சில பயணங்கள் – சில பதிவுகள் (தொடர்) | 6 – மாணவர் போராட்டமும் மசால் தோசையும் | சுப்பு


நான் பத்தாவது படிக்கும் பொழுது வாரியங்காவலில் நயினாவுக்குச் சில பிரச்சினைகள் ஏற்பட்டன. வாரியங்காவலில் நயினாவும், அம்மாவும் என்னுடைய தம்பிகள் ரவியும், சீனுவும் இருந்தார்கள். நான் வருடத்துக்கொருமுறை விடுமுறை நாட்களில் அண்ணன்மார்களோடு ஊருக்குப் போய் வருவது வழக்கமாகிவிட்டது.

நெசவாளர் கூட்டுறவு சங்கத்திற்கு நூல் வாங்குவதற்காக நயினா திருச்சிக்குப் போனார். போன இடத்தில் மாவட்டக் கல்வி அதிகாரியைச் சந்தித்திருக்கிறார். மாவட்டத்தில் அரசு அனுமதியளித்திருந்த உயர்நிலைப் பள்ளி கோட்டாவில் இரண்டு இடங்கள் இன்னும் பூர்த்தியாகாமலிருப்பதாகவும் விண்ணப்பம் செய்வதற்கு அன்றே கடைசி நாளென்றும் அதிகாரி தெரிவித்திருக்கிறார். உயர்நிலைப்பள்ளி அனுமதி பெற 25,000 ரூபாயும், பள்ளிக்கென்று சொந்த மனையும் வேண்டும் என்று தெரிந்து கொண்ட நயினா நூல் வாங்குவதற்காகக் கொண்டு வந்த 25,000 ரூபாயைப் பள்ளிக்கூடத்திற்கென்று செலுத்திவிட்டார். அங்கிருந்தபடியே ஊருக்குத் தகவல் அனுப்பி ஊர்ப் பெரியவர்களை அழைத்து வரச் செய்து முறைப்படி விண்ணப்பமும் தாக்கல் செய்துவிட்டார்.

வாரியங்காவலுக்கும் பக்கத்து ஊரான எலையூருக்கம் இடையில் ஒரு பெரிய மைதானமிருந்தது. இதன் உரிமை பற்றிய தகராறு வெகு நாட்களாக இரண்டு கிராமத்தாருக்குமிடையில் தீராமலேயே இருந்தது. நயினாவின் யோசனைப்படி எலையூர்காரர்களோடு உடனடியாக சமரசப் பேச்சு வார்த்தை நடந்தது. ஒப்பந்தம் உருவானது. ஒப்பந்தப்படி மைதானத்தை உயர்நிலைப் பள்ளிக்கென்று இரண்டு கிராமத்தாரும் கொடுத்துவிட்டார்கள். பள்ளிக்கு எலையூர் வாரியங்காவல் உயர்நிலைப்பள்ளி என்று பெயரிடப்பட்டது.

பணத்தை ஈடு செய்வதற்காக நூற்றுக்கணக்கானவர்கள் கிராம வங்கியில் சிறு சிறு தொகையாகக் கடன் விண்ணப்பம் செய்தார்கள். ஒருவருக்கொருவர் காரண்டி. அத்தனை மனுக்களும்; ஒரே சமயத்தில் பரிசீலிக்கப்பட்டு தொகை வழங்கப்பட்டது. வழங்கப்பட்ட தொகையை அப்படியே நிதியாக வசூலித்து நூல் வாங்கும் தொகை திருப்பிக் கொடுக்கப்பட்டது. ஊர் மக்களின் முழு ஒத்துழைப்பாலும் நயினாவின் துணிச்சலான நடவடிக்கையாலும் வாரியங்காவலுக்கு உயர்நிலைப் பள்ளிக்கூடம் வந்தது.

இவ்வளவு திறமையாகச் செய்யப்பட்ட இந்த முயற்சி ஒரு கூட்டுறவு அதிகாரியால் முறைகேடான செயலாகக் கருதப்பட்டு விஷயம் விசாரணைக்குள்ளானது. விசாரணை நடக்கும்போது பதவியிலிருக்க விரும்பாமல் நயினா சங்கப் பதவியை ராஜினாமா செய்தார். நயினாவின் அதிரடி நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டிருந்த சிலர் இந்த சமயத்தைப் பயன்படுத்திக் கொண்டு கோஷ்டி மனப்பான்மையை வளர்த்தார்கள். நயினாவால் பலன் அடைந்த பலரும் விசாரணை, வழக்கு என்றபோது விலகிக் கொண்டார்கள். இருபத்தைந்து ஆண்டுகளாக எந்த மக்களுக்காக உழைத்தாரோ அந்த மக்கள் நன்றியோடு நடந்து கொள்ளவில்லை என்று அறிந்தபோது நயினா மனம் வெறுத்தார். குடும்பத்தோடு புறப்பட்டு சென்னைக்கு வந்து விட்டார்.

*


இதற்கிடையே பள்ளியில் நடக்கும் பேச்சுப்போட்டி, ஒப்பித்தல் போட்டி ஆகியவற்றில் நான் வெற்றி பெறுவது வழக்கமாகிவிட்டது. அடுத்து என் கவனம் நாடகத்தின் பக்கம் திரும்பியது. தமிழ் மீடியம் மாணவர்கள் நிறைந்த பள்ளியில் தமிழ் நாடகம் போடுவது பெரிய விஷயமாகாது. ஆகவே, ஷேக்ஸ்பியரின் ‘ஜுலியஸ் ஸீஸர்’ ஆங்கில நாடகம் தயாரானது. நான்தான் வசனகர்த்தா, டைரக்டர். வகுப்பிலேயே சிறந்த நடிகன் என்று கருதப்பட்டவனை ஸீஸராக வசனம் பேச வைத்து ஒத்திகை பார்த்தேன். அவன் தனக்குத் தெரிந்த திறமையைக் காட்டுவதில் குறியாயிருந்தானே ஒழிய, என்னுடைய ஆலோசனையை மதிப்பதாய் இல்லை. இரண்டாம் நாள் ஒத்திகையில் அவனை நீக்கிவிட்டேன். நான் மலைபோல் நம்பியிருந்த இன்னொரு நண்பன் – இவனும் நானும்தான் எங்கள் பள்ளியிலேயே ரீடர்ஸ் டைஜஸ்ட் படிப்பவர்கள் – சீசரின் மனைவி வேடத்தில் பையன்தான் நடிக்க வேண்டும் என்று தெரிந்த பிறகு சத்தமில்லாமல் நழுவிவிட்டான்.

ஒரு வாரம் சிரமப்பட்டுத் தயாரித்த நாடகத்தைக் கைவிடுவது மானப்பிரச்சனை ஆகிவிட்டது. திறமைசாலிகளே தேவையில்லை. சொன்னபடி செய்பவன் இருந்தால் போதும் என்ற முடிவுக்கு வந்தேன். அப்போதுதான், நான் ராஜேந்திரனைக் கவனித்தேன். கடைசி பெஞ்சில் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தான். நல்ல வலுவான உடல். இவனை அதிகம் பார்த்ததாக நினைவில்லை. பையன்களிடம் விசாரித்தேன். ராஜேந்திரன் சாந்தோமிலிருந்து வரும் மீனவர் குப்பத்துப் பையன் என்றும், எப்போதும் தாமதமாக வருவானென்றும், மதியம் அநேகமாக வகுப்பில் இருக்க மாட்டான் என்றும் அறிந்தேன். அவனை அணுகி ஆங்கில நாடகத்தில் நடிக்க முடியுமா என்று கேட்டேன். முதலில் தயங்கியவன் நான் கொடுத்த தைரியத்தில் ஒத்துக்கொண்டான். அவனைப் பரிசோதனை செய்வதற்காக ஒரு பக்க அளவு வசனத்தைக் கொடுத்து மனப்பாடம் செய்து வரச் சொன்னேன். மறுநாள் அதைக் கச்சிதமாக ஒப்பித்தான். அடுத்த இரண்டு மாதங்களுக்கு நானும், ராஜேந்திரனும், மற்ற நண்பர்களும் கடுமையாக உழைத்தோம். தினசரி ஒத்திகை. இடைவிடாத பயிற்சி.

பள்ளி நிறுவனர் தினத்தில் ஜுலியஸ் ஸீஸர் அரங்கேறியது. நான் ஆண்டனியாக நடித்தேன். ஆண்டனி வீர உரை ஆற்றும்போது மக்கள் கோபமுற்றுக் குரல் கொடுப்பது தத்ரூபமாக இருக்க வேண்டுமென்பதற்காக நாலைந்து மாணவர்களை நாடகம் பார்க்கும் ஜனங்களுக்கு நடுவில் அங்கங்கே அமரச் செய்திருந்தேன். ஆண்டனியின் உரையால் ரோமாபுரி மன்னன் வீறுகொண்டு எழ வேண்டுமென்பது ஏற்பாடு. வேடிக்கை பார்க்கும் ஜனங்களுக்கு இந்த விவரம் தெரியாது. முக்கியமான கட்டத்தில் யாரோ மாணவர்கள் கலாட்டா செய்கிறார்கள் என்று நினைத்து, சட்டையைப் பிடித்திழுத்து கீழே உட்காரவைத்துவிட்டார்கள். இந்த மாதிரி இடைஞ்சல்கள் இருந்தாலும் நாடகம் அமோகமாக வரவேற்கப்பட்டது.

*

இந்த வருடம்தான் தமிழகமெங்கும் இந்தி எதிர்ப்புப் போராட்டம் வெடித்தது. போலீஸின் அடக்குமுறையை எதிர்த்து மாணவர்கள் நடத்திய எழுச்சிமிகு போராட்டத்திற்கு வெகு ஜனங்கள் ஆதரவு அளித்தார்கள். நானும் இந்த சமயத்தில் தி.மு.க. ஆதரவாளனாயிருந்தேன்.

பெரியப்பா சுதந்திரக் கட்சி. அண்ணன்மார்கள் கல்லூரி மாணவர்கள் என்ற முறையில் போராட்டத்தின் முன்னணியிலிருந்தார்கள். ஆகவே, இந்தி எதிர்ப்பு என்பது நியாயமாகவும், சுலபமாகவும் என்னால் செய்யக்கூடிய ஒன்றாயிருந்தது. பொருளற்ற வகையில் சொற்களை அடுக்கி நீண்ட வாக்கியங்களைப் பேசுவதும், எழுதுவதும் மொழி வளர்ச்சியென்ற பெயரில் நடந்தது. காங்கிரஸ்காரர்களும் பொது மக்களோடு எந்த வகையிலும் தொடர்பு இன்றி சயம்பிரகாச மேட்டுக்குடியினராகத் திரிந்தார்கள். தீக்குளிப்பு போன்ற செயல்களால் ஆவேசப்பட்டு இளைஞர்கள் இந்தித் திணிப்பிற்கு எதிராகத் திரண்டார்கள்.

போராட்டத்தின் ஒரு பகுதியாக ஒருநாள் உண்ணாவிரதம் இருக்க வேண்டும் என்று எங்கள் பள்ளியில் மாணவர்கள் முடிவெடுத்தோம். இந்த மாதிரி போராட்டங்களில் மாணவர்கள் கலந்துகொள்ளும் மரபு இல்லை என்பதால் அவர்கள் வகுப்பறைக்குள் இருந்தார்கள். “யார் உண்ணாவிரதம் இருப்பது” என்ற கேள்வி எழுந்தபோது நாற்பது பேர் பெயர் கொடுத்தார்கள். ஆயிரம் பேர் படிக்கும் பள்ளிக்கூடத்தில் நாற்பது பேர் மட்டும் உண்ணாவிரதம் என்பது கௌரவப் பிரச்சனை ஆகிவிட்டது.

நான் கேட்டேன் “உண்ணாவிரதத்தை முடிக்கும்பொழுது என்ன கொடுப்பீங்க?”.

“லெமன் ஜுஸ்” என்று பதில் வந்தது.

“அதான் நாற்பது பேர் பெயர் கொடுத்துருக்கான். மசால் தோசை குடுத்தா நிறைய பேர் சேருவாங்க” என்றேன் நான்.

“அதுக்கெல்லாம் பணம் இல்லையே” என்பதுதான் பதில்.

வாக்குவாதத்தை இந்த அளவில் நிறுத்திவிட்டு நான் சில நண்பர்களை அழைத்துக்கொண்டு பள்ளிக்கூடத்திற்கு எதிரில் இருந்த ஹோட்டலுக்குப் போனேன். ஹோட்டல் உரிமையாளர் தமிழறிஞர் கி.வ.ஜகந்நாதனின் தம்பி. மாணவர்களிடம் அன்பாகப் பேசுவார்.

அவரிடம் தமிழுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்தைச் சொல்லிவிட்டு உண்ணாவிரதம் முடியும்போது ஹோட்டல் சார்பாக மசால் தோசை கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தேன்.

அவர் “எத்தனை மசால் தோசை” என்று கேட்டார்.

பின்னாலிருந்து ஒரு நண்பன் என் சட்டையைப் பிடித்து இழுத்தான். நான் அதைப் பொருட்படுத்தாமல் “பசங்கல்லாம் ரொம்ப கோவமா இருக்காங்க. நூறு மசால் தோசை வேண்டும்” என்றேன்.

தகராறு வேண்டாமென்று நினைத்தோ அல்லது தமிழ் பற்றின் காரணமாகவோ அவர் சம்மதம் தெரிவித்தார்.

இதற்குள் ‘நூறு மசால் தோசை விசயம்’ பள்ளிக்கூடம் முழுவதும் பரவிவிட்டது. உண்ணாவிரதப் பட்டியலில் எண்ணிக்கை நூறைத் தாண்டிவிட்டது.

மீண்டும் ஹோட்டலுக்கு போய் கோரிக்கை வைப்பது நன்றாக இருக்காது என்பதால் சில மூத்த மாணவர்கள் மசால் தோசையைத் தியாகம் செய்ய முன்வந்தார்கள்.

 … தொடரும்

சில பயணங்கள் சில பதிவுகள் – 5: சோதிடத்தை மறுத்த கிராமம் – சுப்பு


அடையாறில் பெரியப்பா வீட்டில் தங்கிப் படித்தேன் என்று எழுதுகிறேன். என்னிடமிருக்கும் சில சிறப்புகளுக்கு பெரியப்பாதான் காரணம். எனவே, அவரைப் பற்றி இந்த இடத்தில் சொல்லிவிடுகிறேன்.

பெரியப்பாவைத் தெரிந்துகொள்ள நூறாண்டுகள் பின்னோக்கிப் பயணித்து வாரியங்காவலுக்குப் போக வேண்டும்…

சூரிய வெளிச்சம் உள்ளே வர விடாதபடி அப்படி ஓர் அடர்த்தி. தரையிலே படர்ந்திருக்கும் கிளைகளோடு முந்திரிக் காடுகள். காடுகள் விட்டு வைத்த இடைவெளியில் மல்லாக் கொட்டை விளைச்சல். ஊரின் நான்கு பக்கமும் வாரி என்கிற வாய்க்கால். இதனால் வாரியங்காவல்.

இதுதான் ‘வாரியங்காவல்’. இது இன்றைய அரியலூர் மாவட்டத்தில் இருக்கிறது.

நெசவைத் தொழிலாகக் கொண்ட செங்குந்த முதலியார்களின் ஊர் இது. இரண்டு வீடுகள் மட்டும் பிராமணர்கள். சேரியும் உண்டு.

முதலியார்கள் தறி நூலுக்கு விறைப்பு ஏற்படுவதற்காகப் பாவு போடுவார்கள்.

வீதி நீளத்திற்குப் பாவு போட்டு அதில் கஞ்சியைத் தடவுவார்கள். மீதமிருக்கும் கஞ்சி வீதியில் சிதறிவிடும். இதனால், இந்த மண்ணின் வாசனையில் உணவின் ருசி இருக்கும்.

தறியிலே உட்கார்ந்து, உட்கார்ந்து ஊர் ஜனத்திற்கு இயற்கையாகவே ஒரு பணிவு காட்டும் வளைவு இருக்கும். முதலியார்களிடம் காசு பணம் நடமாட்டம் அதிகம் இருக்காது என்றாலும், கருணையும் கட்டுப்பாடும் கூடுதலாக இருக்கும்.

சென்ற நூற்றாண்டின் துவக்கத்தில் இந்த ஊர் போஸ்ட் மாஸ்டராக இருந்தார் நாராயணசாமி ஐயர். ஊராருக்கு நல்லது கெட்டதுக்கான சடங்குகளைச் செய்து வைப்பதும் இவரே. அந்தக் கால நியாயப்படி இவருக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவியின் பெயர் மங்களம். இரண்டாவது மனைவியின் பெயர் மங்களம்! ஆமாம். அப்படி ஓர் ஒற்றுமை.

இரண்டாவது மங்களத்திற்கு ஒன்பது குழந்தைகள். அவர்களில் 1913ல் பிறந்த தலைமகன் ராமசாமிதான் என்னுடைய பெரியப்பா.

வெள்ளைக்காரன் ஆட்சியின் விளைவாக, இந்தியாவுக்கே பொதுமையாக இருந்த வறுமை வாரியங்காவலில் இன்னும் தீர்க்கமாகவே இருந்தது. ஐயர் வீட்டிலும் அப்படித்தான். பற்றாக்குறைகளை எல்லாம் பாசத்தால் நிரப்பிக் கொண்டார்கள்.ராமசாமி பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு, சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் இன்டர்மீடியட் படித்துக் கொண்டிருந்தார். படிப்பில் எப்போதும் முதல் மாணவனாக இருந்தார் ராமசாமி.

பரிட்சையில் தேர்ச்சி பெற்றபோது அவருக்கு ஓர் அதிர்ச்சி காத்திருந்தது.

நாராயணசாமி ஐயர் காலமாகிவிட்டார். விதவைத் தாயாரையும், தம்பி தங்கைகளையும் காப்பாற்றவேண்டிய பொறுப்பு ராமசாமியின் தலையில் ஏற்றப்பட்டது.

மேற்கொண்டு என்ன செய்வது என்பதை ஆலோசிக்க ஊர் கூடியது. கிராமத்து ஜோஸியரை அழைத்து ராமுடுவின் ஜாதகத்தைப் பார்க்கச் சொன்னார்கள். ஜோஸியருக்கு குடும்பத்தில் பொருளாதாரப் பின்புலம் தெரியாதா என்ன? ராமுடுவுக்குப் படிப்பு வராது என்று சொல்லிவிட்டார்.

மக்கள் கொதித்து எழுந்துவிட்டார்கள். ‘ராமுடுவுக்குப் படிப்பு வராது என்று சொல்லும் ஜோஸியரை மாற்ற வேண்டும்’ என்று ஒருவர் தீர்மானம் போட்டார். இன்னும் சிலர், ரோசமாகப் பேசினார்கள். ராமுடுவை நாமே படிக்க வைப்போம் என்றார்கள்.

ராமசாமியின் தம்பி பசுபதி குடும்பப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். மற்றொரு தம்பி அரங்கநாதன் இந்த நிலைமையிலும் விடுதலைப் போரில் ஈடுபட்டுச் சிறை சென்றார்.

ராமசாமி இயற்பியல் ஆனர்ஸ் வகுப்பில் சேர்ந்தார். சத்திரமொன்றில் தங்கிக் கொண்டு, காய்கறி, குழம்பு எதுவுமில்லாமல் சோறைப் பொங்கிச் சாப்பிடுவார்.

கல்லூரிக் கட்டணம் செலுத்த வேண்டிய நேரத்தில் ஊருக்குச் சேதி போகும். ஏகாம்பர முதலியார் என்ற பெரியவர் நடு வீதியில் நின்றுகொண்டு வருவோர் போவோரை மடக்கி வசூல் செய்வார். மடியில் இருக்கும் நாணயங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அவை ஓரளவு சேர்ந்த பிறகு சிதம்பரத்திற்கு அனுப்பி வைக்கப்படும்.

பி.எஸ்ஸி., ஆனர்ஸ் படித்த பிறகு, ராமசாமி பி.டி. படித்தார். இயற்பியல் படித்தாலும் அவருடைய நாட்டம் என்னவோ தமிழில்தான். நூலகத்தில் இருந்த தமிழ்ப் புத்தகங்களையெல்லாம் கரைத்துக் குடித்தார். அப்போது கல்லூரிகளுக்கான அறிவியல் பாடப்புத்தகங்களைத் தமிழில் எழுதுவோருக்கு அண்ணாமலைப் பல்கலைக் கழகம் ஆயிரம் ரூபாய் பரிசை அறிவித்தது. பேராசிரியர் விஸ்வநாதனும், அவருடைய மாணவர் ராமசாமியும் இயற்பியல் புத்தகம் எழுதி பரிசு பெற்றனர்.

பிறகு, கொல்லத்தைச் சேர்ந்த லட்சுமியை மணம் புரிந்த ராமசாமி சில வருடங்கள் கோவையில் மின்சாரத் துறையில் பணிபுரிந்தார். கிண்டி பொறியியல் கல்லூரியில் இயற்பியல் துறையில் சேர்ந்தார். கிண்டி பொறியியல் கல்லூரிக்குப் பிறகு சென்னை கோடம்பாக்கம் ஐ.ஐ.இ.டி.யில் பணிபுரிந்தார்.

இந்தச் சமூகம்தான் தனக்கு வாழ்வும் கல்வியும் கொடுத்தது என்ற உணர்வோடு வாழ்ந்தார் ராமசாமி. தனிப்பட்ட முறையில் ஆயிரக்கணக்கான மாணவருக்கு அவர் இலவசமாகப் பயிற்சி அளித்தார்.

ராமசாமி பல ஆண்டுகளாக மேற்கு மாம்பலம், குப்பய்யாச் செட்டித் தெருவில் ஒரு வீட்டில் வாடகைக்குக் குடியிருந்தார். வீட்டின் உரிமையாளர் மாடியில். உரிமையாளரின் பராமரிப்பில் இருந்தது ஒரு உறவுக்கார இளைஞர். வேலைக்குப் போவதில் விருப்பமில்லாத அந்த இளைஞரின் நாட்டமோ நாடகத்தில் இருந்தது. அவர்தான் பிற்காலத்தில் தமிழகமே தலையில் வைத்துக் கொண்டாடிய திரைப்பட நடிகர் நாகேஷ்.

அறுபதுகளின் துவக்கத்தில் அடையாறில் காந்தி நகர் குடியிருப்புச் சங்கம் உருவாக்கப்பட்டது. ராமசாமி வீடு வாங்கிக்கொண்டு அங்கே குடிபெயர்ந்தார். நான் அங்கே வந்து சேர்ந்தது அதற்குப் பிறகு.

எந்தவிதமான தாக்கத்தை என்னளவில் பெரியப்பா ஏற்படுத்தினார் என்பதைப் புரிந்துகொள்ள ஒன்றிரண்டு நிகழ்ச்சிகளைச் சொல்கிறேன்.

பள்ளிப் புத்தகங்களைத் தவிர மற்ற விஷயங்களில் நான் தீவிர வாசகனாக இருந்தேன். தீவிர சிந்தனையாளராகக்கூட. யோசித்து யோசித்து மனிதர்களின் பெரும்பாலான சிக்கல்களுக்குக் காரணம் பசிதான் என்று தீர்மானித்துவிட்டேன். உடம்பிலிருந்து அறுவை சிகிச்சை செய்து வயிற்றை அகற்றிவிட்டால் இந்தப் பிரச்சனையை சரிசெய்து விடலாம் என்றும் முடிவெடுத்து விட்டேன்.

என்னுடைய அண்ணன்மார்களுக்கோ, நண்பர்களுக்கோ இந்த மாதிரி ஆலோசனைகளை ரசிக்கும் பழக்கம் இல்லை. எனவே, முடிவாக என் கருத்தை பெரியப்பாவிடம் வைத்தேன். அவர் சொன்னது: ‘வயிற்றை மட்டும் எடுத்து பிரயோஜனம் இல்லைடா. அதற்குக் கீழே இன்னொன்று இருக்கிறது. அதையும் சேர்த்து எடுக்க வேண்டும்.’

எதையும் எளிதில் புரிந்துகொள்ள முடியாத எனக்கு இது சட்டென்று புரிந்துவிட்டது.

ஒரு நாள், வீடே பரபரப்பாக இருந்தது. பெரியப்பாவிற்கு பி.பி. என்று பேசிக் கொண்டார்கள். ஏதோ உடல் சம்பந்தமான பிரச்சினை என்பதை மட்டும் புரிந்து கொண்டேன். எனக்கு விளக்கிச் சொல்வார் யாரும் இல்லை. யாரும் கவனிக்காத ஒரு சமயத்தில் பெரியப்பா தனியாக இருந்தார். அறைக்குள் போனேன். கட்டிலில் படுத்திருந்தார்.

‘‘பி.பி.ன்னா என்ன பெரியப்பா?” என்று கேட்டேன். படுக்கையிலிருந்து எழுந்து உட்கார்ந்தார். அறைக் கதவைத் தாளிட்டார். பேப்பரையும், பேனாவையும் எடுத்துக்கொண்டு இதயத்தையும், இரத்தக் குழாய்களையும் வரைந்து காட்டினார். ‘‘உப்பு போன்ற விஷயங்கள் இரத்தக் குழாய்களை அடைத்துக் கொள்கின்றன. இந்த அடைப்பையும் மீறி இரத்தம் பாய வேண்டும். இதற்காக இதயத்தின் வேலை அதிகமாகிறது. அதை அளக்கும் முறைதான் இரத்த அழுத்தம்” என்று விளக்கினார்.

அதற்குள் வீட்டிலிருப்பவர்கள் கலவரம் அடைந்து கதவைத் தட்ட ஆரம்பித்து விட்டார்கள். ஆனால், பெரியப்பா அசரவில்லை. விளக்கத்தை முடித்து, நான் புரிந்து கொண்டேன் என்பதை உறுதி செய்துகொண்ட பின்னரே கதவைத் திறந்தார்.

கதவு திறக்கப்பட்டவுடன் வெளியே வந்தேன். உள்ளே என்ன நடந்தது என்று பெரியப்பாவிடம் கேட்க யாருக்கும் துணிவில்லை. என்னைக் கேட்டார்கள். இரத்த அழுத்தம் குறித்து, நான் பேச ஆரம்பித்தேன். அந்தச் சபை அதை ரசிக்கவில்லை.

காந்தி நகரில் இருப்பவர்கள் எல்லாம் வசதியானவர்கள்தான். மிராசுதாரர்கள், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், சினிமா பிரபலங்கள் என்கிற மாதிரிதான் இருக்கும். அங்கே ஒரு லேடீஸ் கிளப் இருந்தது. அதில் பலர் சீட்டாடுவார்கள், சிலர் டென்னிஸ் ஆடுவார்கள். அவ்வப்போது, பக்கத்தில் இருக்கும் சேரியில் சமூக சேவை செய்வார்கள்.

பெரியம்மாவிற்கு லேடீஸ் கிளப்பில் சேர வேண்டும் என்கிற ஆசை இருந்தது. ரொம்பவும் தயங்கித் தயங்கி ஒருநாள் பெரியப்பாவிடம் கேட்டுவிட்டார்.

பெரியப்பா கேட்டார், ‘‘லேடீஸ் கிளப்பில் என்ன பண்றாங்க?”

‘‘அவங்க, சேரியில போய் அங்கிருக்கிற குழந்தைகளைக் குளிப்பாட்டறாங்க. பாடம் சொல்லித் தராங்க.”

‘‘அப்ப அந்த லேடீஸ் வீட்டில் இருக்கிற குழந்தைகளை யார் குளிப்பாட்டறாங்க?”

‘‘அதுக்குத்தான் வேலைக்காரி இருக்காளே…”

‘‘எதுக்கு இவ்வளவு கஷ்டம்? இவங்க போய் வேலைக்காரி வீட்டிலிருக்கும் குழந்தைகளைக் குளிப்பாட்டணும். வேலைக்காரி இவங்க வீட்டிலே இருக்கும் குழந்தைகளைக் குளிப்பாட்டணும். இதெல்லாம் வீண் வேலை” என்று பெரியப்பா முடித்துவிட்டார்.

சில பயணங்கள் சில பதிவுகள் – 4: எலிசபெத் ராணியைப் போல…- சுப்பு


நான் ஏழாவது வகுப்பில் படிக்கும்போது (1961) சென்னைக்கு எலிசபெத் மகாராணியார் வந்திருந்தார். கருப்புக் காமராசரும் சிகப்பு ராணியும் கை குலுக்கும் புகைப்படத்தை ஆனந்த விகடனிலிருந்து வெட்டி எடுத்துப் பத்திரப்படுத்தி வைத்திருந்தேன். இன்னொரு புகைப்படத்தில் ராணியார் நடக்க, அவர் தோளிலிருந்து தொங்கும் ஆடையை இரண்டு பேர் பிடித்துக்கொண்டே பின்னால் நடந்து வருவார்கள். அரசியாரின் இந்தக் காம்பீர்யம் என்னைக் கவர்ந்தது. அரசியின் இடத்தில் என்னைப் பொருத்திப் பார்த்துக் கொண்டேன். அதற்கான வாய்ப்பும் கிடைத்தது.

எங்கள் வகுப்பில், ஓணம் கொண்டாட வேண்டுமென்று திட்டமிடப்பட்டது. இதற்குக் காரணம் ஓணத்தைப் பற்றிய பாடம் ஆங்கிலப் புத்தகத்திலிருப்பதா அல்லது எங்கள் ஆசிரியை ஒரு மலையாளி என்பதா என்று திட்டவட்டமாகச் சொல்ல முடியவில்லை. மாணவர்கள் இது விஷயமாய் அடிக்கடி சர்ச்சை செய்வார்கள். நான் ஒரு பொழுதும் டீச்சர் கட்சியை ஆதரித்ததில்லை.


ஓணம் கொண்டாடுவதில் வேலைப் பங்கீடு செய்யப்பட்டது. என் இயலாமையை மறைக்க சுறுசுறுப்பாய் ஒரு யோசனை சொன்னேன். பூக்கோலத்திற்குப் பூ எடுத்து வருவதாகச் சொல்லி உதவிக்கு இரண்டு மாணவிகளுடன் காந்தி மண்டபம் போனேன். எங்கள் வகுப்பில் நான்கு பையன்களும், நாற்பத்தெட்டு சிறுமிகளும் இருந்தார்கள் என்பதை இங்கு அவசியம் தெரிவிக்க வேண்டும்.

காந்தி மண்டபத்து வேலியிலிருந்து பூக்களையெல்லாம் நான் பறித்துப் போட, பையில்லாத காரணத்தால் தோழிகள் பாவாடையை மடக்கிப் பிடித்து அவற்றில் பூக்கள் நிரப்பப்பட்டன. இரண்டு பக்கமும் பூக்களைத் தாங்கியபடி அவர்கள் வர நடுவில் ராஜகம்பீரமாக நான் நடந்து என்னுடைய எலிசபெத் ராணி கனவை நிறைவேற்றிக் கொண்டேன்.

*

பள்ளியிலிருந்து வீட்டுக்குள் நுழைவேன். வாசலறையில் வாரியங்காவல் முதலியார் யாராவது உட்கார்ந்திருப்பார்கள். “என்ன, அதிகமாப் படிக்கறாரு போலிருக்குது” என்பார்கள். என் சட்டைப் பையில் மை கசிந்திருப்பதை அவர் கவனித்திருக்கிறார் என்பதை நாமறிய வேண்டுமாம். ‘இந்த ஊர்க்காரர்களுக்கு வேற ஜோக்கே தெரியாதோ” என்று யோசிக்கும் அளவுக்கு இது நடந்திருக்கிறது. பேனாவில் மை கசிவும், அதைத் தொடர்ந்து பெரியம்மாவின் தொந்தரவும் தாங்க முடியாமல் இது விஷயமாகத் தீவிர ஆலோசனை செய்தேன். அண்ணன்மார் பேனா மட்டும் ஒழுங்காயிருக்கிறதே என்ற எண்ணத்தில் ஆங்காரம் ஏற்பட்டு ஒருநாள் அவர்கள் எல்லோருடைய பேனாவிலும் மூடியை மட்டும் கழற்றிப் பக்கத்துக் குட்டையில் வீசி எறிந்துவிட்டேன். அன்றிரவு தூக்கத்தில், அண்ணன்மாரெல்லாம் வரிசையாக ஒலிம்பிக் வீரர்கள் மாதிரி ஓடிவருகிறார்கள். கையில் ஆளுக்கொரு மூடியில்லாத பேனா. இதைக்கண்டு நான் சிரித்துச் சிரித்து, சிரிப்பின் நடுவே தூக்கம் கலைந்து படுக்கையிலிருந்து எழுந்துவிட்டேன்.

*

தீபாவளியின்போது பட்டாசு வாங்கிக் கொடுத்தார்கள். அவனவனுக்குத் தனிப்பெட்டி, ஒரு வாரத்திற்கு முன்பாகவே நாங்கள் பட்டாசு வெடிக்கும்போது தியாகு மட்டும் சும்மா வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பான். வெடித்தால் பட்டாசு தீர்ந்து போய்விடும் என்ற எண்ணம். ‘நீங்க வெடிக்கறத நான் ஜாலியா பாத்துக்கிறேன். உங்க பட்டாசெல்லாம் தீர்ந்தபிறகு நான் வெடிப்பேன்” என்று எங்களைக் கேலி செய்வான். நாங்கள் வெடிப்பதே அவனுடைய பெட்டியைத் திறந்து, அவனுடைய பட்டாசைத்தான் என்பது அவனுக்குத் தெரியாது. தெரிந்த பிறகு அழுதாலும் “நல்ல நாளும் அதுவுமாய் ஏன் அழுகிறாய்?” என்று அவனைத்தான் திட்டுவார்கள்.

*

பெரியண்ணன் ஒரு ஆட்டோகிராப் நோட்டு வைத்திருந்தான். அதில் மல்யுத்த வீரர் கிங்காங்குடைய கையெழுத்திருந்தது. அதை நான் பார்க்க விரும்பினேன். கிங்காங்குடைய கையெழுத்தும் குண்டாயிருக்குமா என்பது நியாயமான கேள்வி. அண்ணன் என்னுடைய சந்தேகங்களை ஒரு பொருட்டாகக் கருதவில்லை. அவனிடம் கெஞ்சியும் பிரயோஜனமில்லை. ஆகவே, அண்ணனில்லாதபோது ஒருநாள் அந்த ஆட்டோகிராப் நோட்டை எடுத்துப் பார்த்துவிட்டு மீதமிருந்த பக்கங்களிலெல்லாம் என்னுடைய கையெழுத்தைப் போட்டுவிட்டேன்.

*
ஃபான்டம் (முகமூடி) காமிக்ஸ் படித்ததிலிருந்து அடுத்தவனை அடித்து முத்திரை பதிக்க வேண்டுமென்ற ஆசை அதிகமாயிற்று. இது தீபாவளி சமயத்தில் நிறைவேறியது. கம்பி மத்தாப்பு எரிந்தபிறகு செந்தணலாய் இருக்கும். அதைப் பையன்களின் பின்பக்கத்திலோ, தொடையிலோ இழுப்பது எனக்குத் தொழிலாயிற்று. பையன்கள் பூங்காவில் இருக்கும் சறுக்கு மரத்திலிருந்து வேகமாக சறுக்கிக்கொண்டே வரும்போது கீழே அவர்கள் இறங்கும் இடத்தில் சுடச்சுடக் கம்பி மத்தாப்பு. எங்கள் வீட்டுப் பக்கத்திலுள்ள பையன்கள் பலருக்கு இவ்வாறு ஃபான்டம் முத்திரை என்னால் போடப்பட்டது.

*

காந்தி நகரில் சுமார் இருநூற்று ஐம்பது வீடுகள் இருந்தன. கிட்டத்தட்ட அக்ரகாரம் போலத்தான். பிராமணர் அல்லாதாரும் பிராமணரைக் காப்பி அடிக்க முயற்சிப்பார்கள். அனந்தபத்மநாபஸ்வாமி கோவிலில் ராதா கல்யாணம் நடக்கும். ராதா கல்யாணத்தின்போது யாரும் வீட்டில் சமைக்க வேண்டிய அவசியமில்லை. எல்லோரும் கோவிலில் சாப்பிட்டுக் கொள்ளலாம். ராதா கல்யாணத்திற்காக உஞ்சவிருத்தி நடக்கும். உஞ்சவிருத்தி நடக்கும்போது சிறு பையன்கள் பைலட் மாதிரி முதலில் போய் ‘உஞ்சவிருத்தி வருகிறது’ என்று அறிவிப்பார்கள். இந்த வேலை எனக்கு மிகவும் பிடிக்கும். நாம் சொன்னவுடனே அவர்கள் தயாராகிறார்கள் என்பதில் ஒரு பெருமை.

உஞ்சவிருத்திப் பிரசித்தமான புதுக்கோட்டை கோபாலகிருஷ்ண பாகவதர், பெரியம்மா வீட்டில் வந்து தங்கினார். அவரோடு நாங்களும் உஞ்சவிருத்திக்குப் போனோம். கோட்டும், டையும் போட்டுக்கொண்டு கல்லூரிக்குப் போகும் பெரியப்பா, சட்டையில்லாமல் நடந்து வந்தது எனக்கு வேடிக்கையாய் இருந்தது. ஒரு வீட்டு வாசலில் நாங்கள் போனபோது, வீட்டுக்கார அய்யர் மாமியை ‘அடியே’ என்ற சத்தம் போட்டு அழைத்தார். அந்த வீட்டுக்கு அன்றுமுதல் ‘அடியே வீடு’ என்று பெயரிடப்பட்டது. ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு பெயருண்டு. பெரியம்மா வீட்டுக்கு புரபசர் வீடு என்று பெயர். இன்னொரு வீட்டுக்கு டான்ஸ் வீடு என்று பெயர். அந்த வீட்டுப் பெண்கள் நாட்டியமாடுவதற்காக ஒரு மேடை கட்டியிருந்ததால் டான்ஸ் வீடு என்று பெயர்.

டான்ஸ் வீட்டுப் பையன் ரவி என் வகுப்பிலேயே படித்துக் கொண்டிருந்தான். நல்ல வசதியான குடும்பம். வகுப்பிலும் முதல் இடம் அவனுக்குத்தான். பெரியம்மா என்னைத் திட்டுவதற்கு இவனும் வகை செய்தான். அவன் கண்ணில்படும் போதெல்லாம் அவனோடு ஒப்பிட்டு எனக்கு ஒரு சமாராதனை நடக்கும். நாம் படித்து இவனை ஜெயிக்க முடியாது என்பதால் இவனை ஃபெயில் ஆக்க என்ன வழி என்று மண்டையைக் குடைந்து கொண்டேன். அருமையான வழி பிறந்தது.

மந்தவெளியிலிருக்கும் இன்னொரு பள்ளிக்கும் எங்களுக்கும் ஒரே பாடத்திட்டம், ஒரே பாடப் புத்தகம்தான். எங்களுக்குத் தேர்வு நடப்பதற்குப் பத்து நாட்களுக்கு முன்பே அவர்களுக்குத் தேர்வு நடக்கும். அந்தப் பள்ளியில் ஏழாம் வகுப்பில் என்னுடைய சொந்தக்காரப் பையன் ஒருவன் படித்துக் கொண்டிருந்தான். அவனுக்குப் பரீட்சை முடிந்ததும் அவனுடைய கேள்வித்தாளைக் கைப்பற்றினேன். கேள்வித்தாளில் பள்ளிக்கூடத்தின் பெயரை அச்சிடவில்லை. இது என் வேலையை சுலபமாக்கியது.

கேள்வித்தாளோடு ரவி வீட்டுக்குப் போனேன். பள்ளியின் கேள்வித்தாள் அவுட் ஆகிவிட்டதென்றும், அதிர்ஷ்டவசமாக அது என் கைக்கு வந்திருப்பதாகவும் கூறினேன். அதை அவன் கண்ணில் காட்டுவதற்கச் சில சட்டங்களையும் விதித்தேன். அவன் வீட்டு ஊஞ்சலில் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் ஆடுவேன். அவன் என்னைத் தடுக்கக்கூடாது. அவனிடமிருந்து ‘துப்பறியும் சாம்புவை’ நான் என் வீட்டுக்கு எடுத்துப்போய்ப் படிப்பேன். அவன் அதைத் திருப்பித்தா என்று கெடுபிடி செய்யக்கூடாது போன்ற பல சட்டங்கள். ரவி அத்தனை சட்டங்களையும் ஏற்றுக்கொண்டு எனக்கு எல்லா சௌகரியங்களையும் செய்த பிறகு கேள்வித்தாளை அவனிடம் ஒப்படைத்தேன். அந்தமுறை அந்தப் பரீட்சையில் அவன் தப்பித்ததே பெரிய விஷயம்.

*

இந்த நேரத்தில் என்னோடு பழகியவர்களில் மகேஷைப் பற்றிக் கட்டாயம் சொல்லியாக வேண்டும். மகேஷ் பணக்கார வீட்டுப் பையன். மகேஷுடைய அண்ணன் ஒருவன் காணாமல் போய்விட்டான். அவன் யோகியாகிவிட்டான் என்று ஒரு வதந்தி இருந்தது. மகேஷுக்கும் என் வயதுதான். என்னை மாதிரியே படிப்பில் சுமார். குறும்பில் முன்னணி. மகேஷ் வீட்டில் அவன் வைத்ததுதான் சட்டம். அப்பா, அம்மா வீட்டிலிருக்கமாட்டார்கள். மரத்தில் ஏறி பக்கத்து வீட்டு மாங்காயைப் பறிக்கலாம். ப்ரிட்ஜிலிருந்து ஐஸ் வாட்டர் குடிக்கலாம். சமையற்கட்டிலிருந்தோ, புத்தக அலமாரியிலிருந்தோ எதை வேண்டுமானாலும் எடுக்கலாம். இத்தனையையும் நாங்கள் செய்வதை மகேஷ் அனுமதிப்பான். ஆனால் எப்போதாவது ஒருமுறை அவன் Paul Brunton, விவேகானந்தா என்று ஆங்கிலத்திலும், அழகுத் தமிழிலும் பேசுவான். சுத்தானந்த பாரதியார் எழுதிய ஆதிசங்கரர் வரலாற்றை வரிக்குவரி அபிநயித்துக் காட்டுவான். இந்த பிரக்ஞை எங்களுக்கும் ஏற்பட வேண்டுமென்று அயராது பாடுபடுவான்.

மகேஷுக்கு யோகத்தில் நாட்டம். மகான்கள் சரிதத்தைப் பற்றி விவரிப்பது சலிக்காத விஷயம். அடிக்கடி திருவண்ணாமலை போய் வருவான். வீட்டிலேயே அறையைத் தாளிட்டுக் கொண்டு மணிக்கணக்கில் தியானம் செய்வான். ஆனால் மகேஷின் விசேஷத் தன்மைகள் அன்றைய நிலையில் என்னை ஈர்க்கவில்லை. அவன் சொல்ல வந்ததை ஒரு பொழுதும் நான் கவனித்துக் கேட்டதில்லை என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் பல வருடங்களுக்குப் பிறகு இளமைக் காலத்தில் எனக்கு தியானத்தில் ஈடுபாடு வந்தபோது இதனால் எனக்குப் பலனிருந்தது.

*

ஒருமுறை புல் அப்ஸ் எடுக்க முயன்று, தவறி சுவரில் மோவாய் மோதிக் காயம் ஏற்பட்டது. முகமெங்கும் ரத்தக் கலவையாய் இருந்த என்னை அருகிலிருந்த டாக்டரிடம் அழைத்துச் சென்றார்கள். அந்த டாக்டருக்கோ ஊசி போடத் தெரியாது. செலவுக்குப் பயந்து வேறிடம் போக வீட்டார் தயாராக இல்லை. விளைவு – மயக்க மருந்து இல்லாமல் நாலு பேர் என்னை அமுக்கிப் பிடித்துக் கொள்ள, மிருகத்தைத் தைப்பது போல் தாடையில் ஐந்து தையல்கள். காயம், ரணம், வலி, வசவு ஆகியவை என் நாட்குறிப்பில் தவறாமல் இடம் பெற்றன.

*

ஏழாம் வகுப்பு படிக்கும்போது, இடைவேளையில் வீட்டுக்கு வந்தவன் உள்ளறையிலிருந்த தந்தியைக் கண்டேன். ‘குஞ்சம்மா பாட்டி இறந்துவிட்டார்.’ இவ்வளவு பெரிய துக்கத்தை நான் இதுவரை அனுபவித்ததில்லை. யாரும் என்னிடம் இது பற்றி எதுவும் சொல்லவில்லை. நான் ஊருக்குப் போக விரும்புகிறேனா என்று யாரும் என்னைக் கேட்கவில்லை. பகல் பொழுதும், மாலையும் கடந்து செல்வது மிகக் கடினமாயிருந்தது. இரவின் வரவை எதிர்ப்பார்த்துப் பொறுமையாயிருந்தேன். இரவு சாப்பாடு முடிந்தது. எல்லோரும் படுத்துவிட்டார்கள். எல்லோரும் தூங்கிவிட்டார்கள் என்று நிச்சயமாகத் தெரியும்வரை பல்லைக் கடித்துக்கொண்டு காத்திருந்தேன். பிறகு போர்வையை இழுத்து மூடிக்கொண்டு, மனம்விட்டு, வாய்விட்டு வெகுநேரம் அழுதேன்.

– தொடரும்

சில பயணங்கள் சில பதிவுகள் -3: வணக்கம் சொன்ன எம்.ஜி.ஆர் – சுப்பு


வாரியங்காவலுக்கு அருகில் மருதூர் என்ற சிற்றூர் இருக்கிறது. கிராமத்துப் பெண்கள் பகல் வேளையில் சுள்ளி ஒடிப்பதற்காக முந்திரிக் காட்டுக்குப் போவார்கள். ஐம்பது வருடங்களுக்கு முன்னால் ஒருநாள் காட்டுக்குப் போனவர்கள் தங்களோடு வந்த ஒரு பெண்ணைக் காணாமல் தேடியிருக்கிறார்கள். பின்னர் வீடு திரும்பினார்கள். இதற்குள் காணாமல் போன பெண் வீடு வந்து சேர்ந்துவிட்டாள். காட்டில் ஒரு முனிவரைக் கண்டதாகவும், அந்த முனிவர் இவளைக் கன்னத்தில் ஒரு அறை கொடுத்ததாகவும் அவள் கூறினாள். அன்று முதல் அந்தப் பெண் பல அற்புதங்களை நிகழ்த்தினாள். கூரையிலிருக்கும் ஓட்டை உடைத்து வந்தவர்கள் கையில் கொடுத்து மூடிக்கொள்ளச் சொன்னால், கொஞ்ச நேரத்தில் அவரவர் விருப்பப்படி கைக்குள் குட்டி விக்ரகம் கிடைக்கும். கொங்கண முனிவர் அவளுக்கு இவற்றை அருளியதாகக் கருதிய மக்கள் அவளை மருதூர் சித்து என்று அழைத்தார்கள்.

வீதியில் நின்றுகொண்டு மருதூர் சித்து கையைத் தூக்கி வேண்டினால் ரோஜா மாலையும், பழனிப் பஞ்சாமிர்தமும் கையில் விழும். குழந்தை இல்லாதவர்கள் மருதூர் சித்துவிடம் வேண்டிக்கொண்டு, குழந்தை பிறந்தவுடன் தூக்கிக்கொண்டு வருவார்கள். குழந்தையை மருதூர் சித்து கைகளில் தூக்கி வைத்துக் கொள்வாள். எல்லோரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே குழந்தை காணாமல் போய்விடும். சித்து வீட்டு வேலை செய்யப் போய்விடுவாள். வந்தவர்கள் பயபக்தியோடு காத்திருப்பார்கள். கொஞ்ச நேரம் கழித்து சித்து ஓடிவந்து கையைத் தூக்கினால் குழந்தை மொட்டை அடிக்கப்பட்டு, சந்தனம் பூசப்பட்டு, மாலையோடு, வேலோடு தொப்பென்று விழும். பழனி விபூதியும், பஞ்சாமிர்தமும் கூட வரும். குழந்தை பழனிக்குப் போய் மொட்டை அடித்துக்கொண்டு வந்துவிட்டதாக ஐதீகம். மருதூருக்கும் பழனிக்கும், குறைந்தபட்சம் முந்நூறு கிலோ மீட்டர் இருக்கும்.

நானும் மருதூர் சித்தைப் பார்த்திருக்கிறேன். எனக்கும் விக்ரகம் கிடைத்திருக்கிறது.

பல வருடங்களுக்குப் பிறகு ஒருநாள் இரவு மருதூர் சித்துவின் வரலாற்றை மகாபலிபுரத்துக் குப்பத்துத் தோழர்களிடம் உற்சாகமாக விவரித்துக் கொண்டிருந்தேன். அவர்களில் ஒருவன் மொத்தக் கதையையும் கேட்டுவிட்டு நான் கப்ஸா விடுகிறேன் என்று சொல்லிவிட்டான். எனக்கு உண்மையை எப்படி நிரூபிப்பது என்று தெரியவில்லை. மருதூர் சித்து எவ்வளவோ அற்புதங்கள் செய்திருக்கிறதே, இங்கே இப்பொழுது ஒரு அற்புதம் செய்து தன்னை நிரூபிக்கக்கூடாதா என்று வேண்டினேன். அப்பொழுது குப்பத்துப் பையன் ஒருவன் அங்கே வந்து நாங்கள் என்ன பேசிக்கொண்டிருக்கிறோம் என்று கேட்டபோது, விவரத்தைச் சொன்னோம். “ஆமாம், நானும் டூர் போயிருந்தபோது அந்த மருதூர் சித்தைப் பார்த்திருக்கிறேன். இவன் சொல்வதெல்லாம் உண்மைதான்” என்று அடித்துப் பேசினான்.

*
ஓவியம்: ஜீவா
வாரியங்காவலில் ஹோட்டலோ, டீக்கடையோ கிடையாது. வெளியூரிலிருந்து வருகிறவர்கள் வேண்டப்பட்டவர்களுடைய வீட்டில் சாப்பிட்டுக் கொள்ள வேண்டியதுதான். மற்றபடி அரசாங்க அதிகாரிகளோ, பள்ளிக்கூட இன்ஸ்பெக்டர்களோ வந்தால் அவர்களுக்கு நம்ம வீட்டில்தான் சாப்பாடு.

யாராவது ஒரு கூட்டுறவுத் துறை பதிவாளரை மதிய விருந்துக்காக அழைத்து வருவார் நயினா. சாப்பிட்டு முடித்து வெற்றிலை சீவல் போட்டு அலுவலக அரசியலைப் பேசி முடித்த பிறகு ஒரு சம்பிரதாயம் பாக்கி இருக்கும். விருந்தினருக்கு ‘சகலகலாவல்லி மாலை’, ‘முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ்’ போன்ற தோத்திரங்களை நான் சொல்லிக் காட்ட வேண்டும். இதற்காகவே எனக்கு பளிச்சென்ற உடை. தவிர அப்பளாக்குடுமியோடு எண்ணெய் வைத்த ஜடை.

ஒருநாள், தாசில்தார் ஒருவர் வந்திருந்தார். சாப்பிட்டாயிற்று, சம்பிரதாயங்களும் ஆயிற்று. அவர்கள் இருவரும் சுவாரஸ்யமாக உரையாடிக் கொண்டிருந்தார்கள். என்னுடைய புத்தியோ வேறு திசையில் சஞ்சரித்துக் கொண்டிருந்தது. ஒரு கேள்வி, என்னை முழுவதுமாக ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது. விஷயம் இதுதான்.

எதிர் வீட்டில் சுசீலா என்றொரு பெண் இருந்தாள். எட்டாம் வகுப்பை முடித்தவள். இருந்தாலும் எனக்குத் தோழிதான். எனக்கு ஆறு வயது என்றாலும் அவள் எனக்குத் தோழிதான்.

முதல்நாள் மாலை முதல் சுசீலாவைக் காணவில்லை. சன்னமான குரலில் ‘ஓடிப்போய்’விட்டதாகப் பேசிக்கொண்டார்கள். ‘எங்கே போயிருப்பாள்? கூட்டிப் போனவன் யார்?’ என்றெல்லாம் விதவிதமாக விசாரணைகள். நம்முடைய பிரச்சினை அதுவல்ல. ‘சுசீலா எவ்வளவு நேரம் ஓடிக்கொண்டே இருப்பாள். அவளுக்கு கால் வலிக்காதா?’ என்பதுதான் என்னுடைய கவலை. காலையிலிருந்து இந்தக் கேள்வி மூளையில் முட்டிக்கொண்டு நின்றது.
கேட்டுவிட்டேன்.

தாசில்தாருடன் பேசிக் கொண்டிருந்த நயினாவின் கையைப் பிடித்து இழுத்து, “சுசீலா ஓடிண்டே இருக்காளே அவளுக்குக் கால் வலிக்காதா?”

தாசில்தார் முகத்தில் கலவரம் படர்ந்தது.

நயினா ஒருவாறு சமாளித்தார். அம்மா என்னை உள்ளே இழுத்துப் போனார்.

*
இப்படி சுவாரசியமாகப் போய்க்கொண்டிருந்த என்னுடைய வாழ்க்கையில் ஒரு திருப்பம் ஏற்பட்டது. ஐந்தாம் வகுப்புக்குப் பிறகு, நான் சென்னைக்குப் போய் பெரியப்பா வீட்டில் தங்கிப் படிக்க வேண்டும் என்பது நயினாவின் முடிவு.

நயினாவின் முடிவு எனக்குத் தெரிவிக்கப்பட்டவுடன் நான் எடுத்த முடிவு, குடுமியை எடுத்துவிட வேண்டும் என்பதுதான். அதுவும் அமல்படுத்தப்பட்டது.

சென்னை அடையாரில் பெரியப்பா வீடு. முத்தண்ணா, ஏகாம்பரம், சீதாராமன், தியாகராஜன் என்று அண்ணன்கள். விசுவநாதன் என்று ஒரு தம்பி.

சென்னையில் நுழைந்தவுடன் என்னை முதலில் தாக்கியது அதனுடைய அளவு. இரண்டாவது தொழில்நுட்பம்.

சென்னைக்கு வந்த புதிதில், பஸ்ஸில் பயணம் செய்து கொண்டிருப்பேன். ஜன்னலில் மழைத் தடுப்புக்காக ஒரு பிளாஸ்டிக் திரையும், அதைப் பொருத்துவதற்காக சின்னச் சின்னக் குமிழ்களும் அமைக்கப்பட்டிருக்கும். இந்தக் குமிழ்கள் இதற்காகத்தான் இருக்கின்றன என்ற விவரம் அப்போது தெரியாது. தெரியாத விஷயத்தைக் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டுமென்ற பணிவும் கிடையாது. அந்தக் குமிழ்களை பஸ் இஞ்சினுடைய ஒரு உறுப்பு என்று நானாகவே ஊகித்துக் கொண்டேன். அதன் விளைவாக இந்தப் பகுதியை இப்படி கவனிப்பாரற்று விட்டுவிட்டார்களே, இதனால் ஏதாவது விபத்து ஏற்படுமோ என்ற கலக்கம். சமயத்தில் ஜன்னலோரமாய் அமர்ந்திருக்கும் பயணி அதை எதேச்சையாகத் திருகிக் கொண்டிருப்பார். நான் மரண பயத்தில் உறைந்துபோய் அவரையே பார்த்துக் கொண்டிருப்பேன்.

எனக்கு ஜன்னல் சீட் கிடைத்தால், அவர் திருப்புவதைக் கண்காணித்து அதற்கு நேர்மாறான திசையில் எனக்கருகிலிருக்கும் குமிழை நான் திருப்பி பஸ்ஸையும், பயணிகளையும் காப்பாற்ற முயற்சிப்பேன். பஸ்ஸை விட்டு இறங்கிய பிறகுதான் எனக்கு உயிர் வரும். இந்தச் சின்ன விஷயத்தை ஒழுங்காய்த் தெரிந்து கொள்ள எனக்கு ஒரு வருடம் ஆயிற்று.

*
பெரியப்பா வீட்டில் ரேடியா உண்டு. ரேடியோவில் இரண்டு விஷயங்கள்தான் அனுமதிக்கப்படும். ஒன்று ஆங்கிலச் செய்தி. இன்னொன்று நாதஸ்வரம். என்னால் தவுல்காரன் வாசிப்பைத் தாங்க முடியாது. ரேடியோ எப்படி வேலை செய்கிறது என்று அண்ணன்மாரிடம் விசாரித்தேன். உள்ளே நாதஸ்வர கோஷ்டி உட்கார்ந்துகொண்டு வாசிப்பதாக எனக்குச் சொல்லப்பட்டது. ஆளில்லாத நேரம் பார்த்து தவுல்காரனுக்கு ஒருமுறை எச்சரிக்கை விடுத்தேன். அவன் என்னை மதிப்பதாயில்லை. கோபத்தில் ரேடியோ பெட்டி மீது ஓங்கி ஒரு குத்து. கண்ணாடி உடைந்து களேபரம். என்னைச் சுற்றி வீட்டார். ‘இந்தத் தவில்காரன் சொன்னா கேக்க மாட்டேங்கிறான்’ என்றேன். எதிர்வீடு, மாடி வீடு, பக்கத்து வீடு, பள்ளி நண்பர்கள் என்று செய்தி மெல்லப் பரவி எல்லோரும் என்னை ஒரு மாதிரியாகப் பார்க்க ஆரம்பித்தார்கள்.

விஷயம் இதோடு முடியவில்லை. சில நாட்களுக்குப் பிறகு வீட்டு வாசலறையில் இருந்தேன். ரேடியோ மெக்கானிக் ரேடியோவை ரிப்பேர் செய்து எடுத்து வந்தார். கை நீட்டி வாங்கும்போது கை தவறி ரேடியோ கீழே விழுந்து உடைந்தது. எனக்கு யார் மீதும் கோபமில்லை. ஏதோ அதுவே கீழே விழுந்துவிட்டது என்று நான் சொன்னதை யாரும் நம்பத் தயாராயில்லை. மீண்டும் ரேடியோ சம்பவம் அக்கம்பக்கங்களில் சுவாரசியமாகப் பேசப்பட்டது.

*

இல்லஸ்ட்ரேடட் வீக்லியில் மணமக்களின் புகைப்படம் வெளிவரும். அனேகமாக எல்லா மணமகனும் கோட் சூட்தான் அணிந்திருப்பார்கள். சில ஜோடிகளைப் பார்க்கும்போது பொருத்தம் சரியில்லையென்று நினைப்பேன். கழுத்தோடு மணமகனை வெட்டி என் ரசனைக்கேற்றவாறு வேறு மணமகளோடு இருப்பவனின் இடத்தில் ஒட்டிவிடுவேன். ஒருநாள் இந்த வேலையில் மும்முரமாயிருந்தபோது பெரியப்பா கவனித்துவிட்டார். அன்று அவர் காட்டிய கோபத்திற்கு நல்ல பலனிருந்தது. இந்தத் தவறை அதற்குப் பிறகு நான் செய்யவில்லை.

*
நான்கு அண்ணன்கள் இருந்தது சில விஷயங்களில் அசௌகரியமாய் இருந்தது. நான் புதுப்புத்தகம் வாங்க முடியாது. பெரியண்ணனிடமிருந்து கைமாறிக் கைமாறிக் கடைசியாகப் புத்தகம் என்னிடம் வரும்போது அது சிரமதசையிலிருக்கும். எல்லோரும் அட்டை போட்டு லேபிள் ஒட்டிய புத்தகங்களை எடுத்து வருவார்கள். எனக்கோ புத்தகத்தைத் தொட்டுப் பார்க்கவே எரிச்சலாய் இருக்கும். துக்கம் தாளாமல் ஒருநாள் நார்நாராய் இருந்த ஆங்கிலப் புத்தகத்தை தனித்தனி பேப்பராகக் கிழித்து எடுத்துவிட்டேன். அன்றையப் பாடத்தை மட்டும் மடித்து டவுசர் பாக்கெட்டில் செருகிக்கொண்டு ஸ்கூலுக்குப் போனேன். டெஸ்க் மேல் கால்மேல் கால் போட்டு உட்கார்ந்து கொண்டு ஹிந்து பேப்பரைப் படிப்பதுபோல் ஆங்கிலப் பாடத்தை விரித்துப் படித்தேன்.

எல்லாப் பெண்களும் என்னை ஆச்சரியமாகப் பார்த்தார்கள். ‘இனிமேல் எந்தப் பாடம் நடக்கிறதோ அதை மட்டுமே நான் எடுத்து வருவேன்’ என்றும், ‘எல்லாவற்றையும் தூக்கிக்கொண்டு வரவேண்டிய அவசியமில்லை’யென்றும் அறிவித்தேன். இரண்டுபேர் என்னைப் பின்பற்றி அப்பொழுதே தங்கள் புத்தகங்களைப் பிரித்து எடுத்துவிட்டார்கள். டீச்சர் வந்ததும் அவர்களுக்கு மட்டும் பூசை. டீச்சரின் கருத்துப்படி சில தவறுகளை மாணவர்கள் செய்யலாம். ஆனால் மாணவிகள் செய்யக்கூடாது.

*       
நான் படித்த ராணி மெய்யம்மை உயர்நிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் ஜார்ஜ். இவர் குள்ளமான உருவமுடையவர். கோட்டு, பேன்ட் அணிந்திருப்பார். கையில் ஒரு போலீஸ் விசிலை வைத்து ஊதிக்கொண்டே பள்ளியைச் சுற்றி வருவார். ஜார்ஜுடைய தோரணைகள் நாடக பாணியிலிருக்கும். இவர் பையன்களைத் தண்டிக்கும் விதமே அலாதி. தவறு செய்தவன் ப்ரேயர் நடக்கும்போது, மேடையில் ஏறி ஓரமாக நிற்க வேண்டும். தலைமையாசிரியர் நடுநாயகம். ப்ரேயர் முடிந்தபிறகு பையன் செய்த குற்றத்தை ஜார்ஜ் அனைவருக்கும் அறிவிப்பார்.

அறிவிப்புக்குப் பிறகு தீர்ப்பு. யார் என்ன தவறு செய்தாலும் தீர்ப்பு ஒன்றுதான். அது மாறாது. ‘நான் நீதிபதியாய் இருந்தால் இவனுக்குத் தூக்குத் தண்டனை விதித்திருப்பேன். நான் தலைமையாசிரியராய் இருப்பதால் என் முழு பலத்தையும் பிரயோகித்து இவனுக்கு ஆறு அடிகள் வழங்குகிறேன்’ என்பார். இந்த வாசகத்திற்காகவே காத்திருந்த ப்யூன், மேடை மீதேறி தலைமையாசிரியரிடம் பிரம்பைக் கொடுப்பான். இதற்குள் பையனும் அவர் அருகில் வந்துவிட வேண்டும். நீட்டிய கைகளில் ஆறு அடிகள். வலிதாங்காமல் கை மடக்கப்பட்டால், எண்ணிக்கை மீண்டும் ஒன்றிலிருந்து துவங்கும்.

தமிழாசிரியர் செவ்வாய்க் கிழமைகளில் மிகவும் கோபமாயிருப்பார். இதற்கான காரணத்தை கமலக்கண்ணன்தான் கண்டுபிடித்தான். செவ்வாய்க்கிழமைகளில் ஆசிரியர் ஷேவிங் செய்து கொள்ளுகிறார், அந்த எரிச்சலில் நம்மை விரட்டுகிறார் என்று கமலக்கண்ணன்தான் சொன்னான். வகுப்பிலேயே அவன்தான் உயரம். வயதும் அதிகம். கமலக்கண்ணன்தான் எங்கள் வகுப்பில் ஒரே கம்யூனிஸ்ட். பெரிய ஜிகினா போட்ட அரிவாள் சுத்தியல் பேட்ஜை பனியனில் குத்திக்கொண்டு வருவான். சட்டையை நீக்கி பாட்ஜைக் காட்டு என்ற நாங்கள் அவனைக் கேட்க வேண்டும். எல்லோரும் எம்.ஜி.ஆர்., சிவாஜியைப் பற்றிப் பேசும்போது இவன் மட்டும் விடாமல் ‘சோவியத் ரஷ்யாவில் எத்தனை ஐந்தாண்டு திட்டங்கள் நிறைவேறிவிட்டன என்று தெரியுமா?’ என்று ஒவ்வொருத்தரையும் கேட்பான். எங்களுக்குத் தெரிந்ததெல்லாம். அதிகமான ஐந்தாண்டு திட்டம் என்றால் அதிகமாகப் பாடம் படிக்க வேண்டியிருக்கும் என்பதுதான்.

*       
மாலை நேரத்தில் அடையாறு ஆற்றங்கரையில் நான்கு பேராக (இரண்டு இந்து, ஒரு கிறித்துவர், ஒரு முஸ்லீம்) சேர்ந்துகொண்டு உண்டிவில்லால் ஓணான் அடிப்போம். அடிபட்டு விழுந்த ஓணானை எடுத்து முதலில் கிறித்துவர் முறைப்படி மரியாதை செலுத்தி ஒரு டப்பாவுக்குள் போடுவோம். பிறகு முஸ்லீம் முறைப்படி ஓணான் டப்பாவைப் புதைத்துவிடுவோம். கடைசியாக ஓணான் டப்பா தோண்டியெடுக்கப்பட்டு இந்து முறைப்படி மந்திரங்கள் சொல்லிக் கொளுத்தப்படும். இந்தக் கிறித்துவன் இப்போது அமெரிக்காவில். இந்து, வங்கி ஊழியர்கள் சம்மேளனத்தில் காம்ரேட் (சி.எச். வெங்கடாசலம்). தொலைக்காட்சிகளில் பிரதமர் மோடியைக் கண்டிக்கிறார். முஸ்லீம் என்னவானான் என்று தெரியவில்லை.

*
எங்கள் வீட்டிற்கு அருகில் திரைப்பட நடிகர் கே.ஆர்.ராமசாமி குடியிருந்தார். அவரைப் பார்ப்பதற்காக தி.மு.க.வினர் வந்து போவார்கள். ஒருநாள் நானும் ஞானசேகரன் என்ற பையனும் கே.ஆர்.ராமசாமி வீட்டு வழியாகப் போய்க் கொண்டிருந்தோம். வாசலில் ஒரு கார் நிறுத்தப்பட்டிருந்தது. எம்.ஜி.ஆர். கேட்டைத் திறந்துகொண்டு வெளியே வந்தார்.

ஞானசேகரன் ‘டேய், எம்.ஜி.ஆர்.டா. எம்.ஜி.ஆர்.டா’ என்று என்னை இடித்தான். நானும் எம்.ஜி.ஆரைப் பார்த்துவிட்டேன். இருந்தாலும் அதற்காக இவன் இப்படிக் கத்துவது எனக்குப் பிடிக்கவில்லை. ‘எம்.ஜி.ஆராக இருந்தால் என்னடா’ என்று அவனைத் தள்ளிவிட்டேன். இத்தனையும் எம்.ஜி.ஆர். முன்னிலையில் நடந்தது. அவர் புன்முறுவலுடன் கைகூப்பி எங்களைப் பார்த்து ‘வணக்கம்’ என்றார். பதட்டத்தில் நான் பதிலுக்கு மரியாதை செய்யவில்லை. அவர் காரில் ஏறிப் போய்விட்டார். ஞானசேகரன் எம்.ஜி.ஆரைப் பார்த்ததைப் பற்றியும், நான் எம்.ஜி.ஆருக்கு வணக்கம் சொல்லவில்லை என்பதையும் எல்லோரிடமும் சொல்லிக் கொண்டான்.

(…தொடரும்)

சில பயணங்கள், சில பதிவுகள் – 2: சுப்பிரமணியும் சுயமரியாதையும் – சுப்பு


மாரியம்மன் திருவிழாவில் நாங்கள் காவடி எடுப்போம். மழையை வேண்டித்தான் திருவிழா. மாரியம்மன் மனது குளிர்வதற்காக ஒவ்வொரு வீட்டுவாசலிலும் அண்டா அண்டாவாகத் தண்ணீர் நிரப்பப்பட்டிருக்கும். தெருவெல்லாம் தண்ணீர் தெளிக்கப்பட்டிருக்கும். காவடிக்காரர்கள் ஆடிக்கொண்டே வந்து வீட்டுவாசலில் காலை மடித்து அமர்வார்கள். பெண்கள் அவர்கள்மீது குடம்குடமாய் நீரைக் கொட்டுவார்கள். குடிப்பதற்கு பானகமும் நீர்மோரும். கடைசிக் கட்டத்தில் இவற்றையே தலையில் ஊற்றிக் கொள்வதும் உண்டு. அம்மனுக்கு வேண்டிக் கொண்டவர்கள் நாக்கில் வேலைக் குத்திக் கொண்டும், முதுகில் குத்திய கொக்கியில் இளநீர்க் குலையைத் தொங்கவிட்டுக்கொண்டும் வருவார்கள். சிலர் முதுகில் இருக்கும் கொக்கியில் கயிற்றைக் கட்டி ஒரு சப்பரத்தை இழுத்துக்கொண்டே நடப்பார்கள். சிலருக்கு உடம்பெங்கும் ஊசிகள்.

முதலியார்கள் துளைபோட்ட இடுப்புச் சதையில் குடைக்கம்பிகளைக் கோத்துக்கொண்டு வரிசை வரிசையாக நடப்பார்கள். குடைக்கம்பியில் எலுமிச்சம்பழம் செருகப்பட்டிருக்கும். இரண்டு கைகளாலும் குடைக்கம்பிகளைப் பிடித்து முன்னும் பின்னுமாக அசைத்து ராணுவ வீரர்களைப் போல அவர்கள் விரைப்பாய் நடைபோடுவார்கள். ஒருவர் ‘காரணமாகவே வீராணத்தேரியில் கம்பமொன்று நாட்டிவைத்தான்’ என்றதும், அனைவரும் ஒரே குரலில் ‘ஆல்ரபாய், ஆல்ரபாய்’ என்றபடி குடைக்கம்பிகளை சரக்சரக்கென்று அசைத்துக்கொண்டே முன்னேறுவார்கள். முதலியார்கள் பெருமை விளங்க ஒட்டக்கூத்தர் பாடிய ‘ஈட்டி எழுபது’ பாடல்களைத்தான் அவர்கள் இவ்வாறு பாடுவார்கள்.

குஞ்சம்மா பாட்டி ஒரு வகையில் எனக்கு அப்பாவின் தமக்கை; இன்னொரு வகையில் அம்மாவின் அம்மா. இளம் வயதிலேயே கணவனை இழந்துவிட்டு ஒரே மகளுடன் பிறந்த வீட்டிற்கு வந்துவிட்டார். பெண்ணைத் தம்பிக்கே மணம் முடித்தார். எங்கள் வீட்டிலேயே இருந்தார். பத்து வயது வரை எனக்கு குஞ்சம்மா பாட்டியின் செல்லம் குறைவின்றிக் கிடைத்தது.

என்னுடைய சகலவிதமான ஆர்ப்பாட்டங்களுக்கும் பாட்டியின் ஒத்துழைப்பு உண்டு. பேரன் சர்க்கரையில்தான் பல் தேய்ப்பேன் என்றாலும், வண்டிமசியை வெள்ளை ஜிப்பாவில் பூசிக்கொண்டாலும், பாட்டியின் நிபந்தனையற்ற ஆதரவு நிச்சயம் உண்டு. அந்த வீட்டில் என் அம்மாவே ஒரு குழந்தையாகக் கருதப்பட்டதால் எனக்குத் தாயின் அரவணைப்பு, கண்காணிப்பு ஆகியவற்றை அறிய அதிக வாய்ப்பில்லாமல் போயிற்று. அம்மா எனக்கு ஒரு தோழியாகத்தான் இருந்தார்.

குடும்பப் பிரச்சனைகளின் இன்னொரு பரிமாணத்திற்கும் இந்த வயதில் நான் காரணமானேன். நயினாவின் இன்னொரு தங்கையும் தன் கணவர் குழந்தைகளுடன் எங்கள் ஊரிலேயே பக்கத்துத் தெருவில் குடியிருந்தார். தேச சேவை, கைத்தறி அபிவிருத்தி ஆகியவற்றில் நயினா முழு நேரமாக ஈடுபட்டு விட்டதால் பரம்பரை பாத்யதையான கிராமத்தின் வைதீகத் தொழிலுக்கு அத்தையின் கணவர் நியமனம். அந்த வீட்டாருக்கும் நயினாவின் ஆதரவில்தான் ஜீவனம். இரண்டு வீட்டுக்கும் இடையே இடைவிடாத பனிப்போர் இருக்கும். என்னை முன்னிட்டு சமயத்தில் இது வலுத்துப் பெரிதாக வெடிப்பதும் உண்டு. எந்த வீட்டில், எவ்வளவு நேரம் இருக்கிறேன், எங்கே என்ன சாப்பிடுகிறேன் என்பவையெல்லாம் உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டன. சிறு வயதிலிருந்தே இந்தச் சூழலில் எனக்குக் குடும்பச் சண்டையின் நெளிவு சுளிவுகள் அத்துப்படி ஆயின.


 இவ்வளவு செல்லமாய் வளர்க்கப்பட்ட எனக்கு சில பிரத்யேகப் பிரச்சினைகளிருந்தன. எனக்கு நண்பர்கள் அமைவதற்கு ஜாதியும் மரியாதையும் தடையாய் அமைந்தன. சக மாணவர்களின் விளையாட்டில் நான் பங்கு பெற முடியாது. மைதானத்தில் பையன்கள் கூடி ‘ஆலிகாலி” என்ற பெயரில் ஒரு பந்தை வைத்துக்கொண்டு முதுகில் அடித்து விளையாடுவார்கள். என்னை மட்டும் எவனும் சீந்தமாட்டான். “டேய், என்னை அடிங்கடா, என்னை அடிங்கடா” என்று கத்திக்கொண்டே நான் சுற்றிச் சுற்றி வரவேண்டியதுதான். நான் எல்லோரையும் அடிக்கலாம், என்னை எவனும் அடிக்கக்கூடாது என்பதுதான் சட்டம். அபூர்வமாக யாராவது என்னுடைய குடுமியைப் பற்றிக் கேலி செய்வதுண்டு.
 
சுப்ரமணி மட்டும் இதற்கு விதிவிலக்கு. அவன் கையில் பந்து கிடைத்துவிட்டால் போதும், அவன் என்னைத்தான் குறிவைப்பான். இந்த மாதிரி நடவடிக்கைகளால் என்னைக் கவர்ந்து நாளடைவில் சுப்ரமணி என் நெருங்கிய சகா ஆகிவிட்டான். என் வீட்டாரின் கட்டுப்பாடுகளால் என்னை நெருங்க முடியாதிருந்த சில விஷயங்களை எனக்கு சுப்ரமணிதான் அறிமுகம் செய்தான். அவனோடுதான் நான் முதன்முதலில் சேரிக்குப் போனேன். அவனோடு பழகிய பிறகுதான் நான் நயினாவுக்குத் தெரியாமல் மதன காமராஜன் கதை படித்தேன். என் ஜாதிக்கெல்லாம் துளியும் அவன் சலுகை தரமாட்டான். அவனைப் பொருத்தவரை சவரத் தொழில், அய்யர் தொழிலைவிட ஒஸ்தி. அவனுடைய தொழில் சவரத் தொழில் என்பதை இங்கே குறித்துக்கொள்ள வேண்டும். சுப்ரமணி என்னை என்னதான் மட்டம் தட்டினாலும் எனக்கு அவன் மீதிருந்த பிடிப்பு தளரவில்லை. சுப்ரமணியின் பாட்டி செத்துப் பிழைத்த கதையையும், மரணத்திற்கும் மீண்டு வந்ததிற்கும் இடையிலுள்ள பிரதேசங்களைப் பற்றியும் அவ்வளவு விவரமாகச் சொல்ல அவனால்தான் முடியும். முந்திரித் தோட்டத்தில் பழம் திருடவும், பருப்பைச் சுட்டுத் தின்பதற்கும் அவனிடம்தான் கற்றுக் கொண்டேன். பழத்தைத் திருட வேண்டிய அவசியமே இல்லை, கேட்டாலே யாரும் கொடுத்து விடுவார்கள் என்பதை நான் அப்போது அறிந்திருக்கவில்லை.

இந்த முந்திரிக் கொல்லைத் திருட்டுதான் நாங்கள் பிரிவதற்கும் காரணமாய் அமைந்தது. ஒருமுறை பழம் பறிக்கும்போது கிழவி ஒருத்தி எங்களைப் பிடித்துவிட்டாள். நான் யாரென்றறியாமல் என்னை ஏசிவிட்டாள். சில நாட்களில் அந்தக் கிழவி கீழே விழுந்து காலெலும்பு முறிந்துவிட்டது. அவள் என்னைத் திட்டியதால் நான் மந்திரம் போட்டு அவள் காலை முறித்துவிட்டதாக சுப்ரமணி பையன்களிடம் கதை பரப்பிவிட்டான். இத்தனை நாள் அவன்மீது நான் வைத்திருந்த மதிப்பு இதனால் பாழானது. பொய் பேசுபவனை சுயமரியாதைக்காரனாக என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை!
 
வகுப்பறையில் ஞாபகமறதியாகப் புத்தகத்தை விட்டுவிட்டு வருதல், செருப்பைத் தொலைத்தல் போன்ற தவறுகளை நான் அடிக்கடிச் செய்வேன். ஒருமுறை செருப்பை விட்டுவிட்டு வந்தபோது வகுப்பு ஆசிரியர் “இதற்கு அபராதமாக நீ எட்டணா செலுத்த வேண்டும்” என்றார். நான் கேட்ட பொருளை நயினா வாங்கிக் கொடுத்து விடுவாரே தவிர, நான் கடைக்குப் போனதும் கிடையாது; காசு பணத்தைத் தொட்டதும் கிடையாது.

எட்டணாவுக்கு என்ன செய்வது என்ற கவலை என்னைப் பிடித்துக் கொண்டது. நயினாவிடம் கேட்கவும் தைரியமில்லை, பள்ளிக்கூடத்திற்குப் போகும் நேரம் நெருங்கிவிட்டதால் கலவரத்தில் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் காசு டப்பாவில் கையை விட்டுக் காசை எடுத்து பாக்கெட்டில் போட்டுக் கொண்டேன். வெளியே போய்ப் பார்த்தால் அவசரத்தில் இரண்டு எட்டணாக்களை எடுத்து விட்டிருக்கிறேன். பள்ளிக்குச் சென்று ஆசிரியரிடம் அபராதத்தைச் செலுத்தினேன். மீதி எட்டணாவை என்ன செய்வதென்று தெரியவில்லை. எங்கே ஒளித்து வைப்பதென்றும் விளங்கவில்லை. நாள் பூராவும் கலங்கி கடைசியில் வீதியோரமாய் ஓரிடத்தில் புதைத்து வைத்துவிட்டேன்.

என் வீட்டார் காசு தரமாட்டார்கள் என்பது ஆசிரியருக்குத் தெரிந்திருந்தது. அவர் நயினாவுக்குத் தகவல் சொல்லி அனுப்பிவிட்டார். நான் நயினாவால் விசாரிக்கப்பட்டேன். நாணயத்தைத் திருடியதையும், என்ன செய்வதென்று தெரியாமல் புதைத்து வைத்துவிட்டதையும் தெரிவித்துவிட்டு தண்டனைக்குக் காத்திருந்தேன். நயினா அடிக்கவில்லை. சிரித்தார் என்பது மட்டும் நன்றாக நினைவிருக்கிறது.

என்றாவது ஒருநாள் அபூர்வமாக வில்வண்டி கட்டிக்கொண்டு வீட்டாரோடு ஜெயங்கொண்டத்திற்கு சினிமா பார்க்கப் போவதுண்டு. அப்படிப் போகும்போது ஜனங்கள் ஒழுங்காய்ப் படத்தைப் பார்க்கவிட மாட்டார்கள். தியேட்டர்காரன் ரொம்ப உஷாராக, ஜனங்கள் தங்களை மறந்து படத்தில் இழைந்த நேரம் பார்த்து மின்விசிறிகளை அணைத்து விடுவான். ஜனங்கள் திடீரென்று எழுந்து நின்றுகொண்டு “காத்தாடி போடுயோவ், காத்தாடி போடுயோவ்” என்று கூச்சலிடுவார்கள். மின்விசிறிகள் சுழலத் தொடங்கும். மீண்டும் கதாநாயகி கடத்தப்படுவது போன்ற முக்கியமான கட்டத்தில் மின்விசிறிகள் அணைக்கப்பட்டு, மீண்டும் “காத்தாடி போடுயோவ்…”

நான் பார்த்த முதல் சினிமா ‘ஒளவையார்.’ யானைகள் தண்ணீரைக் கடக்கும் காட்சி மட்டும் நினைவிலிருக்கிறது. இரண்டாவது ‘வணங்காமுடி.’ அப்போது எம்.ஜி.ஆருக்கும், சிவாஜிக்கும் வித்தியாசம் தெரிவதற்காக ஒரு குறிப்பு வைத்திருந்தேன். சண்டை போட்டால் எம்.ஜி.ஆர்., சத்தம் போட்டால் சிவாஜி என்பதுதான் குறிப்பு. வணங்காமுடியில் சிவாஜி சண்டை போட, அது தெரியாமல் நான் எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆர். என்று கத்த எல்லோருமாய்ச் சேர்ந்து என்னை ஒரே அமுக்காய் அமுக்கினார்கள்.

பள்ளிக்கூடத்திற்கு ஒரு அரசு அதிகாரி வந்து மாணவர்களுக்குத் தடுப்பு ஊசி போட்டார். எனக்கும் தடுப்பு ஊசி போடப்பட்டது. உடனே காய்ச்சலும், அதன் விளைவாய் நயினாவுக்குக் கோபமும் வந்தது. ஊசி போட்ட அதிகாரிக்கு நயினா வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார். நயினாவின் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் அதிகாரி ஆறு மாதம் படாத பாடுபட்டார். வழக்கு நடந்து கொண்டிருக்கும்போதே அந்த அதிகாரி இறந்துவிட்டார். ஏற்கெனவே அய்யர் மீது ஜனங்களுக்கிருந்த மூடபக்தி இந்த அசம்பாவிதத்தால் இன்னும் பெருகியது.

கிராமத்திற்கு ஒரு நாளைக்கு இரண்டு முறைதான் பஸ் வரும். குறிப்பிட்ட பஸ்ஸில்தான் பால் சங்கத்தின் பால் கேன்களை ஏற்ற வேண்டும். ஏதாவது காரணத்தால் பஸ் தவறிவிட்டால், பாலை வீணாக்காமல் வீதியில் வரிசையாக அடுப்பு மூட்டி அய்யரின் மேற்பார்வையில் பால் கோவா தயாரிப்பு. திண்ணையிலிருந்து இந்தக் காட்சியைப் பார்த்தபடியே கண்கள் சொக்கி, நாசியில் கோவா வாசனை நிரம்பி வழிய நான் தூங்கிப் போவேன். பிறகு நடுஇரவில் என்னை எழுப்பி சுடச்சுடப் பால்கோவா தருவார்கள். காலையில் யோசிக்கும்போது இரவில் நடந்தது கனவா நிஜமா என்று விளங்காமல் கலக்கமாக இருக்கும்.

அச்சு வெல்லம் எனக்கு முக்கிய அளவை. என்னிடமிருந்து பாட்டியோ, அம்மாவோ எதை எதிர்பார்த்தாலும் பேரத்தில் அச்சு வெல்லத்திற்கு முக்கியப் பங்குண்டு. எந்த அழுகையையும் அச்சு வெல்லத்தால் நிறுத்திவிடலாம். எந்த வீம்பையும் அச்சு வெல்லத்தால் முறித்துவிடலாம். அச்சு வெல்லத்தைப் பத்திரப்படுத்தியதன் பலனாக எல்லா டவுசர் பாக்கெட்டிலும் ஒரு பிசுக்கு உண்டு. அதே காரணத்தால் எறும்பு கடித்து தொடை சிவப்பதும் உண்டு.

ஏழு வயதில், பரிக்கல் என்ற நரசிம்மர் கோவில் திருவிழாவிற்குப் போனேன். கோயிலில் சாப்பாடு போட்டார்கள். ரயில் பயணம், வெகு ஜனங்களின் ஆரவாரம், இவற்றோடு வரிசை வரிசையாய் வாழை இலை, கூடைச்சோறு, வாளிச் சாம்பார் எல்லாம் சேர்ந்து என்னை உற்சாக பூபதி ஆக்கிவிட, காய்கறிகளோடு கூடிய சமையலை முதன்முறையாக விரும்பிச் சாப்பிட்டேன். மேற்குறிப்பிட்ட வைபவம் எல்லாத் தரப்பினராலும் வரவேற்கப்பட்டாலும், பரிக்கல் அத்தைஊர் என்பதால் அம்மா தரப்பினர் இதை ரசிக்கவில்லை.

நான்காம் வகுப்பு படித்தபோது மாணவர்கள் ராஜா தேசிங்கு நாடகம் போட்டார்கள். நான் எந்த வேடத்தில் நடிக்க விரும்புகிறேன் என்று முதலில் என்னைக் கேட்டார்கள். நான் நவாபாக நடிக்கிறேன் என்று சொல்லிவிட்டேன். கிடைத்த வாய்ப்பைக் கெடுத்துக் கொண்டேனே என்று நண்பர்களுக்கு வருத்தம். ராஜா தேசிங்கு, அரை டவுசர் மேல் கலர்த்துணியைச் சுற்றிக்கொண்டு நிழல் குதிரைமேல் லொங்கு லொங்கு என்ற சவாரி செய்ய வேண்டும். நவாப்புக்குத்தான் ஜிகினா வேலைப்பாடுடைய ராஜா உடை, சிங்காசனம் எல்லாம் உண்டு என்கிறதாக எனக்குத் தெரிந்திருந்ததால் நான் நவாபைத் தேர்ந்தெடுத்தேன்.

… தொடரும்

சில பாதைகள் சில பதிவுகள் – 1 (பாதாளக் கரண்டியில் பராசக்தி) – சுப்பு


(1)

பாதாளக் கரண்டியில் பராசக்தி

மதுரையிலிருந்து ராமேஸ்வரம் பயணம்; காசித்துண்டு வாங்க வேண்டும். துணிக் கடைக்குள் நுழைந்து பேரம் செய்கிறேன். பேரம் வலுத்து, வார்த்தை தடித்து ஏதோ சொல்ல வந்த கடை ஊழியரை “எல்லாம் தெரியும்பா” என்று மடக்குகிறேன். இத்தனை நேரம் பொறுமையாக இதைக் கவனித்துக் கொண்டிருந்த முதலாளி, கல்லாவை விட்டு இறங்கி என் அருகில் வருகிறார். ஒரு ஆசனத்தை இழுத்துப்போட்டு, “ஐயா, இப்படி உட்காறீங்களா” என்று கேட்கிறார். எனக்கோ எரிச்சலும் கோபமும். “என்ன விஷயம்?” என்கிறேன். “எல்லாம் தெரிந்த ஒருவரை இப்போதுதான் பார்க்கிறேன்” என்கிறார் அவர்.

பேசாமல் வெளியேறுகிறேன்; பின்னர் பலமுறை பலரிடம் இது பற்றிப் பேசுகிறேன்.

இவ்வாறு, நம்மைக் காய வைக்காமல் கனிவாக்கிய நிகழ்ச்சிகள் எத்தனை? தொட்ட மாத்திரத்திலேயே ரசவாதம் செய்த சொற்கள் எத்தனை? இத்தனையும் தந்த இந்த ஜனங்களுக்கு நாம் என்ன செய்ய முடியும்? நாம் என்னதான் முயன்றாலும், செட்டியாரின் வெல்லப் பிள்ளையாரைப் பின்னால் கிள்ளி முன்னால் நிவேதனம் செய்வது போலத்தான் ஆகும். இருந்தும் அனுபவித்ததைச் சொல்வதிலும், சொல்லி அனுபவிப்பதிலும் ஒரு சுவாரஸ்யம் இருக்கிறதல்லவா?

பாழும் கிணற்றில் பாதாளக் கரண்டியைப் போட்டுத் தேடுவதுபோல, என்னுடைய நினைவின் ஆழமான பகுதியைத் தேடிப் பார்க்கிறேன். அங்கே எது தென்படுகிறதோ, அதை எழுத்தில் வடித்து, முதலில் கொடுத்துவிட வேண்டும் என்ற யோசனை.

உள்ளே, உள்ளே போய்ப் பார்த்தால் பல காட்சிகள் மங்கலாக. மற்றபடி ஒரு முகம் தெரிகிறது. மனித முகம் அல்ல. தெய்வ முகமும் அல்ல. தெய்வம் போன்ற முகம். செக்கச் சிவந்த காளியின் முகம். கண்கள் விரிந்து, பற்கள் பளிச்சென்று காளியின் முகம். நெற்றியை நிரப்பிக் குங்குமம், கருப்புப் புருவம், கருப்புக் கண்கள், சட்டென்று, இந்த முகம் விலகி, மீசையுள்ள ஆண் முகம் தெரிகிறது. இதே முகம்தான். இந்தக் காட்சிதான். இந்த பிம்பந்தான். இதைத் தவிர எதுவும் தெரியவில்லை.

உங்களுக்காகப் பின்னணியைச் சொல்கிறேன். எங்கள் ஊர் மாரியம்மன் திருவிழாவில் எலையூர் காளி ரத்தினம் என்பவர் காளி வேடம் போட்டு ஊர்வலமாக வருவார். அவரைப் பிடித்துக்கொண்டு நாலு பேர். அதற்கும் அடங்கமாட்டார். இந்தக் காட்சியை நான் பார்த்தால் பயந்துவிடுவேன் என்று, ஊர்வலம் வரும்போது என்னை வீட்டில் ஒளித்து வைத்திருந்தார்கள். கதவிடுக்கில் பார்த்தது ஓரளவு பதிந்தது.

ஒரு வாரம் கழித்து, நான் வீட்டுத் திண்ணையில் இருந்தேன். காளி ரத்தினம் வந்தார். இவர்தான் காளி என்று என்னால் நம்ப முடியவில்லை. என்னை நம்ப வைப்பதற்காக, அவர் முக பாவத்தை மாற்றிக் காட்டினார்.


ஏழு வயதுச் சிறுவன் நான், பயந்துவிட்டேன். ஜுரம் வந்துவிட்டது. ஜுரத்தில் அடிக்கடி காளி முகம் வந்தது. இதுதான் மனதில் பதிந்துள்ள பிடிமானமுள்ள பிம்பம். இப்போதும் இருக்கிறது. பயம் இல்லை. பராசக்தி இருக்கிறாள்.

குடிநீர் வசதிகூட இல்லாத வாரியங்காவல் கிராமத்தில்தான் நான் பத்து வயதுவரை இருந்தேன் (1950 – 1959). ஊர்ப் புரோகிதரான எங்கள் மாமா வீட்டில் மட்டும் நல்ல நீர்க் கிணறு. வருடத்தில் பாதி நாட்கள் அதுவும் வற்றிவிடும். தண்ணீருக்காகப் பெண்கள், குழந்தைகளோடு கூட்டம் கூட்டமாக வெகு தொலைவு நடந்து பம்ப் செட் கிணற்றுக்கு வருவார்கள். ஐயர் வீட்டுப் பிள்ளை என்ற முறையில் ஏகப்பட்ட உபசரணையோடு தாய்மார்கள் மாற்றி மாற்றி தண்ணீர் இழுத்து ஊற்றி என்னைக் குளிப்பாட்டுவார்கள். இந்த வயதில் நான் தரையில் கால் பதித்ததே இல்லை. ஒரு இடுப்பை விட்டால் இன்னொன்று என்று ஊரே என்னைத் தூக்கிப் பாலூட்டி வளர்த்தது. உண்மைதான். ஒருவர் குழந்தைக்கு இன்னொருவர் பால் கொடுப்பது சாதாரண விஷயம்.

என் தந்தை ரங்கநாதன் இந்த ஜனங்களுக்கு சர்வ வியாபி. சுதந்திரப் போராட்டத்தில் இவர் சிறை சென்றிருந்தார். காந்திய வழியில் மக்களைத் திரட்டி உள்ளூர் ஜமீன்தாரருக்கு எதிராகப் போராட்டங்கள் நடத்தியிருந்தார். முதலியார்களுக்குக் கைத்தறிச் சங்கம், வன்னியர்களுக்குப் பால் பண்ணை, அரிஜனங்களுக்கு தச்சுப் பட்டறை, நியாயவிலைக்கடை, கிராம வங்கி இவை அனைத்தையும் கூட்டுறவு முறையில் உருவாக்கி, திறம்பட நிர்வாகம் செய்தார். வாரியங்காவலைப் போல அருகிலுள்ள பத்துக் கிராமங்களிலும் இவற்றை உருவாக்கினார்.

கணவன் மனைவி தகராறு முதல் கலெக்டருக்கு வரவேற்பு வரை எல்லாவற்றிலும் இவருடைய அடாவடிதான். நொண்டி ஐயரின் சாதனைகள் ஒரு புத்தக அளவிற்கு இருப்பினும் இது என் கதை என்பதால் அவற்றைத் தவிர்த்து விடுகிறேன்.

நயினாவுக்கு – என் தாய் மொழி தெலுங்கு – என் மீது பாசம் அதிகம். ஊர் விவகாரங்களில் ஈடுபட்டிருந்ததால் என்னோடு இருந்த நேரம் குறைவு. வாராவாரம் வெளியூர் போகம் நயினா வரும்போதெல்லாம் எனக்காகப் புத்தகங்கள் வாங்கி வருவார். ஆகவே, மிகச் சிறு வயதிலேயே எனக்கு புத்தகப் படிப்பு அமைந்துவிட்டது. பள்ளிக் கூடத்தில் நுழைவதற்கு முன்பே நான் ஈசாப்பு நீதிக் கதைகளையும், பாரதியார் கவிதைகளையும் படித்திருந்தேன். மற்றவர்கள் அணில், ஆடு என்று கூவும்போது நான் மட்டும் அலங்காரமாக உட்கார்ந்திருப்பேன்.

கிராமத்துப் பள்ளிக் கூடத்தில் காலையில் வகுப்பறைகள் நிரம்பியிருக்கும். மாணவர்களில் சட்டை போட்டவன் நான் ஒருவன்தான். பாதிப்பேர் தலையில் வேப்பெண்ணெய்யோடு வகுப்புக்கு வந்து காமராஜரின் மதிய உணவைச் சாப்பிடும்வரை இருப்பார்கள். பிற்பகலில் இவர்களைப் பார்க்க வேண்டுமென்றால் அருகிலிருக்கும் குட்டையில் தேடலாம்.

கொடுக்கூர் ஆறுமுகம்தான் இந்தப் பிராயத்தில் எனக்கு ஹீரோ. எல்லாம் செவிவழிச் செய்திதான். கொடுக்கூர் ஆறுமுகம் தீவட்டிக் கொள்ளைக்காரன். கொடுக்கூர் ஆறுமுகம் முன்வைத்த காலைப் பின்வைக்க மாட்டான். போகும் வழியில் வீடு இருந்தாலோ, வேலி இருந்தாலோ தாண்டிக் குதித்துதான் போவான். வளைந்தோ, திரும்பியோ போவதில்லை. யாருடைய வீட்டில் கொள்ளையடிக்க வேண்டுமோ அவர்கள் வீட்டுக்கு முதலிலேயே தகவல் தெரிவித்துவிட்டு வருவது அவனுடைய வழக்கம். வந்தவுடன் அவனுக்குத் தேவையான நகையையோ, பணத்தையோ தட்டில் வைத்துக் கொடுத்து விடுவார்கள். அனாவசியமாக அவன் யாரையும் தாக்கியதில்லை. மிகவும் மரியாதையோடு நடந்து கொள்வான். சமயத்தில் கொள்ளை அடிக்கும் வீட்டில் பால் சாதம் சாப்பிடுவதுண்டு. யாரோ ஒருத்தர் பால் என்று சொல்லி மோரை ஊற்றி விட்டதாகவும், மோரில் உப்பு இருந்ததால் உப்பு இட்டவருக்குக் கெடுதி செய்யக்கூடாது என்று பொருளைத் திருப்பிக் கொடுத்து விட்டதாகவும் ஒரு கதை.

போலீஸ் தொப்பிகளைச் சேகரிப்பதுதான் இவனுடைய பொழுதுபோக்கு என்பது இன்னொரு கதை. எல்லாக் கொள்ளைக்காரர்களைப் போலவே ஏழைகளின் நல்லெண்ணத்தையும், அரசாங்கத்தின் விரோதத்தையும் சம்பாதித்துக் கொண்ட கொடுக்கூர் ஆறுமுகம், எல்லாக் கொள்ளைக்காரர்களைப் போலவே வைப்பாட்டியால் காட்டிக் கொடுக்கப்பட்டு போலீஸால் சுட்டுக் கொல்லப்பட்டான்.

மின் வசதி இல்லாத ஊருக்கு மாரியம்மன் திருவிழாவிற்காக ஒருமுறை ஜெனரேட்டர் கொண்டு வந்த ட்யூப்லைட்டை எரிய வைத்தார்கள். அவ்வளவு பிரகாசமான விளக்கைப் பார்த்தறியாத சிறுவர்கள் – நானும்தான் – “வாழத்தண்டு பல்பு டோய், வாழத்தண்டு பல்பு டோய்” என்று கத்திக் கொண்டே வெறி பிடித்தவர்கள் மாதிரி ஊரைச் சுற்றிசுற்றி வந்தோம். எங்கள் ஆட்டம் அடங்க ஒரு மணி நேரம் ஆயிற்று.

ஊரில் கணவன் கொடுமையால் அரளிக் கொட்டை சாப்பிட்டு இளம் பெண்கள் தற்கொலை செய்து கொள்வார்கள். வாயில் மனிதக் கழிவைக்; கரைத்து ஊற்றி அவர்கள் காப்பாற்றப்படுவதும் உண்டு. ஒரு பெண் இறந்து போனால் சாவு வீட்டிலேயே பஞ்சாயத்துப் பேசப்பட்டு சாகடித்தவனுக்கு இறந்தவரின் தங்கையை நிச்சயிப்பதும் உண்டு.

ஒரு நாளைக்கு இரண்டு முறைதான் எங்கள் ஊருக்கு பஸ் வரும். பஸ்ஸை நம்பாமல் வண்டி கட்டிக்கொண்டு, வாரியாரின் கம்ப ராமாயண உரை கேட்பதற்காக அருகிலுள்ள ஜெயங்கொண்ட சோழபுரத்திற்குப் போவோம். நடுத்தெருவில் மேடை போட்டு ஆயிரக்கணக்கான மக்கள் கூடும் அந்தக் கூட்டத்தில் அவர் இடையிடையே கேள்விகள் கேட்பார். சரியான பதில் தருபவர்களுக்கு மேடையிலிருந்து சாத்துக்குடி வீச்சு.

நிகழ்ச்சி அமைப்பாளர்கள் நயினாவுக்கு வேண்டியவர்கள். இவர்கள் மூலமாக வாரியார் தங்கியிருந்த இடத்தில் அவரைச் சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அவரைச் சுற்றி ஆரஞ்சுப் பழங்கள். ஆரஞ்சு ஜுஸை அவர் உறிஞ்சுவதை வெகுநேரம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். பிறகு ஆட்டோகிராப் கேட்டேன்.

“ஆறிப் போன காப்பியும்
அன்பில்லாத மனைவியும் ஒன்று”

என்று எழுதிக் கொடுத்தார்.

அதற்குப் பிறகு நான் யாரிடமும் ஆட்டோகிராப் கேட்டதில்லை.

… தொடரும்

சோவைப் பற்றிப் பேசுகிறேன்… – சுப்பு


தொலைபேசி அல்லது கைபேச மணி அடித்து நம்மை எழுப்பலாம். அது அனுபவ சாத்தியம்தான். ஆனால், சிலசமயங்களில் விளக்கமுடியாத காரணங்களால் குறுஞ்செய்திகூட நம்மை எழுப்பிவிடுகிறது. 07:12:2016 அன்று அதிகாலை ஒரு குறுஞ்செய்தி என்னை எழுப்பிவிட்டது. துக்ளக் இதழின் ஆசிரியர் சோ.ராமசாமி இயற்கை எய்திவிட்டார் என்ற செய்தியை மாப்பிள்ளை அனுப்பியிருந்தார்.


சோ நீண்ட காலமாக நோய்வாய்ப்பட்டிருந்தாலும், அலுவலகம் – மருத்துவமனை – அலுவலகம் என்று இருந்ததாலும், பெரிய அளவில் அதிர்ச்சி ஏற்படவில்லை. ஆனால் இழப்பு…? நிச்சயமாக சுப்புவுக்கு மட்டுமல்ல, துக்ளக் வாசகர்களுக்கு மட்டுமல்ல, தமிழர்களுக்கு மட்டுமல்ல, மனித நேயத்திலும் ஜனநாயகத்தில் பற்றுள்ள ஒவ்வொரு இந்தியருக்கும் இது இழப்புதான்…

சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள சோவின் வீட்டைக் கண்டுபிடிப்பதில் எந்தவித சிரமமும் இல்லை. All road leads to Rome என்பது போல அந்தக் காலைப்பொழுதில் நடந்தும், டூவீலர்களிலும், கார்களிலும் மக்கள் கூட்டம் சோவின் வீட்டை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது. சென்னையின் நாடக உலகமே அங்கிருந்தது. ஊடகமும் சினிமாவும் கூட. அரசியலும்தான். எப்போதும் சிரித்த முகத்தோடு செயல்படும் துக்ளக் ஊழியர்களைக் கண்ணீரோடு பார்ப்பது சங்கடமாக இருந்தது. ஆசிரியருக்கு என்னுடைய அஞ்சலியைச் செலுத்தினேன். வெளியே வந்து செருப்பை மாட்டியபோது, தந்தி தொலைக்காட்சி நிருபர் என்னை ஓரமாக ஒதுக்கினார். அதிகம் பிரபலமில்லாத என்னை இவர் எப்படிக் கண்டுபிடித்தார் என்று நான் யோசித்துக் கொண்டிருக்கும்போதே கேள்வியைக் கேட்டுவிட்டார். “சோ சாரோடு உங்களுக்கு நீண்ட நெடிய அனுபவமிருக்கும். அதை பற்றிச் சொல்லுங்கள்” என்றார்.

எனக்கு நீண்ட அனுபவமில்லை, இருந்தாலும் அவர் எனக்கு ஒரு முக்கியத்துவத்தைக் கொடுத்தார். பிராபல்யத்தை உண்டாக்கினார். தனக்குத் தெரிந்தவர்களை, தனக்கு வேண்டியவர்களைப் பிரபலப்படுத்துவது பெரிய விஷயமல்ல. ஆனால் சோ தன்னுடைய வட்டத்துக்கு வெளியே இருந்தவர்களையும் தகுதி கருதிப் பிரபலப்படுத்தினார். அதற்கு நானும் ஓர் உதாரணம்.

தமிழக அரசியல் வரலாற்றை ‘திராவிட மாயை – ஒரு பார்வை’ என்ற புத்தகமாக நான் எழுதி, அது வெளியிடப்பட்டு, ஓரளவுக்கு கௌரவமான விற்பனையை அடைந்த நேரமது. ஒரு நிகழ்ச்சியில் சோவைச் சந்தித்தேன். யாராவது ஒருவர் அவரை மொய்த்துக் கொண்டிருந்தார்கள். எனக்கும் விருப்பம்தான். இருந்தாலும் கூச்சம் தடுத்தது. அதற்கு அவசியமில்லாதபடி, சோ என்னிடம் வந்தார்.

“நீங்கள் தானே திராவிட மாயை எழுதியது?” என்று கேட்டார். “ஆமாம் சார், எப்படி என்னைக் கண்டுபிடிச்சீங்க?” என்று கேட்டேன்.
ஒரு நல்ல நண்பருடைய நிர்ப்பந்தத்தின் காரணமாக சில மாதங்களுக்கு முன்பு நான் துக்ளக் அலுவலகத்துக்குப் போய், என் புத்தகத்தைக் கொடுத்திருந்தேன். அதை சோ படித்துவிட்டார் என்பதே எனக்கு ஆச்சரியமான செய்தி. அந்த அட்டைப் படத்திலுள்ள புகைப்படத்தை வைத்து என்னை அடையாளம் கண்டுபிடித்தார் என்பது கூடுதல் ஆச்சரியம்.

இந்த சந்திப்பைத் தொடர்ந்து ‘திராவிட மாயை’ இரண்டாம் பகுதியை துக்ளக் வார இதழில் இரண்டு வருடங்கள் எழுதினேன். வாசகர்களுடைய அபிமானத்தை அது பெற்றது என்றுதான் சொல்லவேண்டும். இரண்டாவது பகுதியும் புத்தகமாக வந்து நல்லபடியாக விற்பனை ஆகிக்கொண்டிருக்கிறது என்பதை வைத்துச் சொல்கிறேன். நம்முடைய சரக்கு எப்படியிருந்தாலும் சோவுடைய முத்திரைக்கு ஒரு மவுசு உண்டு என்பதை உணர்ந்திருக்கிறேன். “இன்றைக்குச் செவ்வாய்க் கிழமையா?” என்று கேட்டால்கூட “சோ சார் இது பற்றி என்ன சொல்கிறார்?” என்று விவாதிக்கும் வாசகர் கூட்டம் அவருக்கு உண்டு.

சோவுடைய ஆளுமை, துக்ளக் இதழில் முழுமையாக இருக்கும். அச்சில் வருகிற வாக்கியங்கள், வார்த்தைகள் மட்டுமல்ல; கால்புள்ளி அரைப்புள்ளி கூட அவருடைய கட்டளையில்லாமல் உள்ளே வரமுடியாது. சொற்களுக்கு நடுவே வரும் இடைவெளிக்குக் கூட அவருடைய அனுமதி தேவை. இந்த முறையில் இயங்கிக் கொண்டிருக்கும் அந்த இதழில், ஓரளவுக்கு சுயசிந்தனையை விரும்பும் என்னைப் போன்றோர் எழுதுவது கொஞ்சம் சிரமம்தான். அதை நான் மறைக்க விரும்பவில்லை. உண்மையைச் சொல்வதால் சோவின் பெருமை குறைந்துவிடாது.
ஒருமுறை, காமராஜரைப் பற்றிக் கழகத்தவர்கள் பிரயோகித்த சில வசைச் சொற்களைக் குறிப்பிட்டு நான் எழுதியிருந்தேன். சோ அதைத் தவிர்த்துவிடலாம் என்றார்.

“சார், இது அவங்க சொன்னது…” என்று இழுத்தேன். அவர் உடன்படவில்லை. ஒரு மேற்கோளாகக் கூட காமராஜரைப் பற்றிய வசைச் சொற்கள் துக்ளக் இதழில் அச்சு ஏறுவதை அவர் விரும்பவில்லை என்பதுதான் இதன் அடிப்படைக் காரணம்.

சோவின் தடை உத்தரவு என்னைப் பாதிக்கவில்லை. காமராஜரை அவர் எந்த இடத்தில் வைத்திருந்தார் என்பது எனக்குத் தெரிந்த விஷயம். வாசகர்களுக்காகச் சொல்கிறேன்.

1971 தேர்தலில் காமராஜரும் ராஜாஜியும் திமுகவுக்கு எதிராகக் கூட்டணி அமைத்தார்கள். அந்தக் கூட்டணிக்கு ஆதரவாகச் சோ பிரசாரம் செய்தார். தேர்தலில் அந்தக் கூட்டணி தோல்வியடைந்தது. தோல்விக்குக் காரணம் ராஜாஜியோடு சேர்ந்ததுதான் என்று நினைத்த சோ, காமராஜரிடம் அது பற்றிப் பேசுகிறார். சோவின் கருத்தைக் கேட்ட காமராஜருடைய ரியாக்ஷன் எப்படி இருந்தது என்பதை சோ எழுதுகிறார்.

“தோத்துட்டோம்ங்கிறத்துக்காக எல்லாத்தையும் மறந்துடறதா? நாம் தோத்ததுக்கு ஆயிரம் காரணம் இருக்கும். முதல்லே கையிலே பணம் இல்லே; ஏமாத்தறவங்களைத்தான் ஜனங்க நம்பறாங்கன்னு ஆயிடிச்சு. எல்லாத்துக்கும் சேர்த்து ராஜாஜி தலைமேலே பழியைப் போடச் சொல்றீங்களா? ஜெயிப்போம்னு நெனச்சுத்தானே அவரோடே சேர்ந்தோம்னேன்! ஜெயிக்கணும்னா வேண்டியவரு; ஜெயிக்காட்டி வேண்டாதவரா? அவர் என்ன கெடுதல் செய்துப்புட்டாரு? இந்த மாதிரி நீங்க நினைக்கறதே தப்பு. அவரும் நானும் நிறைய விஷயங்கள்லே ஒத்துப் போறதில்லே. ஆனால் தேசம் நல்லா இருக்கணும், மக்கள் நல்லா இருக்கணும்னு அவருந்தானே விரும்பறாருன்னேன்? அதை ஒத்துக்கிட்டுதானே கூட்டு சேர்ந்தோம்? நாம தோத்தவுடனே, அவருக்கு தேசத்துமேலே அக்கறையே கிடையாதுன்னு நினைக்கச் சொல்றீங்களா? ரொம்ப தப்புன்னேன்; ராஜாஜியோட சேர்ந்ததுனாலே தேர்தல்லே தோத்துட்டோம்னு யாரு வந்து சொன்னாலும் நம்பாதீங்க” என்றார் காமராஜ்.

காமராஜின் அரசியல் நேர்மை அணைக்கட்டை உடைத்துக்கொண்டு பீறிட்டு வரும் வெள்ளம்போல் பிரவாகமெடுத்து என் கண்முன்னே ஓடியது. மாபெரும் தோல்வியின் பழியைச் சுலபமாக வேறொருவர் மீது திருப்பிவிட நல்ல சந்தர்ப்பம் இருந்தும்கூட, தன் தோல்வியின் சுமையை ஏற்றுக்கொண்டு, அந்தப் படுதோல்வியிலும் கண்ட ஒருசில வெற்றிகளையும் மற்றவர்களுக்கு அர்ப்பணிக்கத் தயாராக இருந்த காமராஜின் பரந்த உள்ளம் அலை கடல் போல் அங்கே பரந்து விரிந்து கிடந்தது. அந்தக் கடலோரத்தில் நின்று அரசியல் விமர்சகன் என்ற முறையில் நான் குறுகிய நோக்கோடு கூறிய வார்த்தைகளை நினைத்து வெட்கித் தலைகுனிந்து அந்தக் கடலின் அலைகளில் என் கால்களை நனைத்து பாவத்தைக் கழுவிக்கொண்டேன்.

இவ்வாறு எழுதியுள்ளார் சோ.

நாட்டுப்பற்றை முன்னிறுத்துச் செயல்பட்டவர் சோ என்பது பிரத்யட்சப் பிரமாணம். எனவே ஊடகத்துறையின் சில விதிகளை அவர் புறந்தள்ளினார் என்பது எனக்கு ரசிக்கக் கூடியதாக இருந்தது.
 நான் சொல்ல விரும்புவது இதுதான். இன்றைய தமிழ் அரசியல் உலகம் பாழ்பட்டிருக்கிறது. நம்முடைய சொத்தைk கொள்ளை அடித்து அதை ஆயிரக்கணக்கான கோடிகளாக உருமாற்றி இரண்டு கட்சிகளை நிலை நிறுத்தியிருக்கிறார்கள். இரண்டு கட்சியிலும் வாரிசு யுத்தம் நடக்கிறது. சொத்துக்கு யார் சொந்தம் என்பதுதான் இங்கே தலையாய பிரச்சினை. சொத்துக்கு பாத்யதை கொண்டாடுகிறவர்கள் இதைப் பிரச்சினையாக்குவதில் விசேஷமில்லை.

இந்தப் பணம் மொத்தமும் தங்களுடையதுதான் என்கிற பிரக்ஞையே இல்லாமல் பொதுமக்களும் போட்டி போட்டுக் கொண்டு இந்த யுத்தத்தில் ஈடுபடுகிறார்கள் என்பதைப் பார்க்கும்போது வருத்தமாக இருக்கிறது. அதிலும் முகநூல் நண்பர்களுடைய மூர்க்கத்தனம் கூடுதலாகவே இருக்கிறது. அஇஅதிமுகவை சசிகலா என்ற சாராய அதிபரிடம் ஒப்படைப்பதா அல்லது தீபா என்ற புதுமுகத்திடம் குத்தகைக்கு விடுவதா என்கிற துவந்த யுத்தத்தில் தமிழறிவுலகம் பிளவுபட்டு நிற்பதைப் பார்க்கும்போது அழுகையைவிடச் சிரிப்பு அதிகமாக ஏற்படுகிறது. கருணாநிதி கட்சியிலும் அதே கதைதான்.

இந்த நாற்றம்பிடித்த சூழலிலிருந்து நம்மை விடுவித்துக்கொள்ள வேண்டுமென்றால் சோ போன்ற பத்திரிகையாளர்களை நாம் நினைவுகூர வேண்டும். அதைச் செய்திருக்கிறேன்.

சோ பற்றிய வெங்கட் சாமிநாதனின் கருத்தை இங்கே பதிவது பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன். வெங்கட் சாமிநாதன் எழுதுகிறார்:

“தமிழ்நாட்டுக்கு மீட்சியே இல்லை என்று நான் நினைத்துக் கொண்டிருக்கும்போது, தமிழ் அரசியல் களத்தில் திரு.வி.க போன்ற ஒரு தார்மீக நெறி, அறிவார்ந்த சக்தி தோன்றும் என நாம் கனவிலும் நினைத்துப் பார்க்க இயலாத ஒன்று. ஆனால் தார்மிகமும் அறிவார்த்தமும் அறவே அற்ற தமிழ்நாட்டு அரசியல் களத்தில் இத்தகைய கனவுலக நிகழ்ச்சி ஒன்று தோன்றியுள்ளது. அது ஒரு freak ஆக, வினோதப் பிராணியாகவே காட்சியளிக்கக்கூடும், தமிழக அரசியல் களத்தின் குணாம்சங்களை நாம் நினைவு கொண்டால். ஆனால் இன்னமும் ஒரு ஆச்சரியம், அது freak ஆக இல்லை. பொருட்படுத்தவேண்டிய ஒரு சக்தியாகவும் வளர்ந்துள்ளது. நிச்சயமாகச் சொல்கிறேன். இச்சக்தி தொடருமானால் ஒரு புதிய அரசியல் கலாசார மரபுக்கும் இது வழிவகுக்கக்கூடும். தொடருமானால்தான். ஆனால் தொடருமா என்பது கேள்விக்குறிதான். நான் ‘சோ’ வைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறேன்” என்கிறார் வெங்கட் சாமிநாதன்.


நானும்தான்.