விக்கிபீடியாவில் அயோத்தியா பற்றி குறிப்பு இப்படி இருக்கிறது – ‘is an ancient city of India, believed to be the birthplace of Rama’ – அதாவது ஸ்ரீராமர் பிறந்த இடம் என்று ‘நம்பப்படுகிறது.’
அக்டோபர் 10 இரவு. பேருந்தில் தூங்கிக்கொண்டு இருந்தபோது “அயோத்தி வந்தாச்சு!” என்று எழுப்பப்பட்டேன். வெளிக்காற்று முகத்தை வருடிய நேரத்தில் எங்கிருந்தோ ராம பஜனை கேட்டது. டியூப் லைட் வெளிச்சத்தில் சில குரங்குகள் தென்பட்டன.
மறுநாள் காலை சரயூ நதியில் குளிக்கச் சென்றபோது, பெரிய சைஸ் குலோப் ஜாமுன் போல் சூரியன் என்னை வரவேற்றது. சூரியோதயத்தைப் பார்ப்பதா குளிப்பதா என்ற தடுமாற்றத்தைத் தாண்டி, சூரியோதயத்தில் சரயூவில் மூழ்கி ரசித்தேன். ‘ஸ்ரஸ்-யூ’ என்பதையே சரயூ என்று நாம் கூறுகிறோம். அதாவது பிரம்மாவின் மனமே உருகி ஒரு பெரிய நதியாக மாறியதாம்.
முக்தி தரும் ஷேத்திரங்கள் ஏழு. அவந்திகா – பாதங்கள், காஞ்சிபுரம் – இடுப்பு, துவாரகா – நாபி, மாயாபுரி (ஹரித்வார்) – இருதயம், மதுராபுரி – கழுத்து, காசி – மூக்கு, அயோத்தி – தலை. முக்தி தரும் ஷேத்திரங்களில் தலையானது அயோத்யா என்று சொல்லலாம்.
அயோத்யா என்றால் சொல்ல முடியாத அழகு என்று பொருள். ஸ்ரீ வேதாந்த தேசிகன் தனது கருட பஞ்சாசத்தில் பெரிய திருவடியின் பார்வையை ‘அயோத்யா’ என்கிறார். அதாவது ஜெயிக்க முடியாத அழகு வாய்ந்ததாம் அவர் திருவடி.
ஆனால் இன்றைய அயோத்யா அதுவும் ‘ராமஜன்ம பூமி’ என்றால் உள்ளூரக் கொஞ்சம் பதற்றம் நம்மைப் பற்றிக்கொள்வதை மறுக்க முடியாது.
நாம் படிக்கும் வரலாறு வடி கட்டியது. ஏதோ ஆங்கிலேயரும், முகம்மதியர்களும் நமக்கு நல்லது செய்தார்கள் போன்ற தோற்றத்துடன் எழுதப்பட்டுள்ளது. ஹிந்துக் கோயில்களின் மீதும், நம் தேசத்தின் மீதும் அவர்கள் புரிந்த தாக்குதலின் சுவடுகளை யாத்திரை முழுவதும் பார்க்க முடிந்தது. இவை எல்லாம் நம் வரலாற்றுப் பாடத்தில் இல்லாத ஒன்று. ஆங்கிலேயர்கள்தான் ரயில்வே, போஸ்ட் பாக்ஸைக் கொண்டு வந்தார்கள் என்று ரிட்டையரான தாத்தாக்கள் பிதற்றிக்கொண்டு இருப்பதற்கு, நம் வரலாற்றைச் சரியாக எழுதாததுதான் காரணம்.
1528ல் பாபர் மசூதி ஒன்று ஸ்ரீராமர் கோயில் இருந்த இடத்தின் மீது மிர் பக்கி என்னும் பாபரின் படைத்தலைவரால் கட்டப்பட்டது. கலவரம் நடந்த பிறகு, ஆங்கிலேயர்கள் கட்டைப் பஞ்சாயத்து செய்து, ஒரு பகுதியில் மசூதியையும், இன்னொரு பகுதியில் கோயிலையும் அனுமதித்தார்கள். 1949ல் ஸ்ரீராம மூர்த்திகளை அங்கே பிரதிஷ்டை செய்தார்கள். 1992ல் அங்கே இருந்த மசூதியை இடித்து மீண்டும் அங்கே ராமரை பிரதிஷ்டை செய்தபோது நடந்தவை எல்லாம் நீங்கள் தொலைக்காட்சியில் பார்த்த வரலாறு.
இந்தியத் தொல்பொருள் ஆராய்ச்சிக் கழகம் (ASI) 2003ல் அகழ்வாராய்ச்சியை மேற்கொண்டு, மசூதியின் அடியில் இருக்கும் கட்டட அமைப்புப் பற்றி விரிவான ஆராய்ச்சி செய்து அறிக்கை சமர்ப்பித்தது. சுமார் 3,000 ஆண்டு பழமை மிகுந்த கட்டட அமைப்புக்கு மேல் மசூதி கட்டப்பட்டதாக அறிக்கை சொன்னது. ராமர் ‘மித்’ இல்லை நமக்கு மித்திரன்.
“எக்கசக்க செக்யூரிட்டியாம்… மொபைல் கேமரா எதுவும் நாட் அலவ்ட்” போன்ற அறிவுரைகளால் உள்ளூர ‘ராம ஜன்ம பூமி’க்குச் சீக்கிரம் செல்லவேண்டும் என்ற பதற்றம் தொற்றிக்கொண்டது.
நம் சடகோபன் திருவாய்மொழியில் –
கற்பார் இராம-பிரானை அல்லால், மற்றும் கற்பரோ?
புல் பா முதலா, புல் எறும்பு ஆதி ஒன்று இன்றியே
நல்-பால் அயோத்தியில் வாழும் சராசரம் முற்றவும்
நல்-பாலுக்கு உய்த்தனன் நான்முகனார் பெற்ற நாட்டுளே?
‘அயோத்தியில் வாழ்கின்ற எல்லா ஜீவராசிகளுக்கும், புல் முதல் எறும்பு வரை, ஆயோத்தியில் இருந்ததால் சுலபமாக பரமபதம் கிடைத்தது. ஸ்ரீராமபிரானுடைய கீர்த்தியை அல்லாமல் வேறு கீர்த்திகளையும் கற்பார்களோ?’
இங்கே ‘நற்பால் அயோத்தி’ என்று நம்மாழ்வார் கூறுவதற்கு நம்பிள்ளை ‘அயோத்தி மண்ணை மிதித்தாலே இராம பக்தி தானாக உண்டாகும்’ என்று விளக்கம் தருவாராம். அதாவது ராமகுணங்கள் நடனமாடுகிற அயோத்தி என்று பொருள்.
ஸ்ரீராமரை பற்றிப் பள்ளியில் எங்கு படித்தேன் என்று யோசித்தேன். Ram killed Ravana. – Active Voice; Ravana was killed by Ram. – Passive Voice. நமக்குத் தெரிந்த ராமர் அவ்வளவே!
ராமாயணத்தில் எவ்வளவு காண்டம் இருக்கிறது, கம்பர், துளசிதாஸ் எழுதிய ராமாயணத்தில் உத்திர காண்டம் இருக்கிறதா போன்ற தகவல்கள் பலருக்குத் தெரியாது. நம் குழந்தைகளின் நிலையை யோசித்துப் பாருங்கள்.
ஒரு மகனாக, ஒரு கணவனாக, ஓர் அரசனாக, ஒரு சகோதரனாக, ஒரு வீரனாக எப்படி வாழ வேண்டும் என்பதற்குச் சிறந்த உதாரணமாக விளங்கிய ஸ்ரீராமரைப் பற்றி நாம் அவர்களுக்குச் சொல்லித் தந்தால் அதுவே சிறந்த வரலாற்றுப் பாடம்.
அயோத்தி முழுவதும் மொத்தம் 12,000 இராமர் கோயில்கள் உள்ளன என்பார்கள். அதனால் ‘பார்க்கும் மரங்களெல்லாம் நந்தலாலா’ மாதிரி இங்கே போகும் இடம் எல்லாம் ராமர் கோவில்தான்.
அயோத்தியாவில் பார்க்கும் கல், கோயில், மண்டபம், மூர்த்திக்குப் பின் ஏதோ ஒரு ராம கதை இருக்கிறது. இரண்டு நாளில் இவை எல்லாவற்றையும் சேவித்துவிட்டு வருவது என்பது பிரம்மப் பிரயத்தனம். சில முக்கியமான கோயில்களை மட்டும் அனுபவித்து சேவிப்பது என்று முடிவு செய்து புறப்பட்டோம்.
முதலில் சென்ற கோயில் கனக பவன். ஸ்ரீராமர், சீதையின் அந்தப்புரம். இதை கைகேயி, ராமர்-சீதைக்குக் கல்யாணப் பரிசாகக் கொடுத்தார். அங்கே பல மூர்த்திகள் இருந்ததால், குழப்பத்துடன், “இதில் யார் ராமர், சீதை?” என்றேன். “எல்லாமே ராமர் சீதைதான்” என்று பதில் கிடைத்தது! அங்கே ஒரு சின்ன மண்டபம் மாதிரி தென்பட, அது என்ன என்று ஒருவரிடம் விசாரிக்க, இங்கிருந்துதான் ஸ்ரீராமர் வனவாசம் சென்றார் என்றார்கள்.
நாங்கள் சென்ற ஆட்டோ டிரைவரிடம் “ராம ஜென்ம பூமியை பார்த்துவிடலாம். மற்றவை எல்லாம் பிறகு” என்றோம். போகும் வழியில் ஒரு இடத்தில் ஆட்டோவின் வேகத்தைக் குறைத்து ராமர் கோயில் கட்டுவதற்குத் தயாராக இருக்கும் தூண், கற்கள் முதலியவற்றைக் காண்பித்தார்.
ராம ஜன்ம பூமி வாயிலை அடைந்தபோது அங்கே camouflage உடையில் தூப்பாகியுடன் ராணுவத்தைப் பார்க்க பயமாகத்தான் இருந்தது. கையில் இருந்த பை, பேனா, மொபைல் என்று சகல வஸ்துக்களையும் ஒரு கடையில் கொடுத்துவிட்டு உள்ளே நுழைந்தோம்.
என் பர்ஸை முழுவதும் சோசித்த முதல் காவலாளி, “ஏதாவது சிம் கார்ட் இருக்கா?” என்றார். “சின்ன சீப்பு மட்டும்தான் இருக்கு” என்றேன். அதை வாங்கிப் பக்கத்தில் இருந்த குப்பைத் தொட்டியில் போட்டார்.
இருபது அடியில் மீண்டும் சோதனை. இந்த முறை அவர் என் பர்ஸை முழுவதும் சோதித்துப் பார்த்து என் இடுப்பில் இருந்த அங்கவஸ்திரத்தைத் தடவியபின் உள்ளே அனுமதித்தார்.
இதற்கு பிறகு சர்க்கஸ் கூண்டுக்குள் போகும் சிங்கம் போலச் சென்றேன். என்னுடன் வந்தவர் கொஞ்சம் எரிச்சலாக “எதுக்கு இவ்வளவு செக்யூரிட்டி செக்” என்று சொல்லி முடிக்கும் முன் அடுத்த செ.செக். அங்கவஸ்திரம் கழற்றப்பட்டது.
இடுப்பில் கட்டிக்கொண்டபின் மேலும் ஒரு செ.செக். மனதில் இருந்த ராமரைத் தவிர மற்ற எல்லாவற்றையும் சோதித்துவிட்டார்கள். போர்ட்டிங் பாஸ் கொடுத்து வைகுண்டத்துக்கு அனுப்பினாலும் ஆச்சரியபட்டிருக்க மாட்டேன்.
கூண்டுக்குள் நடக்கும்போது வெளியே சிஆர்பிஎப் வீரர்கள் கையில் AK47 வைத்துக்கொண்டு சோர்வே இல்லாமல் காவல் காத்துக்கொண்டு இருப்பதைப் பார்க்க முடிந்தது.
சில நிமிஷத்தில் ராம ஜன்ம பூமி என்ற பிரசித்தி பெற்ற இடம் வந்தது. தற்போது உள்ள கோயில், இரண்டு சுவற்றின் மீது தார்பாலின் கூடாரம். ‘மனத்துக்கு இனியான்’ என்று ஆண்டாள் போற்றிய சக்ரவர்த்தித் திருமகனான ஸ்ரீராமரை ஒருவித கனத்த மனத்துடன் பார்த்துக்கொண்டு இருந்தேன்.
சென்ற ஆண்டு மதுராவுக்குச் சென்றபோதும் இதே நிலைமை. எல்லாம் பெருமாள் திருவுள்ளம் என்று நினைத்துக்கொண்டேன்.
இக்ஷ்வாகு வம்சத்தில் உதித்த ஸ்ரீராமர், தான் ஆராதித்த ஸ்ரீரங்கநாதரை விபீஷ்ணனிடம் அன்பளிப்பாகக் கொடுத்தார் அதுவே இன்று ஸ்ரீரங்கத்தில் இருக்கும் பெருமாள். வைகுண்டத்தின் ஒரு பகுதி அயோத்தியா என்பார்கள். ராமர் ஆராதித்த பெருமாள், விமானம் ஸ்ரீரங்கம் வந்தபோது ஸ்ரீரங்கம் பூலோக வைகுண்டம் ஆனதில் வியப்பில்லை.
சங்க இலக்கியங்கள், வால்மீகி, ஆழ்வார்கள், கம்பன் எல்லோரும் அயோத்தி பற்றிக் குறிப்பிடுகிறார்கள். கட்டுரையின் ஆரம்பத்தில் சொல்லப்பட்டிருப்பது போல, ‘நம்பப்படுகிறது’ என்று சொல்லுவது அயோக்கியத்தனம். ஸ்ரீராமர் இங்குதான் பிறந்தார் என்று நம் குழந்தைகளுக்குச் சொல்லித்தர வேண்டும். மாற்றக் கூடாதவற்றை மாற்றாமல் இருப்பதுதான் முன்னேற்றம்.
ஸ்ரீராமரை சேவித்துவிட்டு அவர்கள் கொடுத்த கற்கண்டு பிரசாதத்தை எடுத்துக்கொண்டு நடக்கும் போது மனம் முழுவதும் ஸ்ரீராமரே குடிகொண்டு இருந்தார். சீக்கிரம் இங்கே கோயில் கட்டப்பட்டு அதில் ஸ்ரீராமரைச் சேவிக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டேன்.
அயோத்தியா – தயார் நிலையில் |
அங்கே இருந்த ஒரு ஜவானிடம் பேச்சுக் கொடுத்தோம் (நல்ல வேளை என் நண்பருக்கு ஹிந்தி தெரியும்!)
சம்பாஷனை இதுதான்.
“இங்கே தான் பாப்ரி மஸ்ஜித் இருந்ததா?” என்று கேட்டோம். அதற்கு அந்த ஜவான், “நீங்களே மஸ்ஜித் என்று சொல்லலாமா? இங்கே ராமர் கோயில்தான் இருந்தது, மஸ்ஜித் இல்லை… இது ராமருக்கே சொந்தமான இடம்…”
உணர்ச்சிவசப்பட்டு “ஜெய் ஸ்ரீராம்!” என்றேன்
கொஞ்சம் தூரம் நடந்தபின் மேலும் இன்னொரு ஜவானிடம் பேச்சுக் கொடுத்தோம்.
“எவ்வளவு நாளா இங்கே காவல் புரிகிறீர்கள்?”
“இங்கே ராமர் கோயில் வரும் வரை நாங்கள் காவல் காப்போம்… கோர்ட் கோயில் கட்டலாம் என்றால் நான்கே மணி நேரத்தில் கோயில் கட்டி முடித்துவிடுவோம்!”
மீண்டும் “ஜெய் ஸ்ரீராம்” என்றோம். ஜவான்கள் சல்யூட் அடிக்க, உணர்ச்சிவசப்பட்டுத் திரும்பினேன்.
அயோத்தியா பற்றிய செய்திகள், படங்கள், புத்தகங்களை கூகிளில் பார்க்கலாம். ஆனால் நேரில் பார்க்கும்போது இங்கே ஸ்ரீராம ஸ்பரிசம் ஏற்படுவது நிச்சயம். எங்கு திரும்பினாலும் ஸ்ரீராம பஜனைகள். கோயில்களில் தாடி வைத்த பெரியவர்கள் ஸ்ரீராமாயணத்தை சதா படித்துக்கொண்டே இருக்கிறார்கள். எங்கு திரும்பினாலும் வானரக்கூட்டம். வீடுகள் இருக்கிறதா, இல்லை எல்லாம் கோயிலா என்று பிரமிப்பே ஏற்படுகிறது.
*
ஸ்ரீரமரை சேவித்துவிட்டு ‘அம்மாஜி மந்திர்’ என்று பிரசித்தி பெற்ற கோயிலுக்குப் பயணம் ஆனேன். இந்த கோயில் சுமார் 700 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. கோயிலைப் பார்த்தவுடன் நம் மனதில் ‘ரகுவம்ச சுதா’வின் கதன குதூகலம் ஏற்படுகிறது. காரணம் கோயில் தென்னாட்டுப் பாணியில் அமைந்துள்ளது. கோயிலின் உள்ளே சீதை ராமர், லட்சுமணருடன் காட்சி தருகிறார்கள். கூடவே ஹனுமார். தனி சன்னதியில் சின்னதாக ஆனால் மிக அழகாக ஸ்ரீரங்கநாதர் சேவை. எதிரே ஆழ்வார்களுடன் ஸ்ரீராமானுஜர் எழுந்தருளியிருக்கிறார்.
கோயிலுக்கு வெளியே வரும் போது தம்பதிகள் படம் ஒன்று கண்ணில் தென்பட அது யார் என்று விசாரித்தேன். யோகி பார்த்தசாரதி, அவர் தர்மபத்தினி யோகினி சிங்கம்மாள்.
யோகி பார்த்தசாரதி, அவர் தர்மபத்தினி யோகினி சிங்கம்மாள் |
இவர்களுக்கும் இந்த கோயிலுக்கும் என்ன சம்பந்தம்? இவர்கள் கனவில் ஸ்ரீராமர் தோன்றி திருப்புள்ளாணியில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் அர்ச்சா மூர்த்தியாக இருக்கிறேன், அதை அயோத்தியில் பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்று பணிக்க, ராமேஸ்ரத்துக்குப் பயணித்தார்கள். குறிப்பிட்ட இடத்தில் ஸ்ரீராமர், சீதை, லட்சுமணன் ஆகிய மூவரின் அர்ச்சா மூர்த்தி கிடைக்க, அதை பிரதிஷ்டை செய்ய அயோத்தியில் நிலத்தை வாங்கிக் கோயிலை ஏற்படுத்தினார்கள்.
1900ல் யோகி பாரத்தசாரதி ஆசாரியன் திருவடியை அடைந்த பிறகு நாற்பது வருட காலம் அவர் தர்மபத்தினி சிங்கம்மாள் கைங்கரியங்களைப் பார்த்துக்கொண்டாள். அதனால் இந்தக் கோயில் ‘அம்மாஜி’ மந்திர் என்று அழைக்கப்படுகிறது.
கோயிலில் தமிழில் நாலாயிரத் திவ்ய பிரபந்தங்கள் பேனர் கண்ணில் பட்டது. அயோத்தியா பற்றி ஆழ்வார்களின் மங்களாசாசன பாசுரங்கள். சேவித்தேன்.
தென் திசையிலிருந்து வட திசைக்கு பிரபந்தம் வந்துள்ளது. அதற்கு காரணம் ஸ்ரீராமர்தான். ஸ்ரீராமர் அருள் இல்லை என்றால் நமக்கு நம்மாழ்வாரே கிடைத்திருக்க மாட்டார்.
மதுரகவிகள் அயோத்தியில் இருந்தபோதுதான் வானத்தில் ஒரு ஒளி தென்பட்டது. அதைத் தேடிக்கொண்டு சென்று திருக்குறுகூர் என்ற அழ்வார் திருநகரிக்கு வந்தடைந்து நம்மாழ்வாரைப் புளியமரத்துப் பொந்தில் பார்த்து அவருக்கு சிஷ்யரானார். திருவாய்மொழி நமக்குக் கிடைத்தது. இது அயோத்தியின் பெருமை!
அடுத்து வசிஷ்ட் குண்ட் என்ற அழகான கோயில். ராமர் மற்றும் அவருடைய சகோதரரர்கள் பயின்ற இடம். குருவிடம் நால்வரும் படிக்கும் சிற்பம் அழகாகவும் மனதுக்கு நிறைவாகவும் இருக்கிறது. அங்கே ஒரு கிணறு இருந்தது. “வாங்க அதை காண்பிக்கிறேன்” என்று ஒருவர் எங்களை கீழ்ப்பகுதிக்கு அழைத்துச் சென்றார். கிணறு சின்ன குளம் போலக் காட்சி அளித்தது! “சரயூ நதியில் என்ன அளவு தண்ணீர் இருக்குமோ அதே அளவு இங்கே இருக்கும்” என்று எங்களை ஆச்சரியப்படுத்தினார். அதில் சின்னதாக ஒரு ஆமை நீச்சல் அடித்துக்கொண்டு இருந்தது.
*
பிரியாவிடை கொடுத்துவிட்டு ஹனுமான் கடீ என்ற இடத்துக்குச் சென்றேன். சிறு குன்றின் மீது அமர்ந்திருக்கும் ஹனுமானுக்கு நாமே லட்டுவைச் சமர்பித்துவிட்டு வரலாம். இந்த ஹனுமான்தான் அயோத்தியை இன்றும் காத்துக்கொண்டு இருக்கிறார். அதனால் ரொம்ப பவர் ஃபுல் அனுமார்.
அயோத்தி முழுக்க குரங்குகளைப் பார்க்க முடிகிறது. அவைகளை யாரும் ஒரு சங்கடமாக நினைப்பதில்லை. குப்தார் காட் என்ற சரயூ நதிக்கரையில் (அயோத்தியிலிருந்து 15 கிமீ தூரம்) ஸ்ரீராமன் வைகுண்டத்துக்கு எல்லோரையும் அழைத்துச் சென்ற இடம். எல்லோரும் என்றால் நாட்டு மக்கள், புல், கல் என்று எல்லாவற்றையும், ஒருவரைத் தவிர. அது ஹனுமான். ராம நாமம் சொல்லிக்கொண்டு இங்கேயே அயோத்தியில் இருக்கிறேன் என்று சொல்லிவிட்டார். அதனால்தான் அயோத்தியா இன்றும் இருக்கிறது.
பிருந்தாவனம் போல அயோத்தியில் குரங்குகள் சேட்டை செய்வதில்லை. கண்ணன் கோபிகைகளின் துணியை ஒளித்துவைப்பது போல பிருந்தாவனத்தில் குரங்குகள் நம் மூக்குக் கண்ணாடியைப் பிடுங்கி வைத்துக்கொள்ளும் விளையாட்டு கிடையாது.
பாபர் மசூதிக்குள் 1949ல் இந்து பக்தர்களின் வழிபாட்டுக்குத் திறந்து விடும் உத்திரவை 1986ல் பிறப்பித்த பைசலாபாத் மாவட்ட நீதிபதி கே.எம்.பாண்டே, பதவியிலிருந்து ஓய்வு பெற்றபின், 1991ல் தனது சுய சரிதையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
“பூட்டியிருந்த கோயிலின் கதவை பக்தர்களின் தரிசனத்துக்குத் திறந்து விடுவதற்கான உத்திரவைப் பிறப்பித்த அந்த நாளன்று, எனது நீதிமன்ற அறையின் மேற்கூரையில் கொடிமரத்தைப் பற்றியபடி ஒரு கருப்புக் குரங்கு அமர்ந்திருந்தது. அன்றைய தினம் தீர்ப்பு என்ன என்பதைத் தெரிந்து கொள்வதற்காக நீதிமன்ற வளாகத்தில் கூடியிருந்த பைசலாபாத், அயோத்தி நகரங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் அந்தக் குரங்குக்கு வேர்க்கடலை, பழம் முதலானவற்றைக் கொடுத்தனர். அந்தக் குரங்கோ அவற்றைத் தொடக்கூட இல்லை. மாலை 4.40க்கு நான் தீர்ப்பைப் படித்தவுடன் அந்தக் குரங்கு அங்கிருந்து அகன்றது. பின்னர் எனது பாதுகாப்புக்காக வந்திருந்த மாவட்ட ஆட்சியரும், போலிஸ் கண்காணிப்பாளரும் என்னை எனது பங்களாவுக்கு அழைத்துச் சென்றனர். பார்த்தால், எனது பங்களாவின் தாழ்வாரத்தில் அமர்ந்திருக்கிறது அந்தக் குரங்கு. எனக்கு அச்சரியம் தாங்கமுடியவில்லை. நிச்சயமாக ஒரு தெய்வீக சக்திதான் அந்தக் குரங்கு என்பதை உணர்ந்துகொண்டு அதனை வணங்கினேன்.”
*
மதிய உணவு சமயம் சாப்பாட்டைத் தவிர்த்து மீண்டும் ராம ஜன்ம பூமிக்குப் பயணித்தேன். இந்த முறையும் என்னை முழுவதும் சோதித்து அனுப்பினார்கள். என் சீப்பை போட்ட அந்த குப்பைத் தொட்டியில் எட்டி பார்த்தேன். நீங்கள் நம்ப மாட்டீர்கள், உள்ளே பல சீப்புக்கள்!
மீண்டும் மனத்துக்கு இனியானை சற்று நேரம் சேவித்துவிட்டு அடுத்தமுறை வரும்போது கோயில் கட்டியிருக்க வேண்டும் என்று ஸ்ரீராமரிடம் ஆத்மார்த்தமாகப் பிராத்தனை செய்துகொண்டேன்.
மாலை நாட்டிய நிகழ்ச்சி. கூடவே ஸ்ரீராமர் பட்டாபிஷேகம் நடந்தது. அந்த நிகழ்வின்போது உ.வே ஸ்ரீவேளுக்குடி ஸ்வாமி குழுமியிருந்த 1,500 பேரிடமும் ஒரு பிரார்த்தனை வைத்தார். அது, “விரைவில் பல ஆயிரம் பேர் ஒரே இடத்திலிருந்து பஜனை செய்யும் வசதியுடன் ஸ்ரீராமருக்குக் கோயில் ஒன்று அமைய வேண்டும்” என்பதுதான். நிச்சயம் இந்தப் பிரார்த்தனை பலிக்கும்.
*
மறுநாள் குப்தார் காட் நதிக்கரையில் நீராடிவிட்டு, அயோத்தியின் பெருமையை முழுவதும் சொல்ல முடியாமல் ‘யாது என் வியப்பாம்’ என்று கம்பன் சொல்லியது நிஜம் என்று நினைத்துக்கொண்டு கிளம்பினேன்.
பிள்ளைப் பெருமாள் ஐயங்காரின் நூற்றெட்டுத் திருப்பதி அந்தாதியில் அயோத்தியா பற்றி இப்படிக் குறிப்பிடுகிறார்.
ஆர்க்கும் இது நன்று தீது ஆனாலும் நெஞ்சே நீ
பார்க்கும் பல கலையும் பன்னாதே சீர்க்கும்
திரு ஐ யோதிப் புயலை சீரிய மெய்ஞ்ஞானத்து
உருவை ஒத்தின் பொருளை ஓர்
அயோத்தி ஸ்ரீராமரை தியானித்தால் போதும், வேறு எதுவும் செய்ய வேண்டாம் என்பது ஒருவரி அர்த்தம்.