்கள்? அவர்களுக்குத் தெரிந்த லடாக்கெல்லாம் புத்தகங்களில் வாசித்த லடாக் மட்டுமே.
லடாக் கடந்த 71 வருடங்களாக யூனியன் பிரதேசமாக மாற போராடிக்கொண்டிருக்கிறது. 1948ல் உருவான லடாக் ஜனசங்கத்தின் தலைவர், நேருவிடம் லடாக்கை, தனி யூனியன் பிரதேசமாக மாற்ற கோரிக்கை வைத்தார். அந்த கோரிக்கையில் லடாக்கை யூனியன் பிரதேசமாக மாற்றுங்கள் அல்லது இந்தியாவின் இதர பகுதிகளோடு இணையுங்கள்; ஆனால் ஜம்மு காஷ்மீரோடு மட்டும் இணைத்து விடாதீர்கள் என்று கோரியிருந்தார். அன்றைய நேரு அரசாங்கம் எங்கள் கோரிக்கையை ஏற்றுக்கொள்ளவில்லை என்பது மட்டுமல்ல, அதைப்பற்றி யோசிக்கக்கூட தயாராக இல்லை.
காஷ்மீரத்தோடு சேர்த்ததால்தான் எங்கள் மொழி, வாழ்க்கை, கலாசாரம், வளர்ச்சி எல்லாம் தடைபட்டுப்போனது. பெரு மரியாதைக்குரிய டாக்டர் ஷ்யாமா பிரசாத் முகர்ஜி, ஜம்மு காஷ்மீருக்குத் தனி அந்தஸ்து கொடுப்பதை எதிர்த்ததோடு, லடாக் ஜம்மு காஷ்மீரோடு இணைக்கப்படக்கூடாதென்றும் போராடினார். அவரை நாங்கள் இன்று நன்றியோடு நினைவுகூர்கிறோம்.
இன்னொன்றையும் மறந்துவிடாதீர்கள். பாகிஸ்தானோடு நடந்த அனைத்துப் போர்களிலும் லடாக் தனது பங்களிப்பையும் பலிதானத்தையும் இந்திய நாட்டிற்காக வழங்கியுள்ளது. 1948, 1972 மற்றும் 1999 வருடங்களில் நடந்த அனைத்துப் போர்களிலும் லடாக் மக்கள் தங்கள் இன்னுயிரை அளித்திருக்கிறார்கள். இதற்குக் காரணம் லடாக்கியர்கள் இந்தியாவைத்தான் தனது நாடாகக் கருதினார்கள். தங்களை இந்தியர்களாகத்தான் கருதினார்கள். இந்தியாவுக்கே தங்கள் வாழ்வையும் சாவையும் அர்ப்பணிக்க ஆசைப்பட்டார்கள். ஆனால் எங்கள் விருப்பத்திற்கு மாறாக வலுக்கட்டாயமாக ஜம்மு காஷ்மீரோடு இணைக்கப்பட்டோம்.
மரியாதைக்குரிய காஷ்மீரைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர், சட்டப்பிரிவு 370 மற்றும் 35 ஏ இவற்றை நீக்குவதால் என்னாகிவிடும் என்று கேட்டார். இதற்கு என்னுடைய பதில், இந்தச் சட்ட பிரிவுகள் நீக்கத்தால் மக்களுக்குச் சேரவேண்டிய பணத்தை, இரு குடும்பங்கள் மட்டுமே பிடுங்கித் தின்பது நிற்கும். மற்றும் ஜம்மு, காஷ்மீர், லடாக் ஆகியவை வளர்ச்சி பெறும். அதே உறுப்பினர்கள் இனி கார்கில் என்ன ஆகும் என்றெல்லாம் கவலை தெரிவித்தனர். ஆனால் கார்கிலின் 70% மக்கள் யூனியன் பிரதேசமாக ஆவதை முழு மனதுடன் வரவேற்கிறார்கள். 2014 தேர்தல் அறிக்கையிலேயே யூனியன் பிரதேசமாக மாற்றுவதை சேர்க்கச் சொல்லியிருந்தோம். 2019 தேர்தல் அறிக்கையிலும் இதே கோரிக்கையைச் சேர்க்க வைத்தோம்.
கார்கில் மற்றும் லடாக்கின் ஒவ்வொரு கிராமத்தின் ஒவ்வொரு வீடுகளிலும் (பெளத்தர்கள், கிறித்தவர்கள், இஸ்லாமியர்கள் என்ற பாகுபாடில்லாமல் அனைவரிடமும்) சென்று யூனியன் பிரதேசமாக ஆவதின் அவசியத்தையும், நன்மையையும் எடுத்துச் சொல்லியிருந்தோம். அவர்கள் அனைவரும் ஒருமனதாகவும் முழுமனதாகவும் இதுவரை லடாக் பகுதியிலிருந்து தேர்வான பாராளுமன்ற உறுப்பினர்களைக் காட்டிலும் அதிகபட்ச வாக்குவித்தியாசத்தில் என்னை அவைக்கு அனுப்பிவைத்துள்ளனர். மக்கள் பாரதப் பிரதமர் திரு. மோதியை முழுமையாய் நம்பினார்கள். இந்தத் தனி யூனியன் பிரதேசத்து அறிவிப்பை முழுமனதுடன் வரவேற்கின்றனர்.
கார்கிலைப் பற்றிப் பேசும் அவை உறுப்பினர்களுக்கு கார்கிலைப் பற்றி என்ன தெரியும்? நாடாளுமன்ற கூட்டுக் குழு ஜம்மு மற்றும் காஷ்மீருக்குச் சென்றனர். மதிப்பிற்குரிய உள்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் லே வந்திருந்தார். அப்போது அவர் கேட்ட ‘உங்களுக்கு என்ன வேண்டும்?’ என்ற கேள்விக்கு, லடாக்கைத் தனி யூனியன் பிரதேசமாக மாற்றுங்கள் என்பதே எங்கள் கோரிக்கையாக இருந்தது. வேறு என்ன வேண்டும் என்ற கேள்விக்கு, ‘லடாக்கைத் தனி யுனியன் பிரதேசமாக மாற்றுவது மட்டுமே எங்கள் கோரிக்கை; வேறு எதுவும் வேண்டாம்’ என்றோம். லடாக்கின் அனைத்து மத அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் அனைவரும் ஒரே குரலில் லடாக்கைத் தனி யூனியன் பிரதேசமாக ஆக்க கையெழுத்திட்டு மனு அளித்தோம். இந்த மனுவில் காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் கையெழுத்திட்டிருந்தன. ஆனால் ஜனநாயகம் பேசும் காங்கிரஸ் என்ன செய்தது? அம் மனுவில் கையெழுத்திட்ட காங்கிரஸ் தலைவர்களை உடனடியாக கட்சியிலிருந்து நீக்குவதாக அறிவிப்பு வெளியிட்டது. இதுதானா உங்கள் ஜனநாயகம்? இதுதானா உங்கள் பேச்சுரிமை?
நேற்று (5-8-2019) காலை 11 மணியிலிருந்து சபை உறுப்பினர்கள் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருக்கிறேன். இந்த சட்டப்பிரிவுகளை நீக்குவதால் காஷ்மீர மக்களின் நிலைமை என்னாகும், அவர்களின் உரிமை என்னாகும் எனத் தொண்டை கிழிய கத்திக்கொண்டிருந்தனர். இந்த அவை மூலமாக அப்படிப் பேசுபவர்களைப் பார்த்துக் கேட்கிறேன். அவர்கள் மூலமாய் ஜம்மு காஷ்மீரத்தை ஆட்சி செய்பவர்களைப் பார்த்துக் கேட்கிறேன். இந்திய அரசாங்கத்திடம் இருந்து வரும் பணம் ஜம்மு, காஷ்மீர் மற்றும் லடாக்கிற்கான பணம். ஆனால் நீங்கள் லடாக்கின் வளர்ச்சிக்கு என்ன செய்தீர்கள்? லடாக்கிற்கான பணத்தையும் சேர்த்து காஷ்மீருக்குச் செலவு செய்தீர்கள். இதுவா உங்கள் சம உரிமை?
அடுத்ததாக, ஜம்மு மற்றும் காஷ்மீரத்திற்கு இரு தலைநகரங்கள். குளிர்காலத் தலைநகரம் மற்றும் கோடைகாலத் தலைநகரம். அதில் லடாக்கிற்கான பிரதிநிதித்துவம் என்ன என்பதைப் பாருங்கள். தலைமைச் செயலகத்தில் 1000 வேலை வாய்ப்புகள் உருவாகிறதெனில் காஷ்மீரிகள் எடுத்துக்கொண்டது போக, ஜம்மு மக்கள் சண்டையிட்டுப் போராடிப் பெற்றுக் கொண்டது போக, மீதம் உள்ளதில் எத்தனை இடங்கள் லடாக்கிகளுக்கு தந்தீர்கள். இதுவா உங்கள் சம உரிமை?
திரு அத்னான் என்ற உறுப்பினர் மத்தியப் பல்கலைக்கழகம் குறித்துப் பேசினார். காஷ்மீரிகளுக்கு ஒன்றும், போராடிப் பெற்ற ஜம்மு மக்களுக்கு ஒன்றும் கிடைத்தது. ஆனால் லடாக்கிற்காக, நான் மாணவர்கள் தலைவனாக, அனைத்து மாணவர்களையும் ஒன்றுதிரட்டி தலையில் கருப்புத் துணி கட்டிக்கொண்டு ஒரு பல்கலைக்கழகம் வேண்டுமெனப் போராடினேன். கொடுத்தீர்களா? இதுவா உங்கள் சம உரிமை?
இப்போது லடாக்கின் வளர்ச்சியைப் பற்றிக் கவலைப்படும் காங்கிரஸ் உறுப்பினர்கள், முதலமைச்சராக இருந்தபோது லடாக்கின் வளர்ச்சிக்காக என்ன செய்தீர்கள்? புதிய மாவட்டங்களைப் பிரிக்கும்போதும் பாதி காஷ்மீருக்கும் மீதி ஜம்முவிற்கும் கொடுத்தீர்கள். லடாக்கிற்கு என்ன கொடுத்தீர்கள்? இதுவா உங்கள் சம உரிமை?
வரிவடிவமே இல்லாத காஷ்மீர மொழிக்கு அந்தஸ்து கொடுத்தீர்கள். ஜம்முவின் மொழிக்கும் அந்தஸ்து கொடுத்தீர்கள். ஆனால் வரிவடிவமும், பேச்சு வடிவமும் கொண்ட தனித்துவம் கொண்ட லடாக்கிய மொழிக்கு இன்றுவரை மொழி அந்தஸ்து கொடுக்கவில்லை. இதுவா உங்கள் சம உரிமை?
உறுப்பினர்கள் அனைவரும் மதச்சார்பின்மை, மற்றும் மக்களாட்சி குறித்துப் பேசினார்கள் . அது குறித்தும் நான் பேச விரும்புகிறேன். சட்ட பிரிவு 370 இருக்கும் தைரியத்தில் காஷ்மீரப் பண்டிட்டுகளை இரவோடு இரவாக அடித்து விரட்டினீர்களே, இதுவா உங்கள் மதச்சார்பின்மை? இதுவா உங்கள் சம உரிமை?
அவை உறுப்பினர் ஒருவர் சொல்கிறார், லடாக்கில் இஸ்லாமியர்களின் மக்கள் தொகை அதிகமுள்ளது, அவர்களின் நிலை என்னாகும் எனக் கவலைப்படுகிறார். நான் சொல்கிறேன், இதே சட்டப் பிரிவுகளைத் தவறாகப் பயன்படுத்தித்தான் லடாக்கிய பெளத்தர்களைப் படுகொலை செய்து, திட்டமிட்டே இஸ்லாமியர்களின் எண்ணிக்கை உயரும்படி செய்தீர்கள். இதுவா உங்கள் செக்யூலரிசம்?
இந்த இரு குடும்பங்கள், நான் சொல்கிறேன், அவர்கள் ஆட்சி செலுத்தவில்லை, ராஜாங்கம் நடத்தினார்கள்! இதே குடும்பம், 1979ல், லடாக்கை இரு பகுதிகளாகப் பிரித்தது. பெளத்தர்கள் மெஜாரிட்டியுடன் லே மாவட்டம், இஸ்லாமியர்கள் மெஜாரிட்டியுடன் கார்கில் மாவட்டம் எனப் பிரித்தீர்கள். லடாக்கிய சகோதரர்களுக்குள் சண்டையை மூட்டிவிட்டு வேடிக்கை பார்க்கிறீர்கள். இதுவா உங்கள் சம உரிமை? இதுவா உங்கள் செக்யூலரிசம்?
இங்கு அமர்ந்துகொண்டு கார்கிலில் முழு அடைப்பு எனச் சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள். உங்களுக்கு யார் சொன்னது கார்கிலில் முழு அடைப்பு என? புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்! நானிருக்கிறேன், லடாக்கிலிருந்து வந்திருக்கிறேன். எந்தப் புத்தகத்தையும் பத்திரிகைகளையும் படித்துவிட்டுப் பேசிக்கொண்டிருக்கவில்லை. கள நிலவரத்தை நான் லடாக்கியனாகப் பேசுகிறேன். நீங்கள் லடாக்கிலிருந்து வரவில்லை. நான் வந்திருக்கிறேன். இதுவரை நீங்கள் பேசி நாங்கள் கேட்டோம். இன்று நாங்கள் பேசுகிறோம், நீங்கள் கேளுங்கள். சௌகரியமாக அமர்ந்து கேளுங்கள்.
இவர்கள் அனைவரும் ஒரு சாலையையும், மார்கெட்டையும் கார்கில் என நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். சகோதரரே, உங்களுக்கு கார்கிலைப் பார்க்க வேண்டுமெனில் சம்ஸ்கர் செல்லுங்கள், வாகா முல்கோட் செல்லுங்கள், ஆர்யன் பள்ளத்தாக்கிற்குச் செல்லுங்கள், த்ஸ்தி கர்கோன்னைப் பாருங்கள். 70 சதவீதப் பகுதிகளும், மக்களும் இந்த முடிவிற்கு வரவேற்பு அளிக்கின்றனர். இந்தச் சட்டத்திருத்தத்திற்கு நன்றி சொல்கின்றனர். கார்கிலில் இன்று நடப்பதாகச் சொல்வதெல்லாம் உண்மையில் நடக்கவில்லை, இங்கிருப்பவர்கள் அங்கே தொலைபேசி மூலம் பேசிச் செய்ய வைக்கின்றனர். அவர்களுக்கே தெரியாது தாம் என்ன செய்துகொண்டிருக்கிறோம் என. கார்கில் மக்கள் தங்கள் நலனைக்குறித்து யோசிக்க வேண்டும், இங்கிருந்து உத்தரவு கொடுப்பவர்களின் பேச்சுக்களைக் கேட்டுக்கொண்டிருக்கக்கூடாது.
ஜன சங்கத்தின் நிறுவனர் டாக்டர் ஷியாமா பிரசாத் முகர்ஜி ஒரு தீர்மானம் எடுத்தார். ஒரு நாட்டில் இரு அரசு, இரு அடையாளங்கள், இரு தலைமைகள் இருத்தல் கூடாது, கூடாது, கூடாது என. இதே சங்கல்பத்துடன் நான் கர்வத்துடன் சொல்கிறேன், இவர்களுக்கே தெரியாது, இதுவரை லடாக்கியர்கள் என்ன செய்திருக்கிறார்கள் என. இவர்கள் இன்றைக்கு ‘எங்கள் கொடி போகிறது’ என ஒப்பாரி வைக்கிறார்கள். சகோதரா, லடாக்கியர்கள் 2011லேயே உங்கள் கொடியை அகற்றிவிட்டோமே, லடாக் ஹில் அட்டோனமஸ் டெவலப்மெண்ட் கவுன்சில் சேர்மன் , கவுன்சிலர், டெப்டி மினிஸ்டர் ஒரு தீர்மானம் செய்து ஜம்மு காஷ்மீர் கொடியை அகற்றிவிட்டு இந்திய மூவர்ணக் கொடியை அல்லவா பயன்படுத்தி வருகிறோம்! ஏனெனில் நாங்கள் இந்தியாவின் பகுதியாகவே இருக்க விரும்புகிறோம். இதுதான் லடாக்.
நான் இரு குடும்பங்களைப் பற்றிப் பேசி வருகிறேன். காஷ்மீரின் கௌரவம் காஷ்மீரின் கௌரவம் என தண்டோரா அடித்துக்கொண்டிருக்கிறார்களே, அவர்கள் சமாதானம் பேசுபவர்களல்ல. அவர்கள்தான் பிரச்சினையே. அந்தப் பிரச்சினை முடிவுக்கு வருகிறது. காஷ்மீர் தனது பாட்டன் சொத்து என்ற திமிரில் அவர்கள் அதிகார போதையிலிருக்கிறார்கள். அப்படி இல்லை, இல்லவே இல்லை.
எனது உரையை முடிக்கும் முன்னர் இந்திய அரசுக்கும், மதிப்பிற்குரிய பாரதப் பிரதமர் நரேந்திர மோதி அவர்களுக்கும், அமித்ஷா ஜி அவர்களுக்கும், மற்றும் இந்தக் கூட்டணியில் இருப்பவர்களுக்கும், கூட்டணியில் இல்லாமல் இந்த சட்டத் திருத்தத்துக்கு ஆதரவு தெரிவிக்கப் போகிறவர்களுக்கும் எனது முழு நன்றியை லடாக்கியர்கள் சார்பாகத் தெரிவிக்க விரும்புகிறேன். ஏனெனில், இந்திய சரித்திரத்தில் முதன்முறையாய் லடாக்கியர்களின் தேவைகளை, எண்ணங்களை இந்த அரசு கேட்கிறது. கார்கிலிலும், சீனத்தை ஒட்டியுள்ள பகுதியிலும் கஷ்டங்களை அனுபவிக்கும் லடாக்கியர்களின் கஷ்டங்களை இந்த அரசு புரிந்துகொள்கிறது.
இந்தச் சட்டத்தை நாங்கள் வரவேற்கிறோம். இதற்குப் பின்னரும் குழப்பத்தில் இருப்பவர்களுக்கு ஒன்று சொல்லிக்கொள்கிறேன். நாட்டின்மீது அன்பிருப்பின் அதை வெளியில் சொல், யாருக்காகவும் காத்திருக்காதே. கர்வத்துடன் சொல் ஜெய் ஹிந்த்! அபிமானத்துடன் சொல், நாங்கள் இந்தியர்கள் என!”
தமிழில் மொழிபெயர்த்தவர்: ஜெயகுமார் ஸ்ரீனிவாசன்