 |
அரவை இயந்திரம் |
வினய் மக்கானி எனது நெடுநாளைய நண்பர். சில நாட்கள்
முன்பு மதிய உணவு அருந்திக்கொண்டிருக்கையில், “என் பொண்ணு ஒரு கேள்வி கேட்டா”
என்றார். ‘அப்பா, பொண்ணு கோழிதானே முட்டை
போடும்? அப்ப பாய்ஸ் கோழியை எல்லாம் என்ன செய்வாங்க?’
என்கிறாள். என்ன பதில் சொல்வது? நிஜமாவே எனக்குத் தெரியலை. சேவல்களை எவ்வளவுன்னு
வளர்ப்பாங்க?”
அன்னம்மா, “அதை கறிக்கு வளப்பாங்க”
என்றார்.
வினய் “இல்லங்க. ப்ராய்லருக்கு வளர்க்கிற கோழி வேற,
முட்டை இடறதுக்குன்னு வளர்க்கிற இனம் வேற” என்றார்.
அன்னம்மா சிந்தித்து, உரக்க வியந்தார். “அட, ஆமா…
இப்பத்தான் நானும் யோசிக்கறேன்… சேவலை என்ன செய்வாங்க?”
இந்தியாவில் இது ஒரு பெரும் பிரச்சினையோ இல்லையோ, உலகளவில்
பெரும் பிரச்சனை. முட்டைக்கோழிகள் இனத்திற்கே இழைக்கப்படும் இனப்படுகொலையின் ஓர் அங்கம்,
சேவல்களின் கொடூரக்கொலை.
கோழிகளைப் பண்ணைகளில் வளர்ப்பது மிக்க லாபம் ஈட்டும்
துறை. அசைவ உணவு வகையில் உலகளவில் மீனுக்கு அடுத்தபடியாக, சாப்பாட்டுத் தட்டில் காணப்படுவது
கோழி இறைச்சி. அமெரிக்காவின் ஒரு நாளைய நுகர்வு 22 மில்லியன் ப்ராய்லர் கோழிகள் என
ரெஃபரன்ஸ்.காம் சொல்கிறது. இது 2014ன் புள்ளிவிவரம். ரெட் மீட் எனப்படும் ரத்தச் சிவப்பேறிய
இறைச்சிகள் (ஆடு, மாடு, பன்றி முதலியன) உண்ணப்படுவது குறைவதன் மூலம், கோழிகள் உண்ணப்படுவது
மேலும் இரு மில்லியன்கள் அதிகரித்திருக்கவேண்டும் என ஊக மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.
இத்தனை கோழிகள் உண்ணப்படுவதில் சேவல்கள் எத்தனையாக
இருக்க முடியும்? நிகழ்தகவின் அடிப்படையில் 50% பெட்டைக்கோழிகளுக்கு 50% சேவல்கள் பிறந்திருக்கவேண்டும்.
இறைச்சிக்கோழிகள் பண்ணையில் இது ஒரு பெரிய விஷயமில்லை. இறைச்சிக்காக வளர்க்கப்படும்
ப்ராய்லர் வகைக் கோழிகளில் ஆணென்றும் பெண்ணென்றும் வித்தியாசமில்லை. அனைத்துக் கோழிகளும்
உண்ணப்படுகின்றன.
ஆனால் முட்டைக்கோழிகளின் நிலை அப்படியில்லை. இங்கு
சேவல்கள் பயனற்றவை. அவற்றை வளர்ப்பதில் ஆகும் செலவுக்கு, அவற்றின் இறைச்சி ஈடுகட்டுவதில்லை..
எனவே, பிறந்த ஒரு நாளைக்குள் ஆண் குஞ்சுகள் கொல்லப்படுகின்றன.
நன்கு வளர்ந்த, ஆரோக்கியமான பெட்டைக்கோழி ஒரு வருடத்தில்
270 முட்டைகள் வரை இடும். அதன்பிறகு அவை ‘பயனற்ற கோழிகள்’
என வகைப்படுத்தப்பட்டுக் கொல்லப்படும். அந்த ஒருவருட வாழ்வை அவை இடும் முட்டைகள்
தீர்மானிக்கின்றன.
கோழிக் குஞ்சு பொரித்து அவற்றை விற்கும் பண்ணைகள்,
முட்டைக்கோழிகளின் குஞ்சுகளின் விற்பனையில், பெண் குஞ்சுகளையே விற்கின்றன. ஏனெனில்
அவையே முட்டைகளை வருங்காலத்தில் இட்டு லாபம் ஈட்டும்.
முட்டைக்கோழி வளர்ப்புப் பண்ணைகள் முட்டை விற்பனையை
முன்வைக்கின்றன. குஞ்சு பொரித்து விற்கும் பண்ணைகளில் இருந்து வரும் குஞ்சுகள், இங்கு
வந்து வளர்ந்ததும் கருத்தரிக்காத முட்டைகளைத் தொடர்ச்சியாக இட்டு வரும். பெருவாரியான
கருத்தரிக்காத முட்டைகளை விற்பனைக்கு அனுப்பிவிடுவார்கள். பல பண்ணைகளில் இக்கோழிகள்
பின்னர் கருத்தரிக்க வைக்கப்பட்டு, அதன்பின் கிடைக்கும் முட்டைகளைச் செயற்கையாக அடைகாத்து,
அவற்றைக் குஞ்சு பொரிக்கச்செய்து அடுத்த சந்ததிகளை உருவாக்குவார்கள் இதில்தான் பிரச்சனை
தொடங்குகிறது.
நிகழ்தகவின் அடிப்படையில், ஒரு குஞ்சு ஆணாகவோ பெண்ணாகவோ
இருப்பதற்கு 50% வாய்ப்பு இருக்கிறது. எனவே 100 முட்டைகள் அடைகாக்கப்பட்டால் 50 குஞ்சுகள்
ஆண் குஞ்சுகளாக இருக்கும் வாய்ப்புள்ளது. இத்தனை சேவல்களால் ஒரு பயனும் முட்டைக்கோழி
வளர்ப்பவருக்கு இல்லை. இரை, பராமரிப்புச்செலவு, நோய்த் தடுப்பூசி, மருந்துகள் இவற்றின்
விலை, அக்கோழியை இறைச்சிக்காக விற்பதில் கிடைக்கும் தொகையைவிட அதிகம். எனவே இச்சேவல்கள்
நஷ்டத்தையே, முட்டைக்கோழி வளர்ப்பில் தருகின்றன. இதே பிரச்சனைதான், முட்டைக்கோழிகளைப்
பொரித்துக் குஞ்சுகள் விற்கும் பண்ணைகளிலும். ஆண்குஞ்சுகளை எவரும் வாங்குவதில்லை.
மேற்சொன்ன இப்பண்ணைகளில், முட்டையோட்டை உடைத்து வெளி
வரமுடியாத குஞ்சுகள், அழுகிய முட்டைகள், சரியாக வளராத குஞ்சுகள், இரு கருக்கள் உள்ள
முட்டைகள், நுண்ணுயிரிகளால் தாக்கப்பட்ட முட்டைகள் போன்றவை அழிக்கப்படும். முட்டைகளிலிருந்து
வரும் குஞ்சுகளின் பாலினம் சோதிக்கப்பட்டு ஆண் குஞ்சுகள் அப்புறப்படுத்தப்படுகின்றன.
இவை ஒரு நாளைக்குள் பிரிக்கப்பட்டு விடுகின்றன.
இக்குஞ்சுகளைக் கொல்லும் விதம் கொடூரமானது. பல நாடுகளில்
அவை கழுத்தை நெறித்துக் கொல்லப்படுகின்றன. அல்லது, ஒரு பெரிய ப்ளாஸ்டிக் / உலோக அடைப்பில்
இடப்பட்டு, கார்பன் டை ஆக்ஸைடு செலுத்தப்பட்டு, மூச்சுத்திணற வைத்துக் கொல்லப்படுகின்றன.
சில நாடுகளில், சிறிய ப்ளாஸ்டிக் பைகளை அவற்றின் தலையில் மாட்டி, ரப்பர் பேண்ட் போட்டுவிடுகிறார்கள்.
அவை மூச்சுத்திணறி தடுமாறித் தத்தளித்து, துடிதுடித்து இறக்கின்றன.
‘அய்யோ கொடூரம்’ என்று நீங்கள்
அதிர்ந்தீர்களானால், பெரும்பண்ணை உரிமையாளர்கள் இவற்றைத் தவிர்த்துவிடுகின்றனர். தவிர்த்ததன்
காரணம், இது அதிகப்படியான வேலை என்பதும், உற்பத்தித் திறனைப் பாதிக்கிறது என்பதும்தான்!
எனவே, அவர்கள் மற்றொரு உத்தியைப் பயன்படுத்துகிறார்கள்.
வளர்ந்த நாடுகளில், பெரும் பண்ணைகளில், அரவை இயந்திரம்
போன்ற ஒரு கருவியை நிறுவுகிறார்கள். பிறந்து ஒரு நாள் கூட ஆகாத குஞ்சுகளை அதில் எறிந்து
விடுகிறார்கள். ஒரு வினாடிப் பொழுதில் அவை அரைத்துக் கொல்லப்படுகின்றன. இதற்கு முன்சொன்ன
உத்திகளே பரவாயில்லை.
முட்டைக்கோழிகளின் ஆண் குஞ்சுகளுக்கு நேரும் இக்கொடுமை
பலர் அறிவதில்லை. 1990களின் இறுதியில் விலங்குகளுக்கான கருணை அமைப்புகள், தன்னார்வல
நிறுவனங்கள், இறைச்சிக்காக விலங்குகள் வளர்க்கப்படும் விதத்தைக் குறித்து கடும் எதிர்ப்புகளைத்
தெரிவித்து வந்தன. சுதந்திரமாகக் கோழிகளைப் பரவலான இடத்தில் வளர விடுதல், பண்ணைகளில்
கால்நடைகளுடன் வளர விடுதல், இயற்கையான சூழ்நிலையில் வளர்த்தல் என்பன முன்வைக்கப்பட்டு,
அவ்வாறு வளர்க்கப்பட்ட கோழிகளின் இறைச்சியைத் தனியாக லேபல் இட்டு விற்பனைக்குக் கொண்டு
வரவேண்டுமென்ற கோரிக்கை வலுத்தது. பல நிறுவனங்கள், தாங்கள் கொள்முதல் செய்யும் பண்ணைகளில்
இத்தகைய நிபந்தனைகளை விதித்தன. இதோடு, அரசு அதிகார நிறுவனங்கள், முறைப்படுத்தும் அதிகார
நிறுவனங்கள் தங்களது செயல்முறைப் பரிந்துரைகளில் இத்தகைய நிபந்தனைகளை, கெடுபிடியின்றி,
தகுந்த அவகாசம் தந்து பரிந்துரை செய்தன.
ஆனால், முட்டைக்கோழிகளின் ஆண்குஞ்சுகள் கொல்லப்படும்
விதம் குறித்து பன்னாட்டு நிறுவனங்கள் கண்டுகொள்ளாமல், முட்டைகளைப் பண்ணைகளில் வாங்கி
வினியோகித்து வந்தன. ஃபார்ம் ஃபார்வர்டு என்ற தன்னார்வல நிறுவனம், யூனிலிவர் முட்டைகளைக்
கொள்முதல் செய்யும் பண்ணைகளில், எவ்வாறு ஆண்குஞ்சுகள், அரவை இயந்திரங்களில் எறியப்பட்டுக்
கொல்லப்படுகின்றன என்பதை வீடியோவாகப் பதிந்து இணையத்தில் வெளியிட்டது. பல லட்சம் பேர்
அக்காணொளியைக் கண்டு தங்கள் அதிர்ச்சியை பின்னூட்டமாகப் பதிவு செய்ததும், யூனிலீவர்,
தனது முட்டைக் கொள்முதல் கொள்கைகளை மாற்றியதுடன், தனது முட்டை விற்பனையாளர்களுடன் ஆலோசனை
நடத்தி, ஆண்குஞ்சுகளைப் பாலினப் பிரிப்பு செய்து கொலைசெய்யும் விதிமுறைகளை மாற்றச்
சொன்னது. ஒரு வருடத்தில் யூனிலீவர் விற்கும் முட்டைகள் மட்டும் 350 மில்லியன். இதற்கு
இணையான அளவிலான ஆண்குஞ்சுகள் கொல்லப்பட்டிருக்கும்.
இப்படிக் கொல்லப்படும் ஆண்குஞ்சுகளையும், வலுவிழந்த
பெண்குஞ்சுகள், நோய்வாய்ப்பட்டவை, முட்டையிலிருந்து வெளிவராத குஞ்சுகள் போன்றவற்றையும்
அரைத்து, உலர்த்திப் பொடித்துப் புரத உணவாக விலங்குத் தீவனத்தில் கலப்பது இதுவரை இருந்த
நிலை. இதன் தரக்கட்டுப்பாடு, மிகுந்த சவாலான ஒன்று. பெரும்பாலும் கழிவாகவே அவை தள்ளப்படுகின்றன.
ஆண்குஞ்சுகள் கொல்லப்படுவதைத் தவிர்க்க, ஜெர்மனியும்,
நெதர்லாந்தும் இணைந்து புதிய உத்தி ஒன்றை நடைமுறைப்படுத்தியிருக்கின்றன.
லேசர் கொண்டு, மிகச்சிறிய துளைகள் முட்டையோட்டில் இடப்பட்டும்,
நுண் ஊசிகள் மூலம் துளையிடப்பட்டும், முட்டையின் திரவம் சேகரிக்கப்பட்டு, மரபணு ஆய்வுக்
கருவிகள் மூலம் அவற்றின் பாலின மரபணுக்கள் சோதிக்கப்படுகின்றன. இதன்மூலம் முட்டைகள்
பிரிக்கப்பட்டு, அவை பொரியுமுன்னே அகற்றப்படுகின்றன.
மற்றொரு உத்தியில், முட்டைகள் இருக்கும் வெப்பநிலை
பதப்படுத்தப்பட்ட பெட்டிகளில், அம்முட்டைகளிலிருந்து வெளிவரும் வாயு, கவனமாகச் சேகரிக்கப்படுகிறது.
ஆண்குஞ்சுகள் இருக்கும் முட்டைகளிலிருந்து வரும் வாயுக்கலவையின் விகிதம், பெண்குஞ்சு
முட்டைகளிலிருந்து வரும் வாயுக்கலவையிலிருந்து வேறுபட்டிருக்கும். இதன்மூலம் முட்டைகளை,
அவை பொரியுமுன்னேயே பிரித்தறியலாம்.
இவ்வாறு பிரிக்கப்பட்ட ஆண் குஞ்சு தாங்கிய முட்டைகள்,
தடுப்பூசிகள் தயாரிக்கவும், வளர்ப்புப் பிராணிகளின் உணவு தயாரிக்கவும் (புரதம் செறிந்த
உணவு) பயன்படுத்தப்படுகின்றன. இவற்றில் குஞ்சுகள் வளராத நிலையில் கொல்லுதல் என்ற செயல்பாடு
இல்லை என்பது அவர்களது கணிப்பு.
அமெரிக்க உணவு மற்றும் மருந்து கண்காணிப்பு, தரக்கட்டுப்பாட்டுs
சோதனை நிறுவனமான USFDA ஐந்து அடிப்படைச் சுதந்திர உரிமைகளை வளர்ப்பு விலங்குகளுக்குப்
பரிந்துரைத்திருக்கிறது. அவை முறையே,
1. பசி மற்றும் தாகத்திலிருந்து விடுதலை. தங்கு தடையின்றி
உணவும் நீரும் வளர்ப்பு விலங்களுக்குக் கிட்டவேண்டும்.
2. வசதியான இருப்பிடம்.
3. வலி, காயம், நோய் இவை இல்லாத சூழல், பராமரிப்பு.
4. விலங்குகள் இயற்கையாக உணர்ச்சிகளை வெளிப்படுத்தும்
சூழல்.
5. பயம் மற்றும் அழுத்தமற்ற சூழல்.
இதில் 5ஆவது உரிமையில், கொல்லப்படுவதில் மனித நேயமான
முறைகள் கடைப்பிடிக்கப்படவேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. இதில் ஆண் குஞ்சுகள்
கொல்லப்படும் முறைகள் அடங்கும்.
இதுபோன்று பல நாடுகளும், பண்ணை விலங்களை நடத்தும் விதிமுறைகளில்
மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளன. இங்கிலாந்தும், ஆஸ்திரேலியாவும் இதில் சற்றே முன்னணியில்
இருப்பதாகத் தெரிகிறது. ஜெர்மனி, ஆண்குஞ்சுகளைக் கொல்வதில், முட்டையிலேயே பாலினப் பரிசோதனை
செய்வதை 2016லேயே நடைமுறைப்படுத்த முயன்றுவருகிறது. அமெரிக்கா, 2022ல் அனைத்துப் பண்ணைகளிலும்,
முட்டையில் பாலினப்பரிசோதனை செய்ய முடிவெடுத்திருக்கிறது.
இந்தியாவில் இதுபோன்று விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன.
கட்டுப்படுத்தப்படாத சிறு பண்ணைகளில் இவ்விதி முறைகளை எவ்வாறு கடைப்பிடிக்கிறார்கள்
என்பது பண்ணையைச் சேர்ந்தவர்களுக்கே வெளிச்சம்.
இது குறித்தான நுகர்வோர் அறிதலும், நமது எதிர்ப்புகளும்
ஓங்கி வளரும்வரை, இக்குரல்கள், பண்ணைகளின் கதவுகளைத் தட்டித் திறக்கும்வரை, பிறந்து
ஒருநாள்கூட ஆகாத குஞ்சுகளின் கிச்கிச் ஒலி, அரவைகளின் பெரு ஒலியில் அமிழ்ந்து போவது
தொடரும்.
வினய் மக்கானியின் பெண்ணின் கேள்விக்கு விரைவில் நல்ல
பதில் கிடைக்குமென நம்பலாம்.
உசாத்துணைகள் :
http://kb.rspca.org.au/What-happens-with-male-chicks-in-the-egg-industry_100.html#
http://www.publish.csiro.au/book/3451
https://www.washingtonpost.com/news/animalia/wp/2016/06/10/egg-producers-say-theyll-stop-grinding-male-chicks-as-soon-as-theyre-born/
http://www.fda.gov/ohrms/dockets/dockets/06p0394/06p-0394-cp00001-15-Tab-13-Farm-Animal-Welfare-01-vol1.pdf
http://www.thepoultrysite.com/poultrynews/34741/germany-aims-for-chicken-sexing-in-the-egg-by-2016/
http://www.insidermonkey.com/blog/11-countries-that-consume-the-most-chicken-in-the-world-353037/10/
—