சில பயணங்கள் சில பதிவுகள் – 31 | சுப்பு

கிரேசி மோகன்

ரமணியின் அச்சகத்தில் பணி செய்து கொண்டிருந்த காலத்தில் ஒரு செய்தி என்னைத் தாக்கியது (27.03.1984). ராஷ்டீரிய ஸ்வயம் சேவக சங்கத்தைச் சேர்ந்த, தொடக்கத்தில் என்னைப் பண்படுத்தி வழிநடத்திய பத்துஜி (பத்மநாபன்) கார் விபத்தில் சிக்கி உயிரிழந்தார் என்பதுதான் அந்தச் செய்தி. அது என்னை வெகுவாகப் பாதித்தது. அந்த அதிர்ச்சியிலிருந்து மீண்டு சகஜநிலைக்கு வருவதற்கு சில நாட்கள் ஆயின. Continue reading சில பயணங்கள் சில பதிவுகள் – 31 | சுப்பு

சில பயணங்கள் சில பதிவுகள் – 30 | சுப்பு

ஆல்பெர் காம்யூவும் ஆர்.எஸ்.எஸ்ஸும்

அடையாறு பகுதியின் இளைஞர்கள் அன்றாடம் கூடுமிடம் ஹோட்டல் ரன்ஸ். பலருக்கு அதை வாழுமிடம் என்றுகூடச் சொல்லலாம். எவ்வளவுநேரம் உட்கார்ந்திருந்தாலும் ஏனென்று கேட்கமாட்டார்கள். காபி, டீ, சமோசா என்று பில் மட்டும் கூடிக்கொண்டே போகும். என்னுடைய வாழ்க்கைத் தடத்தில் ஹோட்டல் ரன்ஸுக்கு முக்கியமான இடமுண்டு. பத்தாண்டுகளுக்கு மேலாக நான் ஈடுபட்டுவந்த கடல் தொழில், மீன் தொழில், கருவாடு தொழில், எல்லாவற்றிலிருந்தும் விலகும் கட்டம் அங்கேதான் நிகழ்ந்தது. Continue reading சில பயணங்கள் சில பதிவுகள் – 30 | சுப்பு

சில பயணங்கள் சில பதிவுகள் – 29 | சுப்பு

போலிசுக்கு பதிலாக புஸ்வாணம்

தமிழகத்தில் செயல்படும் இந்து இயக்கங்களுக்குச் சவாலாக இரண்டு நிகழ்வுகள் ஏற்பட்டன. 1981 மற்றும் 1982ல். முதலில் மீனாட்சிபுரம், இரண்டாவது மண்டைக்காடு. Continue reading சில பயணங்கள் சில பதிவுகள் – 29 | சுப்பு

டி.ஆர்.ராஜகுமாரிக்கு அடுத்து (புத்தக விமர்சனம்) | சுப்பு

தமிழ்த் திரைப்பட வரிசையில் இயக்குநர்களைப் பற்றிப் பேசும்போது கே.சுப்ரமணியத்தை விட்டுவிட்டுப் பேசமுடியாது. அந்த அளவுக்கு முக்கியஸ்தர் அவர். தன்னுடைய புதுப்படத்திற்கு ஒப்பந்தம் செய்வதற்காகப் பிரபல கதாநாயகியின் வீட்டிற்குப் போனார். நடிகைக்கும் இயக்குநருக்கும் இடையே நடந்த பேச்சு வார்த்தையில் உரசல் ஏற்பட்டது. Continue reading டி.ஆர்.ராஜகுமாரிக்கு அடுத்து (புத்தக விமர்சனம்) | சுப்பு

சில பயணங்கள் – சில பதிவுகள் 28 | சுப்பு

சி.ஆர். நரசிம்மன்
மத்தியில் ஆட்சி செய்த இந்திரா காந்தி அரசு நெருக்கடி நிலையை முடிவுக்குக் கொண்டு வந்து“தேர்தல் நடத்தப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டது (18-01-1977). இதைத் தொடர்ந்து நடந்த தேர்தலில் ஜனதா கட்சி வெற்றிபெற்றது. ஜனதா கட்சியின் கூட்டணிக்கு 292 இடங்கள் கிடைத்தன.
தமிழகத்தில் ஜனதா கூட்டணியில் ஸ்தாபன காங்கிரஸுக்கு மூன்று இடங்களும், திமுகவுக்கு ஒரு இடமும் கிடைத்தன. அதிமுக – இந்திரா காங்கிரஸ், வலது கம்யூனிஸ்ட் கூட்டணிக்கு முப்பத்தேழு இடங்கள் கிடைத்தன.
தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்துமொரார்ஜி தேசாய் பிரதமராகப் பதவியேற்றார். இந்த அமைச்சரவையில் அடல் பிகாரி வாஜ்பாய், எல்.கே.அத்வானி ஆகியோர் இடம்பெற்றதில் என்னைப் போன்றோருக்கு மகிழ்ச்சி.
ஆனால் ஜனதா கட்சியில் ஒற்றுமை என்பது தேடப்பட வேண்டிய பொருளாக இருந்தது. உள் கட்சியில் ஏற்பட்ட பிளவு காரணமாக மொரார்ஜி தேசாய் பதவி விலகினார். அடுத்த பிரதமராக வந்தவர் சரண் சிங். சரண் சிங் அமைச்சரவையில் அதிமுகவைச் சேர்ந்த சத்தியவாணிமுத்து, பாலா பழனூர் ஆகியோர் இடம்பெற்றனர். ஏகப்பட்ட குளறுபடிகளுக்குப் பிறகு சரண் சிங் ஆட்சியும் முடிவுக்கு வந்தது. இதைத் தொடர்ந்து பாராளுமன்றத்துக்கான தேர்தல் நடந்தது (ஜனவரி 1980).
இந்தத் தேர்தலில் இந்திரா காங்கிரஸ் 351/525 இடங்களில் வெற்றிபெற்றது. இந்திரா பிரதமரானார்.
இதற்கிடையே தமிழ்நாடு சட்டமன்றத்துக்கு நடந்த தேர்தலில் (ஜூன் 1977) அதிமுக கூட்டணி ஆட்சியைப் பிடித்தது. எம்.ஜி.ராமச்சந்திரன் தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றார்.
சரண் சிங் பதவிவிலகலுக்குப் பிறகு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் (ஜனவரி 1980)தமிழ்நாட்டின் அரசியல் அணிவகுப்பில் ஒரு மாற்றம் ஏற்பட்டது. திமுகவும் இந்திரா காங்கிரஸும் கூட்டணி அமைத்து பெரும் வெற்றிபெற்றன. அதிமுகவுக்குக் கிடைத்தது இரண்டு இடங்கள்தான்.
மு.கருணாநிதியின் விருப்பத்திற்கிணங்க பிரதமர் இந்திராவால் அதிமுக அரசு கலைக்கப்பட்டது (17-02-1980).
அதிமுக கப்பல் மூழ்கிவிடும் என்ற நினைப்பில் திமுகவினர் மிதந்துகொண்டிருந்தனர். அவர்களுக்குத் தீனி போடும் வகையில் முரசொலியில் அன்றாடம் செய்திகள் வந்துகொண்டிருந்தன. அமைச்சர் சௌந்தர பாண்டியன் விலகல், மாநிலங்களவை உறுப்பினர் நூர்ஜஹான் ரசாக் திமுகவில் சேர்ந்தார், அதிமுக எம்.எல்.ஏ ஆறுமுகம் விலகல், வி.பி.முனுசாமி எம்.பி திமுகவில் சேர்ந்தார், செல்வராஜ் எம்.எல்.ஏ திமுகவில் சேர்ந்தார், வீட்டுவசதி வாரியத் தலைவர் செல்லையா திமுகவில் சேர்ந்தார், வெங்கா எம்.பி திமுகவில் சேர்ந்தார் என்கிற ரீதியில் முரசொலி செய்திகள் வெளிவந்து திமுகவினரை குஷிப்படுத்திக்கொண்டிருந்தன.
இந்த பரபரப்பான அரசியல் பின்னணியில்தான் நான் சமாசார் செய்தி நிறுவனத்தின் தமிழ்நாடு செய்தியாளராக இருந்தேன். அதில் இரண்டு சம்பவங்களைமட்டும் இங்கு பதிவு செய்கிறேன்.
தமிழ்நாடு ஆளுநராக இருந்த பிரபுதாஸ் பட்வாரியின் அலுவலகத்திலிருந்து எனக்கு ஒரு அழைப்பு வந்தது. அது அன்றைய குடியரசுத் துணைத்தலைவர் எச்.எம்.ஹிதயதுல்லாவின் பிறந்தநாளுக்கான விருந்து. நான் கலந்துகொண்டேன் (டிசம்பர் 1979). செல்வந்தர்கள், உயர்மட்டத்திலிருக்கும் அரசியல்வாதிகள், அதிகாரிகள் ஆகியோரோடு அதிகப் பழக்கம் இல்லாத எனக்கு அது புது அனுபவமாக இருந்தது.
ஆரம்பமே சரியில்லை. உள்ளே நுழைந்தவுடன் நான் ஒரு இடத்தில் உட்கார வைக்கப்பட்டேன். அங்கு வந்த ஒரு அதிகாரி“கவர்னர் மாளிகையின் எல்லைக்குள் சிகரெட் பிடிக்கக்கூடாது என்று என்னை எச்சரித்தார். நான் புகைப் பழக்கத்தை விட்டுப் பல ஆண்டுகள் ஆகிவிட்டன என்பதை அவருக்கு எப்படிப் புரிய வைப்பது என்று எனக்குத் தெரியவில்லை. வேண்டுமானால் திரும்பிப் போய்விடுகிறேன் என்று நான் சொல்லச் சொல்ல அவர் அதைக் காதில் வாங்கிக்கொள்ளாமல் சிகரெட் விஷயத்திலேயே குறியாக இருந்தார். ஒரு கட்டத்தில் எங்கள் சம்பாஷணை எந்தத் தரப்பிற்கும் வெற்றி தோல்வியில்லாமல் முடிவுக்கு வந்தது. விருந்து நடக்கும் இடத்திற்கு நான் அழைத்துச் செல்லப்பட்டேன்.
அதுவரை சினிமாக்களில் மட்டுமே நான் பார்த்திருந்த காட்சி அது. விசாலமான அறையின் மையப்பகுதியில். மிகப்பெரிய முட்டை வடிவில் மேசை. வெளிச்சத்துக்கென்று இல்லாமல் அழகுக்காகச் செய்த விளக்குகள். கூப்பிடு தூரத்தில் சீருடைப் பணியாளர்கள். பத்து பேர் சாப்பிடும் விருந்துக்கு நான்கு பணியாளர்கள், இரண்டு மேஸ்திரிகள்.
என்னைத் தவிர, சட்டப் பேரவைத் தலைவர் ம.பொ.சிவஞானம், நீதியரசர் எம்.எம்.இஸ்மாயில், ஆற்காடு இளவரசர், கலாசேத்திராவின் ருக்மணி அருண்டேல்,தமிழ்நாடு சட்ட அமைச்சர் கே.நாராயணசாமி முதலியார், ராஜாஜியின் புதல்வர் சி.ஆர்.நரசிம்மன்,ஹிதயதுல்லா தம்பதியினர் மற்றும் பட்வாரி.
விருந்தினர்கள் அமர வைக்கப்பட்ட பிறகு பட்வாரியும்,ஹிதயதுல்லா தம்பதியரும் வந்தார்கள். அவர் வரும்போது எழுந்து நிற்க வேண்டும் என்று எனக்கு ஏற்கெனவே சொல்லப்பட்டுவிட்டது. இந்த மாதிரி விஷயங்களில் எனக்கு சமர்த்து குறைவு என்று எப்படியோ கண்டுபிடித்துவிட்டார்கள்.
எனக்குப் பக்கத்தில் இருந்தவர் ம.பொ.சி. பேரவையின் நடவடிக்கைகளைப் பதிவு செய்வதற்காகப் போய் வந்ததில் அவரோடு கொஞ்சம் பழக்கம் உண்டு. ம.பொ.சி எனக்குத் தெரிந்தவரையில் சாமானியர்களில் சாமானியர். “இங்கே எப்படி நடைமுறை என்று அவரிடம் கேட்டுவிட்டேன். அவர் முதலிலேயே மூன்று மணிகளை அடித்துவிட்டார். “நாமாகப்பேசக்கூடாது, சத்தம்போட்டுப் பேசக்கூடாது, கேட்ட கேள்விகளுக்கு மட்டும்தான் பதில் சொல்ல வேண்டும் என்பவைதான் அந்த எச்சரிக்கை மணிகள்.
இத்தனையும் மீறி ஒரு அசம்பாவிதம் நடந்துவிட்டது. மாளிகையின் பணியாளர் ஒருவர் என்னருகில் வந்து, குனிந்து காதில்“விருந்து முடிந்த பிறகு மேதகு ஆளுநர் உங்களைச் சந்திக்க விரும்புகிறார் என்றார். ம.பொ.சியையும் அவருடைய எச்சரிக்கையையும் மறந்துவிட்ட நான்“என்னோடு பேச விரும்புகிறீர்களா? என்று பட்வாரியைப் பார்த்துக் கேட்டுவிட்டேன், சத்தம் போட்டு. எங்களுக்கு சம்பந்தமில்லை என்ற மாதிரிஎல்லோரும் அமைதியாக இருந்துவிட்டார்கள், பட்வாரி உட்பட.
விருந்து நன்றாகத்தான் இருந்தது. ஆனால் எல்லோருமே தயங்குமிடத்தில் விருப்பப்படி விளையாட நம்முடைய நாகரிகம் இடம் தரவில்லை.
விருந்துக்குப் பிறகு, ஆளுநர் என்னை அழைத்துப் பேசுவார் என்று காத்திருந்தேன். அவர் அழைக்கவில்லை. எல்லோரும் அவரவர்களுடைய காரில் ஏறி வெளியேறிவிட்டார்கள். மாளிகையின் வாசலறையில் மூவர் மட்டும் இருந்தோம். நான், சி.ஆர்.நரசிம்மன் மற்றும் ஆளூநரின் ஏ.டி.சி. (A.D.C).
மற்றவர்கள் புறப்பட்டுப் போய்க்கொண்டிருந்தபோது, சி.ஆர்.நரசிம்மன் என்னிடம் கேட்டார். “தி.நகருக்கு ஆட்டோ சார்ஜ் எவ்வளவு ஆகும் என்று. என்னை அந்த வார்த்தைகள் வெகுவாகப் பாதித்துவிட்டன. இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆயிரக்கணக்கில் வக்கீல் தொழிலில் சம்பாதித்த ராஜாஜியின் புதல்வர் இவர். தவிர, சி.ஆர்.நரசிம்மன் இரண்டு முறை பாராளுமன்ற உறுப்பினராக இருந்திருக்கிறார். கை சுத்தம் என்பதால் காசு மிச்சமில்லை. இப்போது கிண்டி ராஜ்பவனிலிருந்து தி.நகருக்கு ஆட்டோவில் போகும் செலவைப் பற்றித் தயங்குகிறார் என்பது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. உடைமைகளையும், ஊதியங்களையும் தேச நன்மைகளுக்காக விட்டுக்கொடுத்தவர்களின் குடும்பங்களுக்கு இந்த கதிதான் என்கிற விஷயம் உறைத்தது.
அவரிடம்“நான் ஏற்பாடு செய்கிறேன் என்று சொல்லிவிட்டு மெயின் ரோடிலிருந்து ஆட்டோவை மடக்கி உள்ளே அனுப்புவதற்கான ஏற்பாடுகளைச் செய்யும்படி ஏ.டி.சியிடம் கேட்டுக்கொண்டேன். அவர் உதவினார். ஆட்டோ வந்தது. தமிழர்கள் செய்த பாவச் செயலுக்குப் பரிகாரமாக நானே அவருடன் ஆட்டோவில் போய் அவரை விட்டுவிட்டு பிறகு அடையார் வீட்டுக்குத் திரும்பினேன். ஆட்டோ செலவு என்னுடையது…
*
பிரதமர் இந்திரா பதவி ஏற்ற நூறாவது நாளில் சென்னைக்கு வந்தார் (ஏப்ரல் 1980). பிரதமரைச்சந்திப்பதற்காக சென்னை விமான நிலையத்தின் வி.ஐ.பி பகுதியில் பத்திரிக்கையாளர்கள் காத்திருந்தோம். என்னையும் சேர்த்து இருபது பேர். எங்களை பொழுது விடியாத நேரத்தில் கலைவாணர் அரங்கத்திற்கு வரச் சொல்லி மூன்று வேன்களில் ஏற்றி விமான நிலையத்திற்குக் கூட்டி வந்திருந்தார்கள். எல்லோரும் கலைவாணர் அரங்கத்திற்கு ஆறு மணிக்குதான் வந்தார்கள். நான் மட்டும் சங்கக் கட்டுப்பாட்டுடன் ஐந்து மணிக்கு ஆஜர். பின் விளைவுகள் என்னை பாதித்தபடியே இருக்க மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு வந்து காத்திருந்து ஒன்றுக்கு இரண்டு காப்பி குடித்துவிட்டு என்ன கேட்கலாம் என்று யோசித்திருந்தபோது “யஷ்பால் என்று ஒரு மெல்லிய குரல் கேட்டது. கூப்பிட்டவர் இந்திரா.
யஷ்பால் என்பவர் இந்திராவின் உதவியாளர் யஷ்பால் கபூர். அரசு ஊழியராக இருந்த யஷ்பால் கபூர் அரசு வேலையைத் துறந்துவிட்டு உத்திரபிரதேசத்தின் ரேபெரேலி தொகுதியில் போட்டியிட்ட இந்திராவுக்கு உதவியாளராக இருந்தார் (1971). அரசு வேலையிலிருந்து யஷ்பால் கபூர் விடுவிக்கப்படுவதற்கு முன்பே தேர்தல் பணிகளில் ஈடுபட்டுவிட்டார் என்பது அலகாபாத் நீதிமன்றத்தில் சோசலிஸ்ட் தலைவர் ராஜ் நாராயண் தொடுத்த வழக்கின் பாய்ண்டுகளில் ஒன்று என்பதைக் குறித்துக்கொள்ளவும்.
இந்திரா சோபாவில் அமர்ந்திருக்க, எதிரில் நாங்கள் நின்றிருந்தோம். சில போட்டோகிராபர்களும் சேர்ந்துகொண்டார்கள். இந்தியன் எக்ஸ்பிரஸ் ரிப்போட்டர்கள் இரண்டு பேர் டேப் ரிக்கார்டரின் பளு தாங்காமல், தேடி ஒரு ஸ்டூலைக் கண்டுபிடித்துவிட்டார்கள். பத்து நிமிடம்தான் பிரதமர் பேசுவார் என்று எங்களுக்குச் சொல்லப்பட்டிருந்தது. பத்து என்றால் பதினைந்து என்று அர்த்தம் என்று அகில இந்திய வானொலிக்காரர் என் காதில் கிசுகிசுத்தார்.
பார்வைக்கு இந்திரா பணக்கார சீமாட்டி போலத் தெரிந்தார். பதில்களெல்லாமே ஏதோ எங்களுக்குச் செய்கிற சலுகை போல் இருந்தது. இதனால் அந்த இடத்தில் கேள்வி கேட்பதில் தயக்கம் இருந்தது. சர்க்கரைக்கான இரட்டை விலை என்கிற ஜனதா அரசின் உத்தரவை (Dual pricing policy) இந்திரா ரத்து செய்திருந்தார். அதுபற்றி ஒரு கேள்வி வந்தது. இன்னொருவர் பதுக்கப்பட்ட சர்க்கரையை வெளிக்கொண்டுவர முடியவில்லையே என்று கேட்டார். அதற்கு இந்திரா“இந்த நாடு மிகப் பெரிய நாடு. இதன் மூலைகளில் எல்லாம், கிராமங்களில் பதுக்கப்பட்டுள்ள சர்க்கரையைக் கண்டுபிடித்து எடுக்க அரசு இயந்திரம் போதாது என்றார்.
இந்த நேரத்தில் நான் புகுந்தேன். “கிராமங்களில் இருப்பவர்கள்தான் பதுக்கல் செய்கிறார்கள் என்று சொல்கிறீர்களா? “ என்று கேட்டேன். அவர் புருவத்தை உயர்த்தி என்னைப் பார்த்தார், பதிலில்லை. இடைவெளியில் இன்னொருவர் வேறு கேள்வி கேட்க விஷயம் திசைமாறிவிட்டது.
“கிராமங்களில்தான் சர்க்கரை பதுக்கப்பட்டுள்ளது என்கிறார் பிரதமர் என்பதாகச் செய்தி எழுதி அனுப்பிவிட்டேன். விளைவு, அது இந்தியா முழுவதும் செய்தியாகிவிட்டது. தமிழகத்தில் இந்தியன் எக்ஸ்பிரஸ் மட்டும் இதைப் பதிவு செய்திருந்தது.
சர்க்கரை விஷயமாக நான் கொடுத்த செய்தி பற்றி பிரதமர் அலுவலகத்திலிருந்து சமாசார் தலைமையிடம் விசாரித்திருக்கிறார்கள்.இதன் விளைவாக என் மேலதிகாரி என்னை விசாரித்தார். அவருக்கு அவசியமாகத் தெரிந்த விசாரணை என் புத்திக்கு அநாவசியமாகப்பட்டது. ஒரு கட்டத்தில் நான் கோபப்பட்டேன். வேலையை ராஜினாமா செய்துவிட்டேன்.
வேலையை விட்டு விலகியவுடன் ராஜேந்திரனைப் பார்க்க நொச்சிக்குப்பத்துக்குப் போனேன்.அங்கே ராஜேந்திரனுக்கும் புதிய பார்ட்னர் குமாருக்கும் தகராறு. நாகப்பட்டினத்திலிருந்து மூட்டை மூட்டையாக நெத்திலிக் கருவாடு வாங்கிவந்து அடுக்கி வைத்திருந்தார்கள். வால்டேக்ஸ் ரோடிலுள்ள கருவாடு மொத்த வியாபாரிகள் அதை வாங்கத் தயாராக இல்லை. இதுதான் பிரச்சினை.
“மொத்தமாக விற்க முடியாவிட்டால் சில்லறையாக விற்கலாமே என்பது என் யோசனை. அதில் அவர்களுக்கு விருப்பமில்லை. ஒருநாள் முழுவதும் போராடி அவர்களைச் சம்மதிக்க வைத்துவிட்டேன். மறுநாள் ஒரு சைக்கிள் ரிக்க்ஷாவில் இரண்டு மூட்டைகளை ஏற்றிக்கொண்டேன். துணைக்கு சின்ன ராஜேந்திரன் என்ற பையன்.
சைதாப்பேட்டை மீன் மார்க்கெட்டுக்குப் போய் அங்கு கருவாடு விற்கும் பெண்களுடன் பேசினேன். மூட்டையிலிருந்து எடுக்கப்பட்ட கருவாடுகள் ஐந்து பெண்களிடம் ஒப்படைக்கப்பட்டன. அவர்கள் அதைக் கூறுகட்டி விற்றார்கள். காலை முதல் மாலை வரை கருவாட்டுக் கடையில் நாற்காலி போட்டு உட்கார்ந்திருந்தேன். என் கையில்“Talks with Ramana.
பத்து நாட்களில் கருவாடு விற்கப்பட்டு கமிஷன் கொடுக்கப்பட்டு போட்ட பணத்தை எடுத்துவிட்டோம். பிறகு நானில்லாமல் சின்ன ராஜேந்திரனை அனுப்பி தங்கசாலையிலும் இதே பார்முலா தொடர்ந்தது.
இதற்குப் பிறகு குமாருடைய முயற்சியால் மேட்டூர் அணையில் கிடைக்கும் மீன்களை ஹெளராவிற்கு எடுத்துப் போனேன்.இது ஒரு மாதம்தான்.சரிவரவில்லை.
கல்கத்தா அருகில் உள்ள தட்சிணேசுவரத்துக் காளி கோவிலில் வெகு நேரம் நின்றிருந்தேன்.கல்கத்தாவின் நெரிசல் இங்கு இல்லை.மக்கள் வரிசையாக வந்து கங்கை நீரைக் குடத்தில் எடுத்து வந்து புஷ்பங்களோடு லிங்கங்களுக்கு அபிஷேகம் செய்தார்கள்.சிமெண்ட் தரையில் வெய்யில் சூடு தெரியாதிருக்க கங்கைச் சிதறல்.இந்தப் பராசக்திதானா பரமஹம்சர் கொடுத்த சாப்பாட்டைச் சாப்பிட்டாள்?இவளா பேசினாள்? இப்படி ஒவ்வொன்றாக யோசித்துக் கொண்டிருந்தேன்.ஆனால் விக்ரகம் நான் கற்பனை செய்திருந்ததைவிடச் சிறியதாக இருந்தது.
தட்சிணேசுவரம் இப்படி என்றால் கல்கத்தாவின் மையப்பகுதியில் இருக்கும் காளிகட்டம் நேர் எதிர்.கடவுள் நம்பிக்கையே ஆட்டம் கண்டுவிடும் போலிருந்தது.வரிசையாகப் போகும்போது, எனக்கு முன்னால் ஒருவன் காளியின் மீதே கைகால் விரித்துக் கவிழ்ந்திருந்தான்.பெரிய பக்தன் போலிருக்கிறது என்று நினைத்துக் காத்திருந்தேன்.அவன் அசைவதாய் இல்லை.சிறிது நேரத்திற்குப் பிறகுதான் எனக்கு அங்கே நடப்பது என்ன என்று தெளிவாகியது.காசு கொடுத்தால் நாம் காளியைத் தொட்டுப் பார்க்கலாம்.அப்படிக் கொடுக்காதவர்கள் தொட்டுவிட முடியாதபடி இந்த பந்தோபஸ்து.
ஹெளராவிலிருந்து திரும்பி வரும்போது பாரதீப் போனேன்.கொண்டம்மாள் எனக்குத் தர வேண்டிய பாக்கியை வசூல் செய்யலாம் என்று போனால் கொண்டம்மாளின் நிலைமை பரிதாபமாயிருந்தது.அவளுடைய இடத்தில் இன்னொரு வியாபாரி வந்துவிட்டதால், வருமானம் இல்லாமல் சிரமப்பட்டுக் கொண்டிருந்தாள்.கணவன் எப்படி இருக்கிறான் என்று கேட்டதற்கு, “அவர் இப்பவெல்லாம் ரொம்ப திருந்திட்டார்.வீட்லதான் குடிக்கிறாரு என்றாள்.
இடையே ஒருமுறை பீஹாரில் உள்ள பொகாரோவுக்குப் போய் விஷ்ணுவோடு சில நாட்களிருந்தேன்.சென்னைக்கு வந்தவுடன் எனக்கு நாகப்பட்டினத்தில் போஸ்டிங்.
கொண்டய பாலத்தில் விசைப்படகைப் பறிகொடுத்ததிலிருந்து எனக்கும் ராஜேந்திரனுக்கும் ஒரு இடைவெளி ஏற்பட்டுவிட்டது.அந்த இடைவெளிக்குக் காரணம் பணநஷ்டம் அல்ல.அவனுடைய குடிப்பழக்கம்தான்.ராஜேந்திரன் விடியற்காலையில் எப்போது சாராயக்கடை திறக்கும் என்று காத்திருப்பான்.இரவில் கடை மூடும்வரை இருந்து குடித்துவிட்டு வருவான்.
நாகப்பட்டினத்திலிருந்து ஐஸ்மீனை நாங்கள் சென்னைக்கு அனுப்பிக் கொண்டிருந்தோம். குமார் சென்னையில் அதை விற்றுக் கொண்டிருந்தான்.கம்பனி சட்டப்படி எங்களுக்கு ஆளுக்கு தினசரி பாட்டா நாற்பது ரூபாய்.என்னுடைய செலவு பத்து ரூபாயைத் தாண்டாது.ஒரு ரூபாய் கொடுத்தால் லாட்ஜில் படுக்கை வசதி உண்டு.அங்கேயே வராந்தாவில் தங்கிக் கொள்ளலாம்.குளியலறை, கழிவறையைப் பயன்படுத்தலாம்.காலையில் ஒரு டீ மட்டும் சாப்பிடுவேன்.மதியம் ஐந்து ரூபாய் கொடுத்து, பையனை அனுப்பி, வரும் கேரியர் சாப்பாட்டை நானும்அவனும் ஒரு நாயும் வரிசையாக உட்கார்ந்து சாப்பிடுவோம்.இரவு உணவு இரண்டு ரூபாய்.இடையில் ஒரு டீ உண்டு.ராஜேந்திரனோ சூரியன் உச்சிக்கு வருவதற்குள் நாற்பது ரூபாயைக் காலி செய்துவிட்டு, என்னிடம் அன்றாடம் ஒவர் டிராப்ட் கேட்பான்.என்னுடைய மீதத்தை அவனுக்குக் கொடுத்துவிடுவேன்.
நாங்கள் தங்கியிருந்த லாட்ஜில் ஒரு மலையாளி இருந்தார். இவர் தனக்கு மந்திர, தந்திரங்கள் தெரியும் என்று சொல்லி அங்கேயிருந்தவர்களை மிரட்டி வைத்திருந்தார்.ஆனால் என்னிடம் மட்டும் மரியாதையோடிருப்பார்.ஒருநாள் இரவு நான் அவருடைய அறையில் தங்கினேன்.அறையில் நான் மட்டும்தான்.வராந்தாவில் மற்ற வியாபாரிகள். என்னால் தூங்க முடியவில்லை.கண்ணுக்குத் தெரியாத ஏதோ ஒன்று அங்கே நடமாடுவதைப் போன்ற உணர்வு.எழுந்து வெளியே வந்து படுத்துவிட்டேன்.
காலையில் அவரை விசாரித்தேன்.அவர் சிரித்தார். பதில் சொல்லவில்லை.அங்கே இருந்தவர்களிடம்“டேய், இவன் லுங்கியை அவுறுங்கடா என்றேன்.இரண்டு பேர் பிடித்துக்கொள்ள, லுங்கி அவிழ்க்கப்பட்டது.ஒரு தொடையில் தையல் போட்டிருந்தது.தன்னை விட்டுவிடுமாறு அவர் கெஞ்சினார்.சில துர்தேவதைகளை உபாசனை செய்து தன் கட்டுக்குள் வைத்திருப்பதாகச் சொன்ன அவர், “தொடைக்குள் மந்திரத் தகடு இருக்கிறது என்றார்.அவருடைய மந்திரம் என்னிடம் பலிக்கவில்லை என்று ஒப்புக்கொண்டார்.பிறகு மான் கொம்பு, நவபாஷாணக்கல் ஆகியவற்றை சன்மானமாகக் கொடுத்தார்.அந்தப் பொருட்களை அங்கே இருந்தவர்களுக்குக் கொடுத்துவிட்டேன்.
அவருடைய லுங்கியை ஏன் அவிழ்க்கச் சொன்னேன் என்று எனக்குத் தெரியாது.ஆனால் அவர் என் மணிக்கட்டில் கட்டியிருந்த கயிற்றை மந்திரக் கயிறு என்று அவர் நினைத்துவிட்டார் என்கிற விஷயம் பிறகு தெரிய வந்தது.உண்மையில் அது ஆர்.எஸ்.எஸ். நண்பரால் கட்டப்பட்ட ரட்சாபந்தன்கயிறுதான்.
தொடரும்…

திராவிட மாயை (பாகம் 3) என்ற புத்தகத்தின் முன்னுரை | சுப்பு
(திராவிட மாயை மூன்று பாகங்கள், சுப்பு, 
ரேர் பப்ளிகேஷன்ஸ், 400 ரூ (மூன்று பாகங்களும் சேர்த்து)

எம்.ஜி.ஆருடைய அரசியல்தான் இதில் (திராவிட மாயை 3ம் பாகத்தில்) அதிகம் பேசப்படுகிறது இந்திய விடுதலைக்கான போராட்டத்தில் தமிழர்களின் பங்கு மிக முக்கியமானது. வேதாரண்யம் உப்பு சத்தியாகிரஹத்தின் போது போலீஸ்காரர்களுக்கு சவரம் செய்ய மாட்டேன் என்று சபதம் எடுத்து, அதன் விளைவாக ஆறுமாத சிறைத் தண்டனை பெற்ற நாவிதரின் பெயர் வைரப்பன். கதர் ஆடையையும் கழுத்தில் உள்ள தாலியையும், கை வளையல்களையும் தவிர மற்ற எல்லா ஆபரணங்களையும் நாட்டுப் பணிக்காக அகற்றிவிட்டவர் வை.மு.கோதைநாயகி, ‘சாதி ஒழிய வேண்டும்’ என்று குரல் கொடுத்தவர் ஜி.சுப்ரமணிய ஐயர்- காங்கிரஸ் பேரியக்கத்தின் முதல் கூட்டத்தில் முதல் தீர்மானத்தை முன் மொழிந்தவர் என்ற பெருமை இவருக்கு உண்டு (28-02-1885). வெள்ளையனுடைய வியாபார நோக்கம் கெடும்படியாக கப்பலோட்டியவர் வ.உ.சிதம்பரனார். ஆங்கிலேயரின் தலைமைப்பீடமான லண்டன் நகரிலேயே கலகக்கொடி உயர்த்தியவர் வ.வே.சு.ஐயர். ஆப்கானிஸ்தானுடைய காபூல் நகரில் ‘இந்திய சுதந்திர சர்க்கார்’’ என்ற அமைப்பை உருவாக்கிய செண்பகராமன், காந்தியப் போராட்டங்களின் முதல் களப்பலியான தில்லையாடி வள்ளியம்மை, பின்னி மில் போராட்டத்திற்குத் தலைமை தாங்கிய திரு.வி. கல்யாணசுந்தரனார், அப்பழுக்கற்ற அரசியல்வாதி ராஜாஜி, மக்கள் தலைவர் கு.காமராஜ், திண்டுக்கல் சர்தார் சாகிப், குற்றப்பரம்பரைச் சட்டத்தை எதிர்த்துக் குரல் கொடுத்த பசும்பொன் முத்துராமலிங்க தேவர், கல்வியாளர் டி.எஸ். அவினாசிலிங்கம் செட்டியார், ஜோசப் செல்லதுரை கொர்நீலியஸ் என்ற இயற்பெயர் கொண்ட பொருளாதார மேதை குமரப்பா. கொடிகாத்த திருப்பூர் குமரன், கே.பி. சுந்தரம்பாள், கக்கன் என்று முடிவில்லாத பட்டியல் இது.

தமிழகமே தேசியத்தில் மூழ்கி இருந்த போது, அதிலிருந்து விலகி வேறுபட்டு நின்றவர்கள் மிகச் சிலரே. அந்தக் கூட்டத்தின் முன்னணித் தலைவர் ஈ.வெ.ராமசாமி. இவருடைய அடிப்படைக் கொள்கை வெள்ளைக்காரனுக்கு வெண்சாமரம் வீசுவது. கௌரவக் குறைவான இந்த வேலைக்கு நியாயம் கற்பிப்பதற்காக அவர் கையில் எடுத்த காரணம் பிராமண துவேஷம். மற்றபடி அன்றாட வசனங்களும் அடிக்கடி ஒப்பனைகளும் மாறி வரும். ஹிந்தி எதிர்ப்பு, வடவர் எதிர்ப்பு, சாதி ஒழிப்பு என்பதெல்லாம் இவர் சால்ஜாப்புக்காக ஏற்படுத்திக் கொண்ட மேற்பூச்சுக்களே. இப்படிப்பட்ட தலைவரின் வாரிசுகளுக்கு எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாட யோக்கியதை இல்லை என்பதுதான் நம்முடைய கட்சி. ஈ.வெ.ரா. என்பவர் தமிழ் மொழியின் எதிரி, இந்திய தேசத்தின் எதிரி என்பது புத்தகத்தின் உள்ளே விவரிக்கப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆர். என்ற தமிழ்ப்பற்றாளரை இந்திய ஒற்றுமையில் அக்கறை கொண்டவரை, ஹிந்து மதச்சார்புடையவரை திராவிடர் கழகத்தவர்கள் கொண்டாடுவதற்கு எந்த பாத்தியதையும் இல்லை. ஈ.வெ.ரா.வின் திசையிலிருந்து விலகிப் பயணித்தவர் எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆர். மட்டுமல்ல, அவரை வழிநடத்திச் சென்ற சி.என்.அண்ணாதுரையும் பிற்காலங்களில் எவ்வாறு பண்பட்டிருந்தார் என்பதையும், இந்திய அரசமைப்புக்குள் தன்னுடைய கட்சியை அழகாகப் பொருத்திக் கொண்டார் என்பதையும் இதில் எழுதியுள்ளேன். ஈ.வெ.ரா.வின் வெகுஜன விரோதப் பாதையிலிருந்து விலகித் தன் கட்சியை நடத்தியவர் அண்ணாதுரை. ஆனால் அண்ணாதுரையின் கொள்கைகளை அண்ணாதுரையின் மறைவிற்குப் பிறகு கருணாநிதி மறந்துவிட்டார். கட்சியை ஈ.வெ.ரா.விடம் அடமானம் வைத்துவிட்டார். அடுத்த கட்டத்தில் இந்தச் சீர்கேட்டில் இருந்து விலகி, எம்.ஜி.ஆர். அண்ணாதுரையின் பாதையில் அ.தி.மு.க.வை நடத்திச் சென்றார்.

திராவிடர் கழகத்தின் அமைப்பு விதிகளின்படி அதில் பிராமணர்கள் உறுப்பினர் ஆக முடியாது. ஆனால் தி.மு.க.வில் இந்தத் தடையில்லை. அண்ணாதுரை தி.மு.க.வில் பிராமணர்களைச் சேர்த்துக் கொண்டார். தி.மு.க.வைச் சேர்ந்த நாத்திகம் ராமசாமி இதைக் கண்டித்து எழுதினார். ‘மன்றம்’ என்ற தி.மு.க. அதிகாரப்பூர்வ இதழில் நெடுஞ்செழியன் பிராமணர்களை சேர்த்துக் கொள்வது சரிதான் என்று விளக்கக் கட்டுரை எழுதினார்.  

‘நாத்திகம்’ என்று பெயர் வைக்கப்பட்ட இதழுக்கு தி.மு.க.வின் ‘நம் நாடு’ இதழில் (1958) விளம்பரம் தர முயற்சிக்கப்பட்டது. அதை தி.மு.க. தலைமை ஏற்க மறுக்கிறது. ‘நாத்திகம்’ இதழை தி.மு.க.வின் ஏடாகக் கருதக் கூடாது என்று தி.மு.க. தரப்பில் விளக்கம் வருகிறது. இதன் விளைவாக நாத்திகம் ராமசாமி தி.மு.க.விலிருந்து வெளியேற்றப்படுகிறார். (- திராவிட மாயை-ஒரு பார்வை- இரண்டாம் பகுதி /பக் 18.)

காலம் சென்ற மு.கருணாநிதியின் தலைமையில் இயங்கிய தி.மு.க., அண்ணா போட்ட வழியில் போவதில்லை; எம்.ஜி.ஆரை மதிப்பதில்லை. இது பொதுவெளியில் அனைவராலும் அறியப்பட்ட விஷயம். ஆகவே அதுகுறித்து இங்கே விவரித்து எழுதவில்லை. ஆதாரங்களைத் திரட்டி, தமிழக அரசியலின் குறிப்பிட்ட காலகட்டத்தைப் பிரதிபலிக்கும் படியாக (1967-1981) ‘எம்.ஜி.ஆர். – தி.க. உறவு பற்றிய அலசல்’ என்ற தலைப்பில் ‘விஜயபாரதம்’ வார இதழில் 25-11-2016 முதல் 26-05-2017 வரை எழுதினேன். அது தொகுக்கப்பட்டு ‘திராவிட மாயை ஒரு பார்வை மூன்றாம் பகுதி’ என்ற தலைப்பில் இந்தப் புத்தகமாக உருவெடுத்திருக்கிறது. படித்துப் பயன்பெறுக. இதை, ஈடுபாட்டு உணர்வோடு தட்டச்சு செய்து கொடுத்த திருமதி எஸ். பிரேமாவுக்கு நன்றி. தொடரை வெளியிட்ட ‘விஜயபாரதம்’ இதழுக்கும் என்னுடைய உதவியாளராகச் செயல்பட்ட வி.எஸ். ரவிச்சந்திரனுக்கும், நண்பர் வி.வெங்கட் குமாருக்கும், தேவைப்பட்ட பொழுது விவரங்களைத் தேடிக்கொடுத்த பெரியவர் வி.ராஜகோபாலனுக்கும், நண்பர் பா.கிருஷ்ணனுக்கும் என்னுடைய நன்றி.

*

எம்.ஜி.ராமச்சந்திரன் என்று அதிகாரப்பூர்வமாகவும் புரட்சித் தலைவர் என்று அவருடைய கட்சிக்காரர்களாலும், எம்.ஜி.ஆர் என்று தமிழ் மக்களாலும் அழைக்கப்பட்டவரின் ஆளுமை இருபது ஆண்டு காலம் தமிழகத்தின் அரசியல் போக்கை நிர்ணயிக்கும் சக்தியாக இருந்தது என்பதை யாரும் மறுக்க முடியாது. அவருடைய திரைப்படங்களைப் போலவே அரசியல் வாழ்க்கையும் திருப்பங்களும் மோதல்களும் நிறைந்த சுவாரஸ்யமான நகர்வு.

தமிழக அரசியல் வரலாற்றை அதிலும் திராவிட இயக்கங்களை மையமாகக் கொண்டு ஆவணப்படுத்த வேண்டும் என்பது என்னுடைய முயற்சி. இதில் 1917 முதல் 1944 வரையிலான காலகட்டம் ‘திராவிட மாயை – ஒரு பார்வை – முதல் பகுதி’ என்று முதலில் இணையத்திலும் (தமிழ் ஹிந்து) பிறகு புத்தகமாகவும் வெளிவந்தது. அடுத்த பகுதி ‘துக்ளக்’ வார இதழில் தொடராக 103 வாரங்கள் வெளிவந்து வாசகர்களின் ஆதரவைப் பெற்றது. இது ‘திராவிட மாயை – ஒரு பார்வை – இரண்டாம் பகுதி’ என்ற பெயரில் புத்தகமாக வந்தது. இது குறிப்பிடும் காலகட்டம் 1944 முதல் 1967 வரை. உங்கள் கையிலிருக்கும் ‘திராவிட மாயை ஒரு பார்வை மூன்றாம் பகுதி’ 1967 முதல் 1981 வரை உள்ள காலகட்டத்தைக் குறிப்பிடும் பகுதியாகும்.

இந்தக் காலம் எம்.ஜி.ஆருடைய காலம், அவருடைய ஆளுமை முழுமையாக வெளிப்பட்ட காலம். திராவிட இயக்கத்தின் போக்கை மடைமாற்றியவர் எம்.ஜி.ஆர். என்பதை இனிவரும் பக்கங்களில் நிறுவ முயற்சிக்கிறேன். இதெல்லாம் ஒருபுறம் இருக்க, எம்.ஜி.ஆர். என்ற அதிசய மனிதரைப் புரிந்து கொள்ள ஒரு நிகழ்வைச் சொல்கிறேன்.

சி.எல். ராமகிருஷ்ணன் என்பவர் அதிகம் அறியப்படாத ஆனால் உத்தமரான ஒரு காவல்துறை அதிகாரி (DGP). எந்த விதத்திலும் குறை சொல்ல முடியாதபடி இருப்பது இவருடைய வாழ்க்கை . சி.எல்.ராமகிருஷ்ணன் மத்தியப் புலனாய்வுத் துறையின் (சிபிஐ) தமிழகப் பிரிவில் பணியாற்றி வந்தார். ஒரு நாள் அவருக்கு அன்றைய முதல்வரான எம்.ஜி.ஆரிடமிருந்து அழைப்பு வந்தது. சென்று சந்தித்தார்.

சி.எல்.ஆருடைய பொருளாதாரப் பின்புலங்களைக் கேட்டுத் தெரிந்து கொண்ட எம்.ஜி.ஆர்., ஓர் காவல் துறை உயர் அதிகாரி வாடகை வீட்டில் வசிப்பதைத் தான் விரும்பவில்லை என்று தெரிவித்தார். வீட்டுவசதி வாரியத்தில் ஒரு வீடு ஒதுக்கீடு செய்வதாகச் சொல்லி அதை ஏற்றுக் கொள்ளும்படி வலியுறுத்தினார். வீட்டுவசதி வாரியத்தினுடைய ஒதுக்கீட்டைப் பெற்றுக் கொண்டாலும் அதற்கான மாதத் தவணையை தன்னால் கட்ட இயலாது என்று சொல்லி சி.எல். ஆர். மறுத்துவிட்டார். விஷயம் இதோடு முடியவில்லை.

வீட்டுவசதி வாரியத்தின் ஜீப்பும், அதிகாரிகளும் மறுநாள் காலையில் சி.எல்.ஆர். வீட்டிற்கே வந்துவிட்டார்கள். முதுலமைச்சரின் உத்தரவுப்படி அவர்களுடைய வேண்டுகோளை மறுக்கமுடியாமல் குறைந்த அளவு வருமானம் உடையவர்களுக்கான வீட்டைப் பெற்றுக் கொண்டார் சி.எல்.ஆர். இருந்தாலும் அவர் போலீஸ்காரர் அல்லவா. எம்.ஜி.ஆர். எப்படித் தன்னைத் தேர்வு செய்தார் என்ற கேள்வி அவரிடம் இருந்தது. விசாரித்துப் பார்த்தார். அவருக்கு கிடைத்தது இனிய அதிர்ச்சி.

அப்பழுக்கில்லாத அதிகாரிகளில் சிலருக்கு எம்.ஜி.ஆர். உதவியிருக்கிறார் என்பதுதான் அந்தச் செய்தி. கட்சிக்காரராக இருந்தபோதிலும், திரையுலகப் பிரமுகராக இருந்த நேரத்திலும் முதலமைச்சராகப் பதவி வகித்த போதிலும் எம்.ஜி.ஆர். கருணையோடு நீட்டிய கரங்களால் பயனடைந்தவர் எத்தனை பேர் என்பதைப்பற்றித் தனியாக ஒரு புத்தகமே எழுதலாம்.

இத்தகைய சம்பவங்களுக்கு இந்தப் புத்தகத்தில் முக்கியத்துவம் தரவில்லை. எம்.ஜி.ஆருடைய அரசியல்தான் இதில் அதிகம் பேசப்படுகிறது…

திராவிட மாயை முதல் பகுதி, இரண்டாம் பகுதி மற்றும் மூன்றாம் பகுதியை மேலோட்டமாகப் பார்ப்பவர்களுக்கு ஒரு முரண்பாடு தென்படலாம். முதல் இரண்டு பகுதிகளில் சி.என்.அண்ணாதுரை மீது வீசப்படும் வெளிச்சம் விமர்சனத் தன்மையோடு இருப்பதாகவும் மூன்றாம் பகுதி அவருடைய கீர்த்தியைக் கூட்டுவதாகவும் தோன்றலாம். இந்தச் சிக்கல் என்னுடைய வார்த்தைகளாலும் வாக்கியங்களாலும் ஏற்பட்டதல்ல. அதற்குக் காரணம் அண்ணாதுரையின் பொதுவாழ்க்கையில் ஏற்பட்ட அல்லது அவரே ஏற்படுத்திக்கொண்ட கொள்கை மாறுதல்கள்தான்.

தேசவிரோதியான ஈ.வெ.ரா.வின் சீடராக பொதுவாழ்க்கையைத் தொடங்கிய அவர் ஒரு நீண்ட நெடிய பயணத்தில் வெகுஜனத் தலைவராக உருவெடுத்து, இந்திய அரசியல் நெறிகளுக்கு உட்பட்டு ஆட்சி செய்கிற முதலமைச்சராகி, மறைந்தார். திராவிட மாயை புத்தகத்தின் மூன்று பகுதிகளும் வெவ்வேறு காலப்பகுதிகளைப் பற்றி விவரிப்பதால் இதனூடே முரண்பாடு இருப்பதாகத் தோன்றலாம், அவ்வளவுதான்.

என்னைப் பொருத்தவரை அண்ணாதுரை என்பவரை ‘சேற்றில் மலர்ந்த செந்தாமரை’ என்று சொல்லலாம். எம்.ஜி.ஆர். அரசில் அமைச்சராக இருந்த வி.வி.சுவாமிநாதனுக்கும் பெரியவர் கே.ராஜாராமின் குடும்பத்தினருக்கும் என்னுடைய நன்றி. சோதனையான இன்றையச் சூழலில் என்னைக் காவல் அரணாகக் காத்திருக்கும் தமிழ் வாசகர்களுக்கு நன்றி.

அன்புடன், 
‘திராவிட மாயை’ சுப்பு


சில பயணங்கள் சில பதிவுகள் – 27 | சுப்பு


சமாசார்

பாரதீப்பிலிருந்து சென்னைக்கு ஐஸ்மீன் அனுப்பிக் கொண்டிருந்தபோது, மகாநதியில் வெள்ளம் வந்து பாலம் உடைந்துவிட்டது. சென்னை கல்கத்தா ரயில் வேறு வழியாகத் திருப்பிவிடப்பட்டது. ஆகவே, என்னுடைய தொழிலில் ஒரு இடைவேளை.

இந்த நேரத்தில் நான் நண்பர் சித்தார்த்தனோடு சேர்ந்து சில முயற்சிகளில் ஈடுபட்டேன்.

நானும் நண்பர் சித்தார்த்தனும் அந்த வயதுக்கே உரித்தான ஆர்வத்தோடும் புரிதலோடும் பல பரிசோதனை முயற்சிகளில் எங்களை ஈடுபடுத்திக்கொண்டிருந்தோம். அறிவியலின் அளவுகோலுக்கு அப்பாற்பட்ட விஷயங்களை (Para Science Club) தெரிந்துகொள்வதற்காக ஒரு மாதாந்திர சந்திப்பை நடத்தினோம். சென்னை துரைப்பாக்கம் டி.பி.ஜெயின் கல்லூரியைச் சேர்ந்த பேராசிரியர் ரமேஷ் எங்களுக்கு வழிகாட்டியாக இருந்தார். சுட்டி இதழின் ஆசிரியர் பேராசிரியர் சுந்தர் உடனிருந்தார். தொலைவில் உணர்தல், பறக்கும் தட்டுகள், விண்வெளி மனிதர்கள் பற்றிய பத்திரிகைகளையெல்லாம் வெளிநாட்டிலிருந்து வரவழைத்துப் படிப்பது எங்களுக்கு வழக்கமாக இருந்தது.

இந்தக் காலகட்டத்தில் ‘வெளிச்சப்புள்ளி’ என்கிற அறிவியல் ஆர்வத்தின் விளைவாக அறிவியல் கதையையும் எழுதினேன். அந்தக் கதை தொடர்பான சில தொழில்நுட்பச் சந்தேகங்களுக்கு நண்பர் பி.சி. ஸ்ரீராம் (ஒளிப்பதிவாளர்) விடையளித்தார். அவரோடு கொஞ்சம் பரிச்சயம் உண்டு.

ஒரு குறிப்பிட்ட காரணத்தால் பல மாதங்களுக்குப் பிறகு அறிவியல் க்ளப் முடிவுக்கு வந்தது. அந்தக் காரணம் நிஜ நாடகம் அல்லது வீதி நாடகம்.

வீதி நாடகக்குழு அமைத்து அதன் மூலம் எங்களுடைய கருத்துக்களை மக்களிடையே பரப்புரை செய்ய வேண்டும் என்பது திட்டம். இந்த முயற்சியில் இருவர் இணைந்து கொண்டார்கள். ஒருவர் துரை. துரை ‘ஆதிசங்கரர்’ என்ற சமஸ்கிருத திரைப்படத்தை இயக்கிய ஜீ.வி.அய்யரின் உதவியாளர். இவர்தான் பின்னாட்களில் ‘நக்கீரன்’ இதழுக்கு ஆசிரியராக இருந்தார். இன்னொருவர் மலேசியாவிலிருந்து தமிழ் ஆய்வுக்காக சென்னை வந்திருந்த ந.முருகேச பாண்டியன். திருவல்லிக்கேணியில் உள்ள ஒரு மேன்சனில் ந.முருகேச பாண்டியன் தங்கியிருந்தார். நிஜ நாடகம் குறித்த திட்டமிடுதல் எல்லாம் அவர் அறையில்தான் நடக்கும். சிற்றுண்டிச் செலவுகள் அவருடையதென்பதை சொல்லத் தேவையில்லை.

முருகேச பாண்டியன் தங்கியிருந்த அறையில் ஒரு எழுத்தாளரும் இருந்தார். அவர் ஒரு வார இதழில் அப்போது வேலை செய்துகொண்டிருந்தார். ஒருநாள் நான் தவறுதலாக எழுத்தாளரின் செருப்பை போட்டுக்கொண்டு வந்துவிட்டேன். நான் திருவல்லிக்கேணி மேன்சனுக்குப் போய் அவருடைய செருப்பைக் கொடுத்துவிட்டு என்னுடைய செருப்பைப் போட்டுக்கொண்டு வரவேண்டும். என்ன செய்வது. நான் போகும் நேரத்தில் எழுத்தாளர் அறையிலிருப்பதில்லை. எனவே செருப்பு பிரச்சினைக்கு எளிதில் தீர்வு கிடைக்கவில்லை. முருகேச பாண்டியனிடம் “இரண்டுமே சாதாரண ஹவாய் செருப்புகள்தான். அவர் அதை வைத்துக்கொள்ளட்டும். நான் இதை வைத்துக்கொள்கிறேன்” என்று சொல்லிப் பார்த்தேன். இந்த சமரசத்திற்கு எழுத்தாளர் உடன்படவில்லை. இறுதியாக ஒரு நாள் முருகேச பாண்டியன் அறைக்குப் போனபோது அறை பூட்டியிருந்தது. முருகேச பாண்டியனும் இல்லை, எழுத்தாளரும் இல்லை. எனக்கிருந்த கோபத்தில் ஒரு பேப்பரில் ‘இரண்டு செருப்பையும் நீங்களே வைத்துக்கொள்ளலாம். இதற்கு மேலும் விஷயத்தை வளரவிட்டால் நடப்பது வேற’ என்று எழுதி, கடிதத்தையும் செருப்பையும் கதவுக்கு மேலே உள்ள இடைவெளி வழியாக அறைக்குள்ளே போட்டுவிட்டேன். வெறுங்காலோடு வீடு திரும்பினேன்.

அதற்குப் பிறகு நிஜநாடக விஷயத்தில் முருகேச பாண்டியன் அக்கறை காட்டவில்லை. துரையும் பத்திரிகை வேலைக்குப் போய்விட்டார். எழுத்தாளர் நல்லவர். அவர் தரப்பிலிருந்து எந்த எதிர்வினையுமில்லை.

அந்த எழுத்தாளரின் பெயர் பிரபஞ்சன்.

அறிவியல், புனைகதை, வீதி நாடகம் என்று அலைந்துகொண்டிருந்த என்னை வழக்கம் போல் நெறிப்படுத்தியது ஆர்.எஸ்.எஸ்தான்.

சங்கக் கட்டளைப்படி நான் சமாசார் செய்தி ஸ்தாபனத்தின் நிருபராக வேலைக்குச் சேர்ந்தேன். சமாசார் ஆர்.எஸ்.எஸ். சார்புடைய ஸ்தாபனம். திருவல்லிக்கேணியில் எனக்கென்று டெலிபோன் வசதியுடன் கூடிய தனி அலுவலகம் இருந்தது. அன்றாடம் விருந்துகளில் கலந்து கொள்ளக்கூடிய வசதி இருந்தது. மற்றபடி சிறப்பாகச் செய்வதற்கு ஒன்றுமில்லை. தில்லி அலுவலகத்திலிருந்து வரும் கடிதங்கள் இந்தியில் இருக்கும். அவற்றை நான் படித்துப் பார்த்ததேயில்லை. எனக்கு இந்தி தெரியாது என்று அவர்களுக்குத் தெரியும். நான் எனக்குத் தேவையானவற்றை ஆங்கிலத்திலேயே எழுதி அனுப்பிக் கொண்டிருந்தேன்.

விரைவிலேயே எனக்கு இந்த வேலை சலித்துவிட்டது. பெரும்பாலான நிருபர்கள் குடிப்பதைப் பற்றியும் compliments பற்றியுமே பேசிக்கொண்டிருந்தார்கள். இவர்களுக்குள்ளே ஏகப்பட்ட ஜாதிப்பிரிவினை வேறு. Upcountry என்று சொல்லப்படும் வெளி மாநில பத்திரிகையாளருக்கு உள்ளூர் நிருபர்களைக் கண்டால் இளப்பம். தமிழ்ப் பத்திரிகை நிருபர்களுக்கோ, ஆங்கிலப் பத்திரிக்கை நிருபர்களைக் கண்டால் பயம்.

பிரதமர் மொரார்ஜி தேசாயின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டேன். அத்தனை பேர் முன்னிலையில் தி.மு.க.வோடு தாங்கள் எப்போதும் கூட்டு வைத்துக் கொண்டதில்லை என்று அவர் சாதித்தார். திரு.சோ அவர்களும் அங்கிருந்தார். ஒரு சாதாரண அரசியல் நிகழ்ச்சியை ஒழுங்காக நினைவுகூர முடியாதவர் எப்படி இந்த நாட்டை ஆள முடியும் என்று எனக்குப் புதிராய் இருந்தது. பத்திரிகைகள் இதை வெளியிடத் தவறிவிட்டன என்பதை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.

சமாசார் செய்தி ஸ்தாபனத்தின் செய்திகள் இந்தியாவெங்கும் நூறு இதழ்களுக்குப் போய்க் கொண்டிருந்தன. தமிழ்நாட்டுப் பிரதிநிதி என்ற முறையில், தமிழ்நாடு சட்டமன்றத்திலும், சட்டமன்ற மேலவையிலும் பத்திரிகையாளர் பகுதியில் எனக்காக ஒரு இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது. அரசியலின் மையக் களமான சட்டமன்ற நடவடிக்கைகளை உள்ளிருந்து கவனிப்பதற்கு எனக்கு இது நல்ல வாய்ப்பாக அமைந்திருந்தது.

அதில் ஒன்று…

காஞ்சிபுரத்தில் இருக்கும் சங்கர மடத்தின் எதிரில் ஈ.வெ.ராவுக்கு சிலை வைப்பதற்கான முயற்சி செய்தது திராவிடர் கழகம். தி.மு.க. ஆட்சிக்காலத்திலேயே அந்த இடம் தரப்பட்டுவிட்டது. ஆனால் அந்தச் சிலையை வைக்க அதிமுக ஆட்சியில் அனுமதி அளிக்கப்படவில்லை. மு.கருணாநிதி முதல்வராக இருந்த காலத்தில் அதற்கான ஒப்புதலைக் கொடுத்துவிட்டார். ஆனால் சிலையை அமைப்பதற்குள் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுவிட்டது. இந்த விவகாரத்தை சட்டமன்றத்தில் கிளப்பினார் மு.கருணாநிதி. அந்த விவாதம் சுவாரஸ்யமாகத் தொடர்ந்தது. என்னைப் பொருத்தவரை திராவிடர் கழகத்தின் ஆஸ்தான கொள்கைகளிலிருந்து எம்.ஜி.ஆர் விலகி நின்றார் என்பதற்கான முக்கியமான சான்று இது. அப்போது எதிர்கட்சித்தலைவராக இருந்த கருணாநிதிக்கும் முதலமைச்சர் எம்.ஜி.ஆருக்கும் நடந்த உரையாடலில் இருந்து சில பகுதிகள் இங்கே:

எதிர்கட்சித்தலைவர் கருணாநிதி: பெரியார் நூற்றாண்டு விழாவை இந்த அரசு கொண்டாடுகிறது. ஆனால், காஞ்சிபுரத்தில் பெரியார் சிலை வைக்க வேண்டும் என்று திராவிடர் கழகத்தார் தி.மு.க. ஆட்சிக்காலத்திலேயே அதற்கான இடத்தையும் பணத்தைக் கட்டி வாங்கி, பராமரிப்புச் செலவுக்கான பணத்தையும் கட்டி, கழக ஆட்சியில் அந்த இடம் தரப்பட்டுவிட்டது. ஆனால் அந்தச் சிலையை வைக்க இந்த ஆட்சியில் அனுமதி அளிக்கப்படவில்லை.     

எம்.ஜி.ஆர்.: அவர்கள் கேட்டிருந்த இடம் மத நம்பிக்கைக்குரியவர்களுடைய, மடம் போன்ற, கோயில் போன்ற இடத்துக்கு எதிராக, இடைஞ்சலாக இருக்கின்ற இடத்தைக் கேட்டதாக குடியரசுத்தலைவர் ஆட்சிக்காலத்தில் அது பற்றி பரிசீலிக்கப்பட்டு, கூடாது – முடியாது என்று மறுக்கப்பட்டுவிட்டது. நான் காஞ்சிபுரத்துக்குச் சென்றபோது அந்த இடத்தைப் பார்க்க நேரிட்டது. அங்கிருந்து வந்தபிறகு உத்தரவே போட்டுவிட்டேன். வேறு ஒரு இடத்தை அவர்கள் கேட்பார்களானால் அந்த இடத்தைக் கொடுக்க வேண்டும் என்று உத்திரவிட்டு சில மாதங்களாகின்றன.

மு. கருணாநிதி: சங்கராச்சாரியார் மடம் இருக்கிறதென்றால் அந்த இடத்துக்கு எதிரிலே பெரியாருடைய சிலை இருக்கக்கூடாது என்பது என்ன நியாயம் என்று எனக்குப் புரியவில்லை. ஒருவேளை, போக்குவரத்துக்கு இடைஞ்சலான இடம் என்பதால் அதை அனுமதிக்கவில்லை என்ற கருத்தை முதலமைச்சர் சொல்வார் என்று நினைத்திருந்தேன். சங்கராச்சாரியாருக்காகத்தான் அது அனுமதிக்கப்படவில்லை என்று திட்டவட்டமாக முதலமைச்சர் அறிவித்திருக்கிறார்.

எம்.ஜி.ஆர்.: நான் சங்கராச்சாரியாருக்காகத்தான் சொல்வதாக இருந்தால் அதைத் துணிவோடு சொல்கின்றவன். ஏனென்றால், அவரைச் சந்தித்து அவர் என்ன சொல்கிறார் என்று கேட்டு, கருத்துக்கள் பரிமாறிக்கொண்டு வந்தவன் நான். அந்த வகையில் ஒரு துறவிக்கு அடையாளமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பதை இந்த மாமன்றத்தில் மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். அதிலே எனக்குக் கொஞ்சமும் சந்தேகமில்லை. இட நெருக்கடியும் இருக்கிறது. எதிர்காலத்தில் அரசியல் நெருக்கடிகள், மத நெருக்கடிகள் போன்ற குழப்பங்கள் வரலாம். அதெல்லாம் தோன்றக்கூடாது என்பதற்காகத்தான் இந்த நிலைமையை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறேன். முதலமைச்சர் என்ற நிலைமையில் இங்கேயே பதில் சொல்லிவிடுகிறேன். எந்தக் காரணத்தைக் கொண்டும் அந்த இடத்தில் சிலை வைக்க இந்த அரசு அனுமதிக்காது….

இன்னொருமுறை தி.மு.கழகம் தொடர்ந்து சந்தித்து வரும் தேர்தல் தோல்விகளைப் பற்றி குறிப்பிட்ட கருணாநிதி ‘தேர்தல்கள், ஒரு நாட்டின் வரலாற்றில் புரண்டு வரக்கூடிய சில பக்கங்கள். அதிலும் திண்டுக்கல் இடைத்தேர்தல் அப்பக்கத்தில் தேடிப் பார்க்க வேண்டிய ஒரு வரி, அவ்வளவுதான்… பொதுத் தேர்தல் என்பது ஒரு பக்கம், இடைத்தேர்தல் ஒரு வரி. ஆகவே நான் அதில் அதிக கவனம் செலுத்த விரும்பவில்லை’ என்று பேசினார்.

காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் தி.மு.க இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற போது இதே கருணாநிதி எவ்வளவு தூரம் எகிறிக் குதித்தார் என்பது என் நினைவுக்கு வந்தது. அதை சில பத்திரிகையாளரிடம் சொன்னேன். அவர்கள் ரசிக்கவில்லை. எப்படி மக்கள் வாக்களிக்கின்ற தேர்தலில் கருணாநிதி வெற்றிபெற முடியாதோ அதுபோலவே பத்திரிகையாளர்கள் மட்டுமே வாக்களிக்கின்ற தேர்தலில் எம்.ஜி.ஆர் வெற்றிபெற வாய்ப்பில்லை என்பதைப் புரிந்துகொண்டேன்.

சட்டமன்ற விவாதங்களில் கருணாநிதியின் முழுச் சாதுர்யமும் வெளிப்பட்டது. நாளிதழ்களும் அவற்றை முதல் பக்கச் செய்திகளாக வெளியிட்டன. ஆனால், தி.மு.கவும் செய்தி ஊடகங்களும் எவ்வளவு முயன்றாலும் எம்.ஜி.ஆர் செல்வாக்கை அசைக்க முடியவில்லை.

எம்.ஜி.ஆர் அரசு மீது தி.மு.வும் இந்திரா காங்கிரஸும் கொண்டு வந்த கண்டனத் தீர்மானத்தில் கருணாநிதி பேசினார். (நவம்பர் 1979). பல்கேரியா பால்டிகா ஊழல் என்ற பூதத்தை முன் வைத்தார் (நவம்பர் 1979). ஏகப்பட்ட ஆதாரங்கள், கடிதங்கள், தொலைபேசி உரையாடல்கள் என்று அவர் நிகழ்த்திய உரையை தி.மு.கவினர் பெரிதாகக் கொண்டாடினார்கள். வாய் பிளந்த எம்.ஜி.ஆர் கப்பலை விழுங்குவது போல கார்டூன் படம் போட்டு, ‘ஊழல் திலகம், சுப்ரீம் கோர்ட் நீதிபதி விசாரணை கமிஷன் வருவதாக அறிவித்து இன்று வெற்றிகரமான ஐம்பதாவது நாள்’, ‘அறுவதாவது நாள்’ என்று முரசொலியில் அன்றாடம் கட்டம் கட்டப்பட்டது. அடிப்படையில் எம்.ஜி.ஆர் ஒரு கோடி ரூபாய் லஞ்சம் வாங்கிவிட்டார் என்பதுதான் குற்றச்சாட்டு. ஆனால் இதற்குப் பலகாலங்களுக்குப் பிறகு கருணாநிதி முதலமைச்சராக ஆனபோது பல்கேரியா – பால்டிகா ஊழல் பற்றிப் பேசவே இல்லை. சட்ட நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தமிழக அரசு சார்பாக மதுரையில் உலகத் தமிழ் மாநாடு நடந்தது. மாநாட்டை மு.கருணாநிதி புறக்கணித்தார். மாநாட்டில் பேசிய முதலமைச்சர் எம்.ஜி.ஆர். நிகழ்ச்சியை மதுரையில் நடத்துவதற்குக் காரணம் காஞ்சி சங்கராச்சாரியாரின் அறிவுரை என்று குறிப்பிட்டார் (ஜனவரி 1980). இது திராவிட இயக்கங்களுக்கு மிகப் பெரிய அடியாக அமைந்தது.

பிரதமர் இந்திராவின் நிருபர் கூட்டத்தில் அவருக்கு நெருக்கடி ஏற்படுத்தும் கேள்வியைக் கேட்டேன். அந்தக் கேள்வி, பதில் எல்லாம் பத்திரிக்கைகளிலும் முதன்மையான இடத்தைப் பெற்றதில் மகிழ்ச்சியடைந்தேன் (ஏப்ரல் 1980).

… தொடரும்

சில பயணங்கள் சில பதிவுகள் – 26 | சுப்புமுசலம்மாபாரதீப்பிற்கு நான் போனவுடனேயே என்னுடைய சாப்பாட்டிற்கு என்ன செய்வது என்ற பிரச்சினை எழுந்தது. நானோ சைவம். இந்த மாதிரி விஷயங்களைக் கூடத் தனிமனிதனிடம் விடாமல் நாலுபேர் கூடிப்பேசித் தீர்ப்பது என்கிற மரபு அங்கே இருந்தது. முசலம்மா (மூதாட்டி) எனக்காக சமையல் செய்வது என்று முடிவாகியது. முசலம்மா மீனவர் இனத்தைச் சேர்ந்தவராயிருந்தாலும், அவர் இந்தத் தொழில் எதையும் செய்வதில்லை. இறந்துபோன கணவர் சார்பாக முசலம்மாவுக்கு அரசாங்க பென்ஷன் வந்து கொண்டிருந்தது. இந்த ஜனங்களோடு வாழ்ந்தாலும் அவர் யாருடனும் ஒட்டுவதில்லை. முசலம்மா சிறுவயதில் பர்மாவில் படித்துக் கொண்டிருந்தபோது, பர்மீஸ், ஆங்கிலம், நாகரீகம் ஆகியவற்றைத் தெரிந்து வைத்திருந்தார். முசலம்மாவின் பேச்சு, பாவனை, நடை எல்லாவற்றிலும் ஒரு ராணுவக் கட்டுப்பாடிருக்கும். கழுத்துவரை மூடிய ஜாக்கெட்தான், கால்வரை மூடிய புடவைதான் அவருடைய ஆடை.

முதல் நாள் அவர் என்னைக் கேட்டார்.

உங்களுக்கு என்ன பிடிக்கும்?”

இங்கேதான் காய்கறிகள் கிடைக்காதேயம்மா. ஏதோ தயிர் சாதமும், உருளைக்கிழங்கு கறியும் இருந்தால் போதும்.”

அடுத்த ஒன்பது மாதங்களுக்கு அடுத்த கேள்வி அவர் என்னைக் கேட்கவில்லை. தினமும் தயிர் சாதமும், உருளைக்கிழங்கு கறியும்தான். ஆனால் அதை என்னிடம் சேர்ப்பிக்கும் முறையில் ஒரு படைவீரனின் ஒழுங்கு இருக்கும். என்னுடன் வேறு யாராவது இருந்தால் முசலம்மா வரமாட்டார். சாப்பிடும் நேரமாகிவிட்டது? சாப்பாட்டைக் கொண்டு வரலாமா? என்று ஒரு பையன் கேட்பான். சரி. கிழவியின் ஜபர்தஸ்த் ஆரம்பமாகிவிட்டது என்று சொல்லிக்கொண்டே என்னோடிருந்தவன் எழுந்து போவான்.

அரிக்கன் விளக்கை ஏந்தியபடி ஒரு சிறுவன். அவனைத் தொடர்ந்து முசலம்மா. ஒரு கையில் மூடிய தயிர் சாதம் பிளேட்டில். அதற்குள் தனிக்கிண்ணத்தில் உருளைக்கிழங்கு கறி. இன்னொரு கையில் தண்ணீர்ச் சொம்பு. என்னுடைய பானையிலிருக்கும் நீர் அவருடைய தரக்கட்டுப்பாட்டுக்கு ஒத்துப்போகாது. சாப்பாட்டை வைத்துவிட்டுக் கதவை மூடிக்கொண்டு போய்விடுவார். பிறகு தட்டை எடுக்க வரும்போது. லேசாகப் பார்த்துவிட்டு சரியாகச் சாப்பிடவில்லையே என்பார். நான் பதில் சொல்ல வேண்டுமென்று எதிர்பார்க்க மாட்டார்.

சில மாதங்களுக்குப் பிறகு முசலம்மாவிடம் இரவில் மட்டும் சமைத்தால் போதும் என்று சொல்லிவிட்டேன். பகல் உணவு டீக்கடையில். டீக்கடையிலோ, தட்டிலிருக்கும் பொருளைப் பார்க்க முடியாதபடி ஈக்கள் மறைத்திருக்கும். ஒரு கையை வாய்க்கு முன்னால் ஆட்டிக்கொண்டே இன்னொரு கையால் சாப்பிட வேண்டும். நாளடைவில் ஈயோடு போராடியபடி சாப்பிடுவது எனக்குப் பழகிவிட்டது.

முசலம்மாவுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடு, ஒருமுறை சென்னைக்கு வந்தபோது நல்ல புடவை ஒன்றை வாங்கி பாரதீப்புக்கு கொண்டுபோனேன். ஆனால், அது கைகூடவில்லை. முசலம்மா புறப்பட்டு எங்கேயோ போய்விட்டார். அதற்குப் பிறகு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. ஒன்பது மாத காலம் தன்னுடைய பொருளையும், உழைப்பையும் எனக்காகக் கொடுத்த முசலம்மாவுக்கு என்னால் எதுவும் செய்ய முடியவில்லை.

*

குடிசையில் என்னுடைய கட்டிலுக்கு மேலே, கூரையில் கைக்கு எட்டும்படியாக பதப்படுத்தப்பட்ட திருக்கைவால் சுருட்டி வைக்கப்பட்டிருக்கும். ஆறடி நீளமுள்ள இந்த வால் லேசாகப் பட்டாலே தோலுறிந்து போகும். குண்டாக்களிடமிருந்து என்னைப் பாதுகாப்பதற்காக இந்த ஆயுதம். குடிசையில், என்னுடைய தலைமாட்டில் சிறிய கன்னியாகுமரி படம் ஒன்றிருந்தது. இந்தப் படத்திற்கு நான் பூசையென்று எதுவும் செய்யாதிருந்தேன். இதனால் தெய்வக்குத்தம் ஏற்படும் என்று இங்குள்ளவர்கள் என்னிடம் எச்சரித்துக் கொண்டிருந்தார்கள். தினமும் முன்னிரவில் குண்டா ஒருவன் என் குடிசையின் வாசலில் தென்படுவான். ஆனால் ஒரு நாளும் என்னிடம் திருடியதில்லை. ஒருமுறை அவனைக் கண்டபோது அங்கேயே கேட்டேன்.

தினமும் அங்கே என்ன பார்க்கிறாய்?”

குண்டா நிமிடத்தில் கோபிகை ஆகிவிட்டான். தலை குனிந்து, முகம் சிவந்து அவன் சொன்னது:

இதுவும் தொழில்தானே, ஆகவே முதலில் தேவிக்கு வணக்கம்.”

என்னுடைய குடிசையின் சுற்றுப்புரத்தில் ஜனங்கள் அசுத்தம் செய்து கொண்டிருந்தார்கள். எத்தனை முறை சொன்னாலும் இவர்களுக்கு உறைப்பதாயில்லை. ஒரு நாள் கன்னியாகுமரியிடம் நீயே உன் இடத்தைக் காப்பாற்றிக்கொள் என்று சொல்லிவிட்டு வெளியே போய்விட்டேன். திரும்பி வந்தபோது என்னுடைய கட்டிலில் ராஜாராவ் தூங்கிக் கொண்டிருந்தான். ராஜாராவ் எனக்கு நெருங்கிய நண்பன். இந்த ஜனங்களுக்குப் பஞ்சாயத்து செய்பவன். வாய்மையின் வடிவம். நூறு மீனவர் குப்பங்களில் பஞ்சாயத்தில் ராஜாராமின் வார்த்தைக்கு மரியாதையிருந்தது. யாருக்காவது இன்னொருவன் பேச்சில் சந்தேகமிருந்தால் ராஜாராவ் முன்னால் இதைச் சொல்ல முடியமா? என்று கேட்குமளவிற்கு ராஜாராவின் புகழ் வளர்ந்திருந்தது. நான் வந்தவுடன் ராஜாராவ் எழுந்துவிட்டான். எழுந்ததும் என் கையைப் பிடித்துக் கொண்டு இந்த இடத்தில் ஏதோ விசேஷமிருக்கிறது என்றான். தொடர்ந்து அவன் சொன்னது:

பத்து வருடங்களுக்கு முன் காக்கிநாடாவில் மீனவர்களுக்கிடையில் பெரும் மோதல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து கலெக்டர் சமரச முயற்சிகள் செய்தார். சமரசக் கூட்டமொன்று காக்கிநாடாவிலுள்ள கல்யாண மண்டபத்தில் கூட்டப்பட்டது. என்னைச் சார்ந்தவர்கள் எல்லாம் அங்கே போய்விட்டார்கள். நான் தனியாக வந்தபோது கூட்டம் எந்தக் கல்யாண மண்டபத்தில் என்ற விவரம் தெரியாமல் விழித்தேன். பிறகு ஒரு ரிக்ஷாவை அமர்த்திக்கொண்டு, ஒவ்வொரு மண்டபமாக விசாரிக்கலாமென்று நினைத்து ஒரு கல்யாண மண்டபத்திற்குள் நுழைந்தேன். அந்தத் திண்ணையில் வெண்தாடியுடைய முதியவர் ஒருவர் அமர்ந்திருந்தார். அவருக்கு நான் வணக்கம் செய்தேன். அவர் என்னிடம் இரண்டு கேள்விகள் கேட்டார். இரண்டு கேள்விகளுக்கும் நான் சரியாக விடையளித்தேன். அவரை என் வீட்டுக்கு வருமாறு அழைத்தேன். அவரோ இப்போது உனக்கு அந்த யோக்யதை கிடையாது. சமயம் வரும்போது நானே வருகிறேன் என்றார். புறப்படும்போது அவரை வணங்கினேன். அவர ஆத்ம சுத்தி சுகம் ஜய என்றார். அன்று முதல் எனக்கு எந்த சந்தேகம் ஏற்பட்டாலும், நான் அந்த வாசகத்தையே நினைவு கூறுகிறேன். இன்று என்னுடைய புகழுக்கும் நீதி வழங்கும் திறனுக்கும் அந்த வாசகமே காரணம்.”

பல வருடங்களுக்குப் பிறகு ஒருநாள் மதியம் வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தேன். என் கண்முன்னே அந்த முதியவர். நான் மெய் மறந்து போனேன். அவரை வீட்டுக்குள் அழைத்துப் போனேன். அவர் என்னைப் பற்றி விசாரித்தார். எனக்குத் திருமணமாகிவிட்டது. குழந்தையுமிருக்கிறது என்றேன். நான் சொன்ன தகுதி என்னவென்று இப்போது விளங்குகிறதா? என்று கேட்டார். நான் தலையசைத்தேன். அவர் அன்று அங்கே உணவருந்தினார். பின்னர் வெளியில் வந்து கை கழுவிக்கொண்டு என் கண்முன்பே மறைந்து போனார் என்று சொல்லி நிறுத்திவிட்டு, நான் இங்கே படுத்திருக்கும்போது என் கனவில் அவர் வந்தார் என்றான். இனிமேல் இங்கே யாரும் தவறான வார்த்தைகளைப் பேசக்கூடாது என்றான்.

ராஜாராவ் கட்டளையின்படி என் குடிசை பஜனைமடமாக்கப்பட்டது. ஊர் ஜனங்கள் அந்த இடத்தில் அசுத்தம் செய்வதை நிறுத்திவிட்டார்கள். மாதமொருமுறை பௌர்ணமியன்று விடிய விடிய பஜனை. கடற்கரைக் குளிருக்கு ஏற்றவாறு சுடச்சுட சேமியா பாயசம்தான் பிரஸாதம். வீரபத்திர சாமி எழுதிய பாடலை ராஜாராவ் அழகாகப் பாடுவான். இளைஞர்கள் தாளம் போட ஆரம்பித்தால் கை கீழே இறங்க அரைமணி நேரம் ஆகும். நான்தான் பூசாரி.

பாரதீப்பிலிருந்து சுறா வாங்குவதற்காக இன்னொரு இடத்திற்குப் பயணம். கால்வாயில் போகும் படகில் நாடு பிடிக்கப்போகும் வெள்ளைக்காரனைப் போல் சாமான்களையும், ஆட்களையும் ஏற்றிக்கொண்டு த்விபாஷியோடு பயணம். மகாநதி கடலில் கலக்கும் இடம் அது. நூற்றுக்கணக்கான சிறு மணல் திட்டுக்கள். தாவரமே இருக்காது. குடிநீர் கிடையாது. வெய்யில் மண்டையைப் பிளக்கும். இந்தப் பிரதேசத்தில் குடிநீர் எடுக்க அரை நாள் படகுப் பயணம் போக வேண்டும். என்னிடம் ஸ்டவ், கெரஸின், காய்கறிகள், எண்ணெய், அரிசி, பருப்பு, குடிநீர் எல்லாம் தயார். சமைப்பதற்கு வகை இல்லை. என்னோடு வந்தவர்கள் அங்கே மீன் பிடித்துக் கொண்டிருந்தவர்களிடம் மீன் குழம்புச் சோறு சாப்பிட்டுக் கொண்டார்கள். என்னைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். எனக்கு சைவ சாப்பாடு கிடைக்கும் என்று சொல்லிவிட்டு அந்தத்தீவைச் சுற்றி வந்தேன்.

தீவின் மறுபக்கத்தில் ஒரு வயதான மலையாளி சாராயம் விற்றுக் கொண்டிருந்தார். என் பிரச்சினையைச் சொன்னவுடன் அவருக்கு ஏக குஷியாகிவிட்டது. ஆளில்லாத காட்டில் சாப்பிடுவதற்கு ஏற்ற பண்டமில்லாமல் தவித்துக் கொண்டிருந்தவருக்கு என்னுடைய வருகை லாட்டரிப் பரிசு போலாயிற்று. தொடர்ந்து அங்கிருந்த நான்கு நாட்களும் அவருடைய கை வண்ணத்தில் அருமையான சாப்பாடு. சாராயக் கடையில் கூரையிலிருந்தே கொடுங்களூர் பகவதி அவ்வப்போது புன்னகை செய்வாள். புறப்படும்போது மீதமிருந்த காய்கறிகளையும், மளிகைச் சாமான்களையும் பெரியவரிடமே கொடுத்துவிட்டேன்.

*

என்னைப் பார்ப்பதற்காக விஷ்ணு பாரதீப் வந்தான். விஷ்ணு வந்தது துர்கா பூஜை சமயம். இருவரும் புறப்பட்டு கட்டாக் வந்து நான்கு நாட்கள் தங்கியிருந்தோம். ஒவ்வொரு சாலைச் சந்திப்பிலும் அழகான பராசக்தியை விதவிதமாக அலங்காரம் செய்து வைத்திருப்பார்கள். அதற்கெதிரே மேடை போட்டு, மெல்லிசை, நடனம், கிராமிய வாத்யம் இப்படி ஏதாவது ஒன்று. சுற்றியிருக்கிற கிராமங்களில் இருந்து மக்கள் வந்து கட்டாக் ரயில் நிலையத்தருகில் கூடுவார்கள். குறைந்தது நூறு சைக்கிள் ரிக்ஷாக்கள் அங்கே அணிவகுத்திருக்கும். சைக்கிள் ரிக்ஷாக்களில் குடும்பம் குடும்பமாய் ஏறிக்கொண்டபின் அவை ஊர்வலமாய் வந்து ஒவ்வொரு பந்தலையும் பார்வையிடும். இந்த ஊர்வலம் இப்படி நகர்ந்து கொண்டே போய் முதல் ரிக்ஷா தொடங்கிய இடத்திற்குப் போகும்போது அடுத்த வரிசை தயாராயிருக்கும்.

நானும், விஷ்ணுவும் பஜாரிலுள்ள பந்தலுக்குப் போனோம். அங்கே முதலமைச்சர் வருவதாக இருந்ததால் யாரையும் அனுமதிக்கவில்லை. என் நண்பன் பராசக்தியைப் பார்க்க விரும்புகிறான் என்று அந்தப் பூசாரியைக் கேட்கும்படி விஷ்ணுவிடம் சொன்னேன். விஷ்ணு கேட்டு வந்தான். பூசாரி மறுத்துவிட்டதாகச் சொன்னான்.

நீ என்ன கேட்டாய்? என்றேன்.

என் நண்பன் பூஜை செய்ய விரும்புகிறான் என்று கேட்டேன் என்றான்.

உன் மொழி பெயர்ப்பு தவறானது. ப்ரார்த்தனை செய்ய விரும்புகிறான் என்று கேள் என்றேன்.

இந்த முறை என்னை மட்டும் உள்ளேவிட பூசாரி ஒத்துக்கொண்டார். பராசக்தியின் முன் நான் அமர்ந்தேன். ஒரு மணி நேரம் கழித்து கண் விழித்துப் பார்த்தபோது முதலமைச்சர் வந்துவிட்டுப் போய்விட்டதாக விஷ்ணு சொன்னான்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு பாரதீப்பில் ஒரு தகராறில் நான் கலந்து கொண்டேன். குண்டாக்களை எதிர்த்து யாரும் ஏதும் செய்ய முடியாதிருந்தபோது பத்து இளைஞர்களைத் திரட்டி, ஒருநாள் இரண்டு குண்டாக்களை அடித்து நொறுக்கிவிட்டேன். அதிர்ஷ்டவசமாக இது வேறு விதமாக வெடித்து, பாரதீப்பிலிருந்த இரண்டு கோஷ்டிகளின் தகராறாக மாறிவிட்டது. எங்களை மறந்துவிட்டார்கள்.

ஒருமுறை பாரதீப்பிலிருந்து கட்டாக்கிற்கு நூறு கிலோ மீட்டர் தூரம் லாரியில் வந்தேன். துறைமுகத்தில் சரளைக்கற்களைக் கொட்டிவிட்டுத் திரும்பும் லாரி அது. என்னை முதுகுவலி முன்னறிவிப்பின்றித் தாக்கியது. தூக்கி தூக்கிப் போடும் லாரியில், சரளைக் கற்கள் உடம்பைப் பதம்பார்க்க மல்லாந்து படுத்துக்கொண்டுமரண அவஸ்தை.

பாரதீப்பில் எனக்கு மலேரியா காய்ச்சல் வந்துவிட்டது. ஜனங்கள் போட்டி போட்டுக் கொண்டு உதவி செய்தார்கள். ராஜாராவ் வீட்டிலிருந்து அவ்வப்போது சுடச்சுடக் கஞ்சி. கொண்டம்மா கணவன் காலையிலும், மாலையிலும் மெயின் ரோடுக்குப் போய் டாக்டரை டபிள்ஸ் அழைத்துவர வேண்டும். இன்னொருவனுக்கு மருந்து மாத்திரை கொடுக்கும் பொறுப்பு. சத்யா என்ற நண்பனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. என்னைக் கட்டிலோடு தூக்கிக் கொண்டு போய் தன் வீட்டில் வைத்துக் கொண்டான். அவனும் அவன் மனைவியும் ஒரு கும்மட்டி அடுப்பை என் கட்டிலுக்கு அடியே வைத்து மாற்றி மாற்றி ஊதிக் கொண்டேயிருந்தார்கள். உடல்நிலை சரியான பிறகுகூட என்னைத் தனியாக அனுப்ப மனமில்லாமல் சத்யா சென்னைக்கு வந்து என்னை விட்டுவிட்டுப் போனான்.


தொடரும்

சில பயணங்கள் சில பதிவுகள் – 25 | சுப்பு

கொண்டம்மா
அடையாரில் (1978 தீபாவளி) நானும், சித்தார்த்தனும் இன்னொரு நண்பனோடு பேசிக்கொண்டே சாலையைக் கடந்தபோது ஒரு கார் என் மீது மோதியது. தூக்கியடிக்கப்பட்ட நான் காரின் பானட்டில் விழுந்தேன். காரின் கண்ணாடியில் என் தலை மோதியது. நான் அங்கிருந்து கீழே உருள, கார் கடந்து போய்விட்டது. அந்தரத்தில் இருந்த கணத்தில் என்முன் பார்வதி அக்காவின் தோற்றம். கீழே விழுந்ததும் உடனே எழுந்து கார் நம்பரைக் குறித்து அங்கிருந்த போலீஸ்காரரிடம் கொடுத்தேன்.
ராயப்பேட்டை ஆஸ்பத்திரியில் காயங்களுக்குக் கட்டுப் போட்டுக் கொண்டேன். போலிஸ் கேஸ் பதிவு செய்யப்பட்டது. தலையை எக்ஸ்ரே எடுத்தார்கள். அதை யார் பார்க்க வேண்டுமோ அந்த டாக்டரைத் தேடிக்கொண்டு அரைமணி நேரம் அலைந்தேன். பிறகு மனசு வெறுத்துப்போய் டீக்கடையில் எக்ஸ்ரேயை அடமானம் வைத்து டீ குடித்துவிட்டு நடந்தே பெசன்ட் நகருக்கு வந்துவிட்டேன். இந்த விபத்தில் பட்ட அடியால் முதுகெலும்பு எவ்வளவு பாதிக்கப்பட்டிருக்கிறது என்ற விவரத்தைப் பல வருடங்களுக்குப் பிறகு தெரிந்து கொண்டேன்…
கடலில் விசைப்படகைச் செலுத்தி மீன் பிடிக்கலாம் என்று நினைத்து அஸ்வத்தாமாவை வாங்கினோம். அந்த ஆசை நிராசையாக முடிந்துவிட்டது. இருந்தாலும் இடைப்பட்ட காலத்தில் மீன்பிடி தொழில் பற்றிய விவரங்கள், நுட்பங்கள் என் மூளைக்குள் ஏறிவிட்டன. வெளியூரிலிருந்து மீன் கொள்முதல் செய்து அதை சென்னைக்கு அனுப்பி விற்பனை செய்யலாம் என்கிற யோசனை வலுவடைந்தது. அதற்காக உப்படாவுக்குப் போனேன்.
ஒவ்வொரு ஊரிலும் அங்குள்ள கடல் அமைப்பு, கரை அமைப்பு ஆகியவற்றைப் பொருத்து சில விசேஷமான மீன்பிடிக்கும் முறைகள் உண்டு. ராமேஸ்வரத்தில் விசைப்படகுகள் அதிகம். நாகப்பட்டினத்தில் நாட்கணக்கில் பயணம் செய்து காலா மீன் பிடிப்பார்கள். காணாமல்போன மீனவர்களைப் பற்றிய பத்திரிகைச் செய்தியில் இவர்கள்தான் அதிகமிருப்பார்கள். சென்னையிலுள்ள குப்பத்தைச் சேர்ந்தவர்கள் பண்ணில் (nylon twine) கட்டப்பட்ட தூண்டில் மூலம் சுறா பிடிப்பதில் நிபுணர்கள். வாய் அல்லது கழுத்தில் சிக்கிய பண்ணை இழுத்துக்கொண்டு சுறா தண்ணீரைக் கிழித்துக்கொண்டு பறக்கும். போகும் வேகத்தில் கட்டுமரத்தையும் இழுத்துக்கொண்டு போகும். சுறாவின் ஓட்டத்திற்குத் தகுந்தவாறு கட்டுமரத்தில் இருப்பவர்கள் பண்ணை விட்டுக் கொண்டு போவார்கள். ஆங்கில திரைப்படத்தில் கௌபாய்கள் இடுப்பில் கயிற்றைச் சுருட்டி தொங்கவிட்டுக் கொண்டு இருப்பார்களல்லவா, அதுபோலத்தான். ஒரு கட்டத்தில் சுறா களைத்து, ஓட்டத்தை நிறுத்திவிடும். அதோடு சுறா வேட்டை ஓவர். சுறா வேட்டையில் விரல்களை இழந்த மீனவர்களும் உண்டு. பண்ணுடைய கூர்மையும், சுறாவுடைய வேகமும் ஒத்துழைத்தால், சமயத்தில் மீனவரின் கைவிரல்கள் அறுபட்டுவிடும்.
அடுத்த வியாபார முயற்சிக்காக காக்கிநாடாவுக்கு அருகிலுள்ள உப்படாவுக்குப் போனபோது அங்கே உள்ள மீன்பிடி முறை ஒன்றைப் பற்றி அறிந்தேன். முதலில் தனியாக ஒரு சின்ன படகு. அதில் இருப்பவன்தான் வேட்டைக்குத் தலைவன். அவனைத் தொடர்ந்து நூறு பெரிய படகுகள். இந்தப் படகுகளில் ஆட்கள் வலைகளோடு தயாராயிருப்பார்கள். முதல் படகுக்கும் இவர்களுக்கும் இடையே ஒரு கிலோ மீட்டருக்கு மேல் இடைவெளி. தலைவன் படகை நிறுத்திவிட்டு, தன்னிடமிருக்கும் மூங்கில் குழாயை – இரண்டு அடி நீளக்குழாய் – தண்ணீருக்குள் செலுத்தி மேல் பக்கத்தில் காது வைத்துக் கேட்பான். சிறிது நேரத்திற்குப் பிறகு மற்றவர்களுக்கு அருகே வருமாறு சைகை மூலம் அழைப்பு. சில படகுகள் வரும். அந்த இடத்தில் எந்த ஆழத்தில், என்ன மீன்கள், எவ்வளவு இருக்கிறது என்பதைத் துல்லியமாகக் கணித்துச் சொல்வான். அவர்கள் வலை போடுவார்கள். தலைவன் அடுத்த இடத்தை நோக்கிப் படகைச் செலுத்த, மீதமுள்ள படகுகள் அவனைப் பின் தொடரும். இந்த மீன்பிடி முறை வேறெங்கும் இருப்பதாக நான் கேள்விப்பட்டதில்லை.
உப்படாவிலிருந்து ஐஸ்மீனை வாங்கி நான் சென்னைக்கு அனுப்புவேன். ராஜேந்திரன் சிந்தாதிரிப்பேட்டை மார்க்கெட்டில் ஐஸ்மீனை ஏலம்விட்டுப் பணமாக்குவான். ஒரு மாத காலத்தில் இது முடிவு பெற்றுவிட்டாலும் இதைத் தொடர்ந்து சில வருடங்கள் நாங்கள் செய்த ஐஸ்மீன் வியாபாரத்திற்கு இது பயிற்சியாயிருந்தது. உப்படாவிற்குப் பிறகு நான் பாரதீப்புக்குப் போனேன். பாரதீப் ஒரிஸ்ஸாவின் துறைமுகம். உப்படாவில் எனக்குப் பழக்கமாயிருந்த சில ஆந்திர மீனவர்கள் இங்கே தொழில் செய்து கொண்டிருந்தார்கள். பாரதீப் சுறா வேட்டைக்குப் பேர் போனது. சுறாவிற்குக் கல்கத்தாவில் விலை கிடையாது. ஆகவே, மலையாளிகள் சுறாவைக் கருவாடாக்கி கேரளாவுக்கு எடுத்துப் போய்க் கொண்டிருந்தார்கள். நான் சுறாவை வாங்கி, ஐஸ்மீனாக சென்னைக்கு அனுப்பினேன். இந்த வியாபாரம் ஒழுங்காகவும் லாபகரமாகவும் நடந்தது.
பாரதீப் நாட்கள் என்னால் மறக்க முடியாதவை. பாரதீப் துறைமுகம் முழுதாகக் கட்டப்படாத நிலையில், ஆந்திர மீனவர்கள் அங்கே ஒரு காலனியை உருவாக்கியிருந்தார்கள். நல்ல வருமானம் கிடைக்கிறது என்ற ஒரே காரணத்திற்காக ஒரியாக்கார குண்டர்கள் செய்த எல்லாக் கொடுமைகளையும் இவர்கள் சகித்துக் கொண்டார்கள். பகலெல்லாம் கலகலப்பாக இருக்கும் இந்தக் காலனியில் விளக்கு வைத்தால் எங்கும் பெண்களின் அழுகுரல்தான். மதுவின் பிரவாகம்தான். இரவில் வெகுநேரம் வரை எல்லா பக்கங்களிலிருந்தும் ஆண்களின் ஆபாசமான வசவுகளும் கூக்குரல்களும் ஒலித்துக் கொண்டிருக்கும். மதுவின் கொடுமையைப் பற்றியும் மதுவிலக்கை வற்புறுத்திய மகாத்மா காந்தியின் பெருமைபற்றியும் பாரதீப் நாட்களில்தான் நான் தெரிந்துகொண்டேன்.
கொண்டம்மா என்ற இளம்பெண் அங்கே வியாபாரிகளுக்கு ஏஜண்டாக இருந்தாள். எனக்கும் இவள்தான் ஏஜெண்ட். எப்போதும் உற்சாகமாயிருக்கும் இந்த இருபத்து இரண்டு வயதுப்பெண்ணுக்கு நான்கு குழந்தைகள். ஒரு குழந்தை எப்போதும் இவள் இடுப்பிலேயே குடியிருக்கும். கொண்டம்மாவைச் சுற்றி நோட்டுப் புத்தகமும் பேனாவும் வைத்துக்கொண்டு என்னைப்போல ஐந்து வியாபாரிகள். ஒவ்வொரு ஏலத்தையும் நாங்கள் குறித்துக் கொள்வோம். அவளுக்கு நோட்டுப்புத்தகம் தேவையில்லை. எந்த ஏலம் எவ்வளவு போயிற்று, அதை யார் எடுத்தார்கள், யாருடைய வலை மீன் அது, அவர்களுக்கு இன்னும் எவ்வளவு பாக்கி என்பது போன்ற ஏராளமான விவரங்களை எப்போது கேட்டாலும் சொல்லும் அபாரமான ஞாபக சக்தி அவளுக்கிருந்தது. இடையிடையே குழந்தைகளின் நச்சரிப்பு.
பகல் பன்னிரண்டு மணியிலிருந்து இரவு எட்டு மணி வரை ஓடி ஓடி உழைத்து கொண்டம்மாள் தினசரி ஐநூறு ரூபாய்க்குக் குறையாமல் சம்பாதிப்பாள். சம்பாதித்த பணத்தை எடுத்துக்கொண்டு குழந்தைகளோடு வீடு திரும்பும்போது, கொண்டம்மாவின் கணவனை சீட்டாட்ட பாக்கிக்காக எவனாவது ஒருவன் சட்டையைப் பிடித்துக் கொண்டிருப்பான். இது அன்றாடம் நடக்கும் நிகழ்ச்சி. கணவனைப் பிடித்தவனுக்கு அலட்சியமாய் ஒரு தட்டு. இருநூறோ, முந்நூறோ அங்கேயே கணக்குத் தீர்க்கப்படும். கணவனை அழைத்துக் கொண்டு வீட்டுக்குப் போனால், அதற்குள் அவனுக்குப் போதை தெளிந்துவிட்டிருக்கும். ‘ஏன் சமையல் செய்யவில்லை’ என்று அவளை எட்டி உதைப்பான்.
கொண்டம்மாள் என்னை உரிமையுடன் கேலி செய்வாள். Bertrand Russel எழுதிய Problems of philosophy புத்தகத்தை வைத்துக்கொண்டு, நான் யோசித்துக் கொண்டிருப்பேன். ‘அதிகம் படித்தால் மறை கழண்டு விடும்’ என்பாள். கொண்டம்மாள் எனக்கு ஒரு சாய வேட்டி வாங்கிக் கொடுத்தாள். கணவனிடம் இப்படிக் கஷ்டப்படுகிறாளே என்ற எண்ணத்தில் ‘நீயேன் வேறு ஒருவனைத் திருமணம் செய்து கொள்ளக்கூடாது’ என்று கேட்டுவிட்டேன். வாழ விருப்பமில்லையென்றால் இங்கே பெண்கள் தாலியைக் கழட்டிக் கணவனிடம் கொடுத்துவிட்டு வேறு ஒருவனோடு வாழலாம். அதற்கு அவ்வளவாக மரியாதை இராது என்றாலும், பெரிய குற்றமாகக் கருதமாட்டார்கள். கொண்டம்மாள் என் நோக்கத்தைத் தவறாகப் புரிந்து கொண்டாள். ஊர்ப் பஞ்சாயத்தில் புகார் செய்துவிட்டாள். பஞ்சாயத்தாருக்கு என்னைப் பற்றிய நல்ல அபிப்பிராயம் இருந்ததால் என்னிடம் ‘உன்னுடைய கொள்கைகளை இந்த ஊரில் நிறைவேற்ற முடியாது. வீணாக வம்பில் மாட்டிக் கொள்ளாதே’ என்று சொல்லியதோடு, விவகாரம் முற்றுப் பெற்றது.
ஊருக்கு நடுவே என் குடிசையிருந்தது. அந்த வழியாகப் பெண்கள் தண்ணீர் எடுப்பதற்காகப் போய்க் கொண்டிருப்பார்கள். என்னுடைய குடிசையில் தண்ணீர்ப் பானை உண்டு. தண்ணீர் எடுத்து வருவதற்கென்று தனியாக ஆள் கிடையாது. எப்போதாவது பானையில் தண்ணீர் இல்லாவிட்டால் கட்டிலில் உட்கார்ந்தபடியே குரல் கொடுப்பேன். யாராவது ஒரு பெண் உள்ளே வருவாள். பானையை எடுத்து இடுப்பில் வைத்துக் கொள்வாள். நான் சொல்லாமலேயே அழுக்குத் துணிகளை எடுத்து அந்தப் பானைக்குள் திணித்துக் கொள்வாள். பிறகு பானை கழுவப்பட்டு, குடிநீர் நிரப்பப்பட்டு வந்து சேரும். துணிமணிகள் துவைக்கப்பட்டு, யாராவது லாண்டிரிக்குப் போகிறவர் மூலமாக இஸ்திரி போடப்பட்டு என் இருப்பிடத்திற்கு வந்து விடும். சில நாட்களுக்குப் பிறகு, ‘பாபு, நீங்கள் இரண்டு ரூபாய் இஸ்திரிக்காசு தர வேண்டும்’ என்று அந்தப் பெண் கேட்கும்போது, ‘இந்த ஊரே இப்படித்தான் என்னை ஏமாற்றிப் பிழைக்கிறது’ என்று சலித்துக் கொள்வேன். ஏகப்பட்ட சாட்சியங்களை வைத்து அவள் நிரூபணம் செய்த பிறகு இரண்டு ரூபாய் கைமாறும்.
இடையில் சென்னையில் நடந்த ரமணன் – அனு திருமணத்திற்கு பாரதீப்பிலிருந்து வந்து போனேன்.
மீன் கொள்முதல் செய்த பாரதீப்பிலும் பராசக்தி என்னை பத்திரமாக வைத்திருந்தாள். கட்டாக்கிலிருந்து பாரதீப் போகும் வழியில், மெயின் ரோடிலிருந்து தெற்கே ஐந்து கிலோ மீட்டர் தூரத்திலிருந்த ஒரு கிராமத்திற்கு கொண்டம்மாள் கணவனை அழைத்துக் கொண்டு வியாபார நிமித்தமாகப் போனேன். அங்கே எனக்கு நாராயணனை அறிமுகம் செய்து வைத்தார்கள். நாராயணன் எட்டு வருஷமாக சாப்பிடுவதில்லையாம். ஆனால் ஆற்றுக்குப்போய் மீன் பிடித்துக் கொண்டுதானிருந்தான். அழகான உடற்கட்டு, ஒளி ததும்பும் பார்வை. இளம் வயது அரவிந்தர் போல தாடி. நாராயணன் கிரேக்கச் சிலைக்கு இந்தியச் சாயம் பூசியது போலிருந்தான். கொண்டம்மா கணவனை துபாஷியாக்கி நான் நாராயணனைக் கேட்டேன்.
‘நாராயணா, நீ என் சாப்பிடுவதில்லை?’
‘ஏன் சாப்பிட வேண்டும்?’
‘உயிர் வாழ்வதற்கு’.
‘நான் உயிரோடுதானே இருக்கிறேன்’.
சாப்பிடாமல் இருக்க வேண்டுமென்ற எண்ணம் அவனுக்கு எப்படி ஏற்பட்டது என்று கேட்டேன். பங்காளிகளுக்குள் சொத்துத் தகராறு ஏற்பட்டதாகவும் வயிற்றுப் பசியால்தானே இதெல்லாம் ஏற்படுகிறது என்று தான் வருத்தப்பட்டதாகவும் சொன்னான். இவ்வளவு பொறுமையாக சொல்லிக் கொண்டு வந்தவன், அப்போது தான் குருவைச் சந்தித்ததாகவும் அவர் சாப்பிடாமலிருக்கும் வழியைக் கற்றுக் கொடுத்ததாகவும் கூறி சட்டென்று முடித்துவிட்டான். குருவைப் பற்றியோ, அவருடைய செயல்முறை பற்றியோ எதுவும் கூற மறுத்துவிட்டான்.
நாராயணன் யாரிடமும் இவ்வளவு விவரமாகப் பேசியது இல்லையென்று அங்கிருந்தவர்கள் ஆச்சரியப்பட்டார்கள். நேரம் அதிகமாகிவிட்டதால் அங்கிருந்து புறப்பட்டுவிட்டேன். கொஞ்ச தூரம் போனதும் கொண்டம்மா கணவனை அனுப்பி நாராயணனிடம் போய் ‘என்னிடம் மட்டும் ஏன் பேசினான்?’ என்று கேட்டு வரச் சொன்னேன். கொட்டுகிற மழையில் நான் தொடர்ந்து நடந்து போய்க் கொண்டிருந்தேன். ஊருக்குள் போய்விட்டுக் கொண்டம்மா கணவன் வேகமாக ஓடி வந்தான். உரத்த குரலில் அவன் கொண்டு வந்த பதிலில் ஒரு வார்த்தைதான் இருந்தது.
காளி.
… தொடரும்

சில நேரங்களில் சில பதிவுகள் – 24 | சுப்பு


நம்ம ஆஞ்சநேயர்அடையாறு பகுதியில் ஆர்.எஸ்.எஸ் வேலைகளில் நானும் நண்பர்களும் தீவிரமாக ஈடுபட்டுக்கொண்டிருந்த அதே காலகட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாகவும் சிலர் தீவிரமாக இயங்கிக்கொண்டிருந்தார்கள். கல்லூரி மாணவர்களைக் குறிவைத்துச் செயல்பட்ட இவர்களில் முக்கியமானவர் பின்னாளில் வழக்கறிஞராகி, உயர்நீதிமன்ற நீதிபதியாகி ஓய்வும் பெற்றுவிட்டார். இன்னொருவர் தோழர் சித்தார்த்தன். சித்தார்த்தனோடு எனக்கு அறிமுகம் ஏற்பட்டது. பெரியாரியக் கொள்கைகளுக்காகத் தன் வாழ்நாளைச் செலவிட்ட குருவிக்கரம்பை வேலுவின் மகன் சித்தார்த்தன். அடையார்வாசி. சித்தார்த்தன் மார்க்சிஸ்ட் சிந்தனையுடையவன். முதலில் இவனைச் சந்தித்தபோது இலக்கியம் குறித்துப் பேசினோம். நான் ஒவ்வொன்றாக ஆங்கில எழுத்தாளர்களின் பெயர்களை உச்சரித்துக் கொண்டிருந்தபோது அவன் “நீங்கள் வண்ண நிலவனைப் படித்திருக்கிறீர்களா?” என்று கேட்டான்.

“அவர் எந்தப் பத்திரிகையில் எழுதுகிறார்?” என்றேன்.

“பத்திரிகைகளில் அவர் எழுத மாட்டார்” என்றான்.

“பின்னே, நாமே அவரைத் தேடிப்போய் படிக்க வேண்டுமா?” என்றேன்.

“இல்லை. இலக்கியத் தரமான கதைகளை வெளியிடுவதற்கென்றே இதழ்கள் இருக்கின்றன. கணையாழியை நீங்கள் பார்த்ததில்லையா?” என்றான்.

“லைப்ரரியில் பார்த்திருக்கிறேன். அதில் படம் போடுவதில்லையே. அதனால் எனக்குப் பிடிக்காது” என்றேன்.

சித்தார்த்தன் எனக்கு ரஷ்ய எழுத்தாளர் மாக்ஸிம் கார்க்கி எழுதிய ‘தாய்’ நாவலைக் கொடுத்தான். இதைக் கையில் எடுத்தவுடன் கீழே வைக்காமல் படித்து முடித்தேன். இது எனக்குள் பல விஷயங்களைப் புரட்டிப் போட்டது. பிறகு ஆன்டன்செகாவ், பால்ஸாக், துர்கனேவ், ஆல்வர் காம்யூ, பிறகு புதுமைப்பித்தனில் தொடங்கி பூமணி வரை படித்தேன். இலக்கியத் தொடர்பு என்னை கலாபூர்வமான உலகத்தைக் காணச் செய்தது. சித்தார்த்தனும் நானும் சேர்ந்து ‘வெளிப்பாடு’ என்ற கையெழுத்துப் பத்திரிகையை நடத்தினோம்.

பொதுவுடைமைக் கருத்துக்களைப் பிரதிபலிக்கும் புதிய அலைத் திரைப்படங்களான அங்கூர், நிஷாந்த், மன்தன் போன்ற ஷ்யாம் பெனெகல் இயக்கிய ஹிந்தித் திரைப்படங்களுக்கு சித்தார்த்தன் என்னை அழைத்துச் செல்வான். பொருள் முதல் வாதமா கருத்து முதல் வாதமா என்பதில் எங்களுக்குள் கட்சி பேதம் இருந்தாலும் ஷ்யாம் பெனெகலை ரசிப்பதில் கருத்தொற்றுமை இருந்தது.

அங்கூர் (1974)என்பது ஹைதராபாதிற்கு அருகே உள்ள ஒரு கிராமத்துக் கதை. இந்த கதையில் ஷபனா ஆஸ்மியின் பெயர் லட்சுமி. லட்சுமியும் அவளுடைய ஊமைக் கணவனும் ஏழை தலித்துகள். கிராமப் பண்ணையாரான சூர்யாவின் வீட்டில் லட்சுமியும் அவரது கணவனும் வேலையாட்களாக இருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் லட்சுமி, முதலாளியின் ஆசைக்கு இடம் கொடுக்கிறாள். கிராமம் முழுவதும் முதலாளிக்கும் லட்சுமிக்கும் உள்ள கள்ள உறவு பற்றியே பேச்சாய் இருக்கிறது…

கடைசிக் காட்சியில் ஒரு சிறுவன் சூர்யா வீட்டின் மீது கல்லை எரிவதாக முடித்திருப்பார் இயக்குநர் ஷ்யாம் பெனெகல்.

நிஷாந்த் (1975) படத்திலும் ஷபனா ஆஸ்மிதான் மையப்புள்ளி. இந்தப் படத்தில் அவருடைய பெயர் சுசீலா. கிராமத்து அழகியான சுசீலா பண்ணையாரால் கடத்தப்பட்டு கற்பழிக்கப்படுகிறாள். சுசிலாவின் கணவர் பள்ளிக்கூட வாத்தியார். அவர், காவல் நிலையம் கலெக்டர் அலுவலகம் என்று எங்கே போய் முறையிட்டாலும் நீதி கிடைப்பதாக இல்லை. இறுதியில் கிராமத்துப் பூசாரியின் தலைமையில் மக்கள் ஒன்றுதிரண்டு பண்ணையாரைக் கொலை செய்துவிடுகிறார்கள்.

இந்தப் படங்களையெல்லாம் பார்த்தவுடன் எனக்கு புரட்சியின் மீது பிடிப்பு ஏற்பட்டிருக்கும் என்பது சித்தார்த்தனின் நினைப்பு.

எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் இந்தியச் சூழலில் சமயம் சார்ந்த தீர்வுதான் சரிப்படும். இதைத்தான் பூசாரியின் தலைமை என்பதாக இயக்குநர் படம்பிடித்திருக்கிறார் என்று சொல்லி அவனை மடக்கிவிட்டேன்.

நாளடைவில் எங்களுக்குள் நட்பு வளர்ந்தது. இருந்தாலும் அவ்வப்போது கொள்கை உரசல்களும் உண்டு. ஒருநாள் இரவு பத்து மணியிருக்கும். நானும், சித்தார்த்தனும் பேசிக் கொண்டிருந்தோம். பராசக்தி உண்டு என்பதை அவனிடம் நிரூபிக்க முயன்றேன். நான் எதைச் சொன்னாலும் அவன் ஒத்துக் கொள்வதாயில்லை. நாகரிகமாக மறுத்துவிட்டான். எனக்குக் கோபம் வந்துவிட்டது.

“இதோ பார். மணி பத்தாகிறது. நான் காலையில் சாப்பிட்டதுதான். நம் இருவரிடமும் காசில்லை. இந்த வேளையில் ராகவன் வீட்டுக்குப் போனாலும் எதுவும் மிச்சமிருக்குமோ என்று தெரியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் எனக்கு நிச்சயமாகத் தெரியும். பராசக்தி என்னைப் பட்டினி போட மாட்டாள். நீயே பார்” என்றேன்.

நான் இதை சொல்லிக் கொண்டிருக்கும்போதே அங்கே சேகர் என்ற பையன் வேகமாக சைக்கிளில் வந்து இறங்கினான். இவன் எனக்கு நெருங்கிய நண்பனில்லை. கொஞ்சம் பழக்கம். அவ்வளவுதான். தவிர, ஒரு சண்டையில் இவனுடைய அண்ணனின் மூக்கெலும்பை நான் உடைத்திருக்கிறேன். சேகர் என்னிடம் “ஹலோ” என்றான். பக்கத்திலிருந்து டீக்கடையின் கல்லாவில் பத்து ரூபாய் நோட்டைக் கொடுத்துவிட்டு, “நான் வரேம்மா. நீயே வேண்டியதைச் சாப்பிட்டுவிடு” என்று சொல்லிவிட்டு அவசரமாய்ப் போய்விட்டான்.

*

காலில் செருப்பு இல்லாமல், பட்டன் இல்லாத சட்டையோடும், பரட்டைத் தலையோடும் நான் ஒரு பைராகிபோல் உலவி வந்தேன். எனக்குத் தெரிந்த பாரதியார் பாடல்களை உரக்கப் பாடிக்கொண்டே நடந்தேன். இந்த மாதிரி ஒருமுறை பாடிக்கொண்டே போனபோது சரமாரியாகக் கற்கள் வந்து விழுந்தன. என்னைப் பைத்தியக்காரனென்று நினைத்து சிறுவர்கள் கல்லால் அடித்துக் கொண்டிருந்தார்கள். இதைப் பற்றி ரமணனிடம் சொன்னபோது அவனை யாரும் கல்லால் அடிக்கவில்லையே என்று வருத்தப்பட்டான்.

ரமணனோடு ஒருநாள் மாலை கடற்கரையில் உட்கார்ந்திருந்தபோது, நினைவு தப்பியது. கடலும், கரையும் நானும், என் கையிலிருந்த சுண்டலும் ஒன்றாகச் சுழன்றோம். பாகுபாடுகள் அழிந்தன. நினைவை நிலைநிறுத்த என்ன செய்வதென்று தெரியாமல் ஓடினேன். அருகிலிருந்த ராகவன் வீட்டுக்குள் நுழைந்தேன். சமையல்கட்டு வாணலியில் கத்திரிக்காய் கறி வெந்து கொண்டிருந்தது. கையில் சுடச்சுட அந்தக் கறியை அள்ளி வாயில் போட்டுக் கொண்டேன். நாக்கு சுட்டு, வாய் வெந்து புறையேறியது. கண்ணில் நீர் வடிந்தது. ஒரே எரிச்சல். நான் நானானேன். எனக்குத் தியான முறைகள் எதுவும் தெரியவில்லை. இந்த மாதிரி திடீர் அனுபவங்கள் ஏற்பட்டபோது ராட்சச வைத்தியத்தைத் தவிர வேறு என்ன செய்வதென்றும் தெரியவில்லை.

பெரும்பாலான நேரங்களில் நான் ரமணன் வீட்டிலேயே சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். ஒருமுறை ரமணன் அம்மாவை ஆஸ்பத்திரியில் சேர்த்து விட்டார்கள். ஆகவே, சாப்பிடு என்று என்னைச் சொல்ல ஆளில்லை. ஆகவே, சாப்பிடவில்லை. அது பற்றிய உணர்வுமில்லை. மூன்றாவது நாள் மதியம் நடக்கும்போது கால்கள் தடுமாறின. ஏன் இவ்வளவு பலகீனமாக இருக்கிறது என்று ஆராய்ந்தபோதுதான் ஒழுங்காகச் சாப்பிட்டு மூன்று நாட்கள் ஆயிற்று என்று தெரிய வந்தது. உடனடியாக சாப்பிட வசதி இல்லை. அன்று இரவு ராகவன் வருவதற்குள் நான் தூங்கிவிட்டேன். மறுநாள் காலையில் ராகவன் தயவில் பசியாறினேன்.

ரமணனுடைய நண்பன் ரவியின் தொடர்பு எனக்கு மிகவும் பயன்பட்டது. ரவியின் சந்திப்புக்குப் பிறகு எனக்குத் தத்துவத்தில் ஆர்வம் பிறந்தது. தத்துவப் படிப்பு என் அறிவுத்தளத்தை விசாலமாக்கி பார்வையைக் கூர்மையாக்கியது.

ரவி வீட்டில் ஒருநாள் ரமணனும் மற்ற நண்பர்களும் கவிதை பற்றிய சர்ச்சை செய்து கொண்டிருந்தார்கள். இந்த சபைகளில் என்னுடைய பங்கு எதுவுமிருக்காது. வாயே திறக்க மாட்டேன். ‘எது கவிதை’ என்பது பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள். வீட்டுக்கும் அந்த அறைக்கும் நடுவிலிருந்த திரையை விலக்கி, ரவியின் மனைவி ஷோபனா முகம் காட்டினாள். “மோகத்தைக் கொன்று விடு, அல்லால் என்றன் மூச்சை நிறுத்திவிடு. இதுதான் கவிதை” என்றாள். மானசீகமாக அவளுக்கு மதிப்பெண்களை அள்ளிப் போட்டேன். அவள்தான் அன்றைய தூர்தர்ஷன் செய்தி வாசிப்பாளர் ஷோபனா ரவி.

எனக்குத் தெரிந்த பெண்ணொருத்தி என்னை அறிவாளி என்று நம்பிக் கொண்டிருந்தாள். இவள் கல்லூரி பொருளாதாரப் பாடத்தில் ஏதோ சந்தேகம் கேட்டு என்னை ஒருநாள் நச்சரித்துக் கொண்டிருந்தாள். கடைசி வருடக் கல்லூரிப் படிப்பில் ஏற்படும் சந்தேகத்தை, கல்லூரிக்குள் நுழையாத என்னுடைய விஷய ஞானத்தால் தீர்க்க முடியாது. அந்தப் பெண்ணும் விடுவதாயில்லை. புத்தகத்தை வாங்கிப் பார்த்தேன். Keynesian Propensity theory பற்றிய பாடம் அது. பராசக்தியிடம் பிரார்த்தித்துவிட்டு ஒரு மணி நேரம் அந்தப் பாடத்தைப் படித்தேன். பிறகு இரண்டு மணி நேரம் அவளுக்கு அதை விளக்கினேன்.

மறுநாள் அதே புத்தகத்தை எடுத்து, அதே பாடத்தைப் படித்துப் பார்த்தேன். அட்சரம்கூடப் புரியவில்லை. இதற்குப் பிறகு இரண்டு மாத காலம் முதலிலிருந்து தொடங்கிப் பொருளாதாரத்தைப் படித்த பிறகுதான் அந்தப் பாடம் விளங்கியது.

*

சிங்கப் பெருமாள் கோயிலில் ராமு ஐயங்கார் என்ற பெரியவர் இருந்தார். நம்மைப் பார்த்தவுடன் ஆரூடம் சொல்லிவிடுவார். ரமணன் அப்பா சேஷன் இவரைப் பார்க்கப் போவார். பலமுறை என்னை அழைத்தும் நான் போகவில்லை. பிறகு ரமணன் வற்புறுத்தியதால் நான், ரமணன், ராகவன், ராமானுஜம் இன்னும் சில நண்பர்களோடு சிங்கப்பெருமாள் கோயிலுக்குப் போனேன்.

ராமு அய்யங்கார் வீட்டில் அடியெடுத்து வைத்தவுடனே எனக்கு ஒரு வினோதமான உணர்வு ஏற்பட்டது. நல்ல விருந்து பரிமாறப்பட்ட இலையில் அசிங்கத்தை வைத்தது போல் இருந்தது. இவரைப் பார்க்க நமக்குத் தகுதி கிடையாது என்று நினைத்து கதவோரமாக உட்கார்ந்தேன். ரமணனும் நண்பர்களும் அவரோடு பேசிக்கொண்டிருந்தார்கள். நான் அவரைப் பார்க்கவில்லை. அவர் என்னைப் பார்த்து “டேய் இவனுக்கு ஒன்றும் சொல்ல முடியாதுடா” என்றார். சரி ஜென்மாந்திரக் குப்பையெல்லாம் இவருக்குத் தெரிந்துவிட்டது. அதுதான் இப்படிச் சொல்கிறார் என்று குறுகினேன். “இவனுடைய பிரகாசம் அதிகமாயிருக்கிறது. அதனால் எதுவும் சொல்ல முடியாது” என்றார். அருகில் வந்து அமரச் சொன்னார். “உனக்கு என்ன வேண்டும்?” என்றார். நானறியாமல் என்னிலிருந்து “பராசக்தியைப் பார்க்க வேண்டும்” என்ற வார்த்தைகள் வெளிப்பட்டன. நான் சொல்லி முடிப்பதற்குள் “ஏன் நாலு நாளுக்கு முன்னே பார்த்தியே. போறாதோ?” என்றார். என்னிடம் வார்த்தையில்லை.

நான்கு நாட்களுக்கு முன்னர் சிவன் கோவில் மங்கள துர்க்கை சந்நிதியில் அபிராமி அந்தாதி படிக்கும்போது அம்பாள் தன் பாதத்தை என் தலையில் வைத்தது போலிருந்தது. நமக்குத் தகுதியில்லை என்று அவள் பாதத்தைத் தட்டிவிட்டுவிட்டேன். ரமணனுக்கு மட்டும் விஷயம் தெரியும். ரமணன் அதை அய்யங்காரிடம் தெரிவித்தான். மற்றவர்கள் இப்போது ராமு ஐயங்காரிடம் கேட்க வேண்டியிருந்ததைக் கேட்டவுடன் புறப்பட்டோம். புறப்படுவதற்கு முன் அவரை நமஸ்கரித்தேன். “அபிராமி அந்தாதி இன்று எத்தனை நாள்?” என்றார். ‘நூற்றி நாலாவது நாள்” என்றேன். “நூற்றி எட்டாவது நாள் அபிராமி தோட்டைக் கழற்றிப் போடுவாள். ஆனால் உனக்கு இது நடக்கும்போது எந்தப் பாதிப்பும் இருக்காது. மனம் அமைதியாகவே இருக்கும்” என்றார்.

வெளியே வந்தோம். நண்பர்கள் பார்வையில் புதிய மரியாதை தென்பட்டது. ராகவன், “Let us have a treat” என்று சொல்லி எல்லோருக்கும் பாஸந்தி வாங்கிக் கொடுத்தான். ரமணன் என்னைத் தனியாக அழைத்து “டால்ஸ்டாய் கதையை ஞாபகம் வைத்துக்கொள்” என்றான். டால்ஸ்டாய் கதையை நான் ஆர்.எஸ்.எஸ். ஷாகாக்களில் சொல்லுவேன். கடவுள் ஓரிரவு ஏழைத் தச்சனுடைய கனவில் வந்தாராம். நாளை உன்னை நேரே வந்து சந்திக்கிறேன் என்றாராம். மறுநாள் பூராவும் தச்சன் காத்திருந்தும் கடவுள் வரவில்லை. வருத்தத்துடன் தச்சன் தூங்கியபோது மீண்டும் கனவில் கடவுள். ஏனையா என்னை ஏமாற்றினீர் என்று தச்சன் கடவுளைக் கேட்டான். நான் உன்னை ஏமாற்றவில்லையே. காலையில் கோச் வண்டியில் சிக்காமல் ஒரு கிழவியைக் காப்பாற்றினாயே, அந்தக் கிழவியும்; மதியம் சாப்பிடும்போது ஐயா என்று குரல் கேட்டவுடன், உனக்காக வைத்திருந்த உணவைப் போட்டாயே, அந்தப் பிச்சைக்காரனும் நான்தான் என்றாராம் கடவுள். இதுதான் கதை. ஆகவே, நான் கவனமாக இருக்க வேண்டும்.

பஸ்ஸில் வரும்போதே பராசக்தியை எதிர்பார்த்தேன். சாலை ஓர மரம் பராசக்தியாக இருக்குமோ? மரத்தின் அடியில் குப்பையைப் பொறுக்கும் சிறுமியோ, பக்கத்தில் உட்கார்ந்திருக்கும் நண்பனோ என்று ஒவ்வொன்றையும் உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருந்தேன். இரண்டு நாட்களாக இரவு பகலாக நானே ஆச்சரியப்படும்படி வேறு சிந்தனையே இல்லை. மூன்றாம் நாள் இரவு அசதியில் நன்றாகத் தூங்கிவிட்டேன். பாதி இரவில் பராசக்தியின் பாதம் பட்டது. உடலெங்கும் மின்சார ஓட்டம். கண் விழிக்காமலே உறங்கிவிட்டேன்.

காலையில் ராகவன் “ஏண்டா, தள்ளிப் படுக்கக்கூடாது” என்றான். “ஏன், என்னாயிற்று?” என்றேன். “ராத்திரி பாத்ரூம் போவதற்காக எழுந்தவன் உன்னை மிதித்துவிட்டேன். அதற்குப் பிறகு என்னால் தூங்க முடியவில்லை. விடியும்வரை படுக்கையில் உட்கார்ந்துகொண்டு காயத்ரி ஜபம் செய்து கொண்டிருந்தேன்” என்றான். நம்ம லெவலுக்கு ராகவன்தான் பராசக்தி என்பதை யூகித்துக் கொண்டேன். நான் அவனிடம் ஒன்றும் சொல்லவில்லை. கோவிலுக்குப் புறப்பட்டேன்.

சிவன் கோயிலுக்கு வந்து ராமர் சந்நிதியில் நிற்கும்போது “காதைப்பார்” என்று காதின் உள்ளே ஒரு குரல் கேட்டது. திரும்பினால் அராளகேசி. அருகில் சென்றால் அம்பாளுடைய வலது காதில் தோடில்லை. அப்போதும் எனக்கு உறைக்கவில்லை. “சந்துருவைக் கூப்பிடுங்கள்” என்று மேனேஜரிடம் சொன்னேன். அவர் வந்து “என்ன விஷயம்?” என்றார். “அம்பாள் காதில் தோட்டைக் காணோம். சந்துருவை வந்து பார்க்கச் சொல்லுங்கள்” என்றேன்.

“நீர்தானய்யா அபிராம பட்டர். அதுதான் தோடு விழுந்துவிட்டது” என்றார் அவர். சந்துரு வந்து பார்த்தபோது தோடு கீழே கிடந்தது. அப்போது கௌரிசங்கர் கோவிலுக்குள் நுழைந்தான். அவனிடம் விஷயத்தைச் சொன்னேன். அந்த சமயத்தில் என் மனோநிலை எனக்கு ஆச்சரியமாக இருந்தது. எந்தப் பதட்டமும் இல்லை. ஆரவாரமும் இல்லை. அய்யங்கார் சொன்னதை நினைவு கூர்ந்தேன்.

ரமணன் வீட்டுக்குப் போனேன். “ரமணா, உன்னிடம் கொஞ்சம் தனியாகப் பேச வேண்டும்” என்றேன். “இதோ வருகிறேன்” என்று சொல்லிவிட்டு அவன் அரைமணி நேரம் அக்காள் மகனுடன் விளையாடிக் கொண்டிருந்தான். பிறகு ரமணனும் நானும் வெளியே வந்தோம். அவனிடம் சொன்னவுடனே, அவன் ஓடிப்போய் அம்மாவிடம் சொல்லி, அவர் உடனே அபிஷேகத்திற்கு ஏற்பாடு செய் என்று அமர்க்களப்படுத்திவிட்டார்.

அன்று மாலை ரமணன் வீட்டுக்கு வக்கீல் ரவி வந்தான். நானும், ரமணனும், ரவியும், கௌரியும் கோவிலுக்குப் போனோம். உள்ளே நுழையும்போது சந்தேக புத்தி தன் வேலையைக் காட்டியது. ‘Perhaps it was a coincidence’ என்று நினைத்தேன். சந்நிதியில் நின்று அம்பாளைப் பார்த்துக் கொண்டிருக்கும்போதே கரெண்ட் கட். கண் முன்னே இரண்டு காதுகளிலிருந்தும் தோடு கழன்று கீழே விழுந்தது.

நான் அந்தாதி சொல்லத் துவங்கினேன்.

அந்தாதி முடிந்து கண் விழித்துப் பார்த்தபோது கௌரி மட்டும் உடனிருந்தான். “நீ ரொம்ப சத்தம் போட்டுட்டே. அதனால அவங்க போயிட்டாங்க” என்றான். அவர்களைப் பார்ப்பதற்காக கௌரியும் நானும் கடற்கரையை நோக்கி நடந்தோம்.

நானும், ராகவனும் ஒருநாள் ஈராஸ் தியேட்டரில் சினிமாவுக்குப் போனோம். இந்திப்படம். டைட்டிலில் ‘காளி சரண் என்று பெயர் போட்டவுடன் ராகவன், “ஆஹா, என்ன பெயர்?” என்றான். எனக்கோ கழுத்தில் விறைப்பு. கபாலத்திற்குள் ரத்தப் பாய்ச்சல். கண்கள் சொருகி, தலை வலி ஆரம்பித்தது. எதேச்சையாகத் தோட்டத்துப் பூவைப் பார்த்தாலோ, எதிரில் உள்ள குழந்தை சிரித்தாலோ இந்தத் தலைவலி அனுபவம் ஏற்படுவதுண்டு.

மறுநாள் தலைவலியைச் சரி செய்ய ராமு அய்யங்காரிடம் போனேன். அய்யங்கார் நான் சொன்னதைக் கேட்டுக் கொண்டார். தலையை மேலே உயர்த்தி எங்கோ பார்த்தபடி “இப்போது எப்படியிருக்கிறது?” என்று கேட்டார். அவர் சொல்லும் போதே கழுத்தில் விறைப்பு தளர்ந்தது. மெள்ள மெள்ள தலையிலிருந்து பளு இறங்கியது. கமென்ட்ரி மாதிரி அவர் பேசிக் கொண்டேயிருந்தார். நரம்புகளில் முறுக்கு அவிழ்ந்தது. வலி குறைந்தது. தலையிலிருந்து கழுத்து, தோள்பட்டை வழியாகக் கீழே போய்விட்டது. காற்றின் நுண்ணிழை போன்ற கரங்களால் என்னை வருடி, வைத்தியம் செய்தது யார் என்ற கேள்வி மிஞ்சியது. அய்யங்காரைக் கேட்டேன்.  “எல்லாம் நம்ம ஆஞ்சநேயர்தான்டா” என்றார் அவர். உடல் பதறிவிட்டது எனக்கு. சிறிது நேரம் சமாளித்துப் பேசிவிட்டு சீக்கிரமே அங்கிருந்து புறப்பட்டுவிட்டேன்.

…தொடரும்