(1)
பாதாளக் கரண்டியில் பராசக்தி
மதுரையிலிருந்து ராமேஸ்வரம் பயணம்; காசித்துண்டு வாங்க வேண்டும். துணிக் கடைக்குள் நுழைந்து பேரம் செய்கிறேன். பேரம் வலுத்து, வார்த்தை தடித்து ஏதோ சொல்ல வந்த கடை ஊழியரை “எல்லாம் தெரியும்பா” என்று மடக்குகிறேன். இத்தனை நேரம் பொறுமையாக இதைக் கவனித்துக் கொண்டிருந்த முதலாளி, கல்லாவை விட்டு இறங்கி என் அருகில் வருகிறார். ஒரு ஆசனத்தை இழுத்துப்போட்டு, “ஐயா, இப்படி உட்காறீங்களா” என்று கேட்கிறார். எனக்கோ எரிச்சலும் கோபமும். “என்ன விஷயம்?” என்கிறேன். “எல்லாம் தெரிந்த ஒருவரை இப்போதுதான் பார்க்கிறேன்” என்கிறார் அவர்.
பேசாமல் வெளியேறுகிறேன்; பின்னர் பலமுறை பலரிடம் இது பற்றிப் பேசுகிறேன்.
இவ்வாறு, நம்மைக் காய வைக்காமல் கனிவாக்கிய நிகழ்ச்சிகள் எத்தனை? தொட்ட மாத்திரத்திலேயே ரசவாதம் செய்த சொற்கள் எத்தனை? இத்தனையும் தந்த இந்த ஜனங்களுக்கு நாம் என்ன செய்ய முடியும்? நாம் என்னதான் முயன்றாலும், செட்டியாரின் வெல்லப் பிள்ளையாரைப் பின்னால் கிள்ளி முன்னால் நிவேதனம் செய்வது போலத்தான் ஆகும். இருந்தும் அனுபவித்ததைச் சொல்வதிலும், சொல்லி அனுபவிப்பதிலும் ஒரு சுவாரஸ்யம் இருக்கிறதல்லவா?
பாழும் கிணற்றில் பாதாளக் கரண்டியைப் போட்டுத் தேடுவதுபோல, என்னுடைய நினைவின் ஆழமான பகுதியைத் தேடிப் பார்க்கிறேன். அங்கே எது தென்படுகிறதோ, அதை எழுத்தில் வடித்து, முதலில் கொடுத்துவிட வேண்டும் என்ற யோசனை.
உள்ளே, உள்ளே போய்ப் பார்த்தால் பல காட்சிகள் மங்கலாக. மற்றபடி ஒரு முகம் தெரிகிறது. மனித முகம் அல்ல. தெய்வ முகமும் அல்ல. தெய்வம் போன்ற முகம். செக்கச் சிவந்த காளியின் முகம். கண்கள் விரிந்து, பற்கள் பளிச்சென்று காளியின் முகம். நெற்றியை நிரப்பிக் குங்குமம், கருப்புப் புருவம், கருப்புக் கண்கள், சட்டென்று, இந்த முகம் விலகி, மீசையுள்ள ஆண் முகம் தெரிகிறது. இதே முகம்தான். இந்தக் காட்சிதான். இந்த பிம்பந்தான். இதைத் தவிர எதுவும் தெரியவில்லை.
உங்களுக்காகப் பின்னணியைச் சொல்கிறேன். எங்கள் ஊர் மாரியம்மன் திருவிழாவில் எலையூர் காளி ரத்தினம் என்பவர் காளி வேடம் போட்டு ஊர்வலமாக வருவார். அவரைப் பிடித்துக்கொண்டு நாலு பேர். அதற்கும் அடங்கமாட்டார். இந்தக் காட்சியை நான் பார்த்தால் பயந்துவிடுவேன் என்று, ஊர்வலம் வரும்போது என்னை வீட்டில் ஒளித்து வைத்திருந்தார்கள். கதவிடுக்கில் பார்த்தது ஓரளவு பதிந்தது.
ஒரு வாரம் கழித்து, நான் வீட்டுத் திண்ணையில் இருந்தேன். காளி ரத்தினம் வந்தார். இவர்தான் காளி என்று என்னால் நம்ப முடியவில்லை. என்னை நம்ப வைப்பதற்காக, அவர் முக பாவத்தை மாற்றிக் காட்டினார்.
ஏழு வயதுச் சிறுவன் நான், பயந்துவிட்டேன். ஜுரம் வந்துவிட்டது. ஜுரத்தில் அடிக்கடி காளி முகம் வந்தது. இதுதான் மனதில் பதிந்துள்ள பிடிமானமுள்ள பிம்பம். இப்போதும் இருக்கிறது. பயம் இல்லை. பராசக்தி இருக்கிறாள்.
குடிநீர் வசதிகூட இல்லாத வாரியங்காவல் கிராமத்தில்தான் நான் பத்து வயதுவரை இருந்தேன் (1950 – 1959). ஊர்ப் புரோகிதரான எங்கள் மாமா வீட்டில் மட்டும் நல்ல நீர்க் கிணறு. வருடத்தில் பாதி நாட்கள் அதுவும் வற்றிவிடும். தண்ணீருக்காகப் பெண்கள், குழந்தைகளோடு கூட்டம் கூட்டமாக வெகு தொலைவு நடந்து பம்ப் செட் கிணற்றுக்கு வருவார்கள். ஐயர் வீட்டுப் பிள்ளை என்ற முறையில் ஏகப்பட்ட உபசரணையோடு தாய்மார்கள் மாற்றி மாற்றி தண்ணீர் இழுத்து ஊற்றி என்னைக் குளிப்பாட்டுவார்கள். இந்த வயதில் நான் தரையில் கால் பதித்ததே இல்லை. ஒரு இடுப்பை விட்டால் இன்னொன்று என்று ஊரே என்னைத் தூக்கிப் பாலூட்டி வளர்த்தது. உண்மைதான். ஒருவர் குழந்தைக்கு இன்னொருவர் பால் கொடுப்பது சாதாரண விஷயம்.
என் தந்தை ரங்கநாதன் இந்த ஜனங்களுக்கு சர்வ வியாபி. சுதந்திரப் போராட்டத்தில் இவர் சிறை சென்றிருந்தார். காந்திய வழியில் மக்களைத் திரட்டி உள்ளூர் ஜமீன்தாரருக்கு எதிராகப் போராட்டங்கள் நடத்தியிருந்தார். முதலியார்களுக்குக் கைத்தறிச் சங்கம், வன்னியர்களுக்குப் பால் பண்ணை, அரிஜனங்களுக்கு தச்சுப் பட்டறை, நியாயவிலைக்கடை, கிராம வங்கி இவை அனைத்தையும் கூட்டுறவு முறையில் உருவாக்கி, திறம்பட நிர்வாகம் செய்தார். வாரியங்காவலைப் போல அருகிலுள்ள பத்துக் கிராமங்களிலும் இவற்றை உருவாக்கினார்.
கணவன் மனைவி தகராறு முதல் கலெக்டருக்கு வரவேற்பு வரை எல்லாவற்றிலும் இவருடைய அடாவடிதான். நொண்டி ஐயரின் சாதனைகள் ஒரு புத்தக அளவிற்கு இருப்பினும் இது என் கதை என்பதால் அவற்றைத் தவிர்த்து விடுகிறேன்.
நயினாவுக்கு – என் தாய் மொழி தெலுங்கு – என் மீது பாசம் அதிகம். ஊர் விவகாரங்களில் ஈடுபட்டிருந்ததால் என்னோடு இருந்த நேரம் குறைவு. வாராவாரம் வெளியூர் போகம் நயினா வரும்போதெல்லாம் எனக்காகப் புத்தகங்கள் வாங்கி வருவார். ஆகவே, மிகச் சிறு வயதிலேயே எனக்கு புத்தகப் படிப்பு அமைந்துவிட்டது. பள்ளிக் கூடத்தில் நுழைவதற்கு முன்பே நான் ஈசாப்பு நீதிக் கதைகளையும், பாரதியார் கவிதைகளையும் படித்திருந்தேன். மற்றவர்கள் அணில், ஆடு என்று கூவும்போது நான் மட்டும் அலங்காரமாக உட்கார்ந்திருப்பேன்.
கிராமத்துப் பள்ளிக் கூடத்தில் காலையில் வகுப்பறைகள் நிரம்பியிருக்கும். மாணவர்களில் சட்டை போட்டவன் நான் ஒருவன்தான். பாதிப்பேர் தலையில் வேப்பெண்ணெய்யோடு வகுப்புக்கு வந்து காமராஜரின் மதிய உணவைச் சாப்பிடும்வரை இருப்பார்கள். பிற்பகலில் இவர்களைப் பார்க்க வேண்டுமென்றால் அருகிலிருக்கும் குட்டையில் தேடலாம்.
கொடுக்கூர் ஆறுமுகம்தான் இந்தப் பிராயத்தில் எனக்கு ஹீரோ. எல்லாம் செவிவழிச் செய்திதான். கொடுக்கூர் ஆறுமுகம் தீவட்டிக் கொள்ளைக்காரன். கொடுக்கூர் ஆறுமுகம் முன்வைத்த காலைப் பின்வைக்க மாட்டான். போகும் வழியில் வீடு இருந்தாலோ, வேலி இருந்தாலோ தாண்டிக் குதித்துதான் போவான். வளைந்தோ, திரும்பியோ போவதில்லை. யாருடைய வீட்டில் கொள்ளையடிக்க வேண்டுமோ அவர்கள் வீட்டுக்கு முதலிலேயே தகவல் தெரிவித்துவிட்டு வருவது அவனுடைய வழக்கம். வந்தவுடன் அவனுக்குத் தேவையான நகையையோ, பணத்தையோ தட்டில் வைத்துக் கொடுத்து விடுவார்கள். அனாவசியமாக அவன் யாரையும் தாக்கியதில்லை. மிகவும் மரியாதையோடு நடந்து கொள்வான். சமயத்தில் கொள்ளை அடிக்கும் வீட்டில் பால் சாதம் சாப்பிடுவதுண்டு. யாரோ ஒருத்தர் பால் என்று சொல்லி மோரை ஊற்றி விட்டதாகவும், மோரில் உப்பு இருந்ததால் உப்பு இட்டவருக்குக் கெடுதி செய்யக்கூடாது என்று பொருளைத் திருப்பிக் கொடுத்து விட்டதாகவும் ஒரு கதை.
போலீஸ் தொப்பிகளைச் சேகரிப்பதுதான் இவனுடைய பொழுதுபோக்கு என்பது இன்னொரு கதை. எல்லாக் கொள்ளைக்காரர்களைப் போலவே ஏழைகளின் நல்லெண்ணத்தையும், அரசாங்கத்தின் விரோதத்தையும் சம்பாதித்துக் கொண்ட கொடுக்கூர் ஆறுமுகம், எல்லாக் கொள்ளைக்காரர்களைப் போலவே வைப்பாட்டியால் காட்டிக் கொடுக்கப்பட்டு போலீஸால் சுட்டுக் கொல்லப்பட்டான்.
மின் வசதி இல்லாத ஊருக்கு மாரியம்மன் திருவிழாவிற்காக ஒருமுறை ஜெனரேட்டர் கொண்டு வந்த ட்யூப்லைட்டை எரிய வைத்தார்கள். அவ்வளவு பிரகாசமான விளக்கைப் பார்த்தறியாத சிறுவர்கள் – நானும்தான் – “வாழத்தண்டு பல்பு டோய், வாழத்தண்டு பல்பு டோய்” என்று கத்திக் கொண்டே வெறி பிடித்தவர்கள் மாதிரி ஊரைச் சுற்றிசுற்றி வந்தோம். எங்கள் ஆட்டம் அடங்க ஒரு மணி நேரம் ஆயிற்று.
ஊரில் கணவன் கொடுமையால் அரளிக் கொட்டை சாப்பிட்டு இளம் பெண்கள் தற்கொலை செய்து கொள்வார்கள். வாயில் மனிதக் கழிவைக்; கரைத்து ஊற்றி அவர்கள் காப்பாற்றப்படுவதும் உண்டு. ஒரு பெண் இறந்து போனால் சாவு வீட்டிலேயே பஞ்சாயத்துப் பேசப்பட்டு சாகடித்தவனுக்கு இறந்தவரின் தங்கையை நிச்சயிப்பதும் உண்டு.
ஒரு நாளைக்கு இரண்டு முறைதான் எங்கள் ஊருக்கு பஸ் வரும். பஸ்ஸை நம்பாமல் வண்டி கட்டிக்கொண்டு, வாரியாரின் கம்ப ராமாயண உரை கேட்பதற்காக அருகிலுள்ள ஜெயங்கொண்ட சோழபுரத்திற்குப் போவோம். நடுத்தெருவில் மேடை போட்டு ஆயிரக்கணக்கான மக்கள் கூடும் அந்தக் கூட்டத்தில் அவர் இடையிடையே கேள்விகள் கேட்பார். சரியான பதில் தருபவர்களுக்கு மேடையிலிருந்து சாத்துக்குடி வீச்சு.
நிகழ்ச்சி அமைப்பாளர்கள் நயினாவுக்கு வேண்டியவர்கள். இவர்கள் மூலமாக வாரியார் தங்கியிருந்த இடத்தில் அவரைச் சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அவரைச் சுற்றி ஆரஞ்சுப் பழங்கள். ஆரஞ்சு ஜுஸை அவர் உறிஞ்சுவதை வெகுநேரம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். பிறகு ஆட்டோகிராப் கேட்டேன்.
“ஆறிப் போன காப்பியும்
அன்பில்லாத மனைவியும் ஒன்று”
என்று எழுதிக் கொடுத்தார்.
அதற்குப் பிறகு நான் யாரிடமும் ஆட்டோகிராப் கேட்டதில்லை.
… தொடரும்