Posted on Leave a comment

கும்மாயம் | சுஜாதா தேசிகன்


மனித மூளை விசித்திரமானது, அதற்கு விடை தேடிக்கொண்டே இருக்க வேண்டும். ஏதாவது
ஒன்றுக்கு விடை தெரியவில்லை என்றால் ஆழ்மனதில் அந்த விடைக்காகக் காத்துக்கொண்டிருக்கும்.
எதேர்ச்சையாக விடை கிடைக்கும்போது ஆனந்தப்பட்டு அடுத்த கேள்விக்கான விடையைத் தேடத்
தொடங்கும்.
உ.வே.சா அவர்கள் மணிமேகலை என்ற நூலை ஆராய்ந்தபோது அதில் வரும் பல சொற்களுக்கு
அவருக்குப் பொருள் கிடைக்கவில்லை. பல புத்தகங்களை ஆராய்ந்தும், பலரிடம் கேட்டும் தெரிந்துகொண்டார்.
அப்படி ஆராய்ச்சி செய்தபோது மணிமேகலையில் 27வது ‘சமயக் கணக்கர் தம் திறம் கேட்ட காதை
யில்
“பயற்றுத் தன்மை கெடாது கும்மாயம், இயற்றி (அடி, 175-6)
என்று ஒரு பகுதியில் ‘கும்மாயம் என்ற சொல்லின் பொருள் அவருக்குத் தெரியவில்லை. பலரைக் கேட்டுப்பார்த்தும்
பயன் இல்லை.
காடும் காடு சார்ந்த இடங்களும் முல்லை நிலமாகும் என்பது போல, கோயிலும் கோயில்
சார்ந்த இடம் கும்பகோணம் என்று சொல்லலாம். பல பிரசித்தி பெற்ற திருகோயில்கள் அங்கே
இருக்கின்றன. உ.வே.சா கும்பகோணத்தில் இருந்த சமயம் ஸ்ரீ சாரங்கபாணிப் பெருமாள் சந்நிதி
பட்டாசாரியர் உ.வே.சா அவர்களின் வீட்டிற்கு ஒரு முறை வந்தபோது “கோயிலுக்கு வந்து பெருமாளை
ஸேவிக்க வேண்டும்
என்றார்.
பிறகு ஒரு சமயம் உ.வே.சாவும் அவருக்கு உதவி செய்யும் திருமானூர்க் கிருஷ்ணையரென்பவரும்
கோயிலுக்குச் சென்றார்கள். இவர்களைப் பார்த்த பட்டாசாரியார் அன்று ஒவ்வொரு சந்நிதியைப்
பற்றிய வரலாறுகளையெல்லாம் சொல்லி தரிசனம் செய்வித்தார்.
பல முறை பெருமாளை சேவித்திருந்தாலும், அன்று உ.வே.சா அனுபவித்து சேவித்தார்.
தரிசனம் முடிந்த பின் பட்டாசாரியர் “சற்று இருங்கள்
என்று சொல்லிவிட்டு மடைப் பள்ளிக்குச்
சென்று பல பிரசாதங்களை ஒரு வெள்ளித் தாம்பாளத்தில் எடுத்து வந்தார்.
பட்டாசாரியார் பிரசாதங்களை ஒவ்வொன்றாக எடுத்து அவர்களுக்குக் கொடுக்க – தேங்குழல்,
வடைத் திருப்பணியாரம், அதிரசம் என்று பல வந்தன. பட்டாசாரியார் ஒரு பிரசாதத்தைக் கொடுக்க
“இதற்குப் பேர் என்ன?
என்று உ.வே.சா அதன் பெயரைக் கேட்டவாறே உட்கொண்டபோது ஒரு
பிரசாதம் புதிதாக இருந்தது.
“இது புதிதாக இருக்கிறதே; இதன் பெயர் என்ன?
“அதுவா? கும்மாயம்
“என்ன? கும்மாயமா! என்று வியப்போடு மணிமேகலையின் பாடல் அடிகள் அவர் கண் முன்னே
வந்து நின்றன.
“ஐயா! இன்னும் கொஞ்சம் கொண்டு வரச் சொல்லுங்கள் என்று கேட்டு உட்கொண்டார்.
பட்டாச்சாரியார் இவருக்கு ‘கும்மாயம்
மிகப் பிடிக்கும் என்று நினைத்துக்கொண்டார்.
உ.வே.சா.வுக்குக் கும்மாயத்தின் சுவையைவிட அதன் பெயர் அதிக சுவையைக் கொடுத்தது.
மணிமேகலையில் கண்ட கும்மாயம் மடைப்பள்ளியில் இருக்கிறது என்று வியந்து “இதனை எப்படிச்
செய்வது?
என்று கேட்டபோது பட்டாசாரியார் விரிவாக விளக்கினார்.
கும்மாயத்தைப் பற்றி அந்தப் பட்டாச்சாரியரிடம் தெரிந்துகொண்ட பிறகு நீலகேசி
யென்னும் நூலிலும் அச்சொல் வந்திருப்பதை அறிந்துகொண்டார். வேறு நூல்களிருந்தும் சில
செய்திகள் அவருக்குத் தெரிய வந்தன. அவற்றையெல்லாம் சேர்த்து மணிமேகலைக் குறிப்புரையில்
இவ்வாறு எழுதியிருக்கிறார்
“கும்மாயம், புழுக்கிய பச்சைப் பயற்றோடு சருக்கரை முதலியன கூட்டி ஆக்கப்படுவதொரு
சிற்றுண்டி. இப்பெயரோடு இது விஷ்ணு ஆலயங்களில் இக்காலத்தும் வழங்கி வருகின்றது. ‘கும்மாயத்தொடு
வெண்ணெய் விழுங்கி
(பெரியாழ்வார் திருமொழி,3.3.3) என்பதில் கும்மாயம் என்பதற்கு
ஸ்ரீ மணவாள மாமுனிகள் ‘குழையச் சமைத்த பருப்பு
என்று பொருள் செய்திருக்கின்றனர்.
‘பயற்றது கும்மாயம்
(நன்னூல், சூத்திரம் 299, மயிலை நாதருரை மேற்கோள்).
இதைப் படித்த பின்னர் கும்மாயம் எப்படிச் செய்வது என்று தெரிந்துகொள்ள சில ஆராய்ச்சிகளைத்
தொடர்ந்தேன். முதலில் பெரியாழ்வார் திருமொழியில் இந்தப் பாசுரத்தைப் பார்க்கலாம்
கும்மாயத்தொடு வெண்ணெய் விழுங்கிக்
      குடத் தயிர் சாய்த்துப் பருகி*
பொய்ம் மாய மருது ஆன அசுரரைப்
      பொன்றுவித்து இன்று நீ வந்தாய்
குழையச் சமைத்த பருப்பையும் வெண்ணெய்யையும் விழுங்கிவிட்டு, குடத்தில் நிறைந்த
தயிரைச் சாய்த்துக் குடித்தும், பொய்யையும் மாயச் செயல்களையும் புரியும் அசுரர்களால்
ஆவேசிக்கப்பெற்ற இரட்டை மருத மரங்களை விழுந்து முறியும்படி, இவ்வளவு சேஷ்டைகளைச் செய்த
நீ இப்போது ஒன்றும் செய்யாதவன் போல வந்து நின்றாய் என்று பெரியாழ்வார் வியந்து தன்
பிள்ளைத் தமிழில் பாடுகிறார்.
குழந்தைகளுக்குத் தாய் நன்றாக மசித்துத்தான் சோறு ஊட்டுவார். அதேபோல பெரியாழ்வாரும்
நன்றாக மசித்து கண்ணனுக்குக் கும்மாயத்தை ஊட்டுகிறார்.
கவிஞர் பெரியசாமி தூரனின் குழந்தைகளுக்கான பாடல்கள் ‘மழலை அமுதம் என்று 1981ல் வெளிவந்துள்ளது
(கஸ்தூர்பா காந்தி கன்யா குருகுலம் வெளியீடு). அதில் ‘கும்மாயம்
என்ற சிறுவர் பாடல்
இப்படி வருகிறது.
கும்மா கும்மா கும்மாயம்
கொஞ்சிக் கொடுப்பாள் கும்மாயம்
அம்மா தெய்வம் கும்பிடு
அப்பா தெய்வம் கும்பிடு
அவரே தெய்வம் கும்பிடு
அன்பாய் என்றும் நடந்திடு
கும்மா கும்மா கும்மாயம்
கொஞ்சிக் கொடுப்பாள் கும்மாயம்
(குறிப்பு: கும்மாயம் என்பதற்குப் பாயசம் என்பது பொருள்)
பெரியாழ்வார் பாசுரத்தைப் படித்த பின் இதை எழுதியிருப்பாரோ என்று கூடத் தோன்றுகிறது.
‘முதற்றாய்மொழி அல்லது தமிழாக்க விளக்கம் என்ற நூலில்,
“கும் – குமை. குமைதல் = புழுங்குதல். கும் – கும்மாயம் = குழைய என்று விளக்கம்
தந்துள்ளார்கள்.
கல்வெட்டில் கும்மாயம் பற்றி ஏதாவது இருக்கிறதா என்று தேடும்போது
அம்பாசமுத்திரத்திலுள்ள பழமையான கோயிலான ‘எரிச்சாவுடையார் கோயிலில் வரகுன மஹாராஜா
ஆட்சிக் காலத்தில் ஒரு கல்வெட்டில் ‘கும்மாயம்
பற்றிய ஒரு குறிப்பு இருக்கிறது.
(தற்போது இந்தக் கல்வெட்டு சென்னை அருங்காட்சியகத்தில் இருக்கிறது) [AR No. 105 of
1905] அதில் வரிசையாக இப்படி வருகிறது.
 



“…கும்மாயத்துக்கு பயற்றுப் பருப்பு நிவேதிக்க பசுவின்னனறு நெய் ஒரு ஆழாக்கு,
பசுவின் தயிர் ஒர் உரி, கருவாழைப்பழம் நான்கு, சர்க்கரை ஒரு பலம்…
என்று வருகிறது
Epigraphia Indica தொகுதி 21ல் கும்மாயம் பற்றிய ஒரு குறிப்பில் இப்படி வருகிறது.
“கும்மாயம் செய்வதற்குப் பாசிப் பருப்பு முக்கியப் பொருளாகத் தெரிகிறது. ஆனால்
தற்போது அது வழக்கத்தில் இல்லை. தற்போது கும்மாயம் சுண்ணாம்பு, மண் கலவையைக் குறிக்கிறது.
உரையாசிரியர் நச்சினார்க்கினியர் பெரும்பாணாற்றுப்படையில் ‘அவரை வான் புழுக்கு
என்பது கும்மாயத்தைக்
குறிக்கலாம் என்கிறார்கள். கும்மாயம் என்பது நன்கு வேக வைத்த பச்சைப்பயிறு கூடவே கொஞ்சம்
வெல்லம் என்று தெரிகிறது.
‘பண்டைத் தமிழ் நாகரிகமும் பண்பாடும் என்ற புத்தகத்தில் “தமிழர் விருந்துள் தலைசிறந்தது திருமண
விருந்து. அதிற் பதினெண் வகைக் கறியும், கன்னலும் (பாயசம்) படைக்கப்பெறும். பதினெண்
வகைக் கறிகள்: அவியல் (உவியல்), கடையல், கும்மாயம், கூட்டு (வெந்தாணம்), துவட்டல்,
புரட்டல், பொரியல், வறுவல், புளிக்கறி, பச்சடி (ஆணம்), அப்பளம், துவையல், ஊறுகாய்,
வற்றல், உழுந்து வடை, காரவடை, தேங்குழல், முக்கனிகளுள் ஒன்று என்பன
என்று பட்டியலில் கும்மாயம் வருவதை வாசகர்கள் கவனிக்கலாம்.
பெரியாழ்வார் திருமொழி பாசுரம் ஒன்றில் கண்ணனுக்கு வரிசையாக சில சிற்றுண்டி
செய்துவித்து கண்ணனைச் சாப்பிட வரும்படி அழைக்கிறார்.
அப்பம் கலந்த சிற்றுண்டி
அக்காரம் பாலிற் கலந்து
சொப்பட நான் சுட்டு வைத்தேன்
தின்னல் உறுதியேல் நம்பி
சின்ன குழந்தைகள் சாப்பிட அடம் பிடிக்கும்போது அவர்களுக்குப் பிடித்தவற்றையும்
சேர்த்துத் தருவோம் (உதாரணம்: சிப்ஸ்!) அதே போல கண்ணனுக்கு பெரியாழ்வார் அப்பம் ‘கலந்த
சிற்றுண்டி தருகிறார்.
அதே போல் குழந்தைகள் வெறும் பாலைக் குடிக்க மாட்டார்கள். அதில் ஏதாவது கலக்க
வேண்டும் (உதாரணம் – பூஸ்ட்). பெரியாழ்வார் அக்காரம் கலந்த பாலைக் கொடுக்கிறார். அக்காரம்
என்றால் வெல்லம் என்று பொருள்.
இன்னொரு பாசுரத்தில் பெரியாழ்வார்:
“செந்நெல் அரிசி சிறுபருப்புச்
செய்த அக்காரம் நறு நெய் பாலால்
என்று அக்கார அடிசல் செய்யத் தேவையானவற்றை இப்படிப் பட்டியலிடுகிறார்.
செம் நெல் அரிசி
சிறு பயற்ற பருப்பு
கரும்பை காய்ச்சித்திரட்டின கரும்புக்கடியும் (வெல்லம்)
மணமிக்க நெய்யும்
பாலால் சமைத்தேன்
பெரியாழ்வார் சொன்ன அக்கார அடிசல் குறிப்பை, ஆண்டாள் அருளிய நாச்சியார் திருமொழியில்:
நாறு நறும் பொழில் மாலிருஞ்சோலை நம்பிக்கு* நான்
நூறு தடாவில் வெண்ணெய் வாய் நேர்ந்து பராவி வைத்தேன்*
நூறு தடா நிறைந்த “அக்கார அடிசில்
சொன்னேன்*
ஏறு திருவுடையான் இன்று வந்து இவை கொள்ளுங் கொலோ?
அதை அழகருக்குச் சம்பர்பிக்கப் பிரியப்படுகிறாள். அவளின் விருப்பத்தை ஸ்ரீராமானுஜர்
பூர்த்தி செய்து வைத்தார் என்ற வரலாறு தெரிந்ததே. அக்கார அடிசல் பற்றி ஸ்ரீரங்கத்தில்
கல்வெட்டு இருக்கிறது.
ஸ்ரீரங்கம் கோயிலில் ராஜமஹேந்திரன் திருச்சுற்று கிழக்கு மற்றும் வடக்குப் பகுதி
சுவரில் அமைந்துள்ள கல்வெட்டில் நயினாராசார்யரின் சிஷ்யரான பிள்ளைலோகம் ஜீயரின் சிஷ்யரான
ஜீயர் ராமானுஜ தாஸன் என்பவரால் ஏற்படுத்தி வைக்கப்பட்ட சாஸனத்தில் (23-4-1618)
‘ஸ்ரீரங்க ராஜ சரணம்புஜ ராஜஹம்ஸராய் ஸ்ரீமத் பராங்குஸ பதாம்புஜ ப்ருங்க ராஜராய் ‘பல்கலையோர் தாமென்ன
வந்து அனைத்துலகும் வாழப் பிறந்து தென்னரங்கர் செல்வம் முற்றும் திருத்திவித்து பொன்னரங்கமென்னில்
மயலே பெருகும்
ஸ்வாமி எம்பெருனாருடைய சித்திரை மாஸம் திருவாதிரை திருவத்யயநம் சாத்துமுறை
முதல் நாள் ஆறாந்திருவத்யயநம் பொலிக பொலிக திருவாய்மொழி சிறப்பு அமுது செய்தருளும்
படிக்கு பொலியூட்டாக பெருமாள் ஸ்ரீபண்டாரத்தில்… வருஷம் வருஷம் தோறும் ஸ்வாமி நம்பெருமாள்
அமுது செய்தருளும்படி ‘செந்நெல் அரிசி சிறுபருப்புச் செய்த அக்காரம் நறு நெய் பாலால்
என்கிற திவ்யஸ்ரீஸுக்தியின்
படியே.
நம்பெருமாளுக்குக் கண்டருளச் செய்து, பிறகு வைணவ அடியார்களுக்குக் கொடுக்க
ஏற்பாடு செய்யப்ப்பட்டது என்கிறது இந்தக் கல்வெட்டு.
பெரியாழ்வார் சொல்லிய அதே குறிப்பைக் கொண்டு செய்தார்கள் என்று தெரிகிறது.
ஸ்ரீசாரங்கபாணி கோயிலில் இன்னும் கும்மாயம் பிரசாதம் வழங்கப்படுகிறதா என்று
தெரிந்துகொள்ள அவர்களைக் கூப்பிட்டேன். “என்ன சார்? கும்மாயமா? அது என்ன?
என்று என்னைத்
திருப்பி கேட்டார்கள்.
பிறகு அங்கே கோயில் கைங்கரியம் செய்பவர் ஒருவரின் தொலைபேசியை நண்பர் ஒருவர்
மூலம் தெரிந்துகொண்டு, அவர் பட்டாசாரியாரைத் தொடர்புகொண்டு, கீழ்க்கண்ட தகவலை எனக்கு
அளித்தார்.
“திரு அத்யன உற்சவ ஏழாம் திருநாள் ‘கற்பார் ராமபிரானை என்ற பாசுர நாளில்
கும்மாயம் பெருமாளுக்குச் சமர்பிக்கிறார்கள். இது ராமருக்கு ரொம்ப பிடித்த சிற்றுண்டி.
“பெரியாழ்வார் கிருஷ்ணருக்கு என்று சொல்லியிருக்கிறார்
“ஓ அப்படியா, இங்கே ராமருக்குத்தான்!
“எப்படிச் செய்வது?
“ஒரு படி பயத்தம் பருப்புக்கு ஒரு படி தண்ணீர், நல்லா மசியனும். அப்பறம், படி
வெல்லத்தை அதில் சேர்த்து நல்லா கெட்டியாகும் வரை அடுப்பில் நெய்விட்டுக் கிளர வேண்டும்.
பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் பதத்தில் நெய்யில் முந்திரிப் பருப்பு வறுத்து இறக்க
வேண்டும்… முன்பு பாலில் பருப்பைக் குழையவிடுவோம் அதிக நேரம் ஆகும். அதனால் இப்ப
தண்ணீரில்…
என்று ஐந்து நிமிடத்தில் சொல்லிமுடித்தார்.
பன்னிரண்டாம் குலோத்துங்கச் சோழனின் கல்வெட்டில் கருப்பெட்டி கொண்டு செய்த இனிப்புப்
பணியாரம் பற்றிய குறிப்பு இருக்கிறது. பாண்டியர்கள் வாழைப்பழம், சீரகம், சுக்கு, மிளகு
எல்லாம் சேர்த்து இனிப்பு செய்திருக்கிறார்கள். விஜயநகரத்துக் கல்வெட்டு ஒன்று திருப்பதியில்
அவல், பலாப்பழம், கரும்புச்சாறு கொண்டு செய்யப்பட்ட ஒரு பதார்த்தைச் சொல்லுகிறது. அதிரசம்
செய்வது பற்றியும் ஒரு குறிப்பு இருக்கிறது. காஞ்சிபுரம் வரதாராஜப் பெருமாளுக்கு
15 வகையான உணவு வகை பற்றிய குறிப்பில் இவை வருகிறது. பானகம், வடை பருப்பு, கறியமுது,
ததியோனம், தோசை, அதிரசம், ஆப்பம், வடை, சுக்குப்பொடி, புளியோதரை, எள்ளோரை, கடுகோரை,
பொங்கல், இட்லி, அக்கார அடிசல்.
இதுபோலப் பல உணவு பற்றிய குறிப்புகள் நம் கல்வெட்டில் இருக்கின்றன.
கல்வெட்டில் கும்மாயம் செய்யத் தேவையானவை என்ற பட்டியலில் பாசிப்பருப்பு, வெல்லம்,
நெய், தயிர், கருவாழைப்பழம் கொண்டு செய்திருக்கிறார்கள் என்று தெரிகிறது – இன்று இதைப்
போல யாரும் செய்வதில்லை!
பாய்ஸ் படத்தில் செந்தில் என்ன என்ன கோவிலில் என்ன என்ன பிரசாதம் என்று ஒரு
பட்டியல் வைத்திருப்பார். அது போல ‘கல்வெட்டில் உணவு வகைகள்
என்று யாராவது
ஆராய்ச்சி செய்தால் இது நல்ல தலைப்பாக இருக்கும் என்று தோன்றுகிறது – food for
thought!

Posted on Leave a comment

ஓலைப் பத்திரக் கதைகள் | சுஜாதா தேசிகன்


சமீபத்தில் உ.வே.சாவின் கட்டுரைத் தொகுப்பு ஒன்றைப் படித்தேன்.
பெரும்பாலும் செவிவழிக் கட்டுரைகள், தனி மனித வாழ்வுச் சம்பவங்களின் தொகுப்பாக,
18-19ம் நூற்றாண்டு வாழ் தமிழ் மக்களின் வாழ்வின் ஒரு பகுதியை ஆவணப்படுத்துகிறது என்று
சொல்லலாம்.
மருது பாண்டியர்கள் வீரம் மிக்கவர்கள். கூடவே, பக்தியும்,
புலவர்களையும் தம் மக்களையும் காப்பாற்றும் குணமும் படைத்தவர்கள். அதில் மருது பாண்டியரைப்
பற்றி கர்ண பரம்பரையாகச் சொல்லப்பட்ட கதை ஒன்றைப் படித்தேன்.

முள்ளால் எழுதிய ஓலை!

மருது பாண்டியர் தம் இறுதிக் காலத்தில் தங்களைவிட வலியவரான
சிலரது பகைக்கு இலக்கானார். பல தந்திரங்கள் செய்து பகைவர்களின் கைகளில் அகப்படமால்
தப்பித்தார். ஒருசமயம் திருக்கோட்டியூர் பெருமாள் கோயிலுக்கு எதிரிலுள்ள மண்டபமொன்றில்
தங்கி இருந்தார். வலக்கையில் ஒரு கொப்புளம் உண்டாகி அவரை வருத்தியது. பகைவர்கள் ஊர்
எல்லைக்குள் வந்துவிட்டார்கள் என்ற செய்தியை அந்தரங்க வேலையாள் ஒருவர் வந்து சொன்னபோது
வீரத்தால் அவருடைய ரத்தம் கொதித்தது. ஓர் ஆடையை உடனே கிழித்து அவர் கைக் கொப்புளத்தை
இறுகக் கட்டிக்கொண்டு குதிரையில் புறப்பட்டார்.

இதை அறிந்த விரோதிகள் அவரைச் சூழ்ந்துக்கொண்டு தாக்க ஆரம்பித்தனர்.
மருது பாண்டியர் அவர்களைத் தாக்கி அவர்களிடம் அகப்படாமல் தப்பித்து ஒரு கிராமத்துக்கு
வந்தார். அவ்வூர் அக்கிரகாரத்தை அடைந்தார். இரவு முழுவதும் உணவு இல்லாமலும், பகைவர்களிடம்
போராடியதாலும் அவருக்குப் பசியும் தாகமும் மிகுதியாக இருந்தன.
அங்கே ஒரு கூரைவீட்டின் வெளியே சில குழந்தைகள் நிற்க ஒரு
கிழவி கோலம் போட்டுக்கொண்டிருந்தாள். பாண்டியரின் குதிரை அவர்கள் வீட்டின் முன் வந்து
நின்றது.

கிழவி நிமிர்ந்து பார்த்து, “யாரப்பா ! உனக்கு என்ன வேண்டும்?”
என்றாள்
“அம்மா பசியும் தாகமும் என்னை மிகவும் வாட்டுகிறது. ஏதாவது
இருந்தால் தரவேண்டும்” என்றார் பாண்டியர்.
“தண்ணீரில் போட்ட பழைய சோறுதான் இருக்கிறது. வேண்டுமானால்
தருகிறேன் அப்பா” என்று கிழவி அன்பாகச் சொன்னாள்.
“ஏதாயிருந்தாலும் எனக்கு இப்போது அமிர்தமாகும். பிறகு மற்றொரு
விஷயம், நான் இரவு முழுவதும் பிரயாணம் செய்து தூக்கம் இல்லை. அதனால் ஒதுக்குபுறமாகத்
தூங்க ஒரு இடம் வேண்டும்” என்றார்.
“இது என்ன பெரிய விஷயம். வீட்டுப் பின்புறம் ஒரு கொட்டகை
இருக்கிறது, அங்கே தூங்கலாம். குதிரைக்கும் தீனி தருகிறேன்” என்று அன்போடு பழைய சோறைப்
பரிமாறினார். ராஜபோஜனத்தைக் காட்டிலும் அது சிறந்ததாக இருந்தது. பிறகு கிழவி கொடுத்த
ஓலைப்பாயொன்றில் படுத்து உறங்கினார்.

விழித்து எழுந்தபோது சூரியன் உச்சியில் இருந்தான். மருது
பாண்டியருக்கு உண்ட உணவும் தூக்கமும் ஒரு புதுத் தெம்பைக் கொடுத்தன. அவர் மனதில் நன்றி
உணர்வு பொங்கி வழிந்தது. அந்தக் கிழவிக்கு ஏதாவது கைமாறு செய்யவேண்டும் என்று துடித்தார்.
“அம்மா!” என்று கிழவியை அழைத்தார். கிழவி வந்தாள்.
“இந்தக் குழந்தைகள் யார்? உங்களுக்குப் பிள்ளைகள் இருக்கிறார்களா?”
“அயலூருக்கு ஒரு விசேஷத்துக்காகப் போயிருக்கிறார்கள். குழந்தைகள்
என் பேரக் குழந்தைகள்” என்றாள்.
“சரி, உங்கள் வீட்டில் ஏடு எழுத்தாணி இருந்தால் கொண்டு வாருங்கள்.”
“இங்கே ஏடேது எழுத்தாணியேது? அவர்கள் எங்கே வைத்திருக்கிறார்கள்
என்று தெரியாதப்பா” என்றாள்.

உடனே குதிரைக்காரனைக் கூப்பிட்டு, வீட்டுக் கூரையிலிருந்து
ஒரு பனையோலையையும் வேலியிலிருந்து ஒரு முள்ளையும் கொண்டுவரச் சொன்னார். கையில் இவை
இரண்டும் கிடைத்த உடன், பாண்டியர் ஏதோ எழுதலானார். கிழவி அதை வியப்புடன் பார்த்துக்கொண்டிருந்தார்.
முள்ளால் எழுதிய அந்த சாஸனத்தைக் கிழவியின் கையில் கொடுத்து,
“அம்மா, சிவகங்கை சமஸ்தான அதிகாரிகளிடம் இதை நீங்கள் கொடுத்தால் உங்களுக்கு அனுகூலம்
உண்டாகும்” என்று சொல்லிவிட்டு, அவர் குதிரை மேலேறிக் குதிரைக்காரனுடன் புறப்பட்டார்.

சில நாள் கழித்து கிழவியின் பிள்ளைகள் ஊரிலிருந்து வந்தார்கள்.
அந்த ஓலையை அதிகாரிகளிடம் காட்டுவதற்கு முன் சம்ஸ்தானத்து விரோதிகள் மூலம் அவரை எதிரிகள்
கைப்பற்றிக் கொண்டதாக அறிந்து வருந்தினார்கள்.

பாண்டியரைப் பகைவர்கள் பிடித்துச் சிறையில் வைத்தனர். சிலவருடங்கள்
கழித்து அவருடைய கடைசிக் காலத்தில் “உம்முடைய விருப்பம் யாது?” என்று பகைவர்கள் கேட்க,
அதற்கு “நான் சிலருக்கு சுரோத்திரியமாக யார் யாருக்கு எந்த எந்தப் பொருளை வழங்கினேனோ
அவையெல்லாம் அவரவர்களுக்குக் கொடுக்கப்படவேண்டும். இது என் பிரார்த்தனை. வேறு எதுவும்
இல்லை” என்றார். அவருடைய இறுதி விருப்பத்தைப் பகைவர்கள் அங்கீகரித்து நிறைவேற்றினார்கள்.

மருது பாண்டியர் வழங்கிய பொருள்கள் உரியவர்களுக்குக் கொடுக்கப்படுகிறது
என்ற செய்தியை அறிந்த கிழவி, தன்னிடமுள்ள முள்ளால் எழுதிய ஓலையைக் காட்டினால் ஏதாவது
கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அதை அனுப்பிவைத்தாள்.
என்ன நடந்தது?  

சீட்டு பெற்ற சீமாட்டி

ஸ்ரீநம்பிள்ளை ( ஸ்ரீராமானுஜருக்கு பிறகு வந்த ஸ்ரீவைஷ்ணவ
ஆசாரியர்) ஸ்ரீரங்கத்தில் காலக்ஷேபங்கள் செய்துகொண்டு இருந்தபோது கோயிலுக்கு வரும்
கூட்டத்தைவிட இவருடைய காலக்ஷேபங்களுக்கு அதிகக் கூட்டம் வரத் தொடங்கியது. “நம்பிள்ளை
கோஷ்டியோ அல்லது நம்பெருமாள் கோஷ்டியோ” என்று வியந்தனர்.

அவர் காலக்ஷேபங்கள் அவருடைய திருமாளிகையில் (இல்லத்தில்)
நடைபெற்றன. கூட்டம் அதிகமானதால் இடப்பற்றாக்குறை ஏற்பட்டது. நம்பிள்ளையின் அடுத்த இல்லத்தையும்
ஒன்றாகச் சேர்த்தால், பலபேர் வந்து காலஷேபம் கேட்க வசதியாக இருக்கும் என்று நினைத்தார்கள்.
பக்கத்து அகத்தில் ஓர் ஸ்ரீவைஷ்ணவக் கிழவி வசித்து வந்தாள்.

நம்பிள்ளையின் சிஷ்யர் ஒருவர் அந்த அம்மையாரிடம் சென்று “நம்
ஆசார்யன் திருமாளிகை இடம்பற்றாமல் சிறியதாக இருக்கிறது. உமது அகத்தை ஆசார்யனுக்கு சமர்பித்துவிடுமே”
என்றார்.

அதற்கு அந்த அம்மையாரோ, “கோயிலிலே (ஸ்ரீரங்கம்) சாண் இடம்
யாருக்கு கிடைக்கும்? நான் பகவான் திருவடியை அடையும்வரை இவ்விடத்தை ஒருவருக்கும் கொடுக்க
முடியாது” என்று சொல்லிவிட்டார்.
இந்த விஷயத்தை சிஷ்யர் நம்பிள்ளையிடம் சொன்னார்.
நம்பிள்ளை அந்த அம்மையாரை வேறு ஒரு சமயம் பார்த்தபோது “காலக்ஷேபம்
கேட்க வருபவர்கள் கஷ்டப்படுகிறார்கள். உமது இடத்தைத் தரவேண்டும்” என்று மீண்டும் விண்ணப்பம்
செய்தார்.

“அவ்விதமே செய்கிறேன். ஆனால் தேவரீர் பரமபதத்தில் எனக்கு
ஓர் இடம் தந்தருள வேண்டும்” என்று பதில் கோரிக்கை வைத்தார் அந்த அம்மையார்.

“நான் எப்படிக் கொடுக்க முடியும்? அதை வைகுண்ட நாதனன்றோ தந்தருள
வேண்டும்” என்றார்.

“தேவரீர் பெருமாளிடம் சிபாரிசு செய்து விண்ணப்பம் செய்யலாமே”
என்றார்.

“சரி செய்கிறேன்” என்றார் நம்பிள்ளை ஆச்சரியத்துடன்.

“ஸ்வாமி, அடியேன் ஒன்றும் தெரியாத சாது, பெண்பிள்ளை வேறு.
அதனால் சும்மா தருகிறோம் என்றால் போதாது. சாஸனமாக எழுதித் தந்திடும்” என்றாள்.

நம்பிள்ளை மேலும் ஆச்சரியப்பட்டு ஒரு ஓலையை எடுத்து,
“அகில ஜகத் ஸ்வாமியும்
அஸ்மத் ஸ்வாமியுமான ஸ்ரீவைகுண்டநாதன் இவ்விமையாருக்கு பரமபதத்தில் ஓர் இடத்தைத் தந்தருள
வேண்டும் இப்படிக்கு,
திருக்கலிகன்றி தாஸன்,

தேதி, மாதம், வருடம்”

என்று எழுதிக் கையெழுத்திட்டு கொடுத்தார்.

என்ன நடந்தது?

முடிவுகள்:

1. கிழவி அனுப்பிய ஓலையில் அவள் வசித்த அந்த கிராமத்தையே
சுரோத்திரியமாக (இனாமாக வழங்கப்பட்ட நிலம்) பெற்றாள். வீட்டின் கூரையின் மீது இருந்த
பனையோலையும் வேலி முள்ளையும் கொண்டு மருது பாண்டியர் எழுதிய அந்தக் காட்சி அவள் கண்
முன்னே வந்து சென்றது. பழையது உண்டு, முள்ளால் எழுதிய ஓலைக்கு அவ்வளவு மதிப்பிருந்ததைக்
கண்டு வியந்தாள். இன்றும் இந்தக் கிராமம் ‘பழஞ்சோற்றுக் கருநாதனேந்தல்’ என்று வழங்கப்படுகிறது
என்பர்.

2. நம்பிள்ளையிடம் பனை ஓலை சீட்டைப் பெற்று சிரஸில் வைத்துக்கொண்டு
சந்தோஷமாகத் தம் இருப்பிடத்தை உடனே நம்பிள்ளைக்குக் கொடுத்தார். சீட்டைப் பெற்ற அவ்வம்மையார்
மூன்றாம் நாள் திருநாடு அடைந்தார்.

பயன்பட்ட நூல்கள்:

* முள்ளால் எழுதிய ஓலை – உ.வே.சா கட்டுரை தொகுப்பு

* ஸ்ரீவைஷ்ணவ குருபரம்பரை 

Posted on Leave a comment

செண்டலங்காரர் தெட்டபழம் | சுஜாதா தேசிகன்

தமிழில் சுமார் நூறு வார்த்தைகளை மட்டுமே நாம் அன்றாடம் பேசவும்
எழுதவும் உபயோகிக்கிறோம். ஆழ்வார்கள் உபயோகித்த வார்த்தைகள் பல ஆயிரம் இருக்கும். நம்
சொல்லகராதி (vocabulary) மிகக் குறைவு, ஆதலால் நமக்கு எளிய உரைகள் தேவைப்படுகின்றன.
கீழே உள்ள பெரியாழ்வார் பாசுரத்தில் எவ்வளவு வார்த்தை உங்களுக்கு தெரியும் என்று பாருங்கள்.

பருப்பதத்துக் கயல்
பொறித்த
பாண்டியர் குலபதி போல்
திருப் பொலிந்த சேவடி என்
சென்னியின் மேல் பொறித்தாய்

எளிய விளக்கம்: மேரு மலையில் தனது கயல் (மீன்) சின்னத்தை
வெற்றிக்கு அடையாளமாகப் பொறித்த பாண்டியர் குலத்துப் பேரரசனைப் போன்று அழகு பொலிந்த
திருவடிகளை என் தலை மீது அடையாளமாக (பெருமாள்) பொறித்தருளினான் என்று ஆழ்வார் கூறுகிறார்.
இன்னும் கொஞ்சம் ஆழமாக இந்தப் பாசுரத்தை அனுபவிக்க மேலும் சில விஷயங்களைத் தெரிந்துகொள்ளவேண்டும்.

பெரியாழ்வார் காலத்தில் மூன்று பாண்டியர்கள் அரசு செய்தார்கள்.
அவர்கள் முறையே கோச்சடையான், மாறவர்மன், பராந்தகன். பராந்தகன் பரம வைஷ்ணவன். ஆனால்
அவன் தந்தை மாறவர்மன் அப்படி அல்ல. பெரியாழ்வார் காலத்தில் சமயவாதம் நிகழ்ந்து மாறவர்மன்
ஆழ்வாருக்கு அடியவன் ஆனான். செப்பேட்டில் ‘பரமவைஷ்ணவதானாகி’ என்று வருவதே இதற்குச்
சான்று.

இந்தப் பாசுரத்தில் பாண்டியனைச் சிறப்பித்துப் பேசி அவனுடைய
இலச்சினையை ஏன் பெரியாழ்வார் பெருமாளின் திருவடிக்கு ஒப்பிடுகிறார் என்று கொஞ்சம் ஆராயலாம்.

பாண்டியரின் இலச்சினை இரண்டு மீன் நடுவில் ஒரு சாட்டை போல
இருப்பதைப் பார்க்கலாம். சாட்டை போல இருப்பது பாண்டியரின் செங்கோல். இதைப் பார்த்தவுடன்
ஆழ்வாருக்குப் பெருமாளின் திருவடியும், தன் நெற்றியில் இருக்கும் திருமண்னும் (நாமம்)
நினைவுக்கு வந்திருக்கும் என்று தோன்றுகிறது.

மேலே சொன்ன இந்த உதாரணம் எதற்கென்றால், செய்யுளில் சொற்கள்
சாதாரணமாக நமக்குத் தெரியும். ஆனால் சரியான பொருள் தெரிந்தால்தான் அதன் அலாதியான சுவை
புரியும்.
பாண்டியனின் சின்னத்தில் நடுவில் செண்டு போல இருப்பதைப் பார்த்தால்
உ.வே.சாமிநாதையர் எழுதிய ‘செண்டலங்காரர்’ என்ற கட்டுரை நினைவுக்கு வருகிறது. அதன் சுருக்கத்தை
இங்கே தருகிறேன்.

செண்டலங்காரர்

வில்லிபுத்தூரார் இயற்றிய பாரதம் தமிழிலே சுவையானது. தமிழர்களுடைய
உள்ளத்தை அது கவர்ந்தது. உ.வே.சாமிநாதையர் தன் இளமையிலே அந்நூலைப் படித்து அதிலுள்ள
சந்த அமைப்பைக் கண்டு வியந்திருக்கிறார்.
அதில், சூதாடித் தோற்ற வரலாற்றில் சூதாட்டம் முடிந்தபிறகு
துரியோதனன் அரசவைக்குத் திரௌபதியை அழைத்து வரத் தன் தம்பி துச்சாதனனுக்குக் கட்டளையிடுகிறான்.
காந்தாரியோடு இருந்த திரௌபதியை அவன் வலியப் பிடித்து இழுத்து வருகின்றான். அதை விவரிக்கும்
செய்யுள் இது.

“தண்டார் விடலை தாயுரைப்பத்
 தாய்முன் னணுகித் தாமாரைக்கைச்
செண்டால் அவள்பைங் குழல்பற்றித்
 தீண்டா னாகிச் செல்கின்றான்
வண்டார் குழலு முடன்குலைய
 மானங் குலைய மனங்குலையக்
கொண்டா ரிருப்ப ரென்றுநெறிக்
 கொண்டா ளந்தோ கொடியாளே”

“தன்னுடைய தாயாகிய காந்தாரி, ‘நீ போய் வா’ என்று கூற, துச்சாதனன்
அன்னை போன்ற திரௌபதியின் முன் சென்று தன் கையிலுள்ள செண்டால் அவளது கூந்தலைப் பற்றிச்
செல்லலானான். கொடிபோன்ற திரௌபதி, அந்தோ!, தன் குழல் குலைய மனங்குலையத் தான் செல்லுமிடத்தே
தன் கணவர் இருப்பர் என்ற தைரியத்தோடு சென்றாள்” என்பது இச்செய்யுளின் பொருள்.

உ.வே.சாவிற்கு ‘கைச் செண்டால் அவள்பைங் குழல்பற்றி’ என்று
வரும் வரியில் ஐயம் வந்தது. செண்டு என்பதற்குப் பூச்செண்டு என்று பொருள் கூறுவர். துச்சாதனன்
கையில் பூச்செண்டு எங்கிருந்து வந்தது?
திரௌபதி கூந்தலில் அணிந்திருந்த மாலையைப் பிடித்து இழுத்தான்
என்று வைத்துக்கொண்டால், திரௌபதி அக்காலத்தில் தீண்டாத நிலையில் இருந்தாள், அதனால்
அவள் கூந்தலில் மலர் அணிந்திருக்க சாத்தியமில்லை. செண்டென்பதற்குப் பந்தென்று ஒருபொருள்
உண்டு. பந்துக்கு இங்கே என்ன சம்பந்தம் என்று பல ஐயங்கள் ஐயருக்கு இருந்திருக்கின்றன.

பல வருடங்கள் கழித்துத் தமிழ் யாத்திரையில் சீர்காழி-மாயூரம்
பக்கம் ஆறுபாதி என்னும் ஊருக்கருகில் சென்று கொண்டிருந்தபோது அங்கே ஒரு பெருமாள் கோயில்
இருக்க, அங்கே சென்றார். அக்கோயிலின் வாசலில் தர்மகர்த்தாவும் வேறு சிலரும் யாரோ பெரிய
உத்தியோகஸ்தர் ஒருவருடைய வரவை எதிர்பார்த்துக்கொண்டு இருந்தபோது உ.வே.சா. அவர்களைப்
பார்த்து, இவர்தான் அந்தப் பெரிய உத்தியோகஸ்தர் என்று எண்ணிவிட்டார். “வாருங்கள்,
வாருங்கள்” என்று உபசரித்து வரவேற்றுப் பெருமாள் தரிசனம் செய்து வைத்தார்.

தரிசனம் செய்தபோது பெருமாள் திருக்கரத்தில் பிரம்பைப்போல
ஒன்று அவர் கண்ணில் பட்டது. அதன் தலைப்பில் இரண்டு வளைவுகள் இருந்தன. தர்மகர்த்தாவை
நோக்கி, “இது புதிதா யிருக்கிறதே, என்ன?” என்றார். “அதுதான் செண்டு” என்று தர்மகர்த்தா
கூற, “செண்டா!” என்று சொல்லி, “எங்கே, அதை நன்றாகக் காட்டுங்கள்” என்று உ.வே.சா கேட்க,
கோயில் அர்ச்சகர் கற்பூர தீபத்தால் அந்தச் செண்டை நன்றாகப் பார்க்கும்படி காட்டினார்.
உ.வே.சாவின் மனக்கண்முன் திரௌபதியின் உருவம் வந்து நின்றது. துச்சாதனன், தலைப்பு வளைந்த
பிரம்புபோன்ற ஒரு கருவியால் அவள் கூந்தலைப் பற்றியிழுக்கும் காட்சி அவர் கண்முன்னே
வந்தது.
அர்ச்சகர் காட்டிய கற்பூர தீபம் பெருமாள் திருக்கரத்திலிருந்த
ஆயுதத்தைக் காட்டி, பலகாலமாக அவர் மனத்திலிருந்த சந்தேக இருளை அகற்றியது.
அர்ச்சகர் மேலும் “இந்தப் பெருமாளும் மன்னார்குடியில் எழுந்தருளியிருக்கும்
பெருமாளும் ஒரே அச்சு. அங்கும் பெருமாளின் திருக்கையில் செண்டு உண்டு. ‘செண்டலங்காரப்
பெருமாள்’ என்றும் அவரது திருநாமம்” என்று கூறினார்.

மன்னார்குடிப் பெருமாளுக்குச் செண்டலங்காரப் பெருமாளென்னும்
திருநாமம் உண்டென்று தர்மகர்த்தா கூறியதை இலக்கிய வாயிலாகவும் பிறகு உறுதி செய்துகொண்டார்.
பெருமாள் தரிசனத்தின் பயன் அன்று அவருக்குக் கிடைத்தது.
*
தெட்டபழம்

ஸ்ரீராமானுஜர் காலட்சேபம் (வேதம் மற்றும் ஆழ்வார்ப் பாசுரங்களுக்கு
விளக்க உரை) செய்யும்போது அன்று திருமங்கையாழ்வார் அருளிச் செய்த பாசுரங்களை அனுபவித்துக்கொண்டு
இருந்தார்.

பட்டு அரவு ஏர் அகல் அல்குல், பவளச் செவ்வாய்,
      பணை நெடுந்தோள், பிணை நெடுங்கண், பால்
ஆம் இன்சொல்*
மட்டு அவிழும் குழலிக்கா, வானோர் காவின்
      மரம் கொணர்ந்தான் அடி அணைவீர்!* அணில்கள்
தாவ
நெட்டு இலைய கருங் கமுகின் செங் காய் வீழ,
      நீள் பலவின் தாழ் சினையில் நெருங்கு* பீனத்
தெட்ட பழம் சிதைந்து, மதுச் சொரியும் காழிச்
      சீராமவிண்ணகரே சேர்மின் நீரே.

சீர்காழி (காழிச் சீராமவிண்ணகரம்) பெருமாள் பற்றிய பாசுரம்: 

“சத்தியபாமைக்குப் பரிசாக பாரிஜாத மரத்தைக் கொணர்ந்து பெருமான் திருவடியை அடைய விருப்பம்
உள்ளவர்களுக்கு காழிச் சீராம விண்ணகரமே கதி” என்கிறார் ஆழ்வார்.

இந்தப் பாசுரத்தில் ஆழ்வார் ஊரை எப்படிச் சொல்லுகிறார் பாருங்கள்
என்று விவரிக்கத் தொடங்கினார். “பட்டுச் சேலையை விரித்த மாதிரியான நிலப்பரப்பு. அங்கே
பவழம் போலச் சிவந்த வாய், மூங்கில் போன்ற நீண்ட தோள்களையும் அமுதம் போன்ற இனிமையான
வாய்மொழிகளையும்… என்று அடுக்கிக்கொண்டு விவரித்த ஸ்ரீராமானுஜர், அங்கே நீண்ட இலைகளை
உடைய கரிய பாக்கு மரங்களின் செங்காய்கள் அணில்கள் தாவியதால் கட்டுக் குலைந்து கீழே
விழுந்தன” என்றார்.

விவரிக்கும்போது ‘தெட்ட பழம்’ என்ற சொல்லுக்குச் சரியான பொருள்
அவருக்குப் பிடிபடவில்லை. சரியான பொருள் கூற முடியாமல் தவித்தார். அவர் மனதில் ‘தெட்ட
பழம்’ என்னவாக இருக்கும் என்ற ஐயம் உண்டாயிற்று.
பிறகு ஒருசமயம் அவர் திவ்யதேச யாத்திரையில் சீர்காழி தலத்தின்
சோலை வழியாக, திருமங்கை ஆழ்வார் வர்ணித்த இயற்கை அழகை அனுபவித்துக்கொண்டு வந்தபோது
அங்கே ஒரு நாவல் மரம் பழுத்துக் குலுங்கியதைக் கண்டார். நாவல் மரத்தின் கிளையில் அமர்ந்துகொண்டிருந்த
ஒரு பையன் கிளைகளை அசைக்க, கீழே உதிர்ந்த நாவற்பழங்களைச் சிறுவர்கள் பொறுக்கிக்கொண்டு
இருந்தார்கள்.

அப்போது ஒரு சிறுவன் “அண்ணே தெட்ட பழமாகப் பார்த்துப் பறித்துப்போடு”
என்று மரத்தின் மீதமர்ந்த பையனைப் பார்த்து கூற, ஸ்ரீராமானுஜர், “பிள்ளாய் தெட்ட பழம்
என்றால் என்ன?” என்று வினவ, அதற்கு அந்தச் சிறுவன் “பழுத்த பழம்” என்று சொல்ல, ஸ்ரீராமானுஜர்
அந்தச் சிறுவனை வணங்கினார். ஆழ்வார் அங்கு வழங்கும் வட்டார மொழியில் அருளிச் செய்திருப்பதை
உணர்ந்து வியந்தார்.

Posted on Leave a comment

ஸ்ரீ உ.வே.சாமிநாதமுனிகள் | சுஜாதா தேசிகன்

உ.வே.சாமிநாதையர்

சங்க இலக்கியம் காலம் பொ.மு. 500 முதல்
பொ.யு. 200 முடிய இருக்கலாம் என்று சொல்லுகிறார்கள். நாம் அந்த ஆராய்ச்சிக்குள் போகவேண்டாம்.
தமிழ் மற்றும் சங்க இலக்கியம் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவை என்று தெரிந்துகொண்டால்
போதுமானது.
திருமங்கை ஆழ்வார் திருநெடுந்தாண்டகத்தில்
“செந்திறத்த தமிழ் ஓசை வடசொல் ஆகி” என்கிறார். செம்மை மொழியாக விளங்கும் தமிழின் ஓசையாகவும்,
வட மொழிச் சொற்களாகவும் எம்பெருமான் விளங்குகிறான் என்கிறார் ஆழ்வார். வட மொழியையும்
தமிழையும் பல காலமாக ஒன்றாகவே சனாதன தர்மத்தில் கருதியிருக்கிறார்கள். இன்று உ.வே என்று
ஸ்ரீவைஷ்ணவப் பெரியவர்கள் பெயர்களுக்கு முன் போட்டுக்கொள்வது உபய வேதங்கள் தமிழ் மற்றும்
வடமொழியைக் குறிக்கும்.
வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறும்
நல்லுலகம் – தமிழ் எங்கிருந்து எங்கே பேசப்பட்டது என்று தொல்காப்பியம் உரை சொல்லுகிறது.
இனிமையும், நீர்மையும் தமிழ் என்று கூறலாம்.
தமிழை
த் தெய்வ மொழியாக உயர்த்தி உணர்ச்சிப் பெருக்குடன் ஆழ்வார்களும் நாயன்மார்களும்
பாடிய பாசுரங்கள் வாய்மொழியாகப் பரவின. மரபு வழி உரைகளும் வாய்மொழியாகத் தலைமுறை தலைமுறையாகப்
பரவின. பக்தி இலக்கியம் என்பது சங்க நூல்களில் ஒரு வகை என்றே கொள்ளவேண்டும்.
இந்த முன்னுரையின் ஆரம்பத்தில் ‘க’ என்ற
எழுத்தைப் பார்த்திருப்பீர்கள். இது தமிழ் எண் 1ஐக் குறிக்கும். இன்று இதை யாரும் உபயோகிப்பதில்லை.
அதுபோல தமிழில் செய்யப்பட்ட பல அருமையான விஷயங்கள் காலப்போக்கில் மறைந்து போயின.
பொ.யு.
823ல், மின்சாரம், இயந்திரங்கள் இல்லாத காலத்தில் சோழர்கள் ஆட்சி செய்த கடலூர் பக்கம்,
வீர நாராயண ஏரிக்கு அருகில் காட்டுமன்னார் கோயில் என்ற கிராமத்தில் ஸ்ரீமந் நாதமுனிகள்
அவதரித்தார். இவருடைய இயற்பெயர் ஸ்ரீரங்கநாதன். சுருக்கமாக நாதமுனிகள் என்று அழைக்கப்பட்டார்.
இளம் வயதில் யோகம், இசை என்று எல்லாவற்றிலும் தேர்ச்சிபெற்றவராக இருந்தார்.
தன் தகப்பனார்
ஈச்வர பட்டாழ்வாருடன் குடும்பமாக வடநாட்டு யாத்திரைக்குப் புறப்பட்டார். மதுரா, சாளக்கிராமம்,
துவாரகை, அயோத்தி முதலான இடங்களுக்குச் சென்று சேவித்துவிட்டு யமுனைக் கரையில் கோவர்தனபுரம்
என்ற கிராமத்தில் இருக்கும் யமுனைத் துறைவன் என்ற பெருமாளுக்குக் கைங்கரியம் செய்துகொண்டு
இருந்தார். சில வருடங்கள் கழித்து…
பொயு 1855ல் உ.வே சாமிநாதையர் பிறந்தபோது
இந்தியாவில் ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்துகொண்டிருந்தார்கள். தமிழகத்தில் இரயில் வண்டிகள்
ஓடத் தொடங்காத காலம். தஞ்சாவூர் மாவட்டத்தில் பாபநாசம் உத்தானபுரத்துக்கு அருகிலுள்ள
சூரியமூலை எனும் ஊரில் இசையறிஞர் வேங்கடசுப்பையர், சரசுவதி அம்மாள் ஆகியோருக்குப் பிறந்தார்.
இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் சாமிநாதன். செல்லமாக ‘சாமா’ என்று அழைப்பார்கள். தமிழ்
மற்றும் வடமொழியில் நூல்களைப் படித்தார். அன்றைய காலலட்டத்தில் கிராமப் பள்ளிக்கூடங்களில்
தமிழ் எண்களே வழக்கமாக இருந்தன
. இவற்றை உவே.சா இளமையிலேயே கற்றுக் கொண்டார். பாடம் கற்றுக்கொண்ட விதத்தை
உவேசா இப்படிச் சொல்லுகிறார்
“கிருஷ்ண வாத்தியார் கிழவர். அவரிடம் பல பிள்ளைகள் படித்தார்கள்.
அவர் தமிழ் இலக்கியங்களில் நல்ல பழக்கமுடையவர். ஆத்திசூடி, மூதுரை, மணவாள நாராயண சதகம்
முதலிய சதகங்கள், இரத்தினசபாபதி மாலை, நாலடியார், குறள் முதலியவற்றையும் கணக்கையும்
அவரிடம் கற்றேன். நாலடியார் குறளென்னும் நூல்கள் அவ்வளவு இளம்பிராயத்தில் நன்றாகப்
பொருளறிந்து கற்பது சாத்தியமன்று. ஆயினும் அவற்றை மனப்பாடம் செய்யும்படி கிருஷ்ண வாத்தியார்
மாணாக்கர்களை வற்புறுத்துவார். எழுத்தாணியால் ஏடுகளில் எழுதியும் கறடா (மட்டி)க் காகிதத்தில்
கொறுக்காந் தட்டைப் பேனாவால் எழுதியும் திருத்தமாக எழுதிக் கற்றுக்கொண்டோம். கையெழுத்து
நன்றாக இராவிட்டால் குண்டெழுத்தாணியால் கட்டை விரலில் உபாத்தியாயர் அடிப்பார். அவரிடம்
படித்தவர் யாவரும் எழுதுவதில் நல்ல பழக்கத்தைப் பெற்றனர்.
அவரிடம் படித்த நூல்களெல்லாம் எனக்கு மனப்பாடமாயின. வீட்டிலும்
என் தந்தையார் தினந்தோறும் பாடங்களைப் பற்றி விசாரிப்பார். நாளுக்கு ஐந்து செய்யுட்கள்
பாடம் பண்ணி அவரிடம் ஒப்பிக்க வேண்டும். இல்லையெனில் அவரது தண்டனைக்கு உட்பட நேரும்.”
ஏழாம் வயதில் தமிழ் மீது அவருக்கு மோகம்
வந்தது…
ஒருநாள்
காட்டுமன்னார் பெருமாள் ‘வீரநாராயணபுரத்துக்கு வாரும்’ என்று கனவில் சொல்ல, நாதமுனிகளும்
யமுனைத் துறைவனிடம் விடைபெற்றுக்கொண்டு பல திவ்ய தேசங்களைச் சேவித்துவிட்டு மீண்டும்
வீரநாராயணபுரத்துக்குக் குடும்பத்துடன் வந்து சேர்ந்தார்.
அங்கே
இருக்கும் பெருமாளுக்குக் கைங்கரியம் செய்துகொண்டு இருக்கும்போது ஒரு நாள் மேல்நாட்டிலிருந்து
(மேல்கோட்டை) சில ஸ்ரீவைஷ்ணவர்கள் மன்னார் கோயிலுக்கு வந்து பெருமாள் முன்பு நம்மாழ்வார்
பாசுரமான ‘ஆராவமுதே…’ என்கிற திருவாய்மொழியின் பாசுரங்களைச் சேவிக்க (பாட) செந்தமிழில்
தேன் போன்ற அர்த்தங்களை நாதமுனிகள் சுவைக்கத் தொடங்குகிறார். ஆனால் வந்தவர்கள் பத்து
பாசுரங்கள் பாடிய பிறகு ‘ஆயிரத்துள் இப்பத்தும்’ என்று முடிக்க, நாதமுனிகள் ஆழ்வாரின்
தித்திக்கும் தமிழ்ப் பாசுரத்துக்கு அடிமையாகி “ஆயிரத்துள் இப்பத்தும் என்கிறீர்களே
அப்படியானால் இப்பிரபந்தம் முழுவதும் உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்க…
உ.வே.சாமிநாதையர் ஏழாம் வகுப்பில் சடகோபையங்காரிடம்
தமிழ் கற்றார். அவரைப் பற்றி இவ்வாறு கூறுகிறார்…
“எனக்குத் தமிழில் சுவை உண்டாகும் வண்ணம் கற்பித்த முதற்
குரு சடகோபையங்காரே. பொம்மை (பாவை)களைக் காட்டிக் குழந்தைகளைக் கவர்வது போலத் தமிழ்ச்
செய்யுட்களின் நயத்தை எடுத்துக்காட்டி என் உள்ளத்துக்குள் அந்த இளம்பருவத்தில் தமிழ்
விதையை விதைத்தவர் அவரே.”
சிறுது சிறிதாக ஊட்டிய தமிழ் அமுதை, சுவையை
அவர் வாழ்நாள் முழுவதும் தேட வைத்தது. உ.வே.சா கூட ஒரு காலத்தில் எட்டுத்தொகையை ஏட்டுத்தொகை
என்றுதான் படித்துள்ளார் என்று நினைக்கும்போது வியப்பாக இருக்கிறது. ஐம்பெரும்காப்பியங்கள்
என்று தெரியுமே தவிர அக்காப்பியங்கள் என்னென்ன என்று தெரியாது. அக்காலத்தில் கோயில்களிலும்,
மடங்களிலும், சிலரின் வீடுகளிலும் ஓலைச்சுவடிகள் சரியான பராமரிப்பு இல்லாமல் அவை முடங்கிக்
கிடந்தன.
“எங்களுக்கு
இந்த பத்து பாசுரங்கள் மட்டும் தான் தெரியும்.. வழி வழியாக இதை நாங்கள் சொல்லுகிறோம்.”
வருத்தத்துடன்
நாதமுனிகள் “அந்தப் பத்து பாசுரங்களையும் மீண்டும் ஒரு முறை சேவியுங்கள்” என்று விண்ணப்பிக்க
அவர்கள்,
ஆரா-அமுதே!
அடியேன் உடலம் நின்பால் அன்பாயே*
நீராய் அலைந்து, கரைய உருக்குகின்ற நெடுமாலே!*
சீரார் செந்நெல் கவரி வீசும் செழுநீர்த் திருக்குடந்தை*
ஏரார் கோலம் திகழக் கிடந்தாய்! கண்டேன் எம்மானே!
என்று
ஆரம்பித்து
வாரா அருவாய்
வரும் என் மாயா! மாயா மூர்த்தியாய்!*
ஆரா அமுதாய்! அடியேன் ஆவி அகமே தித்திப்பாய்!*
தீரா வினைகள் தீர என்னை ஆண்டாய்! திருக்குடந்தை
ஊராய்!* உனக்கு ஆட்பட்டும் அடியேன் இன்னம் உழல்வேனோ?
*உழலை
என்பின் பேய்ச்சி முலையூடு அவளை உயிர் உண்டான்*
கழல்கள் அவையே சரணாகக் கொண்ட குருகூர்ச் சடகோபன்*
குழலின் மலியச் சொன்ன ஓர் ஆயிரத்துள் இப் பத்தும்
என்று
முடிக்க முதல் பாசுரத்தில் ‘திருகுடந்தை’ என்ற சொல்லும் ‘குருகூர் சடகோபன்’ என்ற சொல்லும்
அவர் நெஞ்சில் பசுமரத்தாணி போலப் பதிந்தன. திருகுடந்தைக்கு என்ற கும்பகோணத்துக்குப்
புறப்பட்டார்.
1887ல் சீவகசிந்தாமணியை ஆராய்ந்தபோது
அதில் பல மேற்கோள்கள் கிடைத்தன. எல்லாம் பல தமிழ் நூல்கள். பத்துப்பாட்டு என்ற ஒரு
நூல் உண்டு என்று அப்போதுதான் உ.வே.சா அவர்களுக்கு
த் தெரிந்தது. அதைப் பற்றி ஆராய வேண்டும்
என்ற ஆவல் உண்டாகியது. கும்பகோணத்திலிருந்து பரம்பரை வித்துவான்களுடைய வீடுகளைத் தேடி
திருநெல்வேலி பயணத்துக்குத் தயாரானார். தந்தையிடம் சொன்னதற்கு “சிரவணத்துக்கு இங்கே
இருக்க வேண்டும்… இப்பொழுது போக வேண்டாம்” என்று தடை போட்டார். சிரவணத்தைக் காட்டிலும்
பத்துப்பாட்டு அவருக்குப் பெரிதாக இருந்தமையால் தந்தையிடம் தக்க சமாதானம் சொல்லி திருநெல்வேலிக்குப்
புறப்பட்டார்.
இந்தக்
காலத்தில் இருப்பது போல, உணவு, தங்கும் இடம், வண்டிகள் என்ற எந்த வசதிகளும் இல்லாத,
ஏன் சாலைகள் கூட இல்லாத, காடும் மேடுகளும் கடந்து கும்பகோணம் வந்த ஸ்ரீமந் நாதமுனிகள்
அங்கே திருகுடந்தை கோயிலுக்குச் சென்று ஆராவமுதனைச் சேவித்து அங்குள்ளவர்களிடம் இந்தப்
பத்துப் பாசுரங்களைப் பாடிக்காட்டி, மீதம் உள்ள 990 பாசுரம் இங்கே யாருக்காவது தெரியுமா
என்று கேட்க, அவர்கள் “எங்களுக்கும் இந்தப் பத்து பாசுரம்தான் தெரியும்” என்றபோது நாதமுனிகள்
‘குருகூர் சடகோபன்’ என்ற வார்த்தையில் உள்ள திருக்குருகூர் நோக்கி நடக்கத் தொடங்கினார்…
பல நாட்கள் நடந்த பின் அவர் திருநெல்வேலியில் உள்ள ஆழ்வார் திருநகரிக்கு வந்து சேர்ந்தார்.
இரவு எட்டு மணிக்கு ஒரு தகர பெட்டியுடன்
உ.வே.சா ரெயில்வே ஸ்டேஷனுக்கு ஒற்றை மாட்டுவண்டியில் வண்டிக்காரனுடன் பேசிக்கொண்டே
சென்றார். போகும் வழியில் வண்டி எதன்மேலோ மோதிக் குடைசாய்ந்து அவர் மீது பெட்டி விழ..
தொடர்ந்து என்ன செய்வது என்று யோசித்துவிட்டு ஸ்டேஷன் நோக்கி நடக்கத் தொடங்கினார்.
நல்லவேளையாக அங்கே புகைவண்டி கிளம்பாமல் நின்றுகொண்டிருக்க அதில் ஏறினார்.
நடுராத்திரி தஞ்சாவூர் வரும்போது ஒரு
காட்டில் வண்டி நிற்க, ரெயில்வே அதிகாரிகள் உ.வே.சா அவர்களைத் தூக்கக் கலக்கத்தில்
எழுப்பி, முன்பிருந்த வண்டியில் தீப்பிடித்துவிட்டது, அதனால் வண்டிகளைக் கழற்றிவிட
வேண்டும்.. வேறு வண்டியில் ஏறிக்கொள்ளச் சொல்ல… மறுநாள் காலை திருநெல்வேலிக்கு வந்து
சேர்ந்தார்.
ஆழ்வார்
திருநகரி வந்த ஸ்ரீமந் நாதமுனிகள் கோயிலுக்குச் சென்று பொலிந்த நின்றபிறானையும் அங்கே
இருக்கும் பெரியோர்களைச் சேவித்து திருவாய்மொழி ஆயிரம் பாசுரங்கள் பற்றி விசாரிக்க,
“கேள்விப்பட்டிருக்கிறோம்…
ஆனால் எங்களுக்குத் தெரியாது…” என்றார்கள்.
“அடடா…
அடியேன் இதைத் தேடிக்கொண்டுதான் இங்கே வந்தேன்..”
“இங்கே
நம்மாழ்வார் (சடகோபன்) சிஷ்யர் மதுரகவியாரின் வம்சத்தவர் ஒருவர் இருக்கிறார்.. நீங்கள்
எதற்கும் அவரைக் கேட்டுப்பாருங்கள்.”
“யார்
அவர்… எங்கே இருக்கிறார்..?”
“அவர்
திருநாமம் பராங்குசதாஸர்… “ என்று அவர் இருக்கும் இடத்தைக் காண்பிக்க, நாதமுனிகள்
பராங்குசதாஸரைத் தேடிச் சென்றார்.
திருநெல்வேலியில் கனகசபை முதலியார் ஸ்ப்ஜட்ஜாக
இருந்தார். அவர் உ.வே.சா அவர்களுக்கு
ப் பழக்கமானவர். ஏடு தேடி வரும் விஷயத்தை அவருக்குக் கடிதம் மூலம் முன்பே அனுப்பியிருந்தார்
உவேசா. அவர் வீட்டை அடைந்தபோது “உங்களுக்கு இப்போதுதான் ஒரு கடிதம் எழுதி தபாலுக்கு
அனுப்ப இருந்தேன்… உங்களிடம் சொல்ல வேண்டியவற்றை இந்தக் கடித்ததில் எழுதியிருக்கிறேன்”
என்று கடித்ததைக் கொடுக்க, அதில்
“நான் தங்களுக்கு வாக்களித்தபடி ஏட்டுச்
சுவடிகள் விஷயத்தில் உதவி செய்ய இயலாதவனாக இருக்கின்றேன். இளமை முதற்கொண்டு என்னுடைய
நண்பராயுள்ள ஸ்ரீ.சி.வை.தாமோதரம் பிள்ளையவர்கள் தமக்குச் சில ஏட்டுச் சுவடிகள் வேண்டுமென்று
எழுதியிருந்தார்கள். நான் தேடித் தருவதாக அவர்களுக்கு வாக்களித்திருக்கிறேன். தங்களுக்கு
வேண்டியனவாகச் சொன்ன புஸ்தகத்தையே அவர்களும் கேட்டிருக்கிறார்கள். அதனால் தங்களுக்கு
உதவி செய்ய இயலாதென்பதைத் தெரிவித்துக் கொள்கின்றேன். இப்பக்கங்களில் வந்து தேடிச்
சிரமப்படவேண்டாம்.”
இதைப் படித்த உ.வே.சா முதலியாரை நோக்கி
“மெத்த ஸந்தோஷம். நீங்கள் உதவி செய்வதாகச் சொல்லியிருந்தமையால் உங்களைத் தேடி வந்தேன்…
இந்தப் பக்கங்களில் எனக்குப் பழக்கமுள்ள பிரபுக்களும், வித்துவான்களும் இருக்கின்றார்கள்.
அவர்கள் மிக்க அன்போடு எனக்கு உதவி செய்வார்கள். ஆதலால் நான் போய் வருகிறேன்” என்று
கைலாசபுரத்தில் இருந்த வக்கீல் அன்பர் ஸ்ரீ.ஏ.கிருஷ்ணசாமி ஐயர் வீட்டுக்குச் சென்றார்.
அவர் “நீங்கள் சிறிதும் கவலைப்பட வேண்டாம். என்னுடைய நண்பரும் வக்கீலுமாகிய சுப்பராய
முதலியாரென்பார் ஸ்ரீ வைகுண்டத்தில் இருக்கின்றார். அவருக்கு ஒரு கடிதம் எழுதித் தருகின்றேன்”
என்று அவர் உவேசா அவர்களை ஆழ்வார் திருநகரிக்குச் அழைத்துச் சென்றார். அங்கே…
நாதமுனிகள்
பராங்குசதாஸரை தேடிச் சென்று அவரிடம் திருவாய்மொழி பற்றி விசாரிக்க, “திருவாய்மொழியும்,
மற்ற பிரபந்தங்களும் நீண்ட காலத்துக்கு முன்பே மறைந்துவிட்டன. எங்களுடைய பரமாசாரியாரான
ஸ்ரீமதுரகவிகள் நம்மாழ்வார் குறித்து ‘கண்ணிநுண் சிறுத்தாம்பு’ என்ற பதினோரு பாசுரங்களை
அருளியுள்ளார். அதுதான் எங்களுக்குத் தெரியும்.”
இன்னொரு
விஷயம் என்று பராங்குசதாஸர் மேலும் ஒரு விஷயத்தைச் சொன்னார். அது…
உ.வே.சா லஷ்மண கவிராயரென்று ஒருவருடைய
வீட்டிற்குச் சென்று பார்த்தபோது ஆயிரக்கணக்கான சுவடிகள் இருந்தன. பல பழைய நூல்களும்
இலக்கணங்களும் பிரபந்தங்களும் புராணங்களும் இருந்தன. எல்லாவற்றையும் பிரித்து பிரித்துப்
பார்த்தபோது தேடி வந்த பத்துப்பாட்டு மட்டும் கிடைக்கவில்லை.
லஷ்மண கவிராயர் “எங்கள் வீட்டில் அளவற்ற
ஏடுகள் இருந்தன. எங்கள் முன்னோர்களில் ஒரு தலைமுறையில் மூன்று சகோதரர்கள் இருந்தார்கள்.
அவர்களில் ஒருவர் இறந்துவிட்டார். அவருடைய மனைவியார் தம் புருஷர் இறந்தவுடன் சொந்த
ஊருக்குப் போகும்போது இங்கிருந்து சுவடிகளையெல்லாம் பாகம் பண்ணி மூன்றில் ஒரு பகுதியை
எடுத்துக்கொண்டு போய்விட்டார்கள்” என்றார். “பத்துப்பாட்டும் அந்தச் சுவடிகளோடு போயிருக்க
வேண்டும்” என்றார். அவர் மேலும் “ஒரு விஷயம் மறந்துவிட்டேன்; இவ்வூரில் என்னுடைய மாமனார்
இருக்கிறார். அவருக்கு எனக்கும் இப்பொழுது சண்டை. என்னுடைய வீட்டிலிருந்து வேலைக்காரன்
ஒருவன் சில சுவடிகளைக் கொண்டுபோய் அவரிடம் கொடுத்துவிட்டான்.அவரிடம் நீங்கள் தேடும்
புஸ்தகம் இருக்கிறதாவென்று பார்க்கச் செய்யலாம். ஆனால் நான் அவரோடு பழகுவதை இப்போது
நிறுத்திவிட்டேன்” என்றார்.
உ.வே.சா “எனக்காக உங்கள் மாமனாரிடம் விரோதம்
பாராட்டாமல், தமிழுக்காக
க் கேட்டு வாங்கி வாருங்கள்” என்றபோது, கவிராயரும் “சரி” என்று ஒப்புக்கொண்டார்.
இரவு அவர் வீட்டில் திண்ணையில் சோகமாக உ.வே.சா உட்கார்ந்து, சில ஸ்ரீவைஷ்ணவர்கள் சொன்ன
பழைய உரைகளைக் கேட்டுக்கொண்டு இருந்தபோது அவர் மனம் அதில் ஈடுபட முடியவில்லை. அவர்
மனம் முழுக்க பத்துப்பாட்டு அகப்படவில்லையே என்ற கவலையில் இருந்தது. அந்த சமயம்…
கண்ணிநுண்சிறுத்தாம்பு
என்ற பாசுரத்தை நம்மாழ்வார் வாழ்ந்த புளிய மரத்துக்கு அடியில் அவரை தியானித்து, பன்னிரண்டாயிரம்
முறை சொன்னால் நம்மாழ்வார் உங்கள் முன் தோன்றுவார், அவரிடம் கேட்டுப் பெற்றுக்கொள்ளலாம்
என்றார். உடனே யோகத்தில் வல்லவரான நாதமுனிகள் சடகோபனை தியானித்து பாசுரங்களை பன்னிரண்டாயிரம்
முறை சேவித்து (சொல்லி) முடித்தார். அப்போது…
திருவீதியில் பெருமாளும் நம்மாழ்வாரும்
உற்சவத்துக்கு எழுந்தருளியபோது உ.வேசா அவர்கள், பெருமாள், நம்மாழ்வாரை தரிசனம் செய்து
இவ்வாறு எழுதியிருக்கிறார்.
அப்பொழுது
நம்மாழ்வார் திருக்கோலத்தை தரிசித்தேன்; அவரைப் பார்த்து “ஸ்வாமி! வேதம் தமிழ் செய்தவரென்று
தேவரீரைப் பாராட்டுகின்றார்கள். தேவரீருடைய ஊருக்குத் தமிழ் நூல் ஒன்றைத் தேடிக் கொண்டு
வந்திருக்கின்றேன். தமிழுக்குப் பெருமையருளும் தேவரீருக்கு நான் பட்ட சிரமம் தெரியாததன்றே!
நான் தேடி வந்தது கிடைக்கும்படி கருணை செய்யாமல் இருப்பது நியாயமா என்று சொல்லிப் பிரார்த்தித்தேன்.
உள்ளம் அயர்ந்து போய், ‘இனிமேல் செய்வது ஒன்றும் இல்லை’ என்ற முடிவிற்கு வந்தமையினால்
இங்கனம் பிராத்தனை செய்தேன்.
பெருமாளும் ஆழ்வாரும் கடந்து செல்ல நிலா ஒளி நன்றாக வீசியது.
அப்பொழுது லக்ஷ்மண கவிராயர் எதையோ தம் மேலாடையால் மறைத்துக்கொண்டு மிகவும் வேகமாக எங்களை
நோக்கி வந்தார். கோயில் பிரசாதம் என்று நினைத்தேன். ஆனால்…
ஸ்ரீமந்
நாதமுனிகளுக்கு நம்மாழ்வார் காட்சி தந்து “உமக்கு என்ன வேண்டும்?” என்று கேட்க, அதற்கு
நாதமுனிகள் “திருவாய்மொழி முதலிய பிரபந்தங்கள் வேண்டும்” என்று கேட்க, ஆழ்வாரும் அவருக்கு
“தந்தோம்” என்று திருவாய்மொழி மட்டும் அல்லாமல் மற்ற ஆழ்வார்களின் அருளிசெயல்களையும்
அதன் அர்த்தங்களையும் அவருக்குத் தந்தருளினார். அதை நாதமுனிகள் தொகுத்து, இசை அமைத்து
இன்றும் ஸ்ரீவைஷ்ணவக் கோயில்களிலும், இல்லங்களிலும் பிரபந்தம் சேவிக்கப்படுகிறது என்றால்
அதற்குக் காரணம் ஸ்ரீமந் நாதமுனிகள்.
கவிராயர் “இந்த புஸ்தகத்தைப் பாருங்கள்.
இந்த ஒன்றுதான் என் மாமனாரிடம் இருக்கிறது; பார்த்துவிட்டுத் திருப்பி அனுப்பிவிடுவதாகச்
சொல்லி வாங்கிவந்தேன்” என்று கூறி, மேல் வஸ்திரத்தால் மூடியிருந்த சுவடியை எடுத்தார்.
உ.வேசா அதனைப் பிடுங்கிப் பார்த்தபோது,
நிலாவின் ஒளியில் சட்டென்று முல்லைப்பாட்டு என்ற பெயர் கண்ணில் பட, அவருக்கு உண்டான
சந்தோஷத்தை விவரிக்க வேண்டுமா? அன்றிரவு தூக்கம் இல்லாமல் மறுநாள் காலையில் திருக்கோயிலுக்குச்
சென்று பெருமாளையும் ஆழ்வாரையும் தரிசித்து நன்றியைக் கூறி, மேலும் தான் நினைத்த காரியங்களுக்கெல்லாம்
அனுகூலமாக செய்தருள வேண்டும் என்று பிராத்தித்துவிட்டு அவர் பயணத்தைத் தொடர்ந்தார்.
இன்று பத்துப்பாட்டு, எட்டுத்தொகை என்று நாம் படிக்கிறோம் என்றால் அதற்குக் காரணம்
இந்த தமிழ்த் தாத்தாதான்.
உதவிய நூல்கள்: நிலவில் மலர்ந்த முல்லை,
என் சரித்திரம், சுவடிப்பதிப்பின் முன்னோடிகள், ஸ்ரீவைஷ்ணவ குருபரம்பரம் நூல்கள்.

Posted on Leave a comment

சிலைத் திருட்டு – கடந்த காலத்தைக் கடத்துபவர்கள் | சுஜாதா தேசிகன்

To every man upon this earth
Death cometh soon or late
And how can man die better
Than facing fearful odds,
For the ashes of his fathers,
And the temples of his gods?

– Thomas Babington Macaulay, Lays of Ancient Rome

உலகில் எல்லோருக்கும் ஒரு நாள் மரணம் நிச்சயம்
நம் முன்னோர்களையும், தெய்வத்தின் கோயில்களையும்
காக்கும்போது ஏற்படும் மரணத்துக்கு
அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும்.

அந்தக் கவிஞன் பாடிய கோயில் தெய்வங்கள் இன்று பல நாடுகளில் சிதறி, பல கோயில்கள் காலியாக இருப்பது வருத்தமான விஷயம் என்பதைவிட வெட்கக்கேடான விஷயம்.

சமீபத்தில் நண்பர் எஸ்.விஜயகுமார் எழுதிய ‘The Idol Theif’ என்ற புத்தகத்தை ஒரே மூச்சில் படித்து முடித்தேன். புத்தகத்தை ஆர்டர் செய்தபின் ஒரு வாரத்தில் வந்தது. அந்த ஒரு வாரத்தில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் செய்தித்தாளில் சிலைக் கடத்தல், திருட்டு என்று செய்திகள் வந்த வண்ணமாக இருந்தன.

*
ஸ்ரீவைஷ்ணவத்தில் இரண்டு படையெடுப்புகள் முக்கியமானதாகக் கருதப்படுகின்றன. ஒன்று 1311, இன்னொன்று 1323. இரண்டாம் படையெடுப்பில் ஸ்ரீரங்கத்தின் உற்சவ மூர்த்தியான நம்பெருமாள் காப்பாற்றப்பட்டு, 48 வருடம் பல இடங்களில் வாசம் செய்து திரும்பி வந்தார். காப்பாற்றப்பட்டதற்கு ஸ்ரீவைஷ்ணவர்கள் கொடுத்த விலை பிள்ளை ஸ்ரீலோகாச்சாரியார் என்ற ஆசாரியனை இழந்தது; ஸ்ரீவேதாந்த தேசிகன் பிணக் குவியல்களின் நடுவில் சுதர்சன சூரியின் சுதபிரகாசிகா என்ற ஓலைச் சுவடியையும் அவருடைய இரண்டு சின்ன பிள்ளைகளையும் பிணத்தோடு பிணமாகக் காப்பாற்றினார். நம்பெருமாள் கிடைக்கவில்லை என்று தெரிந்து முகமதிய படைகள் 12,000 ஸ்ரீவைஷ்ணவர்களைக் கொன்று குவித்தார்கள். இது ‘பன்ணீராயிரவர் குடிதிருத்திய பன்றி யாழ்வான் மேட்டுக் கலகம்’ என்று கோயிலொழுகில் குறிப்பிடப்பட்டுள்ளது.

*
எங்கள் வீட்டில் ஆழ்வார்கள் மூர்த்தி செய்ய விருப்பப்பட்டு பல இடங்களில் அலைந்து கடைசியாக சிற்பி வித்யாசங்கர் ஸ்தபதியைக் கண்டுபிடித்தேன். தமிழ்நாட்டின் தலைசிறந்த சிற்ப மரபில் வந்தவர். இவரைத் தேடிக்கொண்டு கும்பகோணம் சென்றபோது அவர் வீட்டுக் கதவில் இவருடைய சிற்ப மரபின் பரம்பரை ‘குடும்ப மரம்’ அச்சடித்து ஒட்டப்பட்டிருந்தது. அதை உன்னிப்பாகக் கவனித்தபோது இவர் மூதாதையர்கள் சோழ காலத்தவர்கள் என்று புரிந்தது. ராஜராஜசோழன் பெரியகோயில் செய்த சிற்பிகளுக்கும் இவர் பாரம்பரியத்துக்கும் சம்பந்தம் இருக்கிறது என்று அவரே ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.

அவரிடம் சிற்பம் செய்யவேண்டும் என்றபோது தயங்கினார். “நியமத்துடன் பாரம்பரிய முறைப்படி சிற்பம் செய்பவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்”. 3D பிரிண்டிங் காலத்தில் இந்த மாதிரி செய்ய இன்று யாரும் இல்லை என்பதுதான் வருத்தமான விஷயம்.

சிற்பங்கள் எப்படிச் செய்கிறார்கள் என்று பார்க்கலாம். முதலில் மெழுகில் ஒரு மாடல் செய்துவிடுவார்கள். அதைக் காவிரியில் கிடைக்கும் களி மண்ணால் மூடி உள்ளே இருக்கும் மெழுகை உருக்கி பிறகு அதில் உலோகத்தைக் காய்த்து ஊற்றி வடிவமைப்பார்கள். நான்கே வரியில் இதைச் சொல்லிவிட்டாலும், இதைச் செய்ய பல காலம் ஆகும். ‘Lost wax techinque’ என்று கூகிளில் தேடிப் பார்த்தால் இதன் கஷ்டம் தெரியும்.

“ஒவ்வொரு சிற்பத்தை வடிக்கும் முன்பு, நாள், நட்சத்திரம் பார்த்து பசுவிற்குப் பூஜை… உலோகத்தை ஊற்றும் போது அது ஒழுங்கான சிற்பமாக வர வேண்டும்… கிட்டதட்ட பிரசவம் மாதிரி” என்றார் அந்த எண்பது வயது சிற்பி.

ஸ்ரீவைஷ்ணவத்தில் பெருமாளின் விக்கிரகம் அளவில் பெரியதா, சிறியதா, தங்கமா, செப்பா என்று நினைத்தால் அது என் தாய் தந்தையரை ஆராய்வது போன்ற செயலாகும். ஆனால் இன்று நாளிதழ்களில் ஐம்பொன் சிலை கடத்தல் என்று செய்தி பெட்ரோல் விலை ஏற்றம் என்பது போல சாதாரண விஷயமாகிவிட்டது. நம் பாரம்பரியத்தை எப்படிக் காத்துக்கொண்டு இருக்கிறோம் என்பதற்கான அத்தாட்சி இது.

கோயில்களும், நினைவுச்சின்னங்களும்தான் நம் பாரத நாட்டின் பொக்கிஷம். நமது செழிப்பான கலாசாரத்தின் எடுத்துக்காட்டுகள்.

நம் வரலாறு எழுதப்பட்டது, திருத்தப்பட்டது; ஆனால் நம் பாரம்பரியம் மாறவேயில்லை. பல படையெடுப்புகள் நிகழ்ந்தது. பலவற்றை இழந்தார்கள். மதம் மாற்ற முயன்றார்கள். ஆனால் மக்கள் ஹிந்து மத நம்பிக்கையை மட்டும் என்றுமே இழக்கவில்லை.

சில வருடங்களுக்கு என் நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது அவரது ஊரில் அவர் தந்தை அர்ச்சகராக இருக்கும் கோயிலில் சிலைக் கடத்தல் எப்படி நடந்தது என்று விவரித்தார். சிலைக் கடத்தல் எப்படி நடக்கிறது என்று மேலும் தெரிந்துகொள்ள ஏதாவது புத்தகம் கிடைக்கிறதா என்று தேடியபோது ‘The Plunder of Art’ என்ற புத்தகத்தைப் படித்தேன். அதில் தமிழ்நாட்டுச் சிலைகள் மட்டுமல்ல, நம் நாட்டுப் பொக்கிஷங்கள் பல எப்படித் திருடப்படுகிறது என்று படித்தபோது அதிர்ச்சியாக இருந்தது.

கலைப் பொக்கிஷங்கள் என்றால் உடனே நாம் சிலைகளை மட்டுமே யோசிக்கிறோம் – சிலைகள் தவிர, நகை, ஓவியத்திரை (tapesteries), ஓவியங்கள், மரச்சாமான்கள், சிறு பொருட்கள் என்று பல பொருட்களும் அதில் அடங்கும்.

ஸ்ரீரங்கத்தையும் மஹாபலிபுரத்தையும் நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் வெளிநாட்டு சுற்றுலாப் பயணி இந்த அற்புதங்களை முதல் முதலில் தீடீரென்று நேரில் பார்க்கும்போது அவருக்கு ஒரு ‘cultural shock’ ஏற்படுவது இயற்கையே. ஏனென்றால் இந்த மாதிரி அவர்கள் நாட்டில் கனவில்கூடப் பார்த்திருக்க மாட்டார்கள். இந்தப் பொக்கிஷங்களுக்குப் பக்கத்தில் நாம் காலி ஜூஸ் பாட்டிலைப் போடுவது அவருக்கு இன்னும் பெரிய அதிர்ச்சியாக இருக்கும்.

1970 – 1988 வரை நம் நாட்டில் 3,500 கலைப் பொருட்கள் களவாடப்பட்டிருக்கின்றன. கணக்கில் வந்தவை இவை. வராதவை இன்னும் நிறைய. இந்தியா முழுவதும் பல இடங்களுக்குச் சென்றபோது நமது கலைப் பொக்கிஷங்கள் பல தெருவில் கிடப்பதைப் பார்த்திருக்கிறேன்.

உதாரணமாக, அஹோபிலத்தில், ராமேஷ்வரம் திருப்புள்ளாணியில், காஞ்சிபுரத்தில் என்று எல்லா இடங்களிலும் சாதாரணமாகச் சாலையில் கிடக்கிறது. இந்த ஊருக்குச் சென்று பல கலைப் பொருட்களை ஒரு கார் டிக்கியில் போட்டுக்கொண்டு வந்துவிடலாம்.

ஸ்ரீரங்கம் உட்பட பல கோயில்களில் கல்வெட்டுகளை உடைத்து அதன் வழியே வயரிங் செய்வது, சுவரின் மீது போஸ்டர் ஒட்டுவது என்று நம் பாரம்பரியத்தைச் சிதைத்துக்கொண்டிருக்கிறோம்.

ஒரு முறை சுஜாதாவின் தம்பியிடம் பேசிக்கொண்டு இருந்தபோது, மத்தியப் பிரதேசத்தில் சுற்றுலா சென்றபோது அங்கே சுற்றுலாப் பயணிகளிடம் அருகில் இருக்கும் கோயில்களில் உள்ள கலைப் பொருட்களைக் கூவிக் கூவி விற்றுக்கொண்டு இருந்தார்கள் என்று சொன்னார்.

கலைப் பொருட்களின் திருட்டு 1936ல் ஆரம்பித்தது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். டாக்டர் டர்டீஸ் (Dr. Durdaise) என்ற பிரஞ்சுக்காரர் பாண்டிச்சேரியிலிருந்து பல கலைப் பொருட்களை உள்ளூர் ஆட்களை வைத்துக் கடத்தினார் என்று தெரிகிறது. 1937ல் மிஸ் பியர் குஸ்டன் (Miss Pierre Gustan) கலைப் பொருட்களை ஏற்றுமதி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

ஜம்மு, ஹிமாச்சல், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், தமிழ்நாடு, ஒடிஸா, ஆந்திரா என்று இந்தியாவில் எந்த இடத்தையும் விட்டு வைக்கவில்லை. கஜுராஹோ கோயிலில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட சிற்பங்கள் பல மில்லியன் டாலருக்கு விற்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் இன்றும் ஏதாவது ஒரு கோயிலில் சிற்பங்கள் திருடப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறது.

புத்தகத்தை எழுதிய விஜயகுமார் தன் வலைப்பதிவில் சிற்பங்களைப் படத்துடன் எழுத ஆரம்பித்தபோது அவருக்குச் சில ஆச்சரியங்கள் ஏற்பட்டன. அவர் எழுதிய சிற்பம் வெளிநாட்டு மியூசியத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவை எப்படி திருடப்படுகின்றன, எந்த வழியாகப் போகிறது, யாரிடம் போகிறது, நடுவில் ஏஜண்ட் யார் என்று நிஜ சம்பவங்களைப் படிக்கும்போது, உண்மை கற்பனையைவிட விநோதமானதாக இருக்கிறது.

மிக நேர்த்தியான நடராஜர், சிவகாமி சிலைகள், பல நூறு கிலோ எடையிலானவை. இதைக் கடத்த சாமர்த்தியம் தேவை இல்லை; நம் நாட்டில் கலாசாரம் தெரியாதவர்கள் இருக்கும்வரை இது தொடந்துகொண்டேதான் இருக்கும்.

புத்தகத்தைப் படிக்கும்போது இது சுபாஷ் கபூர் ‘திருட்டு’ வாழ்க்கை வரலாறு என்ற எண்ணம் வருவதைத் தவிர்க்க முடியவில்லை. சுபாஷ் கபூர் என்ற ஒரு மனிதர் மாதிரி இன்னும் எவ்வளவு கபூர்கள் இருக்கிறார்களோ என்ற ஐயமும் ஏற்படுகிறது. இந்த கலைப் பொருள் சேகரிப்பு என்னும் ஒரு விதமான பணக்காரப் பொழுதுபோக்கு ஒரு எல்லைக்கு மேல் செல்லும்போது அங்கே குற்றம் நடைபெறுகிறது.

சுபாஷ் கபூர் விற்ற கலைப் பொக்கிஷங்களை எல்லா அருங்காட்சியகத்திலும் பார்க்கலாம். 2011ல் அவர் ஜெர்மனி வந்தபோது அவரை இண்டர்போல் தமிழ்நாட்டில் நடந்த இரண்டு சிலைத் திருட்டுக்குக் கைது செய்தது. அமெரிக்கா அவருடைய கிடங்கைச் சோதனை செய்தபோது கிட்டத்தட்ட நூறு மில்லியன் டாலர் மதிப்பு மிக்க பல கலைப் பொருட்கள் கிடைத்தன. கபூர் இந்தத் தொழிலில் கடந்த நாற்பது வருடங்களாக இருக்கிறார். கூலிக்கு வேலை செய்யும் சாதாரணத் திருடர்கள் முதல் சில காவல்துறை அதிகாரிகள், அருங்காட்சியகத்தில் வேலை செய்பவர்கள், கல்வியாளர்கள், அழகிகள் என்று இந்தக் கொள்ளைக்குப் பலர் உடந்தையாக இருந்திருக்கிறார்கள். அரசியல்வாதிகள்?

இவ்வளவு சிலைக் கடத்தலைப் பார்க்கும்போது அரசியல் தொடர்பு இல்லாமல் இதை எல்லாம் செய்திருக்கவே முடியாது. புத்தகத்தில் இதுபற்றி இல்லை.

மோடி அரசு வந்த பின்தான் இந்தியாவிற்குச் சிலைகள் திரும்ப வரும் மகிழ்ச்சியான செய்தியே வருகிறது.

புத்தகத்தில் விருத்தாசலம் அர்த்தநாரீஸ்வரர் மற்றும் ஸ்ரீபுரந்தான் நடராஜர் சிலையும் மீண்டும் கிடைக்கப்பெற்றோம் என்று படிக்கும்போதே நம் மனதுக்கு ஒரு வித நிம்மதி ஏற்படுகிறது. புத்தகத்தில் சுத்தமல்லி சிலைகளின் மதிப்பு ரூ34,00,00,000 என்று போடப்பட்டிருக்கிறது. என்னுடைய கருத்து இந்தச் சிலைகளுக்கு மதிப்பே கிடையாது; விலைமதிப்பற்றது!

பண்டையப் பொக்கிஷங்களும், நினைவுச்சின்னங்களும்தான் நம் பாரத நாட்டின் ஆன்மா. நமது வரலாற்றையும் கலாசாரத்தையும் அவை பிரதிபலிக்கின்றன. இவற்றை 3D பிரிண்டர் மூலம் கூட மீண்டும் கொண்டு வர முடியாது.

விஜயகுமார் செய்யும் செயலை அரசு செய்ய வேண்டும். பெரிதாக ஒன்றும் செய்ய வேண்டாம். எல்லா இடங்களிலும் உள்ள பொக்கிஷங்களை ஆவணப்படுத்த வேண்டும். இதைச் செய்தாலே பாதி வேலை முடிந்தது. இன்றைய டிஜிட்டல் உலகில் இதைச் செய்வது மிகச் சுலபம். அடுத்து சட்டத்தை இன்னும் கடுமையாக்க வேண்டும்.

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 49வது ஷரத் இப்படி சொல்லுகிறது

Article 49 [Protection of monuments and places and objects of national importance]

It shall be the obligation of the State to protect every monument or place or object of artistic or historic interest, declared by or under law made by Parliament to be of national importance, from spoliation, disfigurement, destruction, removal, disposal or export, as the case may be.

புத்தகத்தில் சிலைக் கடத்தலைவிட என்னை அதிர்ச்சியாக்கியது தமிழ்நாடு அரசு 1993ல் இந்திய தண்டனைச் சட்டம் 380 பிரிவில் கொண்டு வந்த திருத்தம்தான்.

380 பிரிவு சட்டம் இப்படி இருக்கிறது:

“Whoever commits theft in any building, tent or vessel, which building, tent or vessel is used as a human dwelling, or used for the custody of property, shall be punished with imprisonment of either description for a term which may extend to seven years, and shall also be liable to fine.

1993ல் தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் பின் வரும் திருத்தத்தைக் கொண்டு வந்தார்கள்:

Whoever commits theft in respect of any idol or icon in any building used as a place of worship shall be punished with rigorous imprisonment for a term which shall not be less than two years but which may extend to three years and with fine which shall not be less than two thousand rupees.

அதாவது வீட்டில் திருடினால் ஏழு வருடம் கடுங்காவல் தண்டனை. அதே கோயிலில் திருடினால் இரண்டே வருடம்தான் தண்டனை. கூட இரண்டாயிரம் ரூபாய் அபராதம். இந்தத் திருத்தம் இன்றும் இருக்கிறது. அவர்களைக் குறை சொல்ல முடியாது, நாம் ஓட்டுப் போட்டு வந்தவர்கள்தானே. அதனால் நமக்கும் ஒரு விதத்தில் இந்தக் குற்றத்தில் பங்கு உண்டு.

சிலைக் கடத்தலுக்குத் தனிப் படை என்று செலவு செய்வதைவிட இந்த மாதிரி திருத்தங்களைக் கொண்டு வராமல் இருப்பதே மேல்.

நண்பர் விஜயகுமார் முயற்சியால் 2000 – 2012 வரை 26 சிலைகளை இந்தியா திரும்ப பெற்றிருக்கிறது. இதற்காக நாம் அவருக்கு கடமைப் பட்டிருக்கிறோம்.

புத்தகத்தின் கடைசியில் சொல்லும் விஷயம் மிக முக்கியமானது:

“சில வருடங்கள் முன் புகழ்பெற்ற ஏல நிறுவனம் ஒன்று என் ஆராய்ச்சிக்கு ஸ்பான்சர் செய்வதாகச் சொன்னார்கள் அதைத் தவிர அவர்களுடைய அருமையான நூலகத்தில் எனக்கு இலவச அனுமதி அளிப்பதாகவும் சொன்னார்கள். அவர்களிடம் இருக்கும் பழங்காலத்துக் கலைப்பொருட்களை நான் ஆராய்ந்து கொடுக்க வேண்டும்.

நான் இலவசமாகச் செய்து தருகிறேன் ஆனால் ஒரே ஒரு நிபந்தனையை அவர்களிடம் முன் வைத்தேன் அது, ‘பொருட்கள் எங்கிருந்து தருவித்தார்கள் என்று சொல்ல வேண்டும். சந்தேகப்படும்படி ஏதாவது பொருட்கள் இருந்தால் ஏழு நாட்களுக்குள் அந்தக் கலைப் பொருளை சப்ளை செய்தவரை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்’.

அதற்குப் பிறகு அவர்கள் என்னிடம் பேசவே இல்லை. அவர்கள் வக்கீலுக்கு என் மறுப்பைத் தெரிவித்து நன்றிக் கடிதம் எழுதினேன். அதில் கடைசியில் ‘Not every Indian is for sale!’ என்று முடித்திருந்தேன்.”

அடுத்த முறை பணக்கார ஹோட்டலிலோ அல்லது சாலை ஓரத்திலோ நம் கலைப் பொக்கிஷங்களைப் பார்த்தால் உங்களால் ஆன உதவியைச் செய்யுங்கள். மீண்டும் கட்டுரையின் ஆரம்பத்தில் உள்ள வரிகளை படித்துப் பாருங்கள்.

The Idol Thief, பக்கங்கள் 248, பதிப்பகம்: Juggernaut.

Posted on Leave a comment

மகரந்த ரேகை | சுஜாதா தேசிகன்

தமிழ்ப் படங்களில் நீங்கள் பார்த்திருக்கலாம். ஹீரோவின் இல்லத்தில் அவருக்குத் தெரியாமல் போதைப் பொருளை வைத்து போலீஸில் சிக்க “கியாரே செட்டிங்கா” என்று வில்லன் அவரை முழிக்க வைப்பார். ஆங்கிலத்தில் ‘The evidence was planted’ என்பார்கள். இன்று ‘Plant is the evidence’ என்று சொல்லலாம்.

கொலையைக் கண்டுபிடிக்க மூன்று முக்கியக் கேள்விகளுக்கு விடை தெரிய வேண்டும்.

எங்கே? யார்? எப்போது?

எங்கே என்ற கேள்வி சில சமயம் கண்டுபிடிக்க மிகக் கஷ்டம். உதாரணத்துக்கு, போர்க் கைதிகளை எல்லாம் கொன்று ஒரு குழியில் புதைத்தால் அவர்கள் எங்கே கொலை செய்யப்பட்டார்கள் என்று கண்டுபிடிப்பது மிகக் கஷ்டம். ஆனால் இன்றைய விஞ்ஞானத்தால் கொலை நடந்த இடத்தில் இருக்கும் செடி, கொடிகள், ஏன் அங்கே இருக்கும் கண்ணுக்கு தெரியாத மகரந்த நுண்துகள் கூட முக்கியத் தடயமாக இருக்கிறது.

மகரந்த ஒவ்வாமையால் (pollen allergy) பலர் பாதிக்கப்படுவது பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். மரபணு (DNA) வளர்ச்சியால் இன்று ‘Forensic Botany’ (தாவரவியல் தடயவியல்) மிக வேகமாக வளர்ச்சி அடைந்துகொண்டிருக்கிறது. இந்தியாவில் இன்னும் சூடு பிடிக்கவில்லை.

செடி எப்படி ஆதாரமாகும்? சில வருடங்கள் முன் ஒரு சிறுகதை படித்தேன். சிறுகதையின் பெயர், யார் எழுதினார்கள் என்ற விவரம் எல்லாம் நினைவில் இல்லை. கதையின் முடிச்சு மட்டும் ஞாபகம் இருக்கிறது. சுமாராக அந்தக் கதையைச் சொல்ல முயற்சிக்கிறேன்.

அந்த வீட்டுக்கு வெளியே நீல நிற ஹைடராங்கிஸ் (Hydrangeas) பூக்கள் பூத்துக் குலுங்கும். உள்ளே ஒரு பெண் எப்போதும் குலுங்கிக் குலுங்கி அழுதுகொண்டிருப்பாள். எப்போதும் இல்லை, அவள் கணவன் இருக்கும்போது மட்டும். பக்கத்து வீட்டில் இருக்கும் அந்தப் பையன்தான் அவளுக்கு ஒரே ஆறுதல்.

கணவன் இல்லாத சமயம் தான் படும் துன்பங்களையெல்லாம் அவள் இவனிடத்தில் சொல்லி அழுவாள். அவனும் அவளுக்கு அறுதல் கூறுவான். நீங்கள் நினைப்பது சரிதான், அவன் அவளைக் காதலித்தான்.

ஒரு நாள் அவள், “இன்னிக்கு நிறைய அடிவாங்கிவிட்டேன்…” என்று அழத் தொடங்க அந்தப் பையன், “கவலைப்படாதே… நாளைக்கு வேலை விஷயமாக ஊருக்குப் போகிறேன். ஒரு வாரம் கழித்து வருகிறேன். வந்தவுடன் நாம் ஊரை விட்டு ஒடிவிடலாம்.”

ஒரு வாரம் கழித்து வரும்போது பக்கத்து வீட்டில் அழும் சத்தம் எதுவும் கேட்காமல், தெருவே நிசப்தமாக இருந்தது. கடையில் சாமான் வாங்கும்போது கடைக்காரன், “சார் அந்தப் பெண் இறந்துவிட்டாள்… யாரோ சுட்டுவிட்டு…”

போலீஸ் ஸ்டேஷனுக்கு ஓடினான்.

“நீங்கள் யார், உங்களுக்கும் அந்தப் பெண்ணுக்கும் என்ன தொடர்பு” என்று இன்ஸ்பெக்டர் கேட்க, “பக்கத்து வீட்டுப் பெண்ணின் கணவன் அவளை நிறைய அடிப்பான். அழும் குரல் எப்போதும் கேட்கும். அவள் கணவன்தான் அவளைக் கொலை செய்திருக்க வேண்டும்.”

இன்ஸ்பெக்டர், “துப்பாகியால் சுடப்பட்டிருக்கிறாள். அப்போது அவள் கணவன் வீட்டில் இல்லை. அவள் சுடப்பட்ட துப்பாக்கி கிடைத்தால்தான் மேற்கொண்டு துப்பு துலக்க முடியும். எதற்கும் உங்க அட்ரஸ் கொடுத்துவிட்டு போங்க. உங்க மேலையும் எங்களுக்குச் சந்தேகமா இருக்கு… விசாரிக்கணும்.”

தினமும் அலுவலகம் போகும்போது அவள் ஆசையாக வளர்த்த அந்த ஹைடராங்கிஸ் பூக்களைப் பார்த்துவிட்டுச் செல்வான். ஒரு மாதத்திற்குப் பிறகு அந்தப் பூக்களைப் பார்த்து ஆச்சரியப்பட்டு நேராக போலீஸ் ஸ்டேஷன் சென்று இன்ஸ்பெக்டரைக் கையோடு அழைத்து வந்தான்.

”இந்தப் பூச்செடி கீழே தோண்டிப் பாருங்கள்.”

இன்ஸ்பெக்டர் நம்பிக்கை இல்லாமல் தோண்ட கீழே ஒரு ரிவால்வர் கிடைக்க அதில் இருந்த தோட்டாக்கள் அந்தப் பெண் சுடப்பட்ட தோட்டாவும் பொருந்த… கணவனைக் கைது செய்தார்கள்.

துப்பாக்கி எப்படிக் கிடைத்தது என்ற என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். மண்ணின் pH கொண்டு ஹைடராங்கிஸ் மலர்களின் வண்ணம் இளஞ்சிவப்பாக மாறும். pHஐ மாற்றுவதன் மூலம் வண்ணத்தைக் கட்டுப்படுத்தலாம்.

சுத்தமான நீரின் pH மதிப்பு 7 ஆகும். அதனுடன் வேதியியல் பொருட்கள் கலக்கப்படும்பொழுது, கலக்கப்படும் பொருளைப் பொருத்து அது அமிலத்தன்மை உடையதாகவோ (acid) காரத்தன்மை உடையதாகவோ (basic or alkaline) மாறும். ஒரு கரைசலில் இருக்கும் ஹைட்ரஜன் ஐயானை (ion) பொறுத்து pH மாறுபடும். 

ஹைட்ரஜன் ஐயான் (ஹைட்ரஜன் அயனி என்பார்கள்) என்பது ஒரு ஹைட்ரஜன் அணுவிலிருந்து ஒரு எலக்ட்ரானை நீக்கினால் கிடைப்பது. அடுத்த முறை எலுமிச்சை சாற்றில் தண்ணீர் கலக்கிச் சாப்பிடும்போது எலுமிச்சை அமிலத்தில் ஹைட்ரஜன் ஐயான்களைக் குறைக்கிறோம் என்று தெரிந்துகொண்டு குடியுங்கள்.

பொதுவாக தாவரவியல் என்றால் செடிகளைப் பற்றிய படிப்பு ஆகும். ஆனால் தற்போதுள்ள விஞ்ஞான முன்னேற்றத்தால் அதைத் தடவியலில் பயன்படுத்தும்போது, மகரந்தம், விதைகள், இலைகள், பூக்கள், பழங்கள் மூலம் மரணம் எங்கே நிகழ்ந்தது என்பதைச் சுலபமாகக் கண்டுபிடிக்க உதவுகிறது. 

ஒரு மகரந்தம்

மகரந்தின் தனித்த துகள்கள் மனிதக் கண்ணுக்குத் தெரியாதவை. ஒரு பூவில் லட்சம் மகரந்தத் துகள்கள் இருக்கும் என்று சொல்லுகிறார்கள். நுண்ணோக்கி (microscope) மூலமே அவற்றைக் காணலாம். இறந்தவர் மூக்கில் அல்லது அவர் சட்டையில் பட்டன் ஓட்டையில் ஒட்டிக்கொண்டிருக்கும் இந்தத் துகள்களின் மூலம் எங்கிருந்து வந்தார் என்று தீர்மானிக்கலாம். கிட்டதட்ட ஐந்து லட்சம் மகரந்த வகைகள் இருக்கின்றன என்கிறார்கள். இவை மறைமுகமான கைரேகையாக விளங்குகிறது.

Palo Verde trees

1992ல் நடந்த சம்பவம் இது:

அந்தப் பெண் அமெரிக்காவில் அரிசோனா என்ற பகுதியில் அலங்கோலமாக இறந்து கிடந்தாள். பாலியல் தொழிலாளி. போலீஸ் அங்கே வந்து பார்த்தபோது உடலில் சில இடங்களில் காயங்கள் இருந்தன. சற்று தூரத்தில் ஒரு பேஜர் கிடந்தது. விசாரணையில் அது மார்க் என்பவருடைய பேஜர் என்று கண்டுபிடித்து அவரிடம் சென்றபோது, “அந்தப் பெண்ணுடன் நான் உல்லாசமாக இருந்த சந்தர்ப்பத்தில் என் பேஜரைத் திருடிவிட்டாள். அவளைக் கொலை செய்யவில்லை. கொலை நடந்த இடத்துக்கு நான் போனது கூடக் கிடையாது” என்று சத்தியம் செய்தான்.

போலீஸ் அதிகாரிகளுக்கு என்ன செய்வதெனப் புரியாமல், கொலை நடந்த இடத்தில் வேறு ஏதாவது தடயம் கிடைக்கிறதா என்று ஆராய்ந்தபோது திரும்பிய பக்கம் எல்லாம் அடர்த்தியான மஞ்சள் நிறப் பூக்கள் பூத்துக் குலுங்கும் பாலோ வர்டீ (Paloverde) மரங்களாக இருந்தன. அப்போது ஒரு மரத்தின் கிளையில் சிறியதாக ஒரு சிராய்ப்பு இருந்தது. எதோ வண்டி சென்றபோது மரத்தின் கிளையைத் தேய்த்துக்கொண்டு சென்றிருக்கலாம் என்று நினைத்து, மார்க் வீட்டுக்குச் சென்று அவனுடைய வண்டியைச் சோதனை செய்தார்கள். சின்னதாக இரண்டு பழுத்த பாலோ வர்டீ காய்கள் அதில் இருந்தன.

ஊர் முழுக்க இந்த மரம்தான் இருக்கிறது. சாதாரணமாக எந்த மரத்துக்குக் கீழே வண்டியை நிறுத்தினாலும் காய்கள் வண்டியின் மீது விழும். தான் அந்த இடத்துக்குச் சென்றதே இல்லை என்று மீண்டும் சத்தியம் செய்தான் மார்க்.

அந்தக் காய்களை அரிசோனா பல்கலைக்கழகத்துக்கு ஆராய்ச்சிக்கு அனுப்பினார்கள். விதைகளைப் பொடி செய்து அதிலிருந்து டி.என்.ஏ பரிசோதனை செய்தார்கள். பக்கத்தில் இருந்த மற்ற மரத்தின் விதைகளையும் ராண்டமாக எடுத்து அதையும் டி.என்.ஏ பரிசோதனைக்கு உட்படுத்தினார்கள்.

பல்வேறு மகரந்தங்கள்

நம்முடைய கைரேகை எப்படித் தனித்தன்மையுடன் இருக்குமோ அதேபோல ஒவ்வொரு மரத்தின் டி.என்.ஏவும் தனித்தன்மையுடன் விளங்குகிறது. இதற்காகச் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மரங்களை எடுத்து ஆராய்ச்சி செய்தார்கள். கொலை நடந்த இடத்தில் இருந்த மற்ற மரங்களின் காய்களில் உள்ள டி.என்.ஏ மார்க் வண்டியில் இருந்த காய்களின் டி.என்.ஏவுடன் பொருந்தவில்லை. அடிப்பட்ட மரத்தின் காய்களுடன் மட்டுமே கச்சிதமாகப் பொருந்தியது. மார்க்கு சிறைத் தண்டனை கிடைத்தது.

மகரந்தம் ஆராய்ச்சியை மகரந்தத்தூளியல் (Palynology) என்பார்கள். மகரந்தத்தின் ஆயுள் பல நாள். முறையாகச் சேமிக்கப்பட்டால், மகரந்தம் நூற்றாண்டுகளுக்குக்கூட நீடிக்கும்.

பூச்சியின் காலில் ஒட்டிக்கொண்டிருக்கும் மகரந்தம் 

இன்னொரு சம்பவம். அந்தப் பெண் தன் நாய்க்குட்டியுடன் கடற்கரையில் நடக்கும்போது அங்கே ஒரு பார்சல். திறந்து பார்த்தபோது கிட்டதட்ட மயங்கிவிட்டாள். உள்ளே அழுகிய நிலையில் ஒரு குழந்தை. கணினியின் உதவியுடன் உருவாக்கப்பட்ட பெண் குழந்தை, சமூக வலைத்தளங்களில், நியூஸ் என்று விளம்பரப்படுத்தினார்கள். எந்தத் துப்பும் கிடைக்கவில்லை. துப்பறிவாளர்கள் குழந்தை போட்டிருக்கும் துணியை ஆராய்ந்தபோது அதில் பைன் மரத்தின் மகரந்தத் துகள்கள் கிடைக்க, அது எந்த இடத்து பைன் என்று கண்டுபிடித்து சில மாதங்களில் குழந்தையையும் அதைக் கொலை செய்தவனையும் கண்டுபிடித்தார்கள்.

அந்த ஏணி!

மகரந்தத் துகள் மட்டுமல்ல, சில சமயம் மரக்கட்டை கூடத் துப்பு கொடுக்கும். 1935ல் மாடியில் இருந்த குழந்தை கடத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்டது. கடத்தப்பட்ட இடத்தில் ஒரு ஏணி மட்டுமே இருக்க மரக்கட்டையில் மிக்க அனுபவமிக்க கோஹ்லெர் அழைக்கப்பட்டார். அவர் மரத்தை ஆராய்ந்து என்ன மாதிரி மரம், எந்தத் தேசத்து மரம் என்று சொல்ல, ஒரு தச்சன் வீட்டில் பரணில் அதே மரத்தின் கட்டை ஒன்று இருக்க, அவர் மாட்டிக்கொண்டு தண்டனை பெற்றார்.

கள்ள ரூபாய் நோட்டு, போதைப் பொருள் என்று எல்லாவற்றிலும் இந்த மகரந்த ரேகையை ஆராய்ந்தால் ‘இங்கிருந்து’ என்ற கேள்விக்கு விடை கிடைத்துவிடும்.

சட்டையில் ஒட்டிக்கொண்டு இருக்கும் மகரந்தங்கள் 

கொலை செய்துவிட்டு புல் தடுக்கிக் கீழே விழ பயில்வானாக இருக்கவேண்டிய அவசியம் இல்லை. ஒரு சாதாரண புல் உங்கள் சட்டை, சாக்ஸ் எங்காவது ஒட்டியிருந்தாலும் போதும், நீங்கள் மாட்டிக்கொள்வீர்கள். கொலை செய்துவிட்டு வந்து துணியை வாஷிங் மிஷினில் போட்டுத் துவைத்தாலும் சில மகரந்தத் துகள்கள் ஒட்டிக்கொண்டு இருக்குமாம். ஜாக்கிரதை.

Posted on Leave a comment

ஸ்ரீ புரி ஜகந்நாதர் | சுஜாதா தேசிகன்

ஸ்ரீரங்கம், கரிசைலம் அஞ்சனகிரிம்
தார்க்ஷாத்திரி சிம்மாசலவ் ஸ்ரீகூர்மம்
புருஷோத்தமஞ்ச பதரீ நாராயணம் நைமிசம்
ஸ்ரீமத்த்வாரவதி ப்ரயாக் மதுரா
அயோத்தியா கயா புஷ்கரம் சாளக்ராமகிரிம்
நிஷேவ்ய ரமதே இராமானுஜோயம் முநிஹி

ஸ்ரீராமானுஜர் இந்தியாவைச் சுற்றி விஜயம் செய்த பாதையைக் குறிக்கும் ஸ்லோகம். இதில் இருப்பது ஊர்களின் பெயர்கள்தான் – ஸ்ரீரங்கம், காஞ்சிபுரம், திருவேங்கடம், அஹோபிலம், சிம்மாச்சலம், ஸ்ரீகூர்மம், புரி ஜகந்நாதம், பத்ரி, நைமிசாரண்யம், த்வாரகா, ப்ரயாகம் மதுரா, அயோத்யா, கயா, புஷ்கரம், சாளக்ராமம். இந்த இடங்களை எல்லாம் கூகிள் மேப் கொண்டு பார்த்தால் பாரத தேசமே புண்ணிய பூமி என்பது தெரியும்.

2016, 2017 மேலே குறிப்பிட்ட திவ்ய தேசங்களை எல்லாம் சென்று தரிசிக்கும் பேறு கிடைத்தது. அதில் ‘புருஷோத்தம’ என்று வரும் இடம் ஒடிசாவில் புகழ்மிக்க ஸ்ரீ புரி ஜகந்நாத கோயில். அதைப் பற்றியதுதான் இந்தக் கட்டுரை.

அக்டோபர் 6, 2017 காலை 6.30மணிக்குக் கடலில் ஸ்நானம் செய்ய கிளம்பினோம். ‘ஆழி மழைக் கண்ணா’ என்று பாடாமலே நல்ல மழை. கண்ணன் கீதையில் ‘நீர் நிலைகளுள் நான் கடலாக இருக்கிறேன்’ என்கிறான். கறுத்த மேகம், மழை, சுற்றிலும் கடல் என்று எல்லாம் கண்ணனாகவே காட்சி அளித்தது.

இங்கே உள்ள கடல் ‘சக்ர தீர்த்தம்’ என்று கொண்டாடப்படுகிறது. இந்தக் கடலிலிருந்து தான் ‘தாரு’ ரூபத்தில் (தாரு – மரக்கட்டை) பெருமாள் தோன்றினார்.

புரி ஜகந்நாதரின் ஸ்தல புராணம்

க்ருத யுகத்தில் இந்திரத்துயும்னன் என்ற அரசன் அவந்திகா நகரை ஆண்டு வந்தான். சிறந்த விஷ்ணு பக்தன். அவனுக்கு ஒரு ஆசை. நடக்கிற, ஓடுகிற, ஆடுகிற, உண்ணுகிற, கண்சிமிட்டும் பெருமாளை நேரில் பார்க்க வேண்டும் என்று. குல குருவிடம் தன் ஆசையைச் சொன்னான். குருவிற்கு உடனே பதில் சொல்லத் தெரியவில்லை. கேட்டுச் சொல்லுகிறேன் என்றார்.

யாத்திரை சென்று அரண்மனையில் வந்து உணவு உண்ணும் யாத்திரிகர்களிடம் அரசனின் ஆசையைச் சொன்னார். யாருக்கும் பதில் தெரியவில்லை. ஒரு நாள் ஒரு யாத்திரிகர், ‘நான் அனைத்து புண்ய ஸ்தலங்களையும் தரிசிக்கும் பாக்கியம் பெற்றவன். பாரத தேசத்தில் உத்கலதேசத்தில் (தேசிய கீதத்தில் ‘திராவிட உத்கல பங்கா’ என்று வரும் உத்கலதான் இன்றைய ஒடிசா.) கடலுக்கு வடக்கே இருக்கும் புருஷோத்தம சேஷத்திரத்தில் அடர்ந்த காடுகளுக்கு நடுவே மலை மேல் ஆலமரத்தின் பக்கம் இருக்கும் ஒரு கோயிலில் இருக்கிறார். நானே பல ஆண்டுகள் அவருக்குத் தொண்டு செய்துள்ளேன்’ என்று கூற உடனே அரசனிடம் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

குரு தன் தம்பியான வித்யாபதியை முதலில் அங்குச் சென்று விவரம் அறிந்து வரச் சொன்னார். வித்யாபதி தேடி அலைந்தார். ஒரு நாள் மாலை சூரியன் அஸ்தமனம் ஆகும் சமயம் யாத்திரிகர் சொன்ன அடையாளத்துடன் மலை உச்சியில் ஆலமரத்தைக் கண்டார். இரவு, இருட்டு என்று சேர்ந்துகொள்ள, அடர்ந்த காட்டுப் பகுதியில் செல்ல முடியாமல் அங்கேயே தங்கினார். அப்போது அங்கே பேச்சுக் குரல் கேட்டது. காட்டுவாசிகள் இவர்களை ஒரு ஆசிரமத்துக்கு அழைத்துச் சென்றார்கள். ஆசிரமத்தில் விஷ்வாசு என்பவர் இவருக்கு உணவு கொடுத்து ஓய்வு எடுக்கச் சொன்னார். ஆனால் வித்யாபதி ‘எங்கள் மன்னன் இந்தச் செய்திக்காக உபவாசம் இருக்கிறார்… ஆகவே உடனே மலை மேல் போக வேண்டும்’ என்று சொல்ல, ‘சரி வாருங்கள் போகலாம்’ என்று இருளில் அடர்ந்த காட்டுப்பகுதியில் அழைத்துச் சென்றார்.

விடியற்காலை ஆலமரத்தை அடைந்து, அதன் பக்கம் பேரொளியோடு நீலக் கல் போல எழுந்தருளிய நீல மாதவனனை வியந்து வணங்கி கீழே இறங்கி ஆசிரமத்தை அடைந்தார்கள்.

அங்கே விஷ்வாசு இவருக்குப் கொடுத்த பிரசாதம் பிரமாதமாக இருக்க, ‘இது என்ன பிரசாதம்? ‘ என்று வினவ, ‘இது மஹா பிரசாதம்… இந்திரன் சமைத்து ஜகந்நாதருக்கு அளித்த பிரசாதம்’ என்று அதன் பெருமைகளைச் சொன்னார். கூடவே அதிர்ச்சியான தகவலையும் சொன்னார். உங்கள் மன்னன் இங்கே வரும் போது பெருமாள் அவருக்கு இது போலக் காட்சி அளிக்க மாட்டார். ஆனால் இந்த விஷயத்தை மன்னனிடம் சொல்லாதீர்கள் என்றார். வித்யாபதி கொஞ்சம் பிரசாதத்தைக் கட்டிக்கொண்டு மன்னரைக் காண விரைந்தார்.

மன்னனிடம் நடந்தவற்றைச் சொல்லி நீல மாதவப் பெருமாளின் வடிவழகைச் சொல்லி, பிரசாதத்தைக் கொடுத்தார். மன்னன், ராணி குண்டிச்சா, பிரஜைகள் புடை சூழ உடனே புறப்பட்டார்கள். அந்தச் சமயம் நாரதர் அங்கே வர அவரும் சேர்ந்துகொண்டார்.

உத்கல தேசத்தை அடைந்த போது அந்த தேசத்து மன்னன் இவர்களை வரவேற்று, ‘சூறாவளியால் நீல மாதவப் பெருமாள் மண்ணால் மூடப்பட்டுள்ளார். நாட்டையும் பல ஆபத்துகள் சூழ்ந்துள்ளன’ என்ற தகவலைச் சொன்னான். மன்னன் ஸ்ரீநரசிம்ம பெருமாளைத் தியானித்து ஆயிரம் அசுவமேத யாகங்களைச் செய்தான். அவனுக்குக் கனவில் ‘பாற்கடலுள் பையத்துயின்ற’ என்பது போல பெருமாள் காட்சி தந்தார்.

நாரதர், ‘பெருமாள் எழுந்தருளும் தருணம் நெருங்கிவிட்டது அவர் மரக்கட்டையாக உருவெடுக்கப் போகிறார்’ என்று கூறி எல்லோரையும் கடற்கரைக்கு அழைத்துச் சென்றார். அங்கே ஒரு மரம் மிதந்து வந்தது.

இந்த மரத்தை அரசனும், ராணியும் பயபக்தியுடன் பெற்றுக்கொண்டார்கள். அப்போது ஒரு அசரீரி கேட்டது. ‘இந்த மரத்தை வஸ்திரத்தில் சுற்றி வையுங்கள், சில நாட்களில் ஒரு தச்சன் வந்து செதுக்குவார். செதுக்கும் ஒலி வெளியே கேட்காதபடி வெளியே வாத்தியம் வாசிக்க வேண்டும், தச்சன் செதுக்கும் போது அதை யாரும் பார்க்க கூடாது’ என்றது.

அசரீரி சொன்ன மாதிரியே சில நாள் கழித்து தச்சன் ஒருவன் வந்தான். தனி அறையில் பூட்டப்பட்டுச் செதுக்க ஆரம்பித்தான். சத்தம் கேட்காமல் இருக்க வாத்தியங்கள் இசைக்கப்பட்டன.

பதினைந்து நாள்கள் சென்றது. ராணிக்கு ஆவல் அதிகமாகியது. கதவில் காதை வைத்துக் கேட்ட போது செதுக்கும் ஒலி வரவில்லை. அரசன் தடுத்தும் கேளாமல், ராணி கதவை திறக்க அங்கே தச்சனை காணவில்லை. ஆனால் அங்கே கண்ணன் அவர் அண்ணன் பலராமர் தங்கை சுபத்ராவின் விக்கிரகங்கள் அங்கே காட்சி அளித்தார்கள். ஆனால் திருக்கைகள், திருப்பாதங்கள் இல்லாமல் பாதி முடிந்த நிலையில் இருக்க அனைவரும் திகைத்தனர்.

மீண்டும் அசரீரி, ‘பகவான் எளிய ரூபத்தில் இங்கே தரிசனம் தருவார்’ என்று கூற அன்று முதல் இன்று வரை பகவான் அதே ரூபத்தில் நமக்குக் காட்சி தருகிறார். (இந்தத் திருமேனிகள் சில ஆண்டுகளுக்கு ஒரு முறை மாற்றப்படும் – பார்க்க நவ கலேவர உற்சவம்.)

மரக்கட்டையாக பெருமாள் வந்த இடத்தில் அலைகளிடம் செல்லமாக அடி வாங்கி நெஞ்சால் வாரிப் பருகி குளித்துவிட்டு மீண்டும் மழையில் நனைந்து ‘குன்றம் ஏந்திக் குளிர் மழை காத்தவனை’ சேவிக்கக் கோயிலுக்கு புறப்பட்டேன்.

ஒடிசாவில் மழையை இடைஞ்சலாகக் கருதாமல் எந்த ஒரு பரபரப்பும் இல்லாமல் வேலை செய்வதைப் பார்க்க முடிகிறது. சாலை நடுவே தள்ளு வண்டியில் டீக்கடை நடத்துகிறார்கள். மழையில் பிளாஸ்டிக் குல்லா போட்டுக்கொண்டு சொட்ட சொட்ட நனைத்துக்கொண்டு வெதர்மேனை நாடாமல் ‘சாய்’ குடிக்கிறார்கள்.

தச்சன் வேலை செய்த இடம் குண்டிச்சா மந்தர் என்று அழைக்கப்பட்டு இன்றும் இருக்கிறது. கோயிலுக்குச் செல்லும் முன் ஸ்ரீ புரி ஜகந்நாத பெருமாள் வித்தியாசமாக இருப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். கண்கள் அகல விரிந்து ஆச்சரியமான ஸ்வரூபத்தில் இடமிருந்து வலமாகப் பலராமர், சுபத்ரா, கண்ணன் என்று காட்சி தருகிறார்கள். (கண்ணன் கருப்பு . பலராமர் வெள்ளை – பார்க்க பின்குறிப்பு.)

அவர்களுக்கு கை கால்கள் இல்லாமல் அரைகுறையாக இருப்பதற்குக் காரணத்தை மேலே பார்த்தோம். கண்கள் ஏன் விரிந்து ஆச்சரியமாகப் பார்க்கிறார்கள்?

இதோ இன்னொரு கதை! 

புரியில் கண்ணனின் தோற்றம் பற்றிய கதை:

கண்ணன் துவாரகையை ஆண்ட போது அவர் நினைவில் கோகுலp பெண்களே நிறைந்திருந்தார்கள். அங்கே செய்த லீலைகளைக் கண்ணன் நினைத்து நினைத்து ஆனந்தப்பட்டுக்கொண்டிருந்தான். கண்ணனின் ராணிகள் இதைப் பார்த்து அவர்களுக்கு ஆர்வம் அதிகமாகியது. யாரிடம் சென்று சிறு வயது கண்ணனின் கதைகளைக் கேட்பது ? அவர்கள் ரோஹிணி தேவியை அணுகி கண்ணனின் லீலைகளைச் சொல்லுங்கள் என்றார்கள்.

ரோஹினி, ‘சரி சொல்லுகிறேன். ஆனால் கண்ணனும் பலராமனும் வராமல் பார்த்துக்கொள்ளுங்கள்’ என்று வாசலில் காவலுக்கு சுபத்ராவை நிறுத்தி வைத்து, கண்ணன் வந்தால் சமிக்ஞை கொடு என்று கூறி கண்ணனின் லீலைகளை,

ஆனைகாத்து ஓர் ஆனை கொன்று, அது அன்றி, ஆயர் பிள்ளையாய்
ஆனை மேய்த்து; ஆ-நெய் உண்டி; அன்று குன்றம் ஒன்றினால்
ஆனை காத்து மை-அரிக்கண் மாதரார் திறத்து – முன்
ஆனை அன்று சென்று அடர்த்த மாயம் என்ன மாயமே?

– திருமழிசை ஆழ்வார்

கஜேந்திரனைக் காத்தாய், குவலயாபீடமென்ற ஒரு யானையைக் கொன்றாய், பசுக்களை மேய்த்தாய், நெய்யை உண்டாய், ஆவொடு ஆயரையும் குடைக்கீழ் சேர்த்தாய், நப்பின்னையை அடைய ஏழு எருதுகளைக் கொன்றாய். நீ மாயன்!

என்று ரோஹினி தேவி கதையைச் சொல்ல சொல்ல, அவள் சொன்ன கதையில் லயித்து சுபத்ரா தன்னையே மறந்தாள். அருகே பலராமனும், கண்ணனும் வந்ததைக் கவனிக்கவில்லை.

பிறந்த ஆறும், வளர்ந்த ஆறும்,
பெரிய பாரதம் கைசெய்து*, ஐவர்க்குத்
திறங்கள் காட்டியிட்டுச்
செய்து போன மாயங்களும்*
நிறம் தன் ஊடு புக்கு எனது ஆவியை
நின்று நின்று உருக்கி உண்கின்ற* இச்
சிறந்த வான் சுடரே! உன்னை
என்றுகொல் சேர்வதுவே?

என்கிறார் நம்மாழ்வார்.

கண்ணா இங்கே வந்து பிறந்ததை நினைத்தால் நெஞ்சம் உருகுகிறது. உன்னை மறைத்துக்கொண்டு வளர்ந்தாய். பாரதப் போரில் பாண்டவர்களுக்கு வெற்றி வழிகளைக் காட்டிக்கொடுத்த உன் மாயங்கள்தான் என்னே ! உன் மாயங்களை நின்று நின்று நினைத்துப் பார்க்கும் போது என் உள்ளத்தை உருக்குகிறது.

கேலிச்சித்திரம் (கார்ட்டூன்) பார்க்கும் போது ஆச்சரியமான பல முகபாவங்களைப் பார்த்திருக்கிறோம் அப்போது கண்கள் விரிந்து உடம்பு சிறியதாக காட்சி அளிக்கும். அதே போல தங்கள் கதையைக் கேட்டு மூவரும் மெய்மறந்து கைகால்கள் சுருங்கி விழிகள் விரிய புளங்காகிதம் அடைந்து நின்று கொண்டிருந்தார்கள்.

கீதையில் கண்ணன் இப்படிச் சொல்லுகிறார்:

ஜன்ம கர்ம ச மே திவ்யம்
ஏவம் யோ வேத்தி தத்த்வத:
த்யக்த்வா தேஹம் புனர் ஜன்ம
நைதி மாம் ஏதி ஸோ அர்ஜுன

அதாவது, ‘அர்ஜுனா, எனது தோற்றமும் செயல்களும் திவ்யமானவை என்பதை எவனொருவன் அறிகின்றானோ, அவன் இந்த உடலைவிட்ட பின், மீண்டும் இவ்வுலகில் பிறவி எடுப்பதில்லை’. இதற்கு ஸ்வாமி வேதாந்த தேசிகன் தாத்பர்ய சந்த்ரிகாவில் உரை எழுதும் போது ஒரு படி மேலே சென்று இப்படிச் சொல்லுகிறார்: ‘எனது தோற்றமும் செயல்களும் மற்றவர்களுக்கு மட்டும் இல்லை, எனக்கே திவ்யமானவை’ என்கிறார்! மேலும் கருட புராணத்திலும் கீதையிலும் கண்ணன் தன் கதையைக் கேள் என்று சொல்லுகிறான்.

அங்கு வந்த நாரதர் மூவரும் இருக்கும் நிலையைக் கண்டு, ‘தேவரீர் ஆனந்தத்தில் மயங்கி நிற்கும் இந்நிலையில் பக்தர்கள் தரிசிக்க வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டதற்கு இணங்க இன்றும் அதே போல நமக்குக் காட்சி அளிக்கிறான்.

குண்டிச்சா கோயிலுக்கும் புரி ஜகந்நாத கோயிலையும் இணைக்கும் அகலமான சாலைக்கு பெயர் ‘கிரண்ட் ரோட்’ சுமார் மூன்று கிமீ தூரம் அகலமான சாலை.

இந்தச் சாலையில்தான் பிரசித்திபெற்ற புரி ஜனந்நாத ரத யாத்திரை நடைபெறும். புரியின் ரதயாத்திரை உலகப் பிரசித்தி பெற்றது.

கோயிலுக்குள்  சென்ற போது கூட்டம் ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி போல காட்சி அளித்தது. கொஞ்சம் நேரம் பிரமிப்புடன் நின்று கொண்டு இருந்தேன். பிறகு படிகளில் காலை வைத்தேன். கூட்டம் என்னை உள்ளே உறிஞ்சிக்கொண்டது.

ஆண் பெண் என்று எந்தப் பாகுபாடும் இல்லாமல், புரி பெருமாளை சேவிக்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் கூட்டம் என்னை மத்து போலக் கடைய, சிறிது நேரத்தில் நம்மாழ்வார் பாடிய ‘கறந்த பாலுள் நெய்யே போல்’ எனக்கு ஸ்ரீ ஜகந்நாதர் காட்சி கொடுத்தார்.

வெளியே மழை விடவில்லை, அதனால் வெளியே போகாமல் பக்தர்களுடன் மீண்டும் மீண்டும் அவர்கள் நெருக்கத்தில் பிழியப்பட்டேன். ஒவ்வொரு முறையும் பெருமாள் சில நிமிஷங்கள் காட்சி கொடுத்தார். அப்போது ஸ்ரீ சைத்தன்ய மஹா பிரபு பற்றி நினைவுக்கு வந்தது. 

ஸ்ரீ சைதன்யரும் புரி ஜகந்நாதரும்

ஸ்ரீ சைத்தன்ய மஹா பிரபு வங்காளத்தில் நாடியாவில் மாயாபூர் என்னும் கிராமத்தில் 1486ம் ஆண்டு பிறந்தவர். ஒரு முறை புரிக்கு வந்த நேராக ஜகந்நாதனை பார்த்தவுடன், காவலர்களை எல்லாம் மீறி, அவரைக் கட்டிக்கொள்ள உள்ளே ஓடியவர், பெருமாளைக் கிட்டே பார்த்தபோது அவர் தன்னையும் மறந்து மயங்கி விழுந்தார். மயங்கியவரைப் பக்கத்தில் இருந்த ஒரு இல்லத்துக்கு அழைத்துச் சென்று மயக்கத்தைத் தெளிய வைத்தார்கள்.

அங்கே இருந்த ஒருவர், ‘கண்ணை கிட்டே சென்றால் நீங்கள் நினைவிழந்துவிடுகிறீர்கள் அதனால் கருட ஸ்தம்பத்துக்குப் பின் புறத்திலிருந்து பாருங்கள்’ என்று அறிவுரை கூறினார். சைத்தன்யரும் சம்மதித்து, அன்றிலிருந்து அங்கிருந்து கையை ஒரு தூணில் வைத்து கண்ணனைத் தரிசிக்க ஆரம்பித்தார். .

அங்கே கூட்டத்தைக் கட்டுப்படுத்திக்கொண்டு இருந்த ஒரு காவல் அதிகாரியிடம் சென்று, ‘இங்கே சைத்தன்யர் பார்த்த இடம் எது என்று கேட்க, ‘என்னை ஆச்சரியமாகப் பார்த்து, என்னைக் கையை பிடித்து அழைத்துச் சென்றார். ஒரு இடத்தில் தூணில் விரலை வைத்து அழுத்தியது போல ஒரு பள்ளம் இருக்க, இங்குதான் சைதன்யர் தன் விரல்களை வைத்து அழுத்தி இப்படி எம்பிப் பெருமாளைப் பார்ப்பார் என்று செய்து காண்பித்தார். நானும் அப்படியே செய்து பார்த்த போது அவ்வளவு கூட்டத்திலும் பெருமாள் அந்த இடுக்கில் ஒளிர்ந்தார்.  

புரி ஜகந்நாதர் கோயில் சில குறிப்புகள்:

புரி ஜகந்நாத கோயில் மிகப் பழமை வாய்ந்தது. சுமார் 10 ஏக்கர் நிலப்பரப்பில் இக்கோயில் அமைத்துள்ளது. நான்கு வாசல் கொண்டது.

ஸ்ரீரங்கம் கோயில் போலப் பல நூற்றாண்டுகளாகப் பல மன்னர்கள் அதைக் கட்டியுள்ளார்கள். முதலில் கர்பக்கிரஹம் அளவுக்குத்தான் கோயில் இருந்திருக்கிறது. பிறகு மணல் மேடுகளால் மூடப்பட்டு கால் மாதவ் என்ற அரசர் குதிரையில் செல்லும்போது, மணல் மேட்டில் குதிரையின் கால்கள் கோபுரத்தின் உச்சியில் பட, அரசன் மணல் மேட்டினை அகற்றிக் கோயிலைப் புனர்நிர்மாணம் செய்தார். பொபி 824ல் ஒடிசாவின் கேசலி வம்சத்தவர், பிறகு பொபி 1038ல் கங்கவம்ச அரசர்கள், பொபி 1200ல் அனந்த வர்மன் என்று பல அரசர்கள் கைங்கரியம் செய்துள்ளார்கள். 1975ல் இந்திய அரசாங்கம் புதைபொருள் ஆராய்ச்சித் துறை மூலம் சுவரில் செதுக்கப்பட்டுள்ள கலை வடிவங்களைச் சீரமைத்தது.

கிழக்கு வாசலில் 36 அடி அருண ஸ்தம்பம் 18ம் நூற்றாண்டில் கோனாரக்கிலிருந்து அன்னியப் படையெடுப்பிலிருந்து பாதுகாக்க இங்கே கொண்டு வரப்பட்டது.

மொத்தம் 18 முறை இந்தக் கோயில் சூறையாடப்பட்டுள்ளது. ஃபெரோஸ் கான் துக்ளக், இஸ்மாயில் கஸ்ஸி, கலா பஹார் என்று பல மொகலாய மன்னர்கள் லூட்டி அடித்து லூட் செய்துள்ளார்கள்.

புரி என்றால் நமக்கு உடனே நினைவுக்கு வருவது பூரி என்ற தின்பண்டம் தான். மத்தியம் இந்தக் கோயிலில் பிரசிதிப்பெற்ற ‘மஹாபிரசாதம்’ சுவைக்கக் கிளம்பினேன்.

மஹா பிரசாதம்

பத்ரி, புரி, ஸ்ரீரங்கம், த்வாரகா ஆகிய நான்கு இடங்கள் மிக புனிதமாகப் போற்றப்படுகின்றன. ஸ்ரீமந் நாராயணன் விடியற்காலை பத்திரியில் நீராடிவிட்டு, த்வாரகாவில் வஸ்திரம் தரித்து, புரியில் அமுது செய்து, திருவரங்கத்தில் சயனிக்கிறார்.

புரியில் பெருமாள் அறு வேளை அமுது செய்கிறார்.

மஹாபிரசாதம் கிடைக்கும் இடத்துக்குச் சென்றேன் – ‘ஆனந்த பஜார்’ என்று பெயர். பிரசாதத்தை உண்ணும் முன் அதை எப்படிச் சமைக்கிறார்கள் என்று பார்க்கலாம்

உலகிலேயே மிகப்பெரிய சமையல் கூடம் புரியில் இருப்பதுதான். ஒரு ஏக்கர் பரப்பில் மொத்தம் 3 x 4 அளவில் 752 மண் அடுப்புகள் கொண்டது.

விறகு, மண் சட்டி பானைகள். எந்த விதமான யந்திரமோ உலோகமோ கிடையாது. கிணற்றிலிருந்து நீரை இராட்டினம் இல்லாமல் கயிற்றால் 30 பேர் இடைவிடாமல் இழுத்துக் கொட்டுகிறார்கள். மிளகாய், வெங்காயம், பூண்டு, காரட், உருளை, தக்காளி போன்ற காய்கறிகள் உபயோகிப்பதில்லை.

சுமார் 400 பேர் உணவைச் சமைக்கிறார்கள். அவர்களுக்கு உதவியாக இன்னொரு 400 பேர் வேலை செய்கிறார்கள். இதைத் தவிர காய்கறி திருத்தவும், தேங்காய் திருகவும் சுமார் 100 பேர் உள்ளார்கள். தினமும் 7200 கிலோ பிரசாதம் தயாரிக்கிறார்கள். விஷேச நாட்களில் 9200 கிலோ. எப்போது சென்றாலும் 1000 பேர் சுலபமாக உணவு அருந்தலாம்.

எல்லாப் பிரசாதமும் பானையில் ஏற்றப்பட்டு மூங்கில் கம்புகளில் கட்டிச் சுமந்து சென்று பெருமாளுக்குப் படைக்கப்படுகிறது. இதற்கு மட்டும் 60 பேர் வேலை செய்கிறார்கள்.

ஒவ்வொரு நாளும் 56 வகையான பிரசாதங்கள் செய்யப்படுகின்றன. 9 சித்ரான்னம், 14 வகை கறியமுது, 9 வகை பால் பாயசம், 11 வகை இனிப்பு, 13 வகை திருப்பணியாரங்கள்.

புரியில் பிரசாதத்தை உண்ண சில முறைகள் இருக்கின்றன. பிரசாதத்தைப் பூமியில் அமர்ந்துதான் உண்ண வேண்டும். மேசை நாற்காலி கூடாது. விநியோகம் செய்ய கரண்டி முதலானவற்றை உபயோகப்படுத்தக்கூடாது. உடைந்த சட்டிப்பானைச் சில்லு அல்லது இலையை மடித்து வைத்துத்தான் பரிமாறுவார்கள்.

சாப்பிடும்போது ஜகந்நாதரை நினைத்துக்கொண்டு சாப்பிட வேண்டும். சாப்பிட்டு முடித்தபின் வாய் கொப்பளிக்கும்போது முதல் வாய் தண்ணீரைத் துப்பாமல் விழுங்க வேண்டும். சாப்பிட்ட இடத்தைக் கைகளால்தான் சுத்தம் செய்ய வேண்டும். அந்த ஊரில் கல்யாணம், விழா என்றால் தனியாக சமையல் கிடையாது. இங்கேதான் சாப்பாடு.

மத்தியானம் இந்த மஹா பிரசாதத்தை ஒரு கை பார்ப்பது என்று முடிவு செய்து கிளம்பினேன். முதலில் கண்ணில் பட்டது பாதுஷா மாதிரி ஒரு பிரசாதம். சுற்றி ஈக்கள் இல்லாமல் தேனீக்கள். சுடச் சுட இலையில் கொடுத்தார்கள்.

அதைச் சாப்பிட்டுக்கொண்டே பார்த்தபோது பக்கத்துக் கடையில் திரட்டுப்பால் மாதிரி இருக்க இதை வேகமாக முடித்துவிட்டு அங்கே சென்றேன். அதையும் ஒரு கை பார்த்துவிட்டு, பால் மாதிரி ஏதோ இருக்க, ‘என்ன ?’ என்றேன். ஏதோ கீர் என்று காதில் விழ, டாப் கீயரில் அதை முடித்துவிட்டுப் பக்கத்துக் கடைக்காரர் வேடிக்கை பார்க்க, அவர் கோவித்துக்கொள்ளப் போகிறாரே என்று அவரிடத்தில் கோதுமைப் போளியைக் கொதறிவிட்டு மூச்சு விடுவதற்குள் இந்தாங்க என்று கோதுமை லட்டு சுவைபார்க்கக் கொடுத்தார். எல்லாம் வெறும் இனிப்பாக இருக்கிறதே என்று காரமாகத் தேட, ஓரமாக ஒரு கடையில் பொங்கல் மாதிரி ஒன்று இருக்க, அதைக் கேட்டபோது ஒரு காலிச் சட்டிப் பானையை உடைத்து அதன் சில்லில் பொங்கல் மற்றும் தால் (இஞ்சி தூக்கலாக) பரிமாறப்பட்டது. கையைச் சுத்தம் செய்யப் போகும் வழியில் தயிர் சாதம் கண்ணில் பட அதையும் சாப்பிட்டு வைத்தேன். அட்டகாசம்! கடைசியாக மோர் இருக்க அதைக் குடித்தபோது, அதனுள்ளே என்ன போடுகிறார்கள் என்று யோசிக்க வைத்தது. நாக்கை வாயினுள் தடவி, சீரகம் மற்றும் என்ன மசாலா பொடிகள் உள்ளே இருக்கு என்று மூளை வேலை செய்ய … முதல் முறை கண்ணன் மீது பொறாமை ஏற்பட்டது.

பெருமாளின் கல்யாண குணங்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறோம் அதை இந்த மஹா பிரசாதச் சந்தையில் அனுபவித்தேன்

புரியில் பல கடைகளில் புரி ஜகந்நாதரின் உருவ பொம்மைகள் கண்ணைக் கவரும். காம்பு தடியாக வெற்றிலைகள், கலர் பொடிகள் என்று எங்கும் வண்ண மயமாக இருக்கிறது. கடைகளை எல்லாம் நோட்டம் விட்டு விட்டு நேராக ராமானுச கூடத்துக்கு புறப்பட்டேன்.

ஸ்ரீராமானுசர் புரி விஜயம்

ஸ்ரீராமானுசர் புரி ஜகந்நாதனைத் தரிசிக்க வந்தபோது இங்கே பூஜை முறைகள் ஆகமத்தின்படி இல்லாததைக் கண்டு அதைச் சரி செய்ய முற்பட்டார். ஆனால் பல்லாண்டுகளாக இங்கே கைங்கரியம் செய்பவர்கள் அதை விரும்பவில்லை. புரி ஜகந்நாதர் ஸ்ரீராமானுசரை இரவோடு இரவாக அவர் உறக்கத்தில் இருக்கும்போது அவரை ஸ்ரீகூர்மத்தில் கொண்டு போய் விட்டுவிட்டார். விடியற்காலை எழுந்து பார்த்த ஸ்ரீராமானுசர் தான் வேறு இடத்தில் இருப்பதைக் கண்டு ஜகந்நாதரின் திருவுள்ளம் அப்படி என்றால் அதற்கு மறுப்பு கிடையாது என்று விட்டுவிட்டார். இன்றும் புரியில் ஸ்ரீராமானுசர் தங்கியிருந்த மடம் மற்றும் எம்பார் மடம் ஆகியவை உள்ளது.

1068ம் ஆண்டு முதல் 1074 ம் ஆண்டு வரை தம்முடன் வந்த ஆயிரக்கணக்கான பக்தர்களுடன் இங்கே தங்கியிருந்தார் என்று சொல்லப்படுகிறது. அந்தச் சமயம் ஆண்டு வந்த மஹாராஜா ஆனந்தவர்மன் சோடகங்கதேவா ஸ்ரீராமானுசருக்குக் கோயிலிலிருந்து சிறிது தூரத்தில் அவர் தங்க நிலம் கொடுத்தான். அங்கு ஒரு மடம் நிர்மாணித்து அவர் அங்கே நித்திய திருவாராதனம் செய்ய, ஸ்ரீவேணுகோபாலன், ஸ்ரீதேவி, பூதேவியைப் பிரதிஷ்டை செய்தார். இன்று அந்த இடம் ‘ராமானுஜகோட்’ என்று அறியப்படுகிறது. அவருக்குப் பிறகு அந்த மடம் எம்பார் தலைமையில் நடைபெற்றது. அப்போது எம்பார் மடம் என்று அழைக்கப்பட்டது. இன்று அதன் பெயர் மருவி ‘எமார் மட்’ என்று அழைக்கப்படுகிறது.

இன்றும் ஸ்ரீராமானுசர் நிறுவிய மடத்தில் பரம்பரையாகக் கைங்கரியம் செய்துகொண்டு இருக்கிறார்கள்.

புரி கோயிலில் உள்ளே தாயார் சன்னதியில் (இங்கே லக்ஷ்மி மந்திர்) சுவரில் ஆழ்வார், ஆசாரியர்கள், ஸ்ரீரமானுசர் மியூரல் ஓவியங்களைக் கொஞ்சம் நேரம் ரசித்துவிட்டுக் கொடியேற்றம் பார்க்க ஆயத்தமானேன்.  

புரி கொடியேற்றம்

கோயில் மீது உற்று நோக்கினால் கோயில் விமானத்தில் சக்கரத்தாழ்வாரும் அதன் மீது சில கொடிகளும் இருப்பதைப் பார்க்கலாம். இந்தக் கோயிலையும், ஊரையும் விமானத்தின் மீதிருந்து ரக்ஷிக்கிறான். கோயிலுக்குச் செல்ல முடியவில்லை என்றால் கோயில் விமானத்தின் மீது இருக்கும் சக்கரத்தாழ்வாரைத் தரிசித்தால் போதும் என்பார்கள். தினமும் மாலை சுமார் நான்கு மணிக்கு இந்த வைபவம் நடைபெறும். குரங்குகளே பார்த்துக் கைதட்டும் அளவுக்கு இவர்கள் கோபுரத்தின் மீது நம்மைப் பார்த்துக்கொண்டு ஏறுவார்கள். கீழே இறங்கி வரும் போது நேற்றைய கொடியை எல்லாம் எடுத்துக்கொண்டு வருவார்கள். பல கொடிகள் விதவித சைஸில் இருக்கும். நான் சின்னதாக ஒன்றை வாங்கினேன். விலை நூறு ரூபாய்.

ஜகந்நாதரின் விமான கோபுரத்தின் உயரம் 214 அடி. அதன் மீது நீலச் சக்கரம் என்று பெயர் பெற்ற சுதர்சனச் சக்கரம் எட்டு உலோகங்களால் செய்யப்பட்டது. 36 அடி சுற்றளவு. அதன் மீது சிகப்பு, வெள்ளை, மஞ்சள் நிறத்தில் கொடிகள் தினமும் சாற்றப்படுகிறது. கருட சேவகர்கள் என்று அழைக்கப்படும் கைங்கரியம் செய்பவர்கள் இதைப் பரம்பரையாகச் செய்து வருகிறார்கள். சுமார் 15 நிமிடத்தில் இந்தக் கோபுரத்தை ஏறிவிடுவார்க்ள். பத்து நிமிடத்தில் கொடிகளை மாற்றி விடுவார்கள். என்ன விதமான சூறாவளி அடித்தாலும் கொடி கட்டப்படும். எட்டு வயதிலிருந்து பயிற்சி கொடுக்கப்படுகிறது.

மாலை கோடியேற்றம் முடிந்த பின் கிஞ்சித்காரம் டிரஸ்ட் சார்பில் ஸ்ரீரமானுஜருடன் புரி ரத யாத்திரை போகும் சாலையில் பல்லக்கில் வீதி உலா சென்றது இனிய அனுபவம். ஸ்ரீராமானுஜர் காலத்தில் அவருடன் செல்ல முடியவில்லை. ஆனால் 1000 ஆண்டுகள் கழித்து செல்ல முடிந்தது.

இரவு மீண்டும் புரி ஜகந்நாதரை சேவிக்கச் சென்றேன். பத்து மணிக்கு உள்ளே சென்றேன். கூட்டம் இருந்தது. பிறகு கொஞ்சம் கொஞ்சமாகக் கூட்டம் குறைந்து, காலை இந்த இடத்திலா இவ்வளவு கூட்டம் என்று மலைப்பாக இருந்தது. இரவு 11.30 மணிக்கு மொத்தம் 20 பேர்தான் இருந்தார்கள். பெருமாளுக்குப் பழைய வஸ்திரங்கள் களையப்பட்டன. புதிய வஸ்திரங்கள் ஒவ்வொன்றாக மாற்றப்பட்டன. பிரசாதம் கண்டருளச் செய்த பின் மூன்று கட்டில்கள் உள்ளே சென்றன. சிகப்பு, நீலம், மஞ்சள். பிறகு பாடல்கள் இசைக்கப்பட்டு விளக்குகளை ஒவ்வொன்றாக அணைத்தார்கள்.

குட் நைட் என்று சொல்லிவிட்டுத் திரும்பினேன்.

புரி ரத யாத்திரை சில குறிப்புகள்:

வருடம் தோறும், ஆனி மாதம் பௌர்ணமியில் தொடங்கி ஆடி மாதம் சுக்ல சதுர்தசியன்று முடியும் இந்த ரத யாத்திரைக்கு உலகமெங்கும் லட்சக்கணக்கான மக்கள் திரண்டு வருகிறார்கள். குண்டிசா மந்தரில் தாரு ரூபத்தில் உருவான இடம் கண்ணனின் பிறந்த இடம். அதனால் குண்டிச்சா மந்திர்தான் மதுரா. கண்ணன் பத்து வயதுக் குழந்தையாக கோகுலத்திலிருந்து தன் பிறந்த ஊரான மதுராவிற்கு வருவதை நினைவு கூர்கிறது இந்த ரத யார்த்திரை. மொத்தம் மூன்று தேர்கள். வருடா வருடம் மூன்று தேர்களும் புதுசாக 2188 மரத்துண்டுகளால் செய்யப்படுகிறது. செய்ய இரண்டு மாதங்கள் ஆகும்.

கண்ணனின் தேரின் பெயர் நந்தி கோஷ் – 16 சக்ரங்கள், உயரம் 45 அடி. தேர்ச் சீலைகளின் வர்ணம் மஞ்சள். பலராமனின் தேரின் பெயர் – தாலத்வஜம் – 14 சக்ரங்கள் – உயரம் 44 அடி – தேர்ச் சீலைகளின் வர்ணம் நீலம். சுபத்திராவின் தேரின் பெயர் – பத்மத்வஜம் – 12 சக்ரங்கள் – உயரம் 43 அடி – தேர்ச் சீலைகளின் வர்ணம் சிகப்பு.

முன் ஊர் அரசன் தங்கத் துடைப்பத்தால் பெருக்கியவுடன் தேர்கள் புறப்படும். முதலில் பலராமர், பிறகு சுபத்திரா, கடைசியில் கண்ணன். அலங்காரத்தோடு தேர்கள் கோயிலிருந்து குண்டிச்சா மந்திருக்கு நகர்ந்து செல்லும். ஸ்ரீரங்கத்தில் நடக்கும் மட்டையடி உற்சவம் மாதிரி இங்கேயும் உண்டும். போனவர்கள் எங்கே கணோம் என்று ஸ்ரீ லக்ஷ்மி தேவி தேர் இருக்கும் இடத்துக்கு வந்து தேரின் ஒரு பகுதியை உடைத்துவிட்டுச் செல்வார்.

நவ கலேவர உற்சவம்

எந்த ஆண்டில் ஆனி மாதத்தில் இரண்டு பௌர்ணமிகள் வருமோ அப்போது புதிய திருமேனியை மரத்தால் செய்கிறார்கள். நவ என்றால் புது, கலேவர என்றால் திருமேனி. இதற்காக காகாத்புர் (சுமார்அ நாற்பது மைல் தொலைவில் இருக்கிறது) என்ற காட்டுக்குச் சென்று சில அடையாளங்களுடன் இருக்கும் வேப்ப மரத்தைத் தேர்ந்தெடுக்கிறார்கள். 21 நாள் தச்சர்களைச் கொண்டு செதுக்குவார்கள். அமாவாசை அன்று இருட்டிய பிறகு ஊரில் மின்சாரம் துண்டிக்கப்படும். ஊர் முழுக்க இருட்டாக இருக்கும் சமயம், புதிய திருமேனியை எழுந்தருளப் பண்ணிக்கொண்டு பழைய திருமேனியின் பக்கம் வைப்பார்கள். பூசாரிகள் கண்களைக் கட்டுக்கொண்டு பழைய திருமேனியின் நாபியில் இருக்கும் பிரம்மபதார்த்தம் என்ற பெரிய சாளக்கிராம மூர்த்தியை எடுத்துப் புதிய திருமேனியில் பொருத்துவார்கள். பழைய திருமேனியை கோயிலா வைகுண்டம் என்ற இடத்தில் பூமிக்கு அடியில் புதைத்துவிடுவார்கள்.

இந்த உற்சவம் 12 முதல் 19 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும். உற்சவம் நடந்த ஆண்டுகள் – 1912, 1931, 1950, 1969, 1977, 1996, 2015.

Posted on Leave a comment

ஒரு கிரைம் கதை (சிறுகதை) | சுஜாதா தேசிகன்


SarvayoniShu Kaunteya MurrtayaH SaMbhavanti YaaH |
Taasaam Brahma Mahat YoniH Aham BeejapradaH Pitaa ||


Whatever forms (of beings) are produced in any wombs, O Arjuna, the Prakriti (i.e. the matter at large) is their great womb (mother) and I am the sowing father (to all beings)


– Shrimad Bhagawad Gita Chapter 14 Shloka 4



அன்று சீக்கிரம் விழிப்பு வந்திருக்காவிட்டால் அந்த அபூர்வ வழக்கில் ஈடுபட்டிருக்க மாட்டேன். வழக்கு என்றவுடன் நான் ஏதோ வக்கீலோ போலீஸோ என்று நினைக்க வேண்டாம். சென்னையில் சாதாரண கம்ப்யூட்டர் இன்ஜினியர். மென்பொருளாளர்களைப் பற்றிய பிம்பம் ஒன்று ஏற்கெனவே பல எழுத்தாளர்களால் உருவாக்கப்பட்டிருப்பதால் என்னை நானே விவரித்து நேர விரயம் செய்ய விரும்பவில்லை.

வழக்கமாக ஏழரை மணிக்கு விழிப்பு வரும். முதல்நாள் நிறைய நேரம் தொலைக்காட்சியில் விவாதத்தைப் பார்த்ததால் சரியான தூக்கம் இல்லை. சீக்கிரமே முழிப்பு வந்து, பாண்டி பஜார் போலீஸ் ஸ்டேஷன் பக்கம் பைக்கை நிறுத்திவிட்டு, பிளாட்பாரத்தில் மயில் தோகை போல அடுக்கப்பட்ட அன்றைய நாளிதழில் ஒர் இறக்கையைப் பிடுங்கி, பக்கத்தில் இருக்கும் சரவணாவில் “காபி… சக்கரை இல்லாம…” என்று தினத்தந்தி ‘ஆன்மீக அரசியலை’ பிரித்தபோது, முதுகுக்குப்பின் “கண்டரோல் ரூம்… ஓவர்… ஓவர்” என்ற இரைச்சலான வாக்கிட்டாக்கி அதைக் கலைத்து, போலீஸ் என்று உணர்த்தியது.

ரயில் நிலையத்தில் சத்தத்துக்கு நடுவில் தூங்கும் குழந்தையைப் போல அந்த இரைச்சலை சட்டைசெய்யாமல் மொபைலில் பேசிக்கொண்டு இருந்தார்.

“சார் நம்ம ஜுரிஸ்டிக்ஷன்தான்…”

“….”

“சார்.. நைட் முழுக்க மெரினாவிலதான் டியூட்டி.. இப்ப தான் காலைல வந்தேன்.”

“….”

“ஆமா சார் என்.ஆர்.ஐ. கன்பர்ம் சார்… அந்த ஜவுளிக் கடை ஓனர் பையன்தான் சார்.”

“….”

“அடிச்சு சொல்றான் சார்..”

“…..”

“நம்ம ஸ்டேஷன்லதான் பையன உக்கார வைச்சிருக்கேன் சார்.”

“…..”

“ஓகே சார்… சார்… சார்…” என்று பேச்சு துண்டிக்கப்பட்டு இரைச்சலுக்கு நடுவில் “சாவுக்கிராக்கி…” என்று முணுமுணுத்துக் கொண்டு ஒரு விதப் பதட்டத்தில் இருந்தது தெரிந்தது.

காபி வர அதை எடுத்துச் சுவைத்தேன். சக்கரையுடன் இருந்தது.

“ஹலோ… சக்கரை இல்லாத காபி கேட்டா… பாயசம் மாதிரி…” என்றபோது பின்பக்கத்திலிருந்து, “உங்க காபி இங்கே வந்திருச்சு… சீனியே.. இல்லாம” என்றார் போலீஸ் அதிகாரி. திரும்பிப் பார்த்தேன். நல்ல உயரம், அளவான மீசையுடன் சினிமாவில் வரும் சமுத்திரகனி மாதிரியே இருந்தார்.

“சாரி சார், மாறிப்போச்சு. வேற எடுத்தாறேன்” என்று சர்வர் இரண்டு காபியையும் எடுக்க, “வேற காபி கொண்டுவா… அப்பறம் இதை எடுத்துகிட்டு போ… இதையே மாத்தி கொடுத்தா?”

“அப்படில்லாம் செய்ய மாட்டோம் சார்…” என்று உள்ளே மறைந்தான். நான் காவல் அதிகாரியைப் பார்த்துச் சிரித்து, “உங்க வேலையே ரொம்ப டென்ஷன்… இப்ப குழப்பமான அரசியல் சூழ்நிலை வேற..?” என்று சொல்லிக்கொண்டே, முதல் பக்கத்தைப் பார்த்தபோது அவரும் முதல் பக்கச் செய்தியைப் பார்த்தார்.

“ஆமா… தேர்தல் வந்தா நிம்மதி… எல்லா இடத்திலேயும் இழுக்கிறாங்க…. டிரான்ஸ்பர் நிச்சயம்.”

அதற்குள் இன்னொரு போன் வந்தது.

“எஸ் சார்.”

“….”

“நானே பாஸ்போர்ட்டை பாத்துட்டேன்… யூ.எஸ். சிடிசன்தான் சார்.”

“….”

“நம்ம ஸ்டேஷன்தான்.”

“…”

“சார்… எஸ் சார்.”

அவர் பேசியபோது அவர் முகத்தில் மேலும் டென்ஷன் கூடியிருந்தது.

“சார் இது உங்களுக்கு” என்று சர்வர் கொண்டு வந்த காபியை கையில் எடுத்துக்கொண்டே, “எந்த மாதிரி எல்லாம் கேஸ் வருது பாருங்க…” என்றார்.

“என்ன ஆச்சு சார்?”

“இன்னிக்கு காலையில ஐஞ்சு மணிக்கு ஒத்தன் வந்தான்.. என்.ஆர்.ஐ.

போன வாரம்தான் யு.எஸ்ஸிலிருந்து வந்திருக்கிறான். இங்கேதான் சாரி ஸ்ட்ரீட்டுல வீடு.”

“பாஸ்போர்ட் தொலைஞ்சு போச்சா?”

“அதெல்லாம் இல்ல. எங்க அப்பா மாதிரி வேஷம் போட்டுக்கிட்டு ஒருத்தன் என்னை ஏமாத்துகிறான் என்கிறான்.”

“அது யார்?”

“அவன் அப்பா!”

“அது எப்படி சார்? அவனோட அம்மா?”

“அவங்களும் போலியாம்.”

“இண்ட்டரஸ்டிங்…”

“எங்களுக்கு அப்படி இல்ல. பெரிய இடம், என்.ஆர்.ஐ வேற. ஜாக்கிரதையா ஹாண்டில் பண்ண வேண்டியிருக்கு. மீடியா வேற பிரேக்கிங் நியூஸுக்கு அலையிது.”

“இப்ப அந்தப் பையன் எங்கே…”

“நம்ம ஸ்டேஷனில்தான் இருக்கான்…” என்று அவசரமாகக் காபியைக் குடித்துவிட்டுப் புறப்பட்டார்.

இதை வைத்துக்கொண்டு க்ரைம் கதை ஒன்றை எழுதலாமே என்ற எண்ணமும், கூடவே “நீங்க எழுதுவதே ஒரு க்ரைம்தான்” என்று மனைவி சொன்னது ஞாபகத்துக்கு வந்தது. காபிக்குப் பணம் கொடுத்துவிட்டு அவர் பின்னால் தன்னிச்சையாகச் சென்றேன்.

செல்போனில் யார் நம்பரையோ தேடிக்கொண்டு இருந்தவரிடம், “சார்.. ஒரு ரிக்வஸ்ட்” என்றுபோது திரும்பினார். “அந்த பையனைப் பார்க்கலாமா?”

“எதுக்கு… நீங்களும் மீடியாவா?”

“மீடியாலாம் இல்ல சார். சாஃட்வேர்லதான் வேலை செய்றேன்….” கம்பெனி பெயரைச் சொன்னேன். பத்து செகண்ட் யோசனைக்குப் பிறகு, “வாங்க. ஆனா மொபைல்ல படம், ஃபேஸ்புக், வாட்ஸாப் எல்லாம் கூடாது. சரியா?” என்றார் முன்ஜாக்கிரதையாக.

“ஓகே சார்.”

சல்யூட் அடித்த கான்ஸ்டபளிடம், “ஸ்டேஷன் வாசல்ல பைக் நிப்பட்டியிருக்காங்க… க்ளியர் செய்ங்க”

“என் பைக்தான்.”

“சரி ஓரமா நிப்பாட்டுங்க…”

சிகப்பு, நீல வண்ண போர்டில் ஆர்-4 என்று எழுதியிருக்க அதன் கீழே பேரிகேட் ஒன்று கால் இல்லாமல் சாய்ந்திருந்தது. அதன் மீது ஏதோ ‘சில்க்ஸ்’ என்று எழுதியிருப்பதைக் கடந்து உள்ளே சென்றபோது பார்சல் தோசை வாசனை என் மூக்கிலும், தோசை கான்ஸ்டபிள் வாயிலும் போய்க்கொண்டு இருந்தது.

சல்யூட்டை வாங்கிக்கொண்டு இன்ஸ்பெக்டரைத் தொடர்ந்தேன். அங்கே இருந்த ஒரு நாற்காலியில் அந்தப் பையன் தன் ஐபோனைத் தடவிக்கொண்டிருந்தான். முட்டி பகுதியில் ஒட்டுப்போட்ட ஜீன்ஸ், மெலிதான லினென் சட்டை இரண்டு பட்டன் போடாமல் உள்ளே வெள்ளை நிற பனியன், அதில் கருப்பாக ஏதோ எழுதியிருக்க சிக்கனமாகச் சிரித்தான்.

போலீஸ் அதிகாரி இருக்கையில் உட்கார்ந்தபோது மேஜை மீது அவர் பெயர் ஷண்முகம் என்று காட்டியது. தூசு ஸ்ப்ரே அடித்த மேஜை கண்ணாடிக்குக் கீழே காஞ்சி பெரியவர் ஆசிர்வதித்துக்கொண்டு இருந்தார்

அந்தப் பையன் அவர் முன் வந்து உட்கார்ந்தான்.

“எதுக்குப்பா உங்க அப்பா மாதிரி வேஷம் போட்டு ஏமாத்தனும்?”

“தட்ஸ் வை ஐம் ஹியர்.”

“சரி உங்க வீட்டு நம்பர் கொடு…”

கொடுத்தான். இன்ஸ்பெக்டர் போனில் பேச ஆரம்பித்தார்.

“நான் பாண்டி பஜார் R4 போலீஸ் இன்ஸ்பெக்டர் சன்முகம் பேசறேன். ஒண்ணுமில்ல சார். ஒரு… ஸ்டேஷன் வர முடியுமா?”

“…”

“பையன் இங்கேதான் இருக்கான்.”

“…”

“வாங்க சார் பேசிக்கலாம்.”

“…..”

“அவசரம் இல்ல. ஆனா இன்னும் ஒன் ஹவர்ல வாங்க. ராஜ்பவன் டியூட்டி.”

மறு முனையில் பதற்றத்தை உணர முடிந்தது.

“உங்க அப்பா வராரு.”

“லுக், ஹி இஸ் நாட் மை டாட்…” என்று அந்தப் பையன் ஐபோன் ஆப் ஆனான்.

நாற்பது நிமிடத்தில் ஸ்டேஷன் வாசலில் ஒரு ஆடி ஏ-3 கருப்பு நிற கார் வந்து நின்றது. செண்ட்டும் கோல்கேட் வாசனையும் கலந்து நுழைந்தவர் முகத்தில் கலவரம் தெரிந்தது. கோல்ட் ஃபிரேம் கண்ணாடி, கையில் வெயிட்டாக வாட்ச் பளபளத்தது. காலையிலேயே கூலிங் கிளாஸுடன் இருந்தார். பார்க்க ஐம்பத்தைந்து வயது இருக்கும் போலத் தெரிந்தார்.

“இன்ஸ்பெக்டர் நான் சொல்றதை கேளுங்க” என்றார் படபடப்புடன்

“பொறுமையா பேசுங்க. நீங்க நிஜமான அப்பா இல்லையாமே.”

“சார், நான்தான் சார் அவன் அப்பா” என்று சுற்றிமுற்றும் பார்த்துக்கொண்டார். பார்வையில் அந்தஸ்து பற்றிய கவலை தெரிந்தது.

“ஹீஸ் நாட் மை டாட்.”

“இருங்க சார், இங்கே சண்டை வேண்டாம்.”

“இல்ல சார், இவங்க அம்மா கூட வந்திருக்காங்க. கேட்டுப்பாருங்க.”

“எங்கே?”

“கார்லதான் இருக்காங்க… போலீஸ் ஸ்டேஷனுக்குள்ளே வர… இன்ஸ்பெக்டர் உங்களுக்கு ஆட்சேபனை இல்லைனா எங்கே வீட்டுலேயே நீங்க விசாரிக்கலாம். அப்பறம் உங்க கூட கொஞ்சம் தனியா பேசணும்.”

“என்ன பேசணும்.” கேட்டுக்கொண்டே இன்ஸ்பெக்டர் வெளியே சென்றார்

பையன் ‘கிரஷ் கேண்டி’ விளையாடிக்கொண்டிருக்க அவனிடம் “ஹலோ” என்றேன்.

திரும்ப அவன் ‘ஹை’ என்று சொல்லுவதற்குள் போன் வர “எக்ஸ்யூஸ் மீ” என்று பேச ஆரம்பித்தான்.

“எஸ் டாட். ஐம் இன் போலீஸ் ஸ்டேஷன். காப்ஸ் ஆர் இன்வஸ்டிகேட்டிங். வில் கம் ஹோம்.”

அவன் பேசி முடித்தபின் இன்ஸ்பெக்டர் மீண்டும் உள்ளே நுழைந்தார். முகத்தில் கலவரம் தெரிந்தது.

என்னைத் தனியாகக் கூப்பிட்டு, “உங்க பேர் சொல்லுங்க சார்.”

சொன்னேன்.

“இந்த கேஸுக்கு நீங்க உதவ முடியுமா?”

“நானா?”

“ஆமாம் சார். இந்தப் பையனை கொஞ்சம் விசாரிக்கணும்.”

“பிரச்சனை ஒண்ணும் வராதே.”

“சேச்சே.”

“அப்பறம் உங்களிடம் ஒரு விஷயம்.”

“சொல்லுங்க….”

“நீங்க வெளியே போன சமயம் அவனுக்கு ஒரு போன் வந்தது…” என்று சொல்ல, “யார் அவன் டாடி பேசினாரா?” என்றார் இன்ஸ்பெக்டர்.

ஆச்சரியமும் குழப்பமும் கலந்து கண்ணைச் சுருக்கிக்கொண்டு “எப்படி உங்களுக்குத் தெரிந்தது?” என்றேன்.

“வெளியே போனபோது இங்கே வந்த அவன் அப்பாதான் போன் போட்டுப் பேசினார். ஸ்பீக்கர் போனில். அவன் டாட் டாட்ன்னு சொல்றான்.. ஆனா நேர்ல பார்த்தா டாட் இல்லையாம்.”

“நான் என்ன செய்யணும்?” என்றேன் குழப்பமாக.

“ஒண்ணும் இல்ல. அவனோட பழகி பாருங்க ஏதாவது க்ளூ கிடைக்குதான்னு பார்க்கலாம். பெரிய இடத்து விவகாரம்… டிபார்ட்மெண்ட் ஆளை போட்டா லீக் ஆகிவிடும்..”

“எவ்வளவு நாள்?”

“பழகுங்க. பார்க்கலாம்.”

“தினமும் எனக்கு ரிப்போர்ட் செய்யுங்க. வாட்ஸ் ஆப்பில் இருக்கீங்க இல்ல. நம்பர் கொடுங்க.”

கொடுத்துவிட்டுப் பையன் பக்கம் சென்றபோது சின்னதாக, ‘ஹாய்’ யைத் தொடர்ந்தான்.

“ஹாய்.. சாரி, வாஸ் ஆன் எ கால். ஐயம் தீபக்.”

என் பேர் சொன்னேன்.

“க்ரேட்…” என்றதில் அமெரிக்கா கலந்திருந்தது.

கொஞ்சம் நேரம் மௌனத்துக்குப் பிறகு அவன், “எவரித்திங் குட்?”

“யா.”

“தென் வை ஆர் யூ ஹியர்?”

“ஐ லாஸ்ட் மை பைக்…” என்று சட்டென்று தோன்றிய பொய்யைச் சொன்னேன்.

“ஐ லவ் பைக்ஸ். யூ லாஸ் இட்?” என்றான் புருவத்தை உயர்த்தி.

“பட் காட் இட் பேக். ஜஸ்ட் கேம் ஹியர் டு தாங்க் தெ காப்ஸ்” என்று பொய்யின் ஆயுட்காலத்தை முடிவுக்குக் கொண்டு வந்தேன்.

“வாவ்.. வேர்ஸ் இட்?”

“அவுட்சைட்.”

என்னிடம் அனுமதி கூடக் கேட்காமல்.. வெளியே ஓடினான்

“வாவ் யமஹா. A15.. கான் வீ கோ ஃபார் ரைட்?”

“நாட் நவ். மே பி இவினிங் ஆப்டர் ஃபை?”

அவர்கள் கிளம்பிச் செல்லும்போது, போலீஸ் அதிகாரி என்னைக் காண்பித்து அவனுடைய பெற்றோரிடம் ஏதோ சொல்லிக்கொண்டிருந்தார்.

ஆடி புறப்பட்டபின், “பையனை ஃபிரண்ட் பிடித்துவிட்டீங்க போல?”

“பைக் அவனுக்கு ரொம்ப பிடிக்கும் போல. சாயந்திரம் ரைடு போகலான்னு சொல்லியிருக்கிறேன்.”

“சரி பார்த்து போங்க. வந்தவர் யார் தெரியுமா?”

“தெரியாது. எங்கோ பார்த்த மாதிரி இருக்கு.”

அவர் விரலை நீட்டிய திக்கில் திரும்பியபோது “…. புடவைக் கடை ஓனர்.”

சட்டென்று நினைவுக்கு வந்து, “ஆமாம்… பார்த்திருக்கிறேன்.”

“உங்களை பத்தி சொல்லியிருக்கிறேன்.. ஏதாவது உதவி தேவைப்பட்டா சொல்லுங்க.”

அலுவலகத்தில் டிசைன் ரெவ்ய்யூ போது அந்த ‘வாட்ஸ் ஆப்’ செய்தி ஒளிர்ந்தது.

“Deepak: What time?”

“6pm” என்று பதில் அனுப்பினேன்.

ஐந்து மணிக்கு அலுவலகத்தை விட்டுக் கிளம்பி உஸ்மான் சாலை அவசரத்தைக் கடந்து இடதுபக்கம் திரும்பியபோது எல்லா அவசரமும், சத்தமும் ஸ்விட்ச் போட்ட மாதிரி நின்று அமைதியாக இருந்தது சாரி தெரு.

அமுல் ஐஸ்கிரீம் கடையும், மின்சாரக் கம்பத்தில் மஞ்சள் நிறத்தில் ‘நிரந்திர வைத்தியம்!! மூலம் விரைவீக்கம் பௌத்தரம்.. ஆண்மைக்குறைவு!! ஆபரேஷன் இல்லாமல் சிகிச்சை…’ சுவரில் ‘ஸ்வச் பாரத் – தூய்மையான இந்தியா’ என்று எழுதியிருந்த காம்பவுண்ட் கேட்டில் பெயர்ப் பலகை பித்தளையில் பளபளத்தது.

பைக்கை நிறுத்திவிட்டு இறங்குவதற்குள் செக்யூரிட்டிக்கும்முன் வேர்வை வாசனை வந்தது.

“யார் சார்?” என்று கேட்டதில் “இங்கே பைக் வைக்கக் கூடாது” என்பது அவர் பார்வையில் தெரிந்தது. சொன்னேன்.

“என்ன விஷயமா?” என்ற கேள்விக்கு பதில் சொல்லலாமா வேண்டாமா என்று யோசித்துவிட்டு “பார்க்கணும்” என்றேன்.

அங்கே சின்ன பெட்டிக்கடை மாதிரி அவர் இருந்த அலுவலகத்தை அடைந்து இண்டர்காமில் பேசினார்.

“ஐயா வர டைம்… பைக்கை ஓரமாக வெச்சுட்டு போங்க” என்று அனுமதி கொடுத்தார்.

சிசி டிவி கேமராவைக் கடந்து சென்றால் கார் நிற்கும் இடத்துக்குப் பக்கம் மினி கோயிலில் பளிச் சென்று வேட்டி கட்டிக்கொண்டு இருந்தார் பிள்ளையார். வரவேற்பு அறையில் இருந்த செடிகள் பிளாஸ்டிக் மாதிரி இருந்தது. வரிசையாக தஞ்சாவூர்த் தட்டு கேடயமும், முதலமைச்சர், மந்திரிகளுடன் ஐயாவின் படங்கள் வரிசையாக அடுத்தடுத்த முதலமைச்சர்களுடன் இவருடைய உயர்வும், வயதும் சேர்ந்து கூடியிருந்தது தெரிந்தது.

“ஹேய்” என்று குரல் கேட்டுத் திரும்பியபோது தீபக் ரவுண்ட் நெக் வெள்ளை டி.சர்ட்டில் “When nothing goes right… go left” என்றது.

“யூ லுக் வெரி ஃபார்மெல்.”

“ஜஸ்ட் ரிடர்னிங் ஃபர்ம் வர்க்.”

“ஓகே. வேர் கான்வி கோ?” என்று கேட்டுவிட்டு அவனே “பீச்?” என்றான்.

நான் பைக் ஓட்ட பைக் பின்புறம் உட்கார்ந்துகொண்டான். செக்யூரிட்டி ஆச்சரியம் கலைவதற்குள் தி.நகர் ஜனத்தொகையில் கலந்து ஜி.என்.செட்டி சாலையை தொட்டபோது, “திஸ் பைக் இஸ் ஆஸம்…”

“தாங்க்ஸ்.”

“யூ நோ வாட் திஸ் பைக் இஸ் 19பிஸ் பவர், ஃபோர் ஸ்டிரோக் அலுமனியம் என்ஜின். ஆம் ஐ ரைட்?”

புரியாமல் “ஐ டோண்ட் நோ… யூ நோ அ லாட் அபவுட் பைக்ஸ்.”

“ஐ லைவ் பைக்ஸ்.”

பீச்சில் துப்பாக்கியால் பத்து ரூபாய்க்கு இரண்டு பலூனைச் சுட்டுவிட்டு “க்ரேஸி” என்றான்.

“விச் யூனிவர்சிட்டி இன் அமெரிக்கா?” என்று பேச்சை ஆரம்பித்தேன்.

“மாசசூசெட்ஸ்… யூநோ?”

“யா…”

“டிட் எம்.எஸ் இன் டாட்டா அனலிடிக்ஸ். ஐ லவ் திஸ் பிலேஸ்” என்றான் மாங்கா கடித்துக்கொண்டே.

“ஹவ் இஸ் யூ எஸ்?”

“கூல். யூ வாண்ட் டு சீ சம் பிக்சர்ஸ்?” என்று ஐபோனைத் தேய்த்துச் சில படங்களைக் காண்பித்தான்.

ஆரஞ்சு கலர் மரக் கூட்டங்களுக்கு மத்தியில் தனியாக நின்றுகொண்டிருந்தான். “சீ திஸ்” என்று காண்பித்த படத்தில் அவன் ஒரு ராட்சச பைக்குடன் இருந்தான்.

அந்தப் படத்தைப் பெரிது செய்ய முற்பட்டபோது அடுத்த படம் வந்தது. அதில் இவனுடன் அவன் அப்பா, அம்மாவும் ஜீன்ஸில் இருந்தார்கள்.

“யூர் டாட் அண்ட் மாம்?” என்றேன்

“யா” என்றான். கொஞ்ச நேர மௌனத்துக்குப் பிறகு, “டாட் ஆண்ட் மாம் நௌ அட் மை ஹோம் ஹியர் ஆர் இம்போஸ்டர்ஸ்.. தீஸ் ஆர் மை ரியல் டாட் ஆண்ட் மாம்” என்றான். என்ன பதில் சொல்ல என்று யோசிக்கும்போது இன்ஸ்பெக்டரிடமிருந்து போன்.

“…”

“கிளம்பிட்டோம்..சார்…”

“….”

“இன்னும் அரை மணியில இருப்பேன்.”

“லெட்ஸ் கோ” என்று கிளம்பி அவன் வீட்டுக்குப் போகும்போது, “யுவர் பைக் டிஸ்க் பிரேக்ஸ் ஆர் ஆசம்” என்றான்.

அவன் வீட்டுக்கு வந்தபோது, “கான் ஐ ரைட் யூர் பைக்?”

“வை நாட்” என்று யோசிக்காமல் கொடுக்க, ஏ.ஆ.ரஹ்மான் கிட்டாரை எடுப்பது போல எடுத்து அதில் உட்கார்ந்துகொண்டு, இலவம் பஞ்சு காற்றில் பறப்பது போல பைக்கின் முன் பக்கச் சக்கரத்தை மேலே உயர்த்தி ஒற்றைச் சக்கரத்தில் வீலீங் செய்து புன்னகையுடன் திருப்பும்போது முகத்தில் அலட்சியம் தெரிந்தது.

“தாங்க்ஸ்… நைஸ் இவினிங்… பை” என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றான்.

கனவு போல இருந்தது.

இன்ஸ்பெக்டரைப் பார்க்கச் சென்றேன்.

ரிப்போர்ட்டரைப் படித்துக்கொண்டு, “கொஞ்சம் வெய்ட் செய்யுங்க. ராஜ்பவன் டியூட்டி. வந்துடுவார்” என்றார் ஒரு காக்கி.

சிறுது நேரத்தில் இன்ஸ்பெக்டர் அங்கே வந்தபோது எல்லோரும் எழுந்து நின்றார்கள்.

“சாப்பிட்டாச்சா?” என்று கேட்டுவிட்டு பதிலை எதிர்ப்பார்க்காமல் சரவணபவனுக்கு அழைத்துச்சென்று, “இட்லி, மசால் தோசை, காப்பி” என்று சொல்லிவிட்டு “உங்களுக்கு என்ன?”

“ஒண்ணும் வேண்டாம் வீட்டுக்கு போய்…”

“சரி… என்ன சொல்றான் உங்க ஃபிரண்ட் தீபக்?”

அமெரிக்கா படிப்பு, டேட்டா மைனிங், பைக் பற்றிப் பல விஷயங்கள் தெரிவது, கடைசியாக வீட்டுக்கு வந்தபோது அவன் செய்த வீலிங் என்று எல்லாவற்றையும் சொன்னேன்.

“தெரியும்” என்றார்.

“அவன் அப்பா, அம்மா பற்றி பேசினீங்களா?”

“அவன் அப்பா அம்மா படம் அவன் மொபைலில் இருக்கு. அதுதான் அவன் நிஜ அப்பா அம்மாவாம். வீட்டில் இருப்பது அவன் அப்பா அம்மா இல்லையாம்” என்றேன்.

இட்லி வர, “மண்டை காயுது” என்று அவசரமாகச் சாப்பிட்டு முடித்தார். கிளம்பும்போது, “அடுத்த முறை அவனை சந்தித்தால் உங்க பைக்கைக் கொடுக்காதீங்க. வில்லங்கமான பையன். அமெரிக்காவில இப்படி ஓட்டி ஆக்ஸிடண்ட் ஆகி ஒரு வாரம் கோமாவுல வேற இருந்தான். ஜாக்கிரதை” என்றபோது நல்லவேளை என்று நினைத்துக்கொண்டேன்.

“சரி சார். வெள்ளிக்கிழமை வரை ஆபீஸில் கஸ்டமர் விசிட்.. தீபக்கை பார்க்க முடியாது.”

“சரி பாருங்க. ஏதாவது உதவி தேவைப்பட்டா சொல்லுங்க.. என் நம்பர் இருக்கில்ல? அப்பறம் சனிக்கிழமை லீவுதானே?”

“ஆமாம்.”

“அப்ப லஞ்சுக்கு லீமெரிடியன் வந்துடுங்க. தீபக் அப்பா கூப்பிட்டிருக்கிறார். தீபக்கையும் கூட்டிகிட்டு வருவாங்க. ஏதாவது பேசி செட்டில் செய்ய முடியுமா என்று பார்க்கலாம்.”

“சரி.”

சனிக்கிழமை லீமெரிடியன் சென்றபோது ஸ்டார் ஹோட்டல் வாசனை அடித்தது. தலைக்கு மேலே விளக்குகள் பளபளக்க, ரெடிமேட் புன்னகையுடன் பேசிக்கொண்டிருந்தார்கள்.

“மே ஐ ஹெல்ப்யூ” என்ற லிப்ஸ்டிக் பெண்ணிடம் “ஃபுபே ஹால்” என்றவுடன் அது ஏதோ ஜோக் போலச் சிரித்துவிட்டு எட்டு அடி கூட நடந்து கதவைத் திறந்துவிட்டாள்.

மூலையில் தீபக் அமர்ந்திருக்க அவன் அப்பா அம்மா அவன் எதிரில் அமைதியாக இருந்தார்கள். இன்ஸ்பெக்டருக்கு முன் சூப் இருந்தது.

“கொஞ்சம் லேட்டாவிட்டது…” என்று அமர்ந்தேன்.

“ஹாய்” என்றான் தீபக் என்னைப் பார்த்து. அவன் அம்மா அவனிடம் “பாஸ்தா” என்று பேச்சுக் கொடுக்க அதை சட்டை செய்யாமல் இருந்தான். இன்ஸ்பெக்டர் அவர்களைத் தன் மொபைலில் படம் பிடித்தார்.

அந்தச் சூழலிலிருந்து தப்பிக்க, சாப்பிடத் தட்டு எடுக்கச் சென்றபோது தீபக் என்னைப் பின்தொடர்ந்தான்.

“யூ நோ வாட். மை ரியல் மாம் ஆன் டாட் ஆர் ஆல்சோ ஹியர்” என்றான்.

புரியாமல் விழிக்க, “வில் ஷோ யூ” என்று என்னை அழைத்துக்கொண்டு சென்றான்.

இன்ஸ்பெக்டர் எங்களைப் பார்த்துவிட்டு, கையில் தட்டுடன் வர நான் அவரிடம் , “சார் அவனுடைய நிஜ அம்மா அப்பா வந்திருக்காங்களாம்” என்றேன்.

“நிஜ அம்மா அப்பாவா?”

“ஆமாம் அப்ப அங்கே பாஸ்தா சாப்பிட்டுக்கொண்டு இருப்பது?” என்று இன்ஸ்பெக்டர் சொன்னதைக் காதில் வாங்காமல் “லெட்ஸ் கோ” என்று சொன்ன தீபக்கை பின்தொடர்ந்தோம். ஒரு இடத்தில் நின்றான். எதிரே இருந்த பெரிய சைஸ் கண்ணாடியில் எங்கள் முகம் தெரிய, “மை மாம் ஆண்ட் டாட்” என்றான்

“எங்கே?” என்று நானும் இன்ஸ்பெக்டரும் விழிக்க அவன் காட்டிய இடத்தில் அவன் அம்மாவும் அப்பாவும் பாஸ்தா சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள், கண்ணாடியில்!

*

Capgras’ delusion: காப்ஸ்ராஸ் மாயை என்பது ஒரு வித மனநலக் கோளாறாகும். விபத்தில் சிலருக்கு மூளை அடிபட்டு, நெருங்கியவர்கள், குடும்பத்தினர் ஒரே மாதிரி மோசடி செய்வதாக எண்ணம் ஏற்படும். வி.எஸ்.ராமச்சந்திரனின் ‘Phantoms in the Brain’ புத்தகத்தில் வந்த ஒரு சம்பவத்தை அடிப்படையாக வைத்து எழுதியது.

Posted on Leave a comment

தீக்குறளை சென்றோதோம் – சுஜாதா தேசிகன்


ஆண்டாள் சம்பந்தமாக வைரமும் முத்துவுமாக இரண்டு சம்பவங்களை வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகிறேன்.

சம்பவம் 1:

அனந்தாழ்வான் ஸ்ரீராமானுஜரின் பிரதான சீடர்களில் ஒருவர். ஸ்ரீராமானுஜரின் ஆசையைப் பூர்த்தி செய்ய, திருமலை திருவேங்கடப் பெருமாளுக்குப் புஷ்ப கைங்கரியம் செய்து வந்தார். ஒரு நாள் அவருக்கு ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாளை சேவிக்க வேண்டும் என்று தோன்றியது. திருவேங்கமுடையானிடம் தன் விருப்பத்தைச் சொல்ல, அவரும் “சரி” என்று உத்தரவு கொடுத்தார்.

அனந்தாழ்வான் உடனே அடியார்களுடன் ஸ்ரீவில்லிப்புத்தூர் வந்தடைந்தார்.

ஸ்ரீவில்லிப்புத்தூர் குளத்தில் நீராடிவிட்டு மற்ற அடியார்கள் ஆண்டாள் நாச்சியாரை சேவிக்க உள்ளே சென்றபோது, கோயிலில் அனந்தாழ்வானைக் காணவில்லை. அவர்கள் அவரைத் தேடிக்கொண்டு திரும்ப வந்தபோது அனந்தாழ்வான் குளத்திலேயே கையைவிட்டு எதையோ தேடிக் கொண்டிருந்தார்.

“ஏதாவது தொலைத்துவிட்டீரா?” என்றார்கள் உடன் வந்தவர்கள்.

“இல்லை.. இங்கேதான் ஆண்டாள் தினமும் குளித்திருப்பாள். அவள் தேய்த்துக்கொண்ட மஞ்சள் ஏதாவது கிடைத்தால் திருவேங்கடமுடையானுக்குப் பரிசாகக் கொடுக்கலாம் என்று தேடிக் கொண்டிருக்கிறேன்” என்றார்.

ஆண்டாள் வாழ்ந்த காலம் என்ன, இவர் வாழ்ந்த காலம் என்ன? பக்திக்கு பிரேமம்தான் முக்கியம். காலம் கடந்த பக்தி!

சம்பவம் 2:

ஸ்ரீராமானுஜருக்கு வலது கரம் கூரத்தழ்வான் என்று சொல்லலாம். ஆழ்வானுடைய மனைவி பெயர் ஆண்டாள், மகன் ஸ்ரீபராசர பட்டர். கூரத்தழ்வான் அவர் மனைவி ஆண்டாள், பராசரபட்டர் என மூவருமே மிகுந்த ஞானவான்கள்.

பட்டர் தன் இல்லத்தில் தினமும் அருளிச்செயல்களின் காலட்சேபம் சாதிப்பார். ஒருநாள் திருப்பாவையை காலட்சேபம் சாதித்து முடித்தபின் சிஷ்யர்கள் அவர் ஸ்ரீபாத தீர்த்தத்தைப் பிரசாதமாக வாங்கிக்கொண்டு சென்றார்கள்.

இதைக் கவனித்துக்கொண்டிருந்த அவர் தாயார் ஆண்டாள், தனக்கு அந்த ஸ்ரீபாத தீர்த்தப் பிரசாதம் வேண்டும் என்று பிரியப்பட்டார். தாம் சென்று கேட்டால் பட்டர் மறுத்துவிடுவார் என்பதால் அங்கேயிருந்த சிஷ்யன் ஒருவனிடம் வாங்கி வரச்சொல்லி அதை ஸ்வீகரித்துக்கொண்டார்.

இதைக் கவனித்த பட்டர் கலங்கினார். “மகனுடைய ஸ்ரீபாத தீர்த்தத்தைத் தாய் எடுத்துக்கொள்ளுவது தகுமோ?” என வினவினார். அதற்கு ஆண்டாள் சொன்ன பதில், “சிற்பி பெருமாள் சிலையை வடிக்கிறார் என்பதால் அவர் அதை வணங்காமல் இருப்பாரா? அதே போல்தான் நான் உன்னைப் பெற்ற தாயாக இருந்தாலும் ஆண்டாள் அருளிய திருப்பாவையைச் சொன்ன உன் ஸ்ரீபாத தீர்த்தத்தை எடுத்துக்கொண்டேன்.”

இந்தச் சம்பவங்கள் சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தவை. குருபரம்பரையில் உள்ளன. ஆண்டாளின் பெருமையும், திருப்பாவைக்கு ஆசாரியர்கள் கொடுத்த முக்கியத்துவமும் இதில் புலப்படும்.

குருபரம்பரைப்படி, ஸ்ரீவில்லிப்புத்தூரே நம் ஆண்டாளின் பிறப்பிடமாகும். கலியுகத்தின் ஒரு நள வருஷத்தில் ஆடி மாதம் சுக்ல சனிக்கிழமை கூடிய பூர நட்சத்திரத்தில் பெரியாழ்வார் கொத்தி வைத்த பூமியில் துளசி மடியில் கிடந்த பெண் குழந்தையைப் பெரியாழ்வார் எடுத்து ‘கோதை’ எனப் பெயரிட்டு வளர்த்தார்.

ஆண்டாள் யார் வைத்த பெயர்?

ஆண்டாள் என்ற பெயரைப் பல நூற்றாண்டுகளாகச் சொல்லிவருகிறோம். ஆனால் ஆண்டாள் தன்னை ‘ஆண்டாள்’ என்று எங்கும் சொல்லிக்கொள்ளவில்லை. அதே போல பெரியாழ்வாரும் ஆண்டாள் என்று எங்கும் குறிப்பிடவில்லை.

ஆண்டாள் தன்னை ‘சுரும்பார் குழல்கோதை’ (நாச்சியார் திருமொழி) என்றும் ‘பட்டர்பிரான்கோதை சொன்ன’ (திருப்பாவை) என்றும், தன்னைக் கோதை என்றேதான் அடையாளப்படுத்திக்கொள்கிறாள்.

தினமும் பூமாலை கைங்கரியம் செய்து வந்த பெரியாழ்வார் ‘கோதை’ என்ற பெயரை ஆண்டாளுக்குச் சூட்டினார். கோதை என்றால் மாலை என்று பொருள். கோதை சம்ஸ்கிருத சொல் கிடையாது. அதை சம்ஸ்கிருதத்தில் உச்சரித்தால் ‘கோதா’ என்று வரும் (உதாரணம் – ஸ்வாமி தேசிகனின் கோதாஸ்துதி) கோதா என்றால் ‘நல் வார்த்தையை அருளிச்செய்தவள்’ என்று பொருள். பூமாலையைச் சூடிக்கொடுத்தாள்; பாமாலையைப் பாடிக்கொடுத்தாள். இரண்டு தன்மைக்கும் ஏற்றபடி அமைந்துள்ளது இதன் சிறப்பு.

ஆண்டாள் பிரசித்தமான பெயராக விளங்குகிறது. அது யார் சூட்டிய பெயர் என்று தெரியவில்லை. நாதமுனிகளின் சீடரான ஸ்ரீ உய்யக்கொண்டார் திருப்பாவை தனியனில்

அன்ன வயற்புதுவை ஆண்டாள் அரங்கற்குப்
பன்னு திருப்பாவைப் பல்பதியம் – இன்னிசையால்
பாடிக் கொடுத்தாள்நற் பாமாலை; பூமாலை
சூடிக் கொடுத்தாளைச் சொல்லு

என்கிறார். இங்கேதான் முதன்முதலில் ஆண்டாள் என்ற பெயர் வருகிறது.

நாச்சியார் திருமொழியில் நாதமுனிகளின் இன்னொரு சீடரான ஸ்ரீ திருக்கண்ணமங்கையாண்டான் தனியனில் .

அல்லிநாள் தாமரைமேல் ஆரணங்கின் இன்துணைவி
மல்லிநாடு ஆண்ட மடமயில் – மெல்லியலாள்
ஆயர்குல வேந்தன் ஆகத்தாள், தென்புதுவை
வேயர் பயந்த விளக்கு.

மல்லிநாடு – ஸ்ரீவில்லிப்புத்தூர். அதை ஆண்ட மடமயில் என்கிறார். பாண்டிய அரசன் தன் செல்வாக்கினால் நாட்டை ஆண்டான். ஆண்டாள் தன் பக்தியின் சொல்வாக்கினால் நாட்டை ஆண்டாள். அதனால் ஆண்டாள் என்றால் மல்லிநாட்டை பக்தியால் ஆண்டவள்.

மீண்டும் ஆண்டாளின் கதைக்குப் போகலாம்.

ஒவ்வொரு நாளும் பெரியாழ்வார் பெருமாளுக்குத் தொடுக்கும் மாலைகளைத் தானே ரகசியமாகச் சூடி கண்ணாடியில் அழகுபார்த்து, இந்த அழகு பெருமானை மணக்க தனக்குப் பொருந்துமோ என எண்ணிக் கொடுத்தனுப்பிக் கொண்டிருக்கும்போது ஒருநாள் பெரியாழ்வார் இதைப் பார்த்துவிட்டு, “இது தகாத காரியம்” என்று கோபித்துக்கொண்டார்.

அதன்படி மறுநாள் ஆண்டாள் சூடாத மாலையை எடுத்துக்கொண்டு அவர் கோயிலுக்குச் சென்றபோது பெருமாள், “அந்தப் பெண் சூடிய மாலைதான் எனக்கு உவப்பானது; அதை எடுத்து வாரும்!” என்றாராம்.

பெரியாழ்வார் வியந்து, ‘நம் பெண் மானிடப் பிறவி இல்லை; பூமிப்பிராட்டியின் அம்சம்’ என்றுணர்ந்து ‘சூடிக்கொடுத்த சுடர்க்கொடி’ என்று பெயரிட்டு அழைத்து வந்தார். அவளுக்கு மணப்பருவம் நெருங்க, பெரியாழ்வார் “நீ யாரை மணம் செய்துகொள்வாய்?” என்று கேட்க, “பெருமாளையே மணக்க விரும்புகிறேன். மனிதர்கள் என்கிற வார்த்தை காதில் பட்டாலே என்னால் வாழ முடியாது” என்று சொல்லிவிட்டாள்.

பெரியாழ்வார் எல்லாத் திவ்யதேசங்களின் பெருமாள் பெயர்களையும் சொல்ல, திருவரங்கனின் பெயர் கேட்டதும் ஆண்டாள் நாணினாள்.

இந்தத் திருமணம் எவ்வாறு சாத்தியம் என்று பெரியாழ்வார் கவலைப்பட, அவர் கனவில் பெருமாள் தோன்றி ‘அவளை அலங்கரித்துக் கோயில் என்னும் திருவரங்கத்துக்கு அழைத்து வா!’ என்று கட்டளையிட்டார். கோயில் பரிசனங்களுக்கும் அவள் வரவைத் தெரிவித்தார். அவ்வாறே பெரியாழ்வார் கோதையை அலங்கரித்து திருவரங்கத்துக்கு அழைத்து வர, அவர்களுக்கு அங்கே பெரிய வரவேற்பு. பெருமானிடத்தில் அவளை விட்டுவிட, கோதை அவருடன் ஐக்கியமாகி மறைந்து போனாள் என்பது குருபரம்பரைக் கதை.

சீதையை பூமியில் கண்டெடுத்த ஜனகர் மாதிரி ஆண்டாளை பெரியாழ்வார் கண்டெடுத்தார். அதனால் இருவரும் பூமாதேவியாகவே போற்றப்படுகிறார்கள்.

“பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை வாழியே” என்று ஆண்டாளின் வாழி திருநாமம் பல காலமாகக் கோயில்களிலும் வீடுகளிலும் சேவிக்கப்படுகிறது (ஓதப்படுகிறது). பெரியாழ்வார் துளசித் தோட்டத்தில் கண்டெடுத்தார், அதனால் “பெரியாழ்வார் கண்டெடுத்த பெண்பிள்ளை வாழியே” என்றுதானே இருக்க வேண்டும்? பெரியாழ்வார் கண்டெடுத்தவராக இருக்கலாம். ஆனால் ஆண்டாளுக்கு அவர் என்றுமே பெற்றெடுத்தவர்தான்!.

பழந்தமிழ் இலக்கியமான பரிபாடலில் தான் விரும்பும் ஆண்மகனை அடைய, பெண்கள் நீராடி நோன்பு நோற்ற செய்தியைப் பரிமேலழகர் தன்னுடைய உரையில் குறிப்பிட்டுள்ளார். சாதாரண ஆண்மகனை அடைய விரும்பாமல், பெருமாளையே அடைய பாவை நோன்பு நோற்று அந்த மரபை மீறினாள் ஆண்டாள்.

மானுட நோன்பை தெய்வத்தை அடையப் பயன்படுத்தும்போது, அந்தரங்கமும் அன்னியோன்யமும் எச்சிலும் வாசனைகளும், முலைகளும், ‘கொச்சை’ நீக்கப்பட்டு, காமம் காதலாகிப் பக்தியாகிறது.

கடவுளுக்காகத் தன்னையே அர்ப்பணித்த பெண்கள் என சரித்திரத்தில் மீராபாய், காரைக்கால் அம்மையார் என்று பல உதாரணங்கள் உண்டு. ஆண்டாள் இவர்களுக்கெல்லாம் முன்னோடி.

மற்ற ஆழ்வார்கள் நாயகி பாவத்தில் பெருமாளை அணுகினார்கள். ஆடவரை ஆடவர்கண்டு காமுறுவதைக் காட்டிலும் பெண் காமுறுதல் என்பதில் ஏற்றம் அதிகம். ஆண்டாள், நாயகியாகவே பெருமாளை அணுகினாள்.

‘ஒழிக்க ஒழியாத’ உறவானது பகவானுக்கும் பக்தனுக்கும் உள்ள பரஸ்பர பந்தத்தை நிலைநிறுத்துவது என்பது ஸ்ரீவைணவத்தின் ஆதாரக் கருத்து.

ஸ்ரீராமானுஜருக்கு முன்பு ஒருவழிப் பாதையாக இருந்த ஸ்ரீவைணவ மரபை, எந்தத் தகுதியும் வேண்டாம், ‘ஆசை’ என்ற ஒரு தகுதி இருந்தாலே போதுமானது என்று ஸ்ரீராமானுஜர் மாற்றியமைத்தார். அவர் மனதில் மாற்றத்துக்கான காரணம் ஆண்டாளின் திருப்பாவை. ஸ்ரீராமானுஜர் தன்னை ‘திருப்பாவை ஜீயர்’ என்றே அழைக்கவேண்டும் என்றும் அதுவே தனக்கு உவப்பான பெயர் என்றும் கூறியுள்ளார். இன்றளவும் ஆண்டாளின் ஆசையை நிறைவேற்றிய அண்ணனாகக் கொண்டாடப்படுகிறார்.

ஸ்வாமி தேசிகன் கோதாஸ்துதியில் ஆண்டாளின் பெருமையைப் போற்றுகிறார். மணவாள மாமுனிகள் “இன்றோ திருவாடிப் பூரம் எமக்காக அன்றோ இங்காண்டாள் அவதரித்தாள்” என்று அனுபவிக்கிறார்.

ஸ்ரீவைணவ ‘வ்யாக்யான சக்கரவர்த்தி’ என்று போற்றப்படும் உரையாசிரியர் ஸ்ரீபெரியவாச்சான் பிள்ளை ஆண்டாளைப் பற்றி இப்படிக் கூறுகிறார்

“முனிவர்களையும் ஆழ்வார்களையும் ஒப்பிட்டால் முனிவர்களின் பக்தி அணுவளவாகவும், ஆழ்வார்களின் பக்தி மலைபோலவும் இருக்கும். ஆழ்வார்களை எடுத்துக்கொண்டாள் மற்ற ஆழ்வார்களின் பக்தி அணுவளவாகவும், பெரியாழ்வார் பக்தி மலை போலவும் இருக்கும். பெரியாழ்வார் பக்தியையும் ஆண்டாளின் பக்தியையும் ஒப்பிட்டால் பெரியாழ்வாரின் பக்தி அணுவளவாகவும், ஆண்டாளின் பக்தி மலையளவாகவும் காட்சி அளிக்கிறது” என்கிறார்.

ஐயங்கார்கள் மட்டும் இல்லாமல் சைவர்கள், ரெட்டியார், செட்டியார், நாயுடு என்று பல சமூகத்தினரும் ஆண்டாளைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். ஆண்டாளே பூமிப்பிராட்டி என்பது ஸ்ரீவைணவர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. எல்லா திவ்யதேசக் கோயில்களிலும் ஆண்டாளுக்குத் தனி சன்னதியே உண்டு.

‘அம்மா அப்பா’ ‘மம்மி டாடி’யாக மாறி, டைனிங் டேபிளில் கூட ஆங்கிலத்திலேயே பேசிக்கொள்ளும் சமூகத்தில், இன்றும் மார்கழி மாதம் முழுவதும் பல இடங்களில் ஆண்டாளின் திருப்பாவை ஒலித்துக் கொண்டிருப்பது அதிசயமே.

மார்கழியே ஸ்ரீவைஷ்ணவ மாசம். இது ‘மதி’ நிறைந்த நாளில் ஆரம்பிக்கிறது. அப்பேர்ப்பட்ட மார்கழியில் வைரமுத்து அவர்கள் ஆண்டாள் பற்றி கூறிய கருத்துகள் சர்ச்சையாகி, வருத்த அறிக்கைகளும், கண்டனப் போராட்டங்களும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன.

ராஜாஜி கூட ஆண்டாளைப் பற்றி கருத்துக் கூறியிருக்கிறார், அவரை எதிர்க்கவில்லையே என்ற ரீதியில் பலர் பேசுகிறார்கள். ராஜாஜி ஸ்ரீராமாயணம், ஸ்ரீமஹாபாரதம், நம்மாழ்வார் பாசுரத்தின் சாரம் (பக்தி நெறி) என்று பல முக்கியமான விஷயங்களை எழுதியிருக்கிறார். அவர் பெரியாழ்வார் பாடலின் சாயல் ஆண்டாளிடம் இருக்கிறது, பெரியாழ்வாரே ஆண்டாள் என்ற பெயரில் எழுதியிருந்தாலும் எழுதியிருக்கலாம் என்றார்.

ஆனால் வைரமுத்து? அவர் பல ஆண்டுகளுக்கு முன் ஒரு இஸ்லாமியக் கூட்டத்தில் ஸ்ரீராமர் பற்றிப் பேசிய இரண்டு நிமிடப் பேச்சு இந்துக்களின் ரத்தக் கொதிப்பை அதிகப்படுத்தும். “ராமர் அவதாரமா, மனிதனா? மனிதன் என்றால் எதற்குக் கோயில்? அவதாரம் என்றால் அவர் பிறக்கவே இல்லை, பிறகு எதற்குப் பிறப்பிடம் (அயோத்தியா)?” என்ற ரீதியில் பிதற்றிக்கொண்டு போகும் நாத்திகப் பேச்சு.

ஆண்டாள் ஸ்ரீராமரை ‘மனதுக்கு இனியான்’ என்கிறார். ராமர் மேல் இவ்வளவு காழ்ப்புணர்வு வைத்துக்கொண்டு ஆண்டாளைப் பற்றி இவர் உயர்த்திப் பேசினேன், அவள் என் தாய் என்று எல்லாம் பேசுவது எப்படி ‘மனதுக்கு இனிமையாக’ அமையும்?

தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த கலைஞர் கண்ணனைத் திருடன் என்றார், ராமர் என்ன என்ஜினியரா என்றார். ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் முன்பு பெரியார் சிலையை நிறுவினார்கள், ஸ்ரீரங்கம் தாயார் சன்னதி வாசலில் தி.க கொடியை உயர்த்தினார்கள்… அந்தப் பள்ளியிலிருந்து வரும் இவர் ஆண்டாளைத் தெய்வமாகப் பார்க்கவே முடியாது.

பல திராவிடத் தலைவர்கள் கொச்சையாகப் பேசி, செயல்பட்டபோதும் இந்நாள் வரை கண்டனம் தெரிவித்துவிட்டு வீட்டில் டிவி பார்த்துக் கொண்டிருந்த ஸ்ரீவைணவர்கள், ஆண்டாள் பற்றி, அதுவும் கடைசியில் ஒரேயொரு மேற்கோள் காட்டியவுடன் பொங்கியதற்கு என்ன காரணம்?

பொதுவாகவே பெண்களிடம் நமக்கு ஒரு பரிவு உண்டு. அம்மா, அக்கா காதலி என்று சொல்லிக்கொண்டே போகலாம். தமிழக அரசியலில் உற்று நோக்கினால் எம்.ஜி.ஆர் வயதான பாட்டிகளிடம் அன்பாக போஸ் கொடுக்கும் தேர்தல் பிரச்சார படங்கள்; ‘தாயில்லாமல் நானில்லை’ போன்ற பாடல்கள் – இவையெல்லாம் பெண்களை டார்கெட் செய்பவை. பல அரசியல் தலைவர்கள் வேட்டி கிழிந்து சட்டசபையிலிருந்து வெளியே வரும்போது நமக்குச் சிரிப்புதான் வரும், ஆனால் ஜெயலலிதா சட்டசபையில் தாக்கப்பட்டபோது?

தமிழர் வீரம், ஜல்லிக் கட்டு என்றெல்லாம் பேசுபவர்கள்கூட, தங்களால் ஒருவனை வீழ்த்த முடியவில்லை என்றால் உடனே அவர்கள் கையில் எடுக்கும் ஆயுதம் வேலோ கத்தியோ இல்லை. ஜாதி, இனம் அல்லது இருக்கவே இருக்கிறார்கள் பெண்கள். இந்த வீரத்திற்குப் பெயர் கையாலாகாத்தனம்.

தமிழக அரசியலில் பல உதாரணங்கள் உண்டு. எம்.ஜி.ஆர் மலையாளி, ரஜினி ஒரு கன்னடர். ஜெயலலிதா ‘பாப்பாத்தி’, எங்கள் முன்னாடி ‘டான்ஸ்’ ஆடினாள் என்ற வசைப்பேச்சுகள் எப்படியாவது அவர்களை வீழ்த்தப் பேசிய பேச்சுக்களே.

தமிழகத்தில் நாத்திகம் என்பது ஹிந்து துவேஷம், குறிப்பாகப் பிராமணத் துவேஷம். பல ஆண்டுகளாக இந்த துவேஷத்தைப் பொறுத்துக்கொண்டவர்கள் ஆண்டாள் பற்றிய பேச்சுக்குப் பின் நிமிர்ந்து நிற்க ஆரம்பித்துவிட்டார்கள்.

இன்று பல ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதுபவர்கள் அவர்களின் கொள்ளுத்தாத்தாவின் கொள்ளுத்தாத்தா யார் என்றால் முழிப்பார்கள். ஆனால் அவர்கள் ஆண்டாள் எங்கே பிறந்தாள், ராமர் பிறந்தாரா என்று ஆராய்ச்சி செய்வது விந்தை.

ஆண்டாள் யார் என்பதை அவள் எழுதிய திருப்பாவையும் நாச்சியார் திருமொழியும் மட்டுமே நமக்குப் படம் பிடித்துக் காட்டுகிறது. முழுத் திருப்பாவையில் வருவதையும் பட்டியலிட்டால் ஒரு அழகிய கிராமம் நம் கண்முன்னே தெரியும். திருப்பாவையை நிறைவு செய்யும் முப்பதாம் பாடல் ‘பட்டரின் மகளான கோதை சொன்ன சங்கத் தமிழ்மாலை’ முப்பதையும் தப்பில்லாமல் சொல்பவர்கள் திருமாலின் திருவருள் பெற்று இன்புறுவர் என முடிகிறது.

சில மாதங்களுக்கு முன் கயாவிற்குச் சென்று அம்மாவிற்கு 64 பிண்டம் வைத்தபோது கண்கலங்கினேன். ஏன் வைக்கிறோம் என்று சொன்ன ஸ்ரீ உ.வே.வேளுக்குடி கிருஷ்ணன் கண்கலங்கினார். பகுத்தறிவு, நாத்திகம் பேசும் ஞாநி, ‘எதிக்ஸ்’ பற்றிப் பேசும் ஒரு விடியோவில் தன் அம்மாவைப் பற்றிக் குறிப்பிடும்போது ஒரு நிமிடம் கண்கலங்குகிறார். தாய் என்றால் அன்பு. நம் எல்லோருக்கும் பூமித்தாயாக மதிக்கும் ஆண்டாளைப் பற்றி பேசினால் கோபம் வராதா?

திருப்பாவையின் இரண்டாம் பாசுரத்தில் ஆண்டாள் “தீக்குறளை சென்றோதோம்” என்கிறாள். அதாவது பிறர்க்குத் தீமை விளைவிக்கின்ற பொய்யான சொற்களை ஒருக்காலும் சொல்ல மாட்டோம் என்கிறாள்.

வாழைப்பழத்தை விட்டுவிட்டு அதன் தோலைச் சாப்பிடுவது மாதிரி வைரமுத்து ஆண்டாளைச் சரியாக படிக்காமல் ‘தீக்குறளை சென்று ஓதியதால்’ வந்த வினை. ஆங்கிலத்தில் சொல்லுவது போல இது ஒரு ‘snowball effect’. பல காலமாகவே கோபத்தில் இருந்த சமூகம், பெற்ற தாயைப் பழித்ததால் இன்று எதிர்ப்புடன் வெளிவந்திருக்கிறது.

*****

Posted on Leave a comment

கைசிக புராணத்தின் கதை – சுஜாதா தேசிகன்

திருக்குறுங்குடிக்குச் சென்று கைசிக ஏகாதசியை அனுபவித்துவிட்டு வந்தபோது இரண்டு செய்திகள் கண்ணில் பட்டன.

சமீபத்தில் இசையமைப்பாளர் ஜிப்ரான் (குமுதத்தில்) தனது பேட்டியில் “யாழ், கோட்டு வாத்தியம் போன்ற இன்ஸ்ட்ருமென்ட்டை நாம தொலைச்சுட்டோம்” என்று கூறியிருந்தார். கிட்டதட்ட அதே சமயத்தில் மணி சங்கர் அய்யர் பிரதமர் மோடியை ‘நீசன்’ – இழிந்த சாதியைச் சேர்ந்தவர் என்று தனது தேர்தல் பிரசாரத்தின்போது குறிப்பிட்டது பத்திரிகையில் வந்தது.

இந்த இரண்டு செய்திகளுக்கும் கைசிக புராணத்துக்கும் தொடர்பு இருக்கிறது. ஒன்று யாழ் மட்டும் இல்லை, மரபு வழி நாடகங்களையும் தொலைத்துவிட்டோம். இன்னொன்று நம்பாடுவான் என்ற சண்டாளன் எவ்வளவு உயர்ந்தவன் என்று சொல்லும் கைசிக புராணம்.

திருநெல்வேலிக்கு சுமார் 25 கி.மீ. தொலைவில் இருக்கிறது திருக்குறுங்குடி என்னும் ஸ்ரீவைஷ்ணவ திவ்ய தேசம். பெருமாள் அழகிய நம்பி. ஊரும் பெருமாளும் அழகு. பசுக்கள் நிறைந்த பொய்கை கரையோரத்தில்…

நெடிய பனைமரங்களிலிருந்து விழும் பனம் பழங்களை பொய்கையில் இருக்கும் வாளை மீன்கள் உண்ணுவதற்குத் துள்ளிப்பாய்கின்றன என்கிறார் திருமங்கை ஆழ்வார்.

விஜய சொக்கநாதர் கைசிக ஏகாதசி சேவையை தரிசிப்பதற்குத் தனது குடும்பத்துடன் திருவரங்கம் வந்தார். ஆனால் அவர் வருவதற்குள் பெருமாள் சந்தன மண்டபத்துக்குப் புறப்பட்டுவிட்டார். மனம் வருந்திய மன்னர், ஸ்ரீரங்கத்திலேயே ஒருவருடம் தங்கி அடுத்த ஆண்டு. சேவையைக் கண்டுகளித்தார். ஸ்ரீரங்கத்தில் இவர்களின் நினைவாக இரண்டாம் திருச்சுற்றில் இவர்களின் சிலைகள் இருக்கின்றன.

 இரவு சுமார் 9.30 மணிக்கு நாடகக் கலைஞர்கள் அரிதாரம் பூசிக்கொண்டு தயாராக இருந்தார்கள். பெருமாள் அங்கே இருக்கும் மண்டபத்தில் எழுந்தருளிய பின் கூட்டம் ஓடிச் சென்று நாடகம் பார்க்க முதல் சீட் பிடித்தது. கிட்டதட்ட முதல் சீட் கிடைத்த சந்தோஷத்தில் தூக்கம் கலைந்தது.

கலியுகத்தில் பக்தி செய்ய நாம சங்கீர்த்தனமே சிறந்த வழி என்று சொல்லப்படுகிறது. மீரா, துக்காராம், சூர்தாஸ், கபீர்தாஸர், ராமதாஸர், தியாகராஜர் என்று பக்தர்களின் கதைகள் உங்களுக்குத் தெரிந்திருக்கும். கவனித்தால் அவர்களிடம் பக்தியுடன் தம்பூரா, வீணை என்று ஏதாவது ஒரு வாத்தியம் கூடவே இருக்கும்.

ஆழ்வார்களில் பாணர் குலத்தில் உதித்த திருப்பாணாழ்வாரிடமும் கையில் பாண் என்ற இசை வாத்தியம் இருப்பதைப் பார்க்கலாம். கைசிக புராணத்தில் நம்பாடுவானும் திருப்பாணாழ்வார்போல பாணர் குலத்தில் பிறந்து ஆழ்வாரைப் போலவே பக்தியில் திளைத்து…

நம்பாடுவான் சரித்திரத்தைக் கொஞ்சம் பார்க்கலாம்.

வராஹ புராணத்தில் ஸ்ரீ வராஹ பெருமான் பூமிபிராட்டியாரிடம் நம்பாடுவான் பக்தியை சிலாகித்து சொன்ன பகுதியை கைசிக மகாத்மியம் என்று அழைக்கிறோம். புராணம் என்பது பிற்பாடு வந்த பெயர்.

கதை இதுதான்.

திருக்குறுங்குடி மலை அடிவாரத்தில் பாணர் குலத்தில் வைணவ பக்தன் வாழ்ந்துவந்தான். பெயர் நம்பாடுவான். தினமும் விடிகாலையில் கோயிலின் வாயிலுக்குச் சென்று பெருமாள் குறித்து பண் இசைத்துப் பாடுவான். தாழ்த்தப்பட்ட குலத்தில் பிறந்ததால் கோயிலுக்குச் செல்ல அனுமதியில்லாமல் இருந்தது. அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் திருக்குறுங்குடி அழகிய நம்பியைப் பாடி சேவித்து வந்தான்.

கார்த்திகை மாதம் வளர்பிறை ஏகாதசி அன்று இரவு அழகிய நம்பியைச் சேவிக்க காட்டுவழியே வரும் வழியில் அவனை பிரம்ம ராட்சசன் பிடித்துக்கொண்டு “நான் உன்னை உணவாக சாப்பிடப் போகிறேன்” என்றது. அதற்கு நம்பாடுவான், “நான் ஏகாதசி விரதம் இருக்கிறேன். அழகிய நம்பியை சேவித்துவிட்டு என் விரதத்தை முடித்துக்கொண்டு வருகிறேன்” என்று கூற அதை ராட்சசன் நம்ப மறுக்கிறான்.

அதற்கு நம்பாடுவான் “நான் பாணர் வகுப்பைச் சேர்ந்த பரம பக்தன். நான் பொய்சொல்ல மாட்டேன். வேண்டுமானால் நான் சத்தியம் செய்துவிட்டுப் போகிறேன்” என்று பதினெட்டு விதமான சத்தியங்களைச் சொல்லி அனுமதிக்குமாறு நம்பாடுவான் ராட்சசனிடம் மன்றாடுகிறான். ஆனால் ராட்சசன் அவனை விடுவதாக இல்லை. கடைசியாக “நான் திரும்ப வரவில்லை என்றால் வாசுதேவனை விட்டு மற்ற தேவதைகளை வணங்குபவர்களுக்கு என்ன கதி கிடைக்குமோ, நாராயணனைத் தவிர மற்ற தேவதைகளோடு சமமாக நினைப்பவர்கள் பாவத்தை நான் அடையக்கடவது” என்று சத்தியம் செய்ய அவனது விஷ்ணு பக்தியைக் கண்டு ராட்சசன் அவனை அனுப்பி வைக்கிறான்.

ஏகாதசி விரதத்தை முடித்துவிட்டு, நம்பியைச் சேவித்துவிட்டு ராட்சசனைத் தேடி திரும்ப வரும் சமயத்தில் நம்பாடுவானைச் சோதிக்கும் பொருட்டு அழகிய நம்பி கிழவனாக அவன் முன்னே தோன்றி “இந்த வழியில் ராட்சசன் இருக்கிறான் வேறு வழியில் செல்” என்று சொல்ல, “என் உயிரே போனாலும் நான் சத்தியத்திலிருந்து தவறமாட்டேன்” என்று நம்பாடுவான் சொல்ல, நம்பி அவன் உறுதியைக் கண்டு அவனுக்கு அருள்புரிந்து மறைகிறார்.

நம்பாடுவான் ராட்சசனைக் கண்டு “என்னை சாப்பிடு” என்று கூற ராட்சசன் மெதுவாக இவனிடம் பேச்சு கொடுக்கிறது. அப்போது எப்படி சாபத்தால் இந்த மாதிரி பிரம்ம ராட்சசனானேன் என்ற கதையைச் சொல்லுகிறது. எனக்கு நீ பாடிய பாடலின் பலனைக் கொடு என்று கேட்க, அதற்கு நம்பாடுவான் மறுக்க, கடைசியாக கைசிக ராகத்தில் பாடிய பாட்டில் பலனையாவது எனக்குத் தர வேண்டும் என்று சரணாகதி அடைய, நம்பாடுவான் சரி என்று பலனைக் கொடுக்க கொடுக்க பிரம்ம ராட்சசன் வீடு பெற்றான் என்று கதை முடிகிறது.

கைசிக நாடகம் சுமார் 400 ஆண்டுகளுக்கு முன் விஜயநகர ஆட்சியில் இருந்திருக்கிறது. ‘ஆமுக்த மால்யதா’ என்ற நூலில் மால்கேசரி என்ற பெயரில் நம்பாடுவானைக் குறிப்பிட்டு திருக்குறுங்குடியில் நடந்ததாகவே அவ்வரலாற்றைக் கூறியுள்ளார். 1530-1554ல் கைசிக நாடகம் நடைபெறுவதற்கு நிலங்களை தானமாக அளித்துள்ளார் அச்சுதராயரின் இரண்டாவது மனைவி! ஜி.ஆர். வெல்போன் என்ற அமெரிக்க ஆராய்ச்சியாளர் கைசிக நாடகத்தின் நலிந்த நிலையைக் குறித்து 1969ல் குறிப்பிட்டுள்ளார்.

தொன்றுதொட்டு தேவதாசிகள் திருக்குறுங்குடியில் வடிவழகிய நம்பியின் முன் நிகழ்த்தப்பட்ட கைசிக நாடகத்தை தேவதாசிகள் ஒழிப்பு சட்டத்துக்குப் பிறகு இந்த நாடகம் நலிவுற்றது. அதற்குப் பிறகு இந்த நாடகம் அவல நிலை அடைந்து பயிற்சி இல்லாதவர்களால் நிகழ்த்தப்பட்டு அலங்கோலமாகியது. 90களில் நிகழ்த்தப்பட்ட நாடகம் பழைய நாடகம் மாதிரி இல்லை, வெறும் 45 நிமிடம் மட்டுமே நடத்தப்பட்டது. இந்த நாடகம் 1997ல் மீண்டும் உயிர்பெற்றது.

இந்த நாடகத்தை மீண்டும் மீட்க முதல் முயற்சியாக இந்த நாடக மரபில் வந்த இரண்டு தேவதாசிகள் மட்டுமே திருக்குறுங்குடியில் இருந்தார்கள். ஒருவருக்கு வயது 85, மற்றொருவருக்கு 70. அவர்களின் வாரிசுகள் திருநெல்வேலியிலும், நாகர்கோயிலிலும் குடியேறியிருந்தார்கள். இவர்களை மீண்டும் மேடை ஏற்றத் தயங்கினார்கள். காரணம், ‘தேவதாசிகள்’ என்ற சமூகக் கறை, ஊர் என்ன சொல்லும் என்ற பயமும்.

சே. இராமானுஜம் அவர்கள் தமிழ் பல்கலைக் கழகத்தில் நாடகத்துறைப் பேராசிரியராக இருந்தபோது 1992ல் கைசிக ஏகாதசிக்கு முதல் நாள் இந்த மாதிரி நாடகம் என்று தற்செயலாகக் கிடைத்த தகவல் அடிப்படையில் உடனே திருக்குறுங்குடிக்குச் சென்றுள்ளார். நாடகம் அவருக்குப் பெரும் ஏமாற்றத்தையே தந்தது. கைசிகம் என்பது ஒரு ராகத்தின் அடைப்படையாகக் கொண்ட நாடகத்தில் இசை என்பதே இல்லை. வயது முதிர்ந்தவர்கள் தொன்றுதொட்டு வரும் வழக்கத்தை விட்டுக்கொடுக்கக் கூடாது என்பதற்காக அங்கே வந்து சென்றார்கள்.

நாடகத்தைத் தேடும் பணியில் ஈடுபட்டார் பேராசிரியர் இராமானுஜம். 1997ல் பிரபல நாட்டியக் கலைஞர் திருமதி அனிதா ரத்தினத்துடன் எப்படியாவது நாடகத்தை மீட்க வேண்டும் என்று முயற்சி எடுத்தார்கள். 1999ல் திருக்குறுங்குடி ஜீயர் மடத்திலிருந்து தேடிக் கண்டுபிடித்த கைசிக புராண நாடகத்தின் ஓலைச் சுவடி ஏட்டுப்பிரதியை நகல் எடுத்துப் பார்த்தபோது பராசர பட்டர் (கி.பி. 1122) (கூரத்தாழ்வானின் திருக்குமாரர், ஸ்ரீராமானுஜரின் சீடர்) எழுதிய வியாக்கியானத்தின் அடிப்படையில் மணிப்பிரவாள நடையை ஒத்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மரபு வழி வந்தவர்களைக் கொண்டு அபிநயம் பிடிக்கச் செய்து, ஓலைச்சுவடியில் உள்ள பாடல்கள், உரையாடல்களைக் கொண்டே மரபுரீதியான வடிவத்தில் மீண்டும் வடிவழகிய நம்பி முன் உயிர்பெறச் செய்திருக்கிறார்கள்.

அன்று இரவு 9.30 மணியிலிருந்து காலை மூன்று மணி வரை இந்த நாடகத்தைப் பார்த்தது மறக்க முடியாத அனுபவம். நடித்தவர்களின் எனர்ஜி லெவல் அபாரம். மிகக் கஷ்டமான நடையாக இருந்தாலும் எங்கும் மறக்காமல் நடித்தார்கள்.  நாடகத்தின் நடுவே நாடக மேடை பின்புறம் சரிந்து, கூடவே கலைஞர்கள் விழுந்துவிட, சில நிமிடங்களில் நாடக மேடையைச் சரி செய்து, மீண்டும் நடிக்கத் தொடங்கினார்கள். இந்த நாடகத்தை மீட்டெடுத்த பேராசிரியர் சே. இராமானுஜம், அனிதா ரத்தினம் பாராட்டுக்குரியவர்கள்.

கைசிக என்பது ஒரு ராகத்தின் பெயர். நம்பாடுவானின் கவிதை வரிகளில் ‘மெய், மலகிரி, காந்தாரம், துரையா, நாட்டை, தனாசு, கொல்லி, துத்தம், வசந்தா போன்ற கரையா கீதம் பல பாடி கைசிகமும் பாடினேன்’ என்பதால் கைசிகம் ஒரு ராகத்தின் பெயர் என்று தெரிகிறது. கர்நாடக சங்கீதத்தில் பைரவி ராகம் என்கிறார்கள்.

நம்பாடுவான் என்ற பெயர் கூரத்தாழ்வானின் திருக்குமாரரான ‘பட்டர்’ அவர் உரையில் தந்துள்ளதாகத் தெரிகிறது. வராக புராணத்தில் ‘பாடுவான்’ என்றுதான் குறிப்பு இருக்கிறது ‘நம்பெருமாள்’, ‘நம்மாழ்வார்’ ‘நம்பிள்ளை’ ‘நம் ஜீயர்’ வரிசையில் பாடுவானை ‘நம்-பாடுவான்’ என்று முதல் முதலில் பட்டர் தான் அழைத்துள்ளார் என்று தெரிகிறது.

தூய்மையான பக்தியுடன் எவனொருவன் மஹா விஷ்ணுவிடம் சரணாகதி அடைகிறானோ அவனே ஸ்ரீவைஷ்ணவன். சரணடைந்த பின் எக்குலத்தவராயினும் அவனிடம் குல வித்தியாசம் பார்க்கக் கூடாது என்பது ஸ்ரீவைஷ்ணவத்தின் அடிப்படை சித்தாந்தம்.

திருப்பாணாழ்வார், நம்பாடுவான் வாழ்க்கை வரலாற்றில் இது மிக அழகாக எடுத்துக் காட்டப்பட்டுள்ளது.

‘அமர ஓர் அங்கம் ஆறும் வேதம் ஓர் நான்கும் ஓதித்
தமர்களில் தலைவராய சாதி-அந்தணர்களேலும்
நுமர்களைப் பழிப்பர்ஆகில், நொடிப்பது ஓர்அளவில் ஆங்கே
அவர்கள் தாம் புலையர் போலும்; அரங்க மா நகருளானே!’

என்கிறார் தொண்டரடிப்பொடியாழ்வார். இதன் அர்த்தம்,

நான்கு வேதங்கள், ஆறு வேதாந்தங்களையும் மனப்பாடம் பண்ணி, அவற்றின் பொருள்களையும் அறிந்து, போற்றப்படும் பிராமணர்களாக இருந்தாலும் அடியார்களை குலத்தைக் கொண்டு நிந்தனை செய்தால் அவர்கள் அந்தணர்களாக இருந்தாலும் சண்டாளர்களாக அறியப்படுவார்கள் என்கிறார்.

நம்மாழ்வார் இதையே,

‘குலந்தாங்கு சாதிகள் நாலிலும்
கீழ்இழிந்து எத்தனை
நலந்தான் இலாதசண் டாளசண்
டாளர்கள் ஆகிலும்
வலந்தாங்கு சக்கரத்து அண்ணல்
மணிவண்ணற்கு ஆள்என்றுஉள்
கலந்தார் அடியார் தம்மடி
யார்எம் அடிகளே.’

நான்கு குலங்களிலும் தாழ்த்தப்பட்டு மிகவும் இழிவாகக் கருதப்பட்டு மனித வாழ்க்கையில் கடைசியில் வரும் சண்டாளர்களுக்கும் சண்டாளர்களாக இருப்பினும், அவர்கள் வலப்புறத்தில் சக்கரத்தைத் தாங்கி நிற்கும் மணிவண்ணனான திருமாலின் அடியார்களாகில் அவர்களுக்கு அடியவர்களாக இருப்போம் என்கிறார். இன்னொரு பாசுரத்தில் நம்மாழ்வார் இன்னும் ஒரு படி மேலே சென்று,

‘பயிலும் சுடரொளி மூர்த்தியைப் பங்கயக் கண்ணனை,
பயில இனியநம் பாற்கடல் சேர்ந்த பரமனை,
பயிலும் திருவுடை யார்யவ ரேலும் அவர்க்கண்டீர்,
பயிலும் பிறப்பிடை தோற்றெம்மை யாளும் பரமரே’

என்ற பாசுரத்தில் பெருமாளுக்கு அடிமை செய்துகொண்டு இருப்பதைக் காட்டிலும் ஓர் அடியாருக்கு அடிமை செய்துகொண்டு இருப்பது ஏற்றம் என்கிறார்.

நாடகம் முடித்துவிட்டு காலை ஐந்து மணிக்கு கோயிலை விட்டு வெளியே வந்தபோது மழை தூறிகொண்டு இருந்தது.

உதவிய நூல் பட்டியல்:

கைசிக நாடகம் ஓலைச்சுவடி நகல் – காலச்சுவடு பதிப்பகம்.

கைசிக புராணம் – ஸ்ரீவைஷ்ணவஸ்ரீ வெளியீடு.

கைசிக புராணம் – பட்டர் வ்யாக்யானத்துடன் – வானமாமலை மடம் வெளியீடு.

கைசிக புராண நாடகத்தில் இசை – இ. முகுந்தன் எம்.ஏ ஆய்வுக் கட்டுரை.