Posted on Leave a comment

பூனைக் கதைகள் | சுஜாதா தேசிகன்

காலை நடைப் பயிற்சியின் போது பூனை ஒன்று இறந்து கிடந்தது. சில நொடி மௌன அஞ்சலிக்குப் பிறகு கடந்து சென்றேன். Continue reading பூனைக் கதைகள் | சுஜாதா தேசிகன்

Posted on Leave a comment

பாரதக் கோவில் | சுஜாதா தேசிகன்

நான் பள்ளியில் படிக்கும்போதுதான் எனக்கு அயோத்தி ஸ்ரீராமர் கோயில் அறிமுகம். என் தந்தையின் நண்பர் ஒரு பிரிண்டிங் பிரஸ் வைத்திருந்தார். அவர் அச்சகத்தில் எழுத்துக்களைக் கோத்து வார்த்தையாக்குவதைப் பார்த்திருக்கிறேன். பத்திரிகையில் கிழித்த சிவகாமியின் சபதம் போன்ற கதைகளை பைண்ட் செய்து தருவார். புத்தகம் எப்படி பைண்ட் செய்ய வேண்டும் என்று எனக்குக் கற்றும் கொடுத்தார். பார்க்க மிக ஒல்லியாக ஊசிபோல இருப்பார். விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பில் இருந்தார். Continue reading பாரதக் கோவில் | சுஜாதா தேசிகன்

Posted on Leave a comment

சாளக்கிராமம் அடை நெஞ்சே! | சுஜாதா தேசிகன்

எல்லா திவ்ய தேசத்துக்கும் ஸ்தல புராணம் என்று ஒரு கதை இருக்கும். ‘சாளக்கிராமம்’ என்ற ‘முக்திநாத்’ திவ்ய தேசத்துக்கு நீங்கள் போய்விட்டு வந்து சொல்லும் கதையே ஒரு புராணம். முக்திநாத் சென்று வந்த என்னுடைய அக்கதையே இக்கட்டுரை.

108 திவ்ய தேசங்கள் என்று ஸ்ரீவைஷ்ணவர்கள் பெருமாள் உகந்து வாசம் செய்யும் ஸ்தலங்களில் 106 மட்டுமே நாம் இந்தப் பிறவியில் சேவிக்க முடியும். ‘போதுமடா சாமி!’ என்று இந்தப் பூவுலகத்தை விட்டுக் கிளம்பிய பின் மற்ற இரண்டு திவ்ய தேசங்களைக் காண முடியும். அவை திருப்பாற்கடல் மற்றும் ஸ்ரீவைகுண்டம்.

Continue reading சாளக்கிராமம் அடை நெஞ்சே! | சுஜாதா தேசிகன்

Posted on 2 Comments

வதரி வணங்குதுமே | சுஜாதா தேசிகன்

இன்று பத்ரி, பதரிகாசிரமம் என்பதைத்தான் ஆழ்வார்கள் வதரி என்று தூய தமிழில் சொல்லுகிறார்கள். வதரி என்றால் இலந்தையைக் குறிக்கும். இங்கே இருக்கும் பெருமாள் பதரிவிஷால். இலந்தை மரத்துக்குக் கீழே தியானம் செய்யும் திருக்கோலத்தில் காட்சி தருகிறார். அதனால் இந்தப் பெயர். 

எல்லோருக்கும் குறிப்பாக ஸ்ரீவைஷ்ணவர்களுக்குத் தன் வாழ்நாள் முடிவதற்குள் பத்ரிக்கு ஒருமுறை சென்று வர வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமிகளுடன் திருமங்கை ஆழ்வார் வதரி வணங்குதுமே என்று அருளிய பாசுரங்களுடன், ஸ்ரீ ராமானுஜர் சென்று வந்த பாதையில் பத்து நாள் யாத்திரையாகப் பத்ரிக்குச் சென்று அங்கு நான்கு நாட்கள் தங்கியது வாழ்நாளில் மறக்க முடியாத இனிய அனுபவம்.  Continue reading வதரி வணங்குதுமே | சுஜாதா தேசிகன்

Posted on Leave a comment

நாவல் கொரோனா – அச்சமும் அறிவுறுத்தலும் | சுஜாதா தேசிகன்

‘கொரோனா’ என்ற வார்த்தையுடன் அரசியல்வாதியின் துண்டுபோல அதனுடன் ‘நாவல்’ என்ற ஒன்று கூடவே இருப்பதையும் கவனித்திருப்பீர்கள். ‘நாவல்’ – புதிது என்பதைக் குறிக்கிறது. புதுவிதமான வைரஸ்!

நாவல், நவீனம் என்ற சொற்கள் புதுமையைக் குறிக்கின்றன. நவீன மருத்துவமனை, நவீன மருத்துவர்கள், நவீன ஆயுதங்கள், நவீன தகவல்தொடர்புகள், நவீன காலத்திற்கு ஏற்ற நவீனமயமாக்கல் என்று இந்த நவீன உலகத்தில் எல்லாம் நவீனமாகிறது. நவீனம் – ‘பழமையிலிருந்து மாறுபட்டு’ என்கிறது அகராதி. பழமையிலிருந்து மாறாதவர்களை ‘பழமை பேசும் கிழம்’ என்று நக்கல் அடிக்கிறோம். கை கூப்பி வணக்கம் சொல்லும் மரபுள்ள இந்தியாவை ‘நீங்க எல்லாம் எப்ப மாறப் போறீங்க?’ என்று கிண்டல் செய்வதைக் கேட்கிறோம். Continue reading நாவல் கொரோனா – அச்சமும் அறிவுறுத்தலும் | சுஜாதா தேசிகன்

Posted on Leave a comment

வீரப்பன்: பொய்களுக்கு இடையில் சில உண்மைகள் | சுஜாதா தேசிகன்

ஏழு வருடங்கள் முன் கார் ஓட்டிக்கொண்டு பெங்களூரிலிருந்து
வயநாடு வழியாகக் கேரளாவுக்குச் சென்றேன். போகும் வழியில் பந்திப்பூர் காட்டைக் கடந்து
வரும் வழியில் சாலை குறுக்கே ஒரு பெரிய யானை கடக்க கொஞ்சம் நேரம் காத்திருந்தேன். சத்தியமங்கலம்
வந்தபோது செக் போஸ்ட்டில் காரை நிறுத்தினார்கள். எங்கே போகிறேன் போன்ற விசாரிப்புகளுக்குப்
பின் பயணத்தைத் தொடர்ந்தேன். என் பக்கத்திலிருந்தவர்
சார் இங்கேதான் ஒரு காலத்தில் வீரப்பன் நடமாடிக்கொண்டு இருந்தான் என்றார். அந்த அடர்ந்த காட்டை மீண்டும் பார்த்தபோது அதன் நிசப்தம்
ஒரு வித பீதியைக் கிளப்பியது.

யானை
கடந்து போன பந்திப்பூரில்தான் 1994ம் வருடம் க்ருபாகர் சேனனி (Krupakar Senani) என்று
இரண்டு பிரபல வனவிலங்குப் புகைப்படக்காரர்களை
பெரிய அதிகாரிகள் என்று நினைத்து வீரப்பன் கடத்தினான்.
பதினான்கு நாட்களுக்குப் பிறகு விடுவித்தான். (இருவரும் Birds, Beasts and Bandits
– வீரப்பன் பிடியில் பதினான்கு நாட்கள் என்று புத்தகம் எழுதியிருக்கிறார்கள்.) பந்திப்பூர்
யானையும், நாங்களும் அன்று பயம் இல்லாமல் காட்டைக் கடந்து சென்றதற்கு வீரப்பன் கொல்லப்பட்டதே
காரணம்.
சமீபத்தில்
முன்னாள் சிறப்பு
டாஸ்க் ஃபோர்ஸின் தலைவர் (STF) கே. விஜயகுமார்
எழுதிய
சந்தன கடத்தல் வீரப்பன் வேட்டை படித்தேன். (Veerappan –
Chasing the brigand என்ற ஆங்கில நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு.) அதைத் தொடர்ந்து, இதன்
ஆங்கில மூலத்தில் சில முக்கியமான பகுதிகளையும், கர்நாடகத்தின் முன்னாள் காவல்துறை இயக்குநர்
எழுதிய
வீரப்பனின் நட்சத்திரக் கடத்தல்
– ராஜ்குமார்
புத்தகத்தையும் மீண்டும் படித்தேன்.
சில புள்ளிகளை இணைக்க முடிந்தது.

தமிழ்நாட்டில்
வீரப்பன் பற்றி இரண்டு விதமான கருத்துக்கள் இருக்கின்றன. அவன் நல்லவன், அவனை இப்படி
மாற்றியது கல்குவாரி அதிபர்கள், அரசியல்வாதிகள்,
அவரை எங்கள் எல்லைச்சாமியாகவே பார்க்கிறோம், வீரப்பன்
இருந்திருந்தால் காவரி பிரச்சினை இருக்காது
, வீரப்பர் என்று கூப்பிட வேண்டும் கோயில் கட்ட
வேண்டும் என்று இன்றும் அரசியல் பேசும் பிரிவினைவாதிகள் ஒரு புறம். அவன் கொள்ளைக்காரன்,
பல உயிர்களைக் காவு வாங்கிய
ஈவு
இரக்கமற்ற கொலைகாரன், தமிழ்த் தீவிரவாதிகளுடன் தொடர்பு
கொண்டவன் என்ற கருத்தும் உடையவர்கள் இன்னொரு புறம். 

இந்த இரண்டு
கருத்துக்களைத் தாங்கித்தான் வீரப்பன் பற்றிய திரைப்படம், புத்தகம் எல்லாம் வந்திருக்கின்றன.

விஜயகுமார்
எழுதிய புத்தகம் மிக முக்கியமான ஆவணம். வீரப்பனைச் சுட்டு வீழ்த்தியவர் என்ற ஒரு காரணம்
இருந்தாலும், காஷ்மீர் எல்லைப் பாதுகாப்பில் பணிபுரிபவர் தேச நலனைக் கருத்தில் கொண்டு
உண்மையை எழுதியிருப்பார் என்பதில் எனக்குச் சந்தேகம் இல்லை. புத்தகம் முழுவதும் விறுவிறுப்பான
வீரப்பனின் வேட்டை. புத்தகம் இப்படி ஆரம்பிக்கிறது.

ஒளிந்து கொள்பவர்களுக்கும்
தேடுபவர்களுக்கும் இடையில் நடக்கும் போட்டியில் பத்துக்கு ஒன்பது முறை ஒளிந்து கொள்பவர்கள்தான்
வெற்றி பெறுகிறாரகள் – ரிச்சர்ட் கிளார்க்.


இதற்கு எடுத்துக்காட்டு இந்தப் புத்தகம். சி.தினகர் எழுதிய வீரப்பன் நட்சத்திரக் கடத்தல் இன்னொரு
முக்கிய ஆவணம். கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தலின்போது என்ன மாதிரியான அரசியல் நடந்தது
என்று இதில் தெரிந்துகொள்ளலாம். இந்த இரண்டு புத்தகங்களையும், சேர்ந்து நோக்கும்போது
வேறு பரிமாணம் கிடைக்கிறது.
வீரப்பனைத்
தமிழகத்தின்
ராபின் ஹுட் என்றும், வீரப்பனைப் பிடித்துவிட்டார்களா? என்றும் பலர் கேலி பேசியுள்ளார்கள். துக்ளக் சோ முதல் சுஜாதா வரை
கேலி பேசாதவர்கள் யாரும் இல்லை.

சுஜாதா சொன்ன
பதில் ஒன்று:
இண்டர்நெட்டில் வீரப்பனைப் பற்றி
வெப்தளமும் இடம் பெற்று விட்டதே?
அப்படியா இனியாவது அவரைப் பிடித்து
விடலாம்!

30 ஆண்டுகளுக்கு
மேலாகக் காவல்துறைக்குத்
தண்ணி காட்டி, பல ஆண்டுகளாகக் காட்டில்
சந்தனமரக் கடத்தல் செய்து, பல யானைகளைக் கொன்று, பல அதிகாரிகளைக் கொன்று தொழில் செய்த
வீரப்பனை ஒரே ஒரு முறைதான் காவல்துறை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தியது. அதன்
பிறகு அவன் காவல்துறையில் பிடிபடவேயில்லை. ஒரு சந்தர்ப்பத்தில் 24 மணி நேரத்தில் இரண்டு
முறை தப்பித்திருக்கிறான்.

வீரப்பன் எவ்வளவு பயங்கரமானவன்
என்பதற்கு இந்த ஒரு சம்பவம் போதும். 1990 வருடம் ஸ்ரீநிவாஸ் என்ற வனத்துறை அதிகாரி
தானாக முன்வந்து கர்நாடகா அமைத்த சிறப்பு அதிரடிப்படையில் சேர்ந்தார். ஒரு முறை ஸ்ரீநிவாஸிடமிருந்து
வீரப்பன் தப்பியிருந்தான். அதனால் அவனை எப்படியாவது பிடிக்க வேண்டும் என்று அவர் அதிரடிப்படையில்
சேர்ந்தார். வீரப்பனின் தங்கை தற்கொலை செய்துகொள்ள ஸ்ரீநிவாஸ்தான் காரணம் என்று வீரப்பன்
நம்பினான். அதனால் ஸ்ரீநிவாஸைப் போட்டுத்தள்ளத் திட்டம் வகுத்தான்.

தான் சரணடையத் தயார் என்று
அறிவித்த வீரப்பனைச் சந்திக்க உற்சாகமாக ஸ்ரீநிவாஸ் கிளம்பினார். ஆனால் புதர்களுக்குள்
பதுங்கி இருந்த வீரப்பனும் அவன் கூட்டாளிகளும்…

ஸ்ரீநிவாஸ் சுற்றுமுற்றும் பார்த்தார். யதார்த்தம்
உறைத்தது. … வாழ்வின் கடைசி நிமிடங்கள். நின்றுகொண்டிருந்த ஸ்ரீநிவாஸைப் பார்த்து
வீரப்பனும் அவன் கூட்டாளிகளும் சிரிக்கத் தொடங்கினர். … வீரப்பன் துப்பாக்கியால்
சுட்டான். அவர் சரிந்து விழுந்து இறந்தார். ஆனால் அப்போதும் வீரப்பன் திருப்தி அடையவில்லை.
ஸ்ரீநிவாஸின் தலையை வெட்டினான். கொடூரமான அந்த வெற்றிக் கோப்பையைத் தனது முகாமிற்குக்
கொண்டு சென்றான். அங்கு அவனும் அவன் கூட்டாளிகளும் அதை ஒரு கால்பந்தைப் போல உதைத்து
விளையாடினர்.

கிட்டத்தட்ட மூன்று வருடங்கள்
வரையில் ஸ்ரீநிவாஸின் தலை மீட்கப்படவில்லை!
அந்த முப்பது ஆண்டுகளில்
அவன் 124 பேரைக் கொன்று குவித்துள்ளான். சிலர் 184 என்கிறார்கள். ஸ்பெஷல் டாஸ்க் ஃபோர்ஸ்
என்ற ஒன்று உருவாகக் காரணம் அந்தப் புனித வெள்ளி படுகொலைதான்.

ஒரு புனித வெள்ளி அன்று
வீரப்பன் வைத்த கண்ணிவெடிகளில் ஒரே சமயத்தில் 22 காவலர்கள் உயிர் இழந்தார்கள். அந்தப்
படுகொலை தமிழகம், கர்நாடகம் ஆகிய இரு மாநிலங்களிலும் அதிர்வலையை ஏற்படுத்தியது. ஒரே
நாளில் பங்குச் சந்தையில் விலை ஏறுவது போல வீரப்பனின் தலைக்கு ஐந்து லட்சம் என்பதிலிருந்து
20 லட்சம் ஏறியது. அதைவிட அவனிடம் பயமும் அதிகமாகியது.

அந்தப் புனித வெள்ளி தாக்குதலில்
ராம்போ என்ற காவலர் பலத்த காயமடைந்தார். அவரைப் பற்றி புத்தகத்தில் வரும் பகுதி இது:

அந்தக் குண்டு வெடிப்பில் ராய்போ பலத்த காயமடைந்திருந்தார்.
ஆனால் அவரைப் போன்ற அசாதாரணமானவர்களை மரணம் நெருங்குவது
கடினம். அல்லது அவரது மலைபோன்ற உடல்வாகு பாதிப்பைக் குறைத்திருக்கலாம். அவசரமாக அவர்
சேலம் கொண்டு செல்லப்பட்டார். அவர் உயிரோடு இருந்தது, அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள்
குழுவை பிரமிக்க வைத்தது.

பல மணி நேரங்களுக்குப் பிறகு அவர் சுயநினைவு வந்து
எழுந்தபோது மறுபடியும் ஒரு அதிர்ச்சியில் இருந்தார். அவருக்கு அருகே அப்போதைய முதலமைச்சர்
ஜெ.ஜெயலலிதா நின்று கொண்டிருப்பதைப் பார்த்தார்.

நீங்க நல்லாயிட்டீங்கன்னு டாக்டர்கள் எங்கிட்ட சொன்னாங்க.
சீக்கிரம் சரியாயிடுவீங்க
என்று சொன்னார்..

ஜெயலலிதாவின்
முகம் கடுமையாக இருந்தது.
இதை இப்படியே விட்டுவிடக்
கூடாது
என்று உத்திரவிட்டார்.

இதற்குப் பிறகு ராம்போ
ஒரு வருடத்திற்கு மேலாக மருத்துவ விடுப்பிலிருந்தார். அவருக்கு 12 அறுவைச் சிகிச்சையாவது
நடந்திருக்கும். அவர் வாழ்க்கை தொடர்ச்சியான வலியிலேயே கழிந்தது.

இந்தச் சம்பவத்துக்குப்
பிறகு ஜெயலலிதா காட்டிய வேகம் அசாதாரணமானது. வால்டர் தேவாரம் தலைமையில் தமிழ்நாடு சிறப்பு
அதிரடிப்படை அறிவிக்கப்பட்டு, அதில் சேர பல ஆயிரம் பேர் விண்ணப்பித்தார்கள்.
இன்னொரு சம்பவம். காட்டில்
யானை ஒன்று விஜயகுமாரைத் துரத்த மலைச் சரிவில் விழுந்து அடிபட்டு மூன்று வாரங்கள் ஓய்விலிருந்து
வந்தபிறகு அவருக்குப் பணி மாறுதல். அப்போது அவர் ஜெயலலிதாவிடம்

மேடம்… எனது டாஸ்க் இன்னும் முடியவில்லையே?
என்று முதல்வரிடம் கேட்டேன்

வீரப்பனைப் பிடிக்க நாள் குறித்து விட்டீர்களா?
என்றார்.
அந்தக் கேள்வி என்னைத் தர்மசங்கடத்தில் ஆழ்த்தியது.

இல்லை
என்றே தர்மசங்கடத்துடன் ஒப்புக் கொள்ள வேண்டியிருந்தது. 20 வருடங்களாக அந்தக் கொள்ளைக்காரன்
தப்பித்துக் கொண்டிருக்கிறான். என்னால் அவனைப் பிடிப்பதற்கான தேதியைத் தெளிவாகச் சொல்ல
முடியவில்லை.

புத்தகத்தின் இன்னொரு பகுதியில்,
வீரப்பனைத் தேடும் பணியில் இருந்தபோது சக காவலர் பாட்டில் தண்ணீரை எடுத்துக் குடிக்கிறார்.
இங்கே எப்படி ஸ்பிரைட்
கிடைத்தது?
இது பாசி பிடித்த தண்ணீர் நீர்ச்சத்து குறையாமல் இருக்க இரண்டு வாய் குடிப்பதற்குள்
குமட்டிக்கொண்டு வர… என்று வருகிறது.

பிறகு ஒரு சமயம், வீரப்பனின்
தாக்குதலில் கோபால் என்ற காவலர் அடிப்பட்டு ஜீப்பில் இருக்கிறார். அவருடைய ஓட்டுநர்
ரவி என்பவர் காயம் பட்டு வலது மணிக்கட்டு துண்டிக்கப்படும் நிலையில் இருக்கிறார். அத்தனை
வேதனையையும் தாங்கிக்கொண்டு, ரவி தனது முரட்டுத்தனமான தைரியத்தையும் சமயோஜித புத்தியையும்
செயல்படுத்தி, குறுகிய நேரத்தில் ஒரே கையில் வண்டியை ஓட்டிக்கொண்டு தப்பித்திருக்கிறார்கள்.

வீரப்பன் சிறுவனாக இருந்தபோது
அவன் ஒரு யானையைக் கொன்றிருக்கிறான். யானையின் நெற்றியில் சுட்டு உடனடியாக அதை உயிரிழக்கச்
செய்வது அவனுக்குப் பிடித்தமான வழிமுறை. ஏராளமான யானைகளை அவன் கொன்று குவித்திருக்கிறான்.
ஒரு யானையின் சடலம் பறவைகள், எறும்புகள் போன்ற லட்சக்கணக்கான உயிரினங்களுக்கு உணவாகிறது
என்றும் யானையைக் கொல்வது ஒரு தொண்டுதான் என்றும் அவன் வாதிடுவானாம்.
நாயகன் படத்தில் நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவும் தப்பில்ல என்ற வசனத்திற்கு நாம் கைதட்டி ரசித்த அபத்தத்திற்கும்
வீரப்பனின் இந்த விதண்டாவாதத்திற்கும் பெரிய வித்தியாசம் இல்லை. சினிமா வேறு நிஜ வாழ்க்கை
வேறு என்பதை இந்தப் புத்தகத்தில் பல இடங்களில் பார்க்க முடிந்தது. ஒரு சம்பவத்தை ஒரு
சிறுகதையாகவே எழுதிவிடலாம்.
விஜயகுமார் அவருடைய வேலையைப்
பற்றி முடிந்தவரையில் குழந்தைகளுக்குத் தெரியாமல் பார்த்துக் கொண்டார். ஒருமுறை சேலம்
மாவட்டத்தில் காவல் கண்காணிப்பாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்தபோது…

ஒரு ஜேம்ஸ் பாண்ட் படத்திற்கு எனது குடும்பத்தினரை
அழைத்துச் சென்றேன். நான் காரை ஓட்டினேன். எனது டிரைவர் என் அருகில் முன் சீட்டில்
அமர்ந்திருந்தார். மீனாவும் (மனைவி) குழந்தைகளும் பின் சீட்டில் அமர்ந்திருந்தனர்.

வழியில் ஒரு உள்ளூர் ரவுடி ஒருவன் பொதுமக்களிடம்
தகராறு செய்து கொண்டிருந்ததைப் பார்த்தேன். அது என்னை ஆத்திரமூட்டியது. காரைவிட்டு
வெளியே வந்தேன். அவன் என்னைக் கோபத்துடன் திரும்பிப் பார்த்தான். ஆள் வாட்டசாட்டமாகப்
பெரிதாக இருந்தான். நடுரோட்டில் ஒரு ரவுடியுடன் மோதுவது சரியான முடிவா இல்லையா என்பதையெல்லாம்
சிந்திக்கும் நிலையில் நான் இல்லை. பொதுமக்களை அடித்துக்கொண்டு இருந்தவனை நோக்கி நான்
வருவதைக் கண்ட அவன் என்னைத் தாக்க கையை ஓங்கினான். அவனது கையைப் பிடித்து தடுத்து ஓங்கி
ஒரு அறைவிட்டேன். அடுத்து, எனது துப்பாக்கியைப் பார்த்ததும் சிறிது மிரண்டான். சாலையில்
விழுந்து கிடந்த மரக்கிளை ஒன்றை எடுத்தேன். அவனது காலைப் பிடித்து இழுத்து காரின் முன்சீட்டில்
அவனைத் தள்ளினேன். போலிஸ் ஸ்டேஷன் வரும் வரையில் அவனை அந்த மரக் கிளையை வைத்து அடித்துக்
கொண்டே வந்தேன். எனது குழந்தைகள் இருவரும் சினிமாவில் பார்ப்பதற்கு ஆர்வமாக இருந்த
காட்சிகளை நிஜத்தில் பார்த்து மிரட்சி அடைந்தனர். அவர்கள் பொருமினர். விம்மினர். அவர்கள்
கண்ணில் கண்ணீர் உடைத்துக் கொண்டு வெளியேறியது.

குழந்தைகள் முன் இப்படி
நடந்ததை ஏற்றுக்கொள்ளவே முடியாது என்று விஜயகுமாரின் மனைவி கடுமையாகக் கோபித்துக் கொண்டுள்ளார்.
ஒரு போலிஸ் அதிகாரி ரவுடியை இந்த மாதிரி போலிஸில் ஒப்படைப்பதை சினிமாவில் பார்த்துக்
கைதட்டும் நாம் அவர்களுடைய நிஜ வாழ்க்கையில் என்ன மாதிரி சவால்களைச் சந்திக்கிறார்கள்
என்று புரிந்துகொள்ள முடிகிறது.

வீரப்பன் என்றால் சந்தனக்
கடத்தலுக்குப் பிறகு நினைவுக்கு வருவது கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல். ஜூலை 30,
2000 அன்று இரவு வீரப்பன் ராஜ்குமார் தங்கியிருந்த பண்ணை வீட்டில் வைத்து அவரைக் கடத்தினான்.
பக்கத்திலிருந்த ராஜ்குமாரின் மனைவி பர்வதம்மாளிடம் ஒரு ஆடியோ கேசட் கொடுத்து அப்போதைய
முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவிடம் கொடுக்கச் சொல்லிச் சென்றான். பர்வதம்மாள் உடனே பதற்றத்துடன்
பெங்களூரு நோக்கிச் சென்றார். போகும் வழியில் குடும்ப ஜோதிடரைப் பார்த்து ஆலோசனை கேட்டுவிட்டுச்
சென்றார். ஒரு சில நாட்களில் பாதுகாப்பாகத் திரும்புவார் என்றார் ஜோதிடர். ராஜ்குமார்
வருவதற்கு 108 நாட்கள் ஆனது.

1994ல் புகைப்படக்காரர்களை கடத்தியபோது
அதில் ஒருவர் தன் நண்பருக்குக் விளையாட்டாகக் கைரேகை பார்க்க, உடனே வீரப்பன் ஆர்வமாகத்
தன் கையைக் காட்டிப் பார்க்கச் சொல்லி, தனக்கு ஆயுசு எவ்வளவு நாள் என்று கேட்டுத் தெரிந்துகொண்டான்.
எதுக்கு நமக்கு வம்பு என்று கைரேகை பார்த்தவர்
எழுவது வயது வரை நீங்க இருப்பீங்க என்று சொல்லியுள்ளார்.

2001 அதிரடிப்படைக்கு வீரப்பனின்
ஜாதகம் வந்தது. அதிரடிப்படையில் ஜோதிடத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் சிலர் ஜாதகம் பார்க்கும்
நிபுணர்களை வரவழைத்து அவர்களிடம் வீரப்பனின் பற்றியும் அவன் எதிர்காலம் பற்றியும் கேட்டுள்ளனர்.
அரசாங்கத்துக்கு எதிரியாக இருப்பான். அவனுடைய பெரும்பாலான வாழ்க்கை வனவாசமாக இருக்கும்.
அவனுக்கு ராஜதண்டனை கிடைக்க வாய்ப்பு இருக்கிறது என்றார்கள். வீரப்பன் 14, 19, 32,
45, 52 ஆகிய வயதில் சோதனையை அனுபவிப்பான். 65 வயது வரையில் அவன் உயிரோடு இருந்துவிட்டால்
அவன் 78 வயது வரை உயிரோடு இருப்பான் என்று கணித்தார்கள். வீரப்பன் 52 வயதில் சுட்டுக்கொல்லப்பட்டான்.

ராஜ்குமார் கடத்தல் சம்பவத்தின்
முக்கியத் திருப்பம் ராஜ்குமாருடன் சென்ற அவருடைய உதவியாளர் நாகப்பா தப்பித்து வந்தது.
விஜயகுமார் எழுதிய புத்தகத்தில்: ஒரு மாலை நேரம் நாகப்பா தூக்கம் வராமல் புரண்டு கொண்டு
இருந்தார். நக்கீரன் கோபால் ஏதோ புத்தகம் ஒன்றைப் படித்துக்கொண்டு இருக்க, வீரப்பன்
குறட்டை விட்டுத் தூங்கிக்கொண்டு இருந்த போது, நாகப்பா இது தான் நல்ல சந்தர்ப்பம் என்று
அங்கே இருந்த அரிவாளை எடுத்து வீரப்பனை வெட்ட ஓங்கிய போது மேலே உள்ள கூரை தடுத்தது.
அப்போது கோபால் அவரது தோள்களைப் பிடித்துத் தடுக்க, அதற்கு நாகப்பா இதற்கு மேல் அங்கே
இருந்தால் ஆபத்து என்று தப்பித்து வந்துவிட்டார்.

வில்லனிடம் தப்பித்து வந்த
ஹீரோவாக நாகப்பா புகழப்பட்டார். ஆனால் விரைவிலேயே சிலர் நாகப்பா தனது ஹீரோவை விட்டு
ஓடி வந்த கோழை என்று சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். ராஜ்குமார் குடும்பத்தினர் கூட அவரிடம்
முகம் கொடுத்துப் பேசவில்லை என்ற செய்திகள் இருக்கிறது. நாகப்பா செய்ததையே
ராஜ்குமார் செய்திருந்தால் மீடியா இப்படி பேசியிருக்குமா என்று தெரியாது.
கில்லிங்
வீரப்பன்
என்ற
படத்தில் விஜயகுமார் டீமில் இருக்கும் ஒரு எஸ்.பி கதாபாத்திரத்தில் ராஜ்குமார் மகன்
பிறகு நடித்து திரைப்படத்தின் வழியாக வீரப்பனைக் கொன்றார்!.
தினகர் எழுதிய புத்தகத்தில்
நாகப்பா பற்றி மிக முக்கியமான ஒரு விஷயத்தைச் சொல்லுகிறார்.

நாகப்பா ஓர் ஏழை. ஆனால் ராஜ்குமாரிடம் அபரிமிதமான
விசுவாசம் உடையவர். ஓர் ஏழைக்குக்கூட தன்னுடைய மரியாதையைக் காப்பாத்திக் கொள்கின்ற
உரிமை இருக்கிறது. நாகப்பா பற்றி தவறான அறிவிப்பை நான் வெளியிட்டேன்… அவருக்கு அநீதி
செய்துவிட்டேன்… அவருக்கு என்னுடைய நிபந்தனையற்ற மன்னிப்பை தெரிவித்துக்கொள்கிறேன்..
தன்னுடைய உயிரினையும் பொருட்படுத்தாமல் தன்னுடைய எஜமானருக்காக அவர் ஒரு வீரச் செயலைச்
செய்திருக்கிறார்.
நாகப்பா தயவு செய்து என்னுடைய நிபந்தனையற்ற மன்னிப்பை
ஏற்றுக்கொள்ளுங்கள்.

கோபால் மட்டும் இல்லாவிட்டால், இந்த இருண்ட இரவில்
நாகப்பா வீரப்பனின் வாழ்க்கையினையே முடிவுக்குக் கொண்டு வந்திருப்பார். தொல்லைகளும்
முடிவுக்கு வந்திருக்கும். வீரப்பன் இன்று உயிருடன் இருப்பதற்கு கோபால்தான் பொறுப்பு.
என்ன முரண்பாடு. உண்மையுள்ள ஊழியன் வறுமையுடன் போராடிக் கொண்டிருக்கிறான். காட்டுக்
கொள்ளைக்காரன் வீரப்பனை மரணத்திலிருந்து காப்பாற்றி ஒருவர் குளிர்சாதன வசதியில் வாழ்ந்து
கொண்டிருக்கிறார். வீரப்பன் பற்றிய கதைகளை எழுதி சம்பாதித்த செல்வத்தை அனுபவித்துக்
கொண்டிருக்கிறார். நக்கீரன் கோபால் செய்த குற்றங்களுக்காக தமிழ்நாடு காலவல்துறையினர்
அவர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று நான் ஆச்சரியப்படுகிறேன்.

ராஜ்குமார் விடுவிப்புக்குப்
பிறகு பத்திரிகையாளார்களை சந்தித்து அவருடைய அனுபவங்களைச் சொன்ன போது வீரப்பனின் மீது
எந்த கசப்புணர்வும் இன்றி,
வீரப்பனை மனிதத்தன்மை உடையவனாகவே கருதலாம். என்னை
விடுவிக்கும் முன் அங்கே ஒரே கூத்தும் கும்மாளமும்தான்
என்று நினைவு கூர்ந்தார். வீரப்பன் இறந்த பின் ஒரு தீய சக்தி அழிக்கப்பட்டது என்றார்.
ராஜ்குமார் விடுவிப்புக்குப்
பல கோடிகள் கைமாறியது என்பது பல புத்தகங்களில் இருக்கிறது. விஜயகுமார் தன் புத்தகத்தில்
அதைக் குறிப்பிட்டுள்ளார் ஆனால் இரு மாநில அரசும் அதை மறுத்தது. ராஜ்குமார் கடத்தலுக்குப்
பிறகு வீரப்பனைத் தேடும் பணியில் இருந்தபோது பல ரூபாய் நோட்டுகள் கிடந்ததையும், ராஜ்குமார்
கடத்தலின் போது கொடுத்த பணமாக அவை இருக்கலாம் என்றும் யூகங்கள் அடிப்படையில் சொல்லி
உள்ளார். சில வருடங்களுக்கு முன் ராஜ்குமார் மூத்த மகன் வீரப்பனுக்குப் பணம் கொடுக்கப்பட்டது
ஒரு ஓப்பன் சீக்ரெட்..
யார் எவ்வளவு என்று தெரியாது ஆனால் நிறைய
என்று கூறியுள்ளார். தினகர்
தன் புத்தகத்தில் எவ்வளவு கோடி யார் என்று பட்டியலிட்டுள்ளார்.


மருமகன் மூலம் 5 கோடி இரண்டு முறை (10 கோடி), உளவுத்துறைத்
தலைவர் மூலம் 5 கோடி, பர்வதம்மா சென்னைக்கு அனுப்பிய 1 கோடி கருணாதிநி வீட்டில் கொடுக்கப்பட்டது.
பர்வதம்மா பானுவிடம் நேரடியாக 2 கோடி, திரைப்படத் தொழிலில் உள்ளவர்கள் சென்னையில் கருணாநிதி
வீட்டிற்குக் கொண்டு சென்ற 2 கோடி… மொத்தம் 20 கோடி!

வீரப்பனுடைய செல்வாக்கு
தமிழ்த் தீவிரவாதிகளின் அமைப்புடன் தொடர்பு ஏற்பட்ட பிறகு அடுத்த நிலைக்குச் சென்றது
என்று கூறினால் மிகை ஆகாது. கோபால், நெடுமாறன் போன்றவர்கள் சென்று வீரப்பனை மீட்டுக்
கொண்டு வந்ததை
In retrospect, the entire drama looks like a
pre-planned, well-executed exercise with the single-point agenda of promoting
Nedumaran
s interest in
politics and his popularity among the public
என்று சோ கூறியுள்ளார்.

வீரப்பனைப் பிடிக்க, சிறையில்
தமானி(விஜயகுமார் இப்படித்தான்
புத்தகத்தில் எழுதி இருக்கிறார்) என்ற கேரள மதத்தலைவருடன் பேசி ஒரு திட்டத்தை வகுக்க,
போலிஸ் அவரை ரகசியமாகச் சந்தித்தது. அந்த சமயத்தில் தினமலர் பத்திரிகை
அடிக்கடி கோவை சிறைக்குக் காவல் அதிகாரி செல்கிறார் என்று செய்தி வெளியிட்டு போலிஸின் தூக்கத்தைக்
கெடுத்தது. வீரப்பனின் கேசட் வெளியிடுகிறேன் என்று சில பத்திரிகைகள் செய்திகளை வெளியிடத்
தொடங்கின. பல தலைவர்கள் பற்றியும் வீர்ப்பன் அசிங்கமாகப் பேசியது (குறிப்பாக ஜெயலலிதா),
தடா கைதிகளை விடுவிப்பது குறித்த பேச்சு, காவிரி பிரச்சினை பற்றிப் பேசியது போன்றவை
எல்லாம் இரு மாநில அரசாங்கங்களுக்கும் பல சிக்கல்களை உருவாக்கியது.

வீரப்பன் என்கவுண்ட்டர்
என்ற செய்தி வந்தபிறகு அந்த என்கவுண்ட்டர் போலி என்று மீடியாக்கள் ஊதிப் பெருக்கின.
இத்தகைய வதந்திகள் அதிரடிப்படையின் நேர்மைக்கும் வலிமைக்கும் ஒரு அவமானம் என்கிறார்
விஜயகுமார். அதிரடிப்படை அப்பாவி மலைவாழ் மக்களைக் கொடுமைப் படுத்தியது என்று ஒரு செய்தி
திட்டமிட்டுப் பரப்பப்பட்டு அவர்களுக்குக் கெட்ட பெயர் ஏற்படுத்தியதில் மீடியாக்களுக்கு
உள்நோக்கம் இருக்கத்தான் செய்கிறது. கோர்ட் கேஸ் என்று வந்த பிறகு, சின்னதாக
வருத்தம் என்று வெளியிட்டு முடித்துக்கொள்கிறார்கள்.

துக்ளக் கேள்வி பதில் பகுதியில் ஒரு கேள்வி:

பத்திரிக்கையாளர்களுக்கும் சிறைத்தண்டனை அளிக்கும்
பயங்கரவாதத் தடுப்பு மசோதாவைக் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளதே?

ப: தீவீரவாதிகளைப் பற்றிய தகவல் அளித்த பத்திரிகையாளர்கள்,
அது பற்றிய விவரங்களை அரசுக்குத் தர மறுத்தால் தண்டனை – என்பது மசோதாவின் ஷரத்துக்களில்
ஒன்று. இதில் தவறு இருப்பதாக நான் நினைக்கவில்லை. பத்திரிகையாளர்களும் குடி மக்களே.
நாட்டின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டவர்களே

உச்சநீதிமன்றம் நம் நாட்டுக்கு ஏன் முக்கியம் என்பது வீரப்பன் விஷயத்தில்
வெட்ட வெளிச்சமாகத் தெரிகிறது. இரு மாநில முதல்வர்களும் தடா கைதிகளை விடுவிக்க முடிவு
செய்தபோது உச்ச நீதி மன்றம் தடுத்தது. தன்னுடைய தீர்ப்பில்

கடந்த
பத்தாண்டுகளுக்கு மேலாகக் காடுகளில் வீரப்பன் பிரிவினைவாதிகளுடன் சேர்ந்து செயல்பட்டுக்
கொண்டிருக்கிறான், வீரப்பன் தொடர்ந்து குற்றங்களை இழைப்பவன் என்று எங்களுக்கு உறுதியாகத்
தெரிகிறது. சட்டத்தை மீறுபவர்களுக்குப் பயந்து அரசு நடந்து கொண்டால் சட்டத்தை மீறுகின்றவர்களுக்கு
இடம் கொடுப்பதாகிவிடும். இதன் விளையாக ஜனநாயக அமைப்பே சீர்குலைந்து போகும். சட்டம்
ஒழுங்கைப் பாதுகாப்பது கர்நாடக அரசின் பொறுப்பு. உங்களால் முடியவில்லையெனில் நீங்கள்
பதவி இறங்கி அதை யார் செய்வார்களோ அவர்களுக்கு வழிவிடுங்கள்.


வீரப்பனின் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் என்று
வழக்கு தொடுத்தவர் அப்துல் கரீம் என்ற 76 வயது ஓய்வு பெற்ற முன்னாள் டி.எஸ்.பி. இவருடைய
மகன் வீரப்பனின் தாக்குதலில் கொல்லப்பட்ட எஸ்.ஐ. ஷகில் அகமதுவின் தந்தை. இவர்களைப்
போல உண்மையான குடிமகன்களை நாம் பாராட்டாமல் இருக்க முடியாது. இருக்கக் கூடாது.

வீரப்பனை வெளியே கொண்டு வர, மிஸ்டர் எக்ஸ் என்ற
வீரப்பனிடம் தொடர்புடைய தொழிலதிபர் ஒருவர் உதவியிருக்கிறார். அவர் யார் என்று புத்தகத்தில்
சொல்லப்படவில்லை. கடைசியில் வீரப்பனை எப்படிச் சுட்டு வீழ்த்தினார்கள் என்ற பகுதிகள்
படிக்கச் சுவாரசியமானவை.
வீரப்பன் முடிவுக்கு வந்த பின் துக்ளக் தலையங்கத்தில்
சோ இப்படி எழுதினார்:
துக்ளக்
உட்பட பல பத்திரிகைகள் செய்து வந்த கிண்டல்; பொதுவாகவே மக்களிடையே நிலவிய ஏளனம்; நிபுணர்கள்
என்று தங்களை நினைத்துக் கொண்டவர்களின் உபதேசங்கள்; நடக்கவே நடக்காது எனக் கூறி சில
தலைவர்கள்
விட்டு வந்த சவால்கள்… போன்றவற்றை எல்லாம் சகித்துக் கொண்டு வந்த தமிழக போலிஸ்துறை,
வீரப்பனையும், அவனது சகாக்கள் சிலரையும் சுட்டு வீழ்த்தி, ஒரு சாதனையை நிகழ்த்தியிருக்கிறது….
….
இன்றைய முதல்வர் ஜெயலலிதா, தன்னால் முன்பு தோற்றுவிக்கப்பட்ட
விசேஷப் படையை மீண்டும் உயிர்ப்பித்தார். அவர்கள் மீது முழு நம்பிக்கை வைத்ததுடன்,
நவீன சாதனங்களையும் அவர்கள் பெற வழி செய்து, அவர்களை ஊக்கப்படுத்தினார். அரசு அவர்கள்
பின் நிற்கும் என்ற உறுதியையும் அவர்கள் மனதில் தோற்றுவித்தார். விசேஷப் படை காட்டிய
முனைப்பிற்கு, முதல்வர் ஜெயலலிதா காட்டிய உறுதியும் முக்கியக் காரணம். தீவிரவாதத்தைக்
கட்டுப்படுத்துவதிலும், ரௌடிகளை அடக்குவதிலும், பயங்கரவாதத்தை ஒழித்துக் கட்டுவதிலும்
முதல்வர் ஜெயலலிதாவுக்கு இருக்கிற முனைப்பு, இந்தியாவில் வேறெந்த முதல்வருக்கும் இல்லை
என்ற நமது கருத்து மீண்டும் ஊர்ஜிதப்படுத்தப் பட்டிருக்கிறது. விஜயகுமாருடன் சேர்ந்து,
ஜெயலலிதாவையும் பாராட்டுகிறோம். நல்லது நடந்திருக்கிறது. நல்லவர்கள் பாராட்டக் கடமைப்பட்டுள்ளனர்.
ஜெயலலிதா அதிரடிப்படையில் பணியாற்றிய ஒவ்வொருவருக்கும் ஒரு மனையும்,
ரூ 3 லட்சம் ரொக்கமும் பதவி உயர்வும் கொடுத்து கௌரவித்தார்.
விஜயகுமார் ஒரு பேட்டியில்
தன்னுடைய புத்தக விற்பனையில் வரும் பணத்தில் ஒரு பகுதியை எப்படிப் பயன்படுத்தப் போகிறேன்
என்று கூறி இருக்கிறார்.
I want to donate the entire proceeds for
education-related activities in the places where Veerappan struck like a
tsunami – say the villages including Manjucomapatti, Pulinjur, Geddesal- where
people were brutally killed by him
என்கிறார்
விஜயகுமார் ஆங்கிலப் புத்தகத்தின் ஆரம்பத்தில் Dedicated to late
Selvi J. Jayalalithaa and to all search teams
என்று
சமர்ப்பித்துள்ளார். ஆனால் தமிழ் மொழிபெயர்ப்பில் இதைக் காணவில்லை!
-சுஜாதா தேசிகன்
புத்தகங்கள்:
Veerappan: Chasing the Brigand, K. Vijay Kumar (ஆங்கிலம்)
வீரப்பன் வேட்டை, கே. விஜயகுமார் (தமிழ்)
Birds, Beasts and Bandits by Krupakar Senani,
மாலை சுவடுகள் – மாலை முரசு பிரசுரம்
பரபரப்பு செய்திகள்:

Posted on Leave a comment

பராசரன் என்ற இராமப்பிரியன் | சுஜாதா தேசிகன்

பதினோராம் நூற்றாண்டு. ஸ்ரீ ராமானுஜர் தன்
குருவான ஆளவந்தாரைப் பார்க்கக் காஞ்சியிலிருந்து ஸ்ரீரங்கத்துக்கு ஓடோடி வருகிறார்.
வருவதற்குள் ஆளவந்தார் பரமபதித்துவிட, வட திரு காவிரியில் ஆளவந்தாரின் சரமதிருமேனியைக்
கண்ணீருடன் நோக்கும்போது, அதில் மூன்று விரல்கள் மட்டும் மடங்கியிருப்பதைக் கவனிக்கிறார்.
அவர் உள்ளத்தில் நிறைவேறாத ஆசை இருந்திருக்கிறது
என்று உணர்ந்து, தான் ஒவ்வொரு ஆசையாக நிறைவேற்றப் போவதாக பிரதிக்ஞை செய்கிறார். ஆளவந்தாரின்
விரல்கள் ஒவ்வொன்றாக விரிகிறது..
அதில் ஒரு ஆசை: ‘விஷ்ணுபுராணம் அருளிய பராசர
மகரிஷியின் பெயரையும், மஹாபாரதத்தை அருளிய அவரது குமாரரான வேத வியாசர் பெயரையும், தகுதியுள்ளோருக்குச்
சூட்ட வேண்டும்’ என்பது.
ஸ்ரீ ராமானுஜர் அவருடைய சிஷ்யரான கூரத்தாழ்வானுடைய
புதல்வர்களுக்கு இந்தப் பெயர்களைச் சூட்டினார். ஒருவர் ஸ்ரீ பராசரபட்டர், இன்னொருவர்
ஸ்ரீவேதவியாஸ பட்டர்.
ஸ்ரீரங்கத்தில் பிறந்த ஸ்ரீ பராசர பட்டர்
புலமை மிகுந்தவராகவும், ஸ்ரீராமர் மீது அளவு கடந்த பக்தியும் வைத்திருக்கிறார். இவருடைய
சிஷ்யர்கள் கண்ணனின் குணங்களைச் சொல்லி, ஸ்ரீராமர் இப்படிச் செய்தாரா என்று கேள்வி
கேட்டால், அதற்குத் தகுந்த பதிலளித்து, சக்கரவர்த்தி திருமகனை என்றும் விட்டுக்கொடுக்கமாட்டார்.
(திரு
கே.பராசரன்) பட்டருக்கு 800 ஆண்டுகளுக்குப் பிறகு,
1927ல் பிறந்தவரும் இன்று இந்தியாவின் முன்னோடி வழக்கறிஞர்களில் ஒருவருமான கே. பராசரன்
அவர்கள் பட்டரைப் போலப் புலமையும், ஸ்ரீராமர் மீது அளவு கடந்த பக்தியும் வைத்திருப்பவர்.
பராசரன் மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல்,
அட்டர்னி ஜெனரல் போன்ற உயர் பதவிகளை வகித்தவர். 92 வயதில் ராம ஜென்ம பூமி வழக்கில்
உச்ச நீதிமன்றத்தில் வாதாடி வெற்றி பெற்றுத் தந்தவர்.
ஒரு நாள் வழக்கு விசாரணையின்போது அவரிடம்
தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், ‘உங்கள் வயதுக்கு மதிப்பளித்துச் சொல்கிறேன். ஒரு நாற்காலி
போடச் சொல்கிறேன். அமர்ந்து வாதங்களைச் சொல்லுங்கள்’ என்றார்.
அதற்கு, ‘வக்கீல் நின்று வாதிடுவதுதான் முறை.
என் ராமனுக்காக நிற்பேன். நிற்க இயலாது போனால் நீதிமன்றம் வருவதை நிறுத்திக் கொள்வேன்’
என்று சொல்லி, 92 வயதிலும் நின்றுகொண்டே வாதாடினார் தமிழகத்தைச் சேர்ந்த முதுபெரும்
வழக்கறிஞர். தொழில் பக்தியுடன் இணைந்த, ஸ்ரீ ராமாயண பக்தியுடன் கூடிய இவருடைய வாதங்களே
நீதிபதிகளைத் தர்மத்தை நோக்கி வழிநடத்தின என்று கூறலாம்.
‘தர்மத்தை நோக்கி’ என்று போன பத்தியின் கடைசி
வாக்கியம் ஏதோ அலங்கார வாக்கியம் என்று நினைக்க வேண்டாம். ‘தர்ம சாஸ்திரம்’ என்ற சொல்
நமக்குப் புதிதல்ல. இந்த இரண்டு சொல்லும் ஏன் சேர்ந்தே வருகிறது என்று நாம் யோசித்திருக்கிறோமா?
ரிக்வேதத்தில் பல இடங்களில் தர்மம் பற்றிப்
பேசப்படுகிறது. வேதம்தான் எல்லாவற்றிருக்கும் ஆதாரம். ஸ்மிருதிகள், ராமாயணம், மஹாபாரதம்
முழுமையாக வேதத்தை அங்கீகரித்தவை. பாரத தேசத்துக்கு வேதமே வேர்.
எப்படி ‘தர்ம சாஸ்திரம்’ பிணைத்துள்ளதோ அதே
போல ‘இந்தியாவும் கலாசாரமும்’. தர்மம் என்பது அனைத்து ஜீவராசிகளுக்கும் அடித்தளமாக
விளங்குகிறது, இதுவே சனாதன தர்மம். இதுவே பாரதத்தின் தர்மம். நம் தேசத்தில் ஸ்ரீமத்
ராமாயணம், ஸ்ரீ மஹாபாரதம் போன்ற இதிகாசங்கள் இந்த நல்லிணக்கத்தைப் போதிக்கின்றன. அதுவே
நம் கலாசாரமாகப் பிரதிபலிக்கிறது.
இந்தியத் தேசத்தின் ‘motto’ பொன்மொழி முண்டக
உபநிஷத் வாக்கியமான ‘சத்யமேவ ஜெயதே’ என்பது. இதுவே நம் தேசிய சின்னத்தில் கீழே பொறிக்கப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்றத்தில் முக்கிய வாக்கியம் ‘யதோ
தர்ம: ததோ ஜெய’ என்ற அதாவது ‘தர்மம் உள்ள இடத்தில் வெற்றி இருக்கும்’ என்பது தற்செயல்
இல்லை. இந்த வாக்கியம் ஸ்ரீ மஹாபாரதத்தில் பல இடங்களில் வருகிறது.
‘சில்வர் டங்’ என்று போற்றப்பட்ட வி.எஸ்.ஸ்ரீனிவாச
சாஸ்திரி அவர்கள் ஸ்ரீ ராமாயணத்தை ‘It is essentially a human document’ என்கிறார்.
ஸ்ரீமத் ராமாயணத்தில் தசரதனுக்கு மூத்த மகனான
ஸ்ரீராமர்தான் முடிசூட வேண்டும் என்பது ராஜ நீதி என தரசதனும் அறிவித்துவிட்டார், அது
மட்டுமல்ல, அயோத்தி மக்கள் அனைவரும் ஸ்ரீராமர்தான் தங்களுக்கு அடுத்த அரசனாக வேண்டும்
என்றும் விரும்புகிறார்கள். ‘மக்கள் குரலே மகேசனின் குரல்’ என்று ஸ்ரீராமர் ஏற்றுக்கொண்டிருக்க
வேண்டும். ஆனால் தன் தந்தை செய்துகொடுத்த சத்தியத்தை நிறைவேற்ற, பதவியை ஏற்றுக்கொள்ளாமல்
ஸ்ரீராமர் தர்மத்தை நிலைநாட்டினார். சட்டம் எப்போதும் தர்மத்துடன் இணங்க வேண்டும்.
அப்போது தான் நாட்டில் நல்லாட்சி நடைபெறும்.
பராசரன் பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும்
ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீ கேசவ ஐயங்காருக்கும் ரெங்கநாயகி அம்மாளுக்கும் பிறந்தவர். கேசவ
ஐயங்கார் புகழ்பெற்ற வழக்கறிஞராக இருந்தார். வேத விற்பன்னரும் கூட.
தன் தந்தையின் வழக்குகளுக்குத் தட்டச்சு செய்து
உதவ ஆரம்பித்த பராசரனுக்குச் சட்டத்தின் மீது ஆர்வம் ஏற்பட்டது. சட்டம் படித்து, பல
விருதுகளைப் பெற்றார். திருமணமாகி சென்னையில் ஒரு ‘கார்  ஷெட்டில்’ குடும்பம் அமைத்து ஒரு பெண் குழந்தையுடன்
குடும்ப வாழ்க்கையை ஆரம்பித்தார். நீதிமன்ற ‘டிராப்டிங்’ வேலை, கல்லூரியில் பேராசிரியர்
வேலை என்று தேடி எதுவும் கிடைக்காமல் வாழ்க்கையில் கஷ்டப்பட்ட சமயம் சிபாரிசு என்று
எங்கும் போகாமல் ‘திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் பார்த்துக்கொள்வார்’ என்று
இருந்தார்.
பார்த்தசாரதி என்ற கீதாசாரியன் இவருக்கு வழி
காண்பித்தார்.
திருவல்லிக்கேணியில் சேங்காலிபுரம் அனந்தராம
தீக்ஷிதரின் ஸ்ரீமத் ஸ்ரீ ராமாயண உபன்யாசத்தைக் கேட்க ஆரம்பித்தார். அப்போது அந்த உபன்யாசகர்
ஸ்ரீமத் ராமாயணம் படித்தால் கை ரேகை கூட மாறும் என்று அவர் சொல்ல, பராசரன் அவர்கள்
தினமும் ஸ்ரீமத் ராமாயணம் படிக்க ஆரம்பித்தார். அதற்குப் பிறகு அவருக்கு எல்லாம் ஏறுமுகம்தான்
!
1958ல் உச்ச நீதிமன்ற வழக்குரைஞராகப் பதிவு
செய்துகொண்டார். அப்போது மோகன் குமாரமங்கலம் போன்ற பல முக்கியப் பிரமுகர்களுடன் பழக்கம்
ஏற்பட்டு, தொழிலதிபர்கள் பலருக்கு ஆலோசனைகள் செய்து, 1971ல் சென்னை உயர்நீதிமன்றத்தில்
மத்திய அரசின் ஸ்டாண்டிங் கவுன்சிலில் நியமிக்கப்பட்டார்.
கோயில் அர்ச்சகர் நியமனம் செல்லாது என்ற வழக்கு
உச்ச நீதிமன்றத்தில் வந்த சமயம் காஞ்சி மஹா பெரியவர் இவரைக் கூப்பிட்டு ‘சட்ட நிபுணர்,
பொருளாதார மேதை நானி பால்கிவாலாவை நான் இந்த வழக்கில் ஆஜராகச் சொல்லியிருக்கிறேன்.
அவருடன் சேர்ந்து நீங்களும் உதவ வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டார். அப்போது பால்கிவாலாவுடன்
அவருக்கு நட்பு ஏற்பட்டது. இருவரும் கட்டணம் எதுவும் வாங்காமல் கைங்கரியமாக அந்த வழக்கை
ஜெயித்துக் கொடுத்தார்கள்.
இந்திரா எமர்ஜன்சி கொண்டு வந்து மீண்டும்
ஆட்சிக்கு வந்த சமயம். எக்ஸ்பிரஸ் செய்தித்தாள் வழக்கில் கட்டடங்களை இடிக்க அரசு மேற்கொண்ட
‘ஷோகாஸ் நோட்டீஸ்’ நடவடிக்கையை அரசாங்கத் தலைமை வழக்குரைஞரான பராசரன் ஒத்துக்கொள்ளவில்லை.
அரசு இவர் அறிவுரையை ஏற்றுக்கொள்ளவில்லை.
தன்னை இந்த வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டும்
என்று தர்மத்தின் பக்கம் நின்றார். பலர் அரசுக்கு எதிராக இப்படிச் செய்கிறீர்களே என்று
கேட்டதற்கு அவர் தைரியமாகத் தர்மத்தின் பக்கம் நின்றதற்குக் காரணமாக, அவரது தந்தை சொன்ன
அறிவுரையைக் குறிப்பிடுகிறார். ‘Don’t sell your heritage for a mess of pottage’.
வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட அன்று அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு வந்து தன் தந்தையின்
படத்தின் முன் விழுந்து வணங்கினார்.
இவருடைய நீதிமன்ற வாதங்கள் பலநேரங்களில் இந்து
வேதங்களிலிருந்து பெறப்பட்டவை. இந்திய நீதிமன்றங்களில் வழக்காடும் பிதாமகன் இவர் என்றும்,
தர்மங்களிலிருந்து நெறி பிறழாமல் வாதாடும் திறமை கொண்டவர் என்று சென்னை உயர்நீதிமன்றத்தின்
தலைமை நீதிபதி பராசரனைப் பாராட்டியுள்ளார். இந்தியன் எக்ஸ்பிரஸ் விவகாரத்துக்குப் பிறகு
இந்திரா அரசில் இவருக்கு இந்திய அரசுத் தலைமை வழக்குரைஞராகப் பதவி உயர்வு தரப்பட்டது.
முதல் குழந்தை பிறந்த சமயம், அவருடைய மனைவிக்கு
அது கஷ்டமான பிரசவமாகியது. அவர் உயிர் பிழைத்ததே கடவுளின் ஆசி என்றுதான் கூற வேண்டும்.
அப்போது மருத்துவர்கள் இனிமேல் உங்களுக்குக் குழந்தை பிறப்பது கஷ்டம் என்று சொல்லிவிட்டார்கள்.
இவருடைய ஆசாரியன் அஹோபில மடம் முக்கூர் அழகியசிங்கர் சேலத்தில் எழுந்தருளியிருந்த ஒரு
சமயம், அவரை வணங்கியபோது, மருத்துவர் சொன்னதைப் பராசரன் ஆசாரியனிடம் கூறியதற்கு, அவர்
‘லக்ஷ்மி நரசிம்மனைவிடப் பெரிய டாக்டர் இருக்கிறாரா?’ என்று சொல்லிவிட்டு அட்சதை கொடுத்து
ஆசீர்வாதம் செய்து அனுப்பினார். அதற்குப் பிறகு அவருக்குக் குழந்தைகள் பிறந்தார்கள்.
ஒரு முறை ஒரு பெரியவரிடம் வழக்கறிஞராக இருக்கிறேன்,
வழக்குகளில் வாதாடுகிறேன், நான் யாரை வணங்க வேண்டும் என்று கேட்க, அதற்கு அந்தப் பெரியவர்
அனுமார் என்று பதில் கூற, அன்றிலிருந்து அவருடைய கோட் பாக்கெட்டில் சின்ன சந்தனச் சிற்ப
அனுமாரும், பார்த்த சாரதி படமும் நிரந்தரமாயின.
ஸ்ரீ ராமாயணத்தில் கிஷ்கிந்தா காண்டத்தில்,
ஸ்ரீராமர் லக்ஷ்மணனிடம் அனுமாரைப் பற்றி இப்படிக் கூறுகிறார்:
‘ரிக் வேதத்தை கிரமப்படி அறியாவிட்டால் இவன்
இப்படிப் பேசமுடியாது. யஜூர்வேதத்தைப் பூர்ணமாக அறிந்து மனத்தில் தரிக்காவிட்டால் இப்படிப்
பேசமாட்டான். ஸாம வேதத்தின் ரஹஸ்யத்தை அறியாதவன் இப்படிப் பேசமாட்டான். இவன் சகல வியாகரணங்களையும்
பூர்ணமாகப் பலமுறை கற்றிருந்திருக்கிறான் என்பது நிச்சயம். அவன் பேசும் வாக்கியங்களில்
ஒரு பிசகான சப்தத்தைக் கேட்கமுடியவில்லை. முகத்திலும், நெற்றியிலும் புருவத்திலும்
மற்ற அவயங்களிலும் யாதொரு தோஷமும் பேசும்பொழுது காணப்படவில்லை. அவன் பேசும் வாக்கியங்கள்
அதிக வேகமில்லாமலும், இருதயத்தில் தோன்றி, கழுத்தில் ஒலித்து மத்யம ஸ்வரத்தில் உச்சரிக்கப்படுகின்றன.
இவனைக் கொல்ல கத்தியுடன் பாயும் சத்துருவும், கோபம் தணிந்து சாந்தம் ஏற்பட்டு இவனுக்கு
வசப்படுவான்’ என்கிறார்.
(திரு
கே.பராசரன் தன் வழக்கறிஞர்கள் குழுவுடன்)
பராசரனுக்கு அந்த அனுமாரே வந்து சில இடங்களில்
வாதாடினாரோ என்று கூடத் தோன்றுகிறது. ஒரு வழக்கில் இவர் சரியாக வாதாடவில்லை. பராசரனுக்கு
என்ன ஆயிற்று என்று பலர் குழம்பினார்கள். அப்போது பராசரன் தன் கோட்டு பாக்கெட்டில்
கையை விட்டுப் பார்த்தபோது அங்கே அந்தச் சந்தன அனுமாரைக் காணவில்லை. உடனே தன் ஜூனியரை
அழைத்து தன் அறையிலிருந்து அந்த அனுமாரை எடுத்து வரச் சொன்னார். அதற்கு பிறகு அவர்
செய்த வாதங்களைப் பார்த்து நீதிமன்றம் பிரமித்துப் போனது.
(சேதுபந்தம்
என்ற ஸ்ரீராம சேது பாலம்)
சேது சமுத்திர திட்டம் வந்தபோது அதற்குப்
பல இடங்களிலிருந்தும் எதிர்ப்பு வந்தது. வழக்கு நீதிமன்றம் சென்றபோது, சிலர் அதைத்
தடுக்க வேண்டும் என்று இவரிடம் வந்தார்கள். அரசுத் தரப்பும் இவரை அணுகி வழக்கை நடத்தவேண்டும்
என்றார்கள். என்ன செய்வது என்று குழம்பினார். அன்று இரவு இவருக்குத் தூக்கம் வரவில்லை.
ஸ்ரீராம சேது என்பது ஸ்ரீ ராமாயணத்தில் முக்கியமான
இடம். விபீஷணருக்குச் சரணாகதி கிடைத்த இடம். ஸ்ரீ ராமாயணத்தைப் படித்து நாம் முன்னேறியிருக்கிறோம்
என்றும், ஸ்ரீராம சேதுவை இடிக்கக் கூடாது என்ற பக்கம் இவர் உச்சநீதிமன்றத்தில் வாதாடினார்.
வாதங்களை எல்லாம் முடித்தபிறகு ஒரு நீதிபதி
பராசரனிடம், ‘எல்லா வழக்கிலும் அரசு தரப்புக்குத்தான் நீங்க வாதாடுவீர்கள் ஆனால் இந்த
வழக்கில் மட்டும் எதிராக வாதாடுகிறீர்களே?’ என்றதற்கு
‘வாழ்கையில் ராமாயணம் படித்து முன்னுக்கு
வந்திருக்கிறேன். This is the least I owe to Lord Rama’ என்று நீதிமன்றத்தில் பிரகடனப்படுத்தினார்.
(ராமஜென்ம
பூமி வழக்கில் ஆஜரான வழக்கறிஞர்களுக்கு வி.எச்.பி ஏற்பாடு செய்த பாராட்டு விழாவில்
கே பராசரன்)
இந்திய அரசுத் தலைமை வழக்குரைஞராக இருந்த
பிறகு, சில தனியார் வழக்குகளில் வாதாடி ஒரு மந்திரியின் வழக்கை மும்பையில் ஜெயித்துக்
கொடுத்தார். அப்போது உங்களின் கட்டணம் எவ்வளவு என்று கேட்டதற்கு, கட்டணம் வாங்க மறுத்துவிட்டு,
ஏதாவது நன்கொடை கொடுக்க வேண்டும் என்றால் ராஜிவ் குண்டு வெடிப்பில் இறந்த காவல்துறையினரின்
குடும்பங்களுக்கு உதவி செய்யுங்கள்’ என்றார்.
ஸ்ரீராம ஜன்ம பூமி வழக்கு உச்சநீதிமன்றத்தில்
வந்தபோது ‘தாய், தாய்நாடு சொர்க்கத்தை விடப் பெரியது’ என்று வாதத்தைத் தொடங்கினார்
இந்த 92 வயது வழக்கறிஞர்.
‘பரா: 
என்றால் எதிரிகள் என்று பொருள், சர: என்றால் அம்புகள். ஸ்வாமி தேசிகன் ‘பராசரா’
என்றால் எதிரிகளைத் தன் வாதங்களின் அம்பு மழையால் தோற்கடிக்கும் வீரர் என்கிறார்.
‘என் ராமனுக்காக நிற்பேன்’ என்று நின்றுகொண்டு
வாதாடிய இந்த 92 வயது மூதறிஞர் இந்த வழக்கிற்காக ஒரு ரூபாய்கூட ஊதியம் பெற்றுக்கொள்ளவில்லை.
இதுவே தனது கடைசி வழக்கு என்றும் அறிவித்திருக்கிறார்.
நவம்பர் 23 அன்று, அயோத்தி சென்று தீர்ப்பின்
நகலை ஸ்ரீராமருக்கு அளித்துவிட்டு அவர் எழுதிக்கொடுத்த வாசகம் இது:
‘The genuine bhakti of the Bhaktas of
Lord Ram has brought back Ram Janmabhumi with a temple long due.’
– K Parasaran, A Bhaktha of Sri SitaRam.
‘கோயிலுடன் கூடிய ராமஜென்ம பூமி என்ற நீண்ட
நாள் கனவு, ராம பக்தர்களின் தூய பக்தியினால் திரும்பக் கிடைத்திருக்கிறது.’
கே பராசரன்
ஸ்ரீ சீதாராமின் பக்தன்
வாஜ்பாய் அரசு அவருக்கு பத்மபூஷன் விருது
வழங்கியது. மன்மோகன் சிங்கின் அரசு அவருக்கு பத்ம விபூஷன் விருது வழங்கியது.
தன் வாதங்களால் ராம ஜன்ம பூமியை மீட்டுக்கொடுத்து
இராமப்பிரியனானார் பராசுரன் அவர்கள்.
உதவியவை:
* K.PARASARAN – PAR EXCELLENCE.
EXCELLENCE AT THE BAR – ஆவணப்படம் Sanskriti வெளியீடு
* Law & Dharma: A tribute to the
Pitamaha of the Indian Bar by SASTRA University

Posted on Leave a comment

பிளாஸ்டிக் பசுக்கள் | சுஜாதா தேசிகன்

“வாங்கக்
குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்:
நீங்காத செல்வம் நிறைந்து”
– ஆண்டாள்
அருளிய திருப்பாவை
ஆண்டாள், திருப்பாவை என்று படித்தவுடன், இது ஸ்ரீ
வைஷ்ணவம் பற்றிய பதிவு என்று படிக்காமலிருந்துவிடாதீர்கள். இதைப் படித்தபின், இதை எழுதிய
நான், படிக்கும் நீங்கள் நிச்சயம் வெட்கித் தலைகுனிய வேண்டும்.
ஸ்ரீரங்கத்தில் காலை பெருமாள் உறங்கியெழும் சேவைக்கு
‘விஸ்வரூபம்’ என்று பெயர். பெருமாளை வீணை மீட்டி எழுப்புகிறார்கள். பிரம்மா, தேவர்கள்
என்று பலர் கூடி பெருமாளை தரிசிக்கக் காத்துக்கொண்டிருக்க பெருமாள் எழுந்தவுடன் யாரைப்
பார்க்கிறார்? பின்பக்கமாய்த் திருப்பி நிற்க வைக்கப்பட்ட பசுமாட்டைப் பார்க்கிறார்.
பசுமாட்டின் வால்பக்கம் மஹாலக்ஷ்மி வாஸம் செய்கின்றாள்!
சில வாரங்களுக்கு முன் திருச்சி பஸ் ஸ்டாண்டில்
உறையூர் நாச்சியார் கோயிலுக்குப் போக பேருந்துக்குக் காத்துக்கொண்டிருந்தபோது ஒரு பசுமாடு
பக்கத்தில் இருந்தவர் கை அருகே வந்து ஏதாவது கிடைக்கிறதா என்று அவர் கையை முகர்ந்து
பார்த்தது. ‘தள்ளிப் போ’ என்று செய்கை செய்தவுடன் அது வேறு வழியில்லாமல், கீழே கிடந்த
சிகரெட் துண்டை நாக்கால் சுருட்டிச் சாப்பிட்டது. உள்ளம் பதறியது.
‘கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடு’ என்கிறாள்
ஆண்டாள். சிறுவீடு என்ற வார்த்தையை ஆண்டாள் மட்டுமே உபயோகித்திருக்கிறாள். ‘சிறுவீடு’
என்றால் அதிகாலையில் பால் கறக்குமுன் மாடுகளை மேயவிடுவதைக் குறிக்கிறது. மாடுகள் புல்லில்
அரும்பியிருக்கும் பனித்துளிகளுடன் நுனிப்புல்லை மேயும். கன்றுகுட்டிகளுக்குப் பால்
கொடுத்த பின், பாலை இடையர்கள் கறப்பார்கள். சிறுவீடு என்றால் காலைச் சிற்றுண்டி மாதிரி
மாடுகளுக்கு.
சில வருடங்கள் முன் விடியற்காலை சென்னையில் இருந்தபோது
தாம்பரம் பக்கம் ‘கறந்த பால்’ வாங்க அதிகாலை தேடிக்கொண்டு ஒரு வீட்டைக் கண்டுபிடித்துச்
சென்றபொழுது அவர்கள் வீட்டு மாடு தெருவில் இருக்கும் குப்பைத் தொட்டியில் முகத்தை உள்ளே
புதைத்து அதில் இருந்த வஸ்துக்களைச் சாப்பிட்டுக்கொண்டு இருந்தது. எட்டிப்பார்த்த போது,
அதில் ஒரு மாதவிடாய் நாப்கின் அடக்கம்.
2016ல் இயற்கை விவசாயம், பசுமைப் புரட்சி செய்த
நம்மாழ்வார் அவர்களால் உருவாக்கப்பட்ட ‘வானகம்’ பயிற்சிப் பட்டறையில் கலந்துக்கொண்டேன்.
செடிகளைப் பூச்சி தாக்குவதைத் தடுக்க என்ன செய்ய வேண்டும், பூச்சிகளை அழிக்காமல் அவற்றுடன்
எப்படிப் பழக வேண்டும் என்று விளக்கப்பட்டது. அதில் ஒரு முக்கியமான அம்சம், பஞ்சகவ்யம்
தயாரிப்பது.
சிறந்த பூச்சி மருந்து பஞ்சகவ்யம். முன்பு கோவில்களில்
பிரசாதமாக வழங்கப்பட்டு வந்தது. விரிவுரையாளர் அது சிறந்த நோய் எதிர்ப்புசக்தி பெற்றது
என்றும் அதை எப்படித் தயாரிப்பது என்று சொல்லிகொடுத்தார். பசு சாணம், பசுவின் கோமியம்,
பால், தயிர், கடலைப் புண்ணாக்கு ஆகியவற்றுடன், வாழைப்பழம், இளநீர், கரும்புச்சாறு ஆகியவற்றைக்
குறிப்பிட்ட விகிதத்தில் கலக்கி செடிகளுக்கு தெளிக்கும் பஞ்சகவ்யம் தயாரிக்கப்பட்டது.
தயாரிக்கும்போது எல்லோர் முகமும் அஷ்டக்கோணல் ஆனது. காரணம் பசுவின் சாணம் மனித மலம்
போலத் துர்நாற்றம் அடித்தது.
“அம்மாவும், பாட்டியும் வீட்டுக்கு முன் சாணம்
தெளிக்கும் போது வந்த வாசனை வேறுவிதமாக இருக்க, நீங்கள் கொண்டு வந்த சாணம் ‘செப்டிக்
டேங்கில்’ வரும் துர்நாற்றம் மாதிரி அடிக்கிறதே?” என்று கேட்டேன்
“ஊரில் இருக்கும் பிளாஸ்டிக் கழிவு, சினிமா போஸ்டர்
போன்ற ‘ஜங்க் ஐட்டங்களை’ மாடுகள் சாப்பிடுவதால் இப்படி மணம் வீசுகிறது’ என்றார்.
மாடுகள் பிளாஸ்டிக் சாப்பிடுமா என்ற கேள்வியை ஆராய்வதற்கு
முன் சென்னை வெள்ளத்தின்போது ஊரே அல்லோல கல்லோலமாய்க் காட்சி அளித்தது உங்களுக்கு நினைவிருக்கலாம்.
வெள்ளம் வடிந்த பிறகு சென்னையைச் சுற்றினேன். வழியெல்லாம் வீடுகளும் மரங்களும் அவ்வளவாகச்
சீரழியவில்லை. ஆனால் வழியெங்கும் வெள்ளம் வடிந்த இடங்களில் எல்லாம் பிளாஸ்டிக் நகரமாகக்
காட்சி அளித்தது சிங்காரச் சென்னை.
பம்மல் அருகில் அனகாபுத்தூர் என்ற இடத்தில் வெள்ளத்துக்குப்
பிறகு எப்படிக் காட்சியளித்தது என்று இந்தப் படத்தைப் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்.
வாசகர்களுக்கு ஒரு புதிர்: இந்தப் படத்தை எடிட் செய்து இன்னும் கொஞ்சம் குப்பையைச்
சேர்த்திருக்கிறேன். புத்திசாலி வாசகர்கள் அதைக் கண்டுபிடிக்கலாம்.
வாசகர்கள் அந்தக் குப்பையைத் தேடும் சமயம், மாடு
எப்படி உணவை உட்கொள்கிறது என்று தெரிந்துகொள்ளலாம். மாடுகளுக்கு வயிறு, நான்கு பகுதிகளாக
இருக்கிறது.
ரூமென் (rumen)- முதல் வயிறு ; ரெட்டிகுலம் (reticulum)-
தேன் அடைப்பை; ஒமாசம் (omasum)- மூன்றாம் பகுதி, நான்காமிரைப்பை (abomasum)என்ற உண்மையான
வயிறு, குடல் என வயிற்றுப் பகுதி அமைந்திருக்கும்.
ஆடு-மாடுகள் அசைபோடும் விலங்குகள் என்று நாம் படித்திருக்கிறோம்.
கிடைத்த இலை தழைகளை உள்ளே வாய் வழியாக சாப்பிட்டவுடன் அவை நேராக ரூமென் பகுதிக்கு சென்றுவிடும்.
இது அவைகளின் சாப்பாட்டு கிடங்கு போல. சாப்பிடும் பொருட்கள் இங்கேதான் சேமிக்கப்படுகின்றன.
மாடுகளின் இதயத்துக்குப் பக்கம் இரண்டாம் பகுதியான
ரெட்டிகுலம் இருக்கிறது. தேன்கூடு போல இருப்பதால் இதற்குத் தேன் அடைப்பை என்ற பெயர்.
கனமான அல்லது அடர்த்தியான தீவனம் சாப்பிடும்போது இந்த அறையில் உண்டியலில் பைசா போடுவது
போல உள்ளே விழுந்துவிடும்.
மெதுவாக அசைப்போட்டு சாப்பிட்ட உணவை மீண்டும் மென்று
அரைத்து உள்ளே செலுத்தும். மாடு எப்படி சாப்பிடுகிறது என்பதைப் பற்றியது அல்ல கட்டுரை;
எதைச் சாப்பிடுகிறது என்பதைப் பற்றியது.
இரண்டாம் அரையில் உண்டியல் போல என்று சொல்லியிருந்தேன்
அல்லவா? அங்கே ஆணிகள், இரும்பு துண்டு, பிளாஸ்டிக் (கேரிபேக்)என்று குப்பைத் தொட்டியில்
என்ன என்ன இருக்குமோ அவை மாடுகளுக்குள் இருக்கின்றன, செரிமனமாகாமல்!
மேலே புதிருக்கு விடை தெரிந்துவிட்டதா? இல்லை என்றால்
கீழே உள்ள படத்தைப் பார்த்துச் சரி பார்த்துக்கொள்ளுங்கள். இது சமீபத்தில் (அக்டோபர்
19, 2019)ஒரு பாசுமாட்டின் வயிற்றிலிருந்து எடுக்கப்பட்ட குப்பை. இதன் எடை 52 கிலோ.
சாணம், சிறுநீர் கழிக்க முடியாமல் மாடு அவதிப்படுகிறது
என்று மருத்துவரிடம் காண்பித்து ஸ்கேன் செய்து வயிற்றில் ஒரு அடிக்குக் கிழித்துக்
கழிவுகளை எடுத்துள்ளார்கள். (விருப்பம் உள்ளவர்கள் QR Scan செய்து பார்க்கலாம்.)
இந்தக் காணொளியை துரதிருஷ்டவசமாகப் பார்க்க நேர்ந்தது.
திரௌபதியின் சேலையைப் பிடித்து இழுக்கும் துச்சாதனன் போல, பிளாஸ்டிக் குப்பையை டாக்டர்கள்
எடுக்கிறார்கள்.
பிளாஸ்டிக் மட்டும் இல்லை அதில் மருத்துவமனை சிரிஞ்ச்
ஊசிகள், ஆணிகள், உணவை பேக் செய்ய பயன் படும் அலுமினிய ஃபாயில் என்று சகலமும் அடக்கம்.
இந்த உலகில் நாம் எல்லோரும் ஒரு விதத்தில் மோசமான அரக்கர்கள்தான்.
செய்தியைப் படித்த பின், சென்னையில்தான் இப்படி
என்று உடனே முடிவு கட்ட வேண்டாம். சில தலைப்புச் செய்திகளை மட்டும் கீழே தருகிறேன்.
– குஜராத்தில் 20 கிலோ பிளாஸ்டிக் கழிவுகளை எடுத்துள்ளார்கள்
(ஏப்ரல் 2019)
– கேரளாவில் 10 கீலோ எடுத்துள்ளார்கள் (ஜூன் 2019)
– டெல்லியில் 34 மாடுகள் உடம்பு சரியில்லாமல் இருக்க,
15 மாடுகள் இறந்தன. அவற்றின் வயிற்றில் பிளாஸ்டிக்! அறுவை சிகிச்சை மூலம் மற்ற 15 மாடுகளில்
இருந்து 8 முதல் 10 கிலோ வரையிலான பிளாஸ்டிக் கழிவுகளை எடுத்துள்ளார்கள் (ஆகஸ்ட்
2018)
– அகமதாபாத்தில்  ஒரு மாட்டிலிருந்து எடுக்கப்பட்ட 100 கிலோ பிளாஸ்டிக்
கழிவுகளில் சாக்ஸ் எல்லாம் வந்திருக்கிறது (செப் 2016)
– ராஜஸ்தானில் ஒரே மாட்டிலிருந்து 170 கிலோ பிளாஸ்டிக்
கழிவுகளை எடுத்து ‘சாதனை’ புரிந்திருக்கிறார்கள்.
சென்னையில் 52 கிலோ குப்பையை அகற்றினார்கள் என்று
செய்திக்குப் பக்கத்தில் கர்நாடகாவில் வெறும் 20 கிராமுக்குப் பசுவிற்கு அறுவை சிகிச்சை
என்று இன்னொரு செய்தி. ஒருவர் விஜயதசமி அன்று தனது வீட்டில் பூஜை செய்யும் போது மலர்
மாலையால் சாமிகளை அலங்காரம் செய்து, கூடவே அவருடைய 20 கிராம் தங்கச் சங்கிலியையும்
சேர்த்து பூஜை செய்துள்ளார். மறுநாள் மலர் மாலைகளைத் தனது பசுவுக்கு உணவாகக் கொடுத்தார்.
மென்று தின்றது மாலையை மட்டும் அல்ல, அவருடைய தங்கச் சங்கிலியையும்தான். இரண்டு நாள்
சாணத்தைப் பார்த்து அதில் வராததால் அறுவை சிகிச்சை செய்து சங்கலியை மீட்டனர். நமுட்டுச்
சிரிப்புடன் இதைப் படித்தாலும், இதில் இரண்டு செய்திகள் இருக்கின்றன.
– முன்பு பார்த்த மாதிரி கனமான வஸ்துக்கள் மாடுகளின்
உண்டியல் போன்ற இரண்டாவது வயிற்றில் சென்றுவிடுகின்றன.
– தீவனத்துடன் உள்ளே செல்லும் தங்கமோ அல்லது பிளாஸ்டிக்
பைப்போ மாட்டின் வயிற்றுக்குச் சென்றால் வெளியே வருவதில்லை.
– பூசாரி போன்ற டாக்டர்கள் உண்டியலை உடைத்து அதில்
நாம் போடும் காணிக்கைகளை எடுக்கிறார்கள்.
அடுத்த முறை காய்கறி, சாப்பாட்டுக் குப்பையை ‘கேரி
பேக்’ என்ற ஒன்றில் இறுக்கமாக முடிந்து குப்பைத் தொட்டியில் போடும்பொழுது, பிரிக்கத்
தெரியாத மாடுகள் அந்த மூட்டையை அப்படியே தின்றுவிடப் போகிறது என்று நினைத்துக்கொள்ளுங்கள்.
இதுவும் ஒருவிதத்தில் பசு வதையே!
நெறிமுறைகள் சுகாதாரம் இரண்டும் சுயநலம் என்ற ஒன்றால்
நம் கண்முன்னால் நம்மாலேயே வீழ்த்தப்படுகின்றன.
சமீபத்தில் பிரதமர் மோதி அவர்கள் கடற்கரையில் குப்பைகளைப்
பொறுக்கியபோது அவர் நடிக்கிறார், நாடகமாடுகிறார் என்று சிலர் அதை விமர்சனம் செய்தார்கள்.
விமர்சனம் செய்தவர்கள் மேலே உள்ள இந்தச் செய்திகளைப் படித்திருப்பார்களா என்று தெரியாது.
இதுவே நம் நாட்டுக்கு இப்போது மிகவும் தேவையான களப்பணி. அதைத்தான் மோடி செய்திருக்கிறார்.
தாய்ப்பால் உட்கொள்ளும் குழந்தைக்கு அதனால் ஏதாவது
பிரச்சினை வரபோகிறதே என்று, பிரசவித்த தாய் தனக்கு ஜுரம் வந்தாலும், மருந்து சாப்பிட
மாட்டாள். கிலோ கிலோவாக பிளாஸ்டிக் சாப்பிடும் மாடுகள் கொடுக்கும் பால் எப்படிப்பட்டதாக
இருக்கும்?
தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம்
பாலில் புற்றுநோயை உருவாக்கும் டையாக்ஸின் ரசாயனத்தின் தடயங்களை சமீபத்தில் கண்டறிந்தது.
பசுமாட்டின் மூத்திரம் புற்றுநோயைக் குணப்படுத்த வல்லது என்று இன்னொரு இடத்தில் ஆராய்ச்சி
செய்வது விந்தை.
கல்வியறிவு அதிகம் உள்ள கேரளாவில் 2018 வெள்ளத்தின்
போது மலையாட்டூரில் பாலம் மூழ்கியது. வெள்ளம் வடிந்த பின் பாலம் முழுவடும் பிளாஸ்டிக்
கழிவுகள். ஒருவழியாக வெள்ளத்தினால் பிளாஸ்டிக் கழிவுகள் வெளியே வந்துவிட்டன என்று நினைத்தபொழுது
எக்ஸ்வேட்டர் இயந்திரம் கொண்டு அதைச் சுத்தம் செய்து அந்த பிளாஸ்டிக் கழிவுகளை மீண்டும்
ஆற்றிலேயே கொட்டினார்கள்!
(Thanks: http://oneindiaonepeople.com/, Image Copyright: Morparia)நான் கடைக்குப் போகும்போது துணிப்பைதான் உபயோகிக்கிறேன்
என்று நினைப்பவர்கள், அதன் உள்ளே எவ்வளவு பிளாஸ்டிக் பைகள் இருக்கின்றன என்றும் பார்க்க
வேண்டும்.
(Cartoon by Arun Ramkumar originally published in
Fountain Ink magazine.)
என் நண்பர் திரு ஸ்ரீநி சாமிநாதன் ‘மாரத்தான்’
ஓட்ட வீரர். இந்தியாவில் பட இடங்களில் ஓடியிருக்கிறார். பலர் ஓடும்போது இவரை உடனே கண்டுபிடித்துவிடலாம்.
அவர் தோளில் ஒரு நீல நிறப் பை ஒன்று இருக்கும். ஓடும் வீரர்கள் கீழே போடும் தண்ணீர்
பாட்டில், கப், பிளாஸ்டிக் பை என்று சகல குப்பைகளையும் பொறுக்கி தன் ‘ஷாப்பிங்’ பையில்
போட்டுக்கொண்டே, மராத்தானிலும் ஓடுவார். சமீபத்தில் அவர் லடாக்கில் ஓடினார். அங்கேயும்
அவர் குப்பைகளைப் பொறுக்கிக்கொண்டு ஓடி மூன்றாவதாக வந்தார். இன்று மூன்றாவதாக வருபவர்கள்தான்
இந்தியாவை முதல் இடத்துக்கு உயர்த்த முடியும்.
இந்தியா டுடே கட்டுரை ஒன்றுல் இவ்வாறு எழுதியிருக்கிறார்கள்.
‘The secret behind a healthy nation might just be to remember that a happy herd
produces better milk’. கட்டுரை ஆரம்பத்தில் தரப்பட்டிருக்கும் ஆண்டாளின் திருப்பாவையின்
பொருள் இது: ‘பருத்த முலைகளைப் பற்றி இழுக்க இழுக்க அசையாமல் நின்று வள்ளல்களைப் போல்
பால் குடங்களை நிரப்பும் பசுக்கள் இருக்க, குறைவற்ற செல்வம் நிறைந்திருக்கும்’.
பொருளாதாரம் வீழ்ச்சி என்று வாய்கிழியப் பேசிக்கொண்டு
இருக்கும் நேரத்தில், நம் நாட்டின் செல்வமாகிற பசுவின் ஆதாரத்தை சரி செய்தால் நாடு
சுபிக்ஷம் பெற்று, பொருளாதாரம் தானாக வளரும்.
இந்தப் பிரச்சினைகள் இருக்கும்போது நாம் சந்தராயன்
ராக்கெட் விடுகிறோமே என்று ஒரு கும்பல் கிளம்பும்! சில பிரச்சினைகளுக்குப் பணம் தேவைப்படும்;
சிலவற்றுக்கு மனம் மட்டும் இருந்தாலே போதும்.
கடைசிச் செய்தி: உத்தரகண்டில் சிறுத்தை ஒன்று பிளாஸ்டிக்
பையை சாப்பிடுவதை சமீபத்தில் கண்டுபிடித்தார்கள்.
  
உசாத்துணைகள்:
2. ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
நாங்கள்நம் பாவைக்குச் சாற்றிநீ ராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள்மும் மாரிபெய்து
ஓங்கு பெறும்செந் நெல்ஊடு கயலுகளப்
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்பத்
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி
வாங்க குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்.

Posted on Leave a comment

சந்திரயான் – கோல் முதல் கோள் வரை | சுஜாதா தேசிகன்

சந்திரயான்-2
(ச-2) என்ற பெயர் தோனி போலப் பிரபலமாகிவிட்டது. ச-2 விக்ரம் லேண்டிங் அன்று இந்தியா
முழுவதும் விடிய விடியப் பார்த்ததை ஒரு சாதனை என்று கூடச் சொல்லலாம். ச-2 ஏதோ ‘ராக்கெட்’
சமாசாரம் என்று பலர் நினைக்கலாம் ஆனால் அதற்கும் மேலே.
இன்னும்
2 கிமீ தூரம் இருக்க ச-2 நிலவை ‘சாஃப்ட் லேண்டிங்’ செய்ய முடியாமல் போனபோது பையன் நல்லா
படித்தான், ஆனால் தேர்வில் நல்ல மதிப்பெண் வாங்கவில்லை போன்ற மனோநிலைக்குச் சென்றார்கள்.
ஆனாலும், விண்வெளியை நாசா போன்ற பணக்கார நாடுகள் குத்தகைக்கு எடுத்துள்ளது என்பதை ஒரே
இரவில் இந்தியா மாற்றியது.
சில அடிப்படையைப்
புரிந்துகொண்டால் ச-2வை நன்கு அனுபவிக்கலாம். இந்தக் கட்டுரையின் நோக்கமும் அதுவே.
விண்வெளி
என்பது பல நூற்றாண்டுகளைக் கடந்து இன்றும் பரவசமூட்டும் ஒரு சொல்லாக இருக்கிறது. புவி
தனது அச்சிலே சுற்றிக்கொண்டு கதிரவனையும் சுற்றும் ஒரு கோளம் என்று ஆர்யபாட்டா பொயு-499ல்
கூறினார்.
இணை கோடுகளின்
பண்புகள் (properties of parallel lines) என்ற பாடம் ஏழாம் வகுப்பு பாட புத்தகத்தில்
இருக்கிறது. அதிலிருந்து இந்தக் கட்டுரையை ஆரம்பிக்கலாம். இந்த படத்தில் ‘A’ ‘B’ என்ற
கோணங்களின் அளவு ஒன்றே என்று புரிந்துகொண்டு மேலே படிக்கவும்.

இந்த
விஷயங்கள் எல்லாம் ஏதோ கட்டடம் கட்டும் கட்டட பொறியியலாளர்களுக்கு மட்டுமே பயன்படும்
என்று நினைக்க வேண்டாம், இது புவியின் சுற்றளவை மிகத்துல்லியமாகக் கணக்கிட உதவும்.
பொமு மூன்றாம் நூற்றாண்டில் செயற்கைக் கோள்கள், கணினி இல்லாத காலத்தில் ஒரு கோல்மூலம்
கண்டுபிடிக்க உதவியிருக்கிறது.
எப்படி?
எகிப்தில் வாழ்ந்த எரோடோஸ்தானிஸ் (Eratosthens) கோடையில் தன் வசிக்கும் இடத்தில் உள்ள
கிணற்றில் சூரியன் நேராகப் பிரதிபலிப்பதைக் கண்டார். அப்போது நேர் வடக்கே உள்ள இன்னொரு
இடத்தில் சூரியன் 7.2° கோணத்தில் நிழலை விழுவதைக் கண்டார்.
கிரேக்க மேதை
Syene (A) என்ற இடத்தில் கிணறு சூரிய பிம்பத்தைப் பிரதிபலித்தது. அதே நேரம் சுமார்
800 கிமீ தொலைவில் ஒரு கம்பத்தை வைத்து அது 7.2° கோணத்தில் நிழலைப் பிரதிபலித்த இடம்
Alexndria (B) (படத்தில்
𝜶 இரண்டு இடங்களில் இருப்பதைப் பார்க்கலாம் (7 ஆம் வகுப்புப்
பாடம்!)
இரு இடங்களுக்கும்
உள்ள தொலைவை ஒட்டகத்தின் மூலம் பயணம் செய்து அளந்து, புவியின் சுற்றளவு 39,852 கிமீ
என்று கணக்கிட்டார். இன்றைய செயற்கைக் கோள் பூமியின் சுற்றளவு 40,075 கிமீ என்று சொல்லுகிறது
ஆனால் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன் வெறும் ஒரு விழுக்காடு வேறுபாட்டில் கணக்கிட்டுள்ளார்!
அடுத்து
புவி ஈர்ப்பு பற்றிக் கொஞ்சம் தெரிந்துகொள்ளலாம். புவி ஈர்ப்பு என்றவுடன் ஆப்பிள் கீழே
விழுந்த கதையை நினைத்துக்கொள்வோம். அதன் பயன்பாடு என்ன என்று கேட்டால் உடனே பதில் சொல்லத்
தெரியாது. இந்தப் பூமியின் கடல், மலைகள், பாலைவனம், காடுகள் என்று இருக்கிறது பூமியின்
ஈர்ப்பு விசையைத் துல்லியமாகத் தெரிந்தால் இந்தப் பூமியின் வடிவத்தையும் துல்லியமாகச்
சொல்லலாம்!
மெரினா
கடற்கரையில் நின்று பார்த்தால் கடல் நீர் மட்டம் ஒரே மாதிரி இருப்பதைப் போல நமக்குத்
தெரியும். கடலின் நீர் மட்டத்தின் கீழ் ஏற்றத் தாழ்வுகளைத் துல்லியமாக அறிந்துகொள்ள
இந்தச் செயற்கைக்கோள்கள் உதவுகின்றன. அதற்கு உதவுவது புவி ஈர்ப்புதான்!
ஈர்ப்பு
விசையை எதற்கு அளக்க வேண்டும் அது அவ்வளவு முக்கியமானதா என்று நினைக்கலாம். நீல் ஆர்ம்ஸ்டிராங்
நிலவில் இறங்கியபோது குறிப்பிட்ட இடத்தில் இறங்க வேண்டியவர், ஆறு கிமீ தள்ளி இறங்கினார்.
காரணம் நிலவின் ஈர்ப்பு விசையைச் சரியாக அறியாததால்.
பூமியின்
ஈர்ப்பு விசை, நிலவின் ஈர்ப்பு விசை மிகச் சரியாக அளவிட்டால்தான் நாம் அனுப்பும் கோள்களைச்
சரிவரச் செலுத்த முடியும்!
அடுத்து
நாம் தெரிந்துகொள்ள வேண்டியது சுற்றுப்பாதை (orbit). கோள்கள் பூமியை அதன் சுற்றுப்பாதையில்
சுற்றுகிறது. கோள்கள் சுற்றும்போது பூமியின் வடதுருவம் தென் துருவம் பக்கம் வரும்போது
புவி ஈர்ப்பு மாறுகிறது அந்தச் சமயத்தில் கோள்களை ஸ்டியரிங்கை வளைப்பது மாதிரி வளைத்து
அதைச் சரி செய்ய வேண்டும். நாம் கார் ஓட்டுவது போல அதிகமாக வளைக்க முடியாது. 1° கீழ்
வளைக்க வேண்டும். சுற்றுப்பாதை பயணம் என்பது திருமண வாழ்வு மாதிரி வாழ்நாள் முழுக்க
‘அட்ஜெஸ்ட்மெண்ட்’ தேவை.
கார்
ஓட்டுவது என்பது இரு பரிமாணத்தைக் கொண்டது. சாலை சரியாக இருந்தால் போதும், ஆனால் அந்தரத்தில்
பறக்கும் கோள்களுக்கு மூன்று பரிமாணம். பல சவால்களை எதிர்கொள்ள வேண்டும் உதாரணமாகக்
காற்றின் வேகம், சூரியனின் வெப்பம் போன்றவை. இந்தச் சவால்கள் இஸ்ரோவிலிருந்து கண்காணித்து
கோள்களுக்குத் தகுந்த அறிவுரையைக் கொடுக்க வேண்டும். சூரியனின் வெப்பம் அதிகமானால்
மூலக்கூறுகளின் அடர்த்தி (density) அதிகமாகும். இந்தச் சமயத்தில் கோள்களின் சாய்வைச்
சரி செய்ய வேண்டும். சில சமயம் 0.15° அளவுக்குக் கூடத் திருப்ப வேண்டும், இல்லை என்றால்
வழி தவறித் தொலைந்துவிடும்!
சூரியனுடன்
இணைந்து சில கோள்கள் சுற்றுகின்றன. எவ்வளவு உயரத்தில் எவ்வளவு சாய்ந்த நிலையில் கோணத்தின்
சுற்றுப்பாதை அமைத்தால் ஒரு நாளைக்கு எத்தனை முறை பூமியைச் சுற்றலாம் போன்ற கணக்குகளை
விஞ்ஞானிகள் கணக்கு செய்து அனுப்புகிறார்கள்.
நாம்
தீபாவளி ராக்கெட் விடும்போது அதன் தலையில் ஒரு சின்னக் கல்லைக் கட்டினால் அது மேலே
செல்லாமல் நம் மீது பாயும். இதற்கு ராக்கெட் எடை கூடுதலாக இருப்பதுதான் காரணம். அதை
மேலே அனுப்ப அதற்கு அதிக எரிபொருள் தேவை.
ஐந்து
டன் ஏவுகணையை ஐந்து டன் விசையால் (force) மேலே செலுத்த முடியாது. அதைவிட அதிகமாக வேண்டும்.
விண்ணில் செலுத்தப்படும் ராக்கெடுக்கு எவ்வளவு எரிசக்தி, விசை, உந்து திறன் (thrust)
என்று எல்லாம் முன்கூட்டியே சரியாகக் கணக்கிட்டுச் செயல்படுத்த வேண்டும். உந்துதிறன்
ராக்கெடுக்கு பூமியின் புவி ஈர்ப்பைச் சமாளிக்க வேண்டிய வலிமை தேவை என்பதைக் குறிக்கும்.
புறப்படும்
சமயம் (lift-off mass) சந்திரயான்-1 நிறை – 1380 கிலோ. சந்திரயான்-2ன் நிறை 3850 கிலோ.
அதனால் மேலே செல்லச் செல்ல அதற்கு அதிக வலிமை தேவைப்படும். அப்படி மேலே செல்லும்போது,
அதன் உள் இருக்கும் எரிபொருள் குறைவாகி, புவி ஈர்ப்பு மாறும். அப்போது அதன் வலிமையைச்
சரியாகக் கணக்கிட்டு அதைக் கீழே இருந்து சரி செய்ய ஆணை பிறப்பிக்க வேண்டும்.
இன்று
3850 கிலோ கொண்ட ராக்கெட் அனுப்பும் நாம் 1967ல் முதல் ராக்கெட் அனுப்பியபோது அதன்
எடை 70 கிலோதான். குறுக்களவு வெறும் 75மிமீ தான். மேலே சென்ற தூரம் 4.2 கிமீ. அன்று
பலர் இந்தியா ஏதோ ஒரு விளையாட்டுப் பொருளை மேலே அனுப்பியது என்று கேலி பேசினார்கள்.
மற்றவர்கள்
கேலி பேசியபோது இந்திய விஞ்ஞானிகள் மேலே சென்ற ராக்கெட் தங்கள் வைத்திருந்த குறிப்புகளுடன்
ஒத்துப் போகிறதா என்று பார்த்தார்கள். அவை யாவும் சரியாக இருந்ததைக் கண்டு, அடிப்படையைக்
கற்றுக்கொண்டு விட்டோம் என்ற சந்தோஷப்பட்டு, தங்களிடம் பெரிய ராக்கெட்செய்யும் வசதி
இருந்தால் இன்னும் அதிக தூரம் அனுப்பலாம் என்று முடிவுக்கு வந்தார்கள். படிப்படியாக
ராக்கெட் செய்து ஐம்பது ஆண்டுகளில் ச-2 என்ற பெரிய சாதனையைப் படைத்திருக்கிறார்கள்.
பொதுவாக
ராக்கெட் எல்லாம் இயற்பியல் சம்பந்தப்பட்டது என்று நினைத்திருப்போம். ஆனால் ராக்கெட்டுக்கு
வேண்டிய எரிபொருள் எல்லாம் வேதியியல் சம்பந்தப்பட்டது. ராக்கெட்டுக்கு வேண்டிய உந்து
சக்தியைத் தருவது புரொப்பலண்ட் எனப்படும் உந்து அமைப்பு. இது திட அல்லது திரவமாக இருக்கலாம்.
பல ரசாயனங்கள் எப்படி எவ்வளவு எரிக்க வேண்டும், எந்த வெப்ப நிலை என்று எல்லாம் சரியாகக்
கணக்கிட வேண்டும்.
நாளை
மனிதனை அனுப்பும்போது இதில் மருத்துவமும் சேர்ந்துகொள்ளும். மனிதன் விண்வெளியை நோக்கிப்
போகும் உடம்பில் பல அடிப்படை மாற்றங்கள் நிகழ்வுகளைப் பற்றி ஆராய்ச்சி செய்து அதற்கேற்றாற்
போலத் திட்டமிடவேண்டும்.
சுமார்
இரண்டு லிட்டர் ரத்தம் மற்றும் திசு திரவம் விரைவாக இடம்பெயர்ந்து, கீழ் முனைகளிலிருந்து
உடலின் மேல் பகுதிகளை நோக்கிப் போகும்போது, மத்திய நரம்பு மண்டலம் மற்றும் இதயம் பாதிக்கப்படுகிறது.
இந்த மாற்றத்தால் இதயம் மட்டும் இல்லை, சிறுநீரகங்களின் உப்பு மற்றும் நீர் வெளியேற்றத்தில்
மாறுதல்கள் ஏற்படுகின்றன. மனிதனும், மைகிரோ கிராவிட்டியும் என்று தனியாகக் கட்டுரையே
எழுதலாம்.
GLSV
என்ற சொல் நமக்கு மிகவும் பழக்கப்பட்ட சொல். SLV – என்றால் Satellite Launch
Vechile. இது மூன்று அல்லது நான்கு நிலை வாகனமாகும். சர்க்கஸில் கோமாளி மேலே ஏற ஏற
தன் சட்டையைக் கழட்டிப் போடுவது போல, இதில் ஒவ்வொரு பாகமாக! அப்படிச் செல்லும்போது
இதன் இடை குறைந்து கடைசியில் செயற்கைக் கோள் மட்டும் மேலே சுற்றுப்பாதையில் துப்பிவிடும்.
இதன்
ஒவ்வொரு பாகத்திலும் திரவ எரிபொருளைப் பற்றவைத்தல் முறைகளில் இஸ்ரோ நல்தேர்ச்சி அடைந்தது,
அமெரிக்கா ரஷ்யா போன்ற நாடுகளுக்கு இணையாக! ஆனால் அதே சமயம் அவர்களைவிடச் செலவு மிக
குறைவாகச் செய்கிறது.
ச-2 என்ன
சிறப்பு?
ச-2 விண்வெளிக்குச்
செலுத்தப்பட்ட இரண்டாவது வெற்று விண்கலம். இந்த ஆண்டு ஜூலை 22ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது.
ச-2 மேலே
கூறிய SLV சமாசாரம்தான் இது. ஆர்பிட்டர் என்ற ஒன்றை அடிக்கடி கேள்விப்பட்டிருப்பீர்கள்.
ஆர்பிட்டரை மற்ற செயற்கைக்கோள் மாதிரி நிலவைச் சுற்றவிட்டுவிட்டு அதிலிருந்து ‘விக்ரமை’
நிலவுக்கு அனுப்பி, அதன் மேற்பரப்பில் தரையிறங்கும் அதுவும் நிலவின் தென் துருவத்தில்
இறங்கும் முயற்சி, இதுவரை யாரும் செய்யாதது.
பூமியிலிருந்து
ச-2 எப்படிச் சென்றது என்று அறிந்துகொண்டால் நம் இந்திய விஞ்ஞானிகளின் சாதனையை வியக்கலாம்.
ச-1 சில
ஆண்டுகளுக்கு முன் சென்று நிலவில் தண்ணீர் மூலக்கூறுகள் இருப்பதைக் கண்டுபிடித்து வரலாறு
படைத்தது. ஆனால் ச-2வின் முக்கிய விஷயம் ‘சாஃப்ட் லேண்டிங்’ என்பதுதான். சந்திரனில்
மனிதன் இறங்க இது ஒரு ‘Proof of concept’ என்று கூடச் சொல்லலாம்.
செயற்கைக்
கோள் பற்றிப் படிக்கும் போது ‘பேலோட்’ என்ற ஒரு வார்த்தையை அடிக்கடி கேட்டிருக்கலாம்.
இதைப் புரிந்துகொள்ள ஒரு சின்ன உதாரணம் தருகிறேன்.
ஒரு தபால்
அனுப்புகிறீர்கள். என்ன செய்வீர்கள்? ஒரு கவர் மீது பெறுநர் முகவரி; உள்ளே கடிதமோ பொருளோ
வைத்து அனுப்புகிறீர்கள். பெறுநர் என்ன செய்கிறார், கவரைப் பிரித்து போட்டு விட்டு
உள்ளே இருக்கும் கடிதத்தை எடுத்துக்கொள்கிறார்.
உள்ளே
இருக்கும் அந்த சமாசாரத்துக்குப் பெயர் தான் பேலோடு.
ஒரு கவர்
அதற்குள் இன்னொரு கவர் அதற்குள் இன்னொரு கவர் என்று… இருந்தால்?
கவருக்குள்
இருக்கும் இன்னொரு முதல் கவருக்கு பேலோட் அதற்குள் இருக்கும் இன்னொரு கவர் அதற்கு பேலோட்….
இப்படி.
ச-2விலும்
இப்படித்தான் பல பேலோட் இருக்கிறது. ச-2ல் ஆர்பிட்டர், லேண்டர் (விக்ரம்), ரோவர் (பிரக்யான்)
என்ற மூன்று விஷயங்களை உள்ளடக்கியுள்ளது. மூன்று கருவிகள் என்று வைத்துக்கொள்ளுங்கள்.
ஆர்பிட்டர் ஒரு கவர் அதற்குள் விக்ரம் என்ற கவர் அதற்குள் ரோவர் என்று வைத்துக்கொள்ளுங்கள்.
ராக்கெட்
மேலே சென்றவுடன் ஆர்பிட்டரை பூமியின் நீள்வட்ட சுற்றுப்பாதையில் புகுத்தும். படத்தில்
170 x 39120கிமீ என்று இருப்பதைக் கவனிக்கலாம். பூமிக்கு அருகில் 170 கிமீ தூரமும்
அதிகபட்ச தூரமாக 39120 கிமீ புரிந்துகொள்ள வேண்டும். இப்படிச் சுற்ற வேண்டும் என்று
இஸ்ரோவிலிருந்து ஆர்பிட்டரைக் கட்டுப்பாடு செய்வார்கள்.
பூமியை
ஐந்து முறை சுற்றி பிறகு நிலவின் சுற்றுப்பாதையில் நகர்த்திவிடும். மீண்டும் சில நாட்கள்
சந்தினை சுற்றி சுற்றி அதன் அருகில் செல்லும். நிலவுக்கு அருகில் சென்றவுடன் 100கிமீ
சுற்றுப்பாதையில் சுற்ற ஆரம்பித்தவுடன், ஆர்பிட்டரிலிருந்து விக்ரம் கழன்று கொள்ளும்.
விக்ரம் நிலவைச் சுற்றி 30 கிமீ தூரத்தில் சுற்ற ஆரம்பிக்கும். (ஆர்பிட்டரின் பேலோட்
விக்ரம் என்று புரிந்திருக்கும்).
விக்ரம்
நான்கு நாட்கள் சந்திரனைச் சுற்றிய பிறகு அதிலிருக்கும் உயர் தெளிவுத்திறன் கேமரா ஒன்று
வெளியே வந்து ‘எந்த இடத்தில் தரையிறங்கலாம்’ என்று பொருத்தமான இடங்களைப் படம் பிடித்து
அனுப்பும்.
இஸ்ரோ
விஞ்ஞானிகள் அந்தப் படங்களை ஆராய்ந்து பொருத்தமான இடம் எது என்று தேர்வு செய்து அந்த
வரைபடத்தை விக்ரத்துக்கு, வாட்ஸ் ஆப்பில் ‘லொகேஷன்’ அனுப்புவது போல, அனுப்புவார்கள்.
விக்ரம்
அதைப் புரிந்துகொண்டு அந்த இடத்தில் தரையிறங்கத் திட்டமிட்டுத் தரையிறங்கும். இது தான்
‘சாஃப்ட் லேண்டிங்’ என்பார்கள்.
விக்ரம்
லாண்டிங் செய்த பிறகு, அதிலிருந்து ஒரு சருக்கு மரம் மாதிரி ஒன்று வெளியே வந்து பிரக்யான்
என்ற சின்ன வண்டியை வெளியே அனுப்பும். இதை ரோவர் என்பார்கள்.
ரோவரில்
இதே போல உயர் திறன் படக்கருவி மற்றும் எஸ்ரே போன்ற கருவிகள் ரசாயனம், சுற்றுப்புறம்,
சூழ்நிலையைச் சோதிக்க மீட்டர், மானிட்டர் என்று பல கருவிகள் அதில் இருக்கும். இது எல்லாம்
அதன் பேலோட்.
விக்ரம்,
பிரக்யான் இரண்டும் ஒரு ‘நிலவு நாள்’ வேலை செய்யும். ஒரு நிலவு நாள் என்பது நமக்கு
14 நாட்கள். ரோவர் சந்திரனை சுமார் 500கிமீ சுற்றும். ஆர்பிட்டர் நிலவை ஒரு வருடம்
சுற்றும்.
விக்ரம்
படங்களை அனுப்பி இஸ்ரோ தேர்ந்தெடுத்து அனுப்பிய பின் அது தரையிறங்கும் போது சுமார்
2 கிமீ தூரத்தில் தகவல் அனுப்புவது துண்டிக்கப்பட்டு ‘தொப்’ என்று கீழே விழுந்தது.
பிறகு என்ன ஆனது என்று நீங்கள் பார்த்திருப்பீர்கள்.
ராக்கெட்
அனுப்புவது என்பது எவ்வளவு கடினம் என்று புரிந்திருக்கும். சுமார் 0.9டிகிரீ தப்பு
செய்தாலும் சுற்றுப்பாதை மாறிவிடும் அபாயம் இருக்கிறது. ஈர்ப்பு விசை, உந்து சக்தி
என்று எல்லாம் சரியாகக் கணக்கிட்டுச் செய்ய வேண்டும். இதில் எல்லாம் இஸ்ரோ தேர்ச்சி
பெற்றுவிட்டது. மொத்தம் 3,84,000 கிமீ சென்று கடைசி ‘சாப்ட் லேண்டிங்’ மட்டும்தான்
செய்ய வேண்டும். (இதுவரை மொத்தம் 38 மென்மையான தரையிறங்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
வெற்றி விகிதம் 52%.)
அடுத்த
விண்வெளிக்கு விக்ரமிலிருந்து அனுப்பும் பேலோட் ஒரு இந்தியனாக இருப்பான். 2059ல் அத்திவரதர்
வெளிவருவதற்குள் இந்தியா பல முறை நிலவைத் தொட்டுவிட்டு வந்துவிடும்!

Posted on Leave a comment

மேட்டழகிய சிங்கர் (சிறுகதை) | சுஜாதா தேசிகன்

நல்லார்கள் வாழும் நளிர் அரங்க நாகணையான்
– ஆண்டாள், நாச்சியார் திருமொழி
ஸ்ரீரங்கவாசிகளுக்கே
‘EVS’ சாலையின் விரிவாக்கம் தெரியாது. நமக்கும் அந்தக் கவலை வேண்டாம். இவிஎஸ் சாலையும்
வரதாச்சாரி தெருவும் முட்டிக்கொள்ளும் இடத்தில் ‘பெண்கள் என்றால் பொய்யா பொய்தானா’
என்று அந்தக் காலைவேளையிலும் பிடிவாதமாக அலறிக்கொண்டிருக்கும் ஒரு சாதாரண தினத்தில்
க்ரோமியத்தில் குளிப்பாட்டிய பஸ்ஸிலிருந்து இறங்கினார்கள். இறங்கியது ஜெயபாலனும், கண்ணம்மாவும்.
தூக்கம் மிச்சம் அவர்களின் கண்களில் தெரிந்தது.

இறங்கியவுடன் கண்ணம்மாவிற்கு
ஸ்ரீரங்கம் கோபுரமும் ஆவின் பால்வண்டிகளும் மூடப்பட்ட ஜன்னல்களும் வீட்டு வாசலில் தண்ணீர்
தெளிப்பவர்களும் கண்ணில் பட்டார்கள்.
“காபித் தண்ணி கிடைக்குமா?”
என்றாள்
“கிடைக்கும் பேசாம
வா!”
“உள்ளே அஞ்சு மாசக்
குட்டி இருக்கு” என்ற தன் மேடிட்ட வயிற்றைத் தடவிக்கொண்டாள். ஜெயபாலன் அதைக் கவனிக்காமல்
காது குடைந்துவிட்டு, தன் வேட்டியை மேலுயர்த்தி பட்டாப்பட்டியிலிருந்து செல்போனை எடுத்து
அழுத்தினான்.
“காபி கிடைக்குமா
கேளுங்க.”
“சட்… சும்மா இரு..”
என்றபோது மறுமுனை ‘சிறிது நேரம் கழித்து முயற்சிக்கவும்’ என்றபோது வாயில் கெட்ட வார்த்தை
வந்தது.
“பாட்டிலக் கொடு”
என்று வாயைக் கொப்பளித்தபோது செல்பேசி அழைக்க, வாயை அவசரமாகத் துடைத்துக்கொண்டு, செல்பேசியை
அழுத்தி “தோழர்” என்றான்.
“இங்கே… பஸ் ஸ்டாண்ட்
பக்கம்… ஏ.டி.எம். எதிதாப்பல..”
“……”
“தங்கச்சியும் தான்..
தனியா விட முடியாது…”
“……”
“அங்கேயே நிக்கறோம்..”
“முத்து வரான்” என்று
பூட்டியிருந்த அந்தக் கடை வாசலில் உட்கார்ந்துகொண்டு அவளையும் உட்காரச் சொன்னான். முப்பது
நிமிடம் கழித்து கருப்பு சட்டை, ஜீன்ஸ் பேண்டுடன் முத்து என்கிற முத்துகுமார் பைக்கில்
ஸ்டாண்ட் போட்டபோது கண்ணாடி இடுக்கில் சுருட்டி வைக்கப்பட்டிருந்த அன்றைய நாளேடு கீழே
விழுந்தது. அதைக் கையில் எடுத்துக்கொண்டே “ரொம்ப நேரம் ஆச்சா வந்து?”
“முக்கா மணி ஆச்சு”
என்றாள் கண்ணம்மா.
“இப்பதாம்பா… சரி…
நம்ம செய்யப் போற இடம் எங்கே?” என்றான் ஜெயபாலன்
“பக்கம் தான்.. தங்கச்சியால
நடக்க முடியுமா?”
அவர்கள் அந்த இடத்தைப்
பார்க்கச் சென்றபோது அங்கே மூன்று போலீஸ்காரர்கள் நின்றுகொண்டு இருந்தார்கள். அங்கே
தற்காலிகத் தடுப்பில் ‘சாரதாஸ்’ என்று எழுதியிருந்தது.
‘இந்த ஹோட்டல்தான்,
பார்த்துக்கோ…’ என்று முத்து கண்களால் காட்ட, ஜெயபாலனும் கண்ணமாவும் அதைப் பார்த்தார்கள்.
அவர்கள் பார்த்த
இடத்தில், “ஹோட்டல் ஸ்ரீ கிருஷ்ணய்யர் பிராமணாள் கபே – Hotel Sri Krishna Iyyer” என்று,
தமிழில் பெரிதாகவும் ஆங்கிலத்தில் சிறியதாகவும் எழுதியிருந்தது.
“பார்ப்பான் என்ன
மாதிரி எழுதியிருக்கான் பாரு” என்று முத்துக்குமார் சொல்ல, ஜெயபாலன் “(கெட்டவார்த்தை)…
ஐய்யருக்கு இரண்டு ‘y’ வேற போட்டிருக்கான் என்ன திமிரு…!” என்று சிரித்தான்.
போர்டின் மேலே பொடி
எழுத்துகளில் என்ன எழுதியிருக்கிறது என்று உற்றுப் பார்த்து, படிக்கத் தொடங்கினாள்
கண்ணம்மா.
“ஸ்ரீ… மீன்…
குளத்தி… பகவதி அம்மன் துணை” என்று இடதுபக்கத்திலும், வலது பக்கம் “ஸ்ரீ… சமயபுரத்து…
மாரியம்மன்… துணை” என்றும், நடுவில் “ஸ்ரீ… லக்ஷ்மி… நரசிம்மன் துணை” என்றும்
படித்து முடித்தபோது அவளுக்கு நாக்கு வறண்டு போயிருந்தது.
“இன்னிக்குத் தெறிக்க
விட்டுடலாம்… கவலைப்படாதீங்க தோழர்… எதாவது சாப்பிட்டீங்களா?”
“இங்கே காபி கிடைக்குமா?”
என்றாள் கண்ணம்மா.
“இங்கேயா?…” என்று
குழப்பத்துடன் முத்துக்குமார் “இந்த ஹோட்டல் வேண்டாம்… நமக்குத் தெரிந்த கடை ஒண்ணு
இருக்கு.. நீ தங்கச்சியக் கூட்டிகிட்டு கோபுரம் எதித்தாப்புல… போலீஸ் ஸ்டேஷன் பக்கம்…
தலைவர் சிலை இருக்கு அங்கே வந்துடு… நான் நடந்து வரேன்” என்று முத்து பைக்கை ஸ்டார்ட்
செய்து கொடுத்தான்.
கண்ணம்மா காபியும்,
நியூஸ் பேப்பர் கிழிசலில் மசால் வடையையும் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது முத்து வந்து,
“போஸ்டர் பாரு” என்று சொல்ல, கோணலாக ஒட்டிய போஸ்டரில் “…சனிக்கிழமை காலை 10 மணிக்குச்
சிறீரங்கத்தில் பிராமணாள் பெயர் அழிப்புப் போராட்டம்” என்று கொட்டை எழுத்தில் அடித்திருந்தார்கள்.
“மொத்தமா முவாயிரம்
போஸ்டர்.. நேத்து ராவோடு ராவா நானும்… தில்லைநகர் சங்கர் தெரியுமில்ல… சேர்ந்து
ஒட்டினோம்.”
“தலைவர் எத்தினி
மணிக்கு வரார்?”
“தலைவர் கனடாலேர்ந்து
நேத்தி ராத்திரிதான் வந்தார்… இங்கே பத்து பத்திரை மணிக்கு வந்துடுவார். கருப்பு
பெயிண்ட் ரெடி பண்ணிடலாம்… பக்கத்துலேயே ஹார்ட்வேர் கடை இருக்கு… வாங்கிக்கலாம்..
இன்னிக்கு ஐயருக்குக் கருப்பு அபிஷேகம்தான்…”
மசால் வடை காகிதத்தில்
அந்த எண்ணெய் வழிந்த நடிகரைப் பார்த்துக் கொண்டிருருந்த கண்ணம்மாவிடம் “தங்கச்சி..
செலவுக்கு வெச்சுக்கோ” என்று முத்துக்குமார் இரண்டு நூறு ரூபாயைக் கொடுத்துவிட்டு பைக்கில்
செல்லும்முன் ஜெயபாலனுடன் ஏதோ பேசிவிட்டு தோளில் தட்டிவிட்டுச் சென்றான்.
எட்டு மணிக்குக்
கோபுரத்துக்கு முன் இருக்கும் காபி கடையில் கூட்டமாக இருக்க, அங்கே சில கருப்புச் சட்டைகள்
தென்பட்டன. திடீரென்று ஒலிபெருக்கி ‘உஸ்…உஸ்’ என்ற சத்தத்தைத் தொடர்ந்து, கோபுரத்துக்கு
முன் சிரித்துக்கொண்டிருந்த காந்தி சிலை பக்கம் விசில் சத்தத்துடன் ஒரு டாட்டா சுமோ
வந்தது. நடுவில் ஒருவன் நெற்றியில் கர்சீப் கட்டிக்கொண்டு, சுருட்டு குடித்துகொண்டிருந்த
முகம் போட்ட பனியனுடன் மூங்கில் கம்பில் கட்டப்பட்ட கருப்புக் கொடியைப் பிடித்துகொண்டிருக்க,
பக்கத்தில் இன்னொருவன் “…பெரியார் வாழ்க…” என்றபோது ஜெயபாலன் “நீ போராட்டத்துக்கெல்லாம்
வராதே… வயித்துல புள்ள இருக்கு… இங்கேயே நிழல்ல எங்காவது இரு.. கையில பணம் இருக்கு
இல்ல? கருப்பு பெயிண்ட் ஒரு டப்பா, பிரஷ்… அப்பறம் நீ ஏதாவது வாங்கி சாப்பிடு” என்று
பதிலுக்குக் காத்திராமல் சத்தம் வந்த திசையை நோக்கி ஓடினான்.
கண்ணம்மா என்ன செய்வது
என்று தெரியாமல் ஜெயபாலனைப் பார்த்துக் கொண்டிருக்க, ஒலிபெருக்கி இன்னொரு முறை “பெரியார்
வாழ்க… சமத்துவம் ஓங்குக” என்று முழங்கிவிட்டுத் தொடர்ந்தது.
“1957ல் தமிழ்நாடு
முழுவதும் பிராமணாள் பெயர் அழிப்புப் போராட்டத்தைத் தந்தை பெரியார் நடத்தி வெற்றி கண்டார்…
ஆனால் தற்போது ஸ்ரீரங்கத்தில் ‘ஸ்ரீகிருஷ்ணய்யர் பாரம்பரிய பிராமணாள் கபே’ என்ற ஹோட்டல்
இருக்கிறது. நம் கழகத் தோழர்கள் கொதித்துப் போய் ஹோட்டல் உரிமையாளாரை அணுகி பிராமணாள்
என்பது வர்ணத்தின் பெயரை அப்பட்டமாகக் குறிக்கும் சொல்… பார்ப்பனரல்லாத மக்களை இழிவுபடுத்தும்
சொல்… அதை அழிக்க வேண்டும் என்று அறவழியில் கேட்டார்கள். ஆனால் பார்ப்பான் கேட்கவில்லை.
இன்னிக்கும் பிராமணாள் பெயர் அழிக்கப்படாமல் அப்படியே இருக்கிறது. வர்ண வெறி பிடித்தவர்கள்…
தலைவர் இன்னும் சில மணிநேரத்தில் இங்கே வரப் போகிறார். நம் கருப்பு மை இன்று நாம் யார்
என்பதைக் காட்டும்…” என்றபோது விசிலும் கைத்தட்டலும் மெலிதாகக் கேட்டது.
கண்ணம்மாவிற்கு எங்காவது
அமைதியான இடத்தில் படுத்துக்கொண்டால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. சற்று நேரம்
வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். கடையில் ‘இன்று மந்திரி சபை விரிவாக்கம்’ என்பது
அவளுக்கு அபத்தமாகப் பட்டது. ஒலிபெருக்கிச் சத்தம் அவளுக்குப் பழகி, சுவாரசியம் இல்லாமல்
போனபோது “ஒரு பன்னீர் சோடா கொடுங்க” என்றவரை கண்ணம்மா பார்த்தாள். அவருடன் இன்னொருவர்
வந்திருந்தார். அவர் தலையில் குடுமி இருந்தது.
“சாமி உங்களுக்கு?”
“எனக்கு ஏதும் வேண்டாம்.
சந்நிதி கைங்கரியம் இருக்கு…”
“ஏன் சாமி கோபுரத்துக்கு
முன்னாடி சிலை வைக்கும்போது நீங்க எல்லாம் சும்மாவா இருந்தீங்க?”
“போராட்டம் எல்லாம்
நடத்தினோம்.. ஆனா ஆட்சி செஞ்சவா சப்போர்ட் இல்லை… என்ன செய்ய?”
“நீங்க அன்னிக்கு
விட்டதுதான் இவங்க இன்னிக்கு தைரியமா மைக் பிடிச்சுப் பேச ஆரம்பிச்சுட்டாங்க பாருங்க…”
“திருமஞ்சனக் காவிரி
பக்கம் நம்பிள்ளை சன்னதி இருக்கு… யாருக்குத் தெரியும்? ஆனா இந்தச் சிலை?… எல்லாருக்கும்
தெரியும்… என்ன செய்ய…? கலி காலம்.”
“நீங்க ஏதாவது செய்யனும்
சாமி… சும்மா பூஜை, பொங்கலுனு இருந்தா போதாது… நீங்க எல்லாம் மைக் பிடித்துப் போராட்டம்
செய்யனும்…”
“யாரும் வர மாட்டா…
ஐபிஎல் பார்த்துண்டு இருப்பா… ஸ்ரீரங்கம் பூலோக வைகுண்டம். ஆழ்வார்கள், ஆசாரியர்கள்
வாழ்ந்த இடம்… இங்கே இருக்கும் மரம், பூ, கல்லு, மண்ணு, எறும்பு, மாடு எல்லாம் போன
ஜன்மத்தில் ஏதோ புண்ணியம் செஞ்சுருக்கு..”
“அப்ப கடவுள் இல்லைனு
இங்கே மைக் பிடிச்சு கத்திண்டிருக்கறவா எல்லாம்…?”
“கருப்புச் சட்டை
போட்ட அடியார்கள்… பூர்வ ஜென்ம புண்ணியம் இன்னிக்கு இவா ஸ்ரீரங்கத்துல இருக்கா.”
கண்ணம்மா அவர்களிடம்
சென்று “சாமி! இங்கே பெயிண்ட் கடை ஏதாவது இருக்கா?” என்றாள்.
“பழைய தேவி தியேட்டர்
தெரியுமா?”
“தெரியாதுங்களே…
ஊருக்குப் புதுசு”
“இப்படி நேராப் போனா,
இடது கைப்பக்கம் பஸ் எல்லாம் திரும்பும்… அங்கே கடை இருக்கு. ஆனா பத்து மணிக்குத்தான்
திறப்பாங்க…” பன்னீர் சோடாவிற்கு சில்லறையுடன் ஏப்பத்தையும் கொடுத்துவிட்டுச் சென்றார்கள்.
கண்ணம்மாவுக்கு ஒலிபெருக்கி
ஏதோ பேசிக்கொண்டேயிருந்தது சலிப்பாக இருந்தது. தானும் பன்னீர் சோடா குடிக்க வேண்டும்
போல இருந்தது. போலீஸ் ஜீப் ஒன்று ‘இங்கே யாரும் கூட்டம் போடக் கூடாது… நகருங்க…
நகருங்க…’ என்று அவள் தாகத்தையும் அமைதியாகக் கலைத்துவிட்டு எக்ஸ்ட்ராவாக ‘…ஆட்டோ
உனக்கு இங்கே என்ன வேலை…?’ என்ற அதட்டலுடன் சென்றது.
‘ஒடுக்கப்பட்ட மக்களுக்காகத்
தொடர்ந்து குரல் கொடுக்கும் நம் தலைவர் சற்று நேரத்தில் இங்கே வருவார்…’ என்றது இன்னொரு
ஒலிபெருக்கி.
நடந்து சென்றவரிடம்
“மணி என்னங்க?” என்று கேட்டுவிட்டு கண்ணம்மா மெதுவாக பெயிண்ட் கடை நோக்கி நடக்கத் தொடங்கினாள்.
பஸ் திரும்பும் இடத்தில் சிமெண்ட் மூட்டைகள், சுருட்டபட்ட டியூப், சங்கலிகள் வெளியே
தொங்க, ‘ஸ்ரீரங்கா ஹார்ட்வேர்’ என்ற கடை காலியாக இருந்தது. நம்பெருமாள் சேர்த்தி சேவைக்குக்
படத்துக்கு கீழே ஊதிபத்தி பத்து பர்சண்ட் தன்னை இழந்து புகையால் கைங்கரியம் செய்து
கொண்டிருந்தது.
“கருப்பு பெயிண்ட்
கொடுங்க” என்ற வாசகத்தை, வெளியே சென்ற போலீஸ் ஜீப்பின் தலையில் சிகப்பு-நீல ஒளியின்
பளிச்சும், அதைத் தொடர்ந்த ஒலிபெருக்கியின் ‘கூட்டம் போட அனுமதி இல்லை… யாரும் கூட்டம்
போடக் கூடாது… அமைதியாக் கலைஞ்சுடுங்க…!’ அபகரித்தது.
“அந்தச் சிமெண்ட்
மூட்டையை எல்லாம் உள்ளே அடுக்குப்பா.. இன்னிக்கிக் கடையைத் திறக்க வேண்டாம்… பிரச்னை
வர வாய்ப்பு இருக்கு” என்று தினத்தந்தியை மடித்து வைத்தார் கடைக்காரர். “உனக்கு என்னம்மா
வேணும்? சீக்கிரம் சொல்லுமா… கடை இன்னிக்குக் கிடையாது.”
“பெயிண்டு…”
“எதுக்கு அடிக்க?”
கண்ணம்மாவுக்கு என்ன
சொல்வது என்று தெரியவில்லை. “சுவத்தில அடிக்க…”
“வெளிச் சுவரா? வீட்டுக்குள்ள
அடிக்கவா? டிஸ்டம்பரா? ராயலா? எமல்ஷனா? என்ன கலர்? எவ்வளவு வேணும்?” என்று கேள்விகளை
அடுக்க கண்ணம்மாவுக்கு ஒன்றும் புரியவில்லை.
“கருப்பு பெயிண்ட்
ஒரு டப்பா… இதோ இங்கே அடிச்சிருக்கீங்களே…”
“இந்த பெயிண்ட் சுவத்துல
அடிக்கமாட்டாங்க… ஒரு லிட்டர் கருப்பு எனாமல் கொடுப்பா!”
“பிரஷ் ஏதாவது வேணுமா?”
“ஆமாம் ஒரு பிரஷ்.”
“எவ்வளவு இன்ச்?”
“இந்த அளவு கொடுங்க..”
என்று கையால் காண்பித்தாள்.
“அரை இன்ச் பிரஷ்…
வேற?” கண்ணம்மா தலையை ஆட்ட, ஒரு துண்டுக் காகிதத்தில் சரசரவென்று எழுதி “இருநூற்றி
நாற்பத்தி இரண்டு ரூவா. இருநூற்றி நாற்பது கொடு!”
கண்ணம்மா தன் கையில்
சுருட்டியிருந்த பணத்தைப் பிரித்தபோது அதில் இரண்டு நூறு ரூபாய் இருந்தன.
“இதுல சின்ன டப்பா
இருக்கா?”
“முதல்லயே சொல்லக்
கூடாதா?… அரை லிட்டர் கொடுப்பா.”
“நூற்றி முப்பது
கொடு” என்று கண்ணம்மாவிடம் இருந்த பணத்தை வாங்கிகொண்டு சில்லறையைக் கொடுத்தபோது கடை
வாசல் காலியாக இருந்தது.
கண்ணம்மா கோபுரத்தை
நோக்கி அவசரமாக நடந்தாள். கோபுர வாசலில் மாடு ஒன்று என்ன செய்வது என்று தெரியாமல் ஒன்றுக்கு
போய்க்கொண்டு இருந்தது. தடுப்புகள் போடப்பட்டு, கடைகள் எல்லாம் படபடவென்று ஷட்டர்கள்
மூடப்பட்டு, கொய்யா கூர் கலைக்கப்பட்டு, எல்லா இடங்களிலும் போலீஸ் நின்று கொண்டு இருந்தது.
பெயிண்ட் வாங்கி
வருவதற்குள் இடமே சினிமா செட் போட்ட மாதிரி மாறிவிட்டதை உணர்ந்தாள். கண்ணம்மாவிற்கு
உலகமே தன்னைப் பார்த்துக் கோபித்துக்கொண்டது போலத் தோன்றியது.
“என்னப்பா ஒரு ஆட்டோ,
பஸ் கூட இல்லையே”, “சி.எம் வராரா?” என்ற கேள்விகளைக் கடந்து சென்றபோது, கோபுர வாசலில்
பலர்கூடி ஊர்வலம் போலக் காட்சி அளித்தது. கூட்டத்தின் நடுவில் ஜெயபாலனைப் பார்த்தபோது
மனதில் நிம்மதியும், கூட்டத்தில் ஊர்ந்து சென்ற போலீஸ் ஜீப்பைப் பார்த்த போது பயமும்
கவ்விக்கொண்டது.
கண்ணம்மா ஜெயபாலனை
நோக்கி நடந்தாள்.
“இங்கே எதுக்கு புள்ள
வந்தே?”
“பெயிண்ட் வாங்கியாந்தேன்.
“இன்னிக்குத் தேவைப்படாது
போல… கோர்ட் தடை விதிச்சுட்டாங்களாம்
.
“ஐயோ… இதைத் திருப்பிக்
கூட தர முடியாது. கடை எல்லாம் முட்டிட்டாங்க.”
“ஒன்னும் கவலைப்படாதே…
இருட்டின பெறகு ஒரு வேலை இருக்கு… முத்து… முத்து…” என்று கூப்பிட, முத்து வந்தபோது
ஒருவித வாடை அடித்தது.
“முத்து! இவ கிட்ட
சொல்லிடு.”
“தங்கச்சி, உனக்குத்
தாயார் சன்னதி தெரியுமா?”
கண்ணம்மா தெரியாது
என்பதை போல முகத்தைக் காண்பிக்க, முத்து தொடர்ந்தான். “கடை எல்லாம் மூடிட்டாங்க…
அதனால நேரா கோபுரத்துக்குள்ள போயிடு. கருடன் சன்னதி வரும்… அங்கே பிரசாதக் கடை இருக்கு.
புளிசாதம், தயிர் சாதம் கிடைக்கும். பதினஞ்சு ரூபாய். சாப்பிட்டுக்க. அங்கேயே எதிர்த்த
மாதிரி தண்ணி இருக்கு. இருட்டிய பிறவு ஏழு மணிக்கு தாயார் சன்னதி வாசல்ல வந்திடு. வேலை
இருக்கு.”
“என்ன வேலை?”
முத்து நிதானமாகச்
சொன்னான். “கோர்ட் கருப்பு பெயிண்டு வெச்சு அழிக்கக் கூடாது என்று தீர்ப்பு சொல்லிட்டாங்க….
தலைவர் கொஞ்ச நேரத்துல வந்து பேசுவார். ஒரு கூட்டம் இருக்கு. நாம ஏழு மணிக்கு… கொஞ்சம்
இருட்டின பெறவு… கோயில் சுவத்தில நாமம் எல்லாம் பெரிசா போட்டிருக்காங்கல்ல… கருப்பு
பெயிண்ட் வெச்சி.. “
“வெச்சி?”
“வெச்சு செஞ்சிடுவோம்.
நீ கிளம்பு தங்கச்சி…”
கண்ணம்மாவுக்கு என்ன
செய்வது என்று தெரியாமல் கிளம்பினாள். கோபுரத்தைத் தாண்டிச் சென்றபோது கோயிலில் கூட்டம்
அதிகம் இல்லாமல் இருந்தது. குழந்தை ஒன்று எல்.ஈ.டி பம்பரம் வேண்டும் என்று அடம்பிடித்துகொண்டு
இருந்தது. “துளசி மாலை வாங்கிப் போங்க அக்கா” என்று ஒரு சின்ன பெண் அவளைச் சுற்றி சுற்றி
வந்து கெஞ்சியது.
கருட மண்டபத்துக்கு
வந்தபோது வவ்வால் நாற்றம் அடித்தது. சற்று தூரம் சென்று பார்த்தபோது கையில் இருபது
ரூபாய் மட்டுமே இருந்தது. ஐம்பது ரூபாயை பெயிண்ட் கடைக்காரர் திருப்பித் தந்தாரா இல்லை
வழியில் விழுந்துவிட்டதா என்று நினைவில்லை.
மத்தியானம் ஒரு பொட்டலம்
புளிசாதம் வாங்கிச் சாப்பிட்டாள். பாக்கி ஐந்து ரூபாய்க்கு ஒரு வடை தந்தார்கள். இன்னும்
பசித்தது. சூரிய புஷ்கரணி பக்கம் படுத்தபோது தூங்கிவிட்டாள். எழுந்தபோது எல்லாம் இருட்டாக
எங்கோ ‘டம் டம்’ என்று மேளச் சத்தம் கேட்டது. சோர்வாக இருந்தது.
துடப்பத்தை வைத்துக்
கூட்டிக்கொண்டிருந்த பணியாளாரிடம் “மணி என்ன?” என்றபோது “ஏழு ஆகப் போகுது… இனிமேதான்
நடை திறப்பாங்க.”
“வெளியே எப்படிப்
போகணும்?”
“நீ எந்தப் பக்கம்
போகணும்?”
“தாயார் சன்னைதி
பக்கம்.”
“இப்படியே நேரா போனா
தன்வந்திரி சன்னதி வரும். அங்கே கேட்டா சொல்வாங்க.”
மதில்களைப் பார்த்து
நடந்து சென்றபோது பிரமிப்பாக இருந்தது. அதில் சோர்வாக சாய்ந்தபோது சூரியனின் சூடு இன்னும்
கற்களில் தெரிந்தது. அவளைக் கடந்து பேட்டரி கார் காலியாகச் சென்றபோது அதைக் கூப்பிடலாமா
என்று யோசிப்பதற்குள் அது சென்றுவிட்டது.
மெதுவாக நடந்தாள்.
தன்வந்திரி சன்னதிப் பக்கம் ஒரு பூனை ஓடியது. “தாயார் சன்னதி…” என்றவுடன் “இதோ இப்படிப்
போனா வரும்” என்று ஒருவர் கைகாட்டினார்.
‘தாயார் சந்நிதி’
என்று நியான் எழுத்துகள் ஒளியில் தெரிய, கண்ணம்மாவுக்குத் தளர்ச்சி ஏற்பட்டு அப்படியே
கம்பர் மண்டபத்தில் உட்கார்ந்தாள். சரிந்தாள் என்று சொல்வது இன்னும் சரியாக இருக்கும்.
தேசிகர் சன்னதியில்
காலை ஆட்டிகொண்டிருந்தவர் இதைக் கவனித்து ஓடி வந்தார். “என்ன ஆச்சு?” என்று கேட்டபோது
கண்ணம்மாவுக்கு கண்கள் திறக்கத் தெம்பில்லாமல் சொருகியது. அவள் வயிறு சற்று மேடிட்டிருப்பதைக்
கவனித்து, உடனே தாயார் சன்னதியில் சீருடையில் இருந்த செக்யூரிட்டியை நோக்கி ஓடினார்.
“ஒரு பொண்ணு மயக்கமா
இருக்கா… கம்பர் மண்டபம்… புள்ளதாச்சி போல…” என்று படபடப்பாகச் சொல்ல, தாயார்
சன்னதியிலிருந்து வெளியே வந்தவர்களும் கம்பர் மண்டபத்துக்கு செக்யூரிட்டியுடன் விரைந்தார்கள்.
கண்ணம்மா பேச்சு மூச்சு இல்லாமல் இருந்தாள்.
ஒருவர் உடனே தன்னிடம்
இருந்த பூ, மஞ்சகாப்பு இத்தியாதிகளை “இதை கொஞ்சம் வெச்சிக்கோங்க” என்று கொடுத்துவிட்டு
உடனே செயல்பட்டார். “முதல்ல எல்லோரும் கொஞ்சம் தள்ளிப் போங்கோ தள்ளி போங்கோ.. காத்து
வரட்டும்” என்று கண்ணம்மாவின் கைகளைப் பிடித்து நாடியை சோதிக்க ஆரம்பித்தார்.
“கூட யாராவது வந்தீங்களா?”
கூட்டம் ஓர் அடி தள்ளிச் சென்றது.
“நாடித் துடிப்பு
அதிகமா இருக்கு.. தண்ணி வேணும். சக்கரை… ஸ்வீட் ஏதாவது இருக்கா?… ஆம்புலன்ஸ் ஒன்னுக்கு
சொல்லிடுங்க…” என்றார்.
உடனே ஒரு பிஸ்லேரி
வந்தது.
“கொஞ்சம் இருங்கோ.
மேலே நரசிம்மர் சன்னதில பானகம் இருக்கு. எடுத்துண்டு வரேன்” என்று அர்ச்சகர் மேட்டழகிய
சிங்கர் சன்னதி படிகளை நோக்கி ஓடினார். வட்டிலில் பானகம் எடுத்துக்கொண்டு வர, அதைக்
கண்ணம்மாவின் வாயில் விட்ட பிறகு, கண்ணம்மா விழித்தாள். கூட்டத்துக்கு உயிர் வந்தது.
அவள் கையில் இன்னும்
கொஞ்சம் பானகம் ஊற்றப்பட்டது. அதையும் குடித்தாள்.
“ஏம்மா வயித்துல
புள்ள இருக்கு… எத்தனை மாசம்?”
“அஞ்சு ஆச்சு.”
“காலையிலிருந்து
என்ன சாப்பிட்ட? தண்ணி கிண்ணி குடிச்சியா?” கண்ணம்மாவுக்கு அப்போதுதான் தான் தண்ணீரே
குடிக்கவில்லை என்று தெரிந்தது.
“இல்லை” என்றாள்.
“…டிஹைட்ரேஷன்…
லோ சுகர்… குழந்தை வயித்துல இருக்கு… அதுக்காகவாவது ஒழுங்கா சாப்பிட வேண்டாமா?
நல்லவேளை இந்த ஸ்வாமி பானகம் கொடுத்தார். இல்லன்னா ஆபத்தா முடிஞ்சிருக்கும்…”
அர்ச்சகர் சந்தோஷமாக
“தேவரீர் டாக்டரா?” என்றார்.
“ஆமாம்.. திருநெல்வேலியில.”
“ஆழ்வார் எந்தத்
தொழிலையும் சொல்லலை. ஆனா மருத்துவனாய் நின்ற மா மணிவண்ணா என்று ஆழ்வார் டாக்டரை மட்டும்தான்
சொல்லுகிறார். நரசிம்மர் மாதிரி வந்து காப்பாத்திருக்கார்… நீ ஒன்னும் கவலைப் படாதே…
பானகம் குடிச்சிருக்க… குழந்தை பிரகலாதன் மாதிரி பிறப்பான்… இந்தா இன்னும் கொஞ்சம்
சாப்பிடு” என்று அவள் கையில் பானம் முழுவதையும் கவிழ்த்தார்.
“எங்கேமா போகணும்?…
ஆம்புலன்ஸ் வேண்டாம்னு சொல்லிடுப்பா.”
“தாயார் சன்னதிக்கு
வழி கேட்டு வரச் சொன்னாரு.”
“யாரு?”
“என் வூட்டுக்காரர்..”
“இதோ இதுதான் கேட்டு”
என்றதைக் கேட்டு மெதுவாக நடக்கத் தொடங்கினாள். கை பிசுக்காக ஒட்டியது. மூக்குப் பக்கம்
வைத்துப் பார்த்தபோது சுக்கும், ஏலக்காய் வாசனையும் கலந்து அடித்தது.
தாயார் சன்னதி வாசல்
திகில் படத்தில் வரும் மௌனம் போல நிசப்தமாக இருந்தது. தூரத்தில் இருவர் வருவது தெரிந்தது.
ஜெயபாலுவும் முத்துவும் வந்தபோது பையைக் கொடுத்தாள்.
மதில் மீது வரையப்பட்ட
நாமம் பக்கம் நெருங்கிய ஜெயபாலன், பிரஷ்ஷை எடுத்தபோது “ஏதோ பிசுபிசுப்பா ஒட்டுதே” என்றான்.
கண்ணம்மா மீண்டும்
தன் கையை முகர்ந்தாள்.